ஒன்றரை அங்குலம் மேலே 

ஹிந்தி மூலம்:  நிர்மல் வர்மா

தமிழில்: அனுராதா க்ருஷ்ணசுவாமி

Enrico Baj (1924-2003)
Parade militaire au bois de Boulogne, 1963

உங்களுக்கு விருப்பமானால் நீங்கள் இந்த மேஜைக்கு வரலாம். போதுமான இடம் இருக்கிறது. ஒரு ஆளுக்கு எவ்வளவு இடம் தேவைப்பட்டு விடப் போகிறது? இல்லை.. இல்லை… எனக்கு எந்த கஷ்டமும் இல்லை. நிச்சயமாக, நீங்கள் விரும்பினால் மௌனமாக இருக்கலாம். நானும் அமைதியாக இருப்பதையே விரும்புபவன்…..

மனிதனால் பேசவும் அமைதியாகவும் இருக்கமுடியும் , ஒரே சமயத்தில். இது வெகு சிலருக்குத் தான் புரிகிறது. நான் வருடக்கணக்காக இதை செய்து வருகிறேன். நிச்சயமாக நீங்கள் இதைச் செய்ய வேண்டாம். நீங்கள் இளைஞர். உங்கள் வயதில் மௌனமாக இருப்பது என்பது மௌனமாக இருப்பது பேசுவது என்பது பேசுவது. இரண்டும் ஒரு சேர நிகழ முடியாது. நீங்கள் சிறிய கோப்பையில் குடிக்கிறீர்களே? உங்களுக்கு இன்னும் பழக்கம் ஏற்படவில்லை போலிருக்கிறது. உங்களைப் பார்த்ததுமே நீங்கள் இந்த இடத்தைச் சேர்ந்தவர் இல்லை என்பது எனக்கு தெரிந்து விட்டது இந்த நேரத்தில் இங்கு வருபவர்கள் அனைவரையும் நான் அறிவேன். அவர்களிடம் நீங்கள் எதுவும் பேச முடியாது. அவர்கள் முதலிலேயே நிறைய குடித்திருப்பார்கள். அவர்கள் கடைசி கோப்பை பியர் குடிப்பதற்காக இங்கு வருகிறார்கள். மற்ற பப்கள் மூடி இருக்கும். அவர்களால் வேறு எங்கும் போக முடியாது. அவர்கள் வெகு சீக்கிரமே நிறைந்து விடுவார்கள். மேசையின் மீது. வெளியே தெருவில். ட்ராமில். பல சமயம்  எனக்கு அவர்களைத் தூக்கி  வீடு கொண்டு போய் சேர்க்க வேண்டி வரும். கண்டிப்பாக அடுத்த நாள் அவர்கள் என்னை அடையாளம் கண்டு கொள்ளக் கூட மாட்டார்கள். நீங்கள் தவறாக நினைத்துக் கொண்டு விடாதீர்கள். நான் உங்களைப் பற்றி சொல்லவில்லை. நான் உங்களை இங்கு முதன்முறையாக பார்க்கிறேன். நீங்கள் உள்ளே வந்து அமைதியாக மேஜையில் உட்கார்ந்து கொண்டு விட்டீர்கள். எனக்கு இது வருத்தமாக இருந்தது. பயப்படாதீர்கள்…. நான் என்னை உங்கள் மீது திணிக்க மாட்டேன். நாம் இருவரும் ஒன்றாக உட்கார்ந்திருந்தால் கூட அவரவர் பியரோடு தனித்து இருக்க முடியும். என்னுடைய வயதில் எனக்கு இது கொஞ்சம் கஷ்டம். ஏனென்றால் ஒவ்வொரு முதியவரும் கொஞ்சம் பயந்து தான் இருக்கிறார்கள். மெல்ல மெல்ல கௌரவத்துடன் மூப்படைவது மிகப்பெரிய ‘வரம்’ எல்லோராலும் முடியாது. அது தானாகவே வருவதில்லை. முதுமை அடைவதென்பது ஒரு கலை. மிகுந்த பயிற்சிக்குப் பிறகே அதை கற்க முடிகிறது. என்ன கேட்டீர்கள்? என் வயதா? கொஞ்சம் யூகித்துத் தான் பாருங்களேன். இல்லை ஐயா நீங்கள் என்னை காரணமே இல்லாமல் மகிழ்விக்க முயற்சிக்கிறீர்கள்! நீங்கள் நிச்சயம் என்னை மகிழ்ச்சியடையச் செய்துவிட்டீர்கள்! என்னுடைய இந்த மகிழ்ச்சியை கொண்டாடுவதற்காக நான் இன்னொரு பியர் எடுத்துக் கொண்டால் உங்களுக்கு மறுப்பேதும் இருக்காது அல்லவா? நீங்கள்? நீங்கள் குடிக்க மாட்டீர்களா? இல்லை, நான் வற்புறுத்த மாட்டேன். இரவு மூன்று மணி. இது பயங்கரமான நேரம். நான் என் அனுபவத்தில் உங்களுக்கு சொல்கிறேன். இரண்டு மணிக்கு இரவு இன்னும் மீதம் இருப்பது போல் தோன்றுகிறது. நான்கு மணிக்குப் பிறகு விடிய  ஆரம்பித்துவிடுகிறது. ஆனால் மூன்று மணிக்கு உங்களுக்கு இங்கேயும் இல்லாமல் அங்கேயும் இல்லாமல் இருப்பது போலத் தோன்றுகிறது. மரணம் சம்பவிப்பதற்கான நேரம் எது என்றால் அது இதுதான் என்று எனக்கு எப்பொழுதும் தோன்றும். ஒவ்வொரு மனிதனுக்கும் தனக்கான வாழ்க்கையும் தனக்கான மதுவையும் தேர்ந்தெடுக்கும் உரிமை  இருக்க வேண்டும்… இரண்டையும் ஒரே ஒரு முறை தான் தேர்ந்தெடுக்க முடிகிறது. பிறகு நாம் அதை மறுபடியும் மறுபடியும் செய்து கொண்டிருக்கிறோம். ஒருமுறை கொடுத்திருக்கிறோம் அல்லது ஒருமுறை வாழ்ந்திருக்கிறோம். உங்களுக்கு மறுபிறப்பில் நம்பிக்கை இருக்கிறதா? நான் என்ன சொல்கிறேன் என்றால், இறந்த பிறகும்? உங்களுக்கு எந்த மதத்திலும் நம்பிக்கை இல்லை என்கிற தேய்ந்து போன பதிலைத் தர மாட்டீர்கள் என நம்புகிறேன். நானும் ஒரு கத்தோலிக்கன். ஆனால், மரித்த பிறகும் மனிதன் முழுவதுமாக மரிப்பதில்லை என்கிற உங்கள் நம்பிக்கை எனக்கு மிகுந்த ஆச்சர்யமளிக்கிறது… நாம் முதலில் ஒரு வாழ்க்கை வாழ்கிறோம். பிறகு இரண்டாவது…. பிறகு மூன்றாவது. நான் இரவு நேரங்களில் பெரும்பாலும் இந்தக் குழப்பத்தைக் குறித்து யோசிப்பதுண்டு…. உங்களுக்குத் தெரியுமா? என்னுடைய வயதில் தூக்கம் அவ்வளவு சுலபமாக வருவதில்லை. தூக்கத்திற்கு  ஒரு சிட்டிகை அதாவது ஒரு தோலாவின் ஆறில் ஒரு பாகம் கவனக்குறைவு; அரை சிட்டிகை களைப்பு: உங்களிடம் இரண்டுமே இல்லை என்றால்  நீங்கள் ஒன்றரை பங்கு பியர் குடித்து சமன் செய்து கொள்ளலாம். இதனால் நான் ஒவ்வொரு இரவும் இங்கே வந்துவிடுகிறேன். தொடர்ந்து கடந்த பதினைந்து வருடங்களாக.

நான் கொஞ்ச நேரம் தூங்கத் தான் செய்கிறேன் ஆனாலும் மூன்று மணி வாக்கில் என் தூக்கம் கலைந்து போய் விடுகிறது. அதற்குப் பிறகு என்னால் வீட்டில் தனியாக இருக்க முடிவதில்லை. இரவு மூன்று மணி… இது மிகவும் பயங்கரமான நேரம். நான் என் அனுபவத்தின் பெயரில் உங்களிடம் சொல்கிறேன். இரண்டு மணிக்கு இரவு இன்னும் மீதம் இருப்பது போல் தோன்றுகிறது. நான்கு மணிக்குப் பிறகு விடிய  ஆரம்பித்துவிடுகிறது. ஆனால் மூன்று மணிக்கு உங்களுக்கு இங்கேயும் இல்லாமல் அங்கேயும் இல்லாமல் இருப்பது போலத் தோன்றுகிறது. மரணம் சம்பவிப்பதற்கான நேரம் எது என்றால் அது இதுதான் என்று எனக்கு எப்பொழுதும் தோன்றும். என்ன கேட்டீர்கள்? இல்லை ஐயா! நான் முற்றிலும் தனியாக இல்லை. ஓய்வூதியம் பெறுகிறவர்களுக்கு என பிரத்தேக ஆசைகள் இருக்கும் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். என்னிடம் ஒரு பூனை இருக்கிறது பல வருடங்களாக அது என்னுடன் இருக்கிறது. நான் இங்கே பியர் குடித்துக் கொண்டு உங்களுடன் அரட்டை எடுத்துக் கொண்டிருக்கிறேன். அது அங்கு வீட்டு வாசலில்  உட்கார்ந்து கொண்டு எனக்காகக் காத்திருக்கும். உங்களைப் பற்றி எனக்கு தெரியாது ஆனால் யாரோ எனக்காக வழி மீது விழி வைத்து காத்திருக்கிறார்கள் என்ற நினைப்பு எனக்கு அமைதியை கொடுக்கிறது. காத்திருக்க யாருமே இல்லாத மனிதர்களை  என்னால் கற்பனை செய்ய முடியாது. யாருக்காகவும் காத்திருக்காத மனிதர்களையும் கூட. காத்திருப்பதை விட்டுவிடும் அந்த நொடியிலேயே நீங்கள் வாழ்வதையும் நிறுத்தி விடுகிறீர்கள். பூனைகளால் வெகு நேரம் வரை பொறுமையாக காத்திருக்க முடியும். அப்படிப் பார்த்தால் அவை பெண்களுக்கு ஒப்பானவை. இந்த ஒரு காரணத்தினால் மட்டுமல்ல. பெண்களைப் போலவே அவற்றுக்கும் அடுத்தவர்களை தன் பால் ஈர்த்து வசீகரிக்கும் அசாதாரண வலிமை உண்டு. அவர்களை நாம் தனியாக பார்க்கும் போது பயமும் மோகமும் ஒரு சேர ஏற்பட்டு, எதையோ இழந்தவர் போல நிற்கிறோம். இப்படிப்பட்ட பயம் உங்களுக்கு நாய் அல்லது மற்ற பிராணிகளிடமும் ஏற்படக்கூடும். ஆனால் அது சற்றே மலிவான பயம். நீங்கள் ஒரு புறமாக ஒதுங்கி சென்று விடுகிறீர்கள் நாய் மறுபுறம் ஒதுங்கிச் செல்கிறது. அதனுடன் நீங்கள் கொடுமையாக நடந்து கொள்வீர்களோ என்று அதற்கு பயம் ஏற்படுகிறது. அது உங்கள் மீது பாய்ந்து கடித்து குதிரை விட்டால் என்ன செய்வது என்று நீங்கள் பயப்படுகிறீர்கள். ஆனால் அந்த பயத்தில் எந்தவிதமான ரகசியமோ, சிலிர்ப்பபோ அல்லது வேறெந்த விதமான எதிர்பார்ப்புகளோ இல்லை…. பூனையையோ அல்லது பாம்பையோ பார்க்கும்போது நமக்குள் ஏற்படுவதைப் போல. 

உண்மை என்னவென்றால், இதை நான் என் அனுபவத்தின் பெயரில் சொல்கிறேன், நீங்கள் ஆண்டாண்டு காலமாக சேர்ந்தே வாழ்ந்த போதிலும் கூட, பெண்களைப் போல பூனையை நீங்கள் கடைசிவரை சரியாகப் புரிந்து கொள்ளவே முடியாது. அவர்கள் வேண்டுமென்றே எதையும் மறைத்து வைப்பதில்லை. அவர்களுக்குள் இருக்கும் கதவை திறக்க தேவையான தைரியம் உங்களுக்கு கடைசி வரை வருவதில்லை. நம்மை கொஞ்சமேனும் பயமுறுத்துகிற, திகிலடையச் செய்கிற வற்றை நோக்கித்தான் நாம் ஈர்க்கப்படுகிறோம் என்பது உங்களுக்கு வினோதமாக தோன்றவில்லை?… உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால் நான் இன்னும் ஒரு பியர் குடிக்கப் போகிறேன். சிறிது நேரத்தில் இந்த பப் அடைக்கப்பட்டு விடும் பிறகு  முழு நகரத்திலும் காலை வரை ஒரு சொட்டு பியர் கூட கண்ணில் படாது. நீங்கள் பயப்படாதீர்கள் எவ்வளவு குடிக்க வேண்டும் என்கிற என் எல்லை எனக்குத் தெரியும். மனிதன் நிலத்திலிருந்து கிட்டத்தட்ட ஒன்றரை அங்குலம் மேலே எழ வேண்டும். இதற்கு மேல் வேண்டாம் இல்லாவிட்டால் அவன் மேலே பறந்து கொண்டேயிருப்பான். பிறகு இந்த பறத்தல்  போலீஸ் ஸ்டேஷனிலோ அல்லது சாக்கடையிலோ தான் சென்று முடியும்… இரண்டுமே அவ்வளவு சிறப்பான இடங்கள் இல்லை. ஆனால் சிலர் பயம் காரணமாக நிலத்தின் மீது தங்கள் கால்களை அழுந்தப் பதிய வைத்துக் கொள்கிறார்கள்… அப்படிப்பட்டவர்களுக்கு குடிப்பதோ குடிக்காமல் இருப்பதோ சமம் தான். ஆம்! சரியான தூரம் ஒன்றரை அங்குலம்! 

நெருப்பு குச்சியின் முனை எரிந்து அணைந்து புகைவதைப்போல  உங்களுடைய விழிப்புணர்வு அனைவதைப் பார்க்கும் அளவிற்கு உங்களுடைய விழிப்புணர்வு உயிர்த்திருக்க வேண்டும்…. நெருப்பு உங்கள் விரல்களை தீண்ட நெருங்கி வரும் போது அதை விட்டு விட வேண்டும். அதற்கு முன்பும் கூடாது. அதற்கு பிறகும். எதுவரை பிடித்திருக்க வேண்டும் எப்பொழுது விட வேண்டும் என்னும் குடிப்பதின் ரகசியம் இந்தப் புரிதலில் ஒளிந்திருக்கிறது. கடினமான காரியம் என்னவென்றால் தரையில் இருந்து ஒன்றரை அங்குலம் மேல் எழும்பும் வரையில் நம்மால் அந்த  சரியான நேரத்தை கண்டு கொள்ள முடிவதில்லை. பிறகு அது எதற்கும் உதவாமல் போய்விடுகிறது. புரிதலை தாண்டி நாம் நகர்ந்து விடும் போது தான் நமக்கு அந்த புரிதல் ஏற்படுகிறது என்று நான் சொன்னால் ஒருவேளை நீங்கள் சிரிக்கக்கூடும். நான் சொல்ல வந்ததை நீங்கள் சிரித்துக் கொண்டே தவிர்த்தாலும நான் அதைத் தவறாக நினைக்க மாட்டேன். பல விஷயங்களைப் பற்றி தெரிந்து கொள்ளாமல் இருப்பதே தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்வதற்கான சிறந்த வழி என்கிற நம்பிக்கையுடன் வாழும் கலையை நானும் பல முறை முயற்சித்துப் பார்த்திருக்கிறேன்.. நாம் மெல்ல மெல்ல இந்த நம்பிக்கையுடன் வாழ கற்றுக் கொள்கிறோம். நம் மனைவியுடன் வாழ கற்றுக் கொள்வதைப் போல. ஒரே வீட்டில் பல ஆண்டுகளாக. நீங்கள் விளையாடும் அதே விளையாட்டை உங்கள் மனைவியும் விளையாடுகிறாரோ என்கிற சந்தேகம் மட்டும் எப்போதும் தொடர்கிறது. சில சமயம் இந்த சந்தேகத்தில் இருந்து விடுபட நீங்கள் இரண்டாவது அல்லது மூன்றாவது பெண்மணியுடன் காதல் வயப்படுகிறீர்கள். இது ஏமாற்றத்தின் ஆரம்பம் தான் ஏனெனில் இரண்டாவது பெண்ணிடம் அவருக்கேயான ரகசியம் மூன்றாவது பெண்ணுக்கு அவருக்கு மட்டும் தெரிந்த ரகசியம்… இது சதுரங்க விளையாட்டை போன்றது. நீங்கள் ஒரு காயை நகர்த்துகிறீர்கள். உங்கள் எதிராளிக்கு முன் எண்ணற்ற வாய்ப்புகள் திறக்கின்றன. ஒரு ஆட்டத்தில் தோற்ற பிறகு இரண்டாம் ஆட்டத்தில் நீங்கள் வெற்றி பெற வேண்டும் என்று விரும்புகிறீர்கள். முதல் ஆட்டத்தில் இருந்தது போலவே எண்ணற்ற வாய்ப்புகளும் ரகசியங்களும் இரண்டாம் ஆட்டத்திலும் இருக்கக்கூடும் என்பதை நீங்கள் மறந்து விடுகிறீர்கள். பாருங்கள்… இதனால்தான வாழ்க்கையில் நீங்கள் எத்தனையோ பெண்களோடு தொடர்பு கொண்டிருந்தாலும் ஒரே ஒருவரோடு மட்டுமே தொடர்பு உண்மையில் ஏற்படுகிறது என்று நான் நினைக்கிறேன். என்ன கேட்டீர்கள்… இல்லை ஐயா… வீட்டில் நான் தனியாக இருக்கிறேன் இன்று நான் ஏற்கனவே உங்களிடம் சொல்லி விட்டேன். என்னுடைய பூனையை கணக்கில் எடுக்க வேண்டாம். ஆம் ஐயா நான் திருமணம் ஆனவன். ஆனால் என் மனைவி இப்போது உயிருடன் இல்லை…. இது என்னுடைய அனுமானம்… உங்கள் பார்வையில் ஆச்சரியம் தெரிகிறது… அனுமானம் என்று ஏன் சொல்கிறேன் என்றால் அவள் இறந்ததை நான் பார்க்கவில்லை. ஒருவர் இறந்ததை நீங்கள் கண்ணால் பார்க்காத வரை உங்கள் கைகளால் அவரை அடக்கம் செய்யாதவரை அவர் உயிருடன் இல்லை என்பதை உங்களால் ஊகிக்க மட்டுமே முடியும். உங்களுக்கு சிரிப்பாக கூட இருக்கலாம் ஆனால் உங்களுக்கு தெரிந்தவர்கள் இறந்ததை நீங்கள் கண்களால் பார்க்காத பட்சத்தில், அவர்கள் இன்னமும் உயிரோடு இருக்கிறார்கள் என்னும் மங்கலான நம்பிக்கை உயிர்த்திருக்கிறது…. நீங்கள் கதவை திறக்கும் போது அவர் கைகுட்டையில் கைகளை துடைத்துக்கொண்டு சமையலறையில் இருந்து ஓடி வந்து உங்கள் முன் நிற்கக்கூடும். சந்தேகமில்லாமல் இது பிரம்மை தான். அப்படி நடப்பதில்லை. அதற்கு பதிலாக பூனை ஓடி வருகிறது. வாசற்படியில் தலை வைத்துக்கொண்டு தனது கண்களின் நிறங்களை அவ்வப்போது மாற்றிக்கொண்டு படுத்து கிடக்கிறது. காலம் பலவற்றையும் உறைய வைக்கும் வல்லமை படைத்தது என்று நான் பிறர் கூற கேட்டிருக்கிறேன். நீங்களும் அப்படி நினைக்கிறீர்களா… எனக்குத் தெரியவில்லை…. ஆனால் சில சமயம் எனக்கு தோன்றுகிறது… காலம் எதையும் உறைய வைப்பதில்லை; மாறாக பெருக்கித் தள்ளி விடுகிறது. இருட்டு மூலைகளிலோ அல்லது கம்பளத்தின் கீழோ, யார்  கண்களிலும் படாமல் மறைத்து  வைத்துவிடுகிறது. ஆனால் அவற்றின் நகங்கள் எப்பொழுதும் வெளியே நீட்டிக்கொண்டு இருக்கின்றன. எதிர்பாராத நேரத்தில் அது உங்களை தாக்கி வீழ்த்த கூடும். நான் சம்பந்தமில்லாமல் பேச ஆரம்பித்து விட்டேன். பியர் குடிப்பதில் இது ஒரு சுகம். நீங்கள் பாதையில் இருந்து விலகி இங்கும் அங்கும் சுற்ற ஆரம்பித்துவிடுகிறீர்கள். ஒரே வட்டத்தை சுற்றி. ரவுண்ட் அண்ட் ரவுண்ட். குழந்தைகள் விளையாடும் இந்த விளையாட்டை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா. அவர்கள் வட்டமாக உட்கார்ந்து கொள்வார்கள் ஒரே ஒரு குழந்தை மட்டும் கையில் கைக்குட்டை உடன் சுற்றி சுற்றி வரும். என்ன… உங்கள் நாட்டிலும் குழந்தைகள் இந்த விளையாட்டை விளையாடுவார்களா… பாருங்களேன் நாம் எவ்வளவுதான் ஒருவரிடம் இருந்து மற்றவர் வேறுபட்டிருந்தாலும், உலகெங்கும் உள்ள குழந்தைகள் விளையாடும் விளையாட்டுகள் ஒன்றாகத்தான் இருக்கின்றன. அந்நாட்களில் கிட்டத்தட்ட நாம் அனைவரின் நிலைமையும் அப்படித்தான் இருந்தது.  யாருக்கு பின்னால் திடீரென சுருக்குக் கயிறு விழும் என்பது நம் யாருக்குமே தெரியாமல் இருந்தது. நம்மில் ஒவ்வொருவரும் பயந்து போன குழந்தையைப் போல நமக்கு பின்னால் ஒருவேளை சுருக்குக் கயிறு விழுந்திருக்கிறதோ என்று  அடிக்கடி சோதனை செய்து பார்த்து கொள்கிறோம். ஆமாம். இந்நாட்களில் தான் இங்கு ஜெர்மானியர்கள் வந்திருந்தார்கள். அப்போது நீங்கள் ஒருவேளை குழந்தையாக இருந்திருக்கக்கூடும். எனக்கும் அவ்வளவு  வயதாகி இருக்கவில்லை. காலையிலிருந்து இரவு வரை வேலையிலேயே மூழ்கிக் கிடக்க வேண்டி இருந்தது. நான் இளம் காளையைப் போல தொடர்ந்து வேலை செய்து கொண்டிருந்தேன். 

ஒவ்வொருவரும்  குறிப்பிட்ட வயதில் சுகவாழ்க்கை வாழ அறிந்து கொள்கிறார்கள். அதைத் தாண்டி யோசிக்க அவர்களிடம் அப்போது நேரம் இருப்பதில்லை. அதாவது சுக வாழ்க்கையின் வட்டத்தில் இருக்கும் அந்தக் கணம் வரை அது புரிவதில்லை. நீங்கள் பார்த்திருக்கக்கூடும் – நாம் மகிழ்ச்சி என்று நினைப்பது, குறிப்பிட்ட முக்கியமான நொடி மட்டுமே நிலைப்பது. அந்த நொடி மிக முக்கியமானதாக இருந்தாலும், அது கடந்து போன பின், ஹேங் ஓவரை போல, நிறமிழந்து மங்கலாகி விடுகிறது. ஆனால் நாம் வருத்தம் அல்லது கஷ்டம் அல்லது வேதனை என்று கருதும் எதற்கும் குறிப்பிட்ட நேர காலம் இருப்பதில்லை. நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால்  விபத்து நடக்கும் அந்த நொடியில் நம்மால் அதை உணர முடிவதில்லை. விபத்து அல்லது துர்ச் சம்பவம் நிகழும் அந்த நொடியில் நாம் செயலற்றுப் போய் விடுகிறோம். அதனால் ஏற்படப் போகிற பின் வளைவுகளை மிகச் சரியான முறையில் பொறுத்த தேவைப்படும்  சட்டகத்தை நம்மால் அச்சமயம் தேட முடிவதில்லை. விபத்து நடப்பது என்பது ஒரு விஷயம். ஆனால் அதன் பின்விளைவுகளை வாழ்நாள் முழுவதும் அனுபவிப்பது அல்லது அனுபவிக்க கூடிய திறனை வளர்த்துக் கொள்வதென்பது முற்றிலும் வேறு விஷயம். இது நடக்கவே முடியாத காரியம்.  அப்படி ஒரு போதும் நடப்பதில்லை.

நான் சொல்ல வருவது என்னவென்றால் தன்னை மறுபடியும் மறுபடியும் அடுத்தவரின் இடத்தில் வைத்து அவர் அனுபவித்த அதே கஷ்டத்தை தானும் அனுபவிப்பதாக கற்பனை செய்து கொள்வது. அது கொஞ்சம் கூடவோ குறையவோ இருக்கலாம். ஆனால் அடுத்தவர் அனுபவித்த அதே தீவிரத்துடனும் அல்லது அதே அளவிலோ அது ஒருபோதும் இருக்காது. இல்லை இல்லை நீங்கள் என்னை தவறாக புரிந்து கொண்டு விடாதீர்கள் நான் என் மனைவி இன்னல்களை அனுபவித்ததை பார்க்கவில்லை. நான் வீடு போய் சேர்ந்த போது அவர்கள் அவளை கொண்டு போய்விட்டிருந்தார்கள். ஏழாண்டு திருமண வாழ்க்கையில் அன்று தான் முதல் முறையாக நான்  ஆளற்ற வீட்டில் நுழைந்தேன்.பூனை? இல்லை. அந்நாட்களில் அது என்னுடன் இருக்க ஆரம்பித்திருக்கவில்லை. நான் அதை பல வருடங்களுக்குப் பிறகு தான் வளர்க்க ஆரம்பித்தேன். அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் ஜன்னல் வழியாக என்னை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அது இயற்கை தான். நானும் கூட என் அக்கம்பக்க வீட்டுக்காரர்களின் உறவினர்களை கெஸ்டப் போலீஸ் பிடித்து வண்டியில் ஏற்றுக் கொண்டு செல்லும் பொழுது இப்படித்தான் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்திருக்கிறேன். ஆனால் நான் வீடு திரும்பும் போது என் மனைவியின் அறை காலியாக இருக்கும் என்று நான் ஒரு நாளும் கனவில் கூட நினைத்துப் பார்த்ததில்லை. இதோ பாருங்கள்… உங்களிடம் நான் ஒன்று கேட்க விரும்புகிறேன்… மரணம், உபாதைகள் மற்றும் விபத்து போன்றவற்றைப் பற்றி கேள்விப்படும்போதோ அல்லது காலையி பத்திரிகைகளில் படிக்கும் போதோ அவை  நமக்கும் ஒரு நாள் நிகழக்கூடும்  என்று நாம் நினைக்கிறோமா… இல்லை …நமக்கு எப்போதும் தோன்றுவது என்னவென்றால் இவை அடுத்தவர்களுக்கு மட்டுமே நிகழும். ஆஹா! நீங்கள் இன்னொரு கோப்பை பியர் குடிப்பது குறித்து எனக்கு மகிழ்ச்சி. இரவு முழுவதும் காலிக் கோப்பையை பார்த்துக்கொண்டு இரவு முழுவதும் உங்களால் உட்கார முடியாது. என்ன கேட்டீர்கள்? இந்த கேள்வியை கண்டிப்பாக கேட்பீர்கள் என்று எனக்குத் தெரியும். நீங்கள் கேட்காமல் விட்டிருந்திருந்தால் தான் ஆச்சரியமாக இருந்திருக்கும். இல்லை ஐயா ஆரம்பத்தில் எனக்கு ஒன்றுமே புரியவில்லை. நான் உங்களிடம் ஏற்கனவே சொல்லி இருந்தேன் இல்லையா இத்தகைய விபத்துகளின் போது மனிதர்கள் தன் நிலை மறந்து விடுகிறார்கள். தான் அனுபவிக்கும் உபாதை என்ன என்று கூட அவர்களால் உணர முடியாது. என் மனைவியின் உடைமைகள் நாலா பக்கமும் சிதறிக் கிடந்தன. துணிமணிகள், புத்தகங்கள், பழைய தினசரி நாளேடுகள். அலமாரி மற்றும் மேஜையின் டிராயர்கள் திறக்கப்பட்டு இருந்தன. அவற்றுள் வைக்கப்பட்டிருந்த சிறிய பெரிய சாமான்கள் கீழே  தரை மீது தலை குப்புற விழுந்து கிடந்தன. கிறிஸ்மஸ் பரிசுகள்,  தையல் மெஷின், பழைய புகைப்பட ஆல்பங்கள். உங்களுக்கு தெரிந்திருக்கும், திருமணத்திற்கு பிறகு எத்தனை பொருட்கள் தானாகவே சேர்ந்து விடுகின்றன.  அவர்கள் ஒரு சின்னஞ்சிறு பொருளைக் கூட விட்டு வைக்காமல் திருப்பி புரட்டி பார்த்திருந்தார்கள, மூலைமுடுக்கெல்லாம் சல்லடைபோட்டு தேடியிருந்தார்கள் எந்த ஒரு பொருளும் அவர்கள் கையில் சிக்காமல் தப்பவில்லை. அன்றிரவு நான் என் அறையில் அமர்ந்திருந்தேன். என் மனைவியின் படுக்கை காலியாக இருந்தது. தலையணைக்கு கீழே அவளுடைய கர்சிஃப்பும்  நெருப்பு பெட்டியும் சிகரெட் பாக்கெட்டும் வைக்கப்பட்டிருந்தன. தூங்குவதற்கு முன் சிகரெட் பிடிப்பது அவளது வழக்கம். ஆரம்பத்தில் அவளுடைய இந்த பழக்கம் எனக்கு நெருடலாக இருந்தது ஆனால் மெல்ல மெல்ல நான் அதற்கு என்னை பழகிக் கொண்டேன். 

கட்டில் கருகே இருந்த முக்காலியில் அவள் அந்நாட்களில் படித்துக் கொண்டிருந்த புத்தகம் வைக்கப்பட்டிருந்தது…. எந்தப் பக்கத்தை அவள் படித்து முடித்து இருந்தாளோ அது அடையாளம் தெரிவதற்காக அங்கு அவளு தன் கிளிப்பை பெருகி வைத்திருந்தாள். கிளிப்பில் அவளுடைய முடியின் மணம் நிறைந்திருந்தது. பல ஆண்டுகள் கழிந்த பின்னரும் சின்னச் சின்ன பொருட்களைக் குறித்த வர்ணனைகளை  நாம் எப்படி நினைவில் ஆழப் பதிந்திருக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியும். ஒருவேளை இது சரியும் கூட. திருமணத்திற்கு முன்பு நாம் எப்போதும் பெரிய, உணர்வ நிறைந்த பொருட்களைப் பற்றி யோசிக்கிறோம், ஆனால் திருமணத்திற்கு பிறகு பல வருடங்கள் சேர்ந்து வாழ்வதின் காரணமாக இந்த பெரிய பொருட்கள் கையை விட்டுப் நழுவி விடுகின்றன, சில சின்ன சின்ன பழக்க வழக்கங்கள், மேலோட்டமாக தோன்றும் தினசரி நடவடிக்கைகள், பரஸ்பர வாக்குவாதங்கள் மட்டுமே  பிழைத்து நின்று விடுகின்றன: அவற்றை வெட்கம் காரணமாக அடுத்தவர்களிடம் ஒருபோதும் நாம் பகிர்ந்து கொள்வதில்லை. ஆனால் அவள் இல்லாத வாழ்வு வெறுமையாக தோன்றுகிறது. அன்றிரவு நான் அறையில் என் மனைவியின் பொருட்களுடன் தனியாக அமர்ந்திருந்தேன்…. அன்று நான் சுய நினைவோடு இல்லை. எனக்கு எதுவும் புரியவில்லை.  தன்னுடைய அறையில் அவள் இல்லை.  இதுதான் நிஜம். என்னால் அதைப் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் அவர்கள் அவளை ஏன் பிடித்துக் கொண்டு சென்றார்கள்? இந்த ரகசியம் என்னுடைய சிற்றறிவுக்கு அப்பாற்பட்டதாக இருந்தது. கடைசியில் என் மனைவியை மட்டும் ஏன் பிடித்துக் கொண்டு சென்றார்கள்? அன்றிரவு இந்த கேள்வியை எனக்கு நானே பலமுறைகள் கேட்டுக் கொண்டேன். இதைக் கேட்டால் உங்களுக்கு ஆச்சரியம் ஏற்படக்கூடும் – ஏழு வருட திருமண வாழ்க்கையில் நான் முதல்முறையாக அன்று என் மனைவியின் மீது எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. … அவள் எதையோ என்னிடமிருந்து மறைத்து வைத்திருந்தது போலத் தோன்றியது. எனக்கு முற்றிலும் சம்பந்தமில்லாத ஏதோ ஒன்று என்று தோன்றியது.  வெகு நாட்களாக காஸ்ட்டோபி போலீஸ் அவளை கண்காணித்து வந்ததாக பிறகு எனக்கு தெரியவந்தது. அவளிடம் சட்டத்துக்கு விரோதமான சில நோட்டீஸ்களும் துண்டு பிரசுரங்களும் இருந்ததாகத் தெரிய வந்தது. இவை அந்நாட்களில் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக மக்களிடையே விநியோகிக்கப்பட்டன. ஜெர்மனி அதிகாரிகளின் பார்வையில் இது மிகப்பெரிய குற்றமாகக் கருதப்பட்டது. போலீஸ் அனைத்து பொருட்களையும் என் மனைவியின் அறையிலிருந்து கைப்பற்றியது… எனக்கு இதைப் பற்றியெல்லாம் எதுவுமே தெரியாது என்பது உங்களுக்கு இந்த விஷயம் மிகுந்த ஆச்சாரத்தை அளிக்கக்கூடும். அந்த இரவுக்கு முந்திய இரவு வரை நானும் அவளும் ஒரே அறையில் தான் தூங்குவோம்… அன்பைப் பரிமாறிக் கொள்வோம். இது அறையில் அவளுடைய சில பொருட்கள் ரகசியமாக இருந்தன. அவற்றில் எனக்குப் பங்கு எதுவும் கிடையாது.  அவர்கள் என்னை விட என் மனைவியை மிக நன்றாக தெரிந்து வைத்திருந்தார்கள் என்பது உங்களுக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை? கொஞ்சம் பொறுங்கள் நான் என் கிளாஸில் உள்ள பியரை முடித்து விடுகிறேன். பிறகு நான் உங்களோடு கூட இருக்கிறேன். சற்று நேரத்தில் மூடி விடுவார்கள். அவசரம் எதுவும் இல்லை. குடிப்பதின் சந்தோஷமே ஆற அமர அவசரம் இல்லாமல் குடிப்பதில் தான் இருக்கிறது. எங்கள் மொழியில் ஒரு பழமொழி இருக்கிறது – நாம் ஆசை தீர குடிக்க வேண்டும் ஏனெனில் 100 வருடங்கள் கழிந்த பின்பு நாம் இந்த உலகில் இருக்கப் போவதில்லை… நூறு வருடங்கள்… வெகு நீண்ட காலம்… உங்களுக்கு அப்படி தோன்றவில்லையா? நம்மில் யாரேனும் இவ்வளவு காலம் வரை உயிரோடு இருக்க முடியுமா என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது.  மனிதன் உயிரோடு இருக்கிறான்; சாப்பிடுகிறான்; குடிக்கிறான்; ஒருநாள் ஃபட் என வெடிக்கிறான்! இல்லை ஐயா இறப்பு என்பது கொடூரமான விஷயம் இல்லை! லட்சக்கணக்கானோர் தினம் இறக்கிறார்கள்! நீங்கள் ஒரு தும்மல் கூப் போடுவதில்லை. பயங்கர பயங்கரமான விஷயம் என்னவென்றால் இறந்த நபர் தன்னுடைய ரகசியங்களை தன்னோடு எடுத்துக் கொண்டு சென்று விடுகிறார். நம்மால் அவரை ஒன்றும் செய்ய முடிவதில்லை. ஒருவகையில் அவர் நம்மிடமிருந்து விடுதலை பெற்று விடுகிறார். அன்றிரவு என் வீட்டில் நான் ஒரு அறையில் இருந்து இன்னொரு அறைக்கு மாறி மாறி நடந்து கொண்டே இருந்தேன். போலீசுக்கு அடுத்தபடியாக என் மனைவியின் பொருட்களை மறுபடியும் சோதித்துப் பார்த்த இரண்டாம் ஆள் நானாகத்தான் என்பது  உங்களுக்கு சிரிப்பாக இருக்கலாம்.  ஒவ்வொரு பொருளையும் மேலும் கீழுமாக புரட்டி ஆழ்ந்து சோதனை செய்தேன்.

அவள் போன பிறகு அவளும் நானும் பங்கேற்று வாழ்ந்த வாழ்க்கையின் எந்த ஒரு அடையாளத்தையும் அவள் விட்டுச் செல்லவில்ல என்பதை என்னால் நம்ப முடியவில்லை. அவளுடைய திருமண ஆடை, ஒப்பனை மேஜையின் இழுப்பறைக்குள் வைத்திருந்த, திருமணத்திற்கு முன்னால் நான் அவளுக்கு எழுதியசில கடிதங்கள்,  அவள் சேகரித்த சில இறகுகளும் கற்களும்… கவனியுங்கள் ஏழு வருட திருமண வாழ்க்கைக்குப்

பிறகு அன்றிரவு நான் அவளுடைய பொருட்களை, அவளுடைய கணவனாக இல்லாமல், போலீஸ் துறையில் வேலை செய்கிற ஒரு ரகசிய உளவாளியை போல கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன். யோசித்துப் பார்க்க பார்க்க இனி அவளிடம்  நான் எதையும் கேட்க முடியாது என்பதை என்னால் நம்ப முடியவில்லை. அவர்கள் கைகளிலிருந்து அவளால் தப்பிக்க முடியாது என்பதை நான் அறிந்திருந்தேன். அவர்கள் பிடித்துக் கொண்டு போன நபர்களில் ஒருவர் கூட திரும்பி வந்ததை நான் பார்க்கவில்லை. ஆனால் அன்று இரவு அவள் மரணத்தை மிக நெருங்கிவிட்டாள் என்கிற நினைப்பு என்னை பயமுறுத்தவில்லை. மாறாக நான் அவளைப் பற்றி முழு உண்மையையும் அறிந்து கொள்ள முடியாமல் போய்விட்டதே என்கிற எண்ணம் தான் என்னை அதிகமாக பயமுறுத்தியது. மரணம் அவளுடைய ரகசியங்களை என்றென்றைக்குமாய் பூட்டிவிடும். அப்பூட்டை திறக்க உதவுகிற எந்த ஒரு தடயத்தையும் அவள் எனக்காக விட்டுச் செல்லவில்லை. அடுத்த நாள் இரவு அவர்கள் என் வீட்டுக் கதவைத் தட்டினார்கள். நான் அவர்களை எதிர்பார்த்து தயாராக அமர்ந்திருந்தேன். அவர்கள் வருவார்கள் என்று எனக்குத் தெரியும். என் மனைவி அவர்களிடம் எல்லாவற்றையும் ஒப்புக் கொண்டிருந்தால் என்னுடைய உதவி ஒருவேளை அவர்களுக்கு தேவைப்படாமல் போயிருக்கலாம். ஆனால் என் மனைவி வாயைத் திறந்து ஒரு வார்த்தை கூட சொல்லியிருக்க மாட்டாள் என்பது எனக்குத் தெரியும். அவளது உள்ளம் எனக்கு  அறிமுகமானது அல்ல,  எனினும் அவளது பழக்கவழக்கங்களை நான் நன்கு அறிவேன். அவள் மௌனமாக இருப்பது எப்படி என்று அறிவாள்… எவ்வளவு  கொடுமையான துன்பத்தை அனுபவிக்க வேண்டியிருந்த போதிலும். இல்லை ஐயா நான் அவளுக்கு நேர்ந்த துன்பங்களை என் கண்களால் பார்க்கவில்லை. ஆனால் என்னால் ஓரளவுக்கு ஊகிக்க முடியும்.

அவர்கள் என்னிடம் கேட்ட முதல் கேள்வி மிகவும் தெளிவாக இருந்தது – நான் திருமதி……இன் கணவரா? நான் அவர்களின் இக்க கேள்விக்கு ஆம் என்று மட்டுமே பதிலளித்தேன். மற்ற கேள்விகள் என் புரிதலுக்கு அப்பாற்பட்டிருந்தன. ஆனால் அவர்கள் என்னை அவ்வளவு சீக்கிரம் விடுவதாக இல்லை. என் பதில்களை அவர்கள் கேலியாகச் சிரித்து காற்றில் பறக்க விட்டார்கள். என் மனைவியின் செயல்கள் குறித்து எனக்கு ஒன்றும் தெரியாது என்று நான் கூறிய போது, நான் என் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக அப்படி சொல்கிறேன் என அவர்கள் நினைத்தார்கள். அவர்கள் என்னை ஒரு தனி செல்லுக்கு கூட்டிச் சென்றார்கள். ஒரு வாரம் முழுவதும் இரவு பகல் ஒரே கேள்வியை வெவ்வேறு விதமாக அவர்கள் என்னிடம் கேட்டுக் கொண்டிருந்தார்கள். என் மனைவியைப் பற்றி எனக்கு என்னவெல்லாம் தெரியும்? அவள் எங்கெல்லாம் போவாள்? யாரையெல்லாம் சந்திப்பாள்? அவளுக்கு லிஃப்ட் கொடுத்த நபர் யார்? என்னிடமிருந்து எந்தவிதமான பதிலையும்  வெளியே எடுக்க அவர்கள் கையாண்ட முறைகளைப் பற்றி நான் உங்களுக்கு ஒன்றும் கூற முடியாது. நான் எவ்வளவுதான் விரிவாக விளக்கிச் சொன்னாலும் உங்களால் ஒரு மணற் துகள் அளவுக்குக் கூட அதைப் புரிந்து கொள்ள முடியாது…. நான் நினைவிழந்து கீழே விழும் வரை அவர்கள் என்னை அடித்தார்கள். ஆனால் அவர்களிடம் எல்லையற்ற தைரியமும் பொறுமையும் இருந்தது. எனக்கு நினைவு திரும்பும் வரை அவர்கள் காத்திருந்தார்கள். மறுபடியும் அதே  ‘பழைய குருடி கதவைத் திறடி’ கதை தான். மறுபடியும் அதே பழைய கேள்விகள்… அதே முடிவற்ற வன்முறைகள். என் மனைவியோடு நான் பல வருடங்கள் ஒன்றாக ஒரே வீட்டில் வசித்த போதிலும் அவளுடைய ரகசிய நடவடிக்கை குறித்து எனக்கு எதுவும் தெரியாது என்று நான் சொல்வதை அவர்கள் நம்பவில்லை.  நான் அவர்களை முட்டாள் ஆக்குவதாகவும் அவர்கள் கண்களில் மண்ணைத் தூவ முயற்சிப்பதாகவும் அவர்கள் நினைத்தார்கள். இல்லை ஐயா அவர்கள் என்னை அடித்தார்கள். அதனால் எனக்கு பெரிதாகத் துன்பம் எதுவும் ஏற்படவில்லை. அவர்களுடைய கேள்விகளுக்கு பதிலளிக்க என்னிடம் எதுவும் இல்லை என்பது தான் எனக்கு பெரிய துயரமாக இருந்தது. அவர்களிடம் சொல்ல  என்னிடம் மிகச் சாதாரணமான எல்லா மனைவிகளும் செய்கிற  குடும்பம் மற்றும் வீடு சம்பந்தப்பட்ட விஷயங்கள் மட்டுமே இருந்தன. தினசரி நிகழ்ச்சிகள் அடங்கிய வாழ்க்கையைத் தவிர அவள் வேறொரு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தாள் என்பதை என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை. …என்னிடமிருந்து விலகி என்னிலிருந்து வெளியே…. என்னைத் தொடாத – என்னோடு எந்த  விதத்திலும் சம்பந்தமற்ற ஒரு வாழ்க்கை.  அவர்கள் அவளைக் கைது செய்யவில்லை என்றால், நான் வாழ்நாள் முழுவதும் நான் அறிந்தவள் தான் என் மனைவி என்று நினைத்துக் கொண்டிருந்திருப்பேன். இது உங்களுக்கு ஒரு கேலிக்கூத்தாக தோன்றவில்லை? 

உங்களுக்குத் தெரியுமா, போர் முடிவதற்கு முன்பான கடைசி நாட்கள் அவை. கெஸ்டப்போ தங்களிடம் சிக்கியவர்களை  அத்தனை சீக்கிரம் கையிலிருந்து நழுவ விட மாட்டார்கள். .. என் மனைவி கடைசி வரை எதையும் ஒப்புக் கொள்ளவில்லை. அவர்கள் அவள் மீது நம்பிக்கை இழந்து விட்டார்கள். ஆனால் என்னை அவர்கள் ஒன்றும் தெரியாதவன் என்று நினைத்துக் கொண்டார்கள். என்னை அவர்கள் கொல்ல விரும்பவில்லை. ஆனால் மரணம் நீங்களாக ஒரு மனிதனுக்கு என்னவெல்லாம் துன்பம் இழைக்க முடியுமோ அத்தனையும் அவர்கள் செய்தார்கள். தாங்கள் சோர்வடையும் போது தான் அவர்கள் என்னை விட்டார்கள். அல்லது நான் மூர்ச்சை அடையும்போது மட்டுமே. நான் எதையும் ஒப்புக்கொள்ளவில்லை – இது கண்டிப்பாக என் வீரம் இல்லை – உண்மை என்னவென்றால் என்னிடம் ஒப்புக்கொள்ள எதுவுமே இல்லை. உங்களுக்கு தெரியுமா,  முதல் நாள் இரவு என் மனைவி அவளுடைய அறையில் இல்லாத போது எனக்கு மிகவும் வருத்தம் ஏற்பட்டது. அவள் என்னிடமிருந்து எல்லாவற்றையும் மறைத்து என்னை ஏமாற்றி விட்டாள் என்று எனக்கு அப்போது தோன்றியது. என்னுடைய மனைவியே என்னை அவளுடைய நம்பிக்கைக்கு பாத்திரமான ஆவனாக கருதவில்லை என்பது என்னை மறுபடியும் மறுபடியும் குடைந்து கொண்டடேயிருந்தது. ஆனால் பிறகு  கெஸ்டப்போவின் முன்னிலையில் நான் அளவிட முடியாத துக்கத்தையும் பொறுக்க முடியாத வலியையும் அனுபவித்த போது தான் அவள் என்னிடம் எதையும் சொல்லாமல் இருந்ததற்காக நான் அவளுக்கு நன்றிக் கடன் பட்டவனாக உணர்ந்தேன். ஒருவகையில் அவள் என்னை காப்பாற்றி இருந்தாள்.

எனக்கு என் மனைவியை பற்றிய ரகசியம் தெரிந்திருந்தால் மௌனமாய் இருப்பதற்குத் தேவையான தைரியம்  இருந்திருக்குமா என்று என்னால் இன்றும் கூட முடிவு செய்ய முடியவில்லை. யோசித்துப் பாருங்கள், என் முன்னே ஒப்புக் கொள்வதற்கான பாதை திறந்திருந்தால், என்னுடைய வேதனை எவ்வளவு அதிகமாகி இருக்கும்! வேறு வழியே இல்லாத போது நீங்கள் எப்பேர்பட்ட துன்பத்தையும் பொறுத்துக் கொள்ள முடியும். ஆனால் உங்கள் மனைவியோ தந்தையோ, தாயோ உடன் பிறந்தவரோ, யாராக இருப்பினும்,  அவர்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டு, அந்த வலியில் இருந்தும் வேதனையில் இருந்தும் ஒரே நொடியில் நீங்கள் விடுதலை பெற முடியும் என்பது உங்களுக்கு தெரிந்திருந்தால்?… அப்போது,   துன்பம் தாங்க முடிகிற  எல்லையையும் கடந்த  பிறகு,   நீங்கள் அந்த வழியை  தேர்ந்தெடுத்திருக்க மாட்டீர்கள். இதைப் பற்றி எதுவும் சொல்வது சாத்தியம் இல்லை. தேர்ந்தெடுப்பதற்கான வெளிப்படையான வாய்ப்பைவிட அதிக துயரம் நிறைந்தது வேறு எதுவும் இல்லை. முடிவெடுக்க வேண்டிய  நிர்பந்தத்திலிருந்துலிருந்து என்னை காப்பாற்றுவதற்காகவே என் மனைவி என்னிடம் எதையும் சொல்லவில்லை என்று சில சமயம் எனக்குத் தோன்றுகிறது. இங்க பாருங்கள்… காதலில் எந்தவிதமான மூடி மறைத்தாலும் இல்லை, அது கண்ணாடியைப் போல சுத்தமானது என்று பெரும்பாலனவர்களால்  அடிக்கடி கூறப்படுகிறது. 

இதைவிட பெரிய மனப்பிரமை இன்னொன்று  இருக்க முடியாது என்று எனக்குத் தோன்றுகிறது. காதலிப்பதன் பொருள் தன்னை திறப்பது மட்டுமல்ல தனக்குள் சில ரகசியங்களை பொதிந்து வைத்துக் கொள்வதன் மூலம் அடுத்தவர்களை நமக்கு நேரக்கூடிய தனிப்பட்ட அபாயங்களிலிருந்து விடுவிப்பதும் ஆகும்…. ஆணை விட அதிகமாக காதலிக்கும் வலிமை தன்னிடம் இருப்பதால் ஒவ்வொரு பெண்ணும் இதை புரிந்து கொள்கிறாள். அவளிடம் தன்னை மறைத்து வைத்துக் கொள்ளும் தைரியமும் இருக்கிறது. நீங்களும் அப்படி யோசிக்கிறீர்கள்… ஒருவேளை நான் நினைப்பது தவறாகக் கூட இருக்கலாம். ஆனால் தூக்கம் வராது தவிக்கும் இரவுகளில் இதைப்பற்றி யோசித்தால் எனக்கு சற்றே  நிம்மதி கிடைக்கிறது… விடுங்கள்… என்னால் இதைப் புரிய வைத்துக் கொண்டிருக்க முடியாது. உங்களுக்கு எதையேனும் புரிய வைத்துவிட முடியும் என்கிற நம்பிக்கையில் நான் உங்களை என் மேஜைக்கு அழைக்கவில்லை. என்ன கேட்டீர்கள்…. இல்லை ஐயா… அதற்குப் பிறகு நான் என் மனைவியை மறுபடியும் பார்க்கவில்லை. ஒருநாள் மதியம் நான் வீட்டுக்கு திரும்பி கொண்டிருக்கும்போது என்னுடைய பார்வை அந்த போஸ்டரின் மீது படிந்தது.  அந்நாட்களில் அத்தகைய போஸ்டர்களை இரண்டு மூன்று நாட்களுக்கு ஒரு முறை நகரின் சுவர்களில் ஒட்டி விட்டுப் போவார்கள். ஒவ்வொரு போஸ்டர்களிலும் முந்திய இரவு சுட்டுக் கொல்லப்பட்ட 30- 40 நபர்களின் பெயர்கள் இருக்கும். என் பார்வையை என் மனைவியின் பெயர் மீது  படிந்ததும், அந்த சின்னஞ்சிறு பேருக்கு பின்னால் என் மனைவியின் முகம் இருந்தது என்கிற எண்ணம் சில நொடிகளுக்கு எனக்கு மிகவும் விசித்திரமாக இருந்தது. நான் உங்களிடம் சொல்லி இருந்தேன் அல்லவா நீங்கள் உங்கள் கண்களால் ஒருவர் இறப்பதை பார்க்காத வரையிலும் அவர்கள் உயிருடன் இல்லை என்று உங்களுக்கு நம்பிக்கை ஏற்படுவதில்லை. ஒரு மங்கலான நம்பிக்கை உங்கள் மனதில் இருக்கிறது… நீங்கள் கதவை திறப்பீர்கள்… ஆனால்… பாருங்கள்…. நான்  மறுபடியும் சொன்னதையே சொலல ஆரம்பித்து விட்டேன். பியர் குடிப்பதால் ஏற்படும் நன்மை என்னவென்றால் நீங்கள் ஒரே வட்டத்துக்குள் இங்கும் அங்கும் சுற்றிக் கொண்டிருப்பீர்கள். ரவுண்ட் அண்ட் ரவுண்ட் ரவுண்ட் அண்ட் ரவுண்ட். நீங்கள் கிளம்புகிறீர்களா? கொஞ்சம் நில்லுங்கள். நான் என் பூனைக்காக சில சலாமித் துண்டுகளை வாங்கிக் கொள்கிறேன். பாவம் இன்னும் பசியுடனும் தாகத்துடனும் அது என்னை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும். இல்லை..வேண்டாம்… நீங்கள் என்னோடு வர வேண்டிய அவசியம் இல்லை. என் வீடு வெகு தூரம் இல்லை. நான் குடிப்பதற்கான எல்லையை நன்கு அறிவேன். நான் உங்களிடம் சொன்னேன் அல்லவா…. ஒன்றரை அங்குலம் மேலே மட்டும்.

நவீன இந்திய ஹிந்தி இலக்கியம்

ஒரு துண்டு வெயில் டெர்மினல்

Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.