- கிணற்றிலிருந்து வெளிவரும் உண்மை
- இமானுவல் கன்ட்டின் அழகியல் தத்துவம்
- இமானுவல் கன்ட்டின் உணர்வோங்குப் பெருநிலை
- கிரேக்கத்து ஸிஸிபஸும் கேரளத்துப் ப்ராந்தனும் – அல்பேர் கமூவின் அபத்தவாதம்
- சபலங்களைக் கடத்தல்
- எங்கிருந்து வந்தோம்? நாம் யார்? நாம் எங்கு செல்கிறோம்?
- எதற்காக உயிரைத் துறக்கலாம்? – 1
- எதற்காக உயிரைத் துறக்கலாம்? – 2
- பாவம், மரணம், நரகம்
- கானலின் நீரோ, காட்சிப்பிழையோ?
- இருளையும் ஒளியையும் வென்றவன்
- கண்டுணரும் நொடிப்பொழுதின் காட்சி
- ஒழுங்கின்மையின் உன்னதம்
- காலம் எரித்ததும், கணினி மீட்டதும்
1610 ஆம் ஆண்டு ஜூலை 18-ஆம் தேதி, டஸ்கனி (Tuscany) பகுதியின் போர்த்தோ எற்கோலே (Porto Ercole)-யில் கரவாஜியோ இறந்தார் என்று ரோம் நகரிலிருந்து ஒரு செய்தியறிக்கை வெளியானது. அவர் கடும் ஜுரத்தால் இறந்திருக்கலாம் என்று கருதப்பட்டது. ஆனால் அது ஓவியர் கரவாஜியோ என்று தெரிந்தவுடனேயே அவர் ஸிஃபிலிஸ் என்ற பால்வினை நோயால் இறந்தார் என்றும், போப் ஆண்டவரின் காவலர்கள் அவரைக் கொன்றுவிட்டார்கள் என்றும், தோமஸோனி குடும்பத்தினர் அவரைக் கொன்று பழிவாங்கிவிட்டனர் என்றும் பலவிதமான வதந்திகள் வெளியாயின. கரவாஜியோவின் வாழ்வைப் போலவே அவர் சாவும் மர்மமானதுதான்.

கரவாஜியோ இறந்து இப்பொழுது நானூறு வருடங்களுக்கு மேலாகிவிட்டது. ஆனால், இன்றும் செவ்வியல் முறையின் முக்கிய மாமேதை என்றும் இருளையும் ஒளியையும் ஓவியத்தில் எப்படிப் பயன்படுத்துவது என்று நமக்குக் கற்றுக்கொடுத்த வித்தகர் என்றும் புகழப்படுகிறார். கரவாஜியோவின் ஓவியங்கள் பரோக் (Baroque) என்ற மாபெரும் வகைப்பாட்டை ஓவியங்களில் துவக்கிவைத்தது. இவற்றைப் புரிந்துகொள்ள முதலில் இங்கிருக்கும் ஓவியத்தைப் பார்க்கலாம்.

படம் -1: இத்தாலிய ஓவியர் கரவாஜியோவின் ‘ஜுடித் ஹோலோஃபெர்னெஸில் தலையைக் கொய்தல்’ (Judith Beheading Holofernes), 1598-1599-ஆம் ஆண்டுகள். 145 செமி × 195 செமி அளவுள்ள இந்த ஓவியம் திரைச்சீலையில் நெய்ப்பூச்சால் வரையப்பட்டது. இப்பொழுது ரோம் நகரின் பலாட்ஸோ மாளிகையின் தொல்கலைக் காட்சிக்கூடத்தில் (Galleria Nazionale d’Arte Antica at Palazzo Barberini, Rome) இருக்கிறது.
ஜூடித் (Judith) ஹோலோஃபெர்னெஸ் (Holofernes)-ஐக் கொன்ற கதை கத்தோலிக்க விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் இணைநியமனமாக (Deuterocanonical) வருகிறது. ஜுடித் பெதுலியா (Bethulia) என்ற யூதரகளின் நகரில் வாழ்ந்த ஒரு அழகிய இளம் விதவை. அவள் ஊரைக் கைப்பற்ற அஸிரியர்கள் (Assyrian) தாக்கினார்கள். அஸிரியர்களின் படைத்தலைவன் ஹோலோஃபெர்னெஸ்-ஐக் கண்டு பெதுலியர்கள் பயந்தார்கள், தங்களைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று நம்பினார்கள். ஜூடித்துக்கு அப்படிக் கோழைத்தனமாக இருப்பதில் நம்பிக்கையில்லை. நாம் முயன்றால்தான் கடவுள் நமக்கு உதவுவார் என்று நம்பினாள். தன்னுடைய தாதியுடன் அஸிரியர்களின் படைமுகாமுக்குச் சென்றாள். அங்கே ஹோலோஃபெர்னெஸிடம் பெதுலியாவைக் கைப்பற்ற தான் உதவுவதாகச் சொல்லி அவர்கள் நம்பிக்கைக்குப் பாத்திரமானாள். பின் அருகில் யாருமில்லாமல் குடிபோதையில் அவன் மயங்கிக் கிடந்தபொழுது, இதுதான் கடவுள் தனக்கு அளித்த சந்தர்ப்பம் எனத் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவன் தலையைக் கொய்து கொன்றாள்.
…எல்லோரும் போன பிறகு, சிறியவரோ பெரியவரோ யாரும் படுக்கையறையில் இல்லாதபொழுது, ஜூடித் ஹோலோஃபெர்னஸின் படுக்கைக்கருகில் நின்று மௌனமாக பிராத்தித்தாள்; “ஓ தேவனே, சகல வல்லமையும் பொருந்திய கடவுளே, இந்த வேளையில் இஸ்ரேலின் மேன்மையை என் கரங்களில் அளித்திருக்கிறீர்கள். இதுவே உம் மாட்சிமைக்கு உதவ, எமக்கெதிராக எழுந்திருக்கும் எதிரிகளை சிதறடிக்கும் என் திட்டத்தை நிறைவேற்ற வேண்டிய தருணம்.” அவள் படுக்கையிலிருக்கும் அவனுடைய உடைவாளை உருவிக்கொண்டு ஹோலோஃபெர்னஸின் தலைமாட்டை அடைந்தாள். படுக்கையை நெருங்கி நின்று அவன் தலைச்சிகையைப் பிடித்துச் சொன்னாள், “தேவனே, இஸ்ரேலின் ஆண்டவரே, இன்றைக்கு எனக்குத் தேவையான வலிமையைத் தாருங்கள்”. பின் தன் முழுப் பலத்தையும்கூட்டி அவனுடைய கழுத்தில் இரண்டு முறை தாக்கி, அவன் தலையைத் துண்டித்தாள்.
– அத்தியாயம் 13, வசனங்கள் 4-8, ஜூடித்தின் புத்தகம், இணைநியமனம், பழைய ஏற்பாடு.
பின் அவன் தலையை மூட்டைகட்டித் தன் ஊருக்கு எடுத்துவந்து மக்களிடம் காட்டினாள். திறமையான படைத்தலைவன் இல்லாத நிலையில் அஸிரியர்கள் பெதுலியாவைக் கைப்பற்றும் முயற்சியில் தோற்றுத் திரும்பிச் சென்றுவிட்டார்கள். படைபலமும் வழிநடத்தலும் இல்லாமல் தனியளாக ஊரைக் காப்பாற்றியதால் ஜூடித்-ன் கதை நற்போதனையாக நிலைத்திருக்கிறது. விவிலிய அறிஞர்கள் இதைப் பெரிதும் கட்டுக்கதை (apocryphal) என்றே பகுக்கிறார்கள். அஸிரியர்களைக் கொடியவர்களாகவும் யூதர்களை கடவுளுக்கு விசுவாசமான நல்லோர்களாகவும் வரையறுப்பதன் மூலம், இது நன்மைக்கும் தீமைக்கும் இடையேயான போராகச் சித்தரிக்கப்படுகிறது.
இந்தக் கதை, தேச விசுவாசத்தை முன்வைத்து தேவ விசுவாசத்தைப் போதிக்கிறது. கடவுளின் கருணையைப் பெற மனித முயற்சிகள் அவசியம் என்று போதிக்கவே இந்தக் கட்டுக்கதை பழைய ஏற்பாட்டில் இடைச்செருகப்பட்டது என்று யூதர்களின் மரபில் இந்தக் கதையைத் ஒதுக்குகிறார்கள். ஆனால் ரோமப் பாரம்பரியத்தில் இந்தக் கதை முக்கியத்துவம் பெற்று பல கலை வடிவங்களில் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டது. பலரும் ஜுடித் கொலையைச் செய்வதற்குமுன், அல்லது தாதி கொலையானவனின் தலையைச் சுமந்துவருவது போன்ற சந்தர்ப்பங்களைத்தாம் வரைந்தார்கள். ஆனால் கரவாஜியோ சம்பவத்தின் உச்சகட்ட காட்சியைச் சித்தரிக்கிறார். மூவரும் ஒரே தளத்தில் இருக்க, ஓவியத்தில் முப்பரிமாணத்தைக் காட்ட பின்புலத்தில் சுருக்கங்கள் நிறைந்த சிவப்புநிறச் சீலையை வரைந்திருக்கிறார். கழுத்து அறுபட்டு இரத்தம் பீச்சியடிக்கிறது. இங்கே ஜூடித் இளமை ததும்பும் முகத்துடன் தன் செயலில் திடமான உறுதி கொண்டவளாக எந்த வித முகச்சலனமும் இல்லாதிருக்கிறாள். அதிக எத்தனம் தேவைப்படாததுபோல அவளுடைய உடல் பின்தள்ளிதான் இருக்கிறது. ஆனால், அவள் இடக்கை வலுவாக அவன் தலைமயிரைப் பிடித்திருக்க, வாள் பாதிக்கும் மேலாக கழுத்தை அறுத்துவிட்டிருக்கிறது. அவளுடைய முலைக்காம்பு சற்றே மேடிட்டிருக்கிறது. இதை ஆர்வம் கலந்த பீதியினால் உண்டாகும் உடற்கிளர்ச்சி என உடற்கூறியலில் வரையறுக்கிறார்கள். மாறாக தாதியின் முகத்தில் பேரார்வம், அவள் கண்களில் கொடூரம் கலந்த வியப்பு. வெட்டியவுடன் தலையை எடுத்துச் செல்ல ஆயத்தமாகத் துணிப்பையைப் பிடித்திருக்கிறாள். செத்துக்கொண்டிருக்கும் ஹோலோஃபெர்னஸின் உடல் முறுக்கியிருக்கிறது. அவன் இடக்கை துணியை இறுகப்பிடிக்க, வலக்கையை அழுத்தித் திமிறி எழும்ப முயற்சிப்பது தெரிகிறது. மரணத்தின் அவலம் தெளிவாக அவன் முகத்தில் நிரம்பியிருக்கிறது. பிதுங்கும் விழிகள், சுருங்கும் நெற்றி, எல்லாவற்றுக்கும் மேலாக அவன் வாயைக் கவனித்தால் அந்த அறையில் நிரம்பும் அவலப் பேரோசையை நாம் நன்றாகக் கேட்கமுடியும். இதுதான் கரவாஜியோ! அவருக்குக் கொலை அந்நியமானதல்ல.

படம் – 2: கரவாஜியோ என்று அறியப்படும் மைக்கலாஞ்சலோ மெறிஸி டா கறவாஜியோ (Michelangelo Merisi da Caravaggio), கரிக்கோல் ஓவியம்.
பொதுயுகம் 1571-ல் மிலான் நகருக்கருகில் பிறந்த அவருடைய முழுப்பெயர் மைக்கலாஞ்சலோ மெறிஸி . பெற்றோர்கள் அவர் முந்தைய பெரும்கலைஞர் மைக்கலாஞ்சலோ (புவனாரொட்டி) போல வரவேண்டும் என்று ஆசைப்பட்டு அந்தப் பெயரைச் சூட்டினார்கள். அவருக்கு ஆறு வயதிருக்கும்பொழுது அவர் தந்தை பிளேக் நோயினால் இறந்துப்போனார். அவருடன் பிறந்த ஐந்து குழந்தைகளையும் அவர் தாயார்தான் பெரும் கஷ்டங்களுக்கிடையில் வளர்த்தார். பிளேகிலிருந்து தப்பிக்க குடும்பம் கரவாஜியோ என்ற ஊருக்குக் குடிபெயர்ந்தது. அதானால் Michelangelo Merisi da Caravaggio என்பது சுருங்கி கரவாஜியோ என்ற பெயரே அவருக்கு நிலைத்துப்போயிற்று. (இத்தாலியர்கள் பெயரைக் ‘கறவாஜியோ’ என்ற வல்லின உச்சரிப்புடன் பலுக்குவார்கள்.) அவருடைய 13-ஆம் வயதில், ஓவியமேதை டிஷியனின் சீடரான சிமோனெ பெதர்ட்ஸானோ (Simone Peterzano) என்பவரிடம் ஓவியம் கற்கத் துவங்கினார். பின் 21-வயதில் அவர் ரோம் நகருக்கு இடம் பெயர்ந்தார். அங்கே வேலை ஏதும் கிடைக்காமல் சில வருடங்கள் அலைந்து திரிந்தார். 24-ஆம் வயதில் அவருக்கு ஸான் லூயிகி டெய் ஃப்ரான்ச்சேஸி (San Luigi dei Francesi) என்ற தேவாலயத்தில் புனித மத்தேயூவின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் முப்பலகை (triptych) ஒன்றை வரையும் வாய்ப்பு கிட்டியது. அது அவருக்குப் பெரும் புகழைப் பெற்றுத் தந்தது.
அவருடைய ஓவியத் திறமை கவனம் பெறத் துவங்கியதற்கு இணையாக அவரது நடத்தையினால் அவப்பெயரும் பிரபலமானது. 1958-1606 வரை ரோம் நகரத்தின் போலீஸ் ஏடுகளில் அவர்மீது ஏகப்பட்ட புகார்கள் பதிவாயின. இவற்றில் அனுமதியின்றி கத்தி வைத்திருந்தது, கழியால் ஒருவரை அடித்து அவர் தொப்பியைக் கத்தியால் கிழித்தது, உணவகப் பயணியாளர் முகத்தில் சாப்பாட்டுத் தட்டை வீசியெறிந்து காயப்படுத்தியது, காவலரைக் கல்லால் அடித்தது, வத்திகான் நகரின் முக்கியஸ்தர் ஒருவரைப் பின்னிருந்து கத்தியால் குத்தியது எனப் பல புகார்கள். இவற்றின் உச்சகட்டமாக 1606-ஆம் ஆண்டு மே மாதம், விளையாட்டின் மீது சூதாடுகையில் ஏற்பட்ட கலவரத்தில் ரனூச்சியோ தொம்மஸோனி (Ranuccio Tommassoni) என்பவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்தார். அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அதிலிருந்து தப்பிக்க நேப்பிள்ஸ்க்குத் தப்பியோடினார். அங்கிருக்கும்பொழுது இன்னும் சில அற்புத ஓவியங்களை வரைந்தார். நேப்பிஸ்ஸில் அவருடைய புகழ் பரவத்தொடங்கியது. ஆனால் விரைவில் அங்கிருந்து மால்ட்டாவுக்குச் சென்றார். அங்கே அவருடைய திறமைகளைக் கண்டு வியந்த அரசாங்கம் அவரை அரசவை ஓவியராக நியமித்தது. அதன்கூடவே அவருக்கு ‘மாவீரர்’ என்ற பட்டம் வந்தது. அண்டை நாட்டின் உயர்பதவியினால் அவர் மீது ரோம் இனி தண்டனையை நிறைவேற்ற முடியாது என்ற நிலை ஏற்பட்டது. ஆனால் அவருடைய சண்டைக்குணம் மீண்டும் தலையெடுத்தது. அவர் மால்ட்டாவின் ஒரு உயர் அதிகாரியைத் தாக்கி, கிட்டத்தட்ட சாவின் விளிம்பிற்குச் செல்லுமளவிற்குக் காயப்படுத்தினார். அதானல் அவர் மால்ட்டாவில் தண்டனை விதிக்கப்பட்டு சிறைப்படுத்தப்பட்டார். அவருடைய ஓவியத் திறமையின் இரசிகர்களின் துணையுடன் சிறையிலிருந்து தப்பி சிஸிலிக்கு ஓடினார். அங்கே சில மாதங்களில் இன்னும் பல ஓவியங்களை வரைந்தார். ஆனால் அவருக்கு சிஸிலியில் பாதுகாப்பு இல்லை என்ற உணர்வு தோன்றியது. அவருடைய பழைய ரோம் எதிரிகள் அங்கு வரக்கூடும் என்று அஞ்சிய கரவாஜியோ சில மாதங்களுக்குப் பின் மீண்டும் நேப்பிள்ஸ் சென்றார். அங்கே அதிகாரிகளின் உதவியால் போப்பாண்டவரின் மன்னிப்பு கிட்டும் என்று நம்பினார்.

படம் -3: ஓவியர் கரவாஜியோவின் ‘கிறிஸ்துவைப் பிடித்தல்’ (Cattura di Cristo). பொதுயுகம் 1602. தற்பொழுது அயர்லாந்தின் தேசிய கலைக்காட்சியகத்தில் (National Gallery of Ireland, Dublin) இருக்கிறது.
ரோம் நகரின் முக்கியமான குற்றவாளிகளுள் ஒருவராக அவர் வளர்ந்துவந்த அதே வருடங்களில் (பொ.யு. 1600-1606) கலை உலகையே உலுக்கியெடுத்த அற்புத ஓவியங்களையும் வரைந்து கொண்டிருந்தார். அவருடைய ஓவியங்களில், இருளையும் வெளிச்சத்தையும் உச்சப்படுத்தி, நாடகத்தன்மையைக் காட்டும் கியரொஸ்குரோ எனும் ஒளியிருள் (chiaroscuro) உத்தியை மிக அற்புதமாகப் பயன்படுத்தினார். லியனார்டோ டாவின்சி போன்ற மறுமலர்ச்சி கால ஓவியர்கள் ஒளியிருளைப் பயன்படுத்தியிருந்தாலும், கரவாஜியோதான் அதன் உச்சங்களைத் தொட்டார். உதாரணத்திற்கு, ‘கிறிஸ்துவைப் பிடித்தல்’ (Cattura di Cristo) என்ற ஓவியத்தைப் பார்க்கலாம். இதில் யேசுவை முத்தமிடுவதன்மூலம் யூதாஸ் காவலர்களுக்கு அடையாளம் காட்டுகிறார். கொல்லப்பட அல்லது தண்டிக்கப்பட வேண்டியவனைக் அடையாளம் காட்டிக்கொடுக்கும் ‘மரணத்தின் முத்தம்’ என்ற கருத்தாக்கம் இத்தாலிய நாட்டார் வழக்கில் இன்றுவரை திரும்பத் திரும்பப் புழக்கத்தில் இருக்கிறது. இதன் நீட்சியாக ஹாலிவுட் திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் போன்றவற்றிலும் இது பரவலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. உதாரணமாக, காட்ஃபாதர் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் துரோகம் செய்த தன் சகோதரன் ஃப்ரெடோ கொர்லியோனெ-க்கு (Fredo Corleone) மைக்கேல் கொர்லியோனெ (Michael Corleone) கூட்டத்தின் நடுவே முத்தமிடும் காட்சி அற்புதமாகக் காட்டப்படும். ஓவியத்தில் யேசுவை யூதாஸ் முத்தமிட்டு அடையாளம் காட்டியவுடன் கவசமணிந்த காவலர்கள் அவரைப் பிடிக்கவரும் தருணத்தை கரவாஜியோ வரைந்திருக்கிறார். ஓவியத்தில் மொத்தம் ஏழுபேர் இருக்கிறார்கள். ஆனால் இதன் பின்புலத்தை வெளிரச் செய்து பார்த்தால் இருளில் இன்னும் சில காவலர்கள் இருப்பது தெரியவரும். இடப்புறம் யேசுவின் சீடர் யோவான், அடுத்தது யேசு, அவரைத் தழுவி யூதாஸ், பிடிக்கவரும் கவசமணிந்த இரண்டு காவலர்கள், விளக்கைப் பிடித்திருக்கும் ஒருவர், இறுதியாக ஏழாவது ஆளின் (காவலர்) தலைக்கவசம் மாத்திரமே தெரிகிறது.

படம் – 4: காட்பாதர் இரண்டாம் பாகத்தில் சகோதரன் ஃப்ரெடோ கொர்லியோனெ இழைத்த துரோகத்தை உணர்த்தி முத்தமிட்டு, மைக்கேல் கொர்லியோனெ அவன் மரணத்தைச் சுட்டும் முத்தக்காட்சி.
இந்த ஓவியம் திரைச்சீலையில் நெய்ப்பூச்சினால் ஆனது. 133.5 செமீ × 169.5 செமீ அளவுள்ள இது பொதுயுகம் 1602-ஆம் ஆண்டு வரையப்பட்டது. இதே தருணத்தை ஜியாட்டோ (Giotto) மூன்று நூற்றாண்டுகளுக்கு முன், பொ.யு. 1306-ல் வரைந்திருக்கிறார். இரண்டையும் ஒப்பிடும்பொழுது கரவாஜியோவின் மேதைமை நன்றாகப் புலப்படும். (ஆனால், மூன்னூறு ஆண்டுகளுக்கு முன் வந்த இன்னொரு மாபெரும் ஓவியமேதை ஜியாட்டோவுக்கு இது நியாயம் செய்யாது.) விவிலியத்தின் கூற்றுப்படி அது இரவில் நிகழ்ந்தது.
… நான் எவனை முத்தமிடுகிறேனோ அவன்தான்; அவனைப் பிடித்து பத்திரமாகக் கொண்டு செல்லுங்கள் என்று குறிப்பு சொல்லியிருந்தான். அவன் வந்தவுடனேயே நேராக அவரருகே சென்று ‘குருவே’ என்று சொல்லி அவரை முத்தமிட்டான். உடனே எல்லோரும் அவரைத் தனித்துவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டனர்.
– மார்க்கு அத்தியாயம் 14. 45-50, புதிய ஏற்பாடு.

படம் – 5: யூதாஸின் முத்தம் (Kiss of Judas). ஓவியர் ஜியாட்டோ பொ.யு. 1305-ல் வரைந்த சுவரோவியம் (fresco) இத்தாலியின் படுவா நகரின் ஸ்க்ரொவெனி தேவாலயத்தில் (Scrovegni Chapel, Padua) இருக்கிறது.
ஜியாட்டோவின் ஓவியம் பொதுவிடத்தில் நிகழ்கிறது. அதில் ஒரு பெரும்படையே இருக்கிறது. அவர்களை எல்லாம் தெளிவாகக் காட்டவேண்டி அவர் முழுவெளிச்சத்தில் இருப்பதைப் போல வரைந்துவிட்டு விவியத்தின் வாக்கியங்களுக்கு விசுவாசமாக இரண்டு தீவட்டிகளை வரைந்திருக்கிறார். கரவாஜியோ கிட்டத்தட்ட நிழலுகில் ஒரு இருளறையில் நிகழ்வதைப் போல வரைந்திருக்கிறார். ஆனால் மிக நெருக்கமாக அவர்களை வரைந்திருப்பதன் மூலமும், ஏழாவது ஆளின் தலைக்கவசத்தை மட்டுமே காட்டுவதன் மூலமும் பின்புலத்தில் இன்னும் பலர் இருக்கலாம் என்ற ஊகத்தை நம்மில் எழுப்புகிறார். காட்சியின் முக்கியத்தை வடித்தெடுப்பதன்மூலம் அதன் தீவிரம் நமக்கு நன்றாக உறைக்கிறது. இடப்புறமிருக்கும் யோவான் (ஜான்) யேசுவின் சீடர்களுக்குள்ளே இளையவர், எனவே அவரை முகத்தில் ரோமங்கள் இல்லாமல் வரைந்திருக்கிறார். அவருடைய முடியும் யேசுவின் முடியும் இணைந்து காணப்படுகின்றன. இது யேசு சிலுவையில் அறையப்பட்டு மரிக்கப்போகிறார், ஆனாலும் அவர் போதனைகள் புனித யோவானின் வழியாக உலகுக்குப் பரவி நிலைக்கும் என்பதைச் சுட்டும் அடையாளம். யேசுவின் முகத்தில் எந்தவிதமான அதிர்ச்சியும் இல்லை, அவருக்கு நடக்கப்போவது முன்கூட்டியே தெரியும். ஆனாலும் அவர் முகத்தில் கவலையின் ரேகைகளை கரவாஜியோ அற்புதமாக வரைந்திருக்கிறார். மீண்டும், விவிலியத்தில்,
…பேதுருவையும், யாக்கோபையும், யோவானையும் தம்மோடே கூட்டிப்போன அவர் வியப்படையவும், வியாகுலப்படவும் தொடங்கினார். அப்பொழுது அவர், ‘என் ஆத்துமா மரணத்துகேயான துக்கம் கொண்டிருக்கிறது, நீங்கள் இங்கேயே தங்கி விழித்திருங்கள்’ என்று சொன்னார். சற்று முன்சென்று தரையில் விழுந்து, இயலுமானால் இவ்வேளை எம்மைவிட்டு நீங்கிப் போகட்டும் என்று பிரார்த்தித்தார். மேலும், ‘அப்பா, பிதாவே, அனைத்தும் உம் சித்தத்தின்படியே இயலும்; இப்பாத்திரத்தை என்னிலிருந்து எடுத்துச் செல்லும். எனினும் இது என் விருப்பமல்ல, உம் சித்தத்தின்படியே ஆகக்கடவது’ என்றார்”
– மார்க்கு, அத்தியாயம் 14, 33-36, புதிய ஏற்பாடு.
யூதாஸால் காட்டிக் கொடுக்கப்படுவோம் என்று அறிந்திருந்ததால் அவரிடம் அதிர்ச்சியில்லை. ஆனால், உடனடி நடவடிக்கைகளினால் அவருக்கு கவலை உண்டாகிறது. கூட்டமாக வரைந்த ஜியோட்டோவுக்கு இதையெல்லாம் யேசுவின் முகத்தில் காட்ட இடமில்லை. ஆனால், கரவாஜியோவுக்கு இது மிகவும் முக்கியம். அவர் வரையும் யேசு தேவனல்லர்; மனிதர்களுள் ஒருவராக வந்தவர். எனவே உடனடி நடப்புகளின் தாக்கம் அவரில் கட்டாயம் பிரதிபலித்தாக வேண்டும். வேதனை மேலிடும் முகத்துடன் அவர் தம் கரங்களை இறுகப் பிணைத்திருக்கிறார்.
யூதாஸின் உணர்வுகளும் மிக முக்கியம். வந்தான், முத்தமிட்டான், அடையாளம் காட்டிவிட்டான். ஆனால் உடனடியாக அவன் தீயசெய்கையின் கனம் அவனை அழுத்தத் தொடங்குகிறது. முகத்தில் கலவரம், தான் சற்றுமுன் கைவிட்ட யேசுவை, அவன் கரம் இறுகப்பற்றிக் கொள்கிறது. அவரே யூதாஸை மீட்டாக வேண்டும். காவலர்களின் கரங்களில் உலோகக் கவசங்கள், அவற்றை மீறுவது இயலாததாகிறது. விளக்கைத் தூக்கிக் காட்டுபவரின் முகம் கரவாஜியோவுடையது. அவருடைய பல படங்களில் அவரே பாத்திரமாக வருவார் (இதைப்பற்றி பின்னால் பார்க்கலாம்). இங்கே அவர் பாய்ச்சும் ஒளி யேசுவை ஒளிரச் செய்கிறது. எப்படி யோவான் யேசுவை உலகுக்குக் கொண்டுசென்றாரோ, அதேபோல் தன் ஓவியங்களால் கரவாஜியோ யேசுவின் புகழைப் பரப்புகிறார். எல்லாரையும் சற்று மறந்து யோவானையும், கரவாஜியோவையும் மாத்திரமே பார்த்தால் இருவரும் ஒரே மாதிரியான உடல் நெளிவுகளைக் கொண்டிருப்பது விளங்கும். தன்னை யோவானை ஒத்த புனிதராக கரவாஜியோ முன்வைக்கிறார்.
பொதுயுகம் 1600-ல் தொடங்கி 150 வருடங்களுக்கு மேலாக பரோக் வடிவம் பெரும் ஆதிக்கத்தைச் செலுத்தியது. இந்த காலகட்டத்தில் மேற்கத்தியக் கலை ஆடம்பரமான அலங்காரங்களைக் கொண்டதாக வடிவெடுத்தது. மத சிந்தனைகளின் கருத்தாக்கங்களை உணர்வெழுப்பும் நாடகத்தன்மைகொண்ட வகையில் கலைஞர்கள் ஓவியம், இசை, சிற்பம், கட்டக்கலைகளில் வெளிப்படுத்தினார்கள். அடர்த்தியான வண்ணக்கலவைகளைப் பயன்படுத்தி உணர்ச்சிகளைத் தூண்டும் வளைவுகளும் மேலெழும்பும் நேர்க்கோடுகளையும் கொண்ட ஓவியங்கள் படைக்கப்பட்டன. மறுமலர்ச்சி சிந்தனைகளில் மேலெழும்பிய தனிமனித உணர்வுகள் வித்திட்ட சமுக சீர்த்திருத்தங்களுக்கான எதிர்வினையாக, உச்சகட்ட நாடகங்களுடன் போதனைகளைக் கலந்து முன்வைக்க, கத்தோலிக்க சர்ச் முன்னெடுத்த வடிவம் பரோக். ஓவியத்தில் பரோக்கைத் துவக்கிவைத்து வரையறுத்தவர் கரவாஜியோ எனலாம். இங்கே ஜூடித், யூதாஸ் இரண்டு ஓவியங்களிலும் இருக்கும் அபார நாடகத்தன்மைகளும் உணர்வெழுச்சிப் பெருக்கும் பரோக்கின் அடையாளங்கள்.
கரவாஜியோவின் ஒளியிருள் (கியரொஸ்குரோ) மேதைமை ஓவியம் முழுவதிலும் அற்புதமாக வெளிப்படுகிறது. கொலை, சண்டைகள், திருட்டு, போன்றவற்றில் நேரடி அனுபவம் கொண்ட கரவாஜியோவுக்கு நிழலுலகுதான் மிகவும் பரிச்சயமானது. அங்கே பெரிதும் இருள்தான். கியோட்டோவின் ஓவியத்தில் முன்னிருக்கும் தரை, பின்னிருக்கும் நீலவானம் போன்றவை முப்பரிமாணத்தைத் தருகின்றன. துணிகளின் சுருக்கங்கள், கவங்களின் பிரதிபலிப்புகள், பின்னிருளில் பெரிதும் மறைந்து தலைக்கவசம் மாத்திரமே தெரியும் கடைசிக் காவலன் போன்ற உத்திகளால் அதே முப்பரிமாணத்தை கரவாஜியோ வெளிப்படுத்துகிறார். எல்லாமே இருளில்தான் நடக்கிறது, ஓவியத்தின் இடதுமேல் மூலையிலிருந்து வரும் (காட்டப்படாத) ஒரு ஒளிக்கீற்று யோவான், யூதாஸ், காவலர்களின் முகங்களைத் துலக்குகின்றன. தூக்கிப் பிடிக்கப்பட்ட ஒற்றை விளக்கு காட்சியின் மையமான யேசுவின் மீது ஒளியூட்டுகிறது. (கூடவே தந்திரமாக, தன்னம்பிக்கையுடன், கரவாஜியோ தனக்கும் அதே ஒளியைப் பயன்படுத்திக் கொள்கிறார்.) கவசங்கள் ஒளியைப் பிரதிபலிக்கின்றன. அந்தப் பிரதிபலிப்பு பார்வையாளர்களாகிய நம் முகத்தில்தான் விழவேண்டும். எனவே காவலர்களின் பாவத்தில் நமக்கும் பங்கிருக்கிறது. கிறிஸ்த்தவத்தைப் பொருத்தவரை நாம் எல்லோருமே அடிப்படையில் பாவிகள்தான்; யேசுவிடம் கருணையைத் தேடியே அதிலிருந்து மீண்டாக வேண்டும். கியரொஸ்குரோவை கரவாஜியோவுக்கு முன் லெனர்டோ டாவின்சி, எல் கிரெக்கோ போன்றவர்களும், அவருடைய சமகாலத்தவர்களான ரெம்ப்ராண்ட், வெர்மீர், போன்றவர்களும் பயன்படுத்தியிருக்கிறார்கள். அவருக்குப் பின் ழான்-ஆனொரெ ஃப்ராக்னார், ப்ரான்ஸிஸ்கோ கோயா போன்றவர்களும் இன்னும் இரண்டு நூறு ஆண்டுகளுக்கு முன்னெடுத்துச் சென்றிருக்கிறார்கள். ஆனால் ஒளிநிழலின் உச்சம் கரவாஜியோவின் ஓவியங்கள்தான். இதன் உச்சகட்ட நாடகீயத்திற்கு இருளாக்கம் (Tenebrism) என்று பெயர். இதன் வரையறையாகக் காட்டப்படுபவனவற்றில் பெரும்பான்மை கரவாஜியோவின் படைப்புகள்தாம். இந்த உத்தியை அடுத்த சிலநூறு ஆண்டுகளுக்கு ஓவியமேதைகள் என்று சொல்லப்படுபவர்களில் பலர் பயன்படுத்தினார்கள். அவர்கள் தங்களை ‘கரவாஜியர்கள் (Caravaggisti)’ என்று சொல்லிக்கொள்வதில் பெருமை கொண்டார்கள். குறிப்பாக நெதர்லாந்தின் உட்ரெக்ட் நகரில் ‘உட்ரெக்ட் கரவாஜியர்’ என்ற அற்புதமான ஓவியர்கள் இருந்தார்கள்.

படம் – 6 ‘விடலை பாக்கஸ்’ (Bacco adolescente). 95 செமீ × 85 செமீ அளவுள்ள திரைச்சீலையில் நெய்ப்பூச்சினால் வரையப்பட்ட இந்த ஓவியம் இப்பொழுது ஃப்ளாரென்ஸ் நகரின் அருங்காட்சியகத்தில் இருக்கிறது. டையோனைஸஸ் என்றும் கிரேக்க புராணங்களில் அழைக்கப்படும் பாக்கஸ், மது, போதை, காம ஈர்ப்பு போன்றவற்றின் கடவுள். இங்கே பாக்கஸ்-ஆகத் தன்னையே வரைந்திருக்கிறார் கரவாஜியோ. கணகளில் மிதமிஞ்சிய மதுவின் போதையா அல்லது சரசத்திற்கு அழைக்கும் கவர்ச்சியா?
கரவாஜியோவின் பல ஓவியங்களில் அவரே ஒரு பாத்திரமாக வருவார். நோயுற்ற இளம் பாக்கஸ் (Young Sick Bacchus, c. 1593-4), சிலந்தியால் கடிக்கப்பட்ட சிறுவன் (Boy Bitten by a Lizard, 1593-4), இசைக்கலைஞன் (The Musicians, 1595-6), பாக்கஸ் (Bacchus, 1596-7) போன்ற அவருடைய ஆரம்பகால ஓவியங்களில் இளமை ததும்பும், கவர்ச்சியான (சற்றே பெண்மையின் சாயல்கொண்ட) தன்னையே வரைந்திருக்கிறார். 1597-க்குப் பிறகு அதில் மாற்றம் ஏற்பட்டது. கவலை, பயம், குரூரம், போன்றவற்றைச் சித்தரித்தாக வேண்டிய பாத்திரங்களில் கரவாஜியோ இடம்பெறத் தொடங்கினார். முதலில் தன் சுய முகச்சாயலில் தலைச்சிகைக்குப் பதிலாக பாம்புகளைக் கொண்டு பீதியூட்டும் மெடுஸா (Medusa, 1597-8) வாக உருவெடுத்தார். தொடர்ந்து தூய மத்தேயுவின் தியாகம் (The Martyrdom of St. Matthew, 1599-1600), இங்கே நாம் விபரமாகப் பார்த்த யேசுவைப் பிடித்தல், திருமுழுக்கர் புனித யோவானின் தலை துண்டிக்கப்படுதல் (The Beheading of St. John the Baptist, 1607-8), லாசரஸ் உயிர்த்தெழுதல் (The Resurrection of Lazarus, 1609), தாவிதும் கோலியாத்தின் தலையும் (David and the Head of Goliath, 1609) போன்ற பல ஓவியங்களில் அச்சமூட்டும் வகையில் தன் முகத்தை இணைத்திருக்கிறார். ஆரம்பகால கவர்ச்சி முகங்களைப் பார்க்கும்பொழுது இவர் ஒரு சுயமோகி (narcissist) என்று தீர்மானிக்க நிச்சயம் சாத்தியங்கள் இருக்கின்றன. மறுபுறத்தில் துண்டிக்கப்பட்ட தலையாகத் தன்னைத்தானே வரைந்ததைப் பார்த்தால் சுய இரக்கம் கொண்டவராகவும் வெளிப்படுகிறார். எது எப்படியோ, இந்த அளவிற்கு நாடகீயமாக தன் சுய ஓவியத்தை வரைந்து கொண்டவர்கள் யாரும் இல்லை என்பது உறுதி.

படம் – 7: கோலியாத்தின் தலையுடன் தாவீத் (David with the Head of Goliath). 125 செமீ × 101 செமீ அளவுள்ள திரைச்சீலையில் நெய்ப்பூச்சினால் கரவாஜியோவால் வரையப்பட்ட ஓவியம். இப்பொழுது இது ரோம் நகரின் போர்ஹேஸி (Galleria Borghese ) காட்சியகத்தில் இருக்கிறது. இங்கே தாவீதின் உருவில் இருப்பது உண்மையில் கரவாஜியோவின் முகம். சிறுவன் தாவீதின் முகத்தில் வெற்றியின் பெருமிதமோ, கொடியவன் மீதான வெறுப்போ இல்லை. மாறாக, அங்கே இரக்கமும் கருணையும்தான் தென்படுகின்றன. இது கரவாஜியோவின் கடைசி ஓவியங்களுள் ஒன்று. தான் இழைத்த குற்றங்களை நன்றாகத் தெரிந்த கரவாஜியோ, நம்மிடம் இரக்கத்தை வேண்டி நிற்பதைப் போலிருக்கிறது.
ரோமில் தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையிலிருந்து தப்பிக்க நேப்பில்ஸ்க்கும், அங்கிருந்து மால்ட்டாவுக்கும், பின் ஸிசிலிக்கும், மீண்டும் நேப்பில்ஸ்க்கும் தப்பியோடிக் கொண்டிருந்த கரவாஜியோவுக்கு இறுதியாக போப்பாண்டவர் மன்னிப்பு வழங்கினார். அவர் ரோம் திரும்ப உத்தேசித்து டஸ்கனியை வந்தடைந்தார். அங்கே அநாதரவாக கடற்கரையில் மாண்டுகிடந்தார். இன்றுவரை அவர் சாவிற்கான காரணம் மர்மமாகவே உள்ளது. ஐந்து நூற்றாண்டுகளுக்குப் பிறகும் இன்னும் அதைக் கண்டறியும் ஆர்வம் பலரிடமும் நீடிக்கிறது. 2002-ஆம் ஆண்டு முதன்முறையாக அவர் உலோக ஈயத்தின் விஷத்தால் இறந்திருக்கலாம் என்ற கருத்து முன்வைக்கப்ட்டது. அவருடைய உடலின் எச்சங்கள் என்று கண்டுபிடிக்கப்பட்ட எலும்புகளிலும் மண்டையோட்டிலும் அளவுக்கு அதிகமான ஈயம் இருப்பது அளந்தறியப்பட்டது. ஓவியங்களில் தூய வெண்ணிறத்தை அடைய ஈயத்தை அடிப்படையாகக் கொண்ட நிறப்பூச்சுக்கள் இருபதாம் நூற்றாண்டுவரை வெகுவாகப் பயன்படுத்தப்பட்டன. ஈயம், இரத்தச் சோகை, மனப்பிறழ்வு, உயர் இரத்த அழுத்தம், நீரகக் கோளாறுகள், போன்றவற்றை உருவாக்கும் விஷமாக அறியப்பட்டுள்ளது. கரவாஜியோ தொடர்ந்து கிளர்ந்தெழும் மனநிலையிலேயே இருந்தார், அதுவே அவர் படைப்புகளுக்கும் அவர் குற்றங்களுக்கும் அடிநாதமாக இருந்தது. எனவே அவர் ஈயத்தினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப் பெரிதும் இடமிருக்கிறது. மைக்கலாஞ்சலோ (புவனராட்டி), ரூபென்ஸ், ரெம்ப்ராண்ட், கோயா, வான் கோ, ரென்வார், போன்ற பல ஓவியர்களும் ஈய விஷத்தால் இறந்திருக்கலாம் அல்லது நோயுற்றிருக்கலாம் என்ற கருத்து நிலவி வருகிறது. இதற்கு அறிவியல்பூர்வ சான்றுகளும் முன்வைக்கப்படுகின்றன [1]. ஆனால் 2018-ஆம் ஆண்டு அதே உடலெச்சங்களிலிருந்து பெறப்பட்ட பற்கூழ்களை டி.என்.ஏ மற்றும் நுண்ணுயிரி ஆய்வுகளுக்கு உட்படுத்திய குழு, அவர் கடற்கரையில் ஈடுபட்ட இறுதிச் சண்டைக் காயங்களில் ஸ்டெஃபைலோக்காக்கஸ் ஆரியஸ் (Staphylococcus aureus) என்ற நுண்ணுயிரியின் தாக்குதாலால் உண்டான புண் அழுகல் (sepsis) மூலம் இறந்திருக்கலாம் என்று முன்வைக்கிறது [2].

படம் – 8 செபத்தில் இருக்கும் மடோனா (Madonna of the Rosary). 364.5 செமீ × 249.5 செமீ அளவுள்ளது. கரவாஜியோ 1607-ல் திரைச்சீலையில் நெய்ப்பூச்சு கொண்டு வரைந்தார். இப்பொழுது வியென்னாவின் கலைவரலாற்று அருங்காட்சியகத்தில் (Kunsthistorisches Museum Wien) இருக்கிறது. இதில் மேரியைத் தொழும் பக்தையின் கால்கள் அழுக்கானவையாகக் காட்டப்பட்டிருக்கின்றன. கரவாஜியோ கடவுள்களையும், புனிதர்களையும் சாதாரண ஏழை மனிதர்களாகவே உருவகித்து வரைந்தார்.
கரவாஜியோவின் ஓவியச் சிந்தனைகளும் உத்திகளும் அவருடைய காலங்களுக்கு மிக முற்பட்டவை. அவர் வாழ்ந்தகாலம் கிறிஸ்தவத்தின் வரலாற்றில் மிக முக்கியமான கட்டம். எதிர்ப்புவாதம் எனப்படும் பிராட்டஸ்டன்ட் கத்தோலிக்கத்தின் அடிப்படைக் கட்டுப்பாடுகளை எதிர்த்து வெகுவாக வளரத் தொடங்கிய காலம். எனவே கத்தோலிக்கம் முன் எப்பொழுதும் இல்லாத அளவுக்கு பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்திக் கொண்டிருந்தது. கத்தோலிக்க மத அமைப்பு அவரை உண்மையான தேவ விசுவாசத்தை வரையப் பணியில் அமர்த்தியது. ஆனால் அவரோ உண்மைக்கு முதலிடமும் விசுவாசத்திற்கு இரண்டாமிடமும்தான் கொடுத்தார். அவருடைய ஓவியத்தில் தேவதூதர்கள் வெகுவாகத்தான் தென்பட்டார்கள். ஆனால், அவர் தெருக்களில் அலைவோரையும், வேசிகளையும், திருடர்களையும் மாதிரிகளாக நிற்கவைத்து வரைந்தார். அவர் நிர்வாணமாகப் புனிதர்களையும் அழுக்குக் கால்களுடன் பக்தர்களையும் வரைந்தது இன்றைக்கும் கத்தோலிக்க விசுவாசிகளுக்குப் பேரதிர்ச்சியைத் தருகின்றன. அதுதான் அவர் அறிந்த, வாழ்ந்த உலகம்: எனவே அதுவே உண்மையானது. எந்த தேவ உன்னதமும், மதப் பெருமிதமும் ஏழைகளின் அவலங்களை ஒதுக்கவும் மறைக்கவும் முடியாது. எனவேதான் அருவருப்பையும் அதிர்ச்சியையும் கடந்து, புறக்கணிக்க முடியாமல், அந்த ஓவியங்கள் இன்றும் மாபெரும் தேவாலயங்களின் உட்சுவர்களை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன.
கரவாஜியோ 38 வருடங்கள்தான் வாழ்ந்தார். பதினைந்து வருடங்களுக்கும் குறைவாகவே ஓவியங்களை வரைந்தார். ஓவியத்துக்காகத் திட்டமிடும் ஆரம்ப வரைவுகள் எதையும் அவர் விட்டுச் செல்லவில்லை (அந்த ஆரம்ப நிலைக் கோட்டுவரைவுகள் உத்திகளைக் கற்பவர்களுக்கு மிகவும் முக்கியமானது). ஆனால் ஓவியம் அவர் போட்ட பாட்டையில் வெகுவாக முன்நோக்கிப் பாய்ந்தது. நாடகீயமான ஓளியிருள், உன்னதமற்ற ஆனால் உண்மையான சாதாரண மாந்தர்கள், தீர்க்கமான மெய்மை, மிகச் சிக்கனமான ஓவிய அமைப்புகள், துல்லியமான கதைசொல்லல், சுட்டுப் பொசுக்கும் காட்சியசைவுகள் போன்றவை அவரிலிருந்து துவங்கி அடுத்த சில நூறு ஆண்டுகளுக்கு வளர்ந்தெழுந்தன. ரெம்ப்ரான்ட் வன் ரெய்ன் (Rembrandt van Rijn), பீட்டர் பால் ரூபென்ஸ் (Peter Paul Rubens), டியெகோ வெலாஸ்கெ (Diego Velázquez), ஆர்டெமிசியா ஜென்டிலெஸ்ச்சி (Artemisia Gentileschi), தியோடர் ஜெரிக்கொ (Théodore Géricault), எட்வார் மனெ (Édouard Manet) உள்ளிட்ட பல பிற்கால மேதைகள் கரவாஜியோவின் பாதையில் ஒழுகிச் சென்றவர்கள்.
References
1. The lead-poisoned genius: Saturnism in famous artists across five centuries, Julio Montes-Santiago, Progress in Brain Research, Volume 203, (2013), Page 223
2. Did Caravaggio die of Staphylococcus aureus sepsis? Michel Drancourt, et. al., The Lancet Infectious Diseases, Volume 18, (2018), Page 1178.
Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.
