இரு முனைக் கத்தி  – அருண் கோலட்கர்

இந்தியப் பின்நவீனக் கவிதை உலகில் அருண் பாலகிருஷ்ண கோலட்கரின்  (अरुण कोलटकर 1932 – 2004) இடம் நிலையானது. இரு மொழிகளில் ஒரு படைப்பாளி எழுதும்போது எண்ணச் சிதறல்கள் இருக்கக் கூடாதென்பது பொது எதிர்பார்ப்பு. சமகாலக் கவிஞர் நிஸ்ஸீம் எஸிக்கியெல் (1924 -2004) போல மராத்தி மற்றும் ஆங்கிலத்தில் ஒரே தலைப்பில் எழுதும்போது  சிந்தனைத் தூய்மையைப் பற்றிய கவலைகள் அருணுக்கு இருந்ததாகத் தெரிகிறது. குறிப்பாக ஆங்கிலத்தில் எழுதும்போது எளிய நடையில் எழுதினாலும் நிஸ்ஸீமின் உள்நோக்குப் பார்வையை அருணிடம் காண முடியவில்லை. மாறாகச் சமுதாயத்தை நையாண்டித்தனத்தின் மூலம் பார்க்கும் வண்ணம் அவரது வரிகள் அமைந்திருக்கின்றன. உதாரணத்திற்குக் கீழ்வரும் கவிதை,

“தாழ்வுக் கோவில் தன் தெய்வங்களை இருட்டில் அடைத்து வைத்திருக்கிறது,
வத்திப்பெட்டியை பூசாரிக்கு கொடுத்தால்
ஒன்றின் பின் ஒன்றாக தெய்வங்கள் தென்படுகின்றனர்

பதற்றமில்லாமல் நகைக்கும் வெண்கலம், சிரிக்கும் கல்
வத்தி ஒளி இருக்கும் வரை
அவர்கள் கோலம் தெரிந்து மறைகிறது
அவர்கள் செய்கை தெரிந்து மறைகிறது

யார் இவள்? பூசாரியை கேட்டேன்
“எட்டுக்கை தேவி” பூசாரி சொன்னார்
குறும்பு வத்தி தெரிந்து இருமுகிறது
என்னால் எண்ண முடியும்
“ஆனால் பதினெட்டு கைகள் இருக்கிறதே?”
பூசாரிக்கு கவலை இல்லை.
அவள், எட்டுக்கை தேவிதான்.

வெளியே வந்து ஒரு சார்மினாரை பத்தவைத்தேன்
சிறுவர்கள் இருபதடி ஆமையின் மேல் விளையாடுகிறார்கள்”

(A Low Temple – தாழ்வுக் கோவில்)

இருள்-ஒளி, அறியாமை-பகுத்தறிவு இருமையை அருணின் எளிய நடை வெளிக் கொண்டுவருகிறது. மேலோட்டத்தில் நாத்திகம் போல அமைந்திருப்பினும் உள்நோக்கத்தில் அருணின் சமுதாய அர்த்தத்  தேடலைப் பிரதிபலிக்கிறது. அறிவு எனும் ஒளியைக் கையில் கொடுத்தும் அறியாமையில் துயிலும் பூசாரியை உதாசீனப்படுத்தும் விதம் கடைசி இரு வரிகள் அமைகின்றன. இத்தகைய போக்கு அவர் எழுதிய முதல் ஆங்கில தொகுப்பான “Jejuri” (1977) யில் வெகுவாக காணப்படுகிறது,

“திராட்சையைப் போல இனிமையானது
ஜெஜூரியின் கற்கள் என்றார் சைதன்யா

ஒரு கல்லை வாயில் திணித்து
ஒரு தெய்வத்தை உமிழ்ந்தார்”

(சைதன்யா , Chaitanya)

மேலாகப் பார்க்கும்போது சைதன்யாவின் தெய்வீகம் வெளிப்படும் வண்ணம் தோன்றினாலும் வரிகளை உட்செரித்துப் பார்க்கும்போது திராட்சையின் இனிப்பை உறிஞ்சிக் கல் கொட்டைகளை உமிழ்வதைப் போல ஜெஜூரியின் தெய்வங்கள் தெய்வீகமற்ற வடிவங்களாக இருப்பதைச் சுட்டிக் காட்டுகிறார் அருண். புனேவிற்கு அருகில் இருக்கும் ஊரான ஜெஜூரி ஒரு பாதயாத்திரை ஸ்தலம். “Jejuri “, பயணக் கவிதைத் தொகுப்பாக அமைந்திருக்கிறது. ஆங்கிலத்தில் எழுதப்பட்ட  “Jejuri ” அருணின் ஐயுருவியல் கண்களிலிருந்து சமுதாயத்தைப் பார்க்கும் பயணம்.  

“நீங்கள் நல்ல கடவுளைத் தேடுகிறீர்களா
எனக்கு ஒருவரைத் தெரியும்
அவர் பெயர் யஸ்வந்த் ராவ்
சிறந்தவர்களில் ஒருவர்
ஜெஜூரிக்கு சென்றால்
நிச்சயம் அவரை பாருங்கள்

இரண்டாம் தர தெய்வம்தான் இல்லைங்கல
பெரியக் கோவிலின் வெளியே தான் இருப்பார்
கோவில் மதில் சுவருக்கும் அப்பால்
குஷ்டர்கள் , வணிகர்களைப் போல

இவரைவிட அழகிய தெய்வங்கள் எனக்கு தெரியும்
இவரைவிட உம்மணா மூஞ்சி தெய்வங்கள் எனக்கு தெரியும்
உங்கள் தங்கத்தை பறிக்கும் தெய்வங்கள்
உங்கள் ஆன்மாவை உறிஞ்சும் தெய்வங்கள்
உங்களைப் பூ மிதிக்க வைக்கும் தெய்வங்கள்
மனைவியைக் கர்பமாக்கும் தெய்வங்கள்
எதிரியை மாய்க்கும் தெய்வங்கள்
வாழ்க்கைக்கு வழி காட்டும் தெய்வங்கள்
செல்வத்தை இரட்டிக்கும் தெய்வங்கள்
சொத்தை மும்மடங்காகும் தெய்வங்கள்
உருள் சேவையை பார்த்து
வெற்றுப் புன்னகை செய்யும் தெய்வங்கள்
இக்கிரீடம் கொடுக்கவில்லையேல்
பீடை பிடிக்கவைக்கும் தெய்வங்கள்
நிச்சயமாக எல்லோரும் போற்றத்தக்கவர்கள் தான்
ஆனால் என் ரசனைக்கு அனைவரும் மிக சாதுகள்
இல்லையேல் ஷோக்கிகள்.

யஸ்வந்த் ராவ்
அஞ்சல் பேட்டி சிவப்பு தீப்பாறைச்
சுவரின் மேல் எரியப்பட்ட
கை கால் ஏன் தலை கூட இல்லாத
பெரிய தீக் குழம்பு

உங்களுக்கு கை இல்லையா
யஸ்வந்த் ராவ்வைத் தான் பார்க்க வேண்டும்
கை இல்லாதவர்க்கு கை கொடுத்து நிறுத்துவார்

யஸ்வந்த் ராவ்
அற்புதங்களைப் புரிபவரல்ல
உலகை உங்களுக்குப் பரிசளிப்பவரல்ல
ராக்கெட்டில் சொர்க்கத்திற்கு அனுப்பமாட்டார்
ஆனால் எலும்பு முறிந்தால் குணப்படுத்துவார்
உள்ளம் தானாகக் குணமடையும் என்பார்
புத்தூர் கட்டு போடுபவர் தான் என்றாலும்
அவருக்கே கை கால் இல்லாததால்
உங்களை சற்று அதிகம் புரிந்து கொள்வார்”

(“Yeshwanth Rao” – Jejuri )

நையாண்டித்தனத்தின் மூலம் சமுதாயத்தில் நிலவும் யதார்த்தங்களை வெளிகொண்டு வருகிறார் அருண்.  தெய்வங்களுக்கிடையேயும் வர்கப் பிரிவுகள் இருப்பதையும், அருளில்கூட சிறப்புப்  பிரிவுகள் இருப்பதையும் சுட்டிக்காட்டுகிறார். 

அருணின் மராத்திக் கவிதைகள் ஆங்கிலத்தைவிடத் தீவிர நடை முயற்சிகளை உள்ளடக்கியுள்ளது. உதாரணத்திற்கு அவரின் மிகப் பிரபலமாகப் பேசப்படும் பின்வரும் வரிகள்,

“நான் கேட்டேன்
‘அழகிய அண்ணி
அண்ணன் ட்யூட்டிக்கு நான் வரவா?’
அரண்டு விட்டாள்,
ரகுமான் கையில் துப்பாக்கியுடன் சொன்னான்
‘சுட்றுவேன்டா’ என்று
‘இந்த தெவிடியாளுக்காகத்
தம்பியைச் சுடுவியா?
சுடுறா நாயே!”

ஆங்கிலத்தில் அருணின் வரிகளில் இருக்கும் தர்க்கம், ஐயுறுவியல் பார்வை மராத்தியில் மறைந்து உணர்ச்சிகளுக்கும், அப்பட்ட வெளிப்பாட்டியத்திற்கும் இடம் கொடுக்கிறது.

“வாங்க அக்கா வாங்க
ரெண்டு நாளாச்சு தின்னு

என் புடவை
மார்வாடிகிட்ட போயாச்சு
ஒரு பருக்கை கூட பார்க்கல

கடைசியா ரெண்டுநாள்
முன்னாடி ஒரு பாவ்
டீ பாத்திரம் கூட அடகு வெச்சாச்சு

என்ன சொல்ல அக்கா
எங்க போய் பிச்ச எடுக்க
ரெண்டு நாளாச்சு ஒரு
கஸ்டமர பார்த்து

என் வாசனை கட்டில்
ஞாபகம் இருக்கில்ல?
இருக்கட்டும்
ஆனா இன்னிக்கு
ரெண்டு ரூவா கொடு”

வாழ்க்கையில் வறுமையை நிறையப் பார்த்த அருண் பிற்காலத்தில் பிரபல வர்த்தக விளம்பர கலைஞர் ஆனார். சில குறிப்பிட்ட விதிவிலக்குகள் இருப்பினும் அருணின் ஆங்கில மற்றும் மராத்தியக் கவிதைகள் சிந்தனையின் இரு படிமங்களைக் காட்டுகின்றன.

“என்னிடம் ஒரு பேனா இருக்கிறது
இரண்டு மொழியில் எழுதும்
ஒன்றில் வரையும்

என் பென்சிலில் இரு முனைகளும் சீவப்பட்டுள்ளன
ஒன்று ஆங்கிலத்தில் எழுத
ஒன்று மராத்தியில் எழுத”

உணர்ச்சிக் கொந்தளிப்புகளையும் தர்க்கத்தையும் கலக்காமல் எழுதுவதற்குத்தான் இந்த ஏற்பாடோ?

***





Discover more from சொல்வனம் | இதழ் 363 | 22 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.