மூலம் : சதாஅத் ஹஸன் மண்டோ
தமிழாக்கம் : அனுராதா க்ருஷ்ணஸ்வாமி
“வான வேடிக்கை” சிறுகதை சதாஅத் ஹஸன் மண்டோ எழுதிய கதைகளில் அதிகம் பிரபலமடையாதது. இச்சிறு கதை தான் முதன்முதலில் வெளிவந்த கதை. அவர் இருபதுகளில் எழுதிய இக்கதை, அவரது மற்ற சர்ச்சைக்குரிய கதைகளோடு ஒப்பிட்டு நோக்கும்போது, அதிக கவனம் பெறாத கதை. இந்த கதையின் முக்கியக்கரு, அமிர்தசரஸ் மீதும் குர்ஜரன்வாலா மீதும் ஆங்கிலேயர்கள் குண்டு வீசிய சம்பவமேயாகும். இந்நிகழ்வு இலக்கியத்திலும் வரலாற்றிலும் பதியப்படவில்லை.1919 ஜாலியான்வாலா பாக் படுகொலையின் போது மண்டோ ஆறு வயதே நிரம்பிய பாலகன். ஜாலியான்வாலா பாக் போராட்டத்தை முன்னெடுத்து நடத்திய டாக்டர் சைபுதீன் கிச்லூ மண்டோவின் நெருங்கிய உறவினர். அதன் காரணமாக 1919 இல் நடந்த சம்பவங்கள் இளம் மன்டோவின் மனதில் கல் மேல் எழுதிய எழுத்தாகப் படிந்தன. அம்ரித்சரஸ் படு கொலைகளை களமாக வைத்து மண்டோ எழுதிய கதைகளில் முதல் கதை தான் “வான வேடிக்கை”. “வானவேடிக்கை’யை அடுத்து, ” பைத்தியக்காரக்கவி (1936), 1919 ன் ஒரு விஷயம் (1951), மற்றும் ‘சுதந்திரத்திற்காக’ (1952 ) போன்ற கதைகள் வெளிவந்தன. இக்கதைகள் சுதந்திரப் போராட்டத்தை ஒட்டி நிகழ்ந்த கலவரங்களை ஒரு குழந்தையின் பார்வையில் விவரிக்கின்றன. எந்தப் போராட்டத்திலும் முதல் களபலியாவது குழந்தைகளும் பெண்களும் மட்டுமே என்னும் நிலை இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அந்தப் பின்னணியில் பார்க்கும் போது மண்டோவின் இக்கதைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. அதுமட்டுமல்லாது சுதந்திரப் போராட்டம் இந்திய பாகிஸ்தான் பிரிவினை போன்றவைகள் குறித்து குழந்தைகளின் பார்வையில் கதைகள் அதிகம் எழுதப்படவில்லை என்பதாலும் இக்கதைகள் கட்டாயம் வாசிக்கப்பட வேண்டியவை ஆகின்றன.

இரண்டு மூன்று நாட்களாகவே, இறக்கையை விரித்து இரையைத் தேடிப் பறக்கும் கருங்கழுகுகளை போல, விமானங்கள் அமைதியான வானைக் கிழித்தபடி உயரே வட்டமிட்டு பறந்து கொண்டிருந்தன. கொடூரமான துர்ச் சம்பவம் ஒன்று நிகழப்போவதை முன்கூட்டியே தெரிவிப்பது போல செக்கர் வண்ண புயற்காற்று சுழன்று சுழன்று வீசிக்கொண்டிருந்தது. ஆயுதம் தாங்கிய போலீசார் வெறிச்சோடிக் கிடந்த கடைத்தெருக்களில் காவல் பணியில் மேலும் கீழும் நடந்து கொண்டிருந்தது மனதில் இனம் புரியாத பயத்தை ஏற்படுத்தியது. சில நாட்களுக்கு முன்பு வரைக் கூட காலையிலிருந்தே கூட்டமும் கூச்சலுமாய் உயிர்த்திருந்த கடைத்தெருக்கள் இப்போது ஏதோ விவரிக்க முடியாத பீதியில் ஆளரவமற்று வெறிச்சோடிக் கிடந்தன. மர்ம மயமான அமைதி நகரின் காற்றில் விரவிக் கிடந்தது. நகரம் அச்சத்தில் மூழ்கியிருந்தது.
வீட்டைச் சூழ்ந்திருந்த அமானுஷ்யமான அமைதியால் பாதிக்கப்பட்ட காலித் தன் தந்தையை ஒட்டி அமர்ந்து கொண்டு அவருடன் பேசிக் கொண்டிருந்தான்.
” அப்பா நீங்கள் இன்று என்னை ஏன் பள்ளிக்கூடம் போக அனுமதிக்கவில்லை?”
“மகனே, இன்று பள்ளிக்கூடம் விடுமுறை”
“மாஸ்டர் அப்படி எதுவும் சொல்லவில்லையே. நாளைக்கு யார் வீட்டுப் பாடத்தை முடித்துக் கொண்டு வந்து காட்டவில்லையோ அவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்கும் என்றுதானே சொன்னார்!”
“அவர் அறிவிப்பு செய்ய மறந்திருப்பார்”
“உங்கள் அலுவலகத்துக்கும் இன்று விடுமுறை தானா?”
“ஆமாம். எங்கள் அலுவலகத்திற்கும் இன்று விடுமுறை தான்.”
“நல்லதாயிற்று. இன்று நான் உங்களிடம் ஏதேனும் நல்ல கதை கேட்க முடியும்”
அவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது மூன்று விமானங்கள் காற்றைக் கிழித்துக்கொண்டு அவர்களது தலைக்கு மேலே பறந்து சென்றன. காலித் பயந்து போனான். இரண்டு மூன்று நாட்களாகவே இந்த விமானங்கள் அவன் தலைக்கு மேலே வட்டமிட்டு கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டுதானிருக்கிறான். அவனுக்கு எதுவும் புரியவில்லை. நாள் முழுவதும் அந்த விமானங்கள் வானில்பறந்து கொண்டிருப்பது அவனுக்கு ஆச்சர்யதமளித்தது. அவை இவ்வாறு பறந்துகொண்டிருப்பதால் சலிப்படைந்து, “அப்பா இந்த விமானங்களை பார்த்தால் எனக்கு உண்மையிலேயே மிகவும் பயமாக இருக்கிறது. தயவுசெய்து நம் தலைக்கு மேலே பறக்க வேண்டாம் என்று அவற்றிடம் நீங்கள் சொல்லி விடுங்கள்” என்றான்.
“பயமா? உனக்கு பைத்தியம் பிடித்து விட்டதா காலித்?”
“அப்பா, இந்த விமானங்கள் மிகவும் பயங்கரமானவை. அப்பா உங்களுக்கு தெரியாது. ஒரு நாள் இவை நம் வீட்டு கூரையின் மீது குண்டுகளை வீசக் கூடும்… நேற்று காலையில் தான் மாமி அம்மாவிடம் இந்த விமானங்களில் நிறைய குண்டுகள் இருப்பதாக சொல்லிக் கொண்டிருந்தார். அவர்கள் இப்படி ஏதாவது குறும்பு செய்ய நினைத்தால் என்னிடமும் ஒரு துப்பாக்கி இருக்கிறது என்பது அவர்களுக்கு நினைவிருக்கட்டும்.. போன ஈத் பண்டிகையின் போது நீங்கள் வாங்கித் தந்தீர்களே அந்த துப்பாக்கி தான்.”
காலித்தின் தந்தை மகனின் அசாதாரண துணிச்சலை எண்ணிச் சிரித்தார். “உன்னுடைய மாமி ஒரு பைத்தியம். அவள் இப்படியெல்லாம் ஏன் பேசுகிறாள் என்று நான் விசாரிக்கிறேன். அமைதியாக இரு, அவள் இனி இப்படியெல்லாம் பேச மாட்டாள்” என்றார்.
அங்கிருந்து எழுந்து காலித் தன்னுடைய அறைக்கு வந்தான். காற்றுத் துப்பாக்கியை வெளியே எடுத்து விமானத்திலிருந்து அவர்கள் வெடிகுண்டுகளை வீசும் போது தன்னுடைய குறி தப்பாமல் இருக்கவும், முழுமையாக பழிவாங்குவதற்காகவும் துப்பாக்கியால் குறிப்பார்க்கும் பயிற்சியை செய்ய ஆரம்பித்தான். கள்ள மறியாத இந்த குழந்தைக்கு இருந்த பழிவாங்கும் உணர்ச்சி எல்லோரிடமும் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!
கள்ளங்கபடம் இல்லாத இந்த சிறுவன் பழிவாங்குவதற்கான எல்லா திட்டங்களையும் குறித்து யோசித்துக் கொண்டிருக்கையில் வீட்டின் மற்றொரு பகுதியில் காலிதின் தந்தை தன் மனைவியிடம் வீட்டில் மாமி காலித் பயப்படும்படியான எந்த விஷயத்தைப் பற்றியும் பேசாமல் பார்த்துக் கொள்ளும்படி அறிவுறுத்திக் கொண்டிருந்தார்.
மனைவிக்கும் மாமிக்கும் அறிவுரைகளை அளித்துவிட்டு காலிதின் தந்தை பெரிய வாசல் வழியாக வீட்டை விட்டு கிளம்பும்போது, காதிம் ஒரு பயங்கரமான செய்தியோடு வந்தான். பாத்ஷா அனுமதி கொடுக்க மறுத்து எச்சரித்த பிறகும் நகரத்தார் மாலையில் பொதுக்கூட்டம் ஒன்றை நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள் என்கிற செய்தி தான் அது. இதன் விளைவாக பேரிடர் சம்பவம் ஏதேனும் நிகழக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
இந்த செய்தியை கேட்டு காலிதின் தந்தை மிகவும் கலக்கமடைந்தார். சில நாட்களாக நிலவும் வழக்கத்துக்கு மாறான அச்சமூட்டும் அமைதி, தலைக்கு மேல் எந்நேரமும் வட்டமிட்டுக்கொண்டிருக்கும் விமானங்கள், கடைவீதிகளில் ஆயுதம் ஏந்திய போலீசாரின் தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகள், மக்களின் கவலை ததும்பும் முகங்கள், ரத்த வேட்கையுடன் காத்திருக்கும் புயல் மேகங்கள், இவையெல்லாம் நடக்க கூடாத ஏதோ ஒரு விபரீதத்திற்கான முன் அறிகுறிகள் என்று அவர் திடமாக நம்பினார்.
அது எத்தகைய துர்ச் சம்பவமாக இருக்கும்? காலிதின் தந்தையைப் போலவே இது குறித்து யாருக்கும் எதுவும் தெளிவாகத் தெரிந்திருக்கவில்லை. இருந்த போதிலும் முழு நகரமும் கண்ணுக்குத் தெரியாத விவரிக்க முடியாத பயத்தால் சூழப்பட்டிருந்தது.
வெளியே போகிற எண்ணத்தை தள்ளிப்போட்ட காலிதின் தந்தை அணிந்திருந்த துணியை மாற்றுவதற்கு முன்னரே விமானங்களின் இரைச்சல் அதிகரித்தது. அவர் பயந்து நடுங்கினார். நூற்றுக்கணக்கானவர்கள் ஒரே நேரத்தில் கூக்குரலிட்டு வலியில் அழுவது போல அவருக்கு தோன்றியது.
விமானங்களின் ஓசையையும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட குழப்பத்தையும் கவனித்த காலித் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு தன் அறையிலிருந்து வேகமாக வெளியே ஓடி வந்தான். விமானங்களைக் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தான். அவை வெடிகுண்டுகளை வீசத் தொடங்கும் போது அவற்றை தன் துப்பாக்கியால் சுட்டு கீழே வீழ்த்த வசதியாக அவன் அவ் விமானங்களையே கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான்.
அந்நொடியில் அந்த ஆறு வயது சிறுவனின் முகத்தில் ஒளிர்ந்த சலனமமற்ற திட நம்பிக்கையும் உறுதியும், விளையாட்டு துப்பாக்கியை பிடித்துக் கொண்டிருந்த தோரணையும் எந்த ஒரு மாவீரனையும் நாணச் செய்யும். நீண்ட காலமாக அவனை அச்சுறுத்திக் கொண்டிருந்த ஒன்றை இன்று அழித்து விட காத்திருப்பவன் போல அவன் நின்று கொண்டிருந்தான்.
காலித் பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஒரு விமானத்திலிருந்து சிறிய காகித துண்டுகள் கீழே விழுந்தன. கீழே விழுந்ததுமே அவை காற்றில் அந்துப்பூச்சிகளைப் போல பறக்க ஆரம்பித்தன. அவற்றில் சில காலிதின் வீட்டுக் கூரை மீதும் விழுந்தன. காலித் வேகமாக மாடிக்கு ஓடி விழுந்திருந்த காகித துண்டுகளிலிருந்து ஒன்றை கீழே எடுத்துக் கொண்டு வந்தான்.
“அப்பா, மாமி உண்மையிலேயே கதைதான் அளந்து விட்டடிருக்கிறாள். இந்த விமானக்காரர்கள் குண்டுகளை வீசுவதற்கு பதிலாக இந்த காகிதத் துண்டுகளை எறிந்தி ருக்கிறார்கள்” என்றான்.
காலிதின் தந்தை காகிதத்தை வாங்கி படிக்க ஆரம்பித்ததும் அவர் முகம் வெளிறியது. நடக்கவிருக்கின்ற துர்ச் சம்பவம் அவர் கண் முன் தெளிவாகத் புலப்பட ஆரம்பித்தது. அத்துண்டுச் சீட்டில் பாட்ஷா கேளிக்கை அல்லது பொதுக்கூட்டம் எதையும் ஏற்பாடு செய்ய அனுமதி அளிக்கவில்லை என்றும் அவரது உத்தரவை மீறி ஏற்பாடு செய்தால் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு சம்பந்தப்பட்டவர்களே பொறுப்பேற்க வேண்டும்
என்றும் எழுதப்பட்டிருந்தது.
காகிதத்தை படித்துவிட்டு தந்தையின் முகம் வெளிறிப் போனதை பார்த்து காலித் அவரிடம் பயந்தபடியே, ” அவர்கள் நம் வீட்டில் மீது குண்டு வீசுவார்கள் என்று இந்த காகிதத்தில் எழுதப்பட்டிருக்கிறதா?” என்று கேட்டான்.
“காலித், தயவு செய்து இப்போது நீ இங்கிருந்து போ. உன்னுடைய துப்பாக்கியை வைத்துக்கொண்டு விளையாடு” என்றார் தந்தை.
“ஆனால் இதில் என்ன எழுதி இருக்கிறது?”
“இன்று மாலை வான வேடிக்கை நடைபெறும் என்று இதில் எழுதி இருக்கிறது” என்று காலிதின் தந்தை பேச்சை மேற்கொண்டு வளர்த்த பயந்து பொய் சொன்னார்.
“வானவேடிக்கை நடக்கப் போகிறதா? அப்படி என்றால் நாமும் போகலாம். சரியா?” என்றான் காலித்.
“என்ன சொன்னாய்?”
“என்னை அந்த வான வேடிக்கைப் பார்க்க கூட்டிச் செல்ல மாட்டீர்களா?”
” சரி. கூட்டிக்கொண்டு போகிறேன். இப்போது நீ போய் விளையாடு”
“எங்கே போய் விளையாட? நீங்களோ என்னை கடைத்தெருவுக்குப் போக அனுமதிப்பதில்லை. மாமியும் என்னுடன் விளையாடுவதில்லை. என் வகுப்பு தோழன் துஃபைலும்லும் இப்போதெல்லாம் இங்கு விளையாட வருவதில்லை. நான் யாரோடு தான் விளையாடுவது? நாம் கண்டிப்பாக மாலை வான வேடிக்கை பார்க்க போகலாம். சரியா?”
காலித் பதிலுக்கு காத்திராமல் அறையை விட்டு வெளியே சென்றான். வீட்டின் எல்லா அறைகளையும் ஒரு முறை சுற்றிவிட்டு அவன் தன் தந்தையின் அறைக்கு வந்தான். அந்த அறையின் ஜன்னல் கடைத் தெருவைப் பார்த்தபடி அமைந்தி ருந்தது. ஜன்னலுக்கு அருகே அமர்ந்து கொண்டு அவன் தலையை நீட்டி கடை தெருவை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்.
கடைத்தெருவில் கடைகள் மூடியிருந்த போதிலும் கடைத்தெரு நெடுக வருவோரும் போவோருமாக இருந்ததை அவன் கவனித்தான். மக்கள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்று கொண்டு இருந்தார்கள். இரண்டு மூன்று நாட்களாக கடைத் தெருவில் இருந்த எல்லாக் கடைகளும் ஏன் மூடி கிடக்கின்றன என்று அவனுக்கு குழப்பம் ஏற்பட்டது. இந்த குழப்பத்திற்கு விடை காண தன் சின்னஞ்சிறு மூளையைக் கசக்கி வெகு நேரம் யோசித்தபோதிலும் அவனால் அதற்கான விடையைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
ஆகாய விமானங்கள் வீசிய துண்டுச் சீட்டில் குறிப்பிட்டிருந்த இந்த வேடிக்கையில் பங்கு கொள்ள வேண்டித் தான் கடைக்காரர்கள் இரண்டு மூன்று நாட்களாக கடைகளை அடைத்து வைத்திருக்கிறார்கள் என்று வெகு நேரம் யோசித்த பிறகு அவன் முடிவுக்கு வந்தான். அப்படி என்றால் வானவேடிக்கை உண்மையிலேயே மிகவும் சுவாரசியமானதாக தான் இருக்கும் என அவன் நினைத்தான். அதனால்தான் முழு கடைத்தெருவையும் அடைத்திருக்கிறார்கள்.
இந்த எண்ணம் அவனை பரபரப்புக்குள்ளாக்கியது. அவனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. தந்தை அவனை வானவேடிக்கை பார்க்க அழைத்துச் செல்லப்போகும் வேளைக்காக அவன் ஆர்வத்துடன் காத்திருந்தான்.
நேரம் கடந்து கொண்டே இருந்தது. சபிக்கப்பட்ட அந்த நேரமும் நெருங்கி வந்தது.
மாலை நெருங்கும் நேரம். காலிதின் பெற்றோர் வீட்டு தாழ்வாரத்தில், ஒருவரை ஒருவர் மௌனமாகப் பார்த்தபடி அமர்ந்திருந்தனர். காற்று சிறு முனகலுடன் வீசிச் சென்றது
“டட் டட் டட் டட் ‘
இந்த சத்தத்தை கேட்ட உடனேயே காலிதின் தந்தையின் முகம் காகிதத்தை போல வெளிறிப் போனது. மிகவும் சிரமப்பட்டு வாயிலிருந்து ஒரே ஒரு வார்த்தை வெளிவந்தது ” வெடிகுண்டு?”
பயத்தில் காலிதின் தாயாரின் தொண்டையிலிருந்து ஒரு வார்த்தை கூட எழும்பல்லை. வெடிகுண்டு என்ற சொல்லைக் கேட்டதுமே தன்னுடைய நெஞ்சிலேயே குண்டு பாய்ந்தததைப் போல அவர் உணர்ந்தார்.
வெடிச்சத்தத்தை கேட்டதுமே காலித் தன் தந்தையின் கை விரலை பற்றிக் கொண்டு, ” அப்பா வாருங்கள் போகலாம். வேடிக்கை தொடங்கி விட்டது” என்றான்.
“என்ன வேடிக்கை?” காலிதின் தந்தை தன்னுடைய பயத்தை மறைத்துக் கொண்டு கேட்டார்.
” நடக்கப் போகிற வான வேடிக்கை பற்றி இன்று காலை எல்லோருக்கும் விளம்பரச் சீட்டு கொடுத்துக் கொண்டிருந்தார்களே, அதே வேடிக்கை தான். வேடிக்கை தொடங்கி விட்டது போல் இருக்கிறது அதனால் தான் இத்தனை பட்டாசுகளின் சத்தம் கேட்கிறது”
“அதற்கு இன்னும் நிறைய நேரம் இருக்கிறது. நீ இப்போதிலிருந்தே சத்தம் போட ஆரம்பிக்காதே. தயவு செய்து போய் மாமியுடன் விளையாடு”
இதைக் கேட்டதும் காலித் சமையலறையை நோக்கி ஓடினான். மாமியை அங்கு காணாததால் அவன் தந்தையின் அறைக்குச் சென்று ஜன்னல் வழியாக வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்.
கடைத்தெருவில் வருவோர் போவோரின் சந்தடி அறவே நின்று விட்டிருந்ததால் இப்போது மௌனத்தின் குரல் கூட மிகத்தெளிவாகக் கேட்டது. தூரத்தில் நாய்கள் ஓலமிடும் ஓசை கேட்டது. சற்று நேரத்தில் அவ்வோலங்களோடு மனிதர்களின் கூக்குரல்களும் கேட்க ஆரம்பித்தது.
காலித் யாரோ வலியில் முணகுகிற ஒலியைக் கேட்டு மிகவும் ஆச்சரியமடைந்தான். அந்தக் குரல் எங்கிருந்து வருகிறது என்று அவன் தேட முற்படுகையில், நாற்ச்சந்தியிலிருந்து ஒரு சிறுவன் கூக்குரலிட்டு அழுதபடியே ஓடி வந்துக் கொண்டிருப்பதைக் கண்டான்.
அச்சிறுவன் காலிதின் வீட்டுக்கு நேர் எதிரே தடுமாறி மயங்கி விழுந்தான். அவனுடைய கால் சதையில் ஏற்பட்டிருந்த காயத்திலிருந்து ரத்தம் பொங்கி வழிந்து கொண்டிருந்தது.
இதைப் பார்த்தும் காலில் மிகவும் பயந்து போனான். ஓடி வந்து தன் தந்தையிடம், ” அப்பா, அப்பா, கடைத் தெருவில் ஒரு பையன் கீழே விழுந்து விட்டான். அவனுடைய காலிலிருந்து ரத்தம் கொட்டுகிறது” என்றான்.
இதைக் கேட்டதும் காலிதின் தந்தை ஓடிவந்து ஜன்னல் வழியே வெளியே பார்த்தார். காலித் சொன்னது போல உண்மையிலேயே ஒரு இளம் வயது சிறுவன் கடைத் தெருவில் குப்புற விழுந்து கிடந்தான்.
பாத்ஷாவிடம் இருந்த பயம் காரணமாக, அவரால் அச் சிறுவனைத் தூக்கி எதிர்ப்புறம் இருந்த கடைத்திண்ணையில் படுக்க வைக்கக்கூட முடியவில்லை. அரசு, வீடற்ற, முகவரியற்ற, உரிமை கோரப்படாத அனாதைப் பிணங்களை எடுத்துச் செல்ல, இரும்புச் சட்டகம் பதிக்கப்பட்ட வண்டிகளை ஏற்பாடு செய்திருந்தது. ஆனால் இன்றுஅரசு கட்டவிழ்த்த வன்முறைக்கு பழி பாவம் ஏதுமற்ற இச் சிறுவன் பலியாகி விட்டான்!
அந்த இளம் குருத்து, பாதுகாப்பு அரணாக நிற்க வேண்டிய அரசின் கைகளாலேயே நசுக்கப்பட்டு விட்டது! மலர்வதற்கு முன்பாகவே அவ்விளம் மொட்டு அவர்களாலேயே கசக்கப்பட்டு, அவர்களால் பரப்பப்பட்ட விஷக்காற்றில் பொசுங்கிகிவிட்டது! நேற்று வரை பெற்றோரின், உறவினரின் நிம்மதிக்கும் மகிழ்ச்சிக்கும் காரணமாக இருந்த அவ்விளம் உயிர், வன்முறைக்கு ஆளாகி இன்று பிணமாய் தெருவில் கிடக்கிறது! ஆ!…. மரணம் பயங்கரமானது! ஆனால் ஒடுக்குமுறையும் வன்முறையும் அதைவிட கொடூரமானவை!
“அப்பா, இந்த பையனை எவரேனும் அடித்து விட்டார்களா?”
காலிதின் தந்தை ஆமோதிக்கும் வகையில் தலையசைத்தபடியே அறையை விட்டு வெளியேறினார்.
அறையில் தனியாக நின்று கொண்டிருந்த காலித், பேனாவின் கூர்மையான முனை குத்தியதால் ஏற்பட்ட சிறு காயத்திற்கே இரவு முழுவதும் தூங்க முடியாமல் தான் அவஸ்தை பட்டதை நினைத்து, இத்தனை பெரிய காயம் அச் சிறுவனுக்கு எவ்வளவு வலியைத் தந்திருக்கும் என்று யோசித்தான். அன்று இரவு முழுவதும் அவனுடைய பெற்றோர் அவன் தலைமாட்டிலேயே உட்கார்ந்து கொண்டிருந்ததும் அவனுக்கு நினைவு வந்தது.
அந்த நினைப்பு வந்ததுமே, காயம் தனக்கே ஏற்பட்டது போல அவன் உணர்ந்தான். மறுக்கணமே பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தான்.
அழுகுரல் கேட்டதும் அவனுடைய தாயார் ஓடி வந்து அவனை அனைத்து மடியிலிருத்திக் கொண்டு “ஏன் அழுகிறாய் மகனே?” என்று கேட்டாள்.
“அம்மா, அந்த சிறுவனை யாரேனும் அடித்தார்களா?”
“ஏதாவது குறும்பு செய்திருப்பானோ?”
காலிதின் தாய், அடிபட்ட அந்த சிறுவனை பற்றி தன் கணவன் சொல்லி ஏற்கனவே அறிந்திருந்தாள்.
“ஆனால் பள்ளிக்கூடத்தில் குறும்பு செய்தால் பிரம்பால்தான் அடிப்பார்கள். பிரம்பால் அடித்தால் ரத்தம் எல்லாம் வராது தெரியுமா?” காலித் விசும்பிக் கொண்டே தன் தாயிடம் கேட்டான்.
“பிரம்பு வேகமாகப்பட்டிருக்கக்கூடும்”
“அப்படியானால் இந்தப் பையனின் தகப்பனார் பள்ளிக்கூடத்துக்கு சென்று இவனை இப்படி கண்மூடித்தனமாக அடித்த மாஸ்டரிடம் கோவப்பட மாட்டாரா? ஒரு நாள் மாஸ்டர் என் காதை பிடித்து இழுத்ததில் காது சிவந்து போன போது, அப்பா ஹெட் மாஸ்டரிடம் வந்து புகார் செய்யவில்லையா?”
“இந்த சிறுவனின் மாஸ்டர் மிகப்பெரிய மனிதர்.”
“அல்லாஹ் மியாவை விட பெரியவரா?”
“இல்லை. அவரை விட சிறியவர் தான்”
“அப்படி என்றால் அல்லாஹ் மியாவிடம் புகார் அளிக்க வேண்டியதுதான்”
“காலித், நேரம் அதிகமாகி விட்டது. வா, உறங்கலாம்”
“அல்லாஹ் மியான், இந்த சிறுவனை அடித்து காயப்படுத்திய மாஸ்டருக்கு நீ நல்ல தண்டனை கொடு. எந்தப் பிரம்பை உபயோகப்படுத்தியதால் ரத்தம் கொட்டியதோ அதை அவரிடம் இருந்து பிடுங்கி கொண்டு விடு. நான் வாய்ப்பாடு மனப்பாடம் செய்யவில்லை. ஒருவேளை அந்தப் பிரம்பு என்னுடைய மாஸ்டரின் கைக்கு வந்து சேர்ந்து விடுமோ என்று எனக்கு பயமாக இருக்கிறது. நான் சொல்வதை நீ கேட்காவிட்டால் நானும் இனி உன்னுடன் பேச மாட்டேன்”
உறங்குவதற்கு முன் காலித் மனதுக்குள் பிரார்த்தனை செய்து கொண்டான்.
********
Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
