ஹர்ஷ சரித்திரம் – 4

மறு நாள் விடியலில் எழுந்து, ஸ்னானம் செய்து, நல்லாடைகள் அணிந்து கொண்டு, அக்ஷ மாலை, யாத்திரை கிளம்பும் முன் சொல்ல வேண்டிய மந்திர ஜபங்கள், பல முறை சொல்லி, தேவ தேவன் விரூபாக்ஷனை வணங்கி, விஸ்தாரமாக பூஜைகள், பாலால் அபிஷேகம் செய்வித்து, மணம் மிகுந்த மலர்களால் அர்ச்சனை செய்து, தூப,தீப, கந்தங்கள் என்ற பூஜா முறைகளைக் குறைவறச் செய்து, சத்ர சாமர (விசிறி கொண்டு வீசுதல்) என்ற உபசாரங்கள், என்பவைகளையும் (16 உபசாரங்கள் சொல்வர்)  பக்தியுடன் நமஸ்கரித்த பின், சகோதரி மஹாஸ்வேதா ஔஷதிகளுடன், மந்திர காப்பும் கட்டி வாழ்த்த, உற்றார் உறவினர்,  முதியவர்கள் ஆசிர்வதித்தும், ஒத்த வயதினர் மார்போடு அணைத்தும், மற்றவர்கள் அனைவரும் உள்ளன்புடன் வாழ்த்தியும் வழி அனுப்ப, நல்ல நேரம் சகுனங்கள் பார்த்து, அன்றைய நக்ஷத்திரம், தோஹதம் என்ற விஷயங்களையும் தெரிந்தவர்கள் பார்த்துச் சொல்ல, சோபனமான முஹூர்த்த நேரத்தில், மஞ்சள், அக்ஷதைகளுடன் ஆரத்தி எடுத்தபின், குரல் தழ தழக்க அனைவரிடம் வணங்கி விடை பெற்றுக்  கொண்டு, இளம் மாவிலையை வாயில் போட்டு மென்ற படி, பூர்ண கலசம் முன் செல்ல, குல தேவதைகளை நினைத்த படி,  கிளம்பும் நற் சகுனமாக வீட்டில் உள்ள மற்றவர்களே எதிரில் தென்பட நல்ல பொருட்களான பூக்கள், பழங்கள் அடங்கிய தட்டுகளுடன் முன்னால் வர,  வலது காலை முன் வைத்து தன் பிரயாணத்தை ஆரம்பித்தான்.

முதல் நாள்,  வழி நடையில் தண்ணீரே இல்லாமல் வெய்யிலில் வாடி , இலைகள் கூட இன்றி இருந்த மரங்கள், இருந்த இடத்தில் துளிர் போல ஒரு காத்யாயணி பிரதிமை. அதைச் சுற்றிய கொடி போன்று நீண்ட நாக்குகள் தொங்க ஓடி வந்த பல நாய்கள், கோலாங்கூலங்கள் -கரு நிற வானரங்கள்,   தேன் வண்டுகள், உண்ணக் கூடிய தண்ணீர் விட்டான் என்ற கிழங்குகள் ஏராளமாக இருந்தன. அதை அந்த மிருகங்கள் ஆவலுடன் நக்கி உண்டன.  மெள்ள மெள்ள அந்த சண்டிகா வனத்தைக் கடந்து அருகில் ஒரு கிராமத்தை அடைந்தான்.  மல்லகூடம் என்ற அந்த கிராமத்தில் ஒரு பழைய நண்பன் ஜகத்பதி என்பவன் இருந்தான்.  அவனும் மகிழ்ந்து வரவேற்று உபசரிக்கவும் அன்று இரவு அங்கு சென்றது.  மறுநாள் எழுந்து பாகீரதி நதியைக் கடந்து யஷ்டி க்ரஹகம் என்ற மற்றொரு  சிறிய வன கிராமம், அதில் அடுத்த இரவு இருந்தான். அதற்கும் அடுத்த நாள், அரண்மனைக்கு  அருகில் ஒரு இடம் வந்து சேர்ந்து விட்டான்.  ஊரே அழகாக இருந்தது,  ஊருக்குள் இருந்த மாளிகைகளைப் பார்த்தபடி மெள்ள சாவகாசமாக நடந்து, பல டிண்டிம – தாள வாத்யங்கள் வைக்கப் பட்டிருந்த அரச மாளிகை வாசலை வந்தடைந்தான்.  யானைகள் அந்த இடத்தையே கருமையாக்கி விட்டன போல நிறைய இருந்தன. பலவிதமான வசிக்கும் இடங்கள், வீடுகள், இவைகளைக் கடக்கும் பொழுது பலவித மிருகங்கள், படை வீரர்கள் அணிவகுத்து நின்ற இடங்கள், இவைகளைப் பார்த்துக் கொண்டே,  ஆயுத சாலை எதிர்ப்பட, அருகில் சென்று  நின்று ஆயுதங்களை பார்வையிட்டான்.  அடுத்து ஒரு நீர் நிலை ஹம்சங்கள்  உல்லாசமாக வளைய வந்தன.  அடுத்து ஒரு வாழைத் தோட்டம்.  அதற்கப்பாலும் மரங்கள் தெரிந்தன.  அங்கு போகாமல் திரும்பி ராஜ பவன வாசலுக்கே வந்தான்.   அரசனின் தரிசனத்திற்காக பலர் காத்திருந்தார்கள்.  காவல் வீரர்களிடம் சிலர் விசாரிப்பதும், ‘பத்ர! இன்று மதிய உணவிற்குப் பின் ஸ்வாமியைக் காணலாம்’ என்றும் சொல்லிக் கொண்டிருந்தனர்.  மாணவர்கள், யதிகள், ஒவ்வொருவரும் ஏதோ தேவையை அரசனிடம் வேண்டிப் பெற வந்தனர் போலும்.  பல நூறு மகா பாரதம் போல சொல்லித் தீராத செல்வ செழிப்பு. மூவுலகம் தான் தெரியும் இது நாலாவது போலும். பல ராஜ லக்ஷ்மிக்கள் அனுக்ரஹித்து பெற்றது போன்ற அரண்மனையை ரசித்து பார்த்தான். அந்த ஜன சமூகத்தைக் கண்டு மகிழ்ச்சியும், வியப்புமாக ரசித்தான்.   இந்த அளவு ரத,கஜ துரக பதாதிகள் என்று வர்ணிக்கப்படும் படை வீரர்களும்,, மற்ற ஜனங்களும், நிரம்பி வழிவது போன்ற பிராகாரங்களுடன் இருப்பதை எதிர் பாராததால், வியப்புடன் பார்த்து நின்ற பின், கிடக்கட்டும் நான் உள்ளே செல்கிறேன் என்று நினைத்த படி உள் புறம் இருந்த கதவு வழியே பிரவேசித்தான்.

Nandi Bull by Vivek Kumavat

சற்று நேரம் நடந்த பின், ஒரு அரச சேவகன் வழி காட்டி அழைத்துச் சென்றான். அவன் ஆடையே சுத்தமாக, அழகிய,  கர்ணிகார (தாமரை போன்ற வடிவத்தில் பல வண்ணங்களில் காணப்படும்)   பூ போன்ற தூய வெண்ணிற இடைக் கச்சையும், அதில் பொன் வண்ணத்தில் மாணிக்கம் பதித்து அடையாளமிட்ட  பட்டைகளும்,  உயரமும் அதற்கேற்ற உடல் பருமனும், விசாலமான மார்பு பிரதேசங்களும் பயிற்சி பெற்ற  முக்கியமான அதிகாரி போலும் என்று நினைத்தபடி உடன் நடந்து,  இமய மலை போல் உயர்ந்திருந்த நடுக் கூடத்தை அடைந்தனர். மேல் விதானமும் வெண் நிறத்தில் மலையின் பனி மூடிய சிகரத்தையே நினைவூட்டியது.   வியப்பில், சந்திர வம்சமா, ஸூரிய வம்சமா இந்த அரசன் என்று எண்ண வைத்தது. அவர்களே கூட இந்த அளவு செல்வந்தர்களாக இருந்தார்களா என்று கேட்பது போல தானே கற்பனை செய்து கொண்டு, அவர்களை பார்த்ததில்லையே என்றும் மனதினுள் சொல்லிக் கொண்டான். அந்த சமயம், மேல் தளத்தில், 

மணி குண்டலங்கள், பெரிய முகத்தின் இருபுறமும் வேணியாக இருந்த கேசங்கள் ஓரங்களில் முகத்தை மறைக்க,  அதிகாரி என்பதால் வரும் கௌரவமான பார்வையும்,  தலையின்  தலைப்பாகையும், இடது கை பக்கம் உறையிலிட்ட வாளும், மற்ற கையில் வேலைப்பாடுகள் நிறைந்த  பொன்னாலான செங்கோல், இவற்றுடன் தென்பட்ட ஒருவன், வெகு தூரத்திலிருந்தே பார்த்து அடையாளம் தெரிந்து கொண்டவன் போன்ற மகிழ்ச்சி தெரிய,  மிடுக்காக நடந்தவன் அருகே வர வர நிதானமாக, மரியாதையுடன் வந்து தன்னை அறிமுப் படுத்திக் கொண்டான்.  தான்  அரசனின்  துவார பாலகன் , பாரியாத்ரன் என்ற பெயருடையவன்,  என்று  தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டான். அவனை ஏற இறங்கப் பார்த்து, அரசனே  என்று சந்தேகப் பட்ட தன்னையே நினைத்து வெட்கப் பட்டான். மிகுந்த மரியாதையுடன், ‘வாருங்கள் என்று அழைத்து, வினயத்துடன், அரசர் உள்ளே இருக்கிறார், அங்கு போகலாம்’  எனவும் பாணன்’ தன்யோஸ்மி- மிக்க நன்று,நான் கௌரவிக்கப் பட்டேன்,  மதிப்புக்குரிய அரசன் என்னை வரவேற்கிறார் என்பதே  பெரிய கௌரவம்’ என்று சொல்லியபடி அவருடன் சென்று உள் அறையில் பிரவேசித்தான், 

பல தேசங்களிலிருந்து வரவழைக்கப்பட்ட குதிரைகள், பல வர்ணங்களிலும், உருவங்களிலும் மிடுக்காக நின்றிருந்தன. (பல விதமான குதிரைகளின் வர்ணனைகள்) அதன் பின் யானைகள், பல விதமான பெரிய யானைகள். இங்கு அரசர் வந்து என்ன செய்வார்? என்று அருகில் இருந்த சேவகனை கேட்டான். அவன் சொன்னான்’ இது தேவனின் பட்டத்து யானை. அவருக்கு மிகவும் பிடித்தமானது. இதன் பெயர் யதார்த நாமா. அதன் தங்குமிடமும் விசாலமானது. பத்ர, உள்ளே வந்து  பார்க்கலாமா?  ஆசை மேலிடுகிறது ‘ எனவும், ‘அதில் என்ன கஷ்டம். வாருங்கள், வாரணேந்திரன், யானை அரசன் இவன் ‘ என்று சொல்லி அழைத்துச் சென்றான். அரசனுக்கு மிகப் பிரியமானது என்றான்.  தள்ளி நின்றே காள மேகம் – கரு மேகம் அகாலத்தில் தோன்றியது போல, கம்பீரமாக, மத ஜலம் பெருக நின்ற மதம் கொண்ட யானை.  நல்ல ஜாதி யானை. தர்ப ஜாதம் என்று சொன்னார்கள்.  அதன் பிளிறலே கர்ஜனை போல இருந்தது.  யானைகளின் காதுகளை சிறப்பாக வர்ணித்து அதன் பாகன் அதன் ஸ்தூலமான நீண்ட தந்தங்களை பால் போன்று வெண்மையானது என்று சுட்டிக் காட்டினான். (பல விதமாக யானையின் அங்க வர்ணனை, குண வர்ணனைகள்)

வளர்ப்பு மிருகங்கள், பறவைகள் என்று ப்ரகாரங்கள் தாண்டி, நடக்கும் பொழுது, ‘ஆச்சர்யம். இந்த அளவு படைகள், அதற்கான சாதனங்கள், இவைகளை சேகரித்ததே மிகப் பெரிய சாதனையே ‘ என்று மனதில் வியந்தான். பல விதமான பறவைகளின் கூச்சல்கள் இரைச்சலாக இருந்தாலும் கோலாஹலமாக  மகிழ்ச்சியே தோன்றியது.

சதா சங்கங்கள் முழங்கின.  முழக்கமாக இல்லாமல் மந்தர என்ற கீழ் ஸ்தாயியில், ,தாள வாத்யங்கள் துந்துபிகள் வாசிக்கப் பட்டுக் கொண்டிருந்தன. ஐந்தாவது அங்கணத்தில் பிரவேசிக்கப் போகிறோம் என்பதைக் குறிக்கும் சங்கேதங்களோ-அறிவிப்புகளோ என்று தோன்றியது. மங்களாரம்பம் அரசனைக் காண நெருங்கி விட்டோம் என்பதைக் குறிக்க.  சித்திரங்கள் நிரம்பிய திரைச் சீலைகள் காற்றில் ஆடிக் கொண்டிருந்தன.  ஆங்காங்கு உள்ள சுவர்களில் பட்டும் நகர்ந்தும் கைகளை அசைத்து வா வா என்று அழைப்பது போலவும்,  திக்கஜங்கள் தும்பிக்கையையும், காதுகளையும் ஆட்டுவது போலவும் இருந்தன.  ப்ரும்மஸ்தம்பம் போன்ற படிகள் மேல் தளம் வரை, மற்றும் அதன் நீண்ட நடைப் பாதைகள்.   பல இடங்களில் தாம்பூலத்தை வைத்துக் கொண்டு சிலர் நின்றிருந்தனர்.  அலையடித்துக் கொண்டிருக்கும் சரோவரம்- பெரிய குளம், போல வெளியில் இருந்த கோடை வெய்யிலின் தாக்கத்திலிருந்து விடுபட, குளுமையான காற்று வீசுவது போல ஆனந்தமாக இருந்தது.  சிறு பூச்சிகள் உள்ளே நுழையாமலிருக்க அந்த இடத்தில்  வலைகள் போடப் பட்டிருந்தன.  

மனதுள் இவைகளுக்கு இந்த அரசன் எந்த அளவு செல்வமும், சமயமும் செல்வழித்திருப்பான் என்று எண்ணிக் கொண்டு நின்ற சமயம் அருகில் வந்த அந்த துவார பாலகன், ‘ஐயா!  வாருங்கள், இவைகளைப் பின்னால் மறுபடியும் பார்த்துக் கொள்ளலாம் என்று வினயமாக அழைத்தான்.   அவனுடன் அவன் காட்டிய வழியில் அழகிய பாதையில் பல அரசர்கள் காத்திருந்த மூன்று அறைகளைத் தாண்டி, நான்காவது உணவு அறை,  அதன் முன் நின்று கொண்டிருந்த, சற்றுத் தொலைவிலிருந்தே தென்பட்ட  நெடுக உயர்ந்த உருவம், கர்ணிகார பூ போல  வெண்மையான,  கிரமமாக உடற் பயிற்சிகள் செய்து  வலிமை கொண்ட புஜங்கள் தெரிய, ஆயுதங்கள் தரித்த பல சிப்பந்திகள், தலையில்  பல வண்ணங்களில் தலைபாகைகளுடன்  சுற்றி வர,  வரிசையாக அவர்கள் நின்று இருப்பதைப் பார்க்க பொன்னால் ஆன ஸ்தம்பங்கள் வரிசையாக நட்டு வைத்தது போல இருக்க, அமர்ந்தும், நின்றும் சில முக்யமான அரச பதவிகளில் இருப்பவர்கள் தென் பட்டனர். 

ஹரி சந்தனத்தின் மணம் தூக்கியடித்தது. தரை முழுவதும் பனித்துளிகள் தெளித்து விட்டது போல குளுமையாக இருந்தன.  பளீரென்று தெரிந்த யானைகளின் தந்தங்களின் நிறத்தில் தெரிந்த பாதங்கள்.  முத்துக்களை அடுக்கி அலங்கரித்திருந்த  ஆசனத்தில்  சாய்ந்து அமர்ந்திருந்த, உடலின் பாரம் தெரிய, மணிகளால் ஆன ஒரு ஆபரணம், குளத்தில் மெல்லிய தண்டில் மலர்ந்து நிற்கும் மலர் மனதைக் கவருவது போல,  தேஜஸ்- பிரகாசம் அல்லது ஒளி, என்பதன் பரமாணுக்களால்  உருவாக்கியது போன்ற கண்டவுடனே கவரும் பிரகாசமான உருவம்,  இறங்கி விடாதே என்று சொல்லி தன் பால் இழுப்பது போன்ற சிம்ஹாஸனம், அவயவங்கள் அதனதன் உயரிய லக்ஷணம் கொண்ட, இன்னமும் (மணமானவன் என்றாலும் தன் மகிஷிகளிடம் மட்டுமே  கணவனாக இருப்பவனும் ப்ரும்ம சாரியே என்று ஒரு வழக்கு.  அதனால் பிரும்மசாரி என்று வர்ணிக்கிறார்) . ராஜ்ய லக்ஷ்மீ யின் ஆலிங்கணத்தில் கட்டுண்டவன் போல, ராஜ ரிஷி போலும், அசி தாரா தாரண என்ற விரதம் மேற்கொண்ட ராஜ ரிஷி,  தர்மத்தின் வழியில் திடமாக காலூன்றி நின்றவன் – ராஜ மார்கத்தின்- ராஜ்ய பாலனத்தில்-  சிக்கலாக இருந்தாலும் கால் தடுக்கி விடாமல், பயத்துடன் நடப்பது போல தர்மத்தைக் காப்பவன்-  பல அரசர்கள் கை பிடிக்க முடியாமல், வேறு வழி இன்றி பயத்துடன் கை விட்ட  சத்யம் என்ற தர்மம், அதை மிக நியமத்துடன் பாலிப்பவன்,  அருகில் இருந்த பல அழகிய பணிப் பெண்கள், சற்று அயர்ந்தால் இடறி விடும் அளவுக்கு சபலத்தை அளிக்கக் கூடியவர்களையும், பத்து திசைகளிலும் நகர்ந்தே இருக்கும் படி செய்து விட்டவன் (பெண்களிடம் மரியாதையாக இருப்பவன் என்ற பொருள்.)  அவர்களும் அதே அளவு மதிப்புடன் வணங்கியபடி இருந்தனர்,  தீர்கமான பார்வை, லோக பாலர்கள் மூவுலகையும் கண் காணிப்பது போல தொலை நோக்கு உள்ளவன், ஆசனத்தில் வைத்த கை அசைவினால் உத்தரவுகளைப் பிறப்பிப்பவன்,  அந்த அனுமதியின்றி பகலவன் கூட அந்த அறைக்குள் நுழைய முடியாது என்று கவியின் வர்ணனை.  அறையில் அலங்காரங்கள் பல மணிகளால் செய்யப் பட்டிருந்தன.  அந்தந்த நேரங்களை அறிவிப்பது போல அதன் பிரதிபலிப்பு இருந்தனவாம்?   சௌர்யம்- வெளிப்படையாக தெரியும் வீரம்.  பணிய விரும்பாமல் உள்ளே வந்தவர்களை தாங்களாகவே பணியும் படி செய்யும் தோற்றம்.

கடல் அலைகளின் நிலவொளியில் வீசி சிதறும் நுரை போன்ற பரி சுத்தமான லாவண்யம்.  மற்ற அரசர்கள் தங்கள் ஆபரணங்களில் இவருடைய உருவ  சின்னத்தை அணிந்து கொள்ள போட்டி போடுவார்களாம்.  அதனால் கர்வம் வந்து விடக் கூடாது என்று ராஜ்ய லக்ஷ்மி தன் பெருமூச்சினால் அதை அகற்றிக் கொண்டே இருக்கிறாளாம். நால் திசைகளிலும் சமுத்திரம் வரை பரவியிருந்த ராஜ்யத்தைக் கண்டு தானாக வந்து சேர்ந்து கொண்ட செல்வத்தின் அதிபதி, அந்த ஸ்ரியம்- செல்வம்,  தான் பரிபாலிக்கும் நாட்டை செழிக்க வைக்கவே என்பதை உணர்ந்தவன். 

ஆபரணங்களின் ப்ரபை-ஒளியே சல்லடையாக இருக்க, அதன் இடையிலிருந்து  பரவிய  ஆயிரக் கணக்கான  இந்திர தனுஷ் எனப்படும் வான வில் கள் தோன்றி  ஒளியை சிதற விடுவது போல இருந்ததாம்.   

இனிமையான பேச்சும், காவ்யங்கள், கதைகளில் தனக்கு பிடித்த பகுதிகளை சொல்லி உத்சாகம் ஊட்டுபவர், பொதுவாக பேசும் பொழுதே தானாகவே வெளிப்படும் அவருடைய கலா ரசனை.  ஆங்காங்கு அழகிய சில்பங்கள், அவரை விட்டு விலக மாட்டாள் என்று தெரிந்தாலும் லக்ஷ்மி தேவியை – கலை யை ஆராதிப்பவனாக காட்டின. வீரர்கள் கோஷ்டியில் அவர்களுக்கு இணையாக போர், வெற்றி என்று பேசுபவன். எல்லை மீறி கலகம் செய்யும்  சிப்பந்திகளை அதட்டினாலும், கையில் உள்ள கத்தியை எடுக்காமல் வாய் வார்த்தையால், கண்களாலேயே சங்கேதமாக தன் வாளைக் காட்டி,  (அந்த பார்வையே அவர்களை அடக்கி விடும் என்பது பொருள்)  சமாதானப் படுத்தி விடுவானாம். 

சிரித்துக் கொண்டே பரிகாசமாக பேசி, தங்களை பெருமையாக விளம்பரப் படுத்திக் கொள்ளும் சக அரசர்களின் அத்து மீறலை தன் பற்களின் வெண் ஒளியுடன் மென் சிரிப்பாலேயே கடந்து  விடுவானாம். அனைவருக்கும் சம்மதமானவன் தான் என்றாலும் நியாயத்தை செய்பவன். 

நற் குணங்கள் இல்லாதவர்களுக்கு தென் படவே மாட்டான்.  

எதிர்ப் படுபவரின் தேவைகளைப் பற்றி அறிந்து கொள்ளாமல், காரணமின்றி செல்வ செழிப்பைக் காட்ட பரிசுகள் தரும்  மனிதர்களையும் தவிர்த்து விடுவான். 

முடியாது என்று நிச்சயமாக தெரிந்தும் மனக் கோட்டைகள் கட்டுபவர்  அருகிலேயே செல்ல மாட்டான்.

எதையெடுத்தாலும் விதி என்று சொல்வதை ஏற்க மாட்டான்., அசாத்யமான விஷயமானாலும், தர்ம வழியில் செல்வதையே ஏற்பவன்.  தான் நம்புவதை திடமாக நம்புபவன். 

அருண நிற பாதங்கள், நடப்பதிலேயே கம்பீரம் வெளிப்பட நடப்பவன். காளையின் தோள்கள், பிம்பாதரங்கள், பரசன்னமான கண்களின் நிலவு போன்ற முகத்தை, இரு பக்கமும் இரண்டாக பிரிந்த கேசம் மேலும் அழகூட்டுவதாக இயல்பிலேயே கவியான பாணன் நினைத்தான். தேவதைகளின் அவதாரங்கள்  போல  வந்துள்ள சரீரம் – அந்த வர்ணனைகளுக்கு சற்றும் குறையாத உடலமைப்பு-  

தவிர, அந்த உயர்ந்த அலங்காரமான அறையின் தரை, ஏராளமான  மனிதர்களின் நடமாட்டத்தால் மலினமாவதாக நினைத்தான். மகா நீல வர்ணத்தின் அமைந்திருந்த பீடத்தில், கலியை, அதன் தீய சக்தி வெளி வந்து விடாமல் அமுக்கி அடக்குவது போல தன்  இடது பாதத்தை வைத்திருந்தான்.  காளிய நாகங்களை அடக்கிய பால கிருஷ்ணன் போல, புண்டரீகாக்ஷன்.  (மலர் போன்ற கண்களையுடையவன்)  வெண் பட்டு வஸ்திரம் பாதங்களை மூடியிருந்ததால், நகம் மட்டுமே காண முடிந்தது. அதுவே அழகாக இருந்ததாக பாணன் நினைத்தான். பூ தேவியே அவன் சரணங்களை ஆசிரயித்து இருப்பது போன்ற மதிப்புக்குரிய பாதங்கள். 

பிற அரசர்கள் வந்து இடைவிடாமல் மகுடங்கள் பட வணங்கி அவர்கள் தலையின் அலங்காரங்களான மலர்களும் மணிகளும் பிரதி பலிப்பது போல சிவந்த, அல்லது அஸ்தமய ஸந்த்யாவின் நிறத்தில் அலங்காரமாக கட்டப்பட்டிருந்த அல்லது கூடியிருந்தவர்களின் தலையில் அணிந்திருந்த மலர்களால் சிவந்தோ,  ஜலஜ சங்க- கடல் நீரில் விளையும் சங்கம், மீன மகரங்கள் நிறைந்த நால் வகை சமுத்திரங்களும் அவரது ஆளுமைக்கு உட்பட்டதே, என்பதை பறை சாற்றுவது போல , அங்கிருந்த பல ஆசனங்களில் இந்த சின்னங்கள் பொறிக்கப் பட்டிருந்தன.  இன்னும் பல வர்ணனைகள்.

எண்ணற்ற தாரகைகளுடன் வானம் தெரிவது போல மேல் விதானம் அமைந்திருந்தது. கைலாசத்தில் காணப்படும் ஸ்படிக பாறைகள் போன்று ஒளியை ப்ரதி பலிக்கும் திடமான கதவுகள், ஸ்ரீ சரஸ்வதியின் அருள் பார்வை போன்ற வெண்ணிற மலர் மாலையை அணிந்திருந்தான்.  சகல செல்வங்களையும்  தானம் செய்வதாக விரதம் எடுத்துக்கொண்டு தீக்ஷை என்பதை செய்பவர்கள் அணியும் சீர என்ற வஸ்திரம்

(அரசர்கள் தங்கள் வாழ் நாளில் சேமித்த செல்வம் அனைத்தையும் இந்த யாகத்தில் -சர்வஸ்வ தானம்- என்ற பெயரில் தானம் செய்து விட்டு,  மீதமில்லாமல் பொக்கிஷம் முழுவதையும் தானம் செய்து விட்டு, மறு நாள் வருவாயிலிருந்து தொடர்ந்து பொக்கிஷத்தை நிரப்ப வேண்டும் என்பதும் ஒரு நியமம் – ரகு என்ற இக்ஷ்வாகு அரசன், பாண்டவ அரசன் தர்ம புத்திரர் செய்ததாக பாகவதம் சொல்கிறது. வாமனாவதாரத்தில் பலி அத்தகைய யாகம் செய்வதில் முனைந்து இருந்த சமயம் தான் வாமனனாகச் சென்று பகவான் யாசித்தார் என்பது புராணக் கதை)

முத்து மாலைகள் மார்பை அலங்கரித்தன.  அழகிய உடலமைப்புக் கொண்ட  அனுகூலமான மனைவிகள், உயர் மணிகளும் பொன்னுமாக அலங்கரித்தபடி அருகில் வர,  கை நீட்டி அவர்களை ஆலிங்கணம் செய்த சமயம் அவர்களே மலர்கள் போல இருந்தனர்.  ப்ரசாரித – நீட்டிய பல புஜங்கள் கொண்டவனைப் போல அணைப்பவர்களுடன், இல்லற சுகங்களை குறைவற அனுபவிப்பவன், பெண்களும் அவனிடம் மனமொத்து இருந்தனர் என்ற வர்ணனைகள்.  பல மனைவிகள்.

அனவரத – கையில் வீணையும் அதில் நல்ல நாதம் வர வாசித்து லக்ஷ்மி தேவியை ஆராதிப்பவன்,  நன்மையற்றது அல்லது அதை மட்டுமே உயர்வாக எண்ணக் கூடாது என்று நினைப்பவன், தன் புலனடக்கதால், கலியே இவனிடம் தோற்று, நகர்ந்து விட்டது போலவும், திடமான கொள்கைகளும் எண்ணங்களும் உள்ளவன்.,  பெண் மோகம் இல்லாதவன் ஆனதால்,  சண்டன்- பிடிவாதம் உடையவன் – என்றும் மாற்றான் மனைவிகள், கட்டை போன்ற முனிவன் என்றும் தூர்த்தன் என்றும் விலை மாதர்களாலும், நண்பர்கள் தங்களுக்காக நிதி நியமங்களை மீறி எதுவும் செய்ய மாட்டான் என்பதால் கர வீரன்  (கஞ்சன்) என்றும், அந்தணர்கள் நல்ல சகாயன் என்றும், போர் என்று வந்தால், சத்ரு வீரர்கள் ஒருவர் கூட மீதி யில்லாமல் பிடிப்பவன் என்றும், 

சந்தனுவின் மகா வாஹிணீ பதி என்ற – பெரும் சேனைகளை தலைவன் என்ற தகுதியையும்,   பீஷ்மரிடமிருந்து தன் உலகை வென்ற தன்மை, துரோணரிடம் அவரது  வலிமை அல்லது லாகவம் என்பதையும், , குரு புத்திரன் அஸ்வத்தாமாவின் அமோகமான செயலையும், கர்ணனிடம் நன்பனுக்காக பிரியம், உயிர் கொடுப்பது வரையிலான குணத்தை, யுதிஷ்டிரனின் எல்லையில்லாத பொறுமை, பீமனின் பல யானைகளின் பலத்தை பெற்றவனாக, தனஜ்ஜயனிடமிருந்து – தனஞ்ஜயன் போல மகா பாரத போரைத் தலைமை தாங்கி நடத்தக் கூடியவன், க்ருத யுகத்தின் காரணம் போல, ப்ரும்மாண்டமே தோன்றக் காரணமான பெரும் சக்தி போன்றவன்,- விபுத சர்கத்தின் – செல்வ செழிப்பு என்பதன் பீஜம் – தர்ப்பம்- தன் சாமர்த்யம் என்பதன் உத்பத்தி தீவு போல, கருணையே உருவெடுத்தது போல,  பராக்ரமமே தாது- கணிமம் -ஆனால், அதன் விளை நிலமான தாது பர்வதம் கணிம வளம் உள்ள மலை. பராக்ரமம் -திறமை, மலையளவு ஆற்றல் உள்ளவன். புருஷோத்தமனின் மறு உருவம்,  சரஸ்வதியின் சர்வ வித்யா, சங்கீத க்ருஹம். தன் திறமையான ஆட்சியே பாற்கடலாக, செல்வத்தை அருளும் திருமகளை,  மறுமுறை தோற்றுவித்துக் கொண்டு விட்டவன் போலவும் .

நற் பண்புகளின் பலத்தை காட்டுவது போலவும், ஓரிடத்தில் கூடிய அனைத்து நன்மைகளும், காந்தியின் முழு உருவம், அபவர்கம் போன்ற  ரூப பரமாணு சர்கம், ராஜ்யங்களில் எதிர் பாராமல் நடந்த கெடுதல்களுக்கு பிராயச்சித்தம் செய்வது போல, கந்தர்ப்பனின்-மன்மதனின் மறு பிறப்பு போல, இந்திரனைக் காண வழி வகுக்கும் உபாயமோ, தர்மத்தின் அடுத்த பிறவி போலும், கலைகளின் திறமை,  சௌபாக்யம் என்பதன் சிறந்த அத்தாட்சி , ப்ரஜாபதிகள் என்ற அனைவருக்கும் ஈடான,  கம்பீரமான, ப்ரசன்னமான, பயத்தை தோற்றுவிக்கும்  ஆயினும் அழகன், குதூகலமான புண்யமான சக்ரவர்த்தியான ஹர்ஷனைக் கண்டான். 

உணர்ச்சி வசப்பட்ட பாணன் தன்னை மறந்தான்.  தன் பிறவிப் பயன் கிடைத்து விட்டது போல மகிழ்ந்தான். சக்கிரவர்த்தியை நேரில் கண்டதால் ஒரு வித சங்கோசமும்  ஆட்கொண்டது.  வந்த காரியம் அவரைக் காணத்தானே, என்பதால் திருப்தி மன நிறைவும் உண்டாயிற்று.  உடல் புல்லரிக்க, கண்களில் மகிழ்ச்சியால் கண்ணீர் பெருகியது.வியப்பினால் முகமே மலர்ந்தது போன்ற அனுபவமும் என்ன பேசுவது என்று திக்கு முக்காடினாலும், சமாளித்துக் கொண்டு மனதினுள் சொல்லிப் பார்த்துக் கொள்வது வார்த்தைகள் வெளி வராமலே நின்று விட்டன.  ‘ஆஹா, இந்த மனிதன், சுஜன்மா- மிக உயர்ந்த பிறவி. சுக்ருஹீத நாம- நற் பெயர் எடுத்தவன். தேஜஸே உருவானவன் போல, நால் வகை சமுத்திரம் ஸூழ நாட்டை ஆள்பவன், என்றோ செய்த நல் வினைகளின் பலனை அனுபவிக்கிறான்.  ராஜாதி ராஜன். வெற்றியே கண்டு வந்தவன். சிறந்த மல்லன். (உடல் வலிமை) பரமேஸ்வரன் ஹர்ஷன். இவனால் இந்த தேசமே அரசுடையதாக ஆயிற்று.. ஸ்ரீ ஹரி- ஸ்ரீ கிருஷ்ணனுக்கு  அமைந்தது போல தன் குலத்தினரிடமே விரோதிகள் இல்லை. பசுபதி போல மாமனார் தக்ஷனிடம், அனாவசியமாக அவமானப்பட நேரவில்லை. இந்திரனுக்கு நேர்ந்தது போல அபவாதங்கள் வந்து சேரவில்லை. யம ராஜன் போல தன் தொழிலே தண்டம் என்பதால் யாரானாலும் அந்த தண்டத்தை (மரணம் என்ற முடிவு) தர வேண்டிய நிர்பந்தம் இல்லை, வருணனுக்கு உள்ளது போல சாது பிராணிகளான ஆயிரமாயிரம் நீர் வாழ் ஜந்துக்கள், மகரங்கள் இவைகளுடன் ரத்னாலயம் என்ற சமுத்திரத்தை காக்கும் பொறுப்பும் இல்லை,  தனதன் போல அவன் செல்வத்தால் தனக்கென்று எந்த லாபமும் இல்லாமல் அதன் பொறுப்பில் இருக்க நேரவில்லை,  ஜைனர்கள் போல அர்த்தமில்லாத விவாதங்கள், கொள்கைகள் என்று தங்கள் தரிசனம்- கடவுள் பற்றிய விளக்கம்- தங்களுக்கே தெளிவில்லாத விஷயங்களை நம்ப வேண்டிய அவசியம் இல்லை, சந்திரன் போல பலவித தோஷங்கள் வந்து சேரவில்லை,  ஆனால் இவர்கள் அனைவரும் மனித குலத்தினர்  அல்லவே.   இந்த அரசன் மனிதனாக சாதித்திருப்பது அதை விட அதிக சிறப்பு.  பலவித மேன்மைகள் பெற்றவன். 

யார் வந்து கேட்டாலும் வேண்டியதை தருபவன், சாஸ்திரங்கள் அறிந்தவன், கவித்வம் உள்ளவன், சத்வம் என்ற நற் குணங்களின் இருப்பிடம், உத்சாகமாக செயல்களை செய்பவன், பல திசைகளிலும் இவன் கீர்த்தி பரவி உள்ளது, அனுராகம் என்பதை இவனுடைய அருகில் இருப்பவர்கள் உணர்வார்கள்,  எண்ணில்லாத திறமைகள், கலையா, கல்வியா எதுவானாலும் அறியாத விஷயங்கள் இல்லை.

இந்த அரசனிடம் யதிகள் பயன்படுத்தும் யோக சாதனைகளைக் காணலாம். மற்ற அரசர்கள் மண் பதுமை போல ஆகி விடுவர், எதிர்த்து நிற்கத் திராணியின்றி அடி பணிவர். அதுவே மற்ற சக அரசர்களிடம்  விரோதம் பாராட்டுவர்.  சில இலக்கண பரிபாஷைகளை பயன்படுத்தி சில வரிகள்.   சாஸ்திரங்கள், தர்க்கங்களின் பரிபாஷைகளுடன் சில வரிகள்.  நால் வித படைகள், அதை தானே ஒழுங்கு படுத்தி நிர்வகிக்கிறான்.   வினாடி நேரத்தில் இந்த எண்ணங்கள் சூழ்ந்தாலும் உடனடியாக, அரசருக்கு வாழ்த்துக்கள் சொன்னான் பாணன்.

அதற்கு பதில் சொல்வது போல, அருகில் இருந்த அரச சேவகன் மற்றொரு  பாடலைப் பாடினான்.

அரசனோ, ‘ இது பாணன் தான்’  என்று சொன்னது, எங்கோ குகைக்குள்ளிருந்து மிருகேந்திரன் கர்ஜிப்பது வான வெளியில் வந்து தன் காதில் விழுந்தது போல பாணன் மகிழ்ந்தான்.  

துவார பாலகன் – ‘ஆம் அரசே’ என்றான். கண்களில் குறும்பு சிரிப்புடன்,  தன் ஆடையை சரி செய்தபடி, அருகில் இருந்த மாளவ தேச அரசனின் மகனைப் பார்த்து, இவன் இன்னமும் சிறுவனே, காட்டு யானையே, என்றான். என்ன சொல்கிறான் ? புரியாமல் நின்ற பாணன்  ‘இன்னமும் பிடி படவில்லை – படித்து முடித்த இளைஞன், மணமாகாதவன் – என்று விளையாட்டாக குறிப்பிட்டதை  மற்றவர்கள் புரிந்து கொண்டனர்.   

எதுவும் புரியாமல் சபையோர்களைப் பார்த்த, அவர்கள் முகத்திலிருந்து வெளீப்படையாக எதுவும் தெரியாத தால், அரசனையே பார்த்து  மரியாதையாக வேண்டிக் கொள்வது போல பேசினான்.

‘தேவ! தத்வம் அறியாதவன் போல, பொறுப்போ, செய்தொழிலில் கவனமோ இல்லாதவன் போல,  எதுவுமறியாதவன், மற்றவர் துணையில் செல்ல வேண்டியவன் போலவோ,  உலகமே அறியாதவன் போலவோ,  எதனாலோ  தாங்கள் என்னை இப்படி எண்ணி விட்டீர்கள்.  உலகத்தில் பல விதமான எண்ணங்கள் நம்பிக்கைகள் பலரால் பல விதமாக அனுசரிக்கப் படுவது தாங்கள் அறியாததா?  கணத்துக்கு கணம் மாறும் தன்மையுடையது உலக விவகாரங்கள்.  மனித மனங்கள் ஒரே போல சிந்திப்பதும் இல்லை, அவர்கள் வாதங்களும் ஒரே நிலையில் இருப்பதும் இல்லை.  மகான்கள் என்ற பெரியவர்கள் யதார்த்த- நிகழ் கால அல்லது அந்தந்த காலத்தின் நடைமுறைகளை அறிந்து பேச வேண்டும்.  என்னைப் பற்றி வேறு விதமாக ஊகித்துக் கொள்வது சரியல்ல. நான் பிறப்பினால் அந்தணன். சோமபாயீ என்ற வாத்ஸ்யாயன குலத்தில் வந்தவன். என் தந்தை உயிருடன் இருந்த பொழுதே, அந்தணருக்குரிய சம்ஸ்காரங்கள்- சடங்குகள் உபனயனம்- பூணூல் தரிப்பது போன்றவைகள் செய்விக்கப் பட்டவன்.   வேத பாடம், அதன் ஆறு அங்கங்களுடன் கற்பிக்கப் பட்டவன்.  சாஶ்திரங்களை குரு மூலம் கற்றும், மற்ற பெரியவர்கள் சொல்லிக் கேட்டும் அறிந்தவன்.  சாஸ்திர பாடங்களை முடிந்தவரை கசடறக் கற்றவன்.  தாரம்- மனைவியுடன் இல்லற தர்மத்தை ஏற்காதவன் என்பது தவறல்ல.  ‘காமே புஜங்கதா’  யானையின் கட்டுக் கடங்காத வேகம், சிருங்கார ரசமாக பார்க்கப் படுகிறது.  காமம் என்ற உணர்ச்சி மிக அதிகமாக தென்படுவது யானையிடம், ஆனால் யானையின் பெருமை அந்த பலவீனத்தில் இல்லை.  என்னைப் போன்றவர்களிடம் அது போன்ற தன்மையை காண முயல வேண்டாம்.  இதுவரை என் புஜங்களை அணைக்கும் ஒருவள் வரவில்லை என்பது உண்மையே. 

என் பால பருவம் வெறுமையாக இருந்திருக்கவில்லை. “சதாயுஷ: புருஷ:” மனிதனின் ஆயுள் நூறு ஆண்டுகள் என்பது ஒரு கணக்கு.  அதற்குள்  தங்களைத் தானே மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற அறிவுரையுடனேயே வளர்ந்தவன் நான்.  மறு உலகம், மறு பிறவி உண்டு என்பதை நம்புவதால்,  இதையும் நம்பி அதற்கான சாதனைகளையும் செய்ய வேண்டும் என்றும் போதிக்கப் பட்டவன்.  என் பால பருவம் வீணாக ஆனதாக நான் நினைக்கவில்லை. எந்த குறையும் இல்லை.  நன்றாக கற்பிக்கப் பட்டேன்.. இல்லறம் எனக்கு அத்யாவசியமாக தோன்றவில்லை. மனித மனத்தின் தெளிவே மனிதத் தன்மை. 

தற்சமயம் என் மனம் அமைதியாக உள்ளது. (புராண கால முதல் அரசன்  )மனு போல நாட்டை ஆட்சி செய்யும், நடு நிலைமையோடு பிரஜைகளை அவரவர் குல வழக்கங்களை அனுசரிக்க வழி வகுத்து நல்லாட்சி செய்யும் அரசர், தண்டம்-தண்டனைகளை தகுந்த இடத்தில் பயன் படுத்தி மக்கள் மனதில் பயமின்றி வாழ வகுத்த தாங்கள், ஏழுகடல்களும், பல தீவுகளும் கொண்ட இந்த பூமியை வேறு யார் இந்த அளவு திறமையாக, எந்த வித குறையும் இன்றி , எவரும் எந்த துன்பமும் அனுபவிக்க விடாமல், ப்ரஜைகள் தங்கள் பந்துவாக நினைத்து மதிக்கும் படி, இருப்பவரை  எவரும் மனதால் கூட குணமற்றவனாக கற்பனை செய்ய முடியாது.

அது போகட்டும். சாதாரண மனிதனாக உரையாடுவோம்.  இந்த உங்கள் அரசில், வண்டுகள் கூட அளவாக மதுவை குடிக்கின்றன. அந்த அளவு சட்டம் ஒழுங்கு உள்ளன. சகோர பறவைகளை ரதாங்க என்பர். அவைகளும் வெட்கத்துடன் தங்கள் பிரியமான துணையுடன் செல்கின்றன. ( நீர் வாழ் பறவைகளான சகோர பறவைகள் இணை பிரியாமல் இருக்கும்  குணம் கொண்டவை)  குரங்குகள் கூட தங்கள் சபலத் தன்மையை கட்டுக்குள் வைத்துள்ளன.  மற்ற விலங்குகளை அடித்து உண்ணும் வன விலங்குகள் கூட, சற்று கருணையுடன்  அதிக எண்ணிக்கையில் உள்ள சிறிய  விலங்குகளை மட்டுமே உணவாக கொள்கின்றன. உடன் இருந்து சில காலம் சென்றால் ஸ்வாமி என்னை புரிந்து கொள்வீர்கள்.  சீர் தூக்கிப் பார்த்து நல்லது, தீயது என்பவைகளை பெருந்தன்மையுடையவர்கள் அறிவர் என்பது நீதி. ‘ இவ்வளவும் சொல்லி பாணன் நிறுத்திக் கொண்டான்.

பூபதி- அரசனும் கடைசியாக சொன்னதை மட்டும் அங்கீகரித்தவனாக வேறு எதுவும் சொல்லவில்லை.  மேற் கொண்டு பேச்சை வளர்த்தவோ, ஆசனம் கொடுத்து மதிக்கவோ, எந்த பதில் அங்கீகாரமும் வெளிப்படையாக இல்லை.  ஆனால் கண்களில் அவை தெரிந்தன. அன்புடன் நோக்கிய கண்கள் அம்ருதத்தை பொழிவன போல உள் மனதின் ப்ரீதியை தெரிவித்தன. பிற்பகல் ஆனதால், இதோ அஸ்தமித்து விடும் என்பதால், ராஜ சபையை கலைத்து விட்டு தன் உள் அறைக்குச் சென்று விட்டான். 

பாணனும் வேகமாக வெளியேறினான்.  தகிக்கும் வெய்யில் குறைந்து இதமாக இருந்த முன் மாலை நேரம்.  அஸ்தமன மலையில் இறங்க அவசரப் படுவது போல ஆதவனின் கதிர்கள் வேகமாக மேற்கு நோக்கிச் சென்று கொண்டிருந்தன. மலையுச்சியில்  மலர்களின் அணி வகுப்பு போல வண்ண ஜாலத்துடன் ஒளி பளீரென்று தெரிந்தது. காகங்களும்,மற்ற பறவைகளும் கூச்சலுடன் கூடுகளுக்குத் திரும்பி கொண்டிருந்தன.  கருணையுடன் கூடிய அந்த கூச்சலைக் கேட்டு, மரங்களில் வசித்த குஞ்சுகள் படபடத்த சிறு இறக்கைகளுடன் அவர்கள் வரவை தங்கள் மெல்லிய குரல்களில் வரவேற்பது போல இருந்தன.  மேய்ச்சல் நிலங்களிலிருந்து வீடுகளை நோக்கித் திரும்பிக் கொண்டிருந்த பசு மாடுகள், தங்கள் கன்றுகளை எண்ணி மடி கனக்க வேகமாக வந்தன.  வர்ண மயமான கணிமங்களை வாரியிறைத்தது போல வானம்  சிவந்தும், மற்ற வர்ணங்களாலும் வரைந்த சித்திரம் போல ஆயிற்று.. 

(பின் வரும் பல வரிகள் கவியின் எழுத்தில் படித்து அனுபவிக்க வேண்டியவை. சொல்லின் ஜாலம் -இனிய கீதம் போல ஒலிக்கும் அழகிய சொற்களே பிரதானம்) 

ஸந்த்யா- சிந்துவாக- கடலாக அதுவே நீர் உள்ள பாத்திரமாக ஆயிற்றாம்.  கமண்டலுவில் இருந்து தண்ணீரை கையில் எடுத்து கைகளையும் கால்களையும் சுத்தம் செய்து கொண்டு பாராசரர்கள்-பிக்ஷுக்கள், யாகத்தின் பங்கு கொள்ளும் தகுதி பெற்றவர்கள், கைகளில் குசம் என்ற புல்லால் யாகத்தை செய்ய, தீ மூட்டி, அது ஜ்வாலையாக ஆகும் வரை காத்திருந்து மந்திர உச்சாடனங்களுடன்  ஹவிஷ் என்ற யாகத்தில் போடப்படும் வஸ்துவை  வஷட் முதலிய மந்திரங்களை உரக்கச் சொல்லி அனைவருமாக  முனைந்து ஈடு பட்டு சொல்லிக் கொண்டு இருக்கையில்,  தூக்கம் கலைந்த  அலுப்புடன் காகங்களும்,குயில்களும்,  உரக்க சலித்துக் கொள்வது போல குரலெழுப்ப,  மரங்களில்  பொந்துகளில் இருந்த ஆந்தைகள் தங்கள் கர கரத்த குரலால் மரத்தை ரம்பத்தால் அறுப்பது போன்ற ஒலியெழுப்ப, வனத்தில் இருந்த வானரங்களின் சபலம்,  மரங்களில் மாற்றி மாற்றி இறங்கியும் ஓடியும், திரும்பி அதே மரத்தில் வந்து அமருவதுமாக இருக்க,  ஆயிரமாயிரம் முனிவர்கள் மற்றும் மனிதர்கள் சந்த்யா வந்தனம் செய்து அர்ப்பணித்த நீர், பிந்துக்களாக – துளித் துளியாக- வானத்தில் நிறைந்து. தாரகைகளின் இடையே புகுந்து  இடை வெளியில்லாமல் நிரப்பி, வானத்தில் சஞ்சரிக்கும் பரமசிவனின் ஜடைகளாக பரவியது போலவும், அவர் கையில் உள்ள  கண்டபரசு  கையில் உடைந்த பரசு- கோடாலி என்ற ஆயுதம் போலவும்,  நீல கண்டனாக, கேசங்கள் அலை பாய இருப்பது போலவும் ஆயின. அதே சமயத்தில், அவரே மீதி இருந்த ஜோதி வெளிச்சத்தையும் குறைத்து, அந்தகாரம் பரவச் செய்பவர் போல, திமிகிட திமிகிட தகிட என்ற தாள வாத்யங்களின் ஒலி சேர, நடனமாடவும்,  தினகரனுடைய விரல்கள் மட்டுமே இன்னமும் மறையாது இருக்க, அவைகளே தீபம் காட்டுவது போல ஒளியைச் சிந்த ( ஆரத்தி போல) அவரது கையின் கபாலமே கோபுரமாக, படுக்கையில் படுத்து சுகமான நித்ரையை அனுபவித்துக் கொண்டிருந்த சிசுக்கள், அலறி எழுந்து திகைப்பது போல மெள்ள கூடி வந்த இருள் மகிஷமாக தெரிய, மை போல இருட்டு எங்கும் பரவ, அதனால் மகிழ்ந்த யக்ஷர்கள், (இவர்களை புண்ய ஜனங்கள் என வர்ணிக்கிறார். Night watchmen –  போன்றவர்கள்)  கண்களைக் கட்டும் இருட்டு பயங்கரமாக இருந்த பொழுதும்,  மகரத்வஜன் என்ற மன்மதன் உலகில் மக்களின் புத்தியை மழுங்கடிக்கும் இரவு நேர கேளிக்கைகளில் முழ்கடித்து, (மேலும் பல வர்ணனைகள்- அரண்மனையில் பணிப் பெண்கள் மற்றும் உதவியாளர்கள் இரவு நேர ஏற்பாடுகளைச் செய்த பின்) அரசன் ஹர்ஷன் தன் அறைக்கு வந்து சேர்ந்தான்.

இயல்பாகவே கருணையும் பரிவும் உள்ளவன் அல்லவா, அதனால் தேவன் ஹர்ஷன் மனதில் யோசித்தான்.   ‘இந்த அந்தணன் பால பருவத்தின் குதூகலத்துடன் வளைய வந்திருந்தாலும், திருந்தி தன் குலத்துக்கு ஏற்ற வாழ்க்கையை வாழ்ந்து வருகிறான். அவன் கோபித்தாலும் என் மனதில் அவனிடம் சினேகமே – நட்பு- குறையவில்லை.  நான் அழைத்தவுடன் வந்தவன் என்ன நினைத்திருப்பான்.  காலம் செல்லச் செல்ல என்னை அறிவீர்கள் என்று சொன்னதால் அவன் அரசன், நாம் யார் ? என்று நினைத்திருப்பான். வேறு எந்த விதமாக நினைத்தானோ  – நாளை சமாதானமாக பேசுகிறேன் என்று தீர்மானித்துக் கொண்டான். மறு நாள் தன் உறவினர்கள் நண்பர்களுடன் இரவை கழித்து விட்டு அரசனைக் காண வந்த பாணனை அன்புடன் வரவேற்ற அரசனும் அதன் பின்  இணைபிரியா நண்பர்கள் ஆனார்கள்.  

(இத்துடன் வரை ஸ்ரீ பாண பட்டர் எழுதிய ஹர்ஷ சரித்திரம் என்பதில் வாத்ஸ்யாயன வம்ச வர்ணம் என்ற இரண்டாம் பகுதி நிறைவுறுகிறது  தமிழாக்கம்- திருமதி ஜானகி க்ருஷ்ணன்)

பாண பட்டரின் ஹர்ஷ சரித்திரம்

ஹர்ஷ சரிதம் -இரண்டாம் பாகம் தகுதியின்றியும் ஒரு சிலர் ராஜ பதவிகளுக்கு வந்து விடுகிறார்கள்

Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.