
உலகில் மரணத்தை எந்தவொரு நகரமும் பனாரஸ் போல கொண்டாடுவதில்லை – Scholar, Diana L. Eck
பனாரஸில் கங்கைக் கரைக்கும் காசிவிஷ்வநாதர் கோவிலுக்கும் இடையே இறந்தவர்கள் தகனம் செய்யும் இடத்திற்கு மணிகர்ணிகா கட் என்றழைக்கப்படுகிறது.
சடலங்களை எரிக்கும், இந்து சமூகத்தை சேர்ந்த இவர்களுக்கு சமூதாயத்தில் டோம் என்று பெயர். இந்து மதத்தின் சாதிய அடிப்படைகள் இவர்களை பிற்பட்டோர்களாக கட்டமைத்திருக்கின்றது. இந்தி மற்றும் போஜ்பூரி பேசக்கூடிய டோம் சமூகத்தினர் ”செளவுதாரி”எனும் குடும்ப பெயர்களைக் கொண்டுள்ளனர். ”செளவுதாரி” என்கிற சொல்லிற்கு நில உரிமையாளர்களின் தலைவன் என்று வரலாறுகளில் கூறப்பட்டாலும், பனாரஸில் தகனம் செய்யப்படுகின்ற இடம்”மணிகர்னிகா கட்”இவர்களது நேரடி கட்டுப்பாட்டில் இருப்பதால் தங்களை”செளவுதாரி” என சமுதாயத்தில் அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். இறந்தவர்களின் விவரங்கள், எரியூட்டவதற்கான தொகை மற்றும் சடலத்தின் எடைக்கு ஏற்பவாறு விறகுகளின் எடை மற்றும் அதற்கான விலை நிர்ணயம், எரிப்பதற்கு தேவையான ஆட்களை நியமித்தல் மற்றும் அவர்களுக்கான ஊதியம் என்று நிர்வாக பதவியில் இருக்கும் இவர்கள் மாலிக் என்று தன் சமூகத்தினரால் என்றழைக்கப்படுகிறார்கள்.

”ஒரு நாள் பார்வதி தன் காதிலுள்ள தோட்டை படித்துறையில் தவறவிடுகிறாள். அதை ஒரு பிராமணன் எடுத்து அவனது பையில் வைத்திருந்ததை அறிந்த சிவன், நீயும் உனது தலைமுறைகளும் தாழ்த்தப்பட்ட நிலைமையை அடைவாய் என்று சபித்துவிட்டார். அவன் மன்றாடி மன்னிப்பு கேட்டதால், அவனது குலத்திற்காக வரம் ஒன்றை வழங்கினார்; நெருப்பாக நிலைத்து இந்துக்கள் மோட்சம் பெறுவதற்கு துணைபுரிவாய்” இவ்வாறு சபிக்கப்பட்டவனின் வழிவந்தவர்கள்தான் என்று டோம் சமூகத்தினர் புராண கதைகளால் பெருமிதம் கொள்கின்றனர்.
சடலங்கள் எரிக்கப்படும் இடமான மணிகர்னிகா கட் எனும் படித்துறை ”இடையுறாது புகைந்து கொண்டிருக்கும், இது இறப்பின் சரணாலயம்,” என Diana L. Eck வரையறுக்கின்றார்.
மணிகர்னிகா கட், டோம் இனத்தவரின் பணியிடம். தொடர்ந்து சடலங்கள் எரிக்கப்பட்டு பல விதமான சாம்பல் அடுக்குகளையும் ஆங்காங்கே குப்பை மேடுகளையும் கொண்டது. ஒருபுறம் சூரியன் முதுகில் சுட்டெரிக்க தரையானது தொடர்ச்சியான வெப்ப அலைகளை உமிழ்ந்கொண்டே இருக்கும். காற்று வலுவாக வீசும் பொழுது வழிமாறிய தீ கொழுந்தாக தோல் மீதும், முடியையும் சுட்டெரிக்கும். இந்நிலையில் உடலில் வரட்சி ஏற்பட்டு பணிபுரிவோரை பலவீனப்படுத்திகிறது. இத்தகைய சூழலில் தங்களது பணிகளைத் தொடர குட்கா மற்றும் ஆல்கஹாலை சார்ந்துள்ளதால் இவர்கள் இளவயதிலே போதைக்கு அடிமையாகின்ற நிலை ஏற்படுகிறது. ”உருகிக்கொண்டிருக்கும் சடலத்தின் சதையானது ஒரு குமட்டலை உண்டு பண்ணுவதால் பெரும்பாலானோர், வேலையைத் தொடங்கும் முன்னரே குட்கா மற்றும் ஆல்கஹாலை பயன்படுத்துகிறார்கள்” என பணிபுரிபவர் கூறுகின்றார்.

சந்த் கட், டோம் மக்களின் வசிப்பிடம். அருகேயுள்ள யாதவர் குடியிருப்புகளுக்கும், டோம் மக்களுக்கும் இடையே கண்ணுக்கு புலப்படாத அவர்களுக்கு மட்டுமே தெரிந்த எல்லைகள் உண்டு. 1990களில் டோம் சமூகத்தினை சேர்ந்த பெண்கள் அந்த எல்லையை கடக்கும் பொழுது முக்காடு இட்டுக் கொண்டு, ஒரு ஆணின் துணையாகவோ அல்லது கணவனின் துணையாகவோ தலையை குனிந்தவாறுதான் கடக்க வேண்டிய கட்டாயம் இருந்திருக்கிறது. இன்றளவும் டோம் சமூகத்திலுள்ள பெண்கள் ஒடுக்கப்பட்டு பின் தங்கிய நிலையிலே இருக்கின்றனர் என பல குரல்களின் வழியாக சமூகத்தின் சாம்பல்களையும், அதன் தணிந்திராத விறகுகளையும் எழுத்தாளர் ”Fire of Ganges” எனும் இந்நூலில் கவனமாக கையாளுகின்றார்.
நேர்காணலின் போது 60 வயது மதிக்கத் தக்க முதியோரிடம், இறந்த போன கணவரின் பெயரைக் எழுத்தாளர் கேட்கிறார். கணவரின் பெயர் சொல்ல மறுக்க அருகிலுள்ள அவரின் பேத்தி பெயரை கூறுகின்றாள். இறந்த பின்னரும் கணவரின் பெயரை பெண்கள் உச்சரிப்பதில்லை என சொல்கிறார் அம்முதியவர். கணவரின் துணையின்றி பெண்கள் வெளியில் செல்ல அனுமதிப்பதில்லை. பெண்கள் அரசுப் பள்ளிகளில் இலவசக் கல்வியாக எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். அதன் பிறகு தங்களது வீட்டு வேலைகளுக்காகவும், இளமையில் திருமணத்திற்காகவும் பெண்களின் கல்வி கைவிடப்படுகின்றது. “எங்களுக்கு 14 வயது கடந்தவுடன் குடும்பத்திற்கு சுமை என்று கருதி, விரைவாக திருமணத்திற்கு ஏற்பாடு செய்வது அவர்களது முதன்மையான கடமையாக கருதுகிறார்கள்” என இளம் வயதில் திருமணமான பெண் கவலைகொள்கின்றார். அவ்வாறு திருமணம் செய்த பெண்களுக்கு சூரியன் அல்லது நிலா போன்று கைகளிலும் மற்றும் சிறு புள்ளிகளாக கன்னங்களிலும் குறியீடுகளாக பச்சை குத்தப்படுகின்றன. அக்குறீயிடுகள் அவை திருமணம் முடிந்த பெண்ணிற்கான அடையாளங்கள். சுதந்திரமான ஆண்களுக்கு நிரந்தரமான எந்தவொரு குறியீட்டு அடையாளங்களும் வழக்கில் கிடையாது. திருமணமான பெண்களுக்கு மூன்று குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்ள முதியோர்கள் வற்புறுத்தினாலும், டோம் சமூகத்தின் சமகால பெண்கள் அவற்றை புறக்கணிக்கப்பதாகவே கூறுகின்றனர்.
அதே சமூகத்தில் கணவனை இழந்து தன் 35 வயதில் விதவையான பெண் தன் ஐந்து குழந்தைளின் வாழ்வாதாரத்திற்காக ஒரு பெட்டிக் கடையொன்றை தான் வசிக்கின்ற வீட்டில் தொடங்குகிறார். அவர் கடைத் தெருவிற்கு சென்று வீடு திரும்புகையில் வீட்டின் கதவு மற்றும் சன்னல்களில் மாட்டு சாணம் வீசப்பட்டு இருக்கின்றன. ஆண் துணையின்றி தனக்கென ஒரு வேலையை உருவாக்கிய பெண்ணின் மீது டோம் சமூகத்தினர் அவர்களது எதிர்ப்புகளை சாணத்தை வீசி தெரிவித்திருக்கின்றனர். இத்தகைய செயலுக்கு எந்தவித கூச்சல் மற்றும் எதிர்ப்புமின்றி சுத்தம் செய்துவிட்டு மீண்டும் அதே வேலையில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார். இரண்டு வருடங்கள் கழித்து, தற்போது மணிகர் கட்-டில் காலையில் மட்டும் சிற்றுண்டி உணவு தயாரித்து அங்கு பணிபுரியும் அதே மக்களுக்கு கூடையில் செய்து விற்பனை வருகின்றார்.
”டோம் சமூகத்தில் பெரும்பாலான தாய்மார்கள் சிறுவர்களை அனுப்பி, பிணம் எரிந்துகொண்டிருக்கும் குவியலில் இருந்து, வீட்டிற்குத் தேவையான விறகுகளை எடுத்துக் கொண்டுவர செல்வார்கள். அவ்வாறு தண்ணீரில் நனைத்து மொத்தமாக எடுத்து செல்லப்படும் விறகுகளில் பிணத்தின் சதைகளும் அவ்வப்போது ஒட்டிக்கொண்டு வரும்…..” என தனது சிறுவயதில் அடிப்படை கல்வியை இழந்து தற்போது ஒரு கல்லூரி மாணவனாக நினைவுகூறுகின்றார். 2023-ம் ஆண்டு, ஒரு NGO உதவியால் தனது பனிரெண்டாவது வகுப்பு வரை தேர்ச்சி பெற்று தற்போது பகுதி நேர படிப்பாக B.A-வும், சுற்றுலா வழிகாட்டியாகவும் இருக்கின்றார். இவர் தன் சிறு வயதில் பிணங்களின் மீது போர்த்தியிருக்கும் துணியை களவாண்டு துணிக்கடையில் விற்று, கிடைக்கும் பணத்தை தங்கள் குடும்ப செலவுக்கு வைத்துக் கொண்டிருந்தார்கள். ஒரு ஆவணபடமாக இச்சம்பவத்தை பார்த்த அமெரிக்கர் ஒருவர், சிறுவர்களின் பெற்றோர்களை நேரில் சந்தித்தார். அவர்களின் கோரிக்கையின்படி குடும்ப தேவைக்காக மாதந்தோறும் ரூ.1500 பண உதவி செய்ததால், சிறுவர்கள் வேலைக்கு அனுப்பாமல் அடிப்படை கல்வி கிடைக்க வழிவகுத்தது.

”சமூகத்தில், மிகச்சிறியதான எங்களுடைய வாழ்க்கை பெரிதும் பொருட்படுத்தாமல் போகலாம், ஆனால் கடவுள் தன் கடமையான இறந்தவருக்கு மோட்சம் கிடைக்கவே எங்களை அனுப்பியிருக்கிறார். எவ்வளவு பிணங்கள் வந்தாலும், எரிப்பது எத்தகைய கடினமாக இருந்தாலும் இறப்பவரின் ஆன்மாவின் மோட்சத்திற்காக எங்களது பணியை தொடர்ந்து செய்து கொண்டேயிருப்போம்” என்று டோம் சமூகத்தை சேர்ந்த இளைஞர் கூறுகின்றார்.
டோம் சமூகத்தின் எதிர்ப்புகளை கடந்து கங்கை செயல் திட்டத்தின் மூலம் பனாரசில் 1989 ஆம் ஆண்டு முதன் முதலாக மின்சார தகனம் ஹரிஷ் சந்திர கட் எனும் இடத்தில் அமைக்கப்பட்டு, தற்போது எரிவாயு மூலம் இயங்கும் தகனமாக நவீனமடைந்துள்ளது. இங்கு பணிபுரிய டோம் சமூகத்தினருக்கு மட்டுமே பணியிடம் ஒதுக்கப்பட்டள்ளது. கொவிட் பெருந்தொற்று காலங்களில் இருபத்து நான்கு மணி நேரமும் இயங்கிய எரிவாயு மூலம் இயங்கும் புகையற்ற தகனம், பெருந்தொற்றுக்கு பிறகு நீண்ட காலமாக மரத்தில் எரிக்கப்பட்டுவரும் பாரம்பரியங்களுடன் போட்டியிட முடிவதில்லை.
1916-ம் ஆண்டு மகாத்மா காந்தி பனாரஸ் காசி விஸ்வநாதர் ஆலயத்தை பார்வையிட்டார். ஆலயத்தை சென்றடையும் குறுகிய சந்துகள், கட்டமைப்பின் குளறுபடிகள் மற்றும் ஆலயத்தை ஒட்டியவாறு கட்டப்பட்டிருந்த வீடுகளையும் கண்டு கொந்தளிப்பு அடைந்து ” இந்த ஆலயம் நமது பண்புகளின் வெளிப்பாடல்ல” என பனாரஸ் இந்து கல்லூரியில் தனது கருத்தை முன் வைத்தார். ”புனித ஆலயத்தின் நடைபாதை இப்படி அசுத்தமாக இருப்பது சரியன்று………நமது கோவில்கள் நெருக்கமாக, சுகாதாரமற்று இருந்தால், நம்முடைய சுயராஜ்யம் என்னவாக இருக்கும்?” என சாடினார்.
பழமைவாய்ந்த பனாரஸ் 2019ம் ஆண்டுக்கு பிறகு முற்றிலுமாக உருமாறி நவீனமடைந்துள்ளது. ஆலயம் மற்றும் படித்துறை அதனை சுற்றியுள்ள பல நூற்றாண்டுகளாக இருந்த 230 வீடுகளும், நூற்றாண்டாக இயங்கிய நூலகமும் இடிக்கப்பட்டு, பழுதடைந்த கோவில்களும் காப்பாற்றப்பட்டன. அதே ஆண்டின் காசி விஸ்வநாதர் ஆலயத்தின் நடைபாதை அடிக்கல் நாட்டுவிழாவில் பிரதமர் மோடி அவர்கள் “இப்போது ஒரு நல்ல விஷயம் நடந்திருக்கின்றது….போலோ பாபா(ஆதி சிவன்) எனக்குள் ஒரு உணர்வைத் தூண்டியதால் இந்த கனவை நினைவேற்ற முடிந்தது” என உரையாற்றினார்.
நவீனமடைந்த பனராஸ் சுற்றுலா தலமாக உருவாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றாலும், சில குடும்பங்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. கட்டுமான பணியின் போது 2021-ம் ஆண்டு தொல்லியல் துறையால் எழுபத்தி எட்டு ஆலயங்கள் மீட்கப்பட்டு புணரமைக்கப்பட்டன.
2018ஆம் ஆண்டு டோம் சமூகத்திலிருந்து, முதன் முதலாக ஒரு மாணவன் தனியார் பல்கலைக்கழகத்தில் 24 வயதில் தன் கல்லூரிபடிப்பை பஞ்சாப்பின் லூதியானாவில் தொடங்குகிறான். இதுதான் இன்றைய நவீன இந்தியாவின் மற்றொரு முகம் என புரிந்து கொள்ள அவசியம் ஏற்படுகின்றது. சமூகத்தால் எரியூட்டப்பட்ட தீண்டாமையின் தீப்பொறிகளால் காயம் பட்ட அவன், தான் பிற்படுத்தப்பட்டோர் எனும் தாழ்வு மனப்பான்மை உருவாகி கல்லூரியில் தன்னை முற்றிலும் மாறுபட்ட ஒருவனாக மாற்றிக் கொள்கிறான். புறத்தோற்றம் மற்றும் சாப்பிடும் முறையிலிருந்து ஆங்கிலத்தில் சரளமாக பேசுவது வரை தன் சுயம் வெளிக்கொள்ளாதவாறு மாறிவிடுகிறான். இதனால் பெரும்பாலான மாணவர்களால் அவனுடன் உயர்வகுப்பினர் போல பார்க்கத்தொடங்கினர். ”உங்கள் பகுதியில் செளவுதாரி என்றால் யாதவர்கள் தானே என கேட்கும் போது, இல்லை என ஒரு போதும் மறுத்ததில்லை; ஆம் என்றே பதில் சொல்லியிருக்கிறேன்…..ஒரு பொய்யை காப்பதற்காக ஐம்பது பொய்கள் சொல்லவேண்டியதாக இருந்தது” என்று தனது தீண்டாமையின் நெருக்கடியை பகிர்ந்து கொள்கிறார். சில மாதங்கள் கழித்துல் ஒரு சக மாணவன் தன்னுடைய குடும்ப பிரச்சினையை இவனிடம் பகிர்கிறான். ஆறுதலுக்காக இவன் கடந்து வந்த பாதையை அவனிடம் கூற கல்லுரி முழுவதும் தாழ்த்தப்பட்டவன் எனும் கரும்புகை சூழ்ந்தது. கொரோனா தொற்று காலம் என்பதால் கல்லூரிபடிப்பை பனாரசில் வீட்டிலேயே தொடர்ந்தான் மீண்டும் குடும்ப வறுமையால் உள்ளூர் வேலை, தாயின் புற்றுநோய் மற்றும் மரணம், டெல்லியில் வேலை என இரண்டு வருடங்கள் அலைகழிந்து இறுதியாக சென்னையிலுள்ள தனியார் கம்பெனியில் படிப்பிற்கேற்ற நிரந்தரமான வேலையில் அமர்ந்தான.

கங்கை கரையிலிருக்கும் சாம்பல் குவியல்களை நதியின் நீரில் கரைத்து அவற்றிலிருந்து உருகிய தங்கம் அல்லது வெள்ளி ஆபரணங்கள் (தங்கப்பல், கொலுசு முதலியன) சிதறுண்டு கிடைக்கும் என பல மணி நேரமாக அவற்றை அலசும் டோம் இனத்தவர். இம்முறைக்கு துல்னா என்று பெயர். இது மிகவும் திறமையான கடினமான உழைப்பு என்றாலும் பலனளிப்பதில்லை. இதில் பெரிதாக பணம் ஈட்டியதில்லை என்கிறார் எழுத்தாளர் ராதிகா ஐயங்கார்.
இந்நூலில் எழுத்தாளர் பல குரல்களின் வழியாக சமூகத்தின் தீண்டாமை, வறுமை, கல்வி, வேலைவாய்ப்பு, குலதொழில், பெண்களின் அடக்குமுறை, சமூகத்தில் திருமணத்தின் முக்கியத்துவம் அதன் பிறகு தொடரும் நெருக்கடிகள், சமூகத்தினிரிடையே நிலவும் வேற்றுமை, உணவு பழக்கவழக்கங்கள், புராண கதைகள் என அச்சமூகத்தின் பண்டைய பாரம்பரியங்கள் எனும் சாம்பல்களின் அடுக்குகளையும், அத்தகைய சாம்பலிலிருந்து தன்னை முற்றிலுமாக விடுவித்து கல்லூரி மாணவனாகவும், பட்டதாரி இளைஞனாகவும், சுயமாக தொழில் தொடங்கிய விதவை பெண்ணாகவும், பிராமண சமூகத்திலிருந்து டோம் சமூகத்தில் திருமணமனத்தை சட்டப்படியும், சமூக ஒத்துழைப்புடனும் மணம்புரிந்த இளம் காதலர்களாகவும் அவரது வாழ்க்கையானது கங்கை நதியில் எரியும் விளக்குகளாக ஒரு புதிய பயணத்தை தொடங்கியிருக்கின்றது. டோம் சமூகத்திலிருந்து எழும் இத்தகைய குரல்கள் அவர்களின் வாழ்வாதரத்திற்கான விருப்பங்கள், கோரிக்கைகள் பொது சமூகத்தினருக்கும், அரசாங்கத்திற்கும் சென்றடையும் என்றே நம்புவோம்.

”Fire of Ganges”ஆசிரியர் ராதிகா ஐயங்கார், இவர் விருது பெற்ற பெண் பத்திரிகையாளர். Columbia University Graduate School of Journalism பல்கழைக்கழகத்தில் M.A பட்டம் பெற்றவர். இந்நூலிற்காக Gaurang River Literary Prize for Best non-Fiction (2024), Kalinga Literary Award (Youth) மற்றும் Kamaladevi Chattopadhyay NIF Book Prize 2024 குறும்பட்டியலுக்கும் தேர்வானது குறிப்பிடத்தக்கது.
Discover more from சொல்வனம் | இதழ் 373 | 23 ஆக 2026
Subscribe to get the latest posts sent to your email.

மிக நீண்ட அருமையான வாசிப்பிற்கான தூண்டுதலையும் விரிவான அலசலையும் அளித்த பதிவு, புத்தகத்தின் முழுமையான மதிப்பீடு. நல்லது எதிர்காலத்தில் மேலும் பல ஆங்கில நாவல்களின் மொழி பெயர்ப்பையும் எதிர்பார்க்கிறோம்