மனம், மூளை மற்றும் பிரக்ஞை

தத்துவ ஞானி ஜான் செயர்லே (John Searle) யுடன் ஒரு உரையாடல் – பகுதிகள்

 

கே : பதினேழாம் நூற்றாண்டில் ரெனி டெகார்ட் என்னும் பிரெஞ்சு தத்துவ ஞானி “நான் சிந்திக்கிறேன். ஆகவே நான் இருக்கிறேன்” என்று உரிமை கொண்டாடிப் பிரபலம் அடைந்தார். தன் இருப்பும், தான் நிதர்சனமாக அறிபவையும் நம்பகத் தன்மை கொண்டவையா என்றறிய அவர் மேற்கொண்ட நீண்ட,கடினமான ஆய்வின் இறுதி முடிவே அது. டெகார்ட் சொன்னது சரியா ? இன்று அவருடன் உரையாட முடிந்தால், அவரிடம் என்ன கூறுவீர்கள் ?

ப :தத்துவ ஞான வரலாற்றில் பல பிரபலமான விபத்துகள் நிகழ்ந்தவாறு

இருக்கின்றன. அவற்றுள் மாபெரும் விபத்துகளாகக் கருதப்பட வேண்டியன வற்றில் ஒன்று டெகார்ட் எனலாம். அவர் ஒரு மேதை என்பதில் ஐயமில்லை. தத்துவம் மட்டுமல்லாது கணிதத்திலும் பிரகாசித்தவர். ஆனாலும் அவர் பல துரதிர்ஷ்டமான முடிவுகளை நம்மிடையே விட்டுச் சென்றிருக்கிறார். அவற்றுள் மிக முக்கியமான ஒன்று, அவர் சுயமாகக் கண்டுபிடிக்காத, பிறரிடமிருந்து சுவீகரித்திருந்த அவருடைய இருமைக் (dualism) கொள்கை. அதுவே டெகார்டின் மகத்தான பேரழிவுக்கோட்பாடும் ஆகும். ஸ்தூல வஸ்து, சூக்கும ஆன்மா என்ற இரு வேறு உட்பொருட்களாக (substance ), யதார்த்தம் (reality ) பிரிந்திருக்கிறது என்பதே அவரின் இருமைக் கொள்கையின் சாரம்.

டெகார்ட்டுடன் பேசமுடியுமென்றால், நான் அவருக்கு சொல்லவேண்டியவை மிகப் பல. முதலாவது, பிரக்ஞை பற்றி அவருக்குக் கிடைத்துள்ள உள்ளொளி முற்றிலும் சரியானது ; வழக்கமான வழிமுறைகளில் தவறென நிராகரிக்க முடியாதது- என்பதே.ஆனால் அவர், நாம் காணும் உலகு, மனம் சார்ந்த மற்றும் பௌதீகம் சார்ந்த இரு வேறு உட்பொருட்களாகப் பிரிந்திருக்கிறது என்ற தவறான புரிதல் கொண்டிருந்தார். நாம் ஒரே ஒரு உலகில் தான் வாழ்கிறோம். இரண்டோ, மூன்றோ அல்லது பற்பல உலகங்களில் அல்ல. ஆனால் ஆன்மாவில் மட்டுமே பிரக்ஞையின் இருக்கை அமைய முடியும் என்றும் ஆன்மாவுக்கு பௌதிக உலகில் இடமில்லை என்றும் டெகார்ட் கருதியிருந்ததால் பிரக்ஞை என்றும் மனம் என்றும் நாம் புரிந்து கொள்பவை அனைத்தும் சிலவித உயிரினங்களின் உயிரிய (biological ) சிறப்பு அம்சங்களே என்ற புரிதலை ஏற்க மறுத்தார்.

கே : பிரக்ஞை பற்றி எழுதுவதில் நிறைய நேரம் செலவளித்திருக்கிறீர்கள்;

விஞ்ஞான பூர்வமாக அதைப் புரிந்து கொள்ளும் நிலையை அடைவோம் என்று நம்புகிறீர்களா?

உள்ளபடிக்கு,பிரக்ஞை என்பது உயிரிய நிகழ்வே என்ற புரிதலை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். மூளை எப்படிச் செயல்படுகிறது என்பது நமக்கு பெரும்பாலும் இன்னமும் புரிபடாமல் இருப்பதே இந்த பிரச்னையை மேலும் தீவிரப்படுத்துகிறது. மூளை அளவுக்கு மீறிச் சிக்கலான அவயம். நாம் இன்னமும் மூளைச் செயல்பாட்டின் மிக ஆதாரக் கொள்கைகளைப் பரிசீலிக்கும் ஆரம்ப நிலையில் தான் இருக்கிறோம்.மூளையின் அடிப்படைச் செயல்பாட்டு அலகு (functional unit ) நியூரான் என்று யூகித்துள்ளது கூட தவறாக இருக்கக்கூடும்.நியூரான் மூளையின் அடிப்படை அலகென நினைப்பது, ஒரு காரின் அடிப்படை அலகு மாலிக்யூல் (molecule ) என்று எண்ணுவதை ஒத்த சகித்துக் கொள்ள முடியாத தவறு. எனவே மூளையைப் புரிந்து கொள்ள இன்னும் வெகு தூரம் பயணிக்க வேண்டும் ; அது ஒன்றே சரியான வழி எனக் கருதுகிறேன். மூளை எவ்வாறு நுண்மையாகப் பல்வேறு படிவங்களில் பிரக்ஞையை உருவாக்குகிறது ? மூளையில் பிரக்ஞையின் இருப்பு எப்படி சரியாகப் பதிவாகிறது- அதாவது நம் ஒட்டுமொத்த வாழ்க்கையில் பிரக்ஞையின் பங்கு தெளிவாக விளங்கும் வகையில் மூளையில் அதன் பதிவேற்றம் எப்படி நிறைவேறுகிறது ? இவ்விரு கேள்விகளுக்கும் விடையறியும் போது தான் நாம் பிரக்ஞையைப் புரிந்து கொள்ள முடியும்.

கே :மனம் என்பது என்ன ? இந்த சிறப்புத் தன்மை மனிதர்க்கு மட்டுமே உரியதா ?

மூளையில் சுய நினைவுடனோ, நினைவின்றியோ நடந்தேறும் நிகழ்வுகள், பலவகைப்பட்ட மனோநிலைகள், மனம் சார்ந்த நடைமுறைகள் அனைத்தும் மனம் என்ற வார்த்தையால் குறிப்பிடப் படுகிறது. முழுதாக உணரப்படும் மனம் சார்ந்த நிகழ்வுகள் எளிதில் அணுகக் கூடியதாய் இருக்கும். அவை தவிர நம்மால் உணரப்படாத மனம் சார்ந்த நிகழ்வுகள் பலவும் நம் மனதில் இடம் பெற்றிருக்கும். பரிணாம வளர்ச்சியின் வரலாற்று நோக்கில் பார்க்கையில், பொதுவாக உள்நோக்கத்தோடு வேண்டுமென்றே செயலாற்றும் போக்கு, மனச் செயல்பாட்டின் மிக முக்கிய சிறப்பம்சமாகத் தெரிகிறது. இந்த தான்தோன்றித்தனமான (intentionality ) போக்கின் காரணமாக, மனம் அவ்வப்போது சில பொருட்கள் மீதோ, அவற்றின் சூழலிலோ அல்லது உலக விவகாரங்களிலோ கவனம் செலுத்தும். எனவே நம் நம்பிக்கைகள், எதிர்பார்ப்புகள், பயங்கள், விருப்பங்கள், உத்தேசங்கள் அனைத்தும் நம் பொது அறிவுக்கு ஒருவகை இல்பொருள் கற்பனைப்போக்காகவே தோற்றமளிக்கின்றன.

மனிதர்களுக்கு மட்டுமல்ல, பற்பல விலங்குகளுக்கும் மனம் இருக்கிறது.

கணப்பிறப்புக்குரிய (Phylogenetic) அளவுகோலில், எந்தக் கீழ் மட்ட உயிரின அளவை வரைக்கும் பிரக்ஞை தென்படுகிறது என நாம் அறியோம். ஆனால் உயர் மட்ட உயிரினங்கள் அனைத்தும் பிரக்ஞை கொண்டவை என்பதில் ஐயமில்லை. நாம் பிரக்ஞை பற்றி முழு அறிவு பெரும் வேளையில், நம் எதிர்பார்ப்பையும் மீறி மேலும் பல படிகள் கீழாகவும் பிரக்ஞை தென்படக்கூடும் என்பது என் அனுமானம். அமீபா,பரமேசியா மட்டங்களை ஆராய்கையில், பிரக்ஞை உருவாக்கத்திற்கு இன்றியமையாத நுட்பம் அவற்றில் அமையாததால், அவை பிரக்ஞை கொண்டவை அல்ல என்பது தெளிவாகிறது.

கே :சிக்கலான அமைப்புகள்(Complex Systems ), செயற்கை நுண்ணறிவு பற்றி இப்போது உரையாடலாம். “செயற்கை” என்பது ஒரு வசீகரமான வார்த்தைப் பிரயோகம். ஏனெனில் அது அசலான, அதிகாரப்பூர்வமான நுண்ணறிவின் இருப்பை (உயிரிய நுண்ணறிவு என்று ஊகித்து கொள்ளுங்கள் ) அனுமானிக்க வைக்கிறது. சொல்லியலின் (etymology ) படி, ‘artifice’ ( some thing made by craft ) என்ற வார்த்தையிலிருந்து ‘artificial ‘ என்ற வார்த்தை பிறந்தது. உயிரிய அல்லது செயற்கை என்ற பதப்பிரயோகங்கள் காட்டும் இருமை நிலையை நீங்கள் ஏற்கிறீர்களா? செயற்கை நுண்ணறிவு எந்திரங்களால் தமக்குத் தேவையான பிரக்ஞையையும் உருவாக்கிக் கொள்ள முடியும் என்று நினைக்கிறீர்களா ?

செயற்கை நுண்ணறிவு எனப்படும் சொற்கோவை பன்மடங்கு தெளிவின்மை கொண்டது. அதன் தெளிவின்மை இதுவரை களையப்படாமல் இருப்பது பரிதாபகரமானது. செயற்கை “X” என்பது செயற்கை முறையில் உருவாக்கப்பட்ட அசல் “X” ஆகவோ அல்லது போலி “X” ஆகவோ இருக்கலாம்.

உதாரணமாக செயற்கை சாயங்கள் எல்லாமே அசல் சாயங்கள் தான்; அவை காய்கறி வகைகளிலிருந்து தயாரிக்கப் படுவதில்லை என்பது தான் வேறுபாடு. மாறாக செயற்கைக் கிரீம் என்றால் அசல் கிரீம் அல்ல ; அது போலி கிரீம். அதேபோல், செயற்கை நுண்ணறிவு என்பது செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட மதிநுட்பமில்லாத ஒன்று எனவும் அல்லது செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட போதிலும் மதிநுட்பம் கொண்ட ஒன்று எனவும் பொருள் கொள்ளலாம். நுண்ணறிவு என்ற வார்த்தையிலும் கருத்து மயக்கம் உண்டு. மனிதர்கள் எதைப் பற்றியாவது சிந்திக்கும் போது உண்டாகும் உண்மையான நேர்மையான பார்வையாளர் -சார்பற்ற நுண்ணறிவு என்பது ஒருவகை.மற்றது நம் கணக்கீட்டுப் பொறியோ கணினியோ காட்சிப்படுத்தும் நுண்ணறிவு. இது பார்வையாளர் -சார்புள்ள,பயன்பாட்டு வழித்தோன்றல்களாகிய (derivatives) உருவகிப்பு(metaphorical ) வகை நுண்ணறிவு. இவை இரண்டும் ஒன்றெனக் கருதுவது பரிதாபகரமானது. ஏனெனில் உண்மையான(பார்வையாளர் -சார்பற்ற) நுண்ணறிவு உடையவர்கள் மனித இனத்தவர் மட்டுமே. கணினிகளுக்கு அவ்வகை நுண்ணறிவு கிடையாது.கணினிகளை மதிநுட்பமுடையவையாகக் கருதுவது முற்றிலும் பார்வையாளர் -சார்ந்த உருவகிப்பு வகை மதிப்பீடு. இதுவரை பிரக்ஞை கொண்ட கணினிகளை எப்படி உருவாக்குவது என்று நாம் அறியாத காரணத்தாலேயே தற்போதய கணினியில் வெளிப்படும் நுண்ணறிவு பார்வையாளர் சார்ந்ததாகவே இருந்து வருகிறது. இன்றைய கணினிகள் சிக்கலான மின்னணு வலைச் சுற்றுகளால் உருவாக்கப்பட்டு இயக்கப் படுகின்றன. சிக்கலான மின்னணு வலைச் சுற்றுகளின் ஸ்திதிகளில் தொடர்ந்து நிகழும் நிரலிட்ட மாற்றங்களையே கணிப்பு (computation ) எனக் கருதுகிறோம்.

எந்திரங்கள் பிரக்ஞை கொண்டவையாக இருக்குமா என்ற கேள்வி எழுப்புகையில், நாம் அனைவரும் எந்திரங்களே என்பதை நினைவு கூர வேண்டும். நாம் பிரக்ஞையுள்ள உயிரிய எந்திரங்கள். சுயப்பிரக்ஞை கொண்ட செயற்கை எந்திர உருவாக்கம் ஏன் முடியாது என்று விளக்கவல்ல சித்தாந்த முடிவுகள் ஏதுமில்லை. மூளை எவ்வாறு அதைச் செய்கிறது என்ற நுட்பம் நமக்குப் புரிபடாததாலேயே, இன்று நம்மால் பிரக்ஞையுள்ள எந்திரங்களை உருவாக்க முடியவில்லை. உங்களால் பிரக்ஞையுள்ள செயற்கை நுண்ணறிவு எந்திரத்தை உருவாக்க முடியுமா என்ற கேள்வி, ‘உங்களால் ரத்தத்தைப் பம்ப் செய்யக்கூடிய செயற்கை இதயத்தை உருவாக்க முடியுமா ?’ என்ற கேள்வியை ஒத்தது. உயிரிய இதயம் எவ்வாறு செயல் புரிகிறது என்பதை அறிந்ததால்தான், நாம் செயற்கை இதயம் உருவாக்குவது எப்படி என்று அறிந்து கொண்டோம். மூளை எவ்வாறு செயல்படுகிறது என்று நமக்குத் தெரியாததால், செயற்கை மூளையை நம்மால் உருவாக்க முடியவில்லை. ஆனால் மூளை எவ்வாறு செயல் படுகிறது என்ற அறிவு நமக்குக் கிடைத்து விட்ட பின்னர், பிரக்ஞையுள்ள செயற்கை எந்திரத்தை உருவாக்குவதில் வேறு தடங்கல் ஏதும் வராது என நம்புகிறேன். மனித மூளை ஒரு எந்திரம்; அதுவும் ஒரு உயிரிய எந்திரம்; உயிரிய செயல் முறையில் அது பிரக்ஞையை உருவாக்குகிறது- இவையே நாம் முக்கியமாக அறிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்.மனித மூளை உயிரிய வழியில் எவ்வாறு பிரக்ஞையை உருவாக்குகிறது என்ற நுட்பம் புரியாத நிலையில் செயற்கை முறையில் அதை உருவாக்கும் வாய்ப்பில்லை. நுட்பம் அறிந்த பின்னரே அதைச் சாத்தியமாக்கும் மூளையின் விசேஷத் திறன்களை நகல் எடுக்க முடியும். தசைத் திசு (muscle tissue )வைப் பயன்படுத்தாமல் முற்றிலும் வேறுபட்ட ஊடகத்தைக் கொண்டு செயற்கை இதயம் தயாரிக்கப் படுவது போல், ஒருவேளை செயற்கை மூளையும் முற்றிலும் வேறுபட்ட ஊடகத்தைக் கொண்டு உருவாக்கப் படலாம். ஆனால் தற்சமயம் நமக்குள்ள மூளை குறித்த அறிவு, செயற்கை மூளை தயாரிக்கப் போதுமானது அல்ல.

நன்றி: Brain, Mind, and Consciousness: A Conversation with Philosopher John Searle | Insights: Scholarly Work at the John W. Kluge Center

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.