- மிளகு
- மிளகு – அத்தியாயம் இரண்டு (1596)
- மிளகு – மிர்ஜான் கோட்டை
- மிளகு -அத்தியாயம் நான்கு
- மிளகு: அத்தியாயம் ஐந்து
- மிளகு – அத்தியாயம் 6
- மிளகு
- மிளகு: அத்தியாயம் எட்டு – 1999: லண்டன்
- மிளகு – அத்தியாயம் ஒன்பது – 1999 லண்டன்
- மிளகு – அத்தியாயம் பத்து – 1596 மிர்ஜான் கோட்டை
- மிளகு – அத்தியாயம் பதினொன்று
- மிளகு – அத்தியாயம் பனிரெண்டு
- மிளகு அத்தியாயம் பதின்மூன்று
- மிளகு அத்தியாயம் பதினான்கு
- மிளகு: அத்தியாயம் பதினைந்து
- மிளகு -அத்தியாயம் பதினாறு
- மிளகு – அத்தியாயம் பதினேழு
- மிளகு அத்தியாயம் பதினெட்டு
- மிளகு அத்தியாயம் பத்தொன்பது
- மிளகு – அத்தியாயம் இருபது
- மிளகு அத்தியாயம் இருபத்தொன்று
- மிளகு அத்தியாயம் இருபத்திரண்டு
- மிளகு அத்தியாயம் இருபத்திமூன்று
- மிளகு – அத்தியாயம் இருபத்துநான்கு
- மிளகு அத்தியாயம் இருபத்தைந்து
- மிளகு அத்தியாயம் இருபத்தாறு
- மிளகு – அத்தியாயம் இருபத்தேழு
- மிளகு – அத்தியாயம் இருபத்தெட்டு
- மிளகு அத்தியாயம் இருபத்தொன்பது
- மிளகு அத்தியாயம் முப்பது
- மிளகு அத்தியாயம் முப்பத்தொன்று
- மிளகு அத்தியாயம் முப்பத்திரண்டு
- மிளகு அத்தியாயம் முப்பத்திமூன்று
- மிளகு அத்தியாயம் முப்பத்தி நான்கு
- மிளகு அத்தியாயம் முப்பத்தைந்து
- மிளகு அத்தியாயம் முப்பத்தாறு
- மிளகு அத்தியாயம் முப்பத்தேழு
- மிளகு அத்தியாயம் முப்பத்தெட்டு
- மிளகு அத்தியாயம் முப்பத்தொன்பது
- மிளகு அத்தியாயம் நாற்பது
- மிளகு அத்தியாயம் நாற்பத்தொன்று
- மிளகு-அத்தியாயம் நாற்பத்திரண்டு
- மிளகு அத்தியாயம் நாற்பத்திமூன்று
- மிளகு அத்தியாயம் நாற்பத்திநான்கு
- மிளகு அத்தியாயம் நாற்பத்தைந்து
- மிளகு அத்தியாயம் நாற்பத்தாறு
- மிளகு – அத்தியாயம் நாற்பத்தேழு
- மிளகு அத்தியாயம் நாற்பத்தெட்டு
- மிளகு அத்தியாயம் நாற்பத்தொன்பது
- மிளகு அத்தியாயம் ஐம்பது
- மிளகு அத்தியாயம் ஐம்பத்தொன்று
- மிளகு – அத்தியாயம் ஐம்பத்திரெண்டு
- மிளகு-அத்தியாயம் ஐம்பத்திமூன்று
- மிளகு -அத்தியாயம் ஐம்பத்திநான்கு
- மிளகு அத்தியாயம் ஐம்பத்தாறு
- மிளகு அத்தியாயம் ஐம்பத்தேழு
- மிளகு அத்தியாயம் ஐம்பத்தெட்டு
- மிளகு :அத்தியாயம் ஐம்பத்தொன்பது
- மிளகு: அத்தியாயம் அறுபது
- மிளகு – அத்தியாயம் 61 & 62
- மிளகு அத்தியாயம் அறுபத்துமூன்று
- மிளகு அத்தியாயம் அறுபத்துநான்கு
- மிளகு அத்தியாயம் அறுபத்தைந்து
- மிளகு அத்தியாயம் அறுபத்தாறு
- மிளகு அத்தியாயம் அறுபத்தேழு
- மிளகு அத்தியாயம் அறுபத்தெட்டு
- மிளகு அத்தியாயம் அறுபத்தொன்பது
- மிளகு அத்தியாயம் எழுபது
- மிளகு அத்தியாயம் எழுபத்தொன்று
- மிளகு – அத்தியாயம் எழுபத்திரண்டு
- மிளகு அத்தியாயம் எழுபத்திமூன்று
- மிளகு அத்தியாயம் எழுபத்து நான்கு
- மிளகு அத்தியாயம் எழுபத்தைந்து
- மிளகு அத்தியாயம் எழுபத்தாறு
- மிளகு அத்தியாயம் எழுபத்தேழு
- மிளகு அத்தியாயம் எழுபத்தெட்டு
- மிளகு அத்தியாயம் எழுபத்தொன்பது
- மிளகு அத்தியாயம் எண்பது
- மிளகு அத்தியாயம் எண்பத்தொன்று
- மிளகு – அத்தியாயம் எண்பத்திரண்டு
- மிளகு – அத்தியாயம் – எண்பத்திமூன்று
- மிளகு – அத்தியாயம் 84 எண்பத்தி நான்கு
- மிளகு – அத்தியாயம் 85
- மிளகு – அத்தியாயம் 86
- மிளகு – அத்தியாயம் 87
- மிளகு – அத்தியாயம் 88
- மிளகு – அத்தியாயம் 89 – பின்கதை
ஹொன்னாவர், ஜெருஸோப்பா 1605
ஹொன்னாவர் அக்ரஹாரத்தில் ஆண்கள் யாரும் தட்டுப்படாத காலை நேரம் அது.
பிறந்து மருத்துவச்சி கையில் விழுந்த சிசுவுக்கு காலுக்கு நடுவே குஞ்சாமணி தட்டுப்பட்டால், சுபஸ்ய சீக்கிரம் என்றபடி, கூடிய சீக்கிரம் சுபமுகூர்த்தத்தில் காது குத்தல், நாமகரணம், சோறூண், அப்புறம் பூணூல் கல்யாணம்.
முப்புரி நூல் அணிந்த பய்யன்கள் வேத அத்தியாயனம் செய்து கொண்டிருக்கும்போதே வாழ்க்கைக்கு அவசியமான மந்திரங்களை ஓதப் பயிற்சியோடு, சடங்குகளை நிறைவேற்றித் தரவும் பயிற்சி அளிக்கப்படுவர்.
உதாரணமாக காதுகுத்தலையே எடுத்துக் கொள்ளலாம். எளிமையான சடங்கு, சின்னக் குழந்தையோடு பெற்றோர் வந்து உட்கார்ந்தால் பத்து நிமிஷத்தில் மங்கலகரமாக நிறைவேறிவிடும் என்று தோன்றலாம். அப்படி இல்லை.
குட்டி வாத்தியாருக்கு, என்றால் சாஸ்திரம் படிக்கும் சாஸ்திரிப் பையனுக்கு, பஞ்சாங்கம் பார்க்கத் தெரிந்திருக்க வேண்டும். நாள், நட்சத்திரம், திதி இவற்றோடு, ’ஆத்துக்காரி ஆத்துலே இருக்க மாட்டா’, என்றால் மாதவிலக்கு நாட்கள், எல்லாம் கருத்தில் கொண்டு சுபநிகழ்ச்சிக்கு நாளும், நேரமும் தீர்மானித்து அறிவிக்க வேண்டும்.
கிரஹஸ்தன் என்ன எல்லாம் தயாராக வைத்திருக்க வேண்டும் என்று மஞ்சள் முதல் தேன் வரை பட்டியல் ஒப்பித்து, எழுதுவித்துத் தர வேண்டும். குறிப்பிட்ட நாளில், பவித்ரம், வீபுதி மட்டை, கூடுதல் பூணூல் சகிதம் கிரஹஸ்தனின் இல்லத்தில் வந்து சேரும்போது குழந்தைக்கு காது குத்து ஆகவே முக்கிய பிரஜை அந்தக் குழந்தைதான். குழந்தையாச்சா, அது இன்னும் எழுந்திருந்திருக்காது. அல்லது தொட்டிலில் சிறுநீர் கழித்து உடம்பு மினுமினுக்கக் கிடந்து சிரிக்கக் கூடும்.
வாத்தியாரையும் வைத்தியரையும் பார்த்து சிரிக்கும் சிசுக்கள் ரொம்ப அபூர்வம். கூடவே வந்த தன் சொந்த தாயார், தகப்பனாரை அடையாளம் கண்டு அந்தச் சிரிப்பு.
குழந்தைக்கு வென்னீரில் வெதுவெதுவென்று நாலு சொம்பு ஊற்றி குளியல். புத்தாடை அணிவித்தல் எல்லாம் கழித்து அப்பா அம்மா அருகருகே உட்கார பின்னால் மற்றவர்கள் நிற்க பூ மாலையோடு குழந்தையை தாய்மாமன் மடியில் இருத்துவதற்குள் இன்னொரு வாத்தியார் துணையோடு, அவர் கிரஹஸ்தராக இருந்தால் விசேஷம், கணபதி ஹோமம் செய்து முடித்து விட வேண்டும்.
சமையலறையில் பாயசமோ வேறே எதுவோ செய்ய வேண்டும் என்றால் செய்து வைத்திருக்க உள்ளே வரும்போதே நினைவூட்ட வேண்டும். ஆயுஷ்ஹோமம் என்று சிசுவின் ஆரோக்கியத்துக்கும் தீர்க்க ஆயுளுக்கும் வேண்டி இன்னொரு வாத்தியாரோடு ஹோமம் வளர்க்க வைத்து மந்திரம் எல்லாம், எதுவும் தவறாமல் சொல்லி நாமகரணம் அறிவிக்க வேண்டும்.
குழந்தைக்கு உறவில் ஆளுக்கொரு நாமம் சூட்ட எல்லாவற்றையும் உரக்கச் சொல்லி வாழ்த்தி அடுத்த பெயரை செவியோர்க்க வேண்டும்.
அது முடிந்து நகையாசாரி வரக் காத்திருக்க வேண்டும். குழந்தை காதில் துளைத்து, அது பரிதாபமாக அழுதபடி கையில் பிடித்த லட்டு உருண்டையில் கண்ணீர் விழுந்திருக்க அம்மா மடியில் படுத்துக் கொள்ள, அப்படியே உறங்கி இருக்க, மீதி மந்திரங்கள் சொல்லி முடிக்க வேண்டும்.
உறவினர்கள் பட்டுப் பாவாடையில் இருந்து கால் பவுனில் மோதிரம், மரப்பாச்சி பொம்மை வரை அன்பளிக்க, ஒவ்வொன்றையும் ஆயிரம் கட்டி வராகன் என்று பெருமதிப்பாக்கி மந்திரம் சொல்லி, விழித்திருந்தால், குழந்தை கையில் கொடுத்து வாங்கக் காத்திருந்து ஆரத்தி எடுக்கச் சொல்லி அதுவும் முடிந்து ’ரொம்ப சந்தோஷம்’ அறிவித்து சம்பாவனை வாங்கிப் புறப்பட வேண்டும்.
இருப்பதிலேயே குறைவான சடங்கு சம்பிரதாயம் கொண்ட சிசுவுக்கு நாமகரணம், பெயர் சூட்டலுக்கு இந்த கிரமம் என்றால், கல்யாணத்துக்கெல்லாம் எவ்வளவு செய்ய வேண்டியிருக்கும். இது ஜீவனோபாயத்துக்கான மந்திரங்களை மனனம் செய்திருந்தாலே கிரமமாக நடைபெறும்.
இவை தவிர வேத பாடசாலையில் ரிக், யஜூர், சாம வேதங்களை, ருத்ரம், சமகம், விஷ்ணு சகஸ்ரநாமம் போன்ற துதிகளை காணாப்பாடமாகப் படிக்கவும் கணீரென்ற ஸ்பஷ்டமான குரலில் ஏற்ற இறக்கங்களோடு சொல்லவும் கற்க வேண்டும்.
இதெல்லாம் பையன்களுக்கும் மீசை தாடி அரும்பத் தொடங்கி இருக்கும் குட்டி பிரம்மசாரிகளுக்கும் மட்டும் தான். பெண்கள் பாவாடையை அள்ளிச் செருகிக் கொண்டு பாண்டியாட்டம், பொம்மைக் கல்யாணம், கும்மி, கோலாட்டம், பல்லாங்குழி, எண்சுவடி.
அந்தப் பெண்டுகள் வயசுக்கு வரும்போது திரண்டுகுளி, கல்யாணத்தில் கன்யாதானம், சீமந்தம், மங்கலிப் பெண்டு என்ற சுமங்கிலிப் பிரார்த்தனை இப்படி ஒரு சில கொண்டாட்டங்கள் இருந்தாலும், அதிலெல்லாம் மந்திர உச்சாடனம் இருந்தால் அதை ஆண்கள் தான் நிர்வகிக்க வேண்டும்.
ஒவ்வொரு மனையிலும் இருக்கப்பட்ட ஆண்கள் கிட்டத்தட்ட பிரதி தினமும், காலை ஏழிலிருந்து பிற்பகல் அல்லது சாயந்திரம் வரை காணாமல், முப்பது கல் சுற்றளவில் ஏதாவது கிரஹத்தில் மங்கலமான, அல்லாத சடங்கு நிறைவேற்றித்தரப் போயிருப்பதால், அக்ரஹாரத்தில் ஆண் மூச்சு ஆகக் குறைவாகவே இருக்கும்.
எழுபது வயதில் ஓய்வு பெற்ற சாஸ்திரிகள் கூட குரல் நடுங்காமல் ஸ்பஷ்டமாக எழும் வரை வேதபாடசாலையில் பாடம் நடத்தப் போய் விடுவார்கள் பெரும்பாலும்.
வாரம் ஏழு நாள், மாதத்துக்கு ஒரு சுக்ல பட்சம், ஒரு கிருஷ்ண பட்சம், வருஷம் முன்னூற்று அறுபது நாள் என்று அக்ரஹாரத்து ஆண்கள் பரபரப்பாக இருப்பார்கள்.
அவற்றில் ஒரு நாள் இது.
வழக்கமான ஆண்வாடை இல்லாத அமைதி. அதைக் கிழித்துக்கொண்டு ஒலிக்கும் குரல். தொடர்ந்து சிரிப்பு. ராம ராயர் சொல்கிறார் – அக்ரஹாரம்னா ஆண்வாடை பகல்லே இருக்காதுங்கறதை நாம ரெண்டு பேரும் பொய்யாக்கறோம். கேளுங்கோ சிவராம பட்டரே.
இன்று, ராம ராயர் சீமந்தக் கல்யாணம் ஒன்று, நாமகரணம் என்று இரண்டு நிகழ்ச்சிகளில் பிரதான புரோகிதராக இருந்து நடத்தித்தர வேண்டும். அவருடைய அம்மா வழி தொண்ணூறு வயசு உறவினர் ஒருத்தர் திடீரென்று பிராய முதிர்வால் நாலு நாள் முன் இறந்துபோக, இன்னும் ஒரு வாரத்துக்கு ராம ராயருக்கு தாயாதி தீட்டு.
சிவராம பட்டருக்கு வேறே மாதிரி தீட்டு. கல்யாணம் கழித்து எட்டு வருஷம் கழித்து அவருடைய அகத்துக்காரி பரசுராம விக்ரகம் போல ஒரு சிசுவைப் போனவாரம் பெற்றெடுக்க, சிவராம பட்டர் நாளை நாமகரணம் வரை தீட்டு. எல்லா சிசுவும் கிருஷ்ண விக்ரகம். இந்தக் குழந்தை சிரிக்கவே சிரிக்கமாட்டேன் என்கிறதாம். அதனால் பரசுராம விக்ரகமாம்.
ஆக இரண்டு தீட்டு வாத்தியார்களும் காலைப் பசியாறி வாசல் திண்ணையில் உட்கார்ந்து விஸ்தாரமாக வெற்றிலை போட்டு, சகல வம்பையும் பேசித் தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள். வீட்டு வம்பு, தெரு வம்பு, அடுத்த தெரு வம்பு என்று அடுக்கடுக்காக அலசி அரசியலுக்கு வந்திருக்கிறார்கள் இருவரும்.
ஜெருஸோப்பாவின் விசுவாசமான பிரஜைகள் அவர்கள். சென்னபைரதேவி மிளகு ராணி மேல் மதிப்பும் பிரியமும் வைத்திருக்கிறவர்கள். என்றாலும் இப்போது சென்னா ராஜாங்கத்தில் அலுப்பு தோன்ற ஆரம்பித்திருக்கிறது இரண்டு பேருக்கும்.
அறுபது வயதுக்கு மேலாகி விட்டதே, இன்னும் ராணியாக இருந்தாகணுமா?
சமணனும் சைவனும் புதுசாக வந்த கிறிஸ்துவனும் நாள் முழுக்க சண்டை போட்டுண்டிருக்க இந்தம்மா ஊர் முழுக்க சிவன் கோவில், சமண பஸ்தி என்று கட்டிண்டே போக என்ன அவசியம்?
மிளகு போர்த்துகலுக்கு விற்று வந்த தங்கம் தங்கமான வருமானத்தை எல்லாம் இப்படி கட்டிடம் கட்டி, ஊதாரித்தனமா செலவு செய்யணுமா?
வைதீகர்கள் சாயந்திரம் பம்மிப் பம்மி சாயந்திரங்களில் ஷெராவதி ஆற்றங்கரையில் சந்தியாவந்தனம் செய்யக் குழுமும்போது தலைநீட்டும் சமாசாரம் தான் இது. இங்கே வீட்டுத் திண்ணையில் கூடுதல் சுதந்திரமாக அலசலாம். அலசிக் கொண்டிருக்கிறார்கள்.
ராம ராயர் அடுத்த வெற்றிலையை மடியில் ஈரம் துடைத்து விட்டு உடைத்த பாக்கும் குல்கந்துமாக மேலே வைத்துச் சுருட்டி வாயில் இட்டுக்கொண்டு அந்த தெய்வீக ருசியையும் பேரானந்தத்தையும் ஒரு வினாடி அமைதியாகக் கண்மூடி ரசிக்கிறார். உடனே பேச ஆரம்பிக்கிறார் –
பட்டரே, ஏன் கேக்கறீர், மிந்தி எல்லாம் மிர்ஜான் கோட்டைக்குள்ளே சிவாச்சாரியார்களோ, வைஷ்ணவ, மாத்வ பெரியவாளோ எப்போவாவது வந்திருந்து அகண்டநாம ஜெபம், பஜனை இப்படி ஏதாவது நடத்தி மழை வருதான்னு பார்ப்பா. சில சமயம் வரும், சில சமயம் அடுத்த வாரமோ அடுத்த மாசமோ சௌகரியம் போல வரும்.
இப்போ சென்னா மகாராணிக்கு எல்லாமே அவசரம். சங்கராசார்யர் சமகம் சொல்லி பராசக்தி பூஜை பண்ணி உபன்யாசம் செஞ்சா உடனே மழை வரணும். ராமானுஜ தாத்தாசாரியார் சகஸ்ரகோடி நாம அர்ச்சனை பண்ணினா, அடுத்த ஷணம் வெட்டுக்கிளி உபத்ரவம் நீங்கி அதுகள் தாமே சமுத்திரத்திலே விழுந்து ஆத்மஹத்ய பண்ணிக்கணும். பாலிமர் மடத்து மத்வ சுவாமிகள் வந்து ஆசிர்வதிச்ச அடுத்த நிமிஷம் உபரியாக கொட்டற மழை உடனே நிக்கணும். ஜுரம் வந்து படுத்தவா எல்லாருக்கும் உடனே குணமாகணும்.
ஆமா, பொறுமைங்கறதே கிடையாது பட்டரே
இதெல்லாம் நடக்கலேன்னா அவாளை நமஸ்கரிச்சு அனுப்பி வச்சுட்டு, அம்மணக்குண்டி அருக சாமிகளை உடனே கூப்பிட்டு உட்கார்த்தி அவா தர்மப்படி பூஜிக்கச் சொல்ல வேண்டியது. அவாளோ, பயிர் பண்ணாதே கிருமிக்கு சாப்பாடு கிடைக்காமல் போகும், தலையிலே தண்ணி விட்டுண்டு குளிக்காதே, தலையிலே இருக்கற பேன் எல்லாம் அநியாயமா செத்துப் போகும், ராத்திரியிலே சாப்பிடாதே. புழு பூச்சி வயித்துக்கு உள்ளே போய் ஆகாரமாயிடும். கல்லை எடுத்து நாயை அடிக்காதே. கல்லுக்கும் வலிக்கும், நாய்க்கும் வலிக்கும். இப்படி அதிவிசித்திரமாக ஏதாவது சொல்லிட்டு ஆகாசத்தை பார்த்தா, அவா அதிருஷ்டம், ஒரு நிமிஷம் கழிச்சு சடசடன்னு நாலு தூத்தல் போட்டு மழையா வலுத்துடும் ஒரு நாள்.
அந்த நக்னமுனி தான் மழையக் கொண்டு வந்தார்னு அவரை எங்கேயோ தொட்டுத் தொட்டு கண்ணிலே ஒத்திண்டு ஆனந்த பாஷ்பம், இதெல்லாம் தேவையா? நக்ன முனி மழையை உண்டாக்கறானா, நீர் பிரிய வேணும்னா செய்வான் எல்லோரும் பாத்துண்டிருக்கறச்சே.
அது அல்பசங்கையிலே முடியாது அண்ணா, ஒடனே இருக்கப்பட்ட எட்டூர் பட்டி தொட்டியிலே இதுவரை அருகன் கோவில் அருக பஸ்தி கட்டியிருக்கலியா, இப்போ கட்டலாம்னு பணம் கொடுத்துடுவா. ஒரு வருஷமா அந்த அப்பக்காளும் இந்த சென்னா ராணியும் கூட்டு சேர்ந்து அம்மண சமணன்களை கொண்டாடறா. அப்படி கொண்டாடறா, ஏன் கேக்கறேள்.
நாட்டில் வீதி குண்டும் குழியுமா இருக்கு. குடிதண்ணீர்லே சாக்கடை கலக்கறதாலே வயிறு உப்புசம் கண்டு சிலபேர் கைலாச யாத்திரை. ராத்திரி தெருவிலே ஏத்தி வைக்க விளக்கு கிடையாது. அதுக்கெல்லாம் யார் கவலைப் படறா? மிளகு விளைஞ்சா போதும். அரிசி இல்லேன்னா மிளகைப் பொங்கித் தின்னுன்னு விவஸ்தையில்லாமே ஆலோசனை சொல்றாளாம்.
ஆமா, போன வாரம் கோகர்ணத்துலே ஒரு ஒட்டனும், பிராமணனும் அவா அவா குடும்பத்தோட கோட்டைக்கு வந்து அங்கே வளர்ந்திருக்கற புல்லைத் தின்ன ஆரம்பிச்சு ஏக களேபரமாயிடுத்தாம்.
ராணி ஹொன்னாவர் பஸ்தி தரை எப்படி போட்டிருக்குன்னு சோதனை செய்யறதிலே மும்முரமா இருக்க, இவா சத்தம் இங்கே. யார் காதுலே அது விழணுமோ அவா காதுலே விழல்லே.
நஞ்சுண்டய்யா பிரதானி அவராத்தானோ, ராணி சொல்லியோ, அப்புறம் கோட்டை போஜனசாலையிலே இருந்து ஆளுக்கு ஒரு மூட்டை அரிசியும், உப்பு, மிளகு, பருப்பும் கொடுத்து அனுப்பிச்சாராம்.
பாத்துண்டே இரும், ஒரு நாள் இல்லே ஒரு நாள் இன்னும் நூறு பேர் இப்படி குடும்பம் குடும்பமா புல்லு தின்ன வந்து கோட்டைக்குள்ளே உக்காந்துடுவா. அப்போ அரிசி கிடைக்காது அவாளுக்கு. பேஷா இந்த பிரதேசத்துலே எங்கே இருக்கோ புல்லு எல்லாத்தையும் சாப்பிட்டுக்க வேண்டியது அது தீர்ந்து மொட்டையாப் போனா, உள்ளே வந்து தோட்டத்திலே மல்லிகைக் கொடி, ரோசா பூச்செடி, அவரைக் கொடி, வேப்ப மரம்னு விதம்விதமா சாப்பிட்டு போங்கோன்னு சொன்னாலும் சொல்லிடுவா.
என்ன தான் சொல்லும் பட்டரே, முப்பது வருஷம் முந்தி ஜனங்களுக்காக ராஜாங்கம்னு சொல்லி முடி சூட்டிண்டா நம்ம மகாராணி. இப்போ ராஜாங்கம் இல்லே. ஜனங்களும் இங்கே இன்னும் இருக்கறதா, வேறே எங்கேயாவது மூட்டை முடிச்சோட கிளம்பறதான்னு யோஜிக்க ஆரம்பிச்சதா தெரியறது.
பட்டரே, அப்புறம் அந்த மிட்டாய்க்கடை ஆமா, அந்த நாத்தம் பிடிச்ச தேவடியா மதுரம் மதுரம் மதுராதிபதேன்னு தித்திப்பு பட்சணம் பண்ணி, எல்லாத்தையும் காட்டி விக்கறதுக்கு புதுசு புதுசாக் கடை திறக்க, பணம் கோட்டையிலே இருந்துதான் முதல் போட்டு வர்றதாம். அந்த ரோகிணி சென்னாவோட ஸ்தூல பிரதிநிதியாம். மிளகு விற்ற காசை வச்சு தித்திப்பு பலகாரம் பண்ணி வித்து ஒரு வராகன் பத்து வராகனாக ராணியும் அந்த மேனாமினுக்கியும் கூட்டுலே பிரிச்செடுத்துப்பாளாம்.
இரு வாயைக் கழுவிண்டு வரேன். அசிங்கமானதெல்லாம் பேசியாச்சு.
பேசியாச்சு அண்ணா, எதுக்கும் குரலை கொஞ்சம் குறைச்சுக்குங்கோ. கோட்டை உத்தியோகஸ்தன் யாரு, மறைமுக உத்தியோகஸ்தன் யாருன்னே தெரியலே.
நான் கோட்டையிலே வேலை பார்க்கலே பட்டரே.
நானும் தான் ராயரே.
வைத்தியன் அப்படீன்னா, மூலிகை எடுத்து வஸ்திரகாயம் பண்ணிண்டு, தைலம் காய்ச்சிண்டு இருப்பான் மத்த பிரதேசத்துலே. ஒழிஞ்ச நேரத்திலே பொச்சு வித்தா உப்பு புளிக்கு ஆகும்கற பழஞ்சொல் இருக்கே, அப்படி இங்கே அவன் ஒழிஞ்ச நேரத்துலே துப்பு துலக்கற ஒற்றனா இருக்கானாம். அவன் பொண்டாட்டி மகாராணிக்கு தாதின்னு போடற ஆட்டத்துக்கு அளவே இல்லையாம்.
இதெல்லாம் சென்னாவா செய்ய மாட்டா அண்ணா. அவ ரொம்ப நல்லவ. சாது வேறே. அந்த அப்பக்காவோ, கிறுக்கு வேஷம் போடற அவாத்துக்காரன் வீரநரசிம்மனோ அவ மனசைக் கெடுக்கறாளாம்.
பெத்ரோ துரை இருக்காரே, போர்த்துகல் ராஜ பிரதிநிதி அவருக்கு மிர்ஜான் கோட்டையிலே இருக்கப்பட்ட செல்வாக்கு, விஜயநகர பிரதிநிதி ஹனுமந்த ராயக் கிழடுக்குக் கூட அங்கே இல்லையாம். யார் கண்டா இவா வேறே என்ன மாதிரி ஒருத்தொருக்கொருத்தர் பட்சமா இருக்காளோ. வயசானா சிலபேருக்கு விபரீத ஆசை எல்லாம் திரும்ப வந்துடுமாம்.
அதெல்லாம் சரி, இந்த ராஜகுமாரன் நேமிநாதன். அவன் அலாதி குசும்பனாமே. அந்த மிட்டாய்கார தேவிடியாளோட சேர்ந்து ஊரைக் கொள்ளை அடிக்கத்தான் தீர்மானம் பண்ணி இறங்கியிருக்கானாம்.
இல்லேப்பா இந்த ஊழல் சாம்ராஜ்யத்திலே ஸ்வயம் யோஜனையோடு தேசம் ஷேமமா இருக்க நான் சுமைதலை எடுத்துக்கறேன்னு சின்ன வயசுலே ஒருத்தன் தைரியமா முன்னாலே வந்தா, அவனுக்கு நம்ம ஆதரவை கண்ணை மூடிண்டு கொடுக்கலாம். இப்ப இருக்கறதைவிட எதுவும் மோசமாகப் போகப்போறது இல்லே, என்ன சொல்றேள்?
ஆயிரத்துலே ஒரு வார்த்தை, ஆனா, அந்த மிட்டாய்க்கடைக்காரி?
அவளுக்கென்ன? திம்சுகட்டை மாதிரி வடிவா, நன்னாத்தான் இருக்கா
பார்த்துண்டே இரும் இன்னும் ரெண்டு மாசத்திலே ஒண்ணு இவன் அவளை துணியைக் கிழிச்சு தொரத்தி விட்டுடுவான். இல்லியோ அவ இவனை தொரத்தி விட்டுடுவா.
எனக்கு என்னமோ கிழவியை தொரத்தறது தான் நடக்கப் போறதுன்னு தோணறது. நேமி ராஜாவா வரட்டும். கிழவி இத்தனை வருஷம் மிளகு வித்து பசதி கட்டினது போறும். கொஞ்சம் ஓய்வெடுத்துக்கட்டும். தத்துப் பிள்ளைன்னாலும் சத்துப் பிள்ளையாக்கும்.
சரிதான் அண்ணா இதெல்லாம் அதுவாகவே நடந்துடுமா?
அதெப்படி தானா நடக்கும்? கலகம் பிறந்தாத்தான் நியாயம் பிறக்கும்.
கலகம்னா ராமராயரண்ணா, நாமும் ஆயுதம் எடுத்துண்டு யுத்தம் பண்ணனுமா? நமக்கு வேதமும் சம்பிரதாய மந்திரங்களும் தான் சொல்லிக் கொடுத்திருக்கா பெரியவா. இதை வச்சுண்டு வாள் ஓங்க முடியாது.
அது இருக்கட்டும். இங்கே இருக்கப்பட்ட, விஜயநகரத்துக்கு ஐம்பதும் நூறும் கப்பம் கட்டற ராஜ்ஜியங்கள் அதாவது நம்ம ஜெருஸொப்பா, உள்ளால், பனகுடி, கெலடி, பில்ஜி இப்படி சின்னச் சின்னதா இருக்கற ராஜ்யம் ஒவ்வொண்ணுக்கும் மிஞ்சிப் போனால் நூறு பேர் ராணுவம்னு சொல்லிண்டு இருப்பா. அவா யுத்தம்னு மோதறது ஊர் கம்மாய்க்கரை தகராறு மாதிரி இருக்கும்.
நல்ல உதாரணம் சொல்லணும்னா, ஊர்த் திருவிழாவிலே ரெண்டு கட்சி கட்டி மல்யுத்தம், கயறு இழுக்கறதுன்னு மோதி ஜெயிக்கறவாளுக்கு பணம், சேவல், கோழி. அரிசி, கோதுமைன்னு தர்ற மாதிரி நம்ம பிரதேச யுத்தம் அந்தப் பக்கம் இருநூறு பேர் இந்தப் பக்கம் இருநூறு பேர் மோதறதா இருக்கும்.
அதிலே ஜெயிச்சா ஆளற உரிமை ஒண்ணு கையை விட்டுப் போகும், இல்லேன்னா புதுசா வந்து சேரும்.
விஜயநகர சாம்ராஜ்யத்துக்கு இங்கே ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் ஒரு வித்தியாசமும் தட்டுப்படப் போறதில்லே. அவாளே கவிழ்ந்து படுத்து ஒரு மாமாங்கம் ஆறது. எழுந்திருக்கற வழியை காணோம்.
ஆக ஒரு யுத்தம், ஒரு நாள், அரை நாள், ரெண்டு மணி நேரத்திலே முடிஞ்சு உடமை கை மாறினாலும் சண்டை சண்டைதான். பெரிய யுத்தங்கள் மாதிரி, சுல்தானிய ராஜாங்கங்கள் கூட்டு சேர்ந்து விஜயநகர ராஜதானி மேலே படையெடுத்து வந்து மஹாராஜா அளியராயனை தலைக்கோட்டையிலே சிரச்சேதம் பண்ணி, அவா படையிலே ஆயிரம் பேரையும் கொன்னாளே, அப்படி இந்த உள்ளூர் யுத்தத்திலும் தடியெடுத்தவன் தண்டல்காரன் ஆறதாலே யுத்த பூமியிலே தலை நிறைய உருள வாய்ப்பு இருக்கு.
யுத்த பூமின்னு எல்லாம் சொல்லி பயமுறுத்தாதீங்கோ. வயத்தைக் கலக்கறது
நெருப்புன்னு சொன்னா வாய் வெந்துடுமா என்ன? யுத்தம்னு சொன்னா அடிச்சுக்கோ குத்திக்கோன்னு ஆரம்பமாயிடுமா என்ன? அப்புறம் இன்னொண்ணு, ரெண்டு தரப்புலேயும் ஆதரவு தர்றதா அண்டை அயலில் இருக்கப்பட்ட மற்ற ராஜ்ஜியங்கள் சேர்ந்துண்டா, யுத்தம் வலுக்க சந்தர்ப்பம் இருக்கு.
எப்படி இருந்தாலும், சண்டைக்கு அரிவாளை தூக்கிண்டு போறவன் மட்டுமில்லே நம்மை மாதிரி ஓரத்துலே நின்னு வேடிக்கை பார்க்கறவனும் கூடத்தான் உயிரைவிட வேண்டி வரலாம். கவனிக்கணும். வரும்னு சொல்லலே. அண்ணா இங்கே யுத்தம் வருமா வராதா?
வரலாம். வராமலும் இருக்கலாம். அம்மாவும் பிள்ளையும் ஆத்துக்குள்லே சண்டை போடற மாதிரித்தான் அடிச்சுப்பா, கூடிப்பா. என்ன ஆகுமோ தெரியலை.
அப்படி சண்டை வந்தா?
சண்டை வந்தா வர்ற மாதிரி சூசனை தட்டுப்பட்டா ஊரைக் காலி பண்ணிட்டு பெனுகொண்டா, மதுரை, மைசூரு, கோழிக்கோடுன்னு ஓடி ரட்சைப்பட பலபேரும் தயாராகிண்டிருக்கா தெரியுமா?
ராமராயர் அத்தனை வெற்றிலையையும் மென்று விட்டு கிள்ளிப் போட்டிருந்த வெற்றிலைக் காம்புகளை அடுத்து எடுத்து செல்லமாகப் பார்த்தபடி வாயில் போட்டுக்கொண்டார்.
அது இல்லே, ராமராயரே. மகாராணிக்கு அடுத்தபடி ஹேஷ்யம், ஆருடம், ஊகம் எல்லாம் அற்புதமா வாய்க்கப்பட்டவர், வியாகரணப்புலி வேறே.
யாரைச் சொல்றீர் என்றபடி குடுமியை அவிழ்த்து முடிந்து கொண்டார் ராம ராயர்.
உம்மைத்தான் ராமராயரே என்று சிவராம பட்டர் சொல்ல ராமராயர் புளகாங்கிதம் அடைந்தது நிஜம்.
ஜெருஸோப்பா சின்ன ராஜ்ஜியம் தான். ஆனா பாருங்கோ இங்கே ஜெருஸோப்பாவில் ஒரு மாதிரி, ஹொன்னாவர்லே இன்னொரு மாதிரி பொதுஜன அபிப்ராயம் இருக்கறதா தெரியறது. ஹொன்னாவர்லே இங்கே கலவரம் வராதுன்னு சொல்றா. நன்னா சகல விதத்திலேயும் முன்னேறி காசு பணம் ஆட்ட பாட்டம்னு எல்லாம் நிறைஞ்சிருக்கு ஹொன்னாவர். இதை இடிச்சு உடைக்கணும்னா மேற்கு பார்த்து தொழுகிறவா தான் அதைப் பண்ண வரணும். அவா இந்த தகராற்றிலே இல்லே. கூடச் சேரக்கூட இல்லே யாரோடயும். இனியும் வர மாட்டா. சென்னாவும் வலுச்சண்டைக்குப் போகிற வர்க்கம் இல்லே.
நீங்க சொல்றேள் அண்ணா, கோழிக்கோட்டிலே சாமுத்ரி நீ வா, குஞ்சாலி மரைக்காயா நீ வான்னு கூட்டத்தை சேர்த்துண்டு சண்டை போட்டுத்தானே ரொம்ப நாளுக்கு ரொம்ப நாள் முந்தி சென்னா போர்த்துகீசுகாரனை அடிச்சு விரட்டினா.
அது இல்லேங்காணும் இப்போ நிலைமை. அது சமுத்திரத்திலே கப்பல், பெரிய படகு வச்சு போர்த்துகல்லோடு மோதி ஜெயிச்ச காலம்.
இது தரையிலே வரக்கூடிய யுத்தம். இப்போ போர்த்துகல்லும் ஜெருஸோப்பாவும் நல்ல சிநேகிதத்திலே இருக்கப்பட்டவா. குஞ்சாலி மரைக்காயர் மாப்ளைப்படை சமுத்திரத்திலே ரொம்ப செயலா இருக்கு. கோழிக்கோட்டு சாமரின், சென்னா, அப்பக்கா, மாப்ளையார் எல்லாம் ஒரே பக்கம் தான்.
அப்போ எதிர்த்தரப்பிலே யார் இருக்கப் போறா?
அதுதான் தெளிவா தெரியலே.
ஆக ஹொன்னாவரிலே யுத்தம் வர்றதப் பற்றி அவ்வளவா கவலைப்பட்டுக்கலே. ஜெரொஸுப்பாவிலே நிலைமை எப்படி?
யுத்தம் கட்டாயம் இன்னும் ரெண்டு மாசத்திலே வந்துடும்னு நம்பறா அவா. தெருவிலே காய்கறி விக்கறவன், வீடு கூட்டற பெண், கல்லை உடைச்சு கட்டடம் கட்டறவா, தெருவிலே புட்டும் கடலை சுண்டலும் விக்கறவா, சர்க்கார் உத்தியோகஸ்தன் இப்படி சாமான்ய ஜனங்கள் சண்டை வரும்னு எதிர்பார்க்கறா.
அவா எல்லாம் ஸ்வாமிக்கு பயந்தவா. ஆனா கோவில், பசதின்னு செலவு பண்ணி மத்தபடி ஊரை கவனிக்காம விட்டதா ராணியம்மா மேலே கோபம்.
சண்டை வரட்டும் நியாயம் ஜெயிக்கட்டும்கிறா அவா எல்லாரும். கடந்த நாலு மாசமா அவா எல்லாம் சொத்தை எல்லாம் தங்கமா மாத்தி எடுத்துண்டு போய் உடுப்பி, உள்ளால், மங்கலாபுரத்துலே பத்திரமா வச்சுட்டா. வீட்டை என்ன பண்றது? அதை எடுத்துண்டா போக முடியும்? அப்புறம் ஒண்ணு. நம்ப மாட்டேள்.
சொன்னாத்தானே நம்பறதும் மத்ததும் பார்க்கலாம் ராயரண்ணா?
ஒரு வேளை யுத்தத்திலே தோற்றுப் போய் வெளியூருக்கு குடிபெயர வேண்டி வந்தா வரலாம். அப்போ ஜெயிச்ச படைகள் வீடு வீடாகத் தேடிப்போய் காசு பணம் விலையுயர்ந்த பொருள் எதாவது இருக்கான்னு கொள்ளையடிக்கப் போவா. வீடு நன்னா இருந்தா அவனவன் அங்கேயே குடியிருப்பை மாத்திக்கக் கூடும். ஜெருஸோப்பா வீடு எல்லாம் களிமண் பூமிங்கறதாலே சோறு வட்டையிலே வார்த்த மாதிரி ஒண்ணுக்கும் மத்ததுக்கும் வித்தியாசமே தெரியாது. ரொம்ப எளிசான கட்டிடம் எல்லாம். இருந்தாலும் விரோதி குடிபுகாம இருக்கணுமே.
அதுக்கு என்ன பண்றாளாம்?
அதுக்கு கொத்தனாரை விட்டு அங்கே இங்கேன்னு இடிச்சு வெளியிலே தெருவிலே இருந்து பார்த்தா, முழுசா இடிஞ்ச கட்டிடமா எல்லா வீடும் தெரியும். உள்ளே மரம், கதவு எல்லாம் அப்படியே வச்சு இல்லே எடுத்து அடுக்கி வச்சுட்டு, பேய் மிளகு கொடியை சுத்தி பயிர்பண்ணிட்டா அப்புறம் உள்ளே யாரும் போக மாட்டா. பேய்மிளகு.
இன்னும் புரியலே இது, அண்ணா
நல்ல காலம் திரும்பி சென்னபைரதேவி ஆட்சி திரும்ப வந்தா ஜெருஸொப்பா ஜனக்கூட்டமும் ஊர் திரும்பும், வீடு திரும்பும். குறைந்த பட்ச மராமத்து செய்து பேய் மிளகை எடுத்து போட்டுட்டா வசிக்க தகுதியாகிடும் வீடெல்லாம். அல்லது அதுக்குள்ளே பேய்மிளகு சாத்வீகமான பயிராகி இருக்கும் அதுக்கு எதிர்மறை மருந்து கண்டு பிடிச்சிருப்பா. அல்லது வெட்டிப்போட்டு காரை பூசி தரைக்குக் கீழே புதைச்சிருப்பா, இப்படி ஊரோடு அபிப்ராயமாம். இப்போதைக்கு பேய் மிளகுலேருந்து ரசாயனம் எடுத்து எலி பாஷாணம் பண்ணினா அதை முழுங்கின எலி எல்லாம் தானே கழுத்தை நெறிஞ்சுண்டு பரலோகம் போயிடுமாம்
என்ன மூஷிக ஸ்வர்க்கமோ, அது கிடக்கட்டும். கோவில், பசதி, பஜனை மடம் இப்படி பொதுக் கட்டடங்களைக்கூட கிரமமா இடிக்க திட்டம் எல்லாம் கொத்தனாரை வச்சு பூர்த்தி பண்ணியாகிறதாம்.
யுத்தம் வருமா, வந்தா யாருக்கும் யாருக்கும் – இது மட்டும் தான் நிச்சயமா தெரியலெ.
இருந்தாலும் இடிப்பு யோஜனை மும்முரம். கட்டற கொத்தனார் எல்லாரும் முதல்லே இடிக்க மாட்டேன்னாளாம். என் கையாலே கட்டி என்கையாலேயே இடிக்க மாட்டேன்னு கண்ணீர் விட்டு அழுகையாம். காசு கூடக் கொடுக்கறேன்னதும் பார்க்கலாம்னு சமாதானமானதா கேள்வி. இப்பவே கொத்தனாருக்கெல்லாம் வீட்டை இடிக்க வரச் சொல்லி நிறைய வேண்டுகோளாம். இருபது வராகன் தரும் வேலைக்கு நூறு வராகன் தர தயாராம் ஊர் ஜனங்கள்.
கட்டறதுக்கு செய்த செலவை விட இடிக்கறதுக்கு அதிக செலவு பிடிக்கும். ராமராயர் சொல்லும்போதே குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார்.
அதானே, ஒரு பணம் கொடுத்து கட்டு. ஒம்பது பணம் கொடுத்து வெட்டு.
இரண்டு வைதீகர்களும் ஒரே நேரத்தில் சிரித்துக்கொண்டிருக்க, ராமராயரை சிவராம பட்டர் கேட்டார் –
ஹொன்னாவர் அக்ரஹாரத்திலே நாம் என்ன பண்ணப் போறோம்? அக்ரஹாரம் இருக்கட்டும், நீர் என்ன பண்ணப் போறீர்?
ராமராயர் வெற்றிலைச் செல்லத்தைத் திறந்து ஒரு காய்ந்த வெற்றிலையை எடுத்து வாயில் போட்டுக் கொண்டார். வெற்றிலையா இது, பேய் மிளகு மாதிரின்னா இருக்கு என்று ஆச்சரியப்பட்டார்.
எழுந்து வேஷ்டியை இன்னொரு முறை கிட்டத்தட்ட அவிழ்த்தே கட்டி கச்சத்தை இழுத்துச் செருகியபடி சொன்னார் –
வரும் வியாழக்கிழமை, கோட்டை கார்யஸ்தன் சுப்பு சஷ்டியப்த பூர்த்தி. நடத்திக் கொடுத்திட்டு, திருப்தியா போஜனம் செஞ்சுண்டு, சிரம பரிகாரம் பண்ணிண்டு, யோசிக்கலாம்.
(தொடரும்)
