“ஏய், நீ குள்ளமா இருக்க, மொத பெஞ்சுல வந்து ஒக்காரு.” ஆண்களுக்கேயான பள்ளிகளில் மாத்திரமே அதுவரை படித்துவிட்டு முதன் முறையாக ‘இங்கிலீஷ் மீடியத்தில்’ சேர்ந்து, இருபாலரும் படிக்கும் வகுப்பிற்கு வந்திருக்கும் பதின்ம வயது மாணவனுக்கு, முதல் நாள் அளிக்கப்பட்ட அந்தக் கட்டளை எந்த அளவுக்கு அதிர்ச்சியையும், அவமானத்தையும் தந்திருக்கும் என்பதை எளிதில் ஊகிக்கமுடியும். நான் என் புத்தகப்பையைச் சுமந்துகொண்டு, அதைவிடப் பலமடங்கு கனமான வெறுப்புடன், இடைவழியில் நடந்து முதல் பெஞ்சில் போய் உட்கார்ந்தேன். என் வாழ்க்கையின் மிக முக்கியமான பேரதிருஷ்டம் அது. அதற்காககப் பதினோறாம் வகுப்பு கணக்கு ஆசிரியர் வி. வைத்தியநாதனுக்கு நான் என்றென்றும் கடமைப்பட்டவன்.
புத்தகங்களை வைத்துவிட்டு உட்கார்ந்த நொடியில் அடுத்த இருக்கையிலிருந்து ஒரு கரம் நீண்டது; “நான் கணேஷ்.” அந்த கணேஷ்தான் இன்று காலை இறந்துபோனான்.
அன்று நீண்ட கரம் என்னைவிட்டு ஒருநாளும் அகலவில்லை. அதற்காக நாங்கள் தினசரி பேசிக்கொள்வோம் என்றில்லை. ஆனால் என் மனதில் அவனை நினைக்காத நாட்கள் மிகக் குறைவே; அவனும் அப்படித்தான் என்று எனக்கு நானே சொல்லிக்கொள்கிறேன். நான் இந்தியாவில் இருந்தபோது அவன் சுவிட்ஸர்லாந்திலும் பெல்ஜியத்திலும் இருந்தான். நான் இந்தியாவை விட்டுச் சென்ற நேரம், அவன் திரும்ப இந்தியாவிற்கு வந்துவிட்டான். இடைப்பட்ட காலங்களில் நேரடித் தொடர்புகளுக்குச் சாத்தியமில்லை. அதன் தேவையையும் நாங்கள் உணர்ந்ததில்லை. ஆனால் அதன்பின் ஒவ்வொரு முறையும் நான் இந்தியா போகும்போது அவனைச் சந்தித்திருக்கிறேன். ஒவ்வொரு சந்திப்பையும் என் வாழ்நாளுக்கான பெரும்நினைவுகளாக மனதில் தேக்கியிருக்கிறேன்.
+2 வகுப்பில் என் இலக்கு அவனை எட்டுவது அல்லது விஞ்சுவதுதான்; அது சாத்தியமில்லாதது என்று சில மாதங்களிலேயே தெரிந்தும், அந்த இலக்கை மூர்க்கத்துடன் துரத்தியிருக்கிறேன். கணக்கிலும், இயற்பியலிலும் அவனை எட்டிப் பிடிப்பது எனக்குச் சாத்தியமாகவில்லை. ஆனால் வேதியியலிலும், உயிரியலிலும் நான்தான், இதற்கு அவனுக்கு அந்தப் பாடங்களில் அதிக ஆர்வம் கிடையாது என்பதுதான் உண்மையான காரணம். “நான் இஞ்னியரிங் போவேன், நீ மெடிக்கல் சேரப்போகிறாய்” என்று சொல்வான். அதில் முதல்பாதி நிச்சயமான உண்மை என்று எனக்கு ஆரம்பத்திலேயே தெரியும்; மறுபாதி நான் சந்தேகப்பட்டதுபோலவே பொய்த்துப் போனது. ஆனால், பாடத்தில் மதிப்பெண் வாங்குவது எங்களுக்கு ஒரு பொருட்டேயில்லை. ஒருமுறை இயற்பியல் ஆசிரியர் பாடப்புத்தகத்தில் Van de Graaff generator படமும் விளக்கமும் தவறானவை என்று வகுப்பில் சொல்லிக்கொடுத்தார். அன்று மாலை புத்தகத்தில் சரியாகத்தான் இருக்கிறது என்று சொல்ல நான் அவன் வீட்டுக்கும் அதேநேரம் அதையே சொல்ல அவன் என் வீட்டுக்கும் நடந்திருக்கிறோம். அடுத்த சில வாரங்களுக்கு எங்கெங்கோ தேடித்தேடி Sears and Zemansky, Halliday and Resnick என்று ஒவ்வொரு புத்தமாகக் கொண்டுபோய் அவரிடம் வாதம் செய்திருக்கிறோம். ஒரு கட்டத்தில் நான் வரைந்தபடி படத்தை வரையாவிட்டால் உங்களுக்கு மார்க்கு கிடையாது என்று சொன்னார். பள்ளிக்கூடத்தை விட்டு வெளியே வரும்போது நானும் அவனும் மார்க்கு கொடுக்காவிட்டால் பரவாயில்லை, சரியான படத்தைத்தான் வரையப்போகிறோம் என்று எங்களுக்குள் உறுதி எடுத்துக்கொண்டோம்; அடுத்த மாதத் தேர்வில் அப்படியே செய்து அவருக்கு எரிச்சலூட்டியிருக்கிறோம். பின் சில மாதங்கள் கழித்து அவர் புத்தகத்தில் இருக்கும் விளக்கம் சரிதான் என்று ஒத்துக்கொண்டார். பள்ளியில் படிக்கும்போது அவன் அக்காவின் கல்லூரிக் கணிதப்பாடங்களைச் செரித்துக் கொண்டிருந்தான். அவனுடன் சேர்ந்திருந்ததால் அது புல்லுக்குமாக எனக்கும் பொசிந்து கொண்டிருந்தது.

அவன் கோயம்புத்தூருக்குப் மின்பொறியியல் படிக்கப்போனான். நான் கும்பகோணம் அரசுக் கல்லூரி இயற்பியலில் தேங்கிப்போனேன். ஒவ்வொருமுறை ஊருக்கு வரும்போதும் அடுத்த சில மணிக்குள் என் வீட்டு வாசலில் நிற்பான். ஒவ்வொரு முறையும் அவன் இயற்பியலையும் நான் மின்னணுவியலையும் சிலாகித்துப் பேசுவோம். எனக்கு உண்மையிலேயே மின்னணுவியல் மீது பெரிய ஈர்ப்பு இருந்தது. அவன் என்னைத் தேற்றுவதற்காகத்தான் என்னிடம் இயற்பியலைத் துதிபாடுவதாகத் தோன்றும். ஆனால் பல வருடங்கள் கழித்துதான் அவனுக்கு உண்மையாகவே இயற்பியலில் பெரும் ஆர்வமுண்டு என்று எனக்குத் தெரியவந்தது. (அது என்னைத் தேற்றுவதற்காக என்று தொடங்கி, அவனில் வளர்ந்திருக்கக்கூடும் என்று நான் இப்போதும் நம்புகிறேன்.)
பின் நான் பெங்களூர் ஐஐஎஸ்ஸியில் ஆராய்ச்சியாளனாகச் சேர்ந்தேன். அதே நேரம் அவன் இந்தியத் தொலைபேசி நிறுவனத்தில் (Indian Telephone Industries) மின்னணுப் பொறியாளனாக வந்துசேர்ந்தான். என்னுடன் நேரம் கழிக்கலாம் என்பதற்காகவே ஐஐஎஸ்ஸியில் மாலைநேர வகுப்புகளில் சேர்ந்தான். வாரத்தில் மூன்று, நான்கு நாட்கள் தவறாமல் சந்திக்க முடிந்தது. அப்போது நான் என் சித்தி வீட்டிலும், அவன் அவனுடைய அத்தையுடனும் தங்கியிருந்தோம். இருவரும் ஒன்றாக அறை எடுக்கலாம், மேற்படிப்புக்காக அமெரிக்கா போகலாம் என்று திட்டங்களைத் தீட்டிக்கொண்டிருந்தோம். சற்றும் எதிர்பாராமல் அவனுக்குக் கிடைத்த வாய்ப்பினால் கணினித் துறைக்கு மாறினான். சில மாதங்களிலேயே அவன் சுவிட்சர்லாந்துக்கு அனுப்பப்பட்டான். சுவிஸ் ஏர்லைன்ஸில் பயணச்சீட்டு, சாமான் பொதிகள் நிர்வாகத்தை முதன்முறையாக கணினியாக்கம் செய்தது அவனுடைய குழு. தொடர்ந்து பெல்ஜியத்தில் SWIFT என்னும் வங்கிகளுக்கிடையேயான பணப்பரிமாற்றம் செய்யும் சங்கேத அமைப்புகளைச் செய்து முடித்தான். பல வருடங்களுக்குப் பின் இந்தியா திரும்பிவந்து சில நிறுவனங்களில் முதன்மை நுட்பப் பணிகளில் இருந்து அந்த நிறுவனங்களின் வளர்ச்சிகளுக்கு முக்கிய காரணியாக இருந்தான். அவனுக்குள் எப்போதுமே ஒரு வாய்ப்பு மறுக்கப்பட்ட ஆசிரியர் குடிகொண்டிருந்தார். நேரம் கிடைக்கும்போதெல்லாம் சக ஊழியர்களுக்கு சங்கேதப் பரிமாற்றம், செயற்கையறிவு, குவாண்டம் கணிப்பு, என்று பாடங்களைச் பயிற்றுவித்துக் கொண்டிருந்தான்.
சென்ற வருடம் அவன் முதன் முறையாகத் தனக்கு இரத்தம் தொடர்பான அரிதான நோய் வந்திருப்பதாகச் சொன்னான்; நான் நிலைகுலைந்து போனேன். தொடர்ந்து பலமுறை குறுகிய அவகாசத்தில் இரத்தப் பரிமாற்றம் தேவைப்படுகிறது என்றும், மிகவும் களைப்பாக இருக்கிறது என்றும் சொன்னான். ஆனால் அடுத்த சில நாட்களில் குவாண்டம் கம்ப்யூட்டர்களின் பிரகாசமாக எதிர்காலத்தைப் பற்றிய அவன் கனவுகளைக் கட்டுரையாக எழுதினான். இயற்பியலாளனான எனக்கு குவாண்டம் கணிப்பின் சாத்தியங்கள் குறித்த நம்பிக்கையின்மைகள் உண்டு, மின்னணு நுட்பனான அவனுக்கு அதைப்பற்றிய பெருங்கனவுகள் எளிதில் சாத்தியமாயின.
ஆகஸ்டில் தனக்கு வந்திருப்பது Aplastic Anemia என்று உறுதிப்படுத்தினான். அது குறித்த மிரட்சியும், கூடவே வழக்கம்போல அதைப் புரிந்துகொள்ளும் ஆர்வமும் அவன் குரலில் தொனித்தது. சென்றமுறை இந்தியா போனபோது பார்க்கமுடியவில்லை. அவனில் நோய் எதிர்ப்புத் திறன் குறைந்திருப்பதாகவும், மருத்துவர்கள் சந்திப்புகளைத் தவிர்க்கப் பரிந்துரைத்திருப்பதாகவும் சொன்னான். எனக்கும் அதுதான் சரியென்று தோன்றியது. படிப்பு முடித்த முப்பது ஆண்டுகளில் தினசரி பார்த்துக் கொண்டிருந்தோமா என்ன? இந்த பெப்ருவரியில் எலும்பு மஜ்ஞை மாற்றீடு (bone marrow transplant) நடந்தது. அதிருஷ்டவசமாக அவனுடைய தங்கையின் எலும்பு மஜ்ஜை அவனுக்குப் பொருந்தியது. சிகிச்சையில் இருக்கும்போது இந்த வருடம் வெளியான என் புத்தகத்தை அவனுக்கு அனுப்பினேன். அதிலிருக்கும் அறிவியல் அவனுக்கு ஊக்கம் தருவதாக இருக்கும் என்ற நம்பிக்கை. அந்தக் கட்டுரைகளைப் பற்றி அவனுடன் விவாதிக்க பெரும் ஆசையிருந்தது. அவன் உடல்தேறி வந்தபின் பேசிக்கொள்ளலாம் என்றிருந்தேன். வழக்கம்போல அவன் பெரும் நம்பிக்கைகளுடனும் கனவுகளுடனும் இருந்தான். மாற்றீட்டுச் சிகிச்சைக்குப் பிறகு, இரண்டு மாதங்களுக்கு முன்கூட, அவன் துவக்கப்போகும் புது ஏ.ஐ நிறுவனத்தில் எங்களுடைய இன்னொரு வகுப்புத் தோழன் கணபதியையும் சேரவேண்டும் என்று அழைத்தான். அது குறித்த பெருங்கனவுகளையும் செயல்திட்டங்களையும் அவனிடம் சொல்லிக் கொண்டிருந்தான். அப்போது அவன் கண்களும் கரங்களும் எவ்வளவு விரிந்திருக்கும் என்பது எனக்குத் தெரியும். அவன் நோய் நீங்கி வந்தவுடன் பல தொழில்நுட்பங்களைக் குறித்து அவனுடன் ஆழமாக உரையாடி, முடிந்தால் அவற்றை யூட்யூப் வீடியோக்களாகவோ, ஒலிக்கோப்புகளாகவோ வெளியிட வேண்டும் என்று விரும்பியிருந்தேன்.
அறிவியலிலும் தொழில்நுட்பத்திலும் எந்த அளவுக்கு நம்பிக்கையோ அதற்குச் சற்றும் குறையாத இறைநம்பிக்கையும் அவனுக்கிருந்தது. பிரபஞ்சம் முழுவதையும் கிருஷ்ணனின் லீலையாகத்தான் புரிந்துகொண்டான். இறைவனின் அளப்பறிய ஆற்றலையும் அளவில்லா பெருங்கருணையையும் கூட அவன் கணிததின் முடிவிலியைக் (infinity) கொண்டுதான் வரையறுப்பான். சக்தி சிவத்தில் பாதியென்றாலும் இருவரும் அறுதியில்லா வல்லமை கொண்டவர்கள்தான், ஏனெனில் முடிவிலியை எப்படிப் பங்கிட்டாலும் கிடைப்பது முடிவிலிதானே என்று சொல்வான். ஏன் தன் அம்மாவின் அதிதிறமைகளை ஒரு கணிதச் சமன்பாடாக வரையறுத்துப் புரிந்துகொள்ள முற்பட்டான். வயதாக ஆக, கணிதத்தையும் இயற்பியலையும் இறையைக் கொண்டு புரிந்துகொள்ளத் தலைப்பட்டான். இக்கணத்தில்கூட கிருஷ்ண பரமாத்மாவிடம் அவருடைய கணக்கு தவறானது என்று வாதித்துக்கொண்டிருப்பான் என்று ஊகிக்கமுடியும். எதையும் தீர்க்கமாகச் சோதிக்கும் அறிவியல் சிந்தனையும், எந்தக் கேள்வியும் இல்லாமல் முழுவதுமாக இறைவனிடம் சரணாகதியடையும் பக்குவமும் அவனுக்கு ஒருசேர வாய்த்திருந்தது. அவனை அறிந்த முதல் நாளிலிருந்து அவன் யாரிடமும் கோபித்துக் கொண்டதையோ, அதிர்ந்து பேசியதையோ நான் கண்டதில்லை. ஏன், யாருக்கும் மனதளவில்கூட தீங்கு நினையாதவன். அவனுக்கு அந்த நோய் வந்த நாளிலிருந்தே, ‘ஏன்? ஏன் இவனுக்கு?’ என்ற விரக்தியும் வேதனையும் என்னைத் துளைத்துக் கொண்டிருந்தன. அவனுக்கும் அதே உளைச்சல் இருந்திருக்கும் என்பது நிச்சயம். அவனுக்கு இழைக்கப்பட்டது பெரும் அநியாயம்.
என்னுடைய ஒவ்வொரு வளர்நிலையையும் கண்டு பெருமகிழ்ச்சி கொண்டவன்; நான் அவனுடைய சாதனைகளையும், அதற்கும் மேலாக அவற்றை சாதாரணமாகக் கடந்துபோகும் உளச்சமநிலையையும் கண்டு பரவசப்படுவேன். முன்னர் சொன்னதுபோல்தான், இவற்றையெல்லாம் நாங்கள் ஒருவருக்கொருவர் சொல்லிகொள்ளத் தேவையில்லை. ஒருவகையில் அது எங்கள் தலைமுறை வளர்க்கப்பட்ட விதம். கடந்த சில வருடங்களாக நிறைய எழுதத் தொடங்கினான். நான் வாசித்ததாகச் சொன்னால் மகிழ்ந்தான்.
பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது என் இலக்கு அவனை எட்டுவதாகத்தான் துவங்கியது. பின் ஒரு நிலையில் என் பாதையும் அவனதும் வெகுவாகப் பிரிந்துபோக நாங்கள் மற்றவன் கடக்கும் மைல்கற்களை சுயசாதனைகளாகக் கொண்டாடிக்கொண்டோம். வாழ்நாள் முழுவதும் அறுதியான முடிவுகளுடன் தன் இலக்குகளை நோக்கித் தீர்க்கமாகப் பயணித்துக் கொண்டிருந்தவன், ஒரு நாள் அதிகாலை வெறுங்கனவாய்க் கலைந்து போயிருக்கிறான்.
நம்பிக்கையைத் தவிர வேறெதையும் அறியாதவன் கணேஷ். இறுதிநாள் வரை அறிவியலும் தொழில்நுட்பமும் மானுடத்தை மேம்படுத்தும் என்ற அசாத்திய நம்பிக்கையைக் கொண்டிருந்தான். அவனுக்கு மிகவும் தேவைப்பட்டபோது மருத்துவம் போதுமான அளவுக்கு வளர்ந்திருக்காமல் அவனை அநியாயமாகக் கைவிட்டுவிட்டது.
குறிப்புமறைந்த என் ஆருயிர் நண்பன் கணேஷ் சுவாமிநாதனின் ஆளுமை, அவன் வார்த்தைகளில்: காலமும் இரண்டு மனிதர்களும் – கணேஷ் சுவாமிநாதன்
காலமும் இரண்டு மனிதர்களும்
கணேஷ் சுவாமிநாதன்
ஆசிரியர் குறிப்பு: இது புனையப்பட்டதல்ல; நிகழ்ந்தது. காலத்தின் அடுக்குகளைச் சுருக்கி, பெயர்களைத் தவிர்த்து, சில மேடுபள்ளங்களைச் சமன் செய்திருக்கிறேன். நிகழ்விடம் தற்செயலானது, ஆனால் அந்தச் சந்திப்பு மிக முக்கியமானது. இது நடந்தேறிய சம்பவங்களின் ஆவணமல்ல, அண்மை சாத்தியப்படுத்தும் ஒழுங்குகள் குறித்தது. விடைகளுக்காக இதை வாசிக்காதீர்கள்; ஏதோ ஒன்று நமக்குள் இடமாறும் அந்த ஒரு கணத்திற்காக வாசியுங்கள்.
நேற்று சனிக்கிழமை.
பொதுவாக சனிக்கிழமைகள் ஒரு சலுகை. அவை தாமதங்களை அனுமதிக்கின்றன; நிதானம் என்னும் ஆடம்பரத்தைக் கொண்டாடுகின்றன. ஆனால் நேற்று அந்தப் பிம்பம் உதிர்ந்து போனது. மருத்துவமனை அறைக்கு வார இறுதி நாட்களைப்பற்றித் தெரியாது. அதற்குத் தெரிந்தது ‘செயல்முறை’ மட்டுமே. வெளிறிய விளக்குகள், இயந்திரங்களின் சீரான இரைச்சல், உணர்ச்சியற்றுத் தொங்கும் குழாய்கள். எங்கோ தீர்மானிக்கப்பட்ட கால அட்டவணைப்படி இரத்தம் உடலுக்குள் இடம்பெயர்ந்து கொண்டிருந்தது.
அவன் அசையாமல் ஒத்துழைத்துப் படுத்திருந்தான். உடல் ஏற்றுக்கொண்டது, ஆனால் மனம் அடங்க மறுத்தது. அது மருத்துவக் குழூஉக்குறிகளும், புள்ளிவிவரங்களும் நிறைந்த ஒரு நிச்சயமற்ற எதிர்காலத்திற்குள் ஏற்கனவே ஓடத் தொடங்கியிருந்தது. அதீத தன்னம்பிக்கையுடன் சொல்லப்படும் வார்த்தைகள் இலக்கற்ற திசைகளுக்கே இட்டுச் சென்றன. பயம் அங்கே ஆர்ப்பரித்து உள்நுழையவில்லை; அது மிக நிதானமாக, புத்திசாலித்தனத்துடன் ஆக்கிரமித்தது. கணக்குகளைப் போட்டது, கிளைகளாகப் பிரிந்தது, நியாயமான ஆனால் விடைகாணமுடியாத கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனது.
நேற்றும் வழக்கம்போல, ஒரு சாதாரண நாளாகத்தான் கடந்திருக்க வேண்டும், இயல்பாக வந்துவிட்டுத் திரும்பப் போவதுதான். ஆனால் அது நிகழும்போது உடல் அசாதாரணத்தை உணரத்தொடங்கியது; ஒரு திருப்பத்தை, கதையின் போக்கிலில்லாத ஒரு மாற்றத்தை.
அடுத்த படுக்கையில் அவர் இருந்தார். அறையில் நிகழும் ஆட்டத்தின் அங்கமாக இருந்தபோதும் அவர் அதில் பிணையுண்டிருக்கவில்லை. ஒரு கணினி அவர் மடியில் திறந்திருந்தது. அது கவனத்தைச் சிதறடிப்பதற்காக அல்ல, செய்கையின் தொடர்ச்சியை உறுதிப்படுத்துவதாக. அவர் விரல்கள் அவசரமற்ற, அசாத்தியமான உறுதியோடு இயங்கிக் கொண்டிருந்தன. அந்த நிதானம் காலத்தின்மீது தன் முழுக்கட்டுப்பாட்டையும் வைத்திருப்பவருக்கு மாத்திரமே சாத்தியமானது. திரை ஒன்றடுத்து ஒன்றாக அடுக்கப்படும் ஒரு சீர்வடிவைக் காட்டியது. ஒருக்கால் இசையாக இருக்கலாம், இல்லையென்றால் அதேபோல் வேறேதோ நோக்கத்திற்கானதாக. எதுவாயினும் அங்கே ஆக்கமொன்று வடிவெடுத்துக் கொண்டிருந்தது. பராமரிப்புக்கும் பழுதபார்ப்பதற்கும் மாத்திரமேயான அவ்வறையில் ஏதோ ஒன்று உருவாக்கம் பெறுகிறது.

பார்த்தல் அனுமதியின்றி தொடங்கியது. வெறும் வேடிக்கைக்காக அல்ல – மிகக் கூர்மையான அவதானமாக. பொறாமையின் விளிம்பில் அங்கீகாரம் உருக்கொண்டது. பொறாமை அவருடைய உடல்நலத்தைப் பார்த்தல்ல, அவரில் உருவெடுக்கும் படைப்பூக்கத்தின் மேல். ஒருவன் காத்துக் கிடக்கிறான், மற்றவன் முன்னோக்கி நகர விழைகிறான்.
இருவரையும் அறைகுறையாகப் பிரிக்கும் ஒரு திரைச்சீலை, அது வெற்றுக் குறியீடுதான். வாழ்வுகள் அதனூடாகக் கசிந்துகொண்டிருந்தன. மதியம் மாலையாயிற்று. பின்… நேற்று ஏதோவொன்று தீர்மானமாக நிகழ்ந்தேறியது. கணினியை வைத்திருந்தவர்தான் முதலில் பேசத்தொடங்கினார். சராசரி விசாரிப்புகள்தான்.
உரையாடல் நாள்முழுக்கக் காத்துக் கிடந்ததைப்போலத் தன்னிசையாக உடைந்தோடத் தொடங்கியது.
இறுக்கம் தவிர்க்க வேலையைப் பற்றிப் பேசத் தொடங்குவதுதான் எளிதானது. ஒரே துறையில்தான் வேலை – தொழில்நுட்பம். அமைப்புகள், நுண்புலக் கருத்துகள். பின்பு பாதைகளின் விலகுமிடம் அடையாளம் காணப்பட்டது, ஆனாலும் ஒரே சூழல்தான். பெயர்கள் உதிர்க்கப்பட்டன. இணைப்புகள் வடிவெடுத்தன. தொழில்முறை வலைப்பிண்ணல் அழகான, ஒழுங்கான, சீர்வடிவில் சுருங்கியது.
உடல்கள் அவற்றுக்கு விதிக்கப்பட்டிருந்த நிபந்தனைகளை மறுபரிசீலனை செய்யக்கோரும் முயற்சியில் மூழ்கியிருந்தாலும் உரையாடல் ஆர்வங்களை நோக்கித் திசைதிரும்பியது. எந்தவித நோக்கங்களுமின்றி இயல்பான ஈர்ப்பினால் முற்செலுத்தப்ப்பட்டுக்கொண்டிருந்தது. தவிர்க்கமுடியாமல், பெயரேதுமற்ற அறையின் நிஜத்திற்குள் வந்து நின்றனர்.
அவர் அமைதியாகச் சொன்னார்—அவன் இப்போது எதை நினைத்து அஞ்சுகிறானோ, அதே சிகிச்சையைத் தான் ஏற்கனவே கடந்து வந்தவன் என்று.
“ஒரு முறையா?” – இவனின் கேள்வி,
“இல்லை, இரண்டு முறை” என்றார் அவர்.
அறையிலிருந்த எந்திரங்களில் மாற்றமேதுமில்லை, எண்களின் ஓட்டம் சீராகவே இருந்தது. ஆனால், இவனுக்குள்ளிருந்த ஒரு கட்டுமானம் சரிந்தது. நேற்றுவரை எச்சரிக்கைகளாலும், புள்ளிவிபரங்களாலும், கதைகளாலும் பின்னப்பட்டு, ஒவ்வொரு முறையும் இருளின் ஆழத்திற்குள் அழுத்தும் அந்த அச்சமூட்டும் கற்பனை இப்போது ஒரு உருவம் பெற்றிருக்கிறது. அதற்கு உடலிருக்கிறது, குரலிருக்கிறது, வடிவமிருக்கிறது.
இருமுறை சென்று மீண்டுவந்தவன் முன் நிற்கிறான் – உருவகமாக அல்ல, ஆர்த்தெழும் உருவங்கொண்டவனாக.
அவரகள் மஞ்ஞையையும் மருந்துகளையும் குறித்துப் பேசத் தொடங்கினார்கள். பலனளிக்கும் சிகிச்சைகளையும், அமைதியாகத் திரும்பத் தாக்குவன பற்றியும். நம்பிக்கையின் பேரில் இரந்துபெறும் குருதியைப் பற்றி. வெற்று நிகழ்வாகக் கடந்துசெல்லாது எச்சமாக நிலைபெறும் மனஅதிர்ச்சியைப் பற்றி. எந்த ஆலோசனையும் வழங்கப்படவில்லை. எதுவும் தேவைப்படவில்லை. நேர்மையான அனுபவப் பகிர்வு கற்பிக்க முயல்வதில்லை, அது உண்மையைத் துல்லியமாகப் பிரதிபலிப்பதை மாத்திரமே செய்கிறது.
அமைதி தொடர்ந்தது. வெறுமையாக அல்ல, நிறைவானதாக. இயல்பாக அது உச்சரிக்கப்பட்டது: *The Bucket List.*
இரண்டு மனிதர்கள், வேறுபட்ட வாழ்க்கைகள். ஒரு ஒழுங்கற்ற கடிகாரம்.
நேற்று வரை The Bucket List ஒரு திரைப்படமாக இருந்தது; ஆனால் நேற்று அது ஒரு சட்டகமாக மாறியது. வேடிக்கைகளையும் கேளிக்கைகளையும் பற்றியல்ல, படைத்தல் குறித்து. காலம் தன் வாக்கியங்களைக் குறுக்கிக்கொள்ளும்போது கதையாடலின் அதிகாரம் யாரிடம் என்பது குறித்து. இயக்கங்கள் கட்டுப்படுத்தப்பட்டிருந்த நிலையில் நோக்கங்களைத் தேர்ந்தெடுப்பது பற்றி.
அந்த முரண்நகை துல்லியமானது. மரணத்தின் வாசலை இரண்டு முறை தொட்டுவிட்டு வந்த பிறகும், ஒரு மனிதன் இன்னும் எதையோ கோர்த்துக்கொண்டிருக்கிறான், செதுக்கிக்கொண்டிருக்கிறான். தாண்டப்போகும் மனிதன் மீண்டுவந்தவனிடமிருந்து கற்றுக்கொள்கிறான். துணிவு ஆர்ப்பரித்து நடைபோடுவதில்லை; அது அமைதியாக உள்நுழையக்கூடும். அது அருகில் அமரலாம், கணினியை இயக்கிக் கொண்டிருக்கக்கூடும்.
நேற்று மாலை தன் இயல்நிலைக்கு மீண்டது. அந்த அறை தான் வழமையாகச் செய்வதைத் தொடர்ந்தது. அதன் உணர்ச்சியற்ற இயந்திர கதிக்குத் திரும்பியது. இயந்திரங்கள் எப்போதும் தங்கள் இரைச்சலுக்கு விசுவாசமானவை. திரைச்சீலை மீண்டும் விழுந்தது. காட்சியில் மாற்றமேதுமில்லை. நம்பிக்கையைவிட பயமே நீடிக்கிறது. அது காதில் புள்ளிவிபரங்களைக் கிசுகிசுக்கிறது, ஒத்திகைபார்க்கப்பட்ட தோல்விகளை இரகசியமாக ஓதுகிறது. கதைகளைப் புனைவது விளைவுகளைச் சாதிப்பதைக் காட்டிலும் எளிதானது என்பதை வலியுறுத்துகிறது. The Bucket List மீண்டும் வெற்றுப் புனைவாகிறது; இரண்டு பாத்திரங்கள், ஒரு திரைக்கதை, விளைவுகளிலிருந்து பாதுகாப்பான தொலைவில். ஆனாலும் ஒரு மாற்றம் நிகழ்ந்தது. அந்த மடிக்கணினி மனிதனின் பிடிவாதமான இருப்பு பயத்தை ஒருபுறமாக ஒதுக்கி வைத்தது. நிச்சயமற்ற இருளுக்குப் பதில் ஒரு மெல்லிய சாத்தியம் தென்பட்டது. அவன் அடுத்த படுக்கையில் இருக்கிறான், விளிம்பை இருமுறை தொட்டு மீண்டுவந்திருக்கிறான் தனக்கான கதையைப் பிடிவாதத்துடன் எழுதிக்கொண்டிருக்கிறான். அதன் நிச்சயத்தில் ஏதோவொன்று இடம்பெயர்ந்தது. பயம் நீங்கவில்லை, விலகி வழிவிடுகிறது. இருள் இலக்கை அல்ல என்றாலும், சாத்தியத்தைச் சுட்டுகிறது.
நேற்று அந்த கடைசிச் சொட்டு மருந்து ஏறி முடிப்பதற்கும், வீடு திரும்பும் வழிக்கும் இடையே ஒரு புதிய ‘பட்டியல்’ உருவாகத் தொடங்கியது. அது காகிதத்தில் எழுதப்படவில்லை; அது ஒரு முடிவு. எஞ்சிய நாட்களை, எஞ்சிய பொழுதுகளை ‘தற்செயலாக’ அல்லாமல், ‘நிச்சயத்தோடு’ வாழ வேண்டும் என்கிற வைராக்கியம்.
பின் குறிப்பு: இந்தக் கட்டுரை 11 ஜனவரி 2026 அன்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டு தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. இதில் சில திருத்தங்களைச் செய்திருக்கிறேன்.
என் ஆருயிர் நண்பன் கணேஷ் 16 மே, 2026 அன்று மறைந்தான். இதை என் அஞ்சலிக் குறிப்புடன் சேர்த்து வாசியுங்கள் – வெங்கட்ரமணன்
Discover more from சொல்வனம் | இதழ் 367 | 24 மே 2026
Subscribe to get the latest posts sent to your email.
