மாறாத வேர்கள் நகரும் பாதைகள்

காந்தியின் கிராமியக் கனவும் சமகால உண்மையும்

“இந்திய கிராமங்கள் மிகவும் பழமையானவை. நிலம் சமூகத்தின் பொதுச்சொத்தாக இருக்கிறது. விவசாயமும், கைத்தொழில்களும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருக்கிறது. அதேபோல், வேலைப் பிரிவினைகள் மாற்ற முடியாத வகையில் பண்பாட்டுநெறிப்படி கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. இந்தியாவின் சமுக அமைப்பைப் புரிந்து கொள்ள வேண்டுமாயின் அதன் கிராம அமைப்பைப் புரிந்து கொள்வது இன்றியமையாதது” 

 இது ஜெர்மானிய மெய்யியலாளர் கார்ல் மார்க்ஸ் கூறியவை. இந்தியர் மட்டுமன்றி அயல்நாட்டவரும் இந்தியாவை சரியாக புரிந்துகொள்ள வேண்டுமெனில், அதன் கிராமங்களைத் தான் முதலில் தெரிந்துகொள்ள வேண்டியிருந்தது. இந்திய கிராமங்களின் பயணம் என்பது நவீன நகரங்களின் இரைச்சலில் இருந்து விடுபட்டு, மண்ணின் மணம், பாரம்பரிய கலாச்சாரம், மற்றும் இயற்கையான அமைதியை நோக்கிச் செல்லும் ஒரு முடிவில்லாத ஆன்மீக மற்றும் மனநிறைவு தரும் அனுபவமாகவே இருந்தது. இது இந்தியாவின் உண்மையான ஆன்மாவைக் கண்டறியும் ஒரு அழகிய வழியாகும். இந்தியாவின் முகவரியை அதன் கிராமங்களே தாங்கி நின்றன. இந்தியப் பண்பாட்டு வாழ்வியல் நெறியை அதன் கிராமங்களே வெளிப்படுத்தின. இந்திய சமுகத்தின் உயிர்நாடியாக கிராமங்களே இருந்து வந்தன. இந்தியக் கிராமங்கள் தன்னிறைவு பெற்றவைகளாக – சின்னஞ்சிறு  குடியரசுகளாக–மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையும் உள்ளடக்கியவைகளாக – அந்நியர்களின் உதவியின்றியே தன்னிச்சையாகச் செயல்படும் இயல்புடையதாக இருந்தன.’ இந்திய கிராமங்களின் தனித்தியக்கம்  மற்றும் தன்னிறைவு பற்றிய கருத்தினை  முதன்முதலில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில், அப்போதைய இந்திய கவர்னர் ஜெனரலாக(1835-36) இருந்த சர் சார்லஸ் மெட்காஃப் பதிவு செய்தார். தனது குறிப்பில் அவர்  எழுதினார்: கிராம சமூகங்கள் சிறிய குடியரசுகள் போன்று செயல்படுகின்றன; தங்களுக்குத் தேவையான அனைத்தையும் அவைகள் தங்களுக்குள்ளேயே கொண்டிருக்கின்றன.  எந்தவொரு வெளி சக்திகளின் தலையீடுமின்றி ஏறக்குறைய சுதந்திரமாக செயல்படுகின்றன. வேறு எதுவும் நிலைக்காத இடங்களில் எல்லாம் அவை நிலைத்திருப்பதாகத் தெரிகிறது. வம்சத்திற்குப் பின் வம்சம் வீழ்கிறது; புரட்சிக்குப் பின் புரட்சி தொடர்கிறது… ஆனால், இந்திய கிராம சமூகம் அப்படியே இருக்கிறது“. (Andrew Pereira, ‘Little Republics’, Times of India, June 6, 2016)

விடுதலை இயக்கத்தின்போது இந்தியாவின் எதிர்காலமாகவே கிராமங்கள் உற்றுநோக்கப்பட்டன. தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பிய பிறகு, காந்தி தனது நேரடி அனுபவங்களிலிருந்து கிராமங்கள் குறித்த தனது கருத்துக்களை மேம்படுத்தி வந்தார். “கிராமங்கள் அழிந்தால், இந்தியாவும் அழிந்துவிடும்; இனி அது இந்தியாவாக இருக்காது; உலகில் அதன்  சொந்த உயரிய நோக்கமும் தொலைந்து போகும்” (Harijan, 29-8-1936; CWMG, 63:241) என்று அவர் எண்ணினார். “நாம் ஒரு கிராமிய நாகரிகத்தின் வாரிசுகள். நமது நாட்டின் பரந்த நிலப்பரப்பு, மக்கள்தொகை பெருக்கம், நில அமைப்பு மற்றும் காலநிலை ஆகியவை, என் கருத்துப்படி, அதனை ஒரு கிராமிய நாகரிகமாகவே ஆக்கியுள்ளன. அதன் குறைபாடுகள் நன்கு அறியப்பட்டவையே, ஆனால் அவற்றுள் ஒன்றுகூட சரிசெய்ய முடியாதது அல்ல. நாம் ஏதேனும் கடுமையான வழிகளில் மக்கள்தொகையை முந்நூறு மில்லியனிலிருந்து மூன்றாக அல்லது முப்பது மில்லியனாகக் குறைக்கத் தயாராக இருந்தாலன்றி, அதனை வேரோடு பிடுங்கி எறிந்துவிட்டு அதற்குப் பதிலாக ஒரு நகர நாகரிகத்தை நிறுவுவது எனக்கு இயலாத காரியமாகத் தோன்றுகிறது. எனவே, நாம் தற்போதைய கிராமிய நாகரிகத்தைத் தொடர வேண்டும் மற்றும் அதன் ஒப்புக்கொள்ளப்பட்ட குறைபாடுகளை நீக்க முயற்சி செய்ய வேண்டும்’ என்று காந்தி எண்ணினார். (Young India, 9-11-’29, p.364) தன்னிறைவு பெற்ற கிராமங்களே நீதி, சமத்துவம் மற்றும் அகிம்சைநெறியிலான ஒரு ஒழுங்கிற்கு, உறுதியான அடித்தளமாக அமையும் என்று அவர் நம்பினார். அவரைப் பொறுத்தவரை, கிராமங்களைப் புனரமைப்பதன் மூலமே தேசத்தை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என்ற எண்ணம் இருந்தது. சம்பாரன் (1917), வார்தா (1938) போன்ற கிராமங்களில் பொருளாதாரத் தன்னிறைவு, சமூக சமத்துவம் மற்றும் பரவலாக்கப்பட்ட அரசியல் நிர்வாக முறை ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு விரிவான ஆக்கப்பூர்வமான பணித் திட்டத்தை அவர் வகுத்தார். 

ஆனால், காந்தியின் எதிர்பார்ப்பிற்கு மாறாக, விடுதலைக்குப் பின் கிராமங்கள் தமது சொந்த முகவரியை- சுய இயல்பை-தனித்தன்மையை படிப்படியாக இழந்து, புற வளர்ச்சி என்ற போர்வைக்குள் தங்களை சிறைபடுத்திக் கொண்டுள்ளன. எளிமைக்கும் அமைதிக்கும் இலக்கணமாய் இருந்த  கிராமங்கள், இன்று தமது அடையாளத்தை இழந்து, பல்வேறு சிரமங்கள்- சிக்கல்கள்-பிரச்சனைகளில் சிக்கித் தவித்து விழி பிதுங்கி தீர்வு தேடி அல்லாடிக் கொண்டிருக்கின்றன. காந்தி, பெருநகரங்களை உடல் நோய்களுடன் ஒப்பிட்டு, அவற்றை “அரசியல் உடலின் மீதான கொப்புளங்கள்” அல்லது “சீழ் கட்டிகள்” என்று அழைத்ததன் மூலம் நகரமயமாக்கலை பிரபலமாக விமர்சித்தார். நவீன நகரங்களின் விரைவான விரிவாக்கத்தை அவர் ஒரு அபாயகரமான, உடலின் அனைத்துப் பகுதிகளையும் பாதிக்கும் நோயாகக் கருதினார். நகரங்களின் வளர்ச்சியுடன் ஈடு கொடுக்க முடியாமல் நாளும் கிராமங்கள்  போராடிக் கொண்டிருக்கின்றன. நகர மக்களின் வாழ்க்கை கிராம மக்களை பெரிதும் பாதிப்படையச் செய்துள்ளது.  பொருளாதார வளர்ச்சி என்ற பார்வையில் கிராமங்களின் பயணம் பெரிதும் மடை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஆம்! 

இந்திய கிராமங்களின் முகம் அடையாளம் தெரியாமல் மாறியுள்ளது அல்லது சிதைந்துள்ளது என்பதை ஒப்புக்கொள்ளவே வேண்டியுள்ளது. அவற்றின் பயண இலக்கு மாற்றம் பெற்றுள்ளது. நகரங்களைப் போன்று அபரீத நுகர்வு கலாச்சாரத்தில் கிராமங்களும் மூழ்கடிக்கப்பட்டுள்ளன. நகரங்களைப் போன்று, பெருவணிக  நிறுவனங்களின் கழுகுப் பார்வைக்குள் கிராமங்களும் இன்று வீழ்ந்து கிடக்கின்றன.    

“இந்தியாவின் ஆன்மா அதன் கிராமங்களில் வாழ்கிறது” என்று 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மகாத்மா காந்தி கருதினார். இந்திய கிராமங்களை மையப்படுத்தியே நாட்டின் விடுதலை குறித்த அவரது கனவு பரந்து விரிந்தது. “உணவு, உடை மற்றும் பிற அடிப்படைத் தேவைகளில் கிராமங்கள் தன்னிறைவு பெற்றவைகளாக இருக்க வேண்டும். தன்னிறைவு என்பது குறுகிய தன்மையைக் குறிக்காது. தன்னிறைவு என்பது முற்றிலும் தன்னிறைவு பெற்றதாக இருக்கக்கூடாது. எந்த சூழ்நிலையிலும் நமக்குத் தேவையான அனைத்தையும் உற்பத்தி செய்ய முடியாது, அதைச் செய்ய நாம் நோக்கமாகக் கொண்டிருக்கவும் மாட்டோம். எனவே நமது நோக்கம் முழுமையான தன்னிறைவு என்றாலும், கிராமத்தில் உற்பத்தி செய்ய முடியாததை கிராமத்திற்கு வெளியே இருந்து பெற வேண்டும்; நம்மால் உற்பத்தி செய்ய முடியாததை ஈடாகப் பெற, நம்மால் முடிந்ததை விட அதிகமாக உற்பத்தி செய்ய வேண்டும். நமது கூடுதல் விளைபொருட்களில் எதுவும் தொலைதூர நகரங்களுக்கு அனுப்பப்பட மாட்டாது. நகரங்களுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் பொருட்களை உற்பத்தி செய்யவும் மாட்டோம். சுதேசி என்பது தொலைதூரத்தில் உள்ளவர்களுக்கு சேவை செய்வதை விட, உடனடி அண்டை அயலாருக்கு சேவை செய்வதாகும். “முதலில் கிராமத்திற்கும், பின்னர் சுற்றுப்புறத்திற்கும், பின்னர் மாவட்டத்திற்கும், பின்னர் மாகாணத்திற்கும் சேவை செய்வதே நமது நோக்கமாக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார். (Discussion with Shrikrishnadas Jaju, 10-10-1944; 78:171)

காந்தி, 1945 அக்டோபர் 5 அன்று ஜவஹர்லால் நேருவுக்கு எழுதிய கடிதத்தில், இந்திய கிராமங்கள் குறித்து தனது கருத்துக்களை வெளிப்படுத்தினார். அவர் எழுதியதாவது: “…இந்தியா உண்மையான சுதந்திரத்தை அடைய வேண்டுமானால், மக்கள் நகரங்களில் அல்ல, கிராமங்களில்தான் வாழ வேண்டும்; மாளிகைகளில் அல்ல, குடிசைகளில்தான் வாழ வேண்டும் என்ற உண்மை விரைவில் அல்லது தாமதமாக அங்கீகரிக்கப்படும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். நகரங்களிலும் மாளிகைகளிலும் கோடிக்கணக்கான மக்கள் ஒருபோதும் ஒருவருக்கொருவர் இயைந்து அமைதியாக வாழ முடியாது. அப்போது அவர்கள் வன்முறையையும் பொய்யையும் நாடுவதைத் தவிர வேறு வழியில்லாமல் ஆகிவிடும். சத்தியமும் அகிம்சையும் இல்லாமல் மனிதகுலம் அழிவைத் தவிர வேறொன்றையும் அடைய இயலாது. கிராம வாழ்க்கையின் எளிமையில்தான் நாம் சத்தியத்தையும் அகிம்சையையும் உணர முடியும்… எனது இலட்சிய கிராமம் இன்னும் என் கற்பனையில் மட்டுமே உள்ளது. எனது இலட்சிய கிராமத்தில் வாழ்பவர்கள் சுறுசுறுப்பின்றி இருக்க மாட்டார்கள். அவர்கள் அனைத்து நிலைகளிலும் விழிப்புணர்வுடன் இருப்பார்கள். அவர்கள் அழுக்கு மற்றும் இருளில் ஒரு மிருகங்களைப் போல வாழ மாட்டார்கள். ஆண்களும் பெண்களும் சுதந்திரமாக, முழு உலகத்தையும் எதிர்கொள்ளத் தயார்நிலையுடன்  வாழ்வார்கள். பிளேக், காலரா, அம்மை நோய்கள் இருக்காது. யாரும் வேலையின்றி  இருக்கவோ அல்லது ஆடம்பரத்தில் மூழ்கவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள். அனைவரும் தங்களாலான உடல் உழைப்பை வழங்க வேண்டியிருக்கும். ஒருவேளை ரயில்வே, தபால் மற்றும் தந்தி அலுவலகங்கள் கூட இருக்கலாம். என்னென்ன விஷயங்கள் இருக்கும் அல்லது இருக்காது என்று எனக்குத் தெரியவில்லை. அதைப் பற்றி நான் கவலைப்படவும் இல்லை. அத்தியாவசியமான விஷயத்தை என்னால் உறுதி செய்ய முடிந்தால், மற்ற விஷயங்களும் காலப்போக்கில் கூடிவரும். ஆனால் நான் அத்தியாவசியமான விஷயத்தை கைவிட்டால், எல்லாவற்றையும் கைவிட்டவனாவேன்.” (Letter to Jawaharlal Nehru, 5-10-1945; CWMG, 81:320) 

இதற்கு மாறாக, எதிர்கால மாற்றத்திற்கான களமாக கிராமம் என்ற கருத்தை நேரு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் “கிராமக் குடியரசுகள்” என்ற கருத்தாக்கம் பல்வேறு தீமைகளை உள்ளடக்கியதாகக் கருதினார்; அவர் சாதிப் படிநிலைகளை விமர்சித்தார்; மேலும் பாரம்பரிய சமூக அமைப்பை மீட்டெடுப்பதில் எந்த நன்மையும் இருக்காது என்று கருதினார்; கிராமங்கள் குறுகிய மனப்பான்மையுடன் தனித்து இயங்குவதை நேரு ஆதரிக்கவில்லை. கிராமப்புறப் பொருளாதாரத்தை நவீன தொழில்நுட்பம், அறிவியல் மற்றும் பெரிய அளவிலான தொழில்துறைகளுடன் இணைப்பதன் மூலமே ஒட்டுமொத்த இந்தியாவை நவீனமயமாக்க முடியும் என்று நேரு நம்பினார். இந்தியக் கிராமம் பொருளாதார ரீதியாகத் தன்னிறைவு அடைவதில் அவருக்கு ஐயமிருந்தது. எனினும், காந்தியின் கிராம சுயராஜ்யக் கொள்கையை ‘பஞ்சாயத்து ராஜ்’ அமைப்பின் மூலம் நடைமுறைப்படுத்த வடிவம் கொடுத்தார். காந்தியின் கொள்கைகளில் இருந்து நேருவின் பார்வை நிர்வாக ரீதியாக சற்றே மாறுபட்டிருந்தாலும், கிராமப்புறங்களின் அதிகாரப் பகிர்வை அவர் வலுவாக ஆதரித்தார்.

நகரங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டு நின்ற  கிராமங்கள் தார்மீக, சமூக மற்றும் பொருளாதார சுதந்திரத்தைப் பெற வேண்டும் என்று காந்தி விரும்பினார். பழமையான ‘கிராமக் குடியரசுகள்’ மீது ஈர்க்கப்பட்ட அவர், நகரங்களின் வளர்ச்சியை  நிராகரித்தார். 1921ஆம் ஆண்டு  யங் இந்தியாவில் அவர் கருத்துரைக்கையில், “எங்கள் நகரங்கள் இந்தியா அல்ல. இந்தியா தனது ஏழரை லட்சம் கிராமங்களில்தான்  வாழ்கிறது. அவைகள் தங்கள் செல்வத்தையோ வளர்ச்சியையோ மற்ற நாடுகளிலிருந்து கொண்டு வருவதில்லை. நகர மக்களோ ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஜப்பானின் பெருந்தொழில்  நிறுவனங்களின்  தரகர்கள் மற்றும் தரகு முகவர்களாக உள்ளனர். கிராமங்கள் அழிந்தால் இந்தியாவும் அழிந்துவிடும். அது இனி இந்தியாவாக இருக்காது. உலகில் அதன் நோக்கமும்  தொலைந்து போகும்” என்று குறிப்பிட்டார். 1936 மார்ச் 28ஆம் நாள் இலட்சுமனபுரியில் பேசுகையில், “இந்தியா அதன் சில நகரங்களில் அல்ல, அதன் லட்சக்கணக்கான கிராமங்களில்தான் வாழ்கிறது என்ற எனது நம்பிகையை எண்ணற்ற முறை கூறியிருக்கிறேன். ஆனால், நகரவாசிகளான நாம், இந்தியா அதன் நகரங்களில்தான் வாழ்கிறது என்றும், நமது தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவே கிராமங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்றும் நம்பி வந்திருக்கிறோம். ஆனால், அந்த ஏழை மக்களுக்கு உண்ணவும் உடுத்தவும் போதுமான உணவு கிடைக்கிறதா என்றும், வெயில் மற்றும் மழையிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள அவர்களுக்கு ஒரு கூரை இருக்கிறதா என்றும் நாம் ஒருபோதும் விசாரித்ததில்லை. கடந்த இருபது ஆண்டுகளில் என்னைப் போன்று, எந்த ஒரு காங்கிரஸ்காரரும் இந்தியா முழுவதும் பயணம் செய்ததில்லை. அது பெருமைபட வேண்டிய விஷயம் இல்லையாயினும், எனது முயற்சிகளின் விளைவாக, மற்ற காங்கிரஸ் தொண்டர்கள் அல்லது தலைவர்களை விட நான் இந்திய கிராமங்களைப் பற்றி  அதிகம் அறிந்தவனாக இருக்கின்றேன். பொதுவாக, நகரவாசி கிராமவாசியை சுரண்டுவதை நான்   பார்க்கின்றேன்.  உண்மையில், ஏழை கிராமத்தின் பொருள் மற்றும் உழைப்பை  நம்பியே நகரம் வாழ்கிறது” என்று காந்தி குறிப்பிட்டார். (CWMG, 62:298)

 ‘ஏழை கிராம மக்கள் வெளிநாட்டு அரசாங்கத்தாலும், அவர்களது சொந்த நாட்டு மக்களான நகரவாசிகளாலும் சுரண்டப்படுகிறார்கள். அவர்கள் உணவை உற்பத்தி செய்தும் பட்டினி கிடக்கிறார்கள். அவர்கள் பாலை உற்பத்தி செய்தும் அவர்களது பிள்ளைகள் பால் கிடைக்காமல் தவிக்கிறார்கள். இது வெட்கக்கேடானது. ஒவ்வொருவருக்கும் சமச்சீரான உணவு, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, பிள்ளைகளின் கல்விக்கான வசதிகள் மற்றும் போதுமான மருத்துவ உதவி ஆகியவை கிடைக்க வேண்டும்’ என்று அவர் விரும்பினார். 1947 ஏப்ரல் 20ஆம் நாள் அரிஜன் இதழில் காந்தி எழுதுகையில், “உங்களில் சிலர் கிராமங்களைப் பார்த்தால், கவரப்பட மாட்டீர்கள். நீங்கள் சாணக் குவியலுக்கு அடியில் தோண்ட வேண்டியிருக்கும். அவை ஒருபோதும் சொர்க்கம் போன்ற இடங்களாக இருந்தன என்று நான் கூறவில்லை. இன்று அவை உண்மையில் சாணக் குவியல்களாகவே இருக்கின்றன. முன்பு அவை அப்படி இருக்கவில்லை. நான் கூறுவது வரலாற்றிலிருந்து அல்ல, மாறாக நான் என் கண்ணால் கண்டதிலிருந்து. நான் இந்தியாவின் ஒரு முனையிலிருந்து மறுமுனை வரை பயணம் செய்து, மனிதகுலத்தின் பரிதாபகரமான மாதிரியை ஒளியற்ற கண்களால் கண்டிருக்கிறேன். அவர்கள்தான் இந்தியா. இந்த எளிய குடிசைகளில், இந்த சாணக் குவியல்களின் நடுவே, எளிய பாங்கிகள் காணப்படுகின்றனர்; அவர்களிடமே நீங்கள் ஞானத்தின் செறிவான சாரத்தைக் காண்பீர்கள். (Harijan, 20-4-1947; CWMG 87:192)

கிராம மக்களின் அன்றாட வாழ்க்கை மற்றும் சுதந்திரத்திற்கு ஒரு நிலையான அச்சுறுத்தலாக நகரங்கள் இருப்பதாகவே காந்தி எண்ணினார். (CWMG.33:66) நகரங்கள் கிராமங்களின் செல்வத்தை மட்டுமல்ல, திறமையையும் உறிஞ்சி எடுக்கின்றன. அதனால், அவை சிதைந்து கொண்டிருக்கின்றன. பல பிரிட்டிஷ் அதிகாரிகள் இந்திய மக்களின் நிலைமைகளைப் பற்றி எழுதியுள்ளனர். உடல் ஆன்மா இரண்டையும் ஒன்றாக வைத்துக் கொள்வதே  இந்திய கிராமவாசிக்கு போதுமானது என்று யாரும் சொல்லவில்லை. மாறாக, மக்கள் தொகையில் பெரும்பாலோர் பட்டினியின் விளிம்பில் வாழ்கின்றனர் என்றும், பத்து சதவீதம் பேர் அரைப் பட்டினியால் வாடுகின்றனர் என்றும், மில்லியன் கணக்கானவர்கள் ஒரு சிட்டிகை அழுக்கு உப்பு மற்றும் மிளகாய் மற்றும் அரிசி அல்லது வறண்ட தானியங்களுடன் திருப்தியடைய வேண்டியுள்ளது என்பதை  ஒப்புக்கொள்கின்றனர். இந்திய கிராமவாசியைப் பொறுத்தவரை, அவரது தொன்மையான பண்பாடானது  பக்குவமற்ற தன்மை எனும் மேலோட்டினால் மறைந்துள்ளது. அந்த மேலோட்டை அகற்றி, அவரது தீராத வறுமையையும் எழுத்தறிவின்மையையும் நீக்கினால், ஒரு பண்பட்ட, நாகரிகமான, சுதந்திரமான குடிமகன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான மிகச்சிறந்த முன்மாதிரியை நீங்கள் காண்பீர்கள்’ என்று அடிகள் அறுதியிட்டுக் கூறினார். (Harijan, 28-1-1939)

 ‘இன்று நமது கிராமங்கள் நகரங்களின் வெறும் துணை அமைப்பாக  மாறிவிட்டன. அவை, நகரங்களால் சுரண்டப்படுவதற்கும், அவர்களின் தயவைச் சார்ந்து இருப்பதற்கும் மட்டுமே உள்ளன. இது இயற்கைக்கு மாறானது. நகரங்கள், கிராமங்களைச் சுரண்டுவதற்குப் பதிலாக, அவற்றிலிருந்து பெறும் ஆதாயம்  மற்றும் வாழ்வாதாரத்திற்காகக் கிராமங்களுக்குத் திருப்பித் தருவதான  கடமையை உணரும்போதுதான், இரண்டுக்குமிடையே ஒரு இணக்கமான மற்றும் தார்மீக ரீதியிலான உறவு வளரும். மேலும், நகர இளைஞர்கள் மகத்தான மற்றும் உன்னதமான சமூக மறுகட்டமைப்புப் பணியில் தங்கள் பங்கை வகிக்க வேண்டுமானால், அவர்கள் கல்வி பெற வேண்டிய தொழில்கள் கிராமங்களின் தேவைகளுடன் நேரடி தொடர்புடையதாக இருக்க வேண்டும்’ என்று காந்தி கருதினார். (Harijan, 9-10-1937; 66:169-7). 

நகரங்கள் கிராமங்களைச் சுரண்டுவதைக் கண்டு அவர் மிகுந்த வேதனையடைந்தார். பண்பாடு மற்றும் நாகரிக அடிப்படையில் நகரங்களை இந்திய மண்ணுக்கு அந்நியமாகவும், அவற்றின் வளர்ச்சியை அழிவின் அறிகுறிகளாகவும் அவர் கண்டார். கல்கத்தா, பம்பாய் போன்ற நகரங்களின் எழுச்சி பெருமை கொள்வதற்கான விஷயமாக அவருக்குத் தென்படவில்லை.  அல்லாமல்  வேதனையளிப்பதாகவே  அவருக்குத் தோன்றியது. தனது கிராம அமைப்பின் ஒரு பகுதியைத் தகர்த்ததின் மூலம் இந்தியா தன்னை இழந்துள்ளது. ‘கட்டுப்பாடற்ற நகரமயமாக்கல் கிராமப்புறப் பொருளாதாரத்தை முழுமையாக அழித்துவிடும்’ என எச்சரித்தார். எனவே தான்,  நகரங்களின் வளர்ச்சியை ஒரு தீய செயலாகவும், மனித குலத்திற்கும் உலகிற்கும் அது துரதிர்ஷ்டவசமானதாகவும் கருதினார். ஆங்கிலேயர்கள் இந்தியாவை அதன் நகரங்கள் மூலமாகவே சுரண்டினர். இந்திய பெருநகரங்கள் இன்றும் கிராமங்களைச் சுரண்டுகின்றன. “நகரங்களின் வளர்ச்சி என்பது கிராமங்களின் உழைப்பிலும் இழப்பிலும் தான் கட்டமைக்கப்படுகிறது.  கிராமங்களின் வளங்களும் மனித உழைப்பும் நகரங்களை நோக்கி மட்டுமே ஈர்க்கப்படுகின்றன. பெருநகரங்களில் வானளாவ உயர்ந்து நிற்கும் கட்டிடங்கள் அனைத்திற்கும் பின்னால் கிராம மக்களின் வியர்வையும் இரத்தமும் கலந்த உழைப்பு உள்ளது”. 

கிராம மக்களைத் தன்னம்பிக்கையுடையவர்களாக மாற்ற வேண்டும். கிராமத் தொழில்கள் அழிந்து வருவதால் கிராமங்கள் இன்று அழிவின் விளிம்பில் உள்ளன. கிராமத் தொழில்கள் புத்துயிர் பெறுவதன் மூலம் மட்டுமே கிராமங்கள் புத்துயிர் பெற முடியும். கிராமத் தொழில்களின் மையமாக  நூற்பு சக்கரம் இடம் பெற்றுள்ளது. (CWMG,69:53) தன்னிறைவு, அமைதி, நேர்மை மற்றும் ஆன்மீகம் ஆகியவற்ற்றைக் கருத்தில்கொண்டு காந்தி, கிராம வாழ்க்கைக்கு முக்கியத்துவம் அளித்தார். கிராமங்களில்  தேசிய, சமூக மற்றும் ஆன்மீக மாற்றம் குறித்த காந்தியின் பார்வை மிகவும் கருத்தியல் செறிவுடையதாக இருந்தது. கிராம சுயராஜ்யம் – தன்னிறைவு பெற்ற கிராமம் என்ற கருத்தாக்கம் என்பது, இந்தியாவின் சுதந்திரத்திற்கு வெகு காலத்திற்கு முன்பே காந்தியால் முன்மொழியப்பட்டு, காலப்போக்கில் அவர் வளர்த்தெடுத்த ஒரு தனித்துவமான கிராமப்புற மறுசீரமைப்புக் கருத்தாகும். இதில், தனிநபர்கள் பொருளாதார அமைப்பின் மையத்தில் வைக்கப்பட்டு, கிராமத்தின் முழுமையான வளர்ச்சியே முதன்மை நோக்கமாகக் கொள்ளப்பட்டது. 

இந்தியா கிராமங்களில் வாழ்கிறது என்பதையும், அவற்றின் மீட்பின் மூலமாக இந்தியா தனது பெருமையையும் வளமையையும் மீட்டுப் பெற முடியும் என்பதையும் காந்தி வலியுறுத்தினார். அவரது கிராம சுயராஜ்யம் என்ற கருத்தை அவரது ஆன்ம சக்தி என்ற கருத்திலிருந்து புரிந்துகொள்ளலாம். இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் வாழ்கிறது என்று அவர் கூறுவது வழக்கம். காந்தியைப் பொறுத்தவரை, கிராமங்கள் சமூக அமைப்பின் அடிப்படை அலகுகளாக இருந்தன. எனவே, கிராமங்கள் தங்களின் அத்தியாவசியத் தேவைகளில் தன்னிறைவு பெற்றிருக்க வேண்டும். கிராமங்களில், வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளுக்கான உற்பத்திச் சாதனங்கள், காற்று மற்றும் நீரைப் போல அனைவருக்கும் எளிதில் கிடைக்க வேண்டும் என்றும், அவை மற்றவர்களைச் சுரண்டுவதற்கான ஒரு கருவியாக  இருக்கக்கூடாது என்றும் அவர் கருதினார். 

காந்தி மேற்கத்திய முறையிலான பரந்த மற்றும் கண்மூடித்தனமான தொழில்மயமாக்கல் என்ற கருத்தை எதிர்த்தார். ஏனெனில், அது சமூகத்திற்குத் தீங்கு விளைவிக்கக் கூடியது. மேலும் அனைவருக்கும் வேலை வழங்க முடியாது. அவர் உற்பத்தியைப் பரவலாக்குதல் மற்றும் பெரிய தொழிற்சாலைகள் மற்றும் ஆலைகளை தேசியமயமாக்குதல் என்ற கருத்தை ஆதரித்தார். முக்கிய உற்பத்தி சாதனங்கள் மற்றும் செல்வத்தின் மீதான அரசு உரிமை என்ற கருத்திற்காக அவர் வாதிட்டார். சட்டமியற்றல், நிர்வாக, மற்றும் நீதித்துறை அதிகாரங்களைக் கொண்ட கிராமப் பஞ்சாயத்துகள் மூலம் நெருக்கமான மனித உறவுகளும் தன்னாட்சியும் நிலவும் என்பதால்,  தன்னிறைவு பெற்ற தன்னாட்சிக் கிராமங்கள் என்ற கருத்தை அவர் ஆதரித்தார்.இருப்பினும், கிராம சுயராஜ்யம் ஒரு சிறந்த வளர்ச்சி அணுகுமுறையாகக் கருதப்பட்டாலும், சுதந்திரத்திற்குப் பிறகு அரசில்  திட்டமிடுபவர்களும் கொள்கை வகுப்பாளர்களும் ஒரு தனிநபரின் தார்மீக மற்றும் நெறிமுறை விழுமியங்களைக் காட்டிலும் பொருளாதார வளர்ச்சிக்கே முக்கியத்துவம் அளித்தனர். மறுபுறம், நிலையான வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டமையால், மனிதனின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் காந்திய அணுகுமுறையும் கிராம சுயராஜ்யக் கருத்தாக்கமும் முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. 

‘ஒரு இலட்சிய இந்தியக் கிராமம், முழுமையான சுகாதாரத்திற்கு வழிவகுக்கும் வகையில் கட்டமைக்கப்படும். அதில், போதுமான வெளிச்சமும் காற்றோட்டமும் கொண்ட குடில்கள், அதனைச் சுற்றியுள்ள ஐந்து மைல் சுற்றளவில் கிடைக்கக்கூடிய பொருட்களால் கட்டப்பட்டிருக்கும். அந்தக் குடில்களில், வீட்டுக்காரர்கள் தங்கள் வீட்டு உபயோகத்திற்காக காய்கறிகளைப் பயிரிடவும், தங்கள் கால்நடைகளைக் கட்டவும் உதவும் முற்றங்கள் இருக்கும். கிராமத்தின் சந்துகளும் தெருக்களும் தவிர்க்கக்கூடிய அனைத்து தூசியிலிருந்தும் விடுபட்டிருக்கும். கிராமத்தில்  தேவைகளுக்கு ஏற்பவும் அனைவரும் அணுகக்கூடியதாகவும் கிணறுகள் இருக்கும். அனைவருக்கும் வழிபாட்டுத் தலங்கள், ஒரு பொதுவான சந்திப்பு இடம், அதன் கால்நடைகளை மேய்ப்பதற்கான ஒரு கிராமப் பொது இடம், ஒரு கூட்டுறவு பால் பண்ணை, தொழிற்கல்வியை மையமாகக் கொண்ட தொடக்க மற்றும் இடைநிலைப் பள்ளிகள், மற்றும் தகராறுகளைத் தீர்ப்பதற்கான பஞ்சாயத்துகள் இருக்கும். அது தனது சொந்த தானியங்கள், காய்கறிகள், பழங்கள் மற்றும் தனது சொந்த கதர் துணியை உற்பத்தி செய்யும். இதுவே ஒரு மாதிரி கிராமம் குறித்த காந்தியின்  எண்ணம். அதன் குடில்கள் சிறிய மேம்பாடுகளுடன் அப்படியே இருக்கும். மக்களிடையே ஒத்துழைப்பு இருந்தால், மாதிரி குடில்களைத் தவிர, திட்டத்தின் ஏறக்குறைய முழுப் பகுதியையும், அரசாங்க உதவியின்றி, கிராமவாசிகளின் வசதிக்கேற்ப செலவு செய்து செயல்படுத்த முடியும். அந்த உதவியுடன், கிராம மறுசீரமைப்பின் சாத்தியக்கூறுகளுக்கு எல்லையே இல்லை. ஆனால், கிராம மக்கள் தங்களுக்குள் பரஸ்பர ஒத்துழைப்புடன், பொது நன்மைக்காகத் தன்னார்வ உழைப்பை வழங்கினால், தங்களுக்குத் தாங்களே எப்படி உதவிக் கொள்ள முடியும் என்பதைக் கண்டறிவதே இப்போது எனது பணியாகும். அறிவார்ந்த வழிகாட்டுதலின் கீழ், தனிநபர் வருமானத்திலிருந்து வேறுபட்டு, கிராமத்தின் வருமானத்தை அவர்களால் இரட்டிப்பாக்க முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். நமது கிராமங்களில் தீர்ந்துபோகாத வளங்கள் உள்ளன; அவை எல்லாச் சூழல்களிலும் வணிக நோக்கங்களுக்காக அல்ல, ஆனால் நிச்சயமாக ஏறக்குறைய எல்லாச் சூழல்களிலும் உள்ளூர் நோக்கங்களுக்காகப் பயன்படுகின்றன. கிராம மக்கள் தங்கள் நிலையை மேம்படுத்திக் கொள்ள முற்றிலும் விருப்பமில்லாமல் இருப்பதே மிகப்பெரிய சோகம்’.

நாடு விடுதலை பெற்ற பின், விடுதலைப் போராட்டத்தின் நோக்கம் மற்றும்  இலக்கிலிருந்து விலகி கிராமங்கள்  வெகுதூரம் அழைத்துச் செல்லப்பட்டுவிட்டன. காந்தி தலைமையிலான  போராட்டத்தின் மையக் கருத்து, கிராம சுயராஜ்யம் அமைய வேண்டும் என்பதுதான். காந்தியப் பொருளாதாரத்தின் கட்டமைப்பு மூலதனச் செறிவு மிக்கதாக இல்லாமல், உழைப்புச் செறிவு மிக்கதாக இருந்தது. உற்பத்தி திட்டமிடல் மற்றும் முடிவெடுத்தல் ஆகியவற்றில் பரவலாக்கப்பட்ட அமைப்பு இருக்கும். காந்திய சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்ட திட்டமிடல் மாதிரியானது, வன்முறையற்ற உடைமை, வன்முறையற்ற உற்பத்தி அல்லது பொருத்தமான தொழில்நுட்பம், உடைமையின்மை, வன்முறையற்ற உழைப்பு அல்லது வாழ்வாதார உழைப்பு, கூட்டுறவு, சமத்துவம், தன்னிறைவு பெற்ற கிராமம், சிக்கனம், எளிமை மற்றும் வரையறுக்கப்பட்ட தேவைகள் போன்ற பொருளாதாரக் கொள்கைகளின் மீது கட்டமைக்கப்படும். காந்தியப் பொருளாதாரத்தின் இந்த மாதிரியானது, சர்வோதயம்(அனைவரின் நலன்) என்ற அடிப்படைக் கொள்கையால் வழிநடத்தப்பட்டு,  வன்முறையற்ற, சுரண்டலற்ற மற்றும் சமத்துவமான சமூக அமைப்பின் மீது நிறுவப்படும். காந்தியின் சுதேசித் தத்துவமே, இந்தியத் திட்டமிடலின் ஒரு முக்கிய நோக்கமாகத் திகழும் தன்னிறைவு என்ற கருத்துக்கு இறுதியில் வழிவகுத்தது. உண்மையான திட்டமிடல் என்பது இந்தியாவின் ஒட்டுமொத்த மனிதவளத்தையும் சிறந்த முறையில் பயன்படுத்துவதைக் கொண்டுள்ளது என்று காந்தி கூறினார். பொருளாதார வளர்ச்சியில் மனிதக் காரணியையே காந்தி எப்போதும் முன்னிறுத்தினார். காந்தியின் கூற்றுப்படி, மனிதனே முதன்மையான கருத்தாகக் கொள்ளப்பட வேண்டும். மக்களுக்கு முழுமையான வேலைவாய்ப்புகளை வழங்குவதற்காக, நாட்டில் காதி மற்றும் கிராமத் தொழில் வலையமைப்பைப் பரப்பி விரிவுபடுத்துவதை அவர் வலியுறுத்தினார். உடல் உழைப்பு அல்லது உணவுக்கான  உழைப்புக் கோட்பாட்டை நம்பினார். 

கிராம சுயராஜ்யத்தை  அகிம்சையிலிருந்து பிரிக்க முடியாது, ஏனெனில், அது ‘அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூகவியல் ஆகிய துறைகளில் அகிம்சையின் நடைமுறை உருவகம்’ (H. M. Vyas(ed), Village Swaraj, Ahmedabad: Navajivan Publishing House, 1962 p.8). சுயராஜ்யத்திற்கும் சுய கட்டுப்பாட்டிற்கும் காந்தி முக்கியத்துவம் அளித்தார். ஒருவர் சத்தியத்தையும் அகிம்சையையும் பின்பற்றும்போதுதான் சுயராஜ்யம் சாத்தியமாகும் என்று அவர் கருதினார். காந்தியின் கிராம சுயராஜ்ய கொள்கைகளை பின்வருமாறு சுருக்கமாகக் கூறலாம்.

  • ஒவ்வொரு கிராமமும் தனது அடிப்படைத் தேவைகளான உணவு, உடை மற்றும் அடைக்கலம் ஆகியவற்றில் தானே தற்சார்பு பெற்றிருக்க வேண்டும்.
  • கிராமத்திற்குத் தேவையான உணவையும், துணிக்கான பருத்தியையும் அந்த கிராமமே உற்பத்தி செய்து கொள்ள வேண்டும். 
  • இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் வாழ்கிறது. உண்மையான ஜனநாயகம் அதிகார குவியலில் அல்ல, அதிகாரப் பகிர்வில்தான் உள்ளது. 
  • ஒவ்வொரு கிராம பஞ்சாயத்தும் தனக்கான சட்டங்களை இயற்றும் முழு சுதந்திரமும் அதிகாரமும் பெற்று விளங்க வேண்டும். 
  • கிராம சபைகளின் மூலம் மக்கள் நேரடியாக முடிவெடுக்கும் ஜனநாயக முறை செயல்பட வேண்டும்.
  • கிராமங்களுக்கு இடையே ஏற்படும் சிறு பிரச்சனைகளைத் தீர்க்கவும், நீதி வழங்கவும் கிராம பஞ்சாயத்துகளே இறுதி அமைப்பாகச் செயல்பட வேண்டும். 
  • கிராமப்புற கைத்தொழில்களான கைத்தறி (ராட்டினம்), கதர் மற்றும் குடிசை தொழில்களுக்கு முக்கியத்துவம் அளித்து, உள்ளூர் உற்பத்தி பொருட்களைப் பயன்படுத்த வேண்டும்.
  • வெளியூர் அல்லது வெளிநாட்டுப் பொருட்களைச் சார்ந்து இருப்பதைத் தவிர்த்தல் வேண்டும். 
  • சாதி, சமய  பேதமற்ற சமத்துவ சமுதாயத்தை உருவாக்க வேண்டும்.
  • தீண்டாமை ஒழிப்பு, பெண் சமத்துவம் மற்றும் சமய  நல்லிணக்கம் ஆகியவை கிராம சுயராஜ்யத்தின் சமூகக் தூண்களாகும்.
  • நிலம் மற்றும் செல்வம் தனி நபருக்குச் சொந்தமானதல்ல; அவை கிராம மக்களுக்குச் சொந்தமானது என்ற அடிப்படையில், பணக்காரர்கள் தங்களின் சொத்துக்களைச் சமுதாயத்தின் நலனுக்காகப் பாதுகாக்கும் அறங்காவலர்களாகச் செயல்பட வேண்டும்.

1947 ஆகஸ்ட் 30ஆம் நாள் அரிஜன் இதழில் காந்தி  “சுதந்திர இந்தியாவுக்கான புனரமைப்புத் திட்டத்தில், அதன் கிராமங்கள், தற்போது இருப்பது போன்று, இனி நகரங்களைச் சார்ந்து இருக்கக் கூடாது. ஆனால்,  நகரங்கள் கிராமங்களுக்காகவும் அவற்றின் நலன்களுக்காகவும் மட்டுமே இருக்க வேண்டும். ஆகையால், ராட்டை பெருமைமிகு நிலையைப் பெற வேண்டும். அதை மையமாகக் கொண்டே வாழ்வளிக்கும் அனைத்து கிராமத் தொழில்களும் சுழல வேண்டும்’ என்று எழுதினார். நாடு சுதந்திரமடைந்த உடனே துரதிர்ஷ்டவசமாக மகாத்மாவை நாம் இழந்துவிட்டோம். காந்திய வழியில் இருந்து நாம் திசை மாறி  அழைத்துச் செல்லப்பட்டாலும், நவீனத்துவ பொருள்நோக்குப் பார்வையில் சுதந்திரத்திற்குப் பின்னர் இந்திய கிராமங்கள் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் சந்தித்துள்ளன. இந்திய கிராமங்கள் சுயசார்புடையவையாகவும், நகரங்களுக்கு நிகரான அடிப்படை வசதிகளைக் கொண்டவையாகவும் மாறி வருகின்றன.

விவசாயம் 

இந்தியாவில் விவசாயம் என்பது பெரும்பான்மையான மக்களின் வாழ்வாதாரமாகும். இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக திகழ்வது விவசாயம் என்றே சொல்லலாம். 2016 ஆம் ஆண்டில், வேளாண்மை மற்றும் கால்நடை வளர்ப்பு, வன பாதுகாப்பு, மீன்வளம் போன்ற அதனுடன் தொடர்புடைய துறைகள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 17.5% பங்களித்தன. 2020–21 ஆம் ஆண்டுக்கான இந்தியப் பொருளாதாரக் கணக்கெடுப்பின்படி, இந்தியத் தொழிலாளர் சக்தியில் 50 விழுக்காட்டுக்கும் அதிகமானோருக்கு வேளாண்மைத் துறை வேலைவாய்ப்பை வழங்கியதுடன், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 20.2% பங்களிப்பையும் அளித்தது. தற்போது ஏராளமான விளைநிலங்கள் வீட்டு மனைகளாகிவிட்டன. குளங்கள் காணாமல் போய்விட்டன. நாட்டில் உள்ள பெரும்பாலான பேருந்துநிலையங்கள், மைதானங்கள், அரசு அலுவலகங்கள் எல்லாமே ஒரு காலத்தில் ஏரிகள், குளங்களாக இருந்தவையே. தமிழ்நாட்டில் இன்று ஊர்ப் பெயர்களில் பல குளங்கள் ஒளிந்துகொண்டிருக்கின்றன. எஞ்சியிருக்கும்  குளங்களும் கண்மாய்களும் குப்பைத் தொட்டிகளாகவும் கழிவுநீர் தேக்கும் குட்டைகளாகவும்  மாற்றப்பட்டுள்ளன. பெரும்பாலான நீர்நிலைகள் மாசு படிந்து மனிதர்கள் மட்டுமன்றி கால்நடைகள் கூட பயன்படுத்தமுடியாத அவல நிலையில் தான்  உள்ளன. இருக்கும் நீர்நிலைகளும் சாகுபடி நிலத்தை முற்றிலும் இழந்து விவசாயத்துக்கு பயன்படாமல் இருக்கின்றன. 

விவசாய பெருங்குடி மக்கள் மீது நேரடியாகவும் மறைமுகமாகவும் நடத்தப்படும் தாக்குதல்கள் அவர்களின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கி உள்ளது. 

  • விவசாய நிலங்கள் குறைந்துகொண்டே செல்வது
  • முறையற்ற மழைப்பொழிவு, வறட்சி மற்றும் வெள்ளம் காரணமாக விவசாயம் பெரும் நஷ்டத்தைச் சந்திப்பது.
  • பசுமைப்புரட்சி என்ற பெயரில் நோய் எதிர்ப்புத் திறன், மழை வெள்ளத்தில் நீடிக்கும் திறன், வறட்சியைத் தாங்கும் திறன் முதலான பல்வேறு அரிய பண்புகளைக் கொண்ட பாரம்பரிய நெல் ரகங்களை ஒழித்துக் கட்டியது
  • இந்திய பாரம்பரிய கலப்பின பயிர்முறை ஒழிக்கப்பட்டு, ஒற்றைப் பயிர் முறை திணிக்கப்பட்டது 
  • போதிய அளவிற்கு ஆண்டு முழுவதும் விவசாய வேலை இல்லாதது 
  • உற்பத்தி பொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்காதது 
  • இடைத்தரகர்களாலும் கமிஷன் மண்டிகளாலும் விவசாயிகள் வஞ்சிக்கப்படுவது 
  • விவசாயத்திற்கு தேவையான இடுபொருட்களின் விலை உயர்ந்து கொண்டே செல்வது
  • விவசாய தொழிலாளர்களுக்குக் குறைந்த கூலி வழங்கப்படுவது 
  • விவசாய தொழிலாளர்களுள் பெரும்பாலோர் சாதியின் பெயரால் இழிவு படுத்தப்படுவது 
  • எளிமையாக அதே நேரத்தில் மன நிறைவுடன்  வாழ்ந்து வந்த கிராமத்து மக்களிடம் மிதமிஞ்சிய நுகர்வு கலாச்சாரம் பரவியது

போன்ற  பல்முனை தாக்குதல்கள்  காரணமாக வாழ்வாதாரம் தேடி ஏழை விவசாயிகள் மற்றும்  விவசாயத் தொழிலாளர்கள் நகரத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றனர். முன்னர், நாட்டின் ஒட்டுமொத்த மனித சக்தியில் சரிபாதிக்கு மேல் விவசாயத் துறையினைச் சார்ந்தே  அமைந்திருந்தது. ஆனால், தற்போது ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத்தின் பங்கு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே செல்வது கவலை அளிப்பதாக உள்ளது.

விவசாய நாடான இந்தியாவில் 70% மக்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ விவசாயத்தை சார்ந்துள்ளனர். விவசாய நாடு என்று மார்தட்டிக்கொண்டதொரு நாட்டில்  விவசாயிகள் வாழ வழியில்லை என்றால்  நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம் என்றே எண்ணத் தோன்றுகிறது. “ஜெய் ஜவான்… ஜெய் கிசான்…”என்று உரத்த குரலில் கோஷம் எழுப்பி மகிழ்ந்தது இந்நாடு. ஆனால்,  1995 – 2014 இடைப்பட்ட இருபதாண்டு காலத்தில்  இந்திய நாட்டில்  2,96,438 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட நிலையில், 2014- 2022  இடைப்பட்ட ஒன்பது ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 1,00,474 ஆக உயர்ந்தது. 2022ஆம் ஆண்டு இந்தியாவில் விவசாயத் துறையில் ஈடுபட்டிருந்த மொத்தம் 11,290 பேர் (5,207 விவசாயிகள் மற்றும் 6,083 விவசாயத் தொழிலாளர்கள்) தற்கொலை செய்து கொண்டதாக இந்திய தேசிய குற்றப் பதிவு பணியகம் தெரிவித்துள்ளது. கடன் தொல்லை, பருவ மழை தவறியது போன்ற பல்வேறு காரணங்களால் விவசாயிகள் தற்கொலைக்குத் தள்ளப்பட்டுள்ள நிகழ்வுகள் வேதனை அளிப்பதாக உள்ளது. இந்தியாவின் முதுகெலும்பை பற்றி- இந்தியாவின் ஆன்மாவைப் பற்றி பேச்சில் பெருமைபட்டுக் கொண்டோமே ஒழிய, நாடு விடுதலைப்  பெற்று என்பது ஆண்டுகளை நெருங்கும் தருவாயிலும் விவசாயப் பெருங்குடி மக்கள் இங்கு அமைதியாகவும் நிம்மதியாகவும் வாழ்வதற்குரிய சூழலை உருவாக்கத் தவறிவிட்டோம். நாட்டின் விடுதலை பற்றி பேசியவர்கள் விவசாயப் பெருங்குடி மக்களின் விடுதலையைப் பற்றி கவலை கொள்ளாதது ஒரு தற்கொலை முயற்சியே ஆகும். நவீனமயம் நோக்கிய நாட்டின்  பயணத்தில் விவசாயிகள் ஏமாற்றப்பட்டுள்ளனர்; புறக்கணிக்கப்பட்டுள்ளனர்;  வஞ்சிக்கப்பட்டுள்ளனர். கிராமப்  பகுதிகளில் வாழ்கின்ற மக்கள் போதிய கல்வி மற்றும்  சுகாதார வசதிகள் இல்லாமலும், குறைந்த தனிநபர் வருமானம், அதிக வறுமை மற்றும் மோசமான உள்கட்டமைப்பு போன்ற பல வளர்ச்சி சவால்களை எதிர்கொண்டும் வருகின்றனர்.

இந்திய நாடடின் பொருளாதாரத்திலும் மற்றும் வேலைவாய்ப்பிலும் பெரும்பங்காற்றுவது விவசாயத்துறை, தொழில்துறை மற்றும்  சேவைத்துறை ஆகியனவாகும். ஆனால், இன்று விவசாயத் துறையையும் தொழில் துறையையும் நலிவடைய செய்துவிட்டு, சேவைத்துறையில் 13 சதம் வளர்ந்து விட்டதாக பெருமை பேசுகிறோம். இன்று இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சேவைத்துறை சுமார் 55% முதல் 60% வரை பங்களிக்கிறது.நாடு விடுதலை பெற்றபோது, பொருளாதார வளர்ச்சியில் 60 சதவீதமாக இருந்த விவசாயத்துறை இன்று  17 சதவீதமாகவும் 56 சதவீதமாக இருந்த விவசாயத்துறை சார்ந்த  வேலைவாய்ப்பு தற்போது 22.3 சதவீதமாகவும் குறைந்துள்ளது. அதிலும் விவசாயத்துறையில் இளைஞர்கள் பங்கேற்பு 2.3 சதவீதம் மட்டுமே உள்ளதெனில் நாடு  எங்கே சென்று கொண்டிருக்கிறது? விவசாயத்தை முக்கியத் தொழிலாக கொண்ட நாட்டில் இளைஞர்களில் பெரும்பகுதியினர் விவசாயம் செய்ய முன்வராதது குறித்து யாரும் கவலை கொண்டதாகத் தெரியவில்லை. அவ்வப்போது காய்கறி விலை சிகரத்தை எட்டிக்கொண்டிருக்க அவற்றை  விளைவிக்கும் அழகான கிராமங்கள் எந்த மாற்றமும் இன்றி அன்று போலவே இன்றும் காணப்படுகின்றன. இன்றைய விலையேற்றத்திற்கு உற்பத்தியாளர்கள் காரணம் அல்ல; விற்பனை நிலையில், உருவாக்கப்படும் விலையேற்ற விளையாட்டில் விவசாயிகள் என்றுமே செர்த்துக் கொள்ளப்ப்டுவதில்லை. விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் பொருட்களுக்கு விலையை நிர்ணயம் செய்ய உரிமையற்றவர்களாக இருக்கின்றனர் என்பது தான் பரிதாபம். உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்ய உரிமை இல்லாதவர்கள் இந்திய நாட்டில் ஏரோட்டிகள் மட்டுமே. விவசாயத்தைப் பற்றியோ விவசாயிகள் பற்றியோ கவலைபடாமலும் அக்கறை செலுத்தாமலும் இருக்கும்  நிலை நீடித்தால், வருங்காலத்தில் இங்கு விவசாயம் செய்வதுகூட ஒரு காட்சிப் பொருளாகிவிடுமோ என்ற அச்சம் தான் எழுகின்றது. 

இடப் பெயர்வு

இந்திய கிராமங்களில் நல்ல மாற்றங்களும் ஏற்பட்டுள்ளன என்பதை மறுப்பதிற்கில்லை. ஊர்திகள்  செல்ல இயலாத சாலைகள், மின்சாரமில்லாத வீடுகள் என ஒரு காலத்தில் அடையாளம் காட்டப்பட்ட இந்திய கிராமங்கள் தற்போது பெருமளவு மாறியுள்ளன. குக்கிராமங்களிலும் தெரு விளக்குகள், தொலைபேசி வசதி, பாதுகாக்கப்பட்ட குடிநீர், கிராமப்புற சுகாதாரம், தாய்சேய் நலம், போக்குவரத்து வசதி, உள்ளாட்சி நிர்வாகத்தின் மூலம் கிராமப்புற மேம்பாடு என இந்திய கிராமங்கள் விடுதலைக்குப் பிறகு மாறியுள்ளன. கிராமப் புறங்களில் அலைபேசி சந்தாதாரர்களின் எண்ணிக்கைகூட வேகமாக வளர்ச்சி கண்டுள்ளது. கிராமப்புறங்களில், கடந்த 2006-07ம் நிதியாண்டு நிலவரப்படி, தொலைத் தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை, 4.57 கோடியாக இருந்தது. இது, 2010-11ம் நிதியாண்டில், 28.22 கோடியாக உயர்ந்தது. இதே காலத்தில், நகர்ப்புற  சந்தாதாரர்களின் எண்ணிக்கை, 16 கோடியில் இருந்து 56.40 கோடியாக உயர்ந்தது. இதன்படி, மதிப்பீட்டிற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட ஐந்து ஆண்டுகளில், கிராமப்புறங்களில் தொலைதொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை, 485 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இவையெல்லாம் ஒருபுறம் இந்தியாவின் பெருமையைப் பறைசாற்றினாலும், விரும்பத்தகாத சில மாற்றங்களும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அவற்றில் முக்கியமாகக் குறிப்பிடவேண்டியது நகர்ப்புறங்களை நோக்கி பெருமளவில் கிராம மக்கள் இடம்பெயர்வதுதான். இது கிராமங்களின் கட்டமைப்பைப் பலவீனப்படுத்துவதோடு, நகர்ப்புறங்களில் சமூக மற்றும் பொருளாதாரச் சிக்கல்களையும் ஏற்படுத்துகிறது. கிராமங்களில் ஆண்டு முழுவதும் சீரான வேலை இல்லாமை, மழை பொய்த்தல், நீர் பற்றாக்குறை மற்றும் விவசாயச் செலவுகள் அதிகரிப்பு, கடுமையான வறட்சி மற்றும் வெள்ளப் பெருக்கு போன்ற பேரிடர்கள், தரமான கல்வி மற்றும் மருத்துவ வசதிகள் கிராமங்களில் போதுமான அளவு இல்லாமை போன்ற காரணிகள் தனியாகவோ அல்லது இணைந்தோ நகரங்களை நோக்கிய  இடப்பெயர்வைத் தீர்மானிக்கின்றன..

இந்தியாவின் முக்கிய ஆதாரமான விவசாயத் துறையைப் பாதுகாக்காமல் இடம் பெயர்தலைத் தடுக்க முடியாது. உலக நாடுகளில் உள்ள விவசாய நிலப் பரப்பளவில்  இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆண்டில் சராசரியாக 110 செ.மீ மழைவளம் பெற்று, தேவைக்கு ஏற்ப நீர் ஆதாரமும் உழைப்பதற்கு ஆற்றல் படைத்த 54 கோடிக்கும் மேற்பட்ட இளைஞர்களையும் கொண்ட ஒரு நாட்டில் விவசாயம் ஏன் அழிந்து வருகிறது? கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் நாடு முழுவதும் சுமார் 75 லட்சம் ஏக்கர் நிலங்கள் தரிசாக மாறியுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாக மாற்றப்பட்டுவிட்டன எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

கிராமங்களில் வாழும் மக்கள் தங்களின் எதிர்காலம் தேடி முடிவில்லா பயணத்தை துவக்கியிருக்கின்றனர். காந்தியால் முதுகெலும்பாக வர்ணிக்கப்பட்ட விவசாயப் பெருங்குடி மக்கள் முதுகெலும்பு ஒடிந்த நிலையில், நலிவுறு நிலைக்குத் தள்ளப்பட்டு, பிழைப்பைத் தேடி நகரங்களை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். இதன் விளைவாக இந்திய கிராமங்களில் 5,93,731 மக்கள் வசிக்கும் கிராமங்களாகவும் 44,865 மக்கள் வசிக்காத கிராமங்களாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, 16,317 கிராமங்களில் 15,400 மக்கள் வசிக்கும் கிராமங்களாகவும் 917 மக்கள் வசிக்காத கிராமங்களாகவும் உள்ளன.(மக்கள் தொகை கணக்கீடு 2001) இதுவே 1991 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 6,34,321 கிராமங்களும்,  2001 ஆம் ஆண்டு 6,38,365 கிராமங்களும்,   2011 ஆம் ஆண்டு 6,40,867 கிராமங்களும், 2019 ஆம் ஆண்டு 6,64,369 கிராமங்களும் இந்தியாவில் இருந்ததாகக் கணக்கிடப்பட்டது.  68.84%(சுமார் 833.1 மில்லியன்) மக்கள் இந்திய  கிராமங்களில் வாழ்வதாகக் கணக்கிடப்பட்டது. (Indian Village Directory | villageinfo.in) 

இந்தியக் கிராமங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் நகரங்களை நோக்கி இடம் பெயர்ந்ததினால் கிராமங்களின் சமூக பண்பாட்டு மற்றும் பொருளாதார நிலை முற்றிலும் மாறி வருகிறது. இளைஞர்கள் வெளியேறுவதால் கிராமங்களில் விவசாயப் பணிகள் மிகுதியாகப் பாதிக்கப்படுகின்றன. இந்தியாவில் ஆட்கள் இல்லாமல், கைவிடப்பட்ட கிராமங்கள் ‘பேய் கிராமங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன. பல கிராமங்களில் முதியவர்கள் மட்டுமே வசிக்கும் நிலை ஏற்பட்டு வீடுகள் பூட்டப்பட்டுக் கிடக்கின்றன. பாரம்பரியக் கலைகள், கைவினைத் தொழில்கள் மற்றும் கிராமியச் பொழுதுபோக்கு விளையாட்டுகள்  அழிந்து வருகின்றன.

1953ஆம் ஆண்டு கார்ல்.சி. டெய்லர் நடத்திய கணக்கீட்டின்படி,  நகர்ப்புற பணியாளர்களில் 40 சதவீதத்தினர் இடம் பெயர்ந்தவர்களென்றும், அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் கிராமங்களிலிருந்து வந்தவர்களென்றும் கூறப்பட்டது. 60 ஆண்டுகளுக்கு முன் மிகச் சிறிய கிராமங்களிலிருந்து பெரிய கிராமங்களுக்கும் நகர்ப்புறங்களுக்கும் மக்கள் இடம் பெயர்ந்ததற்கான காரணங்களை டெய்லர் இவ்வாறு பட்டியலிடுகிறார். 

  • விவசாயம் மற்றும் கிராமியப் பொருள்கள் வணிகமயமானது 
  • நெடுஞ்சாலை மற்றும் இருப்புப்பாதை மேம்பாடு 
  • கிராமிய கைவினைஞர்கள் சந்தை மையங்களை நோக்கி இடம் பெயர்ந்தது
  • இடைத்தரகர்கள், கிராமியப் பொருள்களை விற்பவர்கள், மாநகரங்களில் தயாரான பொருள்களை கிராமங்களில் விற்பனை செய்பவர்கள் ஆகியோரின் எண்ணிக்கை அதிகரித்தது 

பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் நகரங்களைச் சென்றடைந்த அனைத்து மக்களுக்கும் வாழ்க்கை வசப்படவில்லை. புதிய வாழ்வைத் தேடிச் சென்றவர்கள் அனைவருக்கும் பெரிதாக வாய்ப்புகள் கிட்டவில்ல. எனினும், நகரங்களை நோக்கிய இடப் பெயர்வு இன்றும் பெருமளவில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால், காரணங்களும் தன்மைகளும் சற்று வித்தியாசமானவை. வேலைவாய்ப்பு, வணிகம், கல்வி போன்ற துறைகளில் உலக நாடுகள் கை கோத்துக் கொண்டதுதான், நாடு கடந்த இடப் பெயர்வுக்கு மட்டுமல்லாது, உள்நாட்டு நகரங்களை நோக்கிய இடப் பெயர்வுக்கும் காரணமாக அமைந்துள்ளன. இதே காலகட்டத்தில் தகவல் தொழில்நுட்பத்துறை அடைந்த அபரீதமான வளர்ச்சி, நவீன வசதிகளுடன் கூடிய மருத்துவமனைகள், கல்விக் கூடங்கள் இந்திய நகரங்களை மையமாகக் கொண்ட இடப்பெயர்வை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது. மின்னணு தொழிற்சாலைகள், கனரகத் தொழிற்சாலைகள் போன்றவைகளில் உருவான வேலைவாய்ப்புகள் அதிக அளவில் மக்கள் நகரங்கள் நோக்கிச் செல்வதற்கு ஏதுவாயிற்று. கடந்த இரு மக்கள்தொகை கணக்கெடுப்புகளும் உணர்த்தும் உண்மை என்னவென்றால், பெண்கள் இடம் பெயர்வதும் மிகவும் அதிகரித்திருக்கிறது. 1991ஆம் ஆண்டு முதல் மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் மாநிலத் தலைநகரங்கள் தவிர மாநிலங்களுக்கிடையேயான இடப் பெயர்வும் அதிகமாக நிகழ்ந்துள்ளது. இவ்வாறு இடம் பெயர்தலை குறைக்க அரசு சில திட்டங்களை நடைமுறைபடுத்த வேண்டிய அவசியம் உள்ளது.

  • விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகளையும் மாவட்டங்களில் உள்ள கனிம வளங்களைப் பயன்படுத்தி புதிய தொழிற்சாலைகளையும் உருவாக்கி படித்த கிராமப்புற இளைஞர்களுக்கு அவர்களின் மாவட்டங்களிலேயே அரசு வேலை வாய்ப்புகளை வழங்குவதுடன், கிராம வாழ்க்கையின் மீதான நம்பிக்கையை ஏற்படுத்துவது
  • விவசாய உற்பத்தி பொருட்களுக்கு விவசாயிகள் அடங்கிய குழுவால் விலை நிர்ணயம் செய்யப்பட்டு அவர்களின் வாழ்வாதாரத்தை  பாதுகாப்பது
  • விவசாயத் தொழில் சார்ந்த விதை, உரம் போன்றவைகள் கட்டுப்பாடான விலையில் கிடைக்கச் செய்வது
  • வேளாண் இடுபொருள்கள் விலையேற்றத்திற்கேற்ப  விளைபொருள்களுக்கு, போதிய விலை கிடைக்கச் செய்வது
  • விவசாய விளைபொருள்களைச் சேமித்து, பதப்படுத்தி, பொதிவு (பேக்கிங்) செய்து விற்பனை வாய்ப்பைப் பெருக்குவது 
  • அரசு தொடர்பான  வேலைகள் அனைத்தும் கூடியவரை மாவட்டத் தலைநகர் அளவிலேயே முடிக்கும் அளவுக்கு ஆட்சி நிர்வாகம் அமைவது

நகரமயமாதலின் அடிப்படையே இடப் பெயர்வு தான். 1901ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்கள் தொகை 11.4% ஆக இருந்தது. இது 2001ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்போது 28.53% ஆக அதிகரித்தது. நகர்ப்புற மக்கள் தொகையின் சதவீதம் ஆண்டுதோறும் வளர்ந்து, 1931 ஆம் ஆண்டு அது 12 சதவீதமாக அதிகரித்தது.இது 1951ஆம் ஆண்டில் 17.30 ஆக அதிகரிக்கவே, கிராமப்புற மக்கள் தொகை 82.7 சதவீதமாக குறைந்தது. 1981ஆம் ஆண்டு கிராமப்புற மக்கள் தொகையான  76.7 சதவீதத்திற்கு எதிராக நகர்ப்புற மக்களின் பங்கு 23.30 ஆக அதிகரித்தது. 2001 ஆம் ஆண்டில் நகர்ப்புற மக்கள் தொகை மொத்த மக்கள் தொகையில் 28.50 சதவீதத்தை எட்டியது, 2011 ஆம் ஆண்டில் நகர்ப்புற  மக்கள் தொகை மேலும் அதிகரித்து 31.20 சதவீதமாகியது. மேலும்,  2025 ஆண்டு இது 35.69% ஆக உயர்ந்தது. நகர்ப்புற  மக்களின் இந்த தொடர்ச்சியான வளர்ச்சி நாட்டின் நகர்ப்புறங்களில் சுகாதாரம் மற்றும் செல்வம் தொடர்பான ஆபத்தான பிரச்சினைகளையும்  உருவாக்கியது. நகர்ப்புற  மக்களில் 25 சதவீதம் பேர் இன்னும் வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ள வருமானத்தில் வாழ்கின்றனர். 

கடந்த ஐம்பதாண்டுகளில், இந்தியாவின் நகர்ப்புற மக்கள்தொகை 194.83 சதவீதம் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் கிராமப்புற மக்கள்தொகையோ 63.23 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது. 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, தமிழகத்தில் 48.45 சதவீத மக்கள் அதாவது 3.49 கோடி மக்கள் நகரங்களில் வாழ்ந்தனர். கிராமங்களில் விவசாயப் பாசனத்திறன் மற்றும் பயிரிடும் திறன் தொடர்ந்து குறைந்து வருவது தமிழகத்தின் வேகமான நகரமயமாதலுக்கான காரணமென்றும், தமிழகத்தில் வெறும் 58 சதவீத  நிலங்கள் மட்டுமே தற்போது பாசன வசதி பெறும் நிலையில் உள்ளது என்றும் கூறப்படுகிறது.

நகர வாழ்க்கையாவது நிறைவு தருவதாக உள்ளதா என்றால் அதுவும் ஏமாற்றத்தையே தருவதாக உள்ளது. பெரும்பாலோரிடம் நம்பிக்கை தொலைந்து விரக்தியே வெளிப்படுகிறது. நகர்ப்புறங்களில் உள்ள குழந்தைகளின நிலை தொடர்பாக யுனிசெஃப் வெளியிட்டுள்ள அறிக்கையில், நகர்ப்புறங்களில் பாதுகாப்பான குடிநீர், சுகாதாரம் போதிய அளவு இல்லாமை, ஊட்டச் சத்தின்மை காரணங்களால் ஏழைக் குழந்தைகளுக்கு அதிக அளவு நோய் பாதிப்பு ஏற்படுகிறது. நகரங்களில் வாழும் மூன்றில் ஒரு பகுதியினர், கிராமங்களில் இருந்து குடி பெயர்ந்தவர்கள். மேலும், மூன்றில் ஒரு குடிசை, இருப்புப்பாதைகளை ஒட்டியோ அல்லது ஆற்றின் கரைகளிலோ அமைந்திருப்பதாக ஆய்வு கூறுகிறது. 2001-2011 இடைப்பட்ட காலத்தில் நாட்டில் குடிசைவாழ்  மக்கள் தொகை 130 லட்சத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது, 2001ஆம் ஆண்டு  52,371,589 ஆக இருந்த குடிசைவாழ் மக்கள் தொகை 2011ஆம் ஆண்டு 65,494,604 ஆக உயர்ந்தது. அதே காலகட்டத்தில் நகரங்களின் எண்ணிக்கை 1,743 லிருந்து 2,613 ஆக உயர்ந்ததாக அப்போதைய வீட்டு வசதி  மற்றும் வறுமை ஒழிப்பு அமைச்சர் வெங்கையா நாயுடு இந்திய நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். (‘Slum population rose by 130 lakh between 2001 and 2011: Government’,The Economic Times, Aug 06, 2014) இந்தியாவில், சுமார் 50 ஆயிரம் குடிசைப் பகுதிகள் உள்ள நிலையில், அதில் 70 சதவீதம் தமிழ்நாடு, ஆந்திரம், மேற்கு வங்கம், குஜராத் மற்றும் மகாராஷ்டிரம் ஆகிய ஐந்து மாநிலங்கலில் மட்டும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. 2001ஆம் ஆண்டு சென்னை நகரின் மொத்த மக்கள் தொகையில் 25% க்கும் அதிகமானோர் குடிசைவாசிகள் என்றும், இந்தக் குடிசைவாழ் மக்களில் சுமார் 40% பேர் ஆறுகள் மற்றும் கால்வாய்களின் ஓரமாகவே வாழ்ந்தனர் என்றும், மீதமுள்ளவர்கள் நகரின் நடைபாதைகளில் வாழ்ந்தனர் என்றும் கணக்கிடப்பட்டது. நகர்ப்புறங்களில் வாழும் ஏழைகளின் நிலையை மேம்படுத்த, சுகாதாரத் திட்டங்களில் முதலீடு செய்வது, ஆட்சி நிர்வாகத்தை மேம்படுத்தும் வகையில் வளர்ச்சி திட்டங்கள் கொண்டுவருவது, ஏழைகள், பெண்கள் உள்ளிட்டோர் அனைவருக்கும் சமமான அளவில் அரசு வளங்கள் சென்றடைய வழிவகை செய்வது என்பது உள்பட பல பரிந்துரைகளை யுனிசெஃப் அளித்தது.

வானளாவிய கட்டடங்கள், வசதியான வாழ்விடங்கள், போக்குவரத்து வசதிகள், பரவலான தொழில், வணிக, கல்வி மற்றும் மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகள் என  வளமையான எதிர்காலத்துக்கான வாய்ப்புகள் நகரங்களில்தான் உள்ளன என்ற நம்பிக்கையை ஏற்படுத்துவதால் நகரங்களை நோக்கிய நகர்வு ஓரளவு உளவியல் ரீதியிலானது என்பதை மறுப்பதிற்கில்லை. வாழ்க்கை வாய்க்கப் பெற்றவர்கள் வளம் பெற்றார்கள். கனவுகளால் துரத்தப்பட்டு, கடைசியில் கானல்நீரையே கண்ட கணிசமான மனிதர்கள், குடிசைகளில் தஞ்சம் புகுந்தனர். இது அன்றும் நடந்தது. இன்றும் தொடர்கிறது. உலகின் குடிசைவாழ் மக்களில் 17 சதவீதம் பேர் இந்தியாவில் மட்டுமே வாழ்ந்தனர். 2001ஆம் ஆண்டில், 640 நகரங்கள்/பேரூர்களில் பரவியிருந்த குடிசைப் பகுதிகளில் 4.26 கோடி மக்கள் வசித்து வந்தனர். 2001ஆம் ஆண்டில் பெருநகரங்களில் ஒவ்வொரு ஐந்தாவது நபரும் குடிசைப் பகுதிகளில் வசித்து வந்தனர். 2001 ஆம் ஆண்டு  52 மில்லியனாக இருந்த குடிசைவாழ் மக்களின் எண்ணிக்கையானது 2015ஆம் ஆண்டு  65 மில்லியனுக்கும் அதிகமாகியது. நகர்ப்புற மக்களில் 56 சதவீதத்தினருக்கு குடிசைகளே புகலிடமாக விளங்குகின்றன. மேலும், ஐ.நா.வின் விரிவான மதிப்பீடுகளின்படி, 23 கோடிக்கும் அதிகமான நகர்ப்புற மக்கள் முறைசாரா அல்லது நெரிசலான குடியிருப்புகளில் வாழ்கின்றனர். இந்தியாவில் உள்ள குடிசைவாசிகள், சுத்தமான தண்ணீர் பற்றாக்குறை, குடிசைப் பகுதிகளில் தொடர்ச்சியான இடப்பெயர்வு, கழிவுநீர் அல்லது கழிவுகளை அகற்றும் வசதிகள் இல்லாமை, மாசுபாடு மற்றும் சுகாதாரமற்ற வாழ்க்கைச் சூழல்கள் போன்ற பிரச்சனைகளைத் தொடர்ந்து எதிர்கொள்கின்றனர். 

இடம்பெயரும் மக்கள் நகரங்களில் குறைந்த கூலிக்கு தற்காலிகப் பணியாளர்களாக மாறுவதும், நகர்ப்புற குடிசைப்  பகுதிகளில் அடிப்படை வசதிகளின்றி சிரமப்படுவதும், புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உரிய சமூகப் பாதுகாப்பும் அரசின் சலுகைகளும் கிடைப்பதில் சிக்கல்கள் காணப்படுவதும் இயல்பாகிவிட்டது. இந்தியாவின் பெரும்பான்மை மக்களை இடம்பெயரச் செய்து மலிவுக் கூலிகளாக நகர்ப்புறக் குடிசைப் பகுதிகளில் மோசமான வாழ்க்கை சூழலுக்குத் தள்ளும் முதலாளித்துவ நகர்மய, எந்திரமய வாழ்க்கை முறை நிறைவு தருவதாக இல்லை. நகரங்களுக்கு மாற்றாக,  கிராம தன்னிறைவு மற்றும் கிராம சுயராஜ்யத்தை காந்தி வலியுறுத்தினார்.விவசாயத்தை மையமாகக் கொண்ட பொருளாதாரம் மேம்பட வேண்டும். கிராமங்களிலேயே வேலைவாய்ப்புகளை உருவாக்க தொழில்களை ஊக்குவிக்க வேண்டும்.விவசாயத்திற்குத் தேவையான நீர் மேலாண்மை மற்றும் நவீன உதவிகளை வழங்க வேண்டும்.கிராமப்புறங்களில் கல்வி, சுகாதாரம் மற்றும் பிற  வசதிகளை மேம்படுத்த வேண்டும். கிராமங்களை மையமாகக் கொண்டு பல்வேறு துறைகளின் வேலைவாய்ப்புகள் அதிகரிக்க அதிகரிக்க இந்திய கிராமங்களிலிருந்து இடம்பெயரும் மக்களின் எண்ணிக்கை நாளடைவில் குறைவதற்கான சாத்தியக்கூறுகள் உருவாகும்.

பட்டினியும்  ஊட்டச்சத்து குறைபாடும்

பட்டினியும் ஊட்டச்சத்து குறைபாடும் மனித ஆரோக்கியத்தையும் நாட்டின் வளர்ச்சியையும் பாதிக்கும் இரண்டு முக்கிய பிரச்சினைகள் ஆகும். 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்புகளில் கிட்டத்தட்ட பாதியளவிற்கும், கர்ப்பிணிப் பெண்களின் இறப்புகளில் ஐந்தில் ஒரு பங்கிற்கும் ஊட்டச்சத்துக் குறைபாடே அடிப்படைக் காரணமாக உள்ளது.சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட உலகளாவிய பட்டினி அட்டவணை அறிக்கையில், 1994 முதல் 2013 வரை, இந்தியாவில் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்கள் 45 சதவீதத்திலிருந்து 2 சதவீதமாகக் குறைந்துள்ளதாகக் கூறியது. அதாவது, 13.3 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. எனினும், இந்தியாவின் இந்த வளர்ச்சி அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கியதாக இல்லை என்று அறிக்கை சுட்டிக்காட்டியது.  2012 நிலவரப்படி வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களில் 43%  பழங்குடியினர்; 29% பட்டியல் இனத்தவர். 2012 ஜனவரி மாதத்தில் ‘இந்தியாவின் பட்டினியும் சத்துக் குறைபாடும்’ குறித்து, நாந்தி பவுண்டேஷன் வழங்கிய அறிக்கையில் இந்தியாவின் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 42 சதவீதத்தினர் பட்டினியாலும் ஊட்டச்சத்துக் குறைபாட்டாலும் எடை குறைந்து அவதிப்படுவதாக தெரிவித்தது. இதனை ஒரு ‘தேசிய அவமானம்’ என அப்போதைய பிரதமர் வருத்தத்துடன் குறிப்பிட்டார். இந்தியாவில் மொத்த மக்கள்தொகையில் ஊட்டச்சத்துக் குறைபாடு 2004-06ஆம் ஆண்டு 21.7 சதவீதத்திலிருந்து 2017-19 ஆம் ஆண்டு 189.2 மில்லியன் மக்கள் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களாகவும், அதாவது  14 சதவீதமாகக் குறைந்திருப்பது நம்பிக்கை அளிப்பதாக இருந்தது. (‘Number of undernourished people in India fell by 60 mn in 2017-19: UN, Business Standard, PTI |  United Nations, July 15, 2020) 

1924 அக்டோபர் மாதம் வெளியிடப்பட்ட உலக பட்டினிக் குறியீடு (Global Hunger Index) தரவரிசையில் இந்தியா மொத்தமுள்ள 127 நாடுகளில் 105ஆவது இடத்தை பிடித்துள்ளதாகச் செய்திகள் வெளியானது. உலகில் உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்தின் நிலை குறித்த  அமைப்பு வெளியிட்டுள்ள தரவுகளின் படி, இந்தியாவில் 53% பெண்கள் இரத்த சோகை நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இது உலகிலே மிக அதிகமான எண்ணிக்கையாகும். கர்ப்பிணிப் பெண்கள் இரத்தசோகை நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் பிறக்கும் குழந்தைகளுக்கும் பாதிப்புகள் வர அதிகமான வாய்ப்புகள் இருக்கிறது. இந்த இரத்த சோகை நோயும் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் தொடர்புடையதுதான். மேலும், இரும்பு, ஃபோலைட், துத்தநாகம், விட்டமின்கள் போன்ற நுன்னூட்டச் சத்துகள் குறைபாட்டால் ஏற்படும் பாதிப்பு ’மறைமுக பட்டினி(Hidden Hunger)’ என்று அழைக்கப்படுகிறது. இந்த ’மறைமுக பட்டினியால்’ இந்தியாவில் 80% இளம் பருவத்தினர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். (கலைச் செல்வன், ‘இந்தியாவில் பட்டினியும் ஊட்டச்சத்துக் குறைபாடும்!’, You turn, 17 அக்டோபர், 2024)

நடுவண் அரசின் புள்ளி விவரங்கள் மற்றும் ஆய்வறிக்கைகள் கிராமங்களின் நெருக்கடியை ஒப்புக் கொள்கின்றனவே தவிர, மாற்று நடவடிக்கைக்கான திட்ட ஒதுக்கீட்டை உயர்த்திட முன்வரவில்லை.“இந்தியா கிராமங்களின் நாடு எனினும், கிராமங்களில் வாழ்பவர்களில் 50 சதவீதத்தினர் சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் ஏழ்மையிலேதான் இருக்கின்றனர்.” என்று ஊரக வளர்ச்சி குறித்த பதினோறாவது ஐந்தாண்டு திட்ட அறிக்கையில் கூறப்பட்டது. இந்நிலையை மாற்ற கிராமங்களின் அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்துவது, அதாவது பள்ளிகள், மருத்துவ வசதிகள், சாலை, மின்சாரம், குடிநீர், போக்குவரத்து போன்ற தேவைகளைப் பூர்த்தி செய்வது, விவசாய உற்பத்தியை அதிகப்படுத்துவது, விவசாயம் சார்ந்த தொழில்களை உருவாக்குவது, அதன்மூலம் வேலை வாய்ப்புகளை அதிகப்படுத்துவது போன்றவற்றைப்  பதினோறாவது ஐந்தாண்டு திட்டம் கூறியது. கடந்த 2010-11 நிதி ஆண்டில் நடுவண் அரசு கிராமப்புற குடிநீர் திட்டத்திற்கு ரூ.9000 கோடியும், கழிப்பிட வசதிக்காக ரூ.1580 கோடியும் ஒதுக்கீடு செய்தது. கிராமப்புற இந்தியாவை முன்னேற்றுவதற்காகக் கொண்டுவந்த அனைத்து திட்டங்களும் சாத்தியப்படாமல் அந்த ஐந்தாண்டு திட்டம் முடிந்துபோனது என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டின் சுதந்திரதின விழாவை ஒட்டி உரையாற்றிய அப்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, “இந்தியாவிலிருந்து வறுமை நோய், பசிக் கொடுமையை அகற்றுவதற்கான இரண்டாவது சுதந்திரப் போராட்டத்தை நடத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது” என்று தெரிவித்தார். ஆனால், வறுமையின் பிடியிலிருந்து இந்திய நாட்டவர்களை விடுவிக்கின்ற விடுதலைப் போர் என்னவானது அன்பது தெரியவில்லை.

சுகாதாரம்

‘கிராமப்புற மறுசீரமைப்பில் கிராமப்புற சுகாதாரம் சேர்க்கப்படாவிட்டால், நமது கிராமங்கள் இன்று இருப்பது போலவே சாணக் குவியல்களாகவே இருக்கும். கிராமப்புற சுகாதாரம் கிராம வாழ்வின் ஒரு இன்றியமையாத பகுதியாகும்; அது எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு கடினமானதும் ஆகும். பன்னெடுங்கால சுகாதாரமின்மையை ஒழிப்பதற்கு ஒரு மாபெரும் முயற்சி தேவைப்படுகிறது. கிராமப்புற சுகாதார அறிவியலை அறியாத, துப்புரவுப் பணியில் வெற்றி பெறாத கிராமத் தொழிலாளி, கிராம சேவைக்குத் தன்னைத் தகுதிப்படுத்திக் கொள்ள முடியாது.கிராம மக்கள் தங்கள் கிராமத்தைச் சுத்தமாக வைத்திருப்பதைக் கடமையாகக் கொண்டிருக்க வேண்டும். கிராம சுகாதாரம், வீட்டுத் தூய்மை, தனிநபர் சுகாதாரம் மற்றும் உடல்நலப் பராமரிப்பு ஆகியவற்றுக்கு முதலிடமும் முழு நோக்கமும் உண்டு. இவை செய்யப்படும்போது எந்த நோயும் ஏற்படாது’ என்பதே காந்தியின்  கருத்து. (Letter to D.D. Joshi, 1-8-1946; CWMG,85:105)

1935 மார்ச் 29ஆம் நாள் காந்தி அரிஜன் இதழில் எழுதுகையில்,  “பெரும்பாலான மருத்துவ உதவிகள், மக்களை மேலும் உதவியற்றவர்களாக்குவதற்காகவே வழங்கப்படுகின்றன. பெரும்பாலான சந்தர்ப்பங்களில், மருத்துவ உதவி அவர்கள் மீது கிட்டத்தட்ட வீசப்படுகிறது, அதனால் அது அவர்களுக்குப் பயனற்றுப் போகிறது. என் சக ஊழியர்களில் சிலர் அருகிலுள்ள ஒரு கிராமத்திற்குச் செல்கிறார்கள், அங்கு தெருக்கள் முழுவதும் அசுத்தம் நிறைந்துள்ளது. அங்குள்ள குழந்தைகளின் கண்கள் பாதிக்கப்பட்டிருப்பதிலும், எல்லா விதமான நோய்களும் பரவியிருப்பதிலும் ஆச்சரியமில்லை. தற்போதைக்கு எங்கள் ஊழியர்களின் முயற்சிகள் கிராமவாசிகளிடம் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்துவதாகத் தெரியவில்லை; ஆனால், தங்கள் கிராமம் தூய்மையாகவும் அசுத்தமின்றியும் மாறியதன் விளைவாக, தாங்களும் ஒப்பீட்டளவில் நோயிலிருந்து விடுபட்டிருப்பதை அவர்கள் காணும்போது, ​​அந்த வித்தியாசத்தை அவர்கள் பாராட்டுவார்கள். இப்போது, ​​நீங்கள் அங்கே ஒரு இலவச மருந்தகத்தை வைத்து, அங்கு வரும் அனைவருக்கும் மருந்துகளைக் கொடுத்தாலும், உங்களால் எந்த முன்னேற்றமும் காண முடியாது. கிராமத்தின் சுகாதாரத்தை மேம்படுத்துவது மட்டுமே உண்மையான, குறிப்பிடத்தக்க பணியாகும். நம் வீட்டு வாசலிலேயே ஒரு தீமை இருக்கிறது, அதை முழுமையாகத் தடுக்க முடியும், ஆனாலும், பல ஆண்டுகளாக கிராமவாசிகள் அதைச் சகித்துக்கொள்ள நாம் அனுமதித்துவிட்டோம். இது ஒரு கடினமான பணி, அதேசமயம் இலவச மருந்துகளை விநியோகிப்பது மிகவும் எளிதானது. சுலபமானது. ஆனால், சுலபமான வழியையும் மலிவான கைதட்டல்களையும் தவிர்க்குமாறு என் சக ஊழியர்களிடம் நான் கேட்டுக்கொள்கிறேன். நாம் முதலில் நோய் தடுப்பில் கவனம் செலுத்த வேண்டும், நோயை நாம் பின்னர் சமாளிக்கலாம்’. (Harijan, 29-3-1935; CWMG, 60:324.)

பன்னாட்டு மற்றும் உள்நாட்டு பெரும் மருந்து நிறுவனங்களின் கழுகுப் பார்வை தற்போது இந்திய கிராமங்களை நோக்கித் திரும்பியிருக்கிறது. வளர்ந்து வரும் மக்கள்தொகையையும், நீரிழிவு மற்றும் இருதய நோய்கள் போன்ற அதிகரித்து வரும் நாள்பட்ட வாழ்க்கைமுறை நோய்களையும் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் நோக்கில், இந்தியாவின் கிராமப்புற சந்தைகளை அவைகள்  குறிவைக்கின்றன.புதிய சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்தவும், மருத்துவப் பரிசோதனைகளைக் குறைந்த செலவில் மேற்கொள்ளவும் பெரும் மருந்து நிறுவனங்கள் இந்திய கிராமங்கள் மீது  கவனம் செலுத்துகின்றன. இந்திய முன்னணி மருந்து நிறுவனங்களின் மொத்த வருவாயில் இந்திய கிராமப்புறங்களின் பங்களிப்பு வெறும் 5 முதல் 10 சதவிகிதம் மட்டுமே. ஆகையால் மொத்தக் கிராமங்களிலும் ஊடுருவி, தத்தம்  நிறுவனங்களின் மருந்தை விற்பனை செய்து பெருத்த  லாபம் பெற மருந்து நிறுவனங்கள் இந்திய கிராமங்களை நோக்கிப்  படையெடுத்துக்  கொண்டிருக்கின்றன.

பொதுவாக, இந்திய கிராமங்களைப் பொறுத்த வரையில் சுகாதாரம் என்பது முழுக்க முழுக்க அரசைச் சார்ந்தே இருக்கிறது. இன்று வரை கிராமப்புற சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் மக்களின் கூட்டம் அலைமோதிக் கொண்டிருக்கிறது. அதனால் தான், கிராமப்புறங்களில் உள்ள ஒரு தனிநபரின் ஆண்டு சராசரி மருத்துவச் செலவு ரூ.100/- ஆக இருக்கிறது. பாரம்பரிய மருத்துவ முறைகளிலான சிகிச்சை முறைகளும் இதற்கு ஒரு வகையில் காரணமாக இருக்கிறது.அதே நேரத்தில் நகர்ப்புறத்தில் உள்ள தனிநபரின் சராசரி மருத்துவ செலவு ரூ.2000 ஆக உள்ளது. இதற்கு  காரணம், நகர்ப்புறங்களில் பெரும்பாலும் தனியார் மருத்துவமனைகள் மற்றும் தனியார் உற்பத்தி செய்யும் மருந்துகளைச் சார்ந்தே பெரும்பகுதி மக்கள் இருக்கின்றனர். 

அரசின் கட்டுப்பாட்டில் சுகாதாரம் இருக்கும் வரையில்தான் அது எளிதில் ஏழைகளைச் சென்றடையும். அதுவே தனியாரிடம் சென்றாலோ அல்லது அத்துறையில் தனியாரின் ஆதிக்கம் அதிகரித்தாலோ ஏழைகளுக்குச் சுகாதாரமும் எட்டாக்கனியாகவே மாறிவிடும். இது ஒருபுறம் என்றால், மறுபுறம் இந்தியாவில் விற்கப்படும் மருந்துகளில் சுமார் 10.5% தரமற்றவை மற்றும் பொய்யானவை என்று  2017 ஆம் ஆண்டில் உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கை கூறியது. இது தவிர உலக அளவில் தடைசெய்யப்பட்ட பல்வேறு மருந்துகள் இந்தியாவில் தங்குதடையின்றி விற்பனை செய்யப்படுகின்றன என்ற குற்றச்சாட்டும் உண்டு. இந்தியாவில் திட்டக் குழுவுக்கு அளிக்கப்பட்டுள்ள புள்ளிவிவரத்தின்படி, 2011-12 நிதியாண்டில் இந்திய வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்பட்ட மருந்து மாத்திரைகளின் அளவு ரூ.56,000 கோடி. இந்த மருந்துகள் அரசு மருத்துவமனையால் கொள்முதல் செய்யப்படும் விலைக்கும், வெளிச்சந்தையில் விற்கப்படும் விலைக்கும் உள்ள வித்தியாசம் 100% முதல் 500% வரை.  இதனைக் கண்காணிக்க உரிய ஏற்பாடு முறையாக இல்லை. இந்நிலையில் கிராமப்புறங்களில் தனியார் நிறுவனங்கள் புகுந்து ஆக்கிரமிப்புச் செய்தால், கிராமப்புற மக்கள் சோதனை எலிகளாக மாற்றப்படும் அபாயமும் இருக்கிறது. எனவே கிராமப்புற சுகாதாரம் முழுவதையும் அரசே கையில் வைத்திருக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

நாட்டின் தற்போதைய மக்கள்தொகை மதிப்பீடான 148 கோடியில், பதிவுசெய்யப்பட்ட அலோபதி மருத்துவர்கள்: 13.86 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களும். பிற பிரிவுகளில் 7.51 லட்சம் பதிவுசெய்யப்பட்ட மருத்துவர்களும் சுமார் 42.94 லட்சம் பதிவு செய்யப்பட்ட செவிலியர்களும்  உள்ளனர். 2014ஆம் ஆண்டு 387ஆக இருந்த நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை தற்போது 818 ஆகவும், 51,348 ஆக இருந்த இளநிலை (UG) இடங்கள் 1,28,875 ஆகவும்; மற்றும் 31,185 ஆக இருந்த  முதுநிலை (PG) இடங்கள் 82,059 ஆகவும் அதிகரித்துள்ளன. (The Hindu, December 02, 2025) தற்போது ஒவ்வொரு 811 இந்தியர்களுக்கும் ஒரு மருத்துவர் இருக்கிறார். இது 1,000 பேருக்கு ஒரு மருத்துவர் என்ற உலக சுகாதார அமைப்பு  பரிந்துரைத்த விதிமுறையைவிட கூடுதலாகவே உள்ளது. எனினும், ஏறக்குறைய 70 முதல் 75 சதவிகித மருத்துவர்கள் நகர்ப்புறங்களில் பணியாற்றுவதால், கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளுக்குப் போதுமான சேவைகள் கிடைப்பதில்லை. நகர்ப்புறத்தில் ஐநூறு பேருக்கு ஒரு மருத்துவர் என்றால், கிராமப்புறத்தில் 25 ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் என்ற நிலை இன்றும் நீடிக்கிறது. கிராமப்புற சுகாதார சேவைகள் திருப்திகரமாக இல்லை என்பதை மறுக்க முடியாது.கிராமப்புற சுகாதாரத்தை உத்தரவாதப்படுத்த மத்திய, மாநில  அரசுகள் இன்னும் கூடுதலாக முக்கியத்துவம் அளித்திட வேண்டும். பன்னாட்டு மற்றும் உள்நாட்டு தனியார் பெரும்நிறுவனங்களின் சோதனைக்களமாக இந்திய கிராமங்களை மாற்ற ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.

மின்சாரம்

1950 வரை இந்தியாவில்  3,061 கிராமங்கள் மட்டுமே மின்சாரம் பெற்றவைகளாக இருந்தன. அடுத்த  15 ஆண்டுகளில் அதுவே 45,000க்கும் அதிகமான கிராமங்களாகவும், அடுத்த  15 ஆண்டுகளில் 2 லட்சத்துக்கு மேற்பட்ட கிராமங்களாகவும், அடுத்த 10 ஆண்டுகளில் 2.2 லட்சமாகவும் அதிகரித்தது. ஆனால், 1991-2003 வரையிலான பொருளாதார தாராளமய காலத்தில் எண்ணிக்கை குறைந்து 44,000 கிராமங்கள் மட்டுமே மின்சாரம் பெற்றன.  (‘Learning with the Times: Why 17% homes have no electricity in 100% electrified India’, The Times of India,  May 7, 2018) கடந்த 20 ஆண்டுகளில் 45 கோடி மக்களுக்கு மின்சாரம் கிடைப்பதில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது. முந்தைய காங்கிரஸ் தலைமையிலான அரசு, ராஜீவ் காந்தியின் கிராமீன் வித்யுத்கரன் யோஜனா என்ற கிராமப்புற மின்மயமாக்கல் திட்டம் கீழ், 2005-06 முதல் 2013-14 வரையிலான காலகட்டத்தில் 108,280 கிராமங்களை மின் கட்டமைப்புடன் இணைத்திருந்தது. 2014 முதல் 2017 வரை, பாஜகவின் கிராமப்புற மின்மயமாக்கல் இயக்கத்தின் கீழ், 14,528 கிராமங்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. சராசரியாக, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) அரசு ஆண்டுக்கு 12,030 கிராமங்களுக்கு மின்சாரம் வழங்கியது, அதேசமயம் பாஜக அரசு 4,842 கிராமங்களுக்கு மட்டுமே மின்சாரம் வழங்கியுள்ளது. இது UPA-வின் சராசரியில் பாதிக்கும் குறைவானதாகும்.Hindustan Times, May 26, 2017 மின்சார அமைச்சகத்தின் கிராமீன் வித்யுதிகரன் தரவுகளின்படி, மே 25, 2017 நிலவரப்படி 13,523 கிராமங்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது, ஆனால் 1,089 கிராமங்களில் மட்டுமே 100% வீடுகளுக்கான மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி 2018 ஏப்ரல் 29 அன்று, இந்தியா தனது 6,00,000-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 100 சதவிகிதம் மின்மயமாக்கப்பட்டுள்ளதாக பெருமையுடன் அறிவித்தார். இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் உள்ள லீசாங் கிராமமே நாட்டில் கடைசியாக மின்சார வசதி பெற்ற கிராமமாக அப்போது அறிவிக்கப்பட்டது. 

ஆனால், உண்மை என்னவென்றால், இந்தியா 100 சதவீதம் மின்மயமாக்கப்படுவதில் இருந்து வெகு தொலைவில் உள்ளது. 1919 பொதுத் தேர்தலில் அரசியல் லாபத்தை அறுவடை செய்ய விரும்பி உண்மை மறைக்கப்பட்டது. (Anindya Banerjee and Rohit Kumar Singh, ‘Modi claims all Indian villages have electricity but India Today report says otherwise’. India Today, Apr 30, 2018) அதிகாரபூர்வ தரவுகளின்படி, இந்தியாவின் 18,452 கிராமங்களில் 1,417 கிராமங்கள் அல்லது மொத்தத்தில் 7.3% மட்டுமே 100% வீட்டு இணைப்புகளைப் பெற்றுள்ளன. மேலும் சுமார் 31 மில்லியன் வீடுகள் இன்னும் இருளில் தான் உள்ளன. மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம் 360,000 கிராமங்களில் 2018 ஆம் ஆண்டு தனித்தனியாக நடத்திய ஆய்வில் 14,700 க்கும் மேற்பட்ட கிராமங்களில் வீட்டு உபயோகத்திற்கு மின்சாரம் இல்லை.(Bhasker Tripathi, ‘15 Million Indian Households Have Meters But No Electricity’, IndiaSpend World 01 Nov 2018) உலகில் மின்சார வசதி இல்லாத 5.3 கோடி பேரில் 64 லட்சம் பேர் இந்தியாவில் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் ஆசிய மற்றும் பசிபிக் பொருளாதார மற்றும் சமூக ஆணையத்தின் (ESCAP) அறிக்கை கூறியது. 2025 ஆம் ஆண்டின் கள அறிக்கைகள், ஒடிசாவின் குறிப்பிட்ட குக்கிராமங்கள் (குஞ்சாபின் சாகோகரி மற்றும் கஜபதியின் படாசாகி போன்றவை) மற்றும் மத்தியப் பிரதேசத்தின் சில பகுதிகள் (அலிராஜ்பூர் போன்றவை) போன்ற பல தொலைதூர, மலைப்பாங்கான மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில், மின்சாரக் கட்டமைப்பு முற்றிலும் இல்லாத நிலை நிலவுவதை எடுத்துக்காட்டுகின்றன.

‘கிராமப்புறங்களில்தான் இந்தியாவின் ஆன்மா குடி கொண்டு இருக்கிறது’ என்பது காந்தியடிகளின் அற்புதமான வரிகள். “இந்தியாவின் வளர்ச்சி கிராமங்களில் உள்ளது” என்றார் அவர். கிராமப்புறங்கள் வளர்ந்தால் இந்தியா வல்லரசாகிவிடும் என்று கருதினார் முன்னாள் இந்திய குடியரசு தலைவர் டாக்டர் அப்துல் கலாம். கிராமங்கள் முன்னேறாமல் நாடு முழு வளர்ச்சியைப் பெற்றுவிட முடியாது. இந்திய கிராமங்கள் வெகுகாலமாவே ஏராளமான பிரச்சனைகளால் பீடிக்கப்பட்டிருப்பது நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் சவாலாகவே உள்ளது. இந்தியாவின் நகர்ப்புற  மற்றும் கிராமப்புற வளர்ச்சியை ஒப்பிடுகிறபோது எல்லா துறைகளிலும் கிராமப் புறத்தின் வளர்ச்சி பின்தங்கியிருப்பது தெரியவருகிறது. அவை தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதும், முதலீடுகள் ஏதும் இல்லாதிருப்பதும் பின்தங்கலுக்கான முக்கியமான காரணம் ஆகும். கிராமப்புறங்களில் முதலீடுகள் செய்யப்படுவதற்கான சூழலை உருவாக்க அரசு ஆர்வம் காட்டவேண்டும்.

மகாத்மா காந்தி இந்தியக் கிராமங்கள் பாரம்பரியமாகத் தன்னிறைவு பெற்றவை என்று கூறியதுடன் மட்டுமல்லாமல், கிராமங்கள் அவற்றின் களங்கமற்ற தன்னிறைவை மீட்டெடுக்கும் ஒரு அரசியல் திட்டத்தையும் வகுத்தளித்தார். தன்னாட்சி, தன்னிறைவு, சுயதொழில் செய்யும் மக்கள் கிராம சமூகங்களில் வாழ்ந்து, தங்கள் விளைபொருட்களிலிருந்து தங்களின் நியாயமான வாழ்வாதாரத்தைப் பெறுவதே மகாத்மா காந்தியின் சுதந்திர இந்தியா குறித்த கனவாக இருந்தது. காந்தியின் கனவு திட்டமான கிராம சுயராஜ்யம் என்பது ஒரு நல்ல திட்டம். ஆனால், சாதி வேற்றுமையை அடிப்படையாகக் கொண்ட சாதிய ஆதிக்கத்தில் திளைக்கும் கிராமங்கள், சமத்துவமற்ற சாதி ராஜ்யமாக இருக்குமே தவிர, சுயராஜ்யமாக இருக்க வாய்ப்பில்லை என்ற பார்வையும் சிலருக்கு இருந்தது. இந்தியக் கிராமம் குறித்த எதிர்மறையான பார்வைகள் மிகவும் பரவலாக உள்ளன. பலர் இந்தியாவில் உள்ள கிராம வாழ்க்கையை, இறுக்கமான ஆணாதிக்க விழுமியங்கள், ஒடுக்குமுறை நிறைந்த சாதிப் படிநிலை மற்றும் தனிமனித சுதந்திரம் மறுக்கப்படுதல் ஆகியவற்றுடன் தொடர்புபடுத்துகின்றனர். பெரும்பாலும் கல்வியறிவின்மையால் ஏற்படும் அறியாமை உணர்வு அதன் மக்களிடையே நிலவுவதாகக் கருதப்படுவதால் அத்தகைய கிராமம் கண்டிக்கப்படுகிறது. முறையான, மேற்கத்திய முறைக் கல்வி இல்லாதது, பகுத்தறிவுடன் சிந்திக்கவும் செயல்படவும் முற்றிலும் இயலாமையைக் குறிப்பதாக ஊகிக்கப்படுகிறது. இதனால், கிராமப்புற மக்கள் சமூக ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் ஒரு “பின்தங்கிய” வாழ்க்கை முறையைப் பின்பற்றுபவர்களாகப் பரந்த உலகத்தால் பார்க்கப்படுவதற்கு முன்கூட்டியே தீர்மானிக்கப்படுகிறார்கள். எனவே, ஒரு கிராமம் என்பது “பின்தங்கிய” ஓர் இடமாகக் கருதப்படுகிறது. (Surinder S. Jodhka,’ The Indian village isn’t going anywhere!’, Frontline Magazine,  Feb 22, 2024) காந்தி மற்றும் நேருவைப் போலல்லாமல், அம்பேத்கர் ஒரு தலித் குழந்தையாக கிராம வாழ்க்கையை நேரடியாக அனுபவித்தவர். அவர் இந்தியக் கிராமம் குறித்து ஒரு தீவிரமான விமர்சனத்தை முன்வைத்தார். கிராமக் குடியரசுகள் ஜனநாயகத்திற்கு அருகில்கூட இல்லாதவை என்றும், மாறாக அவை இந்தியாவின் அழிவுக்கே காரணம் என்றும் அவர் சித்தரித்தார். அவரைப் பொறுத்தவரை, கிராமம் என்பது உள்ளூர்வாதத்தின் படுகுழி, அறியாமை, குறுகிய மனப்பான்மை மற்றும் வகுப்புவாதத்தின் இருப்பிடம். புறக்கணிப்பு, சுரண்டல் மற்றும் தீண்டாமை ஆகியவற்றால் அது அடையாளப்படுத்தப்படுகிறது.

இந்தியாவின் நகரங்கள் வேகமாக வளர்ந்து வருகின்றன, ஆனால் அதன் பலனை அனைவரும் சமமாகப் பெறுவதில்லை. உண்மையில், நகர்ப்புறங்களில் வாழும் இந்தியர்களில் ஆறில் ஒருவர் குடிசைப் பகுதி  ஒன்றில் வாழ்கிறார், மேலும் இந்த எண்ணிக்கை பல ஆண்டுகளாகத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நகர்ப்புற குடிசைப் பகுதிகளில் சுமார் 8.8 மில்லியன் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன; இதில், அறிவிக்கப்பட்ட குடிசைப் பகுதிகளில் ஏறத்தாழ 5.6 மில்லியன் குடும்பங்களும், அறிவிக்கப்படாத குடிசைப் பகுதிகளில் 3.2 மில்லியன் குடும்பங்களும் அடங்கும். பெரும்பாலான நகரங்களில் 50 சதவீதத்துக்கும் மேல், குடிசைப் பகுதிகளாகவும், வசதியற்ற தன்மைகளுடன் வாழத் தகுதியற்றவைகளாக உள்ளன. அங்குள்ள மக்கள் புறநகர்ப் பகுதிகளில் வசிப்பதால் அன்றாட வேலைக்குச சென்று வருவதிலேயே களைத்து சோர்ந்து விடுகிறார்கள். எனவே சாலை வளையங்கள் மூலம் கிராமத் தொகுப்புகளை இணைத்து ஒரு கிராமத்திலிருந்து இன்னொரு கிராமத்துக்கு போக்குவரத்தை எளிதாக்க வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகள் கிராமங்கள் தன்னிறைவு பெற வழி வகுக்கும்.

கிராமங்களில் உள்ள ஏழைகள் பல அவமானங்களைச் சகித்துக்கொண்டு வாழ்கின்றனர். ஆதிக்க வர்க்கத்தினராலும்  அதிகாரத்தில் இருப்பவர்களாலும் சிலபல நேரங்களில் தங்கள் சுயமரியாதையை இழந்து தவிக்கின்றனர். அவர்கள் தங்கள் துன்பங்களுக்கு முந்தைய பிறவிகளில் செய்த பாவங்களே காரணம் என்றும் ஒரு சிறந்த வாழ்க்கையைப் பெற வேண்டுமாயின், அதிக புண்ணியங்களுடன் மறுபிறவி எடுக்க வேண்டும் என்றும் சில பகுதிகளில் ஆதிக்க சாதியினரால் புகட்டும் நிலை உள்ளது. துன்பங்களிலிருந்து தப்பிக்க வழியில்லை என்ற உறுதியான நம்பிக்கை அவர்களை உதவியற்றவர்களாக்கியுள்ளது. கிராமங்கள் வாழத்தகுதியற்றவை என்ற எண்ணம் ஆளும் அரசுகளின் அலட்சிய செயல்பாட்டால்தான் உருவாக்கப்படுகின்றன. இந்த எண்ணங்கள் செயற்கையானவை; உண்மையில்,  கிராமங்கள் இயற்கையானவை. மக்கள் தம் வேர்களைத் தேடிச் சென்று, மன அமைதியைப் பெறக்கூடிய உன்னதமான இடங்களாக கிராமங்கள் திகழ்கின்றன. ஒவ்வொரு கிராமமும் தன்னிறைவு பெற்ற ஓர் அலகாக இருக்க வேண்டும் என்பதுதான் காந்தியின்  கனவு. அவரது கனவு கிராமம் என்பது மற்றவர்களைச் சார்ந்திராமல், தன் பலத்தால் உயர்ந்து, அமைதியும் சுகாதாரமும் நிறைந்த ஒரு சுதந்திரச் சமூகமாகும். காந்தியடிகளின் இலட்சிய உலகம் இந்திய கிராமங்களுக்கு ஒரு நிறைவேறாத கனவாகவே இருந்து வருகிறது. இது வருத்தமளிப்பதாக இருந்தாலும், புறக்கணிக்கப்பட்ட இந்தியர்கள் மட்டுமே இப்போது கிராமங்களில் வாழ்கிறார்கள் என்று கூறப்படுவதுண்டு. (Sanjiv Phansalkar, ‘Only neglected india lives in the villages,’ Village Square,  02 October 2019) 

வாழ்வாதாரத்திற்காக இளைஞர்கள் பெருமளவில் நகரங்களை நோக்கிப் புலம்பெயர்வதால், கிராமங்கள் முதியவர்களின் புகலிடமாக மாறி வருகின்றன. மாற்றங்கள் ஏற்றங்களைத் தந்தது மகிழ்ச்சியே; ஆனால், சில மாற்றங்கள் ஏமாற்றங்களைத் தந்ததுதான் வேதனை. நகரங்களின் அசுர வளர்ச்சி கிராமங்களின் தனித்துவத்தையும், வாழ்வாதாரத்தையும் மெல்ல மெல்ல அழித்து வருகிறது. நகரங்களின் வளர்ச்சியால் “நாட்டின் முதுகெலும்பு” என்று போற்றப்பட்ட கிராமங்கள் முதுகெலும்பு வளைந்து நலிவடைந்து கொண்டிருக்கிறது என்பது தான்  கசப்பான உண்மையாகும். கிராமங்களின் முதுகெலும்பை மீண்டும் நிமிர்த்த வேண்டுமானால், விவசாய விளைபொருட்களுக்கு முறையான விலை, கிராமங்களிலேயே சிறு குறு தொழில்கள் தொடங்குவதற்கான வாய்ப்புகள் மற்றும் நகரங்களுக்கு இணையான கல்வி, மருத்துவ வசதிகள் கிராமப்புறங்களில் உருவாக்கப்பட வேண்டும். காந்தி கண்ட கிராம சுயராஜ்யம் என்பது வெறும் அரசியல் அதிகாரம் சார்ந்தது மட்டுமல்ல; அது ஒரு முழுமையான தற்சார்பு வாழ்க்கை முறையாகும். கிராமங்கள் சுயசார்பு பெற்றால் மட்டுமே நாட்டின் பொருளாதாரம் வலுவடையும். கிராமங்களின் வளர்ச்சியே நாட்டின் உண்மையான வளர்ச்சி என்பதை உணர்ந்து அரசும் மக்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். ‘நகரங்களில் வாழும் இந்த தலைமுறை கிராமப்புற இந்தியாவுடனான தனது தொடர்பை இழந்துவிட்டது. அடுத்து வரும் தலைமுறைக்கு, அப்படி ஒரு தொடர்பு இருந்ததே தெரியாது’ என்ற நிலை உருவாகி இருக்கிறது என்பதுதான் உண்மை. நமது அடுத்த தலைமுறை வெறும் இயந்திரங்களாக மாறாமல், மண்ணின் மதிப்பையும் மனித நேயத்தையும் உணர்ந்தவர்களாக வளர வேண்டுமானால், அவர்களுக்குக் கிராமங்களுடனான தொடர்பை ஓரளவு ஏற்படுத்தித் தருவதுவே ஏற்புடையதாகும். 


Discover more from சொல்வனம் | இதழ் 375 | 27 செப் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.