கேள்வியின் நாயகனே

உலக சிந்தனையாளர் என்று போற்றப்படும் வெகு சிலரில் சாக்ரடீஸ் (Socrates) ஒரு குறிப்பிடத் தகுந்த கேள்வியாளர். “அவர் போல் சிந்திப்பது எப்படி” (How to Think Like Socrates  By Donald Robertson (2024) என்ற நூல், அவர் முன்மொழிந்த, பின்பற்றிய, உண்மை மற்றும் ஞான அறிவிற்கான பாதையை, சவால்கள் நிறைந்த இன்றைய உலகிலும் நாம் தேர்ந்தெடுத்து அடைய முடியும் என இக்கட்டுரை சொல்கிறது. அந்தப் புத்தகத்தைப் பற்றி வந்துள்ள கட்டுரையை நாம் இங்கே பார்ப்போம்

கவனமாக ஆவணப்படுத்தப்பட்ட வரலாற்று எடுத்துக்காட்டுக்களைக் கொண்டு, போரால் சிதிலங்களுக்கும், அல்லல்களுக்கும் உள்ளான ஏதென்சில், அவர் அனைத்துக் கேள்விகளையும், சூழல்களையும் எவ்விதம் அணுகினார் என்பதை இயல்பாகச் சொல்கிறது இந்த நூல்; “அனுமானங்களைக் கேள்வி கேளுங்கள்- பயன்படுத்தப்படும் சொற்களை வரையறை செய்து கொள்ளுங்கள்- எத்தகைய அழுத்தம் ஏற்பட்டாலும் நேர்மை தவறாதீர்கள்” இவற்றை அவரது அணுகுமுறைக் கோட்பாடுகள் எனப் புரிந்து கொள்ளலாம். இந்த நூலைப் படிப்பவர்களுக்கு, சிறந்த முடிவெடுக்கும் திறனும், நன்கு பரிசீலிக்கப் பட்ட வாழ்தலும் சாத்தியமாகும்.(பல ஸ்ருதி!) ஆழமாக சிந்திப்பவர்கள், பொருளுள்ள உரையாடலில் ஈடுபடுபவர்கள், தன் வாழ்விலோ, தனது தொழில் சார்ந்தோ கடினமான முடிவுகளை எடுக்க நேரிடுவோர், மறைந்துள்ள உண்மையைத் தேடி அடையும் வழிகளில் நாட்டமுடையவர்களுக்காக சாக்ரடீஸ் கை விளக்கு ஏந்தியிருக்கிறார்.

யார் அவர்?

பழம் பெருமை வாய்ந்த ஏதென்ஸ் நகரம், தன் பலத்தில் பெருமிதம் கொண்டிருந்த காலம்; அதில் திளைக்காமல் ஒரு மனிதர், சங்கடமான கேள்விகளைக் கேட்டுக் கொண்டு அதன் தெருக்களில் உலா வந்தார். ‘வாழும் அறிவாளி’ என்று சிலர் கொண்டாட, அவரது மரணத்தை சிலர் விரும்ப எனச் சென்றது அவர் வாழ்க்கை 

அவர் தனது தத்துவ வழிமுறைகளை, போர்ச் சூழல், விரைந்து பரவிய தொற்று நோய், குழப்பமான அரசியல் நிலவரம் என்ற களங்களிலிருந்து எடுத்துக் கொண்டார். துன்பம் என்பது மனிதர் அனைவருக்கும் பொதுவான ஒரு துயரம் எனப் புரிந்து கொள்ள அவரது கூர் நோக்கும், எண்ணத் தொலைவும், நேர்மையும் உதவின. ‘உன்னை அறிந்தால், உன்னை அறிந்தால் நீ உலகத்தில் போராடலாம்; உயர்ந்தாலும், தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம் ‘ என்ற அருமையான சித்தாந்தம் இப்படி எழுந்து வந்தது.

அவர் எதிர்கொண்ட வாழ்வியல் நாடகக் காட்சிகள் அவரது தத்துவத்தை வடிவமைத்தன. அந்த சிந்தனை சேகரிப்புகள், வெறும் கோட்பாடுகள் மட்டுமல்ல, பயன்பாட்டு மதிப்பும் கொண்டவை. ஏதென்சின் வீழ்ச்சி முதல் இன்றைய சவால்கள் நிறைந்த வாழ்வு வரை, தெளிவான, ஆழமான புரிதல்களுக்கு வழி வகுத்தவை.

 இன்றும் என்றும் புதிதாய் பிறந்தோம்

அது முன் பொ யு 432. வெற்றிகரமாக நடந்து கொண்டிருந்த தன் கல் தொழிலை விட்டுவிட்டு. ஏதென்ஸ் படையில் ஒரு வீரராக பெலொப்பொனேசியன் (Peloponnesian) போரில் கலந்து கொண்டார். பனியில், போர் கூடுகைகளில், வெற்றுக் காலுடன் அவர் நின்றது பேசுப் பொருளானது. தன்னுடன் இருக்கும் படைவீரர்களிடம் வாழ்வில் பொருட்படுத்தத்தக்கது எது என்று வினவினார். செல்வம், அந்தஸ்து என்று மற்றவர்கள் கவலைப்படுகையில், தெளிந்த அறிவு என்ற ஒன்றை அறிந்து கொள்வதில் அவர் நாட்டம் கொண்டார்.

அது ஏதென்ஸ் நகரின் பொற்காலம். நன்றாக வாழ்வது எப்படி என்ற வினாவிற்கு பதில் கண்டடைந்து விட்டதாக பலர் நினைத்திருந்தார்கள். வாதங்களில் வென்று, பதவி. அதிகாரம் போன்றவைகளை எப்படி அடையலாம் என்று இளைஞர்களுக்குப் போதிக்கும் ‘சோபிஸ்ட்’ (Sophist)எனப்படும் ஆசிரியர்கள், அதிகக் கட்டணம் வசூலித்தார்கள். அன்றும் கூட செல்வம் கொழிக்கும் துறையாக கல்வித் துறை இருந்திருக்கிறது! ஆனால், சாக்ரடீஸ் மாறுபட்ட கண்ணோட்டம் கொண்டிருந்தார். போர் அனுபவங்கள் அவருக்கு ஒரு செய்தி சொல்லின- ‘அனைத்தும் எனக்குத் தெரியும்’ என மார் தட்டியவர்களுக்கு பெரும்பாலும் சிறிதுதான் தெரிந்திருக்கிறது. தன் அறியாமையை ஒத்துக்கொள்பவர் தான், அறிந்து கொள்ள முன் வருகிறார்.’

தன் குருவின் தனித்த சிறப்பான எண்ண ஓட்டத்திற்கு. அவரது அருமை சீடரான ப்ளேடோ,(Plato) பல ஆண்டுகளுக்குப் பின் ஒரு ஆச்சர்யமான கதையைச் சொன்னார். சாக்ரடீசின் நண்பரான சேர்ஃபோன், (Chaerephon) டெல்பையிலுள்ள (Delphi) ஆரகிளுக்குச் (Oracle) சென்று சாக்ரடீசை விட சிறந்த ஞானி இருக்கிறாரா என்று கேட்க, இல்லை என்ற பதில் அசரீரியில் வந்திருக்கிறது. இதை தனது நண்பர் தன்னிடம் சொல்கையில் சாக்ரடீஸ் வியப்பு கலந்த குழப்பம் அடைந்திருக்கிறார். ‘என் அறியாமைகள் எனக்குத் தெரிகின்றன; அப்படியென்றால் நான் எப்படி புத்திசாலியாக இருக்க முடியும்?’ இந்தப் புதிரை விடுவிப்பதற்காக, அவர், அறிவுஜீவிகள் எனத் தம்மைச் சொல்லிக் கொள்பவர்களான அரசியல்வாதிகள், கவிஞர்கள், கைவினைக் கலைஞர்கள் ஆகியோரிடம் கேள்விகள் கேட்டிருக்கிறார். துறைசார் அறிவு அவர்களுக்கு இருந்த போதிலும், அதனாலேயே மற்ற அனைத்திலும் தாங்கள் அறிவு மிக்கவர்கள் என்ற எண்ணம் அவர்களுக்கு இருந்திருக்கிறது.. கற்றது கைம்மண் அளவு, கல்லாதது உலகளவு என்பது இவரது அறிவுப் பயணத்திற்கான அடிப்படையாக இருந்திருக்கிறது. ஏதென்ஸ் எதிர்கொண்ட போர், அதன் மக்களைப் பாதித்த தொற்று நோய் போன்றவைகள் அவரின் புரிதலை மேம்படுத்தின. மூர்க்கமாக தம் நம்பிக்கைகளைப் பற்றிக் கொண்டிருப்பவர்களிடம், அனுமானங்களைக் கேள்வி கேட்கப் பழகுங்கள் என்று எடுத்துச் சொன்னார். அதன் மூலம் மேம்பட்ட முடிவுகளை அடைய முடியும் எனக் காட்டினார்.

இதை இன்றும் கூட மூன்று எளிய வழி முறைகளில் நாம் அடையலாம்.

  • கருத்து எழுவதற்கு முன், அந்தச் சூழலைப் பற்றி நாம் அறியாதவைகள் என்னென்ன என்ற பட்டியல்.
  • தான் சிறந்த நிபுணன் என்று சொல்வோரிடம், அவர்களது அடிப்படை அனுமானங்களைப் பற்றி கேட்டறிதல்
  • தினமும், நாம் முன்னரே தெளிவாக அறிந்திருக்கிறோம் என்று நீங்கள் நினைப்பதை சுயக் கேள்விகளுக்கு உள்ளாக்கி, நீங்கள் அதை முழுதும் அறியவில்லை என்று உணர்வது

அவரது சிறப்பான தனித்துவம் என்பது பதில்களின் தொகுப்பில்லை, ஆனால், சிறந்த கேள்விகளுக்கான வழிமுறை.  நிலையற்ற நிலை நிலவும் போது, நாம் அறியாதது என்ன என்பது நம் சரியான முடிவிற்கான முதல் அடி. 

தெரிந்து கொள்ள ஆசைப்படுங்கள்

ஆல்சிபயாடிஸ் (Alcibiades) என்பவர் இவரது அழகான மாணவர், செல்வ வளம் மிக்கவர், பிரபுக்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர், ஏதென்சில் அதிகாரப் பதவி பெற்றவர். முதன் முதலாக முன்னவர், சாக்ரடீசைச் சந்திக்கையில், தனக்கு இயல்பாகவே கூர்மதி உள்ளதென்றும், தான் அரசியலில் செல்வாக்கு பெறுவது உறுதியென்றும் பெருமையாகச் சொன்னார்.  சாக்ரடீஸ் அவருக்குப் பாடம் ஏதும் நடத்தாமல், சில கேள்விகளைக் கேட்டார்.

  • சிறந்த தலைமையை உருவாக்குவது எது?
  • இந்த நகரத்திற்கு இதுதான் சிறந்தது என்பதை எப்படிச் சொல்கிறீர்கள்?

இந்தக் கேள்விகளுக்கு வந்த விடைகள் மேலும் ஆழமான கேள்விகளுக்கு இட்டுச் சென்றன. தலைமைப் பண்புகள் என்பதைப் பற்றி தான் சிந்திக்கவேயில்லை என்பது மாணவருக்குப் புரிந்தது.

இவரது செயல்வழிமுறை இப்படித்தானிருந்தது. தன்னுடன் உரையாடுபவர்களுக்குப் புரியும் உதாரணங்களைக் கொண்டு அவர் பேசத் தொடங்குவார். தளபதிகளிடம், இராணுவப் பயிற்சி பற்றி, கைவினைஞர்களிடம் அவர்களது தொழில் பற்றி எனத் தொடங்கும் உரையாடல், குறிப்பிட்ட எடுத்துக்காட்டுக்களைத் தாண்டி, உலகக் கோட்பாடுகளை உணர்த்தும் வடிவமெடுக்கும். கேட்பவர்களுக்கு, தாங்கள் புரிந்து கொண்டதாக நினைத்தவற்றில் இருக்கும் இடைவெளி புரியும்.

இந்த வழிமுறையின் முக்கியத்துவம், ஏதென்சின் இருண்ட காலத்தில் தெளிவானது. முன் பொ யு 404ல், ஸ்பார்டாவிடம் பெலொப்பொனேசியன் போரில் தோல்வியுற்ற ஏதென்ஸ், முப்பது கொடுங்கோலர்கள் (Thirty Tyrants) வசம் சிக்கியது. அவர்களில் ஒருவன் சாக்ரடீசின் முன்னாள் மாணவனான க்ரிடியாஸ்.(Critias) ஏதென்ஸ் நகரைச் சேர்ந்த பலர், பயத்தால் மௌனித்திருக்க, நீதியும், நல்லாட்சியும் எது என்று கேள்விகளைக் கேட்டவண்ணமாக இருந்திருக்கிறார் சாக்ரடீஸ். 

க்ரிடியாஸ் பதவிக்கு வருவதற்கு முன்னர் அவர் தன் மாணவனிடம் உரையாடியதை ப்ளேடோ பதிவு செய்துள்ளார். தன்னடக்கம், நிதானம் இவற்றின் பொருள் என்ன என்று சிறு சிறு கேள்விகளாகக் கேட்டு, தன் மாணவனுக்கு பல உதாரணங்களின் மூலம் அவற்றை விளக்கியிருக்கிறார்.

  • நமக்கு ஒருவர் தீங்கு செய்தார் என்றால், நாமும் அதே தீங்கை அவருக்குச் செய்ய வேண்டுமா?
  • மக்கள் எதைப் பெற கொடுத்துவைத்திருக்கிறார்களோ, அதைத் தானே தருகிறேன் என்று செயல்படுவது நீதியென்றால், அவர்கள் உண்மையில் பெற வேண்டியது என்ன என்பதை நாம் அறிவோமா, என்ன?

இந்தக் கேள்விகளின் மூலம், க்ரிடியாசின் சிந்தனைகளுக்கும், மூர்க்கச் செயல்பாட்டிற்கும் இருக்கும் முரண்களை அவர் எடுத்துச் சொன்னார்.

அவரது இந்த துணிச்சல், பின்னாளில், அவர் ஏதென்ஸ் நகர இளைஞர்களின் மனதைக் கெடுக்கிறார் என்று அவரது எதிரிகள் குற்றம் சாட்டுகையில் ‘அரசையும், அதிகாரத்தையும் எதிர்க்கும் சமூக விரோதி’ என்பதைக் காட்டும் சாட்சியமானது.

சரியான முறையில் சரியான கேள்விகளைக் கேட்பதின் மூலம் உரையாடல்களை நடத்தி ஒவ்வொருவரும் தம்மைத் தாமே புரிந்து கொள்ளும் அற்புதமான மாற்றங்களைக் கொண்டு வர முனைந்தார். சுருக்கமாகச் சொல்வதென்றால், சுயக் கேள்விகளுக்கும், சுய சிந்தனைகளுக்கும் உரையாடல்களின் மூலம்வழி அமைத்தார்.

நம் வாழ்வில் இதைச் செயல்படுத்த வேண்டுமா? மூன்று எளிய முறைகள் உள்ளன.

உதாரணமாக, கல்வியைப் பற்றி உங்களுடன் ஒரு பெற்றோர் பேசுகிறார் என வைத்துக் கொள்வோம். தொடக்கத்தில், அவரது குழந்தை வளர்ப்பு அனுபவம் பற்றிக் கேளுங்கள். அடுத்ததாக, பரவலாகப் பேசப்படும் ஒன்றைக் கேளுங்கள்- அதாவது, உங்கள் பிள்ளைக்கு எது நல்லது என்று நீங்கள் கருதுகிறீர்கள் எனக் கேளுங்கள். அது அனைத்துக் குழந்தைகளுக்குமான ஒன்றா எனக் கேளுங்கள். தங்கள் அனுபவங்களைக் கொண்டே அவர்கள் ஒரு முடிவிற்கு வர உதவி செய்யுங்கள். எதைச் சிந்திக்க வேண்டும் எனச் சொல்லி அவர்களை சிந்தனைச் சோம்பேறிகளாக்காதீர்கள்.

உண்மையான அக்கறை, பொறுமை இருந்தால் இதைச் செய்ய முடியும். மற்றவர் தவறாக செயல்படுகிறார் என நிரூபிப்பது உங்கள் நோக்கமல்ல, அவர்களே உண்மையைக் கண்டடைவது தான் சிறப்பு. சாக்ரடீஸ், ஆல்சிபயாடிஸ் இருவரின் உரையாடலை நினைவில் கொள்ளலாம். நாம் புது சிந்தனைகளை மனிதர்களுக்குச் சொல்லவில்லை, மாறாக  தனக்கு இது பற்றித் தெரியும் என்று எண்ணுபவரை  மறுபரிசீலனை செய்து உண்மையை அறிய வைப்பதுதான் நோக்கம்.

உண்மையை குழப்பத்தில் கண்டறியுங்கள் 

பிளேக் ஏதென்சை கவ்விப் பிடித்த முன் பொ யு430. ஸ்பார்டாவுடனான இவர்களின் போரும் மும்முரமான சமயம். வீரம், நீதி, கடமை என்று பல கூடுகைகளில் பல பேச்சாளர்கள் முழங்கிய காலம். பின் வாங்குவது கோழைத்தனம் என்று சிலர் சொல்ல, அதுதான் சிறந்த மதியூகம் என்று சிலர் மறுக்க, கூட்டணி நாடுகளைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என்று சிலர் கொதிக்க, இரக்கம் காட்ட வேண்டிய நேரம் என்று சிலர் வற்புறுத்த… இப்படிப் பல குரல்கள் ஒலித்தன. அவர் இத்தகைய சொற்களை வரைமுறை செய்யச் சொன்னார்.

ஸ்பார்டா அமைதிக்கான அழைப்பை விடுத்த போது, இளம் ஏதென்சியர்கள், இதை எந்தளவிற்கு நம்பலாம் எனக் கடுமையாக விவாதித்தார்கள். சாக்ரடீஸ் இரு அணிகளுக்காகவும் பேசவில்லை. அமைதி என்றால் என்ன என்று வரையறை செய்யுங்கள் என்றார். இடைக்கால போர் நிறுத்தம் என்பதிலிருந்து உண்மையான அமைதி எவ்வண்ணம் வேறுபடுகிறது எனப் பாருங்கள் என்றார்.. ஒரே சொல், மாறுபட்ட அர்த்தத்தை தரும் விதங்களில் தங்கள் வேறுபாடுகளுக்கு விதை விதைக்கிறது என்பதை அவர்கள் புரிந்து கொண்டனர்.

இந்த வழிமுறை Arginusae போருக்குப் பிறகு இராணுவத் தளபதிகளின்  மீதான விசாரணையின் போது கை கொடுத்தது. முன் பொ யு 406ல் நடந்த இந்தப் போரில் ஏதென்சின் கடற்படை, ஸ்பார்டாவின் கடற்படையைத் தோற்கடித்தது. ஆனால், சேதமடைந்த கப்பல்களிலிருந்து போர் வீர்ர்களை இவர்கள் மீட்கவில்லை. நோயுற்றும், அடிமைகளாகவும் அவர்கள் மடிந்தனர். ஏதென்ஸ் நகர மக்கள் ஆவேசமுற்றனர். தளபதிகள் குற்ற விசாரணைக்கு ஆளாகினர். சாக்ரடீஸ் அந்த விசாரணைக் குழுவில் இருந்தார். இந்தச் சூழ் நிலையில் எது சரியான நீதி முறை என்பதை வரயறுத்துக் கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார். மக்கள் சீற்றத்தை, நீதி வழிமுறையுடன் குழப்பிக் கொள்வதால், இவற்றை வரையறை செய்ய வேண்டிய அவசியத்தை அவர் எடுத்துச் சொன்னார். ஊடக விவாதங்கள், நீதிமன்றங்களில் நடந்து கொண்டிருக்கும் உணர்ச்சி மிகுந்த வழக்குகளை ஊடகங்கள் தங்கள் மதிப்பு அதிகரிப்பு நடவடிக்கைக்காக நடத்தும் உரத்த சொல்லாடல்கள், பயனற்ற பேச்சுக்கள் இவற்றை இன்றும் தானே பார்க்கிறோம். இதில், வேடிக்கையான அம்சம் ஒன்றிருக்கிறது- நீதிபதிகள் சிலர், இந்த ஊடக விவாதங்களைப் போல, சட்ட நுணுக்கங்களைப் பார்க்காமல், பொது மக்கள் போற்றும் வண்ணம் வழக்கை பரிசீலிக்கிறார்கள். தளபதிகள் தூக்கிலிடப்படுவதை அவரால் தடுக்க முடியவில்லை. ஆனால், உணர்ச்சிகரமான சூழலிலும், அவர் கை கொண்ட வழிமுறைகள் ஒரு வழிகாட்டியாக இன்றளவும் மிளிர்கிறது. இன்றளவும் இந்தச் சூழல் நிலவுகிறதே- ‘இல்லை’, ‘ஆமாம்’, ‘சரி’, ‘தவறு’. ‘நிதர்சனம்’ .’ மறைக்கப்பட்டுள்ளது’ ‘பணம் விளையாடியிருக்கிறது’, ‘பதவி பயம் தந்திருக்கிறது’ என்று நீள்கிறது குழப்பப் பட்டியல். இன்று மெய்த் தகவல்களைப் போலவே, பொய்த் தகவல்கள் இருக்கின்றன. வைக்கோல் போரில் ஊசி தேடுகிறோம். என்றாலும், சரியான வரைமுறையுடன் பேசப்படும் சொற்கள் மதிப்பு உள்ளவை.

சரி, இதை நம்மளவில் நாம் எப்படி நடைமுறை படுத்துவது? எதை நீங்கள் மிகவும் மதிக்கிறீர்கள்? நம்பிக்கை, விஸ்வாசம்? அதன் வரையறைகளை நீங்கள் அறிந்துள்ள விதங்களில் துல்லியமாக, தெளிவாக, எழுதிக் கொள்ளுங்கள். இதை உங்கள் அனுபவங்களுடன் சோதித்துப் பாருங்கள். எது நிதர்சனம் என நீங்கள் நினைத்தீர்களோ, அதை அணுகி கவனமாகப் பரிசீலிக்கும்போது. எத்தனை சிக்கல்கள் எழுகின்றன என்பதை சாக்ரடீசைப் போல நீங்களும் உணர்ந்து கொள்வீர்கள்.

தெளிவான வரையறைகள் மட்டுமே ப்ரச்சனையைத் தீர்க்காது; ஆனால், மையத்தை நோக்கி நம் கவனத்தைக் கொண்டு செல்ல உதவும். வார்த்தைகளைத் திரித்து, அதிகாரத்திற்குத் துணையாகக் கருத்துக்கள் கட்டமைக்கப்படுகையில். ‘நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்?’, என்ற கேள்வி உங்களின் உற்ற நண்பன் எனப் புரிந்து கொள்ளுங்கள்..

ஒருபோதும் பின்வாங்காதீர்கள்

அவர் தன் கொள்கைகளில் உறுதியாக இருந்தார். 70 வயதிலும் அவர் தன் கொள்கைகளிலிருந்து நழுவவில்லை. ஏதென்ஸ், ஸ்பார்டாவிடம் தோற்ற பின், அவரது நேர்மையை புதிதாக வந்த முப்பது கொடுங்கோலர்களின் ஆட்சி சோதித்தது ‘லியோன் ஆப் சலாமிஸ்’ (Leon of Salamis) என்ற அப்பாவி மனிதரின். சொத்துக்களைக் கைப்பற்றியதோடு நில்லாமல், அவரைக் கைது செய்யுமாறு சாக்ரடீசிற்கு ஆணையிட்டனர். இந்தக் கட்டளையை அவர் பின்பற்றியிருந்தால்,  தொந்தரவுகளிலிருந்து தப்பித்து, அந்தக் கொள்ளையில் கொஞ்சம் பங்கினையும் பெற்றிருக்கலாம். அவர் விலகி விட்டார். மௌனமான இந்த வெளிநடப்பு அவையினரைக் கொதிக்கச் செய்தது. ‘நீதியற்ற செயலைச் செய்யும் ஒருவன், தனக்கு இலக்கானவனை விட தனக்கே அதிகத் துன்பத்தை வரவழைத்துக் கொள்கிறான்.’ 

கொடுங்கோல் ஆட்சியாளர்களாக இருந்தாலும் அவர்களுடன் இணங்கிப் போவதே நம் வாழ்விற்கு உகந்தது என்று பலர் சொன்னாலும், நீதி வழுவா நெறிமுறையே நாம் யார் என்பதன் அடையாளம் என்று அவர் சொன்னார்.

மனித இயல்புகளை அவர் பல ஆண்டுகளாக அவதானித்தவர். ஏதென்சின் பரபரப்பான சந்தைகள், உடற்பயிற்சிக் கூடங்கள், விவாத மேடைகள் அனைத்தும் அவருக்கு பயிற்சிக் களமாயின. எது நன்மை, எது தீமை என்பதை மக்கள் எவ்விதம் உணர்ந்திருக்கிறார்களோ, அவ்விதமே அவர்களின் செயல்கள் அமைகின்றன என அவர் அறிந்து கொண்டார். அவரது நீதிமுறைகள் இவ்வாறாக வடிவம் பெற்று வந்தன.

யாராவது தவறாகத் தேர்வு செய்தால், அது அவர்களின் கெட்ட நோக்கமல்ல, அவர்களின் குழப்பமே காரணம் என அவர் நம்பினார். அவரது புகழ் பெற்ற வாக்கியம் ‘அறம் என்பது அறிவு. எது சரியென்று நீங்கள் உணர்ந்துவிட்டால், அதைத்தான் தேர்வு செய்வீர்கள் அல்லவா?’

ஆனால். புரிந்து கொள்வது என்பது எளிய செயலல்ல. முன் பொ யு 403ல் ஜனநாயகம் மீளமைக்கப்படும்போது. மக்களின் நோக்கங்களை அறிவதற்காக அவர் இரு பொது மக்கள் பிரிவினருடன் உரையாடினார். பழிவாங்க வேண்டும் என்று மற்றவர் கொதித்த போது, நீதிக்கு  உண்மையாகத் தேவையானது எது என சிந்தனை செய்யுங்கள் என்றார்  பலருக்கு இந்தக் கேள்விகள் உவப்பாக இல்லை. தங்களின் ஆவேசம் தார்மீகமானது என்று கருதிய சிலர், அதன் பின்னே இருக்கும் தங்கள் பதவி ஆசைகளையும், இந்தச் சினம் அந்த ஆசையை மறைக்கும் முகமூடி எனவும் அறிந்து கொண்டனர்.

தர்ம வழியில் வாழ்வது, அதுவும், அழுத்தம் தரும் சூழலிலும் தர்மத்தை வழுவாதிருப்பது, நமக்கு நல் நோக்கங்கள் இருந்தாலும், துணிவும், உறுதியும் தேவைப்படும் ஒன்று. நம் தேர்வுகளை நாம் தெளிவாக ஆராய வேண்டும்.. கடின முடிவுகளை எடுக்க நேரும் போது, நம் உள் நோக்கங்களை நாம் ஆராய வேண்டும். இந்தச் செயலைப் பிறர் அறிந்தால், இந்தத் தேர்வை நீங்கள் மேற்கொள்வீர்களா என்ற கேள்வியைக் கேட்டுக் கொள்ளுங்கள். கவனமாக சிந்தித்துதான் செய்கிறீர்களா அல்லது குழு மனப்பான்மையா? யாரை மதிக்கிறீர்களோ, அவரிடம் உங்கள் தேர்வை விளக்கி, அதை ஏன் தேர்வு செய்தேன் என்று உங்கள் கருத்தை நிறுவுவீர்களா? 

இதை நீங்கள் பின் தொடர வேண்டுமென்றால், ஒவ்வொரு நாள் மாலையிலும், அன்று நீங்கள் எடுக்க நேர்ந்த கடின முடிவுகளை மறு ஆய்வு செய்யுங்கள். உங்கள் முடிவு எதனால் தூண்டப்பட்டது என அறிந்து கொள்ளுங்கள். பயமா, உண்மை நிறைந்த கோட்பாடுகளா, சௌகர்யமா, சக மனிதர்கள் அல்லது சூழல் தரும் அழுத்தமா? 

உங்கள் தூண்டுதல்கள் சிறப்பாக இல்லாவிட்டால், உங்களைக் கடுமையாக தண்டித்துக் கொள்ளாதீர்கள்.; விழிப்புணர்விற்கான பயிற்சி என்று எடுத்துக் கொள்ளுங்கள். உடற்பயிற்சி போல இது நன்னடத்தைக்கான பயிற்சி. நேர்மை என்பதை சரியாக இருப்பது என்று குறுக்க வேண்டாம். உடனடியாக நமக்கு இதனால் ஆதாயங்கள் இல்லாவிட்டாலும், நாம் அடிப்படைக் கொள்கைகளிலிருந்து விலகாதிருப்பதுதான் தேவை. அழுத்தமான சூழல்களிலும், பிறர் என்ன எதிர்பார்க்கிறார் என்பதை விட உங்கள் ஆழ் மனது சொல்வதைக் கேட்டு நடந்து கொள்ளுங்கள்.

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே?

மு பொ யு 399ல், தன் எழுவது வயதில், 500 ஏதென்சியன் நீதியாளர்களை அவர் எதிர்கொண்டார். கவைக்குதவாத குற்றச்சாட்டுக்கள்- இளைஞர்களின் மனதைக் கெடுக்கிறார், கடவுளை மதிப்பதில்லை போன்றவை. இந்த மேலோட்டங்கள் ஒரு போர்வையே. யுத்தங்கள், பிளேக் போன்ற பெரும் தொற்றுக்கள், அரசியல் புரட்சிகள் இவற்றிற்கெல்லாம் ஒரு நபரைக் கண்டுபிடித்து அவரை பலிகடா ஆக்க வேண்டும் என்பது உண்மையான திட்டம். ஆளுவோரும், அதிகார வர்க்க மனித சமூகமும் இன்று வரை மேற்கொள்ளும் ஒரு விபரீதம் இது. தொடரும் துளைக்கும் கேள்விகள், வசதியான பொய்களை ஏற்க மறுத்தல், சாக்ரடீசை சரியான ஒரு இலக்கு என்றாக்கியது.t.

குற்றம் சாட்டப்பட்ட பலரும், கருணைக்கு வேண்டுவதைப் போல், சாக்ரடீஸ் செய்வார் என்று என்று குற்றம் சுமத்தியவர்கள் நினைத்தார்கள். தன் மீதான வழக்கையே தன் நேர்மையின் கலங்கரை விளக்காக அவர் மாற்றினார். குடையும் வண்டைப் போல மூளைச் சோம்பலைக் குடைந்து வெளியேற்றும் ஒரு பூச்சி இப்போது ஏதென்ஸி ற்குத் தேவை என்றார் அவர். அனுமானங்களைக் கேள்வி கேட்டு, சிந்தித்து புரிந்து செயல்படுங்கள் என்று சொன்னார். சலசலக்கும் பூச்சி எப்படி ஒரு பெரும் குதிரையை இயக்கத்தில் வைத்திருக்கிறதோ, அதைப் போலவே ஒரு பெரிய நகரத்தின் சிந்தனையாளர்கள் என்றார்.

நீதியாளர்கள் ஒரு உடன்படிக்கையை முன் வைத்தார்கள். மக்களைக் கேள்விகள் கேட்பதையும், வாழ்வை ஆராய்வதையும் அவர் நிறுத்திக் கொண்டால், உயிர் தப்பலாம் என்பதுதான் அவர்கள் முன்வைத்த சமாதானம்.. கல்வெட்டு சாசனமாக அவர் பதில் சொன்னார் “ஆராயாத வாழ்க்கை வாழத் தகுதியான ஒன்றில்லை.”. 

அமைதியாக, தன் மரண தண்டனையை அவர் ஏற்றுக் கொண்டார். எதன்பொருட்டும், அது உயிராகவே இருந்தாலும், கொள்கையிலிருந்து நழுவக்கூடாதென்று உறுதியாகச் சொன்னார். இறக்கப் போகும் தருணத்திலும் தன் நண்பரிடம் அவர் சொன்னார் “குணமாக்கும் கடவுளுக்கு நேர்ந்திருந்த சேவல் காணிக்கையை செலுத்தி விடுங்கள்.’ எந்த நேரத்திலும் பொறுப்பையோ, கடமையையோ மீறாதவர் எனக் காட்டுக்கிறது இந்த இறுதிச் செய்தி.

அவரது படிப்பினைகளை அவரது இறப்பு வேகமாகப் பரப்பியது என்பது ஒரு வருந்தத்தக்க முரண். வாழும் போது கொன்றுவிட்டு, செத்த பிறகு சிலை வைப்பதும் மனித இனத்தின் வழக்கம் போலும். ப்ளேடோ  போன்ற அவரது மாணவர்கள், ,சாக்ரடீசின் வழிமுறைகள் நின்று நிலைப்பதற்கான முயற்சிகளைக் கைவிடாமல் செய்தார்கள். தத்தமது நம்பிக்கைகளை பரிசோதிக்கக் கூடுபவர்கள் இன்றும் கூட ஆழமான கேள்விகளைக் கேட்பதும், கடின சூழலிலும் உண்மையை அறியும் உரத்துடன் இருப்பதும், அவர் வகுத்த வழி முறைகளைக் கொண்டுதான்.

நம் வாழ்வில் பெரும் நாடகீயத் தருணங்கள் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை., ஆனால், அவரது துணிவை நாம் கைக்கொள்ள வேண்டிய சந்தர்ப்பங்கள் எழலாம்.  விவேகமற்ற தீர்ப்பிற்காக பலர் விரைகையில், நீங்கள் ஆழமான கேள்விகளைக் கேளுங்கள். குழு மனப்பான்மை மேலோங்கி கருத்து திரிக்கப்படுகையில், கவனமாக வடிவமைகப்பட்ட வாதங்களை எதிர் வையுங்கள். உங்கள் கொள்கைகளைக் கைவிடுவது எளிது. ஆனால், அதற்கு முன், என்னிலையிலும் நேர்மையை விட்டுவிடாத அந்த முதியவரை நினைவில் கொள்ளுங்கள். சிறிதாகத் தொடங்கி, ஒவ்வொன்றையும் சிந்தித்து, தகுந்த கேள்விகள் கேட்டு விளக்கம் பெற்று, அவற்றைச் சீர் தூக்கிப் பார்த்து வந்தோமென்றால், நாம் வாழும் வாழ்க்கை பொருளுள்ளதாகும்.

அவரைப் போல ஹெம்லாக் அருந்த நேரிட வேண்டாம், ஆனால், உல்கம் விரும்பும் விரைவுப் பாதைகள் சரியாக, உண்மையைச் சார்ந்து இருக்கிறதா எனப் பார்ப்பதற்கும் துணிவு வேண்டும். இது அவருக்கு நாம் செய்யும் அஞ்சலி

பிப்லாதர் என்றொரு மகரிஷி இருந்தார். ஆறு ரிஷிக்கள் அவரிடம் கேள்விகள் கேட்டு விளக்கம் பெற விழைந்தார்கள். அவர் அறுவரையும் ஓராண்டு தவத்தில் இருந்து கொண்டு தங்களின் வினாக்களைச் சிந்திக்கச் சொன்னார். தற்சமயம் அந்த வினாக்களைப் பற்றி தம்மிடம் ஏதும் கூற வேண்டாம் என்றும் சொன்னார். ஒரு வருடம் கழிந்ததும், அவர்கள் வந்தனர்- ஒவ்வொருவரும் ஒன்று என்ற கணக்கில் ஆறு கேள்விகள் கேட்டனர். அது ப்ரஷ்ன உபனிஷத் எனக் கொண்டாடப்படுகிறது.

யக்ஷனும், தர்ம புத்திரும் நடத்திய கேள்வி பதில் மகாபாரதத்தில் சிறப்பாக இருக்கும். 

“இழுக்கல் உடையறி ஊற்றுக்கோல் அற்றே      ஒழுக்கமுடையார் வாய்ச் சொல்”- திருக்குறள். (வழுக்கும் சேற்றில் நாம் நிலை தடுமாறாமல் செல்ல உதவும் ஊன்றுகோல் போல, ஒழுக்கமுடையாரின் செய்திகள் நமக்கு உதவும்)

“அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளொரெலாம் எதிர்த்து நின்ற போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
துச்சமாக எண்ணி நம்மைத் தூறு செய்த போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சை கொண்ட பொருளெலாம் இழந்த விட்ட போதிலும்,

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.
கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள் வீசு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.
நச்சை வாயி லேகொணர்ந்து நண்ப ரூட்டு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.
பச்சையூ னியைந்த வேற் படைகள் வந்த போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.
உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.” பாரதி

கேளுங்கள், கேள்விகளைக் கேளுங்கள், அனுமானங்களைக் கேள்விக்கு உட்படுத்துங்கள், வரையறை செய்து கொள்ளுங்கள், நோக்கங்களைப் புரிந்து கொள்ளூங்கள், முடிவெடுங்கள், அதில் நிலையாக இருங்கள், பயம் கொள்ளாதீர்கள், அறிவே அறம்.

  • How to Think Like Socrates: Ancient Philosophy as a Way of Life in the Modern World
  • Hardcover – November 19, 2024
  • by Donald J. Robertson (Author)
  • Publisher ‏ : ‎ St. Martin’s Press
  • Language ‏ : ‎ English
  • Hardcover ‏ : ‎ 368 pages
  • ISBN-10 ‏ : ‎ 1250280508
  • ISBN-13 ‏ : ‎ 978-1250280503

Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.