இரா முருகன் – அஞ்சலி

அனுராதா கிருஷ்ணசாமி

இரா முருகன் சார் மறைந்து விட்டதாக காலையில் தம்பி சுதாகர் ஃபோன் பண்ணி சொன்னார்.

சுதாகர் மூலமாகத்தான் எனக்கு முருகன் சாரை பழக்கம். அச்சுதம் கேசவமா அல்லது வாழ்ந்து போதீரேவா என்று சரியாக நினைவில்லை. 2015 அல்லது 16 ஆக இருக்கலாம். அவர்
முகநூலில் எழுதி வெளியிட்ட ஒரு பகுதியை எனக்கு அனுப்பி ‘கொஞ்சம் படிச்சிட்டு சொல்லுங்க மேடம்’ என்று சொன்னார். திலீப் வெட்ஸ் அகல்யா என்கிற பகுதி அது. பம்பாயில் நடக்கிற ஒரு திருமணத்தைப் பற்றிய வர்ணனை. சால் என்பது எப்படி இருக்கும், சாலில் நடக்கிற திருமணங்கள் எப்படி இருக்கும், மராட்டி பழக்க வழக்கங்கள் என்ன என்பதெல்லாம் அந்தப் பகுதியில் சரியாக வந்திருக்கிறதா என்று தெரிந்து கொள்ள விரும்பினார். So much detailing and cross checking.

படித்துவிட்டு கருத்து சொன்னேன். கூடவே சில தகவல்களை சேர்த்தால் ஹியூமன் டச் நன்றாக வரும் என்றும் சொன்னேன். செய்தார்.

இப்படித்தான் ஆரம்பித்தது எங்கள் நட்பு.

அவரிடம் எதைக் குறித்து வேண்டுமானாலும் பேசலாம். Anything under the Sun.

கர்நாடக இசையில் பெரும் புலமை வாய்ந்தவர். ஆனால் வெளியே காட்டிக் கொள்ள மாட்டார். ஒவ்வொரு சீசனின் போதும் தவறாது எல்லா கச்சேரிகளையும் சீசன் டிக்கெட் வாங்கிக் கொண்டு விடாமல் கேட்பார். திடீரென இரவு 11 மணிக்கு அரியக்குடி ராமானுஜ ஐயங்காரின் காம்போஜியை அனுப்புவார். சஞ்சய் சுப்பிரமணியத்தோடு நெருங்கிய சிநேகிதம். வர்ஜ்யா வர்ஜியம் இல்லாமல் கலந்து கட்டி எல்லாரையும் கேட்பார் ஜாம்பவான்களில் இருந்து சிறிய விதுவான்கள் வரை.

எழுத்தாளர் அக்கம் பக்கத்து இலக்கியத்தை பற்றி பேச கேட்கவா வேண்டும். கன்னடத்து ஜெயந்த் காய்கினியை எனக்கு அறிமுகப்படுத்தியவர் அவர்தான். தமிழர் தான் என்றாலும் சில சமயம் மலையாளம் தான் அவருடைய தாய் மொழியோ என்று எனக்கு சந்தேகம் வந்ததுண்டு.

தினமும் ஏதாவது ஒன்று சங்கீதம் நாடகம் அல்லது இலக்கியம் சம்பந்தப்பட்ட, அல்லது தான் சமீபத்தில் படித்த கதை அல்லது முன்பு எப்போது படித்தது என்று வகை வகையாய் பகிர்ந்து கொள்வார்.

எழுத்தை பாராட்டினால் சின்ன குழந்தை போல கூச்சத்துடன் ஏற்றுக் கொள்வார். சந்தோஷப்படுவார். So nice of you என்று சொல்வார்.

அவர் எழுதியவற்றை விமர்சனம் செய்வது இங்கே என்னுடைய நோக்கம் இல்லை இதுதான் முருகன் என்கிற நல்ல மனுஷரை அவருடைய நட்பு என்னை செம்மைப்படுத்தியதை பகிர்ந்து கொள்வததே என் நோக்கம். பத்து வருடங்கள் எதை எதையெல்லாமோ பகிர்ந்து கொண்டிருக்கிறோம். யோசித்துப் பார்த்தால் ஆச்சரியமாக கூட இருக்கிறது. சங்கீதம் இலக்கியம் கிரிக்கெட் எல்லாம்.

கச்சேரி முடிந்து வீட்டுக்கு வந்ததும் சபாவில் கொடுக்கிற ஃபிளையிலிருந்து என்னென்ன ராகம் பாடினார்கள் என்று போட்டோ எடுத்து அனுப்புவார். கூடவே வர்ணனையும். நானே நேரில் கேட்டது போல இருக்கும்.

முதல் முதலாக நான் மொழிபெயர்க்க ஆரம்பித்தபோது இஸ்மத் சுக்தாயின் போர்வை என்னும் கதையை மொழிபெயர்த்து அவருக்கு அனுப்பினேன். படித்துவிட்டு பாராட்டி உற்சாகப்படுத்தினர்.
என்னுடைய தாய் வீடான சொல்வனம் காரர்களுக்கு என்னை அறிமுகப்படுத்தி எழுத தூண்டினார். எழுதியதை படித்த உடனேயே மனதாரப் பாராட்டுகிற நல்ல பழக்கம் அவரிடமிருந்தது. தெரியாதவற்றை கேட்டு தெளிவு பெற்றுக் கொள்வதும் அவரிடம் இருந்த இன்னொரு நல்ல பழக்கம்.

குடும்பஸ்தர். பேரன் பேத்திகள் மீது அளவற்ற அன்பு கொண்டவர். பெரிய பேத்தி பரதநாட்டியம் கற்றுக் கொள்வதையும் சின்னவள் நட்டுவாங்கம் செய்வதையும் வீடியோ எடுத்து நிறைய பகிர்ந்து கொள்வார். ஆரா குஞ்சம்மா ஆது குஞ்சம்மா என்று அகமகிழ்ந்து போவார்.

என் கணவர் நோய்வாய்ப்பட்டிருந்த போது அடிக்கடி வாட்சப் மூலம் தகவல் விசாரித்துக் கொள்வார். என் கணவர் இறந்த அன்று அதிகாலையில் நான் அவருடைய மறைவை பகிர்ந்து கொண்ட மிகச் சிலரில் முருகன் சாரும் ஒருவர்.

போன வருஷம் பொள்ளாச்சி மகாலிங்கம் மொழிபெயர்ப்பு விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட விஷயத்தை பகிர்ந்து கொண்ட போது உள்ள அன்புடன் வாழ்த்தினார்.

முருகன் சார் எனும் ஆப்தர் இப்போது இல்லை என்பது இன்னும் சரியாக உள்ளே இறங்கவில்லை. ஒரு சமயம் யோசித்துப் பார்த்தால் ஒரு வகையில் அவர் விட்டு விடுதலையானது போலத் தான்.

நோய் நொடி மறதி போன்ற எந்த உபாதையும் இல்லாமல் இனியாவது அவர் சுதந்திரமாக நிம்மதியாக பறக்கட்டும், ஒரு சிட்டுக்குருவியைப் போல. பறந்து களைக்கும்போது அம்பலப்புழை கிருஷ்ணனின் திருவடியில் இளைப்பாறட்டும்.


சரஸ்வதி தியாகராஜன்

தமிழ் இலக்கிய ஆளுமை இரா முருகன் அவர்களுக்கு இதய அஞ்சலி!

தமிழ் இலக்கிய உலகில் தனக்கென ஓர் அழியாத இடத்தைப் பதித்துச் சென்ற மகத்தான எழுத்தாளரின் மறைவு, ஈடுசெய்ய முடியாத இழப்பு.

தம் எழுத்துகளால் எண்ணற்ற இதயங்களைத் தொட்டவர்; தம் கதாபாத்திரங்களால் வாழ்வின் பல்வேறு முகங்களை நமக்கு அறிமுகப்படுத்தியவர். அவரது நாவல்களும் சிறுகதைகளும் வெறும் கற்பனைகளல்ல; அவை மனித உணர்வுகளின் பதிவுகள், காலத்தின் கண்ணாடிகள், வாழ்க்கையைப் புரிந்துகொள்ள உதவும் படைப்புகள்.

நாவல், சிறுகதை, கட்டுரை, மேடை நாடகம், திரைப்பட வசனம் எனப் பல துறைகளில் தடம் பதித்தவர்.
மாந்திரீக யதார்த்தவாதக் கதையாடலைக் கொண்ட ‘அரசூர் வம்சம்’, ‘விஸ்வரூபம்’, ‘அச்சுதம் கேசவம்’, ‘வாழ்ந்து போதீரே’ ஆகிய இவரது நான்கு நாவல்கள் வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. வரலாற்றுப் பின்னணியில் இவர் எழுதிய ‘மிளகு’ நாவலும், மென்பொருள் துறை சார்ந்த ‘மூன்று விரல்’ நாவலும் வாசகர்கள் கவனத்தை ஈர்த்தன. ‘உன்னைப் போல் ஒருவன்’, ‘பில்லா-2’ ஆகிய தமிழ்த் திரைப்படங்களுக்கு இவர் வசனமும் எழுதியுள்ளார்.

அவரது சொல்வனத்தில் வந்த மிளகு பெரு நாவல் மற்றும் சிவிங்கி குறு நாவல், மற்றும் திண்ணை இதழில் வந்த தினை நாவல் மற்றும் அவரது பல சிறுகதைகளை எனது குரலால் ( சொல்வனத்தில்) ஒலிக்கச் செய்து, பலரிடம் கொண்டு சேர்க்கச் செய்த தொண்டு போற்றத்தக்கது. எழுத்துகள் வாசிக்கப்படும்போது மட்டுமல்ல, குரல்வழி கேட்கப்படும்போதும் புதிய உயிர் பெறுகின்றன.
என்னுடைய ஒவ்வொரு குரல் பதிவையும் உடனே கேட்டுப் பாராட்டி எழுதிவிடுவார். அவை அனைத்தையுமே சேர்த்து சிறு புத்தகமாக வெளியிடலாம்.
அலைபேசியில் என்னைப் பாராட்டிய தருணங்கள் பல.

எழுத்தாளர் மறைந்தாலும், அவர் படைத்த உலகம் மறைவதில்லை. அவரது எழுத்துகள் காலங்களைக் கடந்து வாழும்; அவரது சிந்தனைகள் தலைமுறைகளைத் தொடர்ந்து சென்றடையும்.
எழுத்தால் வாழ்ந்தவர் என்றும் எழுத்தால் வாழ்வார்!

அவரது ஆன்மா அமைதியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். 🙏


ராம் ப்ரசாத்

2022ம் ஆண்டில் ஜீரோ டிகிரி சிறுகதைப்போட்டிக்கு அவரே நடுவர். அந்த ஆண்டில் தான் எனது அறிபுனை சிறுகதை சோஃபியாவுக்கு விருதும் கிடைத்தது. அறிவியலுக்கும், அறிவியல் பார்வைகளுக்கும், எதிரானதாகத்தான் தமிழ் சமூகம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இயங்குகிறது.

ஆன்மீகம், அதன் அடிப்படையிலான ஜாதி, மதக்கட்டுமானம் இவற்றின் அடிப்படையிலான பிரிவினைவாதங்கள், அதன் அடிப்படையிலமைந்த அரசியல், குழு மனப்பான்மைகள், சமூக செயல்பாடுகள், இவற்றை மையமாகக் கொண்ட பெருத்த எண்ணிக்கையிலான மக்கள் கூட்டம், அவற்றை முதலீடாகக் கொண்ட மீடியாக்கள் இவைகளை அஸ்திவாரமாகக் கொண்ட சமூக அமைப்பு தான் நம்முடையது.

இம்மாதிரியான சமூகத்தின் பெரும்பாலான கதைக்களங்கள் இவற்றைச் சார்ந்தே அமைந்தும் விடுவது இயற்கையாகவே நிகழ்ந்துவிடுகிறது. யாரைக் குறை சொல்வது என்றே சமயத்தில் தெரிவதில்லை. ‘நல்ல கதைகள் எத்தனையோ இருக்கே’ என்றால், ‘மக்கள் பாக்கமாட்டங்க பாஸ்’ என்றே பதில் வருகிறது. இந்தச் சமூகத்தில் எப்படிப்பட்ட குறைகளைச் சுட்டும் கேள்விகளுக்கும், அங்கே இங்கே என்று சுற்றி இறுதியில் அது ‘மக்கள்’ மீதே திரும்புகிறது.

ஆயினும், இப்படியாக மக்களால் மறக்கடிக்கப்படும் அறிவியலை நினைவில் கொண்டுவர யாரேனும் தொடர்ந்து முயற்சித்துக்கொண்டே இருக்கிறார்கள். தமிழில் அறிவியல் புனைவுகள் எழுதும் ஒவ்வொருவரையும் இந்த அரும்பணியை மேற்கொள்பவர்கள் என்று அடையாளப்படுத்தலாம். ஒவ்வொருவரின் பங்களிப்புகள், புழங்குதளங்கள், இயங்குவெளிகள் வெவ்வேறானதாக இருக்கலாம். ஆனால், அவர்களின் முயற்சி, நோக்கம் எல்லாமும் அறிவியலை மக்களிடம் கொண்டு சேர்ப்பதாகத்தான் இருக்கும். இருளில் கடலில் தொலைந்திருக்கையில் தூரத்தே தென்படும் கலங்கரை விளக்கம் போல.

இந்தப் பின்னணியில், சமயத்தில், இரா.முருகன் அவர்கள் நடுவராக இருந்திருக்காவிட்டால், 2022 ஜீரோ டிகிரி விருதுக்கு எனது அறிபுனை ‘சோஃபியா’ தேர்வாகியிருக்காது என்று அவ்வப்போது எனக்குத் தோன்றும்.

எழுத்து பழகத்துவங்கிய துவக்க காலத்தில் சுஜாதா முன்மாதிரியாக இருந்திருக்கிறார். ஏனெனில், பொறியியல் வல்லுனராகப் பணியில் வெற்றிகரமாக இருந்துகொண்டே எழுத்தென்னும் இன்னொரு குதிரை மீதும் சவாரி செய்துகாட்டினார். இது போல் ஐடியில் இருந்துகொண்டே எழுத்தையும் வெற்றிகரமாக மேற்கொள்ளும் அனைவரையுமே நான் முன்மாதிரியாகப் பார்க்கிறேன். இரா.முருகன் சாரையும் அப்படித்தான் அறிந்திருக்கிறேன். அவரது மறைவுச் செய்தி சற்று பலவீனமாக உணரவைக்கிறது. ஒரு பெரிய ஆற்றல் மிகுந்த, நாற்பதாண்டுகால அனுபவம் மிக்க கை குறைவதைப் போலத் தோற்றமளிக்கிறது. இந்த வெற்றிடத்தையெல்லாம் எதைக்கொண்டும் நிரப்புவதற்கில்லை.

அவரிடம் நான் பேசியதில்லை. அமெரிக்க வாழ்வு யாரையும் சந்திக்க அனுமதிப்பதில்லை. தொலைபேசி உரையாடல்கள் செயற்கைத்தன்மைகளுக்கு இடமளிப்பவை. எழுத்து மூலமாக வரும் நட்புகள், உறவுகளே எனக்கு நிலைத்து நின்றிருக்கின்றன. இப்போது என்னுடன் நெருக்கமாக இருப்பவர்கள் அத்தனை பேரும் ஏதோ ஒரு ஆக்கத்தின் வழி, கடிதப்போக்குவரத்தில் துவங்கி, உரையாடல்கள் வழி நிலைத்தவர்களே. எனக்கு இந்த வழித்தடம் தான் வேலை செய்கிறது. அப்படியான ஒரு வழித்தடம், இரா.முருகன் சாருடன் ஒரு சந்திப்பு அமையாததில் வருத்தமே என்று சொல்வதைக்காட்டிலும், இதோ இன்றமையும், நாளை அமைந்துவிடும், இன்னொரு மேலான நல்ல தருணத்தில் அமைந்துவிடும் என்ற ஒத்திப்போடுதலில் நிஜமாகாமல் போனவைகள் என்று சொன்னால் மிகையாகாது.

தமிழ் இலக்கிய ஆளுமை எழுத்தாளர் இரா.முருகன் அவர்களின் மறைவுக்கு, ஒரு சக அறிவியல் புனைவெழுத்தாளனாக, என் இதயப்பூர்வ அஞ்சலி.


இலவசக் கொத்தனார் / ராஜேஷ் கர்கா

வங்கிகளுக்கான மென்பொருள் உருவாக்கும் துறையில் இருந்தவர். அந்த அனுபவங்களையே புத்தகமாக எழுதியவர். என் துறையும் அதுதான் என்பதால் எடுத்த உடனேயே மனத்துக்கு நெருக்கமானவரானார். பல மின்மடல் குழுமங்களில் இருந்தோம் என்றாலும் அப்பொழுது அவரோடு அறிமுகம் கிடையாது.

பின்னர் வெண்பா எழுதத் தொடங்கிய பொழுது அவர் அறிமுகம் கிடைத்தது. என்ன எழுதினாலும் எதிர் வெண்பா எழுதுவது, பாராட்டி இரண்டு சொற்கள் சொல்வது என்று வெகு பாந்தமாக எங்கள் தொடர்பு வலுவடைந்தது. கிரிக்கெட், கர்நாடக சங்கீதம், அறிவியல் குறித்த தகவல் பரிமாற்றம், நகைச்சுவை, வம்புப் பேச்சு என்று எங்களுக்குப் பொதுவான தலைப்புகள் பலவும் கிடைக்க இந்தத் தொடர்பு நட்பானது.

லண்டன் டயரி, எடின்ப்ரோ குறிப்புகள், மூன்று விரல், நெம்பர் 40 ரெட்டைத் தெரு, தியூப்ளே வீதி, 1975, அச்சுதம் கேசவம், அரசூர் வம்சம், வேம்பநாட்டுக் காயல், மிளகு, குறு நாவல்கள், கதைகள் என சளைக்காமல் எழுதிக் குவித்தவர். ஓர் எழுத்தாளர் எப்படி இவ்வளவு வகைமைகளில் எழுத முடியும் என ஆச்சரியப்பட வைத்தவர்.

தனது தீவிரப் பணிகளுக்கிடையேயும் எப்படியோ நான் எழுதும் கட்டுரைகளைப் படித்துவிடுவார். எதிர்பாரா நேரத்தில் அது குறித்துப் பேசுவார். சமயத்தில் முரண்படுவார். நன்றாக இருக்கிறதென்று பாராட்டுவார். அண்ணனைப் போன்ற கரிசனத்துடன் என்னைக் கவனித்து வழிநடத்தி வந்தார்.

ஒரு கட்டத்தில் நான் வியந்தோதும் ஆளுமையான கிரேசி மோகனிடம் என்னை அறிமுகப்படுத்தவும் செய்தார். இன்றைக்கு என் மின்னஞ்சலில் கிரேசி எனக்காக எழுதிய வெண்பாக்கள் இருக்கின்றனவென்றால் அதற்கு முழுமுதற்காரணம் இவர்தான். கிரேசி மறைந்து சில நாட்களுக்குப் பின் வெகு நேரம் கிரேசி பற்றி நாங்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தோம்.

இன்றைக்குக் காலை எழுந்தவுடன் கிடைத்த செய்தி – இராமு அண்ணா மறைந்து விட்டார்! இப்பொழுது யாரிடம் இவர் பற்றிப் பேச?

போய் வாருங்கள் அண்ணா.


Discover more from சொல்வனம் | இதழ் 377 | 25 அக் 2026

Subscribe to get the latest posts sent to your email.

மறுமொழி இடவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.