- ஏ நோதீர் துய் கினாரே துய் தாரோனி
- வி. ராமஸ்வாமி: நேர்காணல்
- மேதையுடன் ஒரு நேர்காணல்
- வங்காளத்தில் இலக்கியமும், அடையாள அரசியலும்
- சத்யஜித் ராயின் புதுப்பிக்கப்பட்ட ‘ஒப்பு’ முப்படத் தொகுப்பு
- 20ஆம் நூற்றாண்டின் வங்காளப் பத்திரிகை உலகம்
- தமிழில் வங்க எழுத்துகள்
- நாட்டிற்கு உழைத்த நமது நல்லவர்கள்: பங்கிம் சந்திர சாட்டர்ஜி
- வங்க இலக்கியங்கள்
- அனைத்திந்திய நூல் வரிசை: வங்கச் சிறுகதைகள் – முன்னுரை
- வங்காள வரலாறு
- நீலகண்டப் பறவையைத் தேடி… – முன்னுரை
- தன் வெளிப்பாடு – முன்னுரை
‘வந்தே மாதரம்’
ஒரு சொல் – ஆம், ஒரே ஒரு சொல் – ஒரு தேசத்தின் விடுதலைப் போரில் முக்கிய இடம் பிடிக்க முடியுமா? ஒரு சொல் அந்நியர்களை விரட்டும் போர்க் கருவியாக இருக்க முடியுமா? ஒரு சொல் அது கேட்பவர்களின் மனத்தில் சுதந்திரத் தாகத்தையும் வீரத்தையும் உண்டாக்குமா
ஆம்! அது ஒரு மந்திரம். சுதந்திரப் போரில் வேத மந்திரம். பாரத தேசத்தில் மூலை முடுக்குகளில்கூட எழுச்சியை உண்டாக்கிய சொல் அந்தச் சொல் எங்கிருந்து கிடைத்தது தெரியுமா? ஒரு நாவலில் இருந்து கிடைத்த பாடலில் உள்ள ஒரு சொல் அல்லது ஒரு வார்த்தை. அது எந்த நாவல்?
“ஆனந்த மடம்”
அந்த வார்த்தை தான் என்ன?
‘வந்தே மாதரம்’ என்பது தான் அது
“வந்தே மாதரம்”
சற்று உரக்க அழுத்தமுடன் நீட்டிச் சொல்லுங்கள்
வந்தே.. மாதரம்
சொன்னீர்களா? உங்கள் மனத்தில் ஒரு புது எழுச்சி, மகிழ்ச்சி இரண்டும் உண்டாகிறதா? கட்டாயம் உண்டாகும். இதே வார்த்தைதான் தேச விடுதலையின்போது பாரத தேசத்தில் வாழ்ந்த கோடிக்கணக்கானோர்களினை தேசப்பற்று கொள்ளச் செய்த சொல் இந்தியர்களுக்கு வேத கோஷம். ஆங்கிலேயர்களுக்கு ‘பயம் தரும் கோஷம்’.
“வந்தே மாதரம் என்போம் எங்கள் மாநிலத்தாயை வணங்குதும் என்போம்” எனப் பாரதி குறிப்பிட்டார்
‘வந்தே மாதரம்’ என்பதற்குத் ‘தாயை வணங்குகிறேன்’ எனப் பொருள். சுதந்திர வீரர்கள் யாரைத் தாயாக எண்ணினர் — பாரதத்தை.

“ஸுஜலாம் ஸுபலாம் மலயஜ ஸீதளாம் ஸஸ்ய ஸ்யாமளாம் மாதரம்! வந்தே மாதரம்
நல்ல நீர்கொடுப்பவளை, இனிய பழங்களை அளிப்பவளை, மலயமலையில் உண்டான குளிர் காற்றைக் கொண்டுவருபவளை, பச்சைப் பசுமைப் பயிர்களை உடையவளை, தாயை வணங்குகிறேன்
கோடி – கோடி குரல்களில் சிம்ம கர்ஜனை செய்பவளே!
கோடி – கோடி கைகளில் வாளைச் சுழற்றுபவளே! தாயே வணங்குகிறேன்!
கல்வி நீயே! தர்மம் நீயே! இதயம் நீயே! ஆன்மா நீயே! உயிர் நீயே! உடல் நீயே! கைகளில் உள்ள சக்தி அன்னையே உனது இதயத்தில் உள்ள பக்தியும் அன்னையே உனது! எங்களது ஒவ்வொரு கோயிலிலும் உள்ள உருவம் உனதே!
பத்துக் கைகளிலும் படைக்கலன்களைத்தாங்கிய துர்க்கை நீயே! தாமரை மலரில் வீற்றிருக்கும் லட்சுமி நீயே!
கல்வியளிக்கும் சரஸ்வதி நீயே! உன்னை வணங்குகிறேன் தாமரை வடிவினளை, அப்பழுக்கற்றவளை, ஈடிணையற்றவளை, நல்ல நீர் அளிப்பவளை, சுவையான பழங்களைக் கொடுப்பவளை, தாயை வணங்குகிறேன்.

1880-1882 வரை ‘வங்கதர்ஷன்’ இதழில் வெளியான ஆனந்த மடம் கதையில், தான் முன்னரே எழுதியிருந்த ‘வந்தே மாதரம் பாடலை இணைத்தார் ஆசிரியர்.
சரி, இதை எழுதியவர் யார் ?
பிரசித்திபெற்ற புரட்சிவீரர் ‘வாசுதேவ் பல்வந்த் ஃபட்கே’ என்பவரின் சமகாலத்தில் வாழ்ந்த ‘பங்கிம் சந்திரர்’ தான் ‘வந்தே மாதரம்’ மற்றும் ‘ஆனந்த மடம்’ நாவல் இரண்டினையும் எழுதியவர்.
‘வாசுதேவ் பல்வந்த் ஃபட்கே’யின் போராட்டத்துக்கும் ஆனந்த மடம் நாவலிற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. இவரின் போராட்டமே பங்கிம் சந்திரரின்’ ஆனந்த மடம் நாவலுக்குக் கருவானது.
1885இல் நடந்த முதல் காங்கிரஸ் மாநாட்டில் “பிரிட்டிஷ் ராணி நலமுடன் நீடுழி வாழ்க” என்ற பாடலே பாடப்பட்டது. 1886-இல் இரண்டாவது காங்கிரஸ் மாநாட்டில் கல்கத்தாவில் “ராக்கி பந்தன்” என்ற பாடலுடன் “வந்தே மாதரம்” பாடலின் கடைசி வரிகள் சேர்த்துக் கொள்ளப்பட்டன. 1896-இல் “வந்தே மாதரம்” பாடலின் வலிமையையும் ஆழ்ந்த அர்த்தத்தையும் கண்ட தாகூர் அந்த ஆண்டு காங்கிரஸ் மாநாட்டில் மல்லாரி ராகத்தில் காவளி தாளத்தில் பாடினார்.
தேச பக்தர்களின் ரத்தத்தில் ஊறிய இந்த வேத கீதம் வங்க மக்களின் மீது திணிக்கப்பட்ட வங்கப் பிரிவினையைத் தூள் தூளாக்கியது. 1905-ன் இறுதியில் பல்கிப் பெருகிய சுதேசிய சிந்தனையின் முன்னோடியாக இந்தியா முழுவதும் “வந்தே மாதரம்” பரவியது. அப்பொழுதய ஆங்கில அரசின் புலனாய்வு அறிக்கைப்படி உத்தரபிரதேசத்தில் 23 மாவட்டங்களும், பஞ்சாப்பில் 20 மாவட்டங்களும், சென்னையில் 13 மாவட்டங்களும், மத்திய மாகாணங்களில் 15 நகரங்களும், பம்பாய் மாகாணத்தில் 24 நகரங்களும் சுதேசிய இயக்கத்தில் பங்குபெற்றன.
இல் கல்கத்தா காங்கிரஸ் கண்காட்சியில் சகோதரி நிவேதிதை (விவேகானந்தரின் சிஷ்யை) தன்னுடைய பள்ளிக் குழந்தைகளால் பின்னப்பட்ட ஒரு தேசியக் கொடியைக் காட்சிக்கு வைத்தார். இதில் சிவப்புப் பின்னணியில் வஜ்ராயுதச் சின்னமிருந்தது. மஞ்சளில் “வந்தே மாதரம்” எனப் பெரிய எழுத்துக்களில் குறுக்கே எழுதப்பட்டிருந்தது. மாநாட்டுக்கு வந்திருந்த “அறிவியல் அறிஞர் ஜகதீஷ் சந்திரபோஸ்” போன்ற சிலர் இதை தேசியக் கொடியாகவே பயன்படுத்தத் துவங்கிவிட்டனர். ஐரோப்பாவில் பாரீஸ், பெர்லின் போன்ற பல மையங்களில் மேடம் காமாவால் வடிவமைக்கப்பட்ட தேசியக் கொடியில் கூட “வந்தே மாதரம்” என தேவநாகரி எழுத்தில் எழுதப்பட்டது.

விடுதலைப்போரில் வந்தே மாதரம்
‘வந்தே மாதரம்’ எனக் கூறுவது சட்டப்படிக் குற்றம் என்றும் அப்படிக் கூறிய மாணவர்களுக்கு பள்ளியை விட்டு நீக்கப்படுவதும், ‘கசையடி’ பெறுவதும் தண்டனையாக வழங்கப்படுமென்றும் ஆங்கில அரசு விதித்தது.
26-8-1907 அன்று கல்கத்தா லால்பஜார் நீதிமன்றத்தில் “வந்தே மாதரம்” எனக் கூறியவர்கள் மீது வழக்குகள் நடந்தன. கூட்டம் அதிகம். மீண்டும் மீண்டும் “வந்தே மாதரம்” என உரத்துப் பாடியது அந்த தேச பக்தர்கள் கூட்டம். நீதிமன்றத்தின் உள்ளும், புறமும் மக்கள் அலை. “வந்தே மாதரம்” என்று வானைப்பிளக்கும் கோஷம். இரும்புத் தொப்பி அணிந்த காவலர்கள் தடியடி செய்தனர். அப்பொழுது நடந்த நெகிழவைக்கும் நிகழ்ச்சி ஒன்றை இங்கு குறிப்பிட வேண்டும்.
‘சுசீர்குமார்’ என்ற 15 வயதுச் சிறுவன் ஆங்கிலேயர்கள் எதற்காக இப்படி அடிக்க வேண்டும், என்ன குற்றம் செய்தார்கள் இந்தியர்கள் என யோசித்தான் அடுத்த நிமிடம், அவனது கைகள் ஆங்கில போலீஸ் ஒருவனைப் புரட்டி எடுத்துக் கொண்டிருந்தன. ஆங்கில போலீசை அடித்ததற்குச் சிறுவனுக்கு 15 கசையடி தண்டனை. தீரச் செயல் புரிந்த சிறுவனை, தேசியக் கல்லூரி ஒரு நாள் விடுமுறை மூலம் கௌரவித்தது. கல்லூரி மைதானத்தில் நடந்த பிரம்மாண்டமான கூட்டத்தில் சுரேந்திரநாத் பானர்ஜி அவனுக்குத் தங்கப் பதக்கம் அணிவித்தார். பிரதான வீதிகளில் சிறுவன் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டான். எங்கும் ஒலித்தது “வந்தே மாதரம்”.
குதிராம் போஸ், ப்ரஃபுல்ல குமார் சக்கி என்ற இரு இளைஞர்கள் தங்களுக்குத் தூக்குத் தண்டனை கொடுத்தபோது “வந்தே மாதரம்” என்ற கோஷத்துடன் தன்னைச் சுட்டுக் கொண்டும், தூக்கில் மாட்டிக் கொண்டும் சிரித்த முகத்துடன் தேசத்துக்காக உயிர் துறந்தனர்
மதன்லால் திங்காரா, கர்ஸான் வாலியை வெட்டவெளியில் லண்டனில் சுட்டுக் கொன்றான். அதற்கு தண்டனையாகத் தனக்குத் தூக்கு தண்டனை விதித்தபோது “வந்தே மாதரம்” என்ற வீர முழக்கத்துடன் தன் முகத்தைக் கண்ணாடியில் பார்த்துவிட்டு தூக்கில் தொங்கினான்.
வாரணாசியில் 13 கசையடிகள் பெற்றபோது 13 முறையும் “வந்தே மாதரம்” என வீர முழக்கமிட்டான் ஒரு சிறுவன். அந்தச் சிறுவன் வேறு யாருமல்ல, “மாவீரன் பகத்சிங்”தான். இப்படி வந்தே மாதரமும் தேச விடுதலைப் போரும் ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்தன தேச விடுதலை எனும் யாகத்தில் வேத மந்திரம் “வந்தே மாதரம்”. “வந்தே மாதரம்” என்ற கோஷத்துடன், வீர முழக்கத்துடன் தூக்குக் கயிறினை முத்தமிட்டவர் எத்தனையோ மாவீரர்கள். செக்கிழுத்தும், கல்லுடைத்தும் தியாகம் செய்தவர்கள் எத்தனை எத்தனை பேர்!
1923இல் காகிநாடா காங்கிரஸ் மாநாட்டில் வழக்கம்போல விஷ்ணு திகம்பர ஃபலுஸ்கர் உருக்கமாக “வந்தே மாதரம்” பாடலைப் பாட எழுந்தார். பாடல் துவங்கப்பட்டதும் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான “மௌலானா மொகமதலி” இந்த இசை இஸ்லாமுக்கு எதிரானது. எனவே “வந்தே மாதரம்” பாடலைப் பாடக் கூடாது என்றார்.
“இது ஒரு தேசிய மேடை. எந்த ஒரு தனி மனித அல்லது தனி சமூகத்தின் மேடையல்ல. இது மசூதியல்ல. எனவே, இசைக்கு இங்கு தடைபோடுவது தவறு. ஊர்வலத்தில் தலைவர் என்ற முறையில் உங்களுக்கு இசையால் வரவேற்பு அளித்தபோது ஏற்றுக் கொண்டது மட்டும் சரியா?”
விஷ்ணு திகம்பரின் ஆவேசப் பேச்சு மொகமதலியை ஊமையாக்கியது.
துரதிர்ஷ்டம் என்னவெனில் விஷ்ணு திகம்பரின் உறுதி வேறு எந்த காங்கிரஸ் தலைவருக்கும் இல்லாது போனது.
வந்தே மாதரம் நீளமான பாடல், “வந்தே மாதரம்” ராணுவ இசைக்கு இனிமையாக இருக்காது என்று கூறி நேரு அதை தேசிய கீதமாக அங்கீகரிக்காமல் தவறு செய்தார். மாஸ்டர் கிருஷ்ணாராவ் ராணுவ இசைக்கு ஏற்ப பிரிட்டீஷ் ராணுவ இசைக்குழு தளபதி சி.ஆர். கார்டன் உதவியுடன் ‘வந்தே மாதரம்’ பாடலுக்கு இசை அமைக்கப்பட்டு அப்போதைய பிரதமரான நேருவிற்கு இசைத்துக் காட்டப்பட்டது. ஆனாலும் நேரு ஏனோ சம்மதிக்கவில்லை. அவர் மனத்தில் ‘மௌலானா மொகமதலி’ இருந்தாரோ என்னவோ?
சுதந்திரம் கிடைத்தவுடன் ‘வந்தே மாதரம்’ தேசிய கீதமாகும் என நம்பிய தேச வீரர்களின் நம்பிக்கை பொய்த்தது. ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் 1911-இல் இந்தியாவிற்கு வந்தபோது அவரை வரவேற்க ரவீந்திரநாத் தாகூர் எழுதிய “ஜன கண மன” தேசிய கீதமானது வந்தே மாதரம் தேசியகீதத்திற்கு சம அந்தஸ்து உண்டு என்று கூறினாலும் சுதந்திர இந்தியாவில் சுதந்திரத்திற்கான வேத கீதமாக இருந்த “வந்தே மாதரம்” பாடல் தேசிய கீதமாக்கப்படாதது பெரிய அவமானம் என்றே சொல்ல வேண்டும்.

வங்கம் தந்த வீரர்
இந்திய தேச விடுதலையில் பல வீரர்களை உருவாக்கியளித்தது வங்காள மாநிலம். பல வீரர்களின் தாய் பூமி. தேச விடுதலையின் உரம் இங்குதான் அதிகம் இருந்தது. இவ்வாறு புகழ்பெற்ற வங்க தேசத்தில் கங்கை நதியின் கிழக்குக் கரையில் காந்தல்பரா எனும் சிறு கிராமத்தில் செல்வச் செழிப்புமிக்க பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர் ‘பங்கிம் சந்திரர்’. தனது குடும்பப் பெயரான ‘சாட்டர்ஜி’ என்பதை பின்னாட்களில் தன் பெயருடன் சேர்த்துக் கொண்டார். 1838 ஜூன் மாதம் 26 ஆம் தேதி பிறந்த பங்கிம் சந்திரரின் தந்தை ஒரிசாவில் டெபுடி கலெக்டராகப் பணிபுரிந்த “ஜாதவ் சந்திர சாட்டர்ஜி” பங்கிம்மின் இளமைக் கல்வி முதலில் வீட்டிலும் பின்பு மித்நாபூரிலும் தொடங்கியது. ஆங்கிலத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட பங்கிம் கல்வியில் சிறந்து விளங்கினார். பங்கிம்மின் ஆங்கில ஞானத்துக்கு உதாரணம் இருபத்தைந்து வயதில் அவர் எழுதிய ஆங்கில நாவல் “ராஜ்மோகன் மனைவி”. பதினோரு வயதில் திருமணமானது பங்கிம் சந்திரருக்கு பதினெட்டு வயது வரை பங்கிம் சந்திரர் ஹூக்ளி கல்லூரியிலும் பின்பு கல்கத்தா கல்லூரியிலும் படித்தார். கல்கத்தா கல்லூரி வாசத்தின் போதே “லலிதா – ஒரு பழங்கதை” என்ற கவிதைத் தொகுப்பு நூல் வடிவம் பெற்றது. பி.ஏ. பட்டமும் சட்டக் கல்வியில் பட்டமும் பெற்ற சந்திரருக்கு டெபுடி மாஜிஸ்திரேட் – டெபுடி கலெக்டர் பதவி தேடி வந்தது. இன்றைக்கு வங்காள தேசத்தின் ஒரு பகுதியாக உள்ள ஜெஸ்ஸூரில் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
திருமணமான பத்து ஆண்டுகளில் பங்கிம் சந்திரரின் மனைவி காலமானார். பின்பு ‘ராஜலக்ஷ்மி தேவி’ என்ற அம்மையாரை மணந்தார்.
பதவி உயர்வுடன் ‘ஹில்னா’ பகுதிக்கு மாற்றப்பட்ட பங்கிம் சந்திரர் அங்கிருந்த கொள்ளைக் கூட்டத்தை அடக்கி ஒடுக்கினார். மக்களுக்குப் பாதுகாப்பு அளித்தார். ஆங்கில அரசு பங்கிம்மின் நிர்வாகத் திறமையைப் பாராட்டியது.

நிர்வாகத் திறமை
ஹில்னா பகுதியில் ஜமீன்தார்கள் அங்குள்ள விவசாயிகளைக் கொத்தடிமைகளாக நடத்தினர். தனக்கிருந்த ஆட் பலத்தினைக் கொண்டு விவசாயிகளை அடித்துத் துன்புறுத்தினர். இந்தக் கொடுமைகளைச் செய்துவந்த ஜமீன்தார்களுக்குத் தலைவன் ‘மோரல்’ என்பவன். அவனது கொடுமைகளைக் கேள்வியுற்ற பங்கிம் தகுந்த நடவடிக்கை எடுத்து அடக்கினார். பின்னாட்களில் பல காலம் தலைமறைவாக வாழ்ந்த மோரல் பணத்தால் பங்கிம் சந்திரரை விலைபேச வந்தான். ஆனால், அவனது எண்ணம் பலிக்கவில்லை பின்பு, தன் நண்பனுடன் நாடுவிட்டு நாடு ஓடி விட்டான். பங்கிம் சந்திரரின் நிர்வாகத்திறமை மற்றும் நேர்மையைக் கண்ட ஆங்கில அரச அவருக்கு மேலும் பதவி உயர்வு அளித்தது.

பாரூய்பூருக்கு பின்பு மாற்றல் செய்யப்பட்ட சந்திரர் ஹில்னாவில் இருந்தபோது ‘துர்கேச நந்தினி’ எனும் வரலாற்று நாவலை எழுதத் துவங்கினார். பாரூய்பூரிலிருந்தபோதே அந்த நாவல் வெளியானது. கவிதையைவிட நாவல்களே மக்களிடம் அதிகம் சென்றடைகின்றன என்பதால் நாவல்களை பங்கிம் எழுதத் துவங்கினார். “துர்கேச நந்தினி” வங்காள மொழியில் எழுதப்பட்டது. மக்களிடம் பெரிதும் வரவேற்பைப் பெற்ற இந்த நாவல்தான் பங்கிம் சந்திரரை ஓர் இலக்கியவாதியாகப் பிரகடனப் படுத்தியது.
பங்கிம்மின் இரண்டாவது நாவல் “கபால குண்டலா” என்பது மக்கள் தொடர்பு இல்லாத கடற்கரைத் தீவு ஒன்றில் ‘கபாலி’ சந்நியாசியால் வளர்க்கப்படும் பெண்ணைப் பற்றிய கதை அது. பின்பு ‘மிருணாளிளி’ எனும் நாவலை எழுதிய சந்திரர் தனது தேச பக்தியை இந்த நாவல் மூலம் வெளிப்படுத்தினார். அப்பொழுது அவர் பேராம்பூருக்கு மாற்றப்பட்டிருந்தார்.
இலக்கியப் பணிகள்
பேராம்பூரில் வசித்தபோது பங்கிம் சந்திரருக்குப் பல இலக்கிய வாதிகளின் தொடர்பு உண்டானது. வங்காள இலக்கிய வளர்ச்சி தேசிய சிந்தனை போன்றவை பங்கிம் சந்திரரைப் பற்றிப் படரத் துவங்கின. இலக்கியப் பணிக்குப் பத்திரிகை ஒன்றைத் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் பலருக்கு உருவானது மஹாராணி சுவர்ணமாயி தேவி என்ற அம்மையார் வங்க மொழியில் இலக்கிய இதழ் துவங்க ஆயிரம் ரூபாய் நன்கொடை தந்தார்
பத்திரிகையின் பெயர் “வங்க தரிசனம்”.

பத்திரிகையின் ஆசிரியர் பங்கிம் சந்திரர். “வங்க தரிசன”த்தின் உதயம் பல வங்கப் பத்திரிகைகளைப் பின் தள்ளியது. எளிய வங்க மொழியில் கதை, கட்டுரை என படைப்புகள் வெளியாயின. மக்கள் வரவேற்பும் கிடைத்தது. “விஷவிருக்ஷம்”, ‘கமலகாந்தரின் பேப்பர்’ கதைகள், ‘இந்திரா’, “சந்திரசேகர் போன்ற நாவல்களை எழுதியதால் வங்க தரிசனமும், சந்திரரும் புகழ் பெற்றனர்.
பத்திரிகை, எழுத்து என இரண்டாலும் புகழ் பெற்றுவந்த பங்கிம்மிற்கு அவரது சகோதரர்களால் உண்டான சொத்துத் தகராறு கடைசிவரை இருந்தது. அவருக்கு அது பெரிய குறை. பேராம்பூரிலிருந்த போது பங்கிம்மின் தாயாரின் மரணம் அவருக்கு மற்றொரு பெரிய அடி கங்கைக்கரையில் உள்ள ஹூக்ளி நகருக்கு மாற்றப்பட்ட பங்கிம் சில தினங்களில் ‘வங்க தரிசன’த்தை நிறுத்துவதாக அறிவித்தார் அதற்கு அவரது சொந்த வாழ்வில் ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக இருக்கலாம். இருப்பினும் அவரது முடிவை வாசகர்கள் ஏற்கவில்லை. ஒரு நல்ல இலக்கிய இதழின் முடிவு யாரைத்தான் வருத்தாது? பின்பு, ‘வங்க தரிசனம்’ இதழ் தோன்ற முக்கியக் காரணமாக இருந்தவர்களில் ஒருவரான ‘சஞ்சீவ்’ ஆசிரியராக பொறுப்பேற்றார். சந்திரரின் எழுத்தோவியங்கள் வங்க தரிசனத்தில் தொடர்ந்தன.
“ராஜ்சின்ஹா ”, “ரஜனி”, “கிருஷ்ண காந்தர் உயில்” போன்ற நாவல்கள் சந்திரரால் எழுதப்பட்டு வங்க தரிசனத்தில் தொடர்ந்தன. இலக்கியம், தேசபக்தி என்பதோடு மதப்பற்றும் பங்கிம் சந்திரரைத் தொட்டது. ஹிந்து சமயம் பற்றிய கட்டுரைகள் பிறந்தன, முப்பது வயதிலிருந்து சமயக் கட்டுரைகளைத் தொடர்ந்தார். “இந்துத் திருவிழாக்களின் தோற்றம்”, வங்காள இலக்கியமும் பௌத்தமும், சாங்கிய தத்துவம்”, “இந்து தத்துவ ஆராய்ச்சி” போன்றவை பங்கிம்சந்திரர் 40 வயதுக்குள் எழுதிய படைப்புகள்.

தன்மானம் காத்த தீரம்
அது ஒரு மாலைப்பொழுது. அரசு உயர் பதவி வகித்துவந்த பங்கிம் சந்திரர் பல்லக்கில் அமர்ந்திருப்பார். அவரைப் பல்லக்கில் வீடுவரை தூக்கிச்சென்று விட்டுவருவது வழக்கம். இது அவரைப் போன்ற உயர் பதவி வகிப்பவர்களுக்குச் செய்யும் மரியாதை குறிப்பிட்ட நாளின் அந்த மாலைப்பொழுதில் பங்கிம் சந்திரர் பயணம் செய்தார். அவர் பயணம் செய்யும் வழியில் ஆங்கில ராணுவ வீரர்கள் பலர் கிரிக்கெட் விளையாடி வந்தனர். அவர்களில் ஒருவனான ‘டஃப்பின்’ பல்லக்கில் செல்வது பங்கிம் சந்திரர் என்பதை அறிந்து ஓர் இந்தியனுக்கு ஆங்கில ஆட்சியில் இவ்வளவு மரியாதையா என எண்ணி, கோபத்தால் பல்லக்கின் கதவினை கிரிக்கெட் மட்டையால் ஓங்கி அடித்தான். அதிர்ச்சியுற்று பல்லக்கிலிருந்து இறங்கிய பங்கிம் சந்திரர் “பல்லக்கினை யார் அடித்தது” எனக் கோபமுடன் கேட்டார்.
துணிச்சலுடன் தவறினைச் செய்ததோடு மட்டுமல்லாது கேள்வி கேட்ட பங்கிம் சந்திரரைக் கையை முறுக்கி வம்பு செய்தான் ‘டஃப்பின்’. நடப்பதோ ஆங்கில ஆட்சி. தவறு செய்பவனோ ஆங்கில ராணுவ வீரன். இதற்கெல்லாம் கவலைப்படாத சந்திரர் நீதிமன்றத்தில் டஃப்பின் மீது வழக்குத் தொடர்ந்தார்.
டஃப்பினின் நியாயமற்ற செயலைக் கேள்வியுற்ற வக்கீல்கள் யாரும் அவனுக்காக வாதாட விரும்பவில்லை. பரிதாபமான நிலையில் நீதிமன்றத்திற்கு வந்த டஃப்பின் தனது தவறினை ஒப்புக் கொண்டான். மேலும், நடந்த தவறுக்காக பங்கிம்மிடம் மன்னிப்புக் கோரினான். துணிச்சலுடன் ஆங்கிலேய ராணுவ வீரனுக்கு எதிராக பங்கிம் தொடர்ந்த வழக்கு அவரது தன்மானத்துக்கும் அவரது துணிச்சலுக்கும் ஓர் எடுத்துக்காட்டு. அடிமையாக இருக்கும் இந்தியர்களிடம் மன்னிப்புக் கேட்பதா என்ற ஆங்கிலேயர்களின் கர்வத்துக்குக் கிடைத்த சவுக்கடி இந்த நிகழ்ச்சி. இந்த ஒரு நிகழ்ச்சி மட்டுமா?

‘ஜாலியா’ அல்லது ‘ஜ்வாலியா’?
எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களைக் கொண்டு வீட்டுக் கூரைகளை அமைக்கக் கூடாது. அப்படி அமைத்தால் தண்டனை தரப்படும் எனக் கல்கத்தாவின் நகராட்சி அறிவிப்பு வெளியிட்டிருந்தது. ஆனால், நகராட்சியின் இந்த அறிக்கை பற்றிப் பாமர மக்கள் எதுவும் அறிந்திருக்கவில்லை.
ஹெளரா நகர எல்லையில் வசித்துவந்த எண்பது வயதுக் கிழவி ஒருவர் தனது ஏழ்மை நிலையால் தனது குடிசைக்குக் காய்ந்த ஓலைகளைக் கொண்டு கூரை அமைத்திருந்தார். நகராட்சி நிர்வாகம் ஓலையால் கூரை அமைத்த கிழவி மீது, நகராட்சியின் நிர்வாக விதிமுறைகளை மீறியதால் நடவடிக்கை எடுக்க அறிக்கை கொடுத்தது. மேலும், அந்த படிப்பறிவற்றக் கிழவியைச் சிறையில் அடைத்தது. வழக்கு நீதிமன்றத்துக்கு வந்தது.
அந்த வழக்கில் நகராட்சித் தரப்பில் கிழவி மீது சாட்டப்பட்டிருந்த வழக்கினை விரிவாக வங்காள மொழியில் மொழி பெயர்த்திருந்தவன் ஹௌரா நகராட்சி மன்றச் செயலராக இருந்த வெள்ளைக்காரன். அரை குறையாக மட்டுமே வங்காள மொழியை அறிந்திருந்த அந்த அதிகாரியின் மொழிபெயர்ப்பில் ஒரு குறை இருந்தது.
வங்காள மொழியில் ‘ஜாலியா’ என்ற சொல்லுக்கு “நீரான” என்று பொருள். ஜ்வாலியா என்றால் ‘எளிதில் தீப்பற்றக்கூடிய’ எனப் பொருள். இந்த இரு வார்த்தைகளுக்கும் பொருள் வித்தியாசத்தை அறியாத ஆங்கிலேய அதிகாரி ‘ஜ்வாலியா’ என்பதற்குப் பதில் தனது வங்க மொழிபெயர்ப்பில் ‘ஜாலியா’ என மொழி பெயர்த்துவிட்டான். வழக்கு விசாரணை நீதிமன்றத்துக்கு வந்தது. குற்றப் பத்திரிகையைப் படித்த பங்கிம் சந்திரருக்குச் சிரிப்பு வந்துவிட்டது. அன்றைக்குத் தீர்ப்பு வழங்கும் நிலையில் இருந்தவர் பங்கிம் சந்திரர்தான். ஆங்கில அதிகாரி செய்த மொழிபெயர்ப்பு கிழவிக்குச் சாதகமானது. இந்தக் குற்றச் சாட்டின் அடிப்படையில் கிழவிக்கு எந்த தண்டனையும் அளிக்க முடியாது எனச் சந்திரர் தீர்ப்பு வழங்கினார்.
ஹௌராவில் கலெக்டராக இருந்த ‘பக்லாந்து’ எனும் ஆங்கிலேயன் பங்கிம் சந்திரர் வழங்கிய தீர்ப்பை விமர்சித்து எழுதினான். மேலும், பங்கிம் கல்விச்செருக்கு உடையவர் என்றும் விமர்சித்தான்.
பங்கிம் சந்திரர் ‘பக்லாந்து’ கடிதத்தைக் கண்டு மிகவும் கோபமுற்றார்.பங்கிம்மின் பதில் கடிதத்தில் குறிப்பிட்டிருந்த பதில் இது:
“நீதித்துறையைப் பொறுத்தவரை நீங்கள் எனக்கு மேலதிகாரி அல்ல உங்களுக்குச் சம்பந்தமில்லாத விஷயங்களில் நீங்கள் தலையிட வேண்டாம். அது நாகரிகமுமல்ல. நீங்கள் என்னைப் பற்றிச் செய்த விமர்சனத்துக்கு மன்னிப்புக் கேட்காவிட்டால் தங்கள் மீது வழக்குத் தொடரப்படும்” என எழுதினார்
தன்னை எதிர்ப்பவர் யாராயிருந்தாலும் தன் தரப்பில் நியாயம் இருந்தால் அதற்காக வாதாடும் நேர்மையும், துணிவும் பங்கிம்மிற்கு இருந்தது.
பங்கிம் சந்திரரின் கடிதத்தைப் பெற்ற கலெக்டர் தனது தவற்றை உணர்ந்தான். ஆனால், தன் நாட்டிற்கு அடிமையாயுள்ள ஓர் இந்திய அதிகாரியிடம் மன்னிப்பு எப்படிக் கேட்பது என்ற ஆணவத்தால் மன்னிப்புக் கேட்காமல் இருந்தான்.
மன்னிப்புக் கேட்காததால் பக்லாந்தினுடைய உயர் அதிகாரியான ஆணையருக்கு, அதாவது கமிஷனருக்கு, கடிதம் எழுதி பக்லாந்தின் மீது நடிவடிக்கை எடுக்கும்படிக் கேட்டுக் கொண்டார். நிலைமை மோசமானதை அறிந்த பக்லாந்த் பங்கிம் சந்திரரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டான். அத்துடன் அந்த நிகழ்ச்சி முடிவுற்றது.

ஹௌராவில் எட்டு மாதங்கள் மட்டுமே பணிபுரிந்தார் பங்கிம் சந்திரர். பின்பு, கல்கத்தாவில் வங்காள அரசுத் தலைமைச் செயலகத்தில் உதவிச் செயலராக நியமிக்கப்பட்டார். அந்நாட்களில் இதைப்போன்ற உயர் பதவிகளை இந்தியர்கள் பெறுவது மிகவும் குறைவு. அந்த வாய்ப்பு பங்கிம் சந்திரருக்குக் கிடைத்தது.
நிதித்துறைக்குப் புதிதாகச் செயலாளராக நியமிக்கப்பட்ட ஆங்கிலேயன் சி.பி.எல். மெகாலே என்பவன் இந்தியர்கள் உயர் பதவிகளில் இருப்பதை விரும்பாதவன். பங்கிம் தலைமைச் செயலகத்தில் உதவிச் செயலாளராகப் பணிபுரிவதைக் கண்டு, அது பிடிக்காமல் அந்தப் பதவியே தேவையற்ற ஒன்று என்றும், அந்தப் பதவியை எடுத்து விடலாம் என்றும் அரசாங்கத்துக்கு சிபாரிசு செய்தான். மூன்று மாதங்களே கல்கத்தாவில் பணிபுரிந்த சந்திரர் 1882-இல் ஜனவரி மாதம் துணை மாஜிஸ்திரேட்டாக அலிப்பூருக்கு மாற்றப்பட்டார். 1883-இல் பாராஸட்டுக்கும், பின்பு அலிப்பூருக்கும் பின்பு ஒரிசாவுக்கும் ஜெய்ப்பூருக்கும் தொடர்ந்து பலமுறை மாற்றப்பட்டார்.

இந்நாட்களில் பங்கிம்மின் சிந்தனை மதத்தினுள் புகுந்தது. தனது தாய் மதமான ஹிந்து மதம் பற்றிப் பல கட்டுரைகளை எழுத எண்ணம் கொண்டிருந்தார். மேலும், மத ஆராய்ச்சியாளராகவே அவர் இருந்தார் 1882 செப்டம்பர் மாதம் கல்கத்தா ஜமீன்தார் ஒருவர் வீட்டில் நடந்த பூஜை பற்றிய செய்தி “ஸ்டேட்ஸ்மென்” ஆங்கில இதழில் வெளியானது இந்தச் செய்தி பங்கிம் சந்திரருக்கும் இந்தியாவில் கிறித்தவ மதத்தைப் பரப்பவந்த ஸ்காட்லாந்து மத போதகரான ரெவரெண்ட் ஹாஸ்டி என்பவருக்கும் உருவ வழிபாடுபற்றிய விவாதமாக ஆனது. இந்த விவாதங்கள் “ஸ்டேட்ஸ்மென்” இதழில் பரபரப்பாக வெளியாயின இதனால் மக்களிடையே ஹிந்து மதம் பற்றிய விழிப்புணர்வு உண்டானது.
கல்கத்தா ஜமீன்தார் தனது வீட்டில் மிகப்பெரிய விழா ஒன்றினை நடத்தினார். தங்களது குலதெய்வமான ‘கோபிநாத்ஜி’யின் சிலையை அருமையாக அழகுற வடித்து அலங்கரித்து வைத்திருந்தார். இதனைக் காண நூற்றுக்கணக்கான மக்கள் கூடினர். ஹிந்துக்களின் உருவ வழிபாட்டு சிந்தனையைக் கிண்டல் செய்ய எண்ணிய ரெவரெண்ட் ஹாஸ்டி பல கடிதங்களை எழுதினார். இவரது கடிதங்கள் தொடர்ந்து ஹிந்துக்களின் உருவ வழிபாட்டினைக் கிண்டல் செய்து வெளியாயின. இதனைக் கண்ட பங்கிம், தொடர்ந்து இந்தக் கடிதங்கள் வெளியானால் இதனைப் படிக்கும் வாசகர்கள் குறிப்பாக ஹிந்துக்கள், மூளைச் சலவை செய்யப்படுவர் என எண்ணினார். ரெவரெண்ட் ஹாஸ்டியின் கடிதங்களுக்குப் பதில் கடிதங்களை எழுதினார்.
இந்து சமயத்தின் அடிப்படைத் தத்துவங்களை விளக்கியும், உருவ வழிபாடு என்பது எதற்கு போன்றவற்றை விளக்கியும், கல்தோன்றி மண்தோன்றாக் காலத்திற்கு முன்பிருந்தே உருவவழிபாடு இருந்து வருகிறது என்பதையும் விளக்கின பங்கிம் சந்திரரின் கடிதக் கட்டுரைகள். மற்ற மதங்களைத் தாக்காது தனது மதத்திலுள்ள நியாயங்களைக் கூறுவதாயும் அமைந்த கட்டுரைகள் வாசகர்களின் மனத்தில் உண்மை எது என்பதைத் தொளிவுறுத்தின. பங்கிம்மின் கட்டுரைகள் “ராம் சந்திரர்” எனும் புனைபெயரில் வெளியாயின. இருப்பினும் பங்கிம் சந்திரரே அந்த புனைபெயருக்கு உரியவர் என வாசகர்கள் பின்னாட்களில் அறிந்தனர்.

மதங்கள் பரஸ்பர சகிப்புத் தன்மையுடன் இருத்தலே மதச் சண்டைகளைத் தீர்க்க உதவும் வழி. மாறாக, “எல்லா மதமும் ஒண்ணு” என்றோ, தன் மதத்தைத் தவிர வேறு மதங்கள் எல்லாம் பொய், மூடப் பழக்க வழக்கமுள்ளவை என்றோ எண்ணுதல் தவறு. ஒருவனைக் கிறித்தவனாகப் படைத்த அதே கடவுளே மற்றொருவனை முஸ்லிமாகப் படைத்துள்ளார். ஒருவனை புத்த மதத்தில் பிறக்க வைத்த அதே கடவுளே மற்றொருவனை ஹிந்து மதத்திலுள்ள பல்வேறு மதங்களில் ஒன்றில் பிறக்க வைத்துள்ளான். கடவுள், அவரவர் தகுதிக்கு ஏற்ப வெவ்வேறு மதங்களில் அவரவர்களைப் படைத்துள்ளான் என்று எண்ணி வாழ்வதே மதச் சகிப்புத்தன்மை.
பாதிரியாரோடு நடத்திய விவாதம் பங்கிம் சந்திரர் தேசபக்தர் மட்டுமல்லர், தன் மதத்தின் மீதும் தீவிரப் பற்றுள்ளவர் என்று விளக்குகிறது. இந்தக் காலகட்டத்தில்தான் நாட்டுப்பற்றைத் தூண்டும் ‘ராஜசின்ஹா‘ மற்றும் ‘வந்தே மாதரம்’ புகழ் ‘ஆனந்த மடம்‘ எனும் இரு நாவல்களும் வெளியாயின
பங்கிம் சந்திரரின் புகழ் பல மடங்கு அதிகரித்தபோது துரதிர்ஷ்ட வசமாக அவரது புகழுக்குப் பெரிதும் துணைபுரிந்த “வங்க தரிசனம்” இலக்கிய இதழ் சரிவைச் சந்தித்தது. புதிய ஆசிரியரான சஞ்சீவ் திறமைசாலி எனினும் பங்கிம் சந்திரர் பத்திரிகை ஆசிரியராக இல்லாததாலேயோ என்னவோ பத்திரிகையின் விற்பனை சரிந்தது சில காலத்தில் ‘வங்க தரிசனம்’ நின்றுவிட்டது. இருப்பினும் ‘வங்க தரிசனம்’ மிக அழமான பாதிப்பை மக்களிடையே உண்டாக்கியது என்பது தெளிவு. பத்திரிகையுலக வரலாற்றில் ‘வங்க தரிசனம்’ இதழுக்குத் தனியான இடமுண்டு.
குடும்பச் சூழலாலோ என்னவோ ‘வங்க தரிசனம்’ இதழைத் தொடர்ந்து நடத்த பங்கிம் சந்திரருக்கு மனமில்லை. 1883 மார்ச் மாதத்துடன் ‘வங்க தரிசனம்’ நிறைவடைந்தது. ஆனால், தொடர்ந்து மத விஷயங்களை மக்களிடம் பரப்ப எண்ணிய சந்திரர் தனது மருமகன் சந்திரபாண்டி, பாத்தியாயாவுடன் கலந்து “பிரச்சார்” எனும் பத்திரிகையைத் தொடங்கினார். இந்த இதழில் ‘கிருஷ்ண சரித்திரம் ஸ்ரீராம் கதைகள், “ஸ்ரீமத் பகவத் கீதா’ போன்ற படைப்புகளை எழுதினார்.
பங்கிம் சந்திரரின் நண்பரான அக்ஷய சந்திர சர்கார் என்பவர் ‘நவஜீவன்’ எனும் பத்திரிகையைத் தொடங்கினார். அந்த இதழில் ‘தர்மதத்துவ – அனுஷீலன்’ எனும் தலைப்பில் மதம் சம்பந்தமான ஆய்வுக் கட்டுரைகளை எழுதினார்.
ஹௌராவில் பணிபுரிந்த காலத்தில் பங்கிம் சந்திரர் முதல் பிரிவு அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார். ஆங்கில ஆட்சியில் ஓர் இந்தியர் இவ்வளவு உயரிய பதவியை அடைவது என்பது வெறும் கனவே. பின்பு “தேவி சதுர் ராணி” எனும் நாவலை எழுதினார். கணவனாலும் மற்றவர்களாலும் விரட்டப்பட்ட ஒரு பெண் பின்பு போராடி ராணியான கதை அது
பின்பு, பதவி உயர்வினால் ஜெனிதாவுக்கு மாற்றப்பட்டார் இங்குதான் இவரது படைப்புகளை நூல்களாக்கி வெளியிடும் பணி பெருமளவில் நடந்தது. தமது சமகாலத்தில் வாழ்ந்த “கவிஞர் ஈஸ்வர சந்திரகுப்தா”வின் கவிதைகளைத் தொகுத்து நூலாக்கினார் ஜெனிதாவிலிருந்து ஒரிசாவிலுள்ள ‘பத்ரக்’, ‘ஹௌரா’ ஆகிய இடங்களுக்கு மாற்றப்பட்ட சந்திரர் ‘ராதா ராணி’, ‘கிருஷ்ண சரிதம்’ முதல் பாகம். ‘ஸ்ரீராம்’, “விவித பிரபந்தம்” முதல் பாகம் போன்ற நூல்களை வெளியிட்டார். பிறகு மீண்டும் ‘மித்னாபூரு’க்கு மாற்றப்பட்ட பங்கிம் சந்திரர் கல்கத்தாவில் சொந்தமாக ஒரு வீட்டினை வாங்கினார்.
இறுதியாக அலிப்பூருக்கு மாற்றப்பட்ட பங்கிம்மின் வயது அப்போது ஐம்பது. பணியிலிருந்து ஓய்வு பெற விரும்பியதால் அரசுக்குத் தன்னைப் பணியிலிருந்து விடுவிக்கும்படி எழுதினார். ஆங்கில அதிகாரிகளுடன் அவருக்கு மோதல்கள் பல இருந்தாலும் அவருக்கு அவரது நிர்வாகத் திறமைக்காக ஆங்கில அரசு நிறைய மதிப்பு கொடுத்து வந்தது. அவரைப் பணியிலிருந்து ஓய்வு விடுவிக்க ஆங்கில அரசுக்கு மனமில்லை. ஆனால், தொடர்ந்து வற்புறுத்தியதால் பங்கிம் சந்திரருக்கு 1891-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அவரது வது வயதில் பணி ஓய்வு கிடைத்தது. 33 ஆண்டுகள் சிறப்புற அரசுப்பணியிலிருந்த பங்கிம்மிற்கு அப்போது நீரழிவு நோய் வந்தது.
பங்கிம் சந்திரரின் ஓய்வுக்காலம் அவருக்குப் பெரிய மன நிம்மதியை அளித்தது எனலாம். கல்கத்தாவில் தனது சொந்த வீட்டில் குடும்ப உறுப்பினர்களுடன் அவர் சுகமாக வாழ்ந்தார். தனது ஓய்வு நாள்களில் புதிய படைப்புகளைச் செய்யாமல் பழைய படைப்புகளை நூலாக்குவதிலேயே கவனம் செலுத்தினார். “விவித பாரதம்” இரண்டாம் பாகம் வெளியானது அவரது பணி ஓய்வுக்குப் பிறகே.
கல்கத்தாவில் அப்போதிருந்த “இளைஞர் உயர் பயிற்சி சங்கம்” அதன் இலக்கியப் பிரிவிற்கு பங்கிம்மைத் தலைவராக்கிப் பெருமைப்படுத்தியது. பின்னாட்களில் இந்த சங்கமே பல்கலைக்கழக நிறுவனமானது.
புகழ்பெற்ற எழுத்தாளராய் வளர்ந்த பங்கிம் சந்திரருக்கு “ராய் பகதூர்” பட்டம் தரப்பட்டு ராய் பகதூர் பங்கிம் சந்திர சாட்டர்ஜி ஆனார். இது அரசு அளித்த பெரிய பாராட்டு. இந்த விருது பெற்ற இரண்டாண்டுகளில் “சி.ஐ.இ.” கௌரவப் பட்டம் அளித்துச் சிறப்பித்தது அரசு. எத்தனை பட்டங்கள் அளித்தாலும், பாராட்டுதல் செய்தாலும் பங்கிம் சந்திரருக்கு அவையெல்லாம் தகுதியானவைதான்.
நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த பங்கிம் சந்திரரின் உடல்நிலை சில நாட்களில் பெரிதும் பாதிக்கப்பட்டது. உணவுக் கட்டுப்பாடு இருந்தாலும் அவரது உடல்நிலை கெட்டு 1894 மார்ச் மாதத்தில் பெரிய அளவில் நோய்வாய்ப்பட்டார்.
ஏப்ரல் 8-ஆம் தேதி பங்கிம் சந்திரர் எனும் தேசபக்தர், மத அபிமானி, சிறந்த இலக்கியவாதி, சிறந்த நிர்வாகி விண்ணுலகம் சென்றார். அப்போது அவருக்கு வயது ஐம்பத்தாறு.

பங்கிம் சந்திரர் மறைந்தாலும் அவரது “வந்தே மாதரம்” பாடல் மூலம் தொடர்ந்து அவர் சுதந்திர இந்தியாவிலும் தேசபக்தியை மக்களிடம் தூண்டி வருகிறார். ‘வந்தே மாதரம்’ இருக்கும்வரை பங்கிம் சந்திரர் நினைவு மக்களிடையே நின்று வாழும்

- நரசிம்மன், உ. (2001).
- சுராவின் நாட்டிற்கு உழைத்த நமது நல்லவர்கள்.
- சுரா புக்ஸ்.
- ISBN:9788174782595, 8174782591
- Page count:200