தானாக உய்த்தறியும் எர்க் எப்படி ஒரு வெள்ளையனை ஒழித்தான்

ஹோமோஸ் வெகு சீக்கிரம் அறிவுள்ள பேச்சைக் கற்றுக் கொண்டு விட்டது, எனவே தைரியமாக எலெக்ட்ரீனாவிடம் பேசியது.
ராஜகுமாரி அதனிடம் ஒரு தடவை கேட்டாள், அதன் முகத் துவாரத்தில் மின்னுகிற வெள்ளைப் பொருள் என்னவென்று.
 “அதை நான் பல் என்று அழைப்பேன்,” அது சொன்னது.
 “ஓ, எனக்கு அதில் ஒன்றைக் கொடேன்!” என்று வேண்டினாள் அரசகுமாரி.
 “அதுக்குப் பதிலாக நீ எனக்கு என்ன கொடுப்பாய்?” அது கேட்டது.
 “நான் என்னோட சின்ன தங்கச் சாவியைத் தருவேன். ஆனால் ஒரு கணம்தான்.”
“அது என்ன சாவி?”
“என் சொந்தச் சாவி. தினம் மாலையில் அதை வச்சு என் மூளைக்கு நான் சாவி கொடுப்பேன். உனக்கும் ஒண்ணு இருக்கணுமே.”

ஒரு ட்ராகனோடு போரிட்ட கணினியின் கதை

“என்னோட பழம் கணினியே! என் நல்ல கணினியே! அப்படி இப்படி, இந்த ட்ராகன் என் சிம்மாசனத்தைப் பிடுங்க உத்தேசிக்கிறது, என்னைத் துரத்தப் போகிறது, உதவி செய், பேசு, நான் எப்படி அதைத் தோற்கடிப்பது?”
“ஓ-ஓ,” என்றது கணினி. “முதலாவது நீங்கள் முந்தைய விஷயத்தில் நான் சொன்னதுதான் சரி என்று ஒத்துக் கொள்ளுங்கள். இரண்டாவது, நீங்கள் என்னை டிஜிடல் பிரதம மந்திரியே என்றுதான் அழைக்க வேண்டும், ஆனால் நீங்கள் என்னை ’மாண்பு மிகு இரும்புகாந்த்’ அவர்களே என்று வேண்டுமானாலும் அழைக்கலாம்! “
“நல்லது, நல்லது. உன்னை நான் பிரதம மந்திரி என்று நியமிக்கிறேன். நீ எது சொன்னாலும் ஏற்கிறேன், என்னைக் காப்பாற்றுவதை முதலில் செய்!”
எந்திரம் விர்ரிட்டது, சிர்ரிட்டது, ஹம்மியது, ஹெம்மியது, பிறகு சொன்னது.