இத்தி மரத்தடி எஞ்சுவது: மண்ணின்றி நிலைகொள்ளா வாழ்வுகள் 

சயந்தனின் ஆதிரை நாவல் விமர்சனம்

போர் வரலாறு பொதுவாக வெற்றி-தோல்விகளைப் பதிவு செய்கிறது. எந்தத் தரப்பு வென்றது அல்லது தோற்றது, எந்த நிலப்பரப்பு கைமாறியது, அடையப்பட்ட அரசியல் இலக்குகள் எவை என்பவற்றை மையமாக்குகிறது. ஆனால் போர்களின் பின் எழும் கேள்விகள் பல. போர்களில் உயிரிழப்புகள் முதலில் செய்திகளாக, பின் புள்ளிவிவரங்களாக, இறுதியில் வரலாற்று எண்ணிக்கைகளாக மட்டுமே எஞ்சுகின்றன. இந்தப் போரில் இறந்தவர்கள்,தொலைந்தவர்கள் யார்? எதற்காக மறைந்தார்கள்? அவர்களின் இழப்புகளுக்கு அர்த்தம் உண்டா?

சயந்தனின் ’ஆதிரை’ இந்தக் கேள்விகளுக்கு எளிய பதில்களை அளிப்பதில்லை. மாறாக, அவற்றை 1977-இல் துவங்கி, 2011 வரையிலான இலங்கையின் சிங்கள-தமிழ் உள்நாட்டுப் போரின் பின்னணியில் ஈழ, மற்றும் மலையகத் தமிழர்களின் வாழ்க்கைகளின் வழியாக  ஆராய்கிறது. தசாப்தங்கள் தொடர்ந்த போரில் இழக்கப்பட்ட உயிர்கள் ஓர் எண்ணிக்கை மட்டும்தானா?  இலட்சியத்திற்காகவோ, உரிமைக்காகவோ, நிர்ப்பந்தத்திற்காகவோ, குற்றவுணர்ச்சிக்காகவோ, வேறுவழி ஏதும் இல்லை என்பதற்காகவோ – இவ்வகைக் காரணங்கள் இவ்வுயிர் இழப்புகளுக்கு அர்த்தம் கொடுக்கின்றனவா? 30+ ஆண்டுகள் நடந்த உள்நாட்டுப் போரின் முடிவில்,  தலைமுறைகளை இழந்த எளிய மக்களின் வாழ்வில் அர்த்தத்தைத் தேடுகிறது. உயிரோடு எஞ்சியவர்களிடம் எஞ்சியது எது என விரித்துச் செல்கிறது. 

1991-ல் சிங்களக் காவல்துறையிடம் பிடிபட்டு, கடும் சித்திரவதைக்கு உள்ளாகும், இயக்கத்தில் இருந்த, லெட்சுமணனிடம் இருந்து நாவல் துவங்குகிறது. லெட்சுமணனின் தந்தையே 1977 கலவரத்தில், மலையகத்திலிருந்து முல்லைத்தீவின் தனிக்கல்லடிக்கு இடம் பெயர்ந்தவர். இவர்களுடன் சங்கிலி-மீனாட்சி, அத்தார்-சந்திரா ஆகிய ஈழத் தம்பதியரின் குடும்பங்களின் பல இடம்பெயர்வுகளையும், போர் சூழ்ந்த வாழ்வின் சித்திரத்தையும் நாவல் தொடர்கிறது. 

மலையகத் தமிழர்கள், காலனிய ஆங்கிலேயர்களால் தோட்டத் தொழிலாளர்களாக இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டார்கள். இலங்கையின் செல்வத்தையும், பொருளாதாரத்தையும் கட்டியெழுப்புவதற்கு, பெரும்பங்கு வகித்தார்கள். ஆனால் 1948 இலங்கை தேச விடுதலைக்குப்பின் அவர்களுக்குக் குடியுரிமை கொடுக்கப்படவில்லை. பெரும்பாலானவர்கள் இந்தியாவிற்குத் திருப்பி அனுப்பப்பட்டார்கள். எஞ்சிய மலையகத் தமிழர்கள் நாடிலியாக, ஏதிலியாக “என் பாட்டன் இந்த மலேலதானே பொறந்தான். அவன இங்கதானே எரிச்சோம்” நான் ஏங்கப் போவேன்? எனத் தவிக்கிறார்கள். புவியியல் அண்மையா? ஆங்கிலேயர்களின் சுரண்டலால் உருவான கடும் பஞ்சங்களா? கங்காணி முறையா?  இவர்களின் பிரச்சனைகளின் வழியே “எது என் மண்?”  என்னும் கேள்வியை எழச்செய்கிறது.  

படைப்பு உள்நாட்டுப் போரின் சிங்களத் தரப்பை பற்றிப் பேசுவதில்லை. அதன் மறு தரப்பான இயக்கத்தைப் பற்றியும் விரிவாகப் பேசுவதில்லை. இந்தப் போரில் அகப்பட்ட மலையக மற்றும் ஈழத்தமிழர்களின் போர்க்கால வாழ்வை, அவர்களின் தரவுகளை, கண்ணீரை, வாழத்துடிக்கும் விழைவை, இழந்தவற்றை,  போர் அன்றாடம் ஆவதன் நிதர்சனத்தை, குரூரத்தை, சாகவும் தயார் என்ற அர்ப்பணிப்பைச் சொல்கிறது.  ஈழத்தமிழர்களின் அனுபவம் வேறுபட்டது. அவர்களின் போர், தாம் வாழ்ந்த நிலப்பரப்பின் மீது நிகழ்ந்த வன்முறை. மலையகத் தமிழர்களுக்கோ அது நிலையின்மை. மலையகத்தமிழருக்கும், ஈழத்தமிழருக்கும், இடையே உள்ள சாதிப்பிரிவினைகளும், ஈழத்தமிழருக்குள்ளேயும் கூட வேதம் பயில்பவருக்கும், சைவர்களுக்குமான பிரிவினைகளையும் போகிற போக்கில் நாவலில் காணலாம். இவ்விரு தமிழருக்கும் போரின் தாக்கம் ஒன்றாக இருக்கவில்லை என்பதை சயந்தன் காட்டுகிறார். உயிரோடு எஞ்சியவர்கள் அனைவரும் இழப்பைச் சுமந்தாலும், அவர்கள் சுமந்த இழப்புகளின் இயல்புகள் வேறுபட்டவை.

நாவலில், பதின்வயது லெட்சுமணன், அத்தார் மற்றும் சங்கிலியுடன் செல்லும் காட்டு வேட்டைப் பகுதிகள் உயிரோட்டம் கொண்டவை. பொதுவான சூழலில் நாடு பாதுகாப்பாகவும், காடு அபாயம் கொண்டும் இருக்கும். ஆனால் போர்ச் சூழலில் நேரெதிராகக் காடு இயற்கையின் உயிர்ப்பும்,  அழகும் கொண்டு அடைக்கலமாக அமைகிறது. நாடு கலவரம் மிகுந்து துரத்தி அடிக்கிறது. 

லெட்சுமணனின் வாழ்வில் அதுவே இனிய தருணமாக அமைகிறது. அவன் சிங்களப்போலீசால் இழுத்துச்செல்லப்பட்டு, சித்திரவதைக்கு ஆளானபின் என்ன ஆனான் எனத் தெரிவதில்லை. 

மாறாக முதிர்வது மயில்குஞ்சன், தன் இளம் வயதுமுதல் கானகத்தின் சூத்திரங்கள் அறிந்து வேட்டை ஆடுபவன். அவன் பலருடன் சிங்கள இராணுவத்தினரால் பிடிக்கப்படுகிறான். இராணுவத்தினர் பச்சை உள்பனியனை ஓர் இளைஞனின் கழுத்தில் அணிவித்து படம் பிடித்து (இயக்கத்தைச் சேர்ந்தவன் எனக்காட்ட), பின் கொன்று ஹெலியிலிருந்து அவன் உடலைத் தூக்கி எறிகிறார்கள். அச்சம்பவத்திற்குப் பிறகு மயில்குஞ்சன் இயக்கத்தில் இணைந்து ஜி.பி.எஸ் போலப் புலிகளுக்குக் காடுகளிலிருந்து தாக்குதல் செய்வதற்கு வழிகாட்டுகிறான். 

காடே கொலைக்களமாக ஆகிறது. இறக்கும் தறுவாயில், தீர்வை காணாமல், அது மிக அருகில் இருக்கும்போது செல்கிறோமே என மயில்குஞ்சன் பயம் கொள்கிறான். அது ஒரு வகையில் தன்னை அழித்துக்கொண்ட புலிகள் அவனைவருமே கொண்டிருந்த  நம்பிக்கையும்-பயமும்தான். 

நாவல் முழுவதும் ஈழத்து, மலையகப் பிள்ளைகள், இளைஞர்கள் காணாமல் போகிறார்கள். குடும்பத்தினர் அவர்களைப் பற்றி புலம் பெயர்ந்தவர்களிடமும், இயக்கத்தினரிடமும் கேட்ட வண்ணமே இருக்கிறார்கள். பின்னர் அதுவும் காற்றில் கரைந்து, காணாமல் போகிறது.  பிள்ளைகள், தொடர்ந்து பள்ளி செல்லும் வாய்ப்பு இல்லை. 

கலவரத்தின் இடையிலும், இடம் பெயர்வின் மத்தியிலும் விட்டு, விட்டு  கல்வி நடக்கிறது.  இளைஞர்களுக்கோ விவசாயக் கூலி வேலையைத் தவிரச் சொல்லும்படியாக ஒன்றும் இல்லை. அத்தார்-சந்திரா தம்பதியரிடம் வளரும் லெட்சுமணன் திடீரெனக் காணாமல் போகிறான், இயக்கத்தில் இருக்கிறானா என்று கூட தெரிவதில்லை. 

சங்கிலி-மீனாட்சியின் மகன், சங்கிலியின் இறப்புக்குப் பின் தன்னை நம்பியிருக்கும் குடும்பத்தை விட்டு, வெள்ளெயன் திடுமெனக் காணாமல் போகிறான். எது அவர்களை உந்துகிறது எனக்கூட இருப்பவர்களுக்கே தெரிவதில்லை. அல்லது போரின் சமூக அழுத்தத்தைக் குடும்பத்தாலும், அன்றாடங்களாலும் கடக்க முயல்வதில் அவர்களுக்குக் காரணங்களை யோசிப்பதற்கான நேரமோ, வசதியோ,  இருப்பதில்லை. 

இயக்கத்தில் இணைந்து, குண்டின் உலோகத் துண்டு வெள்ளெயன் இடுப்பில் தங்கி விடுகிறது. உடல் மற்றும் மன வலியினால், இயக்கத்திலிருந்து ஓய்வு பெற்றுத் திரும்பிவிடுகிறான். ஆனால் தன் இளமையை இழக்கிறான். போரின் பிந்தைய மன அழுத்தத்தால், கல்யாணமோ, இல்வாழ்வோ அவனுக்கு உணர்ச்சிகளை ஏற்படுத்தவில்லை. தன் குழந்தைகள் பிறக்கும் தருணத்தில் மரணத்தை வென்று அவர்களை எப்படியோ காப்பற்ற விழைகிறான். காசு கொடுத்து வெளி நாடு செல்ல வழி இல்லை,  மிதிவெடி அகற்றும் வேலைதான் கிடைக்கிறது.  

காணாமல் போன சங்கிலி-மீனாட்சி தம்பதியரின் மகள் ராணியின் கணவன் என்ன ஆனான் எனத் தெரிவதில்லை. காணாமல் போனவை பல – ஒரு தலைமுறை ஆண்களின் கல்வி, இளமை, தொழில், அன்பு, இல்லறம், காலம், மகிழ்ச்சி, ஏன் வாழ்வும் உயிரும் கூடத்தான். போரின் பிந்தைய மன அழுத்தத்தை,  மரணங்களையும், காயங்களையும் காணும் பிள்ளைகளின் உளவியல் அழுத்தங்களை அன்றாடத்தன்மையுடன் சொல்லும் சயந்தனின் நடை மேலும் தீவிரத்தைக் கூட்டுகிறது. 

சங்கிலியின் அண்ணன் நடராசன் இருக்கும் ஒதியமலைப் பகுதியில் ஆமிக்காரர்கள் சூழ்ந்து நடத்தும் துப்பாக்கிச் சூட்டில், என்ன நடக்கிறது? எதற்குப் பிடிக்கிறார்கள்? என நினைப்பதற்குள்ளாகவே மக்கள் கொல்லப்படுகிறார்கள். ஒரு தரப்பை அடித்தால், பதிலடி மிகப் பலவீனமான கண்ணியில்தான் குறிவைக்கப்படும். உள்நாட்டுப் போரில் எளிய மக்கள் படுகொலைகளுக்கான இலக்குகளாக மட்டுமே இருப்பதின் அவலமும், குரூரமும் இப்பக்கங்களைக் கனக்கச் செய்கின்றன. 

சங்கிலி இயக்கத்தின் மீது இருக்கும் எதிர்ப்பை  “தன்ர சனங்களுக்காகச் சுரந்துகொண்டிருந்த இந்த நிலத்துக்குக் கொள்ளி வைச்சிட்டியளே…. பாவியளே…. இந்தா பாருங்கோடா…. எத்தினை உசிரை எரிச்சுப் பொசுக்கிட்டுது…. உன்ர நிலம் என்ர நிலமென்று இந்தக் காட்டை எரிக்க வேண்டாமெண்டு கதறினதை யாரும் கேட்கலயே…. ” என அத்தாரின் மீது பொழிகிறான். சங்கிலி இயக்கத்தில் சேர்வதில்லை. அவன் மரணம் சாதாரணமாக, காளை மாடு (குளுவன்) முட்டி நிகழ்கிறது. ஆமிக்காரர்கள் சுட்டுக் கொன்ற  நடராசன் மகன் இயக்கத்தில் வீரச்சாவடைகிறான். சங்கிலியின் மகன் வெள்ளெயன் இயக்கத்தில் இணைகிறான். அந்தச் சூழியலின் முரண் துயரமானது. போர்ச் சூழலில் மரணங்களால், வாழ்பவர்கள் உயிர் மிஞ்சி இருப்பதனாலேயே, தன்மேல் ஓர் இனந்தெரியாத கழிவிரக்கம் கொள்வது ஒரு மறை பொருளாகத் தெரிகிறது.

இயக்கத்தில் சேரும் பிள்ளைகள் பெரும்பாலும் வசதியற்ற பிள்ளைகளே. “கஸ்ரப்பட்ட குடும்பப் பிள்ளையள்தான் இங்க வருகினம். வசதிக்காரப் பிள்ளையள் பாஸ் எடுக்கிற ஒபிஸிலதான் நிக்கினம்…” நூறு கோடி இலக்கில் தமிழீழ மீட்பு நிதியை வெளிநாடுகளில் மகனையோ கணவரையோ கொண்ட குடும்பங்களிலிருந்து புலிகள்  அறவிட்டுக்கொண்டிருந்ததையும், நாடுகளுக்கு ஏற்ப தொகையும் மாறியதையும் காணலாம். இயக்க “முன்னாள்கள்”  ஏஜென்ஸிக்கு கொடுக்கப்படும் நடப்பு தொகையான இலட்சங்களை ஆற்றாமையுடன் பேசிக்கொள்வதும் நடக்கிறது. புகலிடம் என்பது மனிதாபிமானத்தின் பெயரால் தொடங்கி வணிகமாக மாறுவதையும் நாவல் தயங்காமல் பதிவு செய்கிறது. போரிலிருந்து தப்பிக்கும் வழியே போருக்குச் செலுத்தப்படும் வரியாகிறது. 

எல்லோருக்கும் எல்லாம் எனக் கம்யூனிசம் பேசும் அத்தார் இயக்கத்திற்காகப் பேசினாலும், அவன் இயக்கத்தில் சேராமல்,  இயக்கத்தினர் மீது பரிவும் கவலையும் கொண்டு, ஒரு பார்வையாளனாகவே கடைசிவரை இருக்கிறான். ஐம்பதைத் தொடுகிற வயதில் சந்திரா, வித்தியாலயத்தின் உதவி அதிபராகப் பொறுப்பேற்கிறாள். ஆயுததிற்கெதிராகவும், போருக்கு எதிராகவும் ஒலிக்கும் குரலாக இருக்கிறாள்.  “எல்லாப் பழியும் சனங்களில்தான் திரும்புமெண்டால், சனங்களின்ற பெயரால பிறகெதுக்கு இந்த ரத்தம்?” – என ஆத்திரப்படுகிறாள். இயக்கத்தில் இணையும் பள்ளிப்பெண் பிள்ளைகளைப் பார்த்தும், துரோகிகள் எனத் தெருவில் சுட்டுக்கொல்லப்படும் பெடியன்களையும் கண்டு துயருறுகிறாள், ஒரு கட்டத்தில் தன் வயிறு திறக்காமலிருந்ததே நல்லது என நினைக்கிறாள்.  

“இயக்கம் விடுற எல்லாப் பிழைகளையும் இந்தப் பிள்ளைகள் தங்கடை தியாகத்தால் வென்று விடுறாங்கள்” என மாய்ந்து போகிறாள். “கடைசி வரை நின்று சாவதை இயக்கம் வீரமாக நினைக்கலாம். அதுக்காக வாழ ஆசைப்படுற சனங்களை உடன்கட்டை ஏறச்சொல்லி வற்புறுத்தேலாது…” எனச் சொல்லும் சந்திரா இறுதிப் போரில் மடிய, அத்தார் தன் மனைவியின் உடல் மீதே ஒருகண் திறந்திருக்க உயிர் துறக்கிறான். உடலைக் கண்டடைபவர்களால், அந்த அம்பட்டன் கிழவனைத் தெரியும் – வெள்ளாளப் பெண்ணை கட்டியவன் என நினைவுகூரப்படுகிறார்கள். போரின் அவலங்களில் மற்றொன்று வெறுமையில் – சுற்றமோ, தெரிந்தவர்களோ, இன்றி அனாதையாய் மடிவது. 

மரணங்களுக்குப்பின்,  புத்துயிர்கள் வாழ்வின் சுழற் வட்டத்தைப் பிரதிபலிக்கின்றன. நடராசன்- கிராமப் படுகொலைக்குப்பின்  சங்கிலி-நடராசன் சகோதரர்களின் தாயார் ஆச்சிமுத்துக் கிழவி, வல்லியாளுக்கு பிரசவம் பார்க்கிறாள். ஆபத்தான பிரசவத்தில் பிறக்கும் மகளுக்கு, கிழவியின் நினைவாக முத்து எனப்பெயரிடுகிறார்கள். 

முத்து, பின்னர் கிழவியின் கணவன் நினைவாகப் பெயரிடப்பட்ட பேரன், வெள்ளெயனுக்கு மனைவியாகிறாள்.  இதனுடன் இத்தி மரமும் ஈழத்தின் குறியீடாக, முதலில் சங்கிலியின் தாத்தாவின் காலத்தில் ஒரு சிறு மரமாக இருக்கும் பொழுது, அதற்கு வேட்டை – பலி கொடுக்கப் படுகிறது. பின் சங்கிலியின் காலத்தில், அவர்களின் நம்பிக்கைகள் வேர்விட்டு இத்திமரத்தாளுக்கு பொங்கல் பொங்கிப் படைக்கப்படுகிறது.  உள்நாட்டுப் போரின் காலகட்டத்தில் புயலில் இத்திமரம் சாய்ந்து விடுகிறது.  இத்தி மரத்தாளின் அருகிலேயே சிறிய கன்று தோன்றி போரின் முடிவில் வெள்ளெயனின் பெண்கள் (புது) இத்தி மரத்தாளுக்குப்  பொங்கல் படைக்கிறார்கள். போரின் பின்னர் மீதம் இருப்பது வெறும் துயரம் மட்டுமல்ல, நினைவுகளும், மரபும், மீண்டும் வாழ முயலும் விருப்பமும் மிஞ்சுகிறது. இத்திமரத்தின் வழியாக நாவல் அழிவுக்குப் பின் ஆக்கத்தின் தொடர்ச்சியை, மனித அனுபவத்தை இயல்பாய் காட்டுகிறது. 

இயக்கத்திலும், சமூக வாழ்விலும் பெண்களே ஆதிரைகளாகச் சுடர்கிறார்கள். மலர் என்ற வெள்ளையக்கா ஒவ்வொரு தசாப்தத்திலும் உருப்பெற்றுக் காலமாகவே வருகிறாள். தனியாளாய் காணியைப் பார்த்தவள்,  ஆமிக்காரர்களின் வன்கொடுமைக்கு ஆட்பட்டு இயக்கத்தில் இணைந்தவள், போரில் காலிழந்தவள், குடும்ப வாழ்வும் கொண்டவள், பின் செவிலியாகி மக்களுக்கும், இயக்கத்தில் காயம்பட்டவர்களுக்கும் உதவி செய்பவள் என, இறுதியில் வாழவே விழையும் நம்பிக்கையோடு சங்கை ஊதுகிறாள்.  கடற்கரும்புலிகள், ஆதிரை என வரும் இளம் பெண்கள் வெற்றி பெற்றுவிடுவோம் என்ற நம்பிக்கையுடன் வீரச்சாவடைகிறார்கள். போர்ச்சூழலில் வெறும் எண்ணிக்கையாக இருக்கும் மரணங்களை,  இந்த ஆதிரைகளின் துணிவும், தியாகமும் மதிப்படையச் செய்கின்றன.

இறுதிப்போரில் வெளியேற நினைக்கும் மக்களை, இயக்க ஆட்கள், ஆமிக்காரன் உங்களைப் பணயமா வைத்து முன்னேறுவான் எனத் தடுக்கிறார்கள். தள்ளிக்கொண்டு ஓடும் மக்களையும், குழந்தைகளையும்  சுடுகிறார்கள் –  யாருக்காக இந்தப் போர்? என்னும் கேள்வியை எழுப்புகிறது. போரின் சித்தரிப்பு யதார்த்தமான ஈழத்தமிழில் மேலும் கூர் கொள்கிறது. “பாதுகாப்பு வலயமெண்டு அறிவிச்சதே திட்டுத் திட்டாச் சிந்தியிருக்கிற சனத்தை ஒண்டாக்கிப் போட்டு ஒரேயடியாக் கொல்லத்தானே”, “உங்கடை பிள்ளையளைச் சாகக் காணுற தைரியம் உங்களுக்கு இல்லையெண்டால் அதுக்கு முதலே நீங்கள் சாக வேணுமெண்டு கடவுளிட்டை வேண்டுங்கோ… நான் அதைத்தான் செய்யிறன்…” என இறுதிப்போரில் தைக்கின்றன சயந்தனின் சொற்கள்.  இயக்கத்தில் இருந்தால் நிமிர்வென்ற எண்ணம் மாறி, “தங்களுக்குத்தான் ஆமியிட்டைப் பிடிபட விருப்பமில்லையெண்டால் கழுத்தில் ஆடுகிறதைக் கடிக்க வேண்டியதுதானே” ,  “புளுத்துப் போவீங்களடா” என மக்கள் இயக்கக்காரர்களைத் தூற்றும் அளவுக்குச்செல்கிறார்கள். படிப்படியான இலக்குகள் இன்றி, களத்தில் மக்களின் நிலையை அறியாமல், சமரசங்களைப் பற்றி நினைக்காமல் இயங்கும் அமைப்பின் இலட்சியத்தின் மீது கேள்வி எழுப்புகிறது.  கண்ணீரின்றி இறுதிப்போரின் பக்கங்களைக் கடக்க முடிவதில்லை.

ஈழத்தமிழில் இலங்கையின் தாவரங்கள், நிலப்பரப்பு, விலங்கினங்கள் (பொன் நகர்,  கூமா, தவிட்டை, பொம்பர, ஒழுங்கை, வேலிக்கதியா) மிக அழகான நடையில் உள்ளன. நாவலின் ஈழத்தமிழ் சொல் அகராதியைப் புத்தகத்தில் சேர்த்தால், மற்றத் தமிழ் வாசகர்களுக்கு பயனுள்ளதாக அமையும். பேட்டை நாவலுக்கு தமிழ்பிரபா இவ்வாறு ஓர் அகராதி சேர்த்துள்ளார். நாவலில் ஒரு சில இடங்கள் செய்திகளைச் சேர்த்தது போன்று இயல்புத் தன்மையிலிருந்து விலகி நிற்கின்றன. ஒட்டுமொத்தப் பார்வை அளிக்கும் பொழுது  முக்கியமான நிகழ்வுகள் விடுபடாமல் இருக்க வேண்டும் என ஆசிரியர் விழைவது புரிந்து கொள்ளக்கூடியதே.  நாவலின் இன்னொரு வரம்பையும் சொல்லியாக வேண்டும். உலகப் போர் இலக்கியங்கள் எதிரியின் முகத்தையும் மனதையும் காட்டத் துணிகின்றன; ஆதிரையில் சிங்களத் தரப்பு ஆமிக்காரனாக, ஒரு கருவியாக மட்டுமே தெரிகிறது. 30+ ஆண்டுகளின் பேரழிவை இத்தனை விரிவாகச் சித்தரிக்கும் ஒரு படைப்பில், அந்தப் பேரழிவை நிகழ்த்திய மறுபக்கத்தின் மனித முகம் ஒரு கணமேனும் தெரிந்திருந்தால், நாவல் இன்னும் கூடுதல் உயரத்தை எட்டியிருக்கும். 

அல்லல் பட்டு ஆற்றாது சிந்திய எளிய மக்களின் இரத்தக் கண்ணீர். ஆற்றுப்படாமல் அழிந்த துயர். மனிதக் குலம் முன்னோக்கி எவ்வாறு செல்கிறது?    மனிதர்களின் துயர்கள் அறிந்து கொள்ளப்படுவதால். அவை மேலும் நிகழக்கூடாது,  அந்நிலையை மேம்படுத்தும் வழி என்ன என யோசிப்பதால்.  அப்படியென்றால் உலகப்போர்களின் பின் போர்கள் நிகழக்கூடாதல்லவா? ஆனால் இது என் போர் என வல்லரசுகள் நினைத்தால் மட்டுமே. அகதி அந்தஸ்து மட்டும் கொடுக்கப்பட்டால், எங்கோ ஒரு மூலையில் சாகும் எளிய மக்கள் ஓர் எண்ணிக்கை மட்டுமே. சில கிலோமீட்டர் தொலைவில், வேறு தேசத்தில், தமிழ் பேசும் பிள்ளைகள் பள்ளிக்குச் செல்கிறார்கள். சாதாரண மக்கள் வாக்களித்து தலைவர்களைத் தெரிவு செய்கிறார்கள், பிடிக்கவில்லை என்றால் மாற்றுகிறார்கள். குடியுரிமையும், உயிரின் மரியாதையும் எந்த மனிதனுக்குமான அடிப்படைத் தேவை. அதற்குக்கூட வழியில்லாத வாழ்க்கையில் ஆதிரைகளின் மரணம் தீர்வு கிடைக்கும் என்ற   நம்பிக்கையுடன்  எய்யப்பட்ட, தோல்வியடைந்த போரின் மதிப்பும் அர்ப்பணிப்பும் கொண்ட வீர அம்புகள் மட்டுமே.

நவீன இலக்கியம் வாழ்வு, மற்றும் சமுதாயம் குறித்த விமர்சனப் பார்வையை முன் வைக்கிறது. அவ்வகையில் சயந்தன் ஆதிரை வழியாகப் பல தசாப்தங்கள் நிலவிய இலங்கை உள்நாட்டுப்போர் பற்றிய ஒட்டுமொத்த விமர்சனப் பார்வையை அளிக்கிறார். காலனியாதிக்கம் முடிந்த பின்னரும் நிலையற்ற தன்மை, அதன் விளைவுகள், அது இடம்பெயர்த்த சமூகங்கள், அது மறுத்த குடியுரிமை, அதன் மரபுச் சுமைகள் இன்றும் வாழ்க்கையில் அனுபவிக்கப்படுவதைக் காட்டுகிறார்.

இலங்கைப் போர் பற்றிய செய்திகளை மட்டுமே அறிந்த வாசகனை, நேரடிச் சித்தரிப்பின் வாயிலாகவும், மொழிச்சுவையுடனும், முகங்களை நேருக்கு நேர் சந்திக்கச் செய்கிறார்.

மனித விழுமியங்களைப் பற்றிய கேள்விகள் எழுப்புகிறார். எண்ணிக்கைகளாக மாறிய உயிர்களை மீண்டும் மனிதர்களாக நினைவுகூரச் செய்வதில்தான் அவர் எழுத்தின் வலிமை அமைந்துள்ளது.

***


Discover more from சொல்வனம் | இதழ் 371 | 26 ஜூலை 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.