“நரகாசுரன்னு உன் அப்பன மாதிரியே ஒரு அரக்கன் இருந்தான்… அவன் அழிவத்தான் நாம தீபாவளின்னு இன்னைக்கு கொண்டாடுதோம்… உன் அப்பன் என்னைக்கு ஒழியுதானோ அன்னைக்குத்தான் உனக்கும் உன் ஆத்தாளுக்கும் பண்டிகை… தெரிஞ்சுக்க!”
துளைவிழுந்து கருத்துப்போயிருந்த கடவாய் பல்லை ஊக்கினால் குத்தியபடி அம்மாச்சி சொன்ன அந்த வார்த்தைகளைக் கேட்டபோது பளீரென எவரோ முகத்தில் அறைந்தாற்போல் இருந்தது. நெஞ்சினுள் உணர்ந்த ஒருவித அழுத்தத்தினால் தெருவை அதிர்வுறச் செய்த வேட்டொலிகள் ஒருகணம் மங்கி புறமே மௌனத்தினுள் அமிழ்ந்ததைப்போல் செவியிரண்டும் அடைத்துக்கொண்டது. என் முகம் மாறுபடுவதை அம்மாச்சி கவனித்திருக்க வேண்டும். வறண்டுபோயிருந்த தனது உள்ளங்கையால் எனது நெற்றியை வருடிக் கொடுத்து, “என்னட்டி?” என்று கேட்டபோது அவள் விழியிரண்டிலும் நீர் ததும்பியது.
அன்றைய தினம் என்னால் இயல்பாக இருக்கவே முடியவில்லை. தோழிகளுடன் சேர்ந்து பட்டாசு வெடித்தபோதிலும், இருட்டியபிறகு தெருவினுள்ளேயே ஒளிந்து பிடித்து விளையாடியபோதிலும் என்னையும் அறியாமல் பலமுறை வீட்டின் புழக்கடையை வெறிச்சிட்டபடி நின்றுகொண்டிருந்தேன். அப்போது எனக்கு வயது பத்து அல்லது பதினொன்று இருக்கலாம். அன்று வரையிலான எனது வாழ்வில் நான் இரண்டு மரணங்களை எதிர்கொண்டிருந்தேன். தாத்தாவின் சாவு அத்தனை துல்லியமாக நினைவிலில்லை. வழமைபோல் புலரியில் வேப்பங்கொழுந்து உண்பதற்கென்று தோப்பை நோக்கிச் சென்றவர் பாம்பு கடித்து அங்கேயே சுருண்டு விழுந்து இறந்துபோனார்.
இரண்டாவது சாவு ஒருபோதும் என் நினைவைவிட்டு நீங்கியதில்லை. நடந்து இத்தனை ஆண்டுகள் கழிந்த பிறகும் சற்றும் எதிர்பாராத தருணங்களில் அதன் அதிர்வலைகள் என்னை நீவிவிட்டுச் செல்வதுண்டு. எங்களிடம் அப்போது இரண்டு பசுக்களும், ஒருசில உழவுமாடுகளும் இருந்தன. மாடுகள் பொதுவாக தெருமுனையில் இருந்த கொட்டாயிலேயே இரவைக் கழிக்கும். ஈனும் பொழுதுகளில் அப்பாச்சி பசுவை தனது மேற்பார்வையின் கீழ் வைத்துக்கொள்ள விரும்புவாள் என்பதால் சினைப்பசு ஒருசில வாரங்களுக்கு மட்டும் எங்கள் வீட்டின் பின்னால் அப்போதிருந்த சிறிய தொழுவத்தில் வசிக்கும்.
அசமந்தத்திற்கு பெயர்போன ஆச்சியின் முகத்தில் உயிர்ப்பும் தீவிரமும் தென்படுவது அந்த சமயத்தில்தான். பெரும்பாலும் அத்தருணங்களில் அவர் எவரிடமும் பேசுவதில்லை. எவரையும் அருகில் அனுமதிப்பதும் இல்லை. வேள்வியைப்போல அல்லது ஏதோ பிராயச்சித்தம்போல அச்செயலில் பயபக்தியுடன் லயித்திருப்பார். ஆனால் அந்த முறை என்ன நினைத்தாளோ ஒவ்வொரு நாளும் என்னை அழைத்து அருகினில் அமர்த்திக்கொண்டு இமைச்செருகி படுத்திருக்கும் பசுவிடம் ஏதேதோ கதைகளைப் பேசிக்கொண்டிருந்தாள். காப்பி தண்ணி எடுத்துவரும் அம்மாவின் முகத்தில் எங்களைப் பார்த்ததும் படரும் ஆச்சரியமும், நுண்ணிய பொறாமையும் என்னுள் கிளுகிளுப்பை ஏற்படுத்தியது. அந்தப் பசு ஈன்ற கன்றை அப்பாச்சி, “முருகேசு!!” என அழைத்து ஆரத்தழுவிக்கொண்டார். ஆச்சிக்கு அப்பாவிற்கு முன் பிறந்து, நான்கு வயதில் கிணற்றினுள் தவறி விழுந்து செத்துப்போன மகனின் பெயர் அது.
அதற்கு சரியாக ஒருவாரம் கழித்து, நடுச்சாமத்தில் வீட்டின் சுவரேறி குதித்து உள்ளே வந்தவன் யார் என்றோ, விலையுயர்ந்த பொருட்கள் எவற்றிலும் கை வைக்காமல், தொழுவத்தில் நின்ற பசுவுக்கு மட்டும் நஞ்சைப் புகட்டிவிட்டு பறந்தோடியவனின் உண்மை நோக்கம் என்னவென்றோ எங்களுக்கு இன்றுவரை தெரியவில்லை. மறுநாள் விழித்துப் பார்த்தபோது அந்தப் பசுவும், அதனிடம் பாலுண்ட கன்றும் மல்லாந்திருந்தது. செத்துப்போயிருந்த மாடுகளின் நீலம்பாரித்திருந்த உடம்புகளைக் கண்டு நடுநடுங்கியபடி அமர்ந்திருந்த அப்பாச்சியின் பக்கம் செல்லவே எனக்கு அன்று அச்சமாக இருந்தது.
நரகாசுரனின் அழிவுடன் அப்பாவை இணைத்து அம்மாச்சிப் பேசிய அன்று அப்பா என் கனவில் வந்திருந்தார். அதில் எங்கள் வீட்டுப் புழக்கடையில் வேயப்பட்டிருக்கும் ஓலைக்கூரையின் கீழே, உடம்பில் பொட்டுத்துணி இல்லாமல், முழுவதுமாய் நீலம்பாரித்திருந்த வெற்றுடம்புடன் அவர் பிணமாய் கிடந்தார். அவர் அருகே, ஏதோ தவத்திலிருப்பதைப்போல் அமர்ந்திருந்த அப்பாச்சி திடுமென என் பக்கம் திரும்பி, “வா!” என்று அழைத்தபோது நான் படுக்கையிலேயே சிறுநீர் கழித்தபடி திடுக்கிட்டு விழித்திருந்தேன்.
படுக்கையறையில் அக்கணம் பார்த்து அப்படியொரு அலறல் கேட்டது. முழுவிழிப்பு நிலை எட்டியிராத பிரக்ஞையுடன் சுற்றிமுற்றிப் பார்த்தபோது அறையின் ஒரு மூலையில், சுவரோடு சுவராக அம்மாவைச் சாய்த்துவைத்து, அவளது கழுத்தை தனது கரங்களால் மூர்க்கமாய் பற்றி இறுக்கி அவளை உயர்த்திவிட முயன்றுகொண்டிருந்தார் அப்பா. ஒருசில நொடிகளுக்கு முன்பு பிணமாய் கிடந்த அப்பாவை உயிருடன் பார்த்த நிம்மதியில் நான் ஓடிச்சென்று அவரது தொடைகளைக் கட்டிகொண்டேன். அறையின் மறுமுனையில், தலையில் அறைந்தபடி நின்றுகொண்டிருந்த அம்மாச்சி, “யய்யா, புள்ள பயந்து கெஞ்சுது பாருய்யா… அவள விட்டுருய்யா… அய்யா! அய்யா!” என்று கதறினாள்.
நான் நிமிர்ந்து அப்பாவைப் பார்த்தேன். அவர் முகமெங்கிலும் ஒருவிதச் செம்மை வியாபித்திருந்தது. அவர் பிடியினுள் சிக்குண்டு, சுவாசிக்க இயலாமல் தவித்துக் கொண்டிருந்த அம்மா என்னை சோர்வுடனும், வேதனையுடனும் நோக்கினாள். இனம்புரியாத கிறக்கம் நெற்றி நடுவே நிலைகொண்டதால் அறையின் வெளிச்சம் திடீரென கண்கூசச் செய்வதாக மாறிவிட்டிருந்தது. கண்களை மூடி தலைகுனிந்தபோது அப்பா ஆத்திரத்தில் ஏதோ வார்த்தையைக் கத்துவதும், காரியுமிழும் சத்தமும் கேட்டது. மறுகணம் என்னையும் அம்மாவையும் ஒரு உதறு உதறி உகுத்துவிட்டு வெளியேறிச் சென்றார் அவர்.
அம்மா எவரிடமும் எதுவும் பேசாமல் அடுப்பறையினுள் சென்று முடங்கிக்கொண்டாள். பேரெடை ஒன்றை தோள்களில் சுமப்பதைப்போல கால்கள் இரண்டையும் பிடித்துக்கொண்டு மிகவும் சிரமப்பட்டு எழுந்து என்னை அணுகிய அம்மாச்சி, பாக்கு வாசம் வீசும் தனது முந்தானையால் எனது சிரத்தையும் உடலையும் துடைத்துவிட்டு, உடைமாற்ற உதவிபுரிந்து படுக்கச் செய்தார். பசு இறந்துபோனபோது அப்பாச்சிக்கு நேர்ந்ததைப் போலவே அம்மாச்சிக்கு அப்போது உடம்பெல்லாம் நடுங்கிக் கொண்டிருந்தது. என் முகத்தைப் பார்க்கவே அவர் சங்கோஜப் படுவதைப்போல் இருந்தது. செய்வதறியாமல் நெடுநேரமாக நான், “ஆச்சி ஆச்சி” என்றும், “அப்பா அப்பா” என்றும் முனங்கிகொண்டிருந்தேன்.
அம்மாச்சி அதன் பிறகு ரொம்ப காலம் உயிருடன் இருக்கவில்லை. அன்றைக்கு அந்த இரவில் நடந்தது அவரது ஆன்மாவை ஏதோ விதத்தில் சிதைத்திருக்க வேண்டும். முக்கால் கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் நியாயவிலைக் கடைக்கு உச்சிப்பொழுதில் செருப்பில்லாமல் நடந்துசென்று, அரிசி மற்றும் கோதுமையை வாங்கி மூட்டைகட்டிக்கொண்டு, அண்டைவீட்டு பரிமளா அத்தையுடன் கதைபேசியபடி திரும்பி வந்து, ஒரு லோட்டா நிறைய உப்புபோட்ட மோரை மட்டும் குடித்துவிட்டு அடுத்த வேலையில் மும்முரமாகிவிடும் ஆச்சி, அந்த சம்பவத்திற்கு பின்னர் வெகுவேகமாக துவண்டுபோகத் துவங்கினார்.
படுக்கையைவிட்டே எழுந்திருக்க இயலாத நிலை ஏற்பட்டபோது என்ன காரணத்தினாலோ அம்மாவை நேரடியாகச் சந்திக்க விரும்பாதவராக அவர் மாறிப்போனார். பணிகளை முடித்துவிட்டு அம்மாவே அவரைக் காண வந்தாலும், “போடி நீ… போ… அவன் எதுவும் கேக்கப்போறான்… நீ அங்கன போ!” என்று விரட்டிவிடுவார். ஆனால் அதன் பிறகு நெடுநேரத்திற்கு அம்மாவைப் பற்றி மட்டுமே எண்ணியபடியும் பேசியபடியும் இருப்பார் அவர்.
ஒருமுறை அறையில் இருந்து அம்மா வெளியேறுவதையே பார்த்துக்கொண்டிருந்த ஆச்சி லேசாக உச்சுக்கொட்டிவிட்டு, “ஆளே ஒடுங்கிட்டா பாத்தியா?” என்று சொல்லி கண்களை மூடிக்கொண்டார். நான் அவரின் புறங்கைச் சுருக்கங்களை வருடிக்கொடுத்தேன்.
“பெயர்போன குடும்பம்னாலும் கஞ்சிக்கே வழியில்லாமத்தான் இருந்தோம்… ஏதோ வீடும் வசதியுமா இருக்கற குடும்பத்தோட வாக்கப்பட்டா நல்லா இருப்பாளேன்னு கெட்டி வச்சேன்… பாவிப்பய இப்படி சீரழிக்கானே!” என்று சொன்னபோது அவரது விழியோரங்களில் நீர் துளிர்த்தது. பின்னர் ஒருசில நொடிகளுக்கு ஆத்திரத்தில் பற்களைக் கடித்துக்கொண்டார்.
எனக்கு பயமாக இருந்தது. அங்கிருந்தபடியே திரும்பி ஜன்னல் வழியாக வாசல் பக்கம் பார்த்தேன். அங்கே எங்கள் வீட்டில் வளரும் கன்னங்கரிய சிப்பிபாறையான பருதியிடம், தோலுரிக்கப்பட்ட முழுக்கோழியின் ஊனை ஆட்டி ஆட்டி காண்பித்தபடி விளையாடிக் கொண்டிருந்தார் அப்பா. நெற்றிப்பொட்டை ஊசிமுனை அணுகியதைப்போல் எனது உடலெங்கும் ஒருவித நடுக்கம் குடியேறியது.
அதற்கு இரண்டாம் நாள் விடியலில் அம்மாச்சி காலமானார். அழுது அழுது அன்று அம்மாவின் கண்களுக்கு கீழே உள்ள கருமை அடர்த்திப் பெற்றிருந்ததைப்போல் இருந்தது. தாடை மேலும் உள்ளொடுங்கி, தோல் வெளிறி பார்ப்பதற்கே அலங்கோலமாக இருந்தாள். அவளது தோற்றம் அளித்த ஒவ்வாமையினாலோ என்னவோ என்னால் அவளிடம் அப்போது உளரீதியாக நெருங்கிச்செல்ல முடியவில்லை.
ஆனால் பேச்சுவாக்கில், “ஒருபோதும் தலைகாணி வச்சுக்கிட மாட்டா… என்னைக்கோ வாங்கின குத்தால துண்டை சுருட்டி புறங்கழுத்துக்கு கீழார வச்சு அவ பாட்டு தூங்கிருவா… நேத்து எதுக்கோ கூப்பிட்டு அனுப்பிச்சவ, என் மொகத்த கூட நேரா பாக்காம, விட்டத்த பாத்துட்டே, ‘எட்டீ, எனக்கொரு தலையணை வாங்கிக்கொடேன்!’ ன்னா, சரின்னு வந்துட்டேன்… அது இதுன்னு இங்கன இந்த மனுசன் ஒன்னு மாத்தி ஒன்னா என்ன அலக்கழிச்சதுல அவ கேட்டதயே மறந்துட்டேன்… காலைல பாத்தா பேச்சுமூச்சு இல்லாம கடக்கா!” என்று அம்மா சொன்னபோது என்னையும் அறியாமல் அவள் கைகளைப் பிடித்துக்கொண்டு அழுதுவிட்டேன்.
அந்த இரவு முழுக்க என்னால் துயில முடியவில்லை. ஜூரநடுக்கத்தில் எனது இதழ்கள் இரண்டும் கிடுகிடுத்தபடியே இருந்தன. ஆச்சி சாமியிடம் போயிருக்கிறது என்றும், நேரம் வரும்பொழுது மீண்டும் பூமிக்கு, இந்த வீட்டிற்கு திரும்புவார் என்றும் பெரியவர்கள் சொன்ன அபத்தமான ஆறுதல் வார்த்தைகள் எவையும் என்னுள் நுழையவேயில்லை. அன்று என்னால் ஆச்சியின் முகத்தைக்கூட துல்லியமாக நினைவுகூர முடிந்திருக்கவில்லை. சரிசெய்யவே முடியாத ஒரு மாற்றம் அந்த வீட்டிற்கு நேர்ந்துவிட்டது என்பதைத் தவிர்த்த ஒன்றை அன்றைய எனது உள்ளம் உணர்ந்திருக்கவேயில்லை.
காய்ச்சல் வாட்டியெடுத்த அந்தப் பத்து நாட்களைத் தொடர்ந்து வந்த காலம்தான் என் வாழ்விலேயே மிகவும் சூட்டிப்பானவை. இன்று என்னிடம், “அப்பாச்சி பெயரையே உனக்கு எந்த பொழுதுல வச்சாவளோ, அவள மாதிரியே அசமந்தமா திரியுத!” என்று சொல்லி சலித்துக்கொள்ளும் அத்தைமார்களும், சித்திமார்களும் பால்யத்தின் துவக்கத்தில் என்னைப் பார்த்திருக்கவேண்டும். ஆட்டம், பாட்டு, படிப்பு, விளையாட்டு என அனைத்திலும் ஜொலிஜொலித்த காலகட்டம் அது.
பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது சிஜு என்ற மலையாளத்து பையனுடன் சிறிது நெருக்கம் உண்டானது. கருகருவெனச் செறிந்திருக்கும் சுருட்டைமுடியும், வெட்டிவைத்த தக்காளித் துண்டுகளைப்போல் செவேலென இருக்கும் குட்டி உதடுகளும், பேராண்மை பதிந்த பரந்த தோள்களும், மிதமான பெண்மை ஊடுருவும் கனிந்த முகமும் என இருந்த அவனை ரசித்திராத பெண்களே அன்று இருக்கவில்லை. குறிப்பாக பதினொன்று மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் படிக்கும் அக்காமார்களுக்கு அவன் மேல் தீரா மோகம் இருந்தது. என்னை அவன் ஏறெடுத்து நோக்கிய கணமே என்னுளிருந்து கிளம்பிய விசை ஒன்று அவனை வளைத்துப்போடத் துடித்ததற்கு அவன் இத்தனை பெண்களால் விரும்பப்படுபவன் என்கிற அம்சம் ஒன்றே போதுமானதாக இருந்தது. இமைப்பொழுதில் உணவையும், கடிதங்களையும், ரகசியமான மெல்லியத் தீண்டல்களையும் பரிமாறிக் கொள்பவர்களாக மாறிப்போனோம் நானும் சிஜுவும்.
அந்த வருடத்து ஆண்டுவிழா அன்று எவருக்கும் தெரியாமல், மறைவிடம் ஒன்றில் அவனை ஆரத்தழுவி, இதழ் முத்தமிடும் சந்தர்ப்பம் வாய்த்தது. அவன் பிடியிலிருந்து என்னை நான் விடுவித்துக் கொண்டபோது எனது மேலாடை முழுக்க அவனது வியர்வை ஈரமும், வீச்சமும் அப்பியிருந்தது. உதட்டிலும், மோவாய் பகுதியிலும் அவனது எச்சில் பிசுபிசுத்தது. அவனும் விரல்களால் தனது முகத்தைத் தடவித் தடவிப் பார்த்துக் கொண்டிருந்தான். பிறகு இருவரும் ஒருசில வினாடிகளுக்கு அசடுவழியச் சிரித்தோம்.
பின்வந்த நாட்களில், சொல்லிவைத்தாற்போல் நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் தவிர்க்கத் தொடங்கியது ஏன் என்று எனக்கு விளங்கியதேயில்லை. படிப்பிலும், பிற செயல்களிலும் எனது ஆர்வம் கொஞ்சம் கொஞ்சமாக மட்டுப்பட ஆரம்பித்ததும் அந்தக் காலத்தில்தான். தற்காலிகமாய் தளிர்த்திருந்த துறுதுறுப்பு அப்படியே மட்கி எனது இயல்பான அசமந்தம் ஆடையைப்போல் என்னை மெதுவாகப் போர்த்திக்கொண்டது. உள்ளே புதைந்திருந்து நெளியும் ஏதோ ஒன்றை மூடிமறைக்க விழைவதைபோல் அலங்காரங்களிலும், ஒப்பனையிலும் என் கவனம் குவியத் துவங்கியது. சரியாகச் சொல்வதென்றால் எனக்கும் அம்மாவுக்கும் சின்னச் சின்ன உரசல்கள் எழ துவங்கியது அப்போதுதான்.
அம்மாச்சியின் மறைவுக்கு பிறகே அம்மாவிடம் கணிசமான மாற்றங்கள் தென்படத் தொடங்கின. அப்பாவின் அத்துமீறல்களும், வன்முறையும் மிதமிஞ்சிய அளவுகளை எட்டியிருந்தபோதிலும் அதனை அவள் எதிர்கொள்ளும் விதத்தில் நுண்ணிய வேறுபாடு இருந்தது. அம்மாச்சி இருந்தவரை அம்மா கொஞ்சமேனும் அப்பாவுக்கு எதிர்வினை ஆற்றுவாள். குறைந்தபட்சம் எதுக்கு இப்படி அடிக்கறீங்க என்றோ தயவுசெஞ்சு என்ன அடிக்காதீங்க என்றோ மன்றாடவாது செய்வாள். ஆனால் ஆச்சியின் மரணத்திற்கு பிறகு அப்பாவின் வதைகளை மறுப்பின்றி ஏற்றுக்கொள்பவளாக மாறிவிட்டிருந்தாள்.
ஒருமுறை வகுப்பு முடிந்து வீடு திரும்பியபோது அவளது இடக்கையின் மூன்று விரல்களில் அடர்த்தியாகவும், இறுக்கமாகவும் பச்சிலை மருந்திட்ட வெள்ளைத்துணி சுற்றப்பட்டிருந்தது. என்னவென்று விசாரித்தபோது சோறு சற்றே மிகுதியாக குழைந்துவிட்ட ஆத்திரத்தில் சட்டியைத் தூக்கி அம்மாவை நோக்கி அப்பா வீசியதும், அதனைத் தடுக்க முற்பட்டதில் விரல்களில் மூன்று எக்குத்தப்பாக வளைந்துவிட்டதும் தெரியவந்தது. ஆஸ்பத்திரிக்குச் செல்லாமல் தெருவில் இருக்கும் வைத்தியரைக்கொண்டு கட்டுப்போடச் சொல்லியிருந்தார் அப்பா. நான் எவ்வளவு மன்றாடியும் அம்மா மருத்துவமனைக்கு வர மறுத்துவிட்டாள். கட்டுப் பிரிக்கப்பட்டபோது அந்த மூன்று விரல்களும் ஏதேதோ வடிவத்தைப் பெற்று கோணலாகி நின்றன. அவளும் அந்தக் கோணலுடன் நேர்த்தியாக வாழப் பழகிக்கொண்டாள்.

வீட்டினுள் முற்றாக சரணாகதி அடைந்திருந்த அதே வேளையில் வெளியே சுற்றுப்புறத்தில் தனது ஆகிருதியை பெருக்கிக் கொள்வதில் ஆர்வம் காட்ட ஆரம்பித்திருந்தாள் அம்மா. அன்றுவரை அடுப்பறையைத் தவிர்த்த ஸ்தலம் ஒன்றினுள் தன்னை புகுத்திக்கொள்ள விரும்பியிராதவள் திடுதிப்பென ஊர் விழாக்களிலும், உற்றாரின் சுபநிகழ்வுகளிலும் தலைகாட்ட ஆரம்பித்தாள். இன்னாரின் துணையென தன்னை பெருமிதத்துடன் முன்னிறுத்திக் கொள்வதில் அவளுக்கு ஏதோ ஒரு கிளர்ச்சி இருந்ததாக பட்டது. பிறர் நிகழ்வுகளில் கலந்துகொள்வது மட்டுமல்லாமல் உறவினர்களை உரிமையோடு வீட்டிற்கு அழைப்பதிலும் அதீத அக்கறை காட்ட ஆரம்பித்தாள். வந்தவர்களை நன்றாக உபசரிப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல் அவர்களை வழியனுப்பி வைக்கும்போது வீட்டுத் தோப்பில் விளைந்த காய்கனிகள் பலவற்றை மூட்டைகட்டி அனுப்பிவைப்பதிலும் கவனமாக இருந்தாள்.
குறிப்பாக ஆலங்குளத்துச் சித்தியின் வருகையை அம்மா அதிகமும் எதிர்நோக்கினாள். பிற உறவினர்கள் வந்தால் உணர்ச்சியற்ற முகத்தோடு வரவேற்றுவிட்டு ஏதேனும் அலுவலை சாக்காகச் சொல்லி பகற்பொழுது முழுவதையும் வெளியிலேயே செலவழித்துவிடும் அப்பாகூட அந்தச் சித்தி வந்தால் இன்முகத்துடன் சற்று நேரம் இருந்து பேசியபிறகே புறப்படுவார். போகும்போது அம்மாவிடம் மறக்காமல், “பாத்துக்கடி, என்ன?” என்று சொல்லிவிட்டுச் செல்வார்.
சித்திக்கு மட்டுமென வழங்கப்படும் இந்தப் பிரத்யேக உபசரிப்பிற்கு அவர் வாழ்க்கைப் பட்டிருக்கும் குடும்பத்தின் ஒப்பீடற்ற செல்வாக்கே காரணம் என புரிந்துகொள்வதற்கு எனக்கு ஒருசில வருடங்களே தேவைப்பட்டன. மட்டுமல்லாமல், தன்னைவிட சாதி அந்தஸ்திலும், அதிகாரப் படிநிலையில் மேலே இருப்போரிடம் கேள்விகளின்றி பணிந்து செல்வதும், அவர்களது தினுசான பழக்கவழக்கங்கள் மற்றும் சில உடல்மொழிகளை குறிப்பிட்ட சில காலத்துக்கு அற்பமாய் நகலெடுப்பதும் அவரது சுபாவங்களில் ஒன்று எனவும் நான் வெகு விரைவில் புரிந்துகொண்டிருந்தேன்.
சித்தி இருக்கும்போது வீட்டிற்கே ஒருவித உயிர்ப்பு வந்துவிட்டதைப்போல் தோன்றும். வண்ணங்கள் மெருகடைந்து, சுழலும் காற்று எடையிழந்து, உணர்ச்சிகள் மிருதுபெற்று அனைத்தும் எளிதானதைப்போல் ஒரு பிம்பம் உருவாகும். இரவில் வீடுதிரும்பும் அப்பா தவறாமல் ஊரின் ‘ஸ்பெஷல்’ என்று பிரபலமாக அறியப்படும் ஏதேனும் தின்பண்டங்களை வாங்கிவருவார். சித்தியின் மகன் ஆகாஷ் அதனை உண்டபடி வீட்டைச் சுற்றி ஓடி வருவான். பிறர் குரல் உயர்வதை அறவே விரும்பாத அப்பா உச்சக்குரலில் அவன் கத்துவதை பெரிதாய் பொருட்படுத்தியதில்லை.
ஆகாஷ் என்னுடன் இருப்பதைவிட அம்மாவுடனே அதிக நேரத்தை செலவிடுவான். அம்மாவும் அவனை அருகில் அமர்த்திக்கொள்ளவே அதிகம் விரும்புவாள். சமையல் பணிகளை முடித்துவிட்டு இளைப்பாறும் வேளைகளிலெல்லாம் அவன் தனது டாக்டர் செட் பொம்மைகளைக்கொண்டு அம்மாவுக்கு வைத்தியம் பார்ப்பான். பிளாஸ்டிக் ஸ்டெதஸ்க்கோப்பை கழுத்தில் மாட்டிக்கொண்டு, “பெரியம்மா, மூச்ச இழுத்து விடுங்க” என்று சொல்வதும், ஊசியை புஜத்தில் குத்துவதும், “உங்களுக்கு எங்க வலிக்குது?” என்று கேட்டு பச்சைத் தண்ணீரை மருந்து போல அப்பகுதிகளில் பூசுவதுமாய் அந்தப் பொழுதுகள் கழியும்.
ஒருமுறை அம்மாவின் இடக்கை விரல்களின் வடிவம் சிதைந்ததற்கான பின்னணியைத் துருவித் துருவி அவன் விசாரித்ததற்கு விளக்கம் சொல்ல முடியாமல் மழுப்பிக்கொண்டிருந்த அம்மா, ஒரு கட்டத்தில் “நீ மருந்து போட்டு எனக்கு தடவி விட்டா எல்லாம் சரியா போயிடும்” என்றாள். அவனும் மிகுந்த உற்சாகத்துடன் தனது பணியில் இறங்கினான். கழுத்து, முழங்கை, இடை, கால் மூட்டுக்கள் என தன்னுடலில் தழும்புகள் இருக்கும் பகுதிகள் அனைத்திலும் அவனது மிருதுவான தீண்டல்களை சூடிக்கொண்டாள் அம்மா.
அந்த இரவு அப்பா வீட்டிற்கு வந்ததும் அவருடன் வழக்கம்போல் விளையாடச்சென்ற ஆகாஷ் ஒரு கட்டத்தில் அவரது தலையில் இருந்தும் முழங்கையில் இருந்தும் மயிர்களைப் பற்றியிழுத்து விளையாட்டாக பிய்த்தெடுக்கத் துவங்கினான். அப்பாவுக்கு வலித்தது. ஆனால் வெறுமனே உச்சுக்கொட்டி, “தம்பி… தம்பி… வலிக்குடே… ஏல… தம்பி” என்று அவனிடம் கெஞ்சுவதைத் தவிர்த்த ஒன்றை அவர் செய்யவேயில்லை. ஓரமாக நின்று அந்தக் காட்சியை ஆச்சரியத்துடன் நோக்கிக்கொண்டிருந்த என் பக்கம் திடுமென திரும்பியவர், “தண்ணி கொண்டு வா, போ!” என்று அதட்டலாகச் சொன்னார்.
சரியென்று தலையாட்டியபடி நான் அடுப்பறைக்குள் சென்றபோது அங்கே இருந்த ஜன்னல் அருகே மறைந்து நின்றுகொண்டு அப்பாவையே பார்த்துக்கொண்டிருந்தாள் அம்மா. அவள் முகமெங்கும் ஒருவித விகாரச்சிரிப்பு வியாபித்திருந்தது. பிறழ்வுக்குள்ளானவளைப்போல் அவள் முழி இரண்டும் விரிந்து வெறிப்புநிலை பெற்றிருந்தது. நான் பதறிவிட்டேன். நான் இருப்பதை உணர்ந்ததும் அந்தச் சிரிப்பு கொஞ்சம் கொஞ்சமாக அஸ்தமிக்க ஆரம்பித்தது.
நீர்குவளையுடன் வெளியே வந்து அப்பாவிடம் நீட்டியபோது அவர் என்னை ஏறெடுத்து நோக்காமல், “ஓரமா வச்சுட்டு போ” என்றார். அப்போது அவர் தொனியில் அதட்டலும் அதிகாரமும் தென்படவில்லை. அதில் நான் என்றைக்கும் கண்டிராத ஒருவித பலவீனம் தெரிந்தது. ஆகாஷ் விளையாட்டாக அவரது முதுகை, “நங்கு! நங்கு!” என்று குத்துவது அவருக்கு வலித்திருக்க வேண்டும். குவளையை கீழே வைத்துவிட்டு ஒருமுறை அடுக்களைப் பக்கம் பார்த்தேன். அம்மாவின் அந்த கோரமானச் சிரிப்பு சீலைச்சித்திரமென என் முன் விரிந்தது. அக்கணம் நான் அவளை வெறுத்தேன். அவளை வெறுத்தமைக்காக என்னை நானே சபித்தும் கொண்டேன்.
ஆனால் ஒருநாளுக்கு ஒருதுளி என என்னுள் உருவாகியிருந்த நஞ்சுக்கிடங்கு மெல்ல மெல்ல எடைபெற்றுக் கொண்டிருந்தது. கல்லூரியில், கோவிலில், பேருந்தின் கூட்ட நெரிசலில், கடைகளின் நீண்ட வரிசைகளில் என நான் எதிர்கொள்ளும் அருவருக்கத்தக்க முகங்களில் அம்மாவின் அந்த கோரச்சிரிப்பின் நுண்ணிய சாயல் ஒன்றைக் காணத் துவங்கினேன். என்னையும் அறியாமல் அது அவளிடம் இருந்து என்னை அகற்றிக்கொண்டே சென்றது. தனது உடலின் அந்தரங்கங்களை ஆகாஷை போன்ற விவரமறியா சிறுவனுக்கு அவள் காட்சிப்படுத்திய சம்பவத்தை வெவ்வேறு தருணங்களில் வெவ்வேறு விதமாக திரித்து எண்ணி அருவருப்படைந்தேன்.
காலில் அணிந்திருந்த செருப்பைக் கழற்றி சற்றும் தயங்காமல் அவளது முகத்தைக் குறிபார்த்து அப்பா வீசியடித்தபோதும், கேசத்தைச் சுருட்டிப் பிடித்து ஓங்கித் தள்ளியதில் கதவின் விளிம்பில் அவளது புறந்தலை மோதியதையும், அவரது விரல்களின் ஊடாக தனது மயிர்கற்றைகள் நழுவி விழுந்து, காற்றில் அலைந்து மூலையில் கொத்தாகச் சுருண்டு கொண்டதையும் பற்றி அவள் கண்ணீருடன் விவரிக்கும்போதும், அவரது சீற்றத்திற்குத் தூண்டுதலாக இருந்த அவளது மிகச்சிறிய தவறையே நானும் சுட்டிக்காட்டினேன். “உன்ன எவன் அப்படி பண்ண சொன்னான்? உனக்குத்தான் அவர் குணம் தெரியும்ல?” என்று மறைமுகமாக அவரது செயலை நியாயப்படுத்தினேன்.
அம்மாவுக்கும் எனக்குமான உரையாடல்களில் கொஞ்சம் கொஞ்சமாக தடித்தச் சொற்கள் இடம்பெற ஆரம்பித்தது அதன் பிறகுதான். மிகச்சிறிய பூசலுக்குக்கூட அதீத கூர்மையுடைய வார்த்தைகளை என்னை நோக்கி சரமாரியாக எய்தினாள் அவள். கசப்பும், சுயவெறுப்பும் நாளுக்குநாள் அடர்ந்தபடியே இருக்க அந்த வீட்டினுடனான பிணைப்பே என்னுள் கொஞ்சம் கொஞ்சமாக இற்றுப்போகத் தொடங்கியிருந்தது. கல்லூரியில் இறுதி ஆண்டை நெருங்கியபோது ஏதேதோ காரணங்களைச் சொல்லி வீட்டில் இருக்கும் நேரத்தையே குறைத்துக்கொண்டேன். பெண் தோழிகளுடன் ஏதேதோ மீறல்களை நுகர்ந்து களித்தேன். பூடக மொழிகொண்டு ஆண்களைச் சீண்டி இழுப்பதும், பின் கறாரான நிதர்சனத்தை, இங்கிதத்தை நினைவூட்டி விலக்குவதும் என அவர்களை ஆட்டிப்படைப்பதில் ஒருவித நிறைவைக் காண ஆரம்பித்தேன்.
என்னைச் சுற்றிவந்த பல ஆண்களில் ஜெய் என்பவனே முதன்மையானவன். ஏதோ காரணத்தினால் பிறரை விடவும் அவனைச் சற்று அதிகமாகவே சீண்டினேன். அவனும் பிறரைக் காட்டிலும் என்னிடம் அதிகமாகவே பணிந்து சென்றான். அதீத பொறுமையை வெளிப்படுத்துபவனாக தோற்றமளித்தான். இத்தனைக்கும் செல்வச்செழிப்பில் எங்கள் அனைவரையும் விட பன்மடங்கு உயரத்தில் இருந்தான் அவன். பரம்பரைப் பணக்காரர்களான அவர்களது வீட்டின் திருமணம் ஒன்றிற்கு சென்றிருந்தபோது என்னை மையப்படுத்தி பல ஏற்பாடுகளையும், உபசரிப்புகளையும் அவன் மேற்கொண்டது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
நாங்கள் மெல்ல மெல்ல நெருக்கமானவர்களாக மாறிக்கொண்டிருந்தது ஜெய்யின் வீட்டில் பல சஞ்சலங்களை தோற்றுவித்தது. இந்த சங்கதியில் பெரும் ஆபத்து பொதிந்திருப்பதாக கருதிய அவனது பெற்றோர்கள் குறுகிய காலத்தில் பல திடுக்கிடும் செயல்திட்டங்களையும், கட்டுப்பாடுகளையும் நிர்மாணித்தனர். விளைவாக இறுதிப் பரீட்சை முடிவுகள் வெளியாகும் முன்பே நானும் அவனும் பதிவுத் திருமணம் செய்துகொண்டோம். திருப்பரங்குன்றத்தில் அவன் பெயரில் இருந்த வீடொன்றில் அடிப்படை வசதிகளை மட்டும் ஏற்படுத்திக்கொண்டு குடியேறினோம். ஜெய்யின் பெற்றோர்கள் எங்கள் திருமணத்தை ஏற்றுக்கொள்ள ஒரு வருடம் பிடித்தது. ஆனால் இரண்டே மாதங்களில் அம்மாவும் அப்பாவும் எங்கள் வீட்டிற்கு வந்துவிட்டுச் சென்றனர்.
அன்று அம்மா என்னிடம் பெரிதாக பேசவேயில்லை. அடுப்படியில் என்னுடன் அவள் நின்றுகொண்டிருந்தபோது அவள் முகத்தில் நான் ஒருபோதும் கண்டிராத சுழிப்புகளும், கள்ளச்சிரிப்புகளும் உருப்பெற்றன. ஆனால் விடைபெறும்போது என் கைகளைப் பற்றி அழுதுவிட்டாள். தழுதழுத்த குரலில், “நல்லா இரும்மா என்ன?” என்று என்னிடமும், “தம்பி நல்லா பாத்துக்கய்யா!” என்று ஜெய்யிடம் சொல்லிவிட்டுச் சென்றாள். ஆட்டோ ஏறுவதற்கு முன்பு அப்பாவும், “வீட்டுக்கு வாங்க ரெண்டுபேருமா” என்று சொன்னார். அப்போது அவர் குரலில் நான் முன்பொரு முறை கண்டிருந்த பலவீனம் தோன்றியிருந்தது. நான் அவர்கள் இருவரையும் வழியனுப்பி வைத்தேன். அதற்கு ஆறு ஆண்டுகள் கழித்து ஜெய்யுடனான எனது உறவை முறித்துக்கொள்வது வரை நான் அவர்கள் பக்கமே தலைவைத்துப் படுக்கவில்லை.
என்னுடைய விவாகரத்து வழக்கு முடிவுற்றபிறகும் ஓராண்டு காலத்திற்கு குருட்டு வைராக்கியத்துடன் பல்வேறு நகரங்களில் எண்ணற்ற நிறுவனங்களில் விண்ணப்பித்து எனது படிப்பிற்கும் ஆற்றலுக்கும் ஏற்ற வேலை ஒன்றை எதிர்பார்த்து காத்திருந்தேன். ஆனால் இளங்கலைப் பட்டம் பெற்றபிறகு ஏறத்தாழ ஏழாண்டு காலம் எந்தவித பணியிலும் ஈடுபட்டிருக்காதலால் முக்கிய நிறுவனங்கள் எவையும் என்னை கருத்தில்கொள்ளவே விரும்பவில்லை. காத்திருப்புப் பட்டியலில் வைத்திருந்த நடுத்தர நிறுவனங்களும் ஒரு கட்டத்திற்கு மேல் மன்னிப்பு கடிதம் ஒன்றை அனுப்பியதுடன் பின்வாங்கிக்கொண்டனர். மனமுவந்து என்னை ஏற்றுக்கொண்ட சிறிய நிறுவனங்களில் என்னால் ஒருசில மாதங்களுக்கு மேல் நிலைத்திருக்க முடியவில்லை. சலிப்பும் சோர்வும் முற்றிப்போன இரவொன்றில் பேசாமல் ஊருக்கே சென்று அங்கே இருக்கும் சிறுவர் சிறுமிகளுக்கு ட்யூஷன் எடுத்துப் பிழைத்துக்கொண்டால் என்ன என்கிற யோசனை எழுந்தது. மீண்டும் வீடு வந்து சேர்ந்தேன்.
அப்பாவின் உடல்நிலை அப்போது நான் எண்ணியதைவிடவும் மோசமாக இருந்தது. திருப்பரங்குன்றத்தில் இருந்தபோதே அப்பாவின் கண்பார்வை கொஞ்சம் கொஞ்சமாக மங்கிவருவதாக அம்மா சொல்லியிருந்தாள். நவீன மருத்துவத்தின் மேல் அலாதியான அவநம்பிக்கைக் கொண்டிருந்த அப்பா உயிரே போனாலும் நகரத்து ஆஸ்பத்திரிக்கு வரமாட்டேன் என்று உறுதியாகச் சொல்லவிட்டார். நான் மீண்டும் வீட்டினுள் நுழைந்தபோது அவர் ஏறத்தாழ குருடாகவே ஆகிவிட்டிருந்தார். உட்கார்ந்த இடத்திலிருந்து உணவுண்பதால் உடல் அதே திரட்சியுடன் தோன்றினாலும் முகத்தில் ஒருவித பித்துக்களையும் பரிதாப தோற்றமும் வந்துவிட்டிருந்தது.
ஜெய்க்கும் எனக்கும் இடையே அப்படி என்னதான் நிகழ்ந்தது என்று கேட்கும் நிலையில் அவர் இல்லை. அம்மாவும் எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை. சண்டை, ஒத்துவரவில்லை என்று நான் சொல்லியிருந்தது மட்டுமே அவளுக்கு போதுமானதாக இருந்தது. இனம்புரியாத பாரம் சிரத்தின் மீது ஏறியமர்ந்து நிலைகுலையைச் செய்யும்போதெல்லாம் எவரிடமாவது அனைத்தையும் மனம்விட்டுப் பேசிவிட தோன்றினாலும் ஏனோ அதனை செயலாக்க இயலவில்லை.
திருமணம் ஆகி ஓராண்டு முடிவுற்றதிலிருந்தே எனக்கும் ஜெய்க்கும் இடையே கொஞ்சம் கொஞ்சமாக உரசல்கள் எட்டிப்பார்க்கத் தொடங்கியிருந்தன. அவன் என்னிடம் காண்பித்த மூர்க்கம் அவனுள் என்றும் இருந்துவந்த ஒன்றா அல்லது என்னிடம் இருக்கும் ஏதோ ஒன்று அவனை அவ்வாறாக மாற்றியமைத்ததா என்று தெளிவாகச் சொல்லிவிட முடியவில்லை.
ஆனால் உடனிருக்கும் பொழுதுகளில் எல்லாம் அவன் என்னிடம் எதற்காகவோ ஏதோ ஒரு விலையை கோருவதைப் போலவே இருந்தது. அவன் எனக்கென்று செய்த அல்லது இழந்த ஏதோ ஒன்றுக்கான தொகையென என்னுடைய நிபந்தனைகளற்ற பணிவையும், அடக்கத்தையும் வேண்டுவதைப் போலிருந்தது. வேலையென்று ஒன்றை நான் தேடிக்கொள்ளாததற்கும் அவனது அந்த மறைமுக கோரிக்கையே காரணமாக விளங்கியது. ஒரு கட்டத்தில் அவனது நடத்தையில் மிகச் சாதாரணமாக ஒருவித உதாசீனம் ஊடுருவ ஆரம்பித்ததை ஏனோ என்னால் எளிதாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. ஏறெடுத்துப் பார்த்து, சரிக்குச் சமமாய் நின்று அவனை நான் எதிர்கொண்டதை அவனால் சகித்துக்கொள்ள முடியவில்லை.
வாரம் மூன்று அல்லது நான்கு நாட்கள் என நடந்தேறிய உக்கிரமான வாக்குவாதங்களை, எதிரே பார்க்காத வேளைகளில் சட்டென நீண்ட அவனது கைகள் எனது முகத்தில் ஏற்படுத்திய காயங்களைப் பற்றியெல்லாம் நான் அம்மாவிடம் அப்போது பகிர்ந்துகொள்ளவேயில்லை. அந்த இருண்ட பக்கங்களை விரித்துக் காட்டுவது பெருத்த அவமானமென எனக்கு தோன்றிக்கொண்டே இருந்தது. எத்தனை வலித்தாலும் அதனை எவ்வித ஓசையுமின்றி என்னுள் பூட்டிவைத்துக் கொள்ளவே விரும்பினேன். அம்மாவிடம் கூடுமானவரை இன்முகமே காட்டிவந்தேன். பிரிவதற்கு முன்பான ஒன்னரை ஆண்டுகளில் எனக்கும் ஜெய்க்கும் இடையே பேச்சுவார்த்தையே முடங்கிப்போய் விட்டிருந்தது. படுக்கையறை இரண்டாகிப் போயிருந்தது. வீடு விடுதியென மாறிவிட்டிருந்தது.
ஆனால் இந்த வீட்டையும், உறவையும் துறந்துவிடுவதே சரியென்கிற எண்ணம் மட்டும் என்னுள் எழவேயில்லை. இறுதியாக நடந்த சண்டையின்போது உச்சகட்ட ஆத்திரத்தில் அவன் என் சங்கைப் பற்றி அழுத்தி சுவரோடு சுவராக சாய்த்ததற்கு முந்தைய கணம்வரை நான் அந்த வீட்டு மனுஷியாகவே என்னை உணர்ந்துவந்தேன். ஆனால் அவன் பிடியின் இறுக்கத்தினால் சுவாசம் தடைப்பட்டபோது அனைத்தையும் இழந்தவளானேன். என்னால் அதன் பிறகு ஒரு நிமிடம் கூட அந்த வீட்டில் இருக்க முடியவில்லை.
***
பெரும்பான்மையான பொழுதுகளை வீட்டின் நான்கு சுவர்களுக்குள் முடங்கியபடிக் கழித்த எங்கள் மூவருக்கும் இடையே உழன்ற காற்று அனைத்தும் மாறிவிட்டது என்கிற தோற்றத்தையும், எதுவுமே மாறிவிடவில்லை என்கிற மயக்கத்தையும் ஒருசேர வழங்கியது. விளைவாக சில வாரத்திலேயே எனது மனம் ஒருவித உறைநிலை அடைந்திருந்தது. ஒரே நேரத்தில் எல்லாவற்றையும் உள்வாங்குபவள் ஆகவும், எதையுமே சட்டை செய்யாதவளாகவும் மாறிவிட்டிருந்தேன்.
அப்பாவின் கைகள் முன்பைப்போல ஓங்குவதில்லை இப்போது. அதற்கு மாறாக மிகவும் கீழ்தரணமான வசைச்சொற்களை சரமாரியாக பிரயோகித்தவண்ணம் இருக்கிறார். அம்மா ஏதேனும் சாதாரணாமாக பேசினால்கூட உச்சுக்கொட்டுவதும், பதில் என்று அவர் வழங்கும் ஒவ்வொரு வாக்கியத்தின் இறுதியிலும் ஏதேனும் ஒரு கொடிய சொல்லை இணைத்து அளிப்பதும் வழமையாக மாறிவிட்டிருக்கிறது. அவரின் ஒவ்வொரு தேவைக்கும் உடனிருக்க வேண்டிய நிர்பந்தம் இருப்பதாலோ, அல்லது அவளுக்கே அலுத்துவிட்டதாலோ என்னமோ, அம்மா இப்போதெல்லாம் எந்த நிகழ்வுகளிலும் பங்கெடுப்பதில்லை. வீட்டிற்கும் எவரையும் அழைப்பதில்லை. என்னிடம் ட்யூஷன் பயிலும் ஏழெட்டு மாணவர்களின் ஓசை மட்டும் எழாதிருந்திருந்தால் வீடு வசைச்சொற்களும் வேதனைச் சிணுங்கல்களும் மட்டுமே எதிரொலிக்கும் நரகமாக மாறிவிட்டிருக்கும்.
நேற்று மாலை மாணவர்களை முற்றத்திலிருந்த பிரம்மாண்ட புளியமரத்தின் அடியே அமர்த்தி பாடம் சொல்லிக் கொண்டிருந்தேன். திண்ணையில் அமர்ந்திருந்த அப்பா தனது உயிரற்ற விழிகளை ஏதோ ஒரு புள்ளியில் நட்டுவைத்து அமர்ந்திருந்தார். அப்போது வீட்டினுள் இருந்து தட்டில் நான்கு தோசைகளைப் போட்டு எடுத்துவந்த அம்மா அதனை அப்பாவிடம் பணிவாக நீட்டினாள்.
“என்னட்டி?” என்று சீறினார் அவர்.
அம்மா, “தோசை” என்றாள்.
தட்டைக் கையில் வாங்கிக்கொண்ட அப்பா தனது விரல் நுனிகளால் தோசையையும், ஓரத்தில் இருந்த காரச்சட்னியையும் தொட்டுப் பார்த்தார். பிறகு அசட்டையாக கையசைத்து அம்மாவை ஓரம் போகச்சொன்னார். அம்மா எதுவும் சொல்லாமல் தள்ளி நின்றுகொண்டாள்.
நான் மாணவர்களிடம் எழுதச் சொல்லிவிட்டு கழிவறை நோக்கிச் சென்றேன். திரும்பிவந்தபோது மாணவர்கள் இடையே ஏதோ சலசலப்பு கேட்டுக்கொண்டிருந்தது. அவர்கள் ரகசியமாக எதற்கோ சிரித்துக்கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரது பார்வையும் அப்பாவை நோக்கித் திரும்பியிருந்தது. ஏனோ அந்தக் காட்சி எனக்கும் சிரிப்பை வரவழைக்க, கைகளின் ஈரத்தை முந்தானையில் துடைத்துக்கொண்டே லேசாக முறுவலித்தபடி அம்மாவைப் பார்த்தேன். அவளும் லேசான புன்னகையுடன் காணப்பட்டாள். அவளது வலக்கை இடக்கையின் விரல்களைப் பற்றிக்கொண்டிருந்தது. என்னுள் அக்கணம் சட்டென ஏதோ ஒன்று சுழித்துக்கொண்டது. சற்று எம்பி அப்பாவைப் பார்த்தேன்.
அப்பா கையில் வைத்திருந்த தோசைத் தட்டில் அகன்ற இறக்கைகள் கொண்ட பூச்சி ஒன்று ஊர்ந்துகொண்டிருந்தது. அப்பாவின் விரல்கள் அதனை அவ்வப்போது தொட்டாலும் அவரால் அதனை அடையாளம் காண முடிந்திருக்கவில்லை. ஒரு கட்டத்தில் தோசை என எண்ணி அதனை அவர் பற்றிவிட அது துடிதுடிக்கத் துவங்கியது. அவர் “இது… இது என்னது… இது” என்று பதற ஆரம்பித்தார். மாணவர்களில் ஒருவன், “தோச மொறுவல் தாத்தா!” என்றான், நக்கலாக. பிற மாணவர்கள் அனைவரும் சிரித்தனர். அம்மா புடவைத் தலைப்பால் வாய்பொத்திக் கொண்டாள்.
என் உடல் ஏனோ முறுக்கேறியது. மாணவர்கள் பக்கம் சென்று அங்கிருந்த கம்பை எடுத்து மேசை மீது பலமாக அறைந்தேன். “ஒழுங்கா படிங்கல!” என்று அவர்களை ஆங்காரத்துடன் எச்சரித்தேன். பிறகு கிடுகிடுவென எட்டுவைத்து நடந்து அப்பாவை அணுகி அவர் கையிலிருந்த தட்டைப் பிடுங்கி உணவை கீழே கொட்டிவிட்டு அடுக்களை நோக்கிச் சென்றேன். அம்மாவின் பார்வை என்னைப் பின்தொடர்வதை என்னால் உணரமுடிந்தது. தட்டைக் கழுவி மீண்டும் அதில் தோசையை அடுக்கிக் கொண்டிருந்தபோது அடுப்பறைக்குள் நுழைந்த அம்மா, “சூடா வேணா சுட்டு தரவா?” என்று கேட்டாள். நான் அவளை ஒரு பார்வை மட்டும் பார்த்துவிட்டு அறையைவிட்டு வெளியேறினேன். நான் அவரிடம் அந்த உணவை கனிவுடன் வழங்குவதை உள்ளே இருந்தபடி பார்த்துக்கொண்டே இருந்தாள் அம்மா. அதன் பிறகு சில மணி நேரங்களுக்கு நானும் அவளும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.
இரவு உறங்கப்போகும் முன்பு எந்தவித அறிவிப்பும் முகாந்திரமும் இன்றி என் அறையினுள் நுழைந்தாள் அம்மா. சில நிமிடங்களுக்கு எந்த தொடர்புமில்லாமல் அன்றைய பொழுதில் நேர்ந்த சங்கதிகளையும், மறுநாளைக்கான திட்டங்களையும் விவரித்துக்கொண்டிருந்தவள் திடீரென அம்மாச்சி பல வருடங்களுக்கு முன்பு அப்பாவையும் நரகாசுரனையும் இணைத்துவைத்துப் பேசிய தருணத்தை நினைவூட்டினாள். கம்மிய குரலில் “அன்னைக்கு ராத்திரி உங்கப்பாக்கும் எனக்கும் அப்படியொரு சண்டை… நியாபகம் இருக்கா?” என்று வினவினாள்.
நான் எந்த பதிலும் சொல்லாமல், அவள் கூறும் எதிலும் துளி ஆர்வமில்லாத பாவனையில் அமர்ந்திருந்தேன்.
“நீ மட்டும் திடுதிடுப்புன்னு முழிச்சு வரலன்னா அன்னைக்கு என்ன ஆகியிருக்கும்னே தெரியல…”
“…”
“சட்டுனு ஓடி வந்து உங்க அப்பாவோட கால புடிச்சுகிட்ட… ஆச்சி அதை கண்டு நெஞ்சுல அடிச்சுட்டு கதறுதா!” என்று சொல்லிவிட்டு சில நொடிகளுக்கு தன்னுள் ஆழ்ந்தவள் பிறகு தனது விரலால் எனது புறங்கையை மெதுவாக வருடி, “எத்தன பாத்தாச்சு… என்னம்மா?” என்றாள்.
நான் அம்மாவின் முகத்தையே பார்க்கவில்லை.
என்னை சில நொடிகளுக்கு உற்று நோக்கிக்கொண்டிருந்த அம்மா, வற்றிப்போன வத்தலைப்போன்ற தனது விரல்களால் என் நெற்றியை வருடினாள். பிறகு என் கன்னத்தைத் தொட்டு, மெதுவாக என் முகத்தைத் திருப்பி, என் விழிகளுடன் அவளது பார்வையைக் கோர்த்து, “எல்லாத்தையும் மறக்க முடியுது… ஒருசிலத மன்னிக்கக்கூட முடியுது… ஆனா அன்னைக்கு என் கழுத்துல இருந்து கைய்ய விலக்கின மனுசன் என்ன நினைச்சானோ, கால புடிச்சு கெஞ்சி அழுதுட்டு இருந்த உன் உச்சந்தலையில பொளிச்சுன்னு காரி துப்பிட்டு போயிட்டான்… என்னால் அத மட்டும் மறக்க முடியல…” என்று சொன்னாள்.
சட்டென ஒருகணம் மூச்சடைத்துப் போனதால் இமைகள் இரண்டையும் இறுக்கமாக மூடிக்கொண்டேன். அம்மா அதன் பிறகு பேசிய எதுவும் என்னை அண்டவேயில்லை. அவள் விடைபெற்ற பிறகு என் தேகம் முழுக்க ஒருவிதமான கூச்சமும் நடுக்கமும் படரத் துவங்கியது. குமட்டல் முற்றி கண்கள் இரண்டிலும் நீர் தேங்கியது. முகமற்ற எவரையோ வெறுப்பதைப்போல் உச்சவரம்பைப் பார்த்து பற்களைக் கடித்துக் கொண்டிருந்தேன். வயிற்றினுள் எடையென எஞ்சியிருந்த உணவு அமிலம்போல் மாறி ஒருவித எரிச்சலை உண்டுபண்ணியது.
அன்று இரவு உறங்குவதற்கு முன் வழக்கம்போல் அப்பாவை புறவாசலில் இருந்த கழிவறைக்கு அழைத்துச்சென்றேன். சிறுநீர் கழித்துவிட்டு தடவித் தடவி வெளியேறியவரின் கால் இடறியதில் அணிந்திருந்த லுங்கி நழுவி ஓரமாய் விழ அவர் பக்கவாட்டில் இருந்த சுவரைப் பிடித்து தன்னைத் திடப்படுத்திக்கொண்டார். பிறகு தனது பாதத்தால் அங்கும் இங்கும் துழாவி இழந்த தனது ஆடையை மும்முரமாக தேடினார். அவரது அசைவுகளில் மிருகத்தனமான ஒரு விரைவு தெரிந்தது. நான் கண்டுவிடும் முன்பு தனது நிர்வாணத்தை மறைத்துக்கொள்ள விரும்பினார் அவர். ஆனால் எத்தனை முயன்றும் காற்றில் சற்று அகன்று போயிருந்த லுங்கியை அவரால் கண்டடைய இயலவில்லை. சட்டென அவர் சிரம் தாழ்ந்தது. பலவீனமான குரலில், “எட்டி… பாமா… எட்டி… இருக்கியா?” என்றார்.
நான் அசையாமல் அப்படியே நின்றிருந்தேன்.
அப்பா “பாமா! பாமா!” என்று என்னை அழைத்தவண்ணம் இருந்தார்.
“வரேன்” என்று ஒரு கட்டத்தில் சொல்லிவிட்டு முன்சென்று ஓரமாக கிடந்த லுங்கியை எடுத்து அவர் கையில் கொடுத்தபோது விண்மீன்கள் அற்று கருகருவென இருந்த வான்பரப்பில் சிறு பொறியென உதித்த வேட்டொன்று படாரென வெடித்துச் சிதறி பல வண்ணங்களை எட்டுத்திக்கிலும் தூவியது.
Discover more from சொல்வனம் | இதழ் 371 | 26 ஜூலை 2026
Subscribe to get the latest posts sent to your email.
