புத்தனின் புன்னகை

மாலை  சூரியன்  ஒட்டத்தை முடிப்பதற்காக  விரைந்து நிறங்களை மஞ்சள் , தங்க, சிவப்பு, ரோஸ் என மாற்றி தன் வீட்டிற்குள் புகுந்து கதவடைத்ததால் இருள் சூழ்ந்தது . நிலவு வருவதற்கு நீண்ட நேரமிருந்தது. நடைபயிற்சி முடிந்து வீட்டிற்குள் நுழைந்தார் மணிவாசகம். மணி ஏழு இருக்கும். தனது படுக்கை அறையை அடைந்து  வியர்வையில் நனைந்த உள்,வெளி பனியன்களை கழற்றி துவைக்க சேர்த்து வைக்கும் பிரம்பு கூடையில் போட்டு, டிராக் பேண்டிலிருந்து வேட்டிக்கு மாறி டிராக் பேண்டையும் கூடையில் போட்டுவிட்டு , அறை பேனை ஆன் செய்து கட்டிலில் படுத்து கை கால்களை தளர்வாக்கி ஒய்வெடுக்க ஆயத்தமானார். ஒய்வு பெற்று  வேலையில்லா புதிய வாழ்வை துவக்கி தினமும் காலை மாலை நடை பயிற்சி செல்வதை வழக்கமாக்கி நண்பர்களையும் அங்கே கண்டடைந்து நேரத்தை மிகக் கவனமாக செலவு செய்தார். உடலை தளர்த்தி வியேர்வை ஈரம் போக காற்றை வாங்கி சுவாசத்தை கவனிக்க கவனிக்க மூச்சு இயல்பாகியது. கொஞ்ச நேரத்தில் கவனம் உடல் முழுவதும் பரவும்  போது மனைவியின் அழைப்பொலி கேட்டது.

என்னாங்க தூங்கிட்டிங்களா ? இல்ல நடந்த களைப்ப போக்க படுத்திருங்கிங்களா?

திடுக்கிட்டவர் தன் நிலைக்கு திரும்பி உடனே கண் திறக்காமல் எரிச்சலோடு

என்னா  சிவகாமி இப்ப தானே வாங்கிங் முடிஞ்சி உள்ள வந்து படுத்தேன் கொஞ்சநேரம் கழிச்சி கூப்புடலாம்ல

சரிங்க கோவிச்சிகாதீங்க. உங்க பொண்ணும் பேரனும் அவசரபடுத்துனாங்க அதான் கூப்டுட்டேன். சரி அரை மணி கழிச்சி வந்து பாக்குறேன்.

எங்களின் ஒரே மகள் சுகன்யா ஆஸ்திரேலியாவிலிருந்து விடுமுறைக்காக தன் ஐந்து வயது மகனோடு வந்திருக்கிறாள். மருமகனுக்கு கொடுக்கப்பட்ட  விடுமுறை கடைசி நேரத்தில் நிராகரித்து அவசர வேலை கொடுத்ததால் வர இயலவில்லை. பேரன் விக்ரமின் வருகையால் நன்றாக பொழுது வீணாகாமல் போகிறது அவனும் என்னிடம் கார்டூனும் டிவியும் போல ஒட்டிக் கொண்டான். டிவி , மொபைல் அதிகம் பழக்கப்படுத்தாமல் விளையாடவும் , புத்தகங்களை படிக்கவும்,சமயங்களில் என்னுடன் நடைபயிறசிக்கு குதுகலத்துடன் வருவதும் பழக்கமானது 

இன்று விக்ரமை நடைபயிற்சிக்கு அழைத்து செல்ல நாற்காலியில் அமர்ந்து தேநீர் அருந்திய நிலையில் கூப்பிட்ட போது அவன் வரவில்லை பதிலும் இல்லை படுக்கையறைக்கு சென்று பார்த்தால்  உமிழ்நீர் வழிய கை கால்களை குறுக்கி நன்றாக தூங்கிவிட்டான். ஒரு கணம் கண்களில் பரவசம் பரவி அருகே சென்று உடல் முழுவதும் தடவி தலையை கோதிவிட்டேன்.இன்று நடைபயிற்சிக்கு  அழைத்து செல்லவில்லை  . எட்டு மணிக்கு மேல் ஆகிவிட்டது சிவகாமி வந்து அறைக்கதவை முழுவதும் திறக்காமல் முகம் மட்டும் போகுமளவுக்கு திறந்து அழைத்தாள் அதற்குள்ளாக எழுந்து விட்ட பேரன் விக்ரம் பின்பற்றி வந்தது அவளுக்கு தெரியாததால் கதவுதிறந்த இடைவெளியில் புகுந்து நான் படுத்திருந்த கட்டிலில் ஏறி என்  மீதமர்ந்து எழுப்ப முயற்சித்தான். 

தாத்தா எழுந்திரிங்க என்று  உடலில் இருபக்கமும் கால்களை போட்டு அமர்த்தபடி புன்னகை தவழும  முகத்தோடு குதித்தான். உடல் தளர்வுக்காக படுத்திந்ததால்

சட்டென்று விழித்து விக்ரமை பிடித்து லேசாக உலுக்கியவாறே கதவின் திறப்பில் எட்டிப்பார்க்கும் மனைவியிடம்

என்ன விஷயம் . வந்து கூட்டுகிட்டே இருக்க, பத்தாதாதற்கு பேரான்டியும்  வேற வந்துட்டான் , பேரனை தூங்கி கொஞ்சிக் கொண்டே கேட்டார்.

இன்னிக்கு கரண்ட் ஷட்டவுன்னால பிரிட்ஜு வேல செய்யல , மாவு ரெம்ப புளிச்சிடிச்சி , ராத்திரிக்கு வெளியதான் சாப்புடனும் கிளம்புங்க போய் ஏதாவது  வாங்கிட்டு வாங்க .

இன்னிக்கு ஷட் டவுன்னு தெரியும் மாவு புளிச்சிடிச்சா? சரி பரவாயில்ல வெளிய வாங்கிக்கலாம். நாமட்டும் போக முடியாது நீயும் கெளம்பு இவனையும் கூட்டிட்டு போலாம். அன்பு மெஸ்ல வாங்கிக்கலாம்.

நானும் வரணுமா ? நீங்க மட்டும் போனா போதாதா? சரி சரி மொரைக்காதிங்க நானும் வர்றேன் அங்க வேணாங்க ராம் ஆரியாஸ்ல வாங்கலாம் 

பேரனை தூக்கி முத்தம் கொடுத்து இறக்கிவிட்டு சட்டை மட்டும் அணிந்து வேட்டியுடன் புறப்பட்டு விட்டேன் துள்ளியபடி விக்ரமும் ஆடிக்கொண்டே வீட்டிற்கு வெளியே நிற்கும் ஆக்டிவாவின் சீட்டிற்கு முன்பகுதியில் ஏறி நின்று  கைகளை உயர்த்தி ஆர்பரித்து  கூப்பிட்டான்.

தாத்தா வாங்க சீக்கிரம்  வண்டில போலாம்.

இருடா வர்றேன் அம்மாச்சியையும் கூப்டுக்கலாம். என்ன வாங்குறதுன்னு சொல்லுவாங்க.

மனைவியை அழைத்தேன் 

சிவகாமி நீயும் கெளம்பு என்னன்ன வேணும்னு அங்க போய் முடிவு செஞ்சிக்கலாம். 

நானுமா? உங்களோட எப்பொழுதும் தொல்ல தாங்க , நீங்களும் ஒங்க மகளும் படுத்துறபாடு தாங்கல என சிரித்தபடி செல்லமாக கோபித்து பேரனின் தலையை தடவி கன்னத்தை கிள்ளி முத்தமிட்டாள்.

இருங்க போய் பைய எடுத்துட்டு வர்றேன், இப்பெல்லாம் பை தர்றதுல்லே விட்டினுள் சென்று நல்ல துணிப்பையை எடுத்து வந்தாள்.

ம். போலாங்க எங்க போவனுன்னு சொல்லனுமா ?

இல்ல நீ தான் முன்னாடியே சொல்லிட்டியே. அப்புறம் என்ன மறு பேச்சு ராம் ஆர்யாஸே போய்டுறேன்.

எலிசா நகர் ஆர்ச் வழியாக திருச்சி சாலையில் பயணித்து புது பஸ்ஸ்டாண்டு எதிரில் உள்ள ராம் ஆர்யாஸ் ஹோட்டலுக்கு வந்து சேர்த்தோம். இரவில் அதிகம் வெளிச்சமிலா ரோட்டில் வந்ததால் விக்ரம் பயணத்தை ரசிக்கவில்லை ஒரு வித விலக்கத்துடனே இருபுறமும் பார்த்தவன்மை வந்தான். இருளின் ஆட்சியால் வேடிக்கை பார்க்கும் ஆர்வம் குறைந்திருந்தது.  .சரபோஜிகாலேஜ்  பக்கமாக நிலவு தெரிந்தது அவ்வப்போது மறைந்து பஸ் ஸ்டாண்டு பக்கம் வந்த போது  மரங்களோ கட்டிமோ மறைக்காததால் முழு அளவு தெரிந்தது. முழுமையாக நிலவை பார்த்து கை தட்டியவன் எனது தொடைகளில் கைகளால் சுரண்டியும்  தட்டியும்  தாத்தா நிலா என சுட்டி குதுகலித்தான். பஸ்ஸ்டாண்டு பக்கம்  நல்ல வெளிச்சமும் விதவிதமான கடைகளின் எல்ஈடிவிளம்பர போர்டுகளின் பல நிறங்களின் ஜாலங்கள் அவனை கவர்ந்தால்  வந்து சேர்ந்தவுடன் குதுகலத்துடன் கைகால்களை ஆட்டியும் குதித்த படி இறங்க துடித்தான். அவன் பாட்டி தான் அவன் மீது ஒரு கண்வைத்து ஆடாத, குதிக்காதடா என  எச்சரித்து  கண்காணித்தாள். நல்ல வேளை ஹோட்டலின் முன்புறம்  வாகனம் நிறுத்துமிடத்தில்  நிறைய வாகனம் இல்லததால் வாகனம் நிறுத்த சுலபமாகவும் திரும்பவும் எடுக்க வசதியாகவும் நிறுத்தி இருவரையும் இறக்கி விக்ரமை ஒரு கையால் பாதுகாப்பாக பிடித்து மறுகையால் வாகனத்தை  பூட்டி ஹாண்டில் பாரை ஆட்டி பூட்டப்பட்டதை உறுதி செய்தேன்.

கூட்டம் அதிகமில்லை  எப்பொழுதும் ஹோட்டலின் முன்புறமும் உள்ளேயும் கூட்டமாக இருக்கும்.சாப்பிடுவோர் எண்ணிக்கையும் குறைவாகவே இருந்தது. பார்சல் பகுதியில் ஆறேழு பேர் கையில் பையோடு  இருந்தனர்.மனைவியின் பக்கம் திரும்பி  கல்லா பெட்டிக்கருகில் நின்று.

சிவகாமி என்ன வாங்கனும். விக்ரமுக்கு என்ன வேணுமூன்னு கேளு அதையும் வாங்கிடலாம்.

உங்க பொண்ணுக்கு மசாலா தோசை , பேரனுக்கு மினி இட்லி வேணுமாம், எனக்கு மூனு உங்களுக்கு அஞ்சு இட்லி வாங்கிடுங்க 

ம்.சரி போதுமா? வேற எதும் சேக்கனுமா பில் போட்டுட்டா திரும்பவும் போடனும் பார்சல்ல சமயத்துல லேட்டாயிடும் பாத்துக்க. ஏற்கெனவே நிறைய பேர் நிக்குறாங்க.

இல்லங்க இது போதும். அதுக்கு மேல சாப்பிட முடியாம தூக்கி போடுற மாறியாய்டும் என்றாள் கண்டிப்புடன்.

கல்லா பக்கத்திலிருந்த பில் போடுபவரிடம் தேவையை சொல்லியவுடன். மூன்று விதமான அளவுகளில்  சுலபமாக பிய்த்துக் கொள்ளும் வரையில் பில் வந்தது ஒன்று வரிசை எண் மட்டுமுள்ளது இரண்டாவது வரிசை எண் ஆர்டர் செய்த தேவைகள் ,மூன்றாவது தேவைகளும் ,தொகையின் குறிப்பும் ,மொத்த தொகையும் உள்ள பகுதி .குறிப்பிட்ட தொகையை செலுத்தியவுடன். வரிசை எண் , மொத்த தொகை செலுத்திய பகுதியும் தரப்பட்டது. வரிசை எண் உள்ள பகுதியை பார்சல் செய்பவர்  வரிசை எண்ணை குறிப்பிட்டு  கூப்பிடும் போது கொடுத்தால் நம் தேவையை கட்டி வைத்திருந்ததை கொடுப்பார் . பில்லில் குறிப்பிட்ட தொகையை பார்த்து ஐந்நூறு ரூபாய் நோட்டை குடுத்துவிட்டு  பாக்கி சில்லரை வாங்குதற்குள்ளாக ஒருவர் அவசரமாக வந்து நான்கு ரவா தோசை பார்சல் எனச் சொல்லி பில் போடச் சொன்னார் பில்லில் குறிப்பிட்ட தொகைக்கு ஏடிஎம் கார்டை பயன்படுத்த எடுத்தார். அரைடிராயரும் டீசர்ட்டும் அணிந்து  இடையே விக்ரம் இங்குமங்கும் வேடிக்கை பார்த்துக் கொண்டு  ஆடியபடி வருகிறவர்கள், போகிறவர்கள் மீது இடித்தும் புன்னகைத்தும் விளையாடி ஏடிஎம் கார்டு கொடுப்பவர் மீது இடித்து கார்டு  கையிலிருந்து  தவறி கீழே விழுந்தது.

ஏற்கெனவே ,அவசரத்திலும், கோபத்திலிருந்தவர் ஏடிஎம் கார்டு  கீழே விழுந்ததால் மேலும் கோபமடைந்தவர் 

என்னாப்பா சும்மா ஒரு இடதுத்துல நிக்கமாட்டியா ஆடிகிட்டு இருக்க என முறைத்தது கீழே விழுந்த ஏடிஎம் கார்டை  எடுத்து கல்லாவில் இருந்தவரிடம் கொடுக்க போனார். விக்ரம் கொஞ்சம் பயந்து பாட்டியிடம் சென்று புடவை மறைவில் மறைந்து நின்றான்.

 ஜிபே , போன் பே மட்டும்தான் சார் கார்டு மிஷின் ரிப்பேரா இருக்கு தப்பா எடுத்துக்காதீங்க  என்றார் கல்லாவிலிருந்தவர்.

அனேகமாக கோபத்தின் உச்சிக்கே போயிருப்பரென நினைத்தேன் .

என்ன சார் ஹோட்டல் நடத்துறீங்க மிஷின உடனே ரிப்பேர் பண்ண மாட்டிங்களா கஸ்டமர இப்படித்தான் அலைய விடுவீங்களா ? ஜிபே நிச்சயமா இருக்கா? கார்ல செல்ல வச்சிட்டு வந்துட்டேன். போய் எடுத்துட்டுவந்துர்றேன் பில்ல வச்சிருங்க என ஹோட்டலில் இருந்து வெளியேற திரும்பினார். 

சார் இருங்க கார்டு போடுற மிஷின எடுக்குறேன் சரியா இருந்தா நல்லது சமயத்துல சரியா காட்ட மாட்டுது இல்லேன்னா பிரிண்ட் அவுட் காப்பி வரமாட்டுது. என கல்லாப்பெட்டியின் கீழிருந்து எடுத்தார். 

என்ன சார் கார்டு போட லேட்டாவுதுன்னு உள்ள வச்சி ஏமாத்துறீங்களா ? ஒன்னும் சரியில்லயே முதலாளி கிட்ட சொல்லனும் உங்களை எல்லாம் வேலைய விட்டு தூக்கனும் அப்பதான் இது சரியாகும் என்று கார்டை  கோபத்துடன் முறைத்தபடி குடுத்தார்.

சார் நடக்குறத சொல்றோம் . கார்டை சொருகி அவர் பக்கம் திருப்பி பின் நம்பரை போடுங்க என்றார் அவரும் பின் நம்பரை டைப் செய்தார்.  எவ்வித சங்கடமும் ஏற்படுத்தாமல் பில் வந்தது கூடவே ஸ்வைப் மிஷினில் இருந்து வந்த பணம் பெற்றுக் கொண்டதற்கான பிரிண்டவுட்டும் சேர்த்து கொடுத்தார். பணபரிவர்த்தனையை பார்த்தவர் அதை கசக்கி கல்லா பெட்டிக்கருகிலிருந்த குப்பை கூடையில் போட்டுவிட்டு பார்சல் கட்டுமிடத்திற்கு நடந்தார். கல்லாவிலிருந்தவர் வேடிக்கை பார்த்த என்னிடம் மீதி சில்லறையை தந்தபடி ஒரு பெருமூச்சை விட்டார். அப்படி என்ன அவசரமோ என தனக்குத் தானே எனக்கும் கேட்கும்படி சொல்லிக் கொண்டார்.

நாற்பதடி தள்ளி கைகழுவும் இடத்திற்கு சற்று அருகே இருந்தது பார்சல் கட்டி தருமிடம். இரண்டு நீள சாய்மானமுள்ள இருக்கைகள் , சர்வர்கள் போக வர நல்ல அகலமாக இடம் விட்டு  போடப்பட்டு இருந்தன பார்சல் வாங்குவோர் அதிலமர்ந்து தனது வரிசை எண் அழைக்கும் வரை காத்திருக்கலாம் அல்லது நின்று கொள்ளலாம். தலைக்கு மேலே பேன் ஓடியது வியர்க்காமல்  வசதியாக இருந்தது . பார்சல் கட்டுமிடதிற்கு பின்புறம் பெரிய சமயலறை என்பதாலும் தடுக்கப்பட்ட சுவரில் ஐந்தடி நீளமும் இரண்டடி அகலமும் கொண்ட திறப்பின் வழியே ஆர்டர் செய்யப்பட்ட தேவைகள் சொல்லி அவை செய்யப்பட்டு வைக்கும் அளவுக்கு அமைக்கபட்டிருந்தது. புகை போக்கியும், வெப்பக் காற்றை உறிஞ்சி வெளியேற்றும் பேன் ஓடினாலும் லேசான வெப்பமும், புகையும்  அவ்வழியாக வெளியேறி கண் எரிந்தது.. அவசரமாக பில் வாங்கியவர் இருக்கையில் உட்காராமல் நின்று விட்டார் சிவகாமி விக்ரமை மடியில் வைத்து அமர்ந்து என்னையும் உட்கார சொன்னாள். நான் வேண்டாமென தலையாட்டி இருக்கையின் கைப்பிடியருகே நின்றேன்..

பார்சல் கட்டுபவருக்கு வரிசை எண்ணும் என்ன எவ்வளவு கட்ட வேண்டுமென்ற பில்லின் ஒரு பகுதியும் சர்வர்கள் மூலம் வந்து சேர்ந்து அவை திறப்பின் வழியே கொஞ்சம் சத்தமாக சொல்லப்படும். சொல்லப்பட்டவை தயார் செய்து திறப்பின் கீழே திண்ணை போன்ற அமைப்பு கொஞ்சம் அகலமாக அமைக்கப்பட்டிருப்பதில்  வைக்கப்பட்டுவிடும். பார்சல் கட்டுபவர் வரிசை எண் படி  கட்டி தனித்தனியாக சாம்பார் சட்டினி குருமா ஆகியவற்றுடன் சேர்த்து வைத்து முழுமை பெற்ற வரிசை எண் வைத்துள்ளவரை அழைத்து நெகிழி பைகள் இல்லாமல் கெட்டியான காகித பைகளில் கொடுக்ப்படும்.  பார்சல் பகுதியில் வழக்கமாக இருவர் அல்லது மூவரிருப்பர் அன்று ஒருவர் மட்டுமே இருந்தார். மிக இளம் வயது இருபத்தியத்திற்குள் இருக்கலாம். நல்ல உயரமாய், விளக்கிவைத்த செம்பு நிறம் புகைச்சலால் சற்றே மங்கியது போல தெரிந்தது. ஒல்லியாக திருத்தமாக சீருடையணிந்து புன்னகை மாறாத முகமாக இருந்தார். தலையில் சர்வர்கள் அணியும் தொப்பி இருந்ததால் முடியழகை காண இயலவில்லை நிச்சயம் வழுக்கை இருக்க முடியாது கிருதா பக்கம் கொஞ்சம் இறக்கி 80 களில் வைத்திருந்தது போல அகலமாக இருந்தது.  கருகருவென முடி விளக்கு வெளிச்சத்தில் பளபளத்தது.அவரின் முக அழகை மேலும் பொலிவாக காட்டியது. புன்னகைக்கும் போது காதுவரை உப்பிய கன்னங்கள் சிவப்பேறி அதன் செழுமையை நிருபித்தது. அழுத்தமான அமைதியான சிலைகளில்  புத்தரை காணும் வகையில் அவரின் முகமிருந்தது .

இளமையினால் கண்களின் கூர்மையும் பிரகாசிப்பும் அதிகமிருந்ததோடு மிக ஆழத்தில் அமைதி தெரிந்தது அவ்வமைதியினால் புன்னகை  மயக்கும் வசீகரத்தை தெறித்தது. பார்சல் கட்டுவதிலும் வரிசை எண்ணை அழைப்பதிலும் தனித்துவமும் பணிவுடன் கண்டிப்பும் நிறைந்திருந்தது.. இருபது நிமிடங்கள் கரைந்தது குறிப்பிட்ட எண்ணை மூன்று முறைகள் அழைத்தார் ஒருவரும் பதிலளிக்கவில்லை.

அவரமாக பில் வாங்கியவர் நிலை கொள்ளாமல் இங்கும் அங்கும் நடந்தபடியும் மொபையில் பேசியும் தவித்தார். இருபது நிமிடமாகியும் அவருக்கான வரிசை எண் கூப்பிடப்படவில்லை. பார்சல் கட்டுபவரிடம் 

என்னாப்பா என்னோட ஆர்டர் ரவா தோசைகள் வந்துடுச்சா  ரெம்ப நேரம் ஆயிடிச்சே 

சார் உங்க ஆர்டர் நம்பர சொல்லுங்க

அவர் ஒன்றும் புரியாமல் நம்பர் எனக்கு தெரியாது எனக்கு மூனு ரவாதோசை மட்டும்தான் என்றார்.

சார் நம்பர் இருக்குற சீட்ட பாருங்க பில் தரும் போதே குடுத்திருப்பாங்க 

இல்லை எனக்கு தரலை ரெம்ப நேரமா நிக்குறேன் என்னா வேல பாக்குறீங்க தர முடியுமா முடியாதா?

சார் உங்க வரிசை நம்பர் உள்ள சீட்ட குடுத்துட்டு வாங்கிட்டு போங்க என்றார் அதே புன்னகையோடு

அவசரக்காரர் கோபமடைந்து வசைபாட ஆரம்பித்தார்.

டேய் உன்ன மாறி ஆட்களாலதான் கடையின் பேர கெடுது பில்லுல நம்பரே தரல  இங்க வந்து தான்னா எப்படி தர முடியும் கம்ப்ளைன்ட் பண்ணி வேலையவிட்டு தூக்கனும் என கோபமாக  முகம் சிவக்க கழுத்து நரம்புகள்  புடைக்க கத்தினார்

பார்சல் கட்டுபவர் அசரவில்லை

சார் மரியாதயா பேசுங்க உங்க நம்பர் உள்ள  சீட்ட குடுங்க குடுக்குறேன் அதவிட்டுட்டு கத்தாதீங்க  பக்கத்தில உள்ளவங்கிட்ட கேட்டு பாருங்க சீட்டு குடுத்திருப்பாங்க என்றார் அமைதியாக.

அவசரக்காரர் என்னை பார்த்தார். நாள் உடனே எனது வரிசை எண் உள்ள சீட்டை காட்டினேன்.

சார் இத பாருங்க இது மாறி குடுத்திருப்பாங்க என்றேன்.

கோபத்தில் பார்சல் கட்டுபவரை முறைத்து பார்த்து 

சீட்டு இல்லாம பார்சல தர மாட்டியா ? உன்ன என்ன பண்றேன் பாரு என கூச்சலிட்டார் 

பார்சல் கட்டுபவர் அழுத்தமான புன்னகையுடன் மிகப் பொறுமையாக  சார் வரிசை எண் உள்ள சீட்டு இல்லேன்னா தர முடியாது சீட்டு இருந்தா குடுங்க தர்றேன் என்று அவரை அலட்சியப்படுத்திஅடுத்த வரிசை எண்ணை அழைத்தார்.

டோக்கன் நம்பர் 48 வாங்க உங்க பார்சல் ரெடி என்றார்

எனது மனைவி மெதுவாக பார்சல் கட்டுமிடத்திற்குள்ளாக எட்டிப் பார்த்தாள்.

அவர் அமைதியான சற்றே விரிந்த புன்னகையோடு 

அம்மா இங்க வெறும் சாம்பார் சட்னி மட்டும்தான் இருக்கும் உள்ளே இருந்து செஞ்சிதான் தருவாங்க உங்க நம்பர சொல்லுங்க ரெடியாயிடிச்சானு பாக்குறேன்

சட்டென்று விக்ரமை பார்த்து கையசைத்தார்.

எங்க நம்பர் 51 என்றாள் சிவகாமி

இன்னும் ஒரு பத்து நிமிசத்துல ரெடியாய்டும் இட்லி அடுத்த ஈடு எடுக்க போறாங்க ப்ளீஸ் வெயிட் என்றார் 

பார்சல் கட்டுபவரை பார்த்து கோபம் குறையாத நிலையிலும் சீட்டு இல்லாம தரமாட்டீங்க அப்படித்தானே.

இல்லையே எனக்கு தரலயே என முன்னந்  தலையில் கைவைத்து யோசித்தார். கல்லாவில் அமர்ந்திருந்தவரை நோக்கி நடந்து அவரை அனுகி 

சார் எனக்கு நம்பர் இருக்குற சீட்டு தரலயே என்றார். கூட்டமில்லாததால் அவர்கள் பேசுவது பார்சல் கட்டுமிடம் வரை கேட்டது.

சார் பிரிண்ட்டவுடோட பில்லும் சேத்துதான் குடுத்தேன் நல்லா பாருங்க உங்ககிட்ட தான் இருக்கும் என்றார் கல்லாவிலிருந்தவர்.

சார் நா ஏன் பொய் சொல்லனும் எங்கிட்ட நீங்க தரல, பிரிண்ட்டவுட்ட அப்பவே கசக்கி குப்பையில் போட்டுட்டேன். பணம் கட்டுன பில்லுமட்டும் தான் இருக்கு தோ பாருங்க என பில்லின் கடைசி பகுதியை காட்டினார் அவசரக்காரர்

நல்லா பாருங்க சட்டை பையில வச்சிருக்க போறீங்க 

தோபாருங்க கார்டு மட்டும்தான் இருக்கு என ஏடிஎம்கார்டை எடுத்து காட்டினார். கஸ்டமர ஏன் இப்படி அலைய விடுறீங்க நம்பர் இல்லாத சீட்டு இல்லாம தரக்கூடாதா ?

இங்க அதான் சார் ரூல் நைட்டு கணக்கு பாக்குறப்ப இடிக்கும் சார் ரெண்டையும் ஒத்து பாப்பாங்க அப்புறம் எங்களுக்கு திட்டும் விழும் சம்பளத்துலயும்  பிடிச்சிடுவாங்க  . நாங்க என்ன செய்யுறது செல்லுங்க சார்.

இந்த பேச்சின் போது கல்லா பெட்டியிடம் நெருங்கி 

சார் எதுக்கும் ஒரு தடவ குப்ப தொட்டிய பாத்துடலாமே என்றேன்.

கல்லாவிலிருந்தவர் ஆமாம் சார் இதுவும் நல்ல ஐடியாதான் அதையும் பாத்துருவோம் 

கல்லாவிலிருந்து இறங்கி அதையொட்டி இருந்த குப்பை தொட்டியை எடுத்து அருகில் யாருமில்லாத மேஜையின் மீது கொட்டி தேடத் துவங்கினார் நாங்களும்  இணைந்து தேட ஆரம்பித்தோம். சற்று நேரத்தில்  அவசரக்காரர் கையிலேய அவரது பணம் பெற்றுக் கொண்டதற்கான பிரிண்ட்டவுட் கிடைத்தது. பிரித்து பார்த்த போது அதனுள்ளே வரிசை எண்ணுள்ள பில் இருந்தது.. அசட்டுச் சரிப்போடு முகத்தை சாதாரணமாக வைக்க முயன்று தோற்று பொலிவிழந்த முகமாக இருளடர்ந்தது . அவரால் இயல்பாக எங்களை பார்கவியலாத அளவுக்கு உடல் மொழியும், உடலும் தளர்ந்தது போல தெரிந்தது.

ரியலி வெரி சாரி சார் என்று சொல்லிவிட்டு வரிசை எண்ணுற்ற சீட்டை எடுத்துச் சென்று பார்சல்காரரிடம் கொடுத்து தனது பார்சலை கேட்டார்.

என்னோட நம்பர் இதுதான் இந்தாங்க என்னோட பார்சல் மூனுரவா தோசை தாங்க என்றார்.

பார்சல் கட்டுபவர் அப்பொழுதும் அதே அழுத்தமான புன்னகையோடு அவரின் பார்சலை கொடுத்தார்.

இந்தாங் சார் உங்க ரவா தோசை எங்கள் ஹோட்டலுக்கு வருகை தந்ததில் மகிழ்ச்சி மீண்டும் வருக என்றார். 

அவரசக்காரார் ஒன்றும் சொல்லாமல் எந்தவித சலனமில்லாமல் வெறுமையோடு பார்சலை வாங்கிக் கொண்டு சென்றார்

என் முறை வந்ததும் நானும் விக்ரமும் மனைவி சிவகாமியுடன் பார்சலை வாங்கிக் கொண்டோம். பார்சல்காரர் அப்போதும் அவரது அக்மார் புன்னகையுடனே கொடுத்தார். வீடு வந்து சேர்ந்தோம். அப்பொழுதே மணி ஒன்போதரை ஆகியிருந்தது

பசி அதிகமாக இருந்தால் வீட்டிற்கு வந்தவுடன் ஹாலின் கடைசியில் சமயலறைக்கு போகும் வழியில் இருந்த வாஷ் பேசினில் கைகளை நன்கு கழுவிய பேரனும் மகளும் நானும் சிவகாமியும் வீட்டின் ஹாலில் ஒன்றாக அமர்ந்து , சிவகாமி பார்சலை பிரித்து அனைவருக்கும் வழங்க எனக்கு இட்டிலியும் வந்தது சாப்பிட்டு முடித்தோம்.

சாப்பிட்டு முடித்து சற்று நேரம் கழித்து வெந்நீர் அருந்துவது எனது வழக்கம் சிவகாமியும் வெந்நீர் வைத்து கொண்டு வந்து கொடுத்தாள் .குடித்தபடி டிவியில் ஹாட் ஸ்டாரில புதியதாக வந்திருந்த சினிமாவை தேர்ந்தெடுத்து பார்த்தேன் சாப்பிட்டவுடன் படுக்கும் வழக்கமில்லை கொஞ்ச நேரம் டிவி பார்த்துவிட்டு குறுநடை முடிந்தே படுப்பேன்.

பத்தரைமணியிருக்கும் சிவகாமி வந்து என்னாங்க சுகன்யாவுக்கு வயித்து வலியாம் மாத்ர கையில் இல்ல கொஞ்ச போய் வாங்கிட்டு வந்துடுங்க என்றாள்.

சங்கடமும் கோபமும் கலந்த பார்வையுடன்.

என்னா சிவகாமி நேரம் காலமே கிடையாதா மணிபாத்தியா இப்ப வெளிய போவணுமா 

ஆமாங்க இப்ப போட்டாதான் மூனு நாளும் கஷ்டப்படாம இருப்பா நாளைக்குன்னா வலியும் அதிக மாய்டும் அப்புறம் ரெண்டு நாள் எந்திரிக்கவே மாட்டா என்றார்.

சாப்பிடுவாங்கச் சென்ற போது அணிந்த உடையுடனே சாப்பிட்டுவிட்டு அமர்ந்ததால்.டிவியும் ஜியோ செட்டாப் பாக்ஸையும் ரிமோட்டில் அனைத்து விட்டு எழுந்து உடனே வெளியே வந்து இருசக்கர வாகனத்தை எடுத்து தள்ளியபடி மெயின் கேட்டை திறந்து சற்று தள்ளி வாகனத்தை சைடு ஸ்டேன்டு போட்டு கேட்டை மூடிவிட்டு 

வாகனத்தில் அமர்ந்து சைடு ஸ்டேன்டை எடுத்து ஸ்டார்ட் செய்து புறப்பட்டேன்  .

R Rநகர் புதுக்கோட்டை சாலையில் பயணித்தேன் அங்கு  ஒரு மெடிக்கல் ஷாப் இருக்கும் அவர் பதினோரு வரை திறந்திருக்கும். மூன்று நிமிடத்தில் அங்கு போய் சேர்த்தேன்

மகளின் மருத்துவர் அளித்த சீட்டில் வலி மாத்திரை மட்டும் வேண்டும் என கேட்டு வாங்கிக் கொண்டேன்.

வாகனத்தில் பயணித்து RR நகர் திருப்பத்தில் டாஸ்மாக் கடையில் அப்பெழுதும் கூட்டமாக இருந்தது கூட்டத்திற்கு சற்று தள்ளி மங்கிய வெளிச்சத்திலும் பரிச்சியமான முகம் தெரிந்தது. சட்டென்று வாகனத்தை நிறுத்தி கவனித்தேன். தள்ளாடியபடியே வந்த அந்த நபரை கண்டு கொண்டேன் பார்சல்காரர் என்னையும்  பார்த்து விட்டு  முழு போதையில் ரோட்டை கடந்து என்னருகே வந்து வாகனத்தில் கை வைத்து தன்னனை நிதானப் படுத்த முயற்சித்து தோற்று நிற்கமுடியாமல் ஆடினார் . அவர் வாயிலிருந்து பச்சை பச்சையான வசையான வார்த்தைகள் வந்தன  அப்பொழுதும் அதே அழுத்தமான புன்னகையுடனான முகத்துடனிருந்தார் என்னையுமயறியாமல் என் முகத்தில் புன்னகை பரவியதை வாகனத்திலிருந்த கண்ணாடியில் பார்த்தேன்.


Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.