முகவரி

“என்னட்டீ சொல்லுக?… கடுப்பாக்கப்புடாது கேட்டியா?.. நீ எந்தி மொதல்ல… எதாம் சொப்பனமா இருக்கும்.. எந்தி…”

கராத்தே வகுப்பு முடிந்து நான் வீட்டிற்குள் நுழைந்தபோது அப்பா அம்மாவைக் கடிந்து கொண்டிருந்தார். அம்மா தலையில் இறுக்கிக் கட்டிய துண்டுடன் மெதுவாக எழுந்து உட்கார்ந்தார். சில நாட்களாகத்தான் இந்த விடாத தலைவலி.

“இல்லப்பா… நாந்தா சொல்லுகேம்லா… தண்டவாளம் மாதிதா தெரியி… பூரா ஒடங்காடு…” என்று அம்மா குழம்பியவாறு சொன்னார்.

“ஒனக்கு வேற வேலயில்ல…தண்டவாளத்துல ட்ரெய்ன் வரும்…ஒம் மருமக வருவா, போயி கூட்டிட்டு வா…காலங்காத்தால காமெடி பண்ணாத…” என்றேன் நான்.

அப்பா டீ போட்டுக் கொண்டே, “ஆமா, வரவ இனிமே பொறந்தா வரப்போறா? வருஞ்சமயம் வரட்டும்…சும்மா பொலம்பிட்டே கெடந்தா மனுசனுக்கு மண்ட காயாதா?” என்றார்.

“நீங்க ஒங்க வேலயப் பாருங்கப்பா…நா ஒங்கள ஒண்ணும் செய்யச் சொல்லல…” என்று சொல்லியவாறு புறவாசலுக்குச் சென்றார் அம்மா.

அண்ணனுக்குத் திருமணம் அமையவில்லை என்று அம்மாவிற்குக் கவலை. வந்த பெரும்பாலான ஜாதகங்கள் பொருந்தவில்லை, பொருந்திய ஒன்றிரண்டு இடங்களும் நிச்சயம் ஆகும் நிலை வரை வந்து என்னவென்றே தெரியாத காரணங்களால் தடைபட்டுப் போயிருந்தன. பார்த்த ஜோதிடர்கள் எல்லோரும் சொல்லிவைத்த மாதிரி ஏதோ தெய்வத் தடை இருப்பதாகச் சொல்ல, அம்மாவின் புலம்பல் அதிகரிக்க ஆரம்பித்தது.

“தேரூர் ஜோசியர்ட்ட போயி பாத்துருவம் மக்கா..ஒங்கப்பாட்ட சொன்னா நடக்குமா? நம்ம போய்ட்டு வந்துருவம்ல…” என்று கேட்டார் அம்மா.

“ரைட்டு…இப்ப தேரூரா? நீ ஊரு ஊரா அலயதுக்கு அண்ணனப் போயி எவளயாம் இழுத்துட்டு வரச் சொல்லும்மா…அந்த ஸ்ரீலங்கா காரியயே கெட்டி வச்சிருக்கலாம்லா?”

“போல, அவ்வோ என்ன ஆளுகளோ? அவ அண்ணங்காரன் பேசதப் பாத்தியா? கடப்பொறத்தான் மாதி இழுத்து இழுத்துல்லா பேசுனான். அவளும் அவளுக்க மூஞ்சியும்..”  

“நீ இப்பிடி சொல்லிக்கிட்டே இரி…அவன் சாமியாராத்தான் போப்போறான்..ஒங்க ஆளுகோ என்ன செஞ்சாங்கோ? ஒரு பொண்ணு கொண்டுவரச் சொல்லு பாப்பம்..பஸ் புடிச்சி போயி கலச்சி விட்டுட்டு வேண்ணா வருவான்..பெரிய ஆளுகோ.”

“வாயக் கொற ல…வக்கனையா புளிக்கேறிய கொண்டா, கருத்தக்கறிய கொண்டான்னு கேப்பேலா? அதுக்குத்தான் எல்லாம் பாக்கது…செனம் பொறப்படு, போயிட்டு வந்துருவம்…”

~oOo~

நீண்ட நேரம் அண்ணனின் ஜாதகத்தை ஆராய்ந்த தேரூர் ஜோதிடர், “செரிதாம்மோ….தெய்வக்குத்தந்தா கேட்டியா?…ஆமா, ஒங்க குடும்பக் கோயில் எங்கருக்கு?” என்று கேட்டார்.

அம்மா பதற்றமடைந்தவராக, “அவ்வோ ஊருலதாம் கும்புடுகது…கொலசேரம்பூர்ல…கொளத்தாங்கர மாடங்கோயில் அண்ணாச்சி…” என்றார்.

ஜோதிடர் சில கணங்கள் கண்களை மூடி ஏதோ மந்திரம் சொல்வது போலத் தெரிந்தது. மீண்டும் அண்ணனின் ஜாதகத்தை எடுத்து பக்கங்களைப் புரட்டினார்.

“இல்லயம்மோ…வேற மாறில்லா தெரியி..ஒங்க குடும்பக் கோயில் அதா இருக்காது கேட்டியா?” என்றார்.

அம்மா குழம்பிப்போய் நின்றார். வருடாவருடம் நடக்கிற மூன்றுநாள்  கொடையில் ஒரு நாள் உச்சகாலப் பூஜை எங்கள் செலவில்தான். இதுபோக, ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளிக்கிழமை பூஜைக்கு குடும்பத்தோடு போவதில் அம்மா குறியாக இருப்பார். தினசரி சமையல் முடிந்ததும் சாதத்தோடு கறி வகைகளை எடுத்து வீட்டில் இருக்கும் அந்த மாடன்சாமி போட்டோவின் முன் படைத்த பிறகுதான் எங்களுக்கு சாப்பாடு. இப்போது, ஜோதிடர் ‘ஒங்க சாமியே வேற’ என்று சொன்னது எனக்கே அதிர்ச்சியாகத்தான் இருந்தது. தேரூர் ஜோதிடர் மிக பிரபலமானவர், அவர் சொல்வது சரியாகத்தான் இருக்கும் என்று பொதுவான நம்பிக்கை.

“அண்ணாச்சி, என்ன இப்பிடிச் சொல்லுகியோ?”

“ஆமம்மோ..எனக்கு அப்பிடித்தா தோணுகு பாத்துக்கோ…நீ ஒண்ணு செய்யி..வள்ளியூருக்கு கெழக்க சித்தூரு இருக்கு தெரியும்லா?”

“ஆமா அண்ணாச்சி..”

“அங்க ஒரு சாஸ்தா கோயில் உண்டும் பாத்துக்கோ..நீ குடும்பத்தோட அங்க போ…கடைசி வெள்ளிக்கிழம அன்னிக்கிப் போ என்னா?” என்றார் ஜோதிடர்.

“செரி…என்னவாம் பரிகாரம் செய்யணுமா அண்ணாச்சி?”

“நீ போம்மோ…குடும்பத்தோட போணும் கேட்டியா? எல்லாம் செரியாகும்  என்ன..கவலப்படாமப் போ…நாஞ் சொல்லுகம்லா..”

அவரது தாம்பூலத்தட்டில் ஆயிரத்தோரு ரூபாய் வைத்துவிட்டு பயபக்தியாகக் கிளம்பினார் அம்மா.

“ஒங்கப்பாவ எப்பிடிச் சம்மதிக்க வைக்க மக்கா? நெலையா நிப்பாள…” என்று கேட்டார் அம்மா.

“ஒனக்குச் சொல்லியா தரணும்? வழக்கம்போல ஒரு கண்ணீரப் போடு..அப்பா செரின்னு சொல்லப்போறா..” என்று சொல்லிச் சிரித்தேன் நான்.

~oOo~

கடைசி வெள்ளிக்கிழமை. அதிகாலையிலேயே எழுந்து குளித்து வெறும் வயிற்றோடு மாடன்சாமியின் போட்டோ முன் உட்கார்ந்திருந்தாள் அம்மா. நீண்ட நேரம் பல மந்திரங்களை வாய்விட்டுச் சொல்லிக்கொண்டிருந்தாள்.

“கெளம்பதுன்னா சட்டுனு கெளம்பணும்…மனுசன டென்சன் ஆக்கக்கூடாது பாத்துக்கோ..” என்று கத்தினார் அப்பா.

“செரி செரி, நீங்க போயி வண்டில ஏறுங்கோ..நா இன்னா வாறேன்..” என்று எழுந்தாள் அம்மா.

அப்படியாக, மெனக்கெட்டு வாடகைக் கார் பிடித்து சித்தூருக்குக் கிளம்பினோம். நான் அண்ணனையும் அம்மாவையும் கிண்டல் செய்துகொண்டே இருக்க, அம்மா மந்திரம் சொல்வதை விட்டபாடில்லை. அப்பா மூஞ்சியை இறுக்கமாக வைத்து ஏதும் பேசாமலே வந்தார்.

அந்த ஆலமரம் ஒரு முழு கிராமத்தையே மூடும் அளவிற்குப் பெரியது. விழுதுகள் பல இடங்களில் தரையோடு ஊன்றி ஒரு ஆயிரங்கால் மண்டபம் போல இருந்தது. மரம் முழுவதும் பல விதமான கயிறுகளும், தொட்டில்களும் கட்டப்பட்டு, நீண்ட ஆணிகள் அடிக்கப்பட்டு இருண்டு நின்றது. மரத்தின் அடியில் ஒரு சிறிய பழைய காலத்து வீடு. அதுதான் சாஸ்தா கோவில். வெள்ளையும் காவியுமாக ஒருவிதமாக பயமுறுத்தி நின்றது. நாங்கள் சென்றுசேர்ந்தபோதே பயங்கரமான கூட்டம். குடும்பம் குடும்பமாய் நெருக்கியடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். நாங்கள் கடைசியாக உட்கார்ந்தோம்.

சற்று நேரத்தில் மூன்று முறை மணி அடிக்க, மொத்தக் கூட்டமும் சேர்ந்து குலவையிட அந்த இடமே அதிர்ந்தது. அதன் பிறகு ஒருவர் கூட பேசவில்லை. அருகிலிருந்தவர்கள் எங்களையும் அமைதியாக இருக்குமாறு சைகை செய்தனர். பத்து நிமிடங்கள் கழித்து கோவிலுக்குள்ளிருந்து மணி அடிக்கும் சத்தமும் சாம்பிராணி புகையும் வெளிவர மக்கள் எழுந்து நின்று கும்பிட்டார்கள். கூட்டத்தில் சிலர், “ஏய்…ஊ….ம்ம்ம்ம்’ என்று சத்தமிட்டுச் சாமியாட ஆரம்பித்தனர். சிலர் அவர்களைப் பிடித்து நிற்க வைக்க, உள்ளே தீபாராதனை நடந்தது. மக்கள் அனைவரும் மீண்டும் அப்படியே உட்கார, உள்ளிருந்து காவி வேட்டியணிந்த மூன்று வயதானவர்கள் வெளியே வந்து நின்றனர். அவர்கள் கையில் மூங்கில் பிரம்புகள் மற்றும் திருநீர்க் கொப்பரைகளை வைத்திருந்தனர்.

அப்பாவின் முகம் இன்னும் இறுக்கத்திலேயே இருக்க, அம்மா பக்தியில் கரைந்து உருகிக்கொண்டிருந்தார். அண்ணனைப் பார்க்க எனக்கு மாலை போட்ட பலியாடு ஞாபகம் வர, வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டேன்.

நீண்ட அந்த நிசப்தத்தின் ஊடே, “யாருடே சரவணனா? வா, ஒங்கப்பன் அம்மயக் கூட்டிட்டு முன்னால வாடே..” என்று யாரோ கத்த, எனக்கு ஒரு நொடி புல்லரித்து விட்டது.

நாங்கள் அங்குமிங்கும் குழப்பமாகப் பார்க்க, “கன்னியாரிக்காரன் தானடே…மூத்தவனுக்க கல்யாண வெசயமா வந்துருக்கியோ? வா..முன்னால வா..” என்று முன்னால் நின்ற மூன்று பேரில் ஒருவர் கத்த கூட்டமே எங்களைத் திரும்பிப் பார்த்தது போலிருந்தது. அம்மா அதற்குள் கன்னத்தில் போட்டுக் கொண்டு எழுந்து நின்று விட்டாள். அப்பாவும் அண்ணனும் எழுந்து முன் செல்ல, நான் அம்மாவின் கையைப் பிடித்துக் கொண்டு சென்றேன்.

“வாடே வா, எல்லா எடத்துலயும் கொமைக்கப்புடாது கேட்டியா? வெளாட்டுக் காரியமில்ல..வந்து தோப்புக் கரணம் போடு..” என்று அவர் என்னைப் பார்த்துக் கத்த அம்மா என்னை முன் தள்ளினார். கோவிலைப் பார்த்தவாறு நான் தோப்புக்கரணம் போட, அவர் அம்மா, அப்பா, அண்ணனுக்குத் திருநீறு பூசி விட்டார். பின், என்னைக் கைகாட்டி நிறுத்தச் சொல்லி திருநீறு பூசி, உற்றுப் பார்த்தார்.

“ஏய்..ஊ….ஓ…” என்று துள்ளியவர் ஆடிக்கொண்டே, “நீளமாட்டு இரும்புக் கம்பி…பக்கத்துல ஒடமரம்…குத்துக்கல்லு சாமி…கொளத்தங்கர…” என்று கத்தினார்.

அம்மா முகத்தில் நிம்மதி தெரிய, “சாமி, எந்த ஊருன்னு சொல்லுங்கோ…ஒங்களத்தா நம்பி வந்துருக்கேன்..” என்றார்.

“ம்ம்ம்ம்….ம்ம்ம்…ஏய்…கல்லிடக்குறிச்சிக்குக் கெழக்க போ…வெவரந் தெரியும்…போ…போ…ரொம்ப நாளாக் காஞ்சிக் கெடக்கு..தெய்வத்தப் பட்டினி போடாத…போ…பொண்ணு வரும்…நல்லாக்கி வப்பேன்..” என்று சொல்லி சைகை காட்டினார்.

திரும்பி வரும் வழியில் அம்மா மிக மகிழ்ச்சியாக பேசிக்கொண்டு வந்தார். “நான் சொன்னம்லா மக்கா..சொப்பனத்துல தண்டவாளம் தெரிஞ்சுல்லா…அதாக்கும் வெசயம் பாத்துக்கோ..மொதல்ல போயி குடும்பக் கோயிலக் கண்டு புடிக்கணும்…”

“எம்மா…எப்பிடிம்மா இதெல்லாம் நம்புக..அந்த ஜோசியரு ஏற்பாடா இருக்கும் பாரு..” என்று நான் சொன்னேன்.

“சாமிக் காரியம் மக்கா..அப்பிடிப் பேசாதல..கல்யாணம் நடக்கா இல்லையான்னு நீ பாரு..”

“எம்மா…நம்ம அப்பாக்கு பூர்வீகமே கொலசேரம்பூர் தான. பொறவு கல்லிடக்குறிச்சில குடும்பக் கோயில் இருக்குன்னா? நல்ல கத வுடுகானுகோ பாத்துக்கோ.”

“அது தாத்தா காலத்துலயோ, அதுக்கு முன்னாடியோ விட்ட கொற தொட்ட கொற எதாம் இருக்கும்..சாஸ்தாக் கோயில் சாமியாரு சொன்னா செரியா இருக்கும் மக்கா..கனவுல வந்தத ஒண்ணு வுடாம சொன்னாருல்லா..”

~oOo~

கல்லிடைக் குறிச்சி பெரிய கோவில் தெருவில் சென்று சில வீடுகளில் அம்மா விசாரிக்க நான் குழப்பமாக கூடவே சென்றேன். சிலர் சொன்னபடி தெருமுனையில் இருந்த ஊர்த்தலைவரின் வீட்டிற்குச் சென்றோம். நடந்ததை எல்லாம் அம்மா விளக்கிச் சொல்ல, தலையாட்டிக் கேட்டுக் கொண்டிருந்தார் அந்தத் தாத்தா.

“நீங்க சொல்லதப் பாத்தா சோழர்கொளத்துல இருக்க சாஸ்தாதான்னு நெனைக்கேன்…தண்டவாளம்..கொளம்…ஒடங்காடு…எல்லாம் செரிதாம்மா…”

அம்மா மகிழ்ச்சியாக கேட்டுக்கொண்டிருந்தார்.

“இரிங்கோ, நம்ம பையன வரச் சொல்லுகேன்..கூட வருவான்..காப்பி குடிச்சிட்டுப் போலாம் என்ன…” என்றார்.

நீண்ட தண்டவாளம். சுற்றிலும் ஒடங்காடு. சிறிய குளம். அருகில் எடுத்துக் கட்டப்பட்ட ஒரு சிறு கோவில். அப்போதுதான் கட்டி முடிக்கப்பட்டிருக்க வேண்டும். நாங்கள் சென்று சேர்ந்த போது பூஜை ஆரம்பிக்கவிருந்தது.

வெளியே பதிக்கப்பட்டிருந்த கல்வெட்டில், ‘பூதலிங்க சாஸ்தா திருக்கோவில்’ என்றிருந்தது. பிரதிருஷ்டை செய்யப்பட்ட தியதி, உபயம் செய்தவர்கள் பெயர்கள் மற்றும் ஊர் என்று பல விவரங்கள் இருந்தன. துப்பறியும் ஆவலுடன் ஒவ்வொரு பெயராக வாசித்துக்கொண்டு சென்றேன். ஆசாரி, செட்டியார், வெள்ளாளர் என்று பல சமூகங்களைச் சார்ந்த பெயர்களும் அந்தக் கல்வெட்டில் இருந்தது எனக்குக் குழப்பமாக இருந்தது. சிலரது பெயரோடு ‘குலசேகரன் புதூர்’ என்று இருந்ததை அம்மாவிடம் சுட்டிக் காட்டினேன்.  அம்மா, ‘நான் சொன்னேன்லா’ என்பது போலப் பார்த்தார்.

பூஜை முடிந்ததும் அங்கிருந்த நிர்வாகிகளிடம் பேசி பதிவுச் சந்தா செலுத்தி குடும்பக் கோவிலை உறுதிப்படுத்திக் கொண்டார் அம்மா. அப்பாவிடம் பேச்சுக்குடுத்த சிலருக்கு என் தாத்தா பெயர் தெரிந்திருந்தது ஆச்சரியமாக இருந்தது.

“தாத்தா பேர செரியா சொல்லிட்டார டே, என்ன?” என்று அப்பா என்னிடம் கேட்டார்.

“ஆமப்பா…எனக்கு இன்னும் நம்பவே முடில..”என்றேன் நான்.

அண்ணன் அமைதியாக சிரித்துக்கொண்டு வந்தான். அவனுக்கென்ன? பெண் கிடைக்கப் போகும் நம்பிக்கை!

“இல்ல மக்ளே, எனக்கும் ஒண்ணும் பெருசா நம்பிக்கெல்லாம் இல்ல..ஆனா, தாத்தா பேர தெரிஞ்ச ஆளுக இருக்குல்லா? அப்ப, செரியாத்தான் இருக்கும்..தாத்தா ஒண்ணுஞ் சொல்லாமப் போய்ட்டாரு..”

“செரிப்பா..எப்பிடியோ, அம்மக்கி இன்னொரு சாமி கெடச்சாச்சி..இனி நம்ம உயிர எடுப்பா..!” என்று சிரித்தேன்.

~oOo~

பூதலிங்க சாமிக்கு அடுத்த மாதம் கடைசி வெள்ளிச் சிறப்புக் கொடை எங்கள் செலவில் நடந்தது. கொடை முடியும் முன்னரே அங்கு வந்திருந்த ஒரு குடும்பத்தினர் தாமாகவே முன்வந்து அண்ணனைப் பற்றி விசாரித்துச் சென்றனர்.

அடுத்த இரண்டே மாதங்களில் அண்ணன் திருமணம் நடந்து முடிந்தது எனக்கு ஓரே ஆச்சரியம். எனது காரண அறிவு, தத்துவார்த்த விவாதங்கள், எழுத்து, வாசிப்பு, பெரியாரிசம் எல்லாவற்றையும் ஒரு புறம் ஒதுக்கி பூதலிங்க சாஸ்தா என்னைப் பார்த்து கிண்டலாகச் சிரித்தார். மாடன்சாமிக்குப் பக்கத்தில் படையலைப் பங்குபோட்டுக் கொண்டு பூதலிங்க சாஸ்தாவும் எங்கள் வீட்டில் குடியேறினார்.

அண்ணனுக்கு நல்ல வியாபார வாய்ப்புகள் வந்துசேர, மைனியும் நல்ல குணத்துக்காரியாக அமைய எல்லாமே நல்லபடி சென்றுகொண்டிருந்தது.

~oOo~

இரண்டு வருடங்கள் கழிந்திருக்கும். ஒருநாள் காலை தூக்கத்திலிருந்து பதறி எழுந்த அம்மா, “தண்டவாளம்…ஒடங்காடு….கொளத்தங்கர..” என்று கத்தினார்.

அப்பா, “ஏட்டி…என்ன செய்யி? எந்தி…என்ன செய்யிட்டி?” என்று அம்மாவைப் பிடித்து உலுக்கினார்.

மைனி ஓடிவந்து, “அத்த…என்னாச்சித்த? சொப்பனம் கண்டேளா?” என்றாள். அண்ணன் வழக்கம்போல அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்தான்.

அம்மா மெதுவாக எழுந்து புறவாசலுக்குச் சென்றவாறே என்னைப் பார்த்து, “தேரூருக்குப் போணும் மக்கா..பொறப்படு” என்றார். அவரது முகம் பயத்தில் உறைந்தது போல இருந்தது.

~oOo~

தேரூர் ஜோதிடர், “என்னம்மோ? எதாம் விசேஷம் உண்டுமா?” என்று சிரித்துக் கொண்டே கேட்டார்.

அம்மா சட்டெனக் கலங்கியவராக, “அண்ணாச்சி, என்னத்தச் சொல்லச் சொல்லுகியோ? ஒரே கெட்ட சொப்பனம்…யாரோ செத்துக் கெடக்க மாறி..பொறவு அதே தண்டவாளம்..ஒடங்காடு…கொஞ்ச நாளா அதே சொப்பனந்தா..நா இவ்வோ யார்ட்டயும் சொல்லல…”

“ஓ…செரி..வேறெதாம் நடந்தா வீட்டுல? யாருக்கும் அடிகிடி பட்டாம்மோ?” என்று கேட்டார் ஜோதிடர்.

“ஆமா அண்ணாச்சி…குளிக்கும்போ அன்னிக்கி வழுக்கி விட்டுட்டு…எனக்கு ஒரே படபடப்பா வந்துட்டு…பொறவு கொலதெய்வத்த தொட்டுக் கும்புட்டுட்டு வேலயப் பாத்தேன்..”

“ம்ம்ம்….கல்லிடக்குறிச்சிக்காரிக்கி விசேசம் உண்டுமா?”

அம்மா சற்று நேரம் அமைதியாக இருந்து, “இல்ல அண்ணாச்சி…நம்ம பிள்ளல்லா? ஒண்ணுஞ் சொல்லதுக்கில்லாம இருக்கேன்…மொதல்ல ஒண்ணு உண்டாயி நெலைக்கல்ல..பொறவு ஒண்ணயுங் காணும்..குடும்பக் கோயிலுக்கு தப்பாமச் செய்யேன் அண்ணாச்சி…சின்னவனுக்கும் ஒரு வேல அமைய மாட்டுக்கு…” என்றவர் என்னை நிமிர்ந்து பார்த்தார்.

‘நா எப்படா வேல கெடைக்கலன்னு ஃபீல் பண்ணேன்?’ என்று அம்மாவையும்ஜோதிடரையும் பார்த்து திருதிருவென்று முழித்தேன் நான்.

“அது செரி…ஒண்ணு செய்வம்…இன்னொரு தடவ சித்தூருக்குப் போவம்..நானும் வாறேன்…” என்று சொல்லி ஒரு தாயத்துக் கயிற்றைக் குடுத்து மைனியின் கையில் கட்டச் சொன்னார் தேரூரார்.

~oOo~

கடைசி வெள்ளிக்கிழமை. இந்த முறை சீக்கிரமாகவே சென்று முன்வரிசையில் இடம் பிடித்து உட்கார்ந்தோம். அம்மாவும் மைனியும் கண்களை மூடி மந்திரம் சொல்லிக்கொண்டிருக்க அப்பா கோவிலையே பார்த்துக்கொண்டிருந்தார். நான் ஜோதிடர் முகத்தைப் பார்க்க, அவர் ‘எல்லாம் நா பாத்துக்குறேன்’ என்பது போலத் தலையாட்டினார்.

பூஜை முடிந்து முதியவர் மூவரும் வெளியே வந்து நிற்க, கூட்டம் அமைதியாக அவர்களின் அழைப்பிற்காகக் காத்திருந்தது. முதலாவதாக கடைசி வரிசையிலிருந்து ஒரு குடும்பத்தை அழைத்துக் குறி சொன்னார் பூசாரி. அப்படியே இன்னும் சிலரை அழைத்துக் குறி சொல்லி அனுப்பினார். திடீரென நடுவில் நின்றவர் என்னைப் பார்ப்பது போலத் தெரிந்தது.

சில நொடிகளில், “வா டே, சரவணா? வழி தெரிஞ்சிட்டா? கன்னியாரிக்காரா, எந்திரி வா..” என்றார்.

அம்மாவும் மைனியும் சட்டென எழுந்து முன்செல்ல, அண்ணனும் அப்பாவும் பின் தொடர, ஜோதிடர் என் பின்னாலிருந்து என்னைத் தள்ளினார்.

“என்னம்மோ? பேரனப் பாக்கணுமோ? இதுக்குள்ள வந்துருக்கணும் கேட்டியா? செரி ஆக்கிருவம்…”என்றார் பூசாரி.

அம்மா பணிவோடு அவரைப் பார்த்து நின்றார்.

“கொலதெய்வத்துக்கு செறப்பு வச்சியாம்மோ?”

“ஆமா சாமி..நீங்க சொன்ன மாறிதா செஞ்சோம்…எல்லாம் நல்லாத்தான் போச்சி…இவளுக்குத்தா ஒண்ணு நெலைக்க மாட்டுக்கு…”

பூசாரி சில கணங்கள் கண்களை மூடி நின்றார். தலையை இடவலமாக ஆட்டியவர், “இல்லயம்மோ, சாமி பட்டினியால்லா கெடக்கு…கெடா கேக்கு பாத்துக்க… கருங்கெடா கேக்கு… ஓ.. ஊ… ஏய்..”என்று கத்தித் துள்ளினார்.

எங்கள் எல்லோருக்கும் முகத்தில் பெரும் குழப்பம். அம்மா கண்கலங்க, “சாமி, பூதலிங்க சாஸ்தால்லா? கெடா கேக்குங்கியோ?” என்று கேட்டாள்.

பூசாரியின் கண்கள் சிவக்க வேகம் கொண்டு ஆட ஆரம்பித்தார். சில நிமிடங்கள் ஆடி முடித்தவர், “ஏய். .வெளயாடப்படாது கேட்டியா? நீளமாட்டு இரும்புக் கம்பி… பக்கத்துல ஒடமரம்… குத்துக்கல்லு சாமி… கொளத்தங்கர..” என்று கத்தினார்.

அம்மா அழுதேவிட்டாள். “சாமி, ஒண்ணும் மனசுலாவல சாமி…” என்று கேட்க, பூசாரி மீண்டும் ஆட ஆரம்பித்தார்.

சற்று நேரத்தில் நின்றவர், “கொளத்தங்கரக்கி மேக்க உள்ளவன் பூலிங்கம்… நா கெழக்கல்லா இருக்கேன்…. கருங்கிடாக்காரனாக்கும்… பட்டினி போடாத பாத்துக்க… ரெண்டு தலமொற ஆச்சி… கோவத்துல இருக்கேன்… ஏய்… ஊ… ஓ…”

எனக்குச் சிரிப்பு வர அடக்கி நின்று கொண்டிருந்தேன். பூசாரி எனக்கும் திருநீறு பூசி என் தலையில் கைவைத்தார்.

~oOo~

One Reply to “முகவரி”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.