- பாண பட்டரின் ஹர்ஷ சரித்திரம்- 1
- ஹர்ஷ சரித்திரம்- 2
- ஹர்ஷ சரிதம் -இரண்டாம் பாகம்
- ஹர்ஷ சரித்திரம் – 4
- தகுதியின்றியும் ஒரு சிலர் ராஜ பதவிகளுக்கு வந்து விடுகிறார்கள்
- தேவ லோகப் பெண்களும் அந்தப்புரமும்
- ஹர்ஷ சரித்திரம்
- தந்தையின் மறைவும் தமையனை தேடுதலும்
- இராஜகுமாரனின் மன விசாரங்கள்
- சிக்கிக் கொண்ட இராஜகுமாரன்
- ஹர்ஷனின் சபதம்
- அணிவகுத்த படைகள்
- துவங்கிய பயணமும் வந்த பரிசும்
- பூமியில் அரசர்களின் அனுராகம்
- சகோதரியை தேடி
- தொடரும் தேடல்
- கண்டான் சகோதரியை!
- ஹர்ஷனின் உறுதிமொழி
அருகில் ராணி யசோவதி அழுது சிவந்த கண்களுடன் சாமரத்தை வீசியபடி ‘ஆர்ய புத்ர’ தூங்குங்கள்’ என்றாள். தலையில் கை வைத்தும், மார்பில் தட்டிக் கொடுத்தும் குழந்தையை தூங்கச் செய்யும் தாயாக ஆனாள்.
ஹர்ஷன் அருகில் இருந்து தந்தையின் மேல் வைத்த கண் வாங்காமல் பார்த்தான். தந்தையின் பிரிவு சமீபத்தில் என்பதை மனது ஏற்க மறுத்தது. தைரியத்தை இழப்பது போலவும் பயம் ஆட்கொண்டது போலவும் ஆனான். திடுமென தந்தையின் குரல் வா, வா எனவும் அருகில் சென்றான். மார்போடு அணைத்து, அன்பினால் கும்மிருட்டில் இருந்தவனுக்கு விளைக்கை காட்டியது போல பெரும் குளத்தில் அம்ருதம் பொங்கி வந்தது போலவும், சந்தனரசத்தால் நீராட்டியது போலவும், பனி மலையின் துளிகளால் வர்ஷித்தது போலவும், இறுக்கி பிடித்து தன் அங்கங்கள் நோக அவனை தன் உடலோடு உடலாக கட்டிக் கொண்டும், கன்னத்தோடு கன்னம் வைத்து, தன் காய்ச்சலை மறந்தவராக, கண்களில் பெருகிய நீரால் முழுக்காட்டியபடி ஆலிங்கணம் செய்தார். வணங்கி அருகில் அமர்ந்தவனை, கைகளால் வருடி மகனே, இளைத்து விட்டாய் என்றார். பண்டி முன்வந்து வணங்கி, ‘தேவ! இன்னமும் காலை உணவே கூட இவன் உண்ணவில்லை என்றான்.
அதைக் கேட்டு கண்களின் நீர் வார்த்தைகளை தடுமாறச் செய்ய, சிரமப்பட்டு’ வத்ஸ! மகனே, எனக்குத் தெரியும் உனக்கு தந்தையிடம் பாசம் அதிகம். புத்திசாலி நீ. நீ கூட தடுமாறலாமா? சொந்த பந்தங்களிடம் வைக்கும் அன்பு இப்படித்தான் வதைக்கும். அதற்காக, நீ உன்னை வருத்திக் கொள்ளாதே. இந்த உக்ரமான ஜுரம் வந்து என்னை தாக்கியதால் நான் வருந்துவதை விட, என்னால் நீங்கள் படும் மன வேதனையை, உடல் வருத்தத்தை அதிகமாக உணருகிறேன். என் சுகமும், ராஜ்யமும், நற்குடி பிறப்பும், ப்ராணனும், பர லோகமும் உன்னிடத்தில் அடைக்கலம் ஆகும். எனது மட்டுமல்ல ராஜ்யத்தின் அனைத்து பிரஜைகளின் சுக துக்கங்கள், கஷ்ட நஷ்டங்கள் இனி உனதாகும். நீ வருந்தினால் உலகமே வருந்தும். நீ பிறந்திருப்பது ஏதோ அல்பமான குலம் அல்ல. பல பிறவிகளில் செய்த நற்செயல்களின் பலனாக கிடைத்த பிறவி. நால்வகை சமுத்திரங்கள் ஸூழ உள்ள இந்த அரச பதவியை, உள்ளங்கை நெல்லிக்கனி போல கிடைக்கப் பெற்றவன் நீ. நீ பிறந்த தாலேயே என் பிறவி பயன் பெற்றது. இனி எனக்கு எந்த ஆசை அபிலாஷைகளும் இல்லை. வைத்யர் நம்பிக்கையோடு மருந்துகளை குடிக்க வைக்கிறார். வத்ஸ! மேலும் கேள். உன்னை அரசனாக பெற்ற இந்த தேசத்து பிரஜைகள் புண்யம் செய்தவர்கள். அனைத்து புவனங்களையும் பாலனம் செய் என்று உன் போன்றவர்களை பகவான் படைக்கிறார். உன் பெற்றோருக்கும் அந்த எதிர் பார்ப்பே உள்ளது. அரசனுக்கு பிரஜைகள் தான் உறவினர். தாயாதிகள் அல்ல. எழுந்திரு. முன் போலவே உன் கடமைகளைச் செய். முதலில் உணவை ஏற்றுக் கொள். உன்னுடன் நானும் என் பத்யமான ஆகாரத்தை எடுத்துக் கொள்கிறேன். ‘ இவ்வாறு பேசியதைக் கேட்டவன் தன் இதயத்தில் பலத்த அடி பட்டது போல துடித்தான். தந்தை திரும்பவும் ஆகாரத்தை நினைவுறுத்தவும், அந்த வெண்ணிற படுக்கையிலிருந்து இறங்கினான். ‘ இது வஜ்ர பாதம்- வஜ்ரம் மேலே பட்டது போல என்னை வருத்துகிறது. சாமான்யனுக்கும் மரணம் சோகமே. பெரு வியாதி மருந்துகளுக்கு கட்டுப்படவில்லை. பஸ்மம் இல்லாத அக்னி ப்ரவேசம் போல உடலை வாட்டி இருக்கிறது. நரக வாசத்தை அனுபவித்து விட்டவர் போல உடல் வலியை அனுபவித்து விட்டார். வெளிச்சம் இல்லாத நெருப்பு, பெய்யாமல் பெய்த மழையின் அலைக்கழிப்பு. உண்மையில் குத்தாமலே குத்திய கூரான ஊசிகளின் பாதிப்பு. என்ன செய்வேன்? எதைச் செய்தால் நல்லது?’
மகாராஜாவின் ஆணை. எனவே அவ்விடத்தை விட்டு அகன்றான். கண்களில் நீர் பெருகி புகை போல வழியை மறைத்தது. இதயத்தை தாக்கிய சோகம் சுட்டது அக்னி போல. வேதனையில், எதுவுமே மனதில் உறைக்காமலே உள் அறை வரைச் சென்றான். உண்ட முடித்தபின் கை கழுவிக் கொண்டே பரிமாறியவரிடம், போய் அப்பா எப்படி இருக்கிறார் கேட்டு வா என்று அனுப்பினான். அவன் போய் திரும்பி வந்து அதே போல இருக்கிறார். தாம்பூலத்தை மறுத்து விட்டு, வைத்யர்கள் அனைவரையும் வரவழைத்தான். அவர்களிடம் ‘இந்த நிலைமையில் நாம் செய்ய வேண்டியது என்ன? என்று கேட்டான். வைத்யர்கள் சொன்னார்கள்’ தைரியமாக இருங்கள். சில நாட்களில் மீண்டு எழுந்து விடுவார்’ அவர்களிடையே ஒரு இளம் வைத்யன், பதினெட்டு வயது இருக்கும். அவனும் இதே ராஜ குலத்தினனே. அஷ்டாங்க ஆயுர்வேத சாஸ்திரங்களை நன்றாக படித்து தேர்ந்தவன், மகா ராஜா அவனிடம் மிக்க அன்புடன் இருந்தார், தன் மகன் போலவே படிக்க ஏற்பாடுகள் செய்து கொடுத்து வந்தார். இயல்பிலேயே நல்ல அறிவுள்ளவன். வியாதிகள் பற்றியும், அதற்கான மருந்துகள் பற்றியும் படித்து தெரிந்து கொண்டு விட்டான். அவன் முகம் வாடி தலை குனிந்து நின்றிருந்தான். கண்களில் கண்ணீர் துளிகள் பளிச்சிட்டன. ஹர்ஷன் அவனை அருகில் அழைத்து விசாரித்தான். ‘ வத்ஸ! நீ ரசாயணம் படித்தவன் அல்லவா? சொல்லு. நீ ஏதோ நன்மையல்ல என்று நினைப்பது போல தெரிகிறது.’ அவனும் பதில் சொன்னான்.’ நேற்று காலை இருந்த நிலைமையை அறிவேன். அவன் சொல்லி முடிக்கும் முன் பலமான குரலில் ஒரு அறிவிப்பு கேட்டது. தோட்டக்காரன், பறவைகளிடம் சொல்வது போல ‘பறவையே, தைரியமாக இரு. சோகத்தை விடு. தெரிந்த விஷயம் தானே.. இதோ ஸூரியன், கமலங்களின் சோபையை எடுத்துக் கொண்டு சுமேரு மலை நோக்கிச் செல்கிறான், மாலை நேரம், இதோ அஸ்தமனம் ஆகி விடும்’
இதைக் கேட்ட ஹர்ஷன் இதன் பொருளை அறிந்து மனதில் சந்தேகம் வர, வைத்யர்களை அனுப்பி விட்டு தந்தையின் அறை வரும் பொழுது சந்த்யா காலமாகி விட்டிருந்தது. அங்கு பேச்சுக் குரல் கவலையுடன் ஒலித்தது. மறு முறை உடல் உஷ்ணம் அதிகரித்து சுற்றிலும் நின்றவர்கள் பர பரத்தனர். ஹரிணீ! மாலைகளைக் கொண்டுவா, வைதேஹீ! என் உடலில் மணி தர்பன், (முகம் பார்க்கும் கண்ணாடி – மணிகளை பயன் படுத்துவர் போலும்.) லீலாவதி ! பனிக்கட்டிகளைக் கொண்டு வா. அதை நீரில் போட்டு குளிர்ந்த நீரால் நெற்றியில் பட்டி போடு. தவலாக்ஷி! கர்ப்புரம் கொண்டு வா. காந்திமதீ! கண்களின் மேல் சந்திர காந்த கல்லை வை. (சந்திர காந்தக் கல் -சந்திரனின் ஒளியில் நீரை வெளிவிடுமாம்.) கலாவதீ! கன்னங்களில் குவலய பூ வை.சாருமதீ! சந்தனம் அரைத்து வை. இந்துமதி! அருகில் இருந்து இந்த வெப்பத்தைக் குறைக்கப் பார். மதிராவதீ! அரவிந்த பூக்களை நனைத்து குளுமையாக அருகில் வை. மாலதி, தாமரைத் தண்டுகளைக் கொண்டு வா. அவந்திகே, தாள வாத்யங்களை அடக்கி வாசிக்கச் சொல். பந்து மதீ! என் தலையை பற்றிக் கொள். பறந்து விடும் போல இருக்கிறது. தாரணிகே, என் தோள்களை அழுத்தமாக பிடி. குரங்கவதீ, உன் கைகள் எப்பொழுதும் குளிர்ந்து இருக்குமே. அவைகளை என் மார்பில் வை. பலாஹிகாவா, வா என் புஜங்களை பிடித்து விடு. பத்மாவதீ, பாதங்களை பிடித்து விடு. அங்கசேனா, என் உடலை அழுத்தி பிடித்துக் கொள். விலாசவதீ, நேரம் என்ன? குமுதவதீ, தூக்கம் வரவில்லை. ஒரு கதை சொல்லேன். இப்படி யாரோ ஆணையிடுவது போல பாடுவதைக் கேட்டாலும், மனதில் படாமல் இரவு விழித்திருந்தான்.
விடிந்தது. தன் படுக்கை அறையிலிருந்து அரசனைப் பார்க்க வந்தான். அங்கு குதிரையை பிடித்துக் கொண்டு குதிரை வீரன் நின்றிருந்தான். அவனை தவிர்த்து விட்டு நடந்தே, தன் இருப்பிடம் வந்தான். அவசரமாக ராஜ்யவர்தனை அழைத்து வர ஆட்களை அனுப்பத் தீர்மானித்து, வேகமாக ஓடும் தூதர்கள், வேகமாக செல்லவே பயிற்சி பெற்ற வீரர்கள், அவர்களுக்கு உதவும் வகையில் சிலரையும் அனுப்பி விட்டு வந்தான். முகம் கழுவிக் கொண்டு வந்தவனுக்கு காலை உணவை எடுத்து வந்தனர். அதை மறுத்துக் கொண்டிருக்கும் பொழுதே, யாரோ, எவரிடமோ பேசும் குரல் , ‘ரசாயண்-ரசாயன்- என்ற சொற்களைக் கேட்டான். தெளிவாக இல்லை. பத்ர! என்ன ரஸாயணம்? யாரும் பதில் சொல்லவில்லை. தயங்கினர். திரும்பவும் கேட்ட உடன் மிகவும் வருத்தத்துடன் ‘ நெருப்பில் விழுந்து விட்டான்’ என்றனர். சுளீரென்று அடி பட்டது போல ஹர்ஷன் வேகமாக திரும்பினான். ஏன் எதற்கு என்ற கேள்விகளையும் மீறி, சிறுவன், ஏன் இப்படி செய்ய வேண்டும் என்ற துக்கம் தான் அதிகமாகியது. ‘ நல்ல குலத்தில் வந்தவன். தான் உயிருடன் இருப்பதை ஏன் விரும்பாமல் போனான். மற்றவர்களுக்கு துன்பம் தரும் செய்திகளைச் சொல்லாமல் இருப்பதே நல்லது என்று நினைத்திருப்பான். அவனால் தாங்க முடியாத துக்கம் – தன்னால் எதுவும் செய்ய முடியவில்லையே என்று நினைத்தானா? குல புத்திரன்- பந்து, என்றாலும் ஏன் இந்த முடிவு? ‘ மனம் அடங்கவில்லை. என் தந்தை அவனிடமும் அன்புடன் இருந்தார். தந்தைக்குரிய பொறுப்புகளுடன் அவனுக்கு கல்வி கற்கவும், மற்றும் தேவைகளையும் கவனித்துச் செய்தார். என் தாய் அவனுக்கு அதே போலத் தானே தாயாக இருந்து வருகிறாள். நாங்கள் அனைவரும் சகோதரர்கள் தானே, ஏன் இந்த முடிவு? அரச குலமே ஒரு நல்ல மகனை இழந்து விட்டதே. ஏன் இப்படி செய்தான்? அப்படி என்ன துக்கம் அல்லது கவலை? தலை கனம் தாங்க முடியாமல் இந்த கேள்விகளால் தவித்த ஹர்ஷன், ராஜ பவனத்துக்கு போகாமல் அங்கேயே அமர்ந்து விட்டான். இன்னும் எவ்வளவு பேர், தந்தை மறைந்த பிறகு, பிரிவைத் தாங்க முடியாமல், மேலும் பலர், அவருடைய அன்புக்கும் ஆதரவுக்கும் பாத்திரமாகி, வசதியாக இருந்தவர்கள், உறவு முறை இன்றியே உறவினருக்கும் மேலாக அவர் அருகாமையை அறிந்தவர்கள், பெயர் பெற்ற நல்ல அரசர், அவரிடம் உரிமையோடு வாழ்ந்தவர்கள். என்ன செய்வார்களோ. இவன் தீயில் குதித்தான். இவனுக்கு அந்த திட சித்தம் இருந்திருக்கிறது. உண்மையில் தீக்குளித்தவர்கள் நாங்களே. தன்ய: புண்யம் செய்தவன், புண்ணியம்- நல்வினை செய்தவர்களில் முதலாக எண்ணத் தகுந்தவன். இந்த ராஜ குலம் தான் அந்த அளவு நல் வினைகளை செய்யவில்லை போலும். குல புத்திரனை இழந்து விட்டிருக்கிறது.

இவர்கள் வாழ்விலும், உயிர் தரித்து இருக்கச் செய்வதிலும் என் கடன் என்ன? எதைச் செய்ய வேண்டும்? எந்த அளவு பரந்துள்ள தேசம் இது? பல விதமான மக்கள், பல விதமான எண்ணப் போக்குகள், எதிர்பார்ப்புகள், நல்லவரோ, கொடூரமானவர்களோ கலந்தது தானே ராஜ்யத்தில் உள்ளவர்கள். என் இதயம் ஏன் இன்னும் பிளந்து போகவில்லை – எது என்னை தடுக்கிறது?
எதுவுமே செய்ய உத்சாகம் இன்றி தன் உத்தரீயத்தாலேயே தலையிலிருந்து கால் வரை போர்த்திக் கொண்டு கட்டிலில் படுத்து விட்டான்.
ஹர்ஷன் இவ்வாறு குழப்பத்தில் இருந்த சமயம் அரச பவனத்தில், அரசன் அருகில் இருந்தவர்கள் அவர் நிலையில் எந்த மாறுதலும் இல்லை என்பதால் கவலையோடு நின்றிருந்தனர். இரவு தூக்கம் இன்றி இருந்தவர்கள் கண்களை இமைகள் மூடி விடாமல் காக்கவே திணறிக் கொண்டிருந்தனர். சிலர் கண்களில் நீர் வற்றி கோடிட்டிருந்தது. கீழ் நோக்கி தலை குனிந்து சிலர் நின்றனர். யாரும் பேசவும் இல்லை, வழக்கமான சிரிப்பும் இல்லை. சிலர் வாயால் ஹா கஷ்டம் என்றனர், மற்றவர் அதைக் கூட சொல்லாமல் மௌனமாக இருந்தனர். பாடும் வந்திகள் அறைக்குள் வராமல் தனித்து நின்றனர். பேசவே கூட மறந்து விட்டனர் போலும். ஒரு சிலர் பகல் பொழுது ஏறிக் கொண்டிருந்த பொழுதும் படுக்கையை விட்டு இறங்காமல் அதிலேயே கிடந்தனர். இந்த அரசன் மறைந்து விட்டால் நாடு என்ன ஆகும் என்று கவலைப் பட்டனர்.
குலாசலம் என்ற மலை ஊஞ்சலாடுவது போல மெள்ள ஆடியது. சக்ரவாக பக்ஷிகள் துணையை விடாமல் தொடருவது போல பூமி அத்துடன் தானும் செல்வது போல மெள்ள ஆடியது. தன்னிடம் தோன்றிய தன்வந்திரி இல்லையே என்று பொருமுவது போலவும் ஒருவருக்கொருவர் விசாரித்துக் கொள்வது போலவும் பெரிய பெரிய அலைகள், சமுத்திரத்தில் பெருகி வீசியடித்தது. மரங்கள் விழுந்து விடுமோ என்று பயந்த மயில் போன்ற பறவைகளின் தோகை போல தூம கேது வானத்தில் தெரிந்தது. தூம கேதுவின் வருகை பயம் தருவது. அது தோன்றுவது அரச குலத்துக்கு ஆபத்து என்று பொதுவாக ஒரு நம்பிக்கை. திசைகளின் பாது காவலர்களான தேவர்கள் தாங்களும் இந்த அரசனின் ஆயுளை வேண்டி ஹோமம் செய்வது போலவும், அதனால் எழுந்த புகை பரவியது போலவும் எங்கும் கருமை படர்ந்தது, ஸூரியன் இயல்பான ஒளியை இழந்தவன் போலும், தீயில் சுட்ட இரும்பு பாத்திரம் போலவும், யாரோ ஆடுவது போலவும், தலை தனி உடல் தனியாக இருப்பது போலவும் நிழல்கள் தெரிந்தன. சந்திர மண்டலம் கிரஹண காலத்தில் மந்தமாக தெரிவது போல களையிழந்து காணப்பட்டது. அவனிபதி, பூமியை ஆண்ட அரசன் காலம் ,முடியப் போகிறது என்று திசைகள் செக்கச் சிவக்க ஆயின. பூமி அதனால் சிவந்ததைக் கண்ட வசுதா என்ற அந்த பெண் (பூமியின் ஒரு பெயர்- செல்வங்கள் தருபவள் என்ற பொருள்) உடன் கட்டை ஏற துணிந்து சிவப்பு வஸ்திரம் தரித்தவள் போல ஆனாள். லோக பாலர்கள் – (மழை பொழிவதை கண் காணிப்பவர், அதிக மழையோ, குறைவோ, எந்த இடத்தில் எந்த அளவு என்பதை தீர்மானிப்பது இவர்கள் பொறுப்பு. இதே போல வாலகில்யர்கள் என்ற ரிஷிகள் – கட்டை விரல் அளவே உள்ளவர்கள் ஆயிரக்கணக்கனவர்கள் ஸூரியனுடனேயே சுற்றுவர், அஸ்தமிக்கும் முன் ஒளியை அக்னிக்கு கொடுத்து விட்டு விடை பெறுவது போல அஸ்தமிக்கும் சமயம் கடைசியில் மறைவர். இவர்கள் சூரியனுடைய ஒளியும் வெப்பமும், எந்தெந்த இடங்களில் எவ்வளவு நேரம், ஒளியின் அளவு. அதன் நீட்சி – பகல் இரவு ஆதவனின் வெப்பமும், ஒளியும் பருவ காலங்களில் மாறுவது என்பதை தீர்மானிப்பார்கள்- பாகவதம்.)
இந்த லோக பாலர்கள் அவசரமாக திசைகளை பூட்டுவது போல கரு மேகம் சூழ்ந்ததாம்- கவியின் வர்ணனை.
படஹம் வாசிப்பது போல இடி இடித்து நடுங்கச் செய்தது. எங்கும் தூசி பறந்து வாயு மண்டலமே நிறைந்து விட்டது போல இருந்ததாம். கவியின் வர்ணனை-
அதைக் காண யமராஜனின் வாகனமான மகிஷம்- எருமை அட்டகாசமாக கிளம்பியதால் அதன் கால் குளம்புகள் கீறி கிளப்பி விட்டது போல ஆயிற்றாம். குள்ள நரிகள், ஆகாயத்தை நோக்கி பலமாக அலறுவது போல குரல் எழுப்பின. ஏதோ ஆகாயத்தில் இருந்து நெருப்புத் துண்டங்கள் விழுகின்றனவோ எங்கும் சிவந்த நிறமே காண்கிறதே என்ற சம்சயமாம். எங்கும் யாரோ சில பெண்கள் கேசத்தை விரித்து போட்டபடி உலவுவது போல ராஜ மகலைச் சுற்றி அந்தகாரம் சூழ்ந்தது. காகங்கள் ஓயாமல் கரைந்த படி பறந்தன. அரச சின்னமான கொடியின் மேல் ஒரு கழுகு வந்து அமர்ந்தது. இவையனைத்தும் அமங்களமான, துக்க செய்தியைச் சொல்லும் சகுனங்களே.
விடிந்தது. யசோவதியின் வேளா என்ற சேடி ஹர்ஷனைத் தேடிக் கொண்டு வந்தாள். வேகமாக வந்ததால், மூச்சிரைக்க, நின்றாள். அவள் அணிந்திருந்த நகைகளின் உரசல் சப்தம் கேட்டே ஹர்ஷன் எழுந்து விட்டான். அரச ஊழியர்கள் அனைவரும் எழுந்து வந்து எட்டிப்பார்த்து என்ன செய்தி என்று கண்களாலேயே வினவினர். சமையல் செய்பவர்கள் பட படப்பில் கையில் இருந்த கரண்டிகள் கீழே விழுந்து ஒலி எழுப்பியது. ஒருவரையொருவர் தள்ளிக் கொண்டு அருகில் வந்தனர். அவளோ குமாரன் எங்கே? குமாரன் எங்கே? என்றே கேட்டுக் கொண்டிருந்தாள். அவனைக் கண்டதும் ஓடி அருகில் வந்து ‘தேவ! காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள், மகாராஜா உயிர் பிரியும் முன் தேவீ (யசோவதி) ஏதோ எதிர்பாராத செயலை செய்யத் துணிந்து விட்டாள். என்றாள்.
எதிர் பாராத செய்தி, முழுவதும் தெரியவும் இல்லை, சொல்பவளின் பரிதவிப்பு மேலும் மனதை கலக்குகிறது. என்ன செய்வது என்பதை தீர்மானிக்க முடியாமல், புத்தியே வேலை செய்ய மறுத்தது போலும், துக்கம் வேகமாக விரட்டுவது போலும், கவலை மண்டியது, உடல் முழுவதும் வெப்பம் பரவி வியர்த்தது. ஏதோ கடினமான முடிவு. என்னால் ஊகிக்கவும் முடியவில்லை. என் மனமே என் வசத்தில் இல்லையே, வேகமாக அந்த:புரம் வந்தான். அங்கு ராஜ மகிஷிகள் தாங்களும் மரணத்தை தழுவ நிச்சயித்தது போல கூடியிருந்தனர். மாமரமே, ஜாதி குச்ச ,மாதுளம் மரம் அனாதையாக ஆக விடாதீர்கள். ரக்தாசோக மரமே, காலால் உன்னை அடித்ததை மன்னித்து விடு. கர்ண பூர மரத்தின் இலைகளை பறித்தேன், அதை நினத்து என்னை தண்டிக்காதே. என்று இவ்வாறு மரங்களையும், வளர்ப்பு பறவைகளையும் குறித்து புலம்பினர். மறு பிறவி உண்டானால் அதை எப்படி எதிர் கொள்வது? என்பது போல கவலைப் பட்டு இவ்வாறு புலம்பினர் என்று கவி வர்ணிக்கிறார். சகிகள், பணிப் பெண்கள் இவர்களிடமும் விடை பெறுவது போல பேசினர்.
இதைக் கேட்டு குமாரன் ஹர்ஷன் மிகவும் பாதிக்கப் பட்டான். உடல் உஷ்ணம் தலைக்கு
ஏறி விட்டது போல பரிதவித்தான். தாய் யசோவதி, தன் மகா ராணி என்பதன் அடையாளமாக அணிந்திருந்த நகைகள், ஆடைகளைத் துறந்து அக்னி பிரவேசத்துக்குத் தயாரான உடைகளில் இருந்தாள். ஜானகி -சீதா போல பதியின் எதிரிலேயே அக்னியில் பிரவேசம் செய்யத் தயாராக இருந்தனர் போலும்.
பாற் கடலில் எழுந்து வந்த பகவதி ஸ்ரீ லக்ஷ்மியை நினைவுறுத்தினர் – அவசரமாக நீராடி ஈரமான உடையில் சந்த்யா கால வானம் போல சிவந்த வர்ண இரண்டு ஆடைகளை அணிந்திருந்தனர்.
கண்ட சூத்ரம் – மாங்கல்யம் மட்டுமே இருக்க, அதன் நடுவில் பதித்து இருந்த சிவப்பு நிற மணிகள் பிரகாசிக்க நின்றனர். தங்கள் உள்ளத்து துக்கத்தை தெரிவிக்க அந்த சிவப்பே போதும் என நினைத்தது போல. (இது போல பலவிதமாக அவர்கள் துக்கத்தை, கணவன் இறக்கும் முன் தங்கள் மரணத்தை ஏற்கத் துணிந்த பெண்களின் மன நிலையை வர்ணிக்கிறார்.)
மகா ராணி யசோவதியும், அரச பவனத்து ஊழியர்கள், சகிகள் அனைவரிடமும் விடை பெறுவது போல ஆலிங்கணம் செய்தும், தான் வளர்த்த பறவைகள், மரங்களிடம் கூட சொல்லிக் கொள்வது போல பேசிக் கொண்டும் இருந்த தாயை அணுகினான். அவள் காலில் வழிந்து ‘அம்மா! நீயுமா? என்னை விட்டுப் போக தீர்மானித்து விட்டாயா? வேண்டாம், தயவுசெய்து இந்த எண்ணத்தை விடு’ என்று சொல்லியபடி அவள் காலில் விழுந்து வேண்டினான். இளையவன், மூவரில் அதிக பிரியமான மகன், உடல் முழுவதும் வியாபித்த தாங்க முடியாத ஆவேசத்துடன் அணைத்துக் கொண்டவள், மூர்ச்சையடைந்தவள் போல இருந்தாள். அவளையறியாமல் கண்களில் நீர் பெருகி அவன் தலையை நனைத்தது. இவ்வளவு நாள் அடக்கி வைத்திருந்த துக்கம் அனைத்தும் ஒரே வினாடியில் பெருகி வெளிப்பட்டது போல, உடல் நடுங்க, அடக்க மாட்டாமல் ஓவென்று அழுதாள். குமாரனின் பிறந்த தினத்திலிருந்து அவனுடன் அவனுக்காகவே வாழ்ந்தவள், திடுமென தன் தாய் தந்தையரை நினத்து கேவிக் கேவி அழலானாள். ஹா, அம்ப! ஹா தாத! என்றாள். எங்கோ போனவன் திரும்பி வரவே இல்லையே என்று முத்த மகனைப் பற்றிக் கவலையுடன் விசித்தாள். அவன் பெயரைச் சொல்லி அழைத்தபடி, மகனே என்றாள். புகுந்த வீடு சென்று விட்ட ராஜ்யஸ்ரீயை அழைத்து, மகளே, நான் போனால் நீ அனாதையாகி விடுவாயே, தாயை விட மகளுக்கு நெருக்கமாக யார் இருக்க முடியும் என்றாள். கடவுளே, எனக்கு ஏன் இந்த கதி? என்று குல தெய்வத்திடம் மன்றாடினாள். தன்னையே நிந்தித்துக் கொண்டவளாக, ஹே, க்ருதாந்த! கொடூரமானவன் நீ என்று பாமர பெண்கள் போலவே அழுது அரற்றினாள்.
சற்று வேகம் அடங்கி மகனை கை கொடுத்து தூக்கி, அன்புடன் பேசினாள். மகனை பார்த்தபடியே சிறிது நேரம் இருந்து தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டபின் சொன்னாள்’மகனே! நான் பிரியமில்லாதவளோ, குணமில்லாதவளோ அல்ல. உனக்கு நான் பாலூட்டிய பொழுதே நீ என் இதயத்தில் நிறைந்து விட்டவன். நான் பிற ஆண்களை பார்க்கவே மாட்டேன் என்றோ, ராஜ்ய விவகாரங்கள் தெரியாதவளோ அல்ல. பூமியோ, லக்ஷ்மி தேவியோ போல பொறுமையுடன் இருந்தாலும் நான் என் குலத்தின் பெருமையை அறிவேன். எனக்கு வாய்த்தவன் உயர் குலத்தில் பிறந்தவன். தர்ம வழியில் செல்லும் சிறந்த முன்னோர்களைக் கொண்ட குலம் இது. குணவானான மனிதனுக்கு மனைவியானவள். நீ மறந்து விட்டாயா? உன் தந்தை சிங்கம் என்றால் நான் பெண் சிங்கமே. போர்க் களத்தில் உடன் இருந்திருக்கிறேன். மாமன்னனான உன் தந்தைக்கு இல்லத்தரசி என்ற பெயருக்கு தகுதியானவள் தான் நான். வீரனான ஒரு அரசனுக்கு பிறந்தவள், வீரனான கணவனுடன் வாழ்ந்தவள், வீரர்களான இரு மகன் களைப் பெற்றவள். நான் கோழையாக பயந்து இந்த முடிவை எடுத்ததாக நினைக்காதே. என்னை போல பராக்ரமங்களால் இந்த பெரிய சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்த வீரனின் மனைவி வேறு எப்படி செய்ய முடியும். நான் கை பிடித்த உன் தந்தை பரதன், பகீரதன், நாபாகன் என்ற பெயர் பெற்ற அரசர்களின் வரிசையில் எண்ணப் படுபவர். பலருக்கும் ஆசிரயமாக – ஆதரவாக – இருந்தவர். சேவகர்கள், சாமந்தர்கள் -உயர் பதவி யில் இருந்த அறிஞர்கள், மற்ற அரசர்கள் அனைவரும் சேர்ந்து சக்ரவர்த்தியாக அபிஷேகம் செய்து வைக்கப் பட்டவர். நானே மகா ராணி என்ற பட்டத்துடன் அவருடன் பொன்னாலான சிம்மாசனத்தில் அமருவேன் என்று நினைத்தது கூட இல்லை. நான் பாலூட்டி வளர்த்ததும் இரு சிறந்த வீரர்கள். எனக்கு சக்களத்திகளாக வந்த பெண்கள் என்னை மூத்த சகோதரியாக நினைத்து பணிந்து நிற்பவர்கள். இதைவிட பயனுள்ள வாழ்க்கை மற்றொன்று உள்ளதா என்ன? இந்த நிலையிலேயே நான் எண்ணப்பட வேண்டும். உன் தந்தையால், என் கணவனால் எனக்கு கிடைத்த மரியாதைகளும், பெருமைகளும் அவரின்றி நான் இருக்க மாட்டேன். நான் முன் சென்று தேவ மகளிர் அணியிலும் முன்னால் நின்று பரலோகத்திலும் அவரை வாழ்த்தி வரவேற்பேன். அவர் இல்லாமல் நான் வாழ்வதில் தான் சாகசம், மகனே. முன் உயிரை விடுவது அல்ல. வத்ஸ! மகாராணியாக, பிரஜைகளின் நம்பிக்கைக்கு பாத்திரமானவளாக, சபத்னிகள், சகிகள் அனைவருக்கும் பிரியமானவளாக நான் வாழ்ந்த இந்த பெருமைகளோடு மறைய விரும்புகிறேன். என் சரீரம் ஒரு பொருட்டல்ல. என் வாழ்க்கை உதாகரணமாக இருந்து மக்கள் அதே அன்புடன் என்னை நினைக்க வேண்டும். என் நாட்டு பிரஜைகளின் மனதில் நான் வாழ்வேன். என் முகம் வாடி, கணவனை இழந்தவள் என்ற நிலையில் அல்ல. தாத! உன்னை ஆசீர்வதிக்கிறேன். மனதை அலட்டிக் கொள்ளாதே. என்று சொல்லிக் கொண்டிருந்தவள் தாங்க மாட்டாமல் விழுந்து விட்டாள்.
பரபரப்புடன் அவளைத் தூக்கி தன் கைகளில் ஏந்தியவன், அவளை தீர்கமாக பார்த்தவன், இனி இந்த முடிவை மாற்ற மாட்டாள். எனக்கு வருத்தமாக இருந்தாலும் அவள் வரை குலஸ்த்ரீ. அவள் திடமாக நம்பியதை வாழ்வில் காட்டியது போலவே இந்த முடிவிலும் திடமாக இருக்கிறாள். மேலே எதுவும் பேசத் தோன்றாமல் தலை குனிந்து நின்றான்.
பிறந்த குலம், புகுந்த குலம் இவை தேச காலங்களால் மாறும் தன்மையுடையது. அவளே சொன்னது போல புத்ரனுடைய ராஜ்யத்தில் ராஜ மாதாவாக இருந்தாலும், அது இவளுக்கு உகப்பாக இல்லை. யசோவதி சமாளித்துக் கொண்டு அவன் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, அவனை உச்சி முகர்ந்து ஆசீர்வதித்து விட்டு உள் பக்கமாக நடந்தே சென்றாள்.
(இந்த பகுதியில் கவியின் சொல் வளமும், சிலேடையான பல பொருள் தரும் பதங்களும் பல விதமாக ரசித்து விரிவுரையாளர்கள் எழுதி இருக்கிறார்கள். மொழியின் அழகுக்காகவே படிக்கலாம்)
சரஸ்வதி நதிக் கரைக்கு சென்று விட்டாள். அங்கு பயமும், வருத்தமும் சேர பங்கஜங்கள் ரத்த சிவப்பாக பூத்திருந்தன.
அமாவாசை. இந்து என்ற நிலவு, பானுமான் என்ற சூரியனில் பிரவேசிக்கிறது என்பது பிரசித்தம். அன்றைய தினம் சித்ரபானு- அக்னியில், தாரக ராஜன் – சந்திரன் போல யசோவதி பிரவேசித்தாள்.
உடன் வந்தவர்களுடன் அனைவரும் மகா ராஜா இருந்த இடம் வந்தனர். ஹர்ஷன், மற்றும் பந்துக்கள், எதுவும் பேசத் தோன்றாமல் மௌனமாகவே அவர் ஸ்ருகில் வந்து நின்றனர். இன்னும் சிறிது நேரமே என்பது போல அவர் உயிர் உடலில் தங்கியிருந்தது. இதோ அஸ்தமித்து விடும் என்று மலை வாயிலில் விழும் தினகரனை போல இருந்தவரை நெருங்கியவன் அதற்கு மேலும் அடக்க மாட்டாதவனாக மனமொடிந்து அவர் பாதங்களில் முகம் வைத்து அலறி அழலானான். அனேகமாக நினைவை இழந்து கொண்டிருந்தவர், மகனின் அழுகுரல் கேட்டு கண்களை சிரமப்பட்டு திறந்து பார்த்தார். அவனை அருகில் அழைத்து அணைத்து மகனே, அழாதே. தைரியமாக இரு. மகாசத்வன் நீ. சிறந்த மன, உடல் பலமுடையவன். உன் பிரஜைகளும் அரசும் தான் முதல் கவனம் பெற வேண்டும். தனிப்பட்ட வாழ்வும், உறவு முறைகளும் அதை பாதிக்க விடக் கூடாது. நீ யார்? இந்த ராஜ்யத்தின் எதிர்காலமே உன் கையில் இருக்கிறது. மக்கள் உன்னிடம் அன்புடனும், மதிப்புடனும் இருக்கிறார்கள். அவர்கள் எதிபார்ப்பது திடமான அரசனை. வலுவான கைகள் பாதுகாப்பு கொடுக்கும் என்பதை. இந்த மனத் தாங்கல் உனக்கு பொருந்தவில்லை மகனே. குலத்தை விளங்கச் செய்யும் மகா விளக்கு நீ. (ப்ரதீபம்- ஒளி மிகுந்த விளக்கு) தினகரனான சூரியன் போன்ற தேஜஸ் என்று சொல்வது உன்னை குறைத்து சொல்வதாக ஆகும். புருஷ சிம்ஹம்- என்று சொல்வதும் வெறும் சௌர்யம் மட்டும் உள்ள சிங்கம், உன் புத்தியையும், ஆளுமையையும் நிந்திப்பது போல ஆகும். இந்த பூமியே உனது என்றால், உன் செயல்களால் நிரூபித்து விட்டதை திரும்பச் சொல்வதாக ஆகும். ராஜ்ய லக்ஷ்மியை ஏற்றுக் கொள் என்றால், ஏற்கனவே, திருமகள் உன்னை அறிந்து ஏற்றுக் கொண்டு விட்டாள். அதையே சொன்னால் விபரீதம் என்ற குற்றம். உலகை வெற்றிக் கொண்டு உன் பெருமையை நிலை நாட்டு என்று சொன்னாலும் மூவுலகையும் வெற்றி கொள்வேன் என்ற உன் மனதின் அபிலாஷைகளை குறைத்துச் சொல்வதாக ஆகும். பொக்கிஷத்தை ஏற்றுக் கொள் என்பதும் பொருளற்றது. நீ ஒருவனாக திக்விஜயம் செய்து அதை நிரப்பியவன். யார் உன்னிடம் அதை அளிப்பது அல்லது நீ யாரிடம் பெற வேண்டும். அரச பதவியை உனதாக்கிக் கொள் என்பதும் புதிதாக இல்லை. ராஜ்ய பாரத்தை ஏற்றுக் கொள். ப்ரஜைகளை கவனமாக பாலித்து வா. பரிஜனங்கள், – உன்னைச் சார்ந்தவர்கள், அண்டியவர்கள், இவர்களை கவனித்துக் கொள் என்று தனியாக சொல்லத் தேவையும் இல்லை. சாஸ்திரங்களை முழுமையாக கற்று அதன் படி நட. நீயே தனுர் வித்தை அறிந்தவன், தனியாக என்ன சொல்ல இருக்கிறது. சபலங்களுக்கு இடம் கொடுக்காதே, இந்த வயதில் அதில் மிக கவனமாக இருக்க வேண்டும். சத்ருக்கள் எந்த இடத்தில் பலவீனமாக இருக்கிறான் என்பதிலேயே கவனமாக இருப்பார்கள். மகனே, இதற்கு மேல் சொல்லத் தெரியவில்லை. நலமாக இரு என்று சொல்லிக் கொண்டே கண்களை மூடியவரின் கண்கள் நிரந்தரமாக மூடிக் கொண்டன. – யம லோகம் சென்று விட்டார். (அவர் யசோவதியின் செயலை அறியவில்லை, மற்றவர்கள் அறிவிக்காமல் விட்டதும் சிறப்பு) .
தன் கிரணங்களுடன் ஸுரியனும் அவசரமாக மேற்கில் இறங்கி தானும் அந்த மகா புருஷனுக்கு நீர்க் கடன் செய்வது போல மறைந்தான். விவரம் அறிந்த உற்றார், உறவினர், மற்றும் பிரஜைகள் கூட்டமாக வந்து அஞ்சலி செலுத்தினர்.
ஹர்ஷன் தானே முன்னின்று அபர காரியங்களை செய்தான். நரபதி- அரசன், அவருக்கு உகந்த சிதைகள், சாமந்தர்கள், புரோஹிதர்கள், ஊர் ஜனங்கள் புடை சூழ, சரஸ்வதி நதிக் கரையில் தகன காரியங்களைச் செய்து பூவுடலை நீத்து புகழ் மட்டுமே உலகில் நிரந்தரமாக இருக்கச் செய்தான்.
(பீமரதீ- நரக நதி, காள ராத்ரி என்றும் பொருள். ஏழு ஏழாக வருஷங்கள் கணக்கிட்டு, மாதங்களும், தினங்களும் கடந்த நிலையில் ஒரு இரவு மீதமாகும். அதை பீமரதீ என்பர். அந்த இரவைத் தாண்டியவர் நூற்றாண்டுகள் உயிர் வாழ்ந்தார் என்பது கணக்கு. இந்த அரசன் அந்த வகையில் நூறு ஆண்டுகள் வாழ்ந்தான் என்று கணக்கிடுகின்றனர். )
தரையில் அமர்ந்து அடுத்து என்ன என்று சிந்தனை வயப் பட்ட ஹர்ஷன் இவ்வளவு தானா பூலோக வாழ்க்கை என்ற வைராக்யம் எழ யோசித்தான். எவ்வளவு மனோரதங்கள்- மனக் கோட்டைகள், நன்மை என்றும் ஆனந்தம் என்றும் செய்த செயல்கள், சத்யவாதி என்று பெயர் பெற்றதும், இந்த உலகை நீத்த பின் அனைத்தும் மறந்தும் மறைந்தும் போய் விட்டன. புஜ பலம், ஆற்றல் மிக்கவன், இனிமையாக பேசுபவன் என்றும், யுத்தங்கள் செய்து தன் வீரத்தை காட்டியவன், அண்டியவர்கள் கவலையின்றி தங்கள் கஷ்டங்களைச் சொல்லி அவர் தீர்த்து வைப்பார் என்று நம்பி இருந்தனர். கற்ற கல்விகள், சாஸ்திரங்கள் , அதை மேலும் அனுசரித்தும் தெரிந்து கொண்டதும் பயனின்றி அவருடனேயே மறைந்து விட்டன. இது போன்ற மகா புருஷனை படைக்க ப்ரும்மா புதிதாக பரமாணுக்களைத் தேட வேண்டியிருக்கும் இவ்வாறு பலவாறாக எண்ணி இரவை கழித்தவன், தூங்கவும் முடியாமல், விடிந்த பின் எழுந்து அரண்மனைக்குள் வந்தான். சுத்தாந்த;புரம், உன் அறை வரும் வழியில், காட்டு யானைகள் விழுந்து கிடப்பது போல, ஆங்காங்கு தந்தையின் உறவினர்கள், அழுது அரற்றி விடியும் முன் உறங்கியவர்கள் போலும், குதிரைகள் கூட ஏதோ அறிந்தது போல துக்கத்துடன் கனைப்பதையும், ஜய சப்தமோ, கலகலப்போ இன்றி மகா ஆஸ்தான மண்டபம் சோபையிழந்து கிடக்க, எதையும் உணரவோ, ஏற்றுக் கொள்ளவோ இடம் கொடுக்காத மன நிலையில் ராஜ பவனத்தை விட்டு வெளியேறினான். சரஸ்வதி நதிக்கரை வந்தான். நீராடி தந்தைக்கான நீர்கடன்களைச் செய்தான். சத்ர சாமரங்களோ உடன் வருபவர்களோ இன்றி தனியாக நடந்து தன் இருப்பிடம் வந்து சேர்ந்தான்.
அரசனிடம் ஈடுபாடுள்ள ஊழியர்கள், நண்பர்கள், மந்திரிகள், அன்றே கிளம்பிச் சென்றனர். உற்றார் உறவினர் தடுத்தும் கேளாமல் சிலர் மன அமைதிக்காக, அன்னாள் வரை அரசனுக்கு அணுக்கமாக இருந்தவர்களில் சிலர் தேச யாத்திரை சென்றனர். சிலர் தங்கள் வருத்தம் தீர, விரதங்கள் இருந்தனர். அந்த அளவு மன திடம் இல்லாதவர்கள் சிலர் விட்டில் பூச்சி போல தங்கள் முடிவை தேடிக் கொண்டு விட்டனர். சிலர் பகவான் சிவ பெருமானை துதித்து பாடியும், பஜனைகள் செய்தும் மன அமைதி பெற முயற்சித்தனர். பலர் மலைகள், வனங்கள் என்று சென்றனர். பசுமை நிறைந்த இடங்களில் சுற்றி தங்கள் மன அமைதியை பெற்றனர்.
அருகில் இருந்த, தங்கள் சேவைகளை தொடர்ந்து செய்து கொண்டிருந்த ராஜ பவனத்து ஊழியர்களும், மற்றும் சிலரும் மட்டும் தங்கள் பணிகளைச் செய்து கொண்டிருந்தனர். சிலர் முனிகளாக உலகைச் சுற்ற கிளம்பினர். சிலர் நீள சிவப்பு அங்கி அணிந்து பகவான் புத்தரின் மார்கத்தில் இணைந்து கொண்டனர். வயதானவர்கள், வனம் சென்றனர். ஆசிரமங்களில், தவ வாழ்க்கை, மிருக, மயில்களுடன் என்று வாழச் சென்றனர். இல்லறத்தில் இருந்தவர்கள் தவிர மற்றவர்கள் தோன்றியபடி மகா ராஜாவின் ,மறைவை மறக்க முடியாமல் சிரமப்பட்டனர்.
சில பெரியவர்கள், பொறுப்பான பிரஜைகள் வந்து ஹர்ஷனை சந்தித்தனர். தந்தையின் மறைவால் துக்கம் அனுஷ்டித்துக் கொண்டிருந்தவன் எதிலும் பற்றின்றி இருப்பதை பார்த்து சமாதானம் செய்தனர். தந்தை, அவருக்கு முன் அவர் தந்தை என்று பாலித்த அரசு. ராஜ குலத்தைச் சேர்ந்தவர்கள், குரு ஜனங்கள் அந்த ராஜ்யத்தில் தொடர்ந்து ஆசிரியர்களாக, ஆலோசகர்களாக இருந்தவர்கள், வேத சாஸ்திரங்களில் பண்டிதர்கள், இதிகாச, புராணங்களை சொல்பவர்கள், வயதான அரசு உயர் நிலை அதிகாரிகள், ராஜ குடும்பத்திற்கு நெருக்கமானவர்கள், சில அரசர்கள், அமாத்யர்கள், உலக இயல்பை அறிந்த பெரியவர்கள், சுக துக்கங்களை சம மாக பாவிக்கத் தெரிந்த முனிவர்கள், சம்சாரமே அசாரம்- சாரமில்லாதது என்று முழங்கும் ப்ரும்ம வாதிகள், அழகாக புராணங்களை விவரிக்கச் தெரிந்த பௌராணிகர்கள் என்பவர்கள் வந்து ஹர்ஷனை சூழ்ந்து நின்றனர்.
மெள்ள மெள்ள பேசியும், ஆலோசனைகள் சொல்லியும் ராஜ குமாரனை சுய நிலைக்கு கொண்டு வந்தனர். தன் தமையனை நினைத்து கவலைப்பட்டவனை ‘அவன் வரை தந்தையின் மரணச் செய்தி எட்டியதோ இல்லையோ, தெரிந்திருந்தால் வராமல் இருப்பானா, அல்லது தாங்க மாட்டாமல் வல்கலை தரித்து துறவியாக சென்று விட்டானா ராஜ ரிஷியாக ஆசிரம பதம் சென்று விட்டானோ, என பலவிதமாக பேசியும், யோசித்தும் சொல்வதைக் கேட்டு, தானே முடிவாகச் சொன்னான். அவன் ராஜ குலத்தவன், தவ வாழ்வை ஏற்று ஆசிரமம் செல்ல மாட்டான். புருஷ சிங்கம் அவன். மலைக் குகைக்குள் நுழையும் சாதாரண சிறிய மிருகம் அல்ல. அறிந்திருந்தால் அரசைப் பற்றி கவலைப் பட்டிருப்பான். தந்தை இன்றி ராஜ்யம் அனாதையாக போக விட மாட்டான். கேட்ட உடன் வருத்தம் மேலோங்கி இருந்திருக்கும், இருந்தாலும் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ளத் தெரிந்தவன் தான். மனித வாழ்வின் அனித்யதா- நிச்சயமில்லத தன்மையை உணர்ந்து வைராக்யம் வந்திருக்கும். அதை உதறித் தள்ளி தன் பொறுப்பு ராஜ்ய பாலனம் என்பதை உணர்ந்திருப்பான். வருவான். வந்து ராஜ்யாபிஷேகம் செய்து கொள்வான். தந்தையிடம் மிக்க அன்பும் மரியாதையும் உள்ளவன். மற்ற அரசர்கள் சொல்வது போல விலகி போகிறவன் அல்ல. மகா ராஜா அவனை தன்னைப் போலவே ,மாபெரும் ராஜ்யத்தை ஆளும்படியே உபதேசித்து வளர்த்தார். எனக்கே சொல்வான் ‘ தாத ஹர்ஷ! தந்தையை போல ஆகிருதி- உடல் அமைப்பு வேறு யாருக்கு உண்டு? இந்த உயரமும். சதா ஸுரிய நமஸ்காரம் செய்து பெற்ற முக பொலிவும், வஜ்ரம் போன்ற உறுதியான புஜங்கள் தண்டம் போல இருக்க, பலராமனைப் போல மல்யுத்த வீரனாகவும் அதே சமயம் உல்லாசமாகவும் இருக்கத் தெரிந்தவர் நமது தந்தை. இவரைப் போல வேறு ஒருவர் இருக்கவே முடியாது. இவரைப் போல பராக்ரமசாலி, சுய கௌரவம் உடையவன், தானம் செய்வதில் வல்லவன் ஒருவரும் இதுவரை பிறந்ததும் இல்லை, இனி பிறக்கப் போவதும் இல்லை’ என்பான். இத்தகைய பழைய நினவுகளால் உந்தப் பட்டு எப்படியும் முதல் வேலையாக தமையனை கண்டு பிடிக்க வேண்டும் என்ற தீர்மானத்தோடு விரைவாக செயல் பட்டான்.
ஹர்ஷ சரிதம் ஐந்தாம் பகுதி நிறைவடைந்தது
Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.
