கோதை வருவாளா?

புலரி… புலரி… புள்ளினங்கள் கூட்டில் சோம்பல் முறித்துக் கொள்கின்றன. பசுங்கன்றுகள் தாயை தேடிக் கொண்டு குதியல் போட பசுக்கள் மடியின் கனம் இறக்கி நிம்மதிக் கொள்கின்றன. அய்யோ… கிழக்கு வெளுத்து விட்டதா… இந்நேரம் கோதை வந்து விட்டிருப்பாளோ? அனிருத்யையின் உள்ளமும் உடலும் படபடத்தது, பஞ்சணையிலிருந்து துடித்தெழுந்த வேகத்தில் அதில் விரிக்கப்பட்டிருந்த பட்டாடை கசங்கிச் சுருண்டது. நாராயணா… நாராயணா… நாராயணா… என முணுமுணுத்துக் கொண்டாள். மொழியெடுக்கத் தொடங்கியதிலிருந்தே உண்டாக்கி விடப்பட்ட பழக்கம் அது. அவள் தகப்பனார் வடபத்ரசாயி கோயிலுக்கு சொந்தமான நிலங்களின் பராமரிப்புக் குழுவினரில் ஒருவர். மாளிகையின் மேற்தளத்திலிருந்தது அவளுடைய அறை. சாளரத்தின் திரைசீலையை விலக்கி விடியலைக் கணிக்கும் எண்ணம் உதிக்காதவளாக அறைக்கு வெளியே வந்தாள். வீடே உறங்கிக் கொண்டிருக்க அதை கலைத்து விடாதபடி மரத்தாலான படிகளில் ஓசையின்றி இறங்கி கீழ்த்தளம் வந்தாள். உள்ளம் பதறிக் கொண்டேயிருந்தது. அதை உடலால் உணர்ந்தபடியே உறக்கத்தில் சுழன்றுக் கிடந்த பாவாடையை முன்புறமாக இழுத்து சரி செய்துக் கொண்டாள்.

கோதை வந்து விட்டாளோ.. வாசற்கதவை தட்டியிருப்பாளோ… வெளியே தொங்கும் மணியை இழுத்திருப்பாளோ.. முன்கூடத்தில் வேலையாள் உறங்கிக் கொண்டிருக்க, வாயிற்கதவில் பொருத்தப்பட்டிருந்த அலங்கார மணிகள் ஓசையெழுப்பாவண்ணம் நிதானமாக கதவைத் திறந்து வெளியே வந்தாள். வெளியே யாருமில்லை. என்னை காணாது சென்று விட்டாளோ? அவள் வருவாளா? எட்டிப் பார்த்தாள். பாதை மெல்லிய இருளைப் போர்த்திக் கொண்டு ஆளரவமற்றிருந்தது. தோட்டத்து பவளமல்லிகை மரம் வாசனையால் வெளியையும் மலர்களால் நிலத்தையும் அரவணைத்துக் கொண்டிருந்தது. எங்கோ நாயொன்று ஊளையிட, தொழுவத்தில் பசுக்கள் கால் மாற்றி வைத்துக் கொண்டன. மனித இரைச்சல்களற்றிருந்த இருண்ட பொழுதும் நாவற்மரத்திலிருந்த ஆந்தையின் அலறலும் விடியலுக்கு இன்னும் நேரமுள்ளது என்றுணர்த்தினாலும் அலையடித்த மனத்தை ஆசுவாசிக்கும் எண்ணத்தில் திண்ணையிலிருந்த மண் மாடத்தில் சாய்ந்து அமர்ந்துக் கொண்டாள் அனிருத்யை.

கோதை வர வேண்டிய வழி வெறிச்சிட்டு கிடந்தது. அனிருத்யையின் நீண்ட நாள் தோழி அவள். அவளைக் கண்டவர் கோதையையும் கோதையைக் காண்பவர்கள் அனிருத்யையும் குறித்து வினவுவது வாடிக்கையானது. அனிருத்யையின் தந்தையைப் போலவே கோதையின் தந்தை விஷ்ணுசித்தரும் திருக்கோயிலில் பணியாற்றுபவரே. பெருமாளுக்கு திருத்துழாய் சார்த்தும் பணி அவருக்கு.

இரவின் மென்குளிர்க்காற்று அவள் உடைகளை தொட்டு கூந்தலின் மீது துறுத்தி நின்ற சிறுமயிர்களை அசைத்து உடலை குளிர்வித்துக் கொண்டிருந்தது. எதிரே தெரியும் வீதியும் அதன் நெருக்கமான வீடுகளும் வாழைச்சீப்பென தோற்றமளிக்க அடிக்கட்டையையும் பழங்களையும் இணைக்கும் காம்பென வாசல்கள் நீண்டிருந்தன. அதன் மாடங்களில் ஒன்றின் மீதொன்று முக்கோணமாக சாத்தி வைக்கப்பட்ட சிறு கல்மண்டபத்துக்குள் அகல்கள் சுடர்ந்துக் கொண்டிருந்தன. கோதை முன்னமே சென்று விட்டாளா? இருக்காது. இது நடு இரவு. அவள் தந்தை அனுமதியார். அவள் வருவாளா? நெஞ்சுத் துடித்தது. அய்யோ… நான் ஏன் இப்படி பதற்றமுறுகிறேன்? அனிருத்யை தன்னை இயல்பாக்கிக் கொள்ள விரும்பினாள். வீடுகளில் தெரிந்த சுடரை கண்களை சுருக்கிக் கொண்டு நோக்கினாள். அவை மஞ்சள் நிற நீள்கற்றைகளாகின. அவ்வாறே அண்ணாந்து வானை நோக்கியபோது விண்மீன்கள் வெண்ணிற ஒளிக்கற்றைகளென நீண்டன. கண்களை விரித்துக் கொண்டபோது சுடரும் வான்மீன்கள் மினுங்கலாக சிரித்தன. ஆசுவாசிக்கவியலாத படபடப்பு ஆழ்மனதை சூழ அவள் கண்களை விரித்து வீதியை நோக்கினாள். எதிர்வரிசை வீடுகளை நிலவு சித்திரம் தீட்டி நிழலென வீதியில் பரப்பியிருந்தது. நோக்க நோக்க அவ்வோவியங்கள் மனதை தொட்டறியா ஆழத்துக்குள் இழுத்துச் செல்ல அதனுள்ளிருந்து கோதை முளைத்தெழுவதுபோல தோன்றியது. இல்லை… அது அவளில்லை. அனிருத்யை கோதைக்காக காத்திருந்தாள். கோதை கூட அவன் வரவுக்காக காத்திருப்பதாக கூறுவாள். அவர் என்ன மானுடனா நேரில் வருவதற்கு? அவள் பொழுதோடு புலர்ந்தெழுவாள். இளம்பெண்களின் வீட்டுக் கதவுகளைத் தட்டுவாள். நீராட அழைப்பாள். கண்ணன் எழும் முன்னே அவனை ஆராதிக்க கோபியர்கள் எழ வேண்டும் என்பாள். இன்று இன்னும் அவள் வரவில்லை.

அனிருத்யையை பாண்டிய அரசவையின் கருவூல அதிகாரியின் மகனுக்கு பெண்ணெடுக்க நினைத்திருக்கிறார்களாம். அப்படியானால் அவள் புதுாரை விட்டு கிளம்ப வேண்டியிருக்கும். புதுாரையும் இங்கிருக்கும் பெருமாளையும் விட்டு விட்டு எப்படி செல்ல முடியும் அவளால்? மாடங்களை உடைய மாளிகைகளால் சூழப்பட்ட மதுரை மாநகரில் எங்கோ ஒரு கருவூலனின் வீட்டுக்குள் அவளால் எங்ஙனம் அடைப்பட முடியும்? புன்னையும் குருக்கத்தியும் கோங்கும் செருந்தியும் நிறைந்த சோலைகள் அங்கிருக்குமா? கோதை அங்கிருப்பாளா? கோதை எங்குதானிருப்பாள்? கோகுலத்திலா? எங்கே எப்படி இருக்க முடியும்? அங்கிருந்தவள் ராதை அல்லவா. ஆனால்… தன்னுரு கரைந்து கண்ணனை நிறைத்துக் கொண்ட ராதை தான் இந்த கோதையோ? ராதை கண்ணனை அறிந்ததும் கோதை ரங்கனை அறிந்ததும் ஒன்றேதானா?

கோதை வரும் பாதை நோக்கி இடைவிடாத அலைந்தக் கண்களை இழுத்து நிறுத்தினாள் அனிருத்யை. இருவரும் ஏரிக்கரை மணலில் அமர்ந்து சிறுவீடு கட்டுவதும் மரப்பாச்சி பொம்மைகள் வைத்து விளையாடுவதுமாக கொண்ட சிறுபிராய நட்பு அரிசியையும் வெல்லத்தையும் குழைத்து வேக வைத்து பிரசாதமென படைத்து பாவை நோன்பு நோற்கும் வயது வந்து விட்டதெனினும் இன்றும் தொடருகிறது. இனிமேலும் இது தொடருமா? வாய்ப்பேதும் இல்லையா? காலடித்தடம் கேட்க, சட்டென்று எழுந்துக் கொண்டாள். உடையை கையால் நீவி சரிப்படுத்திக் கொண்டாள். அனிருத்யை… என்று கோதை குரலெழுப்பும்போதே வந்து விட வேண்டும். இல்லையெனில் இராமாவதாரத்து கும்பகர்ணன் துாக்கத்தை உன்னிடம் தந்து விட்டானா? என்பாள் கோபமாக. பதில் பேசாது நின்றால் நீயென்ன செவிடா.. ஊமையா.. என்பாள். குரல் உயராது. முகம் மட்டும் சினம் காட்டும். சினம் என்ன இவளுக்கு மட்டுமே சொந்தமா? ஆனால் அனிருத்தையால் அவளிடம் கோபப்பட முடியாது. கோபமே வராதா அல்லது கோபித்துக் கொள்ளவே முடியாதா? எதுவோ ஒன்று அவளை பிணைத்துக் கொண்டே இருந்தது. ஆனால் இது பிரிய வேண்டிய தருணமோ? காலடியோசை வெற்று மாயையா? எதுவோ ஒன்று உள்நகர்ந்தது போலிருந்தது அனிருத்யைக்கு.

இருவரும் சிறுவீடு கட்டி விளையாடுகையில் கோதை  சமையலுக்காக அரிசியென மணலும் பருப்புமணிகளென சிறுவெண்கற்களையும் பொறுக்கி எடுத்து வருவாள். மரப்பாச்சிகள் உயிர்களாகும். அனிருத்யை சிறு குவளைகளில் நீரள்ளி வர சமையலறையில் தென்னங்குறுத்து அடுப்பில் ஈர்க்குச்சி விறகில் குறுத்தோலை பாத்திரத்தில் வெண்மணல் அரிசியென வேகும். அவர்கள் மண்ணில் நீர் தெளித்து சுவராக்கி அறைகள் கட்டுவர். அதிலொரு அறையை அரங்கனுடையது என்று பிடித்து வைத்துக் கொள்வாள் கோதை. செந்நிறம் தீட்டிய ஸ்படிகத்தை அவ்வறையின் வாயிலில் ஒட்டி வைப்பாள். அது மலைக்குகையில் படுத்துறங்கும் கார்கால சிங்கம் உறக்கம் விடுத்து பிடரி மயிர் சிலிர்த்து மூர்க்கமாக எழும்போது அதன் கண்களில் பறக்கும் தீப்பொறியின் நிறம்.. அது அவன் கண்களின் நிறமடீ. என்பாள். வாயிலில் வெண்மணல் கொண்டு கோலமிடுவாள். அவ்வறைக்குள் தென்னங்குச்சியால் சங்கும் சக்கரமும் தண்டும் வாளும் வில்லும் வரைவாள்.

“இதெல்லாம் என்னடீ கோதை?”

“அவன் பெரிய வீரனடீ.. வீரனின் கையில் ஆயுதமெல்லாம் இருக்க வேண்டாமா?“

சமையல் முடிந்ததும் மண்சோற்றை அள்ளி கொட்டாங்குச்சியில் வைத்து வீட்டாருக்கு பங்கிடும்போது அதிலொன்றை எடுத்துக் கொண்டு அரங்கனின் அறைக்குச் செல்வாள்.  “கோதை.. சமைப்பது நீ. பரிமாறுவது நான் என்றுதானே பேசிக் கொண்டோம்” சிணுங்குவாள் அனிருத்யை.

“சரிதான்.. நீ மற்றவர்களுக்கு கொடு… அவனுக்கு நான்தானே கொடுக்க வேண்டும்?”

குச்சிகளாலான நான்கு கால்கள் தாங்கி நிற்க அதன் மீது சிறுபலகையொன்றை பொருத்தி அதில் வைக்கோலை பரப்பி வைப்பாள்.

“அனிருத்யை… இதோ பார்… பஞ்சு பட்டு கம்பளம் மலர் தளிராலான பஞ்சசயனம் அவனுக்கு தயாராகி விட்டது”

“அய்யோ… கோதை… இது வெறும் வைக்கோலடீ”

“காம்பைத் தொட்டாலே குடம்குடமாக பால் தரும் பசுக்களை வைத்திருக்கும் ஆயர்க்குடிகள் தலைவன் நந்தகோபனின் மைந்தனடீ அவன். வெறும் வைக்கோலிலா படுத்துக் கொள்வான்?”

இப்போதெல்லாம் அனிருத்யையின் வீட்டாருக்கு அவள் கோதையுடன் சேர்ந்திருப்பது அத்தனை பிடித்தமானதாக இல்லை. அனிருத்யை… நீ திருமணமாகி செல்ல வேண்டியவள். பேதை போன்று பினாத்தியலையும் அந்த பெண்ணுடன் சேர்ந்து திரிவது எங்களுக்கு சரியென தோன்றவில்லை… முகத்தில் கடுமைக் காட்டினாள் அம்மா. இம்மாதிரி நேரங்களில் அனிருத்யை அப்பாவை சரணடைந்து விடுவாள். எப்போதும் மகளோடு சேர்ந்துக் கொள்ளும் அவரோ இந்த விஷயத்தில் மனைவியோடு சேர்ந்து மகளை கடிந்துக் கொள்கிறார்.

கோதையின் தந்தையாரும் அவளை கடிந்துக் கொண்டதாக கோதை ஒருமுறை சொல்லியிருந்தாள். இறைவன் அணிய வேண்டிய மலர்மாலையை அவர் சூடுவதற்கு முன்பே கோதை சூடிக் கொண்டு அழகுப்பார்த்தாளாம். கண்ணனின் திருவடி வரம் கேட்டு திரிந்தலைவோர் மத்தியில் அவன் கால்களை முதலில் சென்னிசூடியவள் ராதை. பித்துக் கொண்ட பிச்சிகள். தேடிச் சென்று கண்டடைய முடியாத ஒன்றை கனிந்து சென்று தொட்டு விட முடியும் என்று எங்ஙனம் அறிந்துக் கொண்டார்கள் இவர்கள்?

அன்று அவள் கட்டி வைத்து விட்டு போன சிற்றில் மழையில் கரைந்துப் போக அவள் ரங்கனிடம் கோபம் கொண்டு விட்டாள். “இந்நேரம் கோவர்த்தனத்தை இங்கு நீ குடையாக பிடித்திருக்க வேண்டாமா? மற்ற அறைகள் கரைந்துப் போனதை பற்றி நான் கவலைப்படவில்லை. நீயும் நப்பின்னையும் மஞ்சத்திலாடும் உன் அறையை இப்படி கலைத்து போட்டு விட்டாயே…” கோபம் அழுகையானது. மழையில் நனைந்த ஆடையோடு ஏரி நீரைத் தொட்டெழுந்தக் குளிர்க்காற்றும் இணைந்துக் கொள்ள உடல் நடுங்கியது. 

“கோதை… ஏன் அழுகிறாய்? மழை வந்து கலைத்துப் போட்டு விட்டு போனதற்கு அவர் என்ன செய்வார்?”

“அவன்தானடி மழையே. மழையை வரவழைத்தவனும் அவனே. மலையை குடையாக பிடிப்பவனும் அவனே. என்னை கோபப்படுத்த வேண்டுமென்று சோதித்துப் பார்க்கிறான். நான் கோபப்பட மாட்டேன். இன்னொரு சிற்றிலை இப்போதே கட்டி அவனை அதில் குடியேற்றி விடுவேன்”

“மழை வரப்போகிறது கோதை. கட்டினாலும் கரைந்து விடும்”

“அனிருத்யை… இது எனக்கும் அவனுக்குமானது. நீ இதில் தலையிடாதே. வேதமோதியும் அணுக முடியாதவன் ஆயர் மக்களுடன் கலந்து வாழ்கிறான் என்பதால் அவனை தாழ்த்தி எண்ணி விடாதே. கடலில் அணைக் கட்டியவன் அவன் என்பதை மறந்து விடாதே”

“அத்தனை பெரியவன் கோவிலை விட்டுவிட்டு நீ கட்டும் இந்த சிறுவீட்டுக்கு வந்து விடுவான் என்று நினைக்கிறாயா நீ”

கோதை எதையும் கேட்கும் நிலையில் இல்லை. அவள் கைகள் மளமளவென்று சிற்றில் எழுப்பி மஞ்சம் அமைத்து அதில் அரங்கனை படுக்க வைத்தது.  நப்பின்னையின் கொங்கைகளின் மீது எத்தனை அழகாக துயில் கொள்கிறான் பார்த்தாயா அனிருத்யை?”

“ஆஹா…  நப்பின்னை இருக்க அவர் உன்னை நாடுவாரா கோதை?”

“அனிருத்யை… அரங்கன் எல்லோருக்கும் பொதுவானவன். ஆனால் எனக்கு மட்டுமே உரிமையானவன்”

“உனக்கென்ன வேண்டுமோ அதை கேளு… அதை விட்டுவிட்டு அவரையே…”

“ம்ம்ம்ம்… கேட்கிறேன். பாவை நோன்பு நோற்க வெண்சங்குகளும் பறையும் பல்லாண்டு பாடும் பாகவதர்களும் இருளை நீக்கும் மங்கல விளக்கும் தலையில் பனி விழாமலிருக்க விதானமும் வேண்டுமடீ”

“சரிதான்… அதை அவரிடம் கேளு.. தருவார்”

“அனிருத்யை… அவன் தருவான் என்பதற்கு உன் உறுதிமொழியோ சிபாரிசோ எனக்கு தேவையில்லை. நான் இவற்றையெல்லாம் கேட்பது உங்களுக்காக…”

அவளை பொறுத்தவரை மனிதர்களெல்லாம் பொம்மைகள். அவளுடைய பொம்மை விளையாட்டில் பொம்மைகள் முக்கியமே அல்ல. சொன்னதென்ன என்பதை வைத்து கவிதையை அளந்து விட முடியுமா? அந்த சொல்ல முடியாமையின் கனம்தான் இறையா..? அனிருத்யையின் தேகம் நடுங்கியது.

”ரங்கா.. ரங்கனே…” அவள் இமைகள் மூடி போல கவிழ்ந்திருந்தன.

“எதைக் கண்டு நீ இப்படி மயங்கிப் போனாயடீ அவரிடம்”

“எதை சொல்ல… எதை விட… என்னவனிடம் எல்லாமே அழகுதான். வெயில் மேலே படராமல் கருடாழ்வார் சிறகு விரிக்க விருந்தாவனத்தில் அவன் வலம் வருவதை நீ பார்த்திருக்கிறாயா? அவன் கையிலிருக்கும் சாரங்கம் போலவே வளைந்த புருவங்கள் அவனுக்கு. உதயகிரியின் மேல் விரிகின்ற சூரியன் போன்று செவ்வரியோடிய கண்கள். தோள்களில் தவழ்ந்தாடும் நறுங்கூந்தல்… அவனுடைய எந்த அழகை தனித்து சொல்வேனடி நான்? மின்னலும் கருமேகமும் கலந்தது போன்ற அவன் கருதிருமேனிக்கு என் மேனி ஒப்பாகுமோ என்ற அச்சம்தானடீ எனக்கு”

உடன் வந்த கன்னிப்பெண்கள் ஒத்தக் குரலில் சிரித்தனர். துணிகளை வாரிக் கொண்டு அடுத்த படித்துறைக்கு சென்றனர்.

“அவனுக்கு நிறைய பணிகள் என்பதால்தான் எங்கள் திருமணத்துக்கு நாள் ஒதுக்க முடியாமல் போகிறது. வேலைகளை விரைந்து முடிக்குமாறு நான் அவனை அவசரப்படுத்திக் கொண்டிருக்கிறேன்”

“அய்யோ… கோதை… நீ இப்படியே பேசிக் கொண்டு போனால் திருத்துழாய் பணியிலிருக்கும் பட்டர்பிரானின் மகள் பிச்சியென்று கூறுவர், அறிவாயோ?”

ஆம். அவள் அறிவாள். பெருவிரிவை காண்பவர்களால் பிச்சியென்றும் மூடள் என்றும் அழகென்றும் இனிமையென்றும் எதையேனும் உணர முடியுமா? இங்கென்றும் இனியென்றும் ஏதேனும் எஞ்சியிருக்குமா?

“ஹரி… ஹரி… ஹரி… தவமுனிவர்களும் யோகிகளும் அவனை அழைக்குமொலி உனக்கு கேட்கவில்லையா அனிருத்யை…” கோதை வெண்ணிற முகத்தில் எதையோ தேடுவன போன்றலையும் கருநிற விழிகளை உருட்டிக் கொண்டே பேசினாள். சிவந்த உதடுகளை குவித்து துகிலனே… என்றாள்.

“அது ஆனைச்சாத்தான்கள் இளங்காலையின் இன்மயக்கில் கிசுகிசுக்குமோசையடீ”

“அதுசரி… அவை மட்டும் அரங்கனை தவிர்த்து வேறு பெயரையா கிசுகிசுக்கப் போகிறது? தோட்டத்து நீர்நிலையில் செங்கழுநீர் மலர்கள் இதழ் விரிக்க, ஆம்பல்கள் குவியத் தொடங்கி விட்டன. இனி செங்கற்பொடி போன்ற காவி நிறத்தில் உடையணிந்த அழுக்கு படியாத வெண்மையான பற்களையுடைய தவசிகள் திருக்கோயிலுக்கு சங்கு ஊத கிளம்பி விடுவார்கள். ஆய்ச்சியர் தயிர் கடைவதற்கு கலயங்களை எடுத்து குடம்குடமாக அதில் தயிரை ஊற்றுவதை பார்க்கவில்லையா நீ? தயிர் சிலுப்பும் ஓசையாவது கேட்கிறதா உனக்கு? சிலுப்பலின்போது எழும் அவர்களின் தாலிமணிகளின் ஒலி கூடவா உன் காதுகளில் விழவில்லை?”

“நீ சொல்வதெல்லாம் அந்த கோகுலன் விளையாடிய ஆயர்பாடியில் ஒலிப்பவை கோதை… நாம் புதுகையில் இருக்கிறோமடீ”

“ஆனால் கேசவன் எங்குமிருக்கிறானேடீ”

“நீ ஒருத்திதான் அவருக்கா? அவர் ஆயர்ப்பாடியில் கோபியருடன் களி செய்வார் என்றறியிலியோ நீ?”

“அது அவரின் விருப்பம் அனிருத்யை.. ஆனால் அவர் என் விருப்பம் அல்லவா?”

அன்று அவள் தழைய தழைய பட்டுடுத்தி அதற்கேற்ப காதணிகளும் கைவளைகளும் பூட்டியவாறு வந்தபோது அனிருத்யை குழம்பிப் போனாள். மின்னுவது அவள் எழிலா அல்லது அவள் கூர்நாசியில் அணிந்திருக்கும் அணியா என்றறிய முடியாத பொலிவுக் கொண்டிருந்தது அவள் முகம். அமர்கையில் மண்ணில் தவழும் கூந்தல் எழுந்து நடக்கையில் அவளுடைய முழங்காலைத் தட்டும். பகலவனின் ஒளியும் நிலவின் குளிர்மையும் பொருந்திய கண்களோடு ஏரியின் கரையோரமாக பொதிந்து பொதிந்து நடந்து வந்தவள் அங்கேயே நின்று நீரில் முகம் பார்த்துக் கொண்டாள். காட்டுப்பூக்களை பறித்து கோர்த்துக் கட்டிய மலர்மாலையை அணிந்துக் கொண்டாள். பின் அதனை கழற்றி சிற்றில்லில் ஊஞ்சலில் அமர்ந்திருந்த அரங்கனுக்கு அணிவித்தாள். மாலை அரங்கனின் கழுத்தை நிறைத்து மண்ணில் நீண்டது. 

“நான் அவருக்கு நிகரானவள்தானே அனிருத்யை?”

“அவர் கடவுளடீ. நீ எப்படி அவருக்கு நிகராக முடியும்?”

“இணைகள் ஒன்றுக்கொன்று நிகர் நிற்க வேண்டுமல்லவா? நீர் நிறைத்த கருமேகம் போன்ற நிறம் அவருடையது. தாமரை மலர் போன்ற திருமுகத்தில் கருவிளைப்பூவையொத்த ஒளி பொருந்திய பௌர்ணமி நிலவுப் போன்ற கண்கள். அதற்கு நான் ஏற்றவளாக இருக்க வேண்டாமோ?”

”நீயும் அழகானவள்தான் கோதை. தாமரை மலரொத்த உன் மென்னுடலில் தென்னையிளநீர் போன்ற கொங்கைகள். இடையென்ற ஒன்று உனக்குண்டா சொல்லு. வேழத்தின் துதிக்கையின் உட்புறத்திலிருக்கும் நிறமல்லவா உன் மேனி. உன் அழகிற்கு பாண்டிய இளவரசனே ஓடி வந்து பெண் கொள்ளுவான்”

“வாயை மூடடீ… என் கொங்கைகளை மால் அன்றி மானுடன் எவரேனும் தொட முடியுமா? இந்த மாணிக்கக் கொடி அந்த மரகதக்கொம்பில் தான் ஏறும். நீ அவனை பாற்கடலில் அறிதுயில் கொள்பவன் மட்டுமே என கருதிக் கொண்டாயோ? கடலில் புகுந்து நீரை முகர்ந்து ஆரவாரத்தோடு மேலெழுப்பும் அவன் கருமேனியல்லவா சூழ் கொண்ட கருமேகங்கள்? அவன் கைச்சக்கரமே மின்னல். வலம்புரி சங்கு போல இடித்து சாரங்கமாகிய வில்லிருந்து புறப்படும் அம்பு போல அவனே மழையாய் பொழிகிறான். நெல் பயிரெல்லாம் எப்படி விளைந்திருக்கிறது பார். அதனடியில் தேங்கி நிற்கும் நீரில் கயல்மீன்கள் துள்ளுகின்றன. வரப்புகளில் குவளை மலர்கள் பூத்து கிடக்கின்றன. இங்கே பாரடீ கரைப்புரண்டோடுகிறதே காளிந்தியின் வெள்ளம்… அது அவனின் உள்ளம். இந்த யமுனையின் தலைவனடீ அவன்”

“கோதை இது யமுனை நதி அல்ல. நம் ஊரிலிருக்கும் சிறு ஏரி”

“ஆஹா… எல்லோரும் இதைதான் சொல்கிறார்கள். நான் கனவு காணுவதை நிறுத்தி விட வேண்டுமாம். நான் காண்பது கனவா… சொல்லு அனிருத்யை. அவர்களெல்லாம் இப்படி கூறுவது புண்ணில் புளிரசம் ஊற்றுவது போல எரிச்சலுாட்டுகிறது எனக்கு. உண்மையிலுமே இவர்களுக்கு என் மீது அக்கறையிருப்பின் அதனை சரி செய்வதுதானே முறை. என் நோய் தீர்க்க எத்தனையோ வழிகளுண்டு. திருவறையில் அவன் மீது சாத்திய பீதாம்பரத்தைக் கொண்டு வந்து என் மீது வீசட்டும். அப்போதாவது என் தாபம் தீருகிறதா என்று பார்க்கிறேன். அவன் கூந்தலில் சூடிய துளசியை கொண்டு வந்து எனக்கு சூட்டுங்கள். அவன் திருமார்பில் சூடியிருக்கும் மாலையை என் மார்பில் இட்டு புரட்டுங்கள். என்னுடைய ஸ்தனங்களை அவனோடு இணைத்து கட்டி விடுங்கள். எவ்வளவு அனுபவித்தாலும் திருப்தி பிறவாத அமிருதம் போலிருக்கும் அவனுடைய திருவாயில் ஊறியிருக்கும் ரசத்தை கொண்டு வந்து எனதுடல் உலர்ந்து போகாதபடி செய்யலாம் அல்லவா? அது இயலாதெனில், அவன் குழுலுாதும்போது தெறித்து விழும் துளிகளையாவது கொண்டு வரட்டும்.  இது எதுவும் முடியாதெனில் அவன் நடக்கையில் விழும் அவனது திருவடிப்பொடிகளை கொண்டு வந்து என்னுடலில் பூசுங்களேன். இவை எவற்றையும் செய்யாமல் என் மீது அன்பும் பொறுப்பும் கொண்டவர்கள் போல் என்னை எந்த மானுடனுடனாவது திருமணம் செய்வித்தால் சரியாகி விடுமென சொல்வதேனடீ? வேதரிஷிகள் வானுலக தேவர்களுக்கென வேள்வியிடும் அவியை திரியும் நரி வந்து முகந்து பார்க்குமோடீ?

மெல்ல திரண்டுக் கொண்டிருந்தது விண்.

அனிருத்யை… சங்கும் சக்கரமும் ஏந்திய உத்தமனுக்கென்றே படைக்கப்பட்ட என் ஊனும் உயிரும் பிறிதொருவருக்கில்லை என்பதை நீ அறிவாயல்லவா? நதிக்கரையில் மலைச்சரிவில் மரக்கிளைகளில் புதரடர்வில் இளமொட்டுகளில் தளிரிலைகளிலெல்லாம் ஆயிரமாயிரம் அவன் விழிகள். அவனை எண்ணியெண்ணி நான் நிலைக்குலைந்துப் போவதை அவனும் பார்க்கதானே செய்கிறான்? ஆனால் என்னிடம் பயப்படாதே… நானிருக்கிறேன் என்று ஒரு வார்த்தையும் இந்நாள்வரை சொல்லியிருக்கவில்லை. ம்ம்ம்… அவனைக் குறை சொல்லி ஆவதென்ன? யசோதையின் வளர்ப்பு அப்படி”

“ஏனடீ பெரிய பெரிய வார்த்தைகளையெல்லாம் பேசுகிறாய்?“

“நான் உரிமைக் கொண்டவளடீ. அவன் இடம் அமையவிருப்பவள். அவனைத் தவிர வேறொருவனை மனதாலும் நினைக்காத என்னைப் புறக்கணிக்கும் அவனைக் கண்டால் என் கொங்கைகளை பிடுங்கி அவன் மார்பில் எறிந்து என் துன்பத்தைப் போக்கிக் கொள்ளுமளவுக்கு எனக்கு அவன் மீது கோபம் வருகிறது. நீயே சொல்லு, இருக்கிறாளா போனாளா என்று கூட கேளாதவனை நான் மார்போடு அணைத்துக் கொஞ்சவா முடியும்?

“அந்த பித்தியிடம் பேச வேண்டாம் என்று எத்தனை முறை சொல்வது அனிருத்யை” தாயின் குரல் காதில் ஒலித்தது அவளுக்கு.

“அம்மா… அவள் காதல் கொண்டிருக்கிறாள், ஆனால் அது தெய்வத்தின் மீது” என்றாள்.

“இது என்னடீ புது யோசனை. தெய்வத்திடம் பூரண சரணாகதி அடையும் முமூஷுக்கள் கூட முக்தியைதான் வேண்டுவரேயொழிய அவரை விழைய மாட்டார்கள். பரஸ்வரூபம் அர்ச்சையென இறங்கி வருதல் வணங்குவதற்குதானே தவிர மணங்கொள்வதற்கல்ல மகளே”

பொழுது அதிகாலையை நோக்கி நகர்ந்துக் கொண்டிருந்தது. பறவைகள் பிறிதொரு மொழியில் தங்களுக்குள் பேசிக் கொண்டன. ஆண்மயில் எங்கோ அகவ பெண்மயில் பதில் அகவியது. பசுக்கள் கன்றுகளிடம் கொஞ்சல் மொழி பேச நாய்கள் தோழர்களை அழைத்துக் கொண்டு நில்லாமல் எங்கோ ஓடின. கழுதையொன்று பொதியை சுமந்துக் கொண்டு ஆற்றங்கரை நோக்கி நடந்தது. கூடவே ஒரு மனிதனும். கழுதையை ஆற்றுப்படுத்தி தன் பணிக்கு பயன்படுத்திக் கொள்வதாக அவன் எண்ணியிருக்கலாம். ஆனால் தன்னுடன் நடக்கும் அவனை பொருளற்ற நிழலாகதான் அது உணர்ந்திருக்கும்.

எங்கோ கீச்சான் குருவிகள் எழ தயாராகி விட்டதைக் கணித்து விட்ட புழுக்கள் மறைவிடம் தேடி ஓடத் தொடங்கின. மலரிதழ்கள் தன்னிடம் தேனருந்தும் வண்டுகள் தன்னுள்ளேயே மயங்கி சரிய ஏதுவாக உடலை மேலும் மென்மையாக்கிக் கொண்டிருந்தன. திருத்துழாயின் மணமெழுவது போலிருக்க கோதையோ என ஐயுற்று பாதை நோக்கினாள்.

“அவள் வடபத்ரசாயி மீது பித்தாக திரிகிறாளடீ. அவள் தகப்பனாரிடம் திருவரங்கம் அழைத்துச் செல்லுமாறு கேட்கிறாளாம். அங்குபோய் ரங்கநாதனை மணமுடிக்கப் போகிறாளாம். பித்தி… பித்தி…” அம்மா அரற்றியபோது நெறியென்றும் முறையென்றும் பிச்சி பிரித்துணர்வாளா? என்றாள் அனிருத்யை.

அன்று ரத்னங்கள் பதிக்கப்பட்ட கிரீடத்தை அணிந்த அந்த ரங்கனை நினைத்து நினைத்து என் வளைகளெல்லாம் தளர்ந்து விழுகிறதடீ அனிருத்யை…  என்று வருந்தியவளை நேற்று வாய் கொள்ளா பூரிப்பும் புன்னகையால் விரிந்த முகமுமாக கண்டபோது அனிருத்யைக்கு ஏதும் புரியவில்லை. ஆடி அவள் முழுவுடலையும் காண்பித்து நிற்க, அவள் கழுத்தில் அணிந்திருந்த ஆரமாலையை அவிழ்த்து வேறொன்றை மாட்டி அழகுப் பார்த்தாள். மற்றொன்று… மற்றொன்று… ஜடை பில்லையிலிருந்து கால் சலங்கை வரை மாறி  இறுதியில் ஒருநிலையை எட்டியபோது அவள் சர்வஅலங்காரினியாகியிருந்தாள். கழுத்தட்டிகை தொண்டைக்குழிக்குள் பதுங்கிக் கிடக்க, சரமாலை மார்பை மையப்படுத்த ஆரமாலை கொப்பூழ் வரை நீள, தோடுகள் தோள்களில் ஊஞ்சலாட வளையல்கள் முழங்கை வரை நீண்டு ஜதி சொல்ல அதற்கேற்ப தாளமிட்டது சலங்கைகளின் ஒலி. நெற்றியில் சுட்டியும் திலகமும் முகப்பொலிவுடன் போட்டியிட்டன. தழையக் கட்டிய சிவந்த பட்டுப்புடவைக்கேற்ப இதழ்களில் பூச்சு இட்டுக் கொண்டாள்.

“அனிருத்யை… உலகளந்தவன், பரிபூரணன் என்றெல்லாம் சொல்லி எங்களை பிரித்து வைத்து வேடிக்கைப் பார்த்தாயே. அந்த நாராயணன் ஆயிரம் யானைகள் சூழ என்னை மணமுடிக்க வருகிறானடீ. பாளைகளோடு கூடிய பாக்குமரத்தால் அலங்கரிக்கப்பட்ட மணப்பந்ததில் நானும் அவனும் அமர்ந்திருக்கிறோம். அவன் வருகைக்காக நகரமெங்கும் பொன்னாலான பூரண கும்பங்களும் தோரண ஸ்தம்பங்களும் நிறுவியிருப்பதை பார்க்கவில்லையா நீ..

“கோதை… இது கனவு.. உண்மையல்ல”

“கனவென்பது புலன்கள் அடங்கியிருக்க ஆழுள்ளம் அறியும் நிலை. புலன்களோடு இணைந்த நடப்பு நிஜமெனில், இதுவும் நடக்கவிருக்கும் நிஜம்தானடீ. நாங்கள் மாலையும் கழுத்துமாக நிற்கும்போது அவனழகில் நான் குறைந்து விடக் கூடாது பெண்ணே. திருமணத்தின்போது என் உயரத்துக்கேற்ப தன் உயரத்தை அவன் அனுசரித்து நிற்க வேண்டும். என் தந்தையார் அவனுக்காக கட்டி வைத்த மாலைகளை நான் அணிந்துப் பார்த்தேன். இந்த உயரம் போதும். இன்னும் நீண்டு விடாதே… எனக்காக உன்னை குறுக்கியும் கொள்ளாதே என்று அவனுக்கு சேதியனுப்பி இருக்கிறேன்”

காலடியோசை அணுகி வந்தது. நிச்சயம் கோதையாக இருக்காது. அவள் கோவிந்தன் வரவுக்காக காத்திருப்பாள். கோவிந்தன் ஆயிரம் யானைகள் புடைசூழ அழகான மணப்பந்தலுக்குள் நுழைந்திருப்பார். மணமேடையை இந்திரன் முதலான தேவர்கள் சூழ்ந்திருக்கின்றனர். மத்தளமும் சங்கும் முழங்குகிறது. கோதை தான் அணிந்திருக்கும் ஆபரணங்களின் ஒளி மின்னலென ஒளிர, கம்பீரம் இடியென முழங்க, மனம் கொண்ட துள்ளல் மழையெனப் பொழிய  நாணத்தை  குடையென கவிழ்த்து மணமேடைக்கு வந்திருப்பாள். பட்டாடை அவளுடன் போட்டியிட்டு சோபையிழந்திருக்கும். திருவரங்கன் இவள் மலர்க்கரம் பற்றிக் கொள்ள அவளுள் எழுந்த அனல் அணைந்து குளிர்மை நிறைய இருவரும் வேள்வித்தீயை வலம் வருவர். செஞ்சாத்து பூசிய அவளின் மென்பட்டுப் பாதம் மயில்தோகையென கனக்க, அதை மென்மையான திருக்கையால் ஏந்தி அம்மியின் மீது வைக்கிறார் கோவிந்தன்.

“அனிருத்யை… இங்கு உட்கார்ந்துக் கொண்டு என்ன செய்கிறாய்? பொழுது புலர்ந்து விட்டது பார். உறங்கிப் போனாயோ? அல்லது அந்த பித்தியுடன் சேர வேண்டாம் என்று சொன்னதற்காக என்னிடம் கோபம் கொண்டு இங்கு வந்து விட்டாயா” சிறிது நாளில் மணமாகி செல்லவிருக்கும் மகளின் கரத்தை அன்போடு பற்றிக் கொண்டாள் அம்மா.

அம்மா… பித்துக் கொள்ளாது இங்கு எவரும் பேரறிவை சென்று தொடுவதில்லை.

மௌனம் காக்கும் மகளை ஏறிட்டாள் அம்மா. “அனிருத்யை… இனி அவளை நினைத்துக் கொண்டிருக்காதே… அவள் இப்போது இங்கு இல்லை என்று சொல்லிக் கொள்கிறார்கள்” ஆதுரமாக தோளோடு அணைத்துக் கொண்டாள்.  அவள் இங்குதானிருக்கிறாள் அம்மா… பேரறிவால் அறிய முடியாதவொன்றை அவள் பிரேமையால் அடைந்து விட்டாள். காலம் திரண்டு வரும்போது அவள் துலங்கி வருவாள். உள்ளத்தின் வார்த்தைகள் உதட்டை எட்டவில்லை. விடியலின் மெல்லொலிகள் கேட்கத் தொடங்கின. பெண்கள் கல் கூண்டுக்குள் எரியும் விளக்குகளில் எண்ணையிட்டு திரி திருத்தி சாணம் கரைப்பதற்காக சகடையொலிக்க கிணற்றில் நீர் இறைக்கத் தொடங்கியிருந்தனர். கிழக்கிலிருந்து  பொற்கரங்கள் நகரை தழுவிக் கொள்ள ஆயத்தமாயின. கோயிலிலிருந்து எழுந்த வெண்சங்கினொலியை காற்று நகரெங்கிலும் நிறைத்துக் கொண்டிருக்க அனிருத்யைக்கு அது வேங்குழலின் நாதம் போன்று ஒலித்தது.


Discover more from சொல்வனம் | இதழ் 373 | 23 ஆக 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.