
சில நாட்கள், அரசன் பீமனின் உபசாரங்களை ஏற்று, மணமகளின் வீட்டில் இருந்து விட்டு நளன் தன் ராஜ்யம் திரும்பினான். வழக்கம் போல ராஜ காரியங்களை கவனித்து, பிரஜைகளுக்குத் தேவையானவைகளை அறிந்து செய்தான். யாகங்கள் செய்து அந்தணர்களுக்கு நிறைய தானங்கள் செய்தான். தமயந்தியை மகிழ்விக்க பல இடங்களுக்கும் அழைத்துச் சென்றான். அழகிய மகன் பிறந்தான். அவனுக்கு இந்திரசேனன் என்று பெயரிட்டான். அடுத்து ஒரு மகள் பிறந்தாள் அவள் இந்திர சேனை என்று பெயர் பெற்றாள்.
நியாயமாக ஆட்சி செய்து வந்தான். திருமகள் தானே வியந்து அருளியது போல செல்வம் நிறைந்தது.
இந்திரன் முதலான நால்வரும் திரும்பிச் செல்லும் வழியில் கலி எதிர்ப்பட்டான். துவாபர என்பவனும் உடன் இருந்தான். இந்திரன் அவனை எங்கு கிளம்பினாய்? என்று வினவினான். தமயந்தி சுயம்வரமாம், அங்கு போகிறேன், அவளைப் பற்றி கேள்விப் பட்டதில் இருந்து என் மனதில் அவளையே நினைத்துக் கொண்டிருக்கிறேன், என்றான். இந்திரன் ‘சுயம்வரம் முடிந்து விட்டதே, அவள் நளனைத் தேர்ந்தெடுத்துக் கொண்டாள். ஏமாற்றம் அடைந்த கலி, அவர்களைப் பார்த்து, நீங்களும் பங்கெடுத்தீர்களா? உங்களை விட்டு அவள் மனிதனை தேர்ந்தெடுத்தாளா, என்ன அவமானம் என்றான். நான் விட மாட்டேன். அந்த நளனை பழி வாங்குவேன் என்றான்.
நால்வரும் திகைத்தனர். அப்படி எதுவும் செய்யாதே. நாங்கள் அருகிலிருந்து சம்மதித்து தானே அவள் நளன் கழுத்தில் மாலையிட்டாள். இருவருமே நற்குணங்கள் நிரம்பியவர்கள், அவர்கள் வாழ்வில் குறுக்கிடாதே. நளன் வேத சாஸ்திரங்களைக் குறைவறக் கற்றவன், நாங்களும் ஆசிர்வதிக்க நடந்த திருமணம். யாரையும் துன்புறுத்தாமல், சத்யமே வழியாக, செய்ய வேண்டிய கடமைகளை குறைவறச் செய்கிறான். யாகங்கள் செய்விக்கிறான், தானங்கள் கொடுத்து அனைவரையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொண்டுள்ளான். தூய்மையான மனம், இனிமையான பேச்சும் செயலும், தன்னடக்கம் உடையவன். நாங்கள் அவனிடம் திருப்தியாக இருக்கிறோம். ஓ கலி! அவனை கெடுக்க நினைப்பவன், தானே கெடுவான். அவனுக்கு தீங்கு செய்ய நினைப்பவன் படு குழியில் நரகத்தில் வீழ்வான். அவன் என்றும் நல்ல கதியை அடைய மாட்டான்.
கலியை இப்படி கண்டித்து விட்டு அவர்கள் தேவலோகம் சென்றனர். துவாபரனிடம் கலி சொன்னான். இருக்கட்டும், இவர்கள் சொன்னதால் உடனே எதுவும் செய்யவில்லை. ஆனால் என்னுள் ஏமாற்றமும், கோபமும் நிறைந்து விட்டதே. அதை அடக்கிக் கொண்டிருக்கிறேன். அது வெடித்து கிளம்பும் ஒரு நாள். அது நளனை பாதிக்கும். அவன் நாட்டை விட்டுத் துரத்துவேன். அவனுக்கு ஸுதாட்டத்தில் மோகம் உண்டு என்று அறிவேன். அதை வைத்தே தமயந்தியை அவனிடம் இருந்து பிரிக்கிறேன்.
துவாபரனிடம் தன் திட்டத்தைச் சொன்ன கலி புருஷன், நளனுடைய ராஜ்யத்திற்கு வந்தான். அரண்மனையில் நுழைந்து பன்னிரெண்டு ஆண்டுகள் தனக்கான இடைவெளியைத் தேடி அலைந்தான். எந்த சிறிய தவறு செய்தாலும் நளனுடைய உடலில் நுழையத் தக்கத் தருணம் தேடிக் கொண்டே வளைய வந்தான். ஒரு நாள், மாலை நேர சந்த்யா வந்தனம் என்பதைச் செய்ய கிளம்பிய நளன், உடலை சுத்தம் செய்து கொள்ளவில்லை என்பதைக் கண்டு அந்த சிறு இடைவெளியில் அவன் நளனின் உடலில் நுழைந்து கொண்டு விட்டான். புஷ்கரன் என்ற நளனுடைய சகோதரனை தனக்கு நண்பனாக ஆக்கிக் கொண்டான். சில நாட்கள் சென்ற பின், அழைத்து, நளனை ஸூதாட்டத்துக்கு அழை. நான் மறை முகமாக உனக்கு உதவி செய்கிறேன். அவனை தோற்கடித்து ராஜ்யத்தை கைப்பற்றிக் கொள்வாய். என்று ஆசை காட்டி தன் வசம் ஆக்கிக் கொண்டான்.
துவாபரனும், புஷ்கரனுமாக நளனுடைய மாளிகைக்குச் சென்றனர். பொறுத்திருந்து நளனின் நன் மதிப்பை பெற்றனர். பொதுவாக விளையாட்டாக ஸூதாட்டம் என்பதை தாங்கள் ஆடி அவன் கவனத்தை தங்கள் பால் திருப்பினர். புஷ்கரன் வ்ருஷ என்ற பெயரில் அரச பதவியையும் அடைந்தான்.
அதன் பின் போட்டியாக ஸூதாட்டம் ஆட அழைத்தான். தமயந்தியும் அருகில் இருக்கையிலேயே நளன் சம்மதித்தான். அவன் உடலில் குடி கொண்ட கலியின் பாதிப்பால் நளன் தொடர்ந்து தோற்றான். முதலில் பொன் நானயங்கள் வைத்து இழந்தான். வெள்ளி, ரதங்கள் என்று வரிசையாக இழந்தான். தன் ஆடைகள், என்று ஒவ்வொன்றாக தன் பொருட்களை இழந்தான். நண்பர்கள் தடுத்தனர். அவன் மனம் மாறவில்லை. ஜயிப்பதே குறியாக ஸூதாட்டத்தில் மேலும் மேலும் ஆடித் தோற்றுக் கொண்டே இருந்தான். நாட்டு மக்கள் வந்து கெஞ்சினர். அரச மந்திரிகள் வந்து தடுத்தனர். எதுவும் பயனில்லை.
அரசனின் ரத சாரதி, தமயந்தியிடம் வந்து, தாயே,! நாட்டு மக்கள் அனைவரும் , அரசு அதிகாரிகளுடன் வாசலில் வந்து நிற்கிறார்கள். பதட்டமான நிலையில் அரசனை தடுத்தே ஆக வேண்டும் என்று விரும்புகிறார்கள். நீங்கள் வந்து அவர்களுடன் பேசுங்கள்’ என்றான்.
முதலில் நளனிடம் சென்று தானே வாதாடினாள். கண்ணீர் பெருக, தொண்டையடைக்க கெஞ்சினாள். நாட்டு மக்களை கவனியுங்கள். ராஜ காரியங்கள் தடை படுகின்றன. அரச அலுவலர்கள், மந்திரிகள் வரை செய்வதறியாது வந்து நிற்கின்றனர். போதும் இந்த ஸூதாட்டம், –
நளனின் உடலில் இருந்து அவனை ஆட்டுவித்த கலி அரசனை விடுவானா? அவளை ஏறிட்டு பார்த்த அரசன் நளன், ஒரு வார்த்தையும் பதில் சொல்லாமல், திரும்ப ஆட்டத்தில் முனைந்தான். நாட்டு மக்கள் மிக்க வருத்தத்துடன் திரும்பினர். யுதிஷ்டிரா! அந்த புஷ்கரனும், நளனும் தொடர்ந்து பல மாதங்கள் ஆடிக் கொண்டிருந்தனர். பழைய நளனுடைய நற்குணங்கள் வெறும் பேச்சு பொருளாக ஆயிற்று.
தமயந்தி தன் சொல் அவனிடம் எடுபடவில்லை, மேலும் மேலும் அவன் செயலால் நாட்டின் நிலையும் மோசமாக ஆவதைப் பார்த்து தன் அந்தரங்க சேடியான, ப்ருஹத்சேனா என்பவளை அழித்து, ‘நளன் சொல்வது போல சொல்லு. அரச பொக்கிஷத்தில் மீதி என்ன செல்வம் மீதி உள்ளவை எவை, எவை அழிந்தன என்று சபைத் தலைவர்களை அவனிடம் தெரிவிக்கச் சொன்னதாகச் சொல்லு’ நிலைமையின் விபரீதம் அவனுக்கு உரைக்கட்டும் என்றாள்.
தமயந்தி நளனிடம் வந்து குடி மக்களும், சபைத் தலைவர்களும் மறு முறையும் வந்துள்ளனர் என்று தெரிவித்தாள். அவனோ அவள் சொற்களை ஒட்டு மொத்தமாக கேட்காதவன் போல இருந்தான்.
செய்வதறியாது திரும்பிவந்தவள் தன் சேடியிடம் வார்ஷ்னேயன் என்ற ரத சாரதியை அழைத்து வா என்றாள். சாரதி வந்தவுடன், சாரதி வந்தவுடன், அவனிடம், ‘ அரசனை அறிந்தவன் நீங்கள். உங்களிடம் அவர் அன்புடன் இருந்தார். இந்த புஷ்கரன் ஏமாற்றுகிறான் என்று அறிந்தே இந்த தவறான செயலில் இறங்கி இருக்கிறான் அரசன். எங்கள் குழந்தைகளைக் காப்பாற்றுங்கள். இவர்களை குண்டின புரத்தில் என் தந்தையிடம் சேர்த்து விடுங்கள்; என்று வேண்டிக் கொண்டாள். இந்த நிலை நீடிக்காது, முழுவதுமாக அழித்து விட்டுத் தான் புஷ்கரன் ஓய்வான். இந்த ரதம், நளனுடைய பிரத்யேக குதிரைகள் இவைகளுடன் நீங்களும் அங்கேயே இருங்கள். வார்ஷ்னேயன் என்ற அந்த சாரதி, அரசனின் பிரதான மந்திரிகளுடன் இந்த விவரங்களைச் சொல்லி அனுமதி பெற்று, குழந்தைகளை அழைத்துக் கொண்டு ரதங்கள் அரசனின் குதிரைகள் இவைகளுடன் குண்டின புரம் சென்று விட்டான். விதர்ப தேசத்து அரசன் பீமனிடம் நடந்த விவரங்களைச் சொல்லி, அவைகளை ஒப்படைத்து விட்டு, வருத்தம் தாங்காமல், தான் அயோத்யா சென்று விட்டான்.
அயோத்தி அரசன் ருது பர்ணன் என்பவனைச் சந்தித்து அரசவையில் தானும் சாரதியாக, ரதம் ஓட்டுபவனாக சேர்ந்து கொண்டான்.
தமயந்தி பயந்தது போலவே புஷ்கரன் அரசனிடமிருந்து ராஜ்யத்தை பணயமாக வைக்கச் செய்து தோற்கடித்து, ராஜ்யத்தை தனதாக்கிக் கொண்டு விட்டான். சிரித்துக் கோண்டே, ஓ நள சக்ரவர்த்தியே, இனி சக்ரவர்த்தி நீ அல்ல, நான் தான். என்ன இருக்கிறது உன்னிடம், பணயம் வைக்க, தமயந்தி தான் – இப்பொழுது தமயந்தியை வைத்து ஆடுவோம் என்றான்.
நளனுக்கு இப்பொழுது தான் உரைத்தது. ஒரு வார்த்தை கூட பேசாமல், ஆடை அணிகலன்களை கழட்டி வைத்து விட்டு ஒற்றைத் துண்டுடன், நாட்டை விட்டு வெளியேறினான். தமயந்தியும் பின் தொடர்ந்தாள். அவளும் தன் அணிகலன்களை, பட்டாடைகளை விட்டு எளிய ஒன்றை அணிந்து கொண்டு அவனறியாமல் பின் தொடர்ந்து சென்றாள். நாட்டின் எல்லையில் இருவரும் மூன்று இரவுகள் தங்கினர். புஷ்கரன் நாட்டில் அறிவித்தான். நான் தான் அரசன், எந்த விதமான உதவியும் நளனுக்கு செய்பவர்கள் கடுமையாகத் தண்டிக்கப் படுவார்கள் என்றான். மரணம் தான் தண்டனை. நளனுடைய பட்ச பாதிகளும் மக்களும் செய்வதறியாது தாங்களாக எந்த உதவியும் செய்ய முன் வரவில்லை.
நளன் தமயந்தி பின் தொடருவதை அறியாமலே தண்ணீரைத் தேடிச் கொண்டு சென்றான். அந்த இடம் மழையின்றி வறண்டு கிடந்த இடம். நளன் பொறுப்பின்றி கவனிக்காமல் விட்டதால் பாழடைந்த நிலம். சில பறவைகளைக் கண்டான். உடனே அந்த பொன்னிற அன்னப் பறவையின் நினைவும் வந்தது. அவைகளில் ஒன்றை பிடித்து தன் ஆடைக்குள் மறைத்துக் கொண்டான். அதுவோ அவன் பிடியை விட்டு விலகி பறந்து ஆகாயத்தில் நின்று கொண்டு அவனிடம் சொல்லியது: அப்படி அது பறந்த சமயம் அவனுடைய ஒற்றை ஆடையும் அதன் காலில் மாட்டிக் கொண்டு காற்றில் பறந்து விட்டது. தலை குப்புற பூமியில் விழுந்த நளன் – அவைகள் ஏதோ சொல்வதைக் கேட்டான். “ஓ தோற்றவனே! நாங்கள் தான் அந்த ஸூதாட்டக் காய்கள். உன்னிடம் எதுவும் இருக்க விடக் கூடாது என்பது எங்களுக்கு இடப்பட்ட ஆணை. அதனல் இந்த வஸ்திரம் நிஷத நாட்டின் சொத்து. எனவே பிடுங்கிக் கொண்டோம் என்றன.
அப்பொழுது தான் தமயந்தியைக் கண்ட நளன், மிக்க வருத்தத்துடன், நான் ஏமாற்றப்பட்டேன். நண்பனாக இருந்து ஏமாற்றினான். நாட்டு மக்களும் புறக்கணித்து விட்டனர். நீ மட்டுமே என்னுடன் வந்திருக்கிறாய். இடையில் இருந்த துணியையும் பறவைகள் பிடுங்கிச் சென்று விட்டன. என் செய்வேன்? இந்த கதிக்கு ஆளாக நான் செய்த தவறுகள் தான் காரணம். தெய்வங்களே, ஏன் என் புத்தி இப்படி போயிற்று.
தமயந்தி நான் சொல்வதைக் கேள். இந்த பாதை தென் திசை நோக்கிச் செல்கிறதே, இதில் போ. தென்னாட்டின் அவந்தி என்ற தேசம் வரும். அதன் பின் ருக்ஷாவத் என்ற மலைத் தொடர் வரும். அது பிரசித்தமான விந்த்ய மலைத் தொடரைச் சேர்ந்தது. பயஸ்வினி என்ற நதி வரும். அது அங்கு உத்பத்தியாகி, நாட்டில் பிரவகித்து சமுத்திரத்தை அடையும். அதன் கரையில் பல ரிஷிகள், சாதுக்கள் இருப்பர். பழங்களும், மற்ற உணவு தானியங்களும் கிடைக்கும். அந்த வழியே சென்று விதர்ப தேசத்தை அடைவாய். கோசலம் என்ற தேசம் வரும். அதன் பின் நாட்டின் தென் பகுதி. தமயந்தியைப் பார்த்து நளன் இதையே அறிவுறுத்தி நீ போ என்று பணித்தான்.
தமயந்தியோ, அந்த நிலையிலும் நளனை விட்டுப் பிரிய மனமில்லாமல் பதில் சொன்னாள். ‘ அரசனே! உங்கள் நிலையைப் பார்த்து என் மனம் நடுங்குகிறது. என் கால்கள் துவண்டு விட்டன எப்படி நடப்பேன். பசியும், தாகமும் வாட்ட, உடலில் ஆடையும் இன்றி என்ன செய்வீர்கள்? இந்த நிலையிலும் உங்கள் பழைய திறமைகளை நினத்து தைரியத்தை வரவழைத்துக் கொள்ளுங்கள். இந்த சுய பச்சாதாபத்தை விடுங்கள். நானும் முயற்சி செய்தேன். ஸூதாட்டம் உங்கள் அறிவை மறைத்து விட்டது. என் சொல் உங்கள் செவியில் ஏறவேயில்லை. நல்லதோ, கெடுதலோ, நான் உங்கள் மனவி, உடலின் ஒரு பாகம் போன்றவள். என்னை அருகில் இருக்க விடுங்கள். அது தான் நன்மை, அது தான் சத்யம்.
‘ஓ தமயந்தி பொருள் இல்லாதவர்களுக்கு இந்த உலகம் இல்லை, உற்றார் உறவினர் இல்லை, இல்லாளும் இல்லை என்பார்கள். இத்தனைக்குப் பிறகும் உன்னை இழக்க மாட்டேன். என் மனதில் உன்னிடம் உள்ள தூய்மையான அன்பு, என்றும் உன்னை நலமாகவே காண விரும்புகிறது. என்னுடன் இந்த துன்பம் போகட்டும். நீ போ. நானே அழிந்தாலும் அழிவேன், உன்னை வருந்த விட மாட்டேன். என்றான்.
என்னிடம் எதற்கு வழி சொல்லி விதர்பம் போக சொல்கிறீர்கள். உங்களுக்கு என்னைப் பிரியவும் மனமில்லை. மனம் குழம்பி கிடக்கிறது. அதனால் தான் என்னை விலகிப் போகச் சொல்கிறீர்கள். என் உறவினர்களிடம் நான் போகலாம் என்றால் உங்களுக்கும் அங்கு இடமுண்டு. இருவருமாக போகலாம். எந்த பெற்றோர், மகளை மறுப்பார்கள். விதர்ப தேசத்து மக்கள் அறிவார்கள், உங்களை கண்டிப்பாக வரவேற்பார்கள். அங்கு இருந்து உடலும் மனமும் தேறிய பின் அடுத்து யோசிக்கலாம்.
நளன் சொன்னான்: தமயந்தி! உன் தந்தை எனக்கு புகலிடம் கொடுப்பார். அதில் சந்தேகமே இல்லை. நான் விட மாட்டேன். இழந்ததை திரும்பிப் பெறும் வரை, என் தவறால் என் பிரஜைகளுக்கும், அரச அதிகாரிகள், உற்றார் உறவினர்களுக்கும் வந்த துன்பத்தை துடைக்காமல் உயிரை விட மாட்டேன். பயப்படாதே.
தமயந்தியின் ஆடைக்குள் தானும் நுழைந்து கொண்டு அந்த அரசன், சமாதானமாக பேசியும், பசி தாகத்துடன் காட்டில் அலைந்தனர். ஒரு இடத்தில் வழிபோக்கர்களுக்கான ஒரு மடம் இருந்தது. அதனுள் சென்று இருவருமாக தரையில் படுத்தனர். படுத்தவுடன் களைப்பால் இருவரும் தூங்கியும் விட்டனர். தமயந்திக்கு இந்த நடையும் அலைச்சலும் மிக அதிகம். அவள் ஆழ்ந்து தன்னை மறந்து தூங்கினாள். நளன் சிறிது நேரத்தில் விழித்துக் கொண்டான். நினைவுகள் துரத்தின. தன்னையே நொந்து கொண்டான். இந்த அளவு இறங்கும் அளவு நான் அறிவிழந்தவனாக எப்படி ஆனேன். எது என்னை தூண்டியது. மரணமே மேல் என்ற எண்ணம் வரவும், உள் மனம் எச்சரித்தது. மரணம் இதற்கு பரிகாரம் இல்லை. உடன் வந்து இருக்கிறாளே, இவளால் எனக்கு நன்மையா., இவளை ஏன் வருத்த வேண்டும்? என்னிடம் கொண்ட அன்பினால் இதை கஷ்டமாக நினைக்காமல் இருக்கலாம். இதற்கா இவளை மணந்தேன். கூடியிருந்த அரசர்கள் பொறாமை பட, தேவ லோக வாசிகளையும் தவிர்த்து என்னை மணந்தவள், இவள் வாழ்வை சீரமைக்கவே நான் வாழ்ந்தாக வேண்டும். என்னைப் பிரிந்தால் வேறு வழியின்றி அவள் பெற்றோரிடம் செல்வாள். நான் திரும்ப என் ராஜ்யத்தைப் பெற்றாலும், இல்லாவினும் இவள் வாழ்வில் துன்பம் இருக்காது. நினைக்க நினைக்க, தமயந்தியை விட்டுத் தான் விலகுவது தான் சரியான முடிவு என்று தீர்மானமாக நினைத்தான். மனதில் வேண்டிக் கொண்டான். தெய்வங்களே, என்னை மணந்த ஒரே காரணத்திற்காக, இவளுடய நற்குணங்களும் ஆற்றலும் வீணாக கூடாது. இவளைக் காப்பாற்றுங்கள்.
சுற்று முற்றும் பார்த்தான். இந்த ஒரு ஆடை தானே இருவரையும் இணைக்கிறது. இதை வெட்டி நானும் ஒரு பகுதி துண்டை உடுத்திக் கொண்டுச் செல்கிறேன். எப்படி வெட்டுவது? அந்த மடத்தின் உள்ளறை வரை சென்று தேடினான். ஒரு கத்தி கிடந்தது. அதை எடுத்துக் கொண்டு வந்து, தன் வாளின் வீச்சினால் எதிரிகளின் படையையே அழித்த வீரன், நள மகா ராஜா, சக்ரவர்த்தி என்று புகழ் பெற்ற வீர சேனரின் மகன், தமயந்தியின் கணவன், அந்த மழுங்கிய கத்தியால் தன்னையும் தமயந்தியையும் இணைத்திருந்த ஆடையை வெட்டி இரு துண்டுகளாக்கி, தான் ஒரு பகுதியை உடுத்திக் கொண்டு வெளியேறினான். ஆனால் அவன் மனம் அடங்கவில்லை. திரும்ப வந்து தமயந்தியை அணைத்துக் கொண்டு கதறினான்.
என்ன கஷ்டம் இது. வெய்யிலின் தாக்கத்தையோ, வாயுவின் பாதிப்போ இன்றி அருமையாக வளர்ந்த விதர்ப ராஜ குமாரி, ஏன் இந்த துன்பத்துக்கு ஆளானாள். தரையில் தன்னையறியாது தூங்குகிறாள். இவளை வாழ வைப்பான் என்று நம்பி தானே எனக்கு கையளித்துக் கொடுத்தார். என்ன செய்வேன்? நான் வணங்கிய ஆதித்யர்கள், வசுக்கள், அஸ்வினி தேவதைகள், மாருதர்கள் உன்னை காக்கட்டும். என்னிடம் துளி அளவு நல்வினை இருந்தால் அது உன்னை காக்கட்டும். உன் கற்பும், நல்லெண்ணமும் உன்னைக் காக்கட்டும். தெய்வங்களே, நீங்களே இவளுக்கு பொறுப்பு என்று வேண்டிக் கொண்டவன் மெள்ள மெள்ள பின் நடையாக நடந்து அவளைப் பார்த்தபடியே வெகு தூரம் சென்று விட்டான். ஆனாலும் சற்று பொறுத்து திரும்பி வந்தான். அருகில் அமர்ந்து அவளுடன் மனதினால் பேசினான். திரும்பவும் விலகிச் செல்வதும், மனம் கேட்காமல் வருவதுமாக இருந்தவன் ஒரு நிலையில் தன்னை அடக்கிக் கொண்டு சென்றே விட்டான். கலியின் ஆளுமைக்கு உட்பட்டவன் வேறு என்ன செய்வான்.

கண் விழித்த தமயந்தி நளனைக் காணாமல் திடுக்கிட்டாள். உரக்க அழைத்துப் பார்த்தாள். காட்டில் அலைந்து பரிதாபமாக திரிந்து கொண்டிருந்தவளை ஒரு பெரிய பாம்பு தொடர்ந்து வந்தது. அவள் நளனை பெயர் சொல்லி அழித்து என்னை காப்பாற்று என்று அலறினாள். ஓ நள மகாராஜனே! நீ வீரன், இப்படி கோழையாக என்னை தவிக்க விடுவாயா? நடுக் காடு எனக்கு பயமாக இருக்கிறதே. நேர்மையே உருவானவன் நீ, உன்னை நம்பிய என்னை கை விட்டு எங்கே சென்றாய். என்ன செய்வேன். வாழ் நாள் முழுவதும் உடன் இருந்து காப்பேன் என்று சத்யம் செய்து தானே மணப் பந்தலில் மாலையிட்டாய். இப்படி நடுக் காட்டில் தவிக்கிறேனே. மனித பிறவி, காலம் வந்து தானே உயிரை விடும். எனக்கு மரணமும் வந்து விட்டால் நல்லது. என் குழந்தைகள்? கஷ்டமே, எங்கு இருக்கிறேன், எப்படி வெளியேறுவேன். நைஷத ராஜா, மரத்தின் பின்னால் ஒளிந்து கொண்டு என்னை சீண்டுகிறாயா? அவ்வளவு கொடூரமானவனா, நீ பதில் சொல்லாமல் இருக்கிறாய். கடவுளே, என்ன செய்வேன். அரசே, நடந்ததை எண்ணி வருந்தாதே. இருவருமாக ஒரு வழி கண்டு கொள்வோம். மீண்டும் ஆட்சியைப் பிடிப்போம், பயப்படாதே, வா, எனக்கு ஆறுதல் சொல்லு. பயத்தால் தவிக்கிறேனே, காதில் விழ வில்லையா, ஓ அரசே, என்று அலறினாள். இங்கும் அங்குமாக ஓடித் தேடினாள். தனியாளாக நான் என்ன செய்வேன், நீதான் என்ன செய்வாய், வா, எங்கிருந்தாலும் வா என்றாள். வெறி பிடித்தவள் போல அங்கும் இங்குமாக ஓடிய சமயம் அந்த பெண் பாம்பை மிதித்து விட்டாள். அதுவோ பசித்து கிடந்தது. அவளை சுற்றிப் படர்ந்து கொண்டு, தன் குகைக்கு இழுத்துச் சென்றது. அப்பொழுதும் அவள் நைஷதனான தன் கணவனையே எண்ணி வருந்தினாள். தன் இக்கட்டான நிலை கூட அவளை வருத்தவில்லை. ‘ஓ அரசனே! இதோ பார். என்னை இந்த பாம்பு பிடித்துக் கொண்டு தனக்கு இரையாக கொண்டு போகிறது. இனியும் தாமதிக்காதே. வந்து என்னை காப்பாற்று. ஒரு நாள் நீ உன் ராஜ்யத்தை திரும்ப் பெறுவாய். உன் குடையையும், பரிவாரங்களையும் அடைவாய். அந்த சமயம் என்னை நினைக்க மாட்டாயா, இப்படி பாம்பின் வாயில் வீழ்ந்தாள் என்று தெரிந்து தான் என்ன பலன்? என்ன செய்வாய்? .ஓ நிஷதா! எங்கு இருக்கிறாய், வர மாட்டாயா என்று அலறினாள். அரசர்களுள் சிங்கம் போன்றவனே,
ஒரு வேடன் அதைக் கேட்டு ஓடி வந்தான், அந்த பாம்பைக் கொன்று அவளை விடுவித்தான். முகத்தில் நீரை தெளித்து அவள் நினைவு வரச் செய்தான். அதன் பின், யார் நீ? இந்த அளவு அழகிய கண்களுடைய பெண்ணை நான் கண்டதேயில்லை. எங்கிருந்து வருகிறாய் என்று வினவினான். அவளும் நடந்ததைச் சொன்னாள்.
சேலை கிழிபட்டு பாதியாக அவளை மறைத்திருக்க, அவள் அழகும் உடல் வாளிப்பும் அந்த வேடனுக்கு புதிதாக இருந்தன. நிராதரவாக விடப் பட்ட பெண் என்று அறிந்த பின் வேடனுக்கும் ஆசை வந்தது. தானே அவளை அடைய பலவந்தமாக முயன்றான். அவளோ, நெருப்பாக மாறியது போல கோபக்கனல் பொங்க அவனை சபித்தாள். நிஷத ராஜனைத் தவிர எவரையும் நான் மனதால் கூட நினைத்தில்லை. தவறாக என்னை அணுகும் இந்த மனிதன் உயிரின்றி விழட்டும் என்றாள். அவன் மயங்கி பூமியில் விழுந்தான்..
அதன் பின் தமயந்தி மேலும் தேடிக் கொண்டே சென்றாள். அடர்ந்த காடு பல மிருகங்கள் தென்பட்டன. புலிகள், சிறுத்தைகள். சிறு ரூரு என்ற மிருகங்கள், எருமைகள், கரடிகள், புள்ளி மான் கள் கூட்டம், பலவிதமான பறவைகள் தென்பட்டன, பலவிதமான வாசனைப் பொருட்களைக் கொண்ட மரங்கள். சால மரங்கள், மூங்கில் காடு, தாவ என்ற மரம், அஸ்வத்த மரங்கள், டிண்டுகம் என்ற மரம், இங்குதி மரங்கள், கிம்சுகம் என்ற மரம், அர்ஜுன, நிமாவஸ் (கருவேப்பிலை) தினிச என்ற மரம்,சால்மலி, ஜம்பு, மாமரங்கள், லோத்ரா என்பவைகள், கடேச்சு என்பவை, பிரம்பு, பத்மகம் என்ற மரம், அமலகம் என்ற நெல்லி மரங்கள், ப்ளக்ஷ என்ற மரம், கதம்பம், உதும்பர என்ற வகை மரங்கள், வதாரி என்பவை, வில்வம், அரச மரம், பியாளம் என்பவை, வில்வம், பனை மரங்களின் பல வகைகள், பேரீச்ச மரங்கள், ஹரிதக என்ற கடுக்காய் மரங்கள், விபீதிகா என்பவை. இவைகளை அதிசயமாக பார்த்துக் கொண்டே நடந்தாள்.
பல மலைகள் இடைப்பட்டன. அவைகளில் பலவிதமான தாது பொருட்கள் இருந்தன. பல புதர்கள், பழத் தோட்டங்கள், பறவைகள் கூச்சலிட்டுக் கோண்டிருந்தன. இடையிடையே நீர் நிறைந்த சிறு ஆறுகள், பெரிய நதிகள், அருவிகள் இவைகளையும் கண்டாள். பல விதமான பாம்புகளைக் கண்டாள். அடையாளம் தெரியாத சில பிறவிகள். ராக்ஷஸர்கள் போன்ற பெரிய உருவத்தினர். சிறு கிராமங்கள். கிராமங்களின் உபயோகத்துக்கான குளங்கள், சிறிய நீர் தொட்டிகள், சிறு குன்றுகள், காட்டாறுகள், சில இடங்களில் அவை விழுவதே அழகாக இருந்தன. பல விதமான இயற்கை வினோதங்களைக் கண்டபடி சென்று சொண்டே இருந்தாள்.
ஓரிடத்தில் எருமை மாடுகள் நிறைய இருந்தன. அங்கும் கரடிகளும். சிறு பாம்புகளும் காட்டு மிருகங்களும் இருந்தன. இப்பொழுது பயம் விட்டுப் போயிற்று. அவைகளையும் இறைவனின் எண்ணற்ற படைப்புகளே, உயிரினங்களே என்ற மனப் பக்குவம் அடைந்தவளாக அவைகளை அன்புடன் பார்த்து, விசாரிப்பது போல கையசைத்து, கண்களால் பேசுவது போலவும் கடந்து போய்க் கொண்டே இருந்தாள். எதுவும் அவளருகில் வரவோ, தடுக்கவோ இல்லை. மனம் முழுவதும் நளன் என்ன ஆனானோ என்ற கவலையைத் தவிர வெளியில் கண்ணில் பட்டவை அவளுக்கு எந்த பயத்தையும் அளிக்கவில்லை.
ஒரு நாள், களைத்து ஒரு கல்லின் மேல் அமர்ந்தாள். கால்கள் துவண்டு நடுக்கம் கண்டது. வாய் விட்டு புலம்பலானாள். ‘நிஷத ராஜனே! உன் அகன்ற மார்பும், வலிமை வாய்ந்த கைகளும் என்னை இப்படி அலைய விட்டு வாளா இருக்கின்றனவா, என்ன பயன் அவைகளுக்கு. அஸ்வமேத யாகம் செய்தவனே! யாருக்கெல்லாமோ, தானங்கள் கொடுத்தாயே, என்னை இப்படி தன்னந்தனியாக அலைய விட்டு என்ன காண்பாய்? என்ன நலம் பெறுவாய்? உன்னை புலி போன்றவன் என்று நம்பியவளை, புலிகள் புசிக்கட்டும் என்று விட்டு விட்டாயா.
வானத்தில் உயரப் பறக்கும் அன்னப் பறவையை தூது அனுப்பினாயே. அதை மறந்து விட்டாயா? அவைகள் சொன்னது என் மனதில் அப்படி பதிந்து போவானேன். உன்னையே நினைத்து என் உடலை வருத்திக் கொள்வானேன், நான் கண்டேனா, வாழ்க்கை இப்படி தடம் மாறும் என்பதை. எல்லாமே கனவா? பொய்யா?
வேத சாஸ்திரங்களை கசடறக் கற்றவன் என்றார்கள். அதன் ஆறு அங்கங்களுடன், உபாங்கங்கள் – இவைகளை ஒரு தட்டில் வைத்தால் சத்யம் என்ற ஒரு பொருள் அனைத்துக்கும் ஈடுஆகும் என்று நீதானே எனக்குச் சொன்னாய். எதிரிகள் பயந்து ஓடுவர், தலை சிறந்த வீரன் என்று புகழ்ந்தனரே, இவ்வளவுதானா உன் வீரம், காட்டில் நான் அலைவது உனக்கு தெரியாதா? தெரிந்தும் கிடக்கட்டும் என்று கை கழுவி விட்டாயா, என்னவென்று நினைப்பேன். உனக்குத் துன்பம் கொடுக்காமல் இந்த காட்டிலேயே மடிகிறேன், மகிழ்ச்சி தானே.
வன தேவதைகளே! யாராவது எனக்கு இரங்க மாட்டீர்களா? தன்னத் தனியாக தவிக்கிறேன், எனக்கு வழி காட்ட மாட்டீர்களா? நம்பியவர்களை கை விட மாட்டேன் என்று தெய்வங்கள் சொல்வதாகச் சொல்வார்களே, உலகில் தெய்வங்களே அற்றுப் போய் விட்டாதா? யாருமே அபயம் தர தயாராக இல்லையா?
அரசனே, நீயும் இந்த சொற்களைச் சொல்லியிருக்கிறாய் என் ஆட்சியில் எந்த ஒருவரும் துயரப் பட விட மாட்டேன். நான் அபயம் தர இருக்கும் பொழுது என் நாட்டினர் பசியால் வாட மாட்டார்கள். துணையின்றி தவிக்க மாட்டார்கள். செல்வமின்றியோ, வசதியின்றியோ யாரையும் இருக்க விட மாட்டேன், என்றெல்லாம் சொன்னவன் தானே, அரசனாக இருந்து சொன்ன வார்த்தைகள் எனக்கு இல்லையா?
கிழி பட்ட என் சேலை கந்தலாகி விட்டதே, அதை உன் பெரிய கண்கள் காண மறுக்கின்றனவா. தனியாக விம்மி நான் அழுவது உன் காதுகளில் விழாதா? கூட்டத்திலிருந்து பிரிக்கப் பட்ட பெண் மான் போல திகைத்து நிற்கிறேன், எனக்கு ஆதரவாக ஒரு சொல் பேச உனக்கு வார்த்தைகள் நினைவு வரவில்லையா?
என் பிரியமான மனைவி, இருவரும் ஓருயிரும் ஈருடலும் ஆனவர்கள் என்று சொன்னாயே, உன் உடலில் மறு பாகம் தவித்தால் தெரியாதா? எங்கு இருக்கிறாய், படுத்து கிடக்கிறாயா, நடக்கிறாயா, எதுவுமே தெரியவில்லையே. காட்டு மரங்களே, நீங்கள் கண்டீர்களா, இந்த நாட்டு பேரரசன்,நளன் என்பான், அவனைத் தெரியுமா? நள மகா ராஜா என்று மரியாதையாகச் சொல்வார்கள்.
விதர்ப தேசத்து ராஜ குமாரி நான். என்னை நினைவிருக்கிறதா? வெட்கமும், பயமும் நிறைந்தவளாக தானே கண்டிருக்கிறாய். இப்பொழுது நான் பயப்படுவதில்லை. இதோ எதிரில் ஒரு புலி என் மேல் பாயத் தயாராக நிற்கிறது. அதன் பெரிய பற்களைப் பார்க்கிறேன். எந்த நிமிஷமும் என் மீது விழுந்து குதறும். ஆனால் நான் நிதானமாக அதன் கண்களின் ஒளியை ரசித்துக் கொண்டிருக்கிறேன், ஏன் தெரியுமா? நான் நளனுடைய மனைவி. எதிர்த்த பேரரசுகள் அவன் அடி பணிந்தன. இது என்ன வனத்தில் வாழும் புலிதானே. அதையே கேட்கிறேன், ஏ, வன விலங்கே, புலி என்று உன்னை மற்ற சிறு மிருகங்கள் கண்டு ஓடுகின்றனவே. என் கணவனும் புலியாகத் தான் இருப்பான். வீரன் என்றும் நற்குணங்களின் இருப்பிடம் என்றும் சொல்வர், நீ அறிவாயா? நீ காட்டின் ராஜா, அவன் நாட்டின் ராஜா, அவ்வளவே வித்தியாசம்.
மலையரசனே, நீ அறிவாயா? அசோக, வகுள , புன்னக மரங்களே, நீங்கள் அறிவீர்களா? பூமிக்கே நடுவில் இருந்து தாங்கும் தூண்கள் என்று மலைகளைச் சொல்வார்களே, நீங்கள் அறியாமல் எதுவும் நடக்காது என்பார்கள், நீங்கள் கண்டீர்களா?
ராஜ சூய, அஸ்வமேத யாகங்கள் செய்தவன், என் தந்தை விதர்ப ராஜன், பீமன் என்பவன், அவன் ஆட்சியில் அனைவரும் தத்தம் தொழில்களைச் செய்து கொண்டு திருப்தியாக வாழ்கிறார்கள். என் புகுந்த வீட்டுக் காரர்களும் அரசர்களே. வீர சேனன் என் மாமனார். அவரும் சக்ரவர்த்தி யாகவே வாழ்ந்தார். என் தந்தையைப் போலவே அவர்களும் நியாயமாக, தேவையறிந்து செய்யும் கொடையாளிகளாகவே இருந்தனர் இருக்கின்றனர். விதர்ப ராஜ்யத்தில் யாரைக் கேட்டாலும் சொல்வார்கள் என் தந்தை அவர்களை எப்படி பரி பாலிக்கிறார் என்பதை. வீர சேனனின் மகன் நளன், என் கணவன், அவனும் அதே புகழ் பெற்றவனாகத் தான் வாழ்ந்து கொண்டிருந்தான், ஆனால், விதி, நான் இங்கு பரிதவிக்கிறேன். ஓ அந்த புலி எங்கே, என்னை விட்டுப் போய் விட்டதா? காட்டரசனே, புலியே, உனக்கும் நான் வேண்டாதவளாக ஆகி விட்டேனா – கடவுளே.
இன்னும் பலவாறாக புலம்பியவள், எழுந்து வடக்கு நோக்கிச் செல்ல ஆரம்பித்தாள். மூன்று நாட்கள் இரவும் பகலும் நடந்த பின் வசதியானவர்கள் போல தெரிந்த சில பெண்மணிகள், அந்த காட்டில் கடும் தவம் செய்து கொண்டிருந்த சில ரிஷிகளுக்கும் ஆகாரம் முதலியன எடுத்துக் கொண்டு வந்ததைப் பார்த்தாள். வசிஷ்டரோ, ப்ருகுவோ, அத்ரியோ எனும்படி தவ சீலர்களாக சிலர் அந்த குகைகளில் இருந்தனர் போலும். உணவோ, தண்ணீரோ ஏதோ ஒன்றை மட்டும் ஏற்பவர்களாக, அதுவும் இல்லாமலும் தன் மனதை கட்டுப் படுத்தியவர்களாக, தவம் செய்து கொண்டிருந்தனர். சுவர்க்கம் போக விரும்பியவர்கள் சிலர். மர உரிகளையும், மான் தோலையும் ஆடையாக அணிந்தவர்கள். ஆசிரமங்களைச் சுற்றி வானரங்கள் தாவி குதித்துக் கொண்டிருந்தன. பல விதமான புள்ளிகளுடன், புள்ளி இல்லாத மான் வகைகள் தென் பட்டன. தூய்மையாக அமைதியாக இருந்த தவ சீலர்களின் குடில்கள்.
(வளரும்)
Discover more from சொல்வனம் | இதழ் 363 | 22 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.
