1967 அக்டோபரில் நான் இந்திய உலக விவகார சபையின் (Indian Council of World Affairs) இந்திய சர்வதேச ஆய்வுகள் பள்ளியின் (Indian School of International Studies) மாணவியாக டெல்லி வந்தேன் முனைவர் பட்டக் கல்விக்காக. (1970ல் இந்தப் பள்ளி ஜவஹர்லால் நேரு பலகலக்கழகத்துடன் இணைந்துவிட்டது). பாரகம்பா தெருவில் இந்திய உலக விவகார சபையின் பிரதான கட்டடத்தின் பின்னால் இருந்த ஸப்ரு ஹவுஸ்தான் எங்கள் விடுதி. 1967இல் சென்னையில் தியாகராயா கல்லூரியில் ஆங்கிலத் துறையில் பயிற்றாசிரியராக இருந்தபோது எழுதி பல பத்திரிகைகள் திருப்பி அனுப்பிய கதைகள் சில பெட்டியில் துணிகளுக்கு அடியே இருந்தன. டெல்லியிலிருந்து கணையாழி என்று ஒரு பத்திரிகை வருவதாகவும் அதன் ஆசிரியர் கஸ்தூரி ரங்கன் என்றும் கேள்விப்பட்டிருந்தேன். அவருக்கு “சிறகுகள் முறியும்” கதையை அனுப்பி கணையாழி அதை வெளியிட்டது எல்லாம் பலரும் அறிந்தது. மற்றக் கதைகளையும் அவரிடம் தரச் சொன்னார் கஸ்தூரி ரங்கன். ”சிறகுகள் முறியும்” கதையையும் மற்றக் கதைகளையும் படித்தது இந்திரா பார்த்தசாரதி. அதன்பின் பலமுறை ஸப்ரு ஹவுஸ் வந்து என்னைப் பார்த்து என்னை மதித்து இலக்கியம் பேசுவதுண்டு. தேசிய நாடகப் பள்ளி எதிரேயே இருந்ததால் அவருடைய சில நாடகங்கள் ஹிந்தியில் போடப்பட்டபோது நாடக ஒத்திகை அங்கு நடக்கும். அதைப் பார்க்க வரும்போது என்னையும் கூட்டிச்செல்வார்.
1970 இறுதியில் நான் கள ஆய்வுக்காக அமெரிக்கா போனபோது “இருட்டின் அழைப்பு” என்ற தலைப்பில் நான் எழுதிய கதையை “தனிமை எனும் இருட்டு” என்ற தலைப்பில் போட விரும்புவதாக இ.பா. எனக்கு எழுதினார். வழக்கம்போல் நான் ஒரே சண்டை போட்டேன்! இப்போதும் அப்போது படித்த என் கதைகளை அவர் மறக்கவில்லை. சமீபத்தில் அவரைச் சென்று பார்த்தபின் எனக்கு ”I loved meeting you. You are still in my memory lane as a doctorate student at JNU and a student of Prof. Ramani [M S Venkataramani.] And as one who wrote ‘அம்மா ஒரு கொலை செய்தாள்’ and ‘அறைக்குள் இருந்தவன்’” என்று சேதி அனுப்பினார். எனக்கு அது பெரிய விருது பெற்றதுபோல் இருந்தது.
நண்பர்களை அவருக்கே உரிய விதத்தில் நினைவுக்கூர்வது இ.பாவின் சிறப்பு. நவீன விருட்சம் இதழில் நகுலனைப் பற்றி அவர் எழுதிய கட்டுரை நினைவுக்கு வருகிறது, அது ஓர் இலக்கிய வரலாறாகவும் அவர் எழுத்தாளராவதற்கு முற்பட்ட காலமாகவும் இருப்பதால் இங்கே தருகிறேன். இப்போதைய இ.பாவுக்கும் அப்போதைய இ.பாவுக்கும் எந்த வித்தியாசமுமில்லை. 95 வயதில் அவர் மனம் இளமையாகவே இருக்கிறது.

நகுலன்
என் அறை நண்பர்
(இந்திரா பார்த்தசாரதி)
எனக்கு முதலில் அறிமுகனாவர் டி.கே. துரைசாமிதான், நகுலன் இல்லை. 1949ல் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் அவரும் நானும் ஹாஸ்டலில் ஒரே அறையில் ஒரு வருஷம் இருந்தோம்.
அப்பொழுது அவர் நகுலன் ஆகவில்லை.. நானும் இந்திரா பார்த்தசாரதி ஆகவில்லை
அவர் எதோ எழுதிக்கொண்டே இருப்பார். என்ன எழுதுகிறார் என்று எனக்குத் தெரியாது.
நான் என்னுடன் கொண்டு வந்திருந்த புத்தகங்களை என் மேஜையில் வைத்திருந்தேன்.
நான்கு நாட்கள் கழித்து அவர் என்னை அவர் ‘உங்கள் புத்தகங்களைப் பார்க்கலாமா?’ என்று கேட்டார்.
‘தாராளமாய்ப் பாருங்கள்’ என்றேன்.
‘தமிழ் எம்.ஏ படிக்க வந்திருக்கீங்க, ஆல்டஸ் ஹக்ஸ்லி, ஆஸ்கார் வொய்ல்ட் னு இங்கலீஷ் புஸ்தகங்கள்ளாம் வச்சிருக்கீங்களே…’ என்று கூறிவிட்டு சிரித்தார்.
நான் பதில் ஒன்றும் சொல்லவில்லை.
‘இவர்கள்ளாம் உங்களுக்குப் பிடிச்ச ஆதர்களா?’
‘ஆமாம்’
அவர் மறுபடியும் சிரித்தார்.
அவர் தம் நாற்காலியில் போய் உட்கார்ந்தார்.
‘உங்களுக்கு யாரெல்லாம் பிடிக்கும்? என்று கேட்டேன்.
அதற்கும் பதில் சிரிப்புதான்.
என்னை நையாண்டி செய்கிறாரோ என்று தோன்றிற்று.
‘நீங்களும் தமிழ் எம்.ஏ படிக்கத்தான் வந்திருக்கீங்க, டி.எஸ்.எலியட் கவிதைகள் படிக்கறீங்களே,சரியா?’ என்று கேட்டேன்.
அவர் மறுபடியும் சிரித்தார்.
‘எனக்குத் தமிழில் நவீன இலக்கியங்களும் பிடிக்கும். நீங்கள் அதைப் பற்றி ஏன் ஒண்ணும் கேட்கலே?’ என்றேன் நான்.
‘’காஞ்சனை’ வைத்திருக்கிறீர்கள், பார்த்தேன்…’ என்று கூறிவிட்டு மறுபடியும் சிரித்தார்.
‘சேனாவரையம்’* படிக்க வந்துட்டு புதுமைப்பித்தன் படிக்கலாமா’ என்று நீங்க ஏன் கேட்கலே?’ என்றேன் நான்.
சிரித்தார்.
‘க.நா.சுப்பரமணியன் படிதிருக்கீங்களா?’ என்று சிறிது நேர மௌனத்துக்குப் பிறகு கேட்டார்.
‘’பொய்த்தேவு’ படிச்சிருக்கேன். புதுமைப்பித்தன் அளவுக்கு எனக்கு அவ்வளவா பிடிக்கலே.’
‘ஏன்?’ என்று கேட்டுவிட்டுச் சிரித்தார்.
‘ஏன் பிடிச்சுது, ஏன் பிடிக்கலே என்று ஆராயும் அளவுக்கு எனக்கு விமர்சனம் செய்யத் தெரியாது’ என்றேன்.
‘க.நா.சுவே பெரிய விமர்சகர். அவரையே கேளுங்க. அவர் இங்கேதான் யுனிவெர்ஸிட்டி தாண்டி ஒரு இடத்திலே புஸ்தகக்கடை வச்சிருக்கார், தெரியுமா??
‘அப்படியா, தெரியாது. நீங்க போயிருக்கீங்களா?’
‘தினம் சாயந்திரம் எனக்கு அங்கேதான் ஜாகை’ என்று கூறிவிட்டுச் சிரித்தார்.
‘இன்னி சாயந்திரம் நான் உங்களோட வரலாமா?’
அவர் சிறிது நேரம் மௌனமாக இருந்தார். பிறகு ‘சரி, வாங்க’ என்றார்.
அன்று வகுப்புக்கள் முடிந்ததும் க.நா.சுவின் புத்தகக் கடைக்குச் சென்றோம்.
‘என்னுடன் படிக்கிறார், பார்த்தசாரதி… என் அறை நண்பர்’ என்று என்னை க.நா.சுவுக்கு அறிமுகப் படுத்தினார் துரைசாமி.
‘உங்களுக்கு எந்த ஊரு?’ என்று கேட்டார் க.நா.சு.
‘கும்பகோணம்.’
புன்னகை. சிறிது நேரம் மௌனம்.
‘எனக்கு சுவாமிமலை’ என்றார் க.நா.சு.
‘ஜான் ஓ லண்டன் வீக்லி’ வந்துடுத்தா? என்று கேட்டார் துரைசாமி.
‘இன்னும் வரலே’
‘அது என்ன பத்திரிகை?’ என்று கேட்டேன்.
‘இலக்கிய விசாரம். நானும் துரைசாமியுந்தான் படிக்கிறோம். பத்து இதழ் வரவழைக்கிறேன், யாரும் வாங்கறதா தெரியலே’ என்று கூறிவிட்டுப் புன்னகை செய்தார் க.நா.சு.
துரைசாமி சிரித்தார். ‘இவர் ஆல்டஸ் ஹக்ஸ்லி ரசிகர் என்று க.நா.சுவிடம் சொல்லிவிட்டுச் சிரித்தார் துரைசாமி.
‘ஆல்டஸ் ஹக்ஸ்லி உங்களுக்குப் பிடிக்காதா?’ என்று கேட்டேன்.
‘அவருக்கும் பிடிக்குமோ பிடிக்காதோ தெரியாது… போன மாசம். ‘ஏப் அன்ட் எஸ்ஸென்ஸ்’ வாங்கிண்டு போனார்’ என்றார் க.நா.சு.
‘இங்கே ஸீரியஸ் லிட்ரச்சர் புஸ்தகங்களுக்கு நல்ல டிமாண்ட் இருக்கா?’ என்று கேட்டேன்.
‘இருக்கோ இல்லியோ நான் கடை வச்சிருக்கேன். என்னாலே படிக்க முடியறது. துரைசாமியும் படிக்கிறார்.’ என்று கூறிவிட்டுச் சிரித்தார் க.நா.சு
‘நான் கடையைப் பார்க்கலாமா?’ என்றேன் நான்.
‘பாருங்களேன். நீங்க வாங்கணும்னு கட்டாயப் படுத்தலே’ என்று புன்னகையுடன் சொன்னார் க.நா.சு.
பெரும்பாலும் ஆங்கிலப் புத்தகங்கள். அல்லது ஐரோப்பிய மொழிகளிருந்து தமிழில் மொழிபெயர்க்கப் பட்ட நாவல்கள். தமிழ் நூல்களில் புதுமைப் பித்தன், ஷண்முகசுந்தரம், தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட வங்காள மொழி நாவல்கள், எலியட், எஸ்ரா பௌன்ட், யீட்ஸ், ஸ்டீபன் ஸ்பென்டர், ஆடன் ஆகியோருடைய கவிதைப் புத்தகங்கள்.
அவர் கடை வியாபார ரீதியாக வெற்றிப் பெறவில்லை என்பதைப் பற்றி நான் ஆச்சர்யப்படவில்லை.
நான் ‘Eyelessa in Gaza’ என்ற ஹக்ஸ்லி புத்தகத்தை எடுத்துக் கொண்டு வந்து, ’நாளைக்குப் பணம் தரலாமா?’ என்றேன்.
‘எப்பொ வரேளோ அப்பொ கொடுங்கோ, நாளைக்குன்னு அவசியமில்லே’ என்றார் க.நா.சு.
துரைசாமி சிரித்தார்.
அவர் இப்படிச் சிரிப்பதற்கும் அர்த்தம் இருக்கும் போல் எனக்குத் தோன்றிற்று.
ஹாஸ்டலுக்குத் திரும்பி எங்கள் அறைக்குப் போனவுடன் அவரை நான் கேட்டேன்: ‘ஹக்ஸ்லி உங்களுக்கு அவ்வளவாகப் பிடிக்காதோ?’
‘Amazing intellect…’ என்று சொல்லிவிட்டு சில விநாடிகளுக்குப் பிறகு சொன்னார்: ‘Art Novel’ னு சொல்ல முடியாது.
‘புரியலே’ என்றேன்.
‘புரியாட்டா பரவாயில்லே, அதான் ‘Art Novel’ என்று சொல்லிவிட்டுச் சிரித்தார்.
அவருக்கு நண்பர்கள் என்று யாருமில்லை. அது அவர் அது பற்றிக் கவலைப் பட்டதாகவும் தெரியவில்லை. தர்மவிநாயகம் என்ற அவர் ஊர் திருவனந்தபுரத்துக்காரர்; தமிழர். ‘எந்தா பட்டரே’ என்று பாதி கேலியாகவும் பாதி நட்புரிமைக் குரலுடன் கேட்டுக் கொண்டு வருவார். அவர் எக்கனாமிக்ஸ் ஹானர்ஸ் படித்துக் கொண்டிருந்தார்.
அவர்தான் என்னிடம் பேசிக்கொண்டிருந்ததுதான் அதிகம். துரைசாமியும் அதைப் பற்றிக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. அவர் என்னுடன் பேசும்பொழுது அவர் ஏதோ படித்துக் கொண்டும் அல்லது எழுதிக் கொண்டுமிருப்பார்.
தர்மவிநாயகந்தான் அவரைப் பற்றி என்னிடம் சொன்னார்: ‘துரைசாமி அசாத்தியப் படிப்பாளி. பி.ஏக்குப் பிறகு அஞ்சு வருஷம் வேலை செஞ்சுட்டுத் தமிழ் எம்.ஏ படிக்க வந்திருக்கார். என்னாலே புரிஞ்சுக்க முடியலே.’
ஒரு நாள் அவரைக் கேட்டேன்: ’என்ன எழுதிண்டேயிருக்கீங்க?’
‘ஜேர்னல். நான் இப்பொ எழுதினதைச் சொல்லட்டுமா?’ Stephen… whose mother is beastly dead’ என்று சொல்லிவிட்டுச் சிரித்தார்.
‘புரியலே.’
’புரியாது. அதான் art novel. ஜேம்ஸ் ஜாய்ஸ் படிச்சுப் புரிஞ்சுண்டா புரியும். ’யுலிசிஸ்’’ என்று தனக்குத் தானே பேசிக் கொள்வது போல் சொன்னார்.
ஜேம்ஸ் ஜாய்ஸ் பற்றி நான் அப்பொழுது கேள்விப் பட்டதில்லை.
‘உங்களிடம் அந்தப் புஸ்தகம் இருக்கா?’ என்றேன்.
’இங்கேயில்லே, ஊர்லே இருக்கு. ஞாபகம் வந்தது எழுதினேன். நீங்க ஹக்ஸ்லி, ஆஸ்கார் வொயில்ட் படிங்கோ. நீங்கதான் கம்யுனிஸ்ட் ஆச்சே, ’தாஸ் காபிடல்’ திரும்பிப் படியுங்கோ. ஜாய்ஸ்லாம் வேண்டாம்..! என்று கூறிவிட்டுச் சிரித்தார்..
அவர் இவ்வளவுச் சற்று ஆக்ரோஷத்துடன் பேசி நான் கேட்டதில்லை. ஊரிலிருந்து அவருக்குச் சற்றுப் பிடிக்காத தகவல் வந்திருக்கக் கூடும் என்று தோன்றிற்று.
நான் பதில் ஒன்றும் சொல்லவில்லை.
பேசாமலிருந்து விட்டேன்.
நாங்கள் ஒரே அறையிலிருந்தாலும் வெவ்வேறு சமயங்களில்தான் குளிக்கப் போவோம், சாப்பிடப் போவோம், வகுப்புக்குப் போவோம். அவர் தனியாகப் போவதைதான் விரும்பினார் என்று எனக்குத் தோன்றிற்று.
அவர் ஒரு நாள் திடீரென்று என்னைக் கேட்டார்: ’ப்ரௌஸ்ட் படிச்சிருக்கீங்களா?”
’’Remembrance of things past’ கேள்விப் பட்டிருக்கேன், படிச்சதில்லே’
‘எது சொர்க்கம் தெரியுமா? இழந்த சொர்க்கந்தான். அதான் அவர் பிலாஸஃபி’ என்று கூறிவிட்டுச் சிரித்தார்.
‘உங்களுக்கு இங்கலீஷ் கவிஞர்லே யாரைப் பிடிக்கும்?’ என்றார் ஒரு நாள்.
‘ஷெல்லி’ என்றேன்.
‘Wings in the void’ என்று கூறிவிட்டுச் சிரித்தார்.
‘தெரியும். மாத்யூ ஆர்னால்ட் ஷெல்லியைப் பத்திச் சொல்லியிருக்கான். “Ineffectual angel with wings in the void.” மாத்யூ ஆர்னால்டே கவிதை எழுதப் பாத்தான். படிக்கிறவா யாருமில்லே. ‘கிரிடிக்கா’ மாறிட்டான். தோத்துப் போன படைப்பாளிகள்தான் விமர்சகர்கள் ஆயிடறாங்க’ என்றேன் நான்.
‘க.நா.சு’கிட்டே சொல்லுங்கோ’ என்று கூறிவிட்டுச் சிரித்தார்.
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இருந்த அந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவரோடு எனக்குத் தொடர்பு எதுவும் கிடையாது. எம்.ஏ முதல் வகுப்பில் தேறியிருந்தும் எனக்கு வேலை கிடைக்கவில்லை. பம்பாய் போய் அங்கே ‘Free Press Joumal’ என்ற ஆங்கிலத் தினசரியில் உதவி ஆசிரியராகச் சேர்வதாக இருந்தேன். அப்பொழுது திருச்சியிலிருந்து என் அண்ணனிடமிருந்து ஒரு தந்தி வந்தது. திருச்சி தேசியக் கல்லூரியில் தமிழ் ஆசிரியராகச் சேர விருப்பமிருந்தால் உடனே வரலாமென்று.
பத்திரிகைத் தொழிலா அல்லது ஆசிரியப் பணியா என்ற ‘இருத்தலியக் குழப்பத்து’க்குப் பிறகு திருச்சி போய்விட்டேன் 1952மாண்டு ஜனவரி மாதம்.
அங்குப் போனபிறகுதான் தெரிந்தது அங்குத் தமிழாசிரியராகப் பணி ஆற்றிய டி.கே.துரைசுவாமி ராஜிநாமா செய்துவிட்டு திருவனந்தபுரம் போய்விட்டாரென்று! அங்கு ஒரு கல்லூரியில் ஆங்கிலத் துறையில் பணியாற்ற.
பிறகு பல ஆண்டுகளுக்குப் பிறகு, நான் தில்லியில் இருந்தபோது, ‘கணையாழி’ 1966’ல் நடத்திய சிறுகதைப் போட்டிக்கு ‘நகுலன்’ என்பவருடைய ஒரு சிறுகதையும் இருந்தது.
சென்னையில் ‘கணையாழி’யின் பொறுப்பாசிரியராகவிருந்த அசோகமித்திரன் முதல் பரிசீலனை செய்து பத்து கதைகளை அனுப்பியிருந்தார்..
பேராசிரியர் கே.சுவாமிநாதனும் நானும் நடுவர்கள்.
‘நகுலன்’ கதை முதல் பரிசு பெறும் கதையாகத் தேர்வாயிற்று..
அவர் அனுப்பியிருந்த முகவரியினின்று ‘நகுலன்தான் அண்ணாமலைப் பல்கலைக் கழக அறை நண்பரென்று தெரிந்தது…
அப்பொழுது நானும் ‘இந்திரா பார்த்தசாரதி’ ஆகிவிட்டேன்.
நகுலனுக்கு நான் யாரென்று அறிமுகப்படுத்திக் கொண்டு கடிதம் எழுதினேன்.
அவர் பதிலுக்குக் கடிதமும் ஆங்கிலத்தில் பிரசுராமாகியிருந்த அவர் எழுதிய கவிதைப் புத்தகமும் அனுப்பினார். அவர் கடிதத்தில், குறிப்பிட்டிருந்தார் ‘ஷெல்லி ரசிகர் கவிதை எழுதுவாரென்று நினைத்தேன், கதை எழுதுகிறீர்கள்’ என்று. அவர் நினைவாற்றல் எனக்கு ஆச்சர்யத்தைத் தந்தது.
அவருடன் இருந்த ஒராண்டில் எனக்குப் பல புது ஆங்கில, ஐரோப்பிய இலக்கிய ஆசிரியர்கள் அறிமுகமாயிற்று. அதற்கு நான் அவருக்கு நன்றி செலுத்தியாக வேண்டும்.
***
சேனாவரையம்: சேனாவரையம் என்பது தொல்காப்பியத்தின் ‘சொல்லதிகாரத்திற்கு’ சேனாவரையர் எழுதிய சிறந்த உரையாகும்.

அம்பை
அம்பை பெண்ணியம் சார்ந்து எழுதிய முதன்மைப் படைப்பாளிகளுள் ஒருவர். தமிழகத்தின் எல்லை கடந்த நிலப்பகுதிகளையும் களனாகக் கொண்ட இவரது கதைகளில் பெண்களின் உறவுச் சிக்கல்கள், பிரச்சனைகள், குழப்பங்கள், கோபதாபங்கள், சமரசங்கள் யாவும் கிண்டலான தொனியில் கலாபூர்வமாக வெளிப்படுகின்றன. ஆங்கிலத்தில் C.S.Laksmi என்னும் தன் இயற்பெயரில் ஆய்வுக்கட்டுரைகளை எழுதிவருகிறார்.
இவர் பெண்ணியக் களச்செயல்பாட்டாளரும் சமூகவியல் ஆய்வாளரும்கூட. ”SPARROW” (Sound and Picture Archives for Research on Women) என்ற அமைப்பை நிறுவி அதன் இயக்குநராக செயல்பட்டு வருகிறார்.
வரலாற்றில் எம்.ஏ பட்டமும் அமெரிக்கன் ஸ்டடிஸில் முனைவர் பட்டமும் பெற்றவர். 2008-ஆம் ஆண்டில் கனடா இலக்கியத் தோட்டத்தின் இயல் விருதையும், 2021-ஆம் ஆண்டு, சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை சிறுகதைத் தொகுப்புக்காக சாகித்ய அகாடெமி விருதையும் பெற்றார்.
Discover more from சொல்வனம் | இதழ் 371 | 26 ஜூலை 2026
Subscribe to get the latest posts sent to your email.

