பெண்களின் கீழ்படிதல்

“ ஒருவர் பெண்ணாக பிறப்பதில்லை; பெண்ணாக உருவாக்கப்படுகிறார்” என்கிறார் சிமோன் தீ பூவா. காலங்காலமாக பெண்கள் மொழி, கலாச்சாரம், சித்தாந்தம் போன்றவற்றால் இறுக்கமாக கட்டுண்டு, அவர்கள் இரண்டாம் தரநிலையில்  தள்ளப்பட்டவர்களாகவே இருக்கின்றனர். இதனால் பெண்கள் பல இன்னல்களையும் அவமதிப்புகளையும் முகம் கொடுக்கிறார்கள். 19ம் நூற்றாண்டின் சமூக அமைப்பில் பெண்களது வாழ்நிலை குறித்து ஜோன் ஸ்ரூவேட் மில் தமது தாராளவாத கருத்தை முன்வைக்கிறார். அன்றைய சூழலில் பெண்களது புகார்கள் எதுவும் செவிசாய்க்கப் படுவதில்லை. அதனால்  பாலின சமத்துவத்திற்கான போர்குரலை எழுப்புவதற்கும்  ஆண்களின் ஆதரவு அவசியமானதாகவே இருந்துள்ளது. பெண்களின் நிலைமையினை மேம்படுத்தவும், பாலின அசமத்துவத்தை முடிவிற்கு கொண்டுவருவதற்கும் ஆண்களும் பாலின சமத்துவத்திற்கான போராட்டத்தில்  ஈடுபட்டு பங்களிப்பு செலுத்த வேண்டும் என்ற நிலமையே காணப்பட்டது.   

ஜோன் ஸ்டூவேட் மில் (John Stuart Mill) எனும் பிரித்தானி தத்துவஞானி  சுதந்திரம், அறநெறி, மனித உரிமைகள் மற்றும் பொருளாதாரம் பற்றிய அவரது எழுத்துக்களுக்கு நன்கு அறியப்பட்டவர். இவர் 1806 – 1873 காலப்பகுதியில்  வாழ்ந்தார். The Subjection of Women, On Liberty, Utilitarianism போன்ற நூல்களின் ஆசிரியரும் ஆவர். அவரது இணையர் ஹாரியட் டெய்லர் மில் முற்போக்கான பெண்ணிய நோக்குடைய எழுத்தாளர். இவரது கட்டுரையான The Enfranchisement of women என்கின்ற கட்டுரை 1851இல் வெளிவந்தது. ஹாரியட் டெயிலரின் மரணத்தின் பின்னர் அவரது ஞாபகமாகவே ஜோன் ஸ்டூவர்ட் மில் பெண்களது கீழ்படிவு (The Subjection of women) எனும் நூலை 1869இல் வெளியிட்டார். இந்நூலின் கருப்பொருளில் ஹரியட் டெயிலர் மில்லின் கருத்தும் பங்களிப்பும் உட்பொதிந்தே உள்ளது. பெண்கள் திருமணத்தின் பின்னர் எவ்வாறு தமது சுயத்தை இழக்கிறார்கள்? அதன் மூலமாய் இருப்பது பெண்களது அதீத கீழ்படிதலே என்பதனையே மில்லின்  நூல் விளக்குகிறது. இதன் முதற்படியாக அன்றைய சமூக அமைப்பை(விக்டோரியா கலாச்சாரம்) அவர் விவரிக்கிறார். 

அன்றைய காலகட்டத்தில் விக்டோரியன் சமூகமாக அல்லது கலாச்சாரமாக இருந்த  ஆண்களது வரம்பற்ற அதிகாரமும் தனிச்சலுகையும், பெண்களை மிக மோசமாக கீழ்படிய வைப்பதாகவும், அடிமைப் படுத்துவதாகவும் அமைந்திருந்தது. இதனால் பெண்கள் மிகுந்த  துயரங்களையும், துன்பங்களையும் அனுபவிப்பதை மில் அவதானித்தார்.  பெண்களின்  முதன்மையான கடமையாக, மற்றவர்களை மகிழ்விப்பதும், சேவை செய்வதும், தமது சொந்த விருப்பங்களை கட்டுப்படுத்திக் கொள்வதும் என்பதாகவே இருந்தது. பெண்களது  மேன்மை திருமணம் செய்வதனாலேயே அர்த்தம் பெறுகிறது என்றவாறே அமைந்திருந்தது. பெண்கள் தமது கணவனை ஈர்க்கவும், திருமணமானவுடன் வீட்டிலே இருக்கவும், குழந்தைகளை வளர்க்கவும், கணவனுக்கு அடிபணியவும், வீட்டுவிவகாரங்களில் முழு ஈடுபாட்டை செலுத்தவும் வலியுறுத்தப்படுகிறது. பெண்கள் சொத்துக்கள் வைத்திருக்க முடியாது. அவர்களுக்கு வாக்குரிமை இல்லை. பெண்கள் தமது எல்லா தேவைகளுக்கும் ஆண்களையே எதிர்பார்த்து இருக்க வேண்டியதாகவே இருந்தது. இந்த அடிமை முறையினை மில் நிராகரித்தார். இவ்வாறு பெண்கள் இருப்பது அவர்களது முழு திறமையினையும் மழுங்கடிப்பதாக உள்ளது. பெண்களுக்கு அரசியல், சட்ட உரிமைகள் மற்றும் சமூக பொருளாதார வாய்ப்புக்களும் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

விக்டோரியா சமூகத்தில் பெண்கள் எல்லா தேவைகளுக்கும் ஆண்களையே எதிர்பார்த்திருக்கும் நிலமையானது அடிமைத்தனத்தை ஒத்ததாகவே அமைந்திருந்தது. அடிமைச்சமுதாயத்தில் அடிமை எஜமானுக்கு விசுவாசமாக இருப்பதாலேயே  அவனுக்கு உணவும், உடையும் அளிக்கப்படுகிறது. எஜமானர், அடிமைகள் சுதந்திரத்திற்கு தகுதியற்றவர்கள் என எண்ணுகிறார்கள். அவ்வாறு எண்ணுவதற்கு அவர்களது அதிகாரமும் ஆதிக்கமுமே அடிப்படையாக அமைந்திருந்தது. ஆனால் பெண்களது நிலைமை ஒரு அடிமையைவிட மோசமானதாகவே இருந்துள்ளது. அடிமை குறிப்பிட்ட நேரமே வேலை செய்கிறான் ஆனால் பெண்கள் 24 மணிநேரம் வீட்டிலே வேலை  செய்கிறார்கள். இவ்வாறு திருமணத்தின் ஊடாக உருவாகும், கணவன் – மனைவி உறவானது  சமத்துவமற்று, ஏற்றத்தாழ்வுடனே காணப்படுகிறது. இத்தகைய ஏற்றத்தாழ்வுகளை கொண்ட சமத்துவமற்ற உறவு உண்மையிலேயே அன்பான, ஆதரவான முழுமையான திருமண வாழ்வாக இருக்க முடியாது. பெண்கள் சிறந்த கல்வியினையும், சமத்துவத்தையும் சமூக அந்தஸ்தையும் பெறும்போதே திருமணமும், குடும்பமும் அர்த்தமுடையதாக இருக்கும் என மில் கருதினார்.

John Stuart Mill 19ம் நூற்றாண்டில் காணப்பட்ட திருமணமுறையானது பாரபட்சமானது என்கிறார். இரண்டு பாலினங்களுக்கு இடையில் இருக்கும் சமூக உறவுகளை ஒழுங்குபடுத்தும் கொள்கையானது ஒரு பாலினத்தை மற்றொன்றுக்கு சட்டபூர்வமாக அடிபணியச் செய்கிறது. இது மனித முன்னேற்றத்திற்கான முக்கிய தடையாகவே உள்ளது. இங்கு அதிகாரமும், தனிச்சலுகையும் ஒருபுறமும், இயலாமை மறுபுறமாகவே உள்ளது. ஆண்களுக்கு அனுமதிக்கப்படும் சுதந்திரத்தையும், தனிச்சலுகையையும் பெண்களுக்கு மறுப்பவர்கள், பாரபட்சத்தையே பரிந்துரைக்கிறார்கள். இவற்றின் அடித்தளமாக இருக்கும் கோட்பாடானது பகுத்தறிவிற்கு முரணானதாகும். திருமணம் என்பது பெண்களுக்கான எல்லாக் கதவுகளையும் மூடிவிட்டு (Choice that or none) இது ஒன்றே தீர்வு என வற்புறுத்தப்படுகிறது. ஆனால் ஆண்களுக்கு அவ்வாறில்லை எனவும் மில் கூறுகிறார்.

மக்களுக்கு திறம்பட செயலாற்றுவதற்கு ஒரு அரசாங்கம் தேவைப்படுவது போல் ஒவ்வொரு குடும்பத்தையும் வழிநடத்த ஒரு ஆண் தேவைப்படுகிறான். குடும்பமானது சமத்துவமற்ற முறையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இவ்வமைப்பு பெண்களுக்கு தனிமனித சுதந்திரம், சுயாதீனம், கெளரவம், சமத்துவம் என எதனையுமே வழங்கவில்லை. பெண்களுக்கு முதலில் தந்தைக்கும், திருமணத்தின் பின் கணவனுக்கும், கணவருக்கு பின் மகனுக்கும் என கீழ்படிதல் வலியுறுத்தப்படுகிறது. பெண்கள், குடும்பம் என்ற கட்டாய அமைப்புக்குள் செல்வதினால் தமது சொந்த விருப்பத்திற்கான முயற்சிகளுக்கு கூட நேரம் ஒதுக்குவதற்கு முடிவதில்லை. பெண்களுக்கு உயர்கல்வியில் தத்துவம், அறிவியல் துறையில் முன்னேற்றுவதற்கு வாய்ப்புக்கள் வழங்கப்படுவதில்லை.  

திருமணம் எனும் பாரபட்ச உறவில் குழந்தைகள் என வரும்போது ஆணுக்கே சட்டவுரிமையுண்டு. கணவன் இறந்தபின்பும் மனைவி சட்ட பாதுகாவலராக அனுமதிக்கப் படுவதில்லை. அவள் திருமணப் பந்தத்தில் இருந்து வெளியேற முடியாது. அப்படி வெளியேறினாலும், குழந்தை உட்பட எதனையும் எடுத்துச் செல்ல அனுமதியில்லை. கணவன் விரும்பினால் அவளை வற்புறுத்தி திருப்பி அழைத்து வரலாம். அதற்கு சட்டவுரிமை உண்டு. விவாகரத்து என்பது மறுமணத்திற்கான சுதந்திரத்தை அனுமதிப்பதாக இருக்க வேண்டும். ஆனால் பெண்களுக்கு அத்தகைய சுதந்திரம் வழங்கப்படவில்லை என்பதை மில் குறிப்பிடுகிறார்.

குடும்ப நிறுவனத்தின் சமத்துவமின்மையே நீதியானது என நம்புபவர்கள், எல்லையற்ற அதிகாரத்தை குடும்ப நிறுவனத்தின் ஊடாக ஆண்களுக்கு வழங்குவதையே விரும்புகிறார்கள். சட்டத்தின் முன் திருமணம் செய்பவர்கள் சமத்துவமாக, இருவரது உறவும் நீதியுடன் இணைவதே மகிழ்ச்சிக்கு ஏதுவான நடைமுறையாக இருக்கும். ஆனால் அதிகாரங்கள் கடவுளால் வழங்கப்பட்டுள்ளது எனக் கூறுவது, மதமானது பெண்களுக்கு கீழ்படிதலை கடமையாக வலியுறுத்துகிறது என்பதாகவே அமையும். ஆனால் இவ்வாறு அதிகாரம் ஒருபாலினரிடம் குவிந்து காணப்படுவது அநீதியானதே.

பெண்கள் தனிப்பட்ட ஆண்களுக்கு அடிபணிவதினால் வரும் எண்ணற்ற துன்பங்கள், ஒழுக்கக்கேடுகள் என எல்லா வகையான தீமைகளும் கணக்கற்றதாய் மிக மிக அதிகளவில் மலிந்து காணப்படுகிறது. சிந்தனையற்ற, நேர்மையற்ற சிலர் இதனை விதிவிலக்கு என கூறலாம். ஆனால் இந்த தீமைகளின் இருப்பு குறித்து யாரும் பார்வையற்றவராய் இருக்கத் தேவையில்லை. இத்தகைய அதிகாரமானது நல்ல ஆண்களுக்கோ, கண்ணியமான மரியாதைக்குரிய ஆண்களுக்கோ மட்டும் அல்ல. மாறாக மிகவும் கொடூரமான, குற்றவாளிகள் உட்பட அனைத்து ஆண்களுக்கும் வழங்கப்படுகிறது. ஆண்குழந்தைகள் வளரும் போது தந்தைக்கு கீழ்படிவதுபோல் தாய்க்கு கீழ்படிவதில்லை. ஒருவர் அற்பமானவராகவும், அறியாமை கொண்டவராகவும், திராணியற்றவராகவும், எந்த தகுதி அற்றவராக இருந்தாலும் அவர் ஆணாக பிறந்ததினால் மேலானவராகவும், அதிகாரம் கொண்டவராகவும் இருப்பது அநீதியானது. 

ஒரு ஆண் சமூகத்தால் வளர்க்கப்படும் விதம் அவர்களை உயர்ந்தவர்களாகவும், கட்டளையிட தகுதியானவர் என்றும், பெண்கள் கீழ்படிய வேண்டும் என்றும் ஆழமான நம்பிக்கையை அவர்கள் மனதில் விதைத்து விடுகிறது. ஒரு பெண்ணை விட ஆணில் அவரது உள்ளார்ந்த மேன்மை பற்றிய எண்ணம் ஆரம்பத்தில் இருந்து மனதில் எழுகின்றது;அதுவே அவரது வளர்ச்சியுடன் எவ்வாறு வலுபடுகின்றது; இந்த எண்ணம் தனிமனிதனாகவும், சமூக ஜீவியாகவும் அவனது இருப்பு முழுவதையும் எவ்வாறு புரட்டிப் போடுகிறது எனவும் மில் விளக்குகிறார். மன்னனாக பிறந்தால் மற்றவரை விட சிறந்தவன், நிலப்பிரபுவாக பிறந்தால் உன்னதமானவன் என்பதுபோல் ஆண்கள் என்பதும் பரம்பரை அதிகார உணர்வுடன் பொருந்துகிறது. இவ்வாறு மற்றய பாலினத்தின் முழுமைக்கும் மேலாக உயர்த்தப்பட்ட உணர்வு ஒரு பெண்ணின் மீது தனிப்பட்ட அதிகாரத்துடன் இணைவதானது இரண்டு வழிகளில் நடைமுறையாக உள்ளது. முதலாவது பாசத்துடன் வலிமையான நல்ல குணாதிசயங்கள் கொண்ட ஆணுக்கு திருமணம் என்பது பாசமுள்ள மென்மை, மற்றும் பொறுமை ஆகியவற்றின் இனிய பள்ளிக்கூடமாக அமைகிறது. மற்றைய ஆண்களுக்கு திருமணமானது அதிகாரத்தினை பயிற்சி பெறுவதற்கான கல்லூரியாக அமைகிறது. இந்த அதிகாரத்தின் இருத்தலானது முரண்பட்ட உறவில் உள்ளதையே வெளிப்படுத்துகிறது. பொதுவாக ஒருவரை மதிக்க தகுதியுடையது அவரது நடத்தையே. அவர் என்னவாக இருந்து என்ன செய்கிறார் என்பதில் இருந்து வருகிறது. அதாவது அதிகாரம் மற்றும் அதற்கான உரிமையானது தகுதியால் வருவதேயன்றி பிறப்பால் அல்ல.

ஆண்கள் கட்டளையிட உரிமையுடையவர்கள், பெண்கள் கீழ்படிவதற்கு கடமைப் பட்டவர்கள். ஆண்கள் பொதுவேலைகளில் (அரசாங்கத்தில்) ஈடுபட தகுதியானவர்கள். பெண்கள் பொதுவேலைகளில் ஈடுபட தகுதியற்றவர்கள்” பெண்கள் பொதுவிடயங்களில் (அரசியலில்) ஈடுபடுவதற்கு தகுதி அற்றவர்கள் என்பது, உண்மையில் அவர்களது தனித்துவம், திறமை பற்றி பூரண அனுபவம் இன்றியும், அவர்களுக்கான தொழில் வாய்ப்புக்களை திறந்து விடாமலே இத்தகைய கணிப்பிற்கு உள்ளாகிறார்கள். விக்டோரியா Queen Elizabeth, Deborah, Joan of Arc போன்றவர்கள் பெண்களால் முடியாது என சட்டத்தால் புறக்கணிக்கப்பட்ட விடயங்களை முடியும் என்பதாகவே நிரூபித்துள்ளார்கள். What is mean by a woman’s capacity of institute perception? என்ற வினாவிற்கு மில் இவ்வாறு விபரிக்கிறார். மெதுவாகவும் கவனமாகவும் அவதானிப்பதும், அனுபவங்களை ஒப்பிட்டு முடிவுகளை பெறுவதுமான ஒருவித புத்திசாலித்தனம் என்கிறார். ஆண்களுக்கு இது மற்றவர்களின் அனுபவங்களின் மூலமே(வாசிப்பு, கல்வி ) கிடைக்கின்றது. ஆனால் பெண்களிடம் இத்தகைய ஆற்றல் அவர்களது சொந்த அனுபவத்தில் பரந்தளவில் காணப்படுகிறது.

பெண்களுக்கு சமத்துவத்தை வழங்குவதால் மனிதகுலம் மேன்மையடையுமா ? என்ற வினா பலரிடம் எழலாம். அநீதிக்கு பதிலாக நீதியால் கட்டமைக்கப்படும் மனித உறவுகள் மிகவும் உலகலாவிய நன்மை பயப்பவையாகும். 

  • பெண்களின் குறைபாடுகளை நீக்குதல் அதாவது ஒவ்வொரு அம்சத்திலும் ஆண்களுக்கு நிகரானவர்கள் (ஆண், பெண் சமத்துவத்தை) என்பது அங்கீகரிக்கப்படும்.
  • ஆணாதிக்கத்தின் கீழுள்ள அதிகாரப்படிநிலை மாற்றத்திற்கு உள்ளாகும்.   
  • குழந்தைகள் சுதந்திரத்தையும் அதன் மதிப்பையும் கற்றுக்கொள்வார்.
  • பெண்களுக்கு எல்லா கெளரவமான வேலைவாய்ப்புக்களும் திறந்து விடப்படும்,மேலும் தொழிற்பயிற்சியை பெற அனுமதிப்பதுடன் எல்லா வேலைகளுக்கும் தகுதியுடையவர்களாவர்.
  • உயர் கல்வியிற்கான வாய்ப்புக்களை அளிப்பதால் டாக்டர்கள், விஞ்ஞானிகள், வழக்கறிஞர்கள், ஆசிரியர்கள் போன்றோர் அதிகளவில் சமூகத்தில் உருவாக்கப்படும் . 

இவ்வாறு பெண்களின் திறமைகளை வளர்த்தெடுப்பதன் மூலமே மனித குலத்தில் யாவரும் சமூக, பொது விடயங்களின் பங்களிப்பது சாத்தியமாகும். திறமையின் அரைப்பங்கை பயன்படுத்தாது விடுவதென்பது சமூக முன்னேற்றத்திற்கு தடையாகவும், இழப்பாகவுமே அமையும். பெண்கள் அவர்களது திறன்களை சுதந்திரமாக பயன்படுத்துவதன் மூலம் கிடைக்கும் இரண்டாவது நன்மை அவர்களது திறமைக்கேற்ற சமமான தொழில்வாய்ப்பு, சமமான வெகுமதி, ஊக்கங்கள் அவர்களுக்கு  திறந்து விடப்படுகிறது. இது மனிதகுலத்தின் உயர் சேவைக்காக கிடைக்கும் திறன்களின் விநியோகத்தை இரட்டிப்பாக்கும். அதாவது சமூக விவகாரங்களை நிர்வகிக்க ஆண்,பெண் என இருவருக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கிறது. சிந்தனை மற்றும் சமூகசெயற்பாடுகள் அனைத்தும் பொதுவானவையே. என்றபோதிலும் தனிப்பட்ட ஆர்வமாக அனைத்தும் ஆண்களின் ஆதிக்கத்திலேயே உள்ளது. இதில் பெண்களின் பங்கேற்றல் இல்லை என்னும் அளவிலேயே உள்ளது. ஒரு பெண்ணுக்கு பிறரைப்போலவே மனிதராக இருக்க வேண்டும் என்ற உணர்வானது, அவளது தேர்ந்தெடுக்கும் உரிமையை கொண்டுள்ளது. இதுவே பெண்களின் திறமைகயை விரிவுபடுத்தும் தார்மீக உணர்வாகவும் அமையும்.

பெண்களது கீழ்படிவே ஆண்களுக்கு பெண்கள் மீதான ஈர்ப்பை உருவாக்குகிறது. பெண்கள் அழகாகவும், சாந்தமாகவும், பணிவாகவும், தமது சுதந்திரத்தை விட்டுக்கொடுப்பவர்களாக இருக்கும்போதே ஆண்களுக்கு பெண்கள் மீதான ஈர்ப்பு அதிகரிக்கிறது எனவும் கூறப்படுகிறது. ஆண் அதிகாரத்தில் இருக்கும் அரசாங்கம் அதனை சட்டமாக வரைகிறது. இந்த சட்டங்களினாலான சமூக அமைப்பை பெண்களும் சுவீகாரம் செய்கிறார்கள். பெண்கள் இந்த ஆண் எஜமானர்களின் அதிகாரத்தை சவால் செய்ய துணிவதுமில்லை, கேள்வி கேட்பதுமில்லை.  ஆண்களுக்கு ஒரு பெண்ணுடன் உடலுறவு இருப்பதால் அவர், பெண்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை சரியாக அறிந்திருப்பார்கள் என எண்ணுவது தவறாகும். ஆண்களுக்கு பெண்களைப்பற்றி சரியான புரிந்துணர்வு இல்லாததால் இதுதான் வழக்கம் என நம்புகிறார்கள்.

மற்றவர்களின் விருப்பத்திற்கு அடிபணியும் வாழ்க்கைக்கும், பகுத்தறிவு மிக்க சுதந்திரமான வாழ்க்கைக்கும் இடையே மிகப்பெரிய வேறுபாடுள்ளது. எந்தவொரு சமூகத்தில் பகுத்தறிவு அதிகளவு வளர்க்கப்பட்டு சமூகக்கடமை என்ற எண்ணம் மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கிறதோ, அந்த சமூகம்தான் தனிநபரினது செயல் சுதந்திரத்தை, ஒவ்வொரு நபருக்கும் அவரவர் நடத்தையை ஆளும் சுதந்திரத்தை வலியுறுத்தும். அவரது சொந்த சமூகக்கடமை உணர்வு, மற்றும் அவரது மனசாட்சி போன்ற சட்டங்களே சமூக்கட்டுப்பாடுடன் ஒன்று சேரமுடியும். கடமையின் அர்த்தத்தையும், பகுத்தறிவின் மதிப்பையும் புரிந்துகொள்ள கற்றுக்கொண்டால் அவர்கள் தங்கள் சுதந்திரத்தை பயன்படுத்துவதுவதற்கும், இவற்றால் வழிநடத்தப் படுவதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் அதிகளவில் முனைவார்கள். இந்த வழிகாட்டலின்படி கடமை மற்றும் பகுத்தறிவானது மற்றவர்களின் விருப்பத்தை ஏற்றுக்கொள்வதாகவே இருக்கும் என குறிப்பிடுகிறார்.

19 ஆம் நூற்றாண்டில் பெண்கள் திருமணம் ஒன்றிற்காகவே தயார்படுத்தும் வகையில் கற்பிக்கப்பட்டது. பெண்களது எந்தவித சம்மதமும் திருமணப் பந்தத்தில்இல்லை. திருமணத்தின் பின் பெண்கள் எந்தவித விருப்புகளும் இன்றி கணவரது விருப்பங்களை தனதாக கருதி அதாவது கணவனது மகிழ்ச்சி ஒன்றே அவளது பணி என்பதாகவே உள்ளது. இங்கு பெண்களது தன்னிலை அற்ற நிலையே காணப்பட்டது. ஒவ்வொரு மனிதனதும் தன்னிலை என்பது பெறுமதி மிக்கதே. பெண்கள் மற்றவரின் விருப்பத்திற்கு கீழ்ப்படிந்து வாழ்வதற்கும், பகுத்தறிவான சுதந்திர வாழ்வதற்கும் இடையே மாபெரும் இடைவெளி உண்டு. பெண்களின் எல்லையற்ற கீழ்படிதலே அவர்களை தாழ்ந்தவர்களாக கருதுவதற்கு இடமளிக்கிறது. பெண்களை முழுமையான சமத்துவத்துடன் நடத்துவதை மேம்படுத்த வேண்டுமாயின் அடக்குமுறையின் அடிபணிதலை அடியோடு அகற்றுதல் வேண்டும்.

ஒரு மனிதனது அடிப்படைத்தேவையான உணவு, உடை போன்றவற்றிற்கு அடுத்து சுதந்திரம் என்பதே மனித இனத்தின் வலுவான தேவையாக உள்ளது. எந்த சமூகங்களில் பகுத்தறிவு அதிகமாக வளர்க்கப்பட்டு சமூகக்கடமை என்ற எண்ணம் மிகவும் சக்தி வாய்ந்ததாக உள்ளதோ அந்த சமூகமே தனிமனிதனின் செயல் சுதந்திரத்தையும் வலுவாக வலியுறுத்தும். அவரது சொந்த கடமையுணர்வு, மனட்சாட்சி போன்றவையே அவர்களது சட்டமாக இருந்து சமூகக்கட்டுப்பாடு கொண்டதாக இருக்கும். மகிழ்ச்சியின் முக்கிய அம்சமானது ஒருவர் தனிப்பட்ட சுதந்திரத்தின் மதிப்பை உணர்ந்து கொள்ளும்போதே அறிய முடிகிறது. தன்னலமற்ற பொதுவுணர்வு, கடமையின் பரந்த பார்வையே ஒருவரை உயந்தவராக உருவாக்குகிறது. ஆண்களைப் போலவே ஒவ்வொரு விடயமும் பெண்களுக்கும் பொருத்தமானது. பெண்கள் பலர் இயல்பிலேயே தொண்டுப்பணிகளுக்கு போற்றத்தக்க வகையில் பொருத்தப்பட்டவர்கள். உண்மையில் தீங்கு செய்யாமல் தொண்டு செய்ய கல்வி, திறன், அறிவு மற்றும் சிந்திக்கும் ஆற்றல் அவசியமாகும். பயனுள்ள தொண்டுப்பணிகளை செய்யத் தகுதியுள்ள எவரும் சமூக மற்றும் அரசியலில் எந்தவொரு நிர்வாக பணிகளையும் செய்ய முடியும். பெண்களுக்கு வீட்டிற்குள் அனுமதிக்கப்பட்ட நிர்வாக  கடமைகளை அவர்களுக்கு அனுமதிக்கப்படாத சமூக நிர்வாக கடமைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டால் அவர்கள் சிறந்த நிர்வாக பணிகளை ஆற்றமுடியும். எனவே பெண்களுக்கு சுதந்திரமான, சமத்துவமான உரிமைகளை வழங்குவதன் மூலமே அவர்கள் சமூக அரச பொருளாதார ரீதியில் மேன்மையுற வழியமைக்கும். 

உலகம் தன்னிடம் உள்ள திறமையில் பாதியை பயன்படுத்த மறுப்பதன் மூலம் பெரும் இழப்பையே சந்திக்கிறது. சிந்தனை மற்றும் செயலில் அனைத்து பரந்த விடயங்களும் பொதுவானவை. தனிப்பட்ட ஆர்வமாக அனைத்தும் ஆண்களின் வணிகமாகவே உள்ளது. இதில் பெண்களின் பங்கேற்றல் இல்லை என்னும் அளவிலேயே உள்ளது. ஒரு பெண்ணுக்கு பிறரைப்போலவே மனிதராக இருக்க வேண்டும் என்ற உணர்வானது, அவளது விருப்பத்தில் தேர்ந்தெடுக்கும் உரிமையை கொண்டுள்ளது. மனிதர்களுக்கு ஆர்வமூட்டக் கூடியவற்றில் தமது ஆர்வத்தைக் காட்டுவது, மற்றைய மனிதர்களைப்போலவே அவரது கருத்துக்களும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். இதுவே பெண்களின் திறமைகயை விரிவுபடுத்துவதும் தார்மீக உணர்வுகளின் வரம்பாக அமையும். இவ்வாறு ஜோன் ஸ்ருவேட் மில் பெண்களது அதீத கீழ்படிவினை விமர்சித்தபோதிலும் இன்றுவரை பெரியளவில் மாற்றம் வரவில்லை என்றே கூறலாம். ஆண்கள் திருமணத்தின்போது அழகான, சாந்தமான, படித்த பெண்களையே விரும்புவதும்; பெண்கள் தமது எதிர்கால கணவரை தன்னைவிட படித்த, உயர்பதவி வகிக்கும், வசதிபடைத்த, வயதுகூடியவர் என்றவாறு எதிர்பார்க்கும்வரை அங்கு ஒரு அதிகாரபடிநிலையும், கீழ்படிவும் தொடரவே செய்யும் என்பதே உண்மை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.