2025 நோபல் பொருளாதார அறிவியல் பரிசு

நம் வளர்ச்சியின் ரகசியம்

2025 ஆண்டுக்கான பொருளாதார அறிவியல் துறைக்கான நோபல் பரிசு புதிய கண்டுபிடிப்புகள் எப்படி நாடுகளின் வளர்ச்சியைத் தாங்குகிறது என்பதை கணித மாதிரிகளால் விளக்கியவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.. இவை வெறும் கோட்பாடுகள் அல்ல – நமது அன்றாட வாழ்க்கை, வேலைவாய்ப்புகள், சுகாதாரம் எல்லாவற்றையும் பாதிக்கும் உண்மையான மாற்றங்கள்!

யார் வென்றார்கள்?

அக்டோபர் 13, 2025 அன்று, ஸ்டாக்ஹோமில் உள்ள ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்ஸஸ் இந்த ஆண்டின் நோபல் நினைவு பரிசு பொருளாதார அறிவியலில் (Sveriges Riksbank Prize in Economic Sciences in Memory of Alfred Nobel)  ஜோயெல் மோகைர் (Joel Mokyr), பிலிப் அகியன் (Philippe Aghion), பீட்டர் ஹோவிட் (Peter Howitt) ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

மோகைர் அமெரிக்காவின் நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் வரலாற்றாசிரியர். மோகைர் பிரான்ஸ், இங்கிலாந்து பல்கலைக்கழகங்களில் (Collège de France, INSEAD, London School of Economics) பணியாற்றும் பிரெஞ்சு பொருளாதாரவியல் நிபுணர். அகியன் அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் கனடா வம்சாவளியைச் சேர்ந்த பொருளாதாரவியல் பேராசிரியர்.

இவர்கள் மூவரும் சேர்ந்து 11 மில்லியன் ஸ்வீடிஷ் க்ரோனா (சுமார் $1.15 மில்லியன் அமெரிக்க டாலர்) பரிசுத்தொகை, தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ் பெறுகிறார்கள்.

அவர்களின் பங்களிப்பு என்ன?

இந்தப் பரிசு, “புதுமை சார்ந்த வளர்ச்சியை விளக்கியதற்காக” வழங்கப்பட்டது. எளிமையாகச் சொன்னால், புதிய கண்டுபிடிப்புகள் எப்படி பழையவற்றை மாற்றி, உலகை முன்னேற்றுகின்றன என்பதை இவர்கள் ஆய்வு செய்தனர். இதை “புதியன படைக்கும் அழிவு” (creative destruction) என்று அழைக்கிறார்கள் – பழைய கார்கள் மாறி, மின்சார வாகனங்கள் வருவது போல்!

  • ஜோயெல் மோகைர் வரலாற்றைப் ஆராய்ந்து, ஏன் சில நாடுகள் நீண்ட கால வளர்ச்சியைப் பெறுகின்றன என்பதை விளக்கினார். புதிய கண்டுபிடிப்புகள் வெற்றிகரமாகத் தொடர,  “இது வேலை செய்கிறது” என்ற அறிவு போதாது. “ஏன் இது வேலை செய்கிறது?” என்ற அறிவியல்பூர்வமான விளக்கம் தேவை. ஐரோப்பாவின் தொழில்நுட்பப் புரட்சி (Industrial Revolution) போன்ற சம்பவங்களை ஆராய்ந்து, சமூகம் திறந்த மனதுடன் புதிய கருத்துக்களை வரவேற்று, மாற்றத்தை அனுமதித்தால் மட்டுமே புதுமை வளரும் என்கிறார்.
  • பிலிப் அகியன் மற்றும் பீட்டர் ஹோவிட் இணைந்து 1992-ஆம் ஆண்டு சேர்ந்து வெளியிட்ட கட்டுரை, புதுமை எப்படி “அழித்தல் மூலம் உருவாக்குதல்” செய்கிறது என்பதை கணித மாதிரிகளால் (models) விளக்குகிறது. பழைய தொழில்கள் மூடப்படும் போது, புதியவை உருவாகி வேலைவாய்ப்புகள், உற்பத்தி அதிகரிக்கின்றன. இது ஜோசெஃப் ஷம்பெட்டர் என்ற பொருளாதாரவியலாளர் 1942-இல் வெளியிட்ட ‘Capitalism, Socialism and Democracy’ என்ற நூலில் விளக்கிய கோட்பாட்டை விரித்தெடுக்கிறது. ஷம்பெட்டர், இந்தக் கோட்பாட்டை முதலாளித்துவத்தின் இன்றியமையாத கருத்து என்கிறார்.

இவர்களின் பணி, கணிதம் அல்லது சிக்கலான சூத்திரங்கள் இல்லாமல், உண்மை உதாரணங்களால் (எ.கா., ஸ்மார்ட்போன்கள் பழைய மொபைல்களை மாற்றியது) விளக்குகிறது

ஏன் இது முக்கியம்? உலகம், சமூகத்துக்கு என்ன தாக்கம்?

புதுமை இன்று நம் வாழ்வின் அடிப்படை – ஆனால் இது தானாக வராது! புதுமை இல்லாவிட்டால், நாடுகள் ஏழ்மை, நோய், வறுமையில் சிக்கிக் கொள்கின்றன என்பதை இவர்களின் ஆய்வுகள் காட்டுகின்றன. உதாரணமாக:

  • உலகளாவிய வளர்ச்சி: புதிய தொழில்நுட்பங்கள் (AI, மருந்துகள்) பழையவற்றை மாற்றி, GDP-ஐ அதிகரிக்கின்றன. இது ஏழை நாடுகளில் கூட வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது. ஆனால், அரசுகள் கல்வி, ஆராய்ச்சிக்கு முதலீடு செய்யாவிட்டால், வளர்ச்சி நின்றுவிடும்.
  • சமூக பிரச்சினைகள்: “புதியன படைக்கும் அழிவு” சில தொழில்களை மூடச் செய்யும், ஆனால் புதியவை வரும். இது வேலையிழப்பை ஏற்படுத்தலாம், ஆனால் நீண்ட காலத்தில் சிறந்த வாழ்க்கை தரம் (சுகாதாரம், கல்வி) கொண்டு வரும். புதியன புகுதலும், பழையன கழிதலும் காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல, ஒரு சமூகம் முன்னேற புதிய கண்டுபிடிப்புகளைத் திறந்த மனதோடு அணுகும் மனப்பான்மையும், மாற்றத்தை அனுமதிக்கும் பக்குவமும் வேண்டும்.

இன்று, காலநிலை மாற்றம், ஏழ்மை போன்ற உலகப் பிரச்சினைகளுக்கு, புதிய கண்டுபிடிப்புகளே தீர்வு. இந்தியாவில் கூட இணையம், புதிய தொழில்நுட்பங்கள், புதிய மேம்பட்ட எந்திரங்கள் போன்றவை மூலம் அடைந்த பலன்கள் நாம் கண்கூடாகக் காண்பதே. இவர்களின் பணி, அரசுகளுக்கு, நிறுவனங்களுக்கு வழிகாட்டுகிறது: புதுமையை ஊக்குவிக்க, சமூகத்தை தயார்படுத்த உதவுகிறது.

புதியன படைக்கும் அழிவு’, சற்று விரிவாக

எந்தவொரு புதிய தொழில்நுட்பமும் அது புதிதாக வரும் காலத்தில் சமூகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது. கடந்த நூற்றாண்டின் இறுதியில் கணினி ஒரு பெரிய அதிர்வலையை சமூகத்தில் உருவாக்கியது. பரவலான கணினிமயமாக்கத்தால், பலரும் தங்கள் வேலை போய்விடும் என்று பயந்தார்கள். சிலர் அதனால் வேலை இழந்த போதிலும், இன்று கணினிமயமாக்கத்தால் நம் சமூகம் அடைந்த பலன் கண்கூடு. இன்று அதே போன்ற பயமே செயற்கை நுண்ணறிவு அடைந்த பாய்ச்சலைக் கண்டு நம்மில் சிலருக்கு ஏற்படுகிறது. ஆனால் இன்றைய தொழில்நுட்பங்கள் அழிந்தாலும், புதியவை இந்த சமூகத்தை மேலும் முன்னோக்கிக் கொண்டு செல்லும் என்பதையே இந்த கொள்கை விளக்குகிறது. மோட்டார் வாகனங்கள் வந்த புதிதில் நிறைய குதிரை வண்டிகள் இல்லாமலாகி அதனுடன் இணைந்த தொழில்கள் இல்லாமல் போனாலும், இன்று அந்த தொழில்நுட்பத்தால் சமூகம் அடைந்த சான்று இதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.

செயல்முறைகள் பொருளாதார முன்னேற்றத்துக்கும் மனித வளர்ச்சிக்கும் இன்றியமையாதவை

விருதாளர்களின் ஆய்வு, பொருளாதார வளர்ச்சியை தானே நிகழ்த்திக் கொள்ளும் ஒன்றாக எடுத்துக்கொள்ள முடியாது என்பதை காட்டுகிறது. ’புதுமையின் மூலம் அழிவு’ என்ற கோட்பாட்டின் அடிநாதமாக உள்ள செயல்முறைகளை நாம் நிலைநிறுத்தவில்லையெனில் மீண்டும் தேக்கநிலைக்கு திரும்பிவிடுவோம்,” என்று பொருளாதார அறிவியல் பரிசுக்கான குழு தலைவர் ஜான் ஹாஸ்லர் கூறினார்.

புதுமை வளர்ச்சி நன்றும் தீதும்

ஹோவிட் மற்றும் அகியனின் மாதிரி, மிகக் குறைவான ஆதிக்க நிறுவனங்களைக் (dominant companies) கொண்ட சந்தைகள் புதுமை மற்றும் வளர்ச்சியைத் தடுக்கலாம் என்பதை காட்டியது — இத்தகைய ஐயங்கள் தொலைத்தொடர்பு, சமூக ஊடக தளங்கள் மற்றும் விமான நிறுவனங்கள் போன்ற தொழில்களைப் பற்றி எழுப்பப்பட்டவையே.

மாற்றங்களால் பாதிக்கப்படும் மக்களை ஆதரிப்பது முக்கியம் என்றும், அதே நேரத்தில் மிகவும் உற்பத்தித் திறன் கொண்ட பணியிடங்களுக்கு மாறுவதை எளிதாக்க வேண்டும் என்றும், குறிப்பிட்ட வேலைகளை விட தொழிலாளர்களைப் பாதுகாப்பது முக்கியம் என்றும் அவர்கள் கண்டறிந்தனர். மேலும், சமூக இயைவு (social mobility) முக்கியம் என்று வலியுறுத்தினர், அதாவது ஒருவரின் தொழில் அல்லது வணிகம் அவர்களது பெற்றோரின் அடையாளத்தால் வரையறுக்கப்படக்கூடாது.

மலிவான சேவைகளின் தாக்கம்

மோகைர் நீண்ட காலமாக தொழில்நுட்ப புதுமை குறித்து நம்பிக்கையாளராக அறியப்படுகிறார். சில பத்தாண்டுகள் முன்பு, பொருளாதாரவியலாளர்கள் தொழில்நுட்பப் பாய்ச்சலின் தாக்கத்தில் அவ்வளவு நம்பிக்கை கொண்டிருக்கவில்லை, ஸ்மார்ட்போன்கள் அல்லது இணையம் போன்ற கண்டுபிடிப்புகள், விமானம் அல்லது கார் போன்ற முந்தைய முன்னேற்றங்களை விட குறைவான பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தியதாக வாதிட்டனர்.

இதற்கு பதிலளிக்கும் மோகைர் பல புதிய சேவைகள் மலிவாகவோ அல்லது இலவசமாகவோ இருப்பதால், அவற்றின் தாக்கம் பொருளாதார தரவுகளில் தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் அவை மிகப்பெரிய நன்மைகளை வழங்குகின்றன என்கிறார்.

இசையோடை சேவையான ஸ்பாட்டிஃபையை ஒரு “முற்றிலும் ஆச்சரியமான” புதுமையாகக் மோகைர் குறிப்பிட்டார். பொருளாதாரவியலாளர்களால் இதன் தாக்கத்தை அளவிட முடியவில்லை. 2015 ஆம் ஆண்டு அசோசியேட்டட் பிரஸ்ஸுக்கு அளித்த பேட்டியில், ‘ஒரு காலத்தில்  என்னிடம் 1,000-க்கும் மேற்பட்ட சிடிக்கள் இருந்தன, அதற்கு முன்பு, நான் எனது முதுகலைப் படிப்பு பட்ஜெட்டில் பெரும் தொகையை வினைல் ரெக்கார்டுகளுக்கு செலவிட்டேன். ஆனால் இப்போது, ஒரு சிறிய மாதக் கட்டணத்தில் மிகப்பெரிய இசைக் களஞ்சியத்தை அணுக முடிகிறது.’ என்கிறார்.

புதுமை மற்றும் மாற்றத்திற்கு திறந்த மனதுடன் இருக்க வேண்டும் என்று மோகைரின் ஆய்வு வலியுறுத்துகிறது. புதிய கண்டுபிடிப்புகளால் ஏற்படும் இடையூறு, குறைந்தபட்சம் குறுகிய காலத்தில் தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு அல்லது வருவாய் குறைவை ஏற்படுத்துகிறது என்பதை மோகைர் ஒப்புக்கொண்டார். பல பொருளாதாரவியலாளர்களைப் போலவே, அவர் இந்த புதுமைகள் புதிய, எதிர்பாராத வேலைகளை உருவாக்கி, புதிய வாய்ப்புகளை வழங்குவதாக வாதிட்டார்.

புதுமையே முன்னேற்றத்துக்கான வழி

நோபல் கமிட்டி தனது அறிக்கையில் “மனித வரலாற்றின் பெரும்பகுதியில், பொருளாதார வளர்ச்சிக்கு பதிலாக தேக்கநிலையே இயல்பாக இருந்தது. இருப்பினும், 18ஆம் நூற்றாண்டில் தொழில்புரட்சியுடன் தொடங்கி, ஐரோப்பிய மற்றும் பின்னர் மற்ற பொருளாதாரங்கள் படிப்படியாக வளரத் தொடங்கின.”

புதுமை — மற்றும் அதை எவ்வாறு ஊக்குவிப்பது — என்பது ஐரோப்பாவில் ஒரு முக்கியமான கேள்வியாக உள்ளது. முன்னாள் ஐரோப்பிய மத்திய வங்கித் தலைவர் மரியோ டிராகி அறிக்கையில், டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் ஒப்பிடுகையில் ஐரோப்பா அமெரிக்காவை விட உற்பத்தியில் பின்தங்கி உள்ளது என்று வாதிட்டார். அகியன் கூறுகையில், தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளில் அமெரிக்கா மற்றும் சீனாவுடன் இணையாக இருக்க வேண்டுமெனில் , ஆராய்ச்சியை ஊக்குவிப்பதும், புதுமையான யோசனைகளை லாபமுள்ள வணிகமாக மாற்ற முதலீட்டு மூலதன நிதியுதவியை மேம்படுத்துவதும் ஐரோப்பியர்களுக்குச் சவாலாக இருக்கும் என்கிறார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் புதிய இறக்குமதி வரிகள் “வளர்ச்சிக்கு நல்ல செய்தி அல்ல” ஆனால் இது “ஐரோப்பாவுக்கு ஒரு எச்சரிக்கை மணி,” என்று அகியன் அசோசியேட்டட் பிரஸ்ஸுக்கு தெரிவித்தார். “நாம் விழித்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால், இந்த போட்டியில் வெற்றி பெறப்போவது யார் தெரியுமா? புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவோரே” என்கிறார்.

இந்தப் பொருளியலாளர்கள் வென்றது என்ன?

 11 மில்லியன் ஸ்வீடிஷ் க்ரோனர் (கிட்டத்தட்ட 1.2 மில்லியன் டாலர்) பரிசுத் தொகையில் பாதி மோகைருக்கு வழங்கப்படுகிறது, மற்ற பாதி அகியன் மற்றும் ஹோவிட்டுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. வெற்றியாளர்கள் 18 காரட் தங்கப் பதக்கமும் ஒரு டிப்ளோமாவும் பெறுகின்றனர்.

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அதிகாரப்பூர்வமாக “ஆல்ஃபிரட் நோபல் நினைவு ஸ்வீடன் வங்கி பொருளாதார அறிவியல் பரிசு” (Bank of Sweden Prize in Economic Sciences in Memory of Alfred Nobel) என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பரிசை 1968 ஆம் ஆண்டு ஸ்வீடன் வங்கி, டைனமைட்டைக் கண்டுபிடித்து ஐந்து நோபல் பரிசுகளை நிறுவிய 19ஆம் நூற்றாண்டு ஸ்வீடிஷ் தொழிலதிபரும் வேதியியலாளருமான நோபலின் நினைவாக நிறுவியது.

அதன் பிறகு, இந்தப் பரிசு 57 முறை மொத்தம் 99 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. வெற்றியாளர்களில் மூன்று பேர் மட்டுமே பெண்கள்.

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு உறுதியாகச் சொன்னால் ஒரு நோபல் பரிசு இல்லை என்று வாதிடுவர் உண்டு, ஆனால் இது எப்போதும் மற்ற நோபல் பரிசுகளுடன் சேர்ந்து டிசம்பர் 10 ஆம் தேதி, 1896 இல் நோபல் இறந்த ஆண்டு நினைவு தினத்தில் வழங்கப்படுகிறது.

(ஆதாரங்கள்: Nobel Foundation, Reuters, NYT, CNN, Associated Press)
தொழில்நுட்ப உதவி: விக்ரம் ராமகிருஷ்ணன்


Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.