மெக்காலேயின் வாழ்க்கையும் காலமும்

எட்வர்ட் சய்யீது எழுதிய, நியாயமாக பார்த்தால் பிரபலம் அடைந்திருக்கக் கூடாத ஓரியண்டலிசம்(1978) புத்தகத்தின் மேல் இந்தியர்கள் ஒருவித கேள்வியும் எழுப்பாமல் நம்பிக்கை வைப்பதிலும் அதில் கூறப்பட்டுள்ள ஆய்வறிக்கையை உபயோகிப்பதிலும் நிறைய தவறுகள் உள்ளன.

இப்புத்தகத்தில் கூறப்படும் தகவல்களில் எக்கச்சக்கமான தவறுகள் உள்ளன.

ஜெர்மன் மொழியில் ஓரியண்டலிசம் முக்கிய இடத்தை வகிப்பதைப் புறக்கணித்து அதற்கு மாறாக ஓரியண்டலிசம் காலனியத்துடன் இணைந்தது என்று இல்லாத ஒன்றை முன்மொழிவது, அறிஞர்களையெல்லாம் காலனியத்தின் காரணிகளாக மாற்றும் சதித் திட்டமாகத் தெரிகிறது.

ஆனால், இந்தியர்களிடம் இவரது புத்தகம் சென்றடைந்த விதத்தில் ஓரியண்டலிசம் என்ற வார்த்தை இதன் மூல அர்த்தத்தில் உபயோகிக்கப்படாமல் மொழியியல் துறையில் உள்ள அர்த்தத்தில் உபயோகிக்கப்படுகிறது.

ஓரியண்டலிஸ்ட் என்ற வார்த்தை 1800களில், ஆங்கிலத்தை விட இந்திய மொழிகள்தான் இந்தியர்களின் கல்விக்கும் நவீனப்படுத்துவதற்கும் உகந்தது என கருத்து தெரிவித்த பிரிட்டிஷ் நிர்வாகிகளைத்தான் முதலில் குறிப்பிட்டது. ஹிந்து தேசியவாதிகளிடையே, காலனியத்திற்கு பின் வந்த மார்க்சிஸ்ட்கள் கருதுவது போல், ஓரியண்டலிசம் என்ற வார்த்தை அசிங்கமானதாக கருதப்படுகிறது.வரலாற்று ஓரியண்டலிஸ்டுகள், ஹிந்து தேசியவாதிகள் இப்போதும் பரிந்துரைப்பது போல், உள்நாட்டு கல்விக் கொள்கைகளைதான் ஆதரித்தார்கள்.

இப்போது ஆங்கிலக் கல்வித்திட்டத்தை இந்தியர்கள் மேல் திணித்து ஓரியண்டலிஸ்டுகளுக்கு வேலையில்லாமல் செய்த ஒரு தனி மனிதரைப் பற்றிய புத்தகம் வெளிவந்துள்ளது. தாமஸ் பாபிங்டன் மெக்காலே(1800-1859) இந்தியாவில் ஆங்கிலமயமாகியுள்ள ஆளும் வர்க்கத்தின் தகப்பன்சாமியும் ஹிந்து தேசியவாதிகளால் வெறுக்கப்படுவரும் ஆன ஒருவர். இறுதியாக, இந்திய வரலாற்றில் மிகுந்த செல்வாக்குடைய ஒருவரின் இன்றுவரையிலான வாழ்க்கை வரலாறு நமக்கு கிடைத்துள்ளது.

சரீர் மசானி(Zareer Masani) அவரது “மெக்காலே: இந்திய நவீனமயமாக்கலின் முன்னோடி”(Macaulay: Pioneer of India’s modernization) புத்தக அட்டையில் கூறுவது போல் “இப்புத்தகத்தை ஆங்கிலத்தில் நீங்கள் படித்துக் கொண்டிருந்தால் அது தாமஸ் மெக்காலேயினால் இருக்கக் கூடும்.”

அவரது கடைசி வாழ்க்கை வரலாறு அவரது மருமகன் ஜார்ஜ் ஓட்டோ ட்ரெவல்யான் 19ம் நூற்றாண்டில் எழுதியதாகும்.

இப்போது வெளிவந்துள்ள புத்தகம் படிப்பதற்கு இன்பகரமாகவும் அனைத்து விவரங்களையும் கொடுப்பதாகவும் உள்ளது. ஒரே ஒரு குறிப்புதான் இதன் தரத்தை பாதிக்கிறது. சில வாசகர்களின் அனுதாபத்தை ஆசியருக்கு பெற்றுத் தரும் அக்குறிப்பு, ஆசிரியர் அவரது புத்தகத்தின் கருப்பொருளான மனிதரிடம் வெளிப்படையாக தெரியும் அவர்கொண்டுள்ள பாசமும் மறைக்கப்படாத போற்றுதலுணர்வும் ஆகும்.

மெக்காலே, பிறப்பாலும் வளர்ப்பாலும் தாராளவாத, கிருத்துவ, பிரிட்டிஷ் உயர்குடி மக்கள் குழுவை சேர்ந்தவர். இதற்கான சிறந்த உதாரணம், வில்லியம் வில்பர்போர்ஸ் (1759-1833). இவர் அடிமைத்தன ஒழிப்பிற்காகவும், இந்தியாவில் மதபோதக நடவடிக்கைகளுக்காகவும் பிரச்சாரம் செய்தவர். மெக்காலே வரலாறு படைப்பதற்காக இந்தியா செல்லவில்லை, தன்னுடைய பொருளாதாரத்தை வளர்த்துக் கொள்ளும் ஒரே வழியாக அவருக்குத் தோன்றியதால் என்பதை பார்க்கிறோம். விதவைகள் தங்கள் கணவரின் சிதையில் விழுந்து மாய்வதைத் தடை செய்து பிரபலமான கவர்னர் ஜெனரல் வில்லியம் பெண்டிங்கிற்கு உதவியாளராக வேலை செய்தார். அவருக்கு முறைப்படி, 1835ல் மெக்காலே எழுத்து வடிவில் அளித்த ஆலோசனைதான் “கல்வியைப் பற்றிய குறிப்புகள்”(Minutes on Education). வரப்போகும் பல நூற்றாண்டுகளுக்கு இந்தியாவின் கல்வித்திட்டத்தை நிர்ணயித்ததோடல்லாமல், (இன்றும், இந்திய கல்வித்திட்டம் புத்திசாலித்தனமாக “மெக்காலேயின்” என அழைக்கப்படுகிறது) இவர் இந்திய தண்டனைக் குறியீட்டை(Indian Penal Code) அளித்து தன்னை மீண்டும் அடையாளப்படுத்திக் கொண்டார். பிறகு இங்கிலாந்திற்கு திரும்பி 20 வருடங்கள் அறிஞராகவும், பிரபல கவிஞராகவும் வாழ்ந்து 59வது வயதில் மரணமடைந்தார்.

வேலை இல்லாதபோது இருந்த உதிரி நேரத்தை கல்கத்தாவில் உள்நாட்டு பாரம்பரிய புத்தகங்களை முழுவதுமாக புறக்கணித்து, கிரேக்க ரோமானிய பாரம்பரிய புத்தகங்களில் தனக்கிருந்த ஆர்வத்தை நிறைவு செய்து கொள்வதிலும் செலவிட்டார். சம்ஸ்க்ருத புத்தகங்களின் மேல் இவருக்கிருந்த அவமதிப்பு நன்கு தெரிந்ததே. இது அவரது கல்விக் குறிப்பேட்டில் “அனைத்து ஸம்ஸ்க்ருத இலக்கியங்களில் உள்ள அறிவுக்களஞ்சியம் பிரபலமான ஒரு பிரிட்டிஷ் நூலகத்து அலமாரியின் ஒரு தட்டில் அடங்கி விடும்” என்பதிலிருந்தோ அல்லது அதை ஆமோதிக்கும் இப்புத்தக ஆசிரியர் கூறுவது போல்,” மெக்காலே, உள்நாட்டு இந்திய, குறிப்பாக ஹிந்துக்களின் பழக்கவழக்கங்களையும் மத மூட நம்பிக்கைகளையும் இழிவாக நிராகரித்தோ அல்லது அதற்கும் மேலாக விரோத உணர்வோடும் மிக அலட்சியமாகவும் கருதினார்” (ப.xiii) என்பதிலிருந்தும் தெரிய வருகிறது.

ஹிந்து தேசியவாதிகள், ஆங்கில மயமாகிவிட்ட உயரடுக்கு நபர்களை மொத்தமாக ஒரே வார்த்தையில் சுட்டிக்காட்ட மெக்காலேயின் பெயரைத்தான் உபயோகிப்பார்கள். பிரிட்டிஷார் செல்வாக்கு அவர்கள் வெளியேறி பல பத்தாண்டுகளுக்குப் பின்னும் இந்தியாவில் தொடர்வதற்கு மெக்காலே சுழற்றி விட்ட சதித் திட்டம்தான் என தேசியவாதிகள் கூறுவது சரியல்ல. மாறாக, இந்தியர்கள், சொந்த மொழிகளையும் கல்வித் திட்டங்களையும் புறக்கணித்து ஆங்கில மொழியையும் கல்வித் திட்டத்தையும் சுயமாக வரித்துக் கொண்டார்கள். ஒருகால், இந்தியர்கள் தவறான பாதையை தேர்ந்தெடுத்திருக்கலாம் (இப்புத்தகம் சரியான பாதை என்கிறது). ஆனால், இது இந்தியர்கள் செய்த வேலை; மேற்கத்திய சதித் திட்டமல்ல.

மெக்காலேயின் கல்வித் திட்டம், முன்பு தீண்டத்தகாதவர்கள் என்றும் தற்போது தலித்துகள்(இவ்வார்த்தைகளின் தேர்வு உணர்ச்சிவயப்படுத்துவது) என்றும் அழைக்கப்படும் பிரிவிற்கு நலத்தைத் தந்ததா? தரம்பால், 1983ல் “அழகான மரம்: பதினெட்டாம் நூற்றாண்டில் இந்தியாவின் உள்நாட்டுக் கல்வி [The Beautiful Tree: Indigenous Indian Education in the 18th Century (1983)] எனும் புத்தகத்தை எழுதியுள்ளார். இது, மெக்காலேயின் கொள்கைகளை அமலாக்குவதற்காக பிரிட்டிஷ் அரசாங்கம் மேற்கொண்ட சமகாலத்திய இந்திய பள்ளிக் கணக்கெடுப்புகளின் அடிப்படையில் உருவான புத்தகம். இந்தியப் பள்ளிகள் பின்தங்கியவை அல்ல. இந்தியப் பள்ளித்திட்டம் சமகாலத்திய இங்கிலாந்து பள்ளித்திட்டத்தை விட மிகுந்த ஜனநாயகத்துடன் இயங்கியது என்பது தெரிய வருகிறது. தீண்டாமையினர் மிகுந்த அளவில் இப்பள்ளிகளில் இல்லாதபோதும் அவர்களும் இப்பள்ளிகளில் மற்றவர்களுடன் சேர்ந்து படித்தனர் என்று கணக்கெடுப்பில் உள்ளதால் தாழ்ந்த வகுப்பினர் இப்பள்ளிகளில் எழுதப் படிக்க தடைஇருந்தது என்ற எண்ணத்திற்கு எதிர்மாறான உண்மை வெளிப்படுகிறது. மேலும், ஆங்கிலேய மொழிப் பள்ளிகள்தான் தாழ்ந்த வகுப்பினரை விடுவித்தது என்று வாதிப்பதும் உண்மைக்கு புறம்பானது. சீனா, சமப்படுத்துதல் எனும் தீவிரக் கொள்கையை பின்பற்றி, முழு அளவு படிப்பறிவை ஒரு ஆங்கில வார்த்தையை கூட உபயோகிக்காமல் அனைவருக்கும் அளித்தது. பல சமூகப் பின்னணிகளிலிருந்து வந்துள்ள சீனப் பொறியாளர்கள் ஆங்கிலம் தெரியாமலே உயர் தொழில் நுட்பப் பணிகளில் உள்ளனர்.

மெக்காலே, இன்றைய தலித் விசிறிகள் கூறுவது போல், சமத்துவ சீர்திருத்தத்தை மனத்தில் வைத்து ஆங்கிலேயக் கல்வி திட்டத்தைச் செயல்படுத்தவில்லை. இவர் காலத்தில் பிரிட்டனில் செங்குத்தான வகுப்பு வேறுபாடுகள் நிலவியது. அதனால்தான், பிரிட்டிஷாரை இந்தியாவின் ஜாதி அமைப்பு பெரியதாக பாதிக்கவில்லை. மெக்காலே சமவுரிமையை ஆதரிக்கவில்லை. படித்தவர்களும் சொத்துள்ளவர்களும்தான் உரிமைக்குரியவர்கள் என்றார் என்பதை இப்புத்தகத்திலிருந்து அறிகிறோம். மெக்காலேயின் நினைவைக் கொண்டாடும் இந்திய இடதுசாரிகளும் அவர்களுக்கு துணை போனவர்களும் வளைகுடா யுத்தத்தை(Gulf War) எதிர்த்தனர்.

இந்த யுத்தத்தில் வலிமை மிக்க ஒரு நாடு, மனித உரிமைகள் என்ற பெயரிலும் தனியார் மூலதனத்தைக் பாதுகாக்கும் சேவையிலும் ஒரு பின் தங்கிய நாட்டை கனத்த தடியாலடித்து உடைத்தது. இதே நிலை நிலவிய முதல் அபினி யுத்தத்தில் மெக்காலேயும் போருக்கு ஒரு உணர்ச்சிமிக்க முக்கிய ஆதரவாளர். இந்த விவகாரத்தில் புத்தகாசிரியர் நியாயமாக நடந்து கொண்டுள்ளார். அவரது உன்னிப்பான நோக்கில்,” பேரரசின் பணி “அறிவித்தலும் கற்பித்தலும்”(inform and educate) என்ற மெக்காலேயின் கருத்து காண்பித்த வழியைதான் இன்றும் மேற்கு நாடுகள் சிறப்புத் தன்மையாக தாங்கள் கருதுவதை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய உபயோகிக்கின்றன. முக்கியமாக, தங்களுடைய மென் அதிகாரம்(soft power) கலாச்சாரப் பொருளாதார நியமங்களின் பரிமாறல் என்ற வழிகள் மூலமாக செல்கின்றன” என்கிறார்.

புத்தக ஆசிரியரும் மெக்காலேயின் விசிறிகளும் நம்புவது போல் மெக்காலே சுதந்திர இந்தியாவை இன்று வரை சேர்த்து வைத்துள்ள பசையை அளித்தாரா? அரசியலமைப்பு சபை ஆங்கிலத்திற்கு மாற்றாக ஆட்சிமொழியாக இரண்டு மொழிகளை சீர்தூக்கிப் பார்த்தது; ஒன்று, ஹிந்தி 40 விழுக்காடு இந்தியர்களின் தாய் மொழி; இதைத் தேர்வுசெய்த பின் தோற்றது. (முழுமையானதாக இல்லையென்றாலும் ஓரளவிற்கு இதன் காரணம் ஆங்கிலம் பேசும் மேல்தட்டினர் செய்த நாசவேலை). இரண்டாவது, சம்ஸ்கிருதம். வரலாற்றில் ஆட்சிமொழியாக இருந்த இந்தியர்களாலும் வெளிநாட்டினராலும் மதிக்கப்பட்ட மொழி. இம்மொழியும் ஆங்கிலம் போல் சிறிதளவே பேசப்பட்ட மொழி. ஆனால், இரண்டாவது மொழியாக கற்பதென்பது, இஸ்ரேல் நாட்டிற்கு குடிபெயர்ந்த யூதர்கள் அனைவரும் ஹீப்ருவை முதல் மொழியாக கற்பதை விட சுலபமானது. மற்றொரு காரணம் பிராந்திய மொழிகளுக்கும் ஸம்ஸ்க்ருதத்திற்கும் இடையேயான சொற்தொகுதி. இணைப்பாகும். சம்ஸ்க்ருதம் கடின மொழியாக இருந்தால் அது எல்லோருக்கும் ஒரே அளவிற்குத்தான் கடினமாக இருந்திருக்கும். ஹிந்தியைப் போல் சில பகுதிகளுக்கு சுலபமாகவும் மற்ற பகுதிகளுக்கு கடினமாகவும் இருந்திராது. சட்ட அமைச்சரும், கீழ் ஜாதி மெக்காலே விசிறிகளால் கருத்தியல் தீபமாக வணங்கப்பட்ட பீம்ராவ் அம்பேத்கருமே ஸம்ஸ்க்ருதத்தை வலுவாக ஆதரித்தார். இந்தியா அதன் சொந்தப் பாரம்பரிய மொழியின் கீழ் ஒன்றிணைந்திருக்கும். ஆனால் 50-50 சம வாக்களிப்பிற்கு பின், ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத், முடிவாக இந்தியர்களின் தலைவிதியை நிர்ணயிக்கும் அறுதி வாக்கை ஹிந்திக்கு அளித்தார். அதன் மூலம், ஒருவேளை வெற்றி பெற்றிருக்கக் கூடிய சம்ஸ்க்ருத பரிசோதனை அரைகுறையாக நின்று போனதால் ஆங்கிலம் மட்டுமே சாத்தியமான மாற்று என்றாகி விட்டது. வரலாறாகியிருக்க வேண்டிய மெக்காலே பழிவாங்கத் திரும்பி வந்து விட்டார். ஆசிரியர் மசானி கூறும் வழிப்படி இந்தியா தொடர்ந்தால், மெக்காலே இங்குதான் தங்கப் போகிறார்.

(This review of Zareer Masani’s biography,Macaulay: Pioneer of India’s Modernization(Random House,Noida 2012),was published in Orientalistische Literaturzeitung in

December 2016 (p.528)

Series Navigation<< கருத்து சுதந்திரத்திற்கு ஆதரவாக…..‘இந்திரப்ரஸ்தா’ – வகுப்புவாதப் பெயரல்ல >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.