ராமச்சந்திரம்

அநுத்தமாவின் ‘கேட்ட வரம்’ -வாசிப்பனுபவம்

கிராமத்தில் என் பால்ய நாட்களில் ஆரம்பப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது எனக்கு நண்பன் ஒருவன் இருந்தான். அவன் பெயரும் வெங்கடேஷ் தான். மற்ற நண்பர்கள் அவனுக்கு செல்லமாக ‘கெண்டை’ என்று பெயர் வைத்திருந்தார்கள். ஏன் ஒரு மீன் பெயரை அவனுக்கு வைத்தார்கள் என்று இப்போது சரியாக ஞாபகம் வரவில்லை. வெங்கடேஷின் ஊர் மேலப்பட்டி. நான் ஓடைப்பட்டி. இரண்டும் பக்கத்து பக்கத்து ஊர்தான். வெங்கடேஷிற்கு ஐந்து அக்காக்கள். ஐந்து பெண் குழந்தைகளுக்குப் பிறகு ஆறாவதாக அவன்/ஆண் குழந்தை பிறந்ததால் அவன் வீட்டில் அனைவருக்கும் அவன் மேல் மிகப் பிரியம். அந்த ஐந்து அக்காக்களில் ஒருவர் புத்தகம் படிப்பவர் என்று நினைக்கிறேன். மேலப்பட்டியில் ஒரு வீட்டின் முதல் மாடியில், நூல் சுற்றும் பெண்களுக்கான ஒரு கோ-ஆபரேடிவ் சொசைட்டி செயல்பட்டுக்கொண்டிருந்தது. வெங்கடேஷைத் தேடிக்கொண்டு போய், பலமுறை அக்காவுடன் சொசைட்டியில் இருக்கும் அவனை உடன் விளையாட அழைத்து வந்திருக்கிறேன். கிராமத்தில் புத்தகம் படிக்கும் அக்காக்கள் பல பேர் இன்னும் நினைவடுக்கில் இருக்கிறார்கள். பொட்டுத் தாத்தாவும், திருவேங்கடம் மாமாவும், வெங்கடாஜலபதி பெரியப்பாவும். கமலா பெரியம்மாவும், பாவாவின் நண்பர் ஜெயசீலனும், வசந்தா அத்தையும் புத்தகம் படிப்பவர்கள். இவர்கள் யாருடைய கையிலோ இருந்த புத்தகத்தில்தான் ‘அநுத்தமா’ என்ற பெயரையும், ‘கேட்ட வரம்’ என்ற கதைத் தலைப்பையும் பார்த்த நினைவு. அநேகமாக வசந்தா அத்தை வீட்டிலாகத்தான் இருக்க வேண்டும். வசந்தா அத்தை வீட்டில்தான் வார/மாத இதழ்கள் தொடர்ச்சியாக வாங்குவார்கள். தொடர்கதைகளை (படக் கதைகளையும் கூட) வாரவாரம் பிரித்தெடுத்து வைத்து, தொடர் முடிந்ததும் வீட்டில் பைண்ட் செய்து வைத்து விடுவார்கள். இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது, வசந்தா அத்தை வீட்டின் முதல் மாடி ஸ்லாப்பில் ஒரு பெரிய அட்டைப்பெட்டி நிறைய பைண்ட் செய்யப்பட்ட புத்தகங்கள் இருந்தன. என் பள்ளி நாட்களில் உண்டாகியிருந்த வாசிப்பின் பசிக்கு சுவையான அன்னமிட்டவை அந்தப் புத்தகங்கள்தான்.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டம் கேட்டவரம்பாளையம் கிராமத்தில் வருடாந்தர ஸ்ரீராமநவமி மஹோத்சவம் துவங்குகிறது. கேட்டவரம்பாளையம், சுற்றிலும் மலைகளும், குளங்களும்/ஊரணிகளும், வரலாற்றுச் சிறப்பு மிக்க வழிபாட்டுத் தலங்களும் கொண்ட பசுமையான இயற்கை எழில் சூழ்ந்த கிராமம். அங்கு வருடந்தோறும் நடைபெறும் ராம நவமி கொண்டாட்டங்களும், பலவித பஜனை பத்ததிகளும், சீதா கல்யாணமும், ராமர் பட்டாபிஷேகமும், ஆஞ்சநேய உற்சவமும் மிகப் பெயர் பெற்றவை. மலைக் கோவிலும், ஈஸ்வரன் கோவிலும், பெருமாள் கோவிலும், விசுவநாதர் கோவிலும், மாரியம்மன் கோவிலும் அங்குண்டு. ராமர் பஜனை மந்திர மடத்தில்தான் அந்த பத்து நாட்களிலும் பொதுப் பந்தி/போஜனம். பெரும்பாலும் யார் வீட்டிலும் தனி சமையல் கிடையாது. விமர்சையாக நடைபெறும் அந்தப் பத்து நாட்களின் திருவிழா மனநிலையில் அக்கோவில் தெருவே நிறைந்து தளும்பும். அவ்வூரை பூர்வீகமாகக் கொண்ட, பல்வேறு வெளியூர்கள், வெளிநாடுகளுக்கு தங்கள் பணிகளுக்காக இடம்பெயர்ந்துவிட்ட கேட்டவரம்பாளையம் வாசிகள் அனைவரும் அச்சமயத்தில் கிராமத்திற்கு வந்துவிடுவார்கள். அவர்களோடு சேர்ந்து அவர்களின் நண்பர்களும், இசை ரசிகர்களும், பஜனாம்ருத விரும்பிகளும், செவ்வியல் கர்நாடக இசைக் கலைஞர்கள் பலரும் ஊரில் வந்து தங்குவதுண்டு. பத்து நாட்கள் முழுவதும் கலந்து கொள்ள முடியாதவர்கள் கடைசி மூன்று நாட்கள் உற்சவத்திற்காவது ஊருக்கு வந்துசேர்ந்து விடுவார்கள். 

நகரத்திலிருந்து வாசு என்கிற வாசுதேவனும், ராஜாமணியும், மல்லிகாவும், மாயாவும், வாசுதேவன் காரில் அவர்கள் சொந்த ஊரான கேட்டவரம்பாளையம் கிராமத்திற்கு ராமநவமி உற்சவத்திற்காக வரும் காட்சியோடுதான் நாவல் துவங்குகிறது. வாசுதேவன் ஹைவேஸ் என்ஜினியர். வெளிநாடு சென்று பயிற்சி பெற்று திரும்பியிருக்கிறான். வாசுதேவனுக்கு பெற்றோர்களில்லை. வாசுதேவனின் மாமா வீடும், மல்லிகாவின் வீடும் கிராமத்தின் அக்ரஹாரத் தெருவில் எதிரெதிர் வீடு. மல்லிகாவிற்கு 24 வயது. திருமணமாகிவிட்டது. மூன்று வயது குழந்தை உண்டு, பெயர் சந்திரிகா. ராஜாமணி, மல்லிகாவின் அண்ணன், எலக்ட்ரிகல் எஞ்சினியர் (கிராமத்தில் பஜனை மடத்தில் விளக்குகள் அமைத்துக் கொடுத்தது அவனும் நண்பர்களும் சேர்ந்துதான்). மாயா-விற்கு 18 வயது, பி.ஏ ஆங்கில இலக்கியம் படித்துக் கொண்டிருக்கிறாள். அப்பா கலெக்டர் ராகவேந்திர ராவ், அம்மா சீதாபாய். மாயாவின் அப்பா வாசுதேவனுக்கு நண்பர். தங்கள் ஊரில் நடக்கும் ராம நவமி உற்சவத்தின் சிறப்பைக் கூறி, வாசுதேவன் அவரை ஊருக்கு அழைக்க (ஊருக்கு சாலைகள் அமைக்கும் பணிக்கு வரைபடம் உருவாக்கி அவரிடம் அத்திட்டத்திற்கு அனுமதி வாங்குவதும் அவன் உத்தேசம்), அவர் தனக்கு வேலைகள் இருப்பதாகவும், மகள் மாயாவை கூட்டிச் செல்லுமாறும், தானும் மனைவியும் பின்னர் வந்து கலந்து கொள்வதாகவும் சொல்லியிருந்தார். 

ராஜாமணியின் அப்பா ராமகிருஷ்ண ஐயர், அம்மா ஜானகி அம்மாள். ராஜாமணிக்கு, மல்லிகா உட்பட ஐந்து தங்கைகள், ஒரு தம்பி. ராஜாமணிக்கு திருமணமாகிவிட்டது. மனைவி லலிதா, குழந்தை பசன்ன வெங்கடரமணன் என்கிற ரமணிக்கு ஐந்து வயதாகிறது. லலிதா இப்போது ராஜாமணியைப் பிரிந்து அவள் அப்பா வீட்டிலிருக்கிறாள். ராஜாமணிக்கும் அவளுக்கும் மனவிலக்கம். கடந்த ஐந்து வருடங்களாக பிரிந்திருக்கிறார்கள். லலிதாவிற்கு தனிக் குடித்தனம் செல்ல விருப்பம். ஆனால் ராஜாமணிக்கு தன் தங்கைகள், பெற்றோர்களை விட்டு தனிக்குடித்தனம் செல்வதற்கு இஷ்டமில்லை. பிரசவத்திற்கு அம்மா வீட்டிற்குச் சென்ற லலிதா, பின் ராஜாமணி வீட்டிற்குத் திரும்பவில்லை. ராஜாமணியும் அவளை அழைக்கச் செல்லவில்லை. ஆனால் இவ்வருட ராமநவமி உற்சவத்திற்கு லலிதா, தன் மகன் மற்றும் அப்பாவுடன் கேட்டவரம்பாளயம் வந்து உறவினர் வீட்டில் தங்கியிருக்கிறாள். மல்லிகாவும், அவள் கணவரும் லலிதாவையும், ராஜாமணியையும் எப்படியாவது சேர்த்து வைத்துவிட வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

வாசுவின் தூரத்து உறவுமுறை அக்கா பெண் ருக்மிணியுடன் வாசுவுக்கு திருமணம் செய்யலாம் என்று பெரியவர்கள் பேசி வைத்திருக்கிறார்கள். ருக்மிணியின் ஊர் கடலாடி. ருக்மிணி, ருக்மிணியின் அம்மா பங்கஜம், அப்பா ரங்கராமானுஜாசாரியார். மூவரும் உற்சவத்திற்கு கேட்டவரம்பாளையம் வந்து வாசுவின் சித்தப்பா வீட்டில் தங்கியிருக்கிறார்கள் (வாசுவின் சித்தி பெயர் ரங்கநாயகி அம்மாள்). ருக்மிணி, சித்தப்பா வீட்டில் தங்கியிருப்பதால், வாசுவும் மாயாவும் உற்சவத்தின் பத்து நாட்கள் வாசுவின் மாமா வீட்டில் தங்குவதாக ஏற்பாடு. மாமா, சித்தப்பா இரண்டு வீடுகளும் பக்கத்து பக்கத்து வீடுகள்தான். வாசுவின் மாமா பெயர் ராமபத்திர ஐயங்கார், மாமி கல்யாணி அம்மாள். கல்யாணி மாமி கிராமத்துப் பெண்களுக்கு கைவினைப் பொருட்கள் செய்வதற்கான பயிற்சி வகுப்புகள் எடுப்பாள். 

விவசாயத்தில் கல்லூரிப் படிப்பு முடித்து, மற்ற இளைஞர்களைப் போல் வெளியூருக்கு வேலை தேடிப் போகாமல், ஊரிலேயே வசித்துக்கொண்டு அப்பாவின் விளைநிலங்களில் விவசாயம் செய்து கொண்டிருக்கும் இளைஞன் கிருஷ்ணாராவ்-ம், ராஜாமணியும், வாசுவும் நெருங்கிய நண்பர்கள் (மாயா, கிருஷ்ணா ராவிற்கு ‘கடுவன் பூனை’ என்று பெயர் வைத்திருக்கிறாள்). கிருஷ்ணா ராவிற்கு கிராமத்தில் ஒரு நூலகம் ஆரம்பிக்க வேண்டும் என்பது நெடுநாள் விருப்பம். கிராமத்தில் வசிக்கும் உபந்யாசகர் வீரராகவையாவின் மகன் மல்லிகார்ஜுனன்-ம் இவர்கள் குழுவோடு அவ்வப்போது ஐக்கியமாவதுண்டு. 

நகரத்தில் வளர்ந்த பெண்ணான 18 வயது மாயாவிற்கு, கேட்டவரம்பாளையத்தின் இயற்கை அழகு மிகப் பிடித்து விடுகிறது. ஆனால் கிராமத்தின் பழக்க வழக்கங்கள் சில அவளுக்கு வியப்பையும், மெல்லிய அசூயையும் அளிக்கின்றன. கிராமத்து மனிதர்கள் ஆச்சர்யப்படுத்துகிறார்கள். வாசுவிற்கு ஊரில் நல்ல மரியாதை. பட்டணத்துப் பெண்ணான மாயாவின் நடை, உடை, பாவனைகள்/நடத்தைகள் கிராம மக்களுக்கு புதிதாக இருக்கின்றன. கேட்டவரம்பாளையம் ஊருக்கு வந்த புதிதில், கிராமத்து மனிதர்கள், பெண்களின் சில கட்டுப்பெட்டித்தனங்கள் மேல் மனதுக்குள் சிறிய கேலியும், எள்ளலும் கொண்டிருக்கிறாள் மாயா. ஆனால் கேட்டவரம்பாளையத்தில் தங்கியிருக்கும் அந்தப் பத்து நாட்கள் அவள் மனப்போக்கையே மாற்றுகின்றன. அவ்வூரின்/கிராமத்தின் பண்பாடுகள்/கலாச்சாரம் மீது ஈர்ப்பு உருவாகிறது. ஆரம்பத்தில் ருக்மிணியின் மேல் அவள் கொண்டிருக்கும் அலட்சிய மனோபாவமும், ருக்மிணி பிற்போக்கானவள், பட்டிக்காட்டுப் பெண் என்ற எண்ணத்திலும் மாறுதல் வருகிறது.

ருக்மிணியின் அப்பா கொஞ்சம் பணத்தாசை பிடித்தவர். வாசுவிற்கு தன் மகளைப் பேசி வைத்திருந்தாலும் இன்னும் பெரிய இடத்தில், செல்வந்தனாக மணமகன் கிடைத்தால் நல்லது என்று முயற்சிக்கிறார். நகரில் வணிகம் செய்யும், சினிமா தயாரிப்பு வேலைகளிலும் ஈடுபாடு கொண்டிருக்கும் செல்வந்தனான இளைஞன் வரதாசாரியை (மாயா அவனுக்கிட்டிருக்கும் பெயர் ‘டம்பாச்சாரி’) ருக்மிணியை பெண் பார்க்கவும், ராமநவமி உற்சவத்தைக் காணவும்  கேட்டவரம்பாளையத்திற்கு அழைத்து வருகிறார் ருக்மிணியின் அப்பா. ருக்மிணியின் அம்மா பங்கஜத்திற்கு இது பிடிக்கவில்லையென்றாலும், கணவனை எதிர்த்து எதுவும் செய்யமுடியாதிருக்கிறாள்.

ராமநவமி உற்சவத்தின் பின்னணியில், அந்த பத்து நாட்களில்  கேட்டவரம்பாளையம் கிராமத்தின் சில குடும்பங்களின்/கதாபாத்திரங்களின் மெல்லிய உறவு/உணர்வு/மனப் போராட்டங்கள் தான் ‘கேட்ட வரம்’ நாவலின் கதை. அந்த பத்து நாள் உற்சவத்தின் முடிவில் மாயாவிற்கு கிருஷ்ணா ராவின் மேல் காதல் உருவாகிறது. ராஜாமணியும், லலிதாவும் மகன் ரமணியால் இணைகிறார்கள்.

‘கேட்ட வரம்’, ஐம்பதுகளின் இறுதியில் கலைமகள் இதழில் தொடராக வந்த நாவல் என்று அறிந்த நினைவு (அல்லது அறுபதுகளின் ஆரம்பத்திலா?). பின்னர் அல்லயன்ஸ் பதிப்பகம் மூலமாக புத்தகமாக வெளிவந்தது. அநுத்தமாவின் சரளமான எழுத்து நடை எனக்குப் பிடித்திருந்தது. நாவலின் வடிவமும் நன்றாக இருந்தது. ஒவ்வொரு அத்தியாயத்தின் இறுதி வாக்கியத்தையும் அடுத்த அத்தியாயத்தின் தொடக்கமாகப் பயன்படுத்தியிருந்தார் அநுத்தமா. நாவலின் சூழலும், கேட்டவரம்பாளையம் கிராமத்தின் திருவிழா உற்சவ மனநிலையும் மனதில் துலக்கமாக உருப்பெற்றது. செவிகளிலும், மனத்திலும் பஜனைப் பாடல் வரிகளும், இசையும் நிறைந்திருந்தன. கிராமத்தின் மார்கழி மாத வைகறை பஜனை நாட்கள் பசுமையாய் நினைவில் மேலெழுந்தன. கல்லூரி நாட்களில் எனக்கு கர்நாடக இசையின் மேல் காதல் கொள்ளக் காரணமாக இருந்த நண்பன் குரு ஞாபகம் வந்தான். தமிழ்நாடு வேளாண் பல்கலையில் நான் தோட்டக்கலை படித்துகொண்டிருந்தபோது, குரு வேளாண் பொறியியல் படித்துக்கொண்டிருந்தான். குருவின் வீடு அப்போது மேட்டூர் டேம் குடியிருப்புப் பகுதியில் இருந்தது. ராதா கல்யாண உற்சவத்திற்கு குரு வீட்டிற்கு இரண்டு நாட்கள் சென்று தங்கியிருந்தேன். குரு, பெற்றோர்களின் அறுபதாம் கல்யாண நிகழ்வையும் அச்சமயம்தான் ஏற்பாடு செய்திருந்தான். மேட்டூர் டேமில் குருவிற்கு அருமையான நண்பர் குழாம் ஒன்றிருந்தது. அங்கிருந்த பஜனை சம்பிரதாய மடத்தில் அந்த இளைஞர்கள் அனைவரும் ரெகுலர் பாடகர்கள். அங்குதான் ராதா கல்யாண உற்சவத்தின் இரண்டாம் நாள் மாலை கச்சேரிக்கு வந்திருந்த மாண்டலின் ஸ்ரீனிவாசை சந்தித்ததும். மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமனையும், கோவை ஆர்.எஸ் புரத்தில் ஒரு வீட்டில் நடந்த ராமநவமிக் கச்சேரிகளில் ஒன்றில்தான் சந்தித்தேன்.

கேட்டவரம்பாளையத்தின் ராமநவமி உற்சவம் இன்னொரு க்ஷேத்திரத்தை நினைவூட்டியது. இரண்டாயிரத்தின் பின் வருடங்களில் மும்பை பன்வெல் அருகே பென் எனும் நகரில் ஒரு கொய்மலர்ப் பண்ணையில் வேலை செய்துகொண்டிருந்த போது, ஒரு வார இறுதி விடுமுறை நாளில் அம்முவையும், இயலையும் கூட்டிக்கொண்டு புனே-விலிருந்து 30 கி.மீ தொலைவில் டேஹு-வில் இருந்த துக்காராம் மஹாராஜின் கோவிலுக்குச் சென்றிருந்தேன். அதற்கு முந்தைய நாளே தோழி கௌசி, டேஹுவிற்குப் போனால் ஆலந்தி-க்கும் சென்றுவர மறக்கவேண்டாம் என்று சொல்லியிருந்தார். ஆலந்தி, பகவத்கீதைக்கு மராத்தியில் உரை எழுதிய (‘ஞானேஸ்வரி’ மராத்தியில் மிகப் பிரபலமான தொன்மை நூல்) ஞானேஸ்வர் மஹாராஜ் தன் 21-ம் வயதில் சமாதியடைந்த இடம். ஒவ்வொரு வருடமும் ஆஷாட ஏகாதசி சமயத்தில் ஞானேஸ்வரின் பாதுகைகள் வைத்த பல்லக்கை ஆலந்தியிலிருந்து பண்டர்புர் தூக்கிச் செல்வார்கள். ஆலந்தி, இந்திராயணி நதிக்கரையில் அமைந்த ஊர். ஊர் முழுதும் பஜனை இசைக் கருவிகள் விற்கும் கடைகள், ஞானேஸ்வரியை தங்கியிருந்து கற்பதற்கான பாடசாலைகள் என ஊர்ச் சூழலே மனதில் இனம் புரியாத உணர்வைத் தோற்றுவித்தது இன்னும் நினைவிருக்கிறது. ஆலந்தி சென்று வந்தது ஒரு இனிய அனுபவம்.        

அநுத்தமாவின் இயற்பெயர் ராஜேஸ்வரி. சென்னையை அடுத்த நெல்லூரில் 1922-ம் வருடம் பிறந்தவர். தெலுங்கில் தொடக்கக் கல்வி பயின்ற அநுத்தமா பின்னர் தமிழைத் தானாகவே கற்றுக் கொண்டார். ஆரம்பப் பள்ளியுடன் நின்றுபோன அவரது படிப்பு, 14 வயதில் திருமணமான பின் கணவர் பத்மநாபன் ஆதரவுடன் தொடர்ந்தது. மெட்ரிக் தேர்வில் பழைய சென்னை மாகாணத்திலேயே முதல் மதிப்பெண் பெற்று வெற்றியடைந்திருக்கிறார். அநுத்தமா தொடக்க கால தமிழ்ப் பெண் எழுத்தாளர்களில் ஒருவர்.  22 நாவல்களும், முந்நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகளும் எழுதியிருக்கிறார். அவரின் ‘மணல்வீடு’ நாவல் 1949-ல் கலைமகள் இதழ் நடத்திய நாவல் போட்டியில் முதல் பரிசு பெற்றிருக்கிறது. அவரின் ‘கேட்ட வரம்’ நாவலை இலக்கிய விமர்சகர், எழுத்தாளர் க.நா.சு, அவருடைய ‘படித்திருக்கிறீர்களா?’ என்னும் இலக்கியப் பரிந்துரைப் பட்டியலில் சேர்த்திருக்கிறார். 

‘கேட்ட வரம்’ (நாவல்) – அநுத்தமா

அல்லயன்ஸ் பதிப்பகம்


Discover more from சொல்வனம் | இதழ் 367 | 24 மே 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.