காலகாலம் – நெடுங்கதை – பகுதி 1

“தர்மஸேது பாலகம்”

— காலபைரவாஷ்டகம்

நச்சு அலைப்பரும் கடுந்துயர் நலிதர நடந்தாள்

நான் வீட்டைவிட்டு வெளியேறியபோது எங்கே போவது என்று முடிவு செய்திருக்கவில்லை, எங்கே போகிறேன் என்று அம்மா கேட்டிருந்தால் எனக்குத் தெரியாது என்றுதான் சொல்லியிருப்பேன், ஆனால் அப்படிச் சொன்னால் எங்கே போவது என்றுகூடத் தெரியாமல் வீட்டைவிட்டு வெளியேறுகிறாயா என்று கேட்டிருப்பாள், அதனால் அவள் கேட்பதற்கு முன்பே நான் வெளியேறிவிட்டேன், வீட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்பது மட்டும் எனக்குத் தெரிந்திருந்தது, அது போதாதா என்ன என எனக்குள் சொல்லிக் கொண்டிருக்கையில் பகல் சூரியன் அடிவானத்தில் இறங்கிக்கொண்டிருந்தது, விசோனின் மங்கலான இரவு சூரியன் மறுபுறம் மேலெழுந்துகொண்டிருந்தது, இரண்டு சூரியன்களின் வெளிச்சமும் சிறிது நேரம் நிலத்தின் மீது ஒன்றாகப் படிந்திருந்தது, ஒன்று மறைந்துகொண்டிருந்தது, இன்னொன்று தோன்றிக்கொண்டிருந்தது, ஆனால் எந்த வெளிச்சம் எதனுடையது என்று என்னால் பிரித்துச் சொல்ல முடியவில்லை, ஒருவேளை வெளிச்சங்களைப் பிரித்துச் சொல்ல வேண்டியதில்லை, பகல் முடிந்துவிட்டதா, இரவு தொடங்கிவிட்டதா என்பதும் அந்த நேரத்தில் யாருக்கும் தெரிந்திருக்காது, அது மட்டும் நல்லதாகத் தோன்றியது, எல்லாவற்றிற்கும் பெயர் சொல்லி அது சரி,தவறென முடிவு செய்வதில்தான் சண்டை அம்மாவுடன் தொடங்கியது, பிறகு அப்பா அதில் சேர்ந்துகொண்டார், அவர் எப்போது சேர்ந்தார் என்று எனக்குச் சரியாக நினைவில்லை, ஒருவேளை அவர் தொடக்கத்திலிருந்தே கேட்டுக்கொண்டிருந்திருக்கலாம்,  அவர்கள் இருவரும் எப்போதும் தங்களை என்னுடைய எதிர்ப்பக்கம் என்று நினைப்பதில்லை, என் நன்மைக்காகச் சொல்கிறோம் என்பார்கள், என் நன்மைக்காகச் சொல்வதெல்லாம் ஏன் எனக்கு எதிராகவே இருக்கிறது என்று நான் கேட்டால் அதற்கும் அவர்களிடம் ஒரு பதில் இருக்கையில் சண்டை அடுத்த வாரம் நண்பர்களுடன் வெளியே செல்வதைப் பற்றியதாக இருந்தது, பிறகு அது நான் வீட்டுக்குத் திரும்பும் நேரத்தைப் பற்றியதாக மாறியது, அங்கிருந்து நான் யாருடன் பழகுகிறேன் என்பதற்குச் சென்றது, அங்கிருந்து மதிப்பெண்கள், என்னுடைய அறை, காலையில் எழும் நேரம், பதில் சொல்லும் விதம் என்று நகர்ந்தது, நான் பேசினால் பேசும் விதம் தவறு, பேசாமல் இருந்தால் முகத்தை வைத்திருக்கும் விதம் தவறு, இன்று நடந்த சண்டைக்குள் கடந்த மூன்று ஆண்டுகள் வந்து சேர்ந்தன, நான் மறந்துவிட்டவற்றைக்கூட அவர்கள் மறக்கவில்லை, நான் செய்த ஒவ்வொரு தவறும் எங்கோ எழுதிவைக்கப்பட்டிருப்பதுபோலவும் தேவைப்படும்போது எடுத்துப் படிக்கப்படுவதுபோலவும் இருக்கையில் நான் கேள்வி மட்டுமே கேட்டேன், என்னுடைய வாழ்க்கையில் எனக்கு முடிவு செய்ய எதுவுமே இல்லையா என்று கேட்கையில் அம்மா நான் கோபத்தில் கேட்டதாக நினைத்திருப்பார்கள், ஒருவேளை நானும் கோபத்தில்தான் கேட்டிருக்கலாம், ஆனால் கேட்ட பிறகு அந்தக் கேள்வி என் உள்ளே தனியாக நின்றது, உண்மையாகவே எனக்கு முடிவு செய்ய எதுவும் இல்லையா, அல்லது என்ன முடிவு செய்வது என்று எனக்கே தெரியாததால் மற்றவர்கள் முடிவு செய்வதை நான் வெறுக்கிறேனா, எனக்குத் தெரியவில்லை,  பதினெட்டு வயதாகிவிட்டது என்று சொன்னால் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்பார்கள், பொறுப்பை மட்டும் என்னிடம் கொடுத்துவிடுவார்கள், முடிவெடுக்கும் நேரத்தில் நான் இன்னும் சிறுமி என்பார்கள், நான் சிறுமி என்றால் அந்தப் பொறுப்பும் அவர்களுடையதாக இருக்க வேண்டாமா, நான் பெரியவள் என்றால் முடிவும் என்னுடையதாக இருக்க வேண்டாமா, இரண்டில் ஒன்றை அவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும், ஆனால் தேர்ந்தெடுப்பது எப்போதும் அவர்கள்தான், அவர்கள் யார் யார், எல்லோருக்கும் தெரியும், ஆசிரியர்களுக்குத் தெரியும், அண்டை வீட்டாருக்குத் தெரியும், அம்மாவுக்கும் அப்பாவுக்கும் தெரியும், நான் என்ன படிக்க வேண்டும், யாருடன் பழக வேண்டும், எப்போது திரும்ப வேண்டும், எப்போது தூங்க வேண்டும், எப்போது எழ வேண்டும், எப்படிப் பேச வேண்டும் என்று எல்லோருக்கும் தெரியும், எனக்கு மட்டும் தெரியாது என்று அவர்கள் நினைக்கிறார்கள் என்பதை யோசிக்கையில் எல்லாமே விநோதமாக இருந்தது, அந்த விநோதம் கோபத்தைத் தணிக்கவில்லை, அதை இன்னும் அதிகப்படுத்தியது, நான் வேகமாக நடந்தேன், எங்கே போகிறேன் என்று தெரியாமல் நடந்தேன், பின்னால் வீடு இருந்தது, முன்னால் இரண்டு சூரியன்களின் வெளிச்சம் ஒன்றின்மேல் ஒன்று படிந்திருந்தது, எது மறைகிறது, எது எழுகிறது என்று என்னால் பிரித்தறிய முடியவில்லை, ஆனாலும் அதை நோக்கி நான் நடந்துகொண்டிருக்கையில் எவ்வளவு நேரம் நடந்தேன் என்று தெரியவில்லை,வீட்டிலிருந்து வெகுதூரம் வந்துவிட்டதாக நினைத்தபோதுதான் வழக்கமாகப் பேருந்து ஏறும் நிறுத்தத்தைக் கூட இன்னும் கடக்கவில்லை என்பதைக் கவனித்தேன், இவ்வளவு நேரம் நடந்தும் இவ்வளவு தூரந்தான் வந்திருக்கிறேனா என்று தோன்றியது, ஒருவேளை கோபத்தில் நடக்கும்போது தூரம் அதிகமாகத் தோன்றுகிறதோ என்று நினைத்துக்கொண்டிருக்கையில் பேருந்து ஒன்று வந்தது, அது எங்கே செல்கிறது என்று பார்க்கவில்லை, அதன் எண் என்னவென்றும் கவனிக்கவில்லை, கதவு திறந்ததும் ஏறிவிட்டேன், ஏறிய பிறகுதான் எங்கே போகிறது என்று தெரியாத பேருந்தில் ஏறியிருப்பதை உணர்ந்தேன், ஆனால் எங்கே போவது என்று தெரியாமல் வீட்டைவிட்டு வெளியேறியவளுக்கு எங்கே போகிறது என்று தெரியாமல் பேருந்தில் ஏறுவது பெரிய தவறாகத் தோன்றவில்லை, பேருந்தில் ஓட்டுநரைத் தவிர வேறு யாரும் இல்லை, அவர் வயதானவர் என்று முதலில் நினைத்தேன், பிறகு முன்னால் இருந்த கண்ணாடியில் தெரிந்த முகத்தைப் பார்த்தபோது அவர் வயதானவரா , இல்லையெனில் இரவு சூரியனின் மங்கலான வெளிச்சம் அவர் முகத்தை அப்படிக் காட்டுகிறதா என்று தெரியவில்லை, நான் பயண அட்டையை இயந்திரத்தில் தொட்டேன், அது ஒலி எழுப்பவில்லை, மறுபடியும் தொட்டேன், அப்போதும் ஒலி எழுப்பவில்லை, இயந்திரம் வேலை செய்யவில்லை என்று அவர் சாலையைப் பார்த்துக்கொண்டே சொன்னார், நான் அட்டையைப் பையில் வைத்துக்கொண்டு இந்தப் பேருந்து எங்கே போகிறது என்று கேட்டேன், நீ ஏறிய பிறகா அதைக் கேட்கிறாய் என்றார், அதை அவர் கேலியாகச் சொன்னாரா என்று தெரிந்துகொள்ள கண்ணாடியில் அவர் முகத்தைப் பார்த்தேன், அவர் சிரிக்கவில்லை, எங்கே போகிறது என்று சொல்லுங்கள் என்றேன், கடைசி நிறுத்தத்துக்கு என்றார், கடைசி நிறுத்தம் எது என்று கேட்டேன், அது யாருக்குக் கடைசி நிறுத்தம் என்பதைப் பொறுத்தது என்றார், அவர் என்னை விளையாட்டாக எடுத்துக்கொள்கிறார் என்று தோன்றியது, வீட்டில் எல்லோரும் நான் கேட்கும் கேள்விகளுக்குப் பதிலாக வேறு எதையாவது சொல்லிக்கொண்டிருந்தார்கள், இப்போதும் அதையே கேட்பதற்கு எனக்குப் பொறுமை இல்லை, இந்தப் பேருந்து செல்லும் இடத்தின் பெயர் என்ன என்று கேட்டேன், அவர் உமா என்றார், அவர் சொன்னது என் பெயர்தான் என்று எனக்குத் தெரிந்தது, ஆனால் நான் என் பெயரை அவரிடம் சொல்லவில்லை என்பதும் தெரிந்தது, ஒருவேளை பயண அட்டையில் என் பெயர் தெரிந்திருக்கலாம் என்று நினைத்தேன், உடனே இயந்திரம் வேலை செய்யவில்லை என்று அவரே சொன்னது நினைவுக்கு வந்தது, அவரிடம் எப்படித் தெரியும் என்று கேட்க நினைத்தேன், ஆனால் கேட்கவில்லை, சில கேள்விகளுக்குப் பதில் கிடைக்காதது பயம் தருமென்றால் சில கேள்விகளுக்குப் பதில் கிடைத்துவிடுவது அதை விட பயம் தருவதாக இருக்கலாம் என்று தோன்றியது, அதனால் அங்கே செல்ல எவ்வளவு நேரமாகும் என்று கேட்டேன், நான் உனக்கு ஒரு கதை சொல்லும் அளவு நேரம் என்றார், நான் எதுவும் சொல்லாமல் பின்னிருக்கையை நோக்கிச் செல்ல முயன்றபோது முன்பக்கம் அமரலாம் என்றார், ஏன் என்றேன், பேருந்தில் நாம் இருவர்தான் இருக்கிறோம், நீ பின்னால் அமர்ந்தால் நான் சத்தமாகப் பேச வேண்டியிருக்கும் என்றார், நீங்கள் ஏன் என்னிடம் பேச வேண்டும் என்றேன், பேச வேண்டியதில்லை என்றார், ஆனால் பேசாமல் இருந்தால் நீ உன்னிடமே பேசிக்கொண்டிருப்பாய், அதை இங்கிருந்து நான் கேட்க வேண்டியிருக்கும் என்றார், நான் சத்தமாக எதுவும் எனக்குள் பேசவில்லை என்று பொய் சொல்ல நினைத்தேன், ஆனால் பொய் சொல்ல சலிப்பாக இருந்தது, அதனால் முன்பக்க இருக்கையில் அமர்ந்து, நான் உங்களிடம் எதுவும் பேசப் போவதில்லை என்றேன், நீ பேச வேண்டியதில்லை என்றார், பிறகு என்றேன், நான்தானே கதை சொல்லப் போகிறேன் என சொன்னதும், முன் பின் தெரியாத ஆளிடம் எப்படிக் கதை சொல்வீர்கள் என்றேன், கதைதானே கேள் என்றார், எதைப் பற்றிய கதை என்று கேட்டேன், விசோனைப் பற்றிய கதை என்றார், இந்தக் கிரகத்தைப் பற்றியா என்றேன், இந்தக் கிரகத்தைப் பற்றியும் என்றார், வேறு எதைப் பற்றி என்றேன், உன்னைப் பற்றியும் என்றார், என்னைப் பற்றி உங்களுக்கு எதுவும் தெரியாது என்றேன், அது நல்லது என்றார், ஒருவரைப் பற்றி எல்லாம் தெரியும் என்று நினைப்பவர்கள் அவர்களுக்குக் கதைகள் சொல்ல முடியாது, அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று மட்டுமே சொல்ல முடியும் என்றார், அவர் வேண்டுமென்றே அப்படிச் சொன்னாரா, நான் வீட்டிலிருந்து வருவதைப் பார்த்தாரா, என் முகத்தில் ஏதாவது தெரிந்ததா என்று யோசித்தேன், அவர் சாலையை மட்டும் பார்த்துக்கொண்டிருந்தார், பேருந்து நகரத்தின் கடைசி வீடுகளைக் கடந்து சென்றுகொண்டிருந்தது, இரவு சூரியனின் வெளிச்சத்தில் மரங்களின் நிழல்கள் சாலையின் மீது நீண்டு கிடந்தன, பேருந்து செல்லச் செல்ல ஒவ்வொரு நிழலும் முன்பக்கக் கண்ணாடியில் தோன்றி எங்களைக் கடந்து பின்னால் மறைந்தது, கதை எவ்வளவு நீளம் என்று கேட்டேன், ஆயிரம் ஆண்டுகள் என்றார், நான் அடுத்த நிறுத்தத்தில் இறங்கிவிடுவேன் என்றேன், அப்படியானால் அடுத்த நிறுத்தம் வரும்வரை என்றார், ஆயிரம் ஆண்டுகளின் கதையை அதற்குள் எப்படிச் சொல்வீர்கள் என்று கேட்டேன், ஆயிரம் ஆண்டுகள் நீடித்ததைச் சொல்ல ஆயிரம் ஆண்டுகள் தேவையில்லை என்றார், சில கதைகள் ஒரு கணத்தில் தொடங்கி ஆயிரம் ஆண்டுகள் நடக்கின்றன, சில கதைகள் ஆயிரம் ஆண்டுகள் நடந்து சில கணத்தில்தான் சொல்லப்படுகின்றன என்றார், எனக்குக் கதை கேட்க விருப்பமில்லை என்றேன், அவர் தலையசைத்தார், அது கதைகளுக்கு ஒருபோதும் தடையாக இருந்ததில்லை என்றார், பேருந்து அடுத்த நிறுத்தத்தைத் தாண்டிவிட்டதா , இல்லையெனில் அங்கே நிறுத்தமே இல்லையா என்று கவனிப்பதற்குள் அவர் சொல்லத் தொடங்கினார், ஒரு காலத்தில் விசோனில் வாழ்ந்தவர்களுக்கு தாங்கள் வாழும் உலகம் எதனால் ஆனது என்று தெரியவில்லை என்றார், இப்போது தெரிந்துவிட்டதா என்று கேட்டேன், அவர் கண்ணாடியில் என்னைப் பார்த்தார், இல்லை என்றார், பிறகு கதையைத் தொடர்ந்தார், அவரது ஆழமான குரலை நானும் பின் தொடர்ந்தேன்.

விசோன் கிரகம் துவிபா விண்மீன் மண்டலத்தின் எந்தப் பகுதியில் இருந்தது என்பதைப் பற்றிய துல்லியமான வரைபடங்கள் மிகவும் பிற்காலத்தில்தான் வரையப்பட்டன. முதல் விசோனியர்களுக்கு அத்தகைய வரைபடங்கள் தேவையாகவும் இருக்கவில்லை. அவர்களுக்குத் தெரிந்த உலகம் பெரும் நதியையும், மழைக்காலங்களில் அது பிரிந்து உருவாக்கிய நீர்வழிகளையும், அவற்றுக்கு இடையில் விரிந்த வயல்களையும் கொண்டிருந்தது. நதியின் இரு கரைகளிலும் பல குலங்கள் கலந்து வாழ்ந்தன. ஒரே தெருவில் நான்கு குலங்களின் வீடுகள் இருந்தன; ஒரே படகில் மூன்று குலங்களைச் சேர்ந்தவர்கள் மீன் பிடித்தார்கள்; ஒரே வயலில் வேறு குலங்களைச் சேர்ந்தவர்கள் சேர்ந்து உழைத்தார்கள். ஆனால் யாருடன் உண்ணலாம், யாரை மணக்கலாம், இறந்தவரை யார் தொடலாம், திருமணத்தில் யார் முதலில் அமர வேண்டும் என்பவற்றில் அவர்களுக்கு மிகத் தெளிவான வேறுபாடுகள் இருந்தன.

நதிக்குக்கூட ஒரே பெயர் இல்லை.சில குலங்கள்  அதை சரஸ்வதி என்றது, இன்னொரு குலம் சரஸ்வதி இல்லை என்றது. படகுகளில் வாழ்ந்த சில குடும்பங்கள் அதற்குப் பெயரே வைத்திருக்கவில்லை; நதியைப் பற்றிப் பேசும்போது கையை நீட்டிக் காட்டினார்கள்.

அந்தக் காலத்தில் இரண்டு குடும்பங்களுக்கிடையே  மாடொன்றுக்காக ஏற்பட்ட சண்டையைப் பற்றிய கதை உண்டு. மாடு யாருடையது என்பது இரண்டு நாட்களில் தீர்ந்துவிட்டது. அதைத் தேடும்போது ஒருவர் மற்றவரின் தந்தையைப் பற்றிச் சொன்ன வார்த்தையைத் தீர்க்க பதினெட்டு ஆண்டுகள் பிடித்தது. அதற்குள் மாடு இறந்துவிட்டது; சண்டையைத் தொடங்கிய இருவரில் ஒருவரும் இறந்துவிட்டார். அவர்களின் மகன்கள் சமரசம் செய்துகொண்டபோது தங்கள் தந்தையர் முதலில் எதற்காகச் சண்டையிட்டார்கள் என்பது இருவருக்கும் சரியாகத் தெரியவில்லை. ஆனால் சமரசத்தின்போது மாட்டைப் பற்றிப் பேசாமல் இருப்பது மரியாதை என்று முடிவு செய்தார்கள்.

விசோனியர்கள் தங்களை குலங்களாகப் பிரித்துக்கொள்வதில் காட்டிய திறமையைத் துயரத்தைப் பிரித்துப் பார்ப்பதில் காட்டவில்லை. நோய் உடலுக்குள் வந்தது; அச்சம் காரணமே இல்லாமல் மனத்தைப் பற்றிக்கொண்டது; ஒருவன் இன்னொருவனைக் காயப்படுத்தினான்; காட்டிலிருந்து வந்த விலங்குகள் குழந்தைகளைத் தூக்கிச் சென்றன; சில ஆண்டுகளில் நதி வீடுகளை எடுத்துச் சென்றது; வேறு சில ஆண்டுகளில் நதியே வராமல் நிலம் வெடித்தது. இவற்றுடன் முட்டி மோதியதில் இவை எல்லாவற்றுக்கும் ஏதோ  வழி அவர்களிடம் இருந்தது. நோய்க்கு மூலிகை, காயத்திற்கு மருந்து, சண்டைக்கு நீதி, திருட்டுக்குத் தண்டனை, வெள்ளத்திற்கு மேடு, பசிக்குத் தானியம், இறப்புக்குச் சடங்கு, துக்கத்திற்கு உறவினர்கள் இருந்தார்கள்.

இந்த வழிகள் பெரும்பாலும் வேலை செய்தன. நோயுற்றவர்கள் குணமடைந்தார்கள். குற்றங்கள் தீர்க்கப்பட்டன. வெள்ளம் வடிந்தபின் வீடுகள் மீண்டும் கட்டப்பட்டன. இறந்தவர்களை அனுப்பிவிட்டு உயிரோடு இருந்தவர்கள் வயலுக்குத் திரும்பினார்கள். விசோனின் முதல் பெரிய கேள்வி, அவர்களிடம் தீர்வுகள் இல்லாததால் உருவாகவில்லை. தீர்வுகள் வேலை செய்த பிறகும் ஏதோ ஒன்று எஞ்சுவதை கவனிக்க அவர்களுக்குப் பல தலைமுறைகள் தேவைப்பட்டன.

அப்படி பலரில் ஹேமலேகாவும் ஒருவள். ஹேமலேகா பிறந்த காலத்தில் விசோனின் நதிக்கரையில் ஒருவன் எந்தக் குலத்தைச் சேர்ந்தவன் என்பதை அறிய அவனிடம் கேட்க வேண்டியதில்லை. அவன் வீட்டின் கூரை எப்படிக் கட்டப்பட்டிருக்கிறது, எந்த மாதத்தில் திருமணம் செய்கிறான், மீனை எந்தப் பக்கத்திலிருந்து வெட்டுகிறான், இறந்தவரின் உடலை வீட்டின் எந்த வாசல் வழியாக எடுத்துச் செல்கிறான் என்பவற்றில் ஏதாவது ஒன்று அதைச் சொல்லிவிடும். ஆனால் இந்த வேறுபாடுகள் அவர்களைத் தனித்தனி ஊர்களில் வைத்திருக்கவில்லை. ஒரே சந்தையில் அவர்கள் பொருட்களை விற்றார்கள்; ஒரே படகுகளில் நதியைக் கடந்தார்கள்; ஒருவருடைய வயலில் இன்னொருவர் வேலை செய்தார்கள்; மழை பொய்த்த ஆண்டுகளில் ஒரே வானத்தைப் பார்த்தார்கள். சண்டையிடுவதற்கும் அவர்கள் ஒருவருக்கொருவர் தேவைப்பட்டார்கள்.

ஹேமலேகாவின் குடும்பம் வேட்டையாடும் குலத்தைச் சேர்ந்தது. அதனால் அவர்கள் வேட்டையாடியே வாழ்ந்தார்கள் என்று பொருளில்லை. வீட்டுக்குப் பின்னால் இரண்டு சிறிய வயல்கள் இருந்தன; அவளுடைய தாய் நதிக்கரையில் வளரும் நாரிலிருந்து கயிறு திரித்தாள்; ஹேமலேகாவின் அண்ணன் படகுக்காரர்களுடன் மீன்பிடிக்கச் செல்வான். ஆனால் மழைக்காலம் முடிந்து காடு திறக்கும்போது ஹேமலேகாவின் தந்தை மற்ற ஆண்களுடன் வேட்டைக்குச் செல்வார். அவர் திரும்பும் நாட்களில் வீட்டின் முன் குழந்தைகள் கூடுவார்கள். மான் வந்தால் கொம்பை யார் பெறுவது, காட்டுப்பன்றி வந்தால் அதன் பல் யாருக்குக் கிடைப்பது என்பதில் குழந்தைகளுக்குள் பெரிய அரசியல் இருந்தது.

ஹேமலேகாவுக்கு இறைச்சியைவிட வேட்டைக்காரர்கள் திரும்பி வந்து சொன்ன கதைகளில்தான் ஆர்வம் அதிகம். காட்டுக்குள் பார்த்த விலங்குகளைப் பற்றிய கதைகளை அவள் கேட்டாள்; ஆனால் அவர்கள் சொல்லாமல் விட்டவற்றையும் கவனித்தாள். ஒருமுறை தந்தை புலியைப் பார்த்ததாகச் சொன்னார். மற்றவர்கள் அது மிகப் பெரியது என்றார்கள். அவன் மட்டும் அதன் அளவைப் பற்றிச் சொல்லவில்லை.

“எவ்வளவு பெரியது?” என்று ஹேமலேகா கேட்டாள்.

“பெரியதுதான்.”

“எவ்வளவு?”

தந்தை கையை உயர்த்திக் காட்ட முயன்றுவிட்டு நிறுத்தினார்.

“பயந்தால் அளவு சரியாகத் தெரியாது,” என்றார்.

அந்தப் பதில் ஹேமலேகாவுக்குப் பிடித்திருந்தது. அதற்குப் பிறகு பயந்த மனிதர்கள் சொல்லும் அளவுகளை அவள் முழுமையாக நம்புவதில்லை. வியந்த மனிதர்கள் சொல்வது பிடித்து இருந்தது.

அவளிடம் இப்படிப்பட்ட சிறிய பழக்கம் ஒன்று இருந்தது. மற்றவர்கள் எளிதாகக் கடந்து செல்லும் இடத்தில் சில நேரங்களில் அவள் நின்றுவிடுவாள். இரண்டு பெண்கள் ஒரே செய்தியைக் கேட்டு ஒருவர் சிரிப்பதும் மற்றவர் கோபப்படுவதும் அவளுக்கு வியப்பாக இருக்கும். ஒரே நதிநீர் காலை குளிராகவும் மாலையில் வெதுவெதுப்பாகவும் இருப்பதைத் தொட்டுப் பார்ப்பாள். தூங்கிக்கொண்டிருக்கும் தம்பியின் கண்கள் மூடியிருந்தும் உள்ளே ஏதோ பார்த்துக்கொண்டிருப்பதைப் போல அசைவதை நீண்ட நேரம் கவனித்திருக்கிறாள்.

யாரும் அவளை அறிவாளி என்று கருதவில்லை. அவளும் தன்னை அப்படிக் கருதவில்லை. வேலை சொல்லப்பட்டால் சில நேரங்களில் மறந்துவிடுவாள். அவளுடைய தாய் இரண்டு முறை அழைத்த பிறகுதான் பதில் சொல்வாள். ஹேமலேகா திடீர்திடீரெனத் தேவையில்லாதஇடங்களில் கொஞ்சம் அதிக நேரம் நிற்கிறாள் என்பதுதான் அவளைப் பற்றிய புகாராக இருந்தது.

அவளுக்குப் பன்னிரண்டு வயதான தினத்தின் காலையில் அவளுடைய தந்தை நான்கு ஆண்களுடன் காட்டுக்குச் சென்றிருந்தான். மாலை அவர்கள் திரும்பி வருவதை முதலில் பார்த்தது ஹேமலேகாதான். வழக்கம்போல் குழந்தைகளை அழைக்க அவள் எழுந்தாள். பிறகு நின்றுவிட்டாள்.

காட்டுக்குச் சென்ற ஐந்து பேரில் நான்கு பேர் நடந்துவந்தார்கள்.

ஐந்தாவது மனிதனை அவர்கள் சுமந்து வந்தார்கள்.

ஹேமலேகா முதலில் அவன் முகத்தைப் பார்க்கவில்லை. தொங்கிக்கொண்டிருந்த வலது கையைத்தான் பார்த்தாள். அந்தக் கையை அவளுக்கு நன்றாகத் தெரியும். காலையில் கிளம்பும்போது அதே கை அவளுடைய தலையில் இரண்டு முறை தட்டியிருந்தது.

அவர்கள் அவரை வீட்டின் முன் இறக்கினார்கள். காட்டுப்பன்றியின் கொம்பு தொடைக்குக் கீழே ஆழமாக இறங்கியிருந்தது. காயத்தின் மீது கட்டப்பட்ட துணி கருஞ்சிவப்பாக இருந்தது. ஹேமலேகாவின் தாய் அவன் பெயரை ஒருமுறை கூப்பிட்டாள். பிறகு கூப்பிடவில்லை.

யாரோ ஹேமலேகாவை பின்னால் இழுக்க முயன்றார்கள். அவள் கையை விலக்கிவிட்டு தந்தையின் அருகே அமர்ந்தாள்.

அவன் கையைத் தொட்டாள்.

அது இன்னும் வெதுவெதுப்பாக இருந்தது.

“இறந்துவிட்டாரா?” என்று கேட்டாள்.

“ஆம்,” என்றார் அருகிலிருந்த முதியவர்.

ஹேமலேகா மீண்டும் கையைத் தொட்டாள்.

“ஆனால் இன்னும் சூடாக இருக்கிறதே.”

முதியவர் அவளைப் பார்த்தார். அவள் தலையை ஆறுதலாக தொட்டார்.

ஹேமலேகா மீண்டும் கேட்கவில்லை.

அவள் அந்தக் கையின் அருகே உட்கார்ந்திருந்தாள்.

ஹேமலேகாவுக்கு முன்பே விசோனியர்கள் இறந்தவர்களுக்குப் பாதை அமைக்கத் தொடங்கியிருந்தார்கள். அது எப்போது தொடங்கியது என்று யாருக்கும் தெரியாது. பிற்காலத்தில் தோண்டப்பட்ட மிகப் பழைய கல்லறைகளில் இறந்தவர்களின் கால்கள் எல்லாம் ஏறக்குறைய ஒரே திசையை நோக்கியிருந்தன. அந்தத் திசையில் அப்போது என்ன இருந்தது என்று யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. நதி அதற்குள் பலமுறை தன் வழியை மாற்றியிருந்தது.

ஹேமலேகாவின் காலத்தில் ஒருவர் இறந்தால் அவரை வீட்டிலிருந்து எடுத்துச் செல்லும் முன் கதவை முழுவதுமாகத் திறந்து வைப்பார்கள். உயிரோடு இருப்பவர்கள் வெளியே செல்ல பாதிக் கதவு போதும்போது இறந்தவருக்கு ஏன் முழுக் கதவு வேண்டும் என்று  குழந்தை கேட்டதாக பழைய கதை உண்டு.

“அவனுக்கு வழி தெரியாது,” என்றாள் பாட்டி.

“நமக்குத் தெரியுமா?”

பாட்டி சிறிது நேரம் யோசித்தாள்.

“நமக்குத் திரும்பி வரத் தெரியும்.”

அதற்கு மேல் அவள் சொல்லவில்லை.

இறந்தவரை எடுத்துச் செல்லும்போது குடும்பத்தில் மிகவும் வயதானவர் அவனுக்கு முன் இறந்தவர்களின் பெயர்களைச் சொல்வார். தந்தை, தாய், அவர்களின் பெற்றோர் என்று நினைவில் இருப்பவர்கள் வரை பெயர்கள் செல்லும். அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் புதிதாக இறந்தவன் முற்றிலும் தெரியாத இடத்திற்குச் செல்கிறான் என்று நினைப்பதைவிட, அவனுக்கு முன் சென்றவர்களின் பெயர்களைச் சொல்வது நல்லது என்று விசோனியர்கள் எப்போதோ கண்டுபிடித்திருந்தார்கள்.

சில குடும்பங்களில் ஏழு தலைமுறைகளின் பெயர்கள் இருந்தன. சிலவற்றில் மூன்றாவது பெயரிலேயே அமைதி வந்துவிடும். ஆரம்பத்தில் அந்த அமைதி அவமானமாக இருந்தது. முன்னோர்களின் பெயரை மறந்த குடும்பத்தை மற்றவர்கள் கேலி செய்தார்கள்.

இறப்பில் பெயர்களைச் சொல்லிச் சடங்கு செய்துக் கொண்டிருந்த முதியவர் மூன்றாவது தலைமுறையில் நின்றுவிட்டார். எவ்வளவு முயன்றும் அடுத்த பெயர் நினைவில் வரவில்லை. இறந்தவன் நெருப்பின் அருகே கிடந்தான். சுற்றியிருந்தவர்கள் காத்திருந்தார்கள்.

கூட்டத்திலிருந்த பெயர் மறக்கப்பட்டவரின் நெருங்கிய சொந்தம் ஒன்று, “பெயர் மறந்ததால் எங்களவர் இல்லாமல் போய்விட்டாரா?” என்று கேட்டது.

யாரும் பதில் சொல்லவில்லை. சங்கடம் பரவியது.

முதியவர் சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு, “என் மூதாதைகளே, எங்கள் நினைவில் பெயர் கொண்டு நிலைத்தவர்களே, பெயரின்றி நிற்பவர்களே, முன்வந்து இவனை ஏற்றுக்கொள்ளுங்கள்” என்றார்.

சிலர் சிரித்தார்கள். சிலர் அது முறையல்ல என்றார்கள்.

அடுத்த இறப்பிலும் முதியவர் அதையே சொன்னார். அவருக்குப் பிறகு வேறொருவர் சொன்னார். இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பிறகு அது சடங்கின் பகுதியாகிவிட்டது.

ஹேமலேகா பல ஆண்டுகள் அந்த வரிகள்  திருப்தியை கொடுத்தன என இருந்தாள்.

பிறகு பல ஆண்டுகளில் அந்த வரியை யார் முதலில் சொன்னார் என மறந்தார்கள். அவ்வரி தங்கியது.  மூன்று குலங்கள் பின்னர் அதற்கு உரிமை கோரின. அந்த மூன்று குலங்களிலும் அந்த வரி தோன்றிய காலத்தைச் சேர்ந்த பதிவுகள் எதுவும் இல்லை.

பல ஆண்டுகளுக்குப் பிறகு ஹேமலேகாவின் முதல் மகன் இறந்தபோது அதே வரி சொல்லப்பட்டது.

இந்த முறை அவள் சிரிக்கவில்லை.

மகனுடைய பெயர் ஒருநாள் யாருக்கும் தெரியாமல் போகும் என்று நெருப்பின் அருகே அமர்ந்திருந்தபோது அவள் நினைத்தாள். அந்த எண்ணம் தன்னை அச்சப்படுத்தும் என்று எதிர்பார்த்தாள். ஆனால் அச்சம் வரவில்லை. அவனுடைய பெயர் மறைந்த பிறகும் பெயரற்றவர்களுக்காக விடப்பட்ட அந்தச் சிறிய இடத்துக்குள் அவன் இருப்பான் என்று அவளுக்குத் தோன்றியது.

அது அவளுடைய துயரத்தை நீக்கவில்லை.

ஆனால் துயரம் முழுவதும் அவளுக்குள் மட்டும் இருக்கிறது என்ற உணர்வை மாற்றியது.

சில மாதங்களில் ஹேமலேகா மீண்டும் வயலுக்குச் சென்றாள். விதை போட்டாள், தண்ணீர் எடுத்தாள், மற்ற பெண்களுடன் பேசினாள். துயரம் போய்விட்டதாக அவள் நினைக்கவில்லை. அதைத் தன்னுடன் வைத்துக்கொண்டு வாழ முடியும் என்று மட்டும் அறிந்தாள்.

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அவளுடைய இரண்டாவது மகனும் அதே காய்ச்சலில் இறந்தான்.

மீண்டும் கதவு முழுவதுமாகத் திறக்கப்பட்டது. மீண்டும் முன்னோர்களின் பெயர்கள் சொல்லப்பட்டன. மீண்டும் பெயர் மறைந்தவர்கள் அழைக்கப்பட்டார்கள். மீண்டும் நெருப்பு மூட்டப்பட்டது. எல்லாமே முதல் முறையைப் போல முறையாக நடந்தது. சடங்கு தவறவில்லை; உறவினர்கள் தவறவில்லை; ஹேமலேகாவும் எதையும் மறுக்கவில்லை.

அவர்கள் சென்ற சில நாட்களுக்குப் பிறகு அவள் தன் அக்காவிடம் சொன்னாள்:

“முதல் முறை இவை உதவின.”

“இப்போதும் உதவும்.”

“உதவுகின்றன.”

அக்கா அவளைப் பார்த்தாள். “பிறகு?” என முணுமுணுத்தாள்.

ஹேமலேகாவால் பதில் சொல்ல முடியவில்லை.

எல்லாமே சரியாக நடந்திருந்தது.

அதுதான் அவளைத் தொந்தரவு செய்தது.

அந்த ஆண்டு நதி குறைவாக ஓடியது. மாலையொன்றில் தண்ணீர் எடுத்துக்கொண்டு திரும்பும்போது ஹேமலேகாவின் குடங்களில் ஒன்று கீழே விழுந்து உடைந்தது. அருகே சென்ற மனிதன், “வீட்டில் இன்னொரு குடம் இருக்கிறதே,” என்றான்.

“இருக்கிறது.”

“அப்படியென்றால் ஏன் இதைப் பார்த்துக்கொண்டு நிற்கிறாய்?”

அதற்கும் ஹேமலேகாவால் பதில் சொல்ல முடியவில்லை.

உடைந்த துண்டுகளை வீட்டுக்கு எடுத்துச் சென்றாள். பல ஆண்டுகள் அவை பின்புறம் கிடந்தன. அவளுடைய பேத்தி ஒருநாள் அவற்றைக் கண்டுபிடித்தாள்.

“இவற்றால் என்ன பயன்?”

“ஒன்றுமில்லை.”

“அப்படியென்றால் ஏன் வைத்திருக்கிறாய்?”

“தெரியவில்லை.”

பேத்தி அவற்றைத் தூக்கி எறிந்தாள்.

ஹேமலேகா தடுக்கவில்லை.

ஹேமலேகாவிடம் சில கேள்விகள் எஞ்சியிருந்தன.அவள் அதை யாரிடமும் முறையாகச் சொல்லவில்லை; அவளுக்கே அதைச் சொற்களாகத் திரட்ட முடிந்திருக்கவில்லை. ஆனால் சில கேள்விகள் சொற்களால் அல்ல, மனிதர்களின் நடத்தையால் அடுத்தவர்களுக்குச் செல்கின்றன. 

ஹேமலேகா இறந்த பிறகு அவளுடைய பெயரும் மெதுவாக மறைந்தது. அவள் எந்தக் குலத்தைச் சேர்ந்தவள் என்பதைப் பற்றி மூன்று மரபுகள் மூன்று விதமாகச் சொன்னன. அவள் பிறந்த இடத்தைப் பற்றியும் உடன்பாடு இல்லை. அவளுடைய மகன்களின் பெயர்கள் அதற்கு முன்பே மறைந்திருந்தன.

ஆனால் அவள் வாழ்ந்த காலத்தில் எழுந்த கவனம் மறையவில்லை.

அதே நூற்றாண்டுகளில் வேறு மனிதர்களும் தங்களுக்குள் சிறிய விஷயங்களைக் கவனித்துக்கொண்டிருந்தார்கள். வடக்கே வலை பின்னிய ஒருவன் தன் தந்தைக்கு கோபம் வருவதற்கு முன் மூச்சு மாறுவதைக் கண்டான். முதலில் கோபம் மூச்சிலிருந்து வருகிறது என்று நினைத்தான். பின்னர் மூச்சு அமைதியாக இருந்தும் கோபம் வருவதைக் கண்டான். கோபமும் மூச்சும் இரண்டு வேறு விஷயங்கள் என்பதைக் காட்டிலும், இரண்டையும் தன்னால் கவனிக்க முடிகிறது என்பதுதான் அவனை அதிகமாகத் தொந்தரவு செய்தது.

முதியவள் ஒருத்தி தன் கணவன் இறந்து இருபது ஆண்டுகளுக்குப் பிறகும் அவனுடைய முகத்தை நினைவில் பார்க்க முடிந்தது; ஆனால் நேற்று சந்தித்த மனிதனுடைய முகத்தை மறந்துவிட்டாள். வேட்டைக்காரனொருவன் விலங்கைத் தாக்குவதற்கு கணமொன்றுக்கு முன்பே தன் உடல் முடிவெடுத்துவிடுகிறது, தான் அதை அறிந்துகொள்வது பின்னர்தான் என்று சொன்னான். இறந்தவர்களின் அருகே இரவு முழுவதும் விழித்திருந்த பெண்கள் தூக்கமின்மை மனத்தை எவ்வாறு மாற்றுகிறது என்பதை அறிந்திருந்தார்கள்.

இவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்று யாரும் நினைக்கவில்லை. வீட்டிலொன்றில் கவனிக்கப்பட்டது இன்னொரு வீட்டில் பழக்கமானது; பழக்கம் காரணம் மறந்த பிறகும் தொடர்ந்தது; சில கவனிப்புகள் முற்றிலும் மறைந்தன, சில இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பிறகு வேறு இடத்தில் மீண்டும் தோன்றின.

காலம் இவற்றை எடுத்துச் செல்லவில்லை. மனிதர்களின் வழியாக எடுத்துச் சென்றது. பாலங்களை உருவாக்கி இவற்றை மானுடத்துடன் இணைக்கும் முதல் அசைவை செய்தது.

வெளியுலகமும் விசோனின் பார்வையை திருத்திக்கொண்டிருந்தது. ஒரே நிறத்தில் இருந்த இரண்டு கற்களில் ஒன்று நெருப்பில் வெடித்தது, மற்றொன்று வெடிக்கவில்லை. ஒரே மாதிரி இலைகளில் ஒன்று காய்ச்சலைக் குறைத்தது; இன்னொன்று நோயாளியைக் கொன்றது.

 குயவனொருவன் ஒருநாள் தன் மகளிடம் இரண்டு கை மண்ணைக் கொடுத்தான்.

“இரண்டும் மண்ணா?”

“ஆம்.”

“இரண்டிலும் ஒரே குடம் செய்.”

ஒன்றில் குடம் வந்தது. மற்றொன்று சக்கரத்திலேயே சரிந்தது.

மறுநாள் தந்தை மீண்டும் கேட்டான்:

“இரண்டும் மண்ணா?”

மகள் கோபத்துடன், “இரண்டும் மண். ஆனால் ஒரே மண் இல்லை,” என்றாள்.

குயவன் சிரித்தான்.

“ஏன் சிரிக்கிறாய்?”

“நேற்று என்னை நம்பினாய். இன்று மண்ணை நம்புகிறாய்.”

உள்ளே பார்த்தவர்கள் வேறுபாடுகளைக் கண்டார்கள். வெளியே பார்த்தவர்களும் வேறுபாடுகளைக் கண்டார்கள். அவற்றை ஒன்றாக வைத்துப் பார்க்கத் தொடங்கியபோது விசோனில் ஒரு புதிய பழக்கம் ஏற்பட்டது: புரியாத ஒன்றை மேலும் பிரித்துப் பார்ப்பது.

உடல் என்றால் என்ன? பார்த்தல் என்பது கண்ணா, அல்லது கண் கொண்டுவருவதை அறிதலா? இறந்தவனுக்கும் கண்கள் இருக்கும்போது அவன் ஏன் பார்க்கவில்லை? பார்த்ததை ஒன்றாகச் சேர்ப்பது எது? நேற்று பார்த்ததை இன்று கொண்டுவருவது எது? நினைவை “என் நினைவு” என்று சொல்வது எது? ஒரு எண்ணம் தவறு என்று இன்னொரு எண்ணம் முடிவெடுப்பது எப்படி? இவை அனைத்தும் மாறிக்கொண்டிருக்கும்போது அந்த மாற்றத்தை அறிந்துகொண்டிருப்பதும் அவற்றில் ஒன்றுதானா?

பதில்களைவிடப் பட்டியல்கள் வேகமாகப் பெருகின.

முதல் பட்டியல்களில் ஒன்று இருப்பை முப்பத்தி இரண்டு கூறுகளாக எண்ணியது:

உடல், உயிர், மூச்சு, மனம், நினைவு, அறிவு, நான், கண், செவி, மூக்கு, நாக்கு, தோல், கை, கால், வாக்கு, பசி, உறக்கம், கனவு, ஆசை, அச்சம், இன்பம், துன்பம், பிறப்பு, இறப்பு, ஆண், பெண், மொழி, குலம், முன்னோர், நிலம், வானம், தொழில்.

அதை உருவாக்கியவர்களுக்கு அது முழுமையான பட்டியலாகவே தோன்றியது. தாங்கள் அறிந்த வாழ்க்கையில் முக்கியமான எதையும் விட்டுவிடவில்லை என்று நினைத்தார்கள்.

இன்னொரு மரபு பதினெட்டு கூறுகளை எண்ணியது. மற்றொன்று நாற்பத்தாறு. பட்டியல்கள் ஒன்றுடன் ஒன்று ஒத்துப்போகவில்லை. ஆனால் அவற்றைத் திருத்தியது பெரும்பாலும் வாதங்கள் அல்ல; அவற்றுக்குள் அடங்க மறுத்த மனிதர்கள்தான்.

மொழியை அடிப்படைக் கூறாக வைத்திருந்தவர்களிடம் பிறவியிலிருந்தே பேச முடியாத பெண் ஒருத்தி வந்தாள். அவள் எந்தக் கூறுக்குள் வருகிறாள் என்று மூன்று நாட்கள் வாதிட்டார்கள். அவர்களுடைய வாதத்தைக் கவனித்துக்கொண்டிருந்த அவள் கடைசியில் சைகையால் ஒரு கேள்வி கேட்டாள்.

அதை மொழிபெயர்த்த சிறுவன் சொன்னான்:

“நான் பேசவில்லை என்பதால் உங்கள் எண்ணிக்கைக்கு வெளியே இருக்கிறேனா, அல்லது உங்கள் எண்ணிக்கை தவறா?”

அடுத்த தலைமுறையின் பட்டியலில் மொழி இல்லை.

பார்வையை உயிரின் அடிப்படைக் கூறாக வைத்திருந்த இன்னொரு மரபிடம் பிறவியிலிருந்தே பார்க்க முடியாத ஒருவன் வந்தான். அவன் பார்க்கவில்லை; ஆனால் வாழ்ந்தான், நினைத்தான், அறிந்தான், கனவு கண்டான், தன்னை ‘நான்’ என்றான். அடுத்த பட்டியலில் பார்வை தனியான அடிப்படைக் கூறாக இருக்கவில்லை.

வேறொரு மரபு முன்னோர்களின் பெயர்களைச் சொல்லும் தங்கள் நினைவுச் சடங்கை உயிரின் அடிப்படை இயல்புகளில் ஒன்றாக வைத்திருந்தது. முன்னோர்களின் பெயர்களையே சொல்லாத மக்களிடம் சென்றபோது அவர்களும் பிறந்து, வாழ்ந்து, இறந்து, தங்கள் இறந்தவர்களை நினைவுகூர்வதைக் கண்டார்கள். சடங்கு மறையவில்லை; ஆனால் இருப்பின் பட்டியலிலிருந்து அது நீங்கியது.

ஆண், பெண் என்பவற்றையும் சிலர் தனித்த கூறுகளாக வைத்திருந்தார்கள். இருவருக்கும் பொதுவாக இயங்குவது எது என்று தேடத் தொடங்கியபோது அவையும் பின்னால் நின்றன.

பட்டியல்கள் குறைந்தன, பெருகின, ஒன்றையொன்று மறுத்தன. ஒவ்வொரு தவறும் தங்களுக்குப் பழக்கமான ஒன்றைப் பிரபஞ்சத்திற்கே அடிப்படையானது என்று எண்ணியிருந்த இடத்தை வெளிப்படுத்தியது.

தங்களுக்கே உரியவற்றை நீக்க நீக்க, எல்லாவற்றுக்கும் உரிய ஒன்றை நோக்கி அவர்கள் நகர்ந்தார்கள்.

இந்த வேலைக்கு பல நூற்றாண்டுகள் பிடித்தது.

அந்தக் காலத்தில் நதியொழுக்கின் வேகத்தில் அடித்துச் செல்லப்பட்ட விசோனியன் ஒருவன் நதியின் கீழ்ப்பகுதியிலும் மக்கள் வாழ்வதைக் கண்டறிந்தான். அவர்கள் உண்ட உணவு வேறு. அணிந்த உடை வேறு. வீடுகளின் வடிவம் வேறு. மொழி வேறு. அவர்கள் சமைத்த உணவின் வாசனையை விசோனியர்கள் பல ஆண்டுகள் கேலி செய்தார்கள்.

சில தலைமுறைகளுக்குப் பிறகு உயிர்களைப் பட்டியலிட்டுப் பார்க்கும் மரபைச் சேர்ந்த முதியவர் ஒருவர் அவர்களுடன் சில மாதங்கள் வாழ்ந்துவிட்டுத் திரும்பினார். அவரைச் சுற்றி அமர்ந்தவர்கள் கீழ்ப்பகுதி மக்களின் உடல், உணவு, திருமணம், மொழி என்று ஒவ்வொன்றாகக் கேட்டார்கள்.

இளைஞன் ஒருவன் கேலியாகக் கேட்டான்:

“அவர்களுக்கு எத்தனை கூறுகள்?”

முதியவர் தங்களுக்குச் சொல்லும் அதே எண்ணைச் சொன்னார்.

சிரிப்பு எழுந்தது.

அது அடங்கியதும் இன்னொருவன் கேட்டான்:

“அவர்கள் நம்மைப் போன்றவர்கள் அல்லவே?”

“பல விஷயங்களில் அல்ல,” என்றார் முதியவர்.

“அப்படியென்றால் எண்ணிக்கை மட்டும் எப்படி ஒன்றாக இருக்கிறது?”

முதியவர் சிறிது நேரம் யோசித்தார்.

“நீ எண்ணுவது அவர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதையா, அவர்கள் வாழ்வதற்கு அடியில் என்ன இருக்கிறது என்பதையா?”

அந்தப் பதில் அப்போது பெரிதாகத் தோன்றவில்லை. ஆனால் அதன் பிறகு விசோனின் பட்டியல்களில் குலம், மொழி, பிறந்த இடம் போன்றவை வேகமாக மறையத் தொடங்கின.

முதலில் அவர்கள் விசோனியனை எண்ணியிருந்தார்கள்.

பின்னர் மனிதனை எண்ண முயன்றார்கள்.

மேலும் பல உயிர்களைக் கவனித்தபோது தாங்கள் தேடுவது மனிதனையும்விடப் பெரிய ஒன்று என்று மெல்லப் புரிந்தது.

அப்போது அவர்களுடைய கேள்வியே மாறியது:

உயிரொன்றுக்கு உலகம் தோன்றுவதற்கு என்னென்ன வேண்டும்?

உடல் உலகின் பொருட்களால் ஆனது. புலன்கள் உலகைத் தொட்டன. ஆனால் ஒவ்வொரு புலனையும் தனித்த உயிராக எண்ண முடியவில்லை. அவை கொண்டுவந்தவற்றை ஏதோ ஒன்று சேர்த்தது. நேற்று கண்டதை இன்று கொண்டுவந்தது வேறொன்று. அனுபவத்தை “எனக்கு நிகழ்ந்தது” என்று பற்றிக்கொண்டது ஒன்று. ஒன்றை இன்னொன்றிலிருந்து வேறுபடுத்தி முடிவெடுத்தது ஒன்று.

இவ்வாறு அவர்கள் வாழ்க்கையின் நிகழ்வுகளை எண்ணுவதிலிருந்து, அந்த நிகழ்வுகள் தோன்றுவதற்குத் தேவையான அடிப்படைக் கூறுகளை எண்ணத் தொடங்கினார்கள்.

பசி இருந்தது; ஆனால் பசியே தனியான அடிப்படைதானா?

கனவு இருந்தது; ஆனால் கனவைக் காணச் செய்வது எது?

அச்சம் இருந்தது; ஆனால் அச்சம் தோன்றி மறைகிறதே,அப்படியானால் அது இருப்பின் அடிப்படையா, அல்லது வேறொன்றின் நிலைமாற்றமா?

பட்டியல் இனி பொருட்களின் பெயர்களைச் சேகரிக்கும் வேலை அல்ல. ஒன்றை நீக்கினால் அனுபவமே சாத்தியமில்லாமல் போகுமா என்று கேட்கும் முறையாக மாறியது.

அந்த முறையிலும் ஒரு சிக்கல் எஞ்சியது.

உடல் மாறியது. புலன்கள் மாறின. நினைவுகள் தோன்றி மறைந்தன. மனம் ஒரு கணத்திலிருந்து இன்னொரு கணத்திற்கு மாறியது. “நான்” என்று பற்றிக்கொண்டவையும் மாறின. வேறுபடுத்தி முடிவெடுத்த அறிவுகூட இன்று ஒன்றைச் சரி என்று சொல்லி நாளை அதைத் தவறு என்றது.

இவை அனைத்தும் மாறின.

ஆனால் மாறுகின்றன என்று அவற்றை அறிந்துகொண்டிருப்பது எது? அந்தக் கேள்வி மட்டும் ஒவ்வொரு பட்டியலின் விளிம்பிலும் மீண்டும் வந்து நின்றது.

இந்த நீண்ட காலத்தின் முடிவில் பழைய பட்டியல்கள், உடலைப் பற்றிய கவனிப்புகள், மனத்தைப் பற்றிய அனுபவங்கள், பிற மக்களிடமிருந்து கற்ற திருத்தங்கள், தலைமுறைகள் செய்த நீக்கங்கள் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்துத் தொகுத்த சிலர் தோன்றினார்கள்.

அவர்களின் இயற்பெயர்கள் மறைந்துவிட்டன. ஒரே காலத்தில் வாழ்ந்த ஒரு குழுவா, பல தலைமுறைகளில் தோன்றிய பலரா என்பதும் தெரியவில்லை.

பிற்கால விசோனியர்கள் அவர்களை ஒரு பொதுப்பெயரால் அழைத்தார்கள்: கபிலர்கள்.

கபிலர்கள் புதிய உலகத்தை அறிவித்ததாக எந்தப் பழைய பதிவும் சொல்லவில்லை. அவர்கள் பிறப்பதற்கு முன்பே விசோன் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் பார்த்திருந்தது, தவறாகப் பார்த்திருந்தது, திருத்தியிருந்தது, அடிப்படைக் கூறுகளை பட்டியலிட்டு எண்ணியிருந்தது. அவர்கள் செய்தது அந்த நீண்ட கவனிப்பின் சாராம்சமாக வடிவமொன்றை கண்டு அதைத் தொகுத்ததுதான்.

கபிலர்களின் மானுடத்தின் கூறென தொகுத்த இருபத்தி ஐந்து கூறுகளில் குலம் இல்லை. ஆண், பெண் இல்லை. மொழி இல்லை. வடகரை, தென்கரை இல்லை. அரசன், அடிமை இல்லை. விசோனியன் என்ற பெயர்கூட இல்லை.

கபிலர்களின் பார்வையில் இருப்பின் அடிப்படைகள் இருபத்தைந்து தத்துவங்களாக வகுக்கப்படுகின்றன: புருஷன், பிரகிருதி, மகத் அல்லது புத்தி, அகங்காரம், மனம், செவி, தோல், கண், நாக்கு, மூக்கு, வாக்கு, கை, கால், பாயுரு, உபஸ்தம், சப்தம், ஸ்பரிசம், ரூபம், ரசம், கந்தம், ஆகாசம், வாயு, அக்னி, அப்பு, பிருதிவி ஆகியவையே அந்த இருபத்தைந்து தத்துவங்கள்.

வெளிப்படாத நிலையிலிருந்து வெளிப்பட்ட உலகம் வரை, பொருள், புலன், மனம், “நான்”, வேறுபடுத்தும் அறிவு என்று அவர்கள் உயிரின் அடிப்படை கூறுகளை முன் வைத்தார்கள். இவை அனைத்தும் மாறிக்கொண்டிருப்பதை அவர்கள் ஒருபுறம் வைத்தார்கள்; அவற்றின் மாற்றங்களை அறிந்துகொண்டிருப்பதை வேறு இடத்தில் வைத்தார்கள்.

விசோனின் மிகத் தனிப்பட்ட அனுபவமும் அதன் மிகப் பெரிய உலகமும் முதல்முறையாக ஒரே எண்ணிக்கைக்குள் வந்தன.

அந்தக் காலத்தைப் பற்றிய பழைய கதை உண்டு. குலத் தலைவதொருவர் கபிலர்களில் ஒருவரிடம் வந்து கேட்டார்: “என் பேரனுக்கும் கீழ்க்கரையில் மீன் கழிவுகளைச் சேகரிப்பவனுக்கும் கூறுகள் பொதுவென சொல்கிறாயா?”

“இல்லை,” என்றார்.

தலைவர் நிம்மதியடைந்தார்.

“உங்கள் பேரனின் வாழ்க்கையையும், மீன் கழிவுகளைச் சேகரிப்பவனின் வாழ்க்கையையும் உங்கள் கண்ணில் பார்த்தால் எண்ண முடியாத அளவுக்கு வேறுபாடுகள் இருக்கின்றன.”

தலைவர் சிரித்தார்.

“ஆம்,” என்றார் எண்ணுபவர். “ஆனால் பிரபஞ்சத்தின் பார்வையில் இருவரையும் எண்ணும்போது, எண்ணிக்கையும் ஒன்றுதான்; வடிவமும் ஒன்றுதான்.”

தலைவர் சிரிப்பதை நிறுத்தினார்.

அந்த கபிலர்களின் பட்டியலில் உள்ள கூறுகள் குலங்களை அழிக்கவில்லை. மக்கள் தங்கள் மொழிகளை மறக்கவில்லை; உணவு, உடை, சடங்கு, தொழில், உறவு, அதிகாரம் ஆகியவற்றில் இருந்த வேறுபாடுகளும் மறையவில்லை. ஒரு குலம் இன்னொரு குலத்தை வெறுப்பதும் நின்றுவிடவில்லை. ஆனால் அந்த வெறுப்புக்கு எதிராக ஒரு நூல் அளவு பார்வை மாற்றம் நுழைந்திருந்தது. எதிரே நிற்பவன் தன்னைவிட வேறுபட்டவன் என்று சொல்ல நூறு காரணங்கள் இருந்தன. அவன் முற்றிலும் வேறு வகையான உயிர் என்று சொல்ல கபிலர்களின் எண்ணித் தொகுக்கும் முறையில் இடமில்லை. உயிரென்பது 25 தத்துவமாகவே இருந்தது.

வேறுபாடுகள் உண்மையாக இருந்தன. ஆனால் அவற்றைத் தாங்கிய வடிவம் பொதுவாக இருந்தது.

கபிலர்களின் காலம் முடிந்து சில தலைமுறைகளுக்குப் பிறகு சிறுமி தன் ஆசிரியரிடம் கேட்டாள்:

“இந்த எண்ணிக்கை முறை யாருடையது?”

“என்ன சொல்கிறாய்?”

“கபிலர்களுடையதா?”

“அவர்கள் தொகுத்தார்கள்.”

“அப்படியென்றால் விசோனுடையதா?”

ஆசிரியர் அவளைப் பார்த்தார்.

“விசோன் நாளை இல்லாமல் போனால்?”

சிறுமி அதைப் பற்றி இதுவரை யோசித்ததில்லை. “அப்போதும் இந்த எண்ணிக்கை இருக்குமா?”

ஆசிரியர் சிரித்தார்.  “விசோன் மட்டும்தான் பிரபஞ்சமா என்ன? வேறொரு உலகில் வேறொரு கபிலன் இருப்பான் அல்லவா?”

சிறுமி சிறிது நேரம் யோசித்தாள். தயங்கினாள்.  “வேறொரு பிரபஞ்சத்தில்?”

ஆசிரியர் அவளைப் பார்த்தார். “உண்மை ஒரே ஒரு பிரபஞ்சத்துக்குச் சொந்தமானதா? எங்கிருந்தாலும் அதைக் காண கண் திறக்கலாம் அல்லவா?”

“அப்படியென்றால் கபிலர்கள் இல்லாவிட்டாலும் அது இருக்குமா?”

“அவர்கள் கண்டார்கள். உருவாக்கவில்லை.”

“ம்..அப்படியெனில் எனக்கும் காணமுடியுமா?”

ஆசிரியர் “காலம் பதில் சொல்லும்” என்றார்.

“காலம் பேசுமா?” சிறுமி வியப்படைந்தாள்

“நீயும்,நானும் பேசுகின்றோம் அல்லவா?”

அவர்கள் அமைதியானார்கள். சூரியன் மெல்லத் தாழ்ந்து நதியின் மீது ஒளி நீண்டது. சிறுமி அதைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

ஹேமலேகா இறந்து அப்போது ஏறக்குறைய அறுநூறு ஆண்டுகள் கடந்திருந்தன. அவளுடைய வீடு இல்லை. அவளுடைய மகன்களின் பெயர்கள் இல்லை. அவளுடைய பேத்தி தூக்கி எறிந்த குடத்தின் துண்டுகள் மண்ணோடு கலந்து, அந்த மண்ணிலிருந்து எத்தனை புதிய குடங்கள் செய்யப்பட்டன என்று யாருக்கும் தெரியாது. ஹேமலேகாவை நினைவில் வைத்திருந்த ஒரு மனிதன்கூட விசோனில் இல்லை.

இருந்தும் கபிலர்களின் பட்டியல்கள் உருவாக்கிய கூறுகளில் அவள் மிக எளிதாக வந்துவிட்டாள்.

அவளுடைய உடல், புலன்கள், நினைவு, மனம், மகன்களை “என் மகன்கள்” என்று பற்றிய அகம், இழப்பை வேறுபடுத்தி அறிந்த அறிவு, இவை அனைத்தும் மாறியபோதும் அவற்றை அனுபவித்த ஒன்று, எதற்கும் ஹேமலேகாவின் குலத்தின் பெயர் தேவையாக இருக்கவில்லை.

அவளுடைய துயரத்தைத் தீர்க்க விசோனிடம் அன்றும் பல வழிகள் இருந்தன. வைத்தியர்கள் நோயைக் குணப்படுத்தினார்கள். உறவினர்கள் துக்கத்தில் உட்கார்ந்தார்கள். நீதிபதிகள் அநீதிக்குத் தீர்ப்பு சொன்னார்கள். முன்னோர் சென்ற வழியில் இறந்தவர்களை அனுப்ப சடங்குகள் இருந்தன. நெருப்பு தன்னிடம் கொடுக்கப்பட்டதை எடுத்துச் சென்றது.

இவை தேவையற்றவை என்று கபிலர்கள் சொல்லவில்லை.

அவர்கள் கவனித்தது இன்னும் சிறிய ஒன்று.

உடலிலிருந்தும் மனத்திலிருந்தும் துயரம் வந்தது. பிற மனிதர்களிடமிருந்தும் உயிர்களிடமிருந்தும் வந்தது. மனிதனின் கைகளுக்கு எட்டாத உலகத்திலிருந்தும் வந்தது. அவற்றை எதிர்கொள்ளத் தெரிந்த வழிகள் இருந்தன.

ஆனால் அவை எல்லா நேரங்களிலும் வேலை செய்யவில்லை.

வேலை செய்தபோதும் எல்லாவற்றையும் முடித்துவிடவில்லை.

அந்தக் கேள்வியை ஒருவன் காலையில் திடீரென கண்டுபிடிக்கவில்லை. அதைத் தெளிவாகக் கேட்பதற்கே நாகரிகம் பல நூற்றாண்டுகள் வாழ வேண்டியிருந்தது. எண்ணற்ற மனிதர்களின் நோய்கள், மரணங்கள், குணமாதல்கள், சடங்குகள், தவறுகள், கவனிப்புகள், திருத்தங்கள் வழியாக வந்ததை கபிலர்கள் சில சொற்களுக்குள் தொகுத்தார்கள்.

மூவகைத் துயரால் மூழ்கும் உயிர்க்குப் புலன்வழி கண்ட நெறிகளே போதுமென்பார்;
கண்டவை நிலையா, காலம் கடக்கும் மெய்நெறி தேடுவோம் என முழங்கி துவங்கினர்.

ஹேமலேகாவின் துயரம் அவளுடையதாகவே இருந்தது. அவளுக்குப் பதிலாகப் பிரபஞ்சம் துயரப்படவில்லை. அவளுக்குப் பதிலாக வேறு எந்தத் தாயும் தன் மகன்களை இழக்கவில்லை. முதல் பார்வை அவளுடைய தனித்துயரத்தைப் பொதுவான ஒன்றாகக் கரைத்து அழிக்கவும் இல்லை.

அது வேறொன்றைக் கண்டது.

ஹேமலேகாவின் துயரம் எவ்வளவு தனிப்பட்டதாக இருந்தாலும், அதை உருவாக்கிய உடல், புலன், நினைவு, மனம், அகம், அறிவு ஆகியவை அவளுக்காக மட்டும் உருவாக்கப்பட்டவை அல்ல. குலம் மாறினாலும் அவை இருந்தன. மொழி மாறினாலும் இருந்தன. நாடு மாறினாலும் இருந்தன. விசோனுக்கு வெளியே உயிர் இருந்தால் அங்கேயும் இந்த எண்ணிக்கை எவ்வளவு தூரம் செல்லும் என்ற கேள்வி திறந்தே இருந்தது.

ஒருவன் தன்னிடமிருந்து தொடங்கி தன்னை ஆக்கும் கூறுகளை எண்ணிக்கொண்டே செல்ல முடிந்தது. உடல், புலன்கள், மனம், நினைவு, அகம், அறிவு என்று சென்றபோது அவனுடைய குலம் எங்கோ பின்னால் நின்றுவிடும். மொழியும் பின்னால் நின்றுவிடும். பிறந்த இடமும் பின்னால் நின்றுவிடும். எண்ணிக்கை மட்டும் தொடர்ந்து செல்லும்.

தனிமனிதனுக்குள் தொடங்கிய அந்த எண்ணிக்கை கொண்ட கூறுமுறை, இறுதியில் அவனைத் தாங்கிய பிரபஞ்சத்தின் அமைப்புக்குள் சென்று நின்றது.

விசோனியர்கள் அதை எண்ணி அறியும் பார்வை என்று அழைத்தார்கள். 

(வளரும்)


Discover more from சொல்வனம் | இதழ் 375 | 27 செப் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.