புளியமரத்தாள்

     ” வீட்டுல யாரு…” என்று கதவைத் தட்டினான் வெளியூர்க்கார விடலை ஒருவன். கதவோரம் கட்டிலில் கிடந்த வெள்ளச்சிக்கிழவி, “ஏ…பானுமதி யாரோ கதவத் தட்டுறச் சத்தம் கேக்குது…யாருன்னு பாரு மா! ” என்றாள்.

    கதவைத் திறந்த பானுமதி. வெளியே நின்றவனிடம், “யாரு தம்பி நீ? என்ன வேணு”மென்றாள்.

    ” அக்கா.. எனக்கு ஊரு ராதாபுரம் பக்கம் காக்கரை. அடுத்த வாரம் எங்க அண்ணனுக்குக் கலியாணம். இங்க பூரணம்மாள் வீடு எங்கருக்கு? அவுங்களுக்குப் பத்திரிக்கக் குடுக்கனும்.” என்றான்.

    ” தம்பி! என்னப்பேரு சொன்னீங்க…? ” வாசல்படியில் நின்று கதவைப் பிடித்தபடி கேட்டாள்.

  ” பூரணம்மாள்.” என்று கல்யாணப் பத்திரிக்கையை அவளிடம் காட்டினான்.

    “தம்பி எனக்குத் தெரிஞ்சி அப்படி யாரும்  இங்க இல்லயே. ஆமா,ஒங்க  அப்பா எடயங்குளமுன்னா சொன்னாரு?”

   “ஆமாக்கா. உன்னங்குளத்துலருந்து வடக்க மூணு கிலோமீட்ரு உள்ளப்போனா எடயங்குளம்.அந்த ஊரு பஸ்டாண்ட ஒட்டுனாப்புல ஒரு தெருப்போவும்; அந்தத்தெரு முடியிற எடத்துல ஒரு முப்பிடாதிஅம்மன் கோயில் இருக்கும்; அந்தக்கோயில் பக்கத்துல இருக்குற வீட்டுக்காரங்கக்கிட்டக் கேளு சொல்வாங்கன்னு எங்கப்பா சொன்னாரு. அது ‘இந்த கோயில்தானக்கா’ என்று தன் வலப்பக்கமிருந்த முப்பிடாதிஅம்மன் கோயிலைக் காட்டினான் அவன்.

    “ஊர் அடையாளத்தக் கரைட்டா சொன்னவரு, அப்படியே…அந்தப் பூரணம்மா நெட்டையா, குட்டையா, கருப்பா, சொவப்பான்னு அங்க அடையாளத்தையும்  சொல்லிருந்தாருன்னா கண்டுபிடிக்க சொலபமா இருந்திருக்கும். ஊர்பேரு தான் காக்கரைன்னா! அட்ரசையும் கால்வாசிச் சொன்னா எப்படி கண்டுபுடிக்கிறது. தம்பி கொஞ்சம் இரு. இந்தா வாரேன்” என எதிர்வீட்டுத் திண்ணையிலமர்ந்து பீடி சுற்றிக்கொண்டிருந்த  ராணியை நோக்கிப்போனாள்.

   ” ஏட்டி ராணி, நம்மத்தெருவுல பூரணம்மான்னா யாருட்டி? “

    ” என்னது புட்டுக்காரம்மாவா…! “

     ” இவ ஒரு செவுட்டு முண்டம். எல்லாத்துக்கும் பசியிலத்தான் செவியடைக்கும். இவளுக்கு  தின்னுத் தின்னே செவியடைச்சிப்போச்சு! எப்பும் பாத்தாலும் திங்குறதப்பத்தி யோசிக்கிற ஒனக்கெல்லாம் ராணின்னு பேரு வச்சிருக்கக்கூடாது. பன்னின்னுந்தான் பேரு வச்சிருக்கனும்!” என்று அவளை நாலு ஏச்சு ஏசிவிட்டு பக்கத்தில் பிளசர் கழுவிக்கொண்டிருந்த நயினாரை நோக்கி ஓடினாள்.

     ஓடிவந்த பானுமதியைப் பார்த்து,  “ என்ன மைனி எதும் பிரச்சனையா? ஆஸ்பத்திரிக்குப் போணுமா? ” என்றான்.

    ” பேதியிலப்போறவனே! ன் வாயிலக் கொள்ளிக்கட்டய வைக்க. எதுக்கெடுத்தாலும் ஆஸ்பத்திரி ஆஸ்பத்திரின்னு அபசக்கொணமாப் பேசிக்கிட்டு. இப்படி சொல்லிச் சொல்லியே என்னய சீக்காளியாக்கி சீக்கிரம்மா சாவடிச்சிடுவப்போல…”

   ” கோபப்படாத மைனி. நீ ஓடி வந்ததும் என்னமோ ஏதோன்னு நெனச்சுக் கேட்டுட்டேன். அதுக்குப்போயி, ஒரு கொழுந்தனுங்கூடப் பாக்காம சரவெடி வெடிச்சமாறி சடசடன்னு என்னவெல்லாம் பேசிப்புட்ட” என்றான் நயினார்.

   ” சரி! அத வுட்டுத்தள்ளு. நம்மத்தெருவுல ‘பூரணம்மா’ன்னா யாரு? “

   ” பூரணம்மாவா…?” -நயினார்  நிமிர்ந்து குனிந்து யோசித்து, விரல்களால் நெற்றியை அழுத்தி வருடியப்படி… ” எங்கப் பாட்டிப்பேரு பொன்னம்மா” என்று இழுத்துக்கொண்டிருந்தான்.

    ” ஆமா! ஒங்க பாட்டிப்பேரு பொன்னம்மா. அவள விட்டுட்டு பழக்கடக்காரியோடு ஓடுன ஒங்க தாத்தாப்பேரு மாரிமுத்து. இந்தக் கதையெல்லாம் எங்களுக்குத் தெரியும். ஒனக்கு பூரணம்மாவ தெரியுமா! தெரியாதா? “

    பானுமதி சொன்னதைக் கேட்டு நயினாருடன் சேர்ந்து பிளசரைக் கழுவிக்கொண்டிருந்த பொடியன். வாயு பிரிவதைப்போல வாய் மூடி சிரித்தான்.

   ” என்னல இளிப்பு…? வாய மூடிட்டு ஒழுங்கா வண்டியக்கழுவு. இல்லன்னா இந்த மாசம் ஒனக்கு சம்பளம் கட்டு.” – பொடியனிடம் பொங்கினான் நயினார்.

    ” ஓன் வண்டியக் கழுவுறதுக்குப் பதுலா. நாலு சின்னப் புள்ளயளுக்கு  குண்டியக் கழுவி உட்டுருந்தாக்கூட இந்நேரம் கொழுத்தப் பணக்காரனா ஆயிருப்பேன். தர்றது ஐநூறு ஓ..வா! அதையும் மாசம் மாசம் கரைட்டாக் குடுக்காம தவணைமுறையிலக் குடுத்துட்டு, பேச்சப் பாரேன் பேச்ச!” 

     “என்னல மொணங்குற?”

       “ஒன்னுமில்லண்ணே. நம்ம வண்டி ‘கன்’ கண்டிசனா இருக்கு”ன்னு சொன்னேன்.

     “ஏ நைனாரு.நான் கேட்டதுக்கு பதில சொல்லாம, நீயென்னப்பா சின்னப்பையங்கூட வெளையாடிட்டு இருக்க!”

     “என்னது வெளையாடிட்டு இருக்கேனா..! காலங்காத்தாலே வந்து  சும்மா கடுப்பேத்திக்கிட்டு. எனக்கு ஒரு அம்மாவையும் தெரியாது. நீ எடத்தக் காலிப்பண்ணு மொதல்ல” என்றான் கோபமாக நயினார்.

     “ஓங்கிட்டப்போயி கேட்டன் பாரு. நா ஒரு பொசக்கெட்டவ” யென்று புலம்பிக்கொண்டே இன்னும் பலபேரிடம் கேட்டுப்பார்த்தாள். யாருக்குமே தெரியாததால் கடுப்புடனும், களைப்புடனும் வீடு திரும்பினாள் பானுமதி.

“அக்கா அவுங்க வீடு தெரிஞ்சிதா இல்லையா?” என்றான் பத்திரிக்கைக் கொண்டுவந்தவன்.

    “இரு தம்பி! கேட்டுகேட்டு தொண்டத் தண்ணி வத்திப்போச்சி. கொஞ்சம் தண்ணிக் குடிச்சிட்டு வாரேன்.”

      தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தவளைப் பார்த்து, “ஏ பானுமதி எங்கப்போன இவ்வளவு நேரமா?” என்றாள் வெள்ளச்சிக்கிழவி.

    “எம்மோ! இந்தா வெளியில நிக்குலா இந்த தம்பி… பூரணம்மாங்கிறப் பேருக்கு கலியாணப் பத்திரிக்கக் கொண்டு வந்துருக்கு. ஆனா, அது யாருன்னு எனக்கும் தெரில. இங்க யாருக்கும் தெரில” என்றாள்.

   ” என்னப்பேரு சொன்ன? “

    “பூரணம்மாள்.” என்று வெள்ளச்சிக்கிழவி காதில் வேதக்கோயில் மணியாய் கத்தினாள் பானுமதி.

    “ அடச்சீ…! இந்த ஊருலப் பொறந்து- வளந்து நாலுப் புள்ளய வேற பெத்தாச்சி. இன்னுமொனக்கு ‘பூரணம்மா’ள தெரிலன்னா ஒன்னலாம் என்னத்தச் சொல்ல…!” – தலையிலடித்துக் கொண்டாள் வெள்ளச்சிக்கிழவி.

     ” சரித்தாயி! யாருன்னு சீக்கிரம் சொல்லித்தொல. எனக்குத் தலையே வெடிச்சிரும் போலிருக்கு.”

    ” நான், ரஞ்சிதம், ஞானமணி, ஆழ்வாரு, பேச்சி, பூரணம்மாளாம் ஒரு பட்ற. மத்த மூணுபேரும் வெளியூர்ல வாக்கப்பட்டுப் போனாளுவ.நானும் பூரணம்மாளும் மட்டுந்தான் உள்ளூர்லயே வாக்கப்பட்டது.” வெள்ளச்சிக்கிழவி சொல்கையில் இடையில் குறுக்கிட்டு, “ யம்மாத் தாயே நீ வாக்கப்பட்டது. வத வதன்னு நாயி குட்டிப்போட்டமாறி எங்களப் பெத்துப் போட்டது. இதெல்லாம் எனக்குத் தேவல்ல. மொதல்ல பூரணம்மா யாருன்னு சொல்லு! ” என்றாள் பானுமதி.

        “என்னைக்கி நீ ஒரு கதைய முழுசா சொல்ல உட்ருக்க. ஓன் மவன் மூத்தவனுக்கு ‘ராஜா’ன்னு பேரு வச்சது யாருட்டி? ” கையில் வைத்திருந்தக் கைத்தடியை வைத்து மகள் பானுமதியை அடிக்க ஓங்கினாள் வெள்ளச்சிக்கிழவி.

    “அட! நம்ம புளியமரத்தா அத்ததான் பூரணம்மாவா! அப்பும் புளியமரத்தாங்கிறது பட்டப்பேரா…! நான் மேக்கருக்க புளியமரத்து எசக்கியம்மன் சாமிப்பேருன்னுலா இவ்வளவு நாளா நெனச்சுக்கிட்டு இருந்தேன்.”

      ” நல்லா நெனைச்சப்போ.” – வெற்றிலையை இடிக்கத் தொடங்கினாள் வெள்ளச்சிக்கிழவி.

     ” தம்பி, அடுத்தத் தெருவுல எடப்பக்கம் அஞ்சாவது வீடுதான் பூரணம்மா வீடு. அவ அந்தத் தெருக் கடைசியில கொஞ்சம் தூரம் போனா ஒரு புளியமரமிருக்கும், அந்த மரத்தடியிலத்தான் அத்த இருப்பா போயிக்குடுங்க.”

    ” ரொம்ப நன்றிக்கா! நான் வாரேன்.” என்றான் பத்திரிகைக் கொண்டு வந்தவன்.

     ” சரிசரி. போயிட்டு வாங்க.”

கட்டிலிலிருந்த வெள்ளச்சிக் கிழவிக்கு பித்தளைக் கும்பாவில் கேப்பைக்காடியும், அதற்கு தொட்டுத்தின்ன சின்னக் கிண்ணத்தில் வறுத்தக் கூனிக்கருவாடும் கொடுத்துவிட்டு, அவள் பக்கத்திலயே பானுமதியும் அமர்ந்தாள்.

   ” எம்மோ! பூரணம்மா எப்படி புளியமரத்தா ஆனா…? ” என்று அசைபோடும் வாயை அண்ணாந்துப் பார்க்கும் நாயைப்போல தரையிலமர்ந்து வெள்ச்சிகிழவியைப் பார்த்துக் கொண்டிருந்தாள் பானுமதி. 

     ” புளியமரத்தாளுக்குப் பத்து  வயசு இருக்கும்போது அவ தாத்தங்காரன் இந்த மரத்த நட்டாரு. காலையிலயும் சாயந்தரமும் அவ பாட்டிக்காரி தெரு அடிப்பம்புல  அடிச்சித் தண்ணி ஊத்துவா! மரமும் நல்ல… வளந்து தோப்பாகிட்டு. ஆனா, வச்சி எழட்டு வருசமாகியும் மரம் பூக்கவுமில்ல, காய்க்கவுமில்ல. ஊர்ல இதுக்குப் பிந்தி வச்ச சின்னச் சின்ன மரமெல்லாம் காய்க்க ஆரம்பிச்சிட்டது. இதக் கேள்விப்பட்ட புளியமரத்தாப் பாட்டிக்காரிக்கி இந்த மரத்துமேல  கோவம்ன்னா கோவம் சரியான கோவம்! கெணறடிக்கப் போயிட்டு ஒருமாசங் கழிச்சி வந்த புளியமரத்தா தாத்தங்கிட்ட,

யோவ்… இந்த மலட்டு மரத்துக்கு தண்ணி ஊத்தி ஊத்தி கை காலெல்லாம் வலியெடுத்ததுதான் மிச்சமே தவிர, வேறந்தப் பிரேசனமுமில்ல. நாளைக்கே யாவாரியக் கூட்டிட்டு வந்து வெட்டிப் போட்ரும், வெறவுக்காச்சும் தேறுமுன்னு கறாராச் சொல்லிப்புட்டா! “

      ” இதைக்கேட்டு புளியமரத்தா ஒரே அழுவ. ஆனா, பாட்டிக்காரிச் சொன்னா சொன்னதுதான். யார் பேச்சையும் கேக்கமாட்டாங்கிறது அவளுக்கு நல்லாவேத் தெரியும். தாத்தாக்கிட்டத் தனியா பேசலாம்ன்னு பாத்தா! பாட்டிக்காரிக் கூடவே இருக்காளன்னு புளியமரத்தாவுக்குப் பயங்கரக் கடுப்பு! 

நேரமும் ராத்திரி ஆகிப்போச்சி. எல்லாரும் சாப்புட்டுட்டுப் படுத்தும் தூங்கியாச்சி.”

    ” மறுநாள் பொழுது விடிஞ்சதும்  அசந்து ஒறங்கிட்டு இருந்த தாத்தாவ உசுப்பி, யோவ்… நல்லா விடிஞ்சிடுச்சி எந்திரியும்னு சொல்லிட்டு ஒரு சொம்புல மூஞ்சிக்கழுவப் பச்சத் தண்ணியும், ஒரு சொம்புலக் குடிக்க நீத்தண்ணியும் வச்சிட்டு.. பாட்டிக்காரி முத்தம் தொளிக்கப் போயிட்டா! தாத்தன் தண்ணியக் குடிச்சிட்டு, இடுப்புவாருல வச்ச மூக்குப்பொடி டப்பாவ எடுக்கப்போயிருக்காரு… மூக்குப்பொடிய காணும்!”

   ” எம்புருசனுக்குப் பீடி குடிக்கலன்னா பித்துப் புடிச்சிப் போயிருமே… அந்தமாதிரி கேசுப்போல மாமா” என்றாள் சிரித்தபடி பானுமதி.

    ” கரைட்டாச் சொன்ன! வெடிபோட்டதும் ஓடுற நாயிமாதிரி அவருக்கு பொடி போட்டாதான் வேலையே ஓடும்! ” என்று குண்டுகுழியில் விழுந்த வாகனம்போல் வெள்ளச்சிக்கிழவி குழுங்கிச் சிரித்தாள்.

  ” முத்தம் தொளிச்சிட்டு வந்த புளியமரத்தாப் பாட்டி. வீட்டுக்குள்ள நச்சலி நடமாடுறதப்போல அங்கயும் இங்கயும் நடமாடிக்கிட்டு இருந்த அவ தாத்தாவப் பாத்து… யோவ்! என்னத்தய்யா தேடிக்கிட்டுக் கெடக்கன்னா?”

   ” ஏட்டி, யென் மூக்குப்பொடி டப்பாவ எங்கட்டி? “

    ” ஆமா, நாந்தான் தூக்கி ஈரக்கொலையில வச்சிக்கிட்டேன். போயிட்டு மரவெட்டுற யாவரியக் கூட்டிட்டு வாரும்ன்னு சொன்னா! மூக்குப்பொடி மொளகாப்பொடின்னு கண்டதத் தேடி நேரத்தப் போக்கிட்டுக் கெடக்கான் மனுசன்னு திட்ட ஆரம்பிச்சிட்டா! “

     ” தாத்தாவும் இனிமே இவக்கிட்டக் கேட்டாச் சண்ட வந்துரும்ன்னு… தூங்கிக்கிட்டுயிருந்த பூரணத்த எழுப்பி, ‘எம்மாடி! தாத்தா மூக்குப்பொடிய எங்காயவது பாத்தீயா?’ன்னு கேட்டாரு.”

  ” நான் பாக்கலயே தாத்தான்னு… திரும்பி போர்வையப் போத்திக்கிட்டு படுத்துக்கிட்டா புளியமரத்தா! “

   “ புளியமரத்தாள உசுப்புறதப் பாத்துட்டுருந்த அவ பாட்டிக்காரி. யோவ்! கடத்தொறந்ததும் நான் பொடி வாங்கி வைக்கிறேன். நல்லாயிருப்பீரு போயிட்டு வாரும்ன்னு கோவத்துலக் கத்துன்னா! “

    ” அவ  தாத்தாக்காரரும் யாவாரியப் பாக்க சைக்கிளயெடுத்து மெல்ல உருட்ட ஆரம்பிச்சாரு. உள்ள தூங்குறமாதிரி நடிச்சுட்டுக் கெடந்த புளியமரத்தா சைக்கிள எடுக்குறச் சத்தம் கேட்டு பின்வாசல் வழியா ஓடினா. ஓடிவந்த இவளப்பாத்து, எம்மாடி! ஓன் பாட்டிக்காரி எதாவது வாங்கிட்டு வரச்சொன்னாளா?” என்றார்.

  ” இவ, இல்லன்னு தலையாட்டிட்டா. “

   ” ஒனக்கு எதும் வேணும்மான்னு கேட்டுருக்காரு…? “

    ” அதுக்கும்… ம்கூம்ன்னு தலையாட்டிட்டா. “

    ” பின்ன எதுக்கு இப்படி மூச்சிரைக்க ஓடி வந்த, சொல்லு..? “

    ” தாத்தா… நான் ஒண்ணுச் சொன்னா கேப்பீயா! “

    ” நீ சொல்லி என்னைக்கி நான் கேக்காம இருந்துருக்கேன். எத ஒனக்கு வாங்கிக் குடுக்காம இருந்துருக்கேன். என்ன வேணும் சொல்லுத் தங்கம்! “

      ” நம்ம புளியமரத்த வெட்ட வேணாம் தாத்தா…! “- கண் கலங்கக் கெஞ்சினாள் புளியமரத்தாள்.

   ”  காய்க்காத மரத்துக்குத் தண்ணி ஊத்தி என்ன பிரயோசனம் தாயி? “

    “  நீகூட எத்தனையோ கெணறு வெட்டிருக்க, எல்லாக் கெணத்துலயுமா தண்ணி வந்துருக்கு? ஆனா, தண்ணி வராதக் கெணறுலாம் மழக்காலத்துல தண்ணி நெரம்பி வெட்டுனவங்களுக்குப் பயன்படுதுலா! அதுமாதிரி நம்ம மரத்துக்கும் ஒரு காலம் வரும். அப்பும் கண்டிப்பா அது பூப்பூக்கும் காய் காய்க்கும். நீ வேணாப்பாரேன்! அது இல்லாம, நம்ம மரத்துல எவ்வளவு காக்காக் குருவிங்க கூடுகட்டி வாழுது; மத்தியான வெயிலுக்கு எத்தனை ஆடுமாடுவக் களைப்பாறிட்டுப் போகுது;

நாங்கலாம் அதுலதான் ஊஞ்சல் கட்டி வெளையாடுறோம்; அந்த மரத்தடியிலத்தான் சோறுபொங்கி வெளையாடுறோம்; அப்பறம் அங்கதான் கிளியாந்தட்டு, நொண்டி, பல்லாங்குழி, கண்ணாமூச்சி எல்லாம் வெளையாடுறோம்; அந்த மரத்த வெட்டிட்டன்னா நாங்கலாம் எங்கப்போயி வெளையாடுறது தாத்தா…?” என கண்ணைக் கசக்கினாள் புளியமரத்தாள்.

     “ இப்பன்ன ஒனக்கு மரத்த வெட்டக்கூடாது அப்படித்தான? இதுக்குப்போயி கண்ணக் கசக்கிக்கிட்டு இருக்குற! இந்தாப்பிடி மொதல்ல கண்ணத்தொட” என்று தன் தோளில் கிடந்தத் துண்டையெடுத்து கொடுத்தார்.

       கண்ணீரைத் துடைத்துவிட்டு,   “சத்தியமா வெட்ட மாட்டல்ல தாத்தா” என்றாள்.

    ” நம்ம முப்புடாதி அம்மம் மேல சத்தியமா வெட்ட மாட்டேன்.” என்று நாணல் தண்ணீரைத் தொடுவதுபோல் பேத்தியின் பிஞ்சுக் கையில் அவளக்கு வலிக்காதவாறு காய்ப்புப் பிடித்த தன் கையால் சத்தியம் செய்தார் தாத்தா.

   ” பாட்டிக்கேட்டா என்னச் சொல்லுவ?” என்றாள் புளியமரத்தாள்.

     “எதாவது ஒரு கதயச் சொல்லுவேன்.”

    ” சரிசரி கண்ண மூடி கைய நீட்டு தாத்தா ” என்றாள்.

      ” எதுக்கு? “

     ” மரத்த நீ வெட்டாததால ஒனக்கொரு பரிசுத் தரப்போறேன். சீக்கிரம் கண்ணமூடேன். ” – அவசரப்படுத்தினாள்.

   கண்ணை மூடி கையை நீட்டியவரின் கையில், தன் கையில் ஒளித்து  வைத்திருந்ததை வைத்தாள் புளியமரத்தாள்.

     கண்ணைத் திறந்துப் பார்த்த தாத்தா, ” யம்மாடி…! இத வீடுபூராம் தேடித்தேடி  மண்டயேக் காஞ்சிப்போச்சி! ஆமா, இது எங்குனக் கெடந்தது? “

   ” எங்கயும் கெடக்கல. நாந்தான் ராத்திரி நீ தூங்குனப்பொறவு எடுத்து ஒளிச்சி வச்சேன். “

    ” என்னத்துக்கு ஒளிச்சி வச்ச? “

   ” பின்ன, இந்த மூக்குப்பொடி டப்பாவ நா ஒளிச்சி வைக்கிலன்னா! இந்நேரம் மூக்குப்பொடிய போட்டுக்கிட்டு  மொசலுமாதிரி ஓடிப்போயி யாவாரியக் கூட்டிட்டு வந்து, இதுக்குள்ள எமரத்த வெட்டிப் போட்டுருப்ப…! ” -கோபமாக சொன்னாள் புளியமரத்தாள்.

    ” கள்ளாளிப் பயயுள்ள…! காரியம் சாதிக்கிறதுல நீ ஓன் அம்ம, பாட்டிக்காரியெல்லாம் மிஞ்சிட்ட ” யென்று மெல்லமாய் புளியமரத்தாள் காதைப்பிடித்து திருகி, கோலத்துக்குப் புள்ளி வைப்பதுபோல் செல்லமாய் அவள் தலையில் ஒரு குட்டு வைத்தார்.

    ” தாத்தா, போயிட்டுச் சீக்கிரமா வந்துராத…கொஞ்ச நேரங்கழிச்சே வா. அப்புந்தான் பாட்டி நம்புவா!”

    ” சரிசரி, அதையெல்லாம் நான் பாத்துக்குறேன். நீ மொதல்லப்போயி சாப்புடு. பாட்டித் தேடுவா! ” என்றார்.

      மரத்தினைக் காப்பாற்றிய மகிழ்ச்சியில் மடையிலிருந்து வாய்க்காலிற்கு பாய்ந்தோடும் நீரைப்போல சலசலவென சிரித்துக்கொண்டு வீட்டை நோக்கி ஓடினாள் புளியமரத்தாள்.

   ” என்னாச்சி..டி! கோட்டிக்காரிமாதிரி தனியா சிரிச்சிட்டு வார? “

     ” ஒண்ணுல்லப் பாட்டி… “

    ” சரிப்போயி கஞ்சக் குடிச்சிட்டு, இந்தக் குட்டியளக் கொஞ்சம் ஒடங்காட்டுக்குள்ளப் பத்திவுடு. அதுவளும் ரெண்டு நெத்தகித்தப் பெறக்கட்டும்.”

      ” சரிப்பாட்டி ” ன்னு சொல்லிவிட்டு ஆட்டுக் குட்டிகளை மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு  வீட்டுத் திண்ணையில் தன் தாத்தாவின் வருகைக்காக காத்திருந்தாள் புளியமரத்தாள்.

      புளியமரத்தாளின் பாட்டி தொழுவினை சுத்தம் செய்து கொண்டே…” போன மனுசனே இன்னுமன்ன ஆளக் காணோம்! ” என்று புலம்பிக்கொண்டிருந்தாள்.

   ” பொழுது விடியப் போன அவ தாத்தா. பொழுது உச்சிக்கு வரும்போதுதான் வீட்டுக்கு வந்தாரு. வந்துத் திண்ணையில உக்காந்தவருக்கிட்ட, என்ன தாத்தா கதயத் தயார் பண்ணிட்டல்ல. பாட்டியைக் கூப்பிடவா? ” என்றாள்.

      ” கூப்புடு ! கூப்புடு ! “ என்றார்.

     புளியமரத்தா கொண்டப்புறாக் கெணக்கா கொண்டைய ஆட்டிக்கிட்டு சந்தோசத்துலத் துள்ளிக்கிட்டு ” பாட்டியோ.. தாத்தா வந்துடுச்சு “ன்னு சொன்னதும், நீரு… யாவாரியப் பாக்கப்போனீயரா இல்ல கெணறு வெட்டப்போனீயரா…? இன்னாக் கெடக்குற ஆரம்பூண்டாங்குளத்துக்குப் போயிட்டுவர இவ்வளவு நேரமா ஒமக்கு “ன்னா.

     ” ஏட்டி நம்ம யாவாரி நாங்குநேரி பக்கம் மரம்வெட்ட போயிருக்காராம்; வர்றதுக்கு பத்துநாளு ஆவுமாம். அவரு வீட்டம்மாச் சொல்லிச்சி. அதான் உன்னங்குளம், சிங்கநேரின்னு எல்லாம் ஊரையும் சுத்தியடிச்சிட்டு வாறேன். ஒரு யாவாரியும் சிக்கல” என்று களைப்படைந்தவர்போல் கணக் கச்சிதமாய் நடித்தார். 

    “இந்தத் திருனவேலி சில்லாவுல ஆள வெட்டனும்னா வெண்டிப்பயலுவ வண்டி வண்டியாக் கெடைப்பானுவ! மரம் வெட்டத்தான் ஒரு மயிராண்டியும் இல்ல.” – புளியமரத்தாளின் பாட்டி சலித்துக்கொண்டாள்.

      ” புளியமரத்தாவப் பாத்து அவ தாத்தா கண்சாடக் காட்டிக்கிட்டு கமுக்கமாச் சிரிச்சிக்கிட்டே…சரி வுடு! நீ போயிட்டுக் குட்டியளுக்கு ரெண்டு புல்லுகில்லுப் பறிச்சிட்டு வா. நான் போயிட்டுக் கருத்தக் கிடாவுக்கு காயடிக்க ராமையா கோனாரக் கூட்டிட்டு வாரேன்”ன்னு சைக்கிள எடுத்துட்டு கெளம்பிட்டாரு.

      ” ஏ பூரணம்மா! வீட்டத் தொறந்து கீறந்துப் போட்டுட்டு வெளையாடப் போயிராதடீ… அப்பறம் எதுத்த வீட்டு கிட்ணன் நாயி வந்து எல்லாச் சோத்தையும் நக்கிட்டு போயிரப்போவுது”ன்னு சொல்லிட்டு அவளும் வயக்காட்டப் பாத்து கெளம்பிட்டா.

      தாத்தாவும் பாட்டியும் கெளம்புனத்துக்கு அப்புறம் ஓடிப்போயி புளியமரத்தக் கட்டிப்புச்சிக்கிட்டு, “நீ என்ன ஒங்கப் பாட்டிக்கிட்டயிருந்து ரெண்டு வாரந்தான் காப்பாத்திருக்க. அதுக்கப்பறம் என்ன எப்படியும் வெட்டிருவாங்கன்னு கவலப்படுதியா? நானும் எங்கத் தாத்தாவும் அப்படிலாம் நடக்க உடமாட்டோம். அதனால நீ பயப்படாம  சந்தோசமா இரு. ‘சரியா!’ன்னு புளியமரத்துக்கிட்டச் சொன்னாளாம். அதக்கேட்டு புளியமரமும் ‘சரி!’ன்னு தலையாட்டிச்சாம்.”

   ” புளியமரம் தலயாட்டிச்சா…! யாருட்டக் காது குத்துற…? ” என்றாள் பானுமதி.

    ” ஏட்டி! எங்கக்கிட்ட அவ சொன்னதத்தான் ஓங்கிட்ட நா சொன்னேன். எல அசஞ்சா தல அசச்சிதிம்பா. காத்தில்லாத நேரத்துல மரம் கல்லுமாதிரி நிக்கும்போது கோவத்துல இருக்குன்னு சொல்லுவா! ” 

         ” ஆமா..ரெண்டு வாரங்கழிச்சி மரத்த வெட்டாமருக்க தாத்தனும் பேத்தியும் வேறன்னக் கதச் சொன்னாங்க? “

      “ அந்தக்கத பெரிய கத போ! வயக்காட்டுக்குப்போன அவ பாட்டிக்காரி. புல்லறுத்துக்கிட்டு இருக்கும்போது வரப்புல அவளுக்கு முன்னாடி நாலஞ்சடித் தள்ளி வாழத்தடைமாதிரி ஒன்னு கெடந்துருக்கு. இவ புல்லறுத்துக்கிட்டு அத நெருங்க நெருங்க, அது அங்கயும் இங்கயுமா நெளிஞ்சிருக்கு. இவ என்னடா ஒருமாதிரி நெளியிதுன்னு சந்தேகப்பட்டு கையிலயிருந்த பன்னருவாளயெடுத்து.. எட்டி நின்னு அதுமேல வீசிருக்கா. அருவா அது தலையிலப்போயி நங்குன்னு விழுந்ததும், ஒரு சோளவு அகலத்துக்கு படத்த எடுத்துக்கிட்டு இவள வெரட்டு  வெரட்டுன்னு வெரட்டிருக்கு! இவ ‘பாம்பு பாம்பு’ன்னு கத்திக்கூப்பாடு போட்டுக்கிட்டு பின்னாலப் பாம்பப் பாத்துக்கிட்டே ஓடுனவ, முன்னால கெடந்தப் பள்ளத்துல பொத்துன்னு வுழுந்துட்டா! “

     ” ஐய்யயோ! கெளவியப் பாம்பு கொத்திகித்திப் புட்டா?” – பானுமதி பாம்பு படம் விரித்ததுபோல் கண்களை விரித்து வெள்ளச்சிக்கிழவியிடம் கேட்டாள்.

      ” இல்ல இல்ல. அதுக்குள்ள கெழவி அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் வேலப்பாத்த ஆம்பிளையாளுவ ஓடிவந்து காப்பாத்திட்டாங்க. அன்னைக்கி புளியமரத்தா பாட்டி பொழச்சதே மறு பொழப்புதான்! ஆனா, பள்ளத்துல வுழுந்ததுல கெழவிக்கிப் பிட்டிதான் நவுண்டுப்போச்சு!”

    ” யம்மாடி! பிட்டி நவுண்டா நடக்க முடியாதே? “

    ” உட்காரவே முடியாது. இதுல எங்கக்கூடி நடக்க! புளியமரத்தா தாத்தா வாராவாரம்  சக்கடா வண்டியில பொண்டாட்டியத் தூக்கிப்போட்டுக்கிட்டு, தெக்கருக்குற கொசவங்குளத்துல தேரிராசான்னு ஒரு வைத்தியங்கிட்டக் கொண்டுபோயி வைத்தியம் பாத்துட்டு வருவாரு. கெழவி எழுந்து நடக்கவே ஆறேழு மாசமாகிட்டு. அதுவரைக்கும் கெழவி கெடையிலதான் கெடந்தா. “

    ” ஆம்பள கெடையிலக் கெடந்தா பொம்பள அருவருப்புப் பாக்காம எல்லாம் செஞ்சி ஆள எப்படியும் தேத்திப்புடுவா. ஆனா, பொம்பள கெடையிலக் கெடந்தா ஆம்பள பண்டுவம் பாக்குறது ரொம்ப கஷ்டம்லா.”

   “ நீ சொல்றது சரிதான். 

ஆனா, அவர கடுகளவும் கஷ்டப்படாம புளியமரத்தா பாத்துக்கிட்டா. கொஞ்சங்கூட மொகம் சுளிக்காம கெழவிக்கு பீ மோளள்ளி, நல்ல சீயக்காய்ப் போட்டு குளிப்பாட்டி, புண்ணுக்கு மருந்தும் வீக்கத்துக்குத் தைலமும் தேச்சு விட்டுட்டு பொடவக் கட்டி வுடுவா. வயக்காட்டுல வெயில்லக் கெடந்து வேல செஞ்சிசெஞ்சி காஞ்சிப்போயி செம்பட்டப் பாஞ்ச கெழவித் தலமுடிக்குத்  தேங்கண்ணத் தேச்சி, நடு வகிடெடுத்து நெத்தியில குங்குமமும்  திருநாரும் வச்சு வுடுவா. கெழவியப் பாத்தா யாரும் கெடையிலக் கெடக்கிறவனு சொல்ல முடியாது. நல்லா ‘கெளுரு’மாதிரி இருந்தா! வெயிலுலக் கெடந்து  கருத்துப்போன கெழவி ஒடம்பு, புளியமரத்தா கவனிப்புல சும்மா ‘பப்பாளிப்பழம்’ மாதிரி பொதுக்கு பொதுக்குன்னு ஆகிப்போச்சி. கெழவனுக்கு நரச்ச  மீச வெறச்சிப்போயி நின்னுருக்குன்னா எப்படி இருந்துருப்பான்னு நீயே புரிஞ்சிக்கோட…! “

   ” ச்சீ…ப்போம்ம. ஒரு வயசாளின்னுங்கூடப் பாக்காம எப்படிச் சொல்றாப்பாரேன்!” – பானுமதி வெட்கப்பட்டுத் தலை குனிந்தாள்.

    “ ஏட்டி, நா என்ன பொய்யா சொல்றேன். ஒரு நாளு… எப்பயும்போல கெழவிய சீவி சிங்காரிச்சி சோத்தையும் குடுத்து கட்டுல்லப் படுக்க வச்சிட்டு, புளியமரத்தா பின்வாசல்ல உக்காந்து ஆட்டுக்குட்டிக்கு வாழப்பூ நறுக்கிட்டு இருந்துருக்கா. கெழவிக்குத் தைலம் வாங்கிட்டு வந்த அவ தாத்தன். தைலத்தக் கட்டுலுக்கிட்ட வைக்கப்போயிருக்காரு. அப்பும்  தூக்கத்துலருந்தக் கெழவியப் பாத்துட்டு சொக்கிப்போயி, சரி தூங்கத்தானச் செய்யுறா ஒரு முத்தத்தப் போட்டுறாலாம்னு  மூஞ்சியப் பக்கத்துலக் கொண்டு போயிருக்காரு. மூக்குப்பொடி நெடியடிச்சி கெழவி ‘அச்சி அச்சி’ன்னு தும்மிக்கிட்டு அலறியடுச்சி எந்திச்சிப் பாத்துருக்கா…! கெழவன் கட்டுல் பக்கத்துல நின்னுக்கிட்டு ஈ…ன்னு பல்லளிச்சிருக்காரு. இளிச்சிட்டு நின்ன கெழவனப் பாத்து ‘யோவ் இப்பம் எதுக்குயா என் பக்கத்துல வந்த?’ன்னு கெழவிக் கேட்டதுக்கு, இன்னைக்கி நீ ரொம்ப அழகா இருக்குற. அதான் மு.த்..தம்… குடுக்கலாம்ன்னு வந்தேன்’ன்னு கெழவன் சொன்னதும், ‘எடு செருப்ப எடுபட்டப்பயல.. வீடு போபோங்குது காடு வாவாங்குது இந்த வயசுல ஒனக்கு முத்தம் கேக்குதா முத்தமு’ன்னு முடியப் புடிச்சியிழுத்து முதுவுல ஒன்னு வச்சா! “ என்று  வெள்ளச்சிக்கிழவி சொன்னதும் கோழி முட்டையிட்டப் பொறவு கொக்கரிப்பதுபோல் பானுமதி சத்தம்போட்டு சிரித்தாள்.

      ” ஆனா, இன்னைக்கு பெத்தப் புள்ளயளே தாய்-தகப்பன அனாதியாவும், அஞ்சுக்கும் பத்துக்கும் கையேந்தவும், அரைசாணு வயித்துக்கு கஞ்சி ஊத்தாம பட்டினியாச் சாவவுடுற காலத்துல. அத்த பாட்டிக்காரியப் பெத்தத் தாயப்போல பாத்துருக்கானா, உண்மையிலே அவதாம்மா தெய்வம்! ” என்று பானுமதி சொன்னதும்.

   ” நீ சொன்ன மாதிரியே அவ தாத்தனும் பாட்டியும்  அவள அப்படித்தான் பாத்தாங்க. அதுக்கப்பறம் அவ பேச்சுக்கு அவுங்க ரெண்டுபேரும் மறுப்பேச்சே பேசுனது கெடையாது. அதேப்போல அவ மனசுக்குப் புடிச்சத செய்யும்போது குறுக்க நின்னதும் கெடையாது. அதனால, அவளுக்குப் புடிச்ச புளியமரத்துக்குப் பயப்படாம பாசத்தோடு தண்ணி ஊத்தி வளக்க ஆரம்பிச்சா! எப்படியும் புளியமரத்தப் பூக்க வச்சிரனும்ன்னு மத்த வெளயாட்டுலாம் வெளயாடாம, ‘ஒரு கொடம் தண்ணியெடுத்து ஒரு பூ பூத்தாச்சி’ வெளயாட்ட வெளயாடிக்கிட்டே நாங்கலாம் ஆளுக்கொரு கொடத்த எடுத்துக்கிட்டு, தெனமும் காலையிலயும் சாய்ந்தரமும் மரத்துக்குத் தண்ணி ஊத்துனோம். தண்ணி ஊத்திட்டு,  புளியமரத்துக்கிட்ட ஒரு கொடத்துக்கு ஒரு பூவலாம் நீ பூக்க வேணாம். மொத்தக் கொடத்துக்கும் சேத்து ஒத்தப் பூ பூத்தாப்போதும்ன்னு கெஞ்சினோம்; முப்புடாதிக்கிட்ட, ‘அம்மா…தாயே!’ எப்படியாவது ஒரு பூவாவது பூக்க வச்சுருன்னு வேண்டிக்கிட்டோம்! “

    ” ஒங்க வேண்டுதல, ‘ஆத்தா’ நெறவேத்துனாளா இல்லையா? “

    ” எங்க நெறவேத்துனா! வேதனையையும் சோதனையையுந்தாக் குடுத்தா…! “

    ” என்னம்ம சொல்ற நீ? “

    ” ஆமாட்டி. அந்த வருசம் மழயே இல்ல. அதனால, பங்குனியிலயே தண்ணிக்கிப் பெரும்பாடுப் பட்டோம். சித்திர-வைகாசியிலலாம் கோடன்னாங்கோட சரியானக் கோட. எதோ! வானத்துலருந்து நெருப்பள்ளி கொட்டுனமாதிரி வெயிலடிச்சது. அனலையும் வெக்கயையும் தாங்க முடியாம ஆடுமாடுவலாம் அங்கங்க சுருண்டுழுந்து செத்துக் கெடந்துச்சு; கடல்மாதிரி வத்தாத கெணறுகூட காப்படித் தண்ணியில்லாம வறண்டுப்போச்சு; கொளங்குட்டையிலலாம் கொக்கு, நாரை எலும்புக் கூடுதான் நெரம்பி கெடந்துச்சு; நெட்டப் பனையெல்லாம் மொட்டப்பனையா மாறிப்போச்சு; எந்த ஆடைக்கும் கோடைக்கும் அசராத ஒடமரத்துலக்கூட வெறும் முள்ளு மட்டுந்தான் இருந்துச்சு; சூடுப்புடிச்சா ஒண்ணுக்குச் சொட்டு போடுறமாதிரித்தான் அடிபம்புல தண்ணியும் சொட்டுச்சு!”

    ” அப்படியொரு தண்ணி பஞ்சத்துலயும் எப்படிம்ம புளியமரத்தா அத்த இந்தப் புளியமரத்தக் காப்பாத்துனா..?! ” 

    ” அடிபம்புல ஒரு கொடம் தண்ணிக்கே ஊருசனம் உசுரக் குடுத்துட்டு இருக்கும்போது புளியமரத்தா சளைக்காம காத்துக் கெடந்து, கை வலிக்க வலிக்க அடிச்சி ரெண்டுக்கொடம் தண்ணியெடுப்பா! ஒரு கொடத்த வீட்டுலச் சோறுகறிப் பொங்கவும் குடிக்கவும் வச்சுக்குவா. ஒரு கொடத்த புளியமரத்துக்கு ஊத்துவா. அத்தாப்பெரிய மரத்துக்கு அந்த ஒரு கொடந்தண்ணி பத்தாதனால

கொஞ்சங் கொஞ்சமா மரத்து எலையெல்லாம் பழுக்க ஆரம்பிச்சிச்சு; புளியமரத்தாவுக்கு மரம் பட்டுருமோன்னு பயமாகிப்போச்சு;

அவ தாத்தனுக்கும் பாட்டிக்கும் பேத்திப்படுற பாட்டப் பாத்து மனசு ஒடஞ்சிப்போச்சு.”

     “அந்தப்பாவி மழ என்னைக்கித்தான் பெஞ்சது…? ஒங்கக் கஷ்டப்பாடெல்லாம் எப்புந்தான் தீந்தது…?” – அழும் தொனியில் கேட்டாள் பானுமதி.

     ” ஆடி-ஆவணிப்போயி பொரட்டாசி பொறந்தும் ஒரு பொட்டு மழ பெய்யாததால.. ஊருசனம் பூராம் தெக்க நீர் வாசமுள்ள எடமான அம்பாசமுத்ரம்-சேர்மாதேவி பக்கம் பஞ்சம் பொழைக்கப் போயிட்டாங்க. வயசான கெழடுகளும், வயசுக்கு வந்த கொமருகளும், வயசுக்கு வரப்போகுற எங்களையும், எங்களுக்குப் பாதுகாப்பாத் தெருவுக்கு நாலு ஆம்பளயும் மட்டுந்தான் ஊர்ல இருந்தோம். பொரட்டாசி முடிஞ்சி அய்ப்பசி மாசம் ரெண்டாவது செவ்வாக்கெழம ராத்திரி. வானத்துல ஒத்த வெள்ளிப் பூக்காம கருகருன்னு மேகம் தெரண்டு நின்னதப்பாத்து ஊரே சந்தோசத்துலக் கூச்சலிட்டது! ‘இன்னைக்கு மழ தப்பாதுடோய்’ன்னு எல்லாரும் நம்புனோம். நம்புனமாதிரியே நடுசாமத்துல ஈசானி மூலையிலக் கண்ணப் பறிக்குறமாறி ‘பளிச் பளிச்சி’ன்னு மின்னல் வெட்டிச்சி. “

   ” கொஞ்ச நேரங்கழிச்சி வானம் ஒடஞ்சி வீட்டுக் கூரையில வுழுந்தமாறி சும்மா ‘டமார் டமார்’ன்னு இடி இடிச்சதுப்பாரு…!

செவி ரெண்டும் அடச்சிப்போச்சி. ஈரக்கொல பயத்துல நடு நடுங்கிப்போச்சி! இடி இல்லாத நேரம் எல்லாரும் அண்டா-குண்டாவத்  தூக்கிட்டுப்போயி அவுங்க அவுங்க வீட்டு முத்தத்துல வச்சிட்டு, கதவப் பாதி சாத்துனாப்ல மண்ணன்ன வெளக்கு வெளிச்சத்துல  வீட்டுக்குள்ள உக்காந்துட்டுக்கு வெளியவேப் பாத்துக்கிட்டு இருந்தோம். ஆனா புளியமரத்தா என்ன பண்ணுனா தெரியுமா? “

   ” அத்த என்ன பண்ணிருப்பா! நெல்லு அவிக்கிறக் கொப்பரயவே தூக்கிட்டு வந்து வச்சிருப்பா! அப்படித்தானே… ?” 

     ” ஓன் மோர. இடி சத்தத்தக் கேட்டு கன்னத்தப் புடிச்சி இடுங்குன கொழந்தமாறி ஊரே பயந்துபோயிக் கெடக்க. இவ தைரியமா அந்தச் சாமத்துலயும் மண்ணுவெட்டிய எடுத்துட்டுப்போயி மரத்தச்சுத்தி பெரிய பண்ணையாப் புடிச்சி வச்சா!”

   ” யம்மாடியி! அந்த நேரத்துல  பேயிக்குத்தான் அவ பயப்படல. ஆள கரிக்கட்டையாக்குற அந்த ‘இடி’க்குமா பயப்படல? உசுரவிட அப்படி என்னதான் புடுங்குனப் பாசமோ அந்த மரத்து மேல.” – கோபப்பட்டாள் பானுமதி.

    ” ‘என்ன பாசமா? ‘ இந்தக் கேள்விய எங்கிட்ட கேட்டமாறி அவக்கிட்டக் கேட்டுருந்தன்னு வை. ஓன் வாயக் கிழிச்சிருப்பா. நாக்கறுத்து நாயிக்குப் போட்டுருப்பா! நமக்கெல்லாம் ஒடம்புக்குள்ளத்தான் உசுரிருக்கு. அவளுக்கு உசுரு வெளில நிக்குற அந்தப் புளியமரந்தான். அப்பறமெதுக்கு அவ ஒடம்பப்பத்தி கவலப்படப்போறா! “

     “ஆனா, இப்படியொரு பாசக்காரிய இந்த ஊரு உலகத்துல எங்கயும் பாக்க முடியாதும்ம…”

      ” அன்னைக்கி அந்தப் பாசக்காரிக்காக மேகம் உருகி, சாமி கொடியழைப்புக்கு கொட்டு அடிக்கிறமாறி சும்மா ‘கணங்கணங்’ன்னு மழ கொட்டோ கொட்டென்னு கொட்டிச்சி. நம்ம முத்தத்துலயே முட்டளவுத் தண்ணி கெடந்துச்சின்னா பாத்துக்கோயேன். அந்த அப்பியலுக்குப் புடிச்ச மழ காத்திய வரைக்கும் வாரந்தவறாம ஒரு மழ வந்து நல்ல வெளுவெளுன்னு வெளுத்ததுனால, சுடுகாடாக் கெடந்த ஊரு பூக்காடா மாறிப்போச்சி! பாலையாக் கெடந்த ஊரு பச்சப்பசேன்னு சோலையா ஆகிப்போச்சி! கொளம் தண்ணி மேவி மறுகாலு வுழுந்து வயக்காடெல்லாம் நண்டும் நத்தையும் நல்ல கொழுத்துப்போயி கெடந்துச்சி! பஞ்சம் பொழைக்கப் போன மக்களெல்லாம் ஊருக்கு திரும்பி வந்து சந்தோசமா பருவம் பண்ணுனாங்க. மாருகழில குளுருன்னா குளுரு கடுங்குளுரு. தை பொறந்தா வழி பொறக்கும்ன்னு சொல்வாங்கலா.”

    ” ஆமா. கண்டிப்பா பொறக்கும்லா!”

அரிசிப் புடைத்தப்படிச் சொன்னாள் பானுமதி.

     “ எல்லாத்துக்கும் நல்லவழி பொறந்தமாறி புளியமரத்தாளுக்கும் ஒருவழியா நல்லவழி பொறந்துடுச்சி.”

     “அப்பாட… புளியமரத்தா மரம் பூத்துடுச்சாம்ம? “

      ” ஆமாட்டி. மாருகழிப்பனி மடத்தனமா அடிச்சதுனால ஊரே அன்னைக்கி ஒரே பொக மூட்டமா இருந்தது.  எப்பயும்போல எந்திச்சதும் மரத்தப் பாக்கப் போனவ, ‘குய்யா முய்யா’ன்னு கத்திக்கிட்டு வானத்துக்கும் பூமிக்கும் ஏகிறிக் குதிச்சி வீட்டப்பாத்து ஓடிப்போயி, தாத்தோ! சீக்கிரம் வான்னு, தொழுவுல நின்னவரக் கூட்டியாந்து ‘பாட்டியத் தூக்குன்னா’. அவரு, ‘எதுக்குத்தாயி அவள இப்ப தூக்க சொல்ற?’ன்னு கேட்டாரு. நீ மொதல்ல  தூக்குன்னு.. கெழவியக் குண்டுக்கட்டாத் தூக்கிட்டு ரெண்டுபேரும் புளியமரத்தப் பாத்துப் போனாங்க. கெழவி கால் வலியில ‘ஆத்தாடி அம்மாடி’ன்னு கத்துனதப் பாத்து தெருவுல இருந்தவுங்க என்னாச்சோ ஏதேச்சோன்னு பதறியடிச்சி பின்னாடி ஓடுனாங்க. நாங்களும் சத்தங்கேட்டு என்னன்னு போயிப் பாத்தோம்…!”

    ” தாத்தனும் பேத்தியும் சேந்து கெழவிய உசுரோட புளியமரத்தடியிலப் பொதச்சிட்டங்களா…? “

    ” அடிப்பாவி! யாரப்பாத்து என்ன சொல்லுற? அவிய ரெண்டுபேரும் அப்படியாப்பட்ட ஆளுங்க கெடையாது.”

    ” சும்மா சொன்னேன் தாயே. அதுக்குள்ள நீ ஆவேசப்படாம நடந்ததச் சொல்லு! “

    “ ஏட்டி குத்திருட்டுல மினுக்கெட்டாம் பூச்சிக்கெணக்கா உச்சிக்கொப்புல பூத்துருந்த ஒன்னு ரெண்டுப்பூ அந்த பனி மூட்டத்துல பளிச்சுன்னு தெரிஞ்சது. அத தாத்தனுக்கும் பாட்டிக்கும் காட்டி, ‘எம்மரம் பூத்துடுச்சி  எம்மரம் பூத்துடுச்சி’ன்னு சந்தோசத்துல திங்கு திங்குன்னு பூமி அதுரக் குதிச்சா. கெழவன் கையிலருந்த கெழவி கண்ணச் சுருக்கி கைய நெத்தியில வச்சி கூர்ந்து பூவப்பாத்துட்டு, சந்தோசத்துல அவளும் படக்குன்னு கால ரெண்டையும் தரையில ஊனிட்டா! அன்னைக்கி முப்புடாதி அம்மன நேர்லப் பாத்ததுபோல தெருச்சனம்பூராம் புளியமரத்தாவப் பாத்தது. பூக்காத மரத்தப் பூக்க வச்ச பூரணம்மாவ எட்டுத் தெசைக்கும் கேக்கும் வேட்டுச்சத்தம் மாதிரி ஊரே அவள ‘புளியமரத்தா’ன்னு ஒட்டுக்கா கத்திச் சொல்லியது. பட்டப்பேரு வச்சிக் கூப்பிட்டா எல்லாத்துக்கும் கோவந்தான் வரும். ஆனா, புளியமரத்தாவுக்கு எதோ படிச்சி பட்டம் வாங்குனதுபோல சந்தோசத்துல மெதந்தா; பெருமத் தாங்காம வெக்கப்பட்டா! “

    ” பின்ன…! அடிபட்டுக் கெடப்பவன ஆசுபத்ரிக்கித் தூக்கிட்டுப் போனாதான டாக்டரு வைத்தியம் பாத்து அவன் உசுர காப்பாத்த முடியும். அந்த மாதிரி என்னதான் மழப்பெஞ்சி மரம் பூ பூத்தாலும். அவ்வளவு தண்ணிப் பஞ்சத்துலயும் அலுக்காம சளைக்காம மனசத் தளரவுடாம, மாங்கு மாங்குன்னு தண்ணி ஊத்தி அந்த மரத்துக்கு உசுருக் குடுத்தவ அவதான. அவளுக்கு சந்தோசமும் பெருமையும் இருக்கத்தானச் செய்யும்! “

     ” அன்னைக்கி ராத்திரிப்பூராம் மரம் பூத்தத நெனச்சி நெனச்சி மனசு நெறஞ்சிப் படுத்தவ. மறுநா காலையில எந்தீச்சி கெழவிக்குக் காப்பித்தண்ணியக் குடுத்துட்டுத் திரும்பும்போது ‘கெழவிப் பாத்துக்கிட்டா! ‘ “

    ” கெழவி என்னத்தப் பாத்தா…? “

      ” பின்னாடிப் பாவாடையிலப் பட்டுருந்தக் கறையத்தான். “

      ” எம்மோ… இதென்ன ஆச்சரியம். புளியமரம் பூத்த மறுநாளு புளியமரத்தா அத்தயும் வயசுக்கு வந்துட்டாளா…! “

    “ ஆமாட்டி. கெழவி தூங்கிட்டுருந்தக் கெழவன எழுப்பி, ‘யோவ்… நம்ம பேத்தி பெரிய மனுசி ஆயிட்டா’ன்னு சொன்னதும், கெழவன் கும்பாட்டக்காரி

தலையிலக் கும்பம் வச்சி சுத்துறமாறி சந்தோசத்துலக் கெழவிய அலேக்காத் தூக்கி அஞ்சாறு சுத்து சுத்தினாரு. ‘யோவ் நல்லாருப்ப, தல கிறுகிறுங்கு யறக்கி விடும். இப்புந்தான் காலு கொஞ்சம் பரவாயில்ல. மறுபடி கீழகீளப் போட்டு மண்டைய ஒடச்சிராதயும்’ன்னு கெழவிக்  கெஞ்சிரதப்பாத்து புளியமரத்தாளுக்கு சிரிப்பாணி தாங்க முடியல.”

    “ கெழவன் சுத்துறத நிப்பாட்டிட்டு   கெழவியப் பூப்போல கீழ யறக்கி கட்டுலுல  உக்காரவச்சாரு. கெழவிக்கு சாராயம் குடிச்சமாறி  ஒரே கெறக்கமா இருந்தது. புளியமரத்தா ஓடிப்போயி குடிக்கத்  தண்ணிக்கோரி குடுத்தா. தண்ணிய மடக் மடக்குன்னு குடிச்சிட்டு, ‘என்னட்டி சிரிப்பு! போயித் தொழுவுல உக்காரு. தலைக்குத் தண்ணி ஊத்துறவரைக்கும் வீட்டுள்ள வரக்கூடாது’ன்னு புளியமரத்தாக்கிட்டச் சொல்லிட்டு, ‘யோவ்! சுப்பையா நாடார் கடையிலப் போயிட்டு நல்லண்ண வாங்கிட்டு வாரும். அங்க அவனப் பாத்தேன், இவனப் பாத்தேன்னு வெட்டிப்பேச்சு பேசி நேரத்த வீணாக்காம வெரசா வீடுவந்து சேரனும் புரிஞ்சிதா’ன்னு கெழவன விரட்டுனா.” 

     “ மரம் பூக்கணும்ன்னு இவ காத்துருந்தாளா! இல்ல இவ பூக்கணும்ன்னு மரம் காத்துருந்துச்சான்னு ஊருசனம் அதிசயமாய் பேசிய புளியமரத்தாளப் பாக்கப்போன எங்களப் பாத்து, ‘அடியே! நீங்களாம் எப்பும் குத்தவைக்கப் போறீங்கட்டின்னு கேட்டா!‘ அதுக்கு நாங்க, கால் வலிக்கும்போது  குத்தவைப்போம்ன்னு சொன்னோம். ‘பாப்பும் பாப்பும் கால் வலிச்சி உக்காருதியளா இல்ல கவுட்டுள வலிச்சி உக்காருதியளான்னு  நானும் பாக்கத்தானப் போறேன்’ன்னு கெழவிச் சொன்னதும், நாங்களாம் வெக்கப்பட்டுக்கிட்டே தொழுவுக்குப் போனோம். அங்க புளியமரத்தா நாட்டுக்கோழி முட்டய ஒடச்சி பச்சையாக் குடிச்சிட்டுருந்தா. எனக்கும் கொளகொளன்னு இருக்குற வெள்ளக் கருவயெடுத்து நாக்குள வச்சா. எனக்கு கோமுட்டிக்கிட்டு  ஒருமாதிரி வந்துடுச்சி. அப்பறம் ஒரு கிளாசு நெறைய நல்லெண்ணெயக் குடிச்சா. ஆத்தாடி இவக் கிட்டயிருந்தா இன்னும் என்னனென்ன எழவையெல்லாம் பச்சையாக் குடிப்பாளோன்னு நாங்களாம் வீட்டப்பாத்து ஓடியே வந்துட்டோம்.” என்று வெள்ளச்சிகிழவி வாயோரம் வெற்றிலை ஒழுக சிரித்தாள்.

    “ அப்பறம் வயசுக்கு வந்த புள்ளைக்கு வடையும் பாயசமுமா குடுப்பாவ” என்றாள் பானுமதி. 

    வெள்ளச்சிக்கிழவி சிரிச்சிக்கிட்டே “ ஆனா, புளியமரத்தா  சடங்குக்கு நெல்லுச் சோறுபோட்டு கெழவனும் கெழவியும் அசத்திப்புட்டாவல்ல அசத்தி!” என்றாள். 

      “ என்னம்ம சொல்ற?! அப்பலாம் கல்யாண வீட்டுல குருணச்சோறு போடுறதே குதுரக் கொம்பாச்சே!” –  பானுமதி திறந்தவாயை மூடாமல் திகைத்துப்போயி நின்றாள்.

    “ கேப்பையையும் சோள மாவையும் தின்னுக்கிட்டுக் கெடந்த சனங்க. நெல்லுச் சோறுன்னா சொல்லவா செய்யணும்! ஆம்பளயலாம் தொண்டவரைக்கும் கெதங்கத் தின்னுட்டு, திண்ணையிலும் முத்தத்துலயும் கொறட்டவுட்டு ஒரங்கிக்கிட்டுக் கெடந்தாவ. பொம்பளயலாம் சாப்புட்டுட்டு சட்டிச் சட்டியா சோறு, கொழம்பு, அவியக்கறி எல்லாம் எடுத்துட்டு வந்து ஒருவாரம் சூட வச்சித் தின்னாவ. அந்தமாதிரி சாப்பாட்ட நான் இன்னையவரைக்கும் எங்கேயுமே சாப்பிட்டதே கெடையாது. அவ்வளவு ருசி…!” என்று எச்சில் முழுங்கினாள் வெள்ளச்சிக்கிழவி.

     வெள்ளச்சிக்கிழவி புளியமரத்தாவின் கதையைச் சொல்லி முடித்ததும், பானுமதிக்கு புளியமரத்தாளைப் பார்க்கனும் போலயிருந்தது.  “எம்மோ! அத்தைய ஒரட்டு பாத்துட்டு வந்துருதேன்” என வெள்ளச்சிக்கிழவியிடம் சொல்லிவிட்டு  புளியமரத்தை நோக்கி நடந்தாள்.

     அங்கு புளியங்குச்சியை எடுத்து, “ கொள்ளயக் கடிச்சப் பயலுவளா! இனும எவனாவது புளியமரத்துலக் கைய வச்சியே. குஞ்சாமணிய அறுத்துப்புடுவன் அறுத்து” என்று சிறுவர்களை விரட்டிக்கொண்டிருந்தாள் புளியமரத்தாள். 

     அதை ஓரமாய் நின்று ரசித்து புளியம்பூவைப்போல் சிரித்துக்கொண்டிருந்தாள் பானுமதி.


Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

7 Replies to “புளியமரத்தாள்”

  1. மிக மிக அருமையான அழகியல்பூர்வமான சிறுகதை. முழுதாய் வாசித்தேன். மிகச் சிறப்பு. அருமையான மொழிக் கோப்பு. வாழ்த்துகள்..

  2. Excellent story. The writer portrays the life-style of people of southern Tirunelveli
    region in the 1970-1990 period. I have heard/seen many people worshipping Neem (Veppa Maram)
    tree as the abode of Isakki Amman. There are so many variants of Amman in every village.
    The well-known example is Muppanthal Isakki Amman temple (under/besides an Aaala Maram), which approximately defines the boundary of erstwhile Pandya and Chera Kingdoms. My relatives worship, even today, Pon Isakki Amman whose Veppa Maram is replaced by a concrete structure. Mostly young
    daughters, who are affectionately brought up by grandparents as the writer depicts, continue to worship
    as Kudamba Theivam even after their marriage. This superb story takes my memory lane fifty years back, though I live in the other side of the earth now.

    Nantri.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.