சிறப்பு சார்பியல் கொள்கை வெளிவந்த பிறகு மாபெரும் இயற்பியலாளராக கருதப்பட்ட ஐன்ஸ்டைனுக்கு, உலகெங்குமுள்ள புகழ்பெற்ற பல்கலைகளில் இருந்து அழைப்புகள் வந்தன. ஆனாலும் அவரை ஒன்று உறுத்திக் கொண்டே இருந்தது : ஈர்ப்பு விசை என்பதனை சிறப்பு சார்பியல் சரியானபடி ‘சமாளிக்க’வில்லை. இயற்பியலின் தந்தை நியூட்டனின் ‘பிரபஞ்ச ஈர்ப்பு ‘ கொள்கையை சிறப்பு சார்பியல் கொள்கையுடன் இயைந்து போகச் செய்ய முடியுமா என சிந்தித்துக் கொண்டிருந்தார்.
இந்த சிக்கலின் அடிப்படை மிக எளிதானது. பொருட்கள் விழுவதையும் கிரகங்களின் சுழற்சியையும் விளக்குவதற்கு முயன்ற நியூட்டன், பொருட்கள் ஒன்றையொன்று ஈர்க்கும் ஒரு ‘விசை’யை – ஈர்ப்பு விசையை உருவகித்தார். இனி, எந்தவித ஊடகமும் இல்லாமல் தொலைதூர பொருட்களில் இந்த விசை எப்படி செயல்படுகிறது என்பது சரியாக விளங்கவில்லை. முன்பு பார்த்தபடி, பூமி நிலவினை ஈர்ப்பதும், தொலைவில் உள்ள பொருட்கள் ஒன்றையொன்று தொடாமல் ஈர்ப்பதிலும் ‘ஏதோ ஒன்று’ விடுபட்டுள்ளது என்பதை நியூட்டனே ஒப்புக் கொண்டிருக்கிறார். அவருக்கு இருநூறு வருடங்களுக்குப் பிறகு ஃபாரடே, மின் மற்றும் காந்த விசைகளை வைத்து இதே புதிருக்கான மற்றொரு விடையை கண்டறிந்தனர் – புலங்கள்.
இனி , ஈர்ப்பு விசைக்கும் ஃபாரடே கோடுகள் போன்ற ஒன்று இருந்தாக வேண்டும் என சற்றேனும் சிந்திக்கக் கூடிய எவருக்குமே தோன்றியிருக்கும். இதே உவமையை வைத்து, சூரியனுக்கும் பூமிக்கும் இடையேயான ஈர்ப்பு விசையும், பூமிக்கும் அதில் விழுந்து கொண்டிருக்கும் பொருட்களுக்கும் இடையேயான ஈர்ப்பு விசையும் புலம் சார்ந்து – ஈர்ப்பு விசைப் புலம் சார்ந்தே இருக்கும் என்பதும் தெளிவாகிறது. ஃபாரடே – மாக்ஸ்வெல் தீர்வினை மின்- காந்த விசைகளுக்கு மட்டுமல்லாது ஈர்ப்பு விசைக்குமே பயன்படுத்த முடிய வேண்டும். ஈர்ப்பு விசைப் புலம் என ஒன்று இருந்தாக வேண்டும், அதற்கான சமன்பாடுகளும் இருக்கும். இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில், சற்றேனும் சிந்திக்கக் கூடிய எவருக்குமே இது தெளிவாக விளங்கியிருக்க வேண்டும். ஆனால் ஒருவருக்கு மட்டுமே விளங்கியது – ஐன்ஸ்டைன்.
பதின்பருவத்திலிருந்தே தனது தந்தையின் மின் நிலையங்களில் சுழற்றியை இயக்கும் மின்காந்த புலத்தினால் கவரப்பட்டிருந்த ஐன்ஸ்டைன், ஈர்ப்புவிசைப் புலத்தின் மீது கவனத்தைத் திருப்பினார். அதை சரியானபடி விளக்க இயலும் கணித முறையைத் தேடினார். இந்த தேடலில் முழுமூச்சுடன் இறங்கியவர் பத்து வருடங்களில் அதன் தீர்வைக் கண்டறிந்தார். அதிதீவிர கல்வியும் ,மன அழுத்தமும், பிழை முயற்சிகளும், குழப்பங்களும், அபாரமான கருத்துக்களும், தவறான சமன்பாடுகளுடன் கூடிய தொடர் ஆய்வுக்கட்டுரைகள் நிறைந்த தசாப்தம் அது. இறுதியாக , பொது சார்புக் கொள்கை முழுமையான தீர்வினை கொண்ட ஆய்வுக் கட்டுரையை 1915ம் ஆண்டு பதிப்பித்தார். சோவியத் யூனியனின் தலைசிறந்த இயற்பியலாளரான லேவ் லாண்டாவ்( Lev Landau) பொது சார்புக் கொள்கையை பேரழகிய கொள்கை என கூறினார்.
இந்த கொள்கையின் அழகு கண்கூடாகவே தெரியக்கூடியது. ஒரு புதிய கணித முறையை கண்டறிந்து அதிலிருந்து சமன்பாடுகளை உருவாக்கி ஈர்ப்புவிசைப் புலத்தினை விளக்குவதற்குப் பதிலாக, நியூட்டனது கொள்கையின் ஆழத்தில் உள்ள விடையற்ற கேள்விகளை கண்டறிந்து அதை தனது கேள்விகளுடன் இணைத்துக் கொள்ள ஐன்ஸ்டைன் முயன்றார்.
பொருட்கள் வெளியில் நகர்கின்றன என்னும் டெமாகிரீடஸின் சிந்தனைக்கே நியூட்டன் திரும்பியிருந்தார். உறுதியான, மிகப் பெரிய, வேறொரு விசையினால் வளைக்கப்படும் வரை நேர்க்கோட்டில் செல்லும் பொருள்களை கொண்டுள்ள அடர் சாரமாக , ஒரு காலியான கொள்கலனாகவே வெளி இருந்தாக வேண்டும். ஆனால் இந்த உலகைக் கொண்டுள்ள வெளி எதனால் செய்யப்பட்டுள்ளது? உண்மையில் வெளி என்பது என்ன?
நியூட்டானிய இயற்பியலின் காரணமாக வெளி என்பது மிக இயல்பான ஒன்றாக நமக்குத் தெரிகிறது. சிந்தித்துப் பார்த்தால், வெற்று வெளி என்பதே நமது அனுபவ வட்டத்திற்குள் வந்ததில்லை. பிறவற்றிலிருந்து தனித்துவமாக தெரிகின்ற வெளியின் இருப்பு குறித்த டெமாகிரீடஸின் சிந்தனை, அரிஸ்டாட்டிலில் துவங்கி டேகார்த் ( Descartes) வரை இரண்டாயிரம் ஆண்டுகளாக ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை. பொருட்களுக்கு நீட்சி உண்டு, விரிதல் / பரவுதல் என்பது அதன் ஒரு அடிப்படை பண்பு என அரிஸ்டாட்டிலும் டேகார்த்தும் கருதினர். நீட்டிக்கப்படக்கூடிய ஒன்று என எதுவும் இல்லாமல் நீட்சி என்பது இல்லை. ஒரு கோப்பையில் நீரை எடுத்து விட்டால் அங்கு காற்று வந்து நிரம்பி விடும். உண்மையிலேயே ‘காலி’யான கோப்பையை நாம் யாருமே கண்டிருக்க வாய்ப்பில்லை.
இரு பொருட்களுக்கு நடுவில் எதுவுமே இல்லை என்றால், உண்மையில் இங்கு எதுவுமே இல்லை என்று அரிஸ்டாட்டில் சிந்தித்தார். இருப்பும்(வெளி) இன்மையும் எப்படி ஒரே கணத்தில் இருக்க இயலும்? பொருட்கள் நகர்கின்ற வெற்று வெளி என்பது உண்மையில் என்ன? அது ஏதோ ஒன்றாக – ஒரு இருப்பாக அல்லது இன்மையாக இருக்க வேண்டும். அது இன்மையென்றால் , அது இல்லவே இல்லை என்றாகிவிடும். மாறாக, அது ஒரு இருப்பென்றால் , எதுவும் செய்யாமல் அசைவற்று கிடப்பதே அதன் ஒரே பண்பாக இருக்கலாம்.
இருப்பிற்கும் இன்மைக்கும் நடுவில் சிக்கியிருக்கும் வெற்று வெளி என்னும் கருத்து, பழமையில் துவங்கி சிந்தனையாளர்களை படுத்தியெடுத்திருக்கிறது. அணுக்கள் நகர்கின்ற தனது உலகிற்கு வெற்று வெளியை அடிப்படையாக வைத்த டெமாகிரீடஸே இதில் தெளிவின்றி தவித்தார். ‘காலியான வெற்று வெளி என்பது இருப்பிற்கும் இன்மைக்கும் நடுவில் இருக்கும் ஏதோ ஒன்று ‘ என எழுதுகிறார். ‘ நிறைவு மற்றும் வெறுமை என அடிப்படைகளை நிறுவிய டெமாகிரீடஸ், முந்தையதை இருப்பு எனவும் பிந்தியதை இன்மை எனவும் அழைத்ததாக சிம்ப்ளிஸியஸ் (Simplicius) கூறியுள்ளார். அணுக்கள் இருப்பு சார்ந்தவை – வெளி இன்மையைச் சார்ந்தது, ஆனால் இருக்கிறது. இதற்கு மேலும் சற்றும் அர்த்தமின்றி இருப்பது மிகக் கடினம்.
டெமாகிரீடஸின் வெளியை உயிர்ப்பித்த நியூட்டன், அதன் ஓட்டைகளை ‘கடவுளின் உணர்வு மையம் (God’s Sensorium) ‘ என்பதனை வைத்து வாதாடி அடைக்க முயன்றார். கடவுளின் உணர்வு மையம் என்றால் என்னவென்று எவருக்குமே – நியூட்டன் உட்பட – புரியவில்லை. உணர்வு மையத்துடனோ இல்லாமலோ – கடவுள் என்னும் கருத்துக்கே மிகச்சிறிய இடமளித்த ஐன்ஸ்டைனுக்கு, வெளி குறித்த நியூட்டனின் விளக்கம் சற்றும் ஏற்புடையதாக இல்லை.
டெமாகிரீடஸின் வெளி கொள்கையை மீட்டுருவாக்கம் செய்ததற்காக அறிவியலாளர்கள் மற்றும் தத்துவவாதிகளின் எதிர்ப்பினை மிகுந்த போராட்டத்துடன் நியூட்டன் தாண்டி வந்தார். முதலில் யாருமே அவரை பொருட்படுத்தவில்லை. ஒரு போதும் பிழையாகாத அவரது சமன்பாடுகளின் அபாரமான பயன்பாடு காரணமாகவே எதிர்ப்பாளர்கள் மெல்ல அமைதியாயினர் என்றாலும் வெளி குறித்த அவரது கொள்கையின் நம்பகத்தன்மை தொடர்ந்து கேள்விக்கு உட்படுத்தப்பட்டது. தத்துவவாதிகளை தொடர்ந்து வாசித்து வந்திருந்த ஐன்ஸ்டைனும் இதை நன்கு உணர்ந்திருந்தார். ஐன்ஸ்டைனில் பெரும் செல்வாக்கு செலுத்திய தத்துவவியலாளரான எர்ன்ஸ்ட் மஹ்க் (Ernst Mach) நியூட்டனின் வெளி குறித்த கொள்கையின் தத்துவ அடிப்படை சிக்கல்களை வெளிக் கொணர்ந்தார். இதே மஹ்க் அணுக்கள் இருப்பதை ஏற்றுக் கொள்ள வில்லை ( ஒரே மனிதர் இருவேறு விஷயங்களில் விரிந்த பார்வையையும் குறுகிய பார்வையையும் ஒரே சமயத்தில் கொண்டிருக்க முடியும் என்பதற்கான சிறந்த உதாரணம் இது).
ஆக, ஐன்ஸ்டைன் ஒன்றல்ல, இரண்டு பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டார். முதலாவது, ஈர்ப்புப் புலத்தை எப்படி விளக்குவது. இரண்டாவது, நியூட்டன் கூறுகின்ற வெளி என்பது உண்மையில் என்ன?
மனிதகுலத்தின் சிந்தனை வரலாற்றிலேயே அதியற்புதமான, ஐன்ஸ்டைனது மேதமையின் மகத்தான வீச்சு இங்கு தான் வெளிப்படுகிறது. ஈர்ப்புப் புலமே நியூட்டன் கூறுகின்ற வெளியாக இருக்கலாமா? நியூட்டனது வெளி என்பது ஈர்ப்புப் புலமே அன்றி வேறல்ல? இந்த மிக எளிய, அழகிய, அற்புதமான கருத்தே பொதுச் சார்புக் கொள்கை.
உலகம் வெளி + நுண்துகள்கள் + மின்காந்த புலம் + ஈர்ப்புப் புலம் என அமைந்திருக்கவில்லை. வெறும் நுண்துகள்கள் + புலம் என மட்டுமே அமைந்திருக்கிறது. வேறெதுவும் இல்லை. ‘வெளி’ யை இன்னொரு பகுதியாக சேர்க்க வேண்டியதில்லை. நியூட்டனது வெளி தான் ஈர்ப்புவிசைப் புலம். அல்லது நேர்மாறாக் கூறினால், ஈர்ப்புவிசைப் புலமே வெளி.

அறுதியான, தட்டையான நியூட்டனது வெளி போன்று இல்லாது, நகர்வும் அலைதலும் கொண்ட ஈர்ப்புவிசைப் புலமானது, மின்காந்த புலம் போன்றே சமன்பாடுகளுக்கு கட்டுப்ட்டது.
உலகம் குறித்த மகத்தான எளிமைப்படுத்துதல் இது. இனி பொருளிலிருந்து வெளி வேறானதல்ல. மின்காந்த புலம் போன்றே வெளியும் ஒரு பொருள்முதல்வாத உறுப்பே. அலையடிக்கின்ற, வளைகின்ற, மாறுகிற, திரிபடைகின்ற ஸ்தூல இருப்பே வெளி.
கட்புலனாகாத இறுகிய சட்டகத்தில் நாம் அடைத்து வைக்கப்படவில்லை. மிகப் பிரம்மாண்டமான, இளகிய நத்தை ஓட்டுக்குள் அமிழ்ந்துள்ளோம். சூரியன் தன்னைச் சுற்றியுள்ள வெளியை வளைக்கிறது. பூமி ஏதோ ஒரு மர்ம விசையால் அதை சுற்றி வரவில்லை. மாறாக , வளைந்துள்ள வெளியில் நேராக நகர்கிறது. ஒரு ஃபுனலில் சுழலும் பாசி மணி போல : ஃபுனலின் மையத்தில் இருந்து எந்தவொரு மர்ம விசையும் கிளம்பவில்லை. அதன் வெளிப்புற சுவர்களின் வளைவே பாசி மணிகளின் சுழற் நகர்வை வழிநடத்துகிறது. சூரியனை கிரகங்கள் சுற்றுவதும் பொருட்கள் விழுவதும் அவற்றை சுற்றியுள்ள வெளி வளைந்திருப்பதால் மட்டுமே நிகழ்கிறது.

இன்னமும் சரியாக சொன்னால், வளைந்திருப்பது வெளி அல்ல. பத்தாண்டுகளுக்கு முன்பு ஐன்ஸ்டைனே கூறியபடி – ஒன்றன் பின் ஒன்றான நிகழ்வாக இல்லாமல் ஒன்றாகவே கட்டமைந்த காலவெளியே.
இதுவே மையக் கோட்பாடு. அடுத்ததாக ஐன்ஸ்டைனின் ஒரே சிக்கல் உறுதியாக நிரூபணங்களுக்கான சமன்பாடுகளைத் தேடுவது. காலவெளி வளைவை எப்படி விவரிப்பது? ஐன்ஸ்டைனின் அதிர்ஷ்டம், இந்த சிக்கல் கணிதவியலாளர்களால் ஏற்கனவே தீர்க்கப்பட்டிருந்தது.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் தலைசிறந்த தலைசிறந்த கணிதவியலாளர், கணிதவியலின் பட்டத்து இளவரசர் கால் ஃப்ரீட்ரிக் காஸ் (Carl Friedrich Gauss), மலைகளது மற்றும் கீழுள்ள படத்திலுள்ள வளைந்த பரப்புகளை விவரிக்கும் சமன்பாடுகளை எழுதியிருந்தார்.

பிறகு, தனது சமன்பாடுகளை மூன்று மற்றும் அதற்கும் மேற்பட்ட பரிமாணங்களிலும் உள்ள வளைந்த பரப்புகளிலும் பயன்படுத்த ஏதுவாக மாற்றுமாறு தனது சிறந்த மாணவரை கேட்டுக் கொண்டார். பெர்ன் ஹார்ட் ரீமன் (Bernhard Riemann) என்னும் மாணவர் கனமான, சற்றும் பயனற்றது எனத் தோன்றுகிற , ஒரு ஆய்வேட்டை உருவாக்கினார்.
எத்தனை பரிமாணங்களில் வியாபித்து இருந்தாலும், வளைந்த பரப்பின் பண்புகளை , இப்போது ரீமன் வளைவு ( R ) என்று அழைக்கப்படுகிற , குறிப்பிட்ட கணித அமைப்பால் விளக்கப்படுகிறது. சமதளம், குன்றுகள் மற்றும் மலைகளை எடுத்துக் கொண்டால், சமதளத்தின் R வளைவு பூஜ்யம் எனவும், குன்றுகள் மற்றும் மலைகளுக்கான மதிப்பு அதன் வளைவுகளுக்கேற்ப அதிகரித்து – உச்சிகளில் மிக அதிகமானதாக அமையும். ரீமனின் கொள்கையை வைத்து வளைந்த பரப்புகளை மூன்று அல்லது நான்கு பரிமாணங்களில் வைத்து விளக்க முடியும்.
தன்னை விட கணிதத்தில் நிபுணத்துவம் பெற்ற நண்பர்களது உதவியுடன் மிகுந்த சிரமப்பட்டு ரீமனின் கணிதத்தை கற்றுக் கொண்ட ஐன்ஸ்டைன், Rன் மதிப்பு பொருளின் ஆற்றலுக்கு சரிவிகிதத்தில் அமையும் என்கிற சமன்பாட்டை எழுதினார். அதாவது, பொருள் இருக்குமிடத்தில் காலவெளி வளையும். அவ்வளவுதான். அரைக் கோட்டிற்குள் அடங்கி விடக்கூடிய இந்த சமன்பாடு மின் ஆற்றல் குறித்த மாக்ஸ்வெலின் சமன்பாடுகளுக்கு இணையானது – ஈர்ப்புவிசைக்கானது என்பது மட்டுமே வேறுபாடு. வெளி வளைகிறது என்னும் தரிசனம் சமன்பாடாக உருவெடுத்தது.
உருமறை பிரபஞ்சமே இந்த சமன்பாட்டினுள் அடங்கியுள்ளது. உன்மத்தன் ஒருவனின் கட்டற்ற கற்பனைக்கு நிகரான ஊகங்களை திறந்துவிட்ட அதியற்புத செறிவான கொள்கை இது. அந்த ஊகங்கள் அனைத்துமே பிற்பாடு நிரூபிக்கப்பட்டது. 1980களின் துவக்கம் வரைக்குமே யாரும் இந்த ஊகங்களை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனாலும் அவை ஒன்றன் பின் ஒன்றாக பரிசோதனைகளில் உண்மையென நிரூபிக்கப்பட்டது. அவற்றில் சிலவற்றை பார்ப்போம்.
ஐன்ஸ்டைன் சூரியன் போன்ற பெரிய விண்மீன்கள் தம்மை சுற்றியுள்ள வெளியை வளைக்கும் நிகழ்வையும், மற்ற கிரகங்களின் மீது அந்த வளைவின் விளைவையும் மீள் கணிப்பு செய்ததிலிருந்து துவங்குவோம். கெப்ள மற்றும் நியூட்டனது சமன்பாடுகளின் வழிப்படியே கிரகங்களின் நகர்வு இருப்பதை கண்டறிந்தார். ஆயினும் அவை முற்றாக சமன்பாடுகளுடன் ஒத்துப் போகவில்லை – சூரியனுக்கு அருகில் வளைந்த வெளியின் தாக்கம் நியூட்டனது விசையின் தாக்கத்தை விட அதிகமாக இருந்தது. சூரியனுக்கு மிக அருகில் உள்ளதால் தமது கணிப்பிற்கும் நியூட்டனது கணிப்பிற்கும் பெரும் வித்தியாசம் கொண்டிருக்கக்கூடிய புதன் கிரகத்தின் நகர்வைக் கணித்த ஐன்ஸ்டைன், சிறு வித்தியாசம் ஓன்றைக் கண்டார். தனது சுற்றுப் பாதையில் சூரியனுக்கு மிகநெருக்கமான புள்ளியில், நியூட்டனின் கணிப்பை விட ஒவ்வொரு வருடமும் 0.43 வளைவு விநாடிகள் அதிகமாக நகர்வது தெரியவந்தது. மிகச் சிறிய வித்தியாசம் என்றாலும், வானியலாளர்கள் அனைவருமே இதை ஆராய்ந்து உறுதி செய்தனர் – புதன் கிரகம் ஐன்ஸ்டைனுடைய கணிப்பின்படியே நகர்கிறது, நியூட்டனுடையதன்படி அல்ல. கடவுளர்களின் தூதுவனும் பறக்கும் காலணிகளின் தலைவனுமான புதன், நியூட்டனையல்ல, ஐன்ஸ்டைனையே பின்பற்றுகிறார்.
விண்மீன்களுக்கு மிக அருகில் வெளி எவ்வாறு வளைகிறது என்பதை ஐன்ஸ்டைனது சமன்பாடு விளக்குகிறது. இந்த வளைவின் காரணமாக ஒளியும் பாதை விலகுகிறது. சூரியன் தனக்கு மிக அருகில் ஒளியை வளைந்து செல்ல வைப்பதாக ஐன்ஸ்டைன் கணித்தார். 1919ல் இந்த கணக்கீடும் வெற்றிகரமாக நிறைவேறியது. ஒளியின் பாதை விலகல் ஐன்ஸ்டைனின் கணிப்புப்படி துல்லியமாகவே நிகழ்ந்தது.
ஆனால் வளைவது வெளி மட்டுமல்ல. காலமும் கூட. பூமியில் உயர் மட்டங்களில் அதிகமாகவும் தரை அல்லது சிறு மட்டங்களில் மெதுவாகவும் காலம் நகர்கிறது என ஐன்ஸ்டைன் கண்டறிந்தார். இதுவும் கணக்கீடு செய்யப்பட்டு உண்மை என்றானது. இன்று வெறும் சில சென்டிமீட்டர் இடைவெளி மட்டங்களில் இந்த கால வித்தியாசத்தை கணிக்கக்கூடிய அதிதுல்லிய கடிகாரங்கள் உலகெங்கும் உள்ள ஆய்வகங்களில் உள்ளன. தரையில் ஒன்றும் மேஜையில் ஒன்றுமாக இரு கடிகாரங்களை வைப்போம். மேஜையில் உள்ளதை விட தரையில் உள்ள கடிகாரத்தில் காலம் மெதுவாக செல்லும். ஏனெனில் காலம் என்பது பிரபஞ்சம் தழுவிய, அறுதியாக நிர்ணயிக்கப்பட்ட ஒன்றல்ல – தனது அருகிலுள்ள நிறையைப் பொறுத்து சுருங்கவும் விரிவடையவும் கூடியது. மற்றவற்றைப் போல பூமியும் தன்னைச் சுற்றியுள்ள காலவெளியை வளைக்கும். கடல் மட்டத்திலும் மலை உச்சியிலும் வாழும் இரட்டையர்கள் மறுபடியும் சந்தித்தால், ஒருவர் மற்றொருவரை விட – மிகச் சிறிய அளவு என்றாலும் – சற்று அதிகமாக வயதாகியிருப்பதை காண இயலும்.

காலம் தொடர்பான இந்நிகழ்வு பொருட்கள் ஏன் விழுகின்றன என்பதைக் குறித்து சுவாரஸ்யமான விளக்கம் ஒன்றை அளிக்கிறது. நியூயார்க்கிலிருந்து ரோம் நகருக்கான விமான பாதை நேரானதாக இல்லாமல் வடக்கு நோக்கி வளைந்து செல்வதை வரைபடத்தில் காணலாம். ஏன்? பூமி வளைந்துள்ளதால், நேராக செல்வதை விட வடக்குமுகமாக வளைந்து செல்வதே குறைவான தூரமாகும். இரு தீர்க்க ரேகைகளுக்கு இடையேயுள்ள தொலைவு வடக்கு நோக்கி செல்கையில் குறையும் – எனவே வடதிசை நோக்கிய பயணப்பாதையே குறைவான தூரம் உடையதாகும்.

நம்பினால் நம்புங்கள் – மேலே வீசி எறியப்பட்ட பந்து கீழே விழுவதற்கும் இதே காரணம் – மேலே செல்கையில் நேரத்தை ‘ஈட்டிக் கொள்கிறது’ ஏனெனில் மேலே நேரம் மற்றொரு வேகத்தில் நகர்கிறது. விமானம் மற்றும் பந்து , இந்த இரண்டு விஷயங்களிலும் வளைந்த வெளியில் நேரான பாதையில் செல்கின்றன.

இந்த சிறு விஷயங்களைத் தாண்டியும் இந்த கொள்கையின் ஊகங்கள் செல்கின்றன. விண்மீன்கள் தனது ஹைட்ரஜன் தீரும் வரை எரிந்து அணைந்த . பிறகு எஞ்சிய மிச்சம், வெப்பத்தின் அழுத்தம் எதுவும் இல்லாததால் விரிவடைதல் நின்று, தன் எடையால் தனக்குள்ளே உள்நசுங்குகிறது. மிகப் பிரம்மாண்டமான விண்மீன் என்றால் இந்த உள்நொறுங்குதலின் பெரும் எடை, தொடர்புடைய பொருளை மாபெரும் அளவிற்கு அழுத்தி, சுற்றியுள்ள வெளியை அதீதமாக வளைத்து துளையிட்டு உள்சென்று விடுகிறது. இதுவே கருந்துளை (Black hole).
எனது கல்லூரிக் காலத்தில் கருந்துளை என்பது ஏதோ ஒரு மறைஞான கொள்கையின் சிறிதும் நம்பகமற்ற சாத்தியம் என்றே கருதப்பட்டது. இன்று நூற்றுக்கணக்கில் அவை கண்டறியப்பட்டு ஆராயப்படுகின்றன. நமது சூரியனை விட கோடி கோடி மடங்கு எடையுள்ள கருந்துளை நமது பால்வெளி மண்டலத்தின் மையத்தில் அமைந்துள்ளது. விண்மீன்கள் அதை வலம் வருவதைக் காண்கிறோம். அதற்கு மிக நெருங்கிச் செல்லும் எந்த விண்மீனும் அதீத ஈர்ப்பு விசையால் அழிக்கப்பட்டு விடும்.
இன்னமும், கடலின் மேற்பரப்பு போல வெளியும் அலையடித்துக் கொண்டே இருக்கும் – அந்த அலைகள் மின்காந்த அலைகளைப் போன்றவை என கொள்கை சொல்கிறது. இந்த ‘ஈர்ப்பு அலை’யின் விளைவுகளை இரட்டை விண்மீன்களில் காணலாம்: தனது ஆற்றல் தீரும் வரை ஈர்ப்பு விசை அலைகளை தொடர்ந்து கிளப்பி விட்டு, பிறகு ஒன்றுக்குள் ஒன்றாக நொறுங்கி அழிந்து விடும். இரட்டை விண்மீன்களின் ஈர்ப்பு அலைகளையும் அவை நொறுங்குவதையும் அலைக்கம்பங்கள் வழியாக 2015ம் ஆண்டு இறுதியில் கேட்க முடிந்தது. அடுத்த ஆண்டே இது உறுதிபடுத்தப்பட்டதும் உலகமே பேச்சற்று அமர்ந்தது. ஐன்ஸ்டைனது கொள்கையின் கிறுக்குத்தனமான ஊகங்கள் மீண்டுமொருமுறை துல்லியமாக நிறுவப்பட்டது.
மேலும், பிரபஞ்சம் ஆயிரத்து நானூறு கோடி வருடங்களுக்கு முன்பான ஒரு வெடிப்பில் தோன்றி இன்னமும் விரிவடைந்து கொண்டிருப்பதாக இந்த கொள்கை ஊகிக்கிறது. இதைப் பற்றி விரைவில் பார்ப்போம்.
ஒளியின் வளைவு, நியூட்டனது விசையில் சிறு மாற்றம், கடிகாரத்தின் மெதுவான நகர்வு, கருந்துளைகள், ஈர்ப்பு அலைகள், விரிவடையும் பிரபஞ்சம் ,பெருவெடிப்பு – இத்தகைய அடர்சிக்கல் நிகழ்வுகள் பிரபஞ்சம் வெறுமனே கட்டுப்பெட்டியல்ல – பொருட்களும் புலங்களும் என தனக்குரிய அதிதீவிர ‘இயங்கிய’லைக் கொண்டுள்ள ஒன்று என்பதை விளக்குகின்றன. தனது வெளி பற்றிய கருத்து இந்தளவிற்கு செழிப்பாக வளர்ந்திருப்பதைக் கண்டு டெமாகிரீடஸ் புன்னகைத்திருப்பார். ‘வெளி’யை வெறும் இன்மை ( non being) என சொல்லியிருந்தாலும் அவர் உத்தேசித்தது இருப்பாலேயே ( ) அது பொருள். இன்மையும் சில இயற்பியலையும் பொருண்மைமையும் கொண்டிருக்கின்றன என்றார். எவ்வளவு உண்மை அது.
ஃபாரடேவின் புலங்கள், கணிதத்தின் அசாத்திய வலிமை, gauss மற்றும் ரீமனின் வடிவியல் – இவை இல்லாமல் ‘சில இயற்பியலை’ நாம் அறிந்திருக்க இயலாது. புதிய கணித முறைகள் மற்றும் கருத்தியல் கருவிகள் வழியாக டெமாகிரீடஸின் ‘இன்மை’யை விளக்கிய ஐன்ஸ்டைன், பிரபஞ்சம் வெடிக்கின்ற, அடியற்ற ஆழமுடைய வெளியின் துளை, அருகாமையில் மெதுவாகவும் தொலைவில் விரைவாகவும் நகரும் காலம், கடலலை என விரியும் எல்லையற்ற பிரபஞ்ச அதிர்வுகள் என வண்ணமயமான அழகிய ‘சில இயற்பிய’லை கண்டறிந்தார்.
இவையெல்லாமே ஏதோ ஒரு அறிவிலியின் அபத்த கற்பனை என தோன்றலாம். ஆனாலும் நிதர்சனத்தின் சிறு கீற்று இது. இன்னமும் சொல்லப்போனால், நமது அன்றாட விழியின்மையை விட மங்கலான சற்றே சரியான நிதர்சனத்தின் துளி இது. நமது பகற்கனவுகளின் அடிப்படையே இன்னும் தெளிவாக நிதர்சனத்தின் அடிப்படையாகவும் அமைந்திருக்கிறது.
**
Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.
