பண்பாட்டுத் தரிசனம்

குடவாயில் பாலசுப்ரமணியனின்   “கலையியல் ரசனைக் கட்டுரைகள்” & “முப்பது கட்டுரைகள்”

கோவிலின் உயர்ந்து எழும் கோபுரம், உள்ளே நுழைந்ததும் விரிந்த அதன் பிரகாரங்கள், அது இட்டுச் செல்லும் கருவறை. இந்த மூன்றும் இணைந்து ஒரு முழுமையான அனுபவத்தினைத் தருவது போல, குடவாயில் பாலசுப்ரமணியனின்   “கலையியல் ரசனைக் கட்டுரைகள்” , “முப்பது கட்டுரைகள்”  என்ற இரு நூல்களும் மூன்று பரிமாணங்களில் நம்மை சந்திக்கிறது.

கோபுரம் போல உயர்ந்து நிற்கும் முதல் பரிமாணம் – கலை ரசனையின் மொழி. சிற்பத்தின் முன் நிற்கும் நாம், அதன் அழகை உணர முடிகின்றது, ஆனால் அந்த உணர்வை வார்த்தைகளாக்கத் தடுமாற்றம்.பாலசுப்ரமணியனின் எழுத்துக்கள் இந்த இடைவெளியை இணைக்கும் பாலமாக அமைகின்றன.

பிரகாரங்கள், சன்னதிகள் போல விரிந்து பரந்த இரண்டாவது பரிமாணம் – கலையின் கூட்டு உருவாக்கம். தத்துவஞானிகளின் தரிசனம், சிற்பிகளின் கைவண்ணம், ஆட்சியாளர்களின் ஆதரவு, மக்களின் ஈடுபாடு என அனைத்தும் இணைந்து உருவாக்கும் கலைச் சூழலியல். தேவி மகாத்மியத்தில் தேவர்கள் தத்தம் சக்திகளை இணைத்து மகாசக்தியை உருவாக்கியது போல ஒரு காட்சியாகும்,

கருவறை போல ஆழமான மூன்றாவது பரிமாணம் – மானுட மனதின் பரிணாம வளர்ச்சி. பருப்பொருள் புரிதலிலிருந்து சூட்சுமப் புரிதல் நோக்கிய பயணம். ஊர்க்காவல் தெய்வங்களிலிருந்து தத்துவார்த்தச் சிந்தனைகள் வரையிலான வளர்ச்சி.

இந்த இரு நூல்களும் அகரம் பதிப்பாக வெளிவந்துள்ளது. 

 “கலையியல் ரசனைக் கட்டுரைகள்”  253 பக்கங்கள் கொண்டது. 30 தலைப்புகளில் ரசனை இதழில் 2006ல் இருந்து 2011 வரை வந்த கட்டுரைகள் தொகுக்கப்பட்டு புத்தகமாக வந்துள்ளது. விலை 180 ரூபாய்.

இதன் இன்னொரு பகுதி “முப்பது கட்டுரைகள்” என்ற பெயரில் 2018ல் வந்துள்ளது. அதுவும் அகரம் பதிப்பகமே. 248 பக்கங்கள் கொண்டது. விலை 220 ரூபாய்.

கலையின் மொழி

மரபின் சிற்பங்களைக் காண்கையில் சொல்லில்லாமல் நிற்பது, அதன் நுட்பம் துலங்காதிருப்பது அதிசயமல்ல. இந்த புத்தகம் மரபின் வழி உருவான சிற்பங்களை கண்ணால் கண்டு சொல்லால் தொடர வழி சொல்கின்றது.

இந்த முதல் பரிமாணத்துக்கு விரிவான எடுத்துக்காட்டைப் பார்க்கலாம். “அரவு ஆட்டவல்லான்” என்ற கட்டுரையின் தொடக்கத்தில், அட்டபுயங்கப்பிரான் என அழைக்கப்படும் சிவனின் புராணக் கதையை விளக்குகிறது. அனந்தன், கார்கோடகன், குளிகன், சங்கபாலன், தக்கன், பதுமன், மகாபதுமன், வாசுகி ஆகிய எட்டு நாகங்களைக் கொண்டு ஆடும் சிவனின் தோற்றத்தை விவரிக்கிறது. இந்த ஆடும் சிவனின் குறிப்பு தமிழ்க் கவிதை மரபில் வளர்ந்த பக்தி இலக்கியமான காஞ்சிப் பதியில் குறிப்பிடப்படுகிறது. பாம்பை அணிந்தோ அல்லது பாம்பின் அசைவுகளைப் போலவோ ஆடும் நடனங்களை ‘புஜங்க நடனம்’ என்ற மரபாக முன்வைக்கிறது. தமிழக நடனக்கலையில் காணப்படும் ‘கரணம்’, ‘சொக்கம்’ போன்ற கலைச்சொற்களை நாட்டியக் கலையின் நுணுக்கங்களோடு அறிமுகப்படுத்தி சிற்பத்தின் அழகைக் காணத் தயார் செய்கின்றது.

தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயிலில் உள்ள அகோர மூர்த்தி சிற்பத்தை மிக நுணுக்கமாக விவரிக்கிறது:

“கேசங்கள் தீச்சுடராக மேலெழ, முக்கண், எடுப்பான மீசை,குறுந்தாடி, காதுகளில் பாம்புக் குண்டலங்கள், கபாலம் பிறைச்சந்திரன் ஆகியவற்றோடு நான்கு முகங்களும் விளங்க, தூக்கிய  மேலிரு கரங்களில் சூலம், உலக்கை திகழ, கீழிரு கரங்களில் வாளும்,சக்தியும் பிடிக்க வலதுகாலை மேலுயர்த்தியவாறு அண்ணல் ஆடுகின்றார்.

கணுக்கால்களுக்கு மேலாக இரண்டு பாம்புகள் கழல்களாக அணி செய்கின்றன. இடுப்பாடையில் இருபாம்புகள் இடம்பெற்று படமெடுத்து ஆடுகின்றன. வயிற்றில் உதர பந்தமாக ஒரு நாகம் சுற்றியுள்ளது. மார்பிலோ புரிநூலாக ஒருநாகம் முடியப் பெற்றுள்ளது. நான்கு புஜங்களிலும் நான்கு நாகங்கள் படமெடுத்தவாறு திகழ்கின்றன. நான்கு திசைகளை நோக்கும் நான்கு முகங்களுக்குரிய காதுகளில் நான்கு பாம்புகள்  காதணியாக இயங்குகின்றன”

தஞ்சை, காஞ்சி ஆகிய இடங்களில் உள்ள பாம்பாட்டும் சிவனின் சிற்பங்களின் தனித்துவத்தையும், அவற்றின் குறிப்புகள் திருஞானசம்பந்தரின் பாடல்களில் எவ்வாறு இடம்பெற்றுள்ளன என்பதையும் விளக்கிக் கட்டுரை நிறைவடைகிறது. பல்லவர் காலச் சிற்ப மரபு, முற்காலச் சோழர் சிற்ப மரபு, பிற்காலச் சோழர் சிற்ப மரபு எனக் கற்களில் செதுக்கப்பட்ட கவிதைகளின் நுணுக்கங்களைத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறார்.

புராணங்களில் சொல்லப்பட்ட அழகியல் கருத்துகள் தேவாரப் பாடல்களாகி, சிற்பியின் கற்பனைக்கு ஏற்ப சிற்பங்களாக உருமாறி, நடன மரபின் அழகையும் வெளிப்படுத்தி கோயில்களில் காட்சியளிக்கின்றன. சிற்பத்தின் முன் நிற்கும் ரசிகன் எதை ரசிக்கிறான் என்ற புரிதலை இந்த நூல் தெளிவாகச் சான்றாக உள்ளது. கோவில்கள் கலைக்கூடங்கள் என்பதை உணரலாம்.

கலை காக்கும் பண்பாட்டு சூழியல்

தத்துவங்கள் உருவாக்கிய தரிசனங்களுக்கு, சிற்பிகள் கலை வடிவம் கொடுத்து, மன்னர்கள் அதற்குப் பாதுகாப்பு அளித்து, ஊரும், புரவலர்களும் கலைக்கூடங்களுக்குச் செல்வமும், சீரும் அளித்து பண்பாட்டெனும் என்னும் மகாசக்திக்கு ஆளுக்கொரு அஸ்திரம் அளித்தனர் அதன் பெரும் உருவை உலகப் பண்பாட்டில் களம் நிற்க ஆராதித்தனர். பலர் உழைப்பில், பங்களிப்பில்  கலைக்கான ஒரு சூழியல் உயிர்ப்புடன் இருந்ததை இந்தக் கட்டுரைகளில் காணலாம்.

“கல்லால மரத்தின்கீழ் அமர்ந்தானாக சிவபெருமான் யோக நிலையில் திகழ்ந்தபோது திருமாலின் மைந்தனான மன்மதன் தன் ஐமலர்க்கணையை அவர்தம் மோனத்தைக் கலைப்பதற்காக எய்தான். அப்போது அது இளவேனிற் காலம். மலர் அம்போ யோகத்தைக் கலைத்தது. பரமனோ அழல் வீசும் தன் நெற்றிக்கண்ணைத் திறந்து காமவேளை நோக்கியவாறு புன்னகை பூத்தார். கண் அழல் காமத்தைச் சுட்டெரித்தது. அழகெலாம் தொலைந்தொழிய நொடிப் பொழுதில் காமன் கருகி பொடியாய் வீழ்ந்தான்.” என “காமனை எரித்த கண்ணுதற் கடவுள்”  கட்டுரை சொல்லும். இது ஞானக்கண்ணால் விருப்பு/வெறுப்பு எரித்து சாம்பல் ஆக்கி நிற்கும் நிலையின் சிற்பம். பெரும் தனியன். அனைத்தையும் கடந்தவன். ஞானக்கண் கொண்டு விருப்பு, வெறுப்பு எரிக்கையிலும் ஐயனின் முகம் புன்முறுவல் கொண்டிருந்ததாம். இதையும் சிற்பி கைப்பற்றியிருந்தாக இந்தக் கட்டுரை சொல்கின்றது. இந்த காட்சி தஞ்சை, கங்கை கொண்ட சோழபுரம், தாராசுரத்தில் எனச் சோழ சிற்பிகளின் கற்பனையில் எழுந்து கல்லில் கலை வடிவாக உள்ளது. தத்துவம் கண்ட காட்சி ஒன்றின் பரு வடிவம்.

இதற்கு பின்னர் “கடம்பனோடு அம்மையார்” கட்டுரை (கலையியல் ரசனைக் கட்டுரைகள் புத்தகம்)  “நங்கடம்பனை பெற்றவள் பங்கினன்” என மன்மதனை எரித்த சிவனை குறிப்பிடும். இந்தக் கட்டுரை கந்தனோடு சிவனும் ,உமையும் இருக்கும் சோமாஸ்கந்த திருவடிவம் பற்றி சொல்லும். அதில் திருவாலங்காடு தலத்தில் உள்ள பல்லவர் சிற்பி உருவாக்கிய செப்புத் திருமேனியில் அண்ணலின் முகத்தில் புன்முறுவல் இருக்குமாம்.  மனைவி, மக்களோடு இருப்பதால் இருக்குமோ, நேரில் பார்த்துக் கேட்கலாம். இல்லறம் என்பது நல்லறமே. அதையும் நன்னெறியாகக் கொள்வதே இந்தியத் தத்துவம் எனச் சொல்லும் சிற்பக் காட்சி.

“இன்னமும் நுட்பமாக திருமழபாடியில் உள்ள சோழர் காலச் சோமாஸ்கந்தர் கற்சிற்பத்தில் இறைவன் ஒரு கரத்தால் தொடை மீது அமர்ந்துள்ள கந்தனை அணைத்துக் கொண்டு மறுகரத்தில் சுவடி ஒன்றினை ஏந்தியுள்ளார். அந்தச் சுவடியோ வேதம் என்னும் ஞானத்தின் உருவகமாகும்”  என “கடம்பனோடு அம்மையார்” கட்டுரை சொல்கின்றது.

யோகத்தில் மன்மதனை எரித்த ஈசன் , கந்தனோடும், அம்மையோடும் சம்சாரியாக இருப்பார்.

தத்துவ மரபில் உருவான மன்மதத் தகனமும், சோமாஸ்கந்தரும் மன்னர்கள் பாதுகாப்பில், ஊரும், நாடும் உருவாக்கிய கோவிலில், சிற்பிகள் நுட்பத்தில் கலையாகி, அக்கலைக்கு ஶ்ரீபலி பூஜையில் நடனம், இசை, உணவு என வாழ்வின் சுவையாகி ஒரு பெரும் சமூக ஒருங்கிணைவு நிகழ்வதைக் காணலாம்.

இந்தப் புத்தகம் வழியே நடனக் கலை மரபு, கூத்துக் கலை மரபு போன்றவை சமூகத்தின் கவனமும்,ரசனையும், பாதுகாப்பும் கருதி கோவிலோடு ஒருங்கிணைவு செய்யப்பட்டுள்ளதைக் காணலாம். தர்பார் மரபில் இருந்த தஞ்சை நால்வர், தலைக்கோலி அங்கீகாரம், ஓவியர் சிங்காதனம், சித்திர செப்பேடுகள்  பற்றியும் இந்தப் புத்தகம் பேசுகின்றது.  இசையும் நடனமும் வெறும் தர்பார் மரபில் மட்டும் இருந்திருந்தால் தர்பார் அழிகையில் சேர்ந்து அழிந்திருக்கும், கோவில் மரபில் இணைக்கப்பட்டதால் தர்பார் அழிந்தாலும் கோவிலுக்குள் சடங்கென விதை வடிவில் பேண முடிகின்றது. கோவில் பராமாரிப்பு அன்றாட மக்களை இணைத்து நடப்பதால் தர்பார் அழிவினைத் தாண்டி ஓரளவுக்குக் கலை பராமரிக்க இது உதவுகின்றது.

இதே போல அனந்த சயனனின் மது, கைடப வதம், வீணாதார மூர்த்தி, ரிஷபாரூடர், சூரியன், வாலி வதம், கடவூரன், கங்கை, முருகன், வராகமூர்த்தி, துவாரபாலகர்கள்,கொற்றவை, காமதகனமூர்த்தி, கந்தவேளின் திருவடிவங்கள், கங்கை,சிவனின் திருவடிவங்கள், புத்தர், இலிங்க புராண தேவர்  என விரிவான கட்டுரைகள் உள்ளது.

மானுட மனதின் பரிணாம வளர்ச்சி: தெய்வ அம்சங்களை காண்பதில் இருந்து தத்துவ தரிசனம் வரை

மானுட மனதுக்குப் பருப் பொருளாகப் புறத்தில் உள்ளதைக் கண்டு அதன் நாம, ரூபம் கொண்டு புரிந்து கொள்வது எளிது. புலனுக்கு வெளியேயான பரு வடிவம் அற்ற இந்திரியங்களுக்கு அப்பாற்பட்ட வடிவம்  நோக்கிப் புரிதலை அமைத்துக் கொள்ளுதல் கடினம். அது நீண்ட பயிற்சியின் வழியே, பக்குவத்தின் வழியே வந்தமைவது.

இதைக் கொண்டு பார்த்தால் மானுட மனம் தெய்வீக அம்சங்களைப் புறவெளியில் அடையாளம் காணுதல் கற்காலம் தொடங்கி உண்டு, மெல்ல மனம் பக்குவத்தில் வளர்கையில் அது தெய்வீக அம்சங்களின்  பௌதீக வடிவமற்ற, சிந்தனையில் புலப்படக் கூடிய, ஐம்புலன்களுக்கு அப்பால் ஆன தத்துவ அமைப்பையும் கண்டது, தத்துவங்களின் உறவினைக் கண்டது. ஊர் காவல் தெய்வங்கள் துவக்கத்தில் மானுட மனம் கண்ட  தெய்வீக அம்சங்கள். அது மெல்லச் செம்மையாக்கம் கண்டு தத்துவமாக்கலை நோக்கி நகர்ந்த விதம் குறித்தும் இந்நூல் பேசுகின்றது.

அப்படி நகரும் நிலையின் ஒரு படியாகக் குலதெய்வக் கோவில்களில் உள்ள யானை, குதிரைகள் எவ்வாறு அறம், பொருள்,  இன்பம், வீடுபேறு என்னும் புருஷார்த்தத்தில் வீடுபேற்றை நோக்கியது. வீடுபேறு சாத்தியம் என்பதற்கான அடையாளங்கள் ஊர் எல்லைக் காவலில் இருப்பது எத்தனை பெரிய விஷயம். ஐயனார் கோவில் யானையும், புரவியும் என்ற தலைப்பில் உள்ளக் கட்டுரையில் குதிரைகளையும், யானைகளையும் புரிந்து கொள்வது பற்றி விரிவாகப் பேசியுள்ளார்.

ஐயனாரினை இந்திய மரபு ரேவந்தா என்னும் வேத தெய்வமாகவும், ஊர் காக்கும் காவல் தெய்வமான மாசாத்தன், மகாசாஸ்தா என்றும் சொல்லித் துவங்குகின்றார்.மரபின் சிற்பக் கலை நூல்களில் ஐயனார் கோவில்களுக்கு இலக்கணம் உண்டு. கிழக்குத் திசையில் அல்லது சிவாலயங்களுக்கு அருகில் ஐயனார் கோவில் அமைக்கப்பட வேண்டும். ஐயனார் ஆலயத்தில் யானை உருவமும், குதிரை உருவமும் நின்றவாறு காணப்படும்.

சைவ இலக்கியங்கள் வழியே எப்படிக் குதிரையும், யானையும் மோட்சச் சாதனங்கள் ஆயின எனக் கட்டுரை காட்டுகின்றது. சொல்லால் ஆன சைவ இலக்கியம் சிற்ப வடிவிலும் திருநெல்வேலிக் கோவிலில் உள்ளதை சொல்கின்றது.

சைவ மரபின் மோட்சம் கயிலாயம். அதற்கான பயணத்தினை உலா என சொல்லும் வழக்கம் உண்டு. கைலாயத்தில் நிகழ்ந்த சைவ இலக்கியமான “திருக்கயிலாய ஞானவுலாவினை” பரமனுடன் கேட்டு மகிழ்ந்தவர் ஐயனார், பின் அதைச் சோழநாட்டின் பிடவூர் என்னும் தளத்தில் வெளிப்படுத்தினார். அங்குள்ள ஐயனார் ஆலயத்தில் இதை இன்றும் கண்ணால் சிற்ப வடிவில் காணலாம்.

இதில் கயிலாய உலாவுக்கான வாகனங்கள் குதிரையும், யானையும் . இதை மண்னுக்கு கொண்டு வந்தவர் ஐயனார். கங்கை கொண்ட சோழபுரம் அருகே சலுப்பை ஐயனார் கோவிலில் உள்ள 40 அடி உயரம், 50 அடி நீளம் உள்ள யானை சுதை உருவம் பற்றிக் கட்டுரை குறிப்பிடுகின்றது. இறுதியில் திருவாரூர் மாவட்டம் பெருக வாழ்ந்தானில் ஐயனார் கோவிலில் திருவிழாவாக நிகழும் சடங்கினை விரிவாகப் பதிவு செய்கின்றது.

இறுதியில் ஐயனார் ஆலய யானைகளும், குதிரைகளும் நம் கலைப்பண்பாட்டு  மரபு சின்னங்கள் என நிறைவுறுகின்றது.

கோயில் தரிசனம் முழுமை பெறக் கோபுரம், பிரகாரம், கருவறை என மூன்று நிலைகளில் பயணிப்பது போல, பாலசுப்ரமணியனின் இந்த இரு நூல்களும் மூன்று பரிமாணங்களில் நம் புரிதலை முழுமைப்படுத்துகின்றன:

கோபுரம் போல உயர்ந்து நிற்கும் முதல் பரிமாணம் கலையின் மொழியை நமக்கு அறிமுகப்படுத்துகிறது. சிற்பத்தின் முன் நிற்கும் நம் ஊமையான ரசனையைச் சொற்களாக்கி, கலையின் நுணுக்கங்களை விளக்குகிறது.

பிரகாரங்கள் போல விரிந்து பரந்த இரண்டாவது பரிமாணம், கலை என்பதை அன்னியப்படுத்தப்பட்ட ,துண்டிக்கப்பட்ட தனிமனிதனின் படைப்பாக மட்டும் பார்க்க தேவையில்லை என்பதை உணர்த்துகிறது. அனைவரும் சேர்ந்து செய்யும் வேள்வி என சொல்கின்றது. தத்துவஞானிகள், சிற்பிகள், ஆட்சியாளர்கள், பொதுமக்கள் என அனைவரின் கூட்டு முயற்சியில் உருவான கலைச்சூழலியலை விளக்குகிறது.

கருவறை போல ஆழமான மூன்றாவது பரிமாணம், மானுட மனதின் பரிணாம வளர்ச்சியைப் பதிவு செய்கிறது. ஊர்க்காவல் தெய்வங்களிலிருந்து தத்துவார்த்தச் சிந்தனைகள் வரை, பருப்பொருள் புரிதலிலிருந்து சூட்சுமப் புரிதல் வரை நம் முன்னோர்கள் கடந்த பாதையை வரைபடமாக்குகிறது.

சுருங்கச் சொன்னால், கோயில் தரிசனம் போல இந்த நூல்களும் வெறும் பார்வையாளர்களாக நம்மை விட்டுவிடவில்லை. கலையின் மொழியைக் கற்றுத்தந்து, அதன் சமூக வேர்களை விளக்கி, அதன் ஆன்மீகப் பரிமாணங்களை உணர்த்தி, கலையின் முழுமையான ரசிகர்களாக நம்மை உருவாக்குகின்றன. நம் பண்பாட்டு அடையாளங்களை அறிந்துகொள்ளவும், அதன் வழியே எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்கவும் உதவும் விளக்குகளாக இந்த நூல்கள் திகழ்கின்றன.


Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

2 Replies to “பண்பாட்டுத் தரிசனம்”

  1. “பண்பாட்டுத் தரிசனம்” என்ற உங்கள் கட்டுரை, குடவாயில் பாலசுப்ரமணியனின் அவர்களின் புத்தகங்கள் கொடுக்கும் ஆழமான பார்வையையும் தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்களையும் விவரிப்பதைப் பற்றியும் ஒரு சிறப்பான கவனிப்பாக இருந்தது. கோவிலின் கட்டமைப்பை வைத்து இரு நூல்களின் பரிமாணங்களைச் சொல்லியிருப்பது மிக அழகான தொடக்கம். அந்த பார்வையை எப்படி அடைந்திருப்பீர்கள் என்று சில மணித்துளிகள் படிப்பதை நிறுத்தி யோசிக்கவைத்தது. நான் தஞ்சாவூர் மற்றும் தாராசுரம் கோவிலுக்குச் செல்லும்போதெல்லாம் அதனுள் உறைந்திருக்கும் ஒன்றை வார்த்தைகளைக் கொண்டு விளக்கமுடியாமலே இருக்கும். இவ்விரு நூல்களும் அதற்குப் பாலமாக இருக்கும் சொல்லியிருப்பது இந்நூல்கள் என்னிடத்தில் எதை இட்டு நிரப்பப்போகிறது என்பதின் முக்கியத்துவத்தைத் தெளிவாகவே சொல்கிறது. அது ஒரு நல்ல தூண்டல். சிற்பத்தின் அழகியல் கூறுகளை மட்டும் அல்லாமல், அதன் ஆன்மிகம் சார்ந்த புரிதல்களையும் கவனத்தில் கொண்டு, அந்த விவரங்கள் கோயில்களின் கலைக்கூடத்தன்மையை சுட்டிக்காட்டுகின்றன. புதுமை மற்றும் உலகமயமாக்கல் போன்றவை நமது பாரம்பரியத்தை எப்படி மிதமாக்குகின்றன என்பதை இப்புத்தகங்கள் தெளிவாக்குகின்றன. இலக்கிய புத்தகங்களையே படித்துக்கொண்டிருக்கும் என் போன்றவர்களுக்கு இது போன்ற புத்தகங்கள் மேலும் விரிவான ஆழமான புரிதலைக் கொடுக்கும் என்றே நம்புகிறேன். பகிர்ந்ததிற்கு நன்றி.

Leave a Reply to சு.வெங்கட்Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.