நினைவில் மேவும் உரையாடல்கள்

அமெரிக்காவிலிருந்து வெளிவரும் சொல்வனம் இணைய இதழ் வெளியிடவுள்ள இந்திரா பார்த்தசாரதி சிறப்பிதழுக்காக அறிவியல் எழுத்தாளரும் நண்பருமான கனடா வெங்கட்ரமணன் ‘ஒரு கட்டுரை கொடுங்கள்’ என்று கேட்டபோது என்ன எழுதுவது என்ற திகைப்பே ஏற்பட்டது. இலக்கியத்தின் பல வகைமைகளிலும் எழுதிக் குவித்து, தன்னை நிறுவிய பீஷ்மர் அவர். அவரைப் பற்றிய தகவல்களும், அவருடைய படைப்புகள் குறித்த கட்டுரைகளும் பொதுவில் ஏராளமாகக் கிடைக்கும் நிலையில், என்னோடான சில நினைவுகளையும் உரையாடல்களையும் மட்டும் பதிவு செய்யலாம் என்று தோன்றியது.

இந்திரா பார்த்தசாரதி குறித்து நான் முதலில் கேள்விப்பட்டது எம்.வி.வி., கரிச்சான் குஞ்சு ஆகியோரோடு நடந்த உரையாடல்களில்.  அவர்களது பேச்சுகளின் இடையிடையே இ.பா. பற்றிய குறிப்புகள் வந்துகொண்டே இருந்தன. அதோடு, “நம்ம ஊர்க்காரர்” என்ற ஒரு நெருக்கமும் அதில் இருந்தது. 

கல்லூரிக் காலத்தில் அவருடைய படைப்புகளை வாசிக்கத் துவங்கினேன். அவரது ‘குருதிப் புனல்’ தஞ்சை மாவட்டத்தின் சமூக வரலாற்றோடு இணைந்திருந்ததால், அதன் மீதான  ஒரு வித வேதனை கலந்த ஈர்ப்பால் அதை வாசித்தேன். 

தொண்ணூறுகளில் வெளியான எனது முதல் கவிதைத் தொகுப்பை அவரிடம் கொடுத்ததே முதல் சந்திப்பு. அதன் பின்னர் அந்த அறிமுகம் நட்பாக வளர்ந்து இன்றும் தொடர்கிறது.

எல்லா எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் அழைப்பது போல  அவரையும், “சார், கும்பகோணத்துக்கு வந்து நம்ம லாட்ஜ்ல விருந்தினரா தங்கணும்” என்று அழைத்தபோது, அவர் சிரித்தபடி, “நான் வந்தால், மூன்று மாதம் தங்குவேன். சம்மதமா?” எனக் கேட்டார். “நல்லா தாராளமா வந்து எவ்வளவு நாள் வேணுமோ இருங்க” என்றேன். அதன்படி ‘93இல் அவர் வந்து தங்கியிருந்தார். 

கிட்டத்தட்ட 40 வருடங்கள் கழித்து, கும்பகோணத்தை, அங்கிருந்த அவரது உறவினர்களை, நண்பர்களை, ஊரை, தெருக்களை, கோவில்களை எனச் சுற்றிப் பார்த்து வந்தபடி இருந்தார். சில சமயம் நானும் அவருடன்கூடச் சென்றுள்ளேன். 

இ.பா.வுடனான உரையாடல்கள் எப்போதும் ஒரே நேர்க்கோட்டில் செல்லாது; அது பல தளங்களில் விரிந்து செல்லும் அனுபவம். இலக்கியம், சமூகம், அரசியல், லெளகீக வாழ்க்கையெனச் சென்ற அந்த உரையாடல்கள் என்னை மெதுவாகச் செழுமைப்படுத்தின. அவர் பேச்சு சில சமயம் திக்கி வரும். ஒரு வரியின் மீது இன்னொரு வரி படிந்தபடியே செல்லும். கவனத்துடன் அதைக் கேட்க வேண்டும். ஆனால், அதற்குள் ஓடும் சிந்தனை ஓட்டம் தீவிரமானது.

1995-இல் நான் சென்னைக்கே வந்து குடியேறிய பின்பு, அவரை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.  1999-இல் ‘ராமானுஜர்’ நாடகத்துக்காக அவர் சரஸ்வதி சம்மான் விருது பெற்றபோது, விஜய் தொலைக்காட்சியில் பணியாற்றிய நான், அதைப் பற்றிய ஒரு சிறிய செய்தி ஆவணத்தைத் தயாரித்தேன். அது அவருக்கு மகிழ்ச்சி அளித்தது.

2000-இல் சாகித்ய அகாடமி நிறுவனத்துக்காக அவரைப் பற்றிய ஆவணப்படம் எடுக்க நினைத்தபோது, “முதலில் என்ன எடுக்கப் போகிறீர்கள்?” என்று கேட்டார். அவரது நாடகங்களை மையமாக வைத்துத் தொடங்கலாம் என்றேன். அதற்குப் பின்னால் ஒரு காரணம் இருந்தது. அவரது நாடகங்களில் நடுத்தர வர்க்கத்தின் உள்ளார்ந்த மோதல்கள், அறிவுத் தர்க்கங்கள், அதனால் உருவாகும் மன அதிர்வுகள் மிகத் தெளிவாக வெளிப்படும். தொன்மம், வரலாறு, புராணம் போன்றவற்றை எடுத்தாலும், அவற்றை மீள்வாசித்து புதுமைப்பித்தன்,  எம்.வி.வி போன்றோர் வழியில் இன்றைய மனிதனின் சிக்கல்களுடன் இணைத்துப் பேசுவார். உரையாடல்களிலேயே பாத்திரங்களையும் கதையையும் நகர்த்தும் அவரது பாணி, தமிழ் மேடை நாடகத்திற்கு ஒரு புதிய திசையைக் காட்டியது. இருத்தலியல் சிந்தனைகளும், அறிவார்ந்த அங்கதமும், வாழ்வின் அர்த்தமின்மையும் அவரது நாடகப் பிரதிகளுக்குள் வெளிப்பட்டன. ஐரோப்பியப் பரிசோதனை நாடகம் மற்றும் இயக்கங்கள் அவரைப் பாதித்திருந்தாலும், தமது பிரதிகளை அவர் இந்தியக் கலாச்சாரம் மற்றும் கலைநெறிகள் சார்ந்த விழிப்புணர்வுடனேயே கொண்டுவந்தார். 

‘இந்திரா பார்த்தசாரதி எனும் நவீன நாடகக் கலைஞன்’ என்ற அந்த ஆவணப்படத்தில், காட்சிகளைவிட, உரையாடல்களுக்கே நான் முக்கியத்துவம் கொடுத்தேன். அவர் நாடகப் பாத்திரங்கள் பேசும் விதத்தையே, பேட்டிகளிலும் அதையே வேறுவிதமாய்ப் பிரதிபலிக்கச் செய்ய முயன்றேன்.

அவருடைய படைப்புகளில்  மட்டுமன்றி, அவர் பேச்சிலும் நகைச்சுவை இழையோடும். க.நா.சு சாகித்ய அகாடமி பரிசு பெறச் செல்லும்போது, இவர்தான் கூட துணைக்குச் சென்றாராம். குச்சி ஊன்றி நடந்த க. நா. சு. சொன்னாராம்: “பரவாயில்லைப்பா… உனக்கெல்லாம் குச்சி ஊணி நடக்கறதுக்கு மின்னயே குடுத்துட்டா…”

என்னைவிட முப்பத்து மூன்று வயது மூத்தவருடன் இன்றைக்கும் தொடரும் இந்த நட்பின் சில தருணங்களை, இரண்டு வாட்ஸ்அப் உரையாடல்களோடு முடிக்க விரும்புகிறேன்.

ரவி,

கனடாவிலா இருக்கிறீர்கள் இப்போது?

ஏற்கெனவே நாம் நம் நாட்டுக்குளேயே வெகுதூரம்.

இங்கு புதன் கிழமை இரவு ஏழரை ஆகிறது.

‘இயலுக்கு’க்கு வாழ்த்துக்கள். 

உயரிய, உரிய விருதும்.

 சரி.
“பாதம் பணிகிறேன் ஆசீர்வாதம் செய்யுங்கள்” என்று அங்கிருந்து கேட்கிறீர்கள்; செய்யலாம்தான். ஆனால், அக்கரைச் சீமையிலிருந்து நீங்கள் பணிந்தால், நான் திருவிக்கிரமாவதாரம் அல்லவா எடுக்க வேண்டும்!

இ. பா.

1.10.’25 இரவு 7 : 47

***

வணக்கம்,ரவி.

நலம் குறித்து உங்களுக்கு என்ன பதில் அளிக்கவெனத்

தெரியவில்லை.

‘வேதநூல் பிராயம் தன்னில் 

பாதியும் உறங்கிப் போகும் நின்றதில் பதினையாண்டு

பேதை பாலகனாகும் பசி பிணி மூப்புத்துன்பம் ஆதலால் 

பிறவி வேண்டேன் அரங்கமா நகருளானே’

-தொண்டரடிப்பொடி ஆழ்வார்.

சரி. 

நீங்கள் பிரார்த்தித்தால் அவன் அருளவும் வேண்டுமல்லவா…

வேறென்ன சொல்ல. ஆசிகள்.

இ. பா.

1. 11. 2024, வெள்ளி, பகல் 11 : 04.

இ. பா. சார், ஏழு ஆழ்வார்களால் மங்களாசாஸனம் செய்யப்பட்ட திருக்கோவில் வாழும் அந்த உத்தான சயன பெருமாள், அவன் சந்நிதியிலேயே வாழ்ந்த உங்களுக்கு நீங்கள் விரும்புவதை நிச்சயம் அருள்வான், சார்!


ரவிசுப்ரமணியன்

ரவிசுப்ரமணியன் நவீன தமிழ் இலக்கிய உலகில் கவிதை, உரைநடை மற்றும் ஆவணப்படம் என பல துறைகளில் தடங்கள் பதித்து இயங்கி வரும் முக்கியமான ஆளுமை ஆவார். இதுவரை அவர் பதினைந்து நூல்களை வெளியிட்டுள்ளார். அவற்றில் ஏழு கவிதைத் தொகுப்புகள், ஐந்து கட்டுரைத் தொகுப்புகள், மூன்று தொகுப்பு நூல்கள், ஒரு ஆங்கில நூல் மற்றும் ஒரு தொகுப்பாசிரியர் நூலும் அதில் அடங்கும்.

தமிழ் இலக்கிய உலகின் முக்கிய ஆளுமைகளை மையமாகக் கொண்டு பல ஆவணப்படங்களை எழுதி இயக்கியுள்ளார். மேலும், மனவளக் குறைபாடு கொண்ட குழந்தைகளை மையமாகக் கொண்ட “தாமரை” என்ற குறும்படத்தையும் இயக்கியுள்ளார்.

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கௌரவ இலக்கிய ஆளுமையாகப் பணியாற்றியுள்ளார்.  சரஸ்வதி சம்மான், சாகித்ய அகாடமி, தேசிய திரைப்பட விருதுகள் உள்ளிட்ட பல முக்கிய விருது தேர்வுக்குழுக்களில் உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.

கலை இலக்கியத்திற்கான அவரது பங்களிப்புகளைப் பாராட்டி, மத்திய மற்றும் மாநில அரசுகள் மட்டுமின்றி, சர்வதேச அளவிலும் பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.


Discover more from சொல்வனம் | இதழ் 375 | 27 செப் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.