- தெலுங்கு பெண் எழுத்தாளர்களின் ஒற்றுமை
- தெலுங்கு பெண் எழுத்தாளர்கள் கொண்டாடப்படுகிறார்கள் – பகுதி- 2
- ‘நூறேள்ள பண்ட்ட’ (ஆயிரங்காலத்துப் பயிர்)
- நவீன தெலுங்கு இலக்கியத்தில் பெண்ணியம் எழுதிய ஆண் எழுத்தாளர்கள் – பகுதி- 1
- கே. சிவாரெட்டி
- கவிஞர் பகவான், ஆசு பாபு ராஜேந்திர பிரசாத் & என்ட்லூரி சுதாகர்
- பாபிநேனி சிவசங்கர்
- சையது சலீம்
- கொடுத்துப் பெறுவதல்ல பெண்ணியம்
தெலுங்கில்: டாக்டர். சி.ஹெச். சுசீலா
தமிழாக்கம் : ராஜி ரகுநாதன்
பெண்ணுக்கு கல்வியறிவு வேண்டும், ஸ்வேச்சை வேண்டும், கௌரவம் வேண்டும், சமத்துவம் வேண்டும் என்று கேட்டால் யாரும் கொடுக்க மாட்டார்கள். அவை ஒருவர் கொடுத்துப் பெறுவதல்ல. அதனால்தான் கூரான இலக்கியத்தால், கவிதை, சிறுகதை, நாவல் போன்ற செயல்பாடுகளைக் கருவியாக்கி, வாசகரின் இதயத்திற்குள் ஊடுருவிச் சென்று சீர்திருத்தத்தை சாமர்த்தியமாக நடத்த வேண்டும் என்று தீர்மானித்து பெண்கள் நடைமுறைப்படுத்தினார்கள். பெண்களின் முன்னேற்றத்திற்காக பெண்கள் போராடுவது ஓரொருமுறை தம் சுயபாதுகாப்புக்காக மட்டுமே என்று வரையறுக்கப்படுகிறது.
ஆனால் பெண்களின் நியாயமான கோரிக்கைகளுக்குத் துணையாக, ஆண் இலக்கியவாதிகள் புயல்போல வேட்டியை இறுக்கிக் கட்டி களமிறங்கிய செயல் மகிழ்ச்சியை அளிக்கிறது. பரிதாபம் காட்டிச் சும்மா இருக்காமல் அவர்களின் துயரங்களைப் புரிந்து கொண்ட ஆண் எழுத்தாளர்களின் இலக்கிய செயல்பாடுகள் விரிவாக வெளிவந்தன. நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் போன்றவை அளவிலும் இயல்பிலும் சிறிதாக இருந்தாலும் சமுதாயத்தில் பெரிய மாற்றங்களை எடுத்து வருகின்றன. சிந்தனையைத் தூண்டுகின்றன.

ஆண் எழுத்தாளர்கள் சிலர் ‘பெண்ணியம்’ என்று பெயர் சூட்டாமல் பெண்ணியக் கருத்துகளை வலிமையாக வெளிப்படுத்தி எழுதினார்கள். பெண்களின் கஷ்டங்களையும் சுகங்களையும் நடைமுறைப் படுத்தக்கூடிய கதாபாத்திரங்களில் நிறைத்து, கண்ணுக்கு விருந்தாக அனுபவிக்க வைத்தார்கள். ஒவ்வொரு இலக்கியவாதியும் தம் இலக்கியச் செயல்பாடுகளில் தனதேயான வழியில் பெண்களின் சிறப்பை அங்கீகரிக்கிறார்கள். அவளுடைய முன்னேற்றத்திற்கும் புகழுக்கும் தடையாக விளங்கும் சமூக, கலாசார, பொருளாதார பிரச்சினைகளை ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் விவாதித்து தீர்வு காட்டியுள்ளார்கள். பண்டைய இலக்கியங்களில் மறைமுகமாக அந்தச் செயல்பாடுகள் இருந்தாலும் அவை சாம்பல் பூத்த நெருப்பாக இருந்தன. ஆனால் நவீன காலத்தில் நிறைய பேர் பெண்களுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு அனைத்துத் துறைகளிலும் தமக்குரிய நடையில் ஊக்கம் அளித்தாரகள். விவாதம் செய்தார்கள். முழக்கம் எழுப்பினார்கள். என்றென்றும் மனிதாபிமானிகளின் இதயத்தில் கூடு கட்டிக் கொண்டு வாழ்ந்தார்கள். பெண் முன்னேற்றமே இலக்காகக் கொண்டு கவிதைகளும் கதைகளும் சிறுகதைகளும் தர்க்கத்தோடு கூட வெளிவரத் தொடங்கின.
‘கொடவடிகண்டி குடும்பாராவ்’ எழுதிய குடும்பக் கதைகளில், அடுத்த முக்கியத்துவம் ‘பால்ய விவாகத்தின்’ மீது. பொருத்தமில்லாத திருமணங்களின் கொடுமைகளை ‘சீச்சீ’ என்று தூற்றி எழுதினார்.
‘குரஜாட அப்பாராவ்’, ‘கல்யாசுல்கம்’ நாடகத்தின் கருப்பொருளாகச் ‘சமத்துவமில்லாத மனிதர்களின்’ திருமணச் சடங்கின் சுயநலத்தைத் தோய்த்து உலர்த்தினார். கல்வியறிவில்லாததால் நேரும் விபத்துகளை விவரித்தார். விலைமகள் தொழிலில் இருக்கும் உயர்வு தாழ்வுகளை தராசில் வைத்து நிறுத்தார்.
‘காள்ளகூரி நாராயண ராவ்’ எழுதிய சீர்திருத்த நாடகம் ‘வர விக்ரயம்’ (வரனை விற்பது). இதில் சமூகத்தில் படர்ந்த கொடுமையை நியாயமான முறையில் வெறுத்து, அனைவரும் அருவருக்கும்படிச் செய்து விழிப்பு ஏற்படுத்தினார்.
அடுத்து ‘சலம்’ பெண்களின் முன்னேற்றத்திற்கு மட்டுமின்றி பெண் சுதந்திரத்திற்கும் அதாவது வாக்கு சுதந்திரமாகட்டும், பாலியல் ஸ்வேச்சையாகட்டும். கல்வி பெறும் உரிமையாகட்டும், பொருளாதாரத் தகுதிக்கு அடித்தளமாகட்டும் இதில் எது ஒன்று வளர்ச்சி பெற்றாலும், சலம் என்ற படைப்பாளியின் இலக்கு முழுமையடைந்தாற்போலத்தான். அவர் முன்னெடுத்தது பெண்ணின் முழுமையான வளர்ச்சியையே. பரிபூரணமான சுதந்திரப் பிரகாசத்தையே. சலம் என்ற எழுத்தாளரின் பேனாவில் இருந்து உயிர் பெற்று எழுந்த பெண் கதாபாத்திரங்களின் நோக்கம் ஆண், பெண் தொடர்பு பற்றிய முழுமையான அறிவைப் புகட்டுவதே.
‘கோபிசந்த்’ எழுதிய ‘அசமர்த்தனின் ஜீவன யாத்ர’ என்ற தொகுப்பில் இருக்கும் கதைகளில் பெண்ணின் மதிப்பைத் தெளிவாக வெளிப்படுத்தினார். ‘பம்மிடி ஜகன்னாதராவ்’ எழுதிய ‘ரெக்கல கூடு’ கதையில் பெண்ணின் ஆதிக்கம் அரச குடும்பங்களில் எவ்விதம் பெயரளவில் உள்ளது என்று காட்டினார். கே சிவாரெட்டி, வேறுபாடின்றி பெண்ணுக்குக் கிடைக்கவேண்டிய உசிதமான உயர்ந்த இடத்தை எப்படிப்பட்ட பாசாங்கும் இல்லாமல் காட்சிப்படுத்தினார். ‘அவள் யாராயிருந்தால் என்ன?’ போன்ற கவிதைத் தொகுப்புகளில் பெண்ணை ஆராதனை செய்கிறார். பெண்களிடம் காட்டப்படும் பாகுபாட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். ‘ரச்சபண்ட’ என்ற கதையில் ‘மத்தூரி நரேஷ்பாபு’, ‘தலித வ்யாகரணம்’ என்ற கதையில் ‘துல்லிமல்லி சுதாகர் பாபு’, ‘வர்த்தமானம்’, ‘வர்கீகரணம்’ போன்றவற்றில் ‘என்ட்லூரி சுதாகர்’ போன்றோர் தலித்தியம், பெண்ணியும் சார்ந்த முழக்கங்களை எழுப்பினர். ‘ஆவிஷ்க்ருதம்’ என்ற தொகுப்பில் ‘ஹரிஹர நாத சர்மா’, ‘ஹிரண்மயி’ போன்றோர் பெண் சக்தியை அபாரமான சக்தியாக வடிவமைத்தனர்.
‘கொலகலூரி இனாக்’ பல்வேறுபட்ட கவிதை, கதை, கட்டுரைகளால் இதயத்தில் நேரடியாக சூடாகவும் கூராகவும் பாயும் சொற்களால் பறை அடித்து விவாதித்தார். அவருடைய படைப்புகளில் மனிதநேயம், தலித்தியம், பெண்ணியம் மூன்றும் இடம் பெற்றன. பெண்ணினத்தையும், பெண்ணின் தன்மானத்தையும், பெண்ணின் முக்கியத்துவத்தையும் தகுந்த விதத்தில் போற்றும்படி தன் கூர்மையான இலக்கியப் படைப்புகளைக் கொண்டு சித்திரித்தார். ‘ரமா என் புதல்வி’ போன்ற சட்டச் சிக்கல் கொண்ட பிரச்சினையை மிக நுட்பமாகவும் அழகாகவும் தன்னம்பிக்கையை வெளிப்படுத்தும் விவாதங்களின் இடையே மிக உயர்ந்த காட்சியமைப்பால் ஆவேசத்தோடும் வேகத்தோடும் பரபரக்க வைக்கிறார். ‘பில்லனே கண்ட்டானு’ (பெண் குழந்தையையே பெறுவேன்) போன்ற கதைகளில் சமுதாயத்தில் பெண்ணின் முக்கியத்துவத்தையும் அவளுடைய பிரயோஜனத்தையும் சித்திரித்தார். ஒரு திரைப்படம் போல உணர்ச்சிகரமாக அமைத்து வாசகர்களை மூச்சு விடாமல் படிக்க வைத்தார். தன் எழுத்துக்களில் பெண்களை பூஜைக்குரியவளாகக் காட்டினார். ‘மா அம்மா’ என்ற கதையில் தாய்க்குக் கொடுத்த தாய்மை ஸ்தானம் உயிரோட்டத்தோடு ஒளிர்ந்தது. நுட்பமான, இயல்பான சொற்களால் பெண்ணின் ஆளுமையை உயர்த்திப் பேசினார். பெண்ணைப் போற்றுவதற்குத் தேவையான திடமான கோட்டையை அமைத்தார்.
இலக்கியத்தை வளர்க்கும் இளம் எழுத்தாளர்களுக்கு நவீனத்துவம் விடுக்கும் சாவால்கள் பல இருந்தாலும், மிக பழமையானவையாக இருந்தாலும், முக்கியமாக பெண்ணியம் அவர்களை ஈர்த்துக் கொண்டே உள்ளது. மத மூட நம்பிக்கைகளைக் கண்டிக்கும் தைரியம் எல்லோருக்கும் இருக்காது. ஆனால் உண்மையான நேர்மைக்கு அந்த தைரியம் இருக்கும். அந்த வழியில் வந்த எழுத்தாளர் ‘சலீம்’.
‘சலீம்’ எழுதிய ‘ரூபாயி செட்டு’, ‘சதரபு ஏனுகு’, ‘ஒன்டரி சரீரம்’ முதலான கதைகளில் சந்கோஜமில்லாத கண்டிப்பு இருக்கும். முஸ்லீம் மதத்தையும், அவர்களுடைய சமூகத்தையும், அவர்களுடைய உயர்வையும் விரும்பும் வழியில் அடி எடுத்து வைப்பதும், வைக்க வைப்பதும் அவருக்குள்ள தார்மிகப் பொறுப்பு. அதனால்தான் முஸ்லீம் பெண்களின் வெளியில் தெரியாத அழகை ‘வெண்டி மேகம்’ நாவலில் சித்திரித்து வெளிப்படுத்தினார். ‘குலா’, ‘மெஹர்’ போன்ற கதைகளில் வரதட்சணை, காணிக்கைகள் போன்ற கொடிய பழக்கங்களை எதிர்த்தார். ‘புர்க்கா’ அணிவது போன்ற ஆரோக்கியமற்ற நோய்களைப் புன்னகையோடு ஆச்சர்யமாக “வேண்டாம் போ” என்றார். ‘தலாக்’ சிறுகதையில் ‘பத்வா’வின் உசிதத் தன்மைக்கு பரீட்சை வைக்கிறார். சின்னச் சின்ன கதைகளோடு, நுட்பமான நடையில், யாருக்கும் மனவருத்தம் எற்படாத வகையில் நடக்கும் அவருடைய ‘காலுத்துன்ன பூல தோட்ட’ (எரியும் பூந்தோட்டம்) என்ற நாவலுக்கு மத்திய சாஹித்திய அகாடமி விருது கிடைத்தது உண்மையில் தெலுங்கு வாசகர்கள் பெருமையடைய வேண்டிய செய்தி.
“அனைவரின் பிறப்பிற்கும் வளர்ச்சிக்கும் காரணமாகும் அவள் அவளாகாவே எஞ்சியிருக்கிறாள்”. “எல்லோருடைய தேவைகளையும் நிறைவேற்றி, யாருக்கும் தேவையில்லாதவளாகிறாள்”. “யுக யுகங்களாக விளங்கும் பவித்திர தாசி” என்ற கே. சிவாரெட்டியின் வேதனை, மக்கள் கூட்டத்தின் கோஷத்தில் உயர்ந்து எழும் குரலாகக் கேட்கிறது.
பெண் முன்னேற்றம் என்ற மகா யக்யம் ‘ராவணனின் சிதை’ போல எப்போதும் எரிந்து கொண்டேயிருக்கும். சீர்திருத்தவாதிகளின் கூர்மையான ஆயுதம் இலக்கியம். மனித நேயத்தோடு கூடிய விழிப்புணர்வு ஏற்படாதவரை இந்த அசாதாரண முயற்சிக்கு முடிவு இல்லை. முளை விட்டுக் கொண்டே இருக்கும். மொட்டு வைத்துக் கொண்டே இருக்கும். நிற்காது.
பெண்ணியத்தை பெண் எழுத்தாளர்களோடு, ஆண் எழுத்தாளர்களும் ஒன்றிணைந்து மனித நேயத்தோடு தம் முழுமையான உதவியை அறிவித்து, கவிதை, கதைகள், நாவல்களை எழுதி வெளியிட்டார்கள். அவற்றை மதிப்பாய்வதே இந்த கட்டுரைத் தொடரின் முக்கிய நோக்கம். பெண்ணியத்தை தர்க்கத்தோடும் பகுத்தறிவோடும் அரசாங்கமும், தனியார் அமைப்புகளும், மதப் பெரியவர்களும் அடையாளம் காணவேண்டும் சீர்திருத்தங்கள் வர வேண்டும். பெண் விழிப்புணர்வை முன்னோக்கி எடுத்துச் செல்ல வேண்டும். இது ஒரு முடிவில்லாத போராட்டம். பெண்ணின் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் சுதந்தித்திற்குமான ஏக்கம்.
நவீன தெலுங்கு இலக்கியத்தில் பெண்ணியம் குறித்து பெண்கள் பல படைப்புகளைச் செய்துள்ளனர். ஆனால் பெண்ணியத்தை அங்கீகரித்து பரிவோடு எழுதிய ஆண் எழுத்தாளர்களும் இல்லாமல் இல்லை. அவர்களின் எழுத்துக்களை மதிப்புரை செய்து எழுதிய இந்த கட்டுரைத் தொடர் இப்போதைக்கு முடிகிறது. இதோடு நிற்காது. இன்னும் தொடரும்.
Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.
