இருபத்து நான்கு வருடங்களாய்..

ஞாயிற்றுக்கிழமை காலை சோம்பலாய் விடிந்தது. ஆனாலும், ஞாயிற்றுக்கிழமை காலைகளில் வீட்டின் வேலைகள் வழக்கம்போல் நடந்து கொண்டிருக்கும்.  ஜானகி அடுத்த வாரத்துக்கான தேவைகளைப் பார்த்துக் கொண்டிருப்பாள். இல்லையென்றால் இருக்கவே இருக்கிறது தேவி மகாத்மியம் 

கணவர் ராமநாதனுக்கு  மட்டும் வார நாட்களுக்கும் ஞாயிற்றுக்கிழமைக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இருந்ததில்லை. வீட்டுச் சாப்பாட்டு மேசையின் ஒரு மூலையில் ஆய்வுக் கட்டுரைகள் பரவிக் கிடக்கும்.   மடிக்கணினியில் ஒரு படம். அதில் பல வண்ணங்களில் கோடுகளும், அவற்றை இணைக்கும் அம்புக்குறிகளும். பாதி குடித்து ஆறிப் போன நிலையில் காப்பி.

ராமநாதனுக்கு வயது ஐம்பது. உலகின் முன்னணி உயிரித் தொழில்நுட்ப நிறுவனமான லூமென் பயோ சிஸ்டம்ஸின் முதன்மை அறிவியல் ஆராய்ச்சியாளர். இந்தியாவின் உயரிய அறிவியல் விருதுகள் பலவற்றைப் பெற்றவர். சர்வதேச அளவில் அறியப்பட்ட உயிரியல் விஞ்ஞானி. அவருடைய ஆய்வுக் கட்டுரைகள் உலகெங்கிலும் உள்ள ஆராய்ச்சியாளர்களால் தொடர்ந்து மேற்கோள் காட்டப்பட்டுகின்றன.   

இருபத்துநான்கு ஆண்டுகளாக ஒரே பெரிய ஆராய்ச்சியில்  ஈடுபட்டிருக்கிறார். பல்லிக்கு அது இழந்த வால் மீண்டும் வளர்கிறது. பல்லி போல இருக்கும் இருவாழ்வி சாலமாண்டர் என்ற உயிரினத்துக்குத் துண்டிக்கப்பட்ட கால்கூட மீண்டும் வளர்கிறது. ஆனால் மனிதனுக்கு அப்படி நடப்பதில்லை. ஏன்? மனித உடலிலும் இழந்த உறுப்புகளை மீண்டும் வளரச் செய்ய முடியுமா? அந்த ஆராய்ச்சியைப் பற்றிக் கேட்டவுடன் , “நான் தேவி மகாத்மியத்தில் படிச்சிருக்கேன். ரக்த்பீஜனுடன் தேவி சண்டை போட்ட போது, அவனது உடம்புலேர்ந்து சிந்தின ரத்தத்தில், ஆயிரக்கணக்கான ரக்தபீஜன்கள் தோன்றி தேவியோட சண்டை போட்டாங்களாம். உங்க ஆராய்ச்சியை அதிலேர்ந்து ஆரம்பியுங்கோளேன்.” என்றாள். வீட்டிலிருக்கும் தேவியோடு அவரால் சண்டை போட முடியாது. 

கேள்வி எளிமையானதுதான். அதற்கான பதில் மட்டும் இயற்கையின் ஆழமான மர்மங்களில் ஒன்று. மனித உடலில் காயம் ஆறுகிறது. எலும்பு முறிந்தால் மீண்டும் இணைகிறது. கல்லீரலின் ஒரு பகுதியை அகற்றினாலும் மீதமுள்ள கல்லீரல் வளர்ந்துவிடும்.  ஆனால் துண்டிக்கப்பட்ட விரல் நகம் வளர்கிறது. ஆனல் விரல் துண்டிக்கப்பட்டால் அது போல், மீண்டும் வளருவதில்லை . அதற்கு, கோடிக்கணக்கான செல்கள் சரியான வரிசையில், சரியான நேரத்தில், சரியான இடங்களில் உருவாக வேண்டும். அத்துடன், நரம்புகள், தசைகள், இரத்தக் குழாய்கள், எலும்பு மஜ்ஜை என அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். 

இந்த ஒருங்கிணைப்பின் ரகசியத்தைத் தேடுவதில்தான் அவரது ஆராய்ச்சி வாழ்க்கை கழிந்திருக்கிறது. முழுமையான தீர்வு கிடைக்கவில்லையென்றாலும், பல முக்கியமான கண்டுபிடிப்புகளைச் செய்திருந்தார். அவற்றுக்காக    ஏராளமான விருதுகளும் உலகளாவிய அங்கீகாரமும் கிடைத்திருந்தன. 

அவரது மனைவி ஜானகி நுண்கலைப் பேராசிரியர். ஓவியத்திலும் சிற்பக்கலையிலும் நிபுணி. வீட்டின் சுவர்களில் அவளது ஓவியங்கள் இருந்தன. போனால் போகிறதென்று,  அவற்றுக்கிடையே ராமநாதனின்   விருதுச் சான்றிதழ்களும் புகைப்படங்களும் செருகப்பட்டிருக்கும்.  

மனைவியின் பங்களிப்புடன், பதின்மூன்று வயது மகள் நாராயணி மிகுந்த அறிவுக்கூர்மையுள்ள குழந்தை. அறிவியல், கணிதம், வரலாறு என எல்லாவற்றிலும் ஆர்வம். நிறைய புத்தகம் படிப்பாள். அதற்கப்புறம் ஏதாவது வரைந்து கொண்டிருப்பாள்.  சில மாதங்களாக செயற்கை நுண்ணறிவு பக்கம் அவளது கவனம் திரும்பியிருக்கிறது. 

“இன்னிக்கும் ஆபீஸ்தானே.. மதியச் சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வருவீங்களா ?” என்று கேட்டாள் ஜானகி . 

“ஆபீஸ்லயே சாப்பிட்டுக்கிறேன்.” 

அவர் கணினியில் இருந்த படத்தை மீண்டும் பெரிதாக்கினார். செல்களுக்கிடையே நடைபெறும் தகவல் பரிமாற்றத்தைப் பற்றிய புதிய ஆய்வு அது. சில மாதங்களாக அவருக்குள் ஒரு சந்தேகம் இருந்தது. செல்களுக்குள் இருக்கும் மரபணுக்களை மாற்றுவதிலேயே கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, செல்கள் ஒன்றோடொன்று பேசிக்கொள்ளும் விதத்தை மாற்றினால் என்ன? அந்த யோசனையைப் பற்றிக் குறிப்பெடுத்துக் கொண்டார். 

இதற்கிடையில் உலகம் வேகமாக மாறிக்கொண்டிருப்பதையும் ராமநாதன் கவனித்திருந்தார். செயற்கை நுண்ணறிவு கணினி நிரல்களை எழுதுவதில் தொடங்கி, கல்வி, வணிகம், மருத்துவம், சட்டம், அறிவியல் ஆராய்ச்சி என அனைத்து துறைகளிலும் புகுந்திருந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு ஆராய்ச்சியாளர்களுக்கு உதவிய AI, இப்போது தானாகவே ஆய்வுகளை வடிவமைக்கவும், புதிய கோட்பாடுகளை முன்வைக்கவும் தொடங்கியிருந்தது. 

ஆனால் மனித அறிவின் ஆழமான படைப்பாற்றலுக்கு மாற்றாக எந்த இயந்திரமும் இருக்கமுடியாது என்பதில் அவருக்கு உறுதியான நம்பிக்கை இருந்தது. 

கடிகாரத்தைப் பார்த்தார். நேரமாகியிருந்தது. அலுவலகத்திற்குக் கிளம்பத் தயாரானர்.  

அப்போ துதான் நாராயணி ஓடிவந்தாள். “அப்பா ! அப்பா ! OpenAI நியூஸ் பார்த்தீங்களா ?” 

“என்ன நியூஸ்?”

“அவங்களோட புது AI மாடல் நூற்றுக்கணக்கான தீர்க்கப்படாத பிரச்சினைகளைத் தீர்த்திருக்காம்!  அதுவும் உங்க சப்ஜெக்ட்ல”

ஒரு கணம் நின்று அவளைப் பார்த்தார்.  “அப்படியா? சரி, அப்புறமாப் படிக்கிறேன். இப்ப ஆபீஸ் போகணும்.” அவர் கார் சாவியை எடுத்துக்கொண்டு நடந்தா ர். 

நாராயணி வழி மறித்து நின்றாள். கண்களை நேராகப் பார்த்து, குறும்பாகச் சிரித்தாள். “அப்பா , நீங்க OpenAI கிட்ட வசமா மாட்டிக்கிட்டீங்க!” 

“ஏன் நாணி அப்படிச் சொல்றே ?   நான் எப்படிம்மா மாட்டிக்க முடியும் ?” 

“உங்க ஆராய்ச்சிக்கு பதில் சொல்லிட்டாங்கப்பா.  மனிதர்களுக்கு உடல் உறுப்புகள் மறுபடியும் வளர வைக்கிற மேட்டர் ! They got you appa!” அவள் கலகலவென்று சிரித்தா ள். 

ராமநாதன் ஒரு கணம் ஸ்தம்பித்து நின்றார். “என்ன சொல்றே ?” 

“ஆமாப்பா ! அது நீங்க இருபது வருஷமா பண்ணிக்கிட்டிருக்கிற ஆராய்ச்சிதானே !”

 “ஆமாம்.. ஆனா இருபத்துநாலு வருஷம்,” என்றார் அவர். 

“அப்ப இன்னும் மோசம்!” என்றாள் நாராயணி. 

ராமநாதன் கடிகாரத்தைப் பார்த்தார். “ நியூஸ்ல வர்றதையெல்லாம் நம்ப முடியாது கண்ணா” 

“அப்ப நீங்க AI கிட்ட  மாட்டலைன்னு சொல்றீங்க ?” 

“அதைப் பின்னாடி பார்ப்போம்!” 

அவர் வெளியேறினார். 

காரில் அமர்ந்ததும் ஐபோனில் செய்தியைத் திறந்தார். தலைப்பு மிகப் பெரிய எழுத்துகளில் இருந்தது. 

OPENAI  நூற்றுக்கணக்கான நீண்டகால பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டது.  

அதன் கீழே மனித உடல் உறுப்புகளின் மறுவளர்ச்சியைப் பற்றிய அறிவிப்பு. அவர் செய்தியின் முதல் பத்தியைப் படித்தார். பிறகு ஐபோனை வைத்துவிட்டு காரை கிளப்பிக் கொண்டு போனார்.  

✦ 

ஞாயிற்றுக் கிழமையானாலும், அலுவலகத்தின் நுழைவாயிலில் தொலைக்காட்சி வாகனங்கள் கவிழ்த்து வைத்த குடைகளுடன், நிருபர்களுடன் காத்திருந்தனர். 

“டாக்டர் ராமநாதன்! OpenAI கண்டுபிடிப்பைப் பற்றி உங்கள் கருத்து என்ன?” 

“உங்களது இருபத்து நான்கு ஆண்டுகால ஆராய்ச்சிக்கு இப்போ து என்ன ஆகும்?”

 “உங்களது வாழ்நாள் ஆராய்ச்சிக்கு ஒரே நாளில் AI பதில் சொல்லிவிட்டதே. அதை எப்படி உணருகிறீர்கள்?” 

 நானாவித திசைகளிலிருந்தும் கேள்விக் கணைகள் பாய்ந்தன. 

ராமநாதன் காரை நிறுத்திவிட்டு இறங்கி நின்றார். “நான் இன்னும் அந்த ஆய்வைப் படிக்கவில்லை. படித்தபிறகு கருத்துச் சொல்கிறேனே” 

“ஆனால் அவர்களுடைய முடிவுகள் சரி பார்க்கப்பட்டதாகச் சொல்கிறார்களே ?” 

“அப்படியானால் இன்னும் கவனமாகப் படிக்க வேண்டும்.” மெலிதாகச் சிரித்துவிட்டு அலுவலக கட்டிடத்திற்குள் நுழைந்தார். 

அலுவலகத்தில் அதே செய்தி ஏற்கெனவே பரவியிருந்தது. சக ஆராய்ச்சியாளர்கள் சிலர் அவரைச் சந்திக்கக் காத்திருந்தனர். உலகெங்கிலும் இருந்து மின்னஞ்சல்கள் வந்திருந்தன. OpenAI வெளியிட்டிருந்த ஆய்வுக் கட்டுரை நூற்றுக்கணக்கான பக்கங்களைக் கொண்டிருந்தது. அதன் விளக்கங்களுக்காகத் தனியாக இணைப்புகளும், கணித மாதிரிகளும், பரிசோதனை விவரங்களும் அதில் இருந்தன. 

ராமநாதன் படிக்கத் தொடங்கினார். முதல் சில பக்கங்கள் பழக்கமானவை . 

அதற்குப் பிறகு முற்றிலும் புதிய உலகம் தொடங்கியது. அவரை உள்ளுக்குள் இழுத்துக் கொண்டது. 

இதுவரை ஆராய்ச்சியாளர்கள் மரபணுக்கள், ஸ்டெம்செல்கள், வளர்ச்சியைத் தூண்டும் புரதங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகளைத் தனித்தனியாக ஆராய்ந்திருந்தனர். ஆனால் AI உருவாக்கிய முறை உடலில் உள்ள செல்களை ஒரு பெரிய தகவல் வலை அமைப்பாகக் கருதியிருந்தது. இதற்காக ஒரு விசித்திரமான தொடர்ச்சியான கட்டமைப்பை உருவாக்கியிருந்தது. அதில் பல கட்டுப்படுத்தப்பட்ட இடையூறுகளும், மீண்டும் மீண்டும் செ யல்படும் தகவல் சுழற்சிகளும் இருந்தன. ராமநாதன் மூன்றாவது பகுதியைப் படித்தார். 

பின்னர் முதல் பகுதிக்குத் திரும்பினார். நான்காவது பகுதியில் பயன்படுத்தப்பட்ட ஒரு கருத்துக்கான விளக்கம் அறுபத்தேழாவது பக்கத்தில் இருந்தது. மாலைக்குள் நூற்றுக்கணக்கான குறிப்புகளை எடுத்திருந்தார். 

ஆனால் மையமான கருத்து இன்னும் முழுமையாகப் பிடிபடவில்லை .

2

திங்கட்கிழமை முழுவதும் அதிலேயே செலவானது. செவ்வாய்க்கிழமையும் அப்படித்தான். மற்ற கூட்டங்களை ஒத்தி வைத்தார். வழக்கமான ஆராய்ச்சித் திட்டங்களின் முன்னேற்ற அறிக்கைகளைத் தயார் செய்யும் பொறுப்பை உதவியாளர்களிடம் ஒப்படைத்தார். 

ஒரு கட்டத்தில், OpenAI-யி ன் புதிய முறையை விளக்கும்படி மற்றொரு AI அமைப்பிடமே கேட்டார். அது ஆய்வுக் கட்டுரையின் பல பகுதிகளில் சிதறிக் கிடந்த நிபந்தனைகளையும் முடிவுகளையும் இணைத்து, தெளிவான விளக்கத்தைக் கொடுத்தது. அவர் அந்த விளக்கத்தைத் தமது குறிப்புகளோடு ஒப்பிட்டா ர். 

சில இடங்களில் அது சரியாக இருந்தது. சில இடங்களில் மேலும் கேள்விகள் எழுந்தன. அதே நேரத்தில், உலகின் மூன்று முன்னணி ஆராய்ச்சி நிறுவனங்கள் AI-யி ன் சில முக்கிய முடிவுகளைத் தனித்தனியாக உறுதிப்படுத்தியிருந்தன. மனிதர்களில் முழுமையான உறுப்புகளை வளர்ப்பதற்கான மருத்துவச் சோதனைகள் இன்னும் நடைபெறவில்லை என்றாலும், ஆரம்பகட்ட ஆதாரங்கள் வலுவாக இருந்தன. 

மதிய உணவு இடைவேளையில், ராமநாதன் ஒரு சக ஆராய்ச்சியாளரிடம் சொன்னார். “ஒரு விஷயத்தை மறுக்கணும்னா முதல்ல அது என்னன்னு புரிஞ்சுக்கணும். இங்கே புரிஞ்சிக்கிறதுதான்  பெரிய வேலையா இருக்கு.” 

✦ 

வியாழக்கிழமை லூமென் பயோசிஸ்டம்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஆரோன் சோர்கின் ஒரு பெரிய பத்திரிகையாளர் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார். 

சர்வதேச ஊடகங்கள் வந்திருந்தன. அறிவியல் செய்தியாளர்கள், தொலைக்காட்சி நிறுவனங்கள், பல்கலைக்கழகப் பிரதிநிதிகள் என அரங்கம் நிரம்பியிருந்தது. 

வழக்கம் போல ராமநாதனை  சோர்கின் அறிமுகப்படுத்தினார். அறிவியல் உலகத்தில் அவரை அறிந்தவர்களுக்கு அது ஒரு சம்பிரதாயச் சடங்கு என்று நன்றாகவே தெரியும்.  

ராமநாதன் வழக்கமான உற்சாகத்தோடு மேடைக்கு வந்தார். 

முதல் கேள்வி நேரடியாகவே வந்தது. “டாக்டர், AI உண்மையிலேயே உங்களது ஆராய்ச்சிக்கு பதில் அளித்துவிட்டதா? ” 

“மிக முக்கியமான முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. அதை மறுப்பதற்கில்லை.  ஆனால் கோட்பாடு ரீதியாக  ஒரு  செயல்முறையை நிரூபிப்பதற்கும், அதைப் பாதுகாப்பான மருத்துவச் சிகிச்சையாக மாற்றுவதற்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது.” 

“உங்கள் ஆராய்ச்சியை விட இந்தப் புதிய முறை சிறந்ததா ?” 

“அது முற்றிலும் வேறுபட்ட அணுகுமுறை. அதன் எல்லைகளையும் நன்மைகளையும் இன்னும் ஆராய வேண்டும்.” 

“அப்படியானால் இதை ஒரு புரட்சி என்று சொல்லலாமா ?” 

கேள்வி கேட்டவரைப் பார்த்து ராமநாதன் சிரித்தார். “முதல்ல இந்த பேப்பரை எப்படி எழுதினாங்கன்னு விசாரிக்கணும் அல்லது எது எழுதியது என்றாவது கேட்கவேண்டும்.” 

அரங்கில் சிரிப்பொலி எழுந்தது. 

“இதைப் படித்தால்  ஏதோ போதைப் பொருள் எடுத்துக்கிட்ட வேற்றுக்கிரகவாசி ஒருத்தன் எழுதின மாதிரி இருக்கு! நிறைய இடங்களில் என்ன சொல்ல வர்றாங்கன்னே புரியல. பழைய ஆராய்ச்சிகள்,  அதன் செயல் முறைகள் வேலை செய்யவில்லை என்று நிரூபிக்கப்பட்டிருக்கும்போது, அவற்றை இங்கே எப்படி பயன்படுத்த முடியும்னு தெளிவாக விளக்கவே இல்லை.” 

“மொத்தத்துல இந்தப் பேப்பரைப் புரிஞ்சுக்க எனக்கே இன்னொ ரு AI-யோட உதவி தேவைப்பட்டது. நினைச்சுப் பாருங்க! பல வருஷமா இந்தப் பிரச்சினையில ஆராய்ச்சி பண்ற எனக்கு, அதை விளக்க ஒரு AI தேவைப்பட்டுது!”  கூட்டத்தினிடையே சிரிப்பு அதிகமானது. 

“இது வழக்கமான ஸ்டெம் செல்முறையும் இல்லை. ஜீன் எடிட்டிங்கும் இல்லை . ஏதோ புதுசா ஒரு பைத்தியக்காரத்தனமான சுழற்சியைக் கண்டுபிடிச்சிருக்காங்க. ஒரு செல் இன்னொரு செல்லைத் தூண்டுது, அது அடுத்த செல்லைத் தூண்டுது, அப்புறம் அது திரும்ப முதல் செல்லை மாற்றுது. ஏதோ வேற்றுக்கிரக உயிரியல்! பூமியில் வாழ்கிற மனிதர்களுக்கானது போலில்லை” 

அவர் கையில் இருந்த குறிப்புகளை உயர்த்திக் காட்டினார். 

“இதில வேடிக்கை என்னன்னா, முதல்ல அபத்தமா இருக்குன்னு தோணின சில விஷயங்கள், ஆழமாகப் படிக்கும்போ து சரியாக இருக்கலாம் போலத் தெரியுது.” 

ஒரு நிருபர் கேட்டார். “அப்படியானால் இந்தக் கண்டுபிடிப்பை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா ?” 

“அறிவியலில் ஏற்றுக்கொள்வதும் நிராகரிப்பதும் தனிப்பட்ட விருப்பங்கள் அல்ல. ஆதாரங்களைப் பார்க்க வேண்டும். இதுவரை பார்த்த ஆதாரங்கள் நம்பிக்கை அளிக்கின்றன. ஆனால் சில கோட்பாடுகளை இன்னும் முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை . அவற்றைத் தொடர்ந்து ஆராய வேண்டியதுதான்.” 

அவர் சற்று இடைவெளி விட்டார். “எனக்கு இன்னும் ஒரு நம்பிக்கை இருக்கிறது. இயற்கையில் சாலமாண்டருக்கு எப்படிக் கால் மீண்டும் வளர்கிறது என்பதை முழுமையாகப் புரிந்துகொண்டால், இதை விட எளிமையான முறையைக் கண்டுபிடிக்க முடியும். இயற்கையின் தீர்வு இவ்வளவு சிக்கலாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை .” 

பிறகு பின்வரிசையில் இருந்த ஓர் இளம் நிருபர் எழுந்தார். 

“டாக்டர், எனக்கு ஒரு பொதுவான கேள்வி . AI இப்படியே நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான அறிவியல் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொண்டே போனால், உங்களைப் போன்ற ஆராய்ச்சியாளர்களுக்கு என்ன வேலை இருக்கும்? இப்போது ஆய்வகங்களில் பணியாற்றும் விஞ்ஞானிகளும், படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களும் என்ன செய்வார்கள்? அவர்கள் எப்படி வா ழ்க்கை நடத்துவார்கள்?” 

ராமநாதன் மெதுவாக தண்ணீர் அருந்தினார்.  

“மனித அறிவை நாம் குறைத்து மதிப்பிடக்கூடாது. இந்த AI அமைப்புகளை உருவாக்கியதே மனிதர்கள்தான். அவை எப்படிச் செயல்படுகின்றன என்பதை நாம் புரிந்துகொள்வோம். இன்னும் சில ஆண்டுகளில் இந்த முறைகளின் அடிப்படைகளைக் கண்டுபிடித்து, அவற்றை விடச் சிறந்த முறைகளை உருவாக்கவும் முடியும்.” அவர் குரலில் உறுதி இருந்தது.  

“மனித அறிவுதான் உயர்ந்தது. அது எப்போதுமே புதிய சூழ்நிலைகளுக்குத் தன்னை மாற்றிக் கொண்டிருக்கிறது. AI-யோடு போட்டியிடவும், அதை நமது திறமைகளுக்குச் சாதகமாகப் பயன்படுத்தவும், தேவைப்பட்டால் அதை மிஞ்சவும் மனிதர்களால் முடியும்.”  

“எங்கள் நிறுவனத்தில் நடந்து கொண்டிருக்கும் ஆராய்ச்சிகளை நாங்கள் நிறுத்தப்போவதில்லை . மாறாக, இன்னும் முக்கியமான முடிவுகளை சாதிப்போம்.  அறிவியல் நிபுணத்துவமும் மனிதப் படைப்பாற்றலும் எப்போதும் தேவைப்படும்.” 

கூட்டம் முடிந்ததும் பலர் அவரைப் பாராட்டினர். 

அவர் மேடையிலிருந்து இறங்கும்போ து சோர்கின் அருகில் வந்தார். 

“நன்றாக கூட்டத்தைக் கையாண்டீர்கள் ராம்.” என்று கைகுலுக்கிவிட்டு கிளம்பிப் போனார்.  

✦ 

வெள்ளிக்கிழமை காலை. ராமநாதன் மீண்டும் அந்த ஆய்வுக் கட்டுரையைத் திறந்தார். முந்தைய நாளின் பத்திரிகையாளர் சந்திப்பைப் பற்றிய செய்திகள் பல ஊடகங்களில் வெளியாகியிருந்தன. சிலர் அவரது கருத்துகளைப் பாராட்டியிருந்தனர். சிலர் அவர் AI-யின் திறனைக் குறைத்து மதிப்பிடுவதாக விமர்சித்திருந்தனர். அவர் அவற்றை அதிக நேரம் படிக்கவில்லை . 

புதிய முறையின் ஒரு முக்கியமான பகுதி இன்னும் விளங்காமல் இருந்தது. அதில் பயன்படுத்தப்பட்டிருந்த கணித அமைப்பு உயிரியல் ஆராய்ச்சியில் வழக்கமாகக் காணப்படுவதில்லை . சில கோட்பாடுகள் வேறு துறைகளிலிருந்து எடுக்கப்பட்டிருந்தன. அவற்றைப் பயன்படுத்திய விதம்தான் புதுமையானது. 

ஒரு பழைய ஆய்வில் சாத்தியமற்றது என்று நிரூபிக்கப்பட்ட ஒரு முடிவு, இங்கே வேறுபட்ட நிபந்தனைகளின் கீழ் சாத்தியமாகியிருந்தது. ‘அது எப்படி?’

அவர் நாற்காலியில் சாய்ந்தார். 

தனது நோட்டுப் புத்தகத்தில் இரண்டு வரிகள் எழுதினார். 

‘இது ஒரு விதிவிலக்கான வெற்றியா ? அல்லது இனி அறிவியல் ஆராய்ச்சி இப்படித்தான் நடைபெறுமா ?’ 

‘மனித விஞ்ஞானிகளால் உருவாக்கப்படும் புதிய கோட்பாடுகளையும் AI தொடர்ந்து முந்திக் கொண்டே சென்றால், அறிவியல் ஆராய்ச்சிக்காகத் தங்கள் வாழ்க்கையைத் தயார்படுத்திக் கொண்டிருக்கும் இளம் விஞ்ஞானிகளுக்கு எப்படிப்பட்ட உலகம் காத்திருக்கி றது?’

அவர் தனது அலுவலகத்தின் கண்ணாடிச் சுவர் வழியாக வெளியே பார்த்தார். ஆய்வகத்தில் பல இளம் ஆராய்ச்சியாளர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தனர். ஒருவர் நுண்ணோக்கியில் ஒரு மாதிரியை ஆராய்ந்து கொண்டிருந்தார். மற்றொருவர் கணினியில் தரவுகளைப் பார்த்துக் கொண்டிருந்தா ர். இரண்டு பேர் ஒரு பரிசோதனை முடிவைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தனர். 

தாம் இருபத்தாறு வயதில் இருந்தபோது இப்படித்தான் ஆரம்பித்தார்.  அப்போது அவரது முன்னால் ஒரு நீண்ட ஆராய்ச்சி வாழ்க்கை இருந்தது. அதன் எல்லைகளும் வா ய்ப்புகளும் ஓரளவு தெரிந்திருந்தன. 

இப்போது ஐம்பது வயதாகிவிட்டது. அவரது சாதனைகளோடு ஒப்பிடும்போது இன்னும் இளமையானவர் என்று பலரும் அவரைக்  கூறுவார்கள். ஆனால் அடுத்த இருபது ஆண்டுகளில் அறிவியல் உலகம் எப்படி இருக்கும் என்பதை அவரால் கற்பனை செய்ய முடியவில்லை . 

பிற்பகலில், அலுவலகத்தில் ஒரு சிறிய கூட்டத்தை நடத்தினார். 

“நாம் இதுவரை பண்ணின ஆராய்ச்சியைத் தொடர்வோம். அதே சமயம் இந்தப் புதிய முறையையும் முழுமையாகப் புரிஞ்சுக்கணும். நம்முடைய பழைய முடிவுகளுக்கு இது என்ன விளக்கம் தருதுன்னு பார்ப்போம். இயற்கையில் நடக்கிற செயல்முறையை இன்னும் எளிமையா விளக்க முடியும் என்ற நம்பிக்கையை நான் விடவில்லை.” 

அந்த மாலை மீண்டும் தனியாக அமர்ந்து படித்தார். 

‘இது எப்படிக் கண்டுபிடிக்கப்பட்டது? இந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணம் என்ன? இதே முடிவை வேறொரு முறையில் பெற முடியுமா ? இந்தக் கண்டுபிடிப்பு தற்செயலானதா , அல்லது இதற்குப் பின்னால் இன்னும் பொ துவான ஒரு கோட்பா டு இருக்கிறதா ?’ கட்டுரையில் சில பதில்கள் இருந்தன. பல இல்லை . 

பத்திரிகையாளர் சந்திப்பில் மனித அறிவைப் பற்றி அவர் கூறிய உறுதியான வார்த்தைகள் மீண்டும் நினைவுக்கு வந்தன. 

கணினியை மூடுவதற்கு முன், ராமநாதன் மீண்டும் அந்த ஆய்வுக் கட்டுரையின் முதல் பக்கத்தைத் திறந்தார். இருபத்துநான்கு ஆண்டுகளாகத் தாம் தேடிக்கொண்டிருந்த பதில், இத்தனை சிக்கலான பாதையில் வந்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று ஒரு கணம் தோன்றியது. இயற்கை இவ்வளவு சிக்கலானதா, அல்லது அதை அணுகும் தன்னுடைய வழிமுறைதான் சிக்கலானதா?

அந்தக் கேள்விக்கு அவரிடம் பதில் இல்லை.

ஆனால் ஒரு விஷயம் மட்டும் தெளிவாகத் தெரிந்தது. இந்தக் கண்டுபிடிப்பை மறுப்பதற்காகவோ, இதைவிடச் சிறந்த ஒன்றை நிரூபிப்பதற்காகவோ மட்டும் இனி அதைப் படிக்க முடியாது. அது உண்மையில் என்ன சொல்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

இத்தனை ஆண்டுகளாகத் தான் தேடியது ஒரு விடைதான். அந்த விடை எந்த வழியில் வந்தது என்பது ஏன் இவ்வளவு முக்கியமாக இருக்க வேண்டும்?

அவர் கணினியை மூடினார்.

அசதியும், தூக்கமும் அவரது கண்களை மூடின. 

✦ 

சனிக்கிழமை காலை . 

ஜானகி சமையலறைக்கு வந்தபோது ராமநாதன் பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருந்தார். அவர் தண்ணீர்க் குழாயை மூடிவிட்டு ஒரு தட்டைத் துடைத்துக் கொண்டிருந்தார். அவள் வாசலில் ஒரு கணம் பிரமித்து நின்றாள். ‘எப்பேலேர்ந்து?’

அதைக் கண்டு கொள்ளாத மாதிரி, “இந்தப் பாத்திரம் எங்கே போகும்?” என்று கேட்டார். 

ஜானகி மேலே இருந்த அலமாரியைக் காட்டினாள். 

“என்ன அப்படிப் பாக்கிற ஜானூ?” என்றார். 

 “நத்திங்.. காபி போட்டுட்டேன்” என்றாள் ஜானகி . 

“இதோ வர்றேன்.” 

அவள் இரண்டு கோப்பைகளில் காபி ஊற்றினாள். 

இருவரும் காபியுடன் ஹாலுக்கு வந்தனர். 

ராமநாதன் செய்தித்தாளை எடுத்துப் படித்தார். முதல் பக்கத்தில் OpenAI பற்றிய இன்னொரு செய்தி இருந்தது. அதை மேலோட்டமாகப்  படித்துவிட்டு விளையாட்டுப் பக்கத்திற்குத் திருப்பினார். 

சிறிது நேரத்தில் தொலைக்காட்சியை ஆன் செய்து பார்க்க ஆரம்பித்தார். 

நாராயணி தனது அறையிலிருந்து வந்தாள். 

“அப்பா , நீங்க இன்னைக்கு ஆபீஸுக்குப் போகலையா ?”  அவள் குரலில் ஆச்சரியம் இருந்தது.

“போகாமலா ? நிறைய வேலை இருக்கு நாணி. சில எக்ஸ்பெரிமெண்ட்ஸ் நடந்துக்கிட்டிருக்கு. மாணவர்கள் சில பேரையும் சந்திக்கணும்.” 

“ஓ, அப்படியா ! என்ன பார்த்துக்கிட்டிருக்கீங்க?” 

“ஏதோ ஒரு மேட்ச். யாருக்குத் தெரியும்?” 

நாராயணி அவர் அருகில் அமர்ந்து சிறிது நேரம் தொலைக்காட்சியைப் பார்த்தாள். “அப்பா , நானும் அம்மாவும் ஸ்கூலுக்கு வேண்டிய சில பொருட்கள் வாங்க மாலுக்குப் போகலாம்னு இருந்தோம். ஆனா அம்மா வரலைன்னு சொல்லிட்டா. நீங்க என்னோட வர்றீங்களாப்பா ?” 

“ம்ம்ம்…” யோசித்தார்.  “எனக்கு தலைக்கு மேல நிறைய வேலை இருக்கே நாணி.” 

“ரொம்ப நேரம் ஆகாதுப்பா. ப்ளீஸ்பா.. ஒரு மணி நேரத்துக்குள்ள எல்லாத்தையும் முடிச்சிடலாம்பா.” பவ்யமாகக் கைகளைக் குவித்துக் கொண்டு கேட்டால்,  எப்படி முடியாது என்று சொல்லமுடியும் அவரால். 

 “ஓ, அப்படின்னா சரி” 

ராமநாதன் செய்தித்தாளை மடித்து மேசையில் வைத்தார். 

சிறிது நேரத்தில் நாராயணி தயாராகி வந்தாள். 

“அப்பா , முதல்ல புத்தகக் கடைக்குப் போகலாமா ?” 

“போகலாம்.” 

“அப்புறம் எனக்கு ஷூ வாங்கணும்.” 

வாசலில் நின்றிருந்த ஜானகியிடம் ராமநாதன், “நாங்க போயிட்டு வர்றோம்,” என்றபடி கிளம்பினார். 

இருவரும் காரில் ஏறிக் கொண்டனர். 

நாராயணி இருக்கை பெல்ட்டை மாட்டிக் கொண்டாள். 

“அப்பா , எந்த மாலுக்குப் போறோம்?” 

“நீயே சொல்லு.” 

அவள் ஒரு மாலின் பெயரைச் சொன்னாள்.

“எப்படிப் போகணும்?” 

“இந்த சிக்னல்ல இடதுபக்கம் திரும்பணும். இது கூடத் தெரியாதாப்பா..!” என்று கை காட்டினாள். 

ராமநாதன் சிக்னலை நெருங்கினார். 

‘நேரா போனா என் ஆபீஸ்,’ என்று தனக்குத்தானே முணுமுணுத்தார். 

“இங்கேயா திரும்பணும் ?” 

“ஆமாப்பா , இங்கதான்!  ஏன் நீ வந்ததே இல்லையா” 

அவர் மௌனமாய் காரை இடதுபக்கமாய்த்  திருப்பினார்.  

திருப்பத்திலேயே ஒரு ஐஸ்க்ரீம் பார்லர் கண்ணில் பட்டது. 

“திரும்பும் போது ஞாபகப்படுத்து நாணி. ஐஸ்க்ரீம் பார்லர் போகலாம்..” என்றார். 

(ஸ்காட் ஆரன்சன் எழுதிய, அக்டோபர் 2026-இல் வெளியான Shtetl Optimized வலைப்பதிவை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட கதை)


Discover more from சொல்வனம் | இதழ் 377 | 25 அக் 2026

Subscribe to get the latest posts sent to your email.

மறுமொழி இடவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.