ஐஸ்க்ரீம் கதையை வாசித்து விட்டேன். மிகச் சிறந்த சிறுகதை. வாழ்வின் க்யூட்டான ஒரு துளியை ருசித்த அனுபவம்.

கதையின் சிறப்புகளாக நான் கருதுவது.
முதலில் நீங்கள் கதையைச் சொல்லத் தேர்ந்தெடுத்த மொழி:
“கோலீப்பட எந்திரிச்சி கோழிகள தொறந்துவிட்டு, கொட்டத்துல மாடுகளுக்கு செத்த போட்டு, கண்ணுகுட்டிக்கு மடியகாட்டி பாலக் கறந்து சொசைட்டில ஊத்தீட்டு, மேலுக்கு தண்ணிய ஊத்தி, அவுதியவுதியா சோத்த தின்னுட்டு கோயில் பாளயத்துக்கு சித்தாள் வேலைக்கு போகனும்”
அட்டாலி, தூக்குப் போவினி, தாட்டி விடும் முசுவு, இருளைப் பாடும் சீவிடு வண்டுகள் – இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். இந்த மொழி கதையின் உலகத்தை எளிதில் நம்முள் கடத்தி விடுகிறது.
இரண்டாவது வெள்ளையம்மாளின் உலகத்தைக் காட்ட நீங்கள் எடுத்துக் கொண்ட சிரத்தை. முதல் வரியிலிருந்தே நாம் அவளோடு பயணம் செய்யத்துவங்கி விடுகிறோம். உப்பிடமங்கலம் சாலை, மோகனூர் கோழிப்பண்ணை, கோவில்பாளையம் மாரியம்மன் கோவில், புலியூர் கடவீதி – என்று சரசரவென்று ஒரு கோட்டுச் சித்திரம் போல கதை நிகழும் களத்தை தீட்டிக்கொண்டே செல்கிறீர்கள். புற உலகும், அதனுடன் இணைந்து அவளது கொந்தளிப்பான அகத்தின் ஏக்கமும் சரடாகப் பிண்ணிப் பிணைந்தபடிச் செல்கிறது.
மூன்றாவது குறியீடு, படிமம், உருவகம் – என்று எக்கசக்க ஆர்வக்கோளாறு கொண்ட ஓர் இலக்கிய வாசகன் வெள்ளையம்மாளின் ஐஸ்கிரீம் தின்ன விரும்பும் ஆசை எதுவெதுவாகவோ கற்பனை செய்து கொள்ள வாய்ப்புகளையும் அளிக்கிறது கதை. முதல் வாசிப்பில் காலத்துக்குப் பொருத்தமற்ற நம் மனத்தின் ஏக்கங்களை வெள்ளையம்மாளின் ஐஸ்க்ரீம் சாப்பிடும் ஆசையைப் போன்றதுதான். என் புத்தக வெளியீட்டு மேடையில் நின்றபடி, “இதெல்லாம் நமக்குத் தேவையா?” என்று கூச்சம் என்னைப் பிடுங்கித் தின்றதை நினைவு கூறுகிறேன்.
என்னுடைய அவதானிப்பில் வெள்ளையம்மாள் அவளது மகனது சட்டையை அணிந்தபடி சித்தாள் வேலையில் ஈடுபடுவதை முக்கியமாகப் பார்க்கிறேன். அதை அணிந்திருக்கும்போது அவள் மனம் அமைதியுற்றிருப்பதைக் காண்கிறாள். மனம் கட்டுபட்டிருக்கின்றது. புலியூர் கடவீதியில் நின்றபடி, மகனின் சட்டையை தான் ஏன் அப்போது அணிந்து கொண்டிருக்கவில்லை என்று விசனப்படுகிறாள். நாமெல்லாம் கூட நமது ஐஸ்கிரீம் ஏக்கங்களுக்கு அரணாக இது மாதிரி ஏதாவது ஒரு சட்டையை வைத்துக் கொண்டிருக்கிறோமல்லவா?
கதை காட்சிகளாகவே நகர்வது வாசகனை வெள்ளையம்மாளின் உலகத்துக்குள் பிரவேசிக்கச் செய்ய எளிதாகவும், ஏதுவாகவும் இருக்கிறது. நிறைய நுண் தகவல். அந்த வட்டாரத்துக்கே உரித்தான தகவல்கள் கதைக்கு வலு சேர்க்கின்றன (குச்சிக் கிழங்கு விளைச்சல், மம்பட்டியும் காரைச்சட்டியும் கொண்டு செய்யும் சித்தாள் வேலை, புலியூர் கடவீதிக் காட்சிகள்). அவள் ஐஸ்கிரீமை சாப்பிடுவாளா? எப்படிச் சாப்பிடுவாள்? என்ற எளிமையான சுவாரசியத்தைத் தூண்டவும் கதை தவறவில்லை. நமக்குள் இருக்கும் அந்தக் கதை கேட்கும் குழந்தைக்குத் தேவை, ஒரு நல்ல கதைதான். அந்தத் தேவையை ஐஸ்கிரீம் பூர்த்தி செய்கின்றது. ஒரு நல்ல புனைவு என்பது முதலில் வாசகனை தன் உலகத்துள் வாழ அனுமதிக்க வேண்டும். புனைவின் எல்லா உத்திகளும் அந்தக் குறிக்கோளை நோக்கியவையே. அவ்வுத்திகள் இக்கதையில் நன்று தொழிற்பட்டிருக்கின்றது.
இப்போ வெள்ளையம்மாள் என்ன செய்ய வேண்டும்? ஐஸ்கிரீமை சாப்பிட வேண்டுமா? அல்லது ஒரு நல்ல பாட்டியாக பேரப்பிள்ளைகளுக்குக் கொடுத்து விட வேண்டுமா? இந்தக் கேள்விகளை வாசகனிடம் கேட்கிறது கதை. ஒரு சிறுகதையின் முடிவு என்பது உள்ளதிலேயே சவாலானதும், சிக்கலானதுமான பகுதி. அதை அனாயசமாகக் கடந்திருக்கிறீர்கள்.
குறைகள்? மீண்டும் மீண்டும் வெள்ளையம்மாள் ஐஸ்கிரீம் சாப்பிடுவது குறித்தான தயக்கத்தை, மன உளைச்சலை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறாள். அது மட்டும் நிறைய தடவை வந்த மாதிரி இருந்தது.
மிக அழகான, எளிமையான கதை. உயர்ந்த கலை என்பது மிக எளிமையானதும் கூட.
வாழ்த்துக்கள் பாலாஜி.
எம்.டியின் அஞ்சலிக் குறிப்பு
எம்.டி.வாசுதேவன் நாயர் – அஞ்சலி | ஒர் எழுத்தாளனின் தர்மமும், கர்மமும், இருப்பும்
எம்.டி யின் அஞ்சலிக் குறிப்பாகத் துவங்கி அவரது எல்லாப் பரிமாணங்களிலும் அறிமுகப்படுத்தும் கட்டுரையாக வந்திருக்கிறது. அவர் மரணச்செய்தி கேட்டதும், பல ஆண்டுகள் முன்பு நான் வாசித்த தோட்டியின் மகனை அவர் எழுதியது என்று எண்ணிக் கொண்டு விட்டேன். அது தகழியுடையது என்று பின்னால் உறுதி செய்து கொண்டேன். ஆக, எம்.டியின் எழுத்து எதையுமே வாசித்ததில்லை என்பது ஊர்ஜிதமாகி விட்டது. அவரது இறுதி யாத்திரை வைத்திருக்கிறேன். கூடிய விரைவில் வாசித்து விடுவேன். எம்.டி.யின் ஆழமும், அகலமும் வெளிப்பட்ட கட்டுரை. வாழ்த்துக்கள் சாரதி!
————————–
குடவாயில் பாலசுப்பிரமணியன் நூல்கள் அறிமுகம்
“கோயில் தரிசனம் போல இந்த நூல்களும் வெறும் பார்வையாளர்களாக நம்மை விட்டுவிடவில்லை. கலையின் மொழியைக் கற்றுத்தந்து, அதன் சமூக வேர்களை விளக்கி, அதன் ஆன்மீகப் பரிமாணங்களை உணர்த்தி, கலையின் முழுமையான ரசிகர்களாக நம்மை உருவாக்குகின்றன. நம் பண்பாட்டு அடையாளங்களை அறிந்துகொள்ளவும், அதன் வழியே எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்கவும் உதவும் விளக்குகளாக இந்த நூல்கள் திகழ்கின்றன.”
மிகத் தெளிவாகவும், அழகாகவும் எழுதப்பட்ட நூல் அறிமுகம். நன்றி நிர்மல். இவை கிண்டிலில் உண்டா?
————————
ஹோமியோபதி ஓர் எளிய அறிமுகம்
ஜார்ஜ் வாஷிங்டன் ரத்தம் வெளியேற்றும் மருத்துவ சிகிச்சையின் போது 2 லிட்டர் ரத்தம் வெளியேறி இறந்து போனார், தொகுத்தறியும் தர்க்கத்தை அடிப்படையாகக் கொண்டு, ஒத்ததை ஒத்தது குணமாக்கும் என்ற முடிவின் கீழ், சின்கோனா மரப்பட்டை மரபட்டையை உட்கொள்வதன் மூலம் மலேரியா அறிகுறிகள் உருவாவதால், அது மலேரியாவைக் குணமும் ஆக்கும் என்ற தத்துவப் புரிதலை அடைதல் போன்ற பல சுவாரசியமான சங்கதிகள் இந்தக் கட்டுரையில் இருக்கின்றன. நிறைய வரலாற்று, அறிவியல் தகவல்கள் இருந்தாலும் வாசிக்க மிகுந்த சுவாரசியமாக இருந்தது. ஹோமியோபதிக்கும், இந்திய பழங்கால மருத்துவத்துக்கும் ஏதாவது தொடர்பு உண்டா, அதன் ஒற்றுமைகள், வேறுபாடுகள் குறித்து ஏதேனும் விபரம் உண்டா?
வாழ்த்துக்கள் பிரதீப்!
Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
