கருஞ்சாந்து நிற ஆற்றலாளர்கள்

நற்குணங்களும், நல் அறிவும், மேதமையும் வெள்ளைத் தோலிற்கு மட்டுமே உண்டு என்று உலகம் பலகாலங்களாக நினைத்து வருகிறது. ஆனால், பல வண்ணத்தோரும் தங்கள் திறமைகளை நிரூபித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

“வெள்ளை நிறத்தொரு பூனை
எங்கள் வீட்டில் வளருது கண்டீர்
பிள்ளைகள் பெற்றதப் பூனை
அவை பேருக்கு ஒரு நிறமாகும்
சாம்பல் நிறத்தொரு குட்டி
கரும் சாந்தின் நிறம் ஒரு குட்டி
பாம்பின் நிறமொரு குட்டி
வெள்ளைப் பாலின் நிறமொரு குட்டி
எந்த நிறம் இருந்தாலும்
அவை யாவும் ஒரே தரம் அன்றோ?
இந்த நிறம் சிறிதென்றும்
இஃது ஏற்றம் என்று சொல்லலாமோ?
வண்ணங்கள் வேற்றுமை பெற்றால்
அதில் மானுடர் வேற்றுமை இல்லை
எண்ணங்கள் செய்கைகள் யாவும்
இங்கு யாவர்க்கும் ஒன்றெனக் காணீர்.”

எவ்வளவு சிறப்பாகச் சொல்லியிருக்கிறார் பாரதியார்.

இந்தக் கட்டுரையில் நாம் சில கறுப்பு அறிஞர்களை அறிமுகம் செய்து கொள்வோம்.

பயத்திலிருந்து உருவான பாதுகாப்பு

மேரி வேன் பிரிட்டன் ப்ரவுன் (Marie Van Brittan Brown)  என்ற 40 வயதான ஒரு செவிலியர், முதன் முதலில் இல்லப் பாதுகாப்பு சாதனத்தை வடிவமைத்தவர். தன் கணவரான ஆல்பர்ட் ப்ரவுனுடன் இணைந்து பார்க்க ஏதுவான துளைகள் (peepholes) அமைத்தல், படப்பிடிப்பு கருவிகள், திரையில் காட்சிப்படுத்துதல், இருவழியில் பேசவும், கேட்கவுமான ஒலியமைப்புகள் என்று அனைத்து வேலைகளையும் செய்தார். இன்று வரை இல்லப்பாதுகாப்புக் கருவிகள் இதன் அடிப்படையில் தான் உருவாகின்றன.

கணவர் மின் பொறியாளராகப் பணி செய்ய, இவர் செவிலியராக இருந்ததால், இருவருமே ஒரே நேரத்தில் வீட்டில் இருப்பது சாத்தியப்படவில்லை. மேரி தனியாக வீட்டில் இருந்தால், அறிமுகமற்ற நபர்கள் வரும்போது வீட்டின் முன் வாசற் கதவை திறக்க மிகவும் பயந்தார். ஜமைக்காவில் பிறந்த ந்யூயார்க் செவிலியரான அவருக்கு க்வீன்சில் அதிகரித்து வரும் குற்றங்களும், காவல் துறை மெத்தனமாகச் செயல்படுவதும் மிகுந்த கவலை அளித்தது.

அவர்கள் வடிவமைத்த கருவியில், வெவ்வேறு இடங்களில் அமைந்துள்ள நான்கு துளைகளின் ஊடாக ஒரு படப்பிடிப்புக் கருவி உருளையில் பயணித்து வெளி வாசலில் நிற்பவர் யார் எனக் காட்டிவிடும். கதவின் ஊடாகவே வெளியில் நிற்பருடன் பேசவும் முடியும்.

ந்யூயார்க் டைம்சிற்கு அளித்த பேட்டியில் அவர் சொன்னார்: தனியே இருக்கும் பெண் எச்சரிக்கை ஒலியை இதன் மூலம் எழுப்பி தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். போதை மருந்து ஆசாமிகள் ஒரு மருத்துவ மனையில் கலவரம் செய்யும் போது மருத்துவர்களுக்கு உதவும் கருவி இது. மேலை மக்கள் தங்கள் பாதுகாப்பினைப் பற்றிய கண்ணோட்டத்தை இக்கருவி வந்த பிறகு மாற்றிக் கொள்ளும் வண்ணம் இது பரவியது. பின்னாளில், சி சி டி வி கேமராக்கள் போன்ற பிற சாதனங்களுக்கு இவரது கண்டுபிடிப்பு முன் மாதிரியாக இருந்தது. தன் கருவி தந்த பாதுகாப்பினைக் கொண்டு மன அமைதியுடன் 79 வயது வரை அவர் க்வீன்சில் வாழ்ந்தார்.

அவரது மகளான நோர்மா ப்ரவுன் (Norma Brown) அன்னையின் வழியில் செவிலியராகவும், கண்டுபிடிப்பாளராகவும் உருப் பெற்றார். அவரது கண்டுபிடிப்பான கற்பழிப்புத் தடை சாதனம் (anti-rape) ஜூன் 98ல் காப்புரிமை பெற்றது.

லானி ஜான்சன் (Lonnie Johnson)

குழந்தைகள் கொண்டாடும். பெற்றோர் அலுத்துக் கொள்ளும் சூப்பர் சோக்கர் (Super Soaker) என்ற சாதனத்தை வடிவமைத்தவர். வண்ணமயமான இந்தத் தண்ணீர் துப்பாக்கி, கோடையில் ஆதவனுடன் வெளி வந்து விடும். நம் நாட்டில் ஹோலியின் போது நடை பெறும் நீர்க்குழல் விளையாட்டின் மற்றொரு வடிவம். பீச்சாங்குழலுடன் பொம்மை எறிபொருளை (projectile) இணைத்து இதை இவர் அமைத்தார்.

அமெரிக்க விண்ணக அமைப்பில், கலீலியோ வியாழன் திட்டம், (Galileo Jupiter Probe) செவ்வாய் கிரகத்தை உற்று நோக்கும் திட்டம் (Mars Observer Project) ஆகியவற்றில் பணி புரிந்தவர். பின்னாளில், ஹேஸ்ப்ரோ (Hasbro) நிறுவனம் வாங்கிய லராமி (Larami) நிறுவனத்திற்கு, காப்புரிமை பெற்ற ‘வாட்டர்கன்னை’ (Watergun) 1989ல் தனது சொந்த  நிறுவனத்தின் மூலம் விற்பனை செய்யத் தொடங்கினார். ஜெட் ப்ரொபல்ஷன் லேபிலிருந்து  (Jet Propulsion Lab) அன்றாடப் பணிகள் முடித்துத் திரும்பிய பிறகு, கலிபோர்னியாவில் இருந்த தன் இல்லத்தில், குழாய் முனைகளை (Nozzles) அமைத்து, தனது குளியலறையில் நீர்க்குழாய்களில் கொக்கியின் மூலம் அந்த முனைகளைப் பிணைத்து, அவைகளின் வழி நீர் பீறிட்டு வருவதை முதலில் கவனித்தார். அந்த நீர்ப்பெருக்கை எந்த மூலையிலும் செலுத்த முடியும் எனக் கண்டறிந்து ‘கடவுளே, ஆற்றல் மிகுந்த நீர்த்துப்பாக்கி என்னும் விளையாட்டுப் பொருள்’ என்று குதூகலித்தார். அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டிலேயே விற்பனை $200 மில்லியன்! மிகுந்த வரவேற்பு பெற்ற இந்தக் கருவி இன்று ஒரு பில்லியன் டாலர் தொழில்!

க்ளாடிஸ் வெஸ்ட் (Gladys West)  வரைபடத்தில் கணிதத்தை அமைத்தவர்

புவியியல் நிலைப்படுத்தும் அமைப்பிற்கான (GPS) முன்னோடி ஆய்வுகளைச் செய்தவர். சதர்லேன்ட், (Sutherland) வெர்ஜீனியா என்ற கிராமத்தில் வளர்ந்த இவர், டால்க்ரீனில், (Dahlgren) கடற்படையில், தொழில் நுட்ப உதவியாளராகப் பணியைத் துவங்கினார். நெப்ட்யூன், ப்ளூடோ கிரகங்களின் சார்பு இயக்கத்தின் ஆய்வில் இவர் பங்கு கொண்டார். பரிசினை வென்ற ஆய்வு அது. பூமியின் வடிவ மாதிரிகளை உருவாக்கினார். நாசாவின் (NASA) புவிசார் பூமி இயக்கத் தகவல்களைப் (Geodetic Earth Orbiting Program) படித்து குறித்துக் கொண்டே வந்தார்.

70களின் இறுதியிலும், 80 களின் தொடக்கத்திலும், ஐ பி எம் நிறுவனத்தின் ‘ஸ்ட்ரெட்ச் கணினியின்  (Stretch Computer)பால் அவரது கவனம் சென்றது. பூமியின் வடிவத்தை துல்லியமாகப் புரிந்து கொள்ள இந்தத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தினார். அலைகளாலும், ஈர்ப்பு விசையினாலும், இவற்றைப் போன்ற வேறு ஆற்றல்களாலும், பூமியின் வடிவத்தில் ஏற்படும் தாக்கத்தைப் புரிந்து கொள்ள சிக்கலான கணித வழிமுறைகளைக் கையாண்டார். இன்று நாம் பெரிதும் பயன்படுத்தும், ஜி பி எஸ் இதன் அடிப்படையில் தான் உருவாக்கப்பட்டது.

இவரது கதை ஓரளவிற்கு ‘ஹிடன் ஃபிகர்ஸ்’  (Hidden Figures) என்ற திரைப்படத்தில் சொல்லப்பட்டது. அந்தத் திரைப்படம், கறுப்பின பெண்கள், நாசாவில் அளித்த அபாரப் பங்களிப்பை காட்சிப்படுத்திய ஒன்று.

நேவல் சர்ஃபேஸ் வார்ஃபேர் மையத்தில், (Naval Surface Warfare Center) முக்கியப் பதவி வகித்த  காட்ஃப்ரே வீக்ஸ், (Godfrey Weekes) வெஸ்டைப் பற்றிச் சொல்கையில் ‘கடின உழைப்பாளி, செயற்கைக் கோள் தகவல்களைக் கொண்டு புவிப் பெரும் பரப்பின் அமைப்பைத் துல்லியமாக அளக்க உதவும் ஜி பி எஸ் அவரால் சாத்தியமாகியது; செயற்கைக் கோள் தகவல்களை புரிந்து கொள்ளும் ஆற்றல் பெற்றவர் அவர்’ என்கிறார். கூகுள் வரைபடம் நமக்கு இலக்கைச் சரியாகக் காட்டுகிறதென்றால், நாம் ஒவ்வொரு முறையும் க்ளாடிஸ் வெஸ்டிற்கு நன்றி சொல்ல வேண்டும்.

ஷிர்லே ஜேக்சன் (Shirley Jackson) உலகை இணைத்தவர்

வியத்தகு பொருட்களால் நம் அனைவரையும் இணைத்தவர். தொடு திரை அலைபேசி, கூப்பிடும் நபர் யார், அழைப்பு காத்திருப்பில் இருக்கிறது, ஒளியிழை தந்திவடம், கைகளில் எடுத்துச் செல்லும் வடிவத்தில் ஃபேக்ஸ் கருவி அனைத்தும் இவரது கொடை.

கோட்பாடு அறிவியல்(Theoretical Physics) பயின்று அதில் முனைவர் பட்டமும் பெற்ற ஆப்பிரிக்க- அமெரிக்கனான இவர்,  இயற்பியலில் அப்பெருமையை அமெரிக்காவில் பெற்ற இரண்டாவது பெண்மணி. எல்லோரும் இணைந்துதான் இவற்றை வடிவமைத்தோம் என்று தன்னடக்கமாக இவர் சொல்லிக்  கொண்டாலும், டைம் இதழ் இவரை ‘அறிவியலில் பெண்களுக்கான முன்மாதிரி’ என்று கௌரவப் படுத்துகிறது.

அமெரிக்காவின் புகழ் பெற்ற தொழில்நுட்ப ரென்செலியர் (Rensselaer) ஆய்வகத்தில் அதிபராக தற்சமயம் பணியாற்றி வருகிறார். இளம் பெண்களுக்கான ஆலோசனையாக இவர் சொல்வது: நீங்கள் யாரென்று நீங்களே தீர்மானியுங்கள்; அதைப் பிறர் வசம் ஒப்படைக்க வேண்டாம்.

ஜார்ஜ் கார்வர் (George Carver) கடலை வெண்ணைக்கு (peanut butter) வித்திட்டவர்

மிசோரியில்,1864ல் பிறந்த இவர், பெரும் பண்ணை ஒன்றில் வளர்ந்தார். இவரது இளமையில் மிகுந்த துன்பத்திற்கு உள்ளானவர்; அவர் அடிமை வர்த்தகத்தில் பிறந்தவர். அவரது குடும்பம்  கடத்தப்பட்டது; எப்படியோ தப்பி, அயோவா பல்கலையில் விவசாயத்தில் மேற்படிப்பு பட்டம் பெற்று, சில காலங்கள் ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் தன் கண்டுபிடிப்புகளைத் தொடங்கினார்.

நிலக்கடலையைக் கொண்டு நூற்றுக்கணக்கான பொருட்களை உற்பத்தி செய்தார். தொடர்ந்து பருத்தி பயிரிடுவதால், மண் வளம் குன்றிப் போகாமலிருக்க சில வழிமுறைகளை ஆய்வு செய்தார். சுற்றுச்சூழல் ஆர்வலரான இவர்,  மாற்றுப் பயிர் வளர்ப்பதின் மூலம் மண்ணில் நைட்ரஜன் சத்தை திரும்பச் செய்யலாம் என்று விவசாயிகளை வழி நடத்தினார். பருத்தி பயிரை ஒருமுறை வளர்த்தால், சுழற்சி முறையில்  நிலக்கடலை, கொண்டக்கடலை, தானியங்கள். பருப்பு வகைகள் ஆகியவற்றை மறு பயிராக விளைவித்தால் மண் வளம் பெறும் என அறிவுறுத்தினார். 1922ல் சர்க்கரைவள்ளிக்  கிழங்கிலிருந்து 150 பொருட்களைத் தயாரிக்கும் வழிமுறைகளை வெளியிட்டார்-செயற்கைப் பட்டு, இரவு உணவிற்குப் பின்னான மிட்டாய் போன்றவை. கறுப்பினத்தைச் சேர்ந்த அறிவியலாளராகக் கொண்டாடப்பட்ட இவரை, 1941ல், டைம் இதழ், கறுப்பு லியோனார்டோ என்று புகழ்ந்தது. 1943ல் இவர் இறந்த பிறகு, இவரது மிசோரி இல்லம், நாட்டின் நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. கறுப்பு அமெரிக்கர்களுக்கான முதல் அங்கீகாரம் இது.

ஆட்டுப் பட்டியும், நீர் வடித்தல் முறைகளும், நீரேற்றம் செய்யும் வகைகளும், ஊடு பயிரும், சுழற்சி முறையில் பருவத்திற்கேற்ற விதைப்பாடும், இன்ன பிறவும் இருந்த நம் நாட்டில் இப்படியான ஒரு மனிதரைப் பற்றிய சிறுகுறிப்பேனும் இருக்கிறதா?

சி ஜே வாக்கர் (C J Walker) கறுப்பினப் பெண்களின் கூந்தலிற்கான பொருட்கள்

இவரது இயற்பெயர் சாராப்ரீட்லவ்.(Sarah Breedlove) 1867ல் வறுமையான குடும்பத்தில் பிறந்தார். கறுப்பினப் பெண்களுக்கான அழகுப் பொருட்கள், குறிப்பாக கூந்தலுக்கானவை, சந்தையில் கிடைப்பதில்லை என்பதை உணர்ந்தார், ஆப்ரிக்க-அமெரிக்கத் தொழில் முனைவரான எனி டர்போ மெலோனைச் (Annie turbo Malone )சந்தித்த பிறகு அவர் வாழ்க்கையில் சிறந்த மாற்றம் உண்டானது.

சார்ல்ஸ் ஜோசப் வாக்கர் என்பவரை மணந்தார். பின்னர் கருங்கூந்தல் வளர்ச்சிக்கான பொருளை சந்தைப்படுத்தினார். அது சந்தையைக் கவர்ந்தது. அவர் மில்லியன் டாலருக்கு அதிபதியானார். சுருள் கூந்தலை நேர் செய்யும் கருவி போன்ற பல பொருட்களை அறிமுகம் செய்தார். தன் வாழ் நாள் கால கட்டத்தில் பணக்கார கறுப்பினப் பெண்ணாக புகழ் பெற்றார். இவரது வாழ்க்கையை ‘செல்ஃப் மேட்’ (Self Made) என்ற பெயரில் நெட்ஃப்ளிக்ஸ் ஒரு தொடராக வெளியிட்டது. சம உரிமைக்கான குரல் கொடுத்தவர். படித்த பணக்காரப் பெண்ணாக, இன வேற்றுமை, உயிரோடு மனிதரைக் கொளுத்துதல், அடிமை வர்த்தகம் ஆகியவற்றைச் சாடினார். ஆயிரக் கணக்கானப் பெண்களை தன் பொருட்களின் விற்பனையாளராக நியமித்தார்.

1912ல் நேஷனல் நீக்ரோ பிசினஸ் லீக்கில் அவர் உரையாற்றிய போது சொன்னார்: நான் தெற்கே பருத்திக்காட்டில் பிறந்தவள். ஒவ்வொரு இடமாக மாறி, என் வர்த்தகத்தை நானே தொடங்கி, கூந்தற் பொருட்களை உற்பத்தி செய்து, சந்தைப்படுத்தி, இன்று செல்வச் செழிப்பில் இருக்கிறேன். அனைத்திற்கும் என் சிந்தனையும், உழைப்பும், சந்தையில் தென்படாத ஆனால் அவசியமான பொருளைப் பற்றிய எண்ணமும் அடிப்படை.

 

லீசா ஜெலாப்டர்  (Lisa Gelobter)-படங்களுக்கு  உயிர் அளித்தவர்

ஒரு படம் நூறு வார்த்தைகள் பேசுமென்றால், ஜி ஐ எஃப் (GIF) ஆயிரம் வார்த்தைகள் சொல்லுமல்லவா? அதில் பேசலாம், எதிர்வினை செய்யலாம், நகைச்சுவையாக்கலாம். இத்தகு தொழில் நுட்பத்தின் பின்னே இருப்பவர் 1972ல் பிறந்த லீசா.

நேரலைக் காணொளி, ஷாக்வேவ், ஹூலூ போன்ற இணைய தொழில்நுட்பங்களில் பங்கேற்றவர். செயற்கை நுண்ணறிவு, இயந்திரக் கற்றல் இவற்றைச் சிறப்புப் பாடமாகக் கொண்டு ப்ரவுன் பல்கலையில் 1991ல் கணினி அறிவியலில் பட்டம் பெற்றார். பி ஈ டி நெட்வொர்க்கில் (BET Network) முதன்மை இலக்க அதிகாரியாகப் பணியாற்றினார். ஜி ஐ எஃப் உருக்களுக்கான இயங்கு படங்களை (Animation) இவர் தயாரித்தது என்றென்றுக்குமான உரையாடலுக்கான வழி அமைத்தது. இவரது இயங்கு படங்கள் இளைய சமுதாயத்தின் விருப்பம் என்றால் இவருக்கோ, அவர்கள் தான் நெருக்கம். ‘இளைஞர்கள் நம் தர நிர்ணயங்களைக் கேள்வி கேட்கிறார்கள்; ஆராய்கிறார்கள். நாம் அறிந்து கொள்ள அவர்களிடம் அதிகமிருக்கிறது. நமது ஊக்கமே அவர்கள் தான். தங்களுக்கு உண்மையாக இருப்பதையும், சமூகத்தில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்துவதையும் அவர்கள் தொடர வேண்டும்.’

ஆல்ப்ரட் எல் க்ரல்- (Alfred L Cralle) பனிக்கூழ் கரண்டி

1866ல், கென்ப்ரிட்ஜில், உள் நாட்டுப் போரின் முடிவில் ஒரு தச்சர் இல்லத்தில் பிறந்து, தந்தையுடன் தச்சு வேலைகள் செய்து பின்னர், ஆப்பிரிக்க- அமெரிக்கர்களுக்கான பள்ளியில் பயின்று, பென்சில்வேனியாவில் ஒரு விடுதியில் சுமை தூக்குபவராகப் பணியைத் தொடங்கினார். அங்கே, பனிக்கூழை நுகர்வோருக்கு அளிக்க அன்று உபயோகத்திலிருந்த கரண்டிகளைப் பயன்படுத்துவதில் பணியாளர்களுக்கு இருந்த சிரமங்களைப் பார்த்த இவர், 1896ல், தனது 31ம் வயதில், ‘ஐஸ்க்ரீம் மோல்ட், டிஷர்’ என்ற ஒரு கை பயன்பாட்டுக் கரண்டியை  வடிவமைத்து அதற்கான காப்புரிமையும் பெற்றார். வெற்றிகரமான தொழிலதிபர் ஆனார்.

மேரி பீட்ரைஸ் டேவிட்சன் கென்னர் (Mary Beatrice Davidson Kenner) பெண்களின் மாத உபாதைக்கான அணையாடை அமைத்தவர்

மன்ரோவில் பிறந்தார் இவர். இவர் குடும்பத்தினர் பயனுள்ள பொருட்களை உருவாக்கியவர்கள். இவரது தந்தையான் சிட்னி டேவிட்சன், எடுத்துச் செல்லும் ஆடை அச்சகத்தை அமைத்தவர். ‘ஸ்ட்ரெச்சருக்கு’ சக்கரங்கள் அமைத்து அதை உருட்டிச் செல்ல வழி வகுத்தவர். மைல்ட்ரெட் டேவிட்சன் ஆஸ்டின் ஸ்மித் என்ற இவரது சகோதரி பல விளையாட்டு அட்டைகளை வணிக முறையில் அறிமுகப்படுத்தி வெற்றி கண்டவர்.

ஈரம் கசியாத, சுகாதாரப் பட்டியுடன், அணையாடையும் இருக்கும், பெண்கள் பாதுகாப்பாக சங்கடமில்லாமல் உணரும். ‘அட்ஜெஸ்டபில் பெல்ட்டை’ இவர் வடிவமைத்தார். முதலில் இந்த சாதனத்தை வரவேற்ற ஒரு குழுமம், இவர் ஒரு கறுப்பினத்தவர் என்று அறிய வந்ததும் சந்தைப் படுத்த மறுத்து விட்டது. காப்புரிமைக் காலம் முடிந்து விட, எவரும் இந்த சாதனத்தை வடிவமைக்கலாம், சந்தைப் படுத்தலாம் என்ற விதி முறையின் படி, இவரது இந்தக் கண்டுபிடிப்பு, இவருக்கு அழியாப் புகழை தந்ததே தவிர, பணம் தரவில்லை.

இனவெறியும், நிறவெறியும் மிகுந்த நாட்டில், தன்னை எவரும் பொருட்படுத்தாவிட்டாலும், அவர் தொடர்ந்து கண்டுபிடித்துக் கொண்டேயிருந்தார். நடைவண்டியுடன் இணைக்கப்பட்ட பை, தட்டு முதலானவை இவர் அமைத்ததே. ‘அனைவரிடமும் படைப்புத் திறன் இருக்கிறது.’ என்று சொன்னவர். குத்துச் சணடை வீரரான ஜேம்ஸ் கென்னரை மணந்து, ஐந்து குழந்தைகளை வளர்த்து 93 வயதில் காலமானார். உலகப் பெண்கள் அனைவருமே இவருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டவர்கள்.

 

ஆஸ்ப(ர்)ன் டோர்சி-  (Osbourn Dorsey) உலகிற்காகக் கதவுகளைத் திறந்தவர்

கதவுக் குமிழை அமைத்த இவரைப் பற்றிய செய்திகள் எல்லாம், காப்புரிமை பெற அவர் செய்த விண்ணப்பங்களின் மூலமாகத்தான் அறியக் கிடைக்கின்றன. கதவுகள் திறப்பதில் புதிய மாற்றம் கொணர்ந்தவர். அதற்கு முன்னர், கதவுகளை தோல்பட்டியால் பிணைப்பார்கள்; அல்லது கதவில் துளையிட்டு அதில் ஒரு தாழ்ப்பாள் பொருத்தி மூடித் திறப்பார்கள். இவரது கதவுக் குமிழ், இம்முறைகளைத் தவிர்க்கச் செய்து மூடித் திறப்பதை எளிதாகவும், பாதுகாப்பாகவும் செய்ய உதவியது. தொடக்கத்தில் வரவேற்பு பெறாத இது, காலப்போக்கில் மனமுவந்து ஏற்றுக் கொள்ளப்பட்டது.

தோலின் நிறம் பிறப்பால் வருவது; அதில் தனிப்பட்ட சிறப்பு என்ன இருக்கிறது? மானுடம் பயனுற வாழ எந்த நிறமாக இருந்தால் என்ன? பதாகை இணைய இதழில் வெளியான சிறு கவிதை

பிசகு

செம்பழுப்பும், மஞ்சளும் கலந்த புள்ளி
நீலமும் பச்சையும் உலவும் ஒளித் தினவு
பால் வெண்ணீறீன் சாயத்தில் தோய்த்த அழகு
பறவை என்றால் இதைத்தான் நினைக்கிறாய்
கருஞ் சிறகுகள் கவனத்திலுமா பிசகும்?

உசாவி: Black History Month: 10 Black inventors who changed history | Tech News | Metro News


Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.