அ.மாதவையா, வ.வே.சு. ஐயர், சுப்பிரமணிய சிவா ஆகியோரின் இதழியல் பணிகளை முன்வைத்து..

தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்ட எண்ணற்ற படைப்பாளிகளில் அ.மாதவையா, வ.வே.சு.ஐயர், சுப்பிரமணிய சிவா ஆகிய மூவரை சற்றுக் குறிப்பிட்டுச் சொல்லலாம். இம்மூவரையும் வயதளவில் ஒப்பிடுகையில் பத்து, பன்னிரெண்டு வயது வித்தியாசத்தை உடையவர்கள் என்றாலும், தமிழ் இலக்கிய படைப்புலகில் சமகாலத்தவர்களாக திகழ்ந்தோடல்லாமல், தன்னிகரில்லாத இலக்கியப் படைப்புகளைத் தந்துவிட்டு, ஓரே ஆண்டில் (1925இல்) நான்கு மாத இடைவெளியில் காலமானவர்கள். அவ்வரிசையிலே, இம்மூவரின் நினைவு நூற்றாண்டு கடந்த ஆண்டு (2025) நிறைவு பெற்றிருக்கிறது.
இம்மூவருள், வ.வே,.சு.ஐயரும், சுப்பிரமணிய சிவாவும் நேரடியாக சுதந்திர போட்டத்தில் ஈடுபட்டவர்கள். மாதவையாவைப் பொறுத்தவரையில், அவர் மிகுந்த தேசபக்தியினைக் கொண்டிருந்தாலும், அரசாங்க உத்தியோகத்தில் இருந்தபடியால், அரசியல் வாதங்களில் தலையிடவில்லை. தேச விடுதலை சார்ந்தும், தமிழ்ச் சமூக மேம்பாடு சார்ந்தும் விசாலமான கனவுகளைக் கொண்டிருந்த அக்காலத்திய இளைஞர்கள் இவர்களுக்கிடையேயான ஒற்றுமை என்னவென்று ஒப்பிடுகிறபோது, இம்மூவர் கண்ட ஓரே கனவைத்தான் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியிருக்கிறது. தொன்மையான தமிழ்மொழியின் அருமை பெருமைகளைப் பிற மொழியினர் அறியும்படி செய்வதற்கும், இந்திய வரலாற்றினை தேசீயக் கண் கொண்டு எழுதுவதற்கும், தமிழிலே நல்லதொரு மாதப் பத்திரிகை தொடங்கி நடத்த வேண்டும் என்பதே அந்தக் கனவு. ஒரு நூற்றாண்டுக்கு முந்தைய அக்காலக்கிரமத்தில் எழுத்தின் மூலம் சமூக இடர்பாடுகளை களைந்து சீர்திருத்திவிட முடியும் என இவர்கள் முழுமையாக நம்பியதோடு இல்லாமல் அதனை முன்னெடுத்து, சீரிய இலக்கியப் பங்களிப்புகளை தந்து அதில் வெற்றியும் கண்டார்கள். அவ்வகையிலே, அவர்கள் கண்ட கனவுகளில் ஒன்றான இதழியல் பணிகளை முன்னெடுத்ததில் இம்மூவருள் மூத்தவர், இவர்களுள் வயதில் இளையவரான சுப்பிரமணிய சிவா.
ஞானபாநுவும் பிரபஞ்சமித்திரனும்
ராஜத்துரோகக் குற்றம் புரிந்தார் என்ற அடிப்படையில் சுப்பிரமணிய சிவாவிற்கு 07-07-1908இல் முதல் சிறைவாசத் தண்டனைக் கிடைத்தது. நான்கு வருட சிறைத்தண்டனைக்குப் பிறகு, 02-11-1912இல் விடுதலையடைந்த சிவா சென்னையில் குடியேறி எழுத்துத் தொழிலைக் கைக்கொண்டார். இதுகுறித்து ‘எனது பிரார்த்தனை’ என்ற பாடலில் இப்படிக் குறிப்பிடுகிறார்.
வெளியில் வந்தேன் – விடுதலை யடைந்து
களியில் மனிதரைக் – கண்ணால் கண்டேன்
வறுமை, வியாதி, மரணம், பஞ்சம்
சிறுமை யாவற்றால் – சீர் அழிகின்ற
தமிழ் மக்களைத் தட்டி யெழுப்பி
அமிழ் தாம்ஞான – ஆனந்த மூட்டி
வீரம், ஆண்மை – வெற்றி பெருமை
தீரம் முதலாம் – தேசு புகுத்திச்
சிறந்தோ ரென்றே – சீரியர் செப்ப
அறந்தான் செய்ய – அன்புடன் முயன்று
பத்திரிகை புத்தகம் – பல வழியாக
உரிமை வேண்டி – உரிமை வேண்டி
இரவும் பகலும் – எழுதி யெழுதி
வரவும் என்கை – வலிக்குது ஐயோ.
சிறையிலிருந்து வெளிவந்த மூன்றாம் நாளிலேயே 15-11-1912இல் ‘ஞானபாநு’ எனும் பெயரில் மாத இதழ் ஒன்றைத் தொடங்கச் சென்னை மாநில ஆளுநருக்கு ஒரு விண்ணப்பத்தை அனுப்பினார் சிவா. ‘அரசியல் கிளர்ச்சியாளர்’, ‘பழைய கைதி’ எனப் பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டு அவரைப் பத்திராபதிபராகக் கொண்டு பத்திரிகை தொடங்க ஆங்கிலேய அரசு அனுமதி மறுத்ததால், அவரது மனைவி மீநாட்சியை பதிப்பாசிரியராக கொண்டு ‘ஞானபாநு’ தொடங்கப்பட்டது. சென்னை, மயிலாப்பூரிலிருந்து ஏப்ரல் 1913இல் முதல் இதழ் வெளிவந்தது. ‘நமது பத்திரிகை’ என்ற தலைப்பிலான முதல் இதழின் தலையங்கத்தின் நிறைவில் தமது பத்திரிகையின் நோக்கம் குறித்து சிவா இப்படிக் குறிப்பிடுகிறார்.
“……….. நித்தியாநந்தப் பிராப்தியே மானிட ஜன்மத்தின் பயனாகும். தமிழ் அறிந்தவர் அனைவரும் தமது கடைமையைச் செய்து தமது ஜன்மப்பயனை அடைவதற்குத் துணைபுரிவது நமது பத்திரிகையின் நோக்கம். கடூரமான ஒரு வியாதியால் கஷ்டப்படுபவனுடைய வியாதியை நிவிர்த்தி செய்வதற்கு ஒளஷதம், பத்திய நியமமான ஆகாரம் ஆகிய இவ்விரண்டும் அவசியமாம். பத்திய நியமம் இல்லாமல் ஒளஷதம் பயன்படாது. ஒளஷதமில்லாமல் பத்திய நியமமும் பயன்படாது. ஆதலால் ஒருவனுடைய வியாதியை நீக்குவதற்குப் பத்திய நியமம், ஒளஷதம் இவ்விரண்டும் அவசியமாவது போல, ஜீவராசிகளின் ஜனன மரண வியாதியைப் போக்குவதற்கு ஸ்மிருதிகளாகிய பத்திய நியமமும், ஸ்ருதிகளாகிய ஒளஷதமும் அவசியம். ஸ்மிருதிகள் மனிதன் அனுஷ்டிக்க வேண்டிய பிரபஞ்ச தர்மங்களைப் போதிக்கின்றன. ஸ்ருதிகள் பிரபஞ்சாதீதமாகிய பிரம்மவஸ்துவைப் பற்றிப் பிரதிவாதிக்கின்றன. ஆகையால் ஸ்ருதி, ஸ்மிருதியாகிய இவ்விரண்டிலும் போதிக்கப்பட்டுள்ள விஷயங்களை இயன்றமட்டும் எடுத்துக் கூறி, அவை, எளியார், வலியார், எல்லாருக்கும் பயன்படும்படி செய்வது நமது பத்திரிகையின் வேலை. பாநுவாரமாகிய இன்று நமது ‘ஞானபாநு’ உலகத்தில் உதயமாயிருக்கிறது. நமது ‘ஞானபாநு”வை ஜகன் மாதா கருணையொடு காத்தருள்வாளாக…..”
‘ஞானபாநு’வில் வ.உ.சி, பாரதி, வ.வே.சு.ஐயர், டாக்டர் நஞ்சுண்ட ராவ், சுப்பராய ஐயர், பர்தூர் சேஷாத்ரி ஐயங்கார், எஸ்.ஆர்.வீரராகவ சர்மா போன்ற தேசபக்தி நிறைந்த படைப்பாளிகளின் படைப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டு, பத்திரிகையின் இலக்கியத் தரத்தை மேலும் செழுமையுறச் செய்தார் சிவா. ‘சாவித்திரி’ எனும் புனைப்பெயரில் தமது ‘சின்ன சங்கரன் கதை’யை பாரதி இவ்விதழ்களில் எழுதினார். தமது பங்களிப்பாக, ‘விஸ்வாமித்திரர்’ என்ற புனைப்பெயரில் ஆன்மீகக் கட்டுரைகளை தொடர்ந்து எழுதிவந்த சிவாவை, தீவிர விடுதலை வீரர் என்பதனைத் தாண்டி ஓர் அழுத்தமான ஆன்மீகவாதியாக இக்கட்டுரைகள் அடையாளம் கொள்ள வைத்தன. இவைகள் தவிர்த்து, அன்றைய நாட்டுநடப்புகளை வாசகர்கள் அறிந்து கொள்ளும் வகையில் ‘சமாச்சாரக் குறிப்புகள்’ என்ற பத்தியும், புதிய புத்தகங்கள் குறித்த விமர்சனங்கள் அடங்கிய ‘புத்தக வரவு’ பகுதியும் வெளிவந்தது. ‘ஞானபாநு’ பத்திரிகை தொடங்கி இரண்டு ஆண்டுகள் முடிவுற்ற சமயத்தில், ‘நமது பின்னோக்கம்’ என்ற தலைப்பில் சுயவிமர்சனக் கட்டுரையொன்றை சிவா எழுதினார். அதே போல, இதழ் தொடங்கப்பட்ட இரண்டரை ஆண்டுகால இடைவெளியில், 15-05-1915இல் மனைவி மீனாட்சியம்மை மறைந்த சமயத்தில், ‘ஞானபாநு – ஜூன் 1915’ இதழின் தலையங்கத்தில் ‘காலஞ்சென்ற ஸ்ரீமதி மீநாட்சியம்மாள்’ என்ற தலைப்பில் சிவா இப்படி எழுதுகிறார்.
நமது “ஞானபாநு” பதிப்பாசிரியையும் சொந்தக்காரியுமான ஸ்ரீமதி மீநாட்சியம்மாள் சென்ற வைகாசி மீஇரண்டாம் தேதி சனிக்கிழமை காலை 9 மணிக்கு மகாசக்தியில் இரண்டறக் கலந்து கொண்டாளென்ற விசனகரமான சம்பவத்தை நமது வாசகர்களுக்குத் தெரிவிக்கின்றோம். இவ்வம்மையார் ஸ்ரீ சுப்பிரமணிய சிவத்தின் மனைவியென்பதை அநேகமாக எல்லோரும் அறிவர். ஸ்ரீ சுப்பிரமணிய சிவம் தேசபக்தி மேலீட்டால் சிறைவாசஞ் செய்ய நேர்ந்த காலத்தில் இவ்வம்மையார் பட்ட கஷ்டங்கள் பல. இவ்வம்மையார்க்கு இறக்கும் பொழுது வயது 27. ஸ்ரீசுப்பிரமணிய சிவம் – சிறுபிராயம் முதற்கொண்டே வேதாந்த விசாரணை செய்ய ஆரம்பித்து இகலோக இன்பங்களை வெறுத்து, சாதுக்களுடனும் சந்நியாசிகளுடனும் சகவாசம் செய்துகொண்டு ராஜ்ய சஞ்சாரம் செய்து கொண்டிருந்தார். அப்பொழுது இவ்வம்மையார் தமது தாயாரைத் துணையாகக் கொண்டு மற்றச் சுற்றத்தினரையெல்லாம் வெறுத்து, புருஷனே கதியென்ற பதிவிரதா தர்மத்தைப் பரிபாலனஞ் செய்யக் கங்கணம் கட்டிக்கொண்டு, புருஷன் இருக்கும் இடங்களைத் தேடித் தேடிச் செல்ல, ஸ்ரீ சிவம் “நானவர் வலைபிற்பட்டுக் கைதப்பி யோடுமான் போல்” தமது மனைவியை அநேக இடங்களில் அநேக தடவைகளில் ஏமாற்றி நழுவிவிட, இவ்விதமாக இவ்வம்மையார் தமது புருஷனைப் தொடர்ந்து பட்ட கஷ்டங்கள், நஷ்டங்கள் ஆச்சரியத்தையும் அநுதாபத்தையும் விளைவிக்கத்தக்கன. இவ்வாறாக வெல்லாம் ஸ்ரீ சிவம் பல தடவைகளிலும் பல விதத்திலும் வெறுத்துத்தள்ளியும் சரீரத்தை விடாத சாயையைப்போல, இவ்வம்மையார் தமது புருஷனை விடாது பற்றித் தியானித்துக் கொண்டிருக்க, 1908-ம் வருஷத்தில் மகாசக்தியின் ஆக்ஞையின் பிரகாரம் ஸ்ரீ சிவம் சிறைவாசம் செய்யுமாறு நேரிட்டது. அப்பொழுதும் இவ்வம்மையார் அவரை விடாது சிறைச்சாலை யதிகாரிகளின் மூலமாக அவருக்கு வேண்டிய செளகர்யங்களையெல்லாம் செய்து கொடுத்து அவருடைய விடுதலை நாளை எதிர்பார்த்துக் கொண்டே காலங்கழித்தார். அப்பொழுது இவ்வம்மையார பட்ட கஷ்டங்கள் பற்பல. ஸ்ரீசிவம் இயற்கையிலேயே சந்நியாச நோக்குடையவராயினும், இவ்வம்மையார் ஆதிமுதல் தம்மைவிடாது பின்பற்றித் தம்முடைய பதிவிரதா தர்மத்தைப் பரிபாலனம் செய்து வந்ததால் இவ்வம்மையாருடன் கூடி இல்லறத்தில் வாழ இசைந்து, தமது விடுதலைக்குப் பின் சென்ற இரண்டரை வருஷ காலமாக வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு இகபர சாதனமாக இப்பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டது. ஸ்ரீசிவம் ராஜாங்கத்தாரால் சந்தேகிக்கப்பட்டவராதலால், பத்திரிகை நடத்துவதற்கு உத்தரவு கிடைப்பது சந்தேகம் என்று கருதி, ஸ்ரீமதி மீநாட்சியம்மாள் பேரால் பத்திரிகை நடத்துவதற்கு ராஜாங்கத்தாரிடமிருந்து அதுமதி பெறப்பட்டது. சென்ற இரண்டு வருஷகாலமாகப் பத்திரிகை இடையூறின்றி நடைபெற்று வந்தமைக்கு முக்கிய காரணம் இல்வம்மையாரின் ஆத்திரமும் தூண்டுதலுமே யாம். இப்பொழுது இவ்வம்மையார் மகாசக்தியில் லயமாகிவிட்டார். தேசான்மைக்கும் உலக முன்னேற்றத்திற்கும் பாடுபடும் தம்முடைய புருஷனுடைய கைங்கர்யங்களும் மற்றத் தேசாபிமானிகளுடைய கார்யங்களும் இனிது நிறைவேறுமாறு இவ்வம்மையாரின் சக்தி அருள்புரிவதாக…”
‘ஞானபாநு’வின் பத்திராபதிராயிருந்த தமது மனைவி மீநாட்சி காலமானபடியால், அடுத்த இதழினை வெளியிட ஆங்கிலேய அரசாங்கத்திடம் சிவா அனுமதி பெற வேண்டியிருந்தது. சென்னை பிரதான பிரசிடென்ஸி மாஜிஸ்டிரேட்டிடம் இவ்விஷயத்தை எடுத்துச் சொல்லி சிவா மனுச்செய்து கொள்ள, வைகாசிமீ 26ஆம் தேதியன்று ‘ஞானபாநு’வை மேலும் நடத்துவதற்கு அனுமதி கிடைத்து, இதழ் தொடர்ந்து வெளிவந்தது.
ஆடி-1925 மாதத்திய ‘ஞானபாநு’ இதழில் திருவள்ளுவ நாயனாரின் சரித்திரத்தையாவது, தமிழ்ப் பாஷையின் சிறப்பைப் பற்றியாவது தனித்தமிழில் வியாசம் எழுதியனுப்புவோர்க்கு ரூபா ஐந்து இனாம் கொடுப்பதாக விளம்பரம் ஒன்றை வெளியிட்டார் சிவா. இவ்விளம்பரத்தை மற்றையத் தமிழ்ப் பத்திரிகைகளுக்கும் அனுப்பிப் பிரசுரிக்கும்படி கேட்டுக் கொண்டார். இதற்கு பதிலளிக்கும் விதமாக, .‘சுதேசமித்திரன்’ பத்திரிகையின் அதிபர் சுப்பிரமணிய சிவாவிற்கு எழுதிய கடிதத்தில், ‘இந்த விஷயத்தை தமது பத்திரிகையில் பிரசுரம் செய்ய தினப்பதிப்புக்கு மாதம் 1-க்கு 8 ரூபாயும், வாரம் முறைப் பதிப்புக்கு 5 ரூபாயும் குறைந்த விகிதமாகும் என்றும், மேற்படி விகிதத்தை அனுப்புவித்தால் விளம்பரம் உடனே பிரசுரம் செய்யப்படும்…’ எனத் தெரிவித்திருந்தார். இதற்கு எழுதிய பதில் கடிதத்தில், ‘இனாம் ரூபா ஐந்து’ என்ற விஷயம் தமக்கு எவ்விதத்திலும் லாபம் கொடுக்கக் கூடியதன்று என்றும், பிற பாஷைச் சொற்களைக் கலவாமல் தனித்தமிழில் எழுதுவோருக்கு இனாம் கொடுப்பதால், நம்மவரைத் தமிழ்ப் பாஷையிலேயே எழுதும்படி தூண்டலாம் என்பதே தமது நோக்கம் என்றும், இந்த விளம்பரம் சுதேசமித்திரனில் பிரசுரிப்பதற்குக் கூலிகேட்டது தமக்கு ஆச்சர்யமாய் இருக்கின்றது என்றும் சிவா குறிப்பிட்டிருந்தார். தமிழ்ப் பாஷையைத் தனிப்பாஷையென்று தமிழ்ப் பண்டிதர்களிற் பலரும் மண்டையுடைத்துக் கொள்கிறார்கள். ஆனால் இப்பொழுதோ தமிழர்களுக்குள் பெரும்பான்மையாக வழங்கி வரும் மிக்க பத்திரிகைகளும் தமிழ்ப் பாஷையைச் சித்திரவதை செய்கின்றன. இது மிகவும் விசனிக்கத்தக்கது. தங்களுடைய பத்திரிகைக்குத்தான் தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான சந்தாதாரர்கள் இருக்கிறார்கள். ஆகையால் தமிழ்ப் பாஷையை ஆதரித்துக் காப்பதற்குத் தாங்களும் தங்களுடைய பத்திரிகையுமே முன் நிற்க வேண்டும் என்றும் மேற்படி ‘இனாம் ரூபா ஐந்து’ விளம்பரத்தைத் தங்களுக்கு இஷ்டமிருந்தால் தங்களுடைய பத்திரிகையில் பிரசுரிக்கவும் என்றும் தனது கடிதத்தில் அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார். இக்கடிதத்தை எழுதிவிட்டு, ‘சுதேசமித்திர’னில் மேற்படி விளம்பரம் வெளியாகும் என்று எதிர்பார்த்து ஒரு மாதம் வரையில் காத்துக் கொண்டிருந்தார் சிவா. ஆனால், அது வெளியாகவே இல்லை. பின்னர், எதிர்வந்த புரட்டாசி -1925 மாதத்திய ‘ஞானபாநு’வில் ‘சுதேசமித்திர’னைக் கண்டித்து கட்டுரை எழுதினார்..
பற்பல அசௌகரியங்களுக்கிடையில் நான்காண்டு காலம் வெளிவந்த ‘ஞானபாநுவின் அனைத்து உரிமைகளையும் 1916 அக்டோபரில் தமது நண்பர் மங்கலம் சண்முக முதலியாரிடம் ஒப்படைத்தார் சிவா. புதிய நிர்வாகத்தின் கீழ் ஞானபாநு 1917 ஏப்ரல் வரையில் வந்தது. பிறகு நின்று போனது. மங்கலம் சண்முக முதலியார் அப்பொழுது ‘பிரபஞ்சமித்திரன்’ எனும் வார இதழை நடத்திக் கொண்டிருந்தார். 23-06-1916 முதல் வெளிவந்த ‘பிரபஞ்சமித்திர’னின் காரியஸ்தராக சிவா நியமிக்கப்பட்டார். ‘சில குறிப்புகள்’ எனும் தலைப்பில் ‘நாரதர்’ என்கிற புனைப்பெயரில் இவ்விதழில் சிவா எழுதி வந்தார். 1917இல் ‘பிரபஞ்சமித்திரன்’ டாக்டர்.பி.வரதராஜுலு நாயுடுவிற்கு உரிமையாயிற்று. இதன் பின்னர், 1919இல் சென்னை மயிலாப்பூரில் இருந்து டிகே. சாமிநாதைய்யர் நடத்திவந்த வந்த ‘இந்திய தேசாந்திரி’ எனும் தமிழ்ப் பெயர் கொண்ட ‘இந்தியன் எமிகிரெண்ட்’ இதழில் சிவா துணையாசிரியராகப் பணியாற்றினார். ‘நாரதர்’ எனும் புனைபெயரில் இவ்விதழிலும் சிவா எழுதி வந்தார். ஜூலை 18 , 1919 ஆம் இதழில் சிவா துணையாசிரியர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாகவும் பத்திரிகையில் வெளிவந்த ஆட்சேபகரமான கட்டுரைக்காக மன்னிப்பைத் தெரிவித்துக் கொள்வதாகவும் ஓர் அறிவிப்பு வெளிவந்ததிலிருந்து இவ்விதழ் பணியிலிருந்து சிவா விலக்கப்பட்டதை அறிய முடிகிறது.
17-11-1921இல் இரண்டாம் முறையாக ராஜத் துரோகக் குற்றத்திற்காக, சிவாவிற்கு ஆங்கிலேய அரசு இரண்டரை ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்தது. திருச்சி சிறையில் நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாகி விட்ட நிலையில் விடுதலையானார். சிவாவுக்கு ஏற்பட்டிருந்த நோய்க்கான சிகிச்சைக்காக தேசபக்தர்கள் நிதி திரட்ட முன் வந்த இச்சமயத்தில், 1921-இல் “தேசபக்தன்’ ஆசிரியர் பொறுப்பில் இருந்த வ.வே.சு.ஐயர் நிதி திரட்டும் பணியைத் தாம் பணிபுரிந்த பத்திரிகையிலே தொடங்கி வைத்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார். “ஸ்ரீ சுப்பிரமணிய சிவா நிதி’ என்ற தலைப்பில் வெளியான அவ்வறிக்கையினை பல்வேறு பத்திரிகைகள் பிரசுரித்தன.
“சகோதர சகோதரிகளே! தமிழ்நாட்டில் ஜனங்களுக்கு சுதந்திர ஊக்கத்தை ஊட்டுதலே தமது வாழ்க்கைப் பயனாகக் கொண்டு உழைத்துவரும் ஸ்ரீமான் சுப்பிரமணிய சிவா அவர்களை அறியாதார் நமது தென்னாட்டில் ஒருவரேனும் இருக்க மாட்டார்கள் என்று எண்ணுகிறேன். அவர் தேச கைங்கரியத்தை மேற்கொண்ட நாள் தொட்டு பட்டுவரும் துன்பத்திற்கோர் அளவில்லை. தேசத்தின் மீது தணியாத பக்தி கொண்டு உழைத்த குற்றத்திற்காக இவர் அரசாங்கத்தாரின் கோபத்திற்குப் பாத்திரமானார். இவர், குற்றஞ்சாட்டப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருந்தபோது, இவரைச் அரசாங்கத்தாரால் சிறைச்சாலையினர் நடத்திய பாடுகளை நினைக்கும் ஒவ்வொரு இந்தியன் மனமும் உருகாமல் இராது. இவர் சிறைவாசத்திற் பட்ட கஷ்டங்களின் பயனாக பலமான நோய் இவரைப் பிடித்துவிட்டது. தீராத நோயினால் இவர் படுந் துன்பத்தை இங்கு எடுத்துக்காட்டுவது சாத்தியமல்ல. இவரைப்போல் தீவிரமாகத் தேச கைங்கரியம் செய்து வருவோர் இந்நாட்டில் அரியர் என்பதை யாவரும் அறிந்திருக்கின்றார்கள். இவர் தமது உடல், பொருள், ஆவி மூன்றையும் தேச கைங்கரியத்திற்கே அர்ப்பணம் செய்திருக்கிறார்.
ஸ்ரீசிவம் அவர்கள் தீவிரமான தேசாபிமானமும் உடையவரெனினும், பெரும் செல்வம் பெற்றவரல்லர். இவர் இதுகாறும் தமது வாழ்நாட்களைப் பொருளீட்டலிற் செலவிடாமல், சுயநலமற்ற தீவிரமான தேச சேவையிலேயே கழித்து வந்தமையால், தற்பொழுது கொடிய நோய்க்குள்ளாகி வருந்திக் கொண்டிருக்கிறார். இச்சமயம், இவருக்குத் தக்க சிகிச்சை செய்து, இவர் சம்ரஷணத்தைக் கவனிக்க வேண்டிய பொறுப்பு பொது ஜனங்களைச் சார்ந்து விட்டது. தற்சமயம் சென்னை இராயப்பேட்டையில் இருக்கும் ஸ்ரீகௌரி ஆயுர்வேத வைத்திய மந்திரத்தின் தலைவரான டாக்டர் வி.ஆர்.சுந்தரம் அவர்கள் இவருக்குத் தக்க சிகிச்சை செய்து வருகிறார். தமிழ்நாட்டினரின் நலத்திற்காக இதுகாறும் உழைத்து வரும் இப்பெரியாருக்கு ஆபத்துற்ற காலத்தில் வேண்டிய உதவிகளைச் செய்து வர வேண்டியது தமிழ்நாட்டினரின் கடமையாகும். நமது நாட்டின் ஜனங்களுக்குச் சுதந்திர உணர்ச்சியை ஊட்டிய நன்றியை நாம் மறவாமல் தக்க உதவி செய்தாலன்றி நம் நாட்டின் கெளரவத்தை நாம் காப்பாற்ற முடியாது. இச்சமயம் ஒவ்வோர் இந்தியரும் தங்கள் தங்களால் இயன்ற பொருளுதவி செய்ய முன் வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். தொகை கொடுத்து உதவ விரும்பும் அபிமானிகள் சென்னை தேசபக்தன் பத்திராதிபர் விலாசத்துக்குத் தொகை அனுப்பி வரவேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன். அனுப்பப்படும் பணங்களின் விவரம் அவ்வப்போது பத்திரிகையில் பிரசுரிக்கப்படும்..”
வ.வே.சு.ஐயர் தமது அறிக்கையிலே குறிப்பிட்டிருந்தபடி, தொகை அனுப்பியவர்களின் விவரங்களை “தேசபக்தன்’ பத்திரிகையிலே வெளியிட்டதோடு, தமது பங்களிப்பாக முதல் தவணையாக பத்து ரூபாய் வழங்கினார்.
நாற்பத்தியோரு ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த சிவாவின் வாழ்வில், பத்தொன்பது ஆண்டுகள் பொது வாழ்க்கையிலும், ஒன்பதரை ஆண்டுகள் சிறைவாழ்க்கையிலும் கழிந்தன. எஞ்சிய ஒன்பதரை ஆண்டுகளில் சிறைவாசம் தந்த கொடிய தொழுநோயுடன் ஓயாத அரசியல் பிரசாரச் சொற்பொழிவுகள், கிளர்ச்சிகளின் ஊடே இதழியல் பணி என அவரது வாழ்வானது குறுகிய காலத்திலேயே நிறைவு பெற்றுவிட்டது. சுதேசிய எழுச்சியின் நாற்றங்காலாக விளங்கிய அவர், சுதந்திர காற்றை சுவாசிக்கும் முன்பாக 23-07-1925 வியாழக்கிழமை அன்று மறைந்தார்.
பஞ்சாமிர்தம் உருவான கதை
இளங்கலைக் கல்லூரிப் படிப்பை சென்னைக் கிறிஸ்தவக் கல்லூரியில் தொடங்கிய மாதவையா, அங்கு கல்லூரி முதல்வர் வில்லியம் மில்லரின் கருத்துக்களினால் ஆகர்ஷிக்கப்பட்டு, அவரை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த ‘மெட்ராஸ் கிறிஸ்டியன் காலேஜ் [Madras Christian College Magazine] இதழில் ஆங்கிலத்தில் கதைகளும் கட்டுரைகளும் எழுதினார். பெருங்குளம் அப்பாவையர் மாதவையர், பி.ஏ. என்பதன் சுருக்கமாக ‘PAMBA’ என்கிற புனைபெயரை ஆங்கிலத்தில் பயன்படுத்தினார். தமது நண்பர் சி.வி. சுவாமிநாத ஐயர் 1892-ம் ஆண்டு தொடங்கிய ‘விவேக சிந்தாமணி’ இதழில் ‘சாவித்திரியின் கதை’ என்ற தொடரை, ‘சாவித்திரி’ என்ற புனைபெயரில் எழுதத் தொடங்கினார். இருமாதங்களுக்கு ஒருமுறை என ஆறு அத்தியாங்கள் மட்டுமே வெளிவந்த இத்தொடர் கடுமையான விமர்சனங்களினால் அதன் ஆசிரியரால் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
இளங்கலைப் பி.ஏ. பட்டம் பெற்றதும் தான் பயின்ற சென்னை கிறித்துவக் கல்லூரியிலேயே ஆசிரியராகப் பணிபுரியத் தொடங்கினார் மாதவையா. 1893-ல் முதுகலை எம்.ஏ பட்டப்படிப்பைப் படித்துக் கொண்டிருக்கும் போது, உப்பு சுங்க இலாகா நடத்திய தேர்வில் முதலிடம் வந்து உப்பு ஆய்வாளராக பணியில் அமர்ந்தார். பின்னர், 1898-இல் ‘பத்மாவதி சரித்திரம்’ என்ற நாவலை எழுதினார். அந்நாவலுக்குக் கிடைத்த வரவேற்பால் ஊக்கம் பெற்று, முன்னர் எழுதிய ‘சாவித்திரியின் கதை’ நாவலை ‘முத்து மீனாட்சி’ என்ற பெயரில் முழுமை செய்து 1903-ல் வெளியிட்டார். தமிழிலும் ஆங்கிலத்திலும் ஒரூங்கே புலமை பெற்றிருந்த மாதவையா, இதனைத் தொடர்ந்து, விஜயமாத்தாண்டன் (1903), தில்லைக் கோவிந்தன் (1903), சத்தியானந்தன் (1909) , கிளாரிந்தா (1915) உள்ளிட்ட நாவல்களை அவர் எழுதினார்.
1915ஆம் ஆண்டு தம் பணியிலிருந்து நீண்ட விடுமுறையை எடுத்துக் கொண்ட அவர், சென்னையில் வசிக்கலானார். அக்காலக்கிரமத்தில், தம்மைப் போலவே தமிழ்மொழிப்பற்றும், அதனைப் போற்றி வளர்ப்பதில் ஆர்வம் கொண்டிருந்த அறிவாளர்களுடன் பழகுகின்ற சந்தர்ப்பம் அவருக்கு கிடைத்தது. இதன் தொடர்ச்சியாக, 1917ஆம் ஆண்டில் அவரும் பல நண்பர்களும் சேர்ந்து சென்னையில் ‘தமிழர் கல்விச் சங்கம்’ என்ற சங்கம் ஒன்றை ஸ்தாபிக்க முடிவு செய்தார்கள். அச்சங்கத்தின் தலைமைப் பொறுப்பை ஹைகோர்ட் நீதிபதி டி.சதாசிவையர் ஏற்றுக் கொண்டார். ‘தமிழ் நாட்டருக்குள் தமிழ்மொழி மூலமாக நவீனக் கல்வியறிவைப் பரவச் செய்வது, இந்நோக்கத்துக்குச் சாதனங்களாகப் பத்திரிகைகள், புத்தகங்கள், துண்டுப் பத்திரிகைகள் முதலியன பிரசுரம் செய்தல்; சங்கத்தின் நோக்கத்துக்கு அனுகுணமான பிரசங்கங்களுக்கு ஏற்பாடு செய்தல்’ என்பனவே இந்தச் சங்கத்தின் முக்கிய நோக்கமும், சாதனமுமாக கொள்ளப்பட்டன. இச்சங்கத்தின் சார்பாக, 1917ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் தமிழர் நேசன்’ எனும் பத்திரிகை வெளிக்கொண்டு வரப்பட்டது. அ.மாதவையா, ச.பவாநந்தம் பிள்ளை, எ.அரங்கசாமி ஐயங்கார் ஆகிய மூவரும் பத்திரிகை நடத்தும் பொறுப்பை ஏற்றுக் கொண்டாலும், மாதவையாவே இவ்விதழின் ஆசிரியராகத் திகழ்ந்தார்.
“ஒருவயது நிறையாத பெண் சிசுக்களுக்குள் முப்பத்தோரு விதவைகளும், ஒன்றுக்குமேல் இரண்டு வயதுக்குள் முப்பத்து நான்கு விதவைகளும், மூன்றுக்குமேல் நான்கு வயதுக்குள் நூற்று நாற்பது விதவைகளும், நான்குக்கு மேல் ஐந்து வயதுக்குள் முந்நூற்று எண்பத்து மூன்று விதவைகளும், பிற வயதுகளில் உள்ளோருமாகச் சேர்த்து மொத்தம் 23,068 விதவைகளும் 1911 ஜன சங்கைப்படி நம்முள் இருக்கின்றனர்… இது எவ்வளவு பிரஜா நஷ்டம்..?” என்கிற புள்ளிவிவரங்களோடு குழந்தை மணத்தால் விளையும் விதவையர் நிலையைப் எடுத்துக்காட்டி கட்டுரையொன்றை முதல் இதழில் எழுதினார் மாதவையா. பத்திரிகை தொடங்கப்பட்ட முதல் இரண்டு வருடங்களில், வருடத்திற்கு ஆறுமுறை வெளிவரும் இருமாதப் பத்திரிகையாக திகழ்ந்த இவ்விதழ், பிறகு மாதப் பத்திரிகையாக மாற்றப்பட்டது.
இதற்கிடையில், 1923ஆம் ஆண்டு ஆந்திராவில் நடைபெற்ற ஆசாரச் சீர்திருத்த மாநாடு ஒன்றிற்கு அவர் தலைமை தாங்க அழைக்கப்பட்டார். அம்மாநாட்டில் கலந்து கொண்டு அவர் ஆற்றிய உரை அங்கு கூடியிருந்த பலரது நெஞ்சத்தை கவர்ந்தது. அப்போது, அங்கு ஆந்திர பிரதேசத்தில் மிக அழகான முறையில் தயாரிக்கப்பட்டு வெளிவரும் பத்திரிகைகள் பலவற்றைப் பார்த்து, அவைகளைப் போலவே நமது தமிழ் நாட்டிலும் நல்ல பத்திரிகை ஒன்றை தொடங்க வேண்டும் என்று முடிவெடுத்தார். சென்னைக்குத் திரும்பி வந்து, நண்பர்கள் பலரோடு இதுகுறித்து விவாதித்தார். பத்திரிகைக்குப் ‘பஞ்சாமிர்தம்’ என்று பெயர் வைத்தார். 1924ஆம் ஆண்டு சித்திரை மாதம் ‘பஞ்சாமிர்த’த்தின் முதல் இதழ் வெளிவந்தது. ‘நான் ஒரு மானுடன்; நான் மதியாதன மானுட வாழ்வில் இல்லை’ என்கிற வரிகள் இவ்விதழின் மனிவாக்காக இடம் பெற்றிருந்தன. முதல் இதழின் தலையங்கத்தில் அவர் இப்படிக் குறிப்பிடுகிறார்.
“தமிழிலே மாதப் பத்திரிகைகள் பல வெளிவருகின்றன. எனினும் இவை பெரும்பாலும் ஒரு சில விஷயங்களையே கையாளுகின்றன. நமது நாகரிக வாழ்க்கைக்குரிய பல துறைகளிலும் தழுவி நடைபெறும் மாதப் பத்திரிக்கை, நான் அறிந்தவரை, ஒன்றேனும் தமிழில் இல்லை. இங்கிலீஷில் பலவும், வங்காளி, குஜராத்தி, தெலுங்கு முதலிய மொழிகளில் சிலவும், இத்தகைய பத்திரிகைகள் உள. மற்று எவ்விதத்திலும் இந்தப் பாஷைகளுக்குத் தாழாததும், இவையாவற்றிலும் மேலான பழம்புகழ் படைத்துமான நமது அருமைத் தாய்மொழிக்குள்ள இக்குறையை நிரப்புவது என்னினும் மிக்க அறிவும் படிப்பும் உள்ளவர் பணியாயினும், வேறு எவரும் முன்வராமையினால், நாட்டுப் பற்றும், பாஷாபிமானமும் உள்ள தமிழ் மக்களின் உதவியைக் கொண்டு உழைத்துப் பார்க்க துணிந்து, நான் முன்வர வரலானேன்.
“உண்மை, அன்பு, அறிவு, ஒற்றுமை, உழைப்பு என்னும் ஐந்தையும் கலந்ததாகும் இப்பஞ்சாமிர்தம். தமிழ் நாட்டிலும், தமிழ் மக்கள் குடியேறியுள்ள பிற நாடுகளிலும், ஆங்கிலம் அறியாத ஆண்மக்கள் பலர்க்கும், மாதர் சிறுவர் சிறுமிகளுக்கும், ஆங்கிலம் அறிந்தும் தமிழ்த்தாயைக் கைவிடாத சிலர்க்கும், நெடுநாளைய்த் தாம் புறக்கணித்து வந்த தாய் மொழியை மீண்டும் பயில ஆசைகொண்டுள்ளார்க்கும், தினசரிப் பத்திரிகைகளை வாங்கிப் படிக்கும் பணம் இல்லாதவர்க்கும் உரித்தாகும். நாடெங்கும் ஆங்கு ஆங்கு முளைத்தெழும் தேசிய உணர்ச்சிப் பயிருக்கு இப்பத்திரிகை மூலமாய் ஊக்க உரம் இட்டு, அறிவு நீர் பாய்ச்சி அவ்வுணர்ச்சியைத் தழைத்தோங்கச் செய்ய முயலுவது என முக்கிய நோக்கம். அறிய பெரிய இவ்வேலையில் எல்லோரும் அவரவர்க்கு இயன்றவரை கையுதவ வேண்டுகிறேன்..”
மானுடம் போற்றும் இதழாக ‘பஞ்சாமிர்தம்’, அரசியல், இலக்கியம், சமயம், வரலாறு, தத்துவம், சட்டம், கல்வி, கூட்டுறவு, கைத்தொழில் எனப் பல்வேறு துறைச் செய்திகளைத் தரங்கி வெளிவந்த இதழாகப் பரிணமித்தது. மொழி பெயர்ப்புத்துறையில் தனி ஈடுபாடுகாட்டி ‘இருமொழியாளன்’ என்னும் பெயரில் பல அரிய செய்திகளை இவ்விதழில் எழுதி வந்ததோடு, ‘கோணக்கோபாலன்’ என்ற புனைப்பெயரில் கதைகள், கட்டுரைகள், நாடகங்கள், இலக்கியத் திறனாய்வு, அரசியல் கட்டுரைகள் முதலியவற்றோடு, ‘பத்மாவதி சரித்திரத்தின் மூன்றாம் பாகத்தையும் அவ்விதழில் அவர் எழுதினார். அதே போல, சரிதைகள் எனும் தலைப்பின்கீழ் டானியன் பாதிரியார், ஸ்ரீராமாநுஜர், முகம்மது நபியின் சரிதம், தளவாய் அரியநாத முதலியார் குறித்து ‘தக்ஷிண சரித்திர வீரர்’ ஆகியோரின் அரியதொரு வாழ்க்கை வரலாற்றினையும் அவர் எழுதினார்.
ஆனால், மாதவையா நினைத்த அளவிற்கு அப்பத்திரிகைக்கு போதுமான ஆதரவு கிடைக்கவில்லை. தமது இந்த ‘பஞ்சாமிர்த’ பத்திரிகை முயற்சி பெருமுயற்சி என்பதையும், அது ஒரு தேசத்தொண்டு என்பதையும் அவர் உணர்ந்திருந்த போதிலும், சற்றும் மனம் தளராமல் அப்பத்திரிகைப் பணியில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு, தம்முடைய சௌகரியங்கள் ஒன்றையுமே கருதாது, உடல் உழைப்பையும் பணச் செலவையும் சுருக்காது, பலவகைச் சுவையோடு பஞ்சாமிர்த’த்தை ஒரு வருட காலம் சிறப்பாக நடத்தி வந்தார். ‘அப்போது, தமிழில் நடத்தப்பட்டு கொண்டிருந்த மாதப் பத்திரிகைகள் அனைத்திலும் அது பக்கங்களின் எண்ணினாலும், அடங்கிய விஷயங்களின் கெளரவத்தினாலும், பக்கங்கள் தோறும் நிரம்பிய பல்சுவை செய்திகளாலும், சித்திரங்களின் மிகுதியினாலும் ஒரு சிறந்த பத்திரிகையாகத் திகழ்ந்தது.
1925ஆம் வருடம், ‘பஞ்சாமிர்தம்’ பத்திரிகையின் இரண்டாம் ஆண்டின் இடையில், சென்னைப் பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினராக அக்டோபர் 22, 1925 அன்று மாதவையா தேர்வு செய்யப்பட்டார். அன்று அங்கு நடந்த கூட்டத்தில், தமிழைக் கட்டாய பாடமாக இளங்கலை (B.A) பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று பேசிக் கொண்டிருக்கும் போது திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். மாதவையாவின் மறைவிற்குப் பிறகு இரண்டு இதழ்கள் வந்ததோடு, ‘பஞ்சாமிர்தம்’ நின்று போனது.
வ.வே.சு.ஐயரின் ‘பாலபாரதி’
உலக மகாயுத்தம் முடிகிற வரையில் வ.வே.சு.ஐயர் புதுச்சேரியிலேயே வசிக்கும்படி ஆயிற்று. இக்காலக்கிரமத்தில் இலக்கியப் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்த அவர், சில அன்பர்களுடைய ஒத்துழைப்பைக் கொண்டு ‘கம்ப நிலையம்’ என்ற ஒரு ஸ்தாபனத்தைத் தோற்றுவித்தார். அதன் வாயிலாகச் சில நல்ல நூல்கள் வெளிவரத் தலைப்பட்டன. பல மொழிபெயர்ப்பு நூல்களையும் வெளியிட்டார். இவற்றுள், குறளும், எமர்ஸனின் தன்னம்பிக்கையும் முதன்மையானவை. மங்கையர்க்கரசியின் காதல் உள்ளிட்ட சிறுகதைகள், சந்திரகுப்த சரித்திரம், புக்கர் வாஷிங்டன், கரிபால்டி (அரசாங்கத்தால் பிடிக்கப்பட்டது) முதலிய நூல்களையும் எழுதி இலக்கியத் துறைக்குப் பங்களித்தார். ஆனால் இவற்றோடு ஐயர் திருப்தியடையவில்லை. தமிழில் நல்லதொரு மாதப் பத்திரிகை தொடங்கி நடத்த வேண்டும் என அதீத விருப்பம் கொண்டிருந்தார். வங்காளியில் ‘ப்ரவாசி’யென்றும் ஆங்கிலத்தில் ‘மாடர்ன் ரிவ்யூ’ என்றும் மாதப் பத்திரிகை போல் தமிழிலும் ஒன்று இருந்தால், தமிழில் எல்லாத் துறைகளிலும் இலக்கியங்கள் உண்டாக்கலாம் என அவர் எண்ணினார்.. இப்படித் தமிழ்மொழிக்கு ஆக்கந்தேடும் முறையில் நிறைய கனவுகள் கண்டதோடு பல திட்டங்களையும் வகுத்தார். அதோடு தமது நோக்கத்தைத் தெளிவுறக் காட்டி தமிழன்பர்கள் பலருக்குச் சுற்றறிக்கைள் விடுத்துக் கொண்டிருந்தார். ஆனால் அவர் எதிர்பார்த்தபடி பெரிதாக பலன்கள் கிட்டவில்லை. தமது நோக்கங்கள் நிறைவேற அவர் எதிர்பார்த்ததெல்லாம் அக்காலக்கிரமத்தில் சுமார் மூவாயிரம் ரூபாய்தான். ஆனால் இந்தச் சொற்பத் தொகை கிடைப்பது அப்போது அரிதாயிருந்தது.
1920ஆம் ஆண்டு பிப்ரவரியில் புதுச்சேரியில் இருந்து வெளியேறிய ஐயர் நான்கு மாத காலங்கள் இந்தியா முழுவதும் யாத்திரை செய்தார். தாகூரின் சாந்தி நிகேதனம், காந்தியின் சபர்மதி ஆசிரமம் ஆகியவைகளை சென்று பார்த்ததன் விளைவாக, தமிழ்நாட்டிலும் இதே போன்றதொரு குருகுலத்தை நிறுவ வேண்டுமென்ற எண்ணத்தை ஏற்படுத்திக் கொண்டார். 1920இல் ஜூலை மாதத்தின் இறுதி நாளில் ‘தேசபக்தன்’ இதழாசிரியராகப் இணைந்து பதினான்கு மாத காலங்கள் பணியாற்றினார். இக்காலத்தில் ஐயர் எழுதிய கட்டுரைகள் பலவும், சத்தியாகிரக இயக்கத்திற்கு ஆக்கந் தருவனவாகவும், சுய ராஜ்யம் அடைவதற்கான வழிமுறைகளை வகுத்துக் கொடுப்பனவாகவும், பாரத தேசப் பண்பாட்டை விளக்குவனவாகவும் இருந்தன.
1921ஆம் வருஷம் மே மாதம் ஆறாந்தேதி ‘தேசபக்தன்’ இதழில் ‘அடக்கு முறை’ என்ற தலைப்பில் தலையங்கம் வெளியானது. இதனை ஐயர் எழுதவில்லை என்பதோடு இத்தலையங்கம் வெளியான சமயத்தில் அவர் ஊரிலும் இல்லை. இருப்பினும், இது சம்பந்தமாக ‘தேசபக்தன்’ இதழின் பொறுப்பாளார்கள் என்ற வகையில் ஸ்ரீமான்கள் வெ.ராஜகோபாலாச்சாரியார், வ.வே.ஸு. ஐயர், டி.மகாலிங்க ஐயர், எஸ்.நாகேசுவர சாஸ்திரி ஆகிய நால்வர் மீதும் இ.பி.கோ.124 ஏ பிரிவின்படி வழக்குத் தொடரப்பட்டு விசாரணை நடைபெற்றது. ஐயர் தவிர, மற்ற மூவரும் மன்னிப்புக் கேட்டு அரசாங்கத்தாருக்கு எழுதிக் கொடுக்க, விடுதலை செய்யப்பட்டனர். ஐயர் மீது மட்டும் வழக்கு நடத்தப்பட்டது. மாஜிஸ்ரேட்டின் குற்றப்பத்திரிகைக்குப் பின்னர், ஐயர் 17-9-1921-இல் கீழ்க்கண்ட வாக்குமூலத்தைச் சமர்ப்பித்தார்.
1.இந்தியாவின் பாரமார்த்திகப் பெருமையை நிலை நாட்ட முயற்சி செய்து வரும் ஆயிரக்கணக்கான ஜனங்களுடன் நானும் சேர்ந்து உழைத்து வருகிறேன். இத்தேசத்திற்குச் சுய ராஜ்யம் ஏற்படுகிற வரையில் அத்தகைய பாரமார்த்திக விழிப்பு ஏற்பட முடியாதென்று நான் நம்புவதால் ராஜீயத்துறையிலும் நான் உழைத்து வருகிறேன்.
2. எனது தேசம் சுயராஜ்யம் பெற இது வரையில் செய்துவந்த பலவித கிளர்ச்சிகளும் பயனற்றுப் போய்விட்டதால், காங்கிரஸ் மகாசபையின் கட்டளையை அனுசரித்து அரசாங்கத்துடன் ஒத்துழையாமை தர்மத்தைக் கைக்கொண்டிருக்கிறேன். எனது தாய்நாடு விடுதலை பெற அதுவே மார்க்கமென்பது எனது நம்பிக்கை. இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்கும் நீண்ட காலமாக இருந்து வந்திருக்கும் சம்பந்தத்தை வைத்துக்கொள்வதும் விட்டு விடுவதும் இங்கிலாந்தையே பொறுத்தது.
3. இந்தக் கோர்ட்டில் தலைமை வகித்துவரும் மாஜிஸ்ட்ரேட் நிஷ்பட்சபாதமானவராயினும், விசாரணையிலுள்ள விஷயங்களில் எனக்குள்ள சம்பந்தத்தைத் தெரிவித்துக் கொள்வதைத் தவிர, வேறு நடவடிக்கைகளில் கலந்துகொள்ள நான் இஷ்டப்படவில்லை. கோர்ட்டார் இஷ்டப்பட்டால் அவை உண்மையாவென்று விசாரித்துக் கொள்ளலாம்.
4. 1920-ஆம் வருஷம் செப்ட்டம்பர் மாதம் ஐந்தாந் தேதிவாக்கில் 1,4-ஆவது எதிரிகள் (வெ. ராஜகோபாலாச்சாரியும் எஸ். நாகேசுவர சாஸ்திரியும்) தேசபக்தளையும் பிரிட்டிஷ் இந்தியா அச்சுக் கூடத்தையும் ஸ்ரீமான் எம். எஸ். காமத்தினிடமிருந்து வாங்கினார்கள். நான் அக்காலத்தில் ‘தேசபக்தன்’ ஆசிரியராக இருந்தேன். 1, 4 எதிரிகள் என்னுடன் ஆசிரிய ஹோதாவைப்பற்றி எவ்வித ஒப்பந்தமும் செய்துகொள்ளவில்லை. நான் முன்போலவே பத்திரிகைக்கு எழுதி வந்தேன்.
5. இவ்வருஷம் (1921) பிப்ரவரி மாதம் ஒன்பதாந்தேதி ‘தேசபக்தன்’ பத்திரிகை பிரசுரமாகாமல் நின்றுவிட்டது. கூட்டுச் சொந்தக்காரர்களான 1, 4 எதிரிகள், என்னை ஆசிரிய பதவியிலிருந்து விலக்கி அச்சுக்கூடம் முதலியவற்றைப் பதிவு செய்ய மூன்றாவது எதிரியின் (டி. மகாலிங்க ஐயர்) மூலமாக பிரசிடென்சி மாஜிஸ்ட்ரேட்டுக்கு விண்ணப்பம் செய்துகொண்டதாகத் தெரிகிறது.
6. இதைப்பற்றி எனக்கு ஒன்றுஞ் சொல்லவில்லை. மறுபடி பத்திரிகை பிரசுரமாக ஆரம்பித்ததும், முன்போலவே நான் ஆசிரிய வேலை செய்து வந்தேன். ஐந்தாவது பாராவில் கண்ட விஷயங்கள் எனக்கொன்றும் தெரியாது.
7. ஜூன் மாதக் கடைசி வரையில் மற்ற எதிரிகள் ஆசிரிய போர்டு விஷயமாக என்னைக் கலந்து கொள்ளவில்லை. இந்தச் சமாசாரம் தெரிந்தவுடனே 1, 4-ஆவது எதிரிகளை அதற்கு என்ன அர்த்தமென்று கேட்டேன். ஆசிரியர் போர்டானது உத்தேசிக்கப்பட்டபடி அனுஷ்டானத்திற்கு வரவில்லையென்றும். பாரதா பிரிண்ட்டிங் அண்ட் பப்ளிஷிங் கம்பெனி டைரெக்ட்டர்களின் அடுத்த கூட்டத்தில் அதை ரத்து செய்துவிடும்படி தீர்மானம் கொண்டு வருவதாகவும் 1-ஆவது எதிரி எனக்கு உறுதி கூறினார்.
8. 1, 4 எதிரிகள் தேசபக்தனை வாங்கிய கால முதலாகவே என்னுடைய சேவை தேவையாயிருந்தால் என்னை ஆசிரியராக நியமித்திருப்பதாக உத்தரவு கொடுக்கும்படி கேட்டு வந்தேன். ஆனால் அவர்கள் அவ்விதம் செய்யாமல் ஒத்திப்போட்டுக் கொண்டு வந்தார்கள். பிறகு ஜூலை மாத ஆரம்பத்தில். எந்தெந்த நிபந்தனைகளின் பேரில் நான் ஆசிரியராக இருக்க முடியுமென்று எழுதி முதலாவது எதிரியிடம் அதைக் கொடுத்தேன். அதில் சில ஷரத்துக்களை அவர் அடித்துவிட்டார். அவை முக்கியமானவையென்று நான் கருதியதால். அடித்த பாகங்களை மீண்டும் சேர்க்க வேண்டுமென்று கடிதம் எழுதினேன். அவர், சட்ட நிபுணரிடம் கலந்து யோசிப்பதற்காக அதை 4- வது எதிரியிடம் கொடுத்தார்.
9. ஆயினும் 1, 4-ஆவது எதிரிகளுக்குள் அபிப்பிராய பேதமேற்பட்டது. அதை ராஜி செய்து வைக்க நான் செய்த முயற்சிகளை, முதலாவது எதிரி தப்பாக அர்த்தம் செய்துகொண்டு ஜூலை மாதம் 16-ஆம் தேதிவாக்கில் எனக்கு ஒரு நோட்டீஸ் கொடுத்தார். அதில் நான் ஆசிரியரென்று குறிப்பிடவில்லை.
10. அன்றுதான், மற்றொரு சொந்தக்காரர் என்னை ஆசிரியராக நியமித்திருப்பதாக எழுத்து மூலமான உத்தரவு கொடுத்தார். 1.4 எதிரிகள் தேசபக்தளை ஒப்புக்கொண்ட காலமுதல், முதன் முதலாக அந்த உத்தரவுதான் எனக்குக் கிடைத்திருக்கிறது.
11. ஆயினும் 1, 4 எதிரிகளுக்குள் அபிப்பிராய பேதம் பெருகி வருவதாக உணர்ந்து தேசபக்தனிலிருந்து நான் விலகிவிட வேண்டுமென்று நினைத்து, அதற்கடுத்த நாள் சட்டபூர்வமாக மானேஜரான 1-ஆவது எதிரிக்கு நோட்டீஸ் கொடுத்தேன்.
12. அந்த நோட்டீஸ்படி ஆகஸ்ட் மாதம் 16-ஆம் தேதி தேசபக்தனிலிருந்து நான் விலகிவிட்டேன். அன்றைய பத்திரிகைகளிலும் இவ்விஷயம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
13. இந்த வழக்கிற்கு ஆதாரமான வியாசத்தை நான் எழுதவில்லை. உய்யக்கொண்டான் சிறுவயலிலிருந்து வந்திருந்த அழைப்புக்கிணங்கி நான் மே மாதம் முதல் தேதி சென்னையை விட்டுப் புறப்பட்டுச் சென்று, மே மாதம் 2, 3 தேதிகளில் வருஷாந்தக் கூட்டத்தில் தலைமை வகித்தேன். 4, 5-ஆம் தேதிகளில் காரைக்குடியில் பிரசங்கங்கள் செய்தேன். திருச்சிராப்பள்ளியில் சில தினங்கள் தங்கிவிட்டு மே மாதம் 9-ஆந் தேதி வரையில் நான் தேசபக்தனுக்கு ஒன்றும் எழுதவில்லை.
14. 6-ஆம்தேதி பிரசுரமான வியாசத்தின் அசல் லிங்கி செட்டித் தெரு 307-ஆம் நெம்பர் வீட்டிலிருக்கும் ஸ்ரீ எம். கே.சீனிவாசனிடத்தில், 1, 2, 4 எதிரிகள் கைது செய்யப்பட்ட பிறகு ஒப்புவிக்கப்பட்டதாக நான் அறிகிறேன். அரசாங்கத்தார், நீதித்தவறு ஏற்படாமலிருக்க விரும்பினால் அவரை விசாரித்துக் கொள்ளலாம்.
15. பிரஸ்தாப விஷயத்தை நான் இப்பால் வாசித்துப் பார்த்தேன். அதில் இ.பி.கோ.124ஏ பிரிவின்படியாவது வேறு பிரிவுகளின்படியாவது வரக்கூடியது எதுவுமில்லை. மொழிபெயர்ப்பும் பல இடங்களில் சரியாக இல்லை. அரக்க வம்சத்திற்கு அரக்க ஜாதி என்று பொருள்படும்படி ஜெனரல் டயரைப் பற்றி பிரஸ்தாபிக்குமிடத்தே மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.
16. எனவே பிரியாதில் கண்ட குற்றங்களை நான் செய்யவில்லை. ஆயினும் நான் குற்றவாளியென்று கோர்ட்டார் அபிப்பிராயப்படும் பட்சத்தில் எனக்குக் கொடுக்கப்படும் சிட்சையை சந்தோஷத்துடன் ஏற்றுக்கொள்கிறேன்.”
பின்னர், இவ்வழக்கில் 19-9-1921 அன்று தீர்ப்புக் கூறப்பட்டு, ஐயருக்கு ஒன்பது மாத தண்டனை விதிக்கப்பட்டது. மாஜிஸ்ட்ரேட் தீர்ப்பை வாசித்து முடித்ததும் வ.வே.சு.ஐயர் மகிழ்ச்சியுடன் தண்டனையை ஏற்றுக் கொண்டு ‘இது பாரத மாதாவின் சங்கற்பம்’ என்று கூறினார்.
சென்னை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஐயர், சில நாட்களுக்குப் பிறகு பெல்லாரி சிறைக்கு அனுப்பப்பட்டார். இச்சிறைவாச காலத்தில் கம்பராமாயண ஆராய்ச்சி நூலை (Study of Kamban) எழுதி முடித்தார். 1922ஆம் ஆண்டு ஜூன் மாதம் பெல்வாரி சிறையிலிருந்து வந்ததும், துங்கபத்திரா ஆசிரமத்திலிருந்த தமது குடும்பத்தை அழைத்து வந்து, வரகனேரியில் விட்டு விட்டு, கோவில்பட்டியில் நடந்த திருநெல்வேலி ஜில்லா சபைக்குத் தலைமை வகித்தார். பிறகு, கல்லிடைக்குறிச்சி திலகர் வித்யாலயத்தின் தலைவரானார். அதைச் சார்ந்து ஒரு குருகுலத்தை ஏற்படுத்தி நடத்தி வந்தார். இக் குருகுலமானது, தமிழர்களுக்கே சொந்தம், தமிழ் மொழிக்கே பீடம் என்று அங்குரார்ப்பணம் செய்து கொண்டு தனித் தமிழனாகவும் தமிழ்க் குருவாகவும் விளங்கினார். அக்குருகுலத்தை நடத்த பரத்துவாஜ ஆசிரமம் என்ற தனிகுழு ஒன்றையும் அவர் ஏற்படுத்தினார். அதன்பின், 1923ஆம் ஆண்டில் சேரன்மகாதேவியில் 31 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டு, பாரத்துவாஜ ஆசிரமமும், குருகுலமும் அங்கு மாற்றப்பட்டது. இக்குருகுலத்திலிருந்து 1924-ஆம் ஆண்டு ஐப்பசியில் ‘பாலபாரதி’ என்ற மாதப் பத்திரிகை வெளிவரத் தொடங்கியது. மேல்நாட்டு இலக்கியங்களையும் கீழ்நாட்டு இலக்கியங்களையும் தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்க வேண்டுமென்ற ஐயருடைய ஆவல் இதன்மூலம் சிறிது சிறிதாக நிறைவேறி வந்தது. ‘நமது பத்திரிகை’ என்ற தலைப்பில் வெளியான இவ்விதழின் முதல் தலையங்கத்தில் இப்படிக் குறிப்பிடுகிறார்.
“இது பத்திரிகாயுகம். இங்கிலாந்திலும், அமெரிக்காவிலும், ஜெர்மனியிலும் எண்ணத் தொலையாத பத்திரிகைகள் வெளியாகின்றன. நம் நாட்டில் இப்பொழுதுதான் பத்திரிகைகள் அதிகமாக வெளிவர ஆரம்பித்திருக்கின்றன. இன்னும் அனந்தமான பத்திரிகைகள் தோன்றி தமிழ்நாட்டாருக்குப் புதிய விஷயங்களின் அறிவும் ஆனந்தமும் புகட்ட வேண்டும் என்பதே எமது ஆசையாக இருப்பதால், நாம் இப் புதிய பத்திரிகையை வெளிப்படுத்தத் துவங்குவதற்கு யாரும் வேறு காரணங்கள் கேட்கமாட்டார்கள் என நம்புகிறோம்.
வெண்டாமரையில் வீற்றிருக்கும் எம் பிராட்டியின் பேரை இப்பத்திரிகைக்கு வைத்துளோம். எதற்காகவெனின், இதில் சொற்பொழிவு பொழியும் ஆசிரியர்களுக்கு அவர்களுடைய வியாசங்களைத் துவக்கும் போதே சரஸ்வதியின் திருவுருவம் அவர்களுடைய நெஞ்சகத்தில் எழவேண்டும் என்றும், இதைப் படிக்கும் நேயர்கட்கு லௌகீக அறிவையும், பாரமார்த்திக அறிவையும் ஒருங்கே தருபவளான வாக்குதேவியின் ஸ்மரணை அடிக்கடி ஏற்பட வேண்டும் என்றுமே. தன் பெயரைக் கொண்ட இச் சிறு மாதப் பத்திரிகையை, சகல வேதங்களுக்கும், சகல சாஸ்திரங்களுக்கும், சகல மந்திரங்களுக்கும், சகல தந்திரங்களுக்கும் தலைவியாக இருக்கிற கலை மடந்தை தன் பொற் கோயிலாகக் கொண்டு, அதில் நித்தியவாசம் செய்து, எம்மனோர் அனைவரையும் நிறை ஞானமுள்ளவர்களாக ஆக்க வேண்டும் என்று பிரார்த்திப்போம்.
எம் பிராட்டிக்கு ஆயிரம் ஆயிரம் நாமங்கள் இருக்கையில் ‘பாரதி’ என்ற பெயரை ஏன் தெரிந்து கொண்டோமென்றால், அத் திருநாமம் எமது நண்பரும், இன்றைக்கு இருபது வருஷங்களுக்குமுன் தமிழ்நாட்டுக்குப் புத்துயிர் அளிக்க முயன்ற புண்யாத்மாக்களில் ஓர் பிரமுகருமான காலம் சென்ற ‘சி.ஸுப்ரஹ்மண்ய பாரதி’யின் ஞாபகம் இம் மாஷிகையைப் படிக்கும் அனைவர் மனதிலும் என்றும் அழியாமல் பசுமையாக இருந்து வரவேண்டுமென்றே யாகும்.
இப்பத்திரிகை சேர்மாதேவி தமிழ்க் குருகுலத்தின் வாயிலாக தோன்றுகிறது. தமிழ்க் குருகுலத்தின் நோக்கம் தனது இணையற்ற பேராற்றல் குலைந்து போயிருக்கிற தமிழுக்கு அதன் இயற்கையான முதன்மை ஸ்தானத்தைத் தந்து, புராதன கலைகளுக்குப் போலவே, இக்காலத்துக் கலைகளுக்கும் அதைப் பெரியதோர் நிலயமாக ஆக்க வேண்டும் என்பதும், தமிழ் மக்களுக்குப் பூரணமான கல்வி – அதாவது, இலக்கிய கல்வியோடு விசுவகர்ம கலைகளும் – கற்பிக்கவேண்டும் என்பதுமே. அந் நோக்கத்திற்கேற்ப, இப்பத்திரிகையில், சீனத்தினின்று பெரு தேசம் வரையிலுள்ள சகல நாடுகளிலும் பூத்த இலக்கியங்களைப் பற்றிய ஆராய்ச்சிகளை வெளிப்படுத்த முயலுவோம். சங்க காலம் முதற்கொண்டு இந்நாள் வரையிலுமுள்ள தமிழ் இலக்கியங்களின் விமரிசனங்கள் வெளியிடப் பார்ப்போம். ஐரோப்பா அமெரிக்காவிலுள்ள வீர தீர விசுவகர்மர்களின் ஆச்சரியகரமான செயல்களைப் பற்றி இப்பத்திரிசையில் அப்போதைக்கப்போது சூக்ஷ்மமாக வர்ணித்தெழுதுவோம். ஆயுர்வேதம், யூனானி, ரண சிகிச்சையில் தற்காலத்துச் சல்லீய நிபுணர்கள் செய்திருக்கிற அத்தியாச்சரியமான வேர்கள், இயற்கை வைத்தியம், முதலிய வைத்திய முறைகளைப்பற்றி எழுதுவோம். உலகத்தில் வீரச் செயல்கள் செய்து என்று மழியாப் புகழ் படைத்து வைத்திருக்கும் ஆத்மவான்களின் வாழ்க்கைகளைப் பற்றிய குறிப்புக்கள் நமது ‘பாரதி’யை அலங்கரிக்கும். புதிய கதைகளையும், உயர்ந்த கதைகளின் பாஷாந்தாங்களையும் கதாப்பிரியர்கள் ஆனந்திக்கும்படி இப்பத்திரிகை தாங்கி நிற்கும். ஒவ்வோர் மதத்தின் விமரிசனமும், உலகத்தின் ரிஷிகள், நபிகள், நாதாக்கள் ஆகிய பெரியோர்களின் திவ்விய சரித்திரமும் நமது பத்திரிகையில் அப்போதைக் கப்போது தோன்றிப் படிப்போரின் இருதயத்தை விரியச்செய்யும். ஏனெனில், எமது நேயர் அனைவரும் ஆத்தியாத்மிக வாழ்க்கையின் சுவையை அறிந்து தங்கள் வாழ்க்கையை ஆத்தியாத்மிக வழியில் திருப்பவேண்டும் என்பது எமது நோக்கங்களில் முக்கியமானதாகும். ராஜ தந்திரத்தையும் நாம் மறக்கமாட்டோம். ராஜதந்திர சாஸ்திரத்தைப் பற்றி அப்போதைக்கப்போது எழுதி வருவதுடன் ஒவ்வோர் மாதத்திலும் உலகத்திலும் நம் நாட்டிலும் நடைபெறும் சம்பவங்களைப் பற்றி நமது அபிப்பிராயத்தைக் குறித்து வருவோம். சுருங்கச் சொல்லில், உலகத்தில் அறியவேண்டிய விஷயங்களனைத்தையும் பற்றிப் பெரிய வித்துவான்களும், நாவலர்களும் “பாலபாரதி”யில் எழுதி அதை ஓர் விசுவ வித்தியா நிலயமாக ஆக்குவார்கள். எம் உத்தேசங்களும் நோக்கங்களும் நிறைவேறுமாறு இறைவி திருவருள் புரிக என்று பிரார்த்தித்துக் கொண்டு தமிழ்த் தாயின் மடியில் இன்று நாம் தோன்றியுள்ளோம்…”
‘ஓர் உயர்ந்த மாதப் பத்திரிகை’ என்கிற அடைமொழியுடன் வெளிவந்த ‘பாலபாரதி’ இதழானது, ஐயரின் கட்டுரைகள், ஆனந்தரங்கம் பிள்ளையின் குறிப்புகள், சாவர்க்கரின் கடிதங்கள், சுத்தானந்த பாரதியின் கட்டுரைகள் மற்றும் சரமகவிகள் உள்ளிட்ட பல்வேறு படைப்புகளைத் தாங்கி வந்தது. குறிப்பாக, ஐயரின் பெயர் குறிப்பிடாமல் வெளிவந்த ‘ராஜகோபாலன் கடிதங்கள்’ பன்முகப்பார்வை கொண்டவையாகத் திகழ்ந்தது. ஓர் கதைசொல்லியின் தொனியில் எழுதப்பட்டுள்ள இக்கடிதங்கள் ரொம்ப சுவாரஸ்யமானவை. தமிழ்ச் சிறுகதைகளுக்கு மட்டுமல்லாமல், கடித இலக்கியத்திற்கும் ஐயரே முன்னோடியாகத் திகழ்ந்துள்ளார் என்பதற்கு இந்த ‘ராஜகோபாலன் கடிதங்க’ளை ஒரு முன்னுதாரணமாகக் கொள்ளலாம். துரதிருஷ்டமாக, ஐயரின் இந்த இதழியல் பயணம் நெடுநாட்கள் நீடிக்கவில்லை. 1925ஆம் ஆண்டு ஜூன் 3ந் தேதி பாபநாசம் அருவியைக் காண குருகுல மாணவர்களை அழைத்துச் சென்றார். உடன் ஐயரின் புதல்வி சுபத்ராவும் மகன் கிருஷ்ணமூர்த்தியும் சென்றனர். அங்கிருந்த கல்யாண தீர்த்தத் தடாகத்திற்குச் சென்ற போது மகள் சுபத்ரா கால் தவறி அருவியில் விழ, அவளைக் காப்பாற்றச் சென்ற ஐயரும் அருவியில் தவறி விழுந்தார்.
நாட்டுக்காகச் சகல போகங்களையும் துறந்து வறுமையை மேற்கொண்ட தேசபக்தராகத் திகழ்ந்த வ.வே.சு.ஐயர் வாழ்ந்தது 44 ஆண்டுகள் தான். 1908இல் எழுதத் தொடங்கி,கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் இலக்கியத்துக்கு அவர் ஆற்றியுள்ள பணிகள் இணையற்றவை. அவரது மறைவைக் கேள்வியுற்ற காந்தியடிகள், “விடாப் பிடிவாதத்துடன் தேசத் தொண்டு செய்த உண்மை ஊழியர் மறைந்தார்” என வருந்தினார். ‘ஆசாரியர் வ.வே.சு.ஐயர்’ எனும் தலைப்பில் தனது இரங்கலை ‘பஞ்சாமிர்தம்’ இதழின் தலையங்கத்தில் இப்படிக் குறிப்பிடுகிறார் அ.மாதவையா.
“புடமிட்ட பொன் ஒளிருவது போல, ஸ்ரீமான் வரதராஜூலு நாயுடு கிழப்பிவிட்ட குருகலப் போராட்டத்திலே, இவர் காட்டிய சாந்தகுணமும், தியாகபுத்தியும், இவரது பெருந்தன்மையை நன்று விளக்கின. தன அருமு மகளுடன் இவர் திடீரென அருவிக்கு இரையாகி மறைந்த செய்தியைக் கேட்டுத் தமிழ் நாடனைத்தும் கிளர்ந்தோங்கிய அநுதாபமும் ஆறாத்துயரமும், பத்திரிகைகளில் வெளிவந்த இவரது சரித்திர விவரங்களும், எத்துணைப் பெரியோர் இவர் என்பதைப் பின்னும் விளக்கலாயின. தான் மற்றொருவர் என்று சொல்லிப் போலீஸாரை ஏமாற்றி, இவர் இங்கிலாந்தை விட்டுப் பிரான்ஸுக்குத் தப்பியோடியதை, சில பத்திரிகைகள் வியந்துகூறின. இது புகழத்தக்கதேயோ என்ற ஐயம் மனத்தில் உதிக்கலாம். ஆயினும் போலீஸ் முதலிய சர்க்கார் உத்தியோகங்களில், இப்படிப்பட்ட பொய்களும், ஏமாற்றுக்களும், சிலவேளைகளில் கடமைகளாகி விடுவதை எண்ணிப் பார்த்தால், தேசத்தொண்டுக்காகத் தன் சுவாதீனத்தைக் காப்பாற்ற விரும்பி, இவ்வாறு ஒழுகுவதையும், கடமையென நினைக்கலாகும். இவர் வெளியிட்ட கம்பராமாயணப் பகுதியைப் படிதட போது, சாதாரணப் பண்டிதர்களைப் போலாது, உண்மைக் கவிநயச் சுவையறிவதில் இவர் கைவல்லவர் என்பது கலங்கிற்று. கல்வியறிவும், நாட்டுப்பற்றும், வீரமும் அமைதியும் ஒருங்கு சேர்ந்தமைந்த இவர் போல்வார் எந்நாட்டிலுமே அறியராவர்; நமது தென்னாட்டிலோ, முயற்கொம்பென்னலாம். இப்படிப்பட்ட பெரியோரை இழந்தது நமது துர்பாக்கியமே. பத்திரிகைகள் ஒன்றேனும், இவர் பிறந்த ஆண்டு, பெற்றார், உற்றார், இளம்பருவ நிகழ்ச்சிகள் முதலியவற்றைப் பற்றிக் கூறவில்லை. நம்மவர் ஜீவிய சரித்திரங்களில் இது ஒரு பெருங்குறையாம். இப்பொழுதே இவர் சரித்திரத்தைப் பற்றி முழு விவரங்களையும் விசாரித்துத் தெளிந்து, இவர் பெற்று விட்ட ‘பாலபாரதி’யின் வாயிலாக விரிவாய் எழுதி வெளிப்படுத்துதல், நமக்கும் பிற்காலத்தவர்க்கும் பயன்படும்; இவரைப் பெருமதிக்கும் இக்காலத்தவர் கடமையுமாகும். “நொடிப் பொழுதிலே மணவாளனையும் மகளையும் இழந்த ஐயரின் மனைவியாருக்கு போதிய பொறுமை உண்டாவதாகுக! இவர் ஆன்மாவும், சுபத்திரையின் ஆன்மாவும், அமைதி அடைக! உரிய காலத்திலே, மீண்டும் இவர் தமிழகத்தில் தானே பிறந்து, தான் இவ்வளவு நேசித்து வந்த நாட்டுக்காகப் பின்னும் உழைத்து மகிழ்வாராகுக..!”
ஐயரின் மறைவிற்கு பிறகு சுத்தானந்த பாரதியை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த ‘பாலபாரதி’ இதழ் சில மாதங்களிலேயே நின்றுபோனது.
“வானமே இடிந்து விழுந்தாலும் அலட்சியம் செய்து நின்று எளியோர், அநியாயங்களுக்கு உட்படுத்தப்பட்டோர், அறிவீனர், பலவீனர் ஆகிய இவர்களை ஆதரித்து, தர்மத்தையும் சத்தியத்தையும் சாந்தத்தையும் சமாதானத்தையும் ஸ்தாபிக்கக் கடமைப்பட்டவர்கள் ஆவார்கள்,,” என இதழாசிரியர்களின் கடமை குறித்து ‘ஞானபாநு’வில் சிவா சொல்லியிருப்பதை கருத்திற் கொள்கிற போது, இம்மூவருமே சிறந்த பத்திரிகை ஆசிரியர்களாகத் திகழ்ந்து நல் இலக்கியம் படைத்தவர்கள். பல்வேறு அகப்புறச் சூழல்களால் இவர்கள் நடத்திய இப்பத்திரிகைகள் நெடுங்காலங்கள் தொடர்ந்து வெளிவராது நின்று போயிருந்தாலும் கூட, இந்தப் பத்திரிகைகள் அனைத்தும் அக்காலக்கிரமத்தில் பத்திரிகைத்துறைக்கு சிறந்த முன்னுதாரணங்களாகவும், எடுத்துக் காட்டுகளாகவும் விளங்கின. வாசகர்கள் விரும்புகின்ற விஷயங்களை அளிப்பது என்பது உயர்ந்த பத்திரிகைகளின் லட்சியம் அன்று. மாறாக, வாசகர்கள் விரும்பவேண்டிய விஷயங்கள் இவை என அறிந்து, அவைகளை சீரிய முறையில் அளித்து வந்தவைகள் என்ற முறையிலே இம்மூவர் நடத்திய பத்திரிகைகளும், அதன் இதழாசிரியர்களாக திகழ்ந்த இவர்களும் போற்றுதலுக்குரியவர்கள்.
இம்மூவரின் நினைவு நூற்றாண்டு தினங்கள் என்ற வரிசையிலே, வ.வே.சு.ஐயர், சுப்பிரமணிய சிவா மற்றும் மாதவையா ஆகியோரின் நினைவு நூற்றாண்டு தினங்கள் கடந்த ஜூன் 3, 2025, ஜூலை 3, 2025 மற்றும் அக்டோபர் 22, 2025 ஆகிய நாட்களில் முறையே நிறைவுற்றிருக்கின்றன.
Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
