- பாண பட்டரின் ஹர்ஷ சரித்திரம்- 1
- ஹர்ஷ சரித்திரம்- 2
- ஹர்ஷ சரிதம் -இரண்டாம் பாகம்
- ஹர்ஷ சரித்திரம் – 4
- தகுதியின்றியும் ஒரு சிலர் ராஜ பதவிகளுக்கு வந்து விடுகிறார்கள்
- தேவ லோகப் பெண்களும் அந்தப்புரமும்
- ஹர்ஷ சரித்திரம்
- தந்தையின் மறைவும் தமையனை தேடுதலும்
- இராஜகுமாரனின் மன விசாரங்கள்
- சிக்கிக் கொண்ட இராஜகுமாரன்
- ஹர்ஷனின் சபதம்
- அணிவகுத்த படைகள்
- துவங்கிய பயணமும் வந்த பரிசும்
- பூமியில் அரசர்களின் அனுராகம்
- சகோதரியை தேடி
- தொடரும் தேடல்
- கண்டான் சகோதரியை!
- ஹர்ஷனின் உறுதிமொழி
பகுதி -4

தகுதியின்றியும் ஒரு சிலர் ராஜ பதவிகளுக்கு வந்து விடுகிறார்கள். கனவிலும் யோக மார்கங்களை அனுசரிக்காதவர்கள், தண்ட நீதியை, அரசு அலுவல்களை அறியாதவர்கள். பெயரளவில் மகான் எனப்படுகின்றனர். பூமி நாயகர்களாக வலம் வருகிறார்கள். ஒரே ஒரு வம்சத்தில் பல அரசர்கள் தோன்றுகிறார்கள். அதிலும் ஒருவன் சிறப்பாக வருவான். வினாயகருடைய முகத்தில் தும்பிக்கை போல செய்கையாலும், தங்கள் அறிவாலும் பிரதானமாக தெரிவான்.
(अथ – இது ஒரு மங்களமான சொல். ஆரம்பிக்கும் முன் ஓம் என்று சொல்வதற்கு இணையானது என்று சம்ஸ்க்ருத இலக்கியங்களில் காணலாம். இதன் பொருள் அடுத்ததாக அல்லது அதன் பின்)
அதன் பின் , அந்த புஷ்ய பூதன் என்ற அரசனின் வம்சம் வளர்ந்தது.
ப்ரும்மாவின் நாபியில் தோன்றிய பத்மம் போன்றவள், அந்த அழகிய கமல மலர் போன்றதேயான கண்களுடன், ஸ்ரீ தேவியான லக்ஷ்மி பாற்கடலில் உதித்த சமயம் உடன் வந்த அனைத்தும் ரத்னங்களாக உருவானதால், சமுத்திரமே ரத்னாகரம் – உயர் மணிகளின் இருப்பிடம் என்று அறியலாயிற்று என்று சொல்வர். அது போல, உத்தமமான ராஜ வம்சம், தன -செல்வம், சம்பத்துக்கள் – மற்ற இயற்கை வளங்கள், இவைகளோடு தோன்றியது. எப்படி லக்ஷ்மி தேவியை முன்னிட்டுக் கொண்டு, சிறந்த அறிவும் ஆற்றலும் உடைய ப்ருஹஸ்பதி (குரு) கவி (சுக்ர) கலாப்ருத்( சந்திரன்) வந்தனரோ, அது போலவே அரசாளத் திறமையுள்ள பலரும் தோன்றினர். சாகரம் சகரன் என்ற அரசனால் வந்தது போலவும், தோல்வியறியாத ஹரி வம்சம் போலவும், ஸூரர்கள் அந்த வம்சத்தில் வந்தனர். முதன் முதலில் பகவான் படைத்ததில், முதலில் வந்தது க்ருத யுகம். அதில் சிருஷ்டியைச் செய்த பொழுது, உலகில் தர்மமே பிரதானமாக இருந்தது. தர்மத்தை வெண்ணிறமாகச் சொல்வர். இந்த அரசிலும் அந்த வெண்ணிற தர்மம் தழைத்ததால் க்ருத யுகம் போல இருந்ததாம். தங்கள் ஆற்றலால் தேசங்களை வெற்றி கொண்ட தேஜோநிதி- ஸூரியனின் கிரணங்கள் உருவெடுத்து வந்தது போல நால் திசைகளிலும் இருந்த அரசுகளையும் பாலித்தனர். சாம கானம் செய்பவர், ப்ரும்மாவின் கைகளில் இருந்து தோன்றினர் என்பது செய்தி. பூமியைத் தாங்கும் திக் கஜங்கள் போல – பூமியைத் தாங்குபவன், ப்ரும்மா போல காப்பாற்றுபவன், ( திக்குகளை பாலிப்பவன் – யானைகள் திசைகளில் இருந்து பூமியைத் தாங்குவது போல , அரசன் திசைகளில் பரவியுள்ள தன் ராஜ்யத்தைக் காக்கிறான். ) –
சமுத்திரத்தை மேகம் காக்க முயலுவது போல – மேகம் மழையாக பொழிவதால் சமுத்திரம் நிரம்புகிறது என்பதை யாரும் பெரிதாக நினைப்பதில்லை, ஏனெனில் அது இயற்கை. அது போல அரசன் தன் இயல்பாகவே தன் பிரஜைகளுக்கு அளவில்லாமல் நன்மைகள் செய்தான்.
நந்தனவனம் போல ஆங்காங்கு உப வனங்கள் வளர்த்து மக்கள் மகிழ்ச்சியாக இருக்க வழி செய்தான். (நந்தயதி- மகிழச் செய்கிறான், நந்தனவனம் – தேவ லோக உபவனத்தின் பெயர்)
தேவையறிந்து எவரானாலும் உதவி செய்தும், துயர் தீர்க்கும் நடவடிக்கைகளாலும், இவனிடம் நிச்சயமாக நாம் நன்மை பெறுவோம் என்று பிரஜைகள் நம்பி இருக்கும்படி, அந்த வம்சத்து அரசர்கள் இருந்தனர். உலகுக்கே, சரணம் அளிப்பவனாக விளங்கும் ஸ்ரீதரன், பகவான் , ஸ்ரீ ஹரியிடமே கற்றுக் கொண்டவர்கள் போல ஆட்சி செய்தனர்.
இந்த வரிசையில். ப்ரபாகர வர்தனன் என்பவன் ராஜாதி ராஜனாக இருந்தான். அவனை ப்ரதாபசீலன் என்றும் அழைத்தனர். ஹூனர்கள் என்ற வம்சத்தினருக்கு சிம்ம சொப்பனமாக இருந்தான். (ஹுனர்கள் என்ற பெண் மான்களுக்கு சிங்கமாக) சிந்து தேசத்து அரசனுக்கு ஜ்வரமாக- உடல் உபாதை போல இருந்தான். , குர்ஜர தேசத்து அரசனை நிம்மதியாக தூங்க விடாமல் செய்தான். காந்தார ராஜன் மத்த கஜம் போல இருப்பவன் அவனை அண்ட விடாமல் செய்த தீ பிழம்பு போல இருந்தான். லாட என்ற தேசம், அதன் அரசன் மிகவும் தந்திர சாலி. அவனுடைய தந்திரமும் இந்த ப்ரதாப சீலனிடம் எடுபடவில்லை. மாளவ தேசம் செல்வ செழிப்புடன் இருந்தது. அதை ஆள வந்த அடுத்த தலைமுறை அரசன் அதை பாதுகாக்க திறமையில்லாமல் இருந்தான். அவன் செல்வமும் பிரதாப சீலனின் திறமையால் இவர்களிடம் வந்து சேர்ந்தது. ( செல்வம் கொடி போல அந்த தேசத்தில் வளர்ந்து இருந்தது. கவனிக்காமல் விட்டால் கொடியை கோடாலி யால் வெட்டி கிடைத்தவர் எடுத்துச் செல்வர். அது போல அந்த தேசத்து செல்வத்துக்கு பிரதாபசீலன் கோடாலியாக இருந்தானாம்).
அரச பதவியில் அமர்ந்த உடனேயே, கணக்கு வழக்குகளைப் பார்த்தான். பயன்படாத பழைய செல்வங்களை தானமாகவோ, வேறு விதமாகவோ அகற்றி கஜானாவை சுத்தமாக்கி விட்டான். நாட்டில் பலமில்லாத ஏழைகளும் இருப்பதைப் பார்த்து வருந்தினான். போர் களத்தில் வீரத்தை காட்டுவது போலவே, வறுமையை ஒழிக்கவும், நாட்டில் அனைவரும் உடல் ஆரோக்யத்துடன் இல்லாதவரை போரில் வெற்றி என்று தானே மகிழ என்ன தகுதி எனக்கு என்று வெட்கமே அடைந்தான்.
தன் வாள் பள பளவென்று இருப்பதில் முகம் பார்ப்பது என்று ஒரு வழக்கம் வீர்களிடையே உண்டு என்பர். அதை யுத்தங்களில் கூட பயன் படுத்தத் தயங்கினான். (அந்த வாள் எப்பொழுதும் தூக்கி பிடித்த நிலையிலேயே இருக்க விரும்பினான். யுத்த களத்தில் அது கீழ் நோக்கி பாய்ந்து எதிரி வீரர்களை அடிப்பது கூட மதிப்பு குறைவு என்று நினைத்தானாம். அதாவது, தன் வாள் உயர தூக்கிய நிலையில் கையில் இருந்தாலே எதிரிகள் சரணடைந்து விடும்படி தீரனாக இருந்ததால், யுத்தமே கூட அவனுக்கு சம்மதமாக இல்லை.)
ராஜலக்ஷ்மியை கவலையின்றி தன்னிடம் நிலைத்து நிற்கச் செய்து விட்டான். அதற்கு அவன் உள்ளத்தில் இருந்த அளவில்லாத உறுதியும், எதிரிகளை எடைபோடத் தெரிந்த திறமையும், அறுவை சிகித்சை செய்யாமலே, உடலில் குத்திய முள்ளை எடுப்பது போல எதிரிகளை வசப் படுத்திக் கொண்டு விட்டான். அதனால் ராஜ்ய லக்ஷ்மியும் மகிழ்ந்தாளாம்.
ராஜ்யத்தின் பல திசைகளிலும், பாதைகள், பலவிதமான பயன் பாட்டிற்காக போடச் செய்தான். ஆங்காங்கு கிணறுகள், நிழல் தரும் மரங்கள் நட்டு வைத்தான். புல் வெளிகளும், புதர்கள் போன்ற பசுமை நிறைந்த வழித் தடங்கள். ஆங்காங்கு புற்றுகள் மலையளவு வளர்ந்து கிடந்தன. கம்பை ஊன்றிக் கொண்டு யாத்திரை செய்பவர்களும் வசதியாக செல்லும் படி இருந்தன. அவர்களுக்கும் (யாத்திரை போவது முதியவர்களாக இருக்கலாம் என்பதால்) பெரிய சமூக கூடங்கள், தங்கி இளைப்பாறவும், அங்கு பணி செய்பவர்களுக்கான நிலம் முதலியவைகளையும் அளித்து வசதி செய்திருந்தான்.
தான் போர் செய்ய விரும்பாதவன் என்பதால் கிளர்ச்சிகளில் எதிரிகள், ஈடுபடுவதைத் தடுக்க தன் ப்ரதாபத்தை வெளியில் அறியாதபடி காட்டிக் கொண்டும் இருந்தான். (தண்டனையும் கடுமையாக அளித்தான்)
அவன் ஹ்ருதயம் நெருப்பு போல தூய்மையானது, நீர் போல கருணை மிகுந்தது, கண்களின் இமைகளில் வெளிப்படுபவை கனிவே., தன் மூச்சுக் காற்றே மற்ற உயிரினங்களுக்காக , பூமியே அவன் அங்கங்களில் இருந்து தன் க்ஷமா- பொறுமை என்பதை அளித்து விட்டது போலவும், ஆகாயம் போன்ற கபடு இல்லாத பரந்த உள்ளம், – என்றிவ்வாறாக பஞ்ச பூதங்களையும் தன்னுள் கொண்டு விட்டவன் போல இருந்தான். அவன் அருகில் இருந்த சாமந்த என்ற மந்திரிகளும் அந்த:புர பெண்களும் அவனை உள்ளும் புறமும் நன்றாக அறிந்தவர்களாக இருந்தார்கள்.
அதனால் அருகில் இருந்த சிறந்த ரத்னம் போன்ற பணியாளர்கள் இவர்களிடமும் செல்வம் அரசனின் பிரதி பிம்பம் போலவே நிலைத்து நின்றது.
அவனுடைய ப்ரதாபம் என்ற அக்னியால் பூதி; புடம் போட்டவன் போல ஆனவன், ஸூரத்தனம் என்ற அக்னியால் சித்திகள், (சாதனைகளால் அடையும் பயன்கள்) வாளின் வீச்சு போல பெய்யும் மழையினால் விருத்தி: செழிப்பு, உடலில் போர் முனைகளில் பெற்ற விழுப் புண்களே, அவன் புருஷகாரம்- ஆண்மையை சொல்வதாக இருந்தன. வில்லின் நாண் செய்யும் ஒலியே, வரிவசூல்களை செய்து விட்டனவாம், (கர- கை, வரி கர க்ருஹீத- கையால் பிடிக்கப் பெற்றது மற்றொரு பொருள் வரி வசூலித்தது – நாண் செய்த ஒலியே பயமளித்து வரி வசூலை தவறாமல் பெற செய்து விட்டது),
எதிரிகளின் வெறுப்பு -வைரம்-விரோத பாவம்- என்பதை தனக்கு உபாயனம்- பரிசுப் பொருளாக நினத்தானாம். (அதன் மூலம் தன்னையே என்ன தவறு எங்கே என்று சோதித்துக் கொள்ள உதவியதாம்) வேற்றரசன் போர் புரிய வந்தால் தனக்கே அனுக்ரஹம் என மகிழ்ந்தானாம், போர் முனையில் நிற்பதே மகோத்சவத்தில் பங்கெடுப்பதாக நினைப்பானாம்., போருக்கு விடப் படும் அழைப்புகளும் வரமே என நினைப்பவனாம், அந்த யுத்தங்களில் ஆயுதங்களால் அடிபட்டு விழுபவர்களைப் பார்த்து, செல்வம் தாரையாக பொழிவது போல மகிழ்வானாம்.
அவன் ராஜ்யத்தில் நிரந்தரமாக யாக சாலைகளில் முளைப் பயறுகள் முளைத்து க்ருத யுகத்தை நினைவுறுத்தும். (எந்த மங்கள காரியம் ஆனாலும் ஆரம்பத்தில் தானியங்களை ஊறவைத்து அதற்கான சிறு மண் சட்டிகளில் அந்த வீட்டின் பெண்கள் விதைப்பர் – அதை பாலிகை தெளிப்பது என்பர்) .
கலியுகம் யாக புகையால் அருகில் வராமல் விலகி விடுமாம். அந்த யாக சாலைகளில் வாசிக்கப் படும், மற்றும் பாடப்படும் சுஸ்வரமான கீதங்களால் சுவர்கமே இறங்கி வந்து விட்டது போல இருக்குமாம். தெய்வங்கள் உறையும் கோவில்களில் உயர்ந்த கலசங்களுக்கு மேல் வெண் கொற்றக் கொடிகள் வீசி பறப்பது அவன் புகழைப் போலவே இருக்குமாம். (புகழ்-வெண்மையாக சித்தரிக்கப் படும்) புற நகரங்களில், பெரிய பெரிய சபைகள், சமூக கூடங்கள், தானம் செய்யும் இடங்கள், குடிக்கும் இடங்கள், ஹோமங்கள் செய்யும் இடங்கள், வழிப் போக்கர்கள் தங்குவதற்கான மண்டபங்கள் இவை கிராமங்களுக்கு இடையில் நிறைய இருந்தன.
மக்கள் பொன்னாலான அணிகள் நிறைய அணிந்து வளைய வருவதைக் காண மேரு மலை அங்கு வந்துவிட்டது போலவும், அந்தணர்களுக்கும், எளியவர்களுக்கும் தானமாக கொடுக்கப் படும் தனம்- அதற்காக கலசங்களில் பணம் வைத்து இருக்குமாம். அதுவே நகரில் செல்வ செழிப்பைக் கூட்டுபவை போல இருந்தன. போல அவன் அரசாட்சியின் சிறப்பைத் தெரிவிக்கின்றன.
அவன் வாழ்வில், பல பிறவிகளில் ஸ்ரீ சங்கரனுக்கே மனைவியாக இருந்து வரும் தேவி பார்வதி போலவே, லோக குரு எனும் மஹா விஷ்ணுவுக்கு என்றும் இணை பிரியாமல் இருக்கும் லக்ஷ்மி தேவி போலவும், கலாவான்- கலைகள் உடைய சந்திரனுக்கு ரோஹிணி போலவும், உலகில் அனைத்து விதமான கலை, புத்திக்கு அதிபதியான சர்வ ஜகஜ் ஜனனீ சரஸ்வதி ப்ரஜாபதிக்கு அமைந்தது போலவும், மகத்தான ராஜ குலத்தில் பிறந்த யசோவதி என்பவள் மனைவியாக அமைந்தாள். அவளை வர்ணிக்கிறார்: ஒரே வாக்கியம்- இருவிதமாக பொருள். ஒன்று யசோவதியை சம்பந்தப் படுத்தி, மற்றொன்று அதே பதம் வேறு விதமான பொருளுடன். எனவே ஒரே வாக்கியத்தில் இரு விதமான விமரிசனங்கள்.
கங்கை நதி போல இருப்பாளாம், நதிகளின் தலைவனான சமுத்திரத்திடம், மானஸரோவரத்தில் ராஜ ஹம்சத்தை அனுசரிக்கும் பெண் ஹம்சம் போல, மற்றொரு பொருள் மனமறிந்து அனுசரிப்பவளாக, –
சரணங்கள்- பாதங்கள்,சகல லோகங்களும் மதித்து வணங்கும் த்ரயீ என்ற வேதத்தின் கண்வ என்பது போன்ற சரணங்கள்-பகுதிகள்- இவை தர்மங்களைச் சொல்லும். யசோவதி விஷயத்தில், தர்மத்திற்கு வேதம் போல உலகில் தர்மத்தை அனுசரிப்பவளாக இருந்தாள்.
அருந்ததி மகா முனிவரான வசிஷ்டர் அருகிலேயே இரவும் பகலும் இருப்பது போல, ( வானத்து தாரகைகளில் இருவரும் ஒன்றாக வசிஷ்ட-அருந்ததி என்ற பெயரில் ஒன்றாக சொல்லப் படுவர்.) அதே போல அரசன் அருகில் இரவும் பகலும் இருந்தாள். வசிஷ்டர் மகா முனி, அரசன் ராஜரிஷி
நடையில் ஹம்ஸம் போல இருப்பாள். சக்ரவாக பறைவைகள் போல அன்புடன் ஒருவரையொருவர் பிரியாமல் இருப்பார்கள்.
மழை காலத்து மேகம் போல கனத்த ஸ்தனங்கள், உடலழகு.
மதுவுண்டவள் போல விலாசம். செல்வத்தை சேமித்து வைப்பதில் பொருளாதார அறிஞர் போல இருப்பாள்.
வசுதாரா- கன மழை. யாகங்களின் முடிவில் செய்யப்படும் ஹோமம். இரண்டுமே செழிப்பை, அடர்த்தியைக் குறிக்கும். இந்த இரண்டுமே அளவில்லாத நன்மைகளை அளிப்பன. அவளும் அது போல வாரி வழங்குவாள்.
கமல மலர் போல தன் பொக்கிஷத்தை பாதுகாப்பாள். கமலத்தின் மகரந்தங்கள் நிறைந்த விதைகள் நிரம்பிய பகுதியை அவை கவனமாக பாதுகாக்கும் என்பர்.
பலன்களைத் தருவதில் கொத்தாக மலர்களை சொரிவது போல இருக்குமாம்.
வணங்கத்தக்கவள், சந்த்யாவை வணங்குவது போல. (சந்த்யா, காயத்ரி சாவித்ரி, சரஸ்வதி என்று நால்வர் சந்த்யா வந்தனம் என்று மனிதர்கள் காலை,மத்யான்ன, சாயங்கால சந்த்யா- நேரங்களில் செய்யும் சமயம் வணங்கப்படுபவர்கள்- ஸுரியனுடன் சேர்த்து எண்ணப் படும் தேவிகள்).
வெப்பம் இன்றி ஒளி வீசும் சந்திரன் போன்றவள்.
கண்ணாடி போன்று ப்ரதி பாணி க்ரஹணம் – எவராக அல்லது எதுவாக இருந்தாலும் உள்ளபடி அறிந்து கொள்பவள்.
ஸாமுத்ரீ என்பது ஒரு சாஸ்திரம். ஒரு கலை. அது பல விஷயங்களைச் சொல்லும். அது போல விவரங்கள் பல அறிந்தவள்.
பரவலான அறிவும், பரமாத்ம தத்துவத்தில் நம்பிக்கையும் உள்ளவள். வேத சாஸ்திரங்களில் சொல்லப் பட்ட நற்செயல்களைச் செய்பவள். இனிமையாக பேசுபவள். சந்தோஷமாக பேசுவதைக் கேட்க அமுதமாக இருக்கும். பணியாளர்களிடம் தாராளமாக கொடுத்தும் அவர்களை வருத்தாமலும் வேலை வாங்குபவள். சகிகளிடம் பிரியமாக இருப்பாள். பெரியவர்களிடம் மரியாதையாக நடந்து கொள்வாள். பெண்மையே உருவானவள். சுத்தமான எண்ணங்கள் நடத்தைகள் என பலராலும் மதிக்கப் படுபவள். அதனால் மகரத்வஜன் என்ற மன்மதன் தன் வேலை எளிதாகி விட்டதாக மகிழ்வான். ரதிக்கு இணையான அழகி என கொண்டாடப் படுபவள். அழகு என்பதன் பொருளே அவள் என்று மன்மதன் அங்கீகரித்தான். லாவண்யம் என்பது இயல்பாக அமைவது. அனுராகம் – மற்றவர்களிடம் அன்பும் பரிவும் பிறப்பினால் வருவது. கவர்ச்சி கரமான உடல் அமைப்பு கூடுதலாகப் பெற்ற வரம். இது வரை கண்டதில்லை, இனியும் காணப் போவதில்லை என்பது போல சௌந்தர்யம். இளமையின் அழகு. வானத்திலிருந்து விழாத மழை- எப்படி அதிசயமோ அது போல அவளைக் கண்டதும் தோன்றும். (அவளை பிரமித்து நோக்கச் செய்யும்)
செல்வ செழிப்பில் திருமகளே, சரித்திரத்தில், உள் மனதில் தர்மமே குடி கொண்டிருந்ததோ, ப்ரஜாபதி படைப்புத் தொழிலை ஆரம்பித்த சமயம் சௌபாக்யம் என்பதன் பரமாணுக்களைச் சற்று அதிகமாகவே சேர்த்து இவளை படைத்து விட்டாரோ, சாந்தி- அமைதிக்கே அமைதியானவள், வினயத்திற்கே வினயமானவள், நற்குல பிறப்பு என்பதன் பொருளானவள், அடக்கம் என்பதற்கே அடக்கம் ஆனவள்,தைர்யம் என்ற குணத்திற்கே உறுதியை சொல்பவள், அதிசயம் என்ற சொல்லுக்கே அதிசயமானவள், இப்படி குணங்களின் இருப்பிடமாக இருந்த யசோவதி அரசனுக்கு உயிராக, பிரியமானவளாக, அவருக்கு அனுகூலமாக இருந்து ஆறுதல் தருபவளாக, தர்மத்திற்கும் சுகத்திற்கும் அடிப்படையாக இருந்தாள். நரகனை வென்ற பகவானின் மார்பில் திருமகள் போல அரசனின் உள்ளத்தில் நிறைந்தாள்.
பிறவியிலேயே அமைந்தது அரசனுடைய ஆதித்ய பக்தி – ஸூரியனிடம் பக்தி. தினமும் உதய காலத்தில் எழுந்து, நீராடி, வெண் பட்டு உடையும், வெண்ணிற தலைக் கவசமும் அணிந்து கிழக்கு நோக்கி முழங்கால்களில் நின்று, குங்குமத்தால் மண்டலம் அமைத்து அதில் பத்ம ராகம் நிறைத்தது போல, தன் உள்ளத்தில் நிறைவான பக்தியுடன் ஆதவனை வணங்கி செந்தாமரைகளால் அர்ச்சனை செய்வான். ஜபங்கள் செய்து வழிபடுவான். மூன்று வேளையும் ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி வணங்குவான்.
பக்தர்களை தேவர்கள் கை விடுவதில்லை. ஒரு சமயம் கோடை காலத்தில் மாளிகையின் பின் புறம் இருந்த அறையில் தூங்கினான். உடன் மனைவி யசோ தேவியும் இருந்தாள். இரவு முடியும் தறுவாய், இதோ விடிந்து விடும் எனும் இளம் காலையின் சுகமான காற்று வீசியது. தாரகைகள் மெள்ள மெள்ள சந்திரனுடன் விலகிக் கொண்டிருந்தன. தன் விரல்களால் தொட்டு குமுதினியை எழுப்பும் நிலவின் நடுவில் உள்ள முயல் குட்டி போல, குளிர் தாக்கியதால் உடலை குறுக்கியபடி படுத்து உறங்கும் பொழுது சுவாசகதியில் மதுவின் மணம் அந்தப்புரத்தில் பரவி இருக்க, விழிப்பு வந்தவுடன் கைகளை தூக்கி சோம்பல் முறிப்பவர்கள் போல திசைகளின் தேவதைகள் இரவில் கணவனுடன் இருந்த களைப்பை நீக்கும் விதமாக யசோதேவியின் மீது விசிறுவது போல இதமாக காற்றை வீச, திடுக்கிட்டு எழுந்த தேவி, ‘ஆர்ய புத்ர, காப்பாற்று காப்பாற்று’ என்று அலறினாள். பணிவிடை செய்யும் பெண்கள் என்னவோ ஏதோ என்று ஓடி வந்தனர்.
அரச மாளிகையை அனைவரையும் உலுக்கிய, இது வரை கேட்டறியாத பயத்துடன் தேவியில் குரல், ‘காப்பாற்று’ என்ற அலறல், காதுகளில் நெருப்பாக சுட, அரசன் ஓடி வந்தான். தலயனையின் அருகில் இருந்த வாளை கையில் எடுத்தபடி, உத்தரீயத்தை உதறிக்கொண்டு, கிளம்பிய வேகத்தில் கழுத்தில் இருந்த ஆபரணமும், கை கங்கணமும் தெறித்து விழுந்தன. ஒரே தாவலில் ராணியின் அறையை அடைந்தவன், .அதற்குள் மாளிகையில் பலரும் விழித்துக் கொண்டு விட்டதை அறிந்தான். இரவின் மூன்று யாமங்கள் கடந்த நிலையில், ஆழ்ந்த உறக்கத்திலிருந்து வேகமாக , புருவ நெரிப்பில் தன் கவலையை, கோபத்தை வெளியிடுபவனாக, ‘தேவி, பயப்படாதே’ என்று சொல்லியபடி வந்து அவளை சமாதானப் படுத்தி பயப்பட என்ன காரணம் என்று விசாரித்தான்..
பணிப் பெண்கள், மற்றும் காவல் காப்பவர்களும், மற்றும் பல பெண்டிரும் வந்து விட்டிருந்தனர். அவள் நடுங்கும் குரலில் சொன்னாள்: ‘ஆர்ய புத்ர! கனவு. உண்மையாக நடப்பது போலவே இருந்தது. ஸூரிய மண்டலத்திலிருந்து இறங்கி வந்த இரு குமாரர்கள், அதே போல தேஜஸ் உடையவர்கள், இளம் சூரியன் திசைகளில் பரவுவது போலவும், மின்னல் உலகில் இறங்கியது போலவும் வந்தனர். மகுடங்கள், குண்டலங்கள், அங்கதம் இந்த அணிகளுடன். கவசமும் அணிந்திருந்தனர். கைகளில் ஆயுதங்கள், உதிரம் போல சிவந்த ஆடைகள், ஈரமாக காணப்பட்டன, (இந்திர கோபம் என்ற சிறு பூச்சி ரத்த சிவப்பாக இருக்கும் அது போல) உலகில் யாவரும் வணங்கும் படியான தோற்றத்துடன், நிலவின் சுஷும்னா என்ற ஒளியுடன் கூடிய ஒரு பெண்ணும் உடன் வர என் அருகில் வந்தனர். கையில் இருந்த சஸ்திரத்தால் என் வயிற்றைக் கீறி உள்ளே நுழைய முயன்றனர். ஆர்ய புத்ர, அந்த சமயம் என் தூக்கம் கலைந்து எழுந்து விட்டேன்’ என்றாள். இன்னமும் என் இதய துடிப்பு அடங்கவில்லை என்றாள். அதே சமயம் விடியலை அறிவிக்கும் அரண்மனை சங்கம் ஒலித்தது.
ராஜ்ய லக்ஷ்மியின் அனுமோதம் போல இந்த நல்ல சகுனம் என்று அனைவரும் மகிழ்ந்தனர். துந்துபியின் நாதமும் வரப் போகும் நன்மையை பறையடிப்பது போல் மகிழ்ச்சியுடன் ஒலித்தது. வாயிலில் வழக்கமாக பேரி வாத்தியத்தை அதற்கான தண்டம் கொண்டு இசைப்பவர்கள் அன்று அதிக உத்சாகமாக இருந்தது போல அந்த தாள வாத்யத்தை இசைத்தனர். அரசனின் சொந்த உபயோகத்துக்கான குதிரையை பாதுகாக்கும் காவலன் குதிரைகளுக்கு புல்லை அள்ளிப் போடும் பொழுதே ஜய ஜய என்று பாடினான். அதுவும் தினமும் செய்வதேயானாலும் இன்று தனித்து தெரிந்தது. தெளிவான குரலில் அந்த பாடல் அதற்கான சிறப்பான (வக்ர அபவர்க) என்ற சந்தத்தில் அமைந்த பாடல்கள்:
உலகில் மரங்கள் வளைந்து கொடுக்கும் இடங்களில், பூ கர்பத்தில் நிதிகள் இருக்கும் என்பது ஒரு நம்பிக்கை. அந்த இடத்தில் தேடினால் ஆதவன் மேலெழ எழ, ஒளி பரவி அந்த இடத்தில் உயர் மணி இருப்பது பிரகாசமாவது போல, சுபத்தைச் சொல்லும் சகுனங்கள் வரப் போகும் நன்மையை தெரிவிக்கும். இந்த சுபமான செய்திகளை மனிதனுக்கு தெரிவிக்கவே, நல்ல கனவு போன்ற சில சாதனங்களை இயற்கை பயன்படுத்துகிறது.
ஸூரியன் உதிக்கும் பொழுது அருணன் திரும்பி ஸூரிய தேவனைப் பார்த்தபடி அமர்ந்து இருக்கிறான். வெப்பம் அவனை வாட்டாமல் இருக்க வீசும் காற்று குளுமையாக இருந்து அவன் மேல் நீரை தெளிப்பது போல அவனுக்கு இதமாக இருக்கிறது. விடிந்ததும் கண்ணில் படும் சில பொருட்கள் அல்லது காதில் விழும் சொற்கள் அன்றைய தினத்தின் பலா பலன்களை சொல்வதாக ஆகும். (அருணன் சூரியனை நோக்கியபடி எதிரில் அமர்ந்து இருப்பதாக பாகவதம் )
அரசன் இதைக் கேட்டு மிகவும் மகிழ்ந்தான். ராணியைப் பார்த்து ‘ தேவி! மகிழ்ச்சி அடைய வேண்டிய இந்த சமயம் ஏன் வருந்துகிறாய். உன் பெற்றோர், மற்றும் குரு ஜனங்களின் ஆசீர்வாதம். பலிக்கப் போகிறது. குல தேவதைகளிடம் நாம் வேண்டிக் கொண்டது வீண் போகவில்லை. பகவான் ஆதித்தன் உன்னிடம் பிரசன்னமாக இருக்கிறான். சீக்கிரமே மூன்று அத்புதமான சந்தானங்களை உனக்கு வழங்க நிச்சயித்து விட்டான் போலும். குணசாலிகளான மகன் கள், மகள் என்று மகிழ்ச்சியாக இருப்பாய். மனதை அலட்டிக் கொள்ளாதே’ என்றான்.
அதன் பின் அரசன் தன் வேலைகளை கவனிக்கப் போய் விட்டான். யசோவதியும் சமாதானம் அடைந்தாள்.
உரிய காலத்தில் யசோவதிக்கு முதல் மகன் பிறந்தான், அவனை ராஜ்ய வர்தனன் என பெயரிட்டனர். அவன்
கர்பத்தில் இருந்த சமயம் ராணி உடல் வெளுத்ததே அவன் பெறப் போகும் புகழை காட்டியது என்று மகிழ்ந்தனர். கருவுற்றிருக்கும் பெண்கள் படும் அவஸ்தைகள் அவளையும் வாட்டின. உணவு வேண்டியிருக்கவில்லை. வயிற்றில் பிள்ளையையும், உள்ளத்தில் கணவனது அன்பையும் பரிவையும் தாங்கியபடி உலவினாள். அவள் உடல் அழகும் அதிகரித்து, மனதின் திருப்தியையும், நிறைவையும் காட்டுவது போல இருந்தது. சகிகளும் சபத்னிகளும் உபசாரங்கள் செய்தனர். ராஜ்யவர்தனன் பிறந்த சமயம், ராஜ்யத்தில் பிரஜைகள் உத்சவமாக கொண்டாடினர். கீதங்கள், வாத்யங்கள், நாட்டியம் என்று மகிழ்ச்சியை தெரிவித்தனர். மாதம் முழுவதும், கம்பீரமான பேரி நாதமும், ஓங்கி ஒலித்த படஹ என்ற வாத்யமும், சங்கங்களின் முழக்கமும் சேர்ந்து மகோத்சவமாக ஆயிற்று.
( கதம்ப மரம் – BURFLOWER tree) பசுமையான ஆசியாவின் தென்கிழக்கு நாடுகளில் பிரசித்தமான மருத்துவ குணம் உள்ள மரம். மரத்தைக் கொண்டு வீட்டு உபயோகமான மேசை, நாற்காலிகள், கூழைக் கொண்டு காகிதம், பெட்டிகள் மற்றும் மரச் சாமான்கள் செய்வர். 45 மீட்டர் உயரம் வளரும் மரம். இதன் பூக்கள் வாசனை மிகுந்தவை. மற்றும் பலவகையிலும் பயன்படும் மரம். நம் நாட்டில் ஆயுர்வேத மருந்துகளுக்கு பயன்படுத்துவர். அனைத்து பாகங்களும் மருத்துவ குணங்கள் உள்ளவை. மரப் பட்டைகளை யாகம் போன்ற தெய்வீக செயல்களில் பயன்படுத்துவர். பூக்கள், பழங்கள் அனைத்துமே பயனுள்ளவை. பவித்ரமாக எண்ணப்படுவது)
மழைக் காலம் , மேகங்கள் இருண்டு கதம்ப மரங்களில் கொடிகள் படர்ந்தன, அதைச் சுற்றி கொடிகள் போல இலைகளும் பூக்களும் படர்ந்தன. பசுமையான புல், புதர்கள் எங்கும் நிறைந்தன. சாதக பறவைகள் மனம் நிறைந்து கூவின. தாமரை மலர்கள் சோபையின்றி இருந்தன. ஹம்ஸங்களும் வழக்கமான உல்லாசம் இன்றி தெரிந்தன. தேவகியின் வயிற்றில் ஸ்ரீ க்ருஷ்ணன் தோன்றியது போல ராணி யசோவதியும் இரண்டாம் முறையாக கருத் தரிக்கவும், மனதிலும், உடலிலும் மகிழ்ச்சி நிறைந்தவளாக ஆனாள். சகல மங்கள சின்னங்களும் தெரிய அவள் கர்பத்தில் சிசு வளர வளர, அவள் உடலில் மாறுதல்களும் வந்தன. பணிப் பெண்களும் மற்றவர்களும் தேவையானதை தாங்களாகவே பார்த்து செய்தனர். மசக்கை என்ற கர்பிணி பெண்களுக்குத் தோன்றும் சில ஆசைகளைச் சொல்வர். அவளுக்கு நான்கு சமுத்திரங்களும் கூடும் இடத்தில் நீராட ஆசை வந்தது. வேளா வனத்தில் கொடி வீடுகளின் இடையில் நடக்க விரும்பினாள். சுற்றிலும் முகம் பார்க்கும் கண்ணாடிகள் இருந்தும் பட்டை தீட்டிய வாளில் முகம் பார்க்க விரும்பினாள். வீணைகள் இருக்க, தனுஷ்- வில்லின் நாணின் ஒலி அதிக பிரியமாக இருந்தது. வளர்ப்பு சிங்கங்களை விரும்பி நோக்கினாள். யாரையும் வணங்க விரும்பாதது போல தூக்கி நின்ற தலையை சிரமப்பட்டு திருப்பி குரு ஜனங்களை வணங்கினாள். சகிகள் அவள் விருப்பத்தையறிந்து குமுத மலர்களாலும், பலாச பூக்களாலும் மாளிகையை அலங்கரித்தனர். கூட்டமாக இருந்த காவல் பணியில் இருந்தவர்கள் ஒரு நொடி கூட அவளைத் தனியே விட மனமின்றி சுற்றி வந்தனர். மருத்துவர்கள் எந்த நேரமும் தயாராக இருந்தனர். திருமகளுடன் வந்தவை என்பதால் மகா சமுத்திரத்தின் பெருமையான ரத்தினங்களை பயன் படுத்தி வித விதமான நகைகள் கழுத்தில் அணிவதில் ஆசை கொண்டாள்.
அதன் பின் ஜ்யேஷ்டா ஆடி மாத க்ருத்திகா நக்ஷத்திரத்தில், பஹுல பக்ஷ ( தேய் பிறை) துவாதசி திதி முடியவும், ப்ரதோஷம் ஆரம்பித்து விட்ட நிலையில், இரவின் ஆரம்பத்தில், திடுமென அந்த:புரத்தில் கோலாஹலமான சப்தம் எழுந்தது. பரபரப்புடன் யசோவதியின் நெருங்கிய தாத்ரி, சுபாத்ரீ என்ற பெயருடையவள், அரசனிடம் வந்து வணங்கி, ‘தேவ! அதிர்ஷ்ட வசமாக, உங்கள் இளைய மகன் பிறந்து நலமாக இருக்கிறான்’ என்றாள். செய்தி சொன்ன அவளுக்கு அரசன் பலவிதமாக பரிசுப் பொருட்கள் கொடுத்தான். (பூர்ண பாத்ரம்- நிறைவான பரிசு)
அந்த சமயம், அரசனுக்கு நெருங்கிய பந்து அல்லது நண்பன், தாரகன் என்ற பெயருடைய ஜோதிடர் அரசனைக் காண வந்தார். வருவதை, நடக்கப் போவதை தெரிவிப்பவர். கணிதத்தில் நிபுணர். தொலை நோக்கு உடையவர். பூஜைகள், பாராயணங்கள் செய்தவர். குணவான். ஹிதமாக சொல்பவர். மூன்று காலங்களையும் அறிந்தவராக இருந்த பிரசித்தமான கணித ஞானி. அரசனிடம் வந்து தானகவே சொல்லலானார். ‘தேவ! கேளுங்கள். இது போன்ற தோஷங்கள் அற்ற, வானத்தில் கிரகங்கள் உச்சஸ்தானத்தில் நிற்கும் சமயம், வ்யதிபாதம் – வானத்தில் சந்திரனும் ஸூரியனும் ஆறு ராசிகளில் ஒரே மார்கத்தில் காணப் படுவது வ்யதிபாதம் எனப்படும்- போன்ற அனைத்து இடையூறுகளும் அற்ற, ஒரு நாளில் பிறந்தவர் ஆதி அரசனான – மனித குலத்துக்கே முதல் அரசன் எனப் பெயர் பெற்ற மாந்தாதா ஒருவரே என்று இது வரை சொல்லப் பட்டு வந்திருக்கிறார். இந்த சிசுவின் ஜனனம் வரை, இது போன்ற லக்னமும், கிரகங்களின் நிலையும் மிக உயர்வாக உள்ள இது போன்ற தினத்தில் எவரும் பிறக்கவில்லை. இது போன்ற சுபமான கோள்கள் ஆசிர்வதிக்க சக்ரவர்த்தியாக வருபவர் தான் பிறப்பர். (சக்ரவர்த்திகள் என்பவர்கள், பரதன்,கார்த்தவீர்யார்ஜுன், மாந்தாத்தா, பகீரதன், யுதிஷ்டிரன், சகரன் நகுஷன் வரை ஏழு சக்ரவர்த்திகள்) இந்த ஏழு சக்ரவர்த்திகளையும் பின் தள்ளி முதல்வனாக எண்ணப்படக்கூடிய உயர்ந்த அடையாளங்களுடன் பிறந்திருக்கிறான் உங்கள் மகன். ஏழு கடல்களையும் , ஏழு வித யாகங்களையும், நடத்திக் கொண்டிருக்கும் சப்தசப்ததிதமன் எனும் பகவான் ஸூரிய தேவனே உன் மகனாக வந்துள்ளான்’ என்றார்.
அந்த சமயம் யாரும் வாசிக்காமல் சங்கங்கள் தாரஸ்தாயியில் ஒலித்தன. (சங்கம் அல்லது சங்கு வாசிக்கப் படுவதில்லை. வாயினால் காற்றை நிரப்பினாலேயே நாதம் வரும் என்பது செய்தி. அனாத்மாதா – மனிதனின் அவயவங்களால் இசைக்கப் படுவதில்லை என்றே இதன் பெயர். ) இசைக்காமலே, சமுத்திரத்தின் அடியில் நீரின் சலனம் மூலம் த்வனி- நாதம் வருவது. அபிஷேக சமயத்தில் வரும் துந்துபி நாமும் இணைந்து கேட்டது. எவரும் அருகில் இல்லாத சமயம் தானாக மங்கள வாத்யங்கள் ஒலி எழுப்பியது அதிசயமாக இருந்தது. சர்வ லோகத்திற்கும் அபயம் அளிப்பது போன்று படஹ வாத்யம் திசைகளில் பரவின. குதிரைகள் தங்கள் அடர்ந்த பிடரி மயிரை அசைத்து, வாய் நிறைய புல்லை கவ்விக் கொண்டு, மகிழ்ச்சியுடன் கனைத்தன. யானைகள் தங்கள் பங்குக்கு, தங்கள் தும்பிக்கைகளை ஆட்டி நடனம் செய்தன போல இருந்த இடத்தில் உடலை அசைத்தன. சக்கிரத்தை ஆயுதமாக கொண்ட பகவானின் அருகில் இருந்து தேவியே வந்துஆசிர்வதிப்பது போல சுகமான காற்று வீசியது.
கோவில்களில் யாக குணடங்களில் வளர்க்கப் பட்ட ஹோமத் தீயின் ஜ்வாலைகள் ப்ரதக்ஷிணமாக வளர்ந்தன. அப்படி இருப்பதை கல்யாண- மங்களங்கள் வருவதை அறிவிப்பதாக வர்ணிக்கப் படும். பூமியின் அடியில் புதைந்து கிடக்கும் பொன் முதலிய தாதுக்கள், ஒரு சங்கிலியால் கட்டப் பட்டது போல ஒரு நியதியோடு பரவி கிடக்குமாம், கலசங்கள் நிரம்பியது போல பலவித நிதிகள்- பூமியில் கிடைப்பவை நிரம்பியதாம்.
எங்கும் கல கல என்ற மகிழ்ச்சியை தெரிவிக்கும் ஒலி, திசைகளில் எதிரொலித்து, மங்கள வாத்யங்களின் ஒலியைக் கூட மட்டுப் படுத்தியதாம். ஊர் ஜனங்கள் வாழ்த்த வந்தனர். அந்தணர்கள், வெண் பட்டு அணிந்து கிருத யுகத்து ப்ரஜா பதிகள் போல வந்தனர். நீர் நிறைத்த சாந்தி கலசம், பழங்களும், மற்றும் சில மங்கள பொருட்களுடன் தர்ம தேவதையே போன்று வந்தனர். பல நாட்களுக்குப் பின் குல மூத்தோர்கள், உற்றார் உறவினர்கள், காண வந்தனர். நீண்டு வளர்ந்த தாடிகளுடன் சிறைகளில் பல நாட்களாக இருந்தவர்கள் விடுவிக்கப் பட்டனர். அவர்கள் பர பரப்புடன் வெளியேறியதைப் பார்க்க கலி காலமே விலகி ஓடுவது போல இருந்தனவாம். ஒரு சிலர் அதிக மகிழ்ச்சியுடன் கடைகளில் பொருட்களை இலவசமாக பெற்றுச் சென்றனர். அந்த கடைகளின் உரிமையாளர்களும் அவர்கள் விருப்பத்தை அனுமதித்து கடைகளின் பொருட்கள் தீரும் வரை உபசரித்தனர். ராஜ மாளிகைகளில் என்றும் இல்லாதபடி வயது முதிர்ந்த பல பழைய பெண் பணியாளர்கள் உரிமையுடன் தங்கள் குழந்தைகளுடன் வந்து நிறைந்தனர். குழந்தைகள் விரும்பியபடி ஓடியும், படிகளில் ஏறி இறங்கியும் மகிழ்ந்தபடி இருந்தனர்.
கடை வீதிகள் அலங்கரிக்கப் பட்டு கோலாஹலமாக ஆயிற்று. வயதான தாத்ரிகள் தங்கள் தொழிலில் பல சிசுக்களைக் கண்டவர்கள் (பிரசவம் பார்த்தல், குழந்தை வளர்ப்பில் உதவுவது போன்ற செயல்களைச் செய்பவர்கள்) பலர் முதியவர்கள், சிலர் வயதான காரணத்தால் உடல் உபாதைகளை அடைந்தவர்கள் என்று இருந்தாலும் தாங்களே அந்த சமயம் பிள்ளைகளைப் பெற்றவர்கள் போல தாயன்புடன் வந்து வாழ்த்தினர்.
நகரத்துள் வழக்கமான காவலர்கள் அதிகாரிகளின் கெடுபிடி இல்லாமல் மக்கள் வளைய வந்தனர். எங்கும் தடியோ, தடுப்புகளோ, சீருடை அணிந்தவர்களின் அதிகாரமோ இல்லாமல் அரண்மனைக்குள்ளும் வெளியிலுமாக போய் வந்த படி இருந்தனர். பாலர்கள் மட்டுமல்ல, யுவ யுவதிகள், முதியவர்கள், அனைவரும் ஒரே விதமாக அரண்மனைக்குள் வரவேற்பையும், உபசரிப்பையும் பெற்றனர். இளம் பெண்களும் எந்த வித வேற்றுமையும் இன்றி, உயர் குலத்தோரும், பணிப் பெண்களும் தோளோடு தோளாக நின்று நாட்டியம் ஆடியும், பாடியும் ராஜ குமாரன் பிறந்த உத்சவ தினமாக கொண்டாடினர்.
(அடுத்த இதழில் ஹர்ஷ சரிதம் என்ற இந்த நூலின் நான்காவது பகுதி நிறைவேறும்)
Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.
