கர்மத்தின் வகையறிதல்

அத்வைதக் கல்வியில் பிரஸ்தான த்ரயம் என்றழைக்கப்படும் முதன்மை நூல்களான உபநிஷத்துக்கள், பகவத் கீதை, பிரம்ம சூத்திரங்கள் ஆகிய மூன்றும் பயிலப்படுகின்றன. இவற்றில் உபநிஷத் ஸ்ருதிப்ரஸ்தானம், பகவத் கீதை ஸ்ம்ருதிப்ரஸ்தானம், பிரம்ம சூத்திரங்கள் சூத்ரப்ரஸ்தானம். “நான்” என்பதன் உண்மைத் தன்மையை விளக்கும் சப்தப் பிரமாணமான இவற்றைக் கற்பதற்கு உரிய தகுதிகளான சாதன சதுஷ்டயத்தை ஓர் மாணவன் முழுமையாக இல்லாவிட்டாலும், ஓரளவுக்காவது அடைந்திருக்க வேண்டும். தகுதிகளை அடையும் அளவுக்கு, அவனது தன்னறிவின் துல்லியம் அதிகரிக்கும். அவனால் வேதாந்தத்தின் உட்பொருட்களை, விளக்கங்களை மேலும் தெளிவாக சுவீகரித்துக் கொள்ள இயலும். இந்தத் தகுதிகள் மனிதனின் இறுதி இலக்கான மோக்ஷத்தை அடைவதற்கு மட்டுமல்ல, அவனது பிற இலக்குகளான அர்த்தம், காமம், தர்மம் ஆகியவற்றை அடைவதற்கும் பயன்படும். 

இத்தகுதிகளை வளர்த்துக் கொள்வதற்கான வழிமுறைகளை சாதனங்கள் அல்லது சாதனைகள் என்று அழைக்கலாம். மனிதனின் அனைத்து இலக்குகளையும், குறிப்பாக மோக்ஷம் என்ற இலக்கை மனதில் கொண்டு நமது சாஸ்திரங்கள் இந்த பயிற்சி முறைகளை வகுத்துள்ளன. சாதனம் என்பது ஓர் இலக்கை அடைவதற்கு நாம் மேற்கொள்ளும் பயிற்சி அல்லது ஒழுக்கம் ஆகும். அந்த இலக்கு சாத்தியம் என்று அழைக்கப்படுகிறது. சாத்தியத்தை அடைய சாதனையை மேற்கொள்பவர்களை சாதகர்கள் என்று அழைக்கிறோம். தன்னுடைய இலக்கான சாத்தியத்தை அடைந்தவர்களையே சித்தர்கள் என்று அழைக்கிறோம்.

இந்தச் சாதனைகளின் தொகுப்பை புரிதலுக்கும், பயிற்சிக்கும் வசதியாக, மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகின்றது. ஒவ்வொரு பிரிவும் யோகம் என்றழைக்கப்படுகிறது.  “யுஜ்” என்ற வேர்ச்சொல்லிலிருந்து யோகம் என்ற சொல் உருவானது. யோகம் என்ற சொல்லுக்குப் பிணைப்பது அல்லது இணைப்பது என்று பொருள். சாதனையையும், சாத்தியத்தையும் இணைப்பதனால் அது யோகம் எனப்படுகிறது. சாதகனாகிய தேடுபவனையும், சாத்தியமாகிய இலக்கையும் யோகம் இணைக்கிறது. 

எத்தனை விதமான யோகங்கள் உள்ளன என்பது பற்றி பலவிதமான கருத்துக்கள் நிலவி வருகின்றன. நான்கு விதமான யோகங்கள் உள்ளன என்று கொள்பவர்களும், இல்லை மூன்று விதமான யோகங்கள்தாம் உள்ளன என்றும் கூறுபவர்களும் உண்டு. அதே போல சாதகனுடைய தகுதிகளையும், குணாம்சங்களையும் அடிப்படையாக வைத்து அவன் தனக்கு உரிய யோகத்தைத் தேர்ந்தெடுத்து அதையே தொடர்ந்து பயில்வதன் மூலம் அவனால் ஆன்ம விடுதலையை அடைய முடியும் என்றும் பொதுவான கருத்து நிலவி வருகிறது. ஸ்ரீ கிருஷ்ணர் இக்கருத்துக்களுக்கு மாற்றான ஒரு கருத்தை கீதையில் கூறுகிறார். அவர் கூறும் முறையே தொன்று தொட்டு ஆன்ம சாதகர்கள் பயின்று வருவதாகும். அவர் சொல்லும் முறையைப் பின்பற்றினால்தான் ஆன்ம விடுதலையை உறுதியாக அடைய முடியும்.

அவர் என்ன சொல்கிறார்? “லோகேஸ்மின் த்விவிதா நிஷ்டா புரா ப்ரோக்தா மயானக; ஞானயோகேன சாங்க்யானாம், கர்மயோகேன யோகினாம்” என்று அவர் கூறுகிறார். வேதத்தில் இரண்டு விதமான மார்க்கங்கள் முன்னரே என்னால் விளக்கப்பட்டுள்ளது என கூறுகிறார். நிஷ்டா என்றால் உறுதியாக பின்பற்றும் வாழ்க்கை முறை. உதாரணமாக, இறைவனின் நாமத்தை ஜபிக்கும் வாழ்க்கை முறையை பின்பற்றுபவன் ஜப-நிஷ்டன் என்றும், பிரார்த்தனை மற்றும் தவத்தை முக்கியமாகக் கொண்ட ஒருவன் தபோநிஷ்டன் என்றும் அழைக்கப்படுகிறான். ப்ரம்மத்தை அடைவதை நிஷ்டையாகக் கொண்டவன் ப்ரம்மநிஷ்டன். இங்கு கிருஷ்ணர் முன்னரே உலகத்திற்கு தான் தெரியப்படுத்திய, சந்யாசிகளான சாங்கியர்கள் பின்பற்றும், ஞானத்தை சாதனையாக கொண்ட ஞான யோகத்தை சொல்கிறார். சந்யாசிகள் அல்லாத, கர்மத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் மற்றவர்களுக்கு, அதாவது கர்ம யோகிகளுக்கு கர்ம யோகத்தை சொல்கிறார். இரண்டு விதமான நிஷ்டைகள் (வாழ்க்கை முறைகள்) பண்டு என்னால் உரைக்கப்பட்டன. அவை சாங்கியர்களுக்கு (சன்யாசிகளுக்கு) ஞானயோகமும், யோகிகளுக்கு கர்மயோகமும் ஆகும் என்கிறார். இங்கு யோகிகள் எனப்படுபவர்கள் ஆன்மிகப் பாதையின் வாயிலில் நிற்பவர்கள், லௌகிக வாழ்வின் இலக்குகளையே பின்தொடர்ந்தபடி பெரும்பாலான காலத்தைக் கழித்த பின்னர் வாழ்வின் உண்மையான இலக்கை அடைய வேண்டும் என்ற ஆவல் கொண்டு லௌகிகத்திலிருந்து ஆன்மிகத்திற்கு தங்கள் குறிக்கோளைத் திருப்பியவர்கள். இத்தகையவர்களுக்கு கர்மயோகம் உரைக்கப்படுகிறது. கர்மயோகத்தை ஒரு குறிப்பிட்ட காலம் தொடர்ந்து பயில்வதன் மூலம் இவர்கள் மனத்தூய்மை மற்றும் மனக்கட்டுப்பாடு என்ற தகுதிகளை அடைவர். பின்னர் இவர்கள் தத்துவ விசாரத்தை மேற்கொண்டு தன்னைப்பற்றிய அறிவை அடைந்து மோக்ஷத்தை அடைவர். இன்னொரு வகையானவர்கள் உலகத்தின் மீதுள்ள வைராக்யத்தால் சன்யாசத்தைத் தங்கள் வாழ்க்கைப்பாதையாகத் தேர்ந்தெடுத்தவர்கள். அவர்களை இங்கு கிருஷ்ணர் சாங்கியர்கள் என்று குறிப்பிடுகிறார். ‘ஸாங்க்ய’ எனும் சொல்லின் பொருள் அறிவு அல்லது ஞானம். பகவான் கீதையில் அதை சந்யாசம் என்ற அர்த்தத்திலும் உபயோகிக்கின்றார். ஞானத்திற்காகத் தன்னை அர்பணித்தவர்கள் ஸாங்கியர்கள் என்றும், எல்லா உபநிஷத்திலும் தெளிவாக விளக்கப்படும் வேதாந்தத்தின் மைய விஷயமான இந்த ஞானம் ஸாங்க்யம் என்றும் கூறப்படும். வேதாந்தத்தின் ஒரே முக்கிய கருத்து ‘ஆத்மாவே ப்ரம்மன்’ என்பதால் ஸாங்க்யம் ப்ரம்மத்தைக் குறிக்கும். மேலும் ப்ரம்மத்தை ‘ஸாங்க்யம் ப்ரம்ம’ என்றும் ப்ரம்மத்தை பற்றிய ஞானத்தை ஸாங்க்யம் என்றும், அந்த ஞானத்தை பின்தொடர்பவர்களை ஸாங்க்யர்கள் என்றும் அழைக்கலாம். இவர்களுக்கு செயல்புரிய வேண்டிய எந்த அவசியமும் இல்லை. இந்த சாங்கியர்கள் நேரடியாகவே ஞானயோகத்தை பயிலத் துவங்கி ஆன்மவிடுதலையை அடைவர்.

எனவே கிருஷ்ணரின் கூற்றுப்படி இருப்பது இரண்டே இரண்டு யோகங்கள்தாம். கர்மயோகம், மற்றும் ஞானயோகம். விளக்குவதற்கு வசதிக்காகவும், ஒரு குறிப்பிட்ட யோகம் எம்முறையில் பயிலப்படுகின்றது என்பதைப் பொறுத்தும் அவற்றுக்கு வெவ்வேறு பெயர்கள் கொடுப்பது வழக்கத்தில் இருந்து வருகின்றது. எனவேதான் ராஜயோகம், பக்தியோகம், உபாசனாயோகம் என்ற பிரிவுகளும் பேசப்படுகின்றன. ஆனால் சிந்தித்துப் பார்த்தால் மேற்கூறப்பட்ட மூன்று யோகங்களையும் கர்மயோகம் என்ற பிரிவுக்குள் அடக்கி விடலாம். பக்தியோ, உபாசனையோ, ஹடயோகமோ ஏதோ ஒரு குறிப்பிட்ட செயல் செய்யப்படுவதைத்தானே குறிக்கிறது? இம்மூன்று யோகங்களின் மூலமும் அடையப்படும் பலன் என்பது மனத்தூய்மை, உடல் மற்றும் மன உறுதி ஆகியவைதானே? ஏதோ ஒருவித கர்மத்தில் இவை அடையப்படுவதால் செயல் மூலம் ஆற்றப்படும் அனைத்து யோகங்களும் கர்மயோகம் என்ற பிரிவுக்குள்ளேயே அடங்கும். மாறாக ஞானயோகம் என்பது புத்தியைக் கொண்டு இயற்றப்படுவதால் அது கர்மயோகத்தினின்றும் பிரிந்து தனிப்பட்ட யோகமாக இருக்கின்றது. 

யோகத்தில் இரண்டு பிரிவுகள்தாம் இருக்கின்றன என்று நிர்ணயம் செய்து விட்டோம். ஆனால் இங்கு விளக்குவதற்கு வசதிக்காக கர்மயோகத்தை கர்மயோகம், உபாசனாயோகம் என்று இரண்டாகப் பிரித்து வகைப்படுத்திக் கொள்ளலாம்.  கர்மயோகம், உபாசனாயோகம், மற்றும் ஞானயோகம் ஆகிய மூன்று யோகங்களைப் பற்றியும் தனித்தனியாக, விரிவாகக் காண இருக்கிறோம். ஆனால் முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டியது இந்த மூன்று யோகங்களும் ஒன்றுக்கொன்று மாற்று வழிமுறைகளாக முன் வைக்கப்படவில்லை என்பதைத்தான். அதாவது சிலருக்குக் கர்மயோகம், சிலருக்கு ஞானயோகம், மற்றும் சிலருக்கு உபாசனாயோகம் என்று பரிந்துரைக்கப்படவில்லை. இம்மூன்று சாதனைகளும் படிநிலைகளாகவே பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு படிநிலையுமே முக்கியமானது, ஒருவரது ஆன்மிக முன்னேற்றத்துக்கு அவசியமானது. எனவே ஒவ்வொரு யோகத்தினுடைய தன்மை குறித்தும் அறிந்து கொள்வதும் இன்றியமையாததாகிறது. 

முதலில் கர்மயோகம் என்ற சாதனையைக் குறித்து விரிவாகக் காண்போம். கர்மம் என்றால் செயல். இங்கு யோகம் என்பது அந்தச் செயல் எந்தவித பாவனையுடன் (Attitude) செய்யப்பட வேண்டும் என்பதைக் குறிக்கிறது. எனவே கர்மயோகம் என்பதை எளிய மொழியில் விளக்க வேண்டுமெனில் சரியான பாவனையுடன் செய்யப்படும் செயல் என வரையறுக்கலாம். 

சரியான பாவனையுடன் செய்யப்படும் செயல் என்றால் என்ன என்று அறிந்து கொள்வதற்கு முன்பாக கர்மங்களின் வகைகள் பற்றி அறிந்து கொள்வோம். நம்மால் செய்யப்படக்கூடிய அனைத்து செயல்களும் மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. இந்த வகைப்பாடு ஒரு மனிதனின் பொருள்சார் நன்மைகளின் அடிப்படையிலோ அல்லது பொருள்சார் தாக்கத்தின் அடிப்படையிலோ செய்யப்படவில்லை. அவனது ஆன்மிக ஆளுமையையும், ஆன்மிக இலக்கையும் கருத்தில் கொண்டே செயலின் இந்த மூன்று பிரிவுகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன. செய்யும் செயல் ஒரே மாதிரியாக இருந்தாலும், அது எந்தமாதிரியான பாவனையுடன் செய்யப்படுகிறது என்பதைப் பொறுத்து அந்தச் செயலுக்கு விளையும் பலன் மாறுபடும். அதனால்தான், “செயல் ஒருவனை பந்தப்படுத்துவதில்லை. செயல் புரியும்போது அவன் மேற்கொள்ளும் பாவனைதான் அவனை பந்தப்படுத்துகிறது” என்று ஞானிகள் வலியுறுத்துகிறார்கள்.

முதல் வகைச் செயல் உத்தம கர்மம் எனப்படுகிறது. இதற்கு சாத்விக கர்மம் என்றும் பெயருண்டு. இது பலனை எதிர் பாராமல் செய்யும் செயல். உலக நன்மைக்காகவும், பிறருடைய நன்மைக்காகவும் செய்யப்படும் செயல்கள் உத்தம கர்மம் என்றழைக்கப்படுகின்றன. இம்மாதிரிச் செயல்களை ஒருவர் புரிவதால் அவருக்கு ஏற்படும் பலன் அவரது மனம் தெளிவாகவும், கருணையுடனும், அமைதியாகவும் இருக்கும். இவ்விதச் செயல்களைப் புரியும் போது “இது என் அறம்; நான் இதை இறைவனுக்கே அர்ப்பணிக்கிறேன்” என்ற உணர்வு உள்ளே ஓடிக்கொண்டேயிருக்கும். உத்தம கர்மம் புரிபவனின் தன் முனைப்பு எனப்படும் அஹங்காரம் குறைந்திருக்கும். இப்படிப்பட்ட செயல் மனத்தைத் தூய்மைப்படுத்தி, தன்னை அறிவதற்கான சாதகமான சூழ்நிலையை உருவாக்கும். அகவிடுதலையைத் தேடிப் பயணம் மேற்கொள்வோர் இவ்வித கர்மத்திலேயே ஈடுபடுவர்.

ஒருவர் இந்தப் பிரபஞ்சத்தில் தன் இருப்பு தொடர்ந்து நிகழ்வதற்கு எத்தனைக் காரணிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன என்று உணர்ந்தாலே அவர் புரியும் செயல்களின் நோக்கமும், பாவனையும் தூய்மையாக மாறிவிடும். அவர் புரியும் எந்தச் செயலும் உத்தம கர்மமாகவே இருக்கும். சிந்தித்துப் பார்த்தால் நாம் சுகமாக உயிர் வாழ்வதற்கு இவ்வுலகில் எத்தனையெத்தனை விஷயங்களைச் சார்ந்திருக்கிறோம்! இயற்கையை, நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களை, நாம் அறியாது எங்கோ வாழ்ந்து கொண்டிருக்கிற மனிதர்களை, ஏன் நமக்கு முன் வாழ்ந்து நாம் இப்போது பயன்படுத்தும் பல விஷயங்களை உருவாக்கி விட்டு மறைந்து போன மனிதர்களையும்கூட நாம் நமது நலவாழ்வுக்காகச் சார்ந்திருக்கிறோம். இவர்கள் அனைவரிடமும் நன்றி பாராட்டும் வண்ணம் செய்யப்படும் எந்தச் செயலும் உத்தம கர்மம் என்றே அழைக்கப்படும். இந்தவித கர்மங்களை வேதங்கள் பஞ்சமகா யக்ஞங்கள் என்று அழைக்கின்றன. ஐந்து மகத்தான யாகங்கள். யக்ஞம் என்றால் ஹோமகுண்டத்தில் நெய்யூற்றிச் செய்யப்படும் ஒரு சடங்கு அல்ல. நாம் வாழ்வதற்கு நம்மைத்தாங்கி நிற்கும் இயற்கை, உறவுகள், உயிர்கள், சக்திகள் ஆகிய அனைத்தின்பாலும் உள்ள நன்றியுணர்வைச் செயலில் காட்டுவதே இங்கு யக்ஞமாகிறது.

ஐந்து வகையான கர்மங்களை பஞ்சமகா யக்ஞங்கள் என்று நமது மரபு அழைக்கிறது. தேவ யக்ஞம், பித்ரு யக்ஞம், பிரம்ம யக்ஞம், மனுஷ்ய யக்ஞம், மற்றும் பூத யக்ஞம் ஆகியன அந்த ஐந்தும். தேவ யக்ஞம் என்பது இயற்கை, தெய்வங்கள், காலம், திசை போன்று நம்மைத் தாங்கி நிற்கும் அனைத்து சக்திகளுக்கு நம் நன்றியுணர்வைச் செலுத்துவது ஆகும். இந்த நன்றியுணர்வு ஒரு எளிய பிரார்த்தனையின் மூலம் காட்டப்படுகிறது. பிரார்த்தனை மட்டுமல்லாது இயற்கையைப் பாதுகாப்பதற்காகச் செய்யப்படும் எந்தச் செயலும் தேவயக்ஞத்துக்குள் அடங்கும்.  

நமது முன்னோர்களின் உழைப்பு, தியாகம், நம் வாழ்வின் மேன்மைக்கான அவர்களது பங்களிப்பு இவற்றைக் கருத்தில் கொண்டு அவர்கள் விட்டுச் சென்ற அறத்தை நாமும் தொடர்ந்து செய்தலே பித்ரு யக்ஞம் எனப்படுகிறது. நம்மை விட்டுப் பிரிந்த நம் உறவினர்கள் மட்டுமல்ல, நம்மை நல் வழிப்படுத்தும், நமது வாழ்வின் உயர்வுக்காக ஒரு துளியேனும் பங்களிப்பைச் செலுத்திவிட்டுச் சென்றிருக்கும் எவரும் நமக்கு பித்ருதான். அவர்களது நோக்கங்களை நாம் மேற்கொண்டு தொடர்ந்து செய்வதும் அவர்களுக்கு நாம் செலுத்தும் நன்றியுணர்வுதான்.

மூன்றாவது பிரம்மயக்ஞம். வேதங்களையும், அவற்றின் துணை நூல்களையும் நமக்கு அளித்து ஆன்ம விடுதலைக்கு நம்மை ஆற்றுப்படுத்தும் ரிஷிகளிடமும், பிற ஆசிரியர்களிடமும் நாம் காட்டும் நன்றியுணர்வே பிரம்மயக்ஞம் எனப்படுகிறது. இங்கு பிரம்மம் என்றால் வேதம் என்று பொருள்படும். இந்த மகத்தான ஆசிரியர்களால்தான் நமக்கு பந்தத்திலிருந்து விடுபடும் வாய்ப்பு கிட்டியிருக்கின்றது. எனவே அவர்களுக்கு நாம் நம் நன்றியுணர்வைச் செலுத்துவது இன்றியமையாததாகிறது.

இந்த நன்றியுணர்வைச் செலுத்துவது எங்ஙனம்? இந்த ஆசிரியர்களுக்கு நம்மிடமிருந்து எதுவும் தேவையில்லை. அவர்கள் எல்லாவற்றிலிருந்து விடுதலை அடைந்தவர்கள். அப்படி அவர்களுக்கு ஏதாவது விருப்பம் இருந்து அது நம் மூலம் நிறைவேற வேண்டும் என்று அவர்கள் நினைப்பார்களேயானால் அது வேதம் முதலிய ஆன்மிக விடுதலை நல்கும் நூல்களையும், அவை அளிக்கும் ஆன்மிகச் சாதனை முறைகளையும் பாதுகாத்தலும், இக்கல்வியை அதற்குத் தகுதியான மாணவர்களுக்குக் கடத்துதலுமேயாகும். எனவே தத்துவக் கல்வியில் ஈடுபடும் ஒவ்வொருவரும், பிறருக்குத் தத்துவத்தை போதிக்கும் அனைவருமே பிரம்மயக்ஞத்தில்தான் ஈடுபட்டு வருகின்றனர். குரு சிஷ்ய பாரம்பரியத்தின் மூலம் இந்த பிரம்மயக்ஞம் காப்பாற்றப்பட்டு வருகின்றது. பொருளும், பாதுகாப்பும் அளித்து இந்த பாரம்பரியத்தைக் காப்பது இல்லறத்திலிருப்பவர்களின் கடமையாகின்றது. அவர்களும் இச்செயல்களின் மூலம் பிரம்மயக்ஞத்தையே புரிகின்றனர்.

நான்காவது மனுஷ்ய யக்ஞம். சமூகத்திற்கும், பிற மனிதர்களுக்கும் புரியும் சேவை இதன்கீழ் வருகின்றது. ஒரு தனிமனிதனாக நாம் இந்தச் சமூகத்தையும், பிற மனிதர்களையும் சார்ந்திருக்கின்றோம். அதற்கு நாம் செலுத்தும் நன்றியுணர்வாகத்தான் அவர்களுக்கு நாம் புரியும் சேவையும் அமைகிறது. 

ஐந்தாவது பூத யக்ஞம். இங்கு பூதம் என்பது பஞ்சபூதங்களைக் குறிக்கின்றது. மனிதனல்லாத பிற உயிர்களிடத்தும், இயற்கைப்பொருட்களிடத்தும் நாம் பாராட்டும் நன்றியுணர்வே பூதயக்ஞம் எனப்படுகிறது. நமது நல வாழ்க்கைக்கு எல்லா உயிர்களும், இயற்கையின் ஒவ்வொரு அங்கமுமே பங்கு வகிக்கின்றன. இந்தப் பிரபஞ்சம் முழுமைக்கும் நன்றியுணர்வோடு இருப்பதே பூதயக்ஞமாகிறது. 

இந்த ஐந்து பிரிவுகளையும் கொண்டதுதான் பஞ்சமகாயக்ஞம் என்றழைக்கப்படுகிறது. மனிதனாகப் பிறந்த அனைவருக்கும் பஞ்சமகாயக்ஞம் புரிவது ஒரு விதியாகவே குறிப்பிடப்படுகிறது. 

நினைவூட்டலுக்காக: நாம் கர்மங்களின் பிரிவுகள் குறித்துப் பார்த்து வருகிறோம். அதில் முதலாவது பிரிவான உத்தம கர்மத்தின் கீழ் வருவதுதான் பஞ்சமகாயக்ஞம். உத்தம கர்மத்துக்கு நிஷ்காம கர்மம், சாத்விக கர்மம், பரோபகார கர்மம் போன்ற பெயர்களும் உண்டு. இவ்வித கர்மங்களைச் செய்தல் ஒருவனது ஆன்மிக வளர்ச்சிக்கு உதவும்.

இரண்டாவது வகையான கர்மம் மத்யம கர்மம் என்றழைக்கப்படுகிறது. இச்செயல்களைப் புரியும் ஒருவனுக்கு ஆசையும் எதிர்பார்ப்பும் உள்ளே இருக்கும்; மனம் சத்துவத்துக்கும் ரஜஸுக்கும் நடுவே அலைபாயும். நெறிமுறையைப் பின்பற்றியும், அறத்தின் வழியில் அவன் செயல்களைச் செய்தாலும், அச்செயல்களின் விளைவாக  “எனக்கு இது வேண்டும்” என்ற பிணைப்பு அவனிடமிருந்து இன்னும் விடப்படவில்லை. மத்யம கர்மத்தைப் புரிவதால் கிடைக்கும் பலன்களும் இன்பமும், துன்பமும் கலந்தவையே. மத்யம கர்மத்தில் ஈடுபடுதலே பெரும்பாலான மனிதர்களின் இயல்பு. தன்னுடைய இன்பம் மற்றும் பாதுகாப்புக்காகச் செய்யப்படும் எல்லா கர்மங்களும் மத்யம கர்மங்களே. அவை ஒருவனது லௌகிக வாழ்க்கையின் உயர்வுக்குப் பயன்படலாம். ஆனால் ஒருபோதும் இவ்வித கர்மங்கள் அவனது ஆன்மிக வளர்ச்சிக்கு உதவாது.

மூன்றாவதான கர்மம் அதமகர்மம் எனப்படுகிறது. இதற்கு தாமச கர்மம் அல்லது நிஷித்த கர்மம் என்றும் பெயருண்டு. அறமற்ற செயல்கள், அழிவுச்செயல்கள், பிறருக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள் ஆகியன அதமகர்மம் எனப்படும். இவை ஆன்மிக வளர்ச்சிக்கு மட்டுமல்ல, வாழ்வின் எளிய இன்பங்களையும்கூட ஒருவனை அனுபவிக்க விடாமல் துன்புறுத்தும் தன்மையுடையவை. ஆன்மிகப்பாதையில் அடியெடுத்து வைக்கும் எவரும் இயல்பாகவே இவ்வித கர்மங்களைப் புரிவதிலிருந்து தங்களை விலக்கிக் கொள்வர். எனவே இக்கர்மம் குறித்து நாம் விலாவாரியாக விளக்கத் தேவையில்லை. நம்மையும் மீறி நாம் அதமகர்மத்தில் ஈடுபட வேண்டிய சூழ்நிலைகள் வரும்போது அவற்றைத் தவிர்க்க இயலாதுதான். சில கர்மங்கள் சூனகர்மங்கள் எனப்படுகின்றன. அதாவது தவிர்க்க இயலாத அதமகர்மங்கள். பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்துதல் போன்றவை அக்கர்மங்கள். அவற்றை ஒருவன் வாழ்வில் தவிர்க்க இயலாது. உத்தமகர்மத்தைத் தொடர்ந்து செய்வதன் மூலம் ஒருவன் சூனகர்மங்களின் பாதிப்பை சமப்படுத்தி விடுகிறான்.

ஆன்மிகப்பாதையில் இருக்கும் ஒருவர் தன் வாழ்க்கையில் பிரதானமாக உத்தம கர்மத்தையே சார்ந்திருக்க வேண்டும். மத்யமகர்மத்தின் மீதான ஈடுபாட்டைப் படிப்படியாகக் குறைத்துக் கொண்டு வர வேண்டும்.  அதமகர்மத்தை அறவே தவிர்க்க வேண்டும். தவிர்க்க இயலாத இடத்தில் அதற்கான பிராயச்சித்த கர்மத்தைச் செய்து அதைச் சமன்படுத்த வேண்டும்.

கர்மங்களின் வகைகள் அறிந்தோம். இவ்வறிதல் கர்மயோகம் என்றால் என்ன என்று விளங்கிக்கொள்வதற்கு இன்றியமையாததாகும். ஆன்மிகப்பாதையில் நுழைவோருக்கு கர்மயோகமே முதல் படி. கர்மயோகத்தின் இயல்பு குறித்தும், அதைப் பின்பற்றுவது ஏன் அவசியம், அதை எவ்வாறு பின்பற்ற வேண்டும் என்பது குறித்தும் அடுத்த பகுதியில் விரிவாகக் காண்போம்.

[தொடரும்]

அத்வைதம்: அகவிடுதலைக்கான பயணம்

எழுதாக்கிளவியும், ஏனைய நூற்களும் செயல் என்னும் நிவேதனம்

Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.