1
ஜப்பான் போர் விமானங்கள் பேர்ல் (ஹவாய்) துறைமுகத்தின் யு.எஸ். கடற்படைத் தளத்தைத் தாக்கின.
தாய்லாந்து வழியாக வந்து ஜப்பானியர்கள் ரங்கூனைக் கைப்பற்றினார்கள். அங்கிருந்து அவர்கள் இந்தியாவில் நுழையலாம் என எதிர்பார்த்து ப்ரிட்டிஷ் இராணுவம் தடுப்பு ஏற்பாடுகள் செய்யத் தொடங்கியது.
பல்லாங்குழியில் புளியங்கொட்டைகளை எண்ணி வரிசையாக நிரப்பி அனுசுயாவுக்குக் காத்திருந்தாள்.
முதன் முதலில் அதைப் பார்த்த அவள்,
“ரொம்ப நன்னா இருக்கே? மீனா! இது எங்கே வாங்கினது? மலைக்கோட்டை வாசல்ல கூட இப்படிக் கிடைக்காது.”
அளவெடுத்தாற் போன்ற ஒரே சீரான குழிகள். பிசிர் இல்லாமல் இழைத்து இடைவெளி இல்லாமல் பொருந்தும் சட்டங்கள். மூடியதும் அவை பிரியாமல் இருக்க இரண்டு பித்தளை கொக்கிகள்.
“என் ஆத்துக்காரர் பண்ணினது” என்று பெருமையாகச் சொன்னாள் மீனா. “முதல்முதல்ல இந்த ஆத்தில நுழைஞ்சப்ப ஒரு பெருச்சாளி. அவர் தனியா அதைத் துரத்தினார். மாச ஆரம்பத்தில ஒரு பெரிய மரக்கட்டை வாங்கிண்டு வந்து விறகுகளா உடைச்சு வைப்பார்” என்று அவரின் இன்னும் சில சாதனைகள்.
“எங்க ஆத்தில பூரானோ தேளோ வந்தா நான் தான் தைரியமா துடைப்பக்கட்டையில எடுத்து வெளியே எறிணும். அறிவாள் மணையைக் கூட அவர் தொட்டது இல்ல.”
மீனாவின் கணவன் ராமனாதனுக்கு சற்றுத் தள்ளி இருந்த தங்கச் சுரங்கத்தின் வொர்க் ஷாப்பில் வேலை. எட்டு மணிக்கே கிளம்பிப் போய்விட்டான். சாப்பிட்ட தட்டுகளைக் கூட அலம்பி அடுப்பையும் துடைத்தாகிவிட்டது. அனுசுயாவின் ஆத்துக்காரர் அவ்வட்டாரத்தின் மற்ற ஆண்களைப் போல கோலார் சுரங்கத்தை நிர்வகித்த அலுவலகத்தில் குமாஸ்தா. ஒன்பது மணிக்கு மேல் நிதானமாகப் போனால் போதும். அவளுக்கு வீட்டு வேலை முடிந்திருக்காது.
கலகலப்பான சூழலில் வளர்ந்த மீனாவுக்கு அந்தக் குடியிருப்பில் அவள் ஒருத்தி தான் சிநேகிதி. மற்ற பெண்கள் ‘கூலிக்காரன் பெண்டாட்டி’ என்று முகவாயைத் தோளில் இடித்துக்கொண்டு போவார்கள்.
“அவா கிடக்கறா? சுரங்கத்தில வேலை செஞ்சா எப்பவாவது போனஸ் கிடைக்கும். ஆஃபீஸ்ல வெறும் சம்பளம் தான். அதனால உன்னைப் பார்த்து பொறாமை.”
“அது ஒண்ணுல தான்.”
“ஏன்?”
“எல்லாருக்கும் கையில ஒண்ணு, காலைப் பிடிச்சுண்டு ஒண்ணு. என் வயத்தில ஒரு பூச்சியும் இல்ல.”
“பகவானுக்குத் தெரியும், யாருக்கு எதை எப்ப கொடுக்கணும்னு.”
அனுசுயாவுக்குக் கொடுத்துவிட்டான். கொடுக்காவிட்டால் தான் ஆச்சரியம். அவளும் மீனாவைப் போல் பதின்பருவத்தின் எல்லையில் இருந்தாலும் நான்கு தம்பிகள், நான்கு தங்கைகள். அது போதாது என்று அவர்களுடன் விதவை அத்தையின் ஐந்து குழந்தைகள்.
“எல்லாரையும் சேர்த்தா எங்க அப்பா க்ளாஸ் நடத்தலாம்.”
நடுநிலைப் பள்ளிக்கூட ஆசிரியரின் மூத்த பெண் என்றதால் மூன்றாம் தாரமாக வாழ்க்கைப்பட்டு அங்கே வந்தவள். அதனால் மற்ற பெண்களுக்கு அனுசுயாவும் இளக்காரம்.
‘முதல் இரண்டும் பிரசவத்தில போயாச்சு. இவ அடுத்தது.’
“எங்க ஆத்தில எப்பவும் ஒரு தூளி தொங்கிண்டிருக்கும். நீ அரச மரமெல்லாம் பிரதட்சணம் பண்ண வேண்டாம். எங்க ஆத்துக்கு வந்து ரெண்டு வேளை சாப்பிட்டா போரும்.”
பிறந்தகம் போகப்போகிறாள். குழந்தை பிறந்து திரும்ப ஏழெட்டு மாதங்களாவது ஆகும். அதுவரை இரண்டு பேருக்கும் அவளே பல்லாங்குழி ஆட வேண்டும். முகத்தைச் சுளிக்கும் ராக்ஷசிகளைத் தனியாக சமாளிக்க வேண்டும். அவர்கள் ஆக்கிரமிக்கு முன்பே கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து வர வேண்டும். பகவான் அனுக்ரகம் இருந்தால் அடுத்த தடவை ‘நாள்’ தள்ளிப்போக, அதை சாக்கிட்டு அவள் பிறந்தகம் போகலாம்.
அனுசுயா எட்டாவது வரை வாசித்திருந்தாள். அத்துடன் திருச்சியில் பிறந்து வளர்ந்தவள். அதனால் மீனாவை விடப் பரந்த உலக அறிவு.
“சின்ன வயசில கடனை அடைக்கணும்னு பேச்சு காதில விழறப்ப.. கடன் ஒரு பொந்து மாதிரி இருக்கும் அதில காசை அடைக்கணும்னு நினைச்சிண்டிருந்தேன்” என்று கிராமத்து மீனா தன் அறியாமையை ஒரு முறை வெளிப்படுத்தினாள்.
மனம்விட்டுச் சிரித்த அனுசுயா,
“அட அசடே! பண விஷயத்தில நீ அலட்சியமா இருக்கப்படாது.”
“என் அப்பாவும் அண்ணாக்களும் புரோகிதர்கள். பூணூல் போட்டதும் கரூர் பாடசாலை. ஒரு தர்மவானின் கைங்கரியத்தில தங்கறதுக்கு இடம், சாப்பாடு. மந்திரங்கள் பாடம் ஆனதும் பெரிய புரோகிதருக்கு ஒத்தாசையா கூடப்போகணும். அப்புறம் சொந்த உபாத்தியாயம். அந்த வரும்படிக்குள்ள குடும்பம் நடத்கறது பொம்மனாட்டிகள் சாமர்த்தியம். எனக்கு க்றாப் வச்சிண்டு மாச சம்பளம் வாங்கற மாப்பிள்ளை. அதனால மார்கழி மாசத்துக்குக் கவலைப்பட வேண்டாம்னு நினைச்சேன்.”
“இருந்தாலும் ஒவ்வொரு மாசத்துக்கும் இவ்வளவுதான்னு கணக்கு போட்டு செலவு பண்ணணும். முதல் தேதி வாங்கற மளிகை சாமான்களை முப்பது நாளுக்கும் வச்சுக்கணும். நடுவில பேசப்படாது ”
போர்க்கால பற்றாக்குறையில் ஒரு மாதத்துக்கு ஒரு தீப்பெட்டி. காலையில் எழுந்ததும் மீனா அதில் இருந்து ஒரு குச்சி எடுப்பாள். அதைப் பற்றவைத்து சிமினி விளக்கை ஏற்றியதும் அதில் இருந்து அடுப்பு, மற்ற விளக்குகள்.
“சர்க்கார் உத்தியோகத்தில மேல் வரும்படி கிடைக்கும். அதுக்குக் கிம்பளம்னு பேர். இங்கே அதெல்லாம் கிடையாது.”
தனக்கு இல்லாத ஒரு திறமை சிநேகிதிக்கு இருப்பதைக் கவனித்து,
“நீ நன்னா கன்னடம் பேசறே. மூணு நாலு வார்த்தைக்கு மேல எனக்கு மறந்துபோயிடறது” என்றாள்.
“அதுவா? கல்யாணம் ஆகி சில வருஷம் பெங்களூரில கூட்டுக் குடித்தனம் பண்ணினேன்” என்றாள் மீனா.
“புக்காத்தில யாரெல்லாம்?”
“மாமனாருக்கு திவான் மாளிகையில சமையல் பொறுப்பு. அவருக்கு அடுத்த தங்கையை பம்பாய்ல கொடுத்திருக்கு. அப்பறம் இரண்டு தம்பிகள், இரண்டு தங்கைகள். பெரிய அண்ணாக்கு மண்டையா சர்க்கரை ஆலையில ஆஃபீஸ் வேலை. மன்னிக்கு ரெண்டு ஆண் குழந்தைகள், ஒரு பெண். அதனால மாமியாருக்கு முதல் மாட்டுப்பெண் உசத்தி. அடுத்த அண்ணா சின்ன வயசிலேயே படிப்பை நிறுத்திட்டார். ஆனா பேச்சில சாமர்த்தியம். கிராமத்தில சொல்ற மாதிரி ஆட்டைத்தூக்கி மாட்டில போட்டு …”
“சைக்கிளைத் தூக்கி கார்ல போட்டு” என்று அனுசுயா அதை நவீனப்படுத்தினாள்.
“அப்போ அவருக்கு சோப் ஃபாக்டரில வேலை. என்ன சம்பளம்னு தெரியாது. யுத்தம் வந்ததும் சோப் ஆடம்பரம்னு நினைச்சா போல இருக்கு. அது நின்னு போயிடுத்து.”
“மாமியார் உன்னால தான் என் பையனுக்கு வேலை போச்சுன்னு சொல்றதுக்கு முன்னாடி இங்கே வந்தட்டே” என்றாள் அனுபவப்பட்ட அனுசுயா.
கதவைத்தட்டும் ஓசை.
“அனுசுயா! இதோ வந்துட்டேண்டி” என்று கத்திக்கொண்டே வந்து மீனா திறந்தாள்.
ராமனாதன்.
முந்தைய தினம் நன்றாக இருட்டிய பிறகு களைத்து சலித்துப்போய் அவன் வேலையில் இருந்து வந்ததால்,
“உங்க உடம்புக்கு ஒண்ணும் இல்லையே?”
பதில் சொல்லாமல்,
“நாம உடனே வீட்டைக் காலி பண்ணிண்டு போகப் போறோம்.”
திடீர்னு ஏன்?
தீர யோசித்து தான் முடிவு செய்திருப்பார் என்பதால் அந்தக் கேள்வி மனதுக்குள் நின்றது. துணிகளைப் பெட்டிகளில் அடுக்க ஆரம்பித்தாள்.
அனுசுயா இல்லாத அந்த இடத்தை விட்டுப் போவதில் அவளுக்கு சந்தோஷம். ஆனால், கணவனுக்கு வேலை இல்லாமல் புகுந்த வீட்டுக்குப் போவதும் பிடித்தமானதாக இல்லை..
ராமனாதன் படுக்கையை நன்றாகச் சுற்றிக் கட்டினான்.
அடுத்த முறை கதவைத் தட்டியது அனுசுயா. மீனா கதவைத் திறந்ததும்,
“நேரமாயிடுத்து” என்று உள்ளே நுழைந்தவள் சமையலறையில் பாத்திரங்களை எடுத்துவைத்த ராமனாதனைப் பார்த்துத் தயங்கி நின்றாள்.
“நீ நாளைக்கு ஊருக்குப் போறதுக்கு முன்னாடி நானே கிளம்பிப் போறேன்” என்றாள் மீனா.
எதிர்பாராத தகவலில் அவள் ஸ்தம்பித்து நின்றாள்.
“கொஞ்சம் இரு!”
உள்ளே சென்று சமையலறையின் தரையில் வைத்திருந்த பல்லாங்குழியைப் புளியங்கொட்டைகளோடு மூடினாள்.
“ஏன்னா! நான் இதை அனுசுயாக்குக் குடுக்கட்டுமா?” என்று ரகசியமாகக் கேட்டாள்.
எடுத்துப்போக வேண்டிய சாமான்களில் ஒன்று குறைச்சல்.
“நான் இன்னொண்ணு பண்ணித் தரேன்.”
அவளிடம் சென்று அதைக் கொடுத்தாள்.
“என் ஞாபகமா வச்சுக்கோ!”
பல்லாங்குழியை ஆசையுடன் வாங்கிக்கொண்ட அனுசுயா,
“ஏன் நீ திரும்பி வரப்போறதில்லையா?” காதோடு காதாகக் கேட்டாள்.
“அப்படித்தான் தோணறது.”
இருவரும் கட்டிக்கொண்டார்கள்.
“உனக்கு புத்திர பாக்கியம் சீக்கிரம் கிடைக்கட்டும்!” என்று விடைபெற்றாள்.
ராமனாதன் பாத்திரங்களை அவனே செய்த மரப் பெட்டியில் வைத்தான்.
ஜட்கா வண்டியில் ஏற்றினார்கள்.
‘கூலிக்காரனின் ஆத்துக்காரி’ என்று கேலி செய்த பெண்கள் தெருவில் நின்று வேடிக்கை பார்த்தார்கள். அனுசுயா வீட்டு ஜன்னல் வழியாகக் கையசைத்தாள்.
பெங்களூருக்கு பாஸஞ்சர். போர்க்காலத்தில் ரயில் வண்டிகளின் போக்குவரவு குறைந்தாலும் இதன் ஓட்டத்தில் மாறுதல் இல்லை. வெள்ளைக்கார அதிகாரிகளுக்குச் சின்ன ஊர் அலுத்துப்போனால் பெங்களூரின் கடைத்தெருக்களும் சினிமா கொட்டகைகளும். அவர்களுக்காக ஒரு முதல் வகுப்புப் பெட்டி.
ராமனாதனையும் மீனாவையும் தவிர வண்டியில் சில்லறை வியாபாரிகள். அவர்களின் கன்னடத்துக்கு நடுவில்,
“நேத்து நான் லேட்டா வந்ததுக்கு காரணம் டிராலி ரிபேர்” என்று ராமனாதன் ஆரம்பித்தான்.
பெல்ட், பாய்லர், சக்கரங்கள்.
மீனாவுக்கு ஒன்றும் புரியவில்லை. மௌனமாகக் கேட்டாள். எந்த இயந்திரத்தையும் பிரித்து சரி செய்ய அவள் ஆத்துக்காரரால் முடியும். ரயில் வேகம் எடுத்தது.
“கடைசில சூபர்வைசர் வந்தப்ப அதுவரைக்கும் கைகட்டி வேடிக்கை பார்த்த ராஜா ஹள்ளி ஸ்பானரைக் கையில எடுத்துண்டு வேலை பண்ணற மாதிரி ஆட்டம் காட்டினான்.”
அவனைப் பற்றி ராமனாதன் சொல்லி இருக்கிறான். வம்பு பேசாத நேரத்தில் ‘ஹோளி பைபிளி’ன் பெருமை. ‘ளி’க்கள் அந்நூலின் புனிதத்தன்மையை அதிகமாக்குவதாக அவன் எண்ணம்.
“வெள்ளைக்காரன் மயங்கிப் போயிட்டான். என் எதிரிலேயே அவனுக்கு மேஸ்திரி ப்ரமோஷன். மாசம் நாற்பது ரூபா சம்பளம்.”
அனுசுயா கற்பித்த பாடங்களில் இருந்து அப்படியொரு பதவி உயர்வுக்கு இன்னும் பல வருஷங்கள் காத்திருக்க வேண்டும் என்பது புரிந்தது.
பள்ளிக்கூடத்தில் அவரை சோதா என நினைத்து ஒரு குண்டன் உதை கொடுத்தானாம். தினம் ஊறவைத்த பயறுகளை சாப்பிட்டு எடைகளைத் தூக்கி உடலை வலுப்படுத்திக் கொண்டு அவன் அடுத்த தடவை வம்புக்கு வந்தபோது உதையைத் திருப்பிக்கொடுத்தாராம். குண்டனுக்கு பயப்படாத அவள் ஆத்துக்காரர் திறமை இல்லாமல் அதிகாரம் செய்யப்போகும் ராஜா ஹள்ளிக்கு ஏன் அடங்கிப்போக வேண்டும்?
“இது போனா போறது. உங்க திறமைக்கு வேற எத்தனையோ வேலை. சோப் ஃபாக்டரியை மறுபடி திறப்பாளோ என்னவோ.”
“அது இருக்கு. அப்பறம், மண்டையா சர்க்கரை ஆலையில ஆள் எடுக்கறதா அண்ணா சொன்னானாம். அப்பா எழுதியிருந்தார்.”
போர்க்காலம் என்றாலும் எல்லாரும் சாப்பிட்டுத்தானே ஆக வேண்டும்.
இரண்டரை மணி எதிர்கால யோசனையில் வேகமாகப் போனது. பெட்டிகளைப் போர்ட்டர் சுமக்க ராமனாதன் படுக்கையை எடுத்துக்கொண்டான்.
ரயில் நிலையத்திற்கு வெளியே வந்து நின்றார்கள். போர்ட்டர் சுமைகளை இறக்கிவிட்டு ஓரணா வாங்கிப் போனான்.
ரயில் பயணம் குறைந்த காலத்தில் அவர்களை ஆவலுடன் வரவேற்ற ஜட்கா வண்டிகள். போகும் இடத்தைக் கேட்காமல் ஒருவன் வண்டியில் சாமான்களை ஏற்றி முன்புறமாக நகர்த்தினான்.
ராமனாதனின் கவனம் எதிரில் இருந்த பெரிய அறிவிப்புப் பலகை மேல் நின்றது. இரண்டு காற்றாடிகளுடன் சாம்பல் பூசிய ஒரு விமானம். அதற்கு முன் காக்கி சீருடையில் நான்கு பேர். இருவர் குந்திட்டு இருக்கிறார்கள், இருவர் நிற்கிறார்கள்.
ராயல் இன்டியன் ஏர்ஃபோர்ஸ் வாலன்டியர் ரிசர்வ்.
20-25 வயது இளம் ஆண்களை அழைத்தது.
அவனுக்கு மூன்று வயது அதிகம். இருந்தாலும் ராமனாதன் நின்று கவனித்தான்.
மற்ற அண்ணன் தம்பிகளுக்கு இல்லாத உறுதியான உடற்கட்டு. உயரத்துக்கேற்ற பருமன். கையை மடக்கினால் புஜத்துக்குக் கீழே தவளை குதிக்கும். வீட்டில் இருந்து சிடி ரயில் நிலையம் வரை நிற்காமல் ஓட முடியும். கம்பத்தில் ஏறவும் குளத்தில் நீச்சல் அடிக்கவும் தெரியும். கட்டான அந்த நாலு பேருடன் அவனும் சேர்ந்து பெருமிதம் காட்டுகிறான்.
இரண்டு வாரம் கழித்து திங்கள்கிழமை காலை கன்டோன்மென்ட் ஆர்மி மைதானத்தில் செலக்ஷன்.
‘ம்ம்ம். மூணு வயசு குறைச்சலா இருந்தா நன்னா இருந்திருக்கும்.’ கப்பலைத் தவறவிட்ட ஏக்கம்.
எழுத்துக்கூட்டி ஆங்கில வார்த்தைகள் படிக்கத் தெரியும் என்றாலும் பார்த்துக்கொண்டு நிற்க அந்தப் பலகையில் என்ன இருக்கிறது என்று மீனாவுக்குப் புரியவில்லை.
“ஜட்கா காத்திண்டிருக்கு.”
திரும்பி அவளைப் பார்த்து,
“ஆங்! போகலாம்.”
மல்லேஸ்வரம் வீட்டின் முன் இறங்கினார்கள்.
ஜட்காவின் சத்தத்தைக் கேட்டு மாமனார் வெளியே வந்தார். படுக்கை பெட்டிகளுடன் வந்து நின்றவனைப் பார்த்து,
“என்னடா?” ‘ஏன் திடுதிப்புனு வந்து நிக்கறே?’ என்பது தொக்கிநின்றது.
எதிர்காலம் இல்லாத வேலை என்கிற காரணம் போர்க்காலத்தில் எடுபடுமா?
“தெருவில நின்னுண்டு என்ன பேச்சு?” என்று அம்மா உதவிக்கு வந்தாள். “குளிச்சிட்டு சாப்பிட வாங்கோ!”
மறுநாள்.
அவர்கள் இல்லத்தில் பணம் கொடுக்கும் விருந்தினர்கள். வேறு எங்கோ தங்கி மதிய மற்றும் இரவுச் சாப்பாடுகளுக்கு வருகிறவர்கள். வீட்டு கும்பலுடன் ஒன்று இரண்டு பேருக்கு சேர்த்து சமைப்பது பிரமாதம் இல்லை. மாதம் எட்டு ரூபாய். பணப்புழக்கம் மிகக் குறைவான அச்சமயத்தில் அது வரவேற்கத்தக்க வருமானம்.
இவர்கள் திருமணம் ஆகாதவர்கள், இல்லை மனைவி இருந்தும் அவளை அழைத்துவந்து குடித்தனம் வைக்க வசதி இல்லாதவர்கள். மல்லேஸ்வரம் மேனிலைப்பள்ளி ஆசிரியர், துணிக் கடையில் கணக்கு எழுதுகிறவர், அரசாங்க ஊழியர் எனப் பலதரப்பட்ட மனிதர்கள்.
அந்த இருவர் ராமனாதனுக்குப் புதிது. வெள்ளை பான்ட்ஸ் சட்டையிலும் அவர்கள் பேச்சிலும் உயர் மட்ட அடையாளங்கள். சாப்பிட்டுவிட்டுப் போனதும் அம்மாவிடம், “அவர்கள் யார்?”
“டாடா இன்ஸ்டூட்ல இருக்காளாம்.”
அடுத்த நாள் சாப்பாட்டை முடித்து அவர்கள் வெளியே நடந்தபோது ராமனாதனும் கூட நடந்தான்.
“நீலகிரியிலேர்ந்து இலைகள் எடுத்துண்டு வந்தியே. எதாவது புதுசா கிடைச்சுதா?”
“நாலு ஃப்ராக்ஷன் எடுத்துருக்கேன். பிரிச்சுப் பார்க்கணும். நீ?”
“ரியாக்ஷன் ரேட்டை ஒவ்வொரு தடவை அளக்கும்போதும் ஒவ்வொரு ரிசல்ட் வர்றது.”
“நீ கண்டிஷன்களை ஒரே மாதிரி வச்சுக்கணும்.”
பல முறை ராமனாதன் அந்த வழியில் நடந்திருக்கிறான். இன்று ஏனோ ஒரு ஏக்கம்.
டாடா இன்ஸ்டிட்யுட் வளாகத்தில் அவர்கள் நுழைந்தார்கள். பிரதான கட்டடத்திற்கு அப்பால் வரிசையாக ஆராய்ச்சிக்கூடங்கள். ராமனாதன் வெளியிலே நின்றான். கல்லூரிப்பட்டம் வாங்கி, அதில் கற்றுக்கொண்ட விஷயங்களைப் பயன்படுத்தி அறிவை வளர்க்கும் வித்தை. அவனுக்கு மெட்ரிகுலேஷனைத் தாண்டி மேலே படிக்க வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. அவன் பிள்ளைகளுக்கு? குழந்தையே பிறக்கவில்லை. அதற்குள் அவர்கள் படிப்பைப் பற்றி என்ன கவலை? மீனாவுக்கு இருபது கூட ஆகவில்லையே. ஏன் நம்பிக்கை இழக்க வேண்டும்?
பம்பாயில் இருந்து வந்த அவன் தங்கையின் கணவரை ராமனாதனும் அவன் தம்பியும் ரயில் நிலையத்தில் இருந்து அழைத்து வந்தார்கள். அவனைவிட எட்டு வயது மூத்தவர் என்பதால் அத்திம்பேர் என்று கூப்பிடாவிட்டாலும் அந்த உறவுக்கான மரியாதை. முதல் இரண்டு நாள் என்ன ஏது என்ற கேள்விகளுக்கு மேல் அவருக்கு நேரம் இல்லை. சேட்டின் பெண்ணுக்குக் கல்யாணமாம். அதனால், நகைக்கடைகள் பட்டுப்புடவைகள் என்று அலைச்சல். எல்லா கடைகளிலும் அவருக்கு ராஜ வரவேற்பு.
மூன்றாம் நாள். மத்தியான சாப்பாடு முடிந்து பெண்கள் ஓய்வெடுக்க, வெற்றிலை பாக்கை மென்ற ‘அத்திம்பேர்’,
“வேலையை விட்டுட்டு வந்துட்டியாமே” என்றார்.
“ஆமா. அறிவு சூன்யத்தை மேஸ்திரியாப் போட்டா. அவனுக்குக் கீழே சேவகம் பண்ணறதான்னு…”
“நல்ல காரியம் பண்ணினே.”
அவன் தீர்மானத்துக்கு ஆதரவாக ஒரு மனிதர். ‘ஏன் வேலையை விட்டுட்டு வந்தே?’ என்று நேரடியாகக் கேட்காவிட்டாலும் அப்பா அம்மா தம்பி இவர்களின் மௌனத்தில் குற்றம் சாட்டும் அதிருப்தி. விவரம் தெரியாத கடைசி தம்பிக்கும் தங்கைக்கும் மன்னி வந்ததில் சந்தோஷம். வித்தியாசமாக வாழைக்காய் பொடிமாஸ், எலுமிச்சை ரசம் சமைப்பாள்.
“இப்ப, நீ என்னோட பம்பாய் வந்துடு! சேட்டின் கணக்குகளை கவனிச்சுக்க ஒரு நம்பிக்கையான ஆள் தேடிண்டிருக்கோம்.”
அவர் ஆரம்பப்பள்ளியைத் தாண்டவில்லை. கார் ஓட்டக் கற்றுக்கொண்டதால் சேட்டுக்கு ஷாஃபர் வேலை. அவனிடம் விசுவாசமாக நடந்து, அவனுடைய ரகசியங்களைக் காப்பாற்றி, அவன் நம்பிக்கையை சம்பாதித்தவர். அவர் ஒரு வார்த்தை சொன்னால் போதும், ராமனாதனுக்கு வேலை கிடைத்தமாதிரி தான்.
“உனக்குத்தான் ரொம்ப வருஷமா ராவ் குடும்பத்தோட பழக்கமாச்சே. அவா கிட்ட கத்துண்ட மராட்டி வார்த்தைகளை வச்சு ஆரம்பத்தில சமாளிச்சுடலாம்.”
சேட்டுக்கு ஏகப்பட்ட கடைகளும், வாடகை வீடுகளும் சொந்தம். அவற்றின் வருமானங்களைக் கூட்டி, செலவுகளைக் கழித்து, வேலையாட்களின் சம்பளங்களைக் கணக்கு வைத்து …
“இது வரைக்கும் உனக்கு எவ்வளவு சம்பளம்?”
“முப்பது ரூபா”.
“கைக்கு வர்றது?”
“இருபத்தியாறு.”
“சேட் முப்பதையும் முழுக்க தருவான். உடம்பை வருத்திக்க வேண்டாம். மட்டி ஜனங்களோட மல்லாட வேண்டாம். முட்டாப்பயலுக்குக் கைகட்டி சலாம் போட வேண்டாம். அங்கே இங்கேன்னு அலைய வேண்டாம்.”
“பம்பாய்ல செலவு அதிகமாச்சே.”
“இப்போ முப்பது. போகப்போக பார்! ரெண்டு சினிமா தியேட்டர் கட்டறதுக்கு சேட் இடம் வாங்கியிருக்கான். அவன் பிசினெஸ் வளர வளர உன் சம்பளமும் அதிகமாகும். நீ தான் ஸ்கூல் ஃபைனல் கணக்கில தொண்ணூறு வாங்கி இருக்கியே. ஜமாய்ச்சுடுவே.”
ஓர் இடத்தில் நாள் முழுக்க அமர்ந்து சொந்தம் இல்லாத ரூபாய்களின் ஓட்டத்தில் முழுகி…
அவனுக்குப் பிடித்தது தொண்ணூற்றி ஆறும் ஏழும் கூட்டி நூற்றிமூன்று என்கிற கணக்கு இல்லை. மற்ற பள்ளிக்கூடப் பையன்களுக்கு காபரா கொடுத்த அல்ஜீப்ரா – ப்ராக்கெட்டுகளை வட்ட வளைவில் இருந்து ஒவ்வான்றாகக் கழற்றும்போது என்ன ஆனந்தம்! கழுதைக்குக் கூட தெரிந்த ஜியாமெட்ரி தியரங்களுக்கு என்ன அழகு! ஃபார் எனி ட்ரையாங்க்ல் த சம் ஆஃப்…
அதெல்லாம் போகட்டும்,
“அந்த சம்பளத்தில பையனை டாடா இன்ஸ்டிட்யுட் அனுப்ப முடியுமா?”
“புரியலியே.”
பாலக்காட்டில் பிறந்து பம்பாயில் ஊன்றிய அவருக்கு ‘இன்டியன் இன்ஸ்டிட்யுட் ஆஃப் சயன்ஸை’ பொது மக்கள் ‘டாடா இன்ஸ்டிட்யுட்’ என்று மதிப்புடன் அழைப்பது தெரியாததில் ஆச்சரியம் இல்லை.
“ஒரு வாரம் குடுங்கோ!”
அடுத்த நாள் அவரை ரயில் நிலையத்தில் வழியனுப்பிய போது மறக்காமல்,
“நீ சரின்னு ஒரு தந்தி கொடு! டிக்கெட்டுக்கு உடனே ஏற்பாடு பண்ணறேன்” என்றார்.
2
தெரு மூலையில் உயர் மட்டத்தினருக்கான ஆடம்பரப் பொருட்கள் விற்கும் ‘ஷாப்’ கடை. போர்க்காலத்தில் பிரதான விற்பனை பத்திரிகைகள், செய்தித் தாள்கள். அதன் முன்னால் காலத்துக்கும் நேரத்துக்கும் தகுந்தபடி சிற்றுண்டிகள்.
மல்லேஸ்வரம் ஹைஸ்கூலில் படித்தபோது கடையின் சாமான்களை உயர அலமாரியில் அடுக்கிவைத்து செய்தித்தாள் கட்டுகளை ரயில் நிலையத்தில் இருந்து எடுத்துவந்து ராமனாதன் வேலை செய்தான். அதன் சம்பளத்தில் பள்ளிக்கூட செலவுகள் – புத்தகங்கள், நோட்டுகள், பேனா, தேர்வுகளின் கட்டணம், கால்பந்து ஆடுவதற்குத் தேவையான ஆடைகள் காலணிகள்.
தினம் காலையில் கடை வாசலின் ஓரத்தில் நின்று செய்தித்தாள்களின் தலைப்புச் செய்திகளை மேலோட்டமாகப் பார்த்தான். சோப் ஃபாக்டரி விரைவில் திறக்கப்போகிறது. மண்டையா சர்க்கரை ஆலையை விரிவாக்கும் திட்டம். பத்ராவதி இரும்பு உருக்கு ஆலைக்கு ஆட்கள் தேவை. இப்படி எந்த செய்தியும் இல்லை. மாலையில் பள்ளிக்கூட மைதானம். ஓட்டத்தில் சில சுற்றுகள், நடையில் இன்னும் சில. பதின்பருவக் கனவுகள், ஆசைகள் நினைவுக்கு வந்து தொந்தரவு கொடுத்தன. பொறியியல் கல்லூரியில் படித்து ஒரு தொழிற்சாலை இஞ்சினீர். சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்டு தேச பக்தன். கணிதத்தைப் பிரதானமாக எடுத்துக் கல்லூரி பேராசிரியர். ம்ம்.. எதுவும் நிறைவேற வில்லை. வாழ்க்கையின் மூன்றில் ஒரு பங்கு முடிந்துவிட்ட சமயத்தில் இரண்டு வாய்ப்புகள். சேட்டின் ரூபாய்களை எண்ணலாம். இல்லை, திரும்பிப்போய் வேலைக்கு ஒரு வாரம் வராததற்கு எதாவது சாக்கு சொல்லி சுரங்கத்தின் டிராலிகளை ரிபேர் செய்து வெள்ளைக்காரன் தங்கம் சேகரிக்க உதவலாம். அடிமை நாட்டில் ஒரு சமையல்காரரின் பெரிய குடும்பத்தில் பிறந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?
ரயில் நிலையத்தின் வாசலில் பார்த்த விமானப்படையின் அழைப்பு. அந்த நாலு பேருடன் அவனும் சேர்ந்துகொண்டால்?

பட்டாளம் என்றதுமே வீட்டில் எல்லாரும் நடுங்குவார்கள். துப்பாக்கி பிடித்து நேருக்குநேர் போரிடப்போவதாக நினைப்பார்கள். யாரோ பறந்துபோய் குண்டு வீசுவதற்கு விமானங்களைத் தயார் செய்ய வேண்டும். அவனால் நிச்சயம் முடியும். வயது தான் உதைத்தது? இருபத்தியைந்து என்ன கணக்கு? இருபதாவது இருக்க வேண்டும் என்பது நியாயம். மிலிடரி சின்னப் பையன்கள் விஷயம் இல்லை. உச்ச வரம்பு எதற்கு?
திங்கள்கிழமை டெய்லி நியுஸ். கொட்டை எழுத்துக்களில்…
அமெரிக்கா உலகப்போரில் சேர்ந்துவிட்டது
கொஞ்சம் சிறிய எழுத்துக்களில்…
இந்திய ராணுவம் விரிவாக்கப் போகிறது
அதிகப்படி விற்பனையை எதிர்பார்த்து கடையில் இரண்டு கட்டு செய்தித்தாள்கள். செய்தியை வாசித்ததும் கடைக்கு முன்னால் அது பற்றிய காரசாரமான விவாதம். ராமனாதனும் ஒன்றை வாங்கிப் பிரித்தான்.
தலைப்புச் செய்திகளுக்குத் தொடர்ச்சியாக ஒரு மூலையில் விமானப்படை இராணுவத் தேர்வு பற்றிய விவரங்கள். விவாதத்தில் கலந்துகொள்ளாமல் கொல்லைப்புறத்து மாடி அறையின் தனிமையில் வாசித்தான். தெரிந்த விஷயங்கள் தான். உறுதியான ஆரோக்கிய உடல், கண்ணாடி தேவைப்படாத கண் பார்வை. உயர்நிலைப் பள்ளியின் இறுதித் தேர்வில் நன்றாகச் செய்திருக்க வேண்டும் – முக்கியமாக, ஆங்கிலத்திலும் கணிதத்திலும். எல்லா தகுதிகளும் இருந்தால் – அவனுக்கு இருக்கின்றன – வயது வரம்பு தளர்த்தப்படலாம். ஆகா! இன்னொரு முறை விவரங்களைப் படித்தான்.
தேர்ந்தெடுப்பின் முதல் கட்டம் ஆங்கிலத்தில் பொது அறிவுப் பரீட்சை. அதற்குத் தயார் செய்யும் வழி அவனுக்குத் தெரியும். மூலைக்கடையில் அவன் வேலை செய்த காலத்தில் பியர்ஸ் சோப் கட்டிகளை அட்டைப்பெட்டியில் இருந்து எடுத்து அடுக்கியபோது அவற்றுடன் வந்த ஒரு வர்ண விளம்பரக் காகிதம். என்சைக்ளோபீடியா பற்றிய விவரங்கள். டிக்ஷனரி தெரியும். அதைப் போன்ற கனமான என்சைக்ளோபீடியா எப்படி இருக்கும்? அதன் உள் அட்டையில் பல நாட்டு கொடிகளின் படங்கள். உள்ளே உலக நாடுகளின் வரை படங்கள். அரசியல், மருத்துவம், சரித்திர சம்பவங்கள், சாதனை புரிந்த மனிதர்கள் எனப்பல துறைகளில் உலக விஷயங்கள். இருபத்திநான்கு பியர்ஸ் சோப் மேலுறைகளைச் சேர்த்து அனுப்பினால் அது தபாலில் அனுப்பப்படும். அதிலிருந்து யாராவது விலை உயர்ந்த அந்த சோப் வாங்கினால் அவர்களிடம் அதன் மேலுறையைக் கெஞ்சிக்கேட்டு ஒவ்வொன்றாகச் சேர்த்தான். இருபத்திநான்கையும் இரண்டு அணா செலவில் பம்பாய் முகவரிக்கு அனுப்பினான். கிணற்றில் கல் போட்டது போல ஒரு மாதம் போனதும் அவன் பெயருக்கு ஒரு பார்சல். அப்பாவுக்கு ஒரே பெருமை!
அதிலிருந்து தினம் ஒரு பகுதி. இன்னும் ஏழு நாட்கள்.
பெரிய குடும்பத்தில் கணவன் மனைவி ரகசியம் பேச தனிமை மிகக்குறைவு. மாடி அறையில் ஞாயிற்றுக்கிழமை இரவு எல்லாரும் தூங்கி சந்தடி அடங்கியதும்,
“சிடி ஸ்டேஷன்லேர்ந்து இறங்கினதும் ஒரு போர்ட் பார்த்தோமே” என்று ராமனாதன் ஆரம்பித்தான்.
“ஞாபகம் இருக்கு. ப்ளேனுக்கு முன்னாடி நாலு பேர்.”
“ஏர் ஃபோர்ஸ்ல சேரலாமான்னு ஒரு யோசனை. அது முடியுமான்னு தெரிஞ்சுக்க நாளைக்கு காலங்கார்த்தால கன்டோன்மென்ட் போகணும்” என்று நிச்சயமற்ற தொனியில் சொன்னான்.
மனைவியின் அதிர்ச்சியைக் குறைக்க உடனே,
“இது ஆர்மி மாதிரி இல்ல. ட்ராலிகளுக்குப் பதிலா ப்ளேன்களை மெய்ன்ட்டெய்ன் பண்ணணும். நான் பறக்கப் போறது இல்ல.”
ஆனாலும் மீனாவுக்கு அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
ராமனாதன் உருக்கமான குரலில்,
“நான் என்ன பண்ணட்டும்? எனக்குத் தான் மேல படிக்க முடியாம போயிடுத்து. நம்ம குழந்தைகள் காலேஜ் என்ன, ‘டாடா இன்ஸ்ட்யுட்’ல கூட சேர்ந்து வாசிக்கலாம். எல்லா வழியும் யோசிச்சுப் பார்த்தேன். கோலார்ல மேஸ்திரி ஹள்ளிக்குக் கீழே வேலை செய்யப் பிடிக்கல. எனக்கு எப்பவுமே உடம்பை அசைச்சுண்டு மெஷின்களோட தான் பழக்கம். ஒரு இடத்தில நாள் முழுக்க உக்காந்துண்டு சேட்டோட வரவு செலவுகளைக் கூட்டிக்கழிக்க எனக்கு இஷ்டம் இல்ல. இந்த சமயத்தில இது ஒண்ணுதான்.”
அனுசுயாவிடம் பாடம் கற்ற மீனாவுக்கு அந்த கூட்டுக்குடும்பத்தில் வருமானம் இல்லாமல் தொடர்ந்து வசிப்பது சாத்தியமில்லை என்பதும் தெரியும்.
இரண்டாவது அண்ணன் ஆடிக்கு பொங்கலுக்கு என்று இரண்டு ரூபாய் பணம் அனுப்புவான். திடீரென்று எங்கிருந்தோ நிறைய வருமானம். ‘சைக்கிளைத் தூக்கி கார்ல போட்டு?’ முந்தைய வாரம் அவனிடமிருந்து பத்து ரூபாய் மனி ஆர்டர். சென்ற மாதமும் வந்ததாம்.
‘சோமு மாதிரி ஒரு வேலையில நிலைச்சு நிற்க மாட்டேங்கறான் இவன் ‘ என்கிற மாமியாரின் புலம்பல் காதில் ஒலித்தது. அதற்கு அவள் தான் காரணம் என்பதை இன்னும் சில நாள் போனால் சேர்த்துக் கொள்வாள்
பம்பாய் வீடு எத்தனை சின்னது என்று வாரப்பத்திரிகை கதைகளில் வாசித்திருந்தாள். சமையல் படுக்கை எல்லாம் ஒரே இடத்தில். கிராமத்தில் கூரை மண் வீடு என்றாலும் விஸ்தாரமான இடத்துக்குப் பழகிய அவள் பம்பாய்க்குப் போகவும் தயாராக இல்லை. மனதைத் தேற்றிக்கொண்டு,
“செலக்ஷனுக்கு தைரியமாப் போங்கோ! பகவான் விட்ட வழி.”
மறுநாள் காலை. பெங்களூரின் குளிர் இலேசாகக் குறைந்தபோது கன்டோன்மென்ட் ஆர்மி டிப்போவின் கேட் திறப்பதற்குக் காத்திருந்த கும்பல். கல்யாணத்தின் போது தைத்த பேன்ட்ஸ் சட்டையில் ராமனாதன். சுற்றி நோட்டம் விட்டான். அறுபது பேருக்கு மேல் இருக்கும். இதற்காகவே மீசை வளர்த்த இருபது வயதை எட்டியவர்கள். பரீட்சைக்கு வந்தது போல கற்றைக் காகிதத்தைப் பிரித்துப் படித்த ஒன்றிரண்டு பிராமணப் பையன்கள். கன்னடம் தமிழ் வார்த்தைகளுக்கு நடுவில் கொஞ்சம் ஆங்கிலம்.
கதவைத் திறந்த காவலாளி, “ஒந்து லேன். ஒந்து லேன்” என்று எல்லாரையும் தள்ளி அதிகாரம் செய்தான். நுழைந்ததும் ஒவ்வொருவர் சட்டையிலும் எண் போட்ட காகிதத்தை ஒருவன் ஒட்டினான். ராமனாதனுக்கு பதின்மூன்று. அவன் பிறந்த வருஷம். நல்ல சகுனம்.
ஆசிரியர் தோற்றத்தில் ஒருவர் அவர்களைக் கட்டடத்திற்குள் அழைத்துப்போனார். நீண்ட அறையில் வரிசையாக பெஞ்ச்சுக்கள். அவர்கள் அமர்ந்ததும்,
ஆங்கிலம், வரலாறு, கணிதம், அறிவியல், பூகோளம் – ஒவ்வொன்றில் இருந்தும் பொது அறிவை சோதிக்கும் கேள்விகள். பதில் எழுத வெற்றுத் தாள்கள்.
உலக வரைபடத்தில் ஐந்து எக்ஸ் குறிகள். அவை எந்த இடங்களைக் குறிக்கின்றன?
கானடா
பர்மா
பாரிஸ்
சிங்கப்பூர்
ஜிப்ரால்ட்டர்
இரண்டு மணி மௌனத்தில் நகர்ந்தது.
பதில் தாள்களைக் கொடுத்துவிட்டு வெளியே வந்ததும் எனாமல் தட்டுகளில் இரண்டு பூரி கொஞ்சம் தால். எதிர்கால இராணுவச் சாப்பாட்டு.
மர நிழலில் அமர்ந்து தின்றார்கள். பரீட்சை கேள்விகளின் கடினத்தைத் திட்டினார்கள். அவனுடைய முதிர்ந்த தோற்றத்தினால் யாரும் ராமனாதனிடம் பேச்சுக்கொடுக்கவில்லை.
பிற்பகல்.
மைதானத்தின் நடுவில் ஒரு வரிசையில் நின்றார்கள்.
ஒருவன் ஒவ்வொருவனின் உயரம் எடை மார்புச்சுற்றளவு அளந்து குறித்துக்கொண்டான்.
மைதானத்தை நான்கு முறை சுற்றி ஓட்டம். மூன்றாவதிலேயே பலருக்கு மூச்சு வாங்கியது. ராமனாதன் அநாயாசமாக முதலில் முடித்தான்.
வலிமையை சோதிக்க புல்-அப் மற்றும் புஷ்-அப். போதும் என்று சொல்லும் வரை ராமனாதன் செய்தான்.
தூரத்தில் இருந்த எழுத்துக்களைப் படிக்கச்சொன்னார்கள். ஒவ்வொருவரையும் நேராக நிற்க வைத்து ஒரு டாக்டர் அழகு பார்த்தார். கால் முட்டிகளைத் தட்டினார். ஆழ்ந்து மூச்சுவிடச் சொன்னார்.
தனியாக விடப்பட்டதும் மரநிழலில், ‘இதை விட்டால் வேறு என்ன வாய்ப்புகள்?’ என்ற பேச்சு.
அவர்களின் பரிமாணங்களை அளந்தவன் கையில் ஒரு காகிதத்துடன் வந்தான். பயபக்தியுடன் கும்பல் கூடியது.
“8. ஆர். மாதவ்
21. கே. நாராயணப்பா
31. எஸ். பாட்டில்
44. ஜோசஃப் தீக்கெத்தில்.”
தன் பெயரை எதிர்பார்த்த முகங்களை ஒருதரம் வேடிக்கை பார்த்துவிட்டு,
“13. டி. என். ராமனாதன்.”
கொஞ்சம் நம்பிக்கையும் நிறைய எமாற்றமும் கும்பலில் பரவியது.
“கம் டுமாரோ!”
இன்னும் சில பெயர்களைப் படித்து, விருப்பப்பட்டால் ஆர்மியின் தேர்வுக்கு அவர்கள் அடுத்த வாரம் திரும்பி வரலாம் என்று ஆறுதல் சொன்னான்.
அழைக்கப்படாதவர்கள் உடனே வெளியேற…
முதலில் அழைத்த மூவரும் சேர்ந்து நடக்க…
ஜோசஃப் ராமனாதனிடம் வந்து,
“மேரேஜ் செய்து?”
அவன் உடன்பாடாகத் தலையசைத்தான்.
“எனிக்கும்.”
“பேபி?”
“இனிமேல.”
“டென் மன்த் குட்டி.”
கொச்சினைச் சேர்ந்த ஜோசஃப் இருபத்திநான்கு வயதில் பி.ஏ. முடித்து துறைமுகத்தில் ரேடியோ ஆபரேடராக இருந்தான்.
இத்தனை படித்து நல்ல வேலையில் இருக்கும் அவன் ஏன் விமானப்படையின் நுழைவு மட்டத்துக்கு முயற்சிக்க வேண்டும்?
ஒரே ஊரில் அடைந்து கிடக்க அவனுக்குப் பிடிக்கவில்லை. விமானப்படையில் சேர்ந்தால் இந்தியா முழுவதும் சுற்றலாம். ஃபிஸிக்ஸ் கெமிஸ்ட்ரி கால்குலஸ் எல்லாம் சொல்லித்தருவார்கள். போர்க்காலத்தில் வேகமான பதவி உயர்வுகள். குழந்தைகளின் கல்வியை பற்றி கவலைப்பட வேண்டாம். உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க பயிற்சிகளும் மருத்துவர்களின் மேற்பார்வையும்.
குடும்பத்தை விட்டுப் பிரிய அவனுக்கு பயமாக இல்லை?
படையில் சேர்ந்ததும் கராச்சி, அம்பாலா என்று வடக்கே ஆறு மாதம். உடற்பயிற்சியும் விமானத்தின் அமைப்புகள் பற்றிய பாடங்களும். பிறகு குடும்பத்தை அழைத்துக்கொள்ளலாம்.
இன்னும்…
திறமைக்கு மதிப்பு கிடைக்கும். எப்படியும் இந்தியா சுதந்திரம் அடையப்போகிறது. பிறகு தேசப்படையில் சேவை செய்யும் திருபதி.
விஷயம் தெரிந்த அவன் சொல்லச்சொல்ல கமிஷன் கிடைக்காவிட்டால் போனால் போகிறது என நினைத்திருந்த ராமனாதன் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று யோசிக்க ஆரம்பித்தான்.
வீட்டிற்கு பஸ் பிடித்து வந்ததும் அம்மா,
“எப்படிடா போச்சு?”
“நாளைக்கு மறுபடி வரச்சொல்லி இருக்கா.”
“அப்படி என்ன பெரிய வேலை கிழியறது? இன்னிக்கி நாளைக்கின்னு இழுத்தடிக்கறா. பேசாம மாப்பிள்ளை சொன்ன மாதிரி சேட் கிட்ட போகப்படாதோ? முதல்ல அவாத்திலேயே தங்கிக்கலாம்.”
மீனாவிடம் தனிமையில்,
“பெரிய கும்பலைப் பார்த்து பயமா இருந்தது. ஐந்து பேரைத்தான் பொறுக்கினா. நான் அதில ஒருத்தன். நாளைக்கு டிஸ்ட்ரிக் கமிஷனர் கிட்ட இன்டர்வியு.”
அதுவும் நல்லபடியாகப் போக குலதெய்வத்திடம் மீனா வேண்டிக்கொண்டாள்.
“ஜோசஃப்னு இன்னொருத்தனுக்கும் செலக்ஷன் ஆகியிருக்கு. அவன் விவரமா சொன்னான். ஆறு மாசம் ட்ரெயிங் முடிஞ்சதும் வடக்கே எங்கேயாவது போடுவாளாம். அப்போ நீ கிளம்பி வரலாம்.”
“கிடைச்சுதுன்னா உடனே சரின்னு சொல்லிடுங்கோ! பிறந்தாத்தில போய் இருக்கேன். இங்கே எல்லாரும் நான் தான் உங்களை மிலிடரில சேரச்சொன்னதா கரிச்சுக் கொட்டுவா.”
“அப்போ கொஞ்சம் ஹிந்தி கத்துக்கோ!”
சிலரின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப் போகும் காலை.
கட்டடத்தின் வெராந்தாவில் படபடப்புடன் உட்கார்ந்திருந்த ஐந்து பேரில் ராமனாதனை முதலில் அழைத்தார்கள். தேர்வு நடந்த கூடத்தில் ஒரு மேஜைக்குப் பின்னால் மூவர். தலை வழுக்கையுடன் இரண்டு இந்தியர்கள். ஒரு ஆங்கிலேயர். இராணுவ சீருடையில் வட்டத் தொப்பியுடன் இருந்ததால் அவர் தலைமயிர் பற்றி எதுவும் சொல்வதற்கு இல்லை. சுவரில் ஜியார்ஜ் மன்னரின் படம்.
நடுவில் இருந்தவர்,
“ஸ்கூல்?”
தோற்றத்தில் மட்டுமல்ல உச்சரிப்பிலும் வட இந்திய சாயல்.
“மல்லேஸ்வரம் ஹைஸ்கூல், சார்!”
சர்டிஃபிகேட் புத்தகத்தை மேஜை மேல் பணிவாக வைத்தான்.
இடப்பக்கம் இருந்தவர் பிரித்துப் பார்த்தார்.
“குட் மார்க்ஸ்.”
அவருக்கு படித்துப் பதவி வகித்ததால் வந்த தோரணை.
“யெஸ் சார்!”
“இப்போது எங்கே வேலை?”
“கோலார் கோல்ட் ஃபீல்ட்.”
“ஆஃபிஸ் வொர்க்?”
“நோ சார்! டிராலி வொர்க் ஷாப். மெயின்டனன்ஸ்.”
அந்த பதில் அவருக்குப் பிடித்திருந்தது.
வேலையை விட்டு வந்தது அவர்களுக்குத் தெரிந்திருக்காது. அது பற்றி அவர்கள் கேட்கவும் இல்லை.
ஆங்கிலேயர் அவனை மேலும் கீழும் பார்த்து
“யு ஆர் அ ஸ்ட்ராங் மேன். குட் மஸ்ல்ஸ்.”
“ஐ லிஃப்ட் வெயிட்ஸ், சார்!”
“யு டிட் வெரி வெல் இன் த ரிட்டன் எக்ஸாம்.”
“தாங்க்ஸ், சார்!”
பியர்ஸ் என்சைக்ளோபீடியாவுக்கும் நன்றி! தன்னம்பிக்கையுடன் மனத்தெளிவும் வந்தது.
“ஹெள ஓல்ட் ஆர் யு?”
சர்டிஃபிகேட் புத்தகத்தில் பிறந்த தேதி இருக்கிறது. பொய் சொல்வதற்கு இல்லை.
“ட்வென்ட்டி எய்ட், சார்!”
“யு லுக் ஒன்லி ட்வென்ட்டி-ஃபோர்.”
“யெஸ் சார்!”
வட இந்தியர் ஆங்கிலேயரிடம்,
“பள்ளிக்கூடத்தில் சேர்க்கும் போது வயதைக் கூட்டிப்போடுவது எங்கள் வழக்கம். இவன் நிஜ வயது ஒன்றிரண்டு குறைவாக இருந்தாலும் இருக்கும்.”
“வயது வரம்பைத் தளர்த்தி இருக்கிறோம்” என்றார் பதவிக்காரர்.
இருவரைத் தான் படையில் சேர்க்கப் போகிறார்கள் என்ற நுழைவு வாசல் காவல்காரனின் உள் தகவல் நினைவுக்கு வந்தது. ஒயர்லெஸ் ஆபரேடர் ஜோசஃப் நிச்சயம். இன்னொருவன் ராமனாதன்?
பதவிக்காரர் இழுப்பறையில் இருந்து ஒரு காகிதத்தை எடுத்து மேஜை மேல் பிரித்து வைத்தார்.
“இது என்ன?”
“ஸ்டீம் டேப்ள்ஸ், சார்!”
“குட்! இதைப் பற்றி உனக்கு என்ன தெரியும்?”
“ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் நீராவியின் சக்தி எவ்வளவு என்று இது காட்டும்.”
“ரயில் எஞ்சினுக்கும் கார் எஞ்சினுக்கும் என்ன வித்தியாசம்?”
“வெளியில் நிலக்கரியை எரித்து நீராவியில் கிடைக்கும் சக்தியில் ரயில் எஞ்சின் ஓடுகிறது. கார் எஞ்சினுக்குள் பெட்ரோல் எரிந்து பிஸ்டனை வேகமாகத் தள்ளுகிறது, சார்!”
“கார் ரிபேர் தெரியுமா?”
“தெரியும், ஆனால் செய்தது இல்லை, சார்.”
“காரில் கியர் எதற்கு?”
“இயந்திரத்தின் சக்தியை சக்கரத்துக்கு தேவைக்கேற்றபடி வேறுவேறு விகிதத்தில் மாற்றுவதற்கு.”
இன்னும் பல தொழில்நுட்பக் கேள்விகள்.
ஆங்கிலேயர் சட்டைப் பையில் இருந்து கையகல வர்ணக் காகிதத்தை எடுத்துக் காட்டினார்.
“இது எந்த நாட்டின் கொடி?”
“ஃப்ரான்ஸ்.”
“இது?”
மேலிருந்து கீழாக நீலத்துக்கு பதில் பச்சை. மற்றபடி அதே வெள்ளை சிவப்பு.
“இட்டலி.”
“யார் நம் பக்கம்?”
“ஃப்ரான்ஸ்.”
அவரே ஜப்பானின் சிவப்பு வட்டக் கொடியைக் காட்டி,
“ஜப்பானியர்கள் பர்மாவுக்கு வந்துகொண்டே இருக்கிறார்கள். விபத்துக்கு உள்ளாகும் விமானங்களைச் சீர் செய்ய நிறைய ஆட்கள் வேண்டும்” என்றார்.
ராமனாதனின் நம்பிக்கை இன்னும் வளர்ந்தது.
“பொதுவாக திருமணம் ஆகாதவர்களை எடுப்போம்.”
“நீ வீட்டில் இருந்து ஓடிவரவில்லையே.”
“என் மனைவிக்குத் தெரியும், சார்!”
“பயிற்சியின் போதும் ஆரம்பத்திலும் நீ தனியாக இருக்க வேண்டும்.”
“நாங்கள் தயார், சார்!”
தேர்வு முடிவுக்கு வரப்போகிறது. மாப்பிள்ளை வீட்டாரைப்போல, ‘அடுத்த வாரம் ரிசல்ட் சொல்கிறோம்’ என்ற பதிலுக்கு மனதைத் தயார் செய்த ராமனாதன்.
ஆங்கிலேயர் எழுந்துவந்து,
“ஐ லைக் யு!”
“தாங்க்ஸ், சார்!”
கையை நீட்டி
“வெல்கம் டு ஏர்ஃபோர்ஸ் ரிசர்வ்.”
என்ன இனிமையான வார்த்தைகள்!
அவர் கையைப் பிடித்து
“ஐ அம் ஹானர்ட், சார்!”
“அடுத்த வாரம் ஆர்டர் தயாராக இருக்கும். உன் ஆறு மாதப் பயிற்சி கராச்சியில். மாதம் ஐம்பது ரூபாய். உன் மனைவியிடம் சொல்! நல்ல சாப்பாடு போட்டு உன்னை கவனித்துக்கொள்வோம்.”
“ஐ வில். சார்!”
“உனக்கு இயந்திரங்களைப் பற்றி நிறைய தெரிந்திருக்கிறது. அதனால் பயிற்சி முடிந்ததுமே பொறியியல் பகுதியில் உனக்கு கார்போரல் ப்ரமோஷன் கொடுக்க சிபாரிசு செய்கிறேன். பிறகு, உன் மனைவி உன்னுடன் சேர்ந்து கொள்ளலாம்.”
அவனே விமானத்தில் பறப்பது போல் இருந்தது.
“ஸோ ஹாப்பி சார்!”
அவர்கள் காட்டிய இடங்களில் கையெழுத்திட்டதும் உடலை விறைப்பாக வைத்து ஒரு சல்யுட் .
எல்லாரும் புன்னகைத்தார்கள்.
“இவன் வேகமாகக் கற்றுக் கொள்வான்.”
பின்னால் சில தப்படிகள். திரும்பி நடந்தான். முகத்தை சாதாரணமாக வைத்து வெளியே வந்தான். அடுத்தது ஜோசஃப். மைதானத்தைக் கடந்து மர நிழலில் அவன் வருவதற்குக் காத்திருந்தான்.
ராமனாதனின் மனக்கண்ணில் அவன் பையன் ‘டாடா இன்ஸ்டிட்யுட்’டில் நுழைகிறான்.
இரண்டாம் உலகப்போரின் போது ராயல் இன்டியன் ஏர் ஃபோர்ஸில் சேர்ந்த என் தந்தை (ஸ்க்வாட்ரன் லீடர் தின்னியம் நாராயணன் வெங்கடராமன்) சுதந்திரத்திற்குப் பிறகும் தன் சேவையைத் தொடர்ந்தார். இராணுவப் படிகளில் ஏறி 1956-இல் ஆஃபீசர் பதவி அடைந்தார். இரண்டாம் பாகிஸ்தான் போரில் (1965) எல்லைப்பகுதிக்கு அருகே பழுதடைந்த விமானங்களை உடனுக்குடன் சரி செய்ததற்காக ஜனாதிபதி(ராதாகிருஷ்ணன்)யின் விஷிஸ்ட் சேவா பதக்கம் பெற்றதுடன் அவர் இராணுவ சேவை நிறைந்தது.
Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.

எஸ்கேவின் அமரன் பார்த்த பின், இன்னொரு கதை…
அருமை அருமை…பொதுவாக உங்கள் கதை வாசிப்பேன். இது புதிதாக ஒன்று. நன்று