அகவெளியில் உலவும் குரல் – மௌனி

காலம் அவள் உருவில் அந்த சந்நிதியில் சமைந்து நின்றுவிட்டது”, “கொத்து விளக்குகள் எரிந்து கொண்டிருக்கும், அதன் பிரகாரத்தில் நடமாடும் பக்தர்களுக்கும், அவர்கள் நிழலுக்கும் வித்தியாசம் காணக்கூடாத நினைப்பைக் கொடுக்கும் அச்சந்நிதானம், எந்த உண்மையை உணர்த்த ஏற்பட்டது? நாம் சாயைகள்தானா? எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்?” என்ற வரிகளில் நம் இருப்பை தெளித்து வைத்து ஆட்டும் அப்பாலான சக்தி என்பதான மரபான கோணம்கூட கதைக்கு அற்புதமாகப் பொருந்தி பெரும் மனக்கிளர்ச்சிக்கும் விடை காண முடியாத அவஸ்தைக்கும் உள்ளாக்குகிறது.

சாதாரண சொற்களைக் கொண்டு அசாதாரணமான, திகைப்பிற்குரிய சந்திப்பை நிகழ்த்துவதுதான் மௌனியின் எழுத்துக்கலையாக இருக்கிறது. காரண காரியங்களால் நிரூபிக்க முடியாத ஒரு உலகு கைக்குச் சிக்காமல் இயங்குவதைக் காட்டுகிறார். “மாறி மாறித்தானோ, நான் என்னுடைய என்பதெல்லாம் மறுப்பில் மறுதலையாக உண்மையெனத் தோன்றும்”, “இருளில் உடலை விட்டகன்ற நிழல், ஒளி கண்டவுடன் சரியெனத்தானா, பிரிந்த தன்னுடல் எனக்கண்டு மறுபடியும் உடலுடன் ஒட்டிக் கொள்கிறது? சுசிலா பெயரெனத் தன்னைக் களைந்து கொண்டதில், சேகரன் மனைவி சுசீலா எனவா மனதில் உருக்கொண்டாள்?” (‘பிரக்ஞை வெளியில்’).

போகிற போக்கில் மகத்துவங்களை உண்டாக்கியவர்- தி. ஜானகிராமன்

தமிழ்ச் சிறுகதைத் துறைக்குப் பெரும் பங்காற்றியவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். ஒரு நூற்றாண்டுக் காலத்தில் இவ்விலக்கிய வகைமைக்குப் பங்காற்றியவர்கள் நூறு பேருக்குள்ளாகத்தான் இருப்பர். அதில் ஆளுமையுள்ளவர்களாக புதுமைப்பித்தன், கு. அழகிரிசாமி, தி. ஜானகிராமன், ஆ. மாதவன் ஆகிய நால்வரை மட்டுமே குறிப்பிட முடியும். அசோகமித்திரனிடம் படைப்பெழுச்சி மிக்க தருணங்கள் இல்லை. மன நெருக்கடியில் விளைந்த அனுபவசாரம் அதிகக் கதைகளில் இருப்பதால் இவரை முக்கியமான சிறுகதையாளர் ஆக்குகிறது. இளம் எழுத்தாளர்களில் இரண்டுபேரை மட்டுமே சொல்ல முடியும். கறாரான இத்தன்மையில் தி. ஜானகிராமன் நிராகரிக்க முடியாத ஒரு படைப்பாளியாக இருக்கிறார். தமிழன் துரதிருஷ்டம் அவரின் நாவல்கள் பேசப்பட்ட அளவு சிறுகதைகள் பேசப்படவில்லை. அதிலும் ஒரு பாதகம் தி. ஜானகிராமன் நாவல் கலையின் உச்சத்தைத் தொட்டவரல்ல. அவருடைய அபரிமிதமான சாதனை சிறுகதைத் துறையிலேயே நிகழ்ந்திருக்கிறது.

ஐம்பதுகளில் எழுதப்பட்ட சிறுகதைகளை வைத்துப் பார்க்கும்போது தி. ஜானகிராமனிடம் வெளிப்பட்ட கலையின் மகாசக்தியான உற்றுநோக்கல் திறன் வேறொருவரிடமும் வெளிப்படவில்லை. சுந்தர ராமசாமியும் ஜெயகாந்தனும் புதுமைப்பித்தன் பாணியைக் கைக்கொண்டனர். கருத்துலகு மீதான விமர்சனம்தான் மார்க்சியம் என்ற சித்தாந்தத்தின் பொதுத்தன்மைகளை…

துயரத்தில் முடிந்த சுந்தரராமசாமியின் காவியம்

சென்றமாத அம்ருதாவில் லட்சுமி மணிவண்ணன் எழுதிய தொடர் பத்தியைப் பிடிக்க நேர்ந்தது. அதில் கமலா அம்மா, ‘நீங்கள் எல்லாம் அவரிடமிருந்து விலகிப்போகாமல் இருந்திருந்தால் இன்னும் சிலகாலம் வாழ்ந்திருப்பார்’ என்று சொன்னதாக எழுதியிருந்தார். என் மனம் கலங்கிவிட்டது. அப்படிப் பிரிய நேர்ந்ததும் இயல்பானதுதான் என்றும் எழுதியிருந்தார். கமலா அம்மாவிற்கு என்னை நினைவிருக்குமானால் – எனக்கு அச்சு அசலாக நினைவிருக்கிறது. அந்த அன்னமிட்ட இதயத்தை நோக்கி ஒன்றை சொல்லிவிடு வேணு என்று என் அந்தராத்மா துடிக்கிறது. அம்மா, சுந்தர ராமசாமி போல இலக்கியக் களத்தில் நான் தனித்துவமாக வளர்ந்திருக்கிறேன். அப்படி வளர்வதைத் தான் அவரின் கட்டுரைகளும், படைப்புகளும் உணர்த்தின என்று மட்டும் இவ்விடத்தில் சொல்லிக்கொள்கிறேன். இந்தத் தமிழ்நாட்டில்தான் தன் சக படைப்பாளிகளை, இளம் படைப்பாளிகளை ரொம்ப கண்ணியத்துடன் வரவேற்றார். நிரம்ப அக்கறையுடன் அவர்களிடம் உரையாடினார். காது கொடுத்துக் கேட்டார். தன் தரப்புப் பார்வையைத் தெளிவாக முன்வைத்தார். கடிதங்கள் எழுதினார். அதற்கெல்லாம் மேலாக மிகுந்த அன்புடன் உபசரித்தார். இது தமிழ்ச்சூழலில் அபூர்வமானது. ஆனந்தமானது. இந்த இலக்கிய ஆனந்தத்தைத் தந்ததில் கமலா அம்மாவிற்கு அதிகப் பங்குண்டு. அவர் புன்னகையுடன் விலகிநின்று செய்தார். சு.ரா.விற்கு இருந்த பிடிவாதத்தைப் போன்றே அவரிடம் இலக்கியம் கற்று எழுதவந்த இளம் படைப்பாளிகளுக்கும் சில நியாயமான பிடிவாதங்கள் ஏற்பட்டன. எப்படியாயினும் சுந்தர ராமசாமி தமிழ் இலக்கியச் சூழலில் ஜென்டில்மேன்தான். அந்தப் பேறு இன்னொருவருக்கு இப்போதைக்கு இல்லை.

அழிக்க வந்த போலி காருண்யம்

தென் இந்தியா முழுக்கசுற்றி வந்திருக்கிறேன். இந்திய மாட்டினத்திலேயே கர்நாடக ஹள்ளி கலைகள் போல அழகும் கம்பீரமும், ராஜாம்சமும் பொருந்திய காளைகளை நான் பார்த்ததில்லை. காங்குராஜ், கென்வாரி, சாகிவால், ஒங்கோல், நகோரி போன்ற இந்திய மண்ணுக்கே உரிய காளைகளோடு ஒப்பிட்டே இதை முன் வைக்கிறேன். புலிக்கு ஆனைமலையிலும் சத்தியமங்கலத்திலும் சரணாலயம் ஏற்படுத்தி விட்டாரகள். அழிந்து வரும் இந்த அபூர்வ காளை இனங்களுக்கு விளங்கு நேய ஆர்வலர்கள் மாற்று ஏற்பாடேனும் செய்து வைத்திருக்கிறார்களா? சாத்தியம்தானா? புலி, சிறுத்தை, செந்நாய்களுடன் இந்த பசுவினம் வாழ்ந்து விடுமா? காட்டை விட்டுப் பிரிந்து 3000 ஆண்டுகள் ஆகிவிட்டன. மனிதனை நம்பி மேய்ச்சல் செய்கின்ற இனமாக சங்க காலத்திற்கு முன்பிருந்தே ஆகி விட்டது. கர்நாடகத் துளு மக்களின் பாரம்பரிய சேற்று காளை விரட்டான ‘கம்பளா’ என்ற எருமை விளையாட்டுக்கு அங்கீகாரம் அளிக்கிறது நீதிமன்றம். விவசாய தமிழ் மனங்களின் தொப்புள்கொடி உறவிலிருந்து பிரிக்கிற சட்டம் வருமானால் வீட்டு விலங்கான இந்த இனங்கள் அழிவது உறுதி. மாடுகள் துள்ளிக் குதித்து ஓடவில்லை என்றால் மூக்கடைப்பு வந்து அவதிப்படும்.
பிரசித்தி பெற்ற ஸ்பெயின் காளை சண்டையல்ல, கணத்தில் குத்தி வீழ்த்துவதற்கு. தோற்றாலும் வென்றாலும் மாடுகள் வீட்டிற்கு வந்ததும் குளிக்க வைத்து தாடையை அணைத்துக் கொஞ்சுவர். அலுப்பு அகல ஒற்றைச் சாக்கை மடித்துப் போட்டு முதுகு தேய்த்து விடுவர். அவர்களுக்கு மாடு ஒரு பிள்ளை. நீங்கள் கி.ரா.வின் ‘குடும்பத்தில் ஒரு நபர்’ கதையை …