வங்க இலக்கியத்தின் சிலமுகங்கள்

எந்த மொழியிலும் இலக்கியத்திற்குப் பலமுகங்கள் உண்டு. வங்க இலக்கியமும் இதற்கு விலக்கல்ல. ஒரு நாகரிகத்தை, கலாச்சாரத்தை, அதன் சரித்திரத்தை முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டுமெனில், அந்த மொழியிலுள்ள இலக்கியங்கள் என்றென்றும் அதற்குத் துணைநிற்கும். எத்தனை மொழிகள் நமது இத்தேசத்தில், எத்தனை அரிய எழுத்துக்கள், அற்புதமான படைப்பாளிகள், நேற்றும், இன்றும், நாளையும் கூட…. 

இங்கு வங்க இலக்கியத்தின் சில புனைவுகளையும், அவற்றைப் படைத்தோரையும், படைப்புகளின் கால கட்டங்களையும் நான் இரசித்தபடி உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். 


ராஜ்மோஹனின் மனைவி

1864-ம் ஆண்டில்,அரசாங்க நியாயாதிபதியாகப் பணிபுரிந்த பங்கிம்சந்திர சாட்டர்ஜி எனும் 26-வயது இளைஞர் ‘ராஜ்மோஹனின் மனைவி’ எனும் புதினத்தை ஆங்கிலத்திலேயே எழுதி ஒரு வாரப்பத்திரிகையில் தொடராக வெளியிட்டார். பங்கிம்சந்திர சாட்டர்ஜி வங்க இலக்கிய மறுமலர்ச்சிக் காலத்தில் முக்கியமான இடம் வகிப்பவர். பங்கிம் எனச் செல்லமாக அவருடைய பிராந்திய மக்களான வங்காளிகளால் அழைக்கப்படுபவர். அவருடைய காலத்திற்குப் பின் (1838-94) நீண்ட நாட்கள் கழித்தே இப்புதினம் புத்தக வடிவில் வெளிவந்தது. இடைப்பட்ட காலத்தில் அருமையான பல புதினங்களை அவர் வங்கமொழியிலேயே எழுதினார். வங்கமொழியில் படிக்க இயலாதவர்கள் அவற்றைப் படிப்பதற்கு ஆங்கில மொழிபெயர்ப்புகளே துணை நிற்கின்றன. இருப்பினும் முதலிலேயே முற்றும் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட வங்க சமூக நாவல் இது என்பது ஆச்சரியத்தையே விளைவிக்கிறது. வங்காளத்தவர்கள் தாய்மொழிப்பற்று மிக்கவர்கள். அவ்வாறிருக்க, ஒரு வங்கக்கிராமத்தில் நடக்கும் கதையை பங்கிம்சந்திரர் ஏன் ஆங்கிலத்தில் எழுதினார் என்ற கேள்வியே எழுகிறது. வங்கப் பிரதேசத்தவர்களின் வாழ்க்கை முறையை மேலைநாடுகளுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டவா? அதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டியா? தற்காலத்தில் பல இந்திய மொழிப்புதினங்கள் ஆங்கிலத்தில் எழுதப்படுகின்றன. ஆனால் 1864-ல் இதன் அவசியம் என்ன? சிந்திக்க வேண்டிய கருத்து. 

இனி புதினத்தைக் காண்போம். இது அருமையான துப்பறியும் நாவல் போலப் பல திடுக்கிடும் சம்பவங்களையும் திருப்பங்களையும் கொண்டமைந்துள்ளதால் நான் கதைச் சுருக்கம் தரப்போவதில்லை. என்னைப்போல விருப்பம் உள்ளவர்கள் தேடிக் கண்டுபிடித்து வாங்கிப் படித்து மகிழுங்கள். ஏமாற்றமடைய மாட்டீர்கள். நான் உத்தரவாதம்!!

இப்புதினம் கிழக்கு வங்கத்தின் நடுத்தரக் குடும்பத்து வாழ்க்கை முறைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. முரடனான படிப்பறிவற்ற ஒருவனுக்கு வாழ்க்கைப்பட்ட அழகும், அன்பும், அறிவும் நிறைந்த பெண்ணான மாதங்கினியின் வாழ்க்கையைச் சுற்றிக் கதை புனையப்பட்டுள்ளது. தன்மீது பிரயோகிக்கப்படும் அடக்குமுறைகளை ஒருநிலை வரைக்கும் மட்டுமே அவளால் பொறுத்துக்கொள்ள முடிகிறது. அதனை தன்னால் முடிந்த விதங்களில் எதிர்த்துப் போராடுகிறாள். சம்பிரதாயங்களை உடைத்தெறியும் பெண்ணாக அவள் காட்டப்படுகிறாள். அவளுடைய பாத்திரப்படைப்பு மிகவும் வலுவானது. பயந்த சுபாவம் கொண்டவளாக முதல் அத்தியாயத்தில் நாம் காணும் பெண், அநீதியை எதிர்த்தெழுந்து, நியாயத்தின் பக்கம் சேர்ந்து போராடுவது வாசிக்கும் நமக்குமொரு புத்துணர்வை அளிக்கிறது.

இந்த நாவலே வங்க மறுமலர்ச்சி இலக்கியத்தின் துவக்கமாகும். வங்கத்தில் அன்னை தெய்வத்தின் வழிபாட்டு மரபினாலோ என்னவோ சமூகத்திலும், புதினங்களிலும் பெண்கள் உயர்வானவர்களாகச் சித்தரிக்கப் படுகின்றனர். அவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை எழுத்தாளர்கள் சாடுகின்றனர். மென்மையான பார்வதி, துர்காவாகச் சித்தரிக்கப்படும் மாதங்கினி எனும் பாத்திரம், ஆக்ரோஷத்துடன் போராடும் காளிபோல் பிற்பாதியில் உருவெடுக்கிறது.

ஐரோப்பிய நாடுகளிலும் இக்காலகட்டங்களில் படைக்கப்பட்ட புதினங்கள் பெரும்பாலும் குடும்பம், சமுதாயம் சார்ந்த பாத்திரப்படைப்பினையே பெரிதளவில் கொண்டிருந்தன என்பது இங்கு நினைவுகூரத் தக்கது.

இத்துடன் உங்கள் ஆவலைத் தூண்டிவிட்டு நிறுத்திக் கொள்கிறேன். பங்கிம்சந்திரர் மேலும் இதே மறுமலர்ச்சிக் கருத்துக்களில் சரித்திர நாவலான ‘துர்க்கேஷ் நந்தினி’, சன்னியாசி இயக்கத்தினை விளக்கும் ‘ஆனந்தமடம்’ ஆகிய நாவல்களையும் எழுதிப் புகழ்பெற்றார்.  

இது வங்க இலக்கியத்தின் மறுமலர்ச்சியின் முதல் முகம்


சங்கீத அறை

அடுத்தது: 

இசை பற்றிய ஒரு நெடுங்கதை- ‘சங்கீத அறை’- எனும் பெயருடன் தாராசங்கர் பந்தோபாத்யாய் (1898-1971) அவர்களால் எழுதப்பட்டது. இவர் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்குபெற்றுச் சிறை சென்றவர். விடுதலையாகி வெளியில் வந்தபின்பு எழுதத் துவங்கினார். இவர்1955ல் ரவீந்திரர் பரிசையும், 1956ல் ‘ஆரோக்ய நிகேதனம்’ என்ற நாவலுக்காக சாஹித்ய அகாதமி விருதையும் பெற்றவர்.

இசையின் பின்னணியில், ஏழ்மையிலும் தனது உயர்குடிப் பெருமையை விடமுடியாது தத்தளிக்கும் பிஸ்வாம்பர் ராய் எனும் ஒரு பிரபுவைப்பற்றிய நெடுங்கதை இது. சில பாத்திரங்களையே மையமாகக் கொண்டு மனித உணர்வுகளையும் உறவுகளையும் நுணுக்கமாக நோக்கிப் படைக்கப்பட்டது. 

கதை சுருக்கமாக:

பிஸ்வாம்பர் ராய் எனும் பிரபு தனது மாளிகையின் மாடி வராந்தாவில் குறுக்கும் நெடுக்கும் நடைபயிலுகிறார். தனது பணியாள் தயாராக வைத்திருக்கும் ஹுக்காவைப் புகைக்கக்கூட இன்னும் அமரவில்லை. தொலைவில் அவர்கள் குடும்பத்திற்கு சொந்தமான காளி கோவிலின் மணியோசை கேட்கிறது. கங்கை மெல்லிய தெளிந்த நீரோட்டமாக ஓடிக்கொண்டிருக்கிறது.  

ஒரு கனவுலகம் போன்ற ஆழ்ந்த அமைதியான விடியலில் கதை துவங்குகிறது. தோட்டத்து மரங்களிலிருந்து மலர்களின் மென்மையான இனிய நறுமணங்கள் தவழ்ந்து வருகின்றன. தூஃபான் எனப்பெயர்கொண்ட அவருக்குப் பிரியமான குதிரை, லாயத்திலிருந்து கனைக்கிறது. இரண்டாண்டுகளுக்கு முன்புகூட அந்த அழகான வெள்ளைக்குதிரைமீது கம்பீரமாக ஆரோகணித்து களையான உருவமும் கச்சிதமான தலைப்பாகையுமாக அவர் வலம்வந்தார். அந்தக்குதிரை இசைக்கேற்ப லயத்துடன் நடைபோடப் பழகியிருந்தது. இப்போது அதனைப் பார்ப்பதற்காகக் கீழிறங்கிச் செல்கிறார். 

பிஸ்வாம்பர் ராயின் பிரபுத்துவக் குடும்பம் வாழ்ந்து கெட்டது. ஏழு தலைமுறைகளாக அரசபோகத்துடன் வாழ்ந்தவர்கள் பிஸ்வாம்பரின் பாட்டனார் காலத்திலிருந்து ஊதாரித்தனமான ஆடம்பரச் செலவுகளைச் செய்து வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டனர். அரசாங்கத்தினால் மானியம் நிறுத்தப்பட்டதும் அனைத்து சொத்துக்களையும் அக்குடும்பத்தவர் இழந்தனர். இத்தலைமுறையின் கடைசி பிரபுவான பிஸ்வாம்பர் ராய் மனைவி மக்களைக் காலரா நோய்க்குப் பறிகொடுத்தவர். தற்போது சிதிலமடைந்த தனது அரண்மனையில் சில பணியாளர்களுடன் வாழ்ந்து வருகிறார். மிகவும் நொடித்துப்போன நிலை. ஆனால் பிரபுத்தனத்திற்குக் குறைவில்லை. யானை, குதிரைக்கொட்டாரத்தில் வகைக்கொன்றாக ஒரு யானை, அவருக்குப் பிடித்தமான ஒரு குதிரை- இப்போது அதற்கும் வயதாகி விட்டது- இருந்தது. 

இசைக்கேற்ப நடைபோடப் பழகியிருந்த அக்குதிரை பக்கத்து பங்களாவிலிருந்து காற்றில் மிதந்து வந்த பாண்டு வாத்தியத்தின் ஒலிக்கேற்ப இருந்த இடத்திலேயே நடை போட்டது! அங்கு  மஹிம் கங்குலியின் பெரிய பங்களாவில் அவன் குடும்பம் சமீபத்தில் சேமித்த செல்வச் செழிப்பில் வாழ்ந்தது. அவர்களுடைய பெரிய மோட்டார்கார் இந்தக் குதிரைக்கும் யானைக்கும் ஈடாகுமா?

கங்குலி வீட்டில் அவனுடைய குழந்தைக்கு அன்னப்பிராசனம் (முதல் அரிசி உணவூட்டல்) நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. பிஸ்வஜித் ராய் தமது காரியதரிசியிடம் தனக்கு அழைப்பு வந்துள்ளதா எனக் கேட்கிறார். அவன் உண்டென்றதும், தான் அக்குழந்தைக்குப் பரிசளிக்க எண்ணி, கிட்டத்தட்ட காலியான தனது பணப்பெட்டியைக் குடைந்து இருக்கும் சில  தங்க நாணயங்களில் ஒன்றை எடுத்து வெண்கலத்தட்டில் வைத்து, அதனை அலங்கரிக்கப்பட்ட தன் யானைமீது ஏறிச்சென்று அந்தப் பணியாளனே தனது சார்பாக அளிக்கக் கட்டளையிடுகிறார். பின் ஹுக்காவைப் புகைக்க ஆரம்பிக்கிறார்!

கடுகு சிறுத்தாலும் காரம் குறையுமா என்பதற்கு இது முதல் உதாரணம்.

மாலையில் கங்குலியே வந்து பிஸ்வாம்பர் ராயைத் தன் வீட்டில் நடக்கவிருக்கும் இசை – நடன நிகழ்ச்சிக்கு அழைக்கிறார். தன் வயது, நெஞ்சுவலியைக் காரணம்காட்டி மறுத்துவிடுகிறார் ராய். இந்த இசை நடன நிகழ்ச்சியைக் கண்டு களிக்கவே பெரிய பிரபுக்கள் தங்கள் மாளிகையில் ஒரு பெரிய கூடத்தைக் கட்டி வைத்திருப்பார்கள். லக்னோவிலிருந்து இதற்காகவே பயிற்சிபெற்றுத் தொழில் நடத்தும் ‘பாயி’ஜிக்கள் எனும் நடனமாதரை அழைத்து வருவார்கள்.

அவ்வாறு நடக்கும் நடன நிகழ்ச்சியில் தமது செல்வச் செழிப்பையும் செருக்கையும் விளம்பரப்படுத்திக்கொள்ள பார்வையாளர்கள் அப்பெண்கள்மீது பணத்தை, தங்கக் காசுகளை வாரியிறைப்பார்கள். அன்றுமாலை கங்குலியின் மாளிகையில் நடந்த இசை நடன நிகழ்ச்சியிலும் அவ்வாறே ஆயிற்று. அனைவரின் உரத்த உரையாடல்களுக்கு மத்தியில் நிகழ்ச்சிகள் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு நடைபெற்றன. ஐந்தாம்நாள் அவர்கள் விடைபெறும்போது கங்குலி இரு பாயிஜிகளிடமும் (குள்ளநரித்தனமாக) கூறினான்: “எங்கள் ராஜா இங்கு பக்கத்தில்தான் வாழ்கிறார், அவரைச் சந்தித்துவிட்டுச் செல்லுங்கள். அவர் ஒரு பணக்காரக் கலாரசிகர். உங்களை ஒரு நிகழ்ச்சி செய்யக்கூடக் கூறலாம்.”

“நாங்கள் அவரைப்பற்றிக் கேள்விப்பட்டுள்ளோம். அவரைக் காணச் செல்கிறோம்.”

மிகுந்த பிரயாசையின்பின் பிஸ்வஜித்தைக் கண்டு வணங்கிய ‘பாயி’ஜியிடம், “இன்றிரவு இங்கு ஒரு கலைநிகழ்ச்சி நடத்துங்கள்,” எனக்கூறிவிட்டு, அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய பணத்திற்கு என்ன செய்வதென்று ஆலோசிக்கிறார்.

ஒரு இரவு நடன நிகழ்ச்சிக்கு கங்குலியிடமிருந்து அவர்கள் பெற்றுக்கொண்டது நூற்றைம்பது ரூபாய்கள் என அறிந்தவர் எப்படியோ தனது கணக்குகளை அப்படியும் இப்படியும் சரிப்படுத்தி எழுதி, அந்தப் பணத்தைத் தயார் செய்கிறார். பிஸ்வாம்பர்ராயின் மூதாதையர் ஒருவர் ஐனூறு தங்கக்காசுகளை ஒரு பாயிஜியின் மீது சொரிந்தவர்!!

நடன நிகழ்ச்சிக்காக பாழடைந்த அந்த அரண்மனையின் ‘சங்கீத’ அறை திறக்கப்பட்டுத் தயார் செய்யப்படுகிறது. கிட்டத்தட்ட நாற்பது விருந்தினர்கள் அழைக்கப்படுகின்றனர். விருந்தினர் வந்ததும் பிஸ்வஜித்ராய் தானும் படாடோபமாக அலங்காரம் செய்துகொண்டு தயாராகிறார். வேண்டுமென்றே தாமதமாக ஒரு ராஜாவுக்குரிய பெருமிதத்தோடு சங்கீத அறைக்குள் நுழைகிறார். ஆனால் பாடல் துவங்கியதும் பெருத்த அமைதி நிலவுகிறது. பியரிபாய், கிருஷ்ணாபாய் ஆகிய அவ்விருவரும் பாடியாடும்போது பிஸ்வஜித்திற்குத் தாம் இளமையில் இந்த அறையில் ரசித்த சந்திராபாயின் இசையும், நிகழ்ச்சியின்பின்பு அவளுடன் கழித்த இனிய பொழுதுகளும் எண்ணத்தில் ஓடுகின்றன. தன்னை மறந்தவண்ணம் அமர்ந்திருப்பவரை அவமானப்படுத்த, மஹிம் கங்குலி, பாடகிகளுக்கு இனாம் அளிக்கிறான். நிகழ்ச்சியின் அமைப்பாளரான பிஸ்வஜித் மட்டுமே அந்த முதல் மரியாதையைச் செய்ய உரிமை படைத்தவர். ஆனால், அவர்முன்பு வெள்ளித்தட்டோ, அதில் தங்கக்காசுகளோ இல்லை.

பாடகி பாடுகிறாள்- கேசவ் குழலிசைக்கிறான்; யமுனை நதி கொந்தளிக்கின்றது; கிருஷ்ணனைத் தன்னுடன் அணைத்துக்கொள்ளத் துடிக்கின்றது; பாடலும் நடனமும் மிக அருமையாக உள்ளன. ராய் அனைத்தையும் மறந்துவிட்டார். பாடல் முடிவுறுகிறது. “அற்புதம்! சந்திரா!” என்கிறார். 

அவரைப் பணிந்து வணங்கி, “பிரபு! உங்கள் அடிமையின் பெயர் கிருஷ்ணாபாய்,” என்கிறாள் கிருஷ்ணா. 

ராய் அறையைவிட்டு வெளியேறுகிறார். சிறிது நேரத்தில் மானேஜர் தாராபிரசன்னா வருகிறான். ஒரு வெள்ளிக்கிண்ணத்தை அறையின் நடுவில்வைக்கிறான்; அதில் இரு தங்கக்காசுகள் உள்ளன. “ஐயாவிடமிருந்து இனாம்,” என அறிவிக்கிறான். “அவருக்கு லேசான நெஞ்சுவலி. திரும்ப வர மாட்டார். உங்கள் மன்னிப்பை வேண்டுகிறார்,” என்றான். அனைவரும் ஏமாற்றத்துடன் விடைபெறுகின்றனர்.

அனைவரும் சென்றபின் ராய் அவ்வறைக்கு வருகிறார். குறுக்கும் நெடுக்கும் உலவுகிறார். தூரத்தில் ஒரு பறவை கூவுகிறது. ராயின் இதயத்தில் என்றோ சந்திரா பாடிய பெஹாக் ராக இழைகள் எதிரொலிக்கின்றன. சங்கீத அறை விளக்குகளை அமர்த்தவந்த பணியாளை வேண்டாமெனக் கூறி அனுப்பிவிட்டு ‘எஸ்ராஜ்’ எனும் தனது சங்கீத இசை வாத்தியத்தை எடுத்துவரப் பணிக்கிறார். சிறிது விஸ்கியை அருந்திவிட்டு, சந்திராவின் நினைவிலாழ்ந்து இசைக்கிறார். பின் வாத்தியத்தைக் கீழேவைத்ததும் கிருஷ்ணாபாய் உள்ளே நுழைகிறாள். தானும் கூடச் சேர்ந்து பாடுகிறாள். விஸ்கியைத் திரும்ப நிரப்புகிறாள். நடனமாடுகிறாள். ராயும் அவளை அணைத்தபடி ஆடுகிறார். ஆடியவண்ணம் அவள் தரையில் சரிகிறாள். “என் அன்பே! சந்திரா!’ ராயின் குரல்.

பாடியும் ஆடியும் அவர்கள் இருவரும் களைத்தபின் அவள் கட்டைபோலத் தரையில் கிடக்கிறாள். அவளை ஒரு தலையணைமீது கிடத்தியவர், கங்குலி வீட்டுக் கடிகாரம் மூன்றுமணி அடிப்பதை உணர்கிறார். திடுக்கிடுகிறார். அவர் தினமும் எழும் காலைப்பொழுது. பணியாளைக் கூப்பிட்டுத் தன் குதிரை சவாரிக்கான உடைகளைக் கொண்டுவரப் பணிக்கிறார். உடனேயே தன் குதிரை தூஃபானுக்குச் சேணம் அணிவிக்கக் கூறுகிறார். 

இரவின் கடைசி மணி நேரங்களில் குதிரை மீது வெள்ளைத் தலைப்பாகையுடனும் சவாரிசெய்யும் ஆடைகளுடனும் பளபளக்கும் சாட்டையுடனும் மிடுக்காக சவாரி செய்கிறார். தூஃபான் ‘டக்டக்’கென கம்பீரமாக விரைந்து ஓடுகிறது. புழுதி பறக்கிறது. ஒரு வண்டி காய்கறிகளைக் குவித்துக்கொண்டு அவரைக் கடக்கிறது. சந்தைக்குச் செல்கிறது போலும். அவர் எங்கே இருக்கிறார்?

வண்டிக்காரர்கள் தமக்குள் பேசிக்கொள்கிறார்கள்: “கங்குலி இங்கு வாங்கிக்கொண்டு வந்ததிலிருந்து…”

சடாரென்று லகானை இழுத்து தூஃபானை நிறுத்துகிறார் ராய். “வரிகொடுத்தபின்பு ஒன்றுமே மிஞ்சுவதில்லை. நம்மை ராய்கள் ஆண்டபோது நாம் மகிழ்ச்சியாக இருந்தோம்…..” என அவர்கள் பேசிக் கொள்கிறார்கள்.

(மதுவின் போதை இன்னும் தெளியவில்லை; குடிப்பெருமை மனதிலிருந்து இன்னும் அகலவில்லை; பெருமித்துப் பூரித்த உள்ளமா? இப்படி வாழ்க்கை நிலைகுலைந்து விட்ட ஆதங்கமா?)

குதிரையைத் திருப்பித் தமது மாளிகையை நோக்கி விரட்டுகிறார். அது உடலெல்லாம் சிலிர்க்க ஓடுகிறது. லாயத்தை அடைந்ததும், அதன் வாயிலுள்ள கடிவாளத்திலிருந்து ரத்தம் கசிகின்றது. “என் பையா,” என அதனைத் தடவிக் கொடுத்தவர், “தவறு நம் இருவருடையதும் தான்,” எனக்கூறியவண்ணம் மாளிகையை நோக்கி விரைகிறார். சங்கீத அறைக்குள் நுழைந்தவர் காண்பது காலியான வெறிச்சிட்ட அறையையும், காலியான விஸ்கி பாட்டில்கள், அணைக்கப்பட்ட விளக்குகள் இவற்றையும்தான். பாயிஜிக்கள் சென்றுவிட்டிருந்தனர். 

ராய் குடும்பத்து முன்னோர்கள் (படங்கள்) சுவரில் வரிசையாக இருந்துகொண்டு அகங்காரம் நிறைந்த பார்வையுடன், வெறித்தனமான ஆசைப்புன்னகைகளை முகத்தில் விரித்தபடி இருந்தனர். அதைக்கண்ட ராய் பயந்து பின்வாங்கினார். தன்னைத்தானே கண்ணாடியில் பார்த்துக் கொள்வதாக எண்ணினார்- முன்னோர்களின் அதே ஆசைகள் அவரிடத்திலும் குடிகொண்டிருந்தன. அவருடையது மட்டுமன்று- ஏழு தலைமுறை ராய்களின் அத்தனை ஆசைகளும் அவ்வறையில் குடியிருந்தன. 

கதவு வழியாக வெளியேவந்து, கைப்பிடியில் சாய்ந்தபடி தன் பணியாளைக் கூவி அழைத்தார். தன் எஜமானர் இவ்வாறு பரபரப்போடு அழைத்துக் கேட்டறியாத பணியாள் ஓடோடிவர, அவனிடம், “சங்கீத அறையின் விளக்குகளை அணைத்துவிடு, கதவைப் பூட்டிவிடு,” எனக் கூவுகிறார்.

அவர் குரல் பின்பு கேட்கவேயில்லை. அவருடைய கையிலிருந்து சாட்டை நழுவி விழுந்து சங்கீத அறைக்கதவில் ஒரு பெரிய சப்தத்தை உண்டு பண்ணியது.


ஆஹா! அருமையான உள மனோதத்துவ வெளிப்பாடுகள் ஆங்காங்கே இலைமறைகாயாக வெளிப்படுகின்றன. மனிதனது விபரீதமான ஆசைகளும், ஊதாரித்தனத்தை பிரபுத்துவம் என எண்ணிக்கொண்டு நிகழ்த்தும் செயல்பாடுகளும் கதைமுழுதும் நிரம்பி வழிந்து நம்மை ஆங்காங்கே சிலிர்க்க வைக்கின்றன. அதை இறுதியில் உணர்ந்துகொண்ட ராயின் நிராசையும் பயமும் கலந்த (குற்ற?) உணர்வு நம்மை அவருக்காகப் பரிதாபப்பட வைக்கின்றது.

இசை, நடன மணிகளைப் போஷிப்பது ராஜாக்கள், பிரபுக்களின் வழக்கமாக நாடுமுழுதும் இருந்து வந்துள்ளது. எஸ். ராமகிருஷ்ணனின் சாஹித்ய அகாதமி பரிசுபெற்ற ‘சஞ்சாரம்’ நாவலிலும் இதே போல ஒரு நாதஸ்வரக்குழு வாழ்ந்துகெட்டு வறுமையில் உள்ள ராஜாவின் கையால் அவரிடமிருந்த கடைசிப் பரிசுப்பொருள்களைப் பெறுவதனை விவரித்திருப்பார். அதுவொரு காலம்!

வாழ்ந்து கெட்டவர்களை கங்குலி போன்ற புதுப்பணக்காரர்கள் மட்டம் தட்டுவதையும் காணலாம்; ஆனால் தன் குடிப்பெருமையைப் பெரிதென மதிக்கும் அப்பிரபுக்கள் எப்பாடு பட்டேனும் அதனைக் காத்துக்கொள்ள முயல்வது சில பொழுதுகளில் வீண் டம்பமாகத் தோன்றுகிறது……..

இது இன்னொரு முகம்……. மறைந்தொளிந்து இறுதியில் வெளிப்படும் அரசபரம்பரையின் அவல முகம்! ……


சித்ராங்கதா

இந்த இருவரிலிருந்தும் ரவீந்திரநாத் தாகூரின் (1861-1941) எழுத்துக்கள் தனித்து நிற்கின்றன. மறுமலர்ச்சி இலக்கியத்தைத் தொடர்ந்த தற்கால வங்க இலக்கியத்திற்கும் இசைவடிவிற்கும் அஸ்திவாரமிட்டவர் அவர். இருப்பினும் புராணப்பாத்திரங்கள் அவருடைய நோக்கில், எழுத்தில் அற்புதமாகப் புத்துயிர் பெறுகின்றன எனக் கூறுதல் மிகையாகாது. கவிதைகளும், புதினங்களும் கதைகளும் எழுதிய தாகூர், நாடகங்களின் பாத்திரங்களின் படைப்பிலும், அவர்களிடையே நிகழும் உரையாடல் மட்டுமன்றி உணர்வுப் பரிமாற்றங்களையும் நுணுக்கமாக இழைத்து, நாம் அறிந்ததொரு செய்திக்கு புத்துயிரும் புதிய பரிமாணமும் அளிப்பதனைக் கண்டு வியந்து சிலிர்த்திருக்கிறேன். பகிர்ந்துகொள்ள ஆவல்!

‘சித்ராங்கதா’ எனும் நாடகத்தைப்பார்க்கலாம். அர்ஜுனனின் தீர்த்தயாத்திரையும், அவன் மணிப்பூரை அடைந்து அரசன் சித்ரவாஹனனின் மகள் சித்ராங்கதாவை மணந்து கொண்டு அவளுடைய தந்தைக்கு ஆண்வாரிசாகத் தங்களுக்குப் பிறக்கும் மகன் பப்ருவாஹனனையும் கொடுத்த கதை நம்மில் பலருக்கும் தெரியும். சித்ரா- அர்ஜுனன் காதலுக்கு ஒரு புதிய பரிமாணத்தைக் காட்டுகிறார் தாகூர். மிகவும் அருமையான எழுத்து! ஆங்கில மொழியாக்கம் தாகூரே செய்ததுதான்! அதனால்தான் தாக்கம் அற்புதமாக உள்ளதோ என்னவோ!

கதையைக் காணலாம்:

அர்ஜுனனின் வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு வைத்த குறி தப்பாது வெகு தூரத்திலிருந்த அந்தக் கொடிய காட்டு மிருகத்தை வீழ்த்தியது. இதைப்பார்த்துக் கொண்டிருந்த அந்த அழகிய இளைஞன் மிகுந்த பரவசம் கொண்டான். 

‘ஆகா! இத்தனை அற்புதமாக வேட்டையாடும் இவர், ஆண்மையும் கம்பீரமும் பொங்கும் இவர் யார்?’ வினாக்கள் இளைஞனைக் குடைகின்றன. இளைஞனின் உள்ளம் தன் வயமிழந்து அவர்பால் ஈடுபட்டு விட்டது. ஒரு வீரனுக்கல் லவோ இன்னொரு வீரனின் வீரத்தின் உயர்வு பற்றித் தெரியும்? ஆனால் அர்ஜுனனின் முன்பு நின்ற போதில் இந்த இளைஞனின் உள்ளம் குழைந்து தத்தளித்ததே! அது எதனால்?

உள்ளத்தை இழந்து தவிக்கும் காதற்பெருக்கில் கண்ணீர் வழிந்தோட, மதனனிடம் (காமதேவனிடம்) இதனை விவரிக்கிறான் பால்வடியும் முகத்தினனான அந்த இளைஞன். “மேலும் கீழுமாக என்னுடைய மெல்லிய உருவத்தைப் பார்த்த அவருடைய இதழ்க்கடையில் ஒரு இகழ்ச்சிப் புன்னகை தோன்றியது. நான் ஒரு பெண் எனவும், கம்பீரமான சுத்தவீரனான ஆண்மகனின் முன் நிற்பதையும் என் வாழ்வில் முதல்முறையாக உணர்ந்தேன்,”என்கிறான்(ள்).  

குழம்ப வேண்டாம். யார் இந்த இளைஞன் தெரியுமா? 

மணிபுரத்தின் அரசன் சித்ரவாகனனின் மகளான இளவரசி சித்ராங்கதாவே இவ்வாறு ஆண்வேடம் பூண்ட அந்த இளைஞன். 

கவியரசர் தாகூர் இவர்கள் கதையைச் சிறிதே மாற்றியமைத்து சித்ராங்கதா – அர்ஜுனன் காதலை ஒரு புதிய கோணத்தில் நமக்குக் காண்பிக்கிறார்.

காதற்கடவுளான மதனனையும் அவனது உதவியாளன் வசந்தனையும் இளவரசி சித்ராங்கதா சந்திக்கிறாள். மதனனிடம் சித்ரா சொல்கிறாள்: “சிவபெருமான் என் தந்தையின் வம்சத்தினருக்கு ஆண்வாரிசுகளையே தருவதாக வரமருளியிருந்தார். ஆனாலும் என் விஷயத்தில் அது பொய்த்தது. நான் என் தந்தைக்கு பெண்வாரிசாகப் பிறந்தேன். இருப்பினும் பெண்ணான என்னை ஆண்மகனைப் போலவே வளர்த்து, வில், வாள் வித்தை பயிற்றுவித்தார். ஆண்மக்களின் உடைகளையே நானும் அணிந்து வந்தேன். அந்தப்புரத்தில் தங்குவதை விட்டொழித்தேன். பெண்மையின் நளினங்களும், குழைவுகளும் எனக்குத் தெரியாது.”

மதனன் ,”சரியான சமயத்தில் நானே ஆணுக்கும் பெண்ணுக்கும் தங்களை உணரும் பாடத்தினைக் கற்பிப்பேன்.” 

“மதனா, அவர் அர்ஜுனன் என அறிந்து கொண்டதும் என் மனம் என்ன பாடுபட்டது தெரியுமா? அவரை வணங்கவும் மறந்து நின்றேன். எனது கனவுகளின் நாயகன் அவர் அல்லவோ? அவரை வாள்வித்தையில் எதிர்கொண்டு அவர் எனது வாளை முறிப்பதை எதிர்பார்த்தேன்; நான் கற்ற போர்க்கலையை அவரிடம் காட்டி பெருமைப்பட எண்ணினேன். இக்கனவுகளில் ஆழ்ந்து சிலையென நான் நின்றிருந்தபோது, அவர் வனத்துள் சென்று மறைந்து விட்டார். 

“அடுத்த தினம் நான் பெண்ணின் ஆடைகளைப் புனைந்து கொண்டு அவரைத் தேடிச் சென்றேன். சிவன் கோவிலில் அவரைக் கண்டேன். 

“நான் பேசியதும் அவர் பதில் கூறியதும் என் நினைவில் இல்லை!  அவர் கூறியவை….. காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போன்ற மொழிகள்…. என் மீது இடியிறங்கியது போன்ற சொற்கள்….. அர்ஜுனன் கூறினார்: ‘பெண்ணே! நான் பிரம்மசரிய விரதம் பூண்டுள்ளேன். ஆகவே என்னால் உனக்குக் கணவனாக இருக்க இயலாது!’  மதனா, இவை எத்தனை கொடூரமான சொற்கள்! ரிஷிகளும் முனிவர்களும் எத்தனைபேர் தங்கள் ஆயுட்காலத் தவத்தின் பயனை ஒரு பெண்ணிடம் இழந்துள்ளார்கள்! நான் ஏன் நிராகரிக்கப்பட்டேன்? அர்ஜுனனின் மனதை மயக்கும் பெண்மையின் சுந்தர வடிவு எனக்கு இல்லாததால் தானே!

“மதனா, காதலின் கடவுளே! எனது ஆண்மையின் வலிமையையும், பெருமையையும் நீ புழுதியில் கிடத்தி விட்டாயே!” அர்ஜுனன்பால் பெருங்காதலில் ஆழ்ந்து விட்ட சித்ராங்கதா புழுவாகத் துடிக்கிறாள். 

காதலின் இந்த நிலையின் தாபத்தை, உட்பொருளைத் தாகூர் உணர்த்தும் விதத்தினை நாம் சிறிது உற்று நோக்கலாமே!

தான் காலகாலங்களாகக் கனவுகண்டு மனதில் உருவகப்படுத்தி வைத்திருந்த பேராண்மை மிக்க ஆண்மகன், அர்ஜுனன்; அவனை நேரில் கண்டதும், சித்ராவின் பெண்மை உணர்வுகள் விழித்துக் கொண்டு அவன்மீது மீளாக் காதலில் ஆழந்து விடுகிறாள் பாவம்! ஆண்மகனை வெற்றி கொள்ளும் பெண்மையின் நளினங்களும், மென்மைச் செய்கைகளும் குணங்களும் அவற்றைப் பற்றி அறிந்திராத அவளுக்கு இயற்கையாக அமையவில்லை; அவள் வளர்ந்த விதம் அவ்வாறு! 

அவள் துயரைக்கண்ட மதனனும் வசந்தனும் பெண்மையின் மென்மை, இனிமை, ஒப்பற்ற அழகு இவற்றை அவளுக்கு ஒராண்டுக் காலத்திற்கு மட்டும் வழங்குகின்றனர். அடுத்த வந்த நாட்களில் சித்ராங்கதாவின் எழிலுருவைக் கண்ட அர்ஜுனன் அவள்பால் காதல் வயப்படுகிறான். காதலர்கள் இணைந்து இன்புறுகின்றனர்.


இப்போது கதையில் ஒரு எதிர்பாராத திருப்பம்! மணிப்புரியைப் பகைவர்கள் தாக்குகின்றனர். நாட்டு மக்கள் தங்கள் நாட்டை இத்தனைநாள் காத்து வந்த தங்களது வீர இளவரசி சித்ராவைக் காணாததால் குழப்பத்திற்குள்ளாகின்றனர். மக்கள் அவள் எங்கோ எதற்கோ தவம் இயற்றச் சென்று விட்டதாக பேசிக் கொள்கின்றனர். இதனை அறிந்து கொள்கிறான் அர்ஜுனன். 

“அவள், இளவரசி சித்ரா, வீரத்தில் தனக்கு நிகரில்லாத ஆண்மகன் போன்றவள்; மென்மையில் தனக்கு நிகரற்ற பெண்மணியானவள் என மக்கள் கூறுகின்றனர், அவள் எங்கே சென்று விட்டாள்? ஏன்?” எனத் தான் யாரென்று இன்னும் அறிந்து கொண்டிராத தன் காதலியான சித்ராவினிடம் கூறுகிறான். தான் போய் மக்களுக்கு உதவ வேண்டும் எனப் பரபரக்கிறான். இளவரசி சித்ராங்கதாவைப் பற்றிய எண்ணங்களே அவன் மனதை ஆக்கிரமிக்கின்றன. 

அவளைப் பற்றியே பேசிவரும் அர்ஜுனனிடம் உண்மையான சித்ரா பொய்க்கோபம் கொள்கிறாள்.”சித்ராவின் குறை என்னவென்று தெரியுமா? அவள் துரதிருஷ்டசாலி. அவளுடைய வீரதீரப் பிரதாபங்கள் அவள் தனது பெண்மை உள்ளத்தை வெளிப்படுத்த ஒரு தடையாக நின்றன. நிறைவேறாத கனவுகள் கொண்டது அவள் வாழ்க்கை,” எனத் துயரத்துடன் அவனிடம் கூறுகிறாள் சித்ராங்கதா.

அர்ஜுனன்: “பெண்ணே! இன்னும் அவளைப் பற்றி உனக்குத் தெரிந்ததை எல்லாம் எனக்குக் கூறுவாய்.

“என் மனக்கண்ணில் நான் காணும் அவளை, சித்ராவை, ஒரு வெண்புரவி மீதமர்ந்து, கடிவாளத்தை இடது கையிலும், வில்லினை வலது கையிலும் ஏந்தியபடி, நம்பிக்கையைத் தன்னைச் சுற்றிப் பரப்பி நிற்கும் ஒரு வெற்றி தேவதையாக நான் காண்கிறேன். கண்மூடித்தனமான அன்புடன் தனது குட்டிகளைக் காக்கும் பெண்சிங்கமென அவளை நான் உருவகிக்கிறேன்; ஆற்றல் மிகுந்து, உறுதியுடன் காணப்படும் பெண்மையின் கரங்கள், மென்மையற்றதும் அழகுபடுத்தப்படாததும் ஆயினும் ஒப்பற்ற அழகு வாய்ந்தவை தெரியுமா?” எனவெல்லாம்  இளவரசி சித்ராவைப் பற்றி உணர்ச்சிகரமாக அர்ஜுனன் வருணித்துக் கூறக் கேட்கிறாள் அவள்.

அர்ஜுனனின் காதலின் பரிபூரணத்துவத்தை உணர்ந்து சிலிர்க்கிறாள் சித்ரா. பெண்மையின் அழகாலும், மென்மையாலும், நளினத்தாலும் மட்டுமேதான் வெல்ல இயலும் எனத் தான் எண்ணியிருந்த அவனுடைய உள்ளத்தை, ஆண்மை முகிழ்க்கும் தனது முரட்டுப் பெண்மையாலும், அதில் உதித்த தன் கடமை உணர்வினாலும், அதன் தொடர்பான வீரத்திறத்தினாலுமே வெல்ல இயலும் என அறிந்து பேரானந்தம் கொள்கிறாள். தனக்குப் பிடிக்காத பொய்ம்மையான பெண் வேடத்தைக் கலைத்து விடுகிறாள். 

“அர்ஜுனா! என் கனவுகளின் நாயகனே, உம்மைக் காதலில் வழிபட ஒப்பற்ற  பெண்மை அழகினை நான் மதனனிடம் வேண்டி வாங்கி வந்தேன். என் வழிபாடு முடிந்து விட்டது. என் தெய்வத்தை நான் அறிந்து கொண்டேன். பூசைசெய்த காய்ந்த மலர்களை வெளியே வீசி விடுகிறேன்,” என்றபடி, அந்தக் கணத்தில் தான் அணிந்திருந்த போர்வை போன்ற மேல் அங்கியை விலக்கி விட்டு ஒரு ஆணின் உடையில் அவன் முன் நிற்கிறாள் இளவரசி சித்ராங்கதா.

“நானே அந்த மணிபுரத்து இளவரசி சித்ரா. மிகுந்த மகிழ்ச்சியுடன் எனது பெண்ணுள்ளத்தை உமக்கு அர்ப்பணிக்கிறேன். வடிவில் நான் பெண்ணழகி அல்ல. என் உருவக் குறைபாடுகளுடன் என்னை ஏற்றுக் கொள்ளுங்கள்! உங்கள் வீரம் மிகுந்த, கடினமான வாழ்வில் என்னை இணைத்துக் கொள்ளுங்கள்! உமது கடமைகளில் நான் பங்கெடுக்க அனுமதியுங்கள்! அப்போது உண்மையான என்னை நீங்கள் அறிந்து கொள்வீர்கள். நமக்குப் பிறக்கும் மகனை இன்னொரு அர்ஜுனனாக வளர்ப்பேன். எனது தந்தைக்கும் இந்த நாட்டுக்கும் அவன் அடுத்த வாரிசாவான். இதுவே மணிபுரத்து அரசமகளான சித்ராங்கதா தங்களுக்கு அளிக்கும் உறுதிமொழி,” என்கிறாள்.

“அன்பிற்குரியவளே! என் வாழ்வும் உன் அன்பினால் முழுமை பெற்றது,” என்று மகிழ்வோடு உரைக்கிறான் காண்டீபன்.


காதல் அரும்பிய மனதில், அதனால் எழும் பயங்களும் சந்தேகங்களும் வளர, தாங்கள் ஒருவரை ஒருவர் உணர்ந்து கொண்டதனாலேயே, அக்காதலின் சக்தியினாலேயே அதன் முழுமையையும் உணர்ந்த மனமொத்த காதலர் இருவரைத் தம் ஈடிணையற்ற கற்பனைத் திறத்தினால் ஒப்பற்ற இலட்சியக் காதலர்களாக உருவாக்கி விட்டார் கவியரசர் தாகூர். 

கம்பீரமானதொரு வீரமகனின் காதலில் தன் பெண்மையின் முழுமையையும் பெருமையையும் உணர்ந்தவளாகச் சித்ராங்கதாவையும், அவளுடைய தன்னலமற்ற, தன்னையே உணர்ந்து அறிந்து கொண்ட அன்பில் அர்ஜுனன் கண்டுகொண்ட அவளுடைய உறுதி வாய்ந்த உள்ளப்பண்பையும், உள்ளத்துக் காதலையும் நமக்குக் காண்பித்த தாகூரின் படைப்பின் சிறப்பை வியக்காமல் இருக்க முடியுமா? 

இதனாலேயே ரவீந்திரநாத் தாகூர் வங்க இலக்கிய உலகில் தமக்கென பிரம்மாண்டமான ஒரு தனியிடத்தைப் பெற்றுத் திகழ்கின்றார். இந்த நாடகத்தையும் படித்து மகிழுமாறு வேண்டிக்கொண்டு தற்போது விடை பெறுகிறேன்.


கட்டுரைக்குத் துணைநின்ற நூல்கள்;

  1.  Rajmohan’s wife- Bankimchandra Chatterjee,1996
  2. The greatest Bengali stories ever told- Arunava Sinha, 2016
  3. Collected Poems and plays by Rabindranath Tagore- Macmillan co.1973

முந்தைய பதிவுகள்:

https://solvanam.com/?p=80345

3 Replies to “வங்க இலக்கியத்தின் சிலமுகங்கள்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.