காண்பதில்லா குழந்தைகளின் உலகில் காட்சியாகி

(1) சாசுவதமான குழந்தைகள்

எப்போதும்
துள்ளிக் குதிக்கும்
சிட்டுக்குருவிகள் போல்
துள்ளிக் குதித்துக்
கத்திக் கொண்டிருக்கும்
எதிர் வீட்டுக் குழந்தைகள்
இப்போதெல்லாம்
குதிப்பதுமில்லை;
கத்துவதுமில்லை.

குட்டிப் புத்தகச் சுமையும்
குனிந்த முதுகுமாய்
போவதும்
வருவதுமாயுள்ளனர்.

எவ்வளவு சீக்கிரமாய்
குழந்தைகளாயில்லாமல்
குழந்தைகள் போல் தோற்றமாகும்
பெரியவர்களாகி விடுகிறார்கள்
குழந்தைகள்
பள்ளிக்கூடத்தில்!

சிட்டுக்குருவிகள் மட்டுமே
சாசுவதமாய்
குழந்தைகளோ?


(2) கோலத்திற்கு கலரடிக்கும் குழந்தை

தாய்
தான் வரைந்த கோலத்திற்கு
கலரடிக்கிறாள்.
கூட இருக்கும் குழந்தை
நினைத்த கலரை எடுத்து
நினைத்தபடி-
தாய் நினைத்தபடியில்லாமல்-
கலரடிக்கிறது.
குழந்தையின் கையைத் தாய்
விலக்கி விலக்கிப் பார்க்கிறாள்.
குழந்தையோ மறுபடியும் மறுபடியும்
தன்போக்கில் கலரடிக்கிறது.
குழந்தையின் முதுகில் தாய்
ஒரு சாத்து சாத்துகிறாள்.
குழந்தை வீறிட்டு அழுதபடியே போகிறது.
அதைப் பார்த்துக் கொண்டிருந்த
எனக்கு மட்டுமே தெரியும்
அன்று முழுதும் கோலம்-
அழகாயில்லாமல்-
அழுது கொண்டிருந்தது
குழந்தைக்காக


(3) குழந்தையை அடித்த அடி

சமையல் கத்தியை எடுத்து விளையாடியதற்காக
என் சின்ன மகளை
அவளின் சிறுவயதில்
அடித்தது நினைவாகிறது எனக்கு
எத்தனையோ ஆண்டுகள் கழித்து
இன்று-

இன்று
அவள்
இல்லை.

ஆனால் அன்று அவளை
அடித்த அடி
இல்லையில்லையாய்
திருப்பி அடிக்கிறது என்னை
இன்று.


(4) குழந்தை நடக்கும் நடை

ஒரு குளத்தைச் சுற்றியுள்ள
வட்டப் பாதையில்
சுற்றி நடை செல்கின்றனர்-
ஒருவர் முப்பது சுற்றுகளுக்கு மேல்
சுற்றியிருப்பார்.
இன்னொருவர் இருபது சுற்றுகளுக்கு மேல்
சுற்றியிருப்பார்.
நான் பத்து சுற்றுகளே
சுற்றினேன்.
வயதான ஒருவர்
ஐந்து சுற்றுகள் கூட
சுற்றவில்லை.
ஒவ்வொருவரும்
எத்தனை சுற்றுகள் சுற்றினோமென்று
எண்ணுவது போல் தெரிகிறது.
மற்றவர்கள் சுற்றும் எண்ணிக்கையோடு
ஒப்பிடுவது போல் குறிப்பாகிறது.
ஒரு குழந்தை தாயின் கைப்பிடித்து-
தாயின் கையையும் உதறி விட்டு-
ஒரு சுற்றே சுற்றுகிறது.
ஒரே ஒரு சுற்றை எண்ண வேண்டிய அவசியமில்லாததால்
சுதந்திரமாய்ச் சுற்ற முடியுமென்று
தோன்றுகிறது.
மற்றவர்கள் சுற்றும் போது அவர்களின்
உடல்களே சுற்றுவதாய்த் தெரிய
குழந்தை சுற்றும் போது
குதித்து அதன் மனம்-
அதனால் அதன் உடல்-
சுற்றுவதாய்த் தெரிகிறது
அதன் நடையின்
துள்ளலில்
துள்ளும்
அதன் காலடி நிலத்தின்
துள்ளலில்.


(5) கோமாளி

முதல் முறை
என்னை நோக்கி
அழுத குழந்தைக்கு
பூதமாய்த் தெரிந்திருப்பேனோ?
குழந்தையிடம்
கோமாளியாய் வித்தை காட்டி
சிரிக்க வைத்திருக்க வேண்டும்-
ஆச்சரியமாய் ஒரு நாள்
என்னை நோக்கி
முகம் முழுதும் மலர்ந்து
குழந்தை வாய் திறக்க
கவனித்தேன்
முளை விட்டிருந்த
அரிசியின் வெண்மையில்
குட்டிப் பற்கள்
என்னை மென்று கொண்டிருப்பதை.
இப்போது நான்
குழந்தைக்கு எப்படி தெரிந்தேனோ?
கோமாளியாய் உளறிக்
குழந்தையைக்
கொஞ்சிக் கொண்டிருக்கும் போது
கோமாளியாயில்லாமல்
வேறென்ன?


(6) நெகிழ்ச்சி

குனிந்தவுடன்
தன் தோளின் மீது
கழுத்தைக் கட்டிக் கொண்ட
குழந்தையைத் தூக்கி
குழந்தையைத் தூக்காமல்
இலேசாய் நடப்பதை விட
இலேசாய் நடப்பதாய்
நடந்து செல்கிறான்
நெகிழ்ச்சியில்
தந்தை!


(7) ஆச்சரியப்படுத்த தவறுவதில்லை

ஒரு முறை கூட
ஆச்சரியப்படுத்தத் தவறுவதில்லை-
எதிர்பாராது –
ஓர் உலரிலை வீழ்ந்து,
ஒரு சிட்டுக் குருவி துள்ளிக் குதித்து,
முன் பின் தெரியாத
ஒரு குழந்தை
தெருவில் போகும் என்னைத்
’தாத்தா’ வெனக்
கூப்பிட்டு.


(8) குழந்தையைக் கொஞ்சும் கடல்

யார் யாரிடமோ
எப்படி எப்படியோ
யார் யாருக்கும்
எப்படி எப்படியோ
அர்த்தப்பட பேசும்
அலைகள்-
குழந்தைகளிடம் மட்டும்
கொஞ்சுகின்றன என்பது
உண்மை-
எப்படி அந்தக்
குழந்தையும்
கடலும் சேர்ந்து
துள்ளிக் குதிக்கிறார்கள் களிப்பில்
பாருங்கள்!


Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.