ராஜீவனுடைய நினைவஞ்சலிக் கூட்டத்தில் பேசுவது ஒரே சமயத்தில் துக்கமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. நண்பனை இழந்த துக்கம் ஆயுள்முழுவதும் நீடித்திருக்கும். அவரை நினைவுகூர்வதில் மகிழ்ச்சி.
அவர் இறந்த ஆண்டு, திருவனந்தபுரத்தில் நடந்த அஞ்சலி நிகழ்விலும் பேச அழைத்திருந்தார்கள். எங்கள் நட்பு, எங்களுக்குள் மட்டுமில்லாமல் எல்லாருக்குமே தெரிந்திருப்பதற்கான சான்று இவை என்று மகிழ்ச்சிகொள்கிறேன். அவர் தொடர்பான கூட்டங்களுக்கு என்னை அழைப்பதை, பேசச் சொல்வதை எங்கள் நட்புக்கான கவுரவமாகவே கொள்கிறேன்.

முந்தைய கூட்டத்தில் பேசும்போது, உணர்ச்சிமயமாய் இருந்தேன். ஓரிரு வாரங்களுக்கு முன்புதான் ராஜீவன் காலமாகியிருந்தார். அதிர்ச்சியிலிருந்து நான் முழுக்க விடுபட்டிருக்கவில்லை. அப்புறம், வழக்கமாக எல்லாரும் சொல்கிற மாதிரி, காலம் என்பது மிகப் பெரிய வைத்தியன் இல்லையா. இப்போது, உணர்ச்சிகள் ஓரளவு வடிந்து, ராஜீவனைப் புறவயமாக மதிப்பிடுவதற்கான இடைவெளி எனக்குக் கூடியிருக்கிறது.
இந்த உரையை இரண்டு பகுதிகளாகப் பிரித்துக்கொள்கிறேன். ராஜீவனுடனான நட்பு, அவருடன் அறிமுகமான விதம், எங்கள் முதல் சந்திப்பு என்பவற்றை முதலில் சொல்லிவிட்டு, இரண்டாவது பகுதியில், அவருடைய கவிதைகள் பற்றிய சில கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள நினைக்கிறேன்…
ராஜீவனை முதன்முதலில் பார்த்தது, குற்றாலத்தில் ஜெயமோகன் கூட்டிய இருமொழிக் கவிதை அரங்கில். தமிழ்க்கவிஞர்கள் ஐந்தாறு பேர், மலையாளக் கவிகள் ஐந்தாறு பேர், மொழிபெயர்ப்பாளராக ஜெயமோகன், வழிநடத்த தமிழிலிருந்து சுந்தரராமசாமியும், மலையாளத்திலிருந்து ஆற்றூர் ரவிவர்மாவும் என சிறு கூட்டம் அது. மைக் கிடையாது; பெரிய அவை கிடையாது; கவிஞர் கலாப்ரியாவின் வீட்டில் கூடி உட்கார்ந்து சாவதானமாகப் பேசினோம்.
ஒரு கவிஞர் தம்முடைய நாலைந்து கவிதைகளை வாசிப்பார்; அந்தந்தக் கவிதையையொட்டியோ, மொத்தமாக அவரது கவிதைகள் சம்பந்தமாகவோ எல்லாரும் அபிப்பிராயம் சொல்வார்கள்; அதைப்பற்றிய விவாதம் தொடரும். கவிதை குறித்த உரையாடலாக நீளும்.
கூட்டத்தில் யார் யார் எங்கே உட்கார்ந்திருந்தார்கள் என்பதுகூட எனக்கு நினைவிருக்கிறது. கல்பற்றா நாராயணன், சுவரில் சாயவே மாட்டார். சம்மணமிட்டு, செங்குத்தாக அமர்ந்திருப்பார். அவருக்குப் பக்கத்தில் ராஜீவன். என்னை மாதிரித்தான், அவரால் சாயாமல் உட்காரவே முடியாது! சுவரில் சாய்ந்து, சரிந்து உட்கார்ந்திருப்பார். கண்ணை இடுக்கிப் பார்ப்பார்.
யாராவது கவிதை வாசிக்கும்போது, ஒவ்வொரு முகமாய்ப் பார்த்துக்கொண்டிருப்பேன். ஒரு நல்ல வரி வரும்போது ராஜீவன் முகத்தில் சிறு புன்சிரிப்பு மலரும். பெரும்பாலும் வெற்றிலை போட்டபடியே இருப்பார். ஆகவே, கீழ்த்தாடை முன்னோக்கி நீண்டிருக்கும். சுருக்கமாக ஒரு அபிப்பிராயம் சொல்வார். மிக முக்கியமானதாக இருக்கும் அது.
சற்றுமுன் பி ராமனிடம் கேட்டேன்: “99ல் குற்றாலத்தில் சந்தித்தது எந்த மாதத்தில்?” அவர் சொன்னார்: “அக்டோபர்- நவம்பரில்தான் என்று நினைக்கிறேன்.” எனக்கும் அதே எண்ணம்தான். ஆக, அந்தக் கூட்டத்தின் வெள்ளிவிழாவுக்கும் சேர்த்தே இந்த நினைவுகூர்தல் கூட்டம் நடைபெறுகிறது என்று தோன்றுகிறது; எனக்கும் ராஜீவனுக்குமான நட்பின் வெள்ளிவிழாவும்கூடத்தான். மனத்தைத் தொடும் விஷயம் இது.
அந்தக் கூட்டத்தில், கல்பற்றா நாராயணன், பி ராமன், அன்வர் அலி, பி பி ராமச்சந்திரன் ஆகியோருடன், இன்னும் இரண்டு மூன்று நண்பர்கள் இருந்த ஞாபகம். தமிழிலிருந்து என்னுடைய நண்பர்களும், சமகாலக் கவிஞர்களுமான சிலர் இருந்தார்கள். தேவதேவன் மட்டுமே மிக மூத்தவர்; ப்ரேம், மனுஷ்யபுத்திரன், எம் கோபாலகிருஷ்ணன், மோகனரங்கன் என மற்றவர்கள் பெரும்பாலும் எனது பிராயத்தவர்கள். இருபத்தைந்து ஆண்டுகளில், மலையாளத்தில் அவர்களும் தமிழில் நாங்களும் அவரவர் வழியில் வளர்ந்து, கவனிக்கத்தக்க இடத்தை ஈட்டியிருக்கிறோம் என்றே படுகிறது.
மேற்சொன்ன தகவல்கள் எல்லாம், பொதுவாக அந்தக் கூட்டத்தைப் பற்றி. நாங்கள் சந்தித்ததால் எங்களுக்கோ கவிதைக்கோ என்ன பலன் இருந்தது என்றொரு கேள்வி எழுகிறது. எனக்கு நினைவிருக்கும் இரண்டு மூன்று விஷயங்களைச் சொல்லலாம்.
ஒன்று, யாரும் யாரையும் மறுத்து, ஆவேசமாய் எதுவுமே பேசவில்லை. யாரும் யாரையும் நிராகரிக்கவில்லை. ஒருவர் ஒன்றைச் சொல்லுவார்; அதை வாங்கி, ஏற்றுக்கொண்டோ, அடுத்த கட்டமாகவோ இன்னொருவர் இன்னொன்று சொல்லுவார். ஆக, எல்லாருடைய அக்கறையும் கவிதையைச் சுற்றியே இருந்தது. அந்த அளவில், இரண்டு மொழிச்சூழலுக்குமே பயனுள்ளதாய் இருந்த கூட்டம் என்று சொல்லலாம்.
அந்தக் கூட்டத்துக்கப்புறம், என்னைச் சேர்ந்த நண்பர்கள் உள்ளிட்டு நாங்கள் தமிழில் என்ன செய்தோம் என்பதை உங்களுக்குச் சொல்லிப் புரியவைக்க முடியாது. ஏனென்றால், தமிழ்க் கவிதைகளை வாசிக்க உங்களுக்குச் சந்தர்ப்பம் கிடைக்குமா என்று தெரியவில்லை.
ஆனால், மலையாளக் கவிதைகளில் அந்தக் கூட்டம் என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது; என்னென்ன விதமான தொந்தரவுகளைக் கொடுத்திருக்கிறது என்பதெல்லாம் உங்களுக்கே தெரிந்திருக்கலாம்; ‘குற்றாலம் எஃபெக்ட்’ என்று பெயர்சூட்டி, கொஞ்சநாள் அதை ஏசிக்கொண்டிருந்தார்கள்!
அப்புறம், எனக்கு ஞாபகமிருக்கும் இரண்டு விஷயங்கள். ஒன்று, அரங்கில் பி ராமன் அம்மாவைப் பற்றி ஒரு கவிதை வாசித்தார். ஆனந்தபைரவி ராகத்தில் அமைந்த விருத்தம். முழுப் பாட்டு. இன்றைக்கு ராமன் அதை நினைத்தே பார்க்க மாட்டார்! அன்று நான் கேட்ட கேள்வியும் நினைவிருக்கிறது. “ஆனந்தபைரவியில் பாடினீர்கள்; அம்மாவைப் பற்றிய செண்ட்டிமெண்ட்டலான கவிதை. ஒருவேளை முகாரியில் பாடியிருந்தால், அம்மா காலமான அன்று எழுதிய அஞ்சலிப் பாட்டாக இருந்திருக்குமோ ராமன்!?” எல்லாரும் சிரித்தார்கள், ராஜீவன் உள்பட!
மாலை அமர்வில், அன்வர் அலி அந்தச் சமயத்தில் மிகவும் பிரபலமாய் இருந்த ‘முஸ்தஃபா, முஸ்தஃபா’ பாட்டின் மெட்டில் ஒரு முழுக் கவிதையைப் பாடினார்! பகடியான அரசியல் கவிதை. “ஆமாம், இதுவும் பாட்டு, கவிதை அல்ல!” என்றேன். இன்றைக்கு அன்வர் எழுதும் பல கவிதைகள் எனக்குக் கொஞ்சம் புரியமாட்டேனென்கிறது! இத்தனைக்கும் இவ்வளவுகாலமும் கவிதை வாசித்துக்கொண்டும் எழுதிக்கொண்டும்தான் இருக்கிறேன்!! அவ்வளவு அதிநவீனக் கவிஞராக ஆகிவிட்டார்.
இருவருமே பாடல்களிலிருந்தும் சந்தங்களிலிருந்தும் விடுபட்டு நவீன கவிதை உருவத்துக்கு நகர்ந்ததற்கு அந்தக் கூட்டமும் ஒரு காரணமாய் இருந்தது என்றே சொல்வேன்…
ராஜீவனும் சரி, நானும் சரி, அபிப்பிராயங்கள் சொல்லும்போது எல்லாரும் சிரித்துக்கொண்டே இருப்பார்கள். யாரையாவது கேலி செய்வோம். யாரையும் புண்படுத்தாத கேலியாக இருக்கும். திரும்பிப் பார்க்கும்போது, கிட்டத்தட்ட இருபத்துமூன்று வருடங்கள் நானும் ராஜீவனும் அதேவிதமாக உரையாடி வந்திருக்கிறோம்; தொலைபேசியிலும் நேரிலும்.
பல தடவை கோழிக்கோட்டுக்கு வந்திருக்கிறேன். பாரத ஸ்டேட் வங்கியில் காசாளராய் இருந்தேன். ஒன்றிலிருந்து நூறுவரை உச்சாடனம் செய்துகொண்டே ரூபாய்த் தாள்களைப் புரட்டிக்கொண்டிருப்பேன். திடீரென்று செல்பேசியில் அழைப்பு வரும். ராஜீவன்தான். ‘என்ன யுவன், எப்பிடி இருக்கே’ என்று ஆரம்பிப்பார். தொடர்ந்து பேச அவகாசமே இருக்காது. ஆனாலும் பேசுவேன். எழுந்து வெளியில் வந்துவிடுவேன்.
பல கூட்டங்களுக்கு ராஜீவன் என்னை இங்கே அழைத்திருக்கிறார். கே கே சந்திரனின் நூல்வெளியீட்டு விழா உள்பட. நினைத்துப் பார்க்கையில், என்னைச் சந்திக்கவேண்டும் என்று தோன்றினால், இங்கே ஒரு கூட்டம் ஏற்பாடு செய்துவிடுவார் என்று படுகிறது! அந்த அளவுக்கு அடிக்கடி சந்தித்தோம்.
அப்புறம், இருவரும் சந்தித்ததே சிரிப்பதற்காகத்தான் என்றும் தோன்றுகிறது. குற்றாலம் கூட்டத்தில், முன்னமே சொன்னதுபோல, நாங்கள் எல்லாரையும் கேலி செய்வோம். எங்களையும் கேலிசெய்துகொள்வோம். நான் ராஜீவனை, அவர் என்னை கிண்டல் செய்வோம். சுய கேலியும் உண்டு! இறுதிவரை தொடர்ந்து சிரித்துக்கொண்டு மட்டுமே இருந்த சீரான உறவு அது.
குற்றாலம் கூட்டம் முடிந்து, அவரவர் ஊருக்குத் திரும்பியபிறகு, ஜெயமோகனிடமிருந்து கடிதம் வந்தது. ‘ராஜீவன் ஃபோனில் பேசினார்; ‘யுவனில் என் மறுபாதியைக் கண்டேன்’ என்று சொன்னார்.’ என்று எழுதியிருந்தான். அது உண்மை. ராஜீவனில் நான் என்னுடைய மறுபாதியைக் கண்டிருந்தேன்…
நாங்கள் சிரித்ததைச் சொன்னேன். நானொரு நீண்டகாலப் புகைஞன். இப்போது சில வருடங்களாகத்தான் புகைப்பதில்லை. பழையகால ரயில் எஞ்சின் மாதிரி, புகை விட்டுக்கொண்டே இருப்பேன்! கூட்டங்கள், குறிப்பாகக் கவிதைக்கூட்டங்கள் என்றால் சிகரெட்டுகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துவிடும். ஒரு சிகரெட் முடிந்ததும் அடுத்ததைப் பற்றவைப்பேன். அந்த அளவு புகைத்துக்கொண்டே இருப்பேன்.
ஆனால், கூட்டத்தில் உட்கார்ந்து புகைக்க முடியாதல்லவா. காதை உள்ளே வைத்தபடி வெளியில் நின்று புகைப்பேன். நான் எழுந்து போகும்போதெல்லாம், ராஜீவனும் எழுந்து வருவார், வெற்றிலை போட! அவ்வப்போது சிகரெட்டும் பிடிப்பார். உள்ளே நடப்பதைப் பற்றி எங்களுக்குள் பேசிச் சிரித்துக்கொள்வோம்.
ஆனால், அவருக்கும் எனக்குமான வித்தியாசங்களும் அந்த இடத்திலிருந்துதான் ஆரம்பிக்கிறது என்பேன். எனக்கு உடல்நலத்தில் சிக்கல்கள் வந்தபோது, சிகரெட்டை அறுதியாக நிறுத்திவிட்டேன். ராஜீவனால் கடைசிவரை நிறுத்த முடியவில்லை. குறிப்பாக, மது. அறிமுகமான காலத்தில், ராஜீவன் அவ்வளவு குடித்ததில்லை. பின்னாளில், பகல்நேரத்தில்கூடக் குடிப்பார்; அளவும் அதிகரித்துக்கொண்டே போனதை உடனிருந்து பார்த்திருக்கிறேன்; பயந்திருக்கிறேன்.
எனக்கும் ராஜீவனுக்குமான இன்னொரு வித்தியாசமும் உண்டு. அது கவிதைகள் சம்பந்தமானது. கவிதையில் அழகியல் மிகவும் முக்கியம்; குறிப்பாக, மௌனம் மிகமிக முக்கியம் என்று நினைப்பவன் நான். ராஜீவன் அப்படி மெனக்கெட்டவர் கிடையாது. தன்னியல்பாக, தோன்றக்கூடிய வரிகளை எழுதிக்கொண்டே செல்வார்.
அப்புறம், அதில் நுட்பமான அரசியல் உள்ளடக்கம் இருக்கும். என்னுடைய கவிதைகளில் அரசியல் உள்ளடக்கம் இருக்காது; அவை முழுக்க முழுக்க மீபொருண்மைக் கரிசனம் கொண்டவை. மொழியின் அழகும், நுட்பமும் விழைபவை. என்போன்ற கவிதை எழுதுகிறவர்களை, எல்லா மொழியிலும் சொல்வார்கள்: ‘இவர்களெல்லாம் சந்தர்ப்பவாதிகள்! அரசியல் அக்கறைகளோ, சமூக அக்கறைகளோ இல்லாதவர்கள்’ என்று!
இன்னமும் சொல்வார்கள் : ‘எல்லாவற்றுக்குப் பின்னாலும் ஒரு அரசியல் இருக்கிறது; அரசியல் இல்லாத எதுவுமே கிடையாது. அரசியலற்ற எழுத்து என்பதே நுட்பமான அரசியல் செயல்பாடுதான்.’ இதெல்லாம், என்னுடைய வகைமையைச் சேர்ந்த கவிதை எழுதுகிறவர்களை விமர்சித்துச் சொல்லப்படுகிற வாக்கியங்கள்.
ராஜீவன்மீது இப்படியான விமர்சனங்களை வைக்கவே முடியாது. அவர் அழகியலை முன்வைத்துக் கவிதை எழுதாதவர். ஆனால், ஆச்சரியகரமாக, அரசியல் கருதுகோள்களை முன்னிருத்தியும் எழுதவில்லை. நேரடியாய்ப் பார்க்கக் கிடைப்பவற்றில் பொதிந்திருக்கக்கூடிய அநீதியே அவருடைய பேசுபொருள். அதுதான் ராஜீவன் முன்வைத்த அரசியல் என்று கருதுகிறேன். எங்கெல்லாம் அநீதி கண்ணுக்குத் தெரிகிறதோ, அதைச் சுட்டிக்காட்ட முனையும் கவிஞராகத் தனது கவிதைக்காலம் முழுக்க இருந்திருக்கிறார்.
ராமன் மொழிபெயர்த்தபோது, ஒரு சொல்லைத் திருத்தினேனல்லவா, ‘அது அப்படியில்லை; வேறு சொல்’ என்று. ராஜீவனுடன் உரையாடும்போதும் இது நடக்கும். மலையாளத்தில் ராமன் மொழிபெயர்த்துச் சொல்வது எனக்குப் புரிகிறது; என்னால் மலையாளம் பேச முடியாது. அவ்வளவுதான். இங்கேயிருக்கும் பலருக்கும், நான் பேசும் தமிழ்கூடப் புரியலாம். அவ்வளவு பக்கத்தில் இருக்கும் மொழிகள்தாம் இரண்டும்.
ராஜீவனும் நானும் பேசும்போது, உணர்ச்சிமயமாய்ப் பேச்சு நகர்ந்ததென்றால், நான் தொடர்ந்து தமிழிலேயே பேசுவேன். அவர் மலையாளத்திலேயே பேசுவார். இது எனக்கு ராமனுடனும், அன்வர் அலியுடனும், கல்பற்றாவுடனும்கூட நடக்கும். ஆங்கிலத்தில் பேசுவதைவிட, அவரவர் தாய்மொழியில் பேசுவது; புரிந்தவரை புரியட்டும் என்று விட்டுவிடுவது. அதுவொரு வசதியான உரையாடல் முறை என்றே கருதுகிறேன்.
நான் சொன்ன வேறுபாடுகளின்படி பார்த்தால், ராஜீவன் என்னுடைய மறுபாதியேதான்; ஆனால், கண்ணாடிப் பிம்பமல்ல. தமிழ்நாட்டில் சங்கர-நாராயணர் என்று ஒரு இறைக்கோட்பாடு உண்டு. சங்கரன்கோவிலின் முதன்மையான தெய்வம் அது. ஒரே உடம்பின் ஒருபாதி சிவனும், மறுபாதி விஷ்ணுவுமாக இருப்பது. ராஜீவனும் நானும் அதேபோலத்தான் இருந்தோம் என்று இப்போது தோன்றுகிறது.

2
ஏற்கனவே சொன்னதுபோல, ராஜீவனுக்குக் கவிதையில் அழகியலைவிடக் கருத்துகள்தாம் முக்கியம். தமது கவிதைகளை உலக அளவில் கொண்டுபோக முடிந்ததற்கு அதுவும் ஒரு காரணம். ஏனென்றால், அந்நிய மொழிக்குக் கொண்டுபோகும்போது, கருத்துகளை மட்டுமே இடம்பெயர்க்க முடியும். ஒரு மொழியின் பிரத்தியேக அழகியலை, நுட்பங்களை இன்னொரு மொழிக்குள் எப்படிக் கடத்துவது?
அழகியலுக்காக ராஜீவன் பெரிதாக மெனக்கெட்டதில்லை என்று சொன்னேன் அல்லவா. அவர் கவிதைகளில் ஒலித்த ‘குரல்’தான் அவருடைய அழகியல் என்று சொல்லலாம். கருத்துகளை உரத்துச் சொல்லும் குரல் அது.
ராஜீவனுக்குக் கருத்துகள் முக்கியம்; அரசியல் கருத்துகள். ஆனால், அவை ஒரு தரப்பைச் சேர்ந்த, ஒரு சார்பான சித்தாந்த அரசியலைச் சார்ந்தவை அல்ல என்பதையும் அழுத்திச் சொல்லியாக வேண்டும். அவருடையது வலதுசாரிக் கருத்தியலோ, இடதுசாரியோ அல்ல. ஒட்டுமொத்த சமூகத்தின்மீது தனக்குள்ள கரிசனத்தின் காரணமாக தனிநபருக்குள் எழக்கூடிய அறக்கோபம் சார்ந்தது. அதை வெளிப்படுத்தும் பகடியே அவரது கவிதைகளின் அடியோட்டம். ஆக, ராஜீவனின் கவிதைகளில் இடதுசாரிகளும் வலதுசாரிகளும் சமமான அங்கதத்துக்கு ஆளானார்கள்!
இயற்கைச் சட்டங்கள் என்று ஒரு கவிதை. அதன் ஒரு பகுதி,
இடி மின்னல்
காற்று மழை
ஆகியவற்றுக்குக் கூட்டமைப்புகள் இல்லை
தலைவர்களும் இல்லை.
எனவே
எதிர்பாராமல் வந்து
அதிர்ச்சி தருபவர்களை
எப்போதைக்குமாக
வெளியே தள்ளி
வாசலைச் சாத்திவிடலாம்
என்கிறது. அதிகாரம் யார் கைக்குப் போனாலும் அவர்களுக்கு எதிராக நிமிர்ந்து நிற்கும் கவிதை இது. இன்னொரு உட்பிரதியும் இருக்கிறது – இடியோ மின்னலோ காற்றோ மழையோ அளவோடு இருக்கும்போது வெளியில் தள்ளிக் கதவைச் சாத்த முடியும். அவர்களுக்கு சந்நதம் வந்துவிட்டதென்றால்; எந்தக் கதவும் எந்தத் தனிமனிதனும் சமாளிக்க முடியாது. சமூகம் அதுபோலக் கொந்தளிக்கும் நேரத்தில் எந்தத் தலைவராலும், எந்த ஆட்சியாலும் எந்த அரசியல் சித்தாந்தத்தாலும் அதை சமாளிக்க முடியாது என்று குறிப்புணர்த்தும் கவிதை.
இன்னும் வெளிப்படையான இன்னொரு கவிதை உண்டு. அதன் தலைப்பு ஆமை. அதில் இப்படிச் சில வரிகள்:
கிளிப்பாட்டுக் கிளிகள்
கற்பனாவாதக் குயில்கள்
புதுக்கவிதைக் காகங்கள்
ஹோ சி மின் உடும்புகள்
குவேரா எறும்புகள்
காந்திய ஆடுகள்
யாருமே திரும்பவில்லை.
இந்தப் பட்டியலில், அரசியல்வாதிகள், இலக்கியவாதிகள் என்று சகல திசைகளிலும் சுழல்கிறது ராஜீவனின் வாள்!
இந்த மாதிரியான கவிதைகள் எந்த மொழிச்சூழலிலும், எல்லாத்தரப்பிலும் எதிரிகளை உருவாக்கக்கூடியவை. தாய்மொழிச் சூழலில் ராஜீவனும் நிறைய எதிரிகளைச் சம்பாதித்திருப்பார் என்று அனுமானிக்க முடிகிறது. ஆனால், இதுபோன்ற கவிதைகள் வழியாகத்தானே வேறுவேறு மொழிகளில், வேறுவேறு காலகட்டங்களில் எழுதுகிற கவிதை ஆர்வலர்களும் அவரை நெருங்கி வந்திருக்கிறோம்!
அப்புறம், அவரை ஒரு புள்ளியில் நிறுத்திவிட முடியாது. கவிதைக்குள் ஒலிக்கும் இந்தக் குரல் எப்போது ஓங்கி ஒலிக்கும், எப்போது தணிந்து சாவகாசமாக இருக்கும் என்பதையெல்லாம் சொல்லவே முடியாது. ‘முன்கணிக்க முடியாமை’ என்பது ராஜீவனுடைய கவிதை அழகியலில் இன்னொரு முக்கியமான அம்சம்.
ராஜீவன் கவிதையின் உருவத்தில் நிறையப் பரிசோதனைகள் செய்து பார்த்தவர் அல்ல. அவரது பெரும்பாலான கவிதைகள் சீராக, ஒரேவிதமாய்த்தான் ஒலிக்கும். ஆனால், நூறு சதவீதம் அப்படியே இருந்தன என்றும் சொல்லிவிட முடியாது. ‘கண்ணகி’, “மனசாட்சிக் காவலர்களே’ என்பது போன்ற கவிதைகளை உரைநடைபோலவே எழுதிப் பார்த்திருக்கிறார்.
‘Proem’ என்று ஒரு சொல். இலக்கியத்துக்குள் சரளமாக இன்னும் புழங்க ஆரம்பிக்கவில்லை. Prose poetry என்றுதான் குறிப்பிடுகிறார்கள். ஏதோவொரு அயல்நாட்டுக் கட்டுரையில், proem என்ற சொல்லைப் பார்த்திருக்கிறேன். Image என்ற சொல் சரளமாக இலக்கியத்துக்குள் வந்துவிட்ட மாதிரி, proem இன்னும் வந்து சேரவில்லை. உரைநடைபோலவே அமைக்கப்பட்ட, அதுபோலவே தொனிக்கும் வரிகள் வழியே, கவிதை அனுபவத்தை உருவாக்க முடியுமா என்ற முயற்சி அது. வெகுகாலம் முன்பே மலையாளத்தில் ராஜீவன் செய்து பார்த்திருக்கிறார்.
கவிதையின் கட்டுமானம் அல்லது தொழில்நுட்பம் பற்றி அறிவதற்காக ஒருவர் ராஜீவனின் கவிதைகளை அணுக முடியாது. ஆனால், தினசரி வாழ்வின் சாதாரண அம்சங்கள் எப்படிக் கவிதையாய் உருமாறுகின்றன என்கிற ரசவாதத்தை அவருடைய கவிதைகளில் கற்றுக்கொள்ள முடியும். உதாரணமாக, கதறல் என்று ஒரு கவிதை.
கருங்கடலும்
செங்கடலும்
என்ற வரிகள். இவற்றைக் கண்ணால் பார்த்துவிட முடியும்.
அமைதிக் கடலும்
அடங்காக் கடலும்
எனப் பட்டியல் வளரும்போது, கவிதை தன் சிறகை உயர்த்த ஆரம்பிக்கிறது. சாதாரண மொழிதல் கவிதை வாசகமாக மாறுவதற்கான யத்தனத்தை இதில் பார்க்க முடியும்.
ராஜீவன் கவிதைகளின் இன்னொரு அம்சம், எதிர்மறையான படிமங்களை அவரிடம் பார்க்க முடியாது, அங்கதத்துக்காக அவர் பயன்படுத்தியவற்றைத் தவிர. மிகமிக அபூர்வமாக, காகம் என்ற கவிதையில், ‘தாகம் தீர்வதற்காகச் சின்னச் சின்னக் கற்களை எடுத்துக் குடத்தில் போடும் காகத்துக்கு தாகம் தணிக்க மேலெழுந்து வருவது ரத்தம்’ என்று ஒரு சர்ரியல் படிமம். மற்றபடி, விநோதமான, அசாதாரணமான உவமைகள், உருவகங்கள், படிமங்களை அவருடைய கவிதைகளில் காண முடியாது. எல்லாமே, நடைமுறை வாழ்க்கையில் காணக்கூடிய நடைமுறைக் காட்சிகளை கவிதையாக்கிக் காட்டுகிறவைதாம். இந்த நடைமுறைத்தன்மையாலேயே ராஜீவனுடைய பெரும்பாலான கவிதைகள், பொதுஓட்டக் கவிதைகளுக்கு மிக அருகில் இருப்பவை; பொதுஓட்டக் கவிதைகளை நினைவூட்டக் கூடியவை. இதற்கு இன்னொரு உதாரணம், ப்ரணய சதகம்(காதல் கவிதைகள் நூறு) என்ற தொகுப்பு. அது உருவாகிவந்த காலகட்டத்தில் என்னிடம் அதைப்பற்றிப் பேசியிருக்கிறார். எழுதியவற்றையும், எழுதவிருக்கிறவற்றையும். என்னிடம் சொன்னதும், வாசித்துக்காட்டியதும் உண்டு. அவற்றில் இரண்டை இந்த இடத்தில் மேற்கோள் காட்டத் தோன்றுகிறது.
1 இந்த அணைப்பு
உலகின் முடிவுவரை தொடர்ந்தாலும்
இந்தக் கைகள் மட்டும்
ஒருநாள் விலகும்.
2 கண்ணீரையா புன்னகையையா
என்ன பரிசினைக் கொண்டுவந்தாய்
வழியில் காணும் வனப்பூக்கள்
வினவுகின்றன நாள்தோறும்
இவற்றை வாசித்துக்காட்டிய வேளையில், நான் சொன்ன பதில் ஞாபகமிருக்கிறது:
கணநேர ரத்தப் பதைப்பு தவிர, இந்தக் கவிதைகளில் ஒரு கவிதைவாசகன் கற்றுக்கொள்ளவோ பெற்றுக்கொள்ளவோ ஆழம் ஏதும் இருப்பதாகப் படவில்லையே ராஜீவன். கவிதைகளில் வரும் ‘நீ’ யைத் தத்துவார்த்த உயரத்துக்கு ஏற்றிப் பார்ப்பதற்கும் கவிதைக்குள் சான்றுகள் இல்லை!
ராஜீவன் வெறுமனே சிரித்தார்!
அப்படியானால், ஒரு கேள்வி எழுகிறது. தீவிரமான கருத்தியல் கவிஞன், அரசியல் கவிஞன் இதுபோல எழுதலாமா? இவை அவருடைய படைப்புலகத்துடன் ஒத்திசையுமா?
ஆனால், ராஜீவன் எழுதுவார்! தனக்கு என்ன தோன்றுகிறதோ அதை வடிகட்டாமல் எழுதக்கூடியவர் அவர்.
ராஜீவனுக்கும் எனக்குமான இன்னொரு ஒற்றுமையையும் குறிப்பிடத் தோன்றுகிறது. கவிதை என்ற வடிவம் தனக்குப் போதவில்லை என்று கருதியபோது நாவல் எழுதப் போனார், நானும் அவ்வாறே செய்தேன். அவர் திரைக்கதையும் எழுதினார். நான் முயற்சியே செய்யவில்லை.
எந்தெந்த விதமாகவெல்லாம் தன்னை வெளிப்படுத்த முடியுமோ, அந்தந்தவிதமாக வெளிப்படுத்தத் தயங்காதவர் ராஜீவன். அவருடைய விடுதலையுணர்வு அப்படிப்பட்டது.
வடிவங்கள் தாண்டி, தாம் செயல்பட்ட விதங்கள் தாண்டி, ராஜீவனின் வாழ்க்கைப் பார்வை மிகத் தீவிரமானது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் கேலியின் வழியாக, நகைச்சுவையின் வழியாக அதைத் தெரிவிக்க முயன்றார் என்றே படுகிறது. அதுவே அவரது வாழ்நாள் முயற்சியாக இருந்திருக்கிறது. இப்படி யோசிக்கும்போது, ஒட்டுமொத்த ப்ரணய சதகமே காதல்மீது அவருக்கிருந்த பகடியான அபிப்பிராயம்தானோ என்றும் தோன்றுகிறது. அந்தக் கவிதைத் தொகுப்பேகூட, ரஞ்சகக் கவிதைகள்மீது அவருக்கிருந்த பகடியான அபிப்பிராயமாக இருக்கலாம்!
இதேவிதமான பகடி செயல்படும் ஒரு கவிதையைச் சொல்லத் தோன்றுகிறது. எனக்கு மிகவும் பிடித்த ராஜீவன் கவிதைகளில் ஒன்று இது:
பணி ஓய்வு
நானொரு கடவுளாக இருந்தால்
இன்னொரு கடவுளைப் படைத்து,
கடவுளுக்குரிய எனது கடமைகளையெல்லாம்
அவரிடம் ஒப்படைத்துவிட்டு,
ஓய்வாக அமர்ந்து
உனது கண்களை
உற்றுப் பார்த்தவாறு இருப்பேன்!
இந்தக் கவிதையிலும் ஒரு கேள்வி இருக்கிறது. இவ்வளவு நேரடியான, பகடி நிறைந்த கவிதையிலும் எழுந்துவரும் கேள்வி. எல்லா வேலையையும் கடவுளிடம் கொடுத்துவிட்டு, இருபத்துநாலு மணிநேரமும் ஒரு ஜோடிக் கண்களையே பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தால், அது எவ்வளவு சலிப்பூட்டக்கூடிய அலுவலாக மாறிவிடும்! அதற்கு பேசாமல் பழைய பணியிலேயே தொடர்ந்திருக்கலாம்; பணிஓய்வு பெற்றிருக்கவே வேண்டியதில்லை!

3
பொதுவாகவே, மரணச் செய்திகள் அரை நூற்றாண்டுக்கு முன் மறைந்த என்னுடைய அப்பாவின் ஞாபகத்தை இழுத்துவரும். அவர் காலமானபோது எனக்குப் பதினோரு வயது. பின்னர் வந்த ஐம்பத்திச்சொச்சம் வருடங்களில், எத்தனையோ முக்கியமான நாட்கள் வந்துசென்றிருக்கின்றன. நான் பட்டப்படிப்பு முடித்த நாள், வேலைக்குச் சேர்ந்த நாள், திருமணம் நடந்த நாள், முதல்குழந்தை பிறந்த நாள், முதல்காதல் முறிந்த நாள் என்கிற மாதிரி, முக்கியமான நாட்கள் எத்தனையோ. அந்தந்த நாட்களின் கோட்டுவடிவம் மட்டும் தோராயமாக நினைவிலிருக்கும். நிறையத் தகவல்கள் மறந்துவிட்டன.
ஆனால், அப்பா இறந்த நாளின் ஒவ்வொரு நிமிடமும் பசுமையாய் நினைவிருக்கிறது. அதிகாலையில் தொடங்கி, அன்று இரவுவரை நடந்த சகலமும். சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் புனைகதைகளில் எழுதிஎழுதித் தீர்த்திருக்கிறேன். இன்னமும் எழுதிக்கொண்டே இருக்கிறேன்…
ராஜீவனின் மறைவுச் செய்தி கேட்ட நிமிடம் முதல், மறுநாள் காலைவரை அப்பாவின் நினைவு என்னைப் பீடித்திருந்தது. முன்னூறு அல்லது நானூறு வீடுகள் மட்டுமே கொண்ட மிகச்சிறிய கிராமத்தில் ஒரு தனிநபர் ஓட்டல் வைத்திருந்தவர். அவரே உரிமையாளர், அவரே பணியாளர், அவரே காசாளர். அவரே மாவரைப்பார். அவரே சமையல்காரர். அடுப்பருகே நிற்கும்போது, ஒரு நாளைக்கு அறுபது எழுபது தடவையாவது, கொதிக்கக்கொதிக்கக் காஃபி குடிப்பார். மூக்குப்பொடிப் பிரியர் வேறு. இந்தத் தலைமுறைக்கு மூக்குப்பொடியைத் தெரியுமா என்றே தெரியவில்லை. பான் பராக் தெரியும். புகையிலையின் வெவ்வேறு வடிவங்கள் இந்திய சமூகத்தை, இந்திய இளைஞர்களைப் பீடித்துக்கொண்டே இருப்பது, வயிற்றெரிச்சல். அது என்ன, உயிர்வாழ்வதற்கான தேவையா?
ஆனால், நானுமே அப்படித்தானே இருந்திருக்கிறேன்; ஐம்பது வருடங்கள் சிகரெட் புகைத்திருக்கிறேன். அப்பாவைப் பொறுத்தவரை, புகையிலைத் தூளா, காஃபித்தூளா தெரியவில்லை – எதுவோ ஒன்று அவருடைய கல்லீரலைச் செயலிழக்க வைத்து, மகோதரம் பீடித்தது. ராஜீவன் மாதிரியே, இதே அறுபத்து மூன்றாவது வயதில் காலமானார்.
அவருக்குக் கல்லீரல். ராஜீவனுக்கு சிறுநீரகம்.
‘ராஜீவனுடைய உடல்நிலை மோசமாகிக்கொண்டிருக்கிறது; அபாயகரமான எல்லைகளுக்கு நகர்ந்துகொண்டிருக்கிறது’ என்றெல்லாம் நண்பர்கள் வழியாகக் கேள்விப்பட்டுக்கொண்டுதான் இருந்தேன். ஜெயமோகன் சொல்லுவான்; வேறு நண்பர்கள் தெரிவிப்பார்கள். அவரையே கூப்பிட்டு அது சம்பந்தமாக விசாரிப்பதற்குத் தயக்கமாய் இருந்தது.
அப்புறம், தன்னுடைய மறுபாதிபோன்ற ஒருவன் கூப்பிட்டு விசாரிக்கும்போது அவனுடைய குரல் மிகவும் தெம்பாக இருந்ததென்றால், ஏற்கனவே சுணங்கியிருக்கும் அந்த மனம் எவ்வளவு கஷ்டப்படும் என்றெல்லாம் யோசனை. சாதனாவையோ, குழந்தைகளையோ கூப்பிட்டுக் கேட்கவும் தைரியமில்லை…
ஒருநாள் சாயங்காலம் ஐந்தரை மணி இருக்கும்; ஷ்யாம் சுதாகரி1டமிருந்து தொலைபேசி அழைப்பு. ”ராஜீவன் மிக வேகமாக அடங்கிக்கொண்டிருக்கிறார்” என்று தெரிவித்தார். பதற்றமடைந்தேன். என்ன செய்வதென்று தெரியவில்லை. என் மனைவியிடம் வெகுநேரம் ராஜீவனைப் பற்றியும் அவருடனான என் உறவுபற்றியும் புலம்பிக்கொண்டே இருந்தேன்.
சரி, விடிந்தால் நல்ல செய்தி வரும்; மீண்டுவிடுவார் என்ற அசட்டு நம்பிக்கையோடு படுக்கப்போனேன். இரவு பன்னிரண்டு மணிக்கு ஜெயமோகனிடமிருந்து செய்தி வந்தது.
என் அப்பாவைப் போலவே, ராஜீவனும் உடலைப் பொருட்டாக மதிக்காதவர். அந்திமகாலத்தில் படுக்கையில் கிடக்கும்போது, தம்முடைய நெருங்கிய நண்பரிடம் ஒருநாள் சொன்னார் அப்பா:
வாழ்க்கைமேலெ எனக்கு ஒரு புகாரும் இல்லே. என் மனசுபோல வாழ்ந்தேன்…
அவர் மரணமடைவதற்கு இன்னும் ஓரிரு வாரங்கள்தாம் இருந்தன. கதவுக்குப் பின்னால் நின்று கேட்டுக்கொண்டிருந்த அம்மா சத்தமாக முனகினாள்:
சரி. நீர் உம்ம இஷ்டம்போல வாழ்ந்துட்டுப் பொறப்புட்டுருவீர். எங்க கதி?
கவிதைகள் போலவே, இந்தக் கேள்விக்கும் ஒரு நிரந்தரத் தன்மை உண்டு. குடும்பத்தவரிடமும், நெருங்கிய நண்பர்களிடமும் தகிப்போடு இருந்துகொண்டிருக்கும்…
ராஜீவனின் பல கவிதைகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. ஜெயமோகனின் சரளமான மொழிபெயர்ப்பிலும், யார்யாரோ மொழிபெயர்த்த மோசமான வடிவங்களிலும். அவருடைய இறுதிக் கவிதை என்பதாகவே இரண்டு மொழிபெயர்ப்புகளைப் பார்த்தேன். ஒன்று, தூமோர்ணை.
பொதுமருத்துவமனையின்
தீவிரசிகிச்சைப்பிரிவில்
நேற்று
யமனின் மனைவி
தூமோர்ணையைச் சந்தித்தேன்
நம்பவே முடியவில்லை
கௌரவமான, நற்குடிப்பிறப்புள்ள,
அழகான
ஒரு பெண்மணி!
’சாகவைப்பதன் அறம்’
என்னும் தலைப்பில்
மசாசுசெட்ஸிலோ
ஹார்வார்டிலோ
ஆய்வு செய்யும் காலகட்டத்தில்
அறிமுகமாகி
திருமணம் செய்துகொண்டார்
யமதர்மனை.
இப்போது
தூக்குக் கயிறு கழுத்தில் சுற்றி
துடிப்பவர்களின்
நலனுக்காக
ஒரு என்.ஜி.ஓ நடத்துகிறார்.
என்று ஆரம்பித்து நகர்வது. ராஜீவனின் இயல்பான பகடி வெற்றிகரமாகப் பதிவாகியிருக்கும் கவிதை.
ஆங்கிலத்தில் Death Poems என்றே ஒரு தொகுப்பு வந்திருக்கிறது. ஜென் துறவிகள் தங்களது இறுதிச்சொல்லாக எழுதிய, ஹைக்கூ போன்ற குறுங் கவிதைகளின் தொகுப்பு. அநேகக் கவிதைகளில், ஜென் கோட்பாடு செயல்பட்டிருக்கும். இறுதிநிமிடம் வரை அவர்கள் ஜென்னோடு இருந்திருக்கிறார்கள்; ஜென்னைக் கையாள்பவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதற்கான இன்னொரு சான்று அவை.
மேற்சொன்ன ராஜீவனின் கவிதைதான் அவருடைய கடைசிக் கவிதையாக இருந்திருக்குமானால், அவரது வாழ்நாள் முழுக்க செயல்பட்ட பகடியும் அங்கதமும் இந்தக் கவிதையிலும் செயல்பட்டிருக்கிறது என்பதைக் காணலாம்.
இறுதிக் கவிதையாய்ச் சொல்லப்படும் இன்னொரு கவிதை, ‘அவ்வளவுதான்’. மாத்ருபூமியில் பிரசுரமானதன் மொழிபெயர்ப்பு என்கிறது அடிக்குறிப்பு. அதன் இறுதி வரிகள் இப்படிப் போகின்றன.
வயது ஏற ஏற கனவுகள் அதிகரிக்கும்
திடீரென்று ஒருநாள்
கனவுகளின் எண்ணிக்கை பூஜ்ஜியம் ஆகும்
மேலும் அவர் பேசுவதில்லை
வெற்றிடத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தபோது
ஒருநாள் திடீரென்று காணாமல் போய்விடுவார்
அவ்வளவுதான்!
காணாமல் போவது அத்தனை சுலபமில்லை, ராஜீவன். என்றென்றும் எங்கள் நினைவுகளிலும் கனவுகளிலும் உங்களை பத்திரமாக வைத்திருப்போம்….

(9 11 2024 அன்று மலையாளக் கவிஞர் அமரர். டி பி ராஜீவனின் சொந்த ஊரான பேரம்பராவில் நடந்த நினைவஞ்சலிக் கூட்டத்தில் நிகழ்த்திய உரையின் செம்மையாக்கப்பட்ட எழுத்துவடிவம்.
உரையை மலையாளத்தில் மொழிபெயர்த்தவர், மலையாளக் கவி பி ராமன்.)
1 ராஜீவனின் மூத்த மகள் ஶ்ரீதேவியின் கணவர். மலையாளத்தின் பிரபல கவிஞர்.
Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
