அட்லாண்டா — மரங்களின் கைகளில் ஒரு நகரம்

காலை ஆறு மணிக்கு முன்பாக, அட்லாண்டா நகரம் என்பதை மறந்துவிடும் வைகறைக் கணம் இருக்கிறது. ஸ்டோன் மலையின் முதுகுக்குப் பின்னால் வெளிச்சம் பிறக்கிறது. லோப்லோலி பைன் மரங்களின் ஊடாகவும், உயர்ந்த சவுக்கு மரங்களின் இடுக்குகளுக்குள்ளும் வழி தேடிப் பாய்கிறது. பூத்துக் குலுங்கும் டாக்வுட் மலர்களின் வெண்மையை மெருகேற்றுகிறது. மெக்னோலியாவின் மணத்தை காற்றில் கலக்கிறது. ஆற்றோரம் சாய்ந்து நிற்கும் பிர்ச் மரங்களின் கிளைகளையும் வருடிச் செல்கிறது.

மரங்களுக்கு இடையே அந்த வெளிச்சம் சாய்வாகப் பொழிகிறது. பெல்ட்லைன் மீது மூடுபனி எழுகிறது. இன்மன் பூங்காவின் கிளையிலிருந்து செவ்வால் வல்லூறு சுருள்விரித்து மேலெழுகிறது. நகரத்தின் கிட்டத்தட்ட பாதியை மூடியிருக்கும், நம்ப முடியாத அளவுக்கு அடர்ந்த மரப்போர்வை, கூரைகளின் மீது பெற்றோரின் கைபோல் படர்கிறது.

காடுகளுக்குள் நகரம்.

மரங்களின் நகரம்.

தோட்ட நகரம்.என்று சிலர் அழைக்கிறார்கள்.

ஆனால் இங்குள்ள தோட்டங்கள் ஒழுங்காக வெட்டி வடிவமைக்கப்பட்டவை அல்ல. அவை காட்டுத்தனமானவை. தெற்கத்தியவை. கட்டுப்பாடற்றவை. கேப்பேஜ்டவுன் பகுதியில் வீட்டு திண்ணையை நெரித்தபடி விஸ்டீரியா கொடிகள் ஊதா நிறத்தில் படர்கின்றன. மெமோரியல் சாலையில் சங்கிலி வேலியை இழுத்தபடி குட்ஸு கொடிகள் ஓடுகின்றன. வீட்டு முற்றத்தில் வளர்ந்த தக்காளிக் கொடி, பக்கத்துக் கடையைவிட அதிக விளைச்சலைத் தருகிறது.

ஹோட்டலிலிருந்து வெளியே வந்ததும் புரியும். காற்று வேறு எதுவாக இருப்பதற்கு முன்பே அது பச்சையாக இருக்கிறது.

பின்னர் அவள் மீண்டும் நகரமாகிறாள்.

மார்ட்டா முழங்குகிறது. வார்சிட்டி திறக்கிறது. வானரேகை கூர்மையாகிறது. அதன் மையத்தில், மேசையின் மீது செங்குத்தாக நிறுத்திய கூர்மையான பென்சிலைப் போல, பேங்க் ஆஃப் அமெரிக்கா பிளாசா உயர்ந்து நிற்கிறது. தி பென்சில். அதன் தங்கத் தகடு பதித்த பிரமிட், அதிகாலைச் சூரியனைப் பிடித்துக்கொண்டு விடாமல் தக்கவைத்திருக்கிறது.

முதலில் சுவர்கள் பேசுகின்றன

ஸ்பில்லர் பார்க்கில் முதல் காபியை ஆர்டர் செய்வதற்குள், அட்லாண்டா ஏற்கெனவே ஸ்ப்ரே பெயிண்டில் உங்களிடம் பேசத் தொடங்கிவிடுகிறது.

கேப்பேஜ்டவுனின் சந்துகளில் உயிரோவியங்களாக சுவர்களை அலங்கரிக்கும் வாழ்க்கைக் கதைகள். ஈஸ்ட்சைட் டிரெயிலின் வழியே உருவப்படங்கள். க்ரோக் ஸ்ட்ரீட் சுரங்கப்பாதையில் அடுக்கடுக்காகப் படிந்திருக்கும், மீண்டும் மீண்டும் வரையப்பட்ட, கலகலப்பான அதிகாரப்பூர்வமற்ற ஓவியங்கள்.

க்ரோக் கண்காட்சியகம் அல்ல. அது பாவமன்னிப்பு அறை.

ஸ்ப்ரே டப்பாவும் சொல்ல வேண்டிய குறையும் வைத்திருக்கும் எவரும் இங்கே ஏதாவது எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார்கள். பழைய பிரிவுகளின் மீது திருமணக் கோரிக்கைகள். 2009-ம் ஆண்டின் நிதி மோசடி குமுறல்களுக்கு மேல் ஜான் லூயிஸுக்கான அஞ்சலி. நேற்றைய போராட்டக் கோஷத்திற்கு மேல் இன்றைய கலவர விதை நட்ட பதாகைகள்.

இது நகரத்தின் உள்மனம். வாரம் தோறும் புதுப்பிக்கப்படுகிறது. யாருக்கும் சொந்தமில்லை. அதனாலேயே எல்லோருக்கும் சொந்தம். திறமூலச் சுவரோவியம் போல.

இதுதான் அமெரிக்க எதிர்ப்புக் கலாச்சாரத்தின் கலப்படமற்ற வடிவம். விற்பனைக்காக உருவாக்கப்பட்ட எதிர்ப்பு அல்ல. கருத்து வேறுபாட்டை வாழ்வின் பகுதியாக ஏற்றுக்கொள்ளும் உண்மையான பயிற்சி.

அட்லாண்டா தனது எதிர்ப்புகளில் ஒருபோதும் பணிவாக இருந்ததில்லை.

ஆபர்ன் அவென்யூவில் தொடங்கிய சிவில் உரிமைப் பேரணிகளிலிருந்து ஒலிம்பிக் காலப் புறக்கணிப்புகள் வரை, உட்ரஃப் பூங்காவில் நடந்த ஆக்குபை அட்லாண்டாவிலிருந்து மைதானத்தைச் சுற்றி நகரத்தை நிரப்பிய சமீபத்திய போராட்டங்கள் வரை, இந்த நகரம் ஓர் உண்மையைப் புரிந்துகொண்டிருக்கிறது: போராட்டம் அமெரிக்காவுக்கு எதிரானது அல்ல. போராட்டமே அமெரிக்க வாழ்க்கையின் அதி உயிர் அங்கம்.

கிராஃபிட்டியும் சுவிசேஷமும் ஒரே நுரையீரலிலிருந்து வருகின்றன.

நம் இடங்கள்

பீச்ட்ரீ சாலையில் உள்ள ஃபாக்ஸ் தியேட்டர் அட்லாண்டா கிட்டத்தட்ட இடித்துத் தள்ளிய அழகான கட்டிடம்.

1929-ம் ஆண்டின் மூரிஷ், எகிப்தியக் கற்பனை. மினாரெட்டுகள். விண்மீன்கள் வரையப்பட்ட கூரைகள். மேடைக்கு மேலே குதிரைகளில் அமர்ந்திருக்கும் இயந்திர பெடுயின்கள்.

1970-களில் இந்தக் கட்டிடம் புல்டோசரின் முன் நிற்க வேண்டிய நிலைக்கு வந்தது. பாதுகாப்பு ஆர்வலர்களும் ராக் இசை ரசிகர்களும் இணைந்து நடத்திய குடிமக்கள் கிளர்ச்சிதான் அதைக் காப்பாற்றியது.

இசைக்குழுக்கள் சுற்றுப்பயண நிகழ்ச்சி நடக்கும் வேளையில் அங்கே அமர்ந்து அண்ணாந்து பாருங்கள்.

“வானம்” இன்னும் நகர்கிறது. மிதக்கும் மேகங்களுடன், திரைப்படக் காட்சியைப் போல.

பான்ஸ் சிட்டி மார்க்கெட் என்பது அட்லாண்டா தனது பழைய எலும்புகளுக்கு என்ன செய்கிறது என்பதற்கான சிறந்த உதாரணம்.

1926-ம் ஆண்டின் பிரம்மாண்டமான சியர்ஸ், ரோபக் & கம்பெனி கட்டிடம். தென்கிழக்கின் மிகப்பெரிய செங்கல் கட்டிடமாக இருந்த காலம் உண்டு. இப்போது உணவகங்கள், குடியிருப்புகள், அலுவலகங்கள், மினி கோல்ஃப் மைதானம், மிட்டவுன் காட்சியைக் காட்டும் பெரிய ரங்கராட்டினம் கொண்ட கூரை எனப் புதிய வாழ்க்கை பெற்றிருக்கிறது.

காரசாரமான கோழியைச் சாப்பிடுங்கள். லிஃப்டில் கூரைக்குச் செல்லுங்கள். பென்சிலுக்குப் பின்னால் சூரியன் அஸ்தமிப்பதைப் பாருங்கள்.

லிட்டில் ஃபைவ் பாயிண்ட்ஸ் நகரத்தின் கிளர் நுரையீரல்.

ரெக்கார்ட் கடைகள் – வினைல் முதல் எல்.பி வரை. ஜங்க்மேன்ஸ் டாட்டர் – பழைய டிரங்க் பெட்டி. வெரைட்டி பிளேஹவுஸ் – எங்கேயும் எப்போதும் சங்கீதம். பச்சை குத்தும் டாட்டூ கடைகள். சைவ உணவகங்கள். ஒட்டுப்போட்ட ஜீன்ஸ் அணிந்த இளைஞர்கள். ஒரே வாக்கியத்தில் Bad Brains-ஐயும் OutKast-ஐயும் இழுத்து வைத்து வாதிடுகிறார்கள்.

மூன்று தெருக்கள் மேற்கே இன்மன் பார்க். மீட்டெடுக்கப்பட்ட மகாராணி ஆன் மாளிகைகள். கோய் (koi) குளங்கள். சைக்கிள்கள், பித்தளை இசைக்குழுக்கள், பீகிள் நாய்கள் எனத் தெருக்களையே ஊர்வலமாக மாற்றும் இசைமன் பூங்கா ஜாஸ் + ப்ளூஸ்.

க்ரோக் ஸ்ட்ரீட் மார்க்கெட் பான்ஸ் சிட்டி மார்க்கெட்டின் சிறிய, சற்றுக் கரடுமுரடான உறவினர். சுற்றுலாப் பயணிகள் குறைவு. டாக்கோக்கள் சிறப்பு. சுரங்கப்பாதை வாயிலுக்கும் பெல்ட்லைனுக்கும் நடுவில் சரியான இடம்.

அட்லாண்டா பெல்ட்லைன் ஈஸ்ட்சைட் டிரெயில் நகரத்தின் முதுகெலும்பு. அதே நேரத்தில் அதன் மனநிலையை வெளிப்படுத்தும் கண்ணாடியும் கூட.

முன்னாள் ரயில்வே வழித்தடம். இப்போது இருபத்திரண்டு மைல் நீளமான வளையப் பாதை. நகரத்தை மெதுவாகச் சுற்றி வருகிறது. மதுபான ஆலைகளையும் சிற்பங்களையும் கடந்து செல்கிறது. நகரத்தின் எல்லா விதமான மக்களையும் சந்திக்கிறது.

சனிக்கிழமை மதியம் பெல்ட்லைன்தான் அட்லாண்டா.

கருப்பு, வெள்ளை, லத்தீன், கொரிய, எத்தியோப்பிய, குயீர், ஸ்ட்ரெயிட், புறநகர், சொந்த ஊர், சற்றுமுன் குடியேறியவர், பாலினம் மாறியவர், ஐஸ் இடம் இருந்து தப்பித்தவர், கரீபியர்.

அனைவரும் ஜென் ஸீ (அல்லது பூமர் சொல்லில் சென் ஜெட்)

எல்லோரும் ஒரே பாதையில் நடக்கிறார்கள். ஐஸ்க்ரீம் சாப்பிடுகிறார்கள். சுவரோவியங்களைப் பார்க்கிறார்கள்.

கதீட்ரலும் கச்சேரி அரங்கமும்

தெருவிளக்குகளைவிட அட்லாண்டாவில் தேவாலயங்கள் அதிகம் இருப்பதாகத் தோன்றுகிறது.

இங்கே மற்ற எல்லாவற்றையும் போல தேவாலயமும் ஒரே வடிவத்தில் நிற்க மறுக்கிறது.

சில தேவாலயங்கள் இன்னும் ஞாயிற்றுக்கிழமை காலைகளில் கூட்டம் நிரம்பியவையாக இருக்கின்றன. ஆபர்னில் உள்ள எபேனேசர் பாப்டிஸ்ட் தேவாலயம் இன்னும் நிரம்பிய பிரார்த்தனை மண்டபத்துக்குப் பிரசங்கிக்கிறது.

ஆனால் பல பழைய தேவாலயங்கள் தங்கள் இருக்கைகளை அகற்றிவிட்டன.

நகர மையத்தில் உள்ள டபர்னேக்கிள், சுற்றுப்பயணத்தில் வரும் ராக் கலைஞர்கள் வியர்வை சொட்டும் கூட்டத்துக்கு இசைக்கும் இடம், முன்பு தேர்ட் பாப்டிஸ்ட் தேவாலயம். வண்ணக் கண்ணாடிகள் இன்னும் அங்கேயே இருக்கின்றன. இப்போது அவை மோஷ் பிட்டைப் பார்த்துக்கொண்டிருக்கின்றன.

எட்ஜ்வுட்டில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த மெத்தடிஸ்ட் தேவாலயம் இப்போது தாகசாந்திக்கான சகல திரவங்களையும் திருவிருந்தையும் திராட்சை ரசத்தையும் கொடுக்கும். ஞானஸ்நானம் கிடைக்காவிட்டாலும் பரிசுத்தம் அடைவீர்

வேறொன்று நிகழ்வுகளுக்கான இடம். சங்கமம். தமிழ்ச் சங்கம் தனியே அமைக்கலாம்.

மற்றொன்றில் கோபுரம் மட்டும் அப்படியே இருக்க, உள்ளே காண்டோமினியங்கள். நூற்றுக்கணக்கானோர் குடியிருக்கும் தேவாலயம்.

இது அமெரிக்க பாணியிலான மறுவடிவத்தின் விசித்திரமான அழகு. புனிதம் சந்தைக்கும் நடன மேடைக்கும் இடம் கொடுக்கிறது. சில நேரம் அழகாக. சில நேரம் சங்கடமாக. ஆனால் தனது எலும்புகளையும் ஜன்னல்களையும் ஒலியியலையும் விட்டுவிடுவதில்லை.

மக்கள் காலத்தில் எங்கே பாடினார்கள் என்பதை இன்னும் உணர முடிகிறது.

அந்த மைதானம்

பின்னர் மெர்சிடிஸ் பென்ஸ் ஸ்டேடியம்.

அதன் கீழே நின்றால்தான் அதன் அளவை நம்ப முடியும்.

கிட்டத்தட்ட 1.6 பில்லியன் டாலர் செலவில் கட்டப்பட்டது. கட்டி முடிக்க சுமார் மூன்றரை ஆண்டுகள் ஆனது. 2017 ஆகஸ்டில் திறக்கப்பட்டது.

வெளியிலிருந்து பார்த்தால், வேறொரு கோளிலிருந்து வந்து விழுந்த படிக வடிவப் பாறையைப் போலத் தோன்றுகிறது.

அருணாச்சலம் ரமணன் கட்டுரை எழுதிவிடுவார். ஃபிஃபா இங்கே போட்டிகளை நடத்தியது!

உள்ளே சென்றதும் மேலே பாருங்கள்.

கூரை எட்டு பெரிய முக்கோண இதழ்களால் ஆனது. கேமராவின் கருவிழியைப் போல அவை ஒன்றை நோக்கி ஒன்று இழுக்கப்படுகின்றன. கார்பன் ஃபைபரும் HVAC தொழில்நுட்பமும் சேர்ந்த காலத்துக்காக மறுபடியும் உருவாக்கப்பட்ட பாந்தியோனின் ஒகுலஸுக்கு இது ஓர் பொறியியல் அஞ்சலி.

360 டிகிரி ஹேலோ வீடியோ போர்டு கூரையின் உட்புறத்தைச் சுற்றி தொடர்ந்து ஓடுகிறது.

அட்லாண்டா ஃபால்கன்ஸ் இங்கே விளையாடுகிறது. MLS அணியான அட்லாண்டா யுனைடெட்டும் இங்கேதான் விளையாடுகிறது. சில ஐரோப்பிய டெர்பிகளைக் காட்டிலும் பெரிய கூட்டங்களை அது ஈர்க்கிறது.

இதோ சிறிய குடிமை அதிசயம்.

சாப்பாட்டுக் கடைகளில் விலை சாதாரண உணவகங்களைப் போலவே இருக்கிறது.

இரண்டு டாலர் ஹாட் டாக்.

ஐந்து டாலர் பீட்சா துண்டு.

மைதானத்தின் உள்ளே நுழைந்ததற்காகவே கடல்கடந்த சிறு நாட்டைப் போல வரி வசூலிக்கும் நாட்டில், இந்த முடிவு அட்லாண்டாவின் மென்மையான, ஆனால் மிகப் பயனுள்ள குடிமைப் பெருமையாக மாறியிருக்கிறது.

சேப்பாக்கத்தில் சமோசா எவ்வளவு டாலர்கள்!?

அன்றாட நெளிவுகள்

நடந்துதான் நகரத்தை அறிந்துகொள்ள முடியும்.

நடப்பதுதான் நகரத்தின் சிறிய உராய்வுகளையும் எதிர்பாராத அழகுக் குறிப்புகளையும் கற்றுத்தருகிறது.

மார்ட்டா உங்களை உலகின் மிகப் பரபரப்பான விமான நிலையமான ஹார்ட்ஸ்ஃபீல்ட் ஜாக்சனிலிருந்து நேராக நகர மையத்துக்குக் கொண்டு செல்கிறது. ஒரேயொரு விலைமதிப்பற்ற ஸ்டார்பக்ஸ் காபியின் விலைக்கே.

அதுவே தனக்குள் அமைதியான அதிசயம்.

ஆனால் ரயிலில் உங்கள் காபியைக் குடிக்காதீர்கள். எந்தச் சூழ்நிலையிலும்.

சாப்பிடுவதும் குடிப்பதும் தடை. எந்தத் திரவமும் அனுமதியில்லை.

அறிவிப்புப் பலகைகள் கடுமையானவை. ஓட்டுநர்கள் அதைவிடக் கடுமையானவர்கள்.

சில்லிட்ட லாட்டே கையில். சூடான உருளைக்கிழங்கைப் பிடித்திருப்பது போல அதைத் தாங்கிக்கொண்டு பயணம் முழுவதும் நிற்பீர்கள். ஒவ்வொரு காலையும். மெதுவாகப் புலம்பிக்கொண்டே.

பின்னர் வீடற்றவர்கள்.

முதல் சந்திப்பு எப்போதும் அதிர்ச்சியளிக்கிறது. திடீர் கோரிக்கை. பழக்கமில்லாத பேச்சு. எவ்வளவு கொடுக்க வேண்டும்? கொடுக்க வேண்டுமா? மனதுக்குள் நடக்கும் சிறிய கணக்கு.

மூன்றாம் நாளில் வேறொன்று நடந்திருக்கும்.

சிவிக் சென்டர் மார்ட்டா நிலையத்துக்கு அருகில் தூங்கும் நபரை அடையாளம் கண்டுகொள்ளத் தொடங்குகிறீர்கள்.

எட்ஜ்வுட் கேண்ட்லர் பார்க் நிலையத்தில் சிறிய நாயுடன் நிற்கும் பெண்ணுக்குத் தலையசைக்கத் தொடங்குகிறீர்கள்.

வாரம் முடிவதற்குள் அந்தத் தலையசைப்புகளுக்கு கனமேறியிருக்கும்.

அவை நட்பு அல்ல.

கருணையும் அல்ல.

மீண்டும் மீண்டும் ஒருவரை ஒருவர் அடையாளம் கண்டுகொள்வதன் எளிய இலக்கணம்.

நகரங்கள் உண்மையில் எதனால் ஆனவை என்பதற்கு அதுதான் சிறிய பதில்.

அட்லாண்டாவுக்கு உண்மையான வீட்டு நெருக்கடி இருக்கிறது. நகரம் அதைத் தீர்க்கவில்லை. இங்கே வாழ்வதன் உண்மையின் ஒரு பகுதியும் அதுதான்.

ஆனால் அந்த மனிதர்களுக்கு பெயர்கள் இருக்கின்றன. அவர்களுக்கென வழிகள் இருக்கின்றன. வழக்கமான மூலைகள் இருக்கின்றன. நீங்கள் ஒருபோதும் கேட்காத கதைகள் இருக்கின்றன. குறைந்தபட்சம் அவர்கள் இருப்பதை ஒப்புக்கொள்ள துவங்குவதில் உங்கள் பயணம் சொந்த இல்லத்திற்கான விமானப் பயணத்தோடு முடியும்.

பான்ஸ் சாலையில் கோடு

அட்லாண்டாவைப் புரிந்துகொள்ள பான்ஸ் டி லியோன் அவென்யூவை புரிந்துகொள்ள வேண்டும்.

இருபதாம் நூற்றாண்டின் பெரும்பகுதியில் அது சொல்லப்படாத எல்லையாக இருந்தது.

பான்ஸுக்கு வடக்கே வெள்ளை அட்லாண்டா. இன்மன் பார்க்கின் மீட்டெடுக்கப்பட்ட மாளிகைகள். ட்ரூயிட் ஹில்ஸ். அதற்கப்பால் பக்ஹெட்டின் தோட்டங்கள்.

பான்ஸுக்குத் தெற்கே கருப்பு அட்லாண்டா. ஸ்வீட் ஆபர்ன். ஓல்ட் ஃபோர்த் வார்டு. சம்மர்ஹில். மெக்கானிக்ஸ்வில்.

அந்தக் கோடு அதிகாரப்பூர்வ வரைபடங்களில் இருந்ததில்லை. ஆனால் நகரத்தின் மனதில் வரையப்பட்ட ஒவ்வொரு வரைபடத்திலும் அது இருந்தது.

சிவப்புக் கோடு; லஷ்மண் ரேகா; கண்ணுக்குப் புலப்படாத வாகா எல்லை பாகிஸ்தானாக அதற்குப் பற்களைக் கொடுத்தது.

ட்ராம் வழித்தடங்கள் அதை மேலும் வலுப்படுத்தின.

கோட்டின் மறுபுறம் மரங்கள்கூட மெலிந்தன.

நகரத்தின் மரப்போர்வை செல்வத்தைப் பின்தொடர்கிறது. செல்வம் இனத்தைப் பின்தொடர்கிறது.

இன்று அந்தக் கோடு மங்கியிருக்கிறது. பான்ஸ் சிட்டி மார்க்கெட் அதன் மீதே நிற்கிறது. பெல்ட்லைன் அதைக் கடந்து செல்கிறது.

ஆனால் சொத்து எங்கே அதிகம், எங்கே குறைவு என்பதை அறிந்தால் அந்தக் கோடு இன்னும் எங்கும் தெரியும்.

அட்லாண்டாவின் இனப் பிரிவினை மறைந்துவிடவில்லை.

அது ஜென்ட்ரிஃபை ஆகியிருக்கிறது.சங்கீத வித்வத சபை டி.எம் கிருஷ்ணாவை கவனிப்பது போல்!

ஆபர்ன் அவென்யூவின் சிறுவன்

மார்ட்டினைப் பற்றி எழுதாமல் அட்லாண்டாவைப் பற்றி எழுத முடியாது.

1929-ல் ஆபர்ன் அவென்யூவில், அவரது தாத்தா போதகராக இருந்த தேவாலயத்திலிருந்து அரை கல் தொலைவில், மஞ்சள் நிற மரவீட்டில் அவர் பிறந்தார்.

பாப்டிஸ்ட் போதகர்களின் மகன். பேரன். கொள்ளுப் பேரன்.

டேவிட் டி. ஹோவர்ட் பள்ளி. புக்கர் டி. வாஷிங்டன் உயர்நிலைப் பள்ளி. பதினைந்து வயதில் மோர்ஹவுஸ் கல்லூரி.

அவரது குழந்தைப் பருவத்தில் நடந்த சம்பவம், பின்னர் அவரது பிரசங்கங்களில் வாழ்நாள் முழுவதும் திரும்பத் திரும்ப வந்தது, அவருக்கு சுமார் ஆறு வயதாக இருந்தபோது நடந்தது.

அவருக்கு நெருங்கிய நண்பன் இருந்தான். வெள்ளைச் சிறுவன். அவனுடைய தந்தை சாலையின் எதிரே கடை வைத்திருந்தார்.

திடீரென்று அந்த நண்பன் அவருடன் விளையாடுவதை நிறுத்திவிட்டான்.

அவனுடைய தந்தை, தனது வெள்ளை மகன் கருப்புச் சிறுவனுடன் இனி நட்பாக இருக்கக் கூடாது என்று முடிவு செய்திருந்தார்.

இளம் மார்ட்டின் வீட்டுக்குச் சென்று பெற்றோரிடம் ஏன் என்று கேட்டார்.

அவர்கள் அவரை அமர வைத்து அமெரிக்காவை விளக்க வேண்டியிருந்தது.

அவர் அதை ஒருபோதும் மறக்கவில்லை.

அந்த மதியத்திலிருந்துதான் பின்னாளின் பிரசங்கங்கள் வளர்ந்தன.

அவர் அவராக ஆனதற்கான விலையை அவரது குடும்பம் ரத்தத்தில் செலுத்தியது.

1968 ஏப்ரல் 4 அன்று மெம்பிஸில் அவர் சுட்டுக்கொல்லப்பட்டார். வயது முப்பத்தொன்பது.

சாகிற வயதா 39!

அவரது சகோதரர் ஏ.டி. கிங் அடுத்த ஆண்டு, 1969-ல், அவரது குடும்பம் எப்போதும் சந்தேகத்துடன் பார்த்த சூழ்நிலையில் நீச்சல் குளத்தில் மூழ்கி இறந்தார்.

1974-ல் அவரது தாயார் ஆல்பர்ட்டா வில்லியம்ஸ் கிங், ஞாயிற்றுக்கிழமை காலையில் எபேனேசர் பாப்டிஸ்ட் தேவாலயத்தில் ஆர்கன் வாசித்துக்கொண்டிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டார். குடும்பத்தையே குறிவைத்து வந்த இளைஞன் அவரைக் கொன்றான். அவரைக் காப்பாற்ற முயன்ற டீக்கனும் கொல்லப்பட்டார்.

மனைவியையும் இரு மகன்களையும் தாண்டி வாழ்ந்த அவரது தந்தை, “டாடி கிங்”, பின்னர் தனது இதயத்துக்குள் வெறுப்பை நுழைய அனுமதிக்க மறுப்பதாகச் சொன்னார்.

அது இதுவரை சொல்லப்பட்டவற்றில் மிக அமெரிக்கமான வாக்கியமா? அல்லது மிக மானுடமான வாக்கியமா? என்னால் சொல்ல முடியவில்லை.

அவராலும், அவரது குடும்பத்தின் தேவாலயத்தாலும், அவரது குடும்பம் சிந்திய ரத்தத்தாலும், அட்லாண்டா சிவில் உரிமை இயக்கத்தின் அச்சுமையமாக மாறியது.

SCLC தலைமையகம்.

அணிவகுப்புகள்.

எபேனேசரின் அடித்தளத்தில் நடந்த உத்திக் கூட்டங்கள்.

இன்று பேருந்துகளை ஈர்க்கும் ஆபர்னில் உள்ள கிங் சென்டர்.

நகரம் பருத்திப் பணத்தாலும், கோகா கோலா பணத்தாலும், ஒலிம்பிக் பணத்தாலும், தொழில்நுட்பப் பணத்தாலும் கட்டப்பட்டது.

ஆனால் அதன் தார்மீக மூலதனம், நாட்டின் மற்ற பகுதிகள் ஏற்றுக்கொள்ள வேண்டிய பகுதி, தெருவில் வாழ்ந்த குடும்பத்திலிருந்து வந்தது.

சூரியோதயத்தின்போது ஆபர்ன் அவென்யூவில் நீங்கள் நடக்கிறீர்கள்.

டாக்வுட் மரங்கள் பூத்திருக்கின்றன.

தூரத்தில் பென்சில் மினுங்குகிறது.

நீங்கள் கடந்து செல்லும்போது யாரோ உங்களுக்குத் தலையசைக்கிறார்.

மரங்கள் மீண்டும் கூரைகளுக்கு மேலே ஒன்றோடொன்று சேர்ந்து மூடிக்கொள்கின்றன.

“இருளை இருளால் விரட்ட முடியாது; ஒளியால் மட்டுமே முடியும். வெறுப்பை வெறுப்பால் விரட்ட முடியாது; அன்பால் மட்டுமே முடியும்.”

மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர், அட்லாண்டாவின் மகன்


Discover more from சொல்வனம் | இதழ் 374 | 13 செப் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.