காளிதாசரின் சரித்திரத்தில் சில சுவையான வாய்மொழிக் கதைகளும் இருக்கும். சிறந்த ஆசிகள் வழங்கும் அறிஞர்களுக்குப் பரிசு தரப்படும் என போஜராஜன் அறிவிக்கிறான். நம் தர்மியைப் போன்ற ஏழைப் புலவன் ஒருவன், காளிதாசரிடமிருந்து ஒரு ஆசிவாக்கியத்தைப் பெற்று, அரசவையில் அதை மாற்றிச் சொல்லிவிடுகிறான். ‘மூன்று தொல்லைகள் இல்லாமல் வாழ்க’ என்பதற்குப் பதிலாக ‘முத் தொல்லைகளுடன் வாழ்க’ என வாழ்த்துகிறான். அரசனுக்கு சினம் தலைக்கேறுகிறது. காளிதாசன் சொன்னான்: “உன்னைச் சந்திக்க அரசர்களும், அறிஞர்களும் வந்து கொண்டே இருக்கட்டும்- இது நேரம் போதாமை எனும் முதல் தொல்லை. உன் கருவூலத்தில் குவியும் செல்வம் எண்ணி மாளாததாக இருக்கட்டும். இது இரண்டாவது. நீ உண்கையில், உன் குழந்தைகள், உன் தாலத்தில் சிறு கையிட்டுத் துளாவிக் கொஞ்சுவது உனக்கு அன்புத் தொல்லையாக இருக்கட்டும்.’
உலகப் புகழ் பெற்ற கலீல் ஜிப்ரானின் குழந்தைகளைப் பற்றிய பாடல் இப்படித் தொடங்கும்:
‘உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகளல்ல;
வாழ்வு தன்னைத் தானே விழைவதால் குழந்தைகள் உங்கள் மூலமாக வருகிறார்கள்,
ஆனால், உங்களிடமிருந்தல்ல.’
மேற்கண்ட பாடலின் தத்துவப் பொருளையும், அழகான சொல் நயத்தையும் விட்டுவிட்டு, நவீனத் தொழில் நுட்பமும், அரசுகளும், சட்டமும் அதன் தன்மையையே மாற்றி செயல்படுவதை இக்கட்டுரையில் பார்ப்போம்.
‘பொருளும், இயந்திரமும்’ (Machines & Meaning) என்ற தலைப்பில், ந்யூயார்கில், மார்கரெட் வில்லாவில் (Margaret Ville) இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில், வழக்கறிஞரும், ஹேல் (Hale) நிறுவனத்தின் இயக்குனருமான ஜெஃப் ஷேபர் (Jeff Shafer) நிகழ்த்திய உரை, தொழில் நுட்பம், அரசாங்கம், சட்டம் இவை எப்படி மனிதப் பரம்பரையை மாற்றுகிறது என்ற கோணத்தில் பேசப்பட்ட சிறப்பான ஒன்று. தலைகீழாக்கமும், மனித விரோதமும் (Antihumanisam & Inversion) என்று ‘குழந்தைகள் உருவாக்கப்படுவதை’ அவர் விமர்சிக்கிறார். ‘உதவி கருவாக்க நுட்பம்’, (Assisted Reproductive Technology-ART) வணிகத் தன்மை வாய்ந்த வாடகைகளின் மூலம் செயல்படுவதும், அதற்கு சமத்துவம் மற்றும் அறத்தின் பெயரால் அரசு துணை நிற்பதும், இதனால் ஏற்படும் சிக்கல்களைத் தீர்க்க மேன்மேலும் சட்ட உதவியை நாடும் சூழலும், பனிக்கட்டிகளின் நுனி மட்டுமே தெரிய கடலினுள் அவற்றின் உடல் அமிழ்ந்திருப்பதை ஒத்திருக்கிறது என படிப்படியாக விளக்குகிறார். உலக வணிகமயமாக்கலில், குடும்பம், தனித்த ஆளுமை அனைத்தும் வலுவிழுந்து போகின்றன; இதனால், சர்வாதிகார சமூக, அரசியல் நிலைகள் உருவாகும் சூழல் வருகிறது.. அந்தச் சூழலில், குழந்தைகள், ஆளுமைகளாக இல்லாமல், பகுதி உற்பத்திப் பொருட்களை இணைத்துக் கோர்க்கப்பட்ட ஒரு பொருளாகிறார்கள். இந்த நிலையில் பெற்றோர்கள் என்று யாரைச் சொல்லக்கூடும் என்ற கேள்வி ஒரு புறம் இருந்தாலும், ரெடிமேட் குழந்தையை தங்களிடம் வைத்திருப்பவர்கள் ‘அங்கீகரிக்கப்பட்ட காப்பாளர்களாகத்தான்’ இருக்க முடியும். அந்தக் கௌரவம் கூட அவர்களுக்குக் கிடைப்பது, இந்த உருவாக்க விளையாட்டில் பங்கு பெற்றோர், அரசுகள், ஆகியோர்க்காகச் செய்யும் செயல்தான்.

தொழில் நுட்பத்தின் பார்வையில், இயந்திரத்தின் தர்க்கத்தை தனக்குள் கொண்டு வந்துள்ள சட்ட வரைமுறைகளின் பார்வையில், ‘குழந்தைகளுக்கு வீடில்லை, சொந்தம் கொண்டாட எவரும் இல்லாமல் தொகுக்கப்படும் உயிரிகள்’ என்ற கருத்து உள்ளீடாகப் புலனாகிறது. உலகின் எப்பகுதியில் இருந்தும் பாகங்கள், அவற்றின் இணைப்புகள், அதன் மூலம் பிறத்தல் எனத் துலங்கி வரும் ‘உலக குழந்தைக்கு’ (Global Child) இயற்கையாக அமையும் உறவில்லை, உட்பொதிந்த பரம்பரைக் குணங்கள் இல்லை, முன்னோர்கள் இல்லை, குடும்ப வரலாறில்லை.’ என்ன இருக்கிறது? அரசு மட்டுமே. பிறப்பிக்கும் சக்தியை சந்தைப் படுத்தி, அதி வேக தொழில் நுட்பத்தின் அசுரப் பாய்ச்சலில், நம்மை ஆழ்த்திவிடுகிறார்கள். ‘இல்லை’, இது தேவையில்லை’ என்று நம்மால் சொல்ல முடியாத மாயக் கவர்ச்சியில் நம்மை மயக்குகிறார்கள்.
ஜெஃப் சொல்கிறார் “நேற்று இரு இணையக் கடிதங்கள் வந்தன. ஒன்று, அமெரிக்காவில் இருக்கும் தொழில் நுட்ப தொடங்கு நிலை நிறுவனத்தைப் பற்றி சொல்கிறது:
‘பெற்றோர்களே, உங்கள் கருவின் புத்திசாலித்தனத்தை நாங்கள் மரபியல் சார்ந்த பரிசோதனைகளின் மூலம் சொல்கிறோம். இதனால், அந்தக் கருவை, நீங்கள் விரும்பும் ஐ க்யு (IQ) நிலையில் வளர்க்கலாமல்லவா? எங்கள் கணிப்பைக் கொண்டு நீங்கள் கருவை வளர்ப்பதோ, கலைப்பதோ செய்து கொள்ளலாம்.’
இரண்டாவது செய்தி ‘நியமித்த வாடகைத் தாய் மது அருந்துவதைப் பார்த்தேன். அவளை கருக்கலைப்பு செய்ய வைத்தேன்.’
இன்று மேலை நாடுகள் மழலைப் பேற்றை எப்படிப் பார்க்கிறது, அது எப்படி மனிதப் பரம்பரையை அசைக்கிறது என்பதை சிந்தியுங்கள்.
பிரித்தானிய நெறிமுறையாளரான ஆலிவர் ஓ டொனோவேன் (Oliverf O’ Donnovan) சொல்கிறார்: ‘தொழில் நுட்பத்தின் பகட்டில், நாம் பொறுப்பு என்பதைத் துறந்த சமூகமாகி வருகிறோம்.’ பழம் பெருமை வாய்ந்த அமெரிக்க குடும்பச் சட்டம், இந்த தொழில் வல்லுனர்களால் பிரமிப்பிற்கும், குழப்பத்திற்கும் ஆளாகி நிற்கிறது. இந்தப் புதுமையால், இக்காலத்திய குடும்பக் கொள்கைகள், வேரையோ, குடும்பத்தின் பிரத்யேக குணங்களையோ, உட்பொதிந்துள்ள சில தன்மைகளையோ மறுத்தும், இந்தப் பாரம்பரிய குணங்களைப் போற்றிக் கொண்டாடுவது அப்படியொன்றும் முக்கியத்துவம் வாய்ந்ததல்ல என்று அதிரடியாகப் பேசியும் வருவது, முன்சொன்னவைகளைப் பற்றி சிந்திக்க வேண்டும், மதிக்க வேண்டும், அவ்வாறு வாழ வேண்டும் என்ற கருத்துக்கள் கூட இல்லாத நிலையைக் காட்டுகிறது.
அன்னை- தந்தை என்ற உறவு முறையில் இயற்கையாக வரும் குழந்தைக்கு, உறவுகளின் பாதுகாப்பு என்பது, சட்டம் உறுதி செய்யும் மரியாதையும், அந்தப் பாரம்பர்யத்தின் மனித இன இயலின் வரலாற்றைச் சொல்லும் அங்கீகாரமுமாகும்.
ஒரு குழந்தை பிறப்பது என்பது, வெற்று எண்ணல்ல, அதன் இருத்தல் எப்படியோ இருக்கட்டும் என்பதுமல்ல, முதன்மையாக எவருடனும் இணைக்காமல் இருப்பதுமல்ல, எங்கோ எவரோ வளர்க்கட்டும் என்ற விநியோகப் பொருளுமல்ல. குழந்தை உருவாகும் போதே தன் முன்னோர்களுடன் அதற்கு உறவு வந்துவிடுகிறது. தாய், தந்தையை ஒத்து, அவர்களால் ஆபத்திலிருந்து பாதுகாக்கப்பட்டு, அவர்களால் நேசிக்கப்பட்டு, அவர்களுடன் ஒரு வசிப்பிடத்தில் வளர குழந்தைகளுக்கு உரிமை இல்லையா? மனித வரலாற்றில், தாய்- தந்தை- குழந்தை என்ற இந்த மூவரின் இணைப்பு மிக ஆழமான ஒன்றாகவும், நிலையானதொரு கருத்தாகவும் தான் சட்டங்கள் சொல்லி வந்திருக்கின்றன. ஒரு மனிதன், குடும்பத்தைச் சேர்ந்தவனாகத் தான் எண்ணப்படுகிறான். அதுதான் நீதி என்றும் சட்டம் சொல்கிறது. மனிதன் என்ற உண்மையை அடையாளப்படுத்துவதோடு, சட்டத்தின் அங்கீகாரமும் கிடைக்கிறது.
ஆனால், மேலை நாடுகளில் நடுக்கத்துடன் நாம் காண்பது என்ன? அரசும், செல்வாக்கு மிக்க நிறுவனங்களும், மனித வரலாற்றை, திருமணத்தை, குடும்ப உறவுகளை, எதிர்த்து, செயற்கையான, தனித்ததான, தொழில் நுட்பத் துணை கொண்டு, எண்ணிக்கை சார்ந்த ஒரு உற்பத்தியாக உருவாகும் குழந்தைகளுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கின்றன. நம்மைச் சில்லிட வைக்கும் கேள்வியும் இருக்கிறது; “யாருக்குச் சொந்தம் இந்தக் குழந்தைகள்?’
கருத்தரிக்க செயற்கை முறையில் உதவும் நிறுவனங்கள், வண்ண வண்ண புகைப்படங்களால், கையேடுகளால் என்னென்ன செய்கின்றன?
- இங்கே கரு முட்டை, விந்து, வாங்க, விற்கப்படும்.
- மனித இனத்தை மேம்பட வாழ வைக்கும் வகையிலான கருக்கள் கிடைக்கும்.
- கருப்பையில் தாங்கி, வளர்த்து, பெற்றெடுத்துக் கொடுக்க வாடகைத் தாய்கள் கிடைப்பார்கள்.
இதில் மண வாழ்வின் மகிழ்ச்சியுள்ள நிகழ்வான குழந்தைப் பேறு என்பது காணமல் போய்விடுகிறது.
தொடரும் தாய் எனும் குருதி உறவு, பிறக்கையிலேயே அறுந்து விடுகிறது.
குழந்தையின் குருதி வழி அடையாளம் தென்படுவதில்லை. பகுதிகளாக உருவாகி இணைக்கப்படும் குழந்தை வணிகப் பொருள் என்றாகிறது- அதை கேட்டுப் பெற்றவர் அதன் உரிமையாளராகிறார்- நாம் வாங்கும் தங்க நகையின் மேல் நமக்குள்ள உரிமை போன்றது இது. பேரம் பேசி, பிடித்த வடிவில் வாங்கி, பெருமையாக அணிந்து வெளியில் காட்டி என்று நிகழும் இச்செயல். தொழில் முனைவோர்களால், தொழில் நுட்பத்தின் துணை கொண்டு மனித இயல்பை மாற்றி வரையறுக்கும் ஒரு செயல்பாடு என்றும் சொல்லலாம். நுகர்வுப் பொருளாக, தொழில் நுட்ப உயிருள்ள விளை பொருளாக, யாருடனும் இயற்கையான உறவு அற்றதாக, சட்டம் ஏற்றுக் கொள்ளும் முறையில் பரிவர்த்தனைப் பாண்டமாக, தொடர்பேயற்ற நால்வருக்கிடையே நடக்கும் வியாபாரத்தின் மையப் பொருளாக உருவாகும் குழந்தைகள், 20, 21ம் நூற்றாண்டின் மனிதர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்.
தாய்-தந்தை-மகவு என்று சட்டம் மதித்த ஒரு அமைப்பினால், அந்தப் பெற்றோரின் கடப்பாடு பேணப்படுகிறது. ஈன்று புரந்தருதல் என் தலைக் கடனே, சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே, நன்னடை நல்கல் வேந்தர்க்குக் கடனே என்ற புற நானூற்றுப் பாடல் இதைத்தான் சொல்கிறது. தன் தலையில் தானே மங்கல அட்சதையைத் தூவிக் கொள்வது போல, அரசு, இந்தக் குழந்தை வணிக உற்பத்தி முறையை, அங்கீகரித்து இணைப்பதன் மூலம், அக்குழந்தையின் இருத்தல் என்னும் பொறுப்பை, தன் கடமையாக ஏற்றுக் கொள்ளும் விபரீதம் நடந்து விடுகிறது.
குழந்தைக்கு தன் முன்னோர்களுடன் இருக்கும் உறவை தகர்ப்பதோடு மட்டும் இல்லாமல், பெற்றோரை இழந்து அநாதையாய் நிற்கும் குழந்தைகளின் நிலையை எண்ணி வருந்துவதும் கூட இல்லாத நிலை சமுதாயத்தில் உருவாகிவிடுகிறது. மாபெரும் இழப்பை ஈடு செய்யும் தத்தெடுத்தல், பொறுப்பற்ற அப்பனை நிந்தித்தல், போன்ற ஈரப்பசைகள் உலர்ந்து போவதற்கும் ஏதுவாகிறது. தங்களிடையே உருவான அன்பினால் முகிழ்த்த குழந்தைக்கு இயற்கையாக பெற்றோரின் அன்பும், அரவணைப்பும் அவசியத் தேவையன்றோ? கடமை, அன்பு, பாசம் இவற்றால் கட்டப்படும் கூடுதானே இல்லம் என்பது? இவை எங்கு தொடங்க வேண்டும்? அல்லது பொதுவாகத் தொடங்கும்? குழந்தைக்கு அதைத் தர வேண்டாமா?
புது வரைவு சட்டம், குழந்தையை ஒரு புள்ளியியல் கணக்காகப் பார்க்கிறது- பொருட்களைப் போல, குழந்தை எங்கு உற்பத்தி ஆகிறது என்பதை மேம்போக்காகப் பார்வையிட்டுவிட்டு ஒதுங்கிக் கொள்கிறது- தனி ஒரு ஜீவன் என்றே குழந்தையைக் கருதுகிறது- வரலாறற்ற, நிச்சயமான வீடற்ற ஒரு உயிரி என்பதை மறைமுகமாக ஏற்கிறது. இப்படிப்பட்ட குழந்தைக்கு தற்செயலாக நன்மை நடந்தால் தான் உண்டு.
இயந்திரத்தன்மையுள்ள ஒப்பந்தங்கள், பால் சமத்துவம் போன்றவை, மனிதத் தன்மையை, மனிதத்துவத்தை, வரைமுறை செய்ய முற்படுகையில், முற்றதிகாரம் அந்தச் சமூகத்தில் இயல்பாகவே மேலெழும். இயற்கையான குடும்பத்திற்கும், மகப்பேற்றிற்கும் இருக்கும் மதிப்பை, சட்டம் உணராமல் போனால், கல்யாணத்தையும், பெற்றோராவதையும் காலங்காலமாய் நிலைக்கும் வழிமுறையையும் மாற்ற முனைந்தால், ஆழமான வேறுபாடுகள் கொண்ட ஆண்-பெண் இனத்திடையில் இறுக்கமான சமத்துவ நிலையச் சொல்லி உறவுகளை நிர்ணயித்தால், அங்கே தூய நேர்மறை சட்டம் மட்டுமே நின்று, அரசின் தலையீடல்லாமல் எந்தத் தீர்வுமே இல்லாத சூழல் உருவாகும். ஒரு தனி மனிதன் குடும்பத்திலிருந்தும், அதன் பிணைக்கும் தன்மையான நிலைத்த உறவிலிருந்தும், பிரிக்கப்பட்டுவிட்டால், ஏற்கெனவே சொல்லிக் கொள்ளும்படியான உறவுகள் அற்ற குழந்தை அரசுகளின் நிலையற்ற செயல்பாட்டு வரையறைக்குள், வந்துவிடும்.
குடும்பம் என்பதைச் சொல்வதான மறுவரையறையில், மகப்பேறும், பாலியல் உரிமைகளும் முன்னிறுத்தப்பட்டாலும், கொள்கை அளவில், அது அரசின் கைகளில் முற்றதிகாரத்திற்கான கருவியை ஒப்படைப்பதாகும். அரசின் அதிகாரம் வரம்பற்ற ஒன்றாகிவிடும். முன்னரே பார்த்தது போல், பெற்றோர்கள் (வாடகைதான்) குழந்தையின் அங்கீகரிக்கப்பட்ட காப்பாளர்கள், இயற்கையான அதிகாரம் உள்ளவர்களில்லை. என்பது நடைமுறையாகிவிடும்.
இந்த நிலையில், தாய்- தந்தை-மகவு என்ற உறவு இயந்திரத்தனமாக இருக்கும், உடல் ஒரு இயக்கம் என, மனித அடையாளம் உள்ளிருக்கும் அக நிலை இலங்குதல் என சுட்டுவதால் உறவுகள் உயிர்ப்போடு இருப்பது ஐயமே.
* * *
தத்துவ சிந்தனைகளிலும், முதிர்ச்சி எனப்படும் நிலைகளிலும், பிணைப்பற்று இருப்பதை காலங்காலமாகப் பேசி வருகிறார்கள். இந்தச் சிந்தனையின் தாக்கத்தை எதிர்த்து அல்லது மட்டுப்படுத்தி, இறையாண்மை, அரசு, பொது சட்டங்கள், குடும்ப சட்டங்களை இயற்றிப் பேணி வந்தன. சமீபத்திய பத்தாண்டுகளில், இந்தச் சட்டங்களை தொழில் நுட்பத்தின் பெயரில் மீறும் சில சிந்தனைகள், குடும்பம் எனும் மனிதவியல் வரலாற்றை கடுமையாகச் சுருக்கி, அதில் வெற்றியும் கண்டு வருகின்றன.
குடும்பம் என்பது இயற்கையான கூடு என்பதை மாற்றி, சட்டப்படியாகவே, ஒரு வசதி எனக் கொள்வதற்கு. அந்தச் சட்டமே துணை போகும் நிலை நம் காலத்தில், நம் கண் முன்னே எழுந்து வருகிறது. வெளிப்படையாகவே, இந்த உயிர் உருவாக்க தொழில் நுட்பத்திற்கும், பொது மக்களுக்கும் ஆதரவு அளிக்கும் சட்டம், இயந்திரத்தனமான தர்க்கத்தை கேள்விகள் இல்லாமல் ஏற்றுக் கொள்கிறது. மருத்துவ அறுவை சிகிட்சைகள், மருந்துகள் மூலம் கருவிலேயே சிசுவினை அழிக்கும் செயலும் இதனுள் அடக்கம். தாய்மை என்பதற்கு அர்த்தமோ, பொறுப்போ இல்லை என்று உயிரியல் மறைமுகமாக கருதுகிறது போலும். நுகர்வோர் விரும்பும் வண்ணம் குழந்தை உற்பத்தி செய்யப்படுகிறது.
செயற்கை கருத்தரிப்பு நுட்பம் உருவாக்கும் ‘உலகக் குழந்தை’, இயற்கையும், உயிரிகளும் பிரிவதைக் காட்டும் முன்னுதாரணம் என்றே சொல்லலாம். குழந்தை உருவாவதில், அதன் பாதுகாப்பில் இணைந்திருக்கும் ஒரு இயற்கைத் தன்மையை மாற்றும் இந்த வழியில், கருமுட்டை, விந்து, கரு வளர்ச்சி, நிதி அனைத்திற்குமிடையில் உறவு என்பது கிடையாது.. உதாரணமாக, கருமுட்டை தருபவர் மிஸ்ஸிப்பியில், விந்து தானம் அளிப்பவர் இஸ்ரேலில், கரு வளர்ப்பவர் புது தில்லியில், குழந்தையைக் கோருபவர் டென்வரில், அனைத்தையும் வணிக நோக்கில் ஒருங்கிணைத்து பணம் பெறுபவர் ந்யூயார்க்கிலும் இருக்கிறார் என்றால், முன்னர் நால்வரும் ஒரே மொழி பேசி, ஒரே இயற்கைச் சூழலில் இருக்கும் வாய்ப்பில்லை. குழந்தை பிறந்தவுடன், அதைப் பெற விமானத்தில் வரும் டென்வர் ஆசாமி, உடனே அதனுடன் தன் வசிப்பிடத்திற்கு வந்துவிடுவார். உலகச் சந்தையில் கிடைக்கும் மரபணுவகைகள், உடற்கூற்று அம்சங்கள், எந்த மூலையிலிருந்தும் இவற்றை கேட்டுப் பெற்று, ஒரு செயல்பாடு போல இணைத்து, ஒரு பொருளாக குழந்தை உற்பத்தி செய்யப்படுகிறது. திரவ நைட்ரஜன் உறை நிலையில், துரித விமானப் பயணத்தில், தகவல் தொழில் நுட்பம் தரும் வசதியில், உண்மையாகவே புவியியல் எல்லைகள் கடக்கப்பட்டுவிடுகின்றன. குழந்தை உற்பத்தியில், இவைகளின் பங்களிப்பை மறுக்க முடியாது.
தான் கோரிய விதத்தில், அப்படிக் கோரியதாலே, அதற்கான நிதியைத் தந்ததாலே, அவர் ஒரு நுகர்வோராகவும், குழந்தை நுகர்பொருளாகவும் மாறுவதால், அவருக்கு அந்தக் குழந்தையைத் தன் இருப்பிடத்திற்குக் கொண்டு வர உரிமை வந்துவிடுகிறது. கடையில் வாங்கும் சாமான், வீட்டிற்கு வருவதைப் போன்றது இது
இந்தத் தொழில் வல்லுனர் உருவாக்கும் குழந்தையை அனுமதிக்கும் சட்டம், அந்த அமைப்பின் இயந்திரத் தனத்துடன் ஒத்துப் போய், மனிதன் என்று, தான் முன்னர் செய்திருந்த வரையறையை மாற்றிக் கொள்கிறது. வெவ்வேறான பங்கேற்பாளர்கள், மரபையோ, மகப்பேற்றின் உறவையோ புறந்தள்ளுதல், அனைத்தும் சட்டத்திற்கு இன்று ஒரு பொருட்டல்ல. உரிமைக் குரல்கள் எழும்பாவிடில், சட்டம், அக் குழந்தையை யாருடையதாகவும் பார்ப்பதில்லை. தாய்- தந்தையின் கடமைகள், பொறுப்புகள், வம்சா வழி கருதுகோள், ஆகியவற்றை தார்மீக ரீதியாக கண்காணித்து தட்டிக் கேட்கும் தன் வரலாற்றுக் கடமையை சட்டம் கைவிட்டு விடுகிறது.
செயற்கை கரு உருவாக்கத்தின் சதி, மனிதப் பயிர் உற்பத்தியை மட்டும் கைக்கொள்ளவில்லை, அது, சட்டத்தின் தர நிலைகளையும் அசைக்கிறது. தொடக்கத்தில் இத்தகைய இயந்திரத்தனமான மனித உருவாக்கத்தைத் தடுக்கத் தவறிய சட்டம், இந்த இயந்திர செயல்பாட்டிற்கு பணிந்து போய்விட்டது. செயற்கைக் கரு உருவாக்கத்தில் இயற்கைக்கு மாறான மனிதவியல் வரலாறு முகிழ்ப்பது மட்டுமல்ல, பாதுகாப்பற்ற அந்தக் குழந்தைகள் யார் வசம் இருப்பது என்பதிலும் சிக்கல்கள் எழுந்து சட்டம் அதில் நுழையும் நிலையும் உருவாகிறது. செயற்கை முறையில் கரு உருவானதால் எழுந்த கேள்வி என்றாலும், அது முதன்மைக் கேள்வியில்லை என்று சட்டம் ஏற்றுக் கொண்டு, அதைப் பாதுகாக்கும் விதமாக தீர்ப்பும் சொல்ல வேண்டிய நிலைக்கு வந்து விடுகிறது. சட்டம் அதுவரை சொல்லி வந்த இயற்கைக் குடும்பம், குடும்பத்தின் கடமை, குழந்தையின் உரிமை எல்லாம், இந்தப் புதிய சூழ் நிலையால் பின் தள்ளப்பட்டு, நீதிபதிகளோ, அரசாங்க அதிகாரிகளோ, குழந்தை என்னும் விளைவு யாருக்குச் சொந்தம் என்ற கேள்விக்கு மட்டுமே பதில் சொல்லும் நிலைக்கு வந்துவிடுகிறார்கள். இயந்திரக் குழந்தை உற்பத்தியை உயர்த்திப் பிடிக்க நேரிடும் கட்டம் ஏற்படுகிறது. சட்டம் அனுமதித்த ஒன்று, சிக்கலை ஏற்படுத்தும் என்று முன்னுணராத ஒன்று, இன்று சட்டத் தீர்விற்குத்தானே வர முடியும்? குடிசமூகம் இதில் செய்வதற்கு என்ன இருக்கிறது?
ஒரு துணைக்கேள்வியும் வருகிறது. பதில் சொல்ல முடியாத, சிக்கலான ஒரு கேள்வி- இந்தச் செயல்முறையில் யார் குழந்தையின் உண்மையான தாய்? கருவுறுவதும், வளர்ப்பதும், ஈன்றெடுப்பதும் ஒரே இடத்தில் நடந்தது மாறி, அது பிரிக்கப்பட்டு விட்டது. கருமுட்டை அளித்தவரா, கருப்பையில் வளர்த்தவரா, யார் அம்மா? அரசர் சாலமன் அவையில் இக்கேள்வி வேறு விதத்தில் எழுந்த கதை இருக்கிறது. யார் இவர்களில் அம்மா என்ற இக்கேள்விக்கு முன் உதாரணங்கள் இல்லை. கரிமக் கருவை தொழில் நுட்பத்தின் மூலம் கைப்பற்றி, அதைப் பிரித்துக் கொடுப்பதில் உருவாகும் விளைச்சல், துணை நின்ற இந்த அம்மாக்கள் அனைவருக்குமா, அல்லது சொந்தம் கொண்டாடுபவர்க்கா?
சிந்தித்துப் பார்த்தால் யார் பக்கம் நியாயம் என்று சொல்வது அரிது; கருமுட்டை தந்தவர், கருவை வளர்த்தவர், அதில் உருவாகும் குழந்தை மூவரையும் உணர்ச்சிகரமாக இந்த வினா பாதிக்கலாம்- ஆனால், சட்டம் இதைக் கணக்கில் கொள்வதில்லை. ஏனெனில், கருதரிக்க உதவும் மையங்களின் அனுமதிக்கப்பட்ட வரையறைகள், மூன்றுமே தொடர்பற்ற உறவுகள் என்றே சொல்கின்றன. இந்தச் செயலில் பங்கேற்கும் பெண்கள், உடல்களாக, உதவும் பொருளெனப் பார்க்கப்படுகிறார்கள். இச்செயலிற்கு சட்ட ஆதரவு வந்தவுடனேயே அதன் உள்ளீடான உண்மை இதுதான் என்பதும் வெளிப்படையாகிறது. தன் புது இருக்கையில் அமர்ந்துள்ள சட்டம், சினை முட்டை தந்தவரையோ, சுமந்தவரையோ இதில் உடைமையாளராகப் பார்ப்பதில்லை. அது, அந்தக் குழந்தையைக் கோரி பெற்றவரை, அதற்கான நிதிச் செலவு போன்றவற்றைச் செய்தவருக்கு உரிமையை அளிக்கிறது.
* * *
இயற்கையான உறவில் மலரும் மகவு என்ற அமைப்பை நீர்த்துப் போகச் செய்து, அந்த உறவு தரும் கடமை, பொறுப்பு, அன்பு, வம்சம் என்று காலம்காலமாய் மனித இனமும், சட்டமும் பணிந்து கொண்டாடிய ஒன்றை, ஒப்பந்தங்களால் அடைவதில், சட்டச் சிக்கல்கள் எழத்தானே செய்யும்? யாருக்குச் சொந்தம் என்ற கேள்வியை எடுத்துக் கொள்ளுங்கள். பணத்திற்காக கருவை சுமந்தவர்களென்றாலும், அத்தகைய அனைத்துப் பெண்களும், தாங்கள் கற்பனை செய்தபடி, அந்தக் குழந்தையிடமிருந்து உடலால் பிரிந்திருப்பது எளிதல்ல என்ற இடத்திற்கு வந்து சேர்ந்து மனச் சோர்விற்கும் ஏக்கத்திற்கும் உள்ளாகிறார்கள். தன்னுள்ளிருக்கும் குழந்தையை நேசிக்கிறார்கள், பிறந்த பிறகு அதைப் பிரிய மறுக்கிறார்கள். யார் வாங்குபவரோ அவரை சட்டரீதியாக மடக்கப் பார்க்கிறார்கள். வில்லியம் ஸ்டெர்ன், எலிசபெத் தம்பதியினரின், வாடகைத் தாயாக இருந்த மேரி, குழந்தை தனது உரிமை, உடைமை என்று வாதாடி தோற்றுப் போனார். சில நேரங்களில், குழந்தையைக் கோரியவர்கள், அதை வேண்டாம் எனக் கை கழுவிவிடுகிறார்கள்- அவர்களால் பூமிக்கு வந்த அது, வயிற்றில் வைத்திருந்தவரிடமும் இல்லாமல், இடைத் தரகர்கள் பால் வந்து சேர்கிறது. வெளி நாட்டு வாடகைத்தாய் சந்தைகளிலும், பொதுவாக வணிகச் சந்தைகளில் காணப்படும் மனித சபலங்கள், புவியியல் சார்ந்த விருப்பங்களால் மேலும் தூண்டப்பட்டு, வாங்கும்- விற்கும் வேலையை அல்லது பாதியில் தவிர்ப்பதை அல்லது முற்றிலும் கைவிடும் நிலையை புள்ளியியல் காட்டுகிறது.
இப்படி எத்தனையோ வழக்குகள், எத்தனையோ சிக்கல்கள், எத்தனையோ கூக்குரல்கள், எத்தனையோ சமாதானங்கள்.
இந்தத் தொழிற்புரட்சி யுகம் மற்றும் அதற்கு அனுசரணையான சட்டத்தை எதிர்க்கும் இந்தக் கட்டுரையை இவ்வாறு தொகுத்துக் கொள்ளலாம்.
- காதல் ஒருமித்து, ஆண் மற்றும் பெண் மகிழ்ந்து, குடும்ப, குல வாரிசாய், தன் கடமையும், நிறைவும் கொண்டு மகவைப் பெற்றெடுத்துப் பேணுதலை, நாம் நம் வசதியின் பொருட்டு, வெளியிலிருந்து தருவிப்பது, மனித இன இயலிற்கு நலம் செய்வதாகுமா?
- இந்தக் குழந்தைக்கான முன்னோர் என்று, அதன் அடையாளம் என்று, அதன் பாரம்பர்யம் என்று எதைச் சொல்வீர்கள்?
- இயற்கையாகப் பெற்றோர் தரும் பாதுகாப்பும், குடும்பச் சூழலும் இக்குழந்தைக்குக் கிடைக்குமா?
- இந்த உலகில், மனிதன் அனாதையாகத் தோன்றுவதற்கான சூழல் தானே இருந்தது எனக் கேட்கலாம். ஆனால், இது அதை விடவும் மோசமானது. முக்கிய உறவை இழந்தவனைத்தான், தாய்- தந்தை- குடும்பம் என எதுவும் இல்லாதவனைத்தான் அனாதை என்பார்கள்- அவன் நிலையைக் கண்டு புலம்புவார்கள். ஆனால், மானுடவியலின் புதுத் திருத்தங்களின்படி, இழப்பதற்கே எதுவும் இல்லாதவன், அனாதை என்று சொல்லப்படமுடியாதவனல்லவா?
உக்ரைன் போர் தொடக்கத்தில் அகில உலக கவனத்தை ஈர்த்த அந்தப் புகைப்படத்தை நினைத்துப் பாருங்கள். உக்ரைனின் வாடகைத் தாய்கள் ஈன்ற சேய்கள், வரிசையான தொட்டில்களிலேயே கிடந்த அவலம், விற்பனையாகாத சரக்குகள் கிடங்கில் முடங்கியிருப்பதைப் போன்றதல்லவா?! வாங்க ஒப்பந்தம் செய்தவர், பறந்து வந்து குழந்தையை எடுத்துச் செல்ல முடியாத நிலையில், இந்தக் குழந்தைகள் சொல்லும் செய்தி என்ன? புது மனிதத்தின் எடுத்துக்காட்டுக்கள் நாங்கள், சூழலால் தேங்கி நின்றுவிடும் சரக்குகள் போல நாங்கள்!
உள்ளே இடம் கொடுத்து, வளர்த்து, ஈன்றெடுக்கும் தாயுடனான உறவும், குழந்தை- வாடகைத்தாய் வணிகத்தால் அறுபட்டுப் போய்விடுகிறது. இருவரும் ஒருவருக்கொருவர் சொந்தமில்லை. அவள் ஒரு தற்காலிகம், அவ்வளவே. உடலளவில் அவளில் உண்டாகும் மாற்றங்கள், பால் சுரப்பு , விரிவடைந்த கருப்பை பற்றியெல்லாம் ஏன் கவலைப்பட வேண்டும்? பிறப்பித்த பிறகு அவளுக்கு வேலையில்லை, பாதுகாப்பும் அந்தக் குழந்தைக்குக் கிடைக்கும் என்று சொல்வதற்கில்லை. இந்தக் கபடங்கள் அரங்கேறுவது வரவேற்பிற்கு உரியதல்ல, சட்டமும், நாமும் இந்தச் சாபத்தை, தீமையை துறக்க வேண்டும்.
மேலே கண்ட கட்டுரை, இயற்கையாக வளர வேண்டிய வம்சத்தை, ஒரு அலைபேசியின் பாகங்களை வெவ்வேறு தொழிற்சாலைகளில் உருவாக்கி, பின்னர் கோர்த்து சந்தைப் படுத்துவது போலிருக்கிறது என்று சொல்கிறது. அதன் கவலைகளைப் புரிந்து கொள்ள முடியும் அதே நேரத்தில், அது சில உரிமைகளை, அதுவும் போராடிப் பெற்ற உரிமைகளை, சங்கடத்திற்கு உள்ளாக்குகிறதோ என்பதையும் சிந்திக்காமல் இருக்க முடியவில்லை.
- ஆண்- பெண் சமத்துவம், அவர்களின் உடலமைப்பினாலேயே தேவையற்ற ஒன்று என்று ஜெஃப் சொல்கிறார்.
- கருவுற வேண்டியது மனைவியின் கடமை; பேணி வளர்ப்பது இருவரின் கடமை.
- தூய இன வாதம்.
- பழமையை மாற்றக் கூடாது.
- குறை இருக்கும் தம்பதியினர், அனாதைக் குழந்தையை தத்தெடுப்பது சாலச் சிறந்தது. தமிழில் ஒரு பழமொழி உண்டு ‘தங்கச்சி பிள்ளை தன் பிள்ளையானால் தவத்திற்குப் போவானேன்?’
- இனக் கலப்பு, குலக் கலப்பு, வம்சாவழி அற்றுப் போதல் போன்ற கேள்விகளெல்லாம் விஜயன் , குருக்ஷேத்ரத்தில் கேட்டவையே. சமாதானக் காலங்களில், குலம், இனம், வம்சம் கொள்ளும் நெறிகள், போர்க்காலங்களில் கைவிடப்படுகின்றன.
- குழந்தையை ‘ஆர்டர்’ செய்பவர்கள், தங்கள் குடும்பத்திலுள்ள வெறுமையைப் போக்கத்தானே அவ்விதம் செய்கிறார்கள், அதை இக்கட்டுரை கணக்கிலேயே எடுத்துக் கொள்ளவில்லையே. அனைவரையும் வணிகர் என்று சொல்கிறதே.
பாரதம்
நம் தெய்வங்கள் குடும்பத்துடனும், குழந்தகளுடனும் தான் இருக்கிறார்கள். சோமாஸ்கந்த மூர்த்தி நம் மரபில் முக்கியமான ஒன்று.
நமது மரபு வாடகைத் தந்தைகளை அனுமதிக்கிறது. வியாசர், ந்யோக முறையில் திருத்ராஷ்ட்ரன், பாண்டு, விதுரரைப் பிறப்பித்தார். யாகங்களின் மூலம் மகப்பேறு அடைந்தவர்கள் நம் இதிகாசப் புராணங்களில் காணக் கிடைக்கிறார்கள். அக்னியில் மீனாக்ஷியும், பாஞ்சாலியும், நிலத்தில் சீதையும், கோதையும் நம் புராணங்கள் சொல்பவை. மேலும், பெண் தெய்வங்களுக்கு கர்ப்ப வாசம் சொல்லப்படவில்லை. அதைப் போலவே ஆதியான சிவனுக்கும் அவதாரங்கள் கிடையாது. இவையெல்லாமே விதிவிலக்குகளே தவிர, விதிகளாகக் கடைப்பிடிக்கும் கட்டாயங்கள் இல்லை. ஏனெனில், ரிஷிகள், வம்சங்கள், கோத்ரங்கள் என்ற நெறிமுறைகளின்படி, தான், இன்னாரின் மகன், இன்னாரின் வாரிசு, என்று முன்னோர்களையும் இணைத்து அறிமுகம் செய்து கொள்ளும் வழக்கம் நம்மிடம் உண்டு. உதாரணத்திற்கு, ஒரு செய்யுளைப் பார்ப்போம்.
கௌசிக கோத்ரத்தைச் சேர்ந்த ஒருவர் தன் வணக்கத்தைச் சொல்லும் போது இப்படிச் சொல்லு வார்:
அபிவாதயே விஷ்வாமித்ர அகமர்ஷன கௌசிக த்ரயாரிஷிய கௌசிக கோத்ர ஆபஸ்தம்ப சூத்ர யஜூஷாகாத்யாயே ஸ்ரீ வேங்கடச ஷர்மா நாம அஹம் அஸ்மி போ.
இதன் பொருள்
யஜூர் வேதம் என்ற வேதப் பிரிவில், , விஷ்வாமித்ரர், அகமர்ஷனர், கௌசிகர் என்ற மூவரைப் ப்ரவர ரிஷிகளாகக் கொண்டுள்ள கௌசிக கோத்ரத்தில், ஆபஸ்தம்ப விதிகளின்படி, வேங்கடேச சர்மா ஆகிய நான் உங்களை வணங்குகிறேன்.
திருமணப் பத்திரிகையில், சொந்த ஊரும், பாட்டன் மற்றும் தந்தையின் பெயரும் தவறாமல் இடம் பெறச் செய்யும் வழக்கம் நம்மிடம் உண்டு.
‘தில்லுமுல்லு’ என்ற ரஜனி- பாலசந்தர் திரைப்படத்தில், தன் பெயரைச் சொல்லும் போதெல்லாம், ரஜனி, ஐயம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் இந்திரன் என்று சொல்லிச் சொல்லியே சிரிக்க வைப்பார்.
எலான் மஸ்க், ‘பூனைப்பெண்’ என்ற ரோபோவை அறிமுகப்படுத்தியுள்ளார். 5 அடி 6 அங்குல உயரமும், 123 பவுன்ட் எடையும் உள்ள இது வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்யும். மனிதப் பெண் போன்ற முகமும், கைகளும் இருக்கும். அதன் அழகம்சம் நம் விருப்பத் தேர்வு. எதிர்மறையாக எதுவும் சொல்லாது; நம்முடன் பேசவும் செய்யும். இவற்றையெல்லாம்விட அது ஒரு செயற்கை கருப்பையைக் கொண்டிருக்கிறது. அதில் இயற்கைக் கருப்பை சூழல் உள்ளது. கிட்டத்தட்ட 300 மரபணுக்கள் அதனுள் இருக்கிறது. உங்களுக்குப் பிடித்த கருவை மட்டும் அதை வளர்க்கச் செய்யலாம்- கருவின் புத்திசாலித்தன அளவுகோலை நீங்கள் தீர்மானிக்கலாம். கருவின் வளர்ச்சி, இதயத்துடிப்பு போன்றவை 24 மணி நேரமும் நேரடிக் கண்காணிப்பில் இருக்கும். மரபணு கோளாறுகளை கருவிலேயே நேர் செய்ய முடியும். 2026ல் சந்தைக்கு வரும்!
உசாவி:https://theupheaval.substack.com/p/machine-antihumanism-and-the-inversion?triedRedirect=true An essay by Jeff Shafer presented in upheaval by N S Lyons on Nov 4,2024
Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.

One Reply to “மூன்றாம் பிறையில் தொட்டில் கட்டி…”