
ஒவ்வொரு கதவும்
ஏதோ ஓர் அறைக்குள் திறக்கும் என்றும்,
ஒவ்வொரு பாதையும்
ஓரிடத்தில் சென்று சேரும் என்றும்,
கேட்கப்படும் எல்லாக் கேள்விகளுக்கும்
எங்கோ ஒரு பதில் காத்திருக்கிறது என்றும்
எனக்குச் சொல்லிக் கொடுத்தார்கள்.
இந்த உலகம்
பல்பொருள் அங்காடியைப் போல
நேர்த்தியாக அடுக்கப்பட்டு,
வகைப்படுத்தப்பட்டு,
பெயரிடப்பட்டு,
அளக்கப்பட்டு,
புரிந்துகொள்ளப்பட்டதென்றும்.
ஆனால்,
இந்த நள்ளிரவில்
நான் அறியாமலே
என் மனம் தட்டழிகிறது –
பொருள்களுக்கிடையே உறைந்திருக்கும்
அந்தரங்க இடைவெளிகளை எண்ணி.
சில இடைவெளிகளுக்குள்
நாம் இன்னும் பெயரிடத் துணியாத
ஏதோ ஒன்று பொதிந்திருக்கிறது.
அளக்க முடிந்த
எல்லாவற்றிற்கும் நடுவிலும்
நிற்கிறது
அளக்க முடியாத ஒன்று.
நம் இருவருக்கிடையே
மெல்லக் கசியும்
மொழியைவிடப் பழமையான
அந்த மௌனம் –
அதற்குப் பெயரில்லை.
ஆனால் அது
நம்மை உணர்ந்துவிடுகிறது.
ஒரே துயரத்தின்
பெயர்கூட அறியாமல்
பாரத்தைச் சுமக்கும்
இரு அந்நியர்களுக்கிடையே
இருக்கும் இந்தத் தூரம் –
பிரிப்பதற்காக அல்ல,
ஒருவரை ஒருவர் தேடி
எவ்வளவு தூரம் செல்ல முடியும்
என்பதை அறியச் செய்யவோ?
நமக்குள் இருக்கும் ஏதோ ஒன்று
ஒருவரையொருவர்
அடையாளம் கண்டுகொள்வதுபோல்.
தூரத்தின் பெருவெளியைக் கடந்து
ஒரு பழைய நினைவை மற்றொரு நினைவோடு
பிணைத்து இழுக்கிறது
புராதனத்தின்
கண்ணுக்குத் தெரியாத இழை.
நம் நினைவுகள்
நாம் பிறப்பதற்கு முன்பே
தொடங்கியிருந்த ஒன்றின் தொடர்ச்சியோ?
நாம் வாழ்ந்திராத காலங்களின்
எதிரொலிகளையும்
அது தன்னுள் வைத்திருக்குமோ?
பால்வெளியின்
அளந்து பார்க்கப்படாத ஒரு தூரத்தில்,
நிர்ணயிக்க முடியாத ஒரு புள்ளியில்
பிறந்து அழிகிறது
ஒரு விண்மீன்.
பல நூற்றாண்டுகள் கழித்து,
அதன் ஒளிக்கீற்று
அதன் பெயர்கூட அறியாத
என் விழிகளுக்குள்
ரகசியமாய் இறங்கி
இன்னொரு உலகமாகிறது.
மூன்று கண்டங்களைக் கடந்து
உன் படுக்கை அறையில்
நீ என் பெயரை
ரகசியமாய் உச்சரிக்கும்போது,
அவ்வளவு தூரத்திலிருந்தும்
அது எனக்குக் கேட்டுவிடுகிறது.
என் மனத்தின் ஆழத்திலிருந்து
நழுவும் ஒரு எண்ணம்
என்னை விட்டுப் புறப்பட்டு
உன்னிடம் வந்து சேர்ந்து,
உனக்கே தெரியாமல்
உன் உலகத்தை
சிறிது மாற்றிவிடுகிறது.
ஒருவர்
மற்றொருவரின் வாழ்க்கைக்குள்
வந்துசேர்வதற்கு
எப்போதும் ஒரு கதவு தேவையில்லை.
சில கதவுகள்
திறக்கப்படாமலேயே
கடக்கப்படுகின்றன.
பெளதீகத்தின் விதிகளில்
ஒரு நிகழ்வு
உருப்பெற்று,
நிகழ்ந்து, மறைந்துவிடுகிறது.
ஆனால் அது
ஒளிந்து வாழ்கிறது –
ஒரு இதயத்துடிப்பின் ஆழத்தில்,
ஒரு பழைய புகைப்படத்தின் பிடிவாதத்தில்,
நாம் சொல்லாமல் விட்ட கதையின்
எஞ்சிய மௌனத்தில்?
கடந்தவை
உண்மையில் முடிந்தவையா?
அல்லது நாம் தேடிச் செல்லாத
வேறொரு பரிமாணத்தில்
நம் பொருட்டு இன்னும்
நிகழ்ந்துகொண்டிருப்பவையா?
எனக்கும் உனக்கும் நடுவே,
இங்கேயும் அங்கேயுமாக,
நேற்றிற்கும் நாளைக்குமாய்,
நாம் கோடுகளை வரைகிறோம்.
இருபுறமும் நின்று
நம்மை வேறு வேறு பெயர்களால்
அழைக்கிறோம்.
ஆனால்
நாம் வரைந்தவை யாவும்
மேகங்களைப் போல உருமாறி
தடயமின்றி அழிகின்றன.
ஒரு ஒளிக்கீற்று
ஒரு விண்மீனிலிருந்து என் கண்களுக்கு.
ஒரு நினைவு
என் மனத்திலிருந்து உன் மனத்திற்கு.
ஒரு வார்த்தை
என் உதடுகளிலிருந்து உன் மௌனத்திற்கு.
நாம் தேடும் ஒவ்வொன்றும்
நம்மைத் தொடுகிறது –
இப்படித்தான்
நாம் ஒருவரையொருவர்
அறியாமலேயே
அருகில் வந்தடைகிறோம்.
நான் உனக்குச் சொல்லப்போகும்
இன்றையின் ஆகப்பெரிய ரகசியம்
இதுதான்:
நாம் இங்கு ஒருபோதும்
தனித்து விடப்படுவதில்லை.
ஒரு நொடிப்பொழுதும் கூட.
அந்த ஆதிப் பெருமௌனத்தின்
ஆழத்திற்குள்
முதன்முதலில்
ஒரு ஒளியின் துளி
நுழைந்த அந்தக் கணத்திலிருந்து,
இந்த வரியை
நீ வாசித்து,
ரகசியமாய் ஒன்றை நினைவுகூர்ந்து,
யாருக்கும் தெரியாமல்
நிலத்தடியில் நகரும்
ஓடையைப் போல,
ஏதோ ஒன்று
உனக்குள் நகரும்
இந்த நொடி வரை.
மெல்லொளியின் ரகசியம்
உலகம்
எளிதில்
என்னை மறக்கக்கூடிய
ஒரு மிகவும் சிறிய அறை
என்னுடையது.
பறவைகள்
தங்களை நினைவுகூர்வதற்கும்
சற்று முந்தைய
மார்கழியின் விடியலில்,
மெல்லொளி நுழையும்
இந்த அதிகாலையில்,
ஒரு
அந்நியரின் கனவுக்குள்
அத்து மீறி
தவறுதலாக
நுழைந்து விட்டதை போல.
என் அறை
தன் எல்லைகளை மறந்து
உறைந்து நிற்கிறது.
வழக்கமாய்
நான் அமரும் நாற்காலி
தான் துறந்த இருளோடு
இன்னமும்
ரகசியமாய் உரையாடுகிறது.
நேற்றைய
தூக்கம் விட்டு எழாத
இந்த மேஜை விரிப்பு
தன்மீது வீழும்
முதல் கதிரின் தொடுதலுக்காக
காத்திருக்கிறது.
நான் இன்னும்
பெயர் சூட்டாத ஒன்றாக,
சாளரம்
இன்னும் முடிவெடுக்கவில்லை
தான்
இந்த வீட்டின் பகுதியா,
அல்லது
வெளியே இயங்கும்
காலநிலையா என.
சொற்கள்
பிரக்ஞையில்
வந்து சேர்வதற்கு முன்
பொருட்களுக்கிடையே நிலவும்
நுட்பமான ஒப்பந்தத்தை
எவ்வகையிலும்
குலைத்துவிடக் கூடாது
என்ற எச்சரிக்கையோடு
காத்து நிற்கிறேன்.
போதுமான ஆண்டுகள் கழிந்தால்,
ஒரு எளிய அறைகூட
ஒரு தேசமாகும் என்பதை
வெளியே நிற்கும்
மூன்று மேப்பிள் மரங்கள்
பார்த்து நிற்கும்
இந்த சாளரம் அறியும்.
தன் இருப்பை
நிரூபிக்க தேவையில்லை
எனக் கருதும்
அந்த மௌனம் –
முடிவுறா
வாக்கியத்தின் விளிம்பில்
ஒட்டி நிற்கிறது
ஒரு விசித்திர அமைதி.
அடுத்த அறையிலிருந்து
அழைக்கும்
இன்னொரு குரல்.
என் கையை
இறுக பற்றும் மற்றொரு கை.
சுவரை தழுவிக்கொண்டிருக்கும்
கடிகாரத்தின்
மெல்லிய தடைபடாத சொடுக்கு.
பதில் எழுத வேண்டி
காத்திருக்கும் அந்த கடிதம்.
வெளிச்சத்தை நோக்கி நீண்டு
படமெடுத்து நிற்கும்
இந்த பாம்பு தாவரம்.
இன்னுமொரு பக்கமும்
முக்கியம் என்பதால்
திறந்தே கிடக்கும்
அந்த புத்தகம்.
கொதிக்கும் தேநீரில்
கிளரும் இனிய மணம்.
கணக்கு பார்க்காமல்
நேசிப்பதற்கு சிலர்,
பிறர்
அதை
நம்பியிருக்கக்கூடும் என்பதால்
கவனமாகச் செய்ய
அன்றாடமும்
செயல் ஒன்று.
யாரும் கேட்காத போதும்
இசைக்க கிடைக்கும்
ஒரு பாடல்.
ஒருவேளை
இந்த பிரபஞ்சம்
இப்படித்தான்
தொடங்கியிருக்குமோ?
நம்மை
இங்கேயே
தங்கியிருக்கச் சொல்லும்
ஒரு எளிய நிமித்தத்தால்?
இந்த பிரபஞ்சம்
நம்மிடம் பிரம்மாண்டத்தை
கோருவதில்லை.
காலையில்
நாம்
படுக்கையில் இருந்து
எழுவதற்கு தகுதியான
ஒரேயொரு
விஷயத்தை மட்டுமே
அது குறித்துக் கொள்ள கூடுமோ?
அறையின்
ஒவ்வொரு பொருளும்
என் இருப்பைப்
புரிந்துகொண்டு
சற்றே
இடம் விட்டு நிற்கின்றன.
மரணம்
தொலைவில் இல்லை
அது கதவைத் தட்டுவதும் இல்லை,
காத்திருக்கிறது.
நாம் கைபேசியில்
வாசிக்கும் கணங்களில்
தோளுக்குப் பின்
அமர்ந்திருக்கிறது.
அது அவசரப்படுவதில்லை;
ஒரு பழைய புத்தகம் போல
நாம் முடிக்கப்போகும்
கடைசி வாக்கியத்திற்காக
பொறுமையாய்
காத்திருக்கிறது,
நாம்
ஓடவில்லை,
வாழ்நாள் முழுதும்
நடந்துதான்
வந்தோம் –
அதை நோக்கி.
நாம்
போர்த்தியிருக்கும்
அகந்தையின்
தடிமன்
குறையும்போது,
அது
உடைந்துவிடுவதும் இல்லை,
அது முற்றிலுமாக
ஒரு கண்ணாடியை போல
ஆவதும் இல்லை.
ஒளியைத்
தன்னுள் கடக்க அனுமதிக்கும்
அதேவேளையில்,
தன்னை ஏந்தும்
தன் ரகசியத்தை
ஒருபோதும்
தாரைவார்த்துவிடாத
ஒரு மெல்லிய
இருப்பு ஒன்று
உருவாகிறது.
கேள்விக்கும்
பதிலுக்கும் நடுவே
என்னை சந்தித்தால்
நான் எதைத் தேர்ந்தெடுத்தேன்
என்று கேட்காதீர்கள்.
நான்
எதையுமே
தேர்ந்தெடுக்கவில்லை.
கேள்வி
பதிலை நோக்கி
தன் கதவை திறந்து
வைத்திருக்கும் இடத்தில்,
துயரமும் நம்பிக்கையும்
ஒரே எதிர் எதிரே
அமர்ந்திருக்கும் இடத்தில்,
மரணம் வெளியே
பொறுமையோடு
காத்திருக்கும் இடத்தில்,
பிரியம் இருளின் வழியே
தன் கரங்களை நீட்டி
காத்திருக்கும் இடத்தில்,
சாளரத்துக்கு வெளியில்
புகைத்திரை என
சூழ்ந்து நிற்கும் வானம்,
கிளைவிட்ட
விரிசல்களுள் ஒன்றை,
எனக்குள்
எரிய விட்டு,
உருக்கி
ஒன்றாக்கி
குணமாக்கும் இடத்தில்,
அமர்ந்துவிட்டேன்,
இன்னொரு முறை.
Discover more from சொல்வனம் | இதழ் 374 | 13 செப் 2026
Subscribe to get the latest posts sent to your email.
