முதல் பகுதி
பேருந்து ஒருமுறை குலுங்கியது, வேகத்தடையா சாலையின் குழியா என்று தெரியவில்லை, கண்களைத் திறந்தபோதுதான் அவை மூடியிருந்தன என்பதே எனக்குத் தெரிந்தது, எப்போது மூடினேன் என்று நினைவில்லை, ஹேமலேகா தந்தையின் கையைத் தொட்டது நினைவிருந்தது, பெயரற்றவர்களை அழைத்த முதியவரின் வரி நினைவிருந்தது, குயவனின் மகள் கோபத்துடன் சொன்னது நினைவிருந்தது, ஆனால் அவற்றை ஓட்டுநர் சொல்லக் கேட்டேனா, அல்லது அவர் குரல் நின்ற பிறகு நானே கனவில் தொடர்ந்தேனா என்று பிரித்துச் சொல்ல முடியவில்லை, கண்ணாடியில் ஓட்டுநரின் கண்கள் என்னைப் பார்த்துக்கொண்டிருந்தன, கதையைக் கேட்டாயா என்றார், இல்லை என்றேன், தூங்கிவிட்டாயா என்றார், ஆம் என்றேன், தூங்குபவர்களுக்கும் கதைகள் கேட்கும் என்று மட்டும் சொன்னார், அம்மா இப்படி ஒருமுறைகூடச் சொன்னதில்லை, நான் பொய் சொன்னால் முதலில் அதைக் கண்டுபிடித்துவிட்டதைச் சொல்வாள், பிறகு பொய் சொன்னதற்காகச் சண்டை, பிறகு எதைப் பற்றிப் பொய் சொன்னேனோ அதற்காக இன்னொரு சண்டை, மூன்று சண்டைகள் ஒன்றுக்குள் ஒன்றாக, அதை நினைக்க எனக்கு விருப்பமில்லை, அதனால் கதையைப் பற்றி நினைத்தேன், இருபத்தைந்து, அவர் சொன்ன எண்ணிக்கையை விரல்களில் எண்ணிப் பார்த்தேன், பத்து இந்திரியங்கள், பஞ்ச பூதங்கள் ஐந்து, தன்மாத்திரைகள் ஐந்து, உள்ளே மூன்று, மனம், அகம், புத்தி, பிறகு பிரகிருதி, கடைசியாகப் புருஷன், இருபத்தைந்து, விரல்கள் இரண்டு முறை தீர்ந்து மீண்டும் தொடங்கின, உங்களுக்கும் இதுதானா என்று கேட்டேன், எனக்கும் என்றார், என் அம்மாவுக்குமா, அவளுக்கும், அப்பாவுக்குமா, அவருக்கும், எங்கள் தெருவில் எல்லோருக்குமா, எல்லோருக்கும், விசோன் முழுவதற்குமா, விசோன் முழுவதற்கும், அவர் என் கேள்வியையே திருப்பித் திருப்பிச் சொல்லிக்கொண்டிருந்தார், நம்பவே முடியவில்லை என்றேன், ஏன் என்றார், ஏன் என்று சொல்ல எனக்குச் சொற்கள் உடனே வரவில்லை, அம்மாவுக்கும் கண்கள் இருக்கின்றன, எனக்கும் கண்கள் இருக்கின்றன, அப்படியிருந்தும் என் அறையைப் பார்க்கும்போது அவள் பார்ப்பது குப்பை, நான் பார்ப்பது என் இடம், அப்பாவுக்கும் செவிகள் இருக்கின்றன, நான் பேசுவதை அவர் கேட்கிறார், ஆனால் நான் சொல்வதை அவர் கேட்பதில்லை, அவருக்குக் கோபம் வருவதற்கு முன் மூக்கின் வழியே நீளமாக ஒருமுறை மூச்சை இழுப்பார், அந்த ஒலியைக் கேட்டதுமே நான் அறையை விட்டுப் போய்விடுவேன், அந்த மூச்சு அவருக்குக் கேட்கிறதா என்று இதுவரை நான் யோசித்ததில்லை, அதே மனம், அதே அகம், அதே புத்தி என்றால் நான் கேட்ட கேள்வி அவர்களுக்குள் ஏன் தோன்றவில்லை, எல்லோருக்கும் ஒரே அமைப்பு என்றால் விசோனில் என்னுள் தோன்றும் எண்ணங்கள் ஏன் என் அம்மாவிடமும் அப்பாவிடமும் தோன்றவில்லை, ஓட்டுநர் சிரித்தார், அவர் சிரிப்பதை முதல்முறையாகக் கண்ணாடியில் பார்த்தேன், அது அவர் முகத்தை வயதானதாகக் காட்டியதா இளமையானதாகக் காட்டியதா என்று சொல்ல முடியவில்லை, ஊற்றெனப் பெருகும் எண்ணங்களின் வேகத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களை பற்றி உனக்கு இன்னொரு கதை சொல்கிறேன் கேள் என்றார், இந்த முறை எனக்குக் கதை கேட்க விருப்பமில்லை என்று நான் சொல்லவில்லை.
எண்ணி அறியும் பார்வையில் புறவயமானதை அகவயமாக்கி, அகவயமானதைப் பிரபஞ்சப் பேரொழுக்குடன் இணைக்கும் தன்மை இருந்தது. சிலர் அந்த எண்ணிக்கையைக் கொண்டு உலகை மேலும் பிரித்துப் பார்த்தார்கள். சிலர் அதைத் தங்களுக்குள் திருப்பினார்கள்.
அவர்களில் வடக்கே வலை பின்னிய சிறுவனின் வழியில் வந்தவர்களும் இருந்தார்கள்.
தந்தைக்குக் கோபம் வருவதற்கு முன் மூச்சு மாறுவதை அவன் கவனித்த கதை அவர்களிடம் இன்னும் சொல்லப்பட்டு வந்தது. அவன் பெயர் அதற்குள் மறைந்திருந்தது. கதையில் தந்தையும் மகனும் மட்டும் எஞ்சியிருந்தார்கள்

ஒரு மாலை வலைஞர்களின் வழியில் வந்த இளைஞனான ஹேமசூடன் கபிலர்களின் பட்டியலைக் கற்றுக்கொண்டிருந்தபோது இருள் விழத் தொடங்கியது. ஆசிரியர் விளக்கில் எண்ணெய் ஊற்றினார். திரியைச் சிறிது மேலே இழுத்து ஏற்றினார். ஹேமசூடன் கற்றுக்கொண்டிருந்தவற்றின் நிழல்கள் சுவரில் பெரிதாயின.
“வேறுபட்ட இயல்புகளுடைய மூன்றும் விளக்கைப் போலச் சேர்ந்து செயல்படுகின்றன, இல்லையா?” ஹேமசூடனின் குரல் வியப்பில் மேலேறியது.
ஆசிரியர் விளக்கை அவன் அருகே நகர்த்தினார்.
“இதில் எது வெளிச்சம் தருகிறது?”
“சுடர்.”
“திரியை எடுத்துவிடு.”
ஹேமசூடன் அவரைப் பார்த்தான்.
“அணைந்துவிடும். அதுதான் மூன்றும் சேர்ந்து செயல்படுகின்றன என்று சொன்னேனே.”
“எண்ணெய் தீர்ந்தால்?”
“அணைந்து விடும், அது எனக்குத் தெரியாதா?” ஹேமசூடனின் குரலில் சலிப்பு இருந்தது.
“வியப்பென முதலில் கேள்வி கேட்டாய், சலிப்பென ஏன் ஆனது” ஆசிரியர் கிண்டலாக கேட்டார்.
“ம்ம்..” என்றான்.
ஆசிரியர் விளக்கை இன்னும் சிறிது அருகே நகர்த்தினார். அவன் கையின் நிழல் சுவரில் பெரிதாக விழுந்தது.
கபிலர்கள் கூறிய மூன்று குணங்களையும் அவன் அந்த வெளிச்சத்தில் மீண்டும் படித்தான். விளங்கச் செய்வது, இயங்கச் செய்வது, கனத்துத் தடுத்து மறைப்பது என அவற்றைச் சொற்களில் பிரித்திருந்தார்கள். நிகழ்வுகளில் அவை ஒன்றைவிட்டு ஒன்று விலகி நிற்கவில்லை.
ஆசிரியரை பார்த்தான். அவர் அவனை கவனிக்கவில்லை, நாளை வேலைக்காக வலையை இழுத்து சரி செய்ய ஆரம்பித்து இருந்தார்.
“நான் ஒன்று சொல்லட்டுமா” என்றான். கண்டதை சொல்லத் துடித்தான்.
“இன்று பாடம் முடிந்தது, வலையை சரி செய்” என்றார்.
அவன் மூச்சு கூடியது, உடலில் அனல் ஏறியது, பல்லைக் கடித்தான். விருட்டென எழுந்து வெளியேறினான். அவன் வெளியேறிய வேகத்தில் விளக்கென ஒளிர்ந்தது அசைந்தது.
ஒரு நாள் நதிக்கு சென்றபோது புதருக்குள் ஏதோ அசைந்தது. அவன் தோள்கள் இறுகின. கையில் இருந்த கோலினை புதரை நோக்கி ஓங்கி வீசினான், புதரில் ஒளிந்திருந்த காதலர்கள் கதறி வெளிவந்தனர். அவர்களை கண்டதும் எரிச்சல் கொண்டான், கோலை எடுத்துத் துரத்தினான். இவனை கண்டு அஞ்சி ஓடினர்.
ஓடிக் களைத்த பின்னர், அவர்களை ஏன் துரத்தினான் என்று அவனுக்கே விளங்கவில்லை.
அன்று மாலை ஆசிரியரிடம் கேட்டான்.
“ஆபத்து என்று தோன்றியதும் உடல் என்னைக் காக்க அசைகிறது. கோபம் வந்ததும் அதே உடல் எனக்கே தீங்கு வரும்படி அசைகிறதே?”
“கோபம் வலையாக உன்னை போர்த்தியுள்ளது” என்றார்.
“எனக்கு அது பிடிக்கவில்லை…” அவன் குரல் உயர்ந்தது.
“விளங்கச் செய்வது, இயங்கச் செய்வது, கனத்துத் தடுத்து மறைப்பது என மூன்று உண்டு அல்லவா? ” எனக் கேட்டார்.
“ம்..” என்றான்
“விளக்கை ஏற்று, வலையை சரி செய்வோம், வா…” என்றார்.
அவன் புரியாமல் நின்றிருந்தான். விளங்கச் செய்வது, இயங்கச் செய்வது, கனத்துத் தடுத்து மறைப்பது எனக் கற்றிருந்தான். இப்போது அவற்றைத் தன் கைகளிலும் குரலிலும் அறிய வேண்டியிருந்தது. வலையின் முடிச்சொன்றை அவிழ்க்க முயன்றான். விரைந்து முடிக்க வேண்டும் என்றபோது பார்வை குறுகியது. முடிச்சு அவிழாதபோது உடல் இறுகியது. இன்னும் வலுவாக இழுத்தான். முடிச்சு மேலும் இறுகியது.
அடுத்த முறை கோபம் வந்தபோது அதைத் தடுக்க முயலவில்லை. ஹேமலேகாவைப் போல கொஞ்சம் அதிக நேரம் நின்று பார்த்தான்.
கோபத்தைப் பார்க்க நின்றபோது ஹேமசூடன் தன் உடலின் பிற அசைவுகளையும் கவனிக்கத் தொடங்கினான். மூச்சு நெஞ்சுக்குள் வந்து வெளியேறியது. ஆனால் உடலுக்குள் நிகழ்வதெல்லாம் அந்த வருகையும் வெளியேற்றமும் மட்டுமல்ல என்று அவனுக்குத் தோன்றியது. கழிவை வெளியேற்றும்போது கீழ்நோக்கி அழுத்தம் சேர்ந்தது. உண்டபின் வயிற்றில் வேறொரு வேலை நடந்தது; பசி தணிந்து, சில நேரம் கழித்து உடலுக்கு வலு திரும்பியது. பேச எழுந்தபோது தொண்டையில் ஓர் உந்துதல் கூடி ஒலியாக வெளிவந்தது. ஓடிவிட்டு நின்றபோது துடிப்பை நெஞ்சில் மட்டுமல்ல, கழுத்திலும் கைகளிலும் உணர்ந்தான். இவற்றைத் தனித்தனியாகக் கவனிக்க முயன்றான். கோபம் வந்தால் மூச்சுடன் வயிறும் தொண்டையும் கைகளும் மாறின. ஒன்றில் தொடங்கியது மற்றவற்றிலும் பரவியது. இவற்றைக் கவனிக்கக் கவனிக்க, உடலையும் உள்ளத்தையும் பிணைக்கும் ஓர் ஆற்றல் இருப்பதாக அவன் கருதினான். அதற்கெனச் சொற்களும் இருந்தன. சிலர் அதைப் பிராணன் என்றார்கள். இக்காலத்தில் அவன் குலமெங்கும் ஹேமசூடனின் கோபம் பற்றிய கதைகள் பரவின.
அந்தக் காலத்தில் மூச்சைக் கவனிப்பவர்களின் சிறு குழுக்கள் விசோனின் பல இடங்களிலும் தோன்றி இருந்தன. இயங்கச் செய்வது, பார்வையை கனத்துத் தடுத்து மறைப்பது என இரண்டாலும் தொல்லைப்பட்டவர்கள் விளங்க செய்வது எவ்வாறென தவித்து தடுமாறி தங்களை கவனிக்க சென்று தங்கள் மூச்சினை கவனிப்பதில் முடிந்தனர். அவர்கள் ஒரே மரபைச் சேர்ந்தவர்கள் அல்ல. சிலர் வேட்டைக்காரர்கள். சிலர் நோயாளிகளுடன் இருந்தவர்கள். சிலர் பாடுவதற்கு முன் மூச்சைப் பயிற்சி செய்தவர்கள். சிலர் இறந்தவர்களின் அருகே இரவு முழுவதும் விழித்திருந்து உயிருள்ள உடலுக்கும் இறந்த உடலுக்கும் இடையிலான வேறுபாட்டைக் கவனித்தவர்கள்.
அந்தக் குழுக்கள் ஒன்றையொன்று அறிந்திருக்கவில்லை. ஆனால் அவர்கள் கவனித்தவை பயணிகளுடனும் பாடகர்களுடனும் வைத்தியர்களுடனும் இடம் பெயர்ந்தன. ஓரிடத்தில் கேள்வியாக இருந்தது மற்றோரிடத்தில் பயிற்சியாக இருந்தது. ஒருவன் கண்டதை இன்னொருவன் தன் உடலில் முயன்று பார்த்தான். பொருந்தாததைத் திருத்தினான். சிலவற்றுக்கு வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு பெயர்கள் இருந்தன.
ஹேமசூடன் முதியவனாகியபோது, உயிரின் இயக்கங்களைப் பத்தாக எண்ணும் கருத்து விசோனின் பல இடங்களிலும் பேசப்பட்டு வந்தது. சிலர் அவற்றைப் பத்து வாயுக்கள் என்றார்கள். காட்டிலிருந்து வந்தவர்கள் பத்துப் புலிகள் என்றார்கள்.
ஒரு மாலை அவனிடம் கற்க வந்த இளைஞன் அந்தப் பெயரைச் சொன்னான்.
“பத்துப் புலிகளா?” என்று ஹேமசூடன் கேட்டான்.
“உடலுக்குள் இயங்குபவை.”
“என் உடலுக்குள்ளுமா?”
இளைஞன் சிரித்தான். ஹேமசூடனும் சிரித்தான்.
“பத்து என்னும் எண்ணிக்கை வந்துவிட்டது. புலி எங்கிருந்து வந்தது?”
இளைஞன் காட்டில் புலியின் தடங்களைப் பார்த்தவர்களின் கதையைச் சொன்னான். நிலம் மாறும்போது அதன் அடிகள் மாறின. நீந்தவும் பாயவும் மரமேறவும் அதே உடல் பயன்பட்டது. ஒவ்வொரு உறுப்பும் தன் வேலையைச் செய்தது. இருந்தும் அதன் நடையில் அடி பிறழவில்லை.
“உடலுக்குள் இருக்கும் பத்தும் அப்படி இயங்க முடியுமா என்று அவர்கள் கேட்கிறார்கள்,” என்றான்.
“பத்தும் ஒரே வேலையைச் செய்யுமா?”
“பத்தும் பத்து வேலைகளைச் செய்கின்றன. ஒவ்வொன்றுக்கும் தனி வழி இருக்கிறது. ஆனால் புலியின் கண் அறிந்த நிலத்தில் அதன் கால் அடி வைப்பதுபோல, ஒவ்வொன்றும் உண்மையின் இயல்புக்கேற்ப அடி பிறழாமல் இயங்கினால் என்ன ஆகும் என்று கேட்கிறார்கள்.”
ஹேமசூடன் தன் முழங்காலின் மீது வைத்திருந்த கையைப் பார்த்தான். விரல்களில் சிறிய நடுக்கம் இருந்தது. அதை நிறுத்த முயன்றபோது கை இறுகியது. கையைத் தளர்த்தியதும் நடுக்கம் மீண்டும் தெரிந்தது.
இளைஞன் பத்து இயக்கங்களையும் விளக்கத் தொடங்கினான். ஹேமசூடன் இடையில் கேள்விகள் கேட்டான். உணவு உடலுக்குள் சென்ற பிறகு நிகழ்வதையும், குரல் எழுவதையும், உடல் பெற்றதைப் பரப்புவதையும், வேண்டாததை வெளியேற்றுவதையும் அவர்கள் வேறுபடுத்திப் பார்த்திருந்தார்கள். தூங்கும்போதும் தொடர்ந்த இயக்கங்களுக்கும் பெயர்கள் வைத்திருந்தார்கள்.
சிறிது நேரத்திற்குப் பிறகு ஹேமசூடன் சொன்னான்:
“எனக்குக் கோபம் ஒரு தொல்லை. அதை வெகுநாட்களாக கவனித்து வருகிறேன்.”
“கவனித்து?”
“கோபம் வரும்போது பல கூறுகள் ஒன்றாக அசைவதைப் பார்த்தேன். இப்போது நீங்கள் அந்த அசைவுக்குள்ளும் வேறுபாடுகள் இருக்கின்றன என்கிறீர்கள்.”
இளைஞன் அவனுடைய நடுங்கும் கையைப் பார்த்தான்.
“அவற்றைப் பயிற்சி செய்யலாம் என்கிறார்கள்.”
ஹேமசூடன் கையை முழங்காலிலிருந்து எடுத்தான். மீண்டும் வைத்தான்.
“எனக்கும் காட்டுகிறாயா?”
இளைஞன் அவன் அருகே அமர்ந்தான்.
“நீங்கள் எதில் அதிக நேரம் தங்க முடியும்?”
“இப்போது உட்கார்ந்திருக்கும் இடத்தில்தான்.”
“உங்கள் கவனத்தைக் கேட்டேன்.” ஹேமசூடன் நதியைப் பார்த்தான்.
“இதைப் பல ஆண்டுகளாகப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.”
“அப்படியானால் இங்கிருந்தே தொடங்கலாம்.”
முதல் நாள் நதியைப் பார்த்தபோது ஹேமசூடனுக்கு இளமையில் அதைக் கடந்தது நினைவுக்கு வந்தது. அப்போது உடன் வந்தவர்கள் நினைவுக்கு வந்தார்கள். அவர்களில் இறந்தவர்கள் நினைவுக்கு வந்தார்கள். சிறிது நேரத்தில் அவன் நதியைப் பார்த்துக்கொண்டிருக்கவில்லை.
இளைஞன் எதுவும் சொல்லவில்லை. மறுநாளும் அவனுடன் வந்து அமர்ந்தான்.
சில நாட்கள் ஹேமசூடன் நீர் பாயும் ஓர் இடத்தை மட்டும் பார்த்தான். அங்கே பாறை ஒன்று நீருக்கு மேலே தெரிந்தது. நீர் அதன் இருபுறமும் பிரிந்து, சிறிது தூரத்தில் மீண்டும் சேர்ந்தது. பாறையைப் பார்த்தபோது அதன் வயதை எண்ணினான். நீரைப் பார்த்தபோது அது எங்கிருந்து வந்திருக்கும் என்று எண்ணினான். எண்ணியதை அறிந்தபோது மீண்டும் அந்த இடத்திற்குத் திரும்பினான்.
ஒரு நாள் அவன் சொன்னான்:
“பாறை அசையவில்லை. அதைப் பற்றிய என் எண்ணம்தான் எங்கெல்லாமோ போகிறது.”
அதன்பிறகு கவனம் விலகிய ஒவ்வொரு முறையும் அதைத் திருப்புவதற்காக அவன் தன்னைச் சினந்துகொள்ளவில்லை.
காலம் சென்றது. ஓர் இலையின் நுனியில் நின்ற நீர்த்துளியை அவனால் நீண்ட நேரம் கவனிக்க முடிந்தது. பின்னர் நதியின் அகலத்தைப் பார்த்தபோதும் அதன் ஒரு சிறு அசைவைக் கொண்டு வேறெங்கும் சென்றுவிடாமல் இருக்க முடிந்தது. சிறியதைப் பார்க்கும்போது பெரியதை நினைக்க வேண்டியிருக்கவில்லை. பெரியதைப் பார்க்கும்போது அதன் நடுவே தன்னை நிறுத்திக்கொள்ள வேண்டியிருக்கவில்லை.
ஒரு மாலை இளைஞன் நிறமற்ற பளிங்குக் கல்லைக் கொண்டுவந்தான். அதை ஒரு பச்சை இலையின் மீது வைத்தான். கல்லுக்குள் பச்சை தெரிந்தது. மண்ணில் வைத்தபோது மண்ணின் நிறம் தெரிந்தது.
ஹேமசூடன் அதை எடுத்துத் திருப்பிப் பார்த்தான்.
“இதற்கென்று நிறம் இருந்தால், கீழே இருப்பதன் நிறம் இவ்வளவு தெளிவாகத் தெரியாது,” என்றான்.
அடுத்த சில நாட்கள் அவன் அந்தக் கல்லைக் கவனித்தான். முதலில் “பளிங்கு” என்ற பெயர் வந்தது. அதைப் பற்றிக் கற்றவை வந்தன. இளமையில் பார்த்த மற்றொரு கல் நினைவுக்கு வந்தது. அது யாரிடம் இருந்தது என்பதும் வந்தது. அவன் முன்னால் இருந்த சிறிய கல்லைச் சுற்றி அவனுடைய வாழ்நாள் சேர்ந்துகொண்டது.
“இதைப் பார்க்கிறேனா, இதைப் பற்றி எனக்குத் தெரிந்ததைப் பார்க்கிறேனா?” என்று அவன் கேட்டான்.
“இரண்டும் வருவதை நீங்கள் அறிகிறீர்கள்,” என்றான் இளைஞன்.
ஹேமசூடன் மீண்டும் பார்த்தான்.
அவனுக்குப் பெயர் மறந்துவிடவில்லை. முன்பு கற்றவை தவறாகவும் ஆகவில்லை. ஆனால் அவை ஒவ்வொன்றும் முன்னால் வந்து நிற்காத நேரங்கள் தோன்றின. அப்போது கல்லைப் பற்றிச் சொல்ல வேண்டிய எதுவும் எழவில்லை. அதன் விளிம்பில் ஒளி தங்கியிருந்தது. உள்ளே இருந்த சிறிய பிளவு தெளிவாகத் தெரிந்தது.
பிறகு “இப்போது தெளிவாகப் பார்க்கிறேன்” என்ற எண்ணம் வந்தது.
அதையும் அவன் அறிந்தான்.
மறுநாள் இளைஞன் கேட்டான்:
“நேற்று என்ன நிகழ்ந்தது?”
ஹேமசூடன் பதில் சொல்லச் சிறிது நேரம் எடுத்துக்கொண்டான்.
“அது அங்கே இருந்தது,” என்றான்.
“முன்பும் இருந்ததே.”
“ஆம். முன்பு அதைக் காட்டிலும் அதைப் பற்றிய என்னுடைய சொற்கள் அதிகமாக இருந்தன.”
அவன் கல்லை இலையின் மீது வைத்தான். பச்சை அதன் வழியே தெரிந்தது.
ஹேமசூடன் இறந்தபோது அவன் அருகே அந்தப் பளிங்குக் கல் இருந்தது. அவனிடம் கற்றவர்கள் அதை எடுத்துவைத்தார்கள். சில நாட்கள் கழித்து ஒருவன் அதை நதிக்கரைக்குக் கொண்டுவந்தான்.
“இதையே பார்த்தால் அவர் கண்டதை நாமும் காண முடியுமா?” என்று கேட்டான்.
அவனுடன் இருந்தவள் கல்லை வாங்கிப் பார்த்தாள்.
“அவர் இதை மட்டும்தானா பார்த்தார்?”
அந்தக் கேள்வி அங்கு தொடர்ந்துக்கொண்டே இருந்தது.
வேறொரு கூட்டம் பாம்புகளை விரும்பியது.
சிறுவனொருவன் மணலில் சென்ற பாம்பின் தடத்தை நீண்ட நேரம் பார்த்துக்கொண்டிருந்தான்.
“அதன் பாதம் எங்கே?” என்று கேட்டான்.
“பாம்புக்குப் பாதம் இல்லை.”
“அப்படியென்றால் இந்தப் பாதை?”
அவனுடைய ஆசிரியர் பதில் சொல்லவில்லை.
சிறுவன் தடத்தின் மீது விரலை ஓட்டினான்.
“பாம்பின் உடலே அதன் வழி.”
சிறிது தூரம் சென்றுவிட்டு மீண்டும் திரும்பிப் பார்த்தான்.
“பாம்பே ஒரு பாதையின் வடிவம் கொண்டதுதான். அதன் தடமே அது.”
அந்தச் சொல்லும் அவர்களிடையே தங்கியது.
பாம்பின் தடத்தைப் பார்த்த சிறுவன் தினமும் நதிக்கரையில் நீண்ட நேரம் அமர்ந்திருந்தான். அவனுக்கு நீரின் ஓசை கேட்டது. எண்ணம் விலகியபோதெல்லாம் அதைத் திருப்பினான். எழுந்தபோது மனம் தெளிவாக இருப்பதாக உணர்ந்தான்.
அவன் வளர்ந்து மணம் கொண்டு குடும்பம் அமைத்துக் கொண்டான்.
வீட்டுக்குத் திரும்பும் வழியில் பக்கத்து வீட்டுத் தொழுவத்தில் இரண்டு புதிய பசுக்களுடன் மொத்தம் நான்கு பசுக்கள் நின்றன. அவன் நின்று பார்த்தான். அவற்றில் ஒன்று தலையைத் திருப்பி அவனைப் பார்த்தது. அவன் தன் தொழுவத்தை நோக்கினான். இரண்டு பசு மட்டுமே இருந்தது. பிறகு வீட்டிற்குள் சென்றான்.
மனைவி பால் கொண்டுவந்து வைத்தாள். அவன் ஒரு மிடறு குடித்தான்.
“சுவையே இல்லை,” என்றான்.
அவள் பாத்திரத்தை வாங்கிச் சிறிது குடித்துப் பார்த்தாள். “வழக்கம்போலத்தான் இருக்கிறது.”
“நான் சொல்வது உனக்குப் புரிவதில்லை.”
அவள் பாத்திரத்தை வைத்துவிட்டுத் தன் வேலையைத் தொடர்ந்தாள். அவளுடைய அமைதி அவனுக்கு இன்னும் எரிச்சலைத் தந்தது. வெளியே பசுவின் குரல் கேட்டது. அது யாருடைய பசு என்று அவனுக்குத் தெரிந்திருந்தது.
மகன் ஓடிவந்து அவன் முழங்காலில் சாய்ந்தான். அவன் கையிலிருந்த பால் தளும்பித் தரையில் சிந்தியது.
“பார்த்து வர முடியாதா?” என்று மகனை அடித்தான்.
சிறுவன் விலகி நின்றான். அழுவதற்கு முன் அவன் தந்தையைப் பார்த்த அந்தக் கணத்தில், தந்தை கையைத் தாழ்த்தினான். மனைவி வந்து மகனை அழைத்துச் சென்றாள்.
பால் தரையில் பரவியிருந்தது. பாத்திரத்தில் இன்னும் கொஞ்சம் இருந்தது. அவன் அதை எடுத்துக் குடித்தான். பாலின் சுவையில் எந்தக் குறையும் இல்லை.
மறுநாள் நதிக்கரையில் அமர்ந்தபோது நீரின் ஓசைக்கு முன்னால் மகனின் முகம் வந்தது. அதை விலக்கி நீரைக் கவனிக்க முயன்றான். முகம் மீண்டும் வந்தது.
அவன் கண்களைத் திறந்தான்.
மணலில் பாம்பின் தடம் இன்னும் தெரிந்தது. அதன் வளைவுகளைப் பின்னோக்கிப் பார்த்தான். நேற்று இரண்டு பசுக்களில் தொடங்கியது பாலின் சுவையாக மாறி, மனைவியிடம் சொன்ன பொய்யாகி, மகனின் மீது விழுந்த கையாக முடிந்திருந்தது.
அவன் நேற்று அமர்ந்திருந்த இடத்தைப் பார்த்தான். அங்கிருந்து தன் வீடு செல்லும் திசையைப் பார்த்தான்.
“காலையில் நதிக்கரையில் கீழ்மையில் இருந்து பெற்ற சுதந்திரம் மாலையில் இல்லாமல் போகின்றதே? மீண்டும் அன்றாடத்துக்கு அடிமையாகின்றோமே…” என நிலைகுலைந்தான்.
அந்தக் கேள்விகள் அவன் இறக்கும் வரை தொடர்ந்தன.
அவன் இறப்புக்கு பின்பும் அந்தக் கேள்வி இறக்கவில்லை, அது பயிற்சியை செய்த பலர் வழியே காலத்தில் பெருகியது. உணவு, உறக்கம், பேச்சு, வேலை ஆகிய\]வற்றில் தங்களுடைய பழக்கங்களை மாற்றிப் பார்த்தார்கள். மாற்றியதால் என்ன நிகழ்ந்தது என்று ஆராய்ந்தார்கள். தங்கள் முன்னால் பயிற்சி செய்தோர் சொல்லியவற்றைக் கற்றார்கள்; அவற்றின் வெளிச்சத்தில் தங்கள் செயல்களைப் பார்த்தார்கள். பயிற்சியின் பலனைத் தங்களுக்குரிய வெற்றியாகப் பற்றிக்கொள்ளாமல், தங்களைவிடப் பெரிதான உண்மைக்கு அர்ப்பணிக்க முயன்றார்கள்.
ஆனால் ஒவ்வொருவரும் தன்னை மட்டும் திருத்திக்கொண்டால் போதவில்லை. ஒருவன் பொய் சொன்ன பிறகு, அந்தப் பொய்யைக் காப்பாற்ற வேண்டிய எண்ணங்கள் அவனுடன் அமர்ந்தன. பிறனைப் புண்படுத்தியவனுக்கு அவனுடைய முகம் மீண்டும் மீண்டும் நினைவுக்கு வந்தது. தேவைக்கு மேல் சேர்த்துவைத்தவனுக்கு அதைக் காக்க வேண்டிய அச்சம் எழுந்தது.
அவர்கள் மற்றவர்களுடன் வாழும் விதமும் அகப்பயிற்சியின் ஒரு பகுதியாகியது. இவற்றை வெவ்வேறு மனிதர்கள் வெவ்வேறு இடங்களில் பயின்றிருந்தார்கள். காலப்போக்கில் அவற்றுக்கிடையிலான தொடர்பு தெளிவானது. பிறரிடம் நடந்துகொள்ளும் விதம், தன் வாழ்வைப் பேணும் முறை, உடலின் நிலை, மூச்சின் இயக்கம் ஆகிய நான்கிலும் அவர்கள் கவனம் செலுத்தத் தொடங்கினார்கள்.
ஒன்றில் செய்தது மற்றொன்றில் தொடர்ந்தது. பிறனைப் புண்படுத்திய சொல், அமர்ந்த உடலுக்குள் நினைவாக வந்தது. உறக்கம் குறைந்த நாளில் உடலை நிலைநிறுத்துவது கடினமாக இருந்தது. உடல் இறுகியபோது மூச்சு மாறியது. மூச்சு மாறியபோது மனத்திலும் மாற்றம் தெரிந்தது. நான்கையும் ஒன்றோடொன்று தொடர்புடைய பயிற்சிகளாக அவர்கள் வளர்த்தார்கள்.
பல நூறு ஆண்டுகள் சென்று தாமரைகள் பூத்த தடாகம் ஒன்றின் அருகே தன் மகளுக்கு நீச்சல் கற்றுக் கொடுத்த தந்தையொருவர், வகுப்பு முடிந்தும் மகள் விளையாடுவதை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தார். அவளுக்கு மூச்சு பயிற்சியும் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்திருந்த பருவம் அது.
ஓடி விளையாடிக் கொண்டிருந்த மகள் புதர் அருகே தடம் ஒன்றினை காட்டி பெரிய பாம்பு என்றாள்.
தந்தை திரும்பிப் பார்த்ததும், “பாம்பின் தடமே ஒரு பாம்புதான்!” என்று அவள் குதித்தாள்.
“பாம்பும் மதியும் பகைதீர்த்துடன் கொளீஇ…” என்று அவர் மெல்லச் சொன்னார்.
“அப்பா, என்ன சொன்னீர்கள்?”
அவர் அந்த வரியை மீண்டும் சொன்னார்.
“பாம்பும் மதியும் பகை தீர்த்தால் என்னவாகும்?”
அவர் தடத்தைப் பார்த்தார். பின்னர் மகளைப் பார்த்தார். பதில் சொல்லவில்லை.
சிறிது நேரத்திற்குப் பிறகு எழுந்தார்.“வா, போகலாம். போக வேண்டிய இடம் தூரம் இருக்கிறது.” மெல்ல நடக்க ஆரம்பித்தார்.
பின்பொரு நாளில் தந்தை மகளிடம் கேட்டார்:
“அன்றொரு நாள் தாமரை தடாகத்தில் பார்த்த பாம்பு நினைவிருக்கிறதா?”
அவள் மணலில் அதன் வளைவை விரலால் வரைந்தாள்.
“அது இப்போது இங்கே இல்லையே. எப்படி வரைகிறாய்?”
“பார்த்தேனே.”
அவள் வரைந்த வளைவை அவர் பார்த்தார். அன்று மணலில் இருந்தது இப்போது அவளுக்குள் இருந்தது. ஆனால் அங்கே மணலும் இல்லை; பாம்பும் இல்லை.
“அது பெரிய பாம்பு,” என்றாள்.
“பாம்பைப் பார்த்தாயா?”
அவள் விரலை நிறுத்தினாள்.
“தடத்தைப் பார்த்தேன்.”
“அப்படியானால் பாம்பு பெரியது என்று எப்படித் தெரியும்?”
அவள் சிறிது நேரம் யோசித்தாள். பின்னர் வரைந்த தடத்தை இன்னும் நீட்டினாள்.
அவர் சிரித்தார். அன்று அவள் கண்டதும், கண்டதைக் கொண்டு அறிந்ததும், இப்போது நினைவிலிருந்து வரைந்ததும் ஒன்றாக இருக்கவில்லை. இருந்தும் அவை அவளுக்குள் ஒன்றையொன்று தொடர்ந்து வந்திருந்தன.
இரவில் அவள் தூக்கத்தில் சத்தமிட்டாள். தந்தை அருகே சென்றபோது கால்களை இழுத்துக்கொண்டாள்.
“பாம்பு,” என்றாள்.
அவர் விளக்கை உயர்த்தினார். தரையில் எதுவும் இல்லை. அவள் கண்களைத் திறந்ததும் தந்தையைப் பற்றிக்கொண்டாள். உடல் நடுங்கியது.
மறுநாள் அதைப் பற்றிக் கேட்டபோது, பாம்பு தன்னை நோக்கி வந்ததாகச் சொன்னாள்.
“அது கனவில் வந்தது” என்றார்.
“ஆனால் அது என் கனவல்லவா, கனவுக்கள் நிஜமென வந்தது” என மகள் குழம்பினாள்.
சில நாட்கள் கழித்து அவர் மீண்டும் கேட்டார். அவளுக்குக் கனவில் வந்த பாம்பு நினைவில்லை. ஆனால் அதை மறந்துவிட்டதாகச் சொல்ல முடிந்தது.
தந்தை தன் நண்பர்களிடம் இவற்றைப் பேசினார். அவர்களும் தங்கள் அனுபவங்களைச் சொன்னார்கள். எதிரே இருந்ததை அறிந்தது, இல்லாததை இருப்பதாகக் கொண்டது, கேட்ட சொல்லிலிருந்து ஒரு காட்சியை உருவாக்கியது, முன்பு அறிந்ததை மீண்டும் கொண்டுவந்தது என இவை அனைத்தும் ஒரே விதமாக நிகழவில்லை. தூக்கத்தையும் அவர்கள் உசாவலுக்குள் கொண்டுவந்தார்கள்.
இவற்றை அறியும் உடல் இருந்தது. ஒவ்வொன்றிலும் உடல் மாறியதும் தெரிந்தது. ஆனால் உடலின் மாற்றங்களை மட்டும் எண்ணினால், பாம்பு இல்லாத அறையில் எழுந்த அச்சத்தை முழுவதும் சொல்ல முடியவில்லை.
நூறாண்டு சென்று அறியப்பட்டவை இவ்வாறு தோன்றி மாறிய அகப்புலத்தை அவர்கள் சித்தம் என்றார்கள். அது ஒரு பொருளை ஏற்றும், நினைவை மீட்டும், இல்லாத ஒன்றிற்கு வடிவம் கொடுத்தும் மாறிய விதங்களை விருத்திகள் என்றார்கள்.
சித்தத்தின் இந்த அசைவுகளை விருத்திகள் என்று அழைத்த பிறகு, அவை நிகழும் விதங்களை மேலும் கவனித்தார்கள்.
அந்தச் சிறுமி வளர்ந்த பிறகும் தடாகத்திற்கு வந்துகொண்டிருந்தாள். தந்தையுடன் அமர்ந்த இடத்தில் இப்போது அவளிடம் கற்க வந்தவர்கள் அமர்ந்தார்கள்.
ஒரு மாலை அருகிலிருந்த புதரில் சலசலப்பு கேட்டது. இளைஞன் ஒருவன் திரும்பினான். ஒரு பறவை வெளியே வந்து வேறொரு புதருக்குள் சென்றது. அவன் அதையும் பார்த்தான். அங்கிருந்த பழங்கள் கண்ணில் பட்டன. சிறுவயதில் அவற்றைப் பறித்துத் தின்றது நினைவுக்கு வந்தது.
“எங்கே சென்றாய்?” என்று அவள் கேட்டாள்.
“இங்கேதான் இருக்கிறேன்.”
அவள் காத்திருந்தாள்.
“பறவையுடன் சென்றேன்,” என்றான். “பிறகு பழங்களுடன். பிறகு சிறுவயதிற்குச் சென்றுவிட்டேன்.”
“அவற்றைத் தொடர்ந்த விருத்திகளைப் பார்த்தாயா?”
“திரும்பி வந்த பிறகுதான்.”
மறுநாள் அதே புதரில் சலசலப்பு கேட்டது. அவன் கேட்டான். திரும்பிப் பார்க்க வேண்டும் என்ற விருத்தி எழுந்தது. அதை அவன் அறிந்தான். அப்போது கவனித்துக்கொண்டிருந்த தாமரை மொட்டிலிருந்து விலகிச் செல்ல வேண்டியிருக்கவில்லை. சலசலப்பு நின்றது. தடாகத்தின் மற்ற ஒலிகள் தொடர்ந்தன.
அதற்குப் பிறகும் பல நாட்கள் கவனம் விலகியது. மொட்டைப் பார்த்தபோது அது எப்போது மலரும் என்று நினைத்தான். மலர்ந்தால் எந்த நிறத்தில் இருக்கும் என்று நினைத்தான். ஒவ்வொரு விருத்தியையும் அறிந்தபோது மீண்டும் மொட்டைப் பார்த்தான்.
“இன்று எத்தனை முறை திரும்பினாய்?” என்று அவள் கேட்டாள்.
“எண்ணவில்லை.”
“முன்பு?”
“திரும்பிய ஒவ்வொரு முறையும் எண்ணிக்கொண்டிருந்தேன். அந்த எண்ணிக்கையையும் தொடர்ந்து சென்றுவிடுவேன்.”
அவன் மீண்டும் மொட்டைப் பார்த்தான்.
காலம் சென்றது. சில நாட்கள் கவனத்தை மீண்டும் கொண்டுவர வேண்டியிருந்தது. சில நாட்கள் அது மொட்டுடன் நீண்ட நேரம் தொடர்ந்தது. வேறொரு விருத்தி எழுந்து அவனை அழைத்துச் செல்லாத அந்த நேரங்களில், மொட்டின் இதழ்கள் சிறிது பிரிந்திருந்ததையும் அடிப்பகுதியில் நீர்த்துளி தங்கியிருந்ததையும் கண்டான்.
ஒரு நாள் காலையில் அவன் முன் மலர் இருந்தது. இதழ்களின் விளிம்பில் ஒளி இருந்தது. நடுவில் மஞ்சள் இருந்தது. நீரின் அசைவுடன் தண்டு அசைந்தது. “நான் மலரைப் பார்க்கிறேன்” என்று தனக்குச் சொல்லிக்கொண்டிருக்க வேண்டியிருக்கவில்லை.
அவள் வந்து அருகே அமர்ந்தாள்.
“என்ன பார்த்தாய்?” என்று கேட்டாள்.
“மலர்.”
“வேறென்ன?”
அவன் சிறிது நேரம் அமைதியாக இருந்தான். நீரில் ஒளி அசைந்தது. உடலில் மூச்சு வந்து சென்றது. மலரின் அசைவைப் பார்க்கும்போது தன் மூச்சை விட்டு விலக வேண்டியிருக்கவில்லை. மூச்சை உணரும்போது மலர் மறையவில்லை.
“இதில் நான் எங்கே இருக்கிறேன் என்று தெரியவில்லை,” என்றான்.
அவள் அவனைப் பார்த்தாள்.
“நீ இல்லையா?”
அவன் பதில் சொல்லவில்லை. தன் கையைப் பார்த்தான். முழங்காலில் அது தங்கியிருந்தது. விரல்களின் மேல் வெயில் பட்டிருந்தது. நீரும் மலரும் ஒளியும், அவற்றை உணரும் தானும் இருந்தார்கள். தன்னை மட்டும் தனியே நிறுத்திப் பார்க்க முடியவில்லை.
சொல்லற்ற நிலையில் அவன் நின்றிருக்கையில் “தன்னிலை அற்ற பெரும் சூன்யம்” என்றாள்.
அவன் மலரை நோக்கினான். அதன் உருவம் தெளிவாக இருந்தது. உருவோடு அருவோடு ஒரு பரரூபமாய் அனைத்தும் நிகழ்ந்துகொண்டிருந்தன. அசைந்த நீரும், மலர்ந்த பூவும், அசையாமல் அமர்ந்திருந்த உடலும் அந்த அழகிய ஆடலில் இருந்தன.
இத்தகைய அனுபவங்களைப் பலர் பகிர்ந்தார்கள். புலன் கொண்டுவந்த ஒன்றுடன் விருத்திகள் சென்ற வழியை அறிந்து மீளுதல்; கவனத்தைத் தேர்ந்த பொருளில் நிலைநிறுத்துதல்; அது இடையறாது தொடர்தல்; அறியப்படும் பொருளில் முழுமையாகத் தங்குதல் ஆகிய நான்கு இயல்புகள் காலப்போக்கில் தெளிவாயின.
விசோனில் இந்த உசாவலிலிருந்து வளர்ந்த பயிற்சிகளுக்கு முதலில் பல பெயர்கள் இருந்தன. உடலை நிலைபெறச் செய்தவர்கள் ஒரு பெயர் சொன்னார்கள். மூச்சில் தொடங்கியவர்கள் இன்னொரு பெயர் சொன்னார்கள். அகத்தை ஒருமுகப்படுத்தியவர்கள் வேறொரு பெயர் சொன்னார்கள்.
காலம் அவற்றில் சிலவற்றை ஒன்றோடொன்று சேர்த்தது. பிற்காலத்தில் அந்தப் பெரும் அகப்பயணம் ஒரு சொல்லுக்குள் வந்தது:
ஒருங்கிணைவு.
அதற்கும் பல தலைமுறைகளுக்குப் பிறகு, நூற்றாண்டுகளாக உடல், மூச்சு, பிராணன், புலன், மனம், சித்தம் ஆகியவற்றின் மீது நடந்த உசாவலை, அகத்திலிருந்து பிரபஞ்சம் வரை விரிந்த அதன் பயணத்தை, பேரறிஞனும் பெருங்கவியுமான ஒருவன் தொகுத்தான். வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு மனிதர்கள் பயின்றிருந்த பிறருடனான ஒழுக்கம், தன் வாழ்வின் ஒழுங்கு, உடலின் நிலை, மூச்சின் இயக்கம் என்ற நான்கையும், கவனத்தில் நிகழ்ந்த நான்கையும் அவன் எட்டு அங்கங்களாக ஒரே வழியில் இணைத்தான். பத்து இயக்கங்களும் தத்தம் வேலையைச் செய்து ஒரு நடையை உண்டாக்குவதுபோல, அந்த எட்டும் மனிதனின் முழு வாழ்வில் சேர்ந்து இயங்க வேண்டியவை என்று கண்டான். அனைத்தையும் சில சொற்களுக்குள் வைத்தான்:
சித்தத்தின் விருத்திகளை நிறுத்துதலே ஒருங்கிணைவு.
அந்தச் சொல் விசோனில் வாழ்ந்த பல குலங்களில், குடும்பங்களில், விசோனியர்களில் வாழ்வென நீண்டது.
Discover more from சொல்வனம் | இதழ் 376 | 11 அக் 2026
Subscribe to get the latest posts sent to your email.
