அகம் திறத்தல்

நூல்: அகமும் புறமும்
ஆசிரியர்: கமலதேவி
பதிப்பகம்: வாசகசாலை

நீரின் மூலக்கூறுகளை படிப்பதும் அதன் பரவும் நீர்மைத் தன்மையை புரிந்து கொள்வதும், மழையில் நனைந்து உணர்ந்து கொள்வதும்  வெவ்வேறானவை. போலவே, கவிதைகளை வாசிப்பதும் புரிந்துகொள்வதும் வேறு. அதை உணர்ந்து கொள்வது வேறு. அதுவும் சங்கக் கவிதைகளை உரை பார்த்து உத்தேசமாகவே பலருக்கு புரிகிறது. அவற்றை உணர்ந்து கொள்ள வாழ்க்கை தருணங்கள் அமைய வேண்டும். 

   2000- இன் தொடக்கத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் ஆனந்தவிகடனில் “சங்கச் சித்திரங்கள்” என்ற தொடர் எழுதினார். அதில் சங்கக் கவிதைகள் தன் வாழ்வில் திறந்து கொண்ட தருணங்களை விவரித்திருப்பார். என் இளவயதில் பெரும் புனைவுகள் தந்த மனவெழுச்சியைவிட கூடுதலான உவகையை எனக்கு அந்நூல் அளித்தது. 

   இருபது ஆண்டுகளுக்குப் பிறகு எழுத்தாளர் கமலதேவி “அகமும் புறமும்” என்ற தொடரை வாசகசாலை இணைய இதழில் எழுதினார். வடிவம் எழுத்தாளர் ஜெயமோகனின் சங்கச் சித்திரங்கள் நூலை ஒத்தது. ஆனால், வாழ்வியல் தருணங்கள் பிரத்யேகமாக கமலதேவிக்கு அமைந்தவை. 

     தொடராக வந்தபோது அவ்வப்போது வாசித்து, எழும் உவகையை சிலரிடம் பகிர்ந்துவிட்டு அடுத்ததை வாசிக்கச் சென்றுவிடுவதே வழக்கம். வாசகசாலை பதிப்பகம் மூலம் நூலாக வந்தபின் வாங்கினாலும் ஏற்கனவே தொடராக வாசித்ததுதானே என்று அப்படியே வைத்துவிட்டேன். இப்போது கண்ணில் பட்டதும் எடுத்து ஒரே நேரத்தில் முழுதாக வாசித்தேன். ஒவ்வொரு துளி தேன் நாவில் படுவதற்கும் இரண்டு தேக்கரண்டி முழுதாக சுவைப்பதற்கும் பெரும் வேறுபாடுண்டு என்பதை உணர்ந்தேன். 

   அகமும் புறமும் என்ற தலைப்பு கமலதேவியின் வாழ்க்கை தருணங்களை பொருள் கொள்ளச் செய்த பத்து அகப்பாடல்களையும் பத்து  புறப்பாடல்களையும் விவரிப்பது என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால், கமலதேவி தன் அகத்தையும் புறத்தையும் அக்கவிதைகளின் வழியே திறந்து வைத்துள்ளார் என்றே கூறவேண்டும். 

     “பொய்க்காத அருள்”, “போர்க்களத்தின் பூ”, “காதலெனும் ஒளி” போன்ற  தலைப்புகளே பல்வேறு உணர்வுகளை எழுப்புகின்றன. முதல் தலைப்பு “மொட்டவிழும் கணம்”. கபிலரின் அகநானூறு பாடல்.  பல்வேறு சிறப்புகள் கொண்ட தலைவனை பலரும் காண்கிறார்கள். ஆனால், தலையணையில் முகம் புதைத்து விழி நீரை மறைக்கும் வண்ணம் தலைவி மட்டுமே பாதிப்படைகிறாள். 

   இக்கவிதைக்கான கமலதேவியின் வாழ்க்கைத் தருணம் அழகான புதுக்கவிதை போலுள்ளது. அனைவருக்கும் நல்ல நண்பனாக உள்ளவனை, இவருடைய ஒரு தோழி மட்டும் “He bothers me” என்று   சொல்வதை எவராலும் புரிந்து கொள்ளமுடியாது என்பதே உண்மை. ஏனெனில் யாரோ ஒருவர் மட்டும் உள்ளுக்குள் உணர்வதல்லவா அது.

   பல சிறுகதைத் தருணங்களை, சில நாவலுக்கான கருக்களை தன் அனுபவமாகக் காட்டிச் செல்கிறார் கமலதேவி. “அற்றைத் திங்கள் அவ் வெண்ணிலவின்…” என்ற பாரி மகளிரின் பாடலுக்கு விளக்கமாக தன் பூர்வீக கதையைக் கூறுகிறார். இலங்கையிலிருந்து மொத்தமாகக் கிளம்பும்போது ஒரு கைப்பிடி மண்ணை எடுத்துக் கொண்டு கிளம்புகிறார்கள் இவரது கொள்ளுப் பாட்டியும் தாத்தாவும். இரண்டு தலைமுறைகளுக்குப்பின் இவர் கையில் அம்மண் கிடைக்கிறது. இவர் அதை என்ன செய்கிறார் என்பதைக் கூறுகிறார். இதை  கமலதேவியின் இனிமையான சொற்களில் ஒரு நாவலாக விரித்து எழுதினால் மிகச் சிறப்பான ஒன்றாக அமையும் என்றே தோன்றுகிறது. ஆனால், ஒரு சங்க கவிதை திறந்து கொண்ட தருணத்திற்கு முழு வரலாறையும் கூறுகிறார். 

   வேட்டைச் சாறு என்ற தலைப்பில் “ஏற்றுக உலையே ஆக்குக சோறே..” என்ற கவிதையைப் பற்றி எழுதியுள்ளார்.  இரவில் நடக்கும் வழிபாட்டு நிகழ்விற்கு அப்பாவுடன் சென்று பார்த்த அனுபவத்தை காட்டுகிறார் . சேர்ந்து உண்ணுதல் என்பது மரபில் எப்படி உள்ளதென்றும் அதனை ஏன் பெரியவர்கள் வலியுறுத்துகிறார்கள் என்பதையும் விவரிக்கிறார்.

   “யான் வாழும் நாளும் பண்ணன் வாழிய..” என்ற கிள்ளி வளவனின் பாடலுக்கு பசித்திருத்தல் என்று தலைப்பிட்டிருக்கிறார். தன் இளம் பிராயத்திலிருந்து உடனிருந்த எப்போதும் பசித்திருக்கும் இவரின் தோழி தேவியைப் பற்றி விவரிக்கிறார்.  பசியோடிருக்கும் பிள்ளைகள்தான் உணவை கவனமாக சிறிதும் வீணாக்காமல் உண்பார்கள். காரணம், அவர்களுக்குத்தான் அதன் இன்றியமையாமை புரியும். ஒரே தட்டில் உண்டு ஒன்றாக திரிந்து இரட்டையர் போல இரண்டு தேவிகளும் வாழ்ந்த கதை அத்தனை அழகு. அத்தோழியின் கதை கண்ணீர் வரவழைப்பது. 

   கமலதேவிக்கு விதவிதமான தோழிகள் இருந்திருக்கிறார்கள். அவர்கள் அத்தனை பேரும் இவரிடம் பிரியமாக இருந்திருக்கிறார்கள் என்பதை வாசிக்கும்போது சற்று பொறாமையாக உள்ளது. இத்தனை உள்ளார்ந்த நட்புகளை பெறுவதென்பது நல்லூழ் அல்லவா. 

    “நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று..” என்ற புகழ் பெற்ற கவிதையைப் பற்றிய கட்டுரைக்கு அரிதினும் அரிதே எனத் தலைப்பிட்டிருக்கிறார். தலைவன்மேல் தான் கொண்டிருக்கும் காதல் எத்தனை உயர்வானது எத்தனை ஆழமானது எனக் கூறும் இக்கவிதை சற்று  எளிதாக புரியக்கூடிய ஒன்றுதான். ஆனால் உணர்ந்து கொள்வது அத்தனை எளிதானதில்லை. 

    கமலதேவி இக்கவிதைக்கு இரு காதல்களின் கதையை முன் வைக்கிறார். அந்தப் பெண் ஆணின் மேல் கொண்ட காதல் பெரிதா அல்லது அந்த ஆண் பெண்ணின் மேல் ஆழமானதா என்பதை யாராலும் கூறிவிட முடியாது. எப்படியோ  துயரமாக முடிய வேண்டிய கதை இனிமையாக முடிவதில் ஒரு நிறைவு தோன்றுகிறது. இந்த மாந்தர்களின் வாழ்வை விரித்து நாவலாக எழுதலாம் என்பது என் எண்ணம். கமலதேவி பரிசீலிக்கலாம். 

   கமலதேவி தேர்ந்தெடுத்துள்ள பெரும்பாலான கவிதைகள் அதிகம் வெளித் தெரியாதவை. இவருடைய வாழ்க்கைத் தருணங்களை பிரதிபலிக்கும் அல்லது ஒத்திருக்கும் கவிதைகளையே தேர்ந்தெடுத்துள்ளார். இது,  சங்கக் கவிதைகள் மீதான இவரது பரந்த மற்றும் ஆழ்ந்த வாசிப்பை காட்டுகிறது. இவரது சிறுகதைகளின் மொழிநடையில் வெளிப்படும் கவிதைத் தன்மை இந்த ஆழ்ந்த உள்ளார்ந்த வாசிப்பினாலேயே சாத்தியமாகியுள்ளது என நம்புகிறேன். 

   இந்நூலின் பல இடங்களில் தன் குணாம்சத்தை எந்தவித தயக்கமுமின்றி இயல்பாகக் கூறிச் செல்கிறார் கமதேவி. தான் ஒரு அவசரக் குடுக்கை, சாப்பாடு வைத்தபின் இலையை இழுத்து கிழிப்பவள், சரியாக முடிவு எடுக்கத் தெரியாதவள் என்பதை பொதுவில் சொல்வதற்கு தைரியம் வேண்டும். ஆம், நான் அப்படித்தான் இதை வெளியே  சொல்வதில் என்ன தவறு. அந்த போதாமைகளுடன்தான் இவ்வளவு எழுதுகிறேன் வாசிக்கிறேன் என்று சமூகத்திற்கு காட்டுவதாகவும் கொள்ளலாம்.

   ஒட்டு மொத்தமாக, அகமும் புறமும் என்ற நூல் இருபது சங்க அக மற்றும் புறத்திணை கவிதைகளை அறிமுகப்படுத்துவதோடு எழுத்தாளர் கமலதேவியின் அகத்தையும் புறத்தையும் வாசகர்களுக்கு காட்டுகிறது. சங்கக் கவிதைகளை விவரிக்க பல நூல்கள் உள்ளன. ஆனால், எழுத்தாளரின் வாழ்க்கைச் சூழலை, அவருடன் பயணிக்கும் நபர்களை, அவர் தனது பிரச்சனைகளை எதிர் கொள்ளும் விதத்தை அறிவதற்கு வேறு நூல்கள் இல்லை. புனைவிலோ, கட்டுரைகளிலோ அவரது அகம் மற்றும் புறத்தின் சாயலோ சாரமோ வெளிப்படுமேயன்றி உள்ளது உள்ளபடி வெளிப்படாது.   

      சங்கக் கவிதைகளை வாழ்க்கைத் தருணங்களோடு அறிமுகப்படுத்துவதோடு எழுத்தாளர் கமலதேவியின் வாழ்க்கையையும் காட்டும் “அகமும் புறமும்” நூல் ஒரு முக்கியமான நூலாகும்.


Discover more from சொல்வனம் | இதழ் 377 | 25 அக் 2026

Subscribe to get the latest posts sent to your email.

மறுமொழி இடவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.