ஆங்கில மூலம் : சூபி தாபா
தமிழாக்கம்: எம் ஏ சுசீலா

தொலைந்து போன ஒரு கிராமத்தைப் பற்றிய கதையைப் பாட்டி குழந்தைப் பருவத்தில் எனக்குச் சொல்லி இருக்கிறாள். அந்த கிராமம் எங்கள் கிராமத்தில் இருந்து 100 மலைகள் தாண்டி வெகு தொலைவில் உள்ள பக்கே பள்ளத்தாக்கில் அமைந்திருந்தது. அந்த கிராமம் முழுவதும்-அதிலிருந்த மக்கள்,மூங்கில் வீடுகள்,நெல் வயல்கள், ‘கயால்கள்’ எனப்படும் மலைப்பிரதேசக் காட்டு மாடுகள் பன்றிகள்,கோழிகள், நாய்கள் என எல்லாமே ஒரு நாள் எப்படியோ மாயமாகிவிட்டன.
“அது எப்படி ஒரு கிராமம் முழுக்க.. ,அதிலே இருக்கற ஜனங்களோட அப்படிக் காணாமல் போக முடியும்?” கதையில் இருந்த ஓட்டையை ஏற்றுக் கொள்ள முடியாமல் நான் என் பாட்டியை மேலும் துருவிக் கேட்டேன்.
“அது எனக்கு எப்படித் தெரியும் ? அவங்க எல்லாருமே காணாமப் போயிட்டாங்க, எங்கேயோ மறைஞ்சுட்டாங்க. அது எப்படி நடந்ததுங்கிற கதையைச் சொல்ல யாருமே மிஞ்சலை”
பாட்டி பெருமூச்சு விட்டுக் கொண்டே இப்படிச் சொன்னாள்.
அவளது நெற்றியில் கவலை,கோடிழுத்திருந்தது. அதிருப்தியும், கோபமுமாய் என் முகம் போன போக்கைப் பார்த்துவிட்டு
“ஒருவேளை அங்கே யாராவது பிழைச்சுக் கூட இருக்கலாம், ஒரு நாளைக்கு அந்தக் கதையைச் சொல்லலாம், ஆனா அந்த விடை என்னன்னு நம்மளாலே கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு அந்த ஊர் ரொம்ப தூரம் தள்ளி இல்லே இருக்கு !”
என்று என்னை சமாதானப்படுத்த முயன்றாள். அப்போது அவள் முகம் குழந்தைத்தனமாய்த் தெரிந்தது.
காட்டு மரங்களின் கிளைகளையும்,வேர்களையும் குரங்குகள் போலப் பிடித்துக் கொண்டு 100 மலைகளைத் தாண்டி இருக்கும் அந்த இடத்துக்கு நம்ப முடியாத ஒரு பிரயாணத்தைப் பாட்டியும் நானும் மேற்கொள்வதாகக் கற்பனை செய்து கொண்டேன்.
“என்னிக்காவது ஒரு நாள் நான் அங்கே போய் உண்மை என்னன்னு கண்டுபிடிக்கத்தான் போறேன்”
சலசலத்துக்கொண்டிருந்த மூங்கில் மரங்களுக்கு மேல் மெலிதாக அடித்துக் கொண்டிருந்த நிலவொளிக்குக் கீழே இருந்தபடி ஏதோ கனவு காண்பவளைப் போல இப்படிச் சொன்னேன்.
“நான் அந்த நாளுக்காகக் காத்திருப்பேன். அப்ப நான் கதை சொல்ல வேண்டாம்,நீ எனக்குக் கதை சொல்ல ஆரம்பிச்சிடுவே”
என்று பொக்கை வாய்ச் சிரிப்போடு சொன்ன பாட்டி, என்னைப் பிடித்து இழுத்து மூங்கில் மரக்கட்டைகளால் ஆன திண்ணையில் படுக்க வைத்துக் கொண்டாள். மாலை நேரக் கதையாடல்களுக்காகவே உருவாக்கப்பட்டது போல அந்த இடம் இருந்தது. நான் பாட்டியின் மெலிந்து சுருங்கிய கரங்களுக்குள் ஒண்டிக்கொண்டேன். கடும் வெயிலில் காய்ந்து கிடக்கும் மூங்கில் குருத்துக்களின் புளிப்பு வாடை அவளிடமிருந்து வீசியது. பாட்டி தலையணைகளாகப் பயன்படுத்தும் சின்ன மரப்பலகைகளைத் தலைக்கடியில் வைத்துக் கொண்டு அவளும் நானும் படுத்துக்கொண்டோம். பாட்டி உடனே தூங்கி விட்டாள். அந்தத் தொலைந்த கிராமம் எப்படி இருக்கும் என்ற கற்பனையில் நான் ஆழ்ந்திருந்தேன்.
பச்சைப்பசேல் என்று…ஏற்ற இறக்கங்களும், பாறைகளும்,குன்றுகளுமாய், நல்ல காற்று வீசும் இடமாக அது இருக்குமா ? அந்த கிராமத்தில் இருந்த மக்கள் எப்படிப்பட்ட உடையை அணிந்து கொண்டிருந்திருப்பார்கள்? இப்படி எல்லாம் நான் யோசித்துப் பார்த்தேன். முடிச்சுப் போட்ட தலைப்பாகையை நெற்றிக்கு மேல் சுற்றிக் கொண்டிருந்த என் தாத்தாவைப் போலவே அங்கிருந்த ஆண்களும் அதை வைத்துக் கொண்டிருப்பார்களா?அவர்களும் எங்களைப் போல மஞ்சள் பாசிகளை அணிந்து இருப்பார்களா? அங்கே வாழ்ந்த பெண்களும் என் அம்மாவைப் போலவே ‘சாரங்’கும் சால்வையும் அணிந்து கொண்டிருப்பார்களா? எங்கள் பகுதியில் இருப்பதைப் போலவே மணப்பெண்களை வாங்குவதற்காக ஆண்கள் காட்டு மாடுகளை சீராகக் கொண்டு வருவார்களா? அங்குள்ள குழந்தைகளும் வியர்க்க விறுவிறுக்கக் குத்துச்சண்டை போட்டபடி கடுமையான வெயில் அடிக்கும் நாட்களில் ஆற்றில் குதித்து
நீச்சலடித்திருப்பார்களா?
நிலவு முத்தமிட்டுக் கொண்டிருந்த இரவில் பாட்டியுடன் படுத்திருந்த அந்த நாள் தொடங்கி, என் குழந்தைப் பருவத்து வினாக்கள் எல்லாம் பதில் தெரியாமல் ஆண்டுக்கணக்கில் கனவு போல் கரைந்து போய்க் கொண்டிருந்தன. நான் ஓர் இளம் பெண்ணாகி ராஜீவ் காந்தி பல்கலைக்கழகத்தில் தாவரவியல் மாணவியாகச் சேர்ந்த பிறகும் கூட அந்தக் கதை குறித்த மர்மம் என் நினைவுகளில் குடியிருக்கவே செய்தது. அந்த ஆண்டு இந்திய அரசாங்கம்,மலைகள் நிறைந்த அருணாச்சலப் பிரதேசத்தின் தொலைதூர மாவட்டங்களில் மலைகளின் குறுக்கே சாலை போடும் ஒரு திட்டத்துக்கு ஒப்புதல் அளித்திருந்தது.எவருமே துளைக்க முடியாத அந்த மலைகளையும் குடைந்து எடுத்து சாலையும் ஒரு வழியாக அமைக்கப்பட்டு விட்டது. நான் இறுதி செமஸ்டரில் படித்துக் கொண்டிருந்தபோது பக்கே பள்ளத்தாக்கை ஒட்டி இருக்கும் வித்தியாசமான மலைகளின் அமைப்பையும் சூழலையும் பற்றி ஆய்வு செய்வதற்காக எங்கள் வகுப்பு மாணவர்களை அங்கே அழைத்துச் செல்ல இருப்பதாகத் தாவரவியல் பேராசிரியர் அறிவித்தார். நான் புல்லரித்துப் போனேன்.
இறுதியாக … எனக்கு, அந்த மலைகளிடம் இருந்து அழைப்பு வந்தே விட்டது.
பல்கலைக்கழகப் பேருந்து,மலைகளுக்குள் சுழன்று சுழன்று மேலேறிக் கொண்டிருந்தது. அந்த மலைகள் மிக மிகப் பழமையானவை.ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நாகரிகத்தின் கடைக்கண் பார்வை கூடப் படாதவை. நான் ஜன்னல் வழியே தலை நீட்டிப் பார்த்துக் கொண்டிருந்தேன். மலைகளின் வயிற்றிலிருந்து சிலீர் என்ற பனித்துளிகள் வெப்பமான என் முகத்தில் தெறித்தன. பேருந்தில் இருந்த வகுப்புத் தோழர்கள் எல்லாம் பேச்சை நிறுத்திவிட்டு அமைதியாகி இருந்தனர்.வானப் பரப்பின் பின்னணியில் எல்லையற்று விரிந்து கொண்டே போன மலைத்தொடர்கள் அவர்களைப் பரவச மயக்கத்தில் ஆழ்த்தி இருக்க வேண்டும்.
அவர்களது கண்கள் அந்த மலைகளின் பாதுகாவலர்களாக இருந்த பிரம்மாண்டமான மரங்களின் மீது பதிந்திருந்தன. மலைகளுக்குக் கீழே நதிக்கரை ஓரத்தில் சிறு சிறு கிராமங்கள் கண்ணுக்குத் தென்பட்டன. அவற்றுக்கு அருகே பந்தல் வேய்ந்த நெல் வயல்கள். தூரத்தில் இருந்து பார்க்கும்போது தொலைந்து போன ஒரு பழைய கனவைப் போல அந்த கிராமங்கள் தோன்றின
எங்கள் பேருந்து, பக்கே பள்ளத்தாக்கை வந்தடைந்தது. அதை விட்டு நாங்கள் இறங்கியதுமே சிலீரென்று வீசிய மலைக்காற்று எங்களை வரவேற்றது. சாலையோரம் இருந்த மூங்கிலால் செய்யப்பட்ட ஒரு சிறிய கடையில், தின்பண்டங்களை சாப்பிட்டு முடித்து தேனீரையும் விரைவாகப் பருகினோம். கடும் வெயிலில் வாடிப்போன முகத்தோடு அங்கிருந்த கிராமத்துப் பெண்கள், சாலையின் ஒரு பக்கத்தில் கொத்துக்கொத்தாக இருக்கும் செழுமையான ஃபெரணிகளையும்,ஓக் மரக் காளான்களையும்,ஆரஞ்சுப் பழங்களையும், மீன் புதினாக்களையும் இன்னும் பலதரப்பட்ட மூலிகைகளையும் விற்றுக் கொண்டிருந்தார்கள். மலைகளில் இருந்து நெடுந்தூரம் பயணப்பட்டு அவர்கள் வந்திருக்க வேண்டும்.
“இனிமேல் உங்கள் விருப்பப்படி நீங்கள் சுற்றிப் பார்க்கலாம் புகைப்படம் எடுக்கலாம், இலைகளின் மாதிரிகளை சேகரிக்கலாம், ஆனால் சரியாக மூன்று மணி நேரம் கழித்து எல்லோரும் திரும்பி வந்து விட வேண்டும்.”
பறவைகளின் குரல்களால் மட்டுமே நிறைந்திருந்த பக்கே பள்ளத்தாக்கின் உள்ளே தனிமையான அந்த பகுதிக்கு எங்களை வழிநடத்திச் சென்ற பேராசிரியர் இவ்வாறு அறிவித்தார். நாங்கள் எல்லோரும் பல்கலைக்கழக முத்திரை பதித்த வெள்ளை நிற டி ஷர்ட்டும் தொப்பியும்,கனத்த காலணிகளும்,கால் உறைகளும் அணிந்து கொண்டிருந்தோம். அரிப்பெடுக்கும் காஞ்சரஞ்செடிகள், தூங்கிக் கொண்டிருக்கும் பாம்புகள் என்று எவற்றையும் மிதிக்காதபடி மிகவும் கவனமாகச் சென்று கொண்டிருந்தோம்.
செழிப்பாக இருந்த அந்த பக்கே பள்ளத்தாக்கு, தாவரவியலாளர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். லவங்கப்பட்டை சுருள் இலைக் கீரைச் செடிகளும் காட்டுப் பெரணிகளும் எங்கு பார்த்தாலும் மண்டிக் கிடந்தன. உளுத்துப் போய்க் கீழே விழுந்து கிடந்த மரக்கட்டைகள் மீது தடிமனான மெத்தை போலப் பாசி படர்ந்து இருந்தது. ஊதா வண்ண ஆர்கிட் மலர்கள், நனைந்து போயிருந்த மரங்களின் மீது தொற்றிக்கொண்டு மணம் பரப்பிக் கொண்டு இருந்தன. விசாலமாக விரிந்து கிடக்கும் வெப்ப மண்டலத்தில் பூக்கும் மலர்கள் அவை. தன்னந்தனியே பூத்துக் கிடந்த காட்டுப் பூக்களைக் கொத்துக்கொத்தாக அவற்றின் தண்டோடு பிடுங்கி, என் உலர் தாவர சேமிப்புக்காகக் கனத்த நோட்டுப் புத்தகத்தின் உள்ளே வைத்து அழுத்திக் கொண்டேன். நிறைய புகைப்படங்கள் எடுத்தேன். அங்கே இருந்த விதவிதமான தாவரங்களின் தன்மைகளை கவனித்துப் பார்த்துக் குறிப்பெடுத்துக் கொண்டேன். அந்த ‘இயற்கைநடை’யின் போது பக்கே பள்ளத்தாக்கின் குறுக்கே இருந்த மலைகளுக்கு இடையில் சிறியதாக வேறொரு பள்ளத்தாக்கும் என் கண்ணில் பட்டது. நான் அப்படியே நின்று அந்தப் பள்ளத்தாக்கை வெறித்துப் பார்த்தேன்.
“ஒரு காலத்துல பக்கே பள்ளத்தாக்கோட மலைகளுக்கு இடையிலே அந்த தொலைஞ்சு போன கிராமம் இருந்தது”
ரகசியக் குரலில் பாட்டி சொன்ன தொலைந்து போன கிராமத்தைப் பற்றிய பழைய கதையின் ஞாபகம்
எனக்கு வந்தது. அந்தப் பள்ளத்தாக்கு என்னை அழைத்தது.
“தொலைந்து போன கிராமம் அதுதானோ?”
என் சக மாணவர்கள் தாவரங்களின் மாதிரிகளை சேகரிப்பதில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். நான் எவர் கண்ணிலும் படாமல் மெதுவாக நழுவி அந்தப் பள்ளத்தாக்கை நோக்கிச் சென்றேன். மென்மையான வண்ணத்துப்பூச்சிக் கூட்டம் ஒன்று மட்டும் என் தலை மீது வட்டமிட்டுப் பறந்து என்னைத் தொடர்ந்து கொண்டிருந்தது. கல்லாலான ஒரு நடைபாதை அந்தப் பள்ளத்தாக்குக்கு என்னை இட்டுச் சென்றது. அதன் முகப்பில் உடைந்து போன ஒரு ஒற்றைத் தூண். மண் குழைவாக இருந்த நிலப்பரப்பில் நடந்து சென்றபோது எனது பூட்சில் சேறு அப்பிக் கொண்டது. எவராவது அங்கே குடியிருப்பதற்கான அடையாளம் தெரிகிறதா என்று சுற்றுமுற்றும் பார்த்தேன். பள்ளத்தாக்கு முழுவதும் (அமனிட்டா ஃபால்லாய்ட்)மரணத் தொப்பி எனப்படும் கடுமையான விஷக் காளான்கள் படர்ந்து கிடந்தன. குமிழ் குமிழாக இருந்த பூஞ்சைகளின் நுனிப்பகுதிகள் மென்மையான கம்பளம் போலப் பரவி இருந்தன. சற்று வித்தியாசமான பெரிய கரிய நிறப் பாறை ஒன்று மூலையில் தெரிந்தது. அதில் படிகளும் வெட்டப்பட்டு இருந்தன. அவற்றின் வழியே மேல் ஏறிச் சென்று அடுத்தடுத்து இருந்த மலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். கிழக்குப்புறமாக நீலநிற நதி ஒன்று அமைதியாக ஓடிக் கொண்டிருந்ததை அப்போது பார்க்க முடிந்தது. நதியிலிருந்து மேல் எழுந்து சென்ற மூடுபனிச் சுழல்கள் வான் பரப்பில் வெண்பஞ்சு மேகங்களாலான பதக்கங்களைப் போலத் தென்பட்டன. பாறையின் மீது அமர்ந்து கொண்டிருந்த எனக்கு ஒரு வினோதமான உணர்வு எழுந்தது. எத்தனையோ காலமாக அங்கே நின்று கொண்டிருக்கும் அந்தப் பாறை,மறைக்கப்பட்ட/ விலக்கப்பட்ட ஏதோ ஒரு ரகசியத்தைக் கிசுகிசுப்பது போன்ற ஒரு உணர்வு.
சற்றுத் தொலைவில் வான் வழியில் பரவிப் படர்ந்து இருந்த மரக்கிளைகளில் ஒரு அசைவு தெரிந்தது. நான் இருந்த திசையை நோக்கி அது வேகமாக வருவது போல் இருந்து. கையில் இருந்த நோட்டுப் புத்தகத்தை இறுகப் பற்றிக் கொண்டு உறைந்து போய் நின்றேன்.காட்டு மிருகம் ஏதாவது தாவி வந்து என் மீது பாயப் போகிறதா என்ன? ஆனால் என் பதட்டத்தைப் போக்கும் வகையில், காற்றில் சலசலத்துக் கொண்டிருந்த புதர்களின் வழியே என் எதிரில் வந்தது ஒரு மனிதன்தான். நீஷி பழங்குடியினத்தைச் சேர்ந்த கிராமத்துக்காரனான அவன் நெற்றிக்கு மேல் ஒரு கொண்டையைச் சுற்றி இருந்தான்.
‘ஹேய் ‘என்று பாறை மேலிருந்து
கூப்பிட்டேன். அவன் சட்டென்று நின்று என்னைப் பார்த்தான்.
“இதுதான் தொலைஞ்சு போன கிராமமா”
எத்தனையோ ஆண்டுகளாக என்னுள் புதைண்டு போயிருந்த அந்தக் கேள்வியைத் தயக்கத்தோடு கேட்டேன். அந்த மனிதன் என்னை நான் அணிந்திருந்த கால் சட்டை, டி-ஷர்ட், கம் பூட்ஸ் என்று எல்லாவற்றையும் ஒருமுறை நோட்டமிட்டு விட்டு
“ஆமாம் நீ யாரு “
என்று கேட்டான்.
“நான் ஒரு ஸ்டூடண்ட். பாட்டனி படிக்கிறேன்
என்று வழக்கமாகச் சொல்லும் பதிலை முதலில் சொன்னேன். அவனது படிப்பறிவைப் பற்றி அதற்குள் எடை போட்டு விட்டதால்,
“நான் இந்த பள்ளத்தாக்கில இருக்கிற செடி கொடி மரம் இதுங்களையெல்லாம் பத்திப் படிக்க வந்திருக்கேன்” என்று விரைவாக சேர்த்துக் கொண்டேன்.
“இந்த கிராமம் ஒரு சபிக்கப்பட்ட கிராமம்.இங்கே புல்,பூண்டு கூட முளைக்கிறது இல்லை”
என்று எரிச்சலோடு சொன்னபடி அவன் என்னை நோக்கி நடந்து வந்தான். அந்த கிராமத்து ஒற்றைத் தூணை லேசாகப் பார்த்துக் கொண்டான். அவனுக்கு என் தாத்தா வயது இருக்கும். ஆனால் மிகவும் சுறுசுறுப்பாகவும் திடகாத்திரமாகவும் தெரிந்தான்.
“இங்கே என்னதான் நடந்தது? எப்படி இந்த கிராமம் முழுக்க காணாம போச்சு”
என்று அவனிடம் வேகமாகக் கேள்விகளை அடுக்கினேன்.அவன் பாறையில் செதுக்கப்பட்டு இருந்த படிகள் வரை சென்று அதன் கறுப்பான மேற்பரப்பையே உற்றுப் பார்த்தபடி இருந்தான்.
பிறகு,
”உனக்கு மாயாஜால மலைப்பாம்புகள் மேல நம்பிக்கை இருக்கா” என்று கேட்டான்.
“ம்ஹூம் அதெல்லாம் எனக்குத் தெரியாது”என்று குழப்பத்துடன் தோளை உலுக்கிக் கொண்டேன்.
“சில சமயங்களிலே மனுஷங்க வித்தியாசமான சகவாசம் ஏற்படுத்திக்குவாங்க. நம்மாலே யோசிச்சுக் கூடப் பார்க்க முடியாத விதியோட பாதையிலே போய் விழவும் செஞ்சுடுவாங்க”
அவன் மெள்ளச் சிரித்தபடி பாறைமேல் உட்கார்ந்து கொண்டான். பழைய நாட்களின் கதை ஒன்றைத் தன் கண்களுக்குள் மீட்டெடுத்து ஞாபகப்படுத்திக் கொண்டு இருந்தான் அவன்.
” ஒரு காலத்துல ,ரொம்ப வருஷங்களுக்கு முன்னாலே இந்த கிராமம் நல்ல உயிர்த்துடிப்போடதான் இருந்தது. தன்னளவுல நிறைவு பெற்றதாவும் இருந்தது,எல்லாமே இங்கே செழிப்பா பயிராச்சு.பூமி நல்ல வளத்தோட இருந்தது. சீதோஷ்ணமும் பிரமாதமா இருந்தது. தண்ணி நல்ல சுத்தமா புதுசா இருந்தது. ஜனங்க எல்லாரும் சந்தோஷமா இருந்தாங்க. நெல் வயல்களிலே குருத்துகள் உரசிக்கிற சத்தம், சங்கீதம் மாதிரி கேட்டுக்கிட்டு இருந்தது. ஆத்துக்குள்ள மீன்கள் எல்லாம் துள்ளி விளையாடிக்கிட்டு இருந்தது. ஜனங்க ‘நியோகம்’ பண்டிகையை (அருணாசலப்பிரதேசத்தைச் சேர்ந்த நீஷி பழங்குடி மக்களால் வசந்த காலத்தில் கொண்டாடப்படும் அறுவடைப்பண்டிகையே ‘நியோகம்’) ரொம்பப் பிரமாதமா, சிறப்பா கொண்டாடினாங்க. நிறைய அறுவடை கொடுத்ததற்காக சூரிய-சந்திரர்களைக் கடவுளாப் போற்றித் துதி பாடினாங்க.
“ஆனா அதெல்லாம் ஒரு நல்ல காலம். அதுவே ஒரு கெட்ட காலமாவும் ஆயிடுச்சு. கிராமத்துல பகை பெருகிப் போய் சண்டைகள் அதிகமாச்சு. உள்ளதிலேயே நல்லதா இருக்கிற பூமியும் ,தண்ணியும் ,விளைச்சலும் தங்களுடையதா மட்டுமே இருக்கணும்னு ஒவ்வொருத்தரும் ஆசைப்பட்டாங்க. பக்கத்துல உள்ள சேடே கிராமத்துக்காரங்க காதுக்கு ஒரு நாள் இந்தத் தகவல் எட்டுச்சு. அந்த கிராமம் இங்கே இருந்து பத்து மலை தாண்டி உள்ள கிராமம். பக்கே பள்ளத்தாக்கோட செழுமையைப் பத்தியும்,இங்கு விளையற மணமான அரிசியைப் பத்தியும் அவங்க தெரிஞ்சுகிட்டாங்க. அமாவாசை எப்ப வரும், தாக்கலாம்னு சேடே கிராமத்து ஆட்கள் எல்லாரும் தங்களைத் தயார் செஞ்சுக்கிட்டுக் காத்திருந்தாங்க. எல்லாரும் பேய் பிசாசு மாதிரி மரத்து மேல ஒளிஞ்சிட்டு இருந்தாங்க. வீட்டிலே வளர்க்கற கோழிகள் எல்லாம் தூங்கிப் போனப்புறம்- குரச்சுக் குரச்சுக்
களைச்சுப் போய் வீட்டு நாய்கள் எல்லாம் எஜமானரோட கணப்பு அடுப்பு கிட்டே குறட்டை விட்டுத் தூங்கின அப்புறம் – மெதுவா மேலே இருந்து இறங்கி வந்தாங்க. எலிகளைப் போலத் துள்ளிக்குதிச்சு மூங்கில் வீடுகளுக்குள்ளே போனாங்க. ஒரு வீட்டுக்கு ரெண்டு பேருன்னு கணக்கு. ஒருத்தன் மரக்கட்டையால கதவைத் தாள் போட்டு அடைச்சுக்கிட்டுக் கையிலே வெட்டுக் கத்தியோட நிப்பான். அப்ப அடுத்தவன் வீட்டுக்குத் தீ வச்சிடுவான். பக்கே கிராமத்து ஆளுகள் எல்லாம் அப்ப நல்ல தூக்கத்துல இருந்தாங்க. அவங்க கண்டுக்கிட்டு இருந்த கனவுகளோட நாலாவது பாகத்துல அவங்க நீச்சல் அடிச்சுட்டு இருந்தாங்க. தீ ஜ்வாலைகள் அவங்களை சூழ்ந்துக்கிட்டு எலும்பை எல்லாம் முறிக்கிற வரைக்கும் அவங்க விடற கடைசி மூச்சு அதுதான் அப்படின்னு கூட தெரியாம அவங்க இருந்தாங்க.
நடுராத்திரிக்கு அப்புறம் கிராமம் முழுசுமே தீக்கிரையாயிடுச்சு. எங்கே பார்த்தாலும் மரண ஓலம். பூட்டின கதவுக்கு வெளியிலே தப்பிச்சு ஓடப் பார்த்தவங்களை உடனுக்குடனே கத்தியாலே கூறு போட்டுட்டாங்க. அந்தக் கொடூரமான ராத்திரியிலே ஆண்கள் பெண்கள் குழந்தைகள் பன்றிகள் கோழிகள் நாய்கள்னு எல்லாத்தையும் எல்லாரையும் ஒருசேரக் கொளுத்திட்டாங்க.
ஆனா…ஒரே ஒரு மனுஷனைத் தவிர.
அவன்- ‘கடா கீனோ’ங்கற அவன்,விதி அவனுக்குக் கொடுத்த ரொம்ப ரொம்ப சின்ன வாய்ப்பு வழியாத் தப்பிச்சான்.காட்டுக்கு சீக்கிரமே வேட்டையாடப் போகணும் என்கிற திட்டத்தோடு இருந்தவன், இந்தப் பாறையிலேதான் அன்னிக்குப் படுத்துத் தூங்கிட்டு இருந்தான். வலியும் வேதனையுமான கூச்சல் சத்தத்தைக் கேட்டு அவனுக்கு முழிப்பு வந்தது. மெல்ல எழுந்து கண்ணைக் கசக்கிட்டுப் பார்த்தா ஆரஞ்சு நிற தீ ஜ்வாலையோட நாக்குகள் கிராமம் முழுசையும் எரிச்சிட்டு இருந்தது. அவனால அதை நம்பவே முடியல. சேடே கிராமத்து ஆட்கள், கருப்பு உருவங்களா அங்கேயும் இங்கேயும் குதிச்சபடி, வீடுகளை சூழ்ந்துக்கிட்டு இன்னும் கூட தீ வச்சபடி இருந்தாங்க.
“எல்லா வீடுகளையும் சரி பாத்துட்டீங்களா” ந்னு சேடே ஆட்களோட தலைவன் கத்தினான்.
“ஆமாங்கய்யா யாரையுமே விட்டு வைக்கலை,கிராமம் முழுசையும் அழிச்சுப் போட்டாச்சு. இனிமே இந்த பக்கே பள்ளத்தாக்கு நம்மளோடது”
அப்படின்னு அவங்க பதில் குரல் கொடுத்தாங்க. சேடே ஆட்கள் எல்லாரும் வெற்றிக் களிப்போட ஆரவாரம் செஞ்சபடி ரத்தக் கறை படிஞ்ச அவங்களோட வெட்டுக் கத்திய உயர்த்திப் பிடிச்சுக்கிட்டு இருந்தாங்க. பொறி தெறிச்சிக்கிட்டு இருந்த தீக் கொழுந்துகளுக்கு நடுவிலே, வேர்வையில் நனைஞ்சு போன அவங்களோட பழுப்பு நிற உடல்கள் மின்னிக்கிட்டு இருந்தது தெரிஞ்சது.
படுத்திருந்த பாறையிலே இருந்து கோபத்தோட எழுந்திருந்தான் கடா. தன்னோட வில்லை வளைச்சு அந்த ஆளுங்க மேல நிறைய அம்புகளைத் தொடர்ச்சியா எய்தான். சேடே கூட்டத்தில் ஒருத்தனோட மார்பிலே அம்பு தொளைச்சதும் அவங்களோட வெற்றிக் கொண்டாட்டம் அப்போதைக்குத் தடைப்பட்டது. அம்பு வந்த திசையில் பார்த்தப்ப பாறை மேல நின்னுக்கிட்டு இருந்த கருப்பு நிற வீரன் கடா கீனோவோட உருவம் அவங்க கண்ணிலே பட்டது.
சேடே கூட்டத்தோட தலைவன்
“இன்னும் கூட ஒருத்தன் மிஞ்சி இருக்கான் பாருங்க” ன்னு குரல் கொடுக்க ,அந்த கிராமத்திலே கடைசியா உயிர் பிழைச்சு இருக்கிற மனுஷனைத் தாக்கறதுக்காக எல்லாரும் வெட்டுக் கத்தியைத் தூக்கிக்கிட்டு ஒரே ஓட்டமா ஓடினாங்க. அவங்களோட தோள், கண்ணு, மார்பு எல்லாத்துலேயும் இன்னும் அதிகமா அம்புகளை கடா விட்டுக் கொண்டே இருந்தான்.
“இன்னிக்கு எரிச்சது நீங்களா இருக்கலாம், நாளைக்கு எரிக்கப் போறது நானா இருப்பேன் ஒரு நாள் நான் திரும்பி வந்து உங்க எல்லாரையும் பழிவாங்குவேன்”னு கடா சத்தமா கத்தினான். அவனோட கண் தெறிச்சு வெளியில வந்துடும் போல இருந்தது. ரத்தம் கொதிச்சது. தான் நின்னுக்கிட்டு இருந்த பாறையிலே இருந்து இறங்கி இருட்டுக்குள்ள எங்கேயோ போயிட்டான். காட்டு வழிகளிலே எதிலே போனா சேடே ஆட்கள் கிட்ட மாட்டிக்காம போகலாம்ங்கிறது அவனுக்கு நல்லாத் தெரியும். சேடே கிராமத்து ஆட்கள் கிட்ட இருந்து எப்படி ஒளிஞ்சுக்கிறதுங்கறதும் அவனுக்கு நல்லாத் தெரியும். அவங்களோ ராப்பகலா அவனையே ஓயாம தேடித் திரிஞ்சிக்கிட்டு இருந்தாங்க.
செங்குத்தான மலை உச்சிக்குத் தாவி ஏறிக் கரடு முரடான பாறைகளுக்கு இடையிலே கடா ஒளிஞ்சுக்கிட்டான். மரஉச்சியிலே இருந்து வௌவால் மாதிரித் தொங்கினான், குரங்கு மாதிரி குதிச்சான். தனக்கு ஏதாவது இரை கிடைக்காதான்னு அதிலேயே குறியாக இருக்கிற வலிமையான ஒரு புலியைப் போலக் காத்திருந்தான்.தரையிலே உருண்டு போய்த் தான் சாப்பிடறதுக்கான பொருட்களை சேகரிச்சான்.காட்டிலே கிடைக்கிற பழங்களை சாப்பிட்டு முடிச்சிட்டு, மிஞ்சிப்போற கொட்டை,தோல் இதெல்லாத்தையும் மண்ணுக்கு அடியிலே அவன் புதைச்சிடுவான். தான் இருக்கிறதுக்கான எந்த சுவடும் யார் கண்ணுலேயும் படாம பார்த்துக்கிட்ட அவன்,அந்த மலைகளுக்குள்ளே ஒரு பிசாசைப் போலவே வாழ்ந்துக்கிட்டு இருந்தான்.
அவனைத் தேடிக்கிட்டே இருந்த சேடே ஆட்கள் ஒரு கட்டத்தில் அலுத்துப் போய்ப் பின்வாங்க ஆரம்பிச்சாங்க. பக்கே பள்ளத்தாக்கு அவங்க வசம் ஆயிடுச்சு. உடல் கருகி இறந்து போனவங்களோட சடலங்களை எடுத்துட்டுப் போய்ப் பள்ளத்தாக்கோட ஓரத்திலே புதைச்சாங்க. எரிஞ்சு போன மூங்கில் வீடுகளை சீரமைக்காம புதுப்புது வீடுகளைக் கட்டிக்கிட்டாங்க , வயல்களை உழுது விதை விதைச்சு ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்கிட்டாங்க.
சேடே ஆட்கள் பின்வாங்கிப் போனதுக்கு அப்புறம் கடா கீனாவோட பயம் குறைஞ்சது. தான் நிர்வாணமாய் இருக்கோங்கிறதையே அப்பதான் அவன் உணர்ந்துக்கிட்டான். பசியும் தாகமும் களைப்பும் மன உளைச்சலும் அவனை வாட்டி வதைச்சது. தன்னோட குடும்பத்தாரும் இனக்குழுவைச் சேர்ந்தவங்களும் இறந்து போனது அவனை வருத்தப்பட வச்சது. மலைகளிலே குடியிருந்த நிசப்தத்துக்கு நடுவிலே தன்னோட துயரங்களை அவன் அழுது தீர்த்தான்.
அந்த நாளிலே இருந்து அவனோட புதிய குடியிருப்பான பாறைகள் நிறைஞ்ச அந்த மலைப்பிரதேசத்திலே ஒரு மாயாவியைப் போல அவன் இருந்தான். பூமியில கடைசியா எஞ்சி இருக்கிற ஒரே ஒரு மனுஷனைப் போல யார் கூடவும் பேசாம,வாயிலிருந்து ஒரு வார்த்தை கூட உதிர்க்காம அவன் வாழ்ந்துக்கிட்டு இருந்தான்.
ஒரு நாள் மலையிலே இருந்த காட்டுவேர்களை உணவுக்காகக் குடைஞ்சுக்கிட்டிருந்தப்ப ஒரு முட்டை அவன் கண்ணிலே பட்டது. அதிலே இருந்து வரப்போறதை எதிர்பார்த்து ராத்திரியும் பகலுமா காத்திருந்தான். ஒரு நாள் காலையிலே முட்டை உடைஞ்சு, உள்ளே இருந்து சின்னதா ஒரு பாம்புக் குட்டி வெளியே வந்தது.
தனிச்சு விடப்பட்ட ஒரு மிருகம் மாதிரி பல நாட்களைக் கழிச்சிருந்த கடாவுக்கு இப்ப இன்னொரு உயிரும் தன்னோட இருக்கிறதைப் பார்த்ததும் ஆனந்தம் தாங்க முடியலை. அந்தக் குட்டிப் பாம்பைத் தன்னோட கைகளுக்கு உள்ளே பிரியத்தோடு பொத்தி வச்சுக்கிட்டான்.
“நாம இனிமே நண்பர்களா இருப்போம், இனிமே நான் உன்னை ‘அஜி’ந்னுன்னுதான் கூப்பிடப் போறேன் சரிதானே”ந்னு சொன்னான். அந்தப் பாம்போட வருகையைக் கொண்டாடின அவன்,அதைத் தன்னோட சொந்தக் குழந்தை மாதிரியே ஊட்டி வளர்த்தான். அவனோட வாழ்க்கை கொஞ்சம் உயிரோட்டம் உள்ளதா ஆச்சு. பாம்போட அவன் கொண்டிருந்த புதிரான தோழமை, ஏதோ மந்திரம் போட்ட மாதிரி அவனோட விதியைக் கூடக் கொஞ்சம் மாத்த ஆரம்பிச்சது.
“அஜின் வா”ன்னு சொன்னபடி அவன் விசில் அடிச்சா உடனே பொந்திலே இருந்து பாம்பு வெளியே வந்ததிடும். அப்புறம் ரெண்டு பேருமா அந்த மலைப் பிரதேசத்தை ஆராய ஆரம்பிச்சிடுவாங்க. அஸ்தமனம் ஆகற வரைக்கும் அவங்க எல்லாத்தையும் பார்த்துக்கிட்டு இருப்பாங்க.
“அதோ அங்கே ஒரு பள்ளத்தாக்கு தெரியுது பாரு, அது எங்களோட கூட்டத்துக்கு சொந்தமானதா இருந்தது, இப்போ அதை சேடே கூட்டம் பறிச்சிடிச்சு, நான் அதுக்குப் பழிக்குப் பழி வாங்கணும்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன். ஆனா, போகப்போக என்னோட கோபம் செத்துப் போச்சு. அப்படி ஒரு நாசம் பண்ணிட்டுப் போன அவங்களை நான் மன்னிச்சிட்டேன். இப்ப இந்த மலைப் பாறைகளுக்கு நடுவிலே உன்னோட துணையோட உயிரோட இருக்கேங்கிறதே எனக்கு சந்தோஷமாகவும் திருப்தியாகவும் இருக்கு” அப்படீன்னு அந்த மலைப்பாம்பு கிட்ட அவன் சொல்லச் சொல்ல , அது தன்னோட வாலாலே அவனைச் சுத்தி வளைச்சுக்கும். நாளாக ஆக, கடா ஆரோக்கியமும் அழகும் உள்ளவனா, உயரமாகவும் வளரத் தொடங்கினான்.மனுஷனுக்கு வேணுங்கற எல்லாமே அவன்கிட்டே இருந்தது.அவனோட சேர்ந்து குடும்பம் நடத்த ஒரு பெண் மட்டும்தான் இல்லே.
அதே சமயத்தில் இன்னொண்ணும் நடந்துக்கிட்டு இருந்தது.சேடே ஆட்கள் பக்கே பள்ளத்தாக்கைக் கைப்பற்றி இருந்தாலும் எரிஞ்சு போன அந்தப் பள்ளத்தாக்கோட வீரியத்தை அவங்களாலே திரும்பப் புதுப்பிக்க முடியலை. அங்கே விளையற இனிமையான மணமுள்ள அரிசியைப் பயிராக்கறதுக்கு அவங்க செஞ்ச முயற்சி எல்லாமே தோத்துப் போச்சு. ரத்தக்கறை படிஞ்ச கொடூரமான அந்தக் கைகள் உண்டாக்கற விளைச்சலை பூமியே மறுத்து ஒதுக்கற மாதிரி இருந்தது. நிலம் கொஞ்சம் கூட செழிப்பா இல்லை. விளைச்சல் இல்லாததாலே, சூரிய சந்திரர்களை வழிபட்டு, ஆண்களும் பெண்களும் கொண்டாடற ‘நியோகம்’ பண்டிகையும் இல்லாம போச்சு. அவங்களோடகஷ்டத்தை இன்னும் அதிகமாக்கற மாதிரி சேடே மக்களுக்குக் குறி சொல்ற ‘ஷாமான்’ (குறி சொல்பவர், மந்திரதந்திரம் அறிந்தவர்) பக்கே பள்ளத்தாக்கிலே மிஞ்சி இருக்கிற ஒரு கடைசி ஆளாலே அந்தக் கூட்டத்துக்கே ஒரு நாள் அழிவு வரப்போகுதுன்னு சொல்லிட்டார்.அதனாலே அவங்க எல்லாரும் கடா கீனோவைத் தொடர்ந்து தேட ஆரம்பிக்கறதிலே முனைஞ்சிட்டாங்க. ஒரு மலையைத் தவிர மத்த எல்லா மலைகளையும் அவங்க துருவி எடுத்தாங்க. கடாவும், மலைப்பாம்பும் வசிக்கிற கரடு முரடான பாறைகள் உள்ள மலைதான் அது.ரொம்ப பிரம்மாண்டமா இருக்கிற அந்த பழைய மரத்தைத் தாண்ட யார் முயற்சி செஞ்சாலும் அவங்களாலே உயிரோட திரும்பி வர முடியலை. காத்தோட காத்தா அவங்க கரைஞ்சு போனாங்க.பாறைகள் நிறைந்த அந்த மலையை எட்டிப் பிடிக்க அவங்க செஞ்ச முயற்சிகள் எல்லாம் தோத்துக்கிட்டே வந்தது.அங்கே தனியா இருக்கிற அந்த ஆளு, கல்யாண வயசுல இருக்கான்னு தெரிஞ்சுக்கிட்ட ‘ஷாமான்’,ரொம்ப அழகா இருக்கற ஒரு மாய மந்திரப்பெண்ணை உருவாக்கினார். அந்தப் பாறை மலைக்கு மேலே வானத்தில் பறந்து போய் ‘அந்தப் பெரிய மரத்துக்குப் பின்னாலே அப்படி என்னதான் இருக்கு, அப்படி எந்த ஒரு வினோதமான ஜந்து, பக்கே பள்ளத்தாக்கோட கடைசி மனுஷனைக் காப்பாத்திட்டு இருக்கு’ன்னு பார்க்கறதுக்கு அவளை அனுப்பியும் வச்சார்.
ஒரு நாள் கடாவோட கண்ணிலே அந்தப் பெண் தட்டுப்பட்டா. நீளமுடியோட அங்கே இருந்த பழங்களைப் பறிச்சிக்கிட்டு இருந்த அவளோட (கீழ்த்திசைப் பெண்களுக்கே உள்ள) அழகிலே மயங்கிப்போன அவன்
” நீ யாரு”ன்னு கேட்டான்.
“நான் மலைகளோட கன்னி” ன்னு அவ சிரிச்சுக்கிட்டே பதில் சொன்னா.
அவளோட சிரிப்பு சத்தமே அவ மேல அவனைக் காதல் கொள்ள வெச்சது. மலைப்பாதை வழியா அவளைத் தன்னோட வீட்டுக்குக் கூட்டிட்டு போனான் அவன். மலைக்கு நடுவிலே அப்படிப்பட்ட ஒரு அழகான வீட்டையும் அங்கே சேமிச்சு வைத்திருந்த மணமுள்ள அரிசியையும், புத்தம் புதுக் காய்கறிகளையும் பார்த்ததும் அவளுக்கு ரொம்ப ஆச்சரியமா இருந்தது. அவ அவனோடவே வாழத் தொடங்கினா. அவனை ரொம்பப் பிரியமாப் பார்த்துக்கிட்டு அவனோட தேவைகள் எல்லாத்தையும் நிறைவேத்திக்கிட்டிருந்தா. ராத்திரி வேளையிலே கடா அசந்து தூங்கறப்ப சமையலறையில் இருக்கிற எல்லா சாப்பாட்டையும் ரெண்டு கைகளாலேயும் வாரி வாரி விழுங்கிக்கிட்டுப் படுக்கைக்கு மேலே தூக்கமில்லாம நீச்சல் அடிச்சுப் பறந்துக்கிட்டு இருப்பா அவ. தூங்கிக்கிட்டு இருக்கிற அவனைத் தன்னோட ராட்சசச் கண்களாலே உத்து கவனிச்சுக்கிட்டு இருப்பா. அவனைப் பார்த்தா- அவனோட எல்லா செயல்களுமே ஒரு சராசரி மனுஷனோடது மாதிரிதான் இருக்கு ,ஆனா அவனோட புதிரான அந்த மந்திர சக்தியை எங்கேதான் அவன் மறைச்சு வச்சிருக்கான்னு வீட்டை சுத்தி எல்லா இடத்தையும் அவ கவனமாக பார்த்தா. வீட்டுக்குப் பக்கத்திலே இருந்த வழிகளையும் பார்த்தா. அவளாலே எதையுமே கண்டுபிடிக்க முடியலை. அந்தப் பெண் மேலே அளவுகடந்த காதலோட இருந்த கடா, அந்த மலைப்பாம்பைப் பத்தியே மறந்து போயிட்டான்.அவனோட விசில் அழைப்புக்காக அது பொந்துக்குள்ளேயே காத்துக்கிட்டு இருந்தது. ராத்திரி நேரங்களிலே நீள முடி கொண்ட அந்த மாயப் பெண் தன் பக்கத்தில் இருக்காங்கிற மயக்கத்திலே அவன் இருந்தான்
ஒரு நாள் காலையிலே அரிசிக் கஞ்சியை ஒரு கிண்ணத்துல ஊத்திக்கிட்டு கடா எங்கேயோ போக ஆயத்தமானதை அந்தப் பெண் பார்த்திட்டா. ரகசியமா அவனுக்குப் பின்னாலேயே போனா.
கஞ்சிக் கிண்ணத்தோட அந்தப் பெரிய மரத்தை நோக்கி அவன் நடந்து போனான்; மரத்துக்குக் கிட்டே வந்ததும் விசில் அடிச்சான்; அப்போ பொந்துக்குள்ளே இருந்து ஒரு பெரிய மலைப்பாம்பு மெதுவா ஊர்ந்து வெளியே வந்தது.
“அஜின் என்ன மன்னிச்சிடு, எனக்கு வேற கொஞ்சம் வேலைகள் இருந்ததால சில நாளா உன்னைப் பார்க்க முடியலே”
மலைப்பாம்புக்குச் சாப்பாடு வச்சுக்கிட்டே இப்படிச் சொன்ன கடா,அதுக்கப்புறம் மலைகளில் இருந்து அவனோட வயல்களைப் பராமரிக்கிறதுக்காக வேகமாப் போயிட்டான். புதர்களுக்குப் பின்னாலே ஒளிஞ்சிருந்த அந்தப் பெண், பாறை மலைகளுக்கு நடுவிலே சராசரியா வாழ்ந்துக்கிட்டிருந்த ஒரு மனுஷனைக் காப்பாத்திக்கிட்டு இருந்த அந்த மர்மமான மலைப்பாம்பைப் பார்த்தா. கடாவோட வீட்டில இருந்த மணமான அரிசியிலே கொஞ்சத்தை எடுத்துக்கிட்டு நேரா பக்கே பள்ளத்தாக்கை நோக்கிப் பறந்து போனா.
பக்கே பள்ளத்தாக்கு முழுசையும் நெருப்பாலே நாசம் பண்ணினப்புறம், வாசனையான அரிசி அந்தப் பள்ளத்தாக்கில் விளையவே இல்ல. இப்ப அவ கொண்டு வந்த அந்த அரிசியைப் பார்த்ததும் ஷாமானும், சேடே ஜனங்களும் அசந்து போயிட்டாங்க
“நீ அந்த மர்மமான மலைப் பாம்பைக் கொன்னாகணும்”
அப்படின்னு அந்த பெண்ணுக்கு உத்தரவு போட்ட ஷாமான்,அவ கையிலே தன்னோட சக்தி வாய்ந்த குறு வாளையும் கொடுத்தார்.அந்தப் பெண்ணும் அவரை பவ்யமா வணங்கிட்டுக் குறுவாளோட மலைகளுக்குத் திரும்பவும் பறந்து போனா.
மறுநாள் காலையிலே கடா வயலுக்குப் போன பின்னாலே, கையிலே குறுவாளை வச்சிக்கிட்டு அந்தப் பழைய பெரிய மரங்களை நோக்கிப் போன அவ, அவனை மாதிரியே விசில் சத்தத்தை எழுப்பினா.
சாயங்காலம் கடா வீடு திரும்பினப்ப அவ வீட்டிலே இல்லை. கவலையோட அங்கேயும் இங்கேயும் ஓடி மலை முழுக்கத் தேடிப்பார்த்தான் கடா. சூரியன் அஸ்தமனம் ஆகற வரைக்கும் அவனாலே அவளைக் கண்டுபிடிக்கவே முடியலை. தன்னோட நேசத்துக்குரிய பெண்ணைத் தொலைச்சுட்டோமேங்கிற கலக்கத்தோட தன்னோட பாம்பைத் தேடிக்கிட்டு ஓடினான். அங்கே மரத்துக்கு அடியிலே அந்தப் பெண்ணை சுத்தி வளைச்சுக்கிட்டு இருந்தது பாம்பு. அவ, தனக்கு உதவி வேணும்னு கேட்டுக் கூச்சல் போட்டுக்கிட்டு இருந்தா. ஒரு மாதிரி பாம்போட போராடி அதோட மரணப் பிடியிலே இருந்து தன்னோட விருப்பத்துக்குரிய அந்தப் பெண்ணை விடுவிச்சான் கடா. கத்திய உருவிக்கிட்டு அந்த பெரிய பழைய மரத்தையும் கோபத்தோட துண்டு துண்டா வெட்டிப் போட்டுட்டான். பாம்போட குகைக்கு வெளியில் இருந்த பாறைகளையும் தள்ளி விட்டான்.
“இதோ பாரு, இந்தப் பெண்ணை நான் காதலிக்கிறேன். நானும் அவங்களை மாதிரி மனுஷக்கூட்டத்தைச் சேர்ந்த ஒரு ஆள்தான்.நீ வெறும் ஒரு பாம்பு, நான் உன்னை மாதிரி இல்லை. நீ எங்கேயாவது போய்த் தொலை. நாம இனிமேல் நண்பர்களா இருக்க முடியாது”
அப்படின்னு மலைப்பாம்பைப் பார்த்து எரிச்சலோட வெறுப்போட கத்தினான். மலைப்பாம்பு ரொம்ப ஏமாற்றத்தோட அமைதியா நழுவிப் போய்ப் புதர்கள் மண்டிக்கிடந்த இருட்டான மலைப்பகுதிக்குள்ளே மறைஞ்சிடிச்சு. கடா அந்த பெண்ணைக் கூட்டிக்கிட்டு வீட்டுக்கு வந்தப்ப கருகும்முன்னு இருட்டிப் போச்சு. பதட்டம் கோபமும் அவனைக் களைச்சுப் போக வெச்சிருந்தது. அவ மடியிலே தலைவச்சபடி அஜின் எங்கே போயிருக்கும்னு பாம்பைப் பத்தி அவன் நெனச்சுப் பார்த்தான். தூக்கத்தை வரவழைக்கக்கூடிய சில பழங்களை அரிசியாலே செஞ்ச மதுவோட சேர்த்து அவனுக்கு அவ கொடுத்தா,இனிமையாப் பாடவும் செஞ்சா. ராத்திரி ஆனதும் அந்தப் பெண்ணோட தலைமுடி ரொம்ப ரொம்ப நீளமா வளர்ந்துக்கிட்டே போய்த் தூங்கிக்கிட்டு இருந்த கடாவோட உடம்பை அப்படியே சுத்தி வளைச்சுக்கிடிச்சு.
அந்தத் தந்திரக்காரப் பெண் தன்னோட முடியாலே கடாவைத் தூக்கிக்கிட்டு வீட்டுக்கு மேலே.., கரடு முரடான பாறைகளுக்கு மேலே…,மலைகளுக்கு மேலேன்னு மேலும் மேலும் பறந்து போனா.
மறுநாள் காலையில கடா கண்ணை முழிச்சுப் பார்க்கும்போது பிரகாசமான சூரிய வெளிச்சம் அவனோட கண்ணைக் குத்தற மாதிரி அடிச்சது. இதோ இந்தப் பாறை மேலேதான் அவன் படுத்துக் கிடந்தான். அவனாலே ஒரு அங்குல தூரம் கூட அசைய முடியலை. அவனோட கை கால் எல்லாம் பிரம்புக் கயிறுகளாலே இறுக்கமாக் கட்டப்பட்டிருந்தது அவனோட சதையை அது அறுத்துக்கிட்டு இருந்தது.
“மனுஷங்களான நாமதான் உண்மையாவே பாம்புகள்ங்கிறது உனக்குத் தெரியாதோ “
சேடே கூட்டத்தோட தலைவன் பாறை மேலே ஏறி நின்னுக்கிட்டு அதிகாரம் பண்ற மாதிரி உறுமினான். தன்னைச் சுத்திக் காட்டுமிராண்டிகளான சேடே ஆட்கள் மட்டுமே சூழ்ந்து நிற்கிறதையும் பள்ளத்தாக்கிலே உயிர் பிழைச்சிருந்த கடைசி மனுஷனைக் கண்டுபிடிச்சிட்ட உற்சாகத்திலே அவங்க சந்தோஷப்பட்டுக் குதிக்கிறதையும் அவன் பார்த்தான்.
*எனக்கு ரத்த சொந்தம்னு இருந்த எல்லாரையும் எல்லாத்தையும் நீங்க கொன்னுட்டீங்க,அழிச்சிட்டீங்க ஆனா நான் உங்களை அதுக்காக ஒருபோதும் பழிவாங்க நினைக்கலை. எங்களோட பக்கே பள்ளத்தாக்கைத் திருப்பிக் கொடுங்கன்னு கேக்கலை. யாருமே வசிக்க முடியாத கரடு முரடான கட்டாந்தரையான ஒரு இடத்திலே, உங்க கிராமத்தில இருந்து ரொம்பத் தள்ளித்தான் நான் வாழ்ந்துக்கிட்டு இருக்கேன். உங்களுக்கு நான் என்ன கெடுதல் செய்தேன் ? இத்தனை வருஷம் கழிச்சு என்னை ஏன் இப்படி துரத்திக்கிட்டு வந்தீங்க?” அப்படீன்னு குமுறிட்டான் கடா.
“நீ உயிரோட இருக்கிறது இந்த சேடே இனத்துக்கே ஒரு சாபத்தைக் கொண்டு வந்திடும்.அதனாலேதான்”
அப்படின்னு முணுமுணுத்த சேடே கூட்டத்துத் தலைவன், கடாவைத் தீர்த்துக் கட்டச் சொல்லி உத்தரவு போட்டான். உடனே திடகாத்திரமான ஒரு இளைஞன் பாறை மேலே ஏறி சரியா நின்னுக்கிட்டுத் தன்னோட வெட்டுக் கத்தியை உயர்த்தினான்.
அந்தப் பெண்ணைக் கெஞ்சற மாதிரிப் பார்த்த கடா,
“நான் உன்னை நம்பினேன், உன்னைக் காதலிச்சேன்” ன்னு சொன்னதும், அந்த மந்திரப் பெண் கடாவோட முட்டாள்தனமான காதலைக் கண்டு பேய்த்தனமா சிரிச்சபடி மலையில வீசற மென்மையான காத்திலே படிப்படியாக் கரைஞ்சு போனா. அவளோட சிரிப்பு சத்தம் கடாவுக்கு ரொம்ப வருத்தத்தை ஏற்படுத்திடிச்சு.
தோத்துப்போன உணர்வோட வானத்தைப் பார்த்தான் கடா. தன்னோட குழுவினருக்கு நேர்ந்த சர்வ நாசத்துக்கு அப்புறம் தனிமையான மலைகளுக்கு இடையிலே ஒளிஞ்சுக்கிட்டும், திரிஞ்சுக்கிட்டும் தான் அனுபவிச்ச சிக்கல்கள் எல்லாம் அவனுக்கு ஞாபகம் வந்தது. தனக்குக் கிடைச்ச ஒரே ஒரு நட்பு மேலேயும் கூட அவநம்பிக்கையோடு நடந்துக்கிட்டோமேன்னு நினைச்சவன்
“அஜின் என்னை மன்னிச்சிடு ,என்னோட முட்டாள்தனத்துக்காக என்னை மன்னிச்சுடு” ந்னு கத்தினபடி, கண் நெறைய கண்ணீரோட கண்ணை மூடிக்கிட்டுத் தனக்கு வாய்ச்ச விதியை ஏத்துக்கத் தன்னைத் தயார்படுத்திக்கிட்டான்.
வெட்டுக்கத்தியை இறுக்கப் பிடிச்சிருந்த அந்த வலுவான இளைஞன் வெட்டத் தயாரானப்ப திடீர்னு ஏற்பட்ட ஒரு அதிர்ச்சி அவனைப் பாறையிலே இருந்து புரட்டிக் கீழே தள்ளிடுச்சு. புதர்கள் எல்லாம் பயங்கரமா அசைஞ்சு ஆடிச்சு. பீதியூட்டற மாதிரி மர்மமான ஒரு ஓசை கிராமம் முழுசையும் சூழ்ந்துக்கிடுச்சு. அந்த சத்தம் எங்கே இருந்து வருதுன்னு பார்க்க சேடே ஆட்கள் எல்லாரும் முந்திக்கிட்டு ஓடினாங்க. மேகங்கள் எல்லாம் மயக்கத்தை ஏற்படுத்தற மாதிரி கருத்துக்கிட்டு வந்தது, புயல் அடிக்கிற மாதிரி காத்து ரொம்ப வேகத்தோடு சுழண்டு அடிச்சது. அப்ப வானத்தோட அளவுக்குப் பெரிசா இருக்கற ஒரு மலைப்பாம்பு புதர்களோட மூலையிலே இருந்து வெளியே வந்து கிராமம் முழுசையும் அப்படியே விழுங்கிடிச்சு .
கடா கண்ணைத் திறந்து பார்த்தப்ப, கத்தியோடு நின்ன பையன், சேடே கூட்டத்தோட தலைவன், மந்திரவாதி, மத்த ஆட்கள், மூங்கில் வீடுகள் வயல்கள், மாடு,பன்றி கோழின்னு எதுவுமே இல்ல கிராமத்தில் சுத்தித் திரிஞ்சுக்கிட்டு இருந்த நாய்களைக் கூடக் காணோம்.அவனோட கை கால்கள்ல எந்த கட்டுக்களும் இல்லை. அங்கே இருந்த பெரிய பாறையிலேஅவனோட மலைப்பாம்பு மட்டும் மெதுவா சத்தமில்லாமல் தன்னோட சட்டையை உரிச்சுக்கிட்டு இருந்தது.
கதையை இவ்வாறு சொல்லி முடித்த அந்த மனிதன் பாறையில் இருந்து எழுந்து நின்று தன் தலைக் கொண்டையை சரி செய்து கொண்டான்.
“இந்த கிராமம் தொலைஞ்சு போன கிராமமானது அப்படித்தான்” என்றான்.
நான் வாயடைத்துப் போயிருந்தேன். ஆனாலும் என்னைக் குடைந்து கொண்டிருந்த முக்கியமான ஒரு கேள்வியை அவன் முன்பு வைத்தேன்.
” அப்ப உங்களுக்கு மட்டும் அந்தக் கதை எப்படித் தெரிஞ்சது ?”
அவன் அதற்குள் அந்த ஒற்றைத் தூணை நோக்கி நடக்கத் தொடங்கி இருந்தான். சற்று நீண்ட மௌனமான இடைவெளி. நான் அவனை ஏமாற்றத்துக்கு உள்ளாக்கி விட்டேனோ என்று பயந்தேன். அவன் குழப்பத்தோடு இருந்த என் முகத்தைப் பார்த்துப் புன்னகைத்தபடி
“அது ஏன்னா ….நான் அங்கேதான் இருந்தேன், இப்பவும் அங்கேதான் இருக்கேன்”
என்று உறுதிபடச் சொன்னான்
மலைகளை ஊடுருவிப் பார்த்தபடி மிக இனிமையான அழகான விசில் சத்தத்தைத் தன் உதடுகளில் இருந்து உண்டாக்கினான் அதிமானுடனான அந்த மனிதன். பள்ளத்தாக்கின் குறுக்கே அலை அலையாகப் பரவி அது எதிரொலித்தது. பிறகு புதர்களின் மூலையில் அசைவு ஒன்று தெரிந்தது. அங்கே நான் பார்த்தது என்ன என்பது எனக்கு நிச்சயமாகத் தெரியும்.இராட்சத அளவில் ஒரு மலைப்பாம்பு மெல்ல ஊர்ந்து என்னைக் கடந்து அந்த மனிதனின் விசில் சத்தத்தை நோக்கிச் சென்றது
“அஜின், வா வா , நம்ம இடத்துக்கு திரும்பிப் போற நேரம் வந்திடுச்சு”
என்றான் அவன். பிறகு இருவருமாக அடர்ந்து வளர்ந்திருந்த மரங்களை நோக்கிச் சென்று கரடு முரடான பாறைகள் நிறைந்த மலைத் தொட்டிலுக்குள் மறைந்து போனார்கள். என் சருமத்தை
இளம் ஃபெரணி இலைகளால் உருவி விட்டது போன்ற வினோதமான உணர்வு உடலெங்கும் பரவியது. பயம் கலந்த வியப்போடு சில வினாடிகள் அங்கேயே காத்திருந்தேன் ‘ஒருவேளை அவர்கள் திரும்ப வந்தால்?’.. இல்லை,பிறகு அவர்கள் வரவே இல்லை.
ஏதோ ஒரு உணர்வு எழுச்சியுடன் மலைப்பாதைகளில் விரைந்து ஓடினேன். என் முழங்கைகளையும் முழங்கால்களையும் உராய்ந்தபடி தேள் கொடுக்குப் போல வலியையும் எரிச்சலையும் உண்டாக்கும் காஞ்சரஞ்செடிகளையும் கூட நான் மறந்து போயிருந்தேன்.
என் வகுப்புத் தோழர்கள் இருந்த இடத்தைக் கண்டடைந்து அவர்களோடு சேர்ந்து கொள்ளும் வரை நான் ஓட்டத்தை நிறுத்தவில்லை.
மூச்சு இரைத்தபடி வந்து கொண்டிருந்த என்னைப் பார்த்து
“என்ன ஆச்சு “
என்று அவர்கள் கேட்டார்கள்
“எல்லாம் அந்த தொலைஞ்சு போன கிராமத்தைப் பத்தினதுதான்”
என்று மூச்சை பிடித்துக் கொண்டே நான் பதில் சொன்னேன்.
“தொலைஞ்சு போன கிராமமா? அது என்ன ?”
என்று குழப்பத்தோடு அவர்கள் கேட்க
“இல்லே இல்லே அதெல்லாம் ஒண்ணும் இல்லே” என்று ஒரு பதட்டமான புன்னகையோடு என் உணர்வுகளை மறைத்துக் கொண்டு பதில் அளித்தேன்.
பனிமூட்டம் படர்ந்த மலைப்பாதைகளில் எங்கள் பேருந்து, பயணத்தைத் தொடங்கியது.
என் மனமோ கடும் வெயிலில் காய்ந்து கிடக்கும் மூங்கில் குருத்துக்களின் புளிப்பு வாடை வீசும் பாட்டியின் மெலிந்து சுருங்கிய கரங்களுக்குள் ஒண்டிக்கொண்டு தொலைந்த கிராமம் பற்றிய கதையை அவளிடம் சொல்லப் போகும் பரபரப்பில் குதியாட்டம் போட்டுக் கொண்டிருந்தது.
அருணாசலப்பிரதேசத்தைச் சேர்ந்த எழுத்தாளரான சூபி தாபா , தனது Tales from the *Dawn-Lit Mountains: Stories* from Arunachal Pradesh தொகுப்புக்காக இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் வழங்கும் கோயெங்கா சாகித்திய சம்மான் விருது பெற்றவர். இதே சிறுகதைத் தொகுப்புக்காக Times of India வழங்கும் அறிமுக எழுத்தாளர் விருதையும் இவர் பெற்றிருக்கிறார்.
அருணாசலப் பிரதேசத்தின் காடுகளும் மலைகளும் சூழ்ந்த வித்தியாசமான நிலவியல் , அந்த மாநிலத்தின் தனித்துவமான பண்பாடு, அங்கே வாழும் இனக்குழுக்கள் ஆகிய பலவற்றையும் மையப்படுத்தியிருப்பவை அவரது சிறு கதைகள்.
குறிப்பிட்ட அந்தத்தொகுப்பிலிருந்து
The Lost Village என்னும் சிறுகதையைத் தொலைந்த கிராமம் என்ற தலைப்பில் மொழியாக்கம் செய்திருக்கிறேன்
Discover more from சொல்வனம் | இதழ் 371 | 26 ஜூலை 2026
Subscribe to get the latest posts sent to your email.
