ஒரு சிறுவன் தான் விரும்பும் திசையில் பந்தை உதைத்துச் செலுத்துவதைப் போலவே,
கடவுளால் ‘உதைத்து’ச் செலுத்தப்பட்ட ஒரு மனிதன் நான்; அவரால் நான் உந்தப்பட்டு
வழிநடத்தப்பட்டிருக்கிறேன்.
– ஹாம் சோக்-ஹோன்

“கொரியாவின் காந்தி” என்று அன்போடு போற்றப்படும் ஹாம் சோக்-ஹோன்(Ham Sok-hon) கொரியாவைச் சேர்ந்த ஒரு புகழ்பெற்ற மனித உரிமை ஆர்வலர், அமைதிவாதி, தத்துவஞானி, கவிஞர் மற்றும் வரலாற்றாளர் ஆவார். சர்வாதிகார ஆட்சிகளின் கீழ் கொரியா தத்தளித்த காலகட்டத்தில், ஹாம் சோக்-ஹோன் ஒரு மாபெரும் மனித உரிமைப் போராளியாகத் திகழ்ந்தார். மகாத்மா காந்தியால் ஈர்க்கப்பட்டு, சத்தியம், அகிம்சை மற்றும் அமைதியின்பால் நாட்டம் கொண்டு மனித இனம் சமாதான சகவாழ்வில் திழைக்கப் பாடுபட்டார். கொரியாவில் நண்பர்கள் சமய சங்கம்(குவாக்கர்) இயக்கத்தின் முக்கிய ஆளுமையாகத் திகழ்ந்தார். கொரியாவின் கொந்தளிப்பான 20ஆம் நூற்றாண்டு வரலாற்றில், மனித உரிமைகள், ஜனநாயகம் மற்றும் அமைதிவாதம் ஆகியவற்றிற்கான ஒரு மிகச் சிறந்த குரலாக அவர் விளங்கினார். தனது கொள்கை மற்றும் செயல்களுக்காகப் பலமுறை சிறைத்தண்டனை அனுபவித்தார். ஜப்பானிய ஏகாதிபத்தியத்திற்கு கொரியா இரையாகியிருந்த காலச் சூழலில், கொரிய மக்களின் தனித்துவ அடையாளத்தை நிலைநாட்ட அவர் முயன்றார். ‘ஒருவரின் அடையாளம், குறிப்பாகக் காலனித்துவத்திற்கு அடிமைப்பட்ட ஒரு நாட்டின் அடையாளம் -அதன் எதிர்காலத்தையே தீர்மானிக்கக் கூடியதாக இருப்பதால், அந்த அடையாளத்தைக் கண்டறிவது மிக முக்கியம்’ என்று ஹாம் நம்பினார். நீங்கள் யார் என்று தெரியாமல், என்ன செய்யப் போகிறோம் என்பதை அறிவது கடினம் என்பதை அவர் நன்கு உணர்ந்திருந்தார். பாரம்பரிய விதிகள் மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டு புதிய சிந்தனைகளை உருவாக்கி, சிக்கல்களுக்குத் தீர்வு காணும் ஒரு சுதந்திரமான, மரபுசாராத ஒரு தனித்துவமிக்கச் சிந்தனையாளராக அவர் விளங்கினார். பல்வேறு மதங்களையும் சித்தாந்தங்களையும் ஒன்றிணைக்கத் தன்னால் இயன்றவரை முயன்றார். 1979 மற்றும் 1985 ஆகிய ஆண்டுகளில், அமெரிக்கக் குவாக்கர் நண்பர்கள்(American Quaker Friends) அமைப்பால் அமைதிக்கான நோபல் பரிசுக்கு அவர் இருமுறை பரிந்துரைக்கப்பட்டார். ஏறக்குறைய மூன்று தசாப்தங்களுக்கு முன்பு அவர் மறைந்திருந்தாலும், அவரது கொள்கை மரபு இன்றும் கொரியாவில் பெரும் எண்ணிக்கையிலான குடிமை உரிமை ஆர்வலர்களையும் தாராளவாத சிந்தனையாளர்களையும் ஊக்கப்படுத்தி வருகிறது.
இளமை வாழ்வு
1901 மார்ச் 13ஆம் நாள் ஹாம் சோக்-ஹோன் வட கொரியாவின் வடமேற்கு மூலையில் உள்ள வடக்கு பியோங்யாங்(P’yongyang) மாகாணத்தின் யோம்ஜு கவுண்டியில் ஒரு சிறிய மீன்பிடி கிராமத்தில், கிராமப்புற மூலிகை மருத்துவர் ஒருவருக்கு மகனாகப் பிறந்தார். அவரது தந்தை மென்மையான சுபாவமும் அமைதியான இயல்பும் உடையவராக இருந்தார். ஜப்பானிய ஆதிக்கத்தால் கொரியா தனது இறையாண்மையை இழக்கத் தொடங்கியிருந்த அக்காலகட்டத்தில், அவரது மாமா ஹாம் சோக்குயூன் தீவிரமான கிறிஸ்தவ நம்பிக்கையும் வலுவான தேசபக்தியும் கொண்ட, துடிப்பான செயல்பாட்டாளராக விளங்கினார். அவரால் ஹாம் பெரிதும் ஈர்க்கப்பட்டார். ஜான் கால்வின் (16ஆம் நூற்றாண்டில் புரட்டஸ்டன்ட் சீர்திருத்த காலத்தில் ஜெனீவாவில் வாழ்ந்த ஒரு பிரெஞ்சு இறையியலாளர், போதகர் மற்றும் சீர்திருத்தவாதி; பிற்காலத்தில் கால்வினிசம் என்று அழைக்கப்பட்ட ‘சீர்திருத்தப்பட்ட இறையியல்'(Reformed Theology) வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றியவர்; முன்னரே தீர்மானிக்கப்பட்ட விதி, மனித ஆன்மாவை மரணம் மற்றும் நித்திய தண்டனையிலிருந்து மீட்பதில் கடவுளின் முழுமையான இறையாண்மை, வேதாகமத்தின் அதிகாரம், தேவ கிருபையினால் மட்டுமே இரட்சிப்பு ஆகிய கோட்பாடுகளை வலியுறுத்தியவர்.) அவர்களின் சீர்திருத்த கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு பிரஸ்பைடிரியன் (Presbyterian) அதாவது, மூப்பர்களின் பிரதிநிதிகள் மூலம் நிர்வகிக்கப்படும் ஒரு சீர்திருத்த பாரம்பரிய கிறித்தவப் பிரிவினராக வளர்க்கப்பட்டார். அவரது சிறுவயதில், கொரியாவின் அரசியல் மற்றும் பொருளாதாரம் சீர்குலைந்த நிலையில் இருந்தது. கொரிய சமூகம் அறியாமை, மூடநம்பிக்கை மற்றும் ஊழலால் நிறைந்திருந்தது. மக்கள் நம்பிக்கையிழந்து விரக்தியில் வாடியிருந்தனர்.
ஹாம் கிராமத்தில் கிறிஸ்தவம் வேரூன்றியிருந்தபடியால், சிறுவயதிலேயே நவீனக் கல்வியைக் கற்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. டியோக்-இல் (Deok-il) மிஷனரி தொடக்கப் பள்ளியில் அவர் சேர்க்கப்பட்டார். கொரியாவின் கடுமையான காலனித்துவம் மற்றும் சமூக நெருக்கடியின் போது, சமய போதகப் பள்ளிக்கல்வி மற்றும் கிறிஸ்தவப் போதனைகளுடனான தனது ஆரம்பகாலத் தொடர்பு ஓர் அத்தியாவசியமான தார்மீகப் பிடிப்பை அவருக்கு வழங்கியது. “அழியும் அபாயத்திலிருந்த நாட்டின் இக்கட்டான காலகட்டத்தில் கிறிஸ்தவக் கல்வி தங்களுக்குக் கிடைக்காமல் இருந்திருந்தால், தங்கள் சமூகத்தின் மனசாட்சி நிச்சயமாக மடிய நேர்ந்திருக்கும்” என்று ஹாம் சோக்-ஹான் பின்னாளில் நினைவுகூர்ந்தார்.(Ham Sok-hon, Kicked by God, The Wider Quaker fellowship, Philadelphia,1969,p.8)
மார்ச் 1 இயக்கம்
நடுநிலைப் பள்ளியில் பயின்றபோது, கொரியாவின் மீதான ஜப்பானிய ஆக்கிரமிப்பை எதிர்த்து நாடு தழுவிய ஜனநாயக ஆதரவுப் போராட்டமான ‘மார்ச் 1 இயக்கம்’ நடைபெற்றது. ஜப்பானின் அடக்குமுறைமிக்கக் குடியேற்ற ஆதிக்கத்தின் மீதும், கொரிய மக்கள் மற்றும் கலாச்சாரம் மீது ஜப்பானிய ஆட்சியாளர்கள் காட்டிய சகிப்புத்தன்மையற்ற அணுகுமுறையின் மீதும் உலகத்தின் கவனத்தை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு தேசிய அளவிலான போராட்டமாகவே இவ்வியக்கம் அமைந்திருந்தது. நேச நாடுகளால் ஐரோப்பிய மக்களுக்கு வழங்கப்பட்டதைப் போலவே, கொரியாவிற்கும் சுயநிர்ணய உரிமையை மீண்டும் பெற்றுத்தருவதே இவ்வியக்கத்தின் அடிப்படை நோக்கமாக இருந்தது; கொரிய நாட்டின் தேசியவாத சிந்தனை மற்றும் செயல்பாடுகள் இயக்கத்தின் நோக்கங்களுக்கு உந்துசக்தியாகத் திகழ்ந்தது. (Ham Seok-heon – Academic Dictionaries and Encyclopedias, https://enacademic.com› இது ஜப்பானியக் காலனித்துவ ஆட்சிக்கு எதிராக 1919 மார்ச் 1ஆம் நாள் தொடங்கி கொரியா முழுவதிலும், மற்றும் வெளிநாடுகளில் வாழ்ந்த கொரிய சமூகத்தினராலும் நடத்தப்பட்ட தொடர்ச்சியான போராட்டங்களாயின. இப்போராட்டங்கள் பெரும்பாலும் அந்த ஆண்டின் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் தீவிரம் அடைந்த போதிலும், 1921ஆம் ஆண்டு வரை தொடர்ந்து நடைபெற்றன. தென் கொரியாவில், இவ்வியக்கம் கொரிய சுதந்திரப் போராட்டத்தின் ஒரு முக்கிய நிகழ்வாக மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த கொரிய வரலாற்றின் ஒரு மைல்கல் நிகழ்வாகவும் கருதப்படுகிறது. ஹாம் இவ்வியக்கத்தில் பங்கேற்றமையால் அவர் ஓராண்டு தலைமறைவு வாழ்க்கை வாழவும் தனது படிப்பை நிறுத்திவிட்டுத் தனது சொந்த கிராமத்திற்குத் திரும்ப வேண்டிய சூழலும் ஏற்பட்டது. 1921ஆம் ஆண்டு தனது படிப்பைத் தொடர்ந்திட அவர் ஓசான்(Osan) பள்ளியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் லாவோ-ட்சுவின்(Lao-tzu) போதனைகளைக் கற்கும் வாய்ப்புக் கிடைத்தது. இந்தப் பள்ளி வாழ்க்கையே அவரது பிற்கால அமைதி மற்றும் மனிதநேயக் கொள்கைகளுக்கு அடித்தளமாக அமைந்தது.
1923ஆம் ஆண்டு ஹாம் உயர்கல்விக்காக டோக்கியோ சென்றார். ஜப்பானில் ஏற்பட்ட பெரும் நிலநடுக்கம் மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த கொரிய மக்கள் மீதான படுகொலைகள் காரணமாக அவர் மிகுந்த மனவேதனையுற்றார். 1924ஆம் ஆண்டு அவர் கல்வியியல் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு அவரது வகுப்புத் தோழரான கிம் கியோ-ஷின் (Kim Kyo-shin) என்பவர் உச்சிமுரா கன்சோ(Uchimura Kanzō) வழிநடத்திய பைபிள் படிப்புக் குழுவினரிடம் அவரை அறிமுகப்படுத்தினார். அப்போதிருந்து, உச்சிமுரா கன்சோவால் தொடங்கப்பட்ட திருச்சபை-சாரா இயக்கம்(Non-church Movement) எனும் ஜப்பானியக் கிறிஸ்தவ இயக்கத்தில் அவர் பங்கேற்றார். முறையான சடங்குகள் ஏதுமின்மை, வழிபாட்டின் எளிமை, மற்றும் சிலுவையின் மூலமான பாவமன்னிப்பு மற்றும் பைபிள் படிப்பை வலியுறுத்தும் கண்டிப்பான மரபுசார் விசுவாசம் ஆகியவற்றின் மீதான முக்கியத்துவம் ஆகியன இவ்வமைப்பின் தனித்துவமான அம்சங்களாக இருந்தன. (Ham Sok-hon, op.cit., p.11)
கிராமிய சமூகம் மீட்டெடுப்பதற்கான அழைப்பு
கல்வியியல் கல்லூரியில் பட்டம் பெற்ற பிறகு, அவர் கொரியாவுக்குத் திரும்பினார். தான் பயின்ற ஓசான் பள்ளியில் பத்து ஆண்டுகள் வரலாறு மற்றும் புவியியல் ஆசிரியராகப் பணியாற்றினார். ‘அவமானங்கள், பேரழிவுகள் மற்றும் தோல்விகளின் தொடர்’ என்று அவரால் விவரிக்கப்பட்டு வந்த வரலாற்றைக் கற்பிப்பதில் இருந்த விருப்பமின்மையால் விரக்தியடைந்த அவர், ‘துன்பமே வரலாறு'(history as suffering) என்ற கருத்தாக்கத்தை உருவாக்கினார். கொரிய வரலாற்றின் அனைத்து நிகழ்வுகளையும் அவர் இந்தக் கண்ணோட்டத்துடன் விளக்க முயன்றார். துன்பத்தின் அரசி: கொரியாவின் ஆன்மீக வரலாறு (Queen of Suffering: A Spiritual History of Korea) என்ற தனது நூலில் தனது நாட்டையும் மக்களையும் விவரிக்கும்போது ஹாம் இவ்வாறு எழுதுகிறார்: “இந்த நிலம், இந்த மக்கள், சிறிய மற்றும் பெரிய நிகழ்வுகள், அதன் அரசியல், சமயம், கலைகள் மற்றும் சிந்தனைகள் என கொரியாவிற்குரிய அனைத்தும் துன்பத்தையே பறைசாற்றுகின்றன. இஃது அவமானகரமானதாகவும் வேதனை அளிப்பதாகவும் இருந்தாலும் இதுவே உண்மை.” (Sŏk-hŏn Ham, Queen of suffering: A Spiritual History of Korea, Friends World Committee for Consultation, London, 1985 p.22) வரலாறு மனிதத் துன்பங்களுடன் ஆழமாகப் பின்னிப் பிணைந்துள்ளது; தத்துவம், பண்பாடு மற்றும் அறிவியல் ஆகிய தளங்களில் இது வலியின் பதிவாகவும், மாற்றத்திற்கான உந்துசக்தியாகவும் இருப்பதை அவர் உற்றுநோக்கினார். கல்வி, நம்பிக்கை மற்றும் கிராமப்புறச் சமூகம் ஆகியவை பிரிக்க முடியாத வகையில் தொடர்புடையவை என்றும் நம்பிக்கை சார்ந்த கல்வியின் மூலம் கிராமப்புறச் சமூகத்தை மீட்டெடுப்பதிலேயே கொரியாவின் மீட்பு அடங்கியுள்ளது என்றும் உறுதியாக நம்பினார். இந்தக் கண்ணோட்டத்தில் கொரிய வரலாற்றை விவரிக்கும்போது, ‘கொரியாவின் ஆன்மீக விதி துன்பமே’ என்று ஹாம் அடையாளம் கண்டார். அந்தத் ‘துன்பத்தை முணுமுணுக்காமல், தட்டிக்கழிக்காமல், உறுதியுடனும் தீவிரத்துடனும்’ எவ்வாறு தாங்கிக்கொள்வது என்பதை உலகிற்குக் காட்டுவதே அதன் அழைப்பாகும்” என்று அவர் கூறினார். இதுவே உலகை மீட்பை நோக்கி வழிநடத்த உதவும் என்று அவர் நம்பினார். (William A. Dyrness, Veli-Matti Kärkkäinen(ed.), Global Dictionary of Theology: A Resource for the Worldwide Church, InterVarsity Press, Illinois, 2009, p.124)
சிறைவாசம்
1936-37ஆம் ஆண்டுகளில் கொரியாவில் ஜப்பானின் நடவடிக்கைகள் மிகவும் கொடூரமானதாக இருந்தது. கொரிய மக்களிடமிருந்து தேசிய உணர்வின் அனைத்து அடையாளங்களையும் நீக்க ஜப்பானியர் உறுதிபூண்டனர். பள்ளி நிர்வாகம் ஜப்பானியக் கொள்கைக்கு இணங்கிச் செல்ல முற்பட்டதால், அங்கு அவருக்குக் கற்பிக்க அனுமதி மறுக்கப்பட்டது. எனவே, 1938ஆம் ஆண்டின் வசந்த காலத்தில் அவர் ஓசான் பள்ளியிலிருந்து வெளியேறினார். இருப்பினும், அவர் ஓசான் நகரிலேயே தங்கி விவசாயப் பணி செய்தார். அத்துடன் ஞாயிற்றுக்கிழமைகளில் அப்பகுதி மாணவர்களை அழைத்துக் கல்வியும் கற்பித்தார். கொரியாவின் பாரம்பரியத்தைப் பின்பற்றுவதையும் கைவிடவில்லை. அவர் பாரம்பரிய கொரிய ஆடையை அணியத் தொடங்கினார்.
இரண்டாம் உலகப் போரின்போது, ‘தேசியவாத அல்லது தாராளவாத சிந்தனை’ கொண்டிருப்பதாகச் சிறிதளவேனும் சந்தேகிக்கப்பட்ட எவரும், ஏதேனும் ஒரு அற்பக் காரணத்தைக் காட்டி கைது செய்யப்பட்டு, சிறையில் தள்ளப்பட்ட காலம் அது. 1940ஆம் ஆண்டு பியோங்யாங் நகரின் புறநகர்ப் பகுதியில் டேனிஷ் முறையிலான மக்கள் கல்விப் பள்ளி (folk school) ஒன்று செயல்பட்டு வருவதைக் கேள்வியுற்று அவர் அங்குச் சென்றார். ஆனால், அவர் அங்கு சென்றடைந்தபோது, அப்பள்ளியின் நிறுவனர் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டிருந்தார். அதே குற்றச்சாட்டின் பேரில் ஹாமும் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். ஓராண்டு சிறைவாசத்திற்குப் பிறகு 1941ஆம் ஆண்டு அவர் விடுவிக்கப்பட்டார். ஆனால், பைபிள் கொரியா (Bible Korea) இதழில் வெளியான தனது எழுத்துக்களின் மூலம் ஜப்பானிய எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு, 1942ஆம் ஆண்டு மீண்டும் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். ஓராண்டுக்குப் பிறகு அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
சிறையில் இருந்தபோது, அவர் பௌத்த சமய நூல்களைப் பயின்றார். மேலும், லாவோ-ட்சு(கி.மு. 6 ஆம் நூற்றாண்டில் சீனாவில் வாழ்ந்தவர்; சீன தாவோயிசத்தின் முதல் தத்துவஞானி; தாவோயிசத்தின் முதன்மையான நூலான தாவோதேஜிங்கின் ஆசிரியராகக் கருதப்படுபவர்; மக்கள் மதத்தில் ஒரு புனிதராகவும் அல்லது கடவுளாகவும் போற்றப்படுபவர்.) மற்றும் சுவாங்-ட்சு (கி.மு. 4 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு சீன தத்துவஞானி. தாவோயிசத்தின் இரண்டு அடிப்படை நூல்களில் ஒன்றான சுவாங்ஸி என்ற தனது பெயரால் அறியப்படும் ஒரு படைப்பை, பகுதியாகவோ முழுமையாகவோ எழுதிய பெருமை இவருக்கு உண்டு.) ஆகியோரின் படைப்புகளை அதிகம் வாசித்தார். சுவாங்-ட்சுவின் நூல்களை வாசிக்கத் தொடங்கியபோது, தன்னைச் சூழ்ந்திருந்த ‘மாயத் திரை’(தன்னைப் பற்றிய குறுகிய கண்ணோட்டம்) மெல்ல மெல்ல விலகி செல்வதை அவர் உணர்ந்தார். அவர், இறுக்கமான நிறுவன அரசியலையும் கருத்தியல் மோதல்களையும் கடந்து செல்வதற்காக, பௌத்தத்தின் பற்றின்மை (தன்னலம் / அகங்காரம் மற்றும் பொருள் பற்றுதலிலிருந்து விடுபடுதல்) என்ற கோட்பாட்டையும், தாவோயிசத்தின் வூ-வே (முயற்சியற்ற செயல்) என்ற கோட்பாட்டையும் நேரடியாக இணைத்துப் பயன்படுத்தினார். வரலாற்று இயேசு, நித்திய வாழ்வு, சொர்க்கம், இரட்சிப்பு போன்றவை குறித்து அவர் ஆழமாகச் சிந்திக்கலானார். அவர் இவ்வாறு கூறினார்: “சமய துரோகி அல்லது உண்மையான விசுவாசி என்ற பாகுபாடானது ஒரு பழைய சிந்தனையே. காற்றுக்கு ஏது பாதை? முடிவில்லாமல் செல்லுங்கள்; முடிவில்லாமல் பாதையில் மேலே இருங்கள்; நீங்கள் ஒரு சார்புடைய ஜீவனாக இருக்கும் வரை, நீங்கள் உங்கள் வழியில்தான் செல்லப் போகிறீர்கள். அது முடிவற்ற வழிகளில் ஒன்று மட்டுமே. நான் என் வழியில் மட்டுமே செல்லப் போகிறேன். அதை வரையறுக்க எனக்குத் தகுதி இல்லை. சமயத் துரோகம் என்று எதுவும் இல்லை. ‘இது சமய விரோதம்’ என்று கூறுபவர்களே உண்மையில் சமய விரோதிகள் ஆவர்.” அனைத்து சமயங்களும் ஒன்றே என்ற உறுதியான முடிவுக்கு அவர் வந்தார். (Cho-Nyon Kim, An Encounter Between Quaker Mysticism and Taoism in Everyday Life, Interactive Publications, Australia, 2018, p.14) மனித மாண்பு விஷயத்தில் அனைத்து முக்கிய மதங்களும் பொதுவான அம்சங்களைக் கொண்டிருப்பதாக ஹாம் கருதினார். பழங்குடி ஷாமனிசம், கன்பூசியனிசம், பௌத்தம் மற்றும் திருச்சபை சாரா கிறிஸ்தவ இயக்கம் உள்ளிட்ட பல தாக்கங்கள் தனக்கு இருந்ததாகவும், “என் ஆன்மாவை யாரும் கட்டுப்படுத்த முடியாது” என்று வெளிப்படையாகக் கூறி, தனது ஆன்மீக சுதந்திரத்தை அவர் உறுதியாகப் பற்றினார்.
ஹாம் சிறையில் அமர்ந்து, வரலாற்றின் ஓட்டத்தை சிந்தித்துக் கொண்டிருந்தபோது, அவருடைய எண்ணங்கள் பின்வருவனவற்றைச் சுற்றியே வலம் வந்தன: “வரலாற்றின் இந்த ஓட்டம் தேசிய எல்லைகளின் மாற்றங்களுடன் மட்டும் நின்றுவிடுவதில்லை. இது மனிதச் சமூகத்தின் கட்டமைப்புகள், மாறிவரும் ஓர் உலகப் புரட்சியின் தொடக்கமாகும். உலகம் ஒரே நாடாக மாற வேண்டும். அரசு குறித்த கண்ணோட்டம் மாற்றியமைக்கப்பட வேண்டும். வல்லரசுகளின் காலம் முடிந்துவிட்டது. உலகத்தைப் பற்றிய பார்வை மாறிவருகிறது; அதற்கேற்ப சமயமும் மாறும். அது தற்போதைய நிலையிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு வடிவத்தை மேற்கொள்ளாதா? சமயத்தின் அடிப்படையான சத்தியம் என்றும் மாறாதது; ஆனால், காலங்காலமாக நிலைத்திருக்கும் அந்தச் சத்தியத்தை ஒவ்வொரு காலகட்டமும் ஒரு புதிய விதத்தில் வெளிப்படுத்த விரும்புகிறது. ஒவ்வொரு காலகட்டத்திற்கும் அதற்கே உரிய ஒரு முக்கியக் கோட்பாடு அல்லது கருப்பொருள் உண்டு. வரவிருக்கும் அந்தக் காலம் எத்தகையது? அதை யார் ஏற்றுக்கொள்வார்கள்? சமய சீர்திருத்தத்தின் ஒரு புதிய காலகட்டத்தை உருவாக்கவல்ல ஒரு புதிய மறுமலர்ச்சிக்காக நாம் ஏங்கிக்கொண்டிருக்கவில்லையா? அப்படியென்றால், கடந்த காலத்தைப் பற்றிய புதியதொரு புரிதல் அல்லது விளக்கம் அவசியமாகிறது. செவ்வியல் இலக்கியங்கள் குறித்துப் புதிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும், மேற்கத்திய செவ்வியல் இலக்கியங்கள் ஏற்கனவே முழுமையாகப் பயன்படுத்தப்பட்டுவிட்ட நிலையில், நமது கிழக்கத்திய செவ்வியல் இலக்கியங்களை நாம் இன்னும் கூர்ந்து ஆராய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். கிழக்கத்திய மரபுகள் மீதான புதியதொரு மதிப்பீடு, தேக்கமடைந்துள்ள மேற்கத்திய கலாச்சாரத்திற்குப் புத்துயிர் அளிப்பதற்கான திறவுகோலாக அமையும்” என்று அவர் சிந்தித்தார்.
இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் சரணடைந்ததைத் தொடர்ந்து, 35 ஆண்டுகால (1910–1945) ஜப்பானிய ஆக்கிரமிப்பில் இருந்த கொரியாவிற்கு 1945 ஆகஸ்ட் 15ஆம் நாள் விடுதலை கிடைத்தது. ஆனால், விடுதலை பெற்ற ஒரு மாதத்திற்குள்ளாகவே, அந்நாட்டின் வடக்குப் பகுதியை சோவியத் ஒன்றியமும் தெற்குப் பகுதியை அமெரிக்காவும் ஆக்கிரமித்துக்கொண்டன. இந்நிலையில், சோவியத் இராணுவ ஆட்சியுடன் ஒத்துழைக்க மறுத்த ஒரு கிறிஸ்தவச் செயல்பாட்டாளராக, ஹாம் மற்றொரு அடக்குமுறை ஆட்சியை எதிர்கொள்ள நேர்ந்தது. அவர் எதிர்கொண்ட ஒவ்வொரு விதமான அடக்குமுறை கொடுங்கோன்மையும் அவரது வெளித்தோற்ற நடத்தையை மட்டுமல்ல, அவரது அக வாழ்வையும் பாதித்தது. ஜப்பானியர்கள் கொரியாவின் வரலாறு மற்றும் நாகரிகத்துடன் சேர்த்து, அதன் முழு அடையாளத்தையும் அழிப்பதில் தீவிரம் காட்டினர். கிம் இல் சுங்(வட கொரியாவின் பிரதம அமைச்சராக 1948 முதல் 1972 வரையிலும், பின்னர் வட கொரிய அதிபராக 1972 முதல் 1994 வரையிலும் ஆட்சி செய்தவர்)கின் அதிகார வர்க்கத்தினர், பொருள்முதல்வாத கோட்பாடுகளுடன் கலந்த ஒரு கடுமையான ஸ்டாலினிச ஆளுமை வழிபாட்டைத் திணித்தனர். மேலும், தெற்கில், அடுத்தடுத்து வந்த சர்வாதிகாரிகள், மிக லேசான எதிர்ப்புக் குரல்களைக் கூட தணிக்கை செய்து அடக்கியபடியே, மேற்கத்திய அரசியலமைப்புவாதம் மற்றும் கிறிஸ்தவக் கோட்பாடுகளை உச்சரித்தனர். ஹாமின் வாழ்க்கைப் பயணம் அடிப்படையில் ஒரு தனிமையான ஆன்மீகப் பயணம் ஆகும். அது பொதுப் பார்வையில் மேற்கொள்ளப்பட்டதால், ஆளும் வர்க்கத்தினருக்கு ஒருவிதமான கடுமையான அரசியல் அச்சுறுத்தலாக மீண்டும் மீண்டும் பார்க்கப்பட்டதில் ஆச்சரியமில்லை. ஆயினும், ஹாம் அடிப்படையில் ஒரு தனி நபராக இருந்தபோதிலும், அவரது தேடல்கள் பல கொரியர்களுக்கு ஒரு குறியீட்டுத் தன்மையைக் கொண்டிருந்தன. அவரிடம், கொரியா தனது சொந்த அடையாளத்தை மீட்டெடுக்கவும், அதன் சத்திய குரலைக் கண்டறியவும் போராடுவதை அவர்கள் கண்டனர்.
ஹாம் ஒரு கிறிஸ்தவச் செயல்பாட்டாளராகவும், வடக்கில் அமல்படுத்தப்பட்ட கம்யூனிசமயமாக்கல் கொள்கைக்கு எதிராக ஒத்துழையாமை நிலைப்பாட்டைக் கொண்டவராகவும் இருந்ததால், சோவியத் இராணுவ அரசாங்கத்தால் சிறையில் அடைக்கப்பட்டார். எனவே, கொரியா விடுதலை பெற்ற போதிலும், ஒரு கொரிய தேசபக்தராக இருந்த ஹாம், இம்முறை கம்யூனிஸ்டுகளால் சிறைப்படுத்தப்பட்டுத் தாக்கப்பட்டார். (Ham Sok-Hon – Quakers in the World, http://www.quakersintheworld.org) வடக்கில் இருந்த சோவியத் இராணுவ அரசாங்கம் அவரைத் தங்கள் உளவாளியாகச் செயல்பட வற்புறுத்தியது; இதனால் 1947 மார்ச் மாதம் அவர் தென் கொரியாவுக்குத் தப்பிச் சென்றார். அங்கு அடுத்த நாற்பது ஆண்டுகளாக, ஊழல் மற்றும் சர்வாதிகாரப் போக்குடைய ஆட்சியினரை அவர் தொடர்ந்து விமர்சித்து வந்தார். இருப்பினும், அங்கேயும் சிங்மேன் ரீ (Syngman Rhee), பார்க் சுங்-ஹீ (Park Chung-hee) மற்றும் சுன் டூ-ஹ்வான் (Chun Doo-hwan) ஆகியோரின் சர்வாதிகாரம் மற்றும் ஊழல் அவரால் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டதால், மீண்டும் மீண்டும் தென் கொரிய ஆட்சியினரால் துன்புறுத்தல், சித்திரவதை மற்றும் சிறைவாசம் எனக் கொடுமைக்குள்ளானார். சிறையில் தான் பெற்ற அனுபவங்கள் மூலம் பல விஷயங்களைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.
அமைதிவாதம், சமத்துவக் கோட்பாடு மற்றும் சமூக நீதி தொடர்பான விவகாரங்கள் அவரை ஈர்த்தன. இருப்பினும், அக்காலகட்டத்தில் ஹாம் ‘திருச்சபை-சாரா இயக்கம்’ (1901ஆம் ஆண்டு உச்சிமுரா கன்சோவால் தொடங்கப்பட்ட ஒரு ஜப்பானிய கிறிஸ்தவ இயக்கமாகும். 1979ஆம் ஆண்டு ஜப்பான், தைவான் மற்றும் கொரியாவில் 35,000 பேர் இந்த இயக்கத்தில் உறுப்பினர்களாக இருந்தனர். இவ்வியக்கத்தின் நோக்கம் கடவுளையும், அவர் (உலகிற்கு) அனுப்பிய அவருடைய ஒரே மகனையும் நம்பும் நாம், ஒன்றிணைந்து நம்பிக்கையின்பால் நண்பர்கள் ஆகிறோம். தந்தையாகிய கடவுளின் உதவியுடன், நாம் நமது நண்பர்ர்களுக்கு உதவுவோம், மேலும் அவருடைய சர்வ வல்லமையுள்ள திருவுளத்திற்கு இசைவான வாழ்க்கையை வாழ்வோம்.) மீது தொடர்ந்து ஈடுபாடு கொண்டிருந்தார்.
அகிம்சை மற்றும் அமைதிவாதம்
ஹாம் தனது வாழ்நாள் முழுவதும் அடக்குமுறை ஆட்சிகளின் கீழ் வாழ்ந்த போதிலும், அகிம்சை மற்றும் அமைதிவாதத்தின் முக்கியத்துவத்தை எப்போதும் வலியுறுத்தி வந்தார். அவர் ஜனநாயகம் மற்றும் பத்திரிகை சுதந்திரத்தை ஆர்வத்துடன் முன்னெடுத்தார். மக்களின் அளவற்ற கீழ்ப்படிதல், செயலற்ற தன்மை மற்றும் விதிவசப்பட்ட மனப்பான்மை ஆகியவற்றைக் கடுமையாக விமர்சித்தார். ஒருவேளை அவரது அடிப்படை சிந்தனையை, வலுவான நீதி உணர்வுடன் கூடிய “எவர் மீதும் வெறுப்பின்மை”(malice toward none) என்று சுருக்கமாகக் கூறலாம். (Kim Sung-soo, loc.cit.)
மகாத்மா காந்தியின் சத்தியம் மற்றும் அகிம்சை தத்துவங்களால் ஹாம் பெரிதும் ஈர்க்கப்பட்டார். காந்தியின் அமைதி மற்றும் சுயநிர்ணயக் கருத்துகளைத் தன் நாட்டு மக்களுடன் பகிர்ந்துகொள்வதற்காக, ஹாம் அவரது சுயசரிதையை முனைப்புடன் படித்துக் கொரிய மொழியில் மொழிபெயர்த்தார். காந்தியைப் போலவே, ஹாமும் அந்நிய ஏகாதிபத்தியத்திற்கும் சர்வாதிகார ஆட்சிக்கும் எதிராகப் போராடுவதற்கு, உடல்ரீதியான வன்முறையிலான எதிர்ப்புக்குப் பதிலாக அமைதியான உண்ணாவிரதப் போராட்டங்கள் மற்றும் தார்மீக/ஆன்மீக எதிர்ப்புகள் ஆகியவற்றைப் பயன்படுத்தினார். இந்தியாவில் காந்தி பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடியதைப் போலவே, ஹாமும் ஜப்பானியப் பேரரசு ஆட்சி, வட கொரியாவில் சோவியத் ஆதரவு கம்யூனிச சர்வாதிகாரம், மற்றும் தென் கொரியாவில் அடுத்தடுத்து வந்த இராணுவ சர்வாதிகாரங்கள் எனப் பல அடக்குமுறை ஆட்சிகளை எதிர்த்தார். அவரது அமைதியான எதிர்ப்புக் கருத்துக்களும் எழுத்துக்களும், பல்வேறு ஆட்சிகளின் கீழ் அவரை மீண்டும் மீண்டும் சிறைவாசத்திற்கு இட்டுச் சென்றன. இந்தச் சிறைவாசங்களை, தனது ஆன்மீக மற்றும் வரலாற்றுச் சிந்தனைகளைச் செம்மைப்படுத்துவதற்காக, அவர் தனது ‘வாழ்க்கைப் பல்கலைக்கழகம்’ எனப் புகழ்பெற்ற வகையில் மறுவரையறை செய்தார்.
ஹாம் தன் வாழ்நாள் முழுவதும் அடக்குமுறை ஆட்சிகளினால் மீண்டும் மீண்டும் துன்புறுத்தப்பட்டார், சித்திரவதை செய்யப்பட்டார் மற்றும் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது வாழ்க்கை துன்பங்கள் நிறைந்ததாக இருந்தது. ஆயினும், தனது தொடர்ச்சியான துன்பங்களுக்கு மத்தியிலும், ஹாம் மனிதகுலத்தின் மீதான தனது நன்னம்பிக்கையையும் நம்பிக்கையையும் ஒருபோதும் இழக்கவில்லை, மேலும், மனமுடைந்திருந்த தனது சக நாட்டு மக்களுக்கு ஒரு தொலைநோக்குப் பார்வையை வழங்கினார். அடக்குமுறை ஆட்சிகளின் கீழ் அவர் வாழ்ந்தபோதிலும், எப்போதும் அகிம்சை மற்றும் சமாதானக் கொள்கையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
‘சுதந்திரம் மற்றும் அன்பிற்கான பாதைகள் சில சமயங்களில் தீமையால் அடைக்கப்படுவதால், அவற்றைச் சீரமைக்க இறுதியில் வன்முறை தேவைப்படலாம்’ என்று ஹாம் நம்பினார். இருப்பினும், அவர் அதை ஒருபோதும் முதல் தேர்வாகக் கருதாமல், கடைசித் தேர்வாகவே கருதினார். “நாம் அகிம்சை கொள்கையையே கடைபிடிக்க வேண்டும். ஆனால், போராடும் மக்களை ஒருபோதும் கைவிடக்கூடாது. அவர்களுடன் இணைந்து செயல்படவும் அவர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டவும் நாம் முயற்சிக்க வேண்டும். போராட்டத்தில் பல நிலைகள் உள்ளன. சிறந்த முதல்நிலையைத் தேர்ந்தெடுக்க முடியாவிட்டால், இரண்டாவது அல்லது மூன்றாவது சிறந்த நிலையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். மௌனமாக இருப்பதும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதும், இரண்டாவது அல்லது மூன்றாவது நிலையைத் தேர்ந்தெடுப்பதை விட மோசமானதாகும். ஆயினும், சிறந்த முறையைப் பயன்படுத்துமாறு நாம் எப்போதும் மக்களை வலியுறுத்த வேண்டும்” என்று கூறினார். (Kerry Walters, Robin Jarrell, Blessed Peacemakers: 365 Extraordinary People Who Changed the World, Cascade Books, Wipf and Stock Publishers, Eugene,2013 p.72).
விதை சிந்தனை (Ssial-nongjang)
பௌத்தத்தால் வலியுறுத்தப்பட்ட அக விடுதலை மற்றும் பற்றின்மை ஆகியவற்றையும், காந்தியம் வலியுறுத்திய சத்தியம் மற்றும் அகிம்சை கோட்பாட்டையும் மற்றும் தனது சொந்த கொரிய ஸ்ஸியால் (விதை/அடிப்படை மக்கள்) தத்துவத்துடனும் கலந்து, ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்காகக் குரல் எழுப்பினார். ஹாம் அமைதி மற்றும் ஜனநாயகத்தை ஊக்குவித்தார். அத்துடன் “பாமர மக்களே நாட்டின் விதைகள்” என்று பொருள் தரும் “விதை சிந்தனை”(ssi-al sasang) என்று அறியப்பட்ட அகிம்சை இயக்கத்தையும் முன்னெடுத்தார். இச்சிந்தனை அவரது புகழ்பெற்ற நூல்களான 1948ஆம் ஆண்டு வெளியான கொரிய வரலாறு: முன் தீர்மானிக்கப்பட்ட ஒரு விருப்பத்தின் பார்வையில் (Korean History Seen through a Will), 1961ஆம் ஆண்டு வெளியான மனிதப் புரட்சி (Human Revolution), 1964ஆம் ஆண்டு வெளியான வரலாறும் மக்களும் (History and People) மற்றும் 1985ஆம் ஆண்டு தொகுக்கப்பட்ட துயரத்தின் ராணி: கொரியாவின் ஆன்மீக வரலாறு(Queen of Suffering: a spiritual history of Korea) ஆகியவற்றில் தொடர்ந்து இடம்பெற்றுள்ளது. (Ham Seok-heon explained – Explained. Today everything.explained.today›) உயர்குடி ஆட்சியாளர்களோ அல்லது சர்வாதிகார ஆட்சிகளோ அல்லாமல், வரலாற்றின் உண்மையான தன்னாட்சி கொண்ட சக்திகளாகவும் அதன் உந்துசக்திகளாகவும் திகழ்பவர்கள் சாமானிய அடித்தட்டு மக்களே ‘ஸ்ஸி-அல்’ என்று அவர் விளக்கினார்.
ஹாம் காந்திய சிந்தனைகள் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார்; ஓசான் பள்ளியில் படிக்கும்போதே காந்தியின் யங் இந்தியா (Young India) இதழை அவர் வாசித்திருந்தார். இருப்பினும், 1948ஆம் ஆண்டு காந்தியின் மறைவுக்குப் பிறகு, அவர் காந்தியின் தீவிரமான பின்தொடர்பவராக மாறினார். காந்தியின் பல நூல்களை வாசித்ததுடன், காந்தியம் குறித்த ஒரு சிறிய ஆய்வுக் குழுவையும் உருவாக்கினார். காலப்போக்கில், காந்தியின் ஆசிரமத்தைப் போன்ற ஒரு சமூகத்தை உருவாக்கும் யோசனையை அவரது நண்பர்களுள் சிலர் முன்வைத்தனர். 1957ஆம் ஆண்டு சியோலுக்குத் தெற்கே சுமார் முப்பது மைல் தொலைவில் உள்ள ‘சோனான்'(Ch’onan) என்ற சிறு நகரத்தில், ஒரு நற்பண்பாளர் வழங்கிய நிலத்தில் அவர் ஒரு பண்ணையைத் தொடங்கினார்; தென்னாப்பிரிக்காவில் மகாத்மா காந்தி நிறுவிய ‘டால்ஸ்டாய் பண்ணை’யால் ஈர்க்கப்பட்ட அவர், 1957ஆம் ஆண்டு ஒரு திட்டமிட்ட விவசாய மற்றும் ஆன்மீக சமூகமாகக் கூட்டுப் பண்ணை(Ssial-Songjiang) ஒன்றை உருவாக்கினார்; அங்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர்களுடன் இணைந்து வாழ்ந்தார். அங்கு இளம் விவசாயிகள் அவருடன் இணைந்து பயின்றும் உழைத்தும் வந்தனர். இப்பண்ணைக்கு ‘சியால்’ (Sial) என்று பெயரிடப்பட்டது. கொரிய மொழியில் இச்சொல் ‘விதை’ என்பதோடு ‘மக்கள்’ அல்லது ‘தேசம்’ என்றும் பொருள்படக்கூடியது. அங்குச் சிறு அளவிலான விவசாயமும் ஆன்மீக அகிம்சையும் கைகோர்த்து நின்றன. வரலாற்றின் உந்து சக்தியாகச் சாதாரண மக்களிடம் வேரூன்றி, கிராமப்புற மறுமலர்ச்சி, உடல் உழைப்பு, ஆன்மீக சிந்தனை மற்றும் ஒடுக்குமுறைக்கு எதிரான அகிம்சை எதிர்ப்பு ஆகியவற்றை இஃது ஒருங்கிணைக்கிறது.தென்கொரியா முழுவதும் ஹாம் ஏற்படுத்திய பல இயற்கை, சுற்றுச்சூழலுக்கு உகந்த அல்லது கல்வி சார்ந்த பண்ணைகள் சியால் நோங்ஜாங் என்ற பெயரில் இயங்கலாயின. இந்தப் பண்ணைகள் பாரம்பரிய, மரபணு மாற்றப்படாத கொரிய பூர்வீகப் பயிர் விதைகளைப் பயிரிட்டுப் பாதுகாப்பதிலும் நகரவாசிகள் சமூக ஆதரவிலான விவசாயத்தை அனுபவித்துப் பார்ப்பதற்காக, அவர்களுக்குச் சிறிய அளவில் வாடகைக்கு நிலங்களை வழங்குதலிலும் கவனம் செலுத்தின.
காந்தி சுதந்திர இந்தியாவிற்கான ஓர் ஆன்மீகப் பார்வையை முன்வைத்ததைப் போலவே, கொரியாவிற்கான ஓர் ஆன்மீகப் பார்வையை முன்வைத்ததால் ஹாம் சோக் ஹோன் ‘கொரியாவின் காந்தி’ என்று அழைக்கப்பட்டார். காந்தியின் பார்வை பெரும்பாலும் இந்திய சமய சிந்தனை குறித்த அவரது புரிதலிலிருந்து உருவானது; ஆனால் ஹாம் சோக் ஹோனின் பார்வை கிறிஸ்தவம் (மற்றும் பிற்காலத்தில் பௌத்தம், கன்பூசியனிசம் மற்றும் ஷாமனிசம்) குறித்த அவரது புரிதலிலிருந்து உருவானது. ஆரம்பத்தில், அவரது நண்பர்கள் அவரைச் சமூகத்தின் தலைவராகச் செயல்படுமாறு வற்புறுத்தியபோது, அவர் அதை மறுத்தார். இது பணிவின் காரணமாக அல்ல, மாறாக, அத்தகைய சமூகத்தை வழிநடத்துவதற்கான தகுதி தன்னிடம் இருப்பதாக அவர் கருதாததே அதற்குக் காரணம். இருப்பினும், வற்புறுத்தலின் பேரில் அவர் இறுதியில் அந்தப் பதவியை ஏற்றுக்கொண்டார்; இதுவே அவரது தவறான பாதையின் தொடக்கமாக அமைந்தது. இக்காலகட்டத்திலிருந்து அவரது நிலைமை வெகுவாக மாறியது. அவரது நண்பர்கள் அனைவரும் அவரைவிட்டு விலகத் தொடங்கினர். மிகுந்த மனவேதனையில் இருந்த அந்த நேரத்தில், ஒரு நண்பரின் பிரிவுக்காக ஹாம் ஏங்கியபோது, குவாக்கர்கள்(Quakers) அவர் முன் தோன்றினர்.
படைப்புகள்
ஹாம் தனது “விதை”தத்துவத்தை மையமாகக் கொண்டு, வரலாறு, தத்துவம் மற்றும் ஆன்மீகம் குறித்துப் பல படைப்புகளை விட்டுச் சென்றுள்ளார்.
முன் தீர்மானிக்கப்பட்ட ஒரு விருப்பத்தின் வழியே கொரிய வரலாறு (Korean History Seen through a Will): 1948ஆம் ஆண்டுக் கொரிய விடுதலைக்குப்பின் வெளியிடப்பட்ட இந்நூல், கொரிய வரலாற்றை ஆன்மீக மற்றும் குறிக்கோள் சார்ந்த கண்ணோட்டத்தில் ஆராய்கிறது. இது கொரிய வரலாற்றின் குறிப்பிடத்தக்க தத்துவார்த்த விளக்கங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. வரலாறு ஒரு தெய்வீக அல்லது தார்மீக சித்தத்தின்படியே நகர்கிறது என்ற கருத்தை இந்நூல் பிரதிபலிக்கிறது. இது கிறிஸ்தவ இறையியலையும்/தெய்வ அருளையும் பாரம்பரிய ஆசிய மற்றும் கொரிய தேசியவாத சிந்தனையுடன் தனித்துவமாக இணைத்து, கொரியாவை ‘துன்பங்களின் அரசி’யாகச் சித்தரிக்கிறது. அதன் இறுதி மீட்பானது சத்தியம், அகிம்சை மற்றும் தார்மீக விழிப்புணர்வில் அடங்கியுள்ளதாகக் கூறுகிறது. மேலும், கொரியாவின் மாபெரும் தேசிய சோதனைகளை (அந்நியப் படையெடுப்புகள் மற்றும் ஜப்பானிய காலனி ஆதிக்கம் போன்றவை) முழுமையான தோல்வியாகக் கருதாமல், ஆழமான ஆன்மீக அடையாளத்தை வடிவமைக்கும் ஒரு சோதனைக் களமாக இஃது உற்று நோக்குகிறது. இது ஹாமின் புகழை “கொரியாவின் காந்தி” ‘நவீன கொரிய மனசாட்சி’ மற்றும் ‘குடிமை உரிமைகளின் முன்னோடி’ என்று நிலைநிறுத்தியது.
மனிதப் புரட்சி(Human Revolution): 1961ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சமூக மற்றும் தனிப்பட்ட உருமாற்றத்தை ஆராயும் ஒரு தத்துவ நூலான இது, சாதாரண மக்களைச் சமூகத்தின் இன்றியமையாத, தன்னாட்சி பெற்ற அடித்தளமாகவும், வரலாறு மற்றும் புரட்சியின் உண்மையான நாயகர்களாகவும் கருதும் ஹாமின் தனித்துவமான விதை (சியால்-சசாங்) தத்துவத்தைப் பிரதிபலிக்கிறது. தனிமனித இதயத்தில் ஓர் அடிப்படையான ஆன்மீக மற்றும் தார்மீக விழிப்புணர்வு இல்லாமல், கட்டமைப்பு அல்லது அரசியல் மாற்றங்கள் மேலோட்டமானவையே என்று ஹாம் வாதிட்டார். தனது கிறிஸ்தவ-குவாக்கர் நம்பிக்கைகளில் வேரூன்றிய இப்படைப்பு, ஜப்பானிய காலனி ஆதிக்கம், சோவியத் இராணுவ அதிகாரிகள் மற்றும் தென் கொரிய எதேச்சதிகாரத்திற்கு எதிரான அவரது வாழ்நாள் போராட்டத்தைப் பிரதிபலிக்கும் வகையில், அகிம்சை எதிர்ப்பு, அமைதி மற்றும் சர்வாதிகார வன்முறையை நிராகரித்தல் ஆகியவற்றை ஆதரிக்கிறது. இந்நூலும், தென்கொரியாவின் மக்களாட்சி மற்றும் மனித உரிமைகள் இயக்கங்களுக்கான ஓர் அடித்தளக் குரலாக ஹாமின் நற்பெயரை நிலைநாட்ட உதவியது.
வரலாறும் மக்களும்(History and People): 1964 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்நூல் சாதாரணக் குடிமக்களுக்கும் வரலாற்று இயக்கங்களுக்கும் இடையிலான உறவு குறித்த ஓர் ஆழமான புரிதலாக இருந்தது. ஹாம் வரலாற்றை மன்னர்கள், வெற்றியாளர்கள் அல்லது அரசியல் மேட்டுக்குடியினர் வழியாக அல்லாமல், அவர் ‘சியால்’(ssial) என்று அழைத்த சாதாரண, துன்பப்படும் மக்கள் கூட்டத்தின் வழியாகவே விளக்குகிறார் (சியால் என்றால் ‘விதை’ அல்லது சமூகத்தின் அடித்தளம் என்று பொருள்). இந்த நூலில், உலக வரலாறு பொருள்சார் பரிணாமம் அல்லது ‘தகுதியானவை மட்டுமே தப்பிப் பிழைக்கும்’ என்ற போராட்டத்தின் கண்ணோட்டத்தில் பார்க்கப்படாமல், ஆன்மீக மற்றும் அறநெறிக் கண்ணோட்டத்தில் பார்க்கப்படுகிறது. துன்பம், சகிப்புத்தன்மை மற்றும் ஆன்மீக விழிப்புணர்வு ஆகியவற்றின் மூலமே வரலாற்றின் உண்மையான பொருள் உணரப்படுகிறது என்று அவர் வாதிடுகிறார். ஒன்றுபட்ட சாதாரண மக்களே வரலாற்றின்உண்மையான கருப்பொருள்களும் தார்மீக செயலாற்றுபவர்களும் ஆவர் என வலியுறுத்தி, இந்த நூல் ஹாமின் தனித்துவமான அகிம்சை, சமாதானக் கொள்கை மற்றும் ஜனநாயக கோட்பாடு ஆகிய தத்துவங்களை முன்னிறுத்துகிறது.
துன்பத்தின் அரசி: கொரியாவின் ஒரு ஆன்மீக வரலாறு: 1930களில் கொரிய வரலாற்றின் ஒரு விவிலியப் பார்வை என்ற தலைப்பில் தொடர் கட்டுரைகளாக எழுதப்பட்ட இது, பின்னர் ‘முன் தீர்மானிக்கப்பட்ட ஒரு விருப்பத்தின் வழியே கொரிய வரலாறு’ என்ற பெயரில் கொரிய மொழியில் வெளியிடப்பட்டுப் பரவலாக அறியப்பட்டது. இதன் விரிவாக்கப்பட்ட ஆங்கிலச் சுருக்கமான ‘துன்பத்தின் அரசி: கொரியாவின் ஒரு ஆன்மீக வரலாறு‘ (Queen of Suffering: A Spiritual History of Korea), 1985ஆம் ஆண்டு நண்பர்கள் உலக ஆலோசனைக் குழுவால் (Friends World Committee for Consultation) வெளியிடப்பட்டது. இது, கொரியாவின் நீண்டகால வெளிநாட்டுப் படையெடுப்புகள், இன்னல்கள் மற்றும் அரசியல் ஒடுக்குமுறைகளின் வரலாற்றை, வெறும் அரசியல் தோல்விகளின் தொடராகக் கருதாமல், துன்பம் நிறைந்த ஒரு ஆழ்ந்த ஆன்மீகப் பயணமாகவும், இறுதியில் நிகழும் தார்மீக மீட்பாகவும் மறுவரையறை செய்கிறது. தேசியதுன்பத்தை, இறுதியில் அடையக்கூடிய தார்மீக மற்றும் ஆன்மீக மீட்பை நோக்கிய ஒரு பாதையாக ஹாம் பார்க்கிறார். பெரும் அரசியல் கொந்தளிப்புகள் நிலவிய காலங்களில் ஹாம் இந்நூலின் சில பகுதிகளையும் விரிவாக்கங்களையும் எழுதினார். இந்தக் கொந்தளிப்புகளே, ஜப்பானிய காலனி ஆதிக்கத்தின் கீழும் பிற்காலச் சர்வாதிகார ஆட்சிகளின் கீழும் அவர் துன்புறுத்தப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டதற்கு நேரடி காரணமாக அமைந்தன. அவர் வெளிப்படுத்தியதாகக் கூறப்பட்ட சர்ச்சைக்குரிய மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்திய கருத்துக்கள், ‘ஆபத்தானவை’ என்ற குற்றச்சாட்டின் பேரில் ஜப்பானிய அதிகார வர்க்கத்தினரால் அவர் சிறையில் அடைக்கப்படுவதற்கு வழி வகுத்தன. இந்நூல் கொரியர்கள் தங்கள் ஆன்மீக அடையாளத்தைக் கண்டறிய வேண்டும் என்று வலியுறுத்திய அதே வேளையில், வன்முறை பாதையை முற்றிலுமாக நிராகரித்தது. அஃது, “உன் வாளைக் கீழே வைத்துவிட்டு ஆழமாகச் சிந்தனை செய்” என்ற வரியுடன் நிறைவடைகிறது. (Nonviolent action – Quakers in the World, http://www.quakersintheworld.org›) கிறிஸ்தவ ஆன்மீகப் பார்வைகள், கீழைத்தேயத் தத்துவங்கள் மற்றும் வன்முறையற்ற எதிர்ப்புக்கான ஆழமான அழைப்பு ஆகியவற்றை ஒன்றிணைக்கும் இது, கொரிய தேசிய அடையாளத்தின் மிகவும் செல்வாக்குமிக்க விளக்கங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.உலகியல் அரசியல் அதிகாரத்தைக் காட்டிலும் சாதாரண மக்களின் கூட்டு ஆன்மா மற்றும் மீள்திறன் மீது கவனம் செலுத்தி, அவருடைய பிற்கால மனிதநேய மற்றும் அகிம்சைத் தத்துவத்திற்கான அடித்தளக் கூறுகளை இந்நூல், அமைத்தது. மேலும், இது கொரிய ஜனநாயக மற்றும் முற்போக்கு இயக்கங்களுக்கு ஓர் அடித்தளமாக விளங்கியதுடன், 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் நிலவிய இராணுவ சர்வாதிகாரங்களுக்கு எதிரான மக்கள் (மின்ஜுங்) இறையியல் மற்றும் எதிர்ப்பியக்கங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
மேற்குக் காற்றின் பாடல்: அமைதி, மனித உரிமைகள் மற்றும் ஆன்மீக விழிப்புணர்வு ஆகியவற்றிற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்த, ஹாம் கவிதையை ஓர் இன்றியமையாத உணர்ச்சி மற்றும் மெய்யியல் ஊடகமாகப் பயன்படுத்தினார் 1983ஆம் ஆண்டு எழுதப்பட்ட மேற்குக் காற்றின் பாடல் (Song of the West Wind) உள்ளிட்ட சுமார் 120 கவிதைகளை அவர் இயற்றியுள்ளார். “மேற்கு காற்று” மீதான அவரது ஈர்ப்பு, அவரது ஆரம்பக் கல்வி காலத்திலிருந்தே தொடங்கியது. அவர் மேற்கத்திய இலக்கியங்களில், குறிப்பாக, பெர்சி பைஷ் ஷெல்லியின் மேற்கு காற்றுக்கான புகழ்ச்சிப் பாடல்(Ode to the West Wind) என்பதில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார். அவரைப் பொறுத்தவரை, மேற்குக் காற்று என்பது ஒடுக்குமுறை சமூகக் கட்டமைப்புகளையும் மரபுசார் எல்லைகளையும் தகர்க்கும் திறன் கொண்ட ஒரு புரட்சிகரமான மனோபாவத்தின் சின்னமாக விளங்கியது. “மேற்குக் காற்றின் பாடல்” என்பது, உண்மையான வரலாற்று மாற்றமும் மீட்பும் அடித்தட்டு மக்களின் எதிர்ப்பு அகிம்சை வழியிலாகச் செயல்படுவதாலேயே ஏற்படும் என்பதை எடுத்துக்காட்டுகிறது. விதை எண்ணம் (சியால் சசாங்கிற்கு) தத்துவத்திற்காக ஹாம் கொண்டிருந்த வாழ்நாள் அர்ப்பணிப்பைப் இந்நூல் பிரதிபலிக்கிறது.
ஹாம் சுமார் 20 நூல்கள் எழுதினார். அவற்றில் துன்பத்தின் அரசி: கொரியாவின் ஆன்மீக வரலாறு மற்றும் ‘Kicked by God’ ஆகியவை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஹாம் சோக்-ஹோன் தனது வாழ்க்கையை “கடவுளால் உதைக்கப்பட்டது” என்று வர்ணித்தார். இதன் பொருள், அவர் தனது சொந்த உலகியல் லட்சியங்களால் அல்லாமல், தெய்வீக சித்தத்தால் உந்தப்பட்டு, வடிவமைக்கப்பட்டு, முழுமையாக வழிநடத்தப்பட்டார் என்பதாகும். அவருடைய ஆன்மீக மற்றும் அரசியல் பயணத்தை விவரிக்கும், அவருடைய எழுத்துக்கள் மற்றும் உரைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புத் தொகுப்பின் தலைப்பும் Kicked by God என்பதே ஆகும். ஜப்பானிய காலனி ஆதிக்கம், கம்யூனிச வட கொரியா, மற்றும் தென் கொரியாவின் இராணுவ சர்வாதிகாரங்கள் ஆகியவற்றின் கீழ் மீண்டும் மீண்டும் சிறைவாசம் அனுபவித்தது உட்பட, தனது வாழ்க்கையின் வேதனையான சோதனைகள் அனைத்தும், தான் வெறும் பந்தாக இருந்த ஒரு தெய்வீக விளையாட்டின் நகர்வுகள் என்ற அவரது நம்பிக்கையை இந்த உருவகம் காட்டுகிறது.
ஹாமின் மாத இதழான மக்களின் குரல் அவரது கருத்துக்களைப் பரப்பவும், அவற்றை கொரியாவின் ஜனநாயக இயக்கத்துடன் இணைக்கவும் உதவியது. ஹாமின் தத்துவமும் வாழ்க்கை முறையும், கொரியாவின் முதல் மனசாட்சிக்குட்பட்ட எதிர்ப்பாளரான மியோங்சுன் ஹாங் உட்பட எண்ணற்ற தனிநபர்களுக்கு உத்வேகம் அளித்தது.
குவாக்கர் (Quaker)
நிறுவனமயமாக்கல் மிகக் குறைவாக இருப்பதுவே சிறந்த சமயம் என்று ஹாம் கருதினார். அமைதிவாதம், சமத்துவக் கோட்பாடு, சமூக உணர்வு(கூட்டு ஆன்மீக அனுபவம்) மற்றும் மறுமை வாழ்வில் உள்ள “சொர்க்கம் அல்லது இறைவனின் ராஜ்யத்தை” எதிர்பார்ப்பதை விட, நிகழ்கால விவகாரங்களில் தீவிரமாகப் பங்கேற்கும் தன்மை ஆகியவை அவரை வெகுவாகக் கவர்ந்தன. (Margery Post Abbott, Mary Ellen Chijioke, Pink Dandelion, John William Oliver, Jr., Historical Dictionary of the Friends (Quakers), Scarecrow Press, Lanham,2012, p.160) குவாக்கர்கள் உள் ஒளியை பின்பற்றுபவர்கள்; அஃதாவது, ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் கடவுளின் பிரசன்னம் இருக்கிறது என்பதை நம்புபவர்கள்; முறைசார்ந்த சமய குருமார்கள், சமயக் கோட்பாடுகள் மற்றும் வெளிப்படையான சடங்குகளை நிராகரிப்பதுடன், மௌனமான அல்லது ஆவியால் வழிநடத்தப்படும் கூட்டு வழிபாட்டை விரும்புவர்கள். மனிதர்களைப் பொறுத்தவரை அனைத்து சமயங்களும் ஒரு பொதுவான தளத்தையே கொண்டுள்ளன என்று ஹாம் கருதினார்; இக்கருத்து பல குவாக்கர்களாலும் பகிரப்பட்ட ஒன்றாகும். சத்தியத்தின் அடிப்படையில் வாழ்வது குவாக்கர்களின் வாழ்க்கையில் ஒரு முக்கிய நெறிமுறையாகும். ஆரம்பக் காலத்தில் இங்கிலாந்து திருச்சபை(Church of England) அமைப்பில் இணைய முடியாத சூழல் இருந்ததால், அவர்கள் பல்வேறு வாணிப முயற்சிகளில் ஈடுபட்டனர். தங்கள் நேர்மையின் காரணமாக அதில் பெரும் வெற்றியும் பெற்றனர். பிற்காலத்தில், அவர்கள் வணிகத் துறையைத் தவிர்த்து, சக மனிதர்களுக்குப் பயன்படும் வகையிலான பணிகளில் ஈடுபடத் தொடங்கினர். குவாக்கர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. அவர்களின் வாழ்க்கை முறை எளிமையானது. அவர்களுக்கு என்று குறிப்பிட்ட சமயக் கோட்பாடுகளோ அல்லது கட்டாயமான நம்பிக்கைகளோ இல்லையென்றாலும், அவர்கள் தங்கள் வாழ்க்கையில் சில நடைமுறைகளைப் பின்பற்ற முயன்றனர். எளிமையான வாழ்க்கை, எளிமையான உடை, வெளிப்படையான பேச்சு மற்றும் உலக அமைதிக்காகத் தொடர்ந்து பணி செய்வது போன்றவை அவற்றில் சிலவாகும். குவாக்கர் இயக்கத்தின் ஆரம்பக் காலத்தில், ‘நண்பர்கள்’ என்றே அவர்கள் தங்களை அழைத்துக்கொண்டனர்.
ஓசான் பள்ளியில் பயின்றபோதே குவாக்கர்களைப் பற்றி அறிந்துகொண்ட ஹாம், ஜார்ஜ் ஃபாக்ஸால்(17ஆம் நூற்றாண்டு இங்கிலாந்தில் பெரும் உள்நாட்டு மற்றும் சமயக் கொந்தளிப்புகள் நிலவிய காலகட்டத்தில், பொதுவாக குவாக்கர்கள் என்று அழைக்கப்படும் நண்பர்களின் சமய அமைப்பை நிறுவிய ஓர் ஆங்கிலேயப் பயணப் போதகர்.) ஈர்க்கப்பட்டார். இரண்டாம் உலகப் போரின்போது, மனசாட்சியின் அடிப்படையில் போரை எதிர்த்த(conscientious objectors) ஏராளமான குவாக்கர்களை அறிந்து அவர் பெரிதும் கவரப்பட்டார்; ஏனெனில், அவரும் வன்முறையை முற்றிலுமாக நிராகரிப்பவராக இருந்தார். “உண்மையான வெற்றி அன்பின் மூலமே சாத்தியமாகும்” என்பது அவரது அடிப்படை கொள்கையாக இருந்தது. 1953ஆம் ஆண்டுக் கொரியப் போருக்குப் பிறகு, பிரிட்டிஷ் நண்பர்கள் சேவைக் குழுவும் அமெரிக்க நண்பர்கள் சேவைக் குழுவும் கொரியாவின் புனர்நிர்மாணப் பணிகளுக்கு உதவின. போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான மருத்துவ வசதிகள், உணவு மற்றும் மறுவாழ்வுப் பணிகளையும் இந்த அமைப்புகள் வழங்கின. குன்சான் பகுதியில் போரின்போது சேதமடைந்த ஒரு மருத்துவமனையை மீண்டும் கட்டியமைக்க உதவும்முகமாக அவர்கள் ஒரு பணி முகாமை ஏற்பாடு செய்தனர். இளம் குவாக்கர்கள் பலரும் அந்தப் பணி முகாமில் பங்கேற்றுத் தங்கள் உடல் உழைப்பை வழங்கி உதவினர். ஹாம் அவர்களைச் சந்தித்தார். அவர்களின் நம்பிக்கை மற்றும் சேவையால் ஈர்க்கப்பட்டார். அந்த நிவாரண முகாமில்தான் முதன்முதலில் அவர்களுடனான நேரடித் தொடர்பு அவருக்கு ஏற்பட்டது. அமைதிவாதம், சமத்துவக் கொள்கை மற்றும் சமூக நீதி சார்ந்த விவகாரங்களில் அவர்கள் காட்டிய தீவிர ஈடுபாடு அவரை வெகுவாகக் கவர்ந்தன. இதன் காரணமாகக் குவாக்கரிசத்தில் ஆர்வம் கொண்டு, ஒரு குவாக்கராக அவர் தன்னை மாற்றிகொண்டு வந்தார்.
இருப்பினும், அக்காலகட்டத்தில் ஹாம் திருச்சபை-சாரா இயக்கத்தில் தொடர்ந்து செயல்பட்டு வந்தார். அதேவேளையில், சியோலில் நடைபெற்ற குவாக்கர் வழிபாட்டுக் கூட்டங்களிலும் அவர் பங்கேற்று வந்தார். பின்னர் அதன் உறுப்பினரானார். அறிவியல், சமயம், பகுத்தறிவு மற்றும் ஆன்மீக அனுபவம்(mysticism) ஆகியவற்றுக்கு இடையே சமநிலையைப் பேண குவாக்கர்கள் முயன்றது போலவே, ஹாமும் அத்தகைய போக்கைக் கொண்டிருந்தார். இதற்குச் சிறிது காலத்திற்குப் பிறகு, திருச்சபை-சாரா இயக்கம் அவரைத் தங்கள் அமைப்பிலிருந்து விலக்கி வைப்பதற்கு வழிவகுத்த ஒரு சம்பவம் நிகழ்ந்தது. ஹாம் இதனை ஒரு ‘பாவம்’ என்று குறிப்பிட்டார்; ஆனால், மரபுக்கு முரணான கருத்துகளைக் கொண்டிருந்தார் எனக் கருதி அவர்கள் அவரை நிராகரித்ததாகக் கூறப்பட்டது. அதற்கான காரணம் எதுவாக இருந்தாலும், 1958ஆம் ஆண்டுத் தொடங்கப்பட்ட சியோல் குவாக்கர் கூட்டங்களில் ஹாம் பங்கேற்கத் தொடங்கிய தருணம் இதுவேயாகும்.”நீங்கள் முறையாக ஒரு குவேக்கராக மாறுவதற்கு முன்பே, ஏற்கனவே ஒரு குவேக்கராகத்தான் இருந்தீர்கள்,” என்று அமெரிக்காவைச் சேர்ந்த ‘ஃப்ரெண்ட்’ (குவாக்கர் சபை) உறுப்பினர் ஆர்தர் மிட்செல் நெகிழ்ச்சியுடன் அவரிடம் கூறினார்.
1961 மற்றும் 1963 இடைப்பட்ட காலத்தில், ஹாம் அமெரிக்காவில் உள்ள பெண்டில் ஹில்(Pendle Hill) மற்றும் இங்கிலாந்தில் உள்ள வுட்புரூக் (Woodbrooke) ஆகிய இடங்களுக்குச் சென்று வந்தார். வட கரோலினாவில் நடைபெற்ற ‘நண்பர்கள் உலக மாநாட்டில்’ (Friends World Conference) பங்கேற்றார். (Kim Sung-soo,‘Legacy of Ham Sok-hon’, http://www.koreatimes.co.kr › www › news › opinion › 2011/05) அதைத் தொடர்ந்து, 1967 ஆம் ஆண்டில் ஹாம் சோக்-ஹோன் முறைப்படி தன்னைக் குவாக்கர் சபையின் (Religious Society of Friends) உறுப்பினராக இணைத்துக் கொண்டார். அமைதி மற்றும் ஆன்மீகத்தின் மீது அவர் கொண்டிருந்த இயல்பான ஈடுபாடே, அவரைக் குவாக்கர் கொள்கைகளின் வாழும் வடிவமாக மாற்றியிருந்தது. ஹாம் இங்ஙனம் கூறினார்: “குவாக்கர்கள் முறையான நிகழ்ச்சி நிரல் இல்லாமல் பிரார்த்தனை செய்வதையே விரும்புகிறார்கள்; ஆனாலும், அவர்களிடம் ஓர் ஒழுங்கான கட்டமைப்பின் அவசியத்தை உணர முடிகிறது. நாங்கள் எங்கள் வழிபாட்டுத் தலத்தை, எங்கள் தேவாலயம் என்று சொல்வதை விட, எங்கள் சந்திப்புக் கூடம் என்று எளிமையாகச சொல்லவே விரும்புகிறோம்; அங்குப் போதகரோ, பாதிரியாரோ, அல்லது படிநிலை அமைப்போ இல்லை. சொற்பொழிவு மேடையோ, முறையான இருக்கை அமைப்போ இல்லை. ஒவ்வொருவரும் அமைதியாக அமர்ந்து தியானிக்கின்றனர். வழிபாட்டு நேரத்தைத் தொடர்ந்து நாங்கள் வேதாகமத்தை ஆராய்கிறோம். அமைதியான வழிபாட்டின்போது, உள்ளத்தில் உந்துதல் பெறுபவர்கள் பிரார்த்திக்கலாம், கீதங்களைப் பாடலாம், வேதாகமத்தை வாசிக்கலாம் அல்லது தியானத்தின் மூலம் உருவான செய்தியைப் பகிர்ந்துகொள்ளலாம். வழிபாட்டுக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் பேசுவதற்கு உரிமை உண்டு.” சுருக்கமாகச் சொன்னால், குவாக்கர்களின் வழிபாடு என்பது ஆடம்பரங்களோ, சடங்குகளோ இல்லாத, ஆன்மீக அமைதியையும் தனிமனித சமத்துவத்தையும் மையமாகக் கொண்ட ஓர் எளிய வழிபாட்டு முறையாகும்.
ஹாம் குவாக்கர் ஆவதற்கு முன்பு, தாகூரின் எழுத்துக்களைப் படித்தது அவருக்கு ஒரு பரந்த கண்ணோட்டத்தைக் கொடுத்தது. அவர் தன்னை ஒரு சர்வவியாபியாகக் கருதியதில்லை, ஆனால், எந்தவொரு குறிப்பிட்ட சமயத்திலும் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளவில்லை என்று வெளிப்படையாகக் கூறினார். எனினும், தான் சர்வவியாபிகளின் பக்கம் இருப்பதாகத் தெளிவாகக் கூறினார். சத்தியத்தைக் கிறிஸ்தவத்தின் மூலம் மட்டுமே கண்டறிய முடியும் என்று அவர் நம்பவில்லை. பலரும் தங்கள் சொந்த சமயமே முழுமையான உண்மையின் ஆதாரம் என்று கூறுவதை அவர் ஏற்றுக்கொள்ளவுமில்லை. ஏனெனில், சத்தியம் எந்தவொரு தனி நபராலோ அமைப்பாலோ முழுமையாக வெளிப்படுத்தப்படுவதில்லை. மகத்தான சமய உண்மைகள் முரண்பாடாக இருக்கக் கூடும் என்று அவர் நினைக்கவில்லை. வரலாறு துன்பம் நிறைந்தது. தமது வரலாற்றின் காரணமாகவே, அவர் லாவோட்சே மற்றும் சுவாங்சேவைத் தேடினார். தான் ஒரு சமய சார்பற்றவனாக மாறியபோது, ஜப்பானிய சமய சார்பற்றவரான உச்சிமுராவின் தாக்கம் ஏற்பட்டது. எனினும், உச்சிமுராவின் இறையியல் வளர்ச்சி பாதையில் சில சிரமங்கள் இருந்ததையும் ஹாம் ஒப்புக்கொண்டார். கீழைத்தேய தத்துவம் எந்த உதவியும் செய்ய முடியாது என்று அவர் வாதிட்டார். இது குறித்து அவர் ஒரு திட்டவட்டமான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தாரா என்பது தனக்கு உறுதியாகத் தெரியவில்லை, ஆனால் அவருடைய கூற்றுகள் அவ்வாறே இருந்தன என்று கூறினார்.
அமெரிக்கக் குவாக்கர்களால் 1979 மற்றும் 1985 ஆகிய ஆண்டுகளில் அமைதிக்கான நோபல் பரிசுக்கு ஹாம் பரிந்துரைக்கப்பட்டார். இதன் மூலம் இப்பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்ட முதல் கொரியர் என்ற பெருமையை அவர் பெற்றார். தான் அதற்குத் தகுதியற்றவர் என்றே ஹாம் கருதினார். இருப்பினும், ஒரு கிறிஸ்தவராக, குறிப்பாக ஒரு முறையான ஒரு குவாக்கராக அவர் வாழ்ந்த வாழ்க்கை என்பது, அரசியல் ஒடுக்குமுறை மற்றும் சமய ரீதியான குறுகிய மனப்பான்மை நிலவிய ஒரு குறிப்பிட்ட வரலாற்றுச் சூழலில் உண்மையைக் கண்டறியும் முயற்சியாக அமைந்திருந்தது. அதே வேளையில், கொரியா சர்வாதிகார ஆட்சிகளின் கீழ் இருந்த காலகட்டத்தில், ஹாமின் குடிமை உரிமைகள் இயக்கத்திற்கு மேற்கத்திய குவாக்கர்கள் உறுதியான ஆதரவை அளித்தனர். குவாக்கர்கள் குறித்து ஹாம் உயரிய மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்தார். அவர் கூறினார்: “ஆண்-பெண் சமத்துவம் மற்றும் அடிமைகளின் விடுதலைக்கான இயக்கங்களைத் தொடங்கி வைத்தவர்கள் குவாக்கர்களே. தங்கள் சமய நம்பிக்கைகளின் காரணமாக அடிக்கடி சிறையிலடைக்கப்பட்டு மோசமாக நடத்தப்பட்ட குவாக்கர்கள், சிறைச்சாலைகளின் நிலை மேம்படுத்தப்பட வேண்டும் என்றும், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் கண்ணியத்துடனும் மனிதாபிமானத்துடனும் நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்; இத்தகைய முயற்சிகள் தங்கள் சமூகங்களில் பொதுக்கருத்தை விழிப்புணர்வுறச் செய்து நிலைமைகளை மேம்படுத்தியபோது, அதற்காக அவர்கள் எந்தவித அங்கீகாரத்தையும் எதிர்பார்க்கவில்லை; குவாக்கர்களின் எண்ணிக்கை பெரியதல்ல என்றாலும், அவர்கள் ‘அமைதிக்கான சாட்சியம்'(peace testimony) என்று பெரிதும் அறியப்படுகிறார்கள். போரினால் ஏற்படும் அழிவுகள் அதிகரித்து வருவதை உணர்ந்த குவாக்கர்கள், முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களின் போது அமைதிக்கான கட்டமைப்புகளை உருவாக்குவதில் மிகுந்த கவனம் செலுத்தினர். உதாரணமாக, எதிரி நாடுகளில் போரினால் காயமடைந்த பொதுமக்களுக்கு அவர்கள் மருந்துகளை அனுப்பி உதவினர். வியட்நாம் போரின்போது ரஷ்யா மற்றும் வட வியட்நாம் ஆகிய நாடுகளுக்கும் இத்தகைய உதவிகள் அனுப்பப்பட்டன. அமெரிக்க அரசாங்கம் இதற்குத் தடை விதித்த போதிலும் அவர்கள் உதவுவதில் இருந்து பின்வாங்கவில்லை. ‘எதிரிகள்’ என்று கருதப்படுபவர்களும் இறைவனின் பிள்ளைகளே என்பதைத் தங்கள் சமய நம்பிக்கைகளின் அடிப்படையாகக் கொண்டிருப்பதை அவர்கள் விரும்பினர்.” (“War is the Extreme Luxury” – An interview with Ham Sok-Hon by Han Yong San 1984)
ஹாம், ‘முட்டாள் பறவை’ அல்லது ‘அல்பட்ராஸ்’ என்ற புனைப்பெயரில் அறியப்பட்டார். அல்பாட்ராஸ் (Albatross) பறவைக்கு ஜப்பானிய மொழியில் ‘அஹோ-டோரி’ அல்லது ‘பகா-டோரி’ என்று பெயர். மீன்களைப் பிடிக்கத் தெரியாமல் எஞ்சியிருக்கும் கழிவுகளை உண்டு வாழும் அப்பறவையின் பெயரையே அவர் தனக்கும் சூட்டிக்கொண்டார். ஒருவேளை, அவரது வாழ்க்கை முறை அந்த அல்பட்ராஸ் பறவையைப் போலவே இருந்திருக்கலாம். அவரது இதயம் நீல வானத்தையோ இலட்சியவாதத்தையோ பற்றிக்கொண்டு அதிலேயே நிலைத்திருந்தாலும், அவரால் உண்பதற்கு ஒரு துண்டு ரொட்டியைக் கூடச் சம்பாதிக்க முடியவில்லை. அவரது அன்றாட உணவை அவரது நண்பர்களும் சக மனிதர்களுமே கொடுத்தனர். சமூக ரீதியாக, ஹாம் ஓர் ஒதுக்கப்பட்ட தனிநபர். இருப்பினும், லாவோ-ட்சு, இயேசு, சாக்ரடீஸ் மற்றும் திருமுழுக்கு யோவான் ஆகியோரும் தங்கள் காலத்தில் ஒதுக்கப்பட்ட தனிநபர்களாகவே இருந்தனர். ஒருவேளை, இந்த சமூகப் புறக்கணிப்பே அவரது தனித்துவமான குணத்தை உருவாக்க உதவியிருக்கலாம்.(Kim Sung-soo, loc.cit.)மற்றவர்கள் அவரை ‘ஆசிரியர் ஹாம்’ என்றே அன்புடன் அழைத்தனர்.
தென் கொரியாவில் நிலவிய சர்வாதிகாரம் மற்றும் அநீதிக்கு எதிராகத் தன் வாழ்நாள் முழுவதும் ஹாம் தொடர்ந்து குரல் கொடுத்தார். 1963ஆம் ஆண்டு ஜெனரல் பார்க் சுங் ஹீ ஜனாதிபதி வேட்பாளராவதற்குத் தனது எதிர்ப்பைத் தெரிவித்தார்.1965ஆம் ஆண்டு முன்னாள் ஜப்பானிய ஆட்சியுடன் கூட்டணி அமைக்க முயன்ற ஜனாதிபதி பார்க் சுங் ஹீக்கு எதிராக அவர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்; மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதற்காக அரசியலமைப்பை மாற்ற முயன்ற ஜனாதிபதி பார்க் சுங் ஹீயை எதிர்த்துப் போராடியதற்காக 1974ஆம் ஆண்டு தண்டனை பெற்றார். 1976 மற்றும் 1979ஆம் ஆண்டுகளில் அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்; 1980ஆம் ஆண்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். இறுதியாக, 1987ஆம் ஆண்டு தென் கொரியாவில் முழுமையான ஜனநாயகம் மலர்ந்தது. அவ்வாண்டில் பத்திரிகை மற்றும் ஊடகங்களின் வளர்ச்சிக்கு அவரது பங்களிப்பை கௌரவிக்கும்விதமாக முதல் இன்சான் விருது வழங்கப்பட்டது. இந்த விருது, தென் கொரியாவின் இரண்டாவது துணை ஜனாதிபதியும், கொரியா பல்கலைக்கழகம், டோங்-அ இல்போ மற்றும் கியோங்சியோங் டெக்ஸ்டைல்ஸ் ஆகியவற்றின் நிறுவனருமான கிம் சியோங்-சூவின் புனைப் பெயரால் அழைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் வழங்கப்படும் இந்த விருது, கிம்மின் பிறந்த நாளான அக்டோபர் 11 அன்று, 100 மில்லியன் கொரிய வோன் பரிசுத்தொகை, ஒரு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ஒரு பதக்கத்துடன் வழங்கப்படுகிறது. 1988ஆம் ஆண்டு நடைபெற்ற மாபெரும் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களின் விளைவாக, ஜெனரல் டூ-ஹ்வான் சுன் (Doo-Hwan Chun) விருப்பமின்றி அதிபர் பதவியிலிருந்து விலகினார். சர்வதேச சியோல் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கவிருந்த வேளையில், ஹாம் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 1988 சியோல் ஒலிம்பிக் போட்டிகளின் போது, ஹாம் சோக்-ஹோன் அமைதி ஒலிம்பியாட் தலைவராக- கொரிய மக்களின் பிரதிநிதியாகத் திகழ்ந்தார். உலகளாவிய நல்லிணக்கத்தை வலியுறுத்தும் ஒரு சிறப்பு அமைதிப் பிரகடனத்தை இவ்வமைப்பு உருவாக்கியது. அந்தப் பிரகடனத்தை வரைவதற்கு அவர் உதவினார். இதில் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்கள் மற்றும் உலகத் தலைவர்கள் உட்பட அறுநூறுக்கும் மேற்பட்ட முக்கியப் பிரமுகர்கள் கையெழுத்திட்டனர். 1988 சியோல் ஒலிம்பிக் போட்டிகள், கிழக்கு-மேற்கு பனிப்போர் பிளவுகளைக் குறைக்க உதவியதுடன், சியோல் அமைதிப் பரிசு மற்றும் சியோல் ஒலிம்பிக் பூங்காவில் உள்ள புகழ்பெற்ற உலக அமைதி வாயில் உள்ளிட்ட நீண்டகால அமைதி முன்னெடுப்புகளுக்கும் உத்வேகம் அளித்தது. நான்கு மாதங்களுக்குப் பிறகு, 1989 பிப்ரவரி 4 அன்று, தனது 87ஆவது வயதில் சியோல் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் அவரது துயரங்கள் நிறைந்த பயணம் முடிவுக்கு வந்தது.
தேசிய கலாச்சார ஆளுமை
“கொரியாவும் கொரிய மக்களும் பிற நாடுகளால் ஆக்கிரமிக்கப்பட்டு வெற்றிக் கொள்ளப்பட்டது, நாம் சமாதானத்தை விரும்புபவர்களாக இருந்ததால் அல்ல; மாறாக, அவர்களின் கட்டுப்பாட்டையும் ஆதிக்கத்தையும் எதிர்த்து நிற்க நமக்கு மனவுறுதியோ துணிவோ இல்லாததாலேயே ஆகும்” என்று ஹாம் வாதிட்டார். ஹாம் ஒரு திறமையான அரசியல்வாதியாகத் திகழவில்லை என்றாலும், ஒரு தார்மீக மனிதராகவும், காலத்தைக் கடந்த தொலைநோக்குப் பார்வை உடையவராகவும் விளங்கினார். இன்றைய கொரியாவிற்கு ஜனநாயக மரபை ஹாம் விட்டுச் சென்றுள்ளார். கொரிய மக்கள் தங்கள் உரிமைகள், கண்ணியம், கருத்துச் சுதந்திரம் ஆகியவற்றை இழந்து வாடிய சூழலில், ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஹாமின் செயல்பாடுகள் அமைந்திருந்தன. எண்ணற்ற கொரியர்களின் மனதில் ஜனநாயகம் என்பது வெறும் கனவாக மட்டுமே இருந்தபோது, ஹாம் ஒரு சுதந்திர மனிதனின் அடையாளமாகவும், ஜனநாயக விழுமியங்களின் உருவகமாகவும் திகழ்ந்தார். அவர் ஜனநாயகத்தை ஒரு சமயம் போன்றதாகக் கருதினார்; அது தனது சக கொரியர்களின் உண்மையான சமயமாகத் திகழ வேண்டும் என்று அவர் விரும்பினார். சமயப் பன்மைத்துவம் குறித்த தனது கண்ணோட்டத்தின் அடிப்படையில், மேற்கத்திய கிறிஸ்தவம் மற்றும் ஆசியத் தத்துவங்களின் சங்கமம் குறித்த சிந்தனையையும் ஒரு தத்துவ மரபாக அவர் விட்டுச் சென்றுள்ளார். சமூக நீதி, மனித உரிமைகள் மற்றும் புராட்டஸ்டன்ட் மனப்பான்மை (protestant spirit) போன்ற கிறிஸ்தவத்தின் சாராம்சங்களை, அதீத ஆன்மீக நோக்கு (transcendentalism), அனைத்தையும் உள்ளடக்கிய தன்மை மற்றும் பெருந்தன்மை போன்ற ஆசியத் தத்துவங்களின் சாராம்சங்களுடன் அவர் ஒன்றிணைத்தார். தாமிரம் மற்றும் துத்தநாகம் இரண்டின் கலவை ‘பித்தளை’ எனும் புதிய பொருளை உருவாக்குவது போல, மனிதநேயத்தின் மிக உயர்ந்த நிலையை அடைவதற்காக ஹாம் ஆசியத் தத்துவங்களுடன் மேற்கத்திய கிறிஸ்தவக் கோட்பாடுகளை சங்கமிக்கச் செய்தார்.
2000ஆம் ஆண்டு, ஹாம் ஒரு ‘தேசிய கலாச்சார ஆளுமை’யாக (National Cultural Figure) அவரது மறைவுக்குப் பின் அங்கீகரிக்கப்பட்டார். 2002ஆம் ஆண்டில், தேசத்தின் அங்கீகாரமாக அவருக்குத் தேசத்தை உருவாக்கியதற்கான சிறப்பு விருது(Accolade for Founding a Nation) வழங்கப்பட்டது. கொரியாவில் ஜனநாயகத்திற்கான போராட்டத்தில் துன்புறுத்தப்பட்ட, சித்திரவதைக்குள்ளான, சிறைவைக்கப்பட்ட அல்லது கொல்லப்பட்ட மக்களின் பிரதிநிதியாக அவர் திகழ்ந்தார். கொரிய தீபகற்பத்தில் ஜப்பானிய காலனித்துவ ஆட்சி, வட கொரியாவில் கம்யூனிச சர்வாதிகாரம் மற்றும் தென் கொரியாவில் இராணுவ சர்வாதிகாரம் ஆகிய காலகட்டங்கள் முழுவதிலும் கொரியாவின் மனசாட்சியின் அடையாளமாக அவர் விளங்கினார். சுதந்திரமாகப் பிறக்கும் மனிதர்கள், வளரும்போது, முரண்பாடுகள் மலிந்த புற உலகை எதிர்கொள்கின்றனர்; அவர்களில் பெரும்பாலோர் தங்கள் ‘இயல்பான பண்பினை’ இழந்துவிடுகின்றனர்; வெளி உலகின் கடுமையான சூழல்களைப் பொருட்படுத்தாமல், ஒரு சில நல்ல மனிதர்கள் மட்டுமே தங்கள் இலட்சியங்களையும் கனவுகளையும் நிலைநாட்டுகின்றனர். நிச்சயமாக, ஹாம் அவர்களுள் ஒருவர். ஹாம் 110 ஆண்டுகளுக்கு முன்பு கொரியா நாட்டில் பிறந்து வாழ்ந்தார்; மனசாட்சியுள்ள மனிதராக, ஒரு கொரிய காந்தியாக, அவர் இன்றும் நம்முடன் இருக்கிறார். முடிவாக, ஹாம் கூறுவது போன்று, “நமது சிந்தனைகள் குறுகியதாக இருத்தல் கூடாது. பிரபஞ்சத்தின் மற்றும் வாழ்க்கையின் விதிகள் பல பரிமாணங்களைக் கொண்டவை. நம்மிடம் வெவ்வேறு சிந்தனைகள் இருப்பதில் எந்தப் பிரச்சனையும் இருக்கக்கூடாது. இரு மனிதர்களின் முகங்கள் ஒரே மாதிரியாக இருப்பதில்லை; வாழ்க்கை அப்படித்தான் அமைந்திருக்கிறது. எனது மதமும் சிந்தனைகளும் தங்களுடையதைப் போலவே இருக்க வேண்டும் என்று ஏன் சிலர் பிடிவாதம் பிடிக்கிறார்கள்? அப்படி அவர்கள் நினைத்தால், அவர்களின் சிந்தனை மிகவும் குறுகியதாக இருக்கிறது என்பதாகவே அர்த்தம். தற்போதைய உலக நிலையை எண்ணி நான் மிகுந்த கவலை கொள்கிறேன். எல்லோரும் என்று சொல்ல முடியாது, ஆனால், பெரும்பாலானோர் செயலற்றவர்களாகவும், உற்சாகம் குன்றியவர்களாகவும் இருக்கிறார்கள். வாழ்க்கையிலும் சிந்தனையிலும் ‘பன்முகத்தன்மை’ வளர வேண்டும்.”
Discover more from சொல்வனம் | இதழ் 378 | 08 நவ 2026
Subscribe to get the latest posts sent to your email.
